Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அமரன் : விமர்சனம்!

christopherNov 01, 2024 19:28PM
sivakarthikeyan sai pallavi amaran movie review

மேஜர் முகுந்த் ஆக மிளிர்கிறாரா எஸ்கே?!

தீபாவளி பண்டிகையையொட்டி தமிழில் மூன்று படங்கள் வெளியாகியிருக்கின்றன. அவற்றில் ரசிகர்களால் முதன்மையாக நோக்கப்படும் படம் ‘அமரன்’.

சிவகார்த்திகேயன், சாய் பல்லவி ஜோடி மட்டுமல்லாமல், ‘ரங்கூன்’ தந்த இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமியின் இரண்டாவது படம் இது என்பது அதற்கான காரணங்களில் ஒன்று. அதனைக் காட்டிலும் பெரியது, காஷ்மீரில் தீவிரவாதிகளின் பிடியில் சிக்கிய பொதுமக்களைக் காக்கும் முயற்சியின்போது வீர மரணம் அடைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கைக் கதை என்பது.

தமிழில் ராணுவப் பின்னணியில் அமைந்த படங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். ‘ரத்த திலகம்’ காலம் முதல் அதற்குச் சில உதாரணங்களும் இருக்கின்றன. ஆனால், அப்படங்களில் ராணுவத்தில் இருப்பவர்களின் அன்றாட வாழ்க்கையோ, முக்கிய நிகழ்வுகளோ பதிவு செய்யப்பட்டதாக நாம் கேள்விப்பட்டதில்லை.

அந்த வகையில், எந்தச் சமரசமும் இல்லாமல் ஒரு ராணுவ வீரனின் வாழ்க்கையைக் காட்டுவது போன்று தோற்றம் தந்தது ‘அமரன்’ டீசர், டிரெய்லர் போன்றவை. அவை அதன் மீதான எதிர்பார்ப்பினை அதிகப்படுத்தின.

படம் பார்த்து முடிந்த பின்னர் அந்த எதிர்பார்ப்பு என்னவானது?

Sivakarthikeyan interview: On becoming Major Mukund Varadarajan in 'Amaran' and receiving the 'Thuppakki' from Thalapathy Vijay - The Hindu

அமரத்துவமான ஒருவன்!

’அமரன்’ படத்தின் கதை மிக எளிமையானது. சிறு வயது முதலே ராணுவ வீரனாக, உயரதிகாரியாக உயர வேண்டுமென்று ஆசைப்பட்ட ஒரு மனிதர், கல்லூரிப் படிப்பு முடிந்தவுடனேயே அதனை எட்டுகிறார். ராணுவத்தில் சேவையாற்றுவதில் இருக்கும் அபாயங்களை ரசித்துச் செயல்படுகிறார். பணியில் அவர் அடுத்தடுத்து பதவி உயர்வுகளைக் காண்கிறார். சக வீரர்களிடத்தில் மாபெரும் அன்பையும் நட்பையும் சம்பாதிக்கிறார்.

அதேநேரத்தில் தனது பெற்றோர், மனைவி, மகளுடன் நேரம் செலவிட முடியாத ஒரு வாழ்வைக் கொண்டிருக்கிறார். முடிந்தபோதெல்லாம், அந்த இடைவெளியைச் சரிசெய்ய முயற்சிக்கிறார்.

ஒருநாள், தீவிரவாதிகளின் பிடியில் சிக்கிய பொதுமக்களைக் காக்கும் நடவடிக்கையின்போது, அவர் வீர மரணம் அடைகிறார்.

மரணத்திற்குப் பின் அவருக்கு ’அசோக சக்ரா’ பதக்கம் வழங்கப்படுகிறது. அதனை அவரது மனைவி பெற்றுக்கொள்வதோடு இப்படமும் முடிவடைகிறது.

அந்த மனிதர் தனது பெற்றோர், மனைவி, மகள், உடன் பணியாற்றியவர்கள் என்று பலரது நினைவில் ‘அமரத்துவத்துடன்’ வாழ்ந்து வருகிறார் எனச் சொல்லும் வகையில் அமைந்துள்ளது இப்படம். அதனை என்றென்றைக்கும் சினிமா ரசிகர்கள் நினைவில் கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறது.

இந்தக் கதையில் நாயகன் பெயர் முகுந்த் வரதராஜன் (சிவகார்த்திகேயன்), நாயகி பெயர் இந்து ரெபேக்கா வர்கீஸ் (சாய் பல்லவி) என்பது நாம் அறிந்தது தான். போலவே, இதில் வரும் பெரும்பாலான காட்சிகள் முகுந்த் – இந்து வாழ்வில் நிகழ்ந்த சம்பவங்கள் தான்.

ஆனால், அதனைத் திரைக்கு ஏற்றவாறு எழுத்தாக்கம் செய்த விதமும், காட்சியாக்கம் செய்த விதமும் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமியை வியந்து பார்க்கச் செய்கின்றன.

Amaran' - A Fitting Tribute to Major Mukund Varadarajan - Tamil News - IndiaGlitz.com

வழக்கமான படமல்ல இது..!

முதல் பார்வையிலேயே தனது இணையைக் கவரும் வகையில் நடந்து கொள்வது, கேர்ள்ப்ரெண்டை பெற்றோரிடம் தைரியமாக அறிமுகப்படுத்துவது, காதலியின் பெற்றோர் கல்யாணத்திற்குத் தடை சொல்கையில் அவர்களை நேரில் சந்தித்துப் பேசுவது, ராணுவத்தில் வேலை என்பதனைக் குடும்பத்தினர் அனைவரும் ஏற்கும்படியாகச் செய்வது, மனைவி மற்றும் மகளை ஆச்சர்யப்படுத்தும் விதமாகத் திடீரென்று வீடு திரும்புவது என்று முகுந்த் வரதராஜனின் இயல்பான வாழ்வே ‘நாயகத்தனமாக’த்தான் இருந்திருக்கிறது. அந்நிகழ்வுகளுக்குத் திரைவடிவம் கொடுக்க சில ‘பாலீஷ்’ முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறது படக்குழு.

முகுந்தின் மனைவி இந்து ரெபேக்கா வர்கீஸின் பார்வையிலேயே ‘அமரன்’ படம் அமைந்திருக்கிறது. ஒரு ராணுவ வீரரின் மரணம் என்பது அவர் சார்ந்த குடும்பத்திற்கு எத்தகைய வலியைத் தரும் என்றுணர்த்தும் விதமாகப் பல பாத்திரங்கள் அமைந்துள்ளன.

ராணுவ வீரர்கள் முகாம் எப்படியிருக்கும் என்பதில் தொடங்கி, ஒரு தேடுதல் நடவடிக்கைக்குத் தயாராவது வரை பல விஷயங்களைப் போகிற போக்கில் சொல்கின்றன இதன் காட்சிகள். பல காட்சிகள், உண்மையிலேயே இக்கதை நிகழ்ந்த இடங்களுக்குச் சென்று படம்பிடிக்கப்பட்டிருக்கின்றன.

எதிர்தரப்பினரின் குடும்பம், உறவுகள், அவர்களது பார்வையும் இதில் குறிப்பிடத்தக்க அளவில் காட்டப்பட்டுள்ளது. இது ஆச்சர்யம் தரத்தக்க விஷயம். அதுவே, இப்படத்தின் திரைக்கதை 360 டிகிரியில் அணுகப்பட்டது போன்ற தோற்றத்தைத் தருகிறது.

இப்படிப் பல அம்சங்கள் இதில் பாராட்டும்படியாக உள்ளன.

Rajkumar Periasamy on Sivakarthikeyan's transformation for 'Amaran' - The Hindu

ஒரு உண்மைக்கதையைத் திரைப்படம் ஆக்குகையில், அது திரையில் இப்படித்தான் நகரும் என்று நம் மனதுக்குள் ஒரு படம் ஓடும். கிட்டத்தட்ட அதே தொனியில் இப்படம் அமைந்திருப்பது நிச்சயம் மைனஸ் தான். ஆனால், அதனைத் தனது காட்சியாக்கத்திறன் மூலமாகச் சரிசெய்திருக்கிறார் இயக்குனர் ராஜ்குமார்.

இப்படத்தில் இயக்குனரும் அவரைச் சார்ந்தவர்களும் கொட்டியிருக்கும் உழைப்பு அபரிமிதமானது. ஒரு காட்சியில் பல ஷாட்களை நிறைத்து, ‘இது செறிவான உள்ளடக்கத்தைக் கொண்டது’ என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது ‘அமரன்’. அந்த பிரமிப்பு படத்தின் இறுதி வரை தொடர்வது படத்தின் ப்ளஸ்.

போலவே, ’சிவகார்த்திகேயன் படம் என்றால் இப்படித்தான் இருக்கும்’ என்ற எண்ணத்தைச் சுக்குநூறாக்குகிறது இப்படத்தில் அவரது இருப்பு. அதோடு பொருந்திப் போகும் வகையில் இருக்கிறது சாய் பல்லவியின் நடிப்பு.

பல விருது விழாக்களில் இருவரது பெயர்களைப் பரிந்துரைக்கும் வகையில் ‘அமரன்’ படத்தில் அவர்களது பங்களிப்பு அமைந்திருக்கிறது. முக்கியமாக, சாய் பல்லவியை நாயகி ஆக்கியிருப்பதன் காரணமாக இப்படத்தைப் பெண்கள் பலர் ரசித்து நோக்குவார்கள்.

சிவகார்த்திகேயன் படங்கள் என்றால் குழந்தைகளும் பெரியவர்களும் பார்ப்பார்கள் என்ற உத்தரவாதம் இருக்கிறது. அதனைத் தக்க வைக்கும் வகையில், இதில் சண்டைக்காட்சிகளில் அதீத வன்முறை தவிர்க்கப்பட்டிருக்கிறது. மேஜர் முகுந்த் போன்று தோற்றம் தராதபோதும், ‘இப்படித்தான் அவரும் இருந்திருப்பார்’ என்று நம்ப வைப்பது போன்று அப்பாத்திரமாக மிளிர்கிறார் எஸ்.கே.

வழக்கமான ‘மசாலா’ படங்களிலேயே, ‘ஆக்‌ஷன் காட்சிகளுக்காகவே ஒரு லாரி முழுக்க ‘போலி ரத்தம்’ தயாரா இருக்கு’ என்று படக்குழுவினர் சொல்கிற காலகட்டத்தில், ராணுவப் பின்னணியில் அமைந்த ‘அமரன்’னில் கோரமான காட்சிகளோ, மோதல் ஷாட்களோ இல்லை. மிகச்சில இடங்களில் சில ஷாட்கள் வந்து போகின்றன கதைக்குத் தேவைப்படுகிற அளவுக்கு.. அதற்காகவே சண்டைப்பயிற்சியாளர்கள் அன்பறிவ், ஸ்டீபன் ரிச்டருக்கு பாராட்டுகளைத் தெரிவிக்கலாம்.

ராணுவ வாகனத்துக்குள் நிகழும் வீரர்களின் உரையாடல்களைக் காட்டுவது முதல் தொடக்க காட்சியில் ஒரு ராணுவ முகாமை ‘ஸ்டெடிகேம்’ பார்வையில் ஒரே ஷாட்டாக உணரும் வகையில் காட்சிப்படுத்தியது வரை, சி.ஹெச்.சாய் ஒளிப்பதிவு நம்மைப் பிரமிக்க வைக்கிறது. அவருக்கு இது அறிமுகப்படம். வாழ்த்துகள்!

பிளாஷ்பேக் உத்தியுடன் கூடிய, முன்பின்னாக நகரும் திரைக்கதை. பலருக்கும் தெரிந்த உண்மைச் சம்பவங்களின் தொகுப்பாக அமைந்த கதை. கால வரிசைக்கு அப்பாற்பட்ட காட்சி வரிசை என்று பலவற்றைத் தாண்டி திரையில் சொல்லப்படும் விஷயங்கள் ரசிகர்களுக்குப் புரியும் வகையில் காட்சிகளைத் தொகுத்திருக்கிறார் படத்தொகுப்பாளர் கலைவாணன்.

தயாரிப்பு வடிவமைப்பாளர் ராஜீவன், கலை இயக்குனர் சேகர் கூட்டணியின் உழைப்பில், இயக்குனர் திரையில் காட்ட விரும்பிய உலகம் உயிர் பெற்றிருக்கிறது.

Sai Pallavi: Sai Pallavi's powerful first-look glimpse from 'Amaran' unveiled

காஷ்மீர் மக்களின் வாழ்வைச் சொல்கிற வீடுகள், கடை வீதிகளைக் காட்டும்போதும், சண்டைக்காட்சிகள் நிகழும் களங்களைச் சொல்கிற போதும், அவை ‘உண்மை’ என்றே நம்பத் தோன்றுகின்றன.

ஜி.வி.பிரகாஷின் இசையில் பாடல்கள் அனைத்தும் காட்சிகளின் பின்னணியில் ஒலிக்கின்றன. இந்த உத்தியுடன் வெளியான சமீபத்திய படங்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். அதுவே, இப்படத்தினை ‘வழக்கமான படம்’ என்று சொல்லவிடாமல் தடுக்கிறது.

கூடவே, பின்னணி இசையில் ஜி.வி.பி மிரட்டியிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். அதுவும் இடைவேளைக்கு முன்னதாக வரும் சுமார் 20 நிமிட ஆக்‌ஷன் காட்சிகளில் பரபரப்பை எகிற வைத்திருக்கிறது அவரது இசை.

இவை தவிர்த்து ஆடை வடிவமைப்பு, ஒப்பனை, டிஐ, விஎஃப்எக்ஸ், ஒலி வடிவமைப்பு, டப்பிங் என்று பல நுட்பங்கள் கவனமாகக் கையாளப்பட்டுள்ளன.

புவன் அரோரா, ராகுல் போஸ், கீதா கைலாசம் உட்படப் பலர் இதில் நடித்துள்ளனர். ‘பிரேமலு’ ஷ்யாம் மோகன், சீரியல் நடிகர் ஸ்ரீ, லல்லு போன்றவர்களும் இதில் தலைகாட்டியிருக்கின்றனர். இவர்கள் தவிர்த்துப் பல புதுமுகங்கள் இதில் இடம்பெற்றிருக்கின்றனர். அவர்களது சீரிய நடிப்பே, இப்படத்தை ‘நிறைவானதாக’ ரசிகர்கள் உணர உதவியிருக்கிறது.

இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, ‘அமரன்’ படத்திற்காகப் பல ஆண்டுகள் உழைத்திருக்கிறார். ‘தமிழில் இது போன்று ராணுவத்தை மையப்படுத்தி படங்கள் உருவானதில்ல’ என்று சொல்லும்விதமான காட்சியாக்கத்தை இதில் வெளிப்படுத்தியிருக்கிறார். ‘இந்தியாவிலேயே அது போன்றில்லை’ என்று விவாதம் ஏற்படுத்தும் வகையில் பிற மொழி ரசிகர்களுக்கும் ஏற்ற திரைமொழியை இதில் அமைத்திருக்கிறார்.

மிக முக்கியமாக, உண்மையான நிகழ்வுகளைப் பிரதிபலிக்கிற இப்படத்தில் மருந்துக்குக் கூட ‘இது ஒரு கற்பனை’ என்று சொல்லும்விதமான அதீதச் சித்தரிப்பு இல்லை. முகுந்த் வரதராஜன் குடும்பத்தினரோ, அவருடன் பணியாற்றியவர்களோ அப்படிச் சொல்ல வாய்ப்புண்டு. ஆனால், படம் பார்க்கிற ரசிகர்கள் அப்படி ஒரு இடத்தைக் கூடச் சுட்டிக்காட்டா வண்ணம் இதனை உருவாக்கியிருப்பது அசாதாரண விஷயம். அதனால், சக இயக்குனர்களால் ராஜ்குமார் கொண்டாடப்படுவார்.

மேஜர் முகுந்த் பற்றியோ, ராணுவ வீரர்களின் வாழ்வு பற்றியோ தெரியாதவர்கள் கூட, இப்படம் பார்த்ததும் தங்களது பார்வைகளை மாற்றிக் கொள்வார்கள். அந்த வகையில், ராணுவம் உள்ளிட்ட பாதுகாப்பு படைகளுக்கான ஒரு விளம்பரப் படமாகவும் இது அமைந்திருக்கிறது.

ஜம்மு காஷ்மீரில் நிகழ்வதாகக் காட்டப்பட்டுள்ள இக்கதையில் அங்குள்ள மக்கள் இழிவாகச் சித்தரிக்கப்படவில்லை. அதுவும் கூட, இதுவரை எல்லைப்பகுதிகளில் நிகழ்வதாகக் காட்டப்பட்ட திரைப்படங்களில் இருந்து ‘அமரன்’னை வேறுபடுத்துகிறது.

’சிவகார்த்திகேயன் சீரியசான கேரக்டர்ல நடிச்சா ஓடுமா’ என்பதே இப்படம் தயாரிப்பின் போது எதிர்மறையாக எழுந்த கேள்விகளில் முதன்மையானதாக இருந்தது. அதற்கு அவர் மட்டுமல்லாமல் மொத்தப் படக்குழுவும் தங்களது ஆக்கம் மூலமாகப் பதிலளித்திருக்கிறது.

அந்தப் பதிலை ஏற்க மறுப்பவர்களும் தீவிரமான மசாலா பட ரசிகர்களும் மட்டுமே இப்படத்தைப் புறந்தள்ளுவார்கள். மற்றபடி, எப்படிப்பட்ட நிலைப்பாடு கொண்டவரையும் ஒருசேர ஓரணியில் திரள வைக்கிற திறன் ‘அமரன்’னுக்கு உண்டு. ராஜ்குமார் குழுவினருக்கு வாழ்த்துகள்!
 

https://minnambalam.com/cinema/sivakarthikeyan-sai-pallavi-amaran-movie-review/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உன்னதமான தேச பக்தி எதற்காக? யாருக்காக?

-சாவித்திரி கண்ணன்

 

sddefault.jpg


தேச பக்தியையும், உயிர்ப்பான காதலையும் ஆழமாக காட்சிப்படுத்தியதில் படம் முழு வெற்றி பெற்றுள்ளது. ராணுவ வீரர்களின் வீரம், தியாகம், அர்ப்பணிப்பு ஆகியவை மெய் சிலிர்க்க வைக்கின்றன. ஆனால், சொந்த மக்களுக்கு எதிராக ராணுவம் ஏன் இவ்வாறு செயல்பட வேண்டும் போன்ற கேள்விகளை படம் ஏற்படுத்துகிறது;

காதல், வீரம், தேசபக்தி, தியாகம்..என கலவையாக வெளிவந்துள்ள அமரன் மிக நேர்த்தியாக எடுக்கப்பட்டுள்ள ஒரு திரைக் காவியம் என்பதில் சந்தேகமில்லை.

மேஜர் முகுந்த்  தாம்பரம் கிறிஸ்துவ கல்லூரியில் படிக்கும் போது இயல்பாக மலரும் காதல், அதை இரு வீட்டார்களும் எதிர்கொள்ளும் விதம், பெற்றோர்களை சம்மதிக்க வைப்பதில் காதலர்கள் கடைபிடிக்கும் பொறுமை, காதலின் ஆழத்தை வெளிப்படுத்தும்  நெஞ்சை அள்ளும் காட்சிகள்…என பல வலிமையான காட்சிப் பின்னல்களோடு படம் நகர்கிறது.

மேஜர் முகுந்தாக நடித்துள்ள சிவகார்த்திகேயனுக்கு இந்த திரைப்படம் ஒரு திருப்பு முனை படமாகும். பல படங்களில் பெண்களை கிண்டலடித்து சுற்றும் பொறுப்பில்லாத வாலிபனாக வந்து டூயட் பாடிச் சென்ற சிவகார்த்திகேயன், இது போன்ற நல்ல வாய்ப்புகளில் முழுமையாக ஸ்கோர் பண்ணிவிடுகிறார்.

new-project-2024-09-29t135420.836.jpg

அவரை விஞ்சும் வகையில் அன்பும், அர்ப்பணிப்புமுள்ள ஒரு காதலியாக, மனைவியாக  சாய் பல்லவி நடித்துள்ளார்.  காதலில் சொந்தக் குடும்பத்தின் எதிர்ப்புகளை மீறி அவர் காட்டும் உறுதி, காதலனே பின்வாங்கிக் கொள்கிறேன் என்ற போதும், தான் பின் வாங்கப் போவதில்லை எனக் காட்டும் காதல் மீதான ஆழம், கல்யாணத்திற்கு பிறகு காதல் கணவனை ராணுவத்திற்கு தாரை வார்த்து பிரிந்து வாட நேரும் எனத் தெரிந்தும் காதலில் காட்டும் பிடிவாதம், கல்யாணத்திற்கு பிறகு கணவன் எப்போது வருவார் என்பதை உறுதிபடுத்திக் கொள்ளக் கூட முடியாத சூழல்கள், துப்பாக்கி குண்டுகளுக்கு இடையே பயணப்படுவனை நம்பி தன் வாழ்க்கை பயணத்தை துணிவாக அமைத்துக் கொள்வது, இளம் வயதில் சின்னஞ்சிறு குழந்தையுடன் கணவனை பறி கொடுத்தும் உறுதி குலையாமல் வாழ்வை எதிர் கொள்ளும் காதலியும், மனைவியுமாக இந்து ரெபக்கா என்ற சாய் பல்லவி கதாபாத்திரம் மேஜர் முகுந்தின் தியாகத்தை விட ஒருபடி மேலானது என்பதில் சந்தேகமில்லை. இந்த கதாபாத்திரத்தை  மிகுந்த உயிர்ப்புடன் நடித்துள்ளார் சாய் பல்லவி.

1333719.jpg

77 ஆண்டுகளாக தீர்வில்லாமல் நீடிக்கும் காஷ்மீரை வலிந்து இந்தியாவோடு இணைப்பதற்கான ராணுவச் செயல்பாடுகளில் நம் வீரர்கள் எடுத்துக் கொள்ளும் உயிரை பணயம் வைக்கும் ரிஸ்க் இப்படத்தில் சிறப்பாகவே பதிவாகியுள்ளது.

மேஜர் முகுந்தின் நெருங்கிய ராணுவ சகாவாக விக்ரம் சிங்காக வரும் (புவன் அரோரா) கதாபாத்திரம் இந்திய ராணுவத்தில் தொன்று தொட்டு உயிரைத் தியாகம் செய்யும் ஒரு ராணுவ பாரம்பரியக் குடும்பத்தின் மன நிலைக்கு சரியான உதாரணமாகும். தன் தந்தையை ராணுவத்திற்கு தந்து, தன் உயிரையும் ராணுவத்திற்கு தத்தம் செய்கிற அந்த வீரன்,  தன் ஏழரை வயது மகனையும் ராணுவத்திற்கு தயார் படுத்தி வருகிறேன் என்று சொல்லியபடி உயிர் விடுகிறான்.

24-67259457c53be.jpg

இப்படியாக ராணுவ விரர்கள் செய்யும் தியாகங்கள் எதற்காக? அந்நிய நாட்டு பகை ராணுவத்தை எதிர்த்து நாட்டை காப்பதற்கென்றால், அதில் ஒரு நியாயம் இருக்கிறது. ஆனால் நாம் இந்தியாவின் ஒரு பகுதியாக கருதும் காஷ்மீரில் உள்ள மக்களை எதிர்த்து எனும் போது தான் மனம் பதறுகிறது.

அவ்வளவு பீரங்கி வண்டிகள் அணிவகுத்து ராணுவ வீரர்கள் வந்தாலும், தாங்கள் மதிக்கும் போராளிகளை காப்பாற்ற அந்த மக்கள் ஆயுதங்களின்றி வெறும் கற்களை எறிந்து ராணுவத்தை எதிர்கொள்கிறார்கள் என்பது இந்தப் படத்தில் பல இடங்களில் பதிவாகியுள்ளது.

இன்னொரு காட்சியில் ராணுவத்தின் பார்வையில் தீவிரவாதியாக கருதப்படும் ஒருவரின் வீடு தேடி சென்று  மேஜர் முகுந்த் பேசும் போது, அந்த வயதான தந்தை, ”என மகன் இந்த காஷ்மீரின் சுதந்திரத்திற்காக போராடுகிறான், அவன் பயங்கரவாதியல்ல, சுதந்திர போராட்ட வீரன், நீங்க போகலாம்” என்ற காட்சியும் பதிவாகியுள்ளது.

amaran-1723613975.jpeg

இன்னொரு காட்சியில் மேஜர் முகுந்தின் வயதான அப்பா தன் மகனிடம், ”ஏண்டா காஷ்மீரில் மட்டும் தொடர்ந்து சண்டைகள், அங்கே அமைதி வராதா?” எனக் கேட்கும் போது, ”இதை நீயும், நானும் பேசி என்ன ஆகப் போகுது நைனா! பேச வேண்டியவங்க பேசணும்” என அவர் சொல்வார்.

அங்கே அமைதி திரும்புவதற்கு இந்திய ஆட்சியாளர்கள் அங்குள்ள மக்கள் மனநிலை அறிய வேண்டும். அங்கு மக்கள் விருப்பத்திற்கு ஏற்ப ஒரு முடிவை எடுக்க வேண்டும். இந்த பெருந்தன்மையான முடிவில் தான் நமது ராணுவ வீரர்களின் விலை மதிப்பில்லாத உயிர் பலிகள் தடுக்கப்படும். அங்குள்ள கொந்தளிப்பு சூழல் முடிவுக்கு வரும். அமைதி நிலை பெறும்!

இதைச் சொல்லும் துணிச்சல் இங்கு எந்த படைப்பாளிக்கும் இருக்கிறதா? எனத் தெரியவில்லை. அப்படி படம் எடுத்தால், அதைப் படைப்பு சுதந்திரம் என்ற தன்மையில் இந்திய அரசு அணுகுமா? என்றும் தெரியவில்லை.

கனத்த மெளனத்துடன் படம் ஏற்படுத்திய தாக்கங்களை நாம் அசைபோடுகையில், தேச பக்தி என்ற உணர்ச்சியில் இந்திய ராணுவ வீரர்களும், அவர்கள் குடும்பத்தினரும் எதிர்கொள்ளும்  ஈடு செய்ய முடியாத இழப்புகளுக்கு ஒரு தீர்வு கிடைக்காதா? இந்திய பட்ஜெட்டின் பெரும்பகுதி காஷ்மீருக்காக விரயமாவது முடிவுக்கு வரதா..? என்ற ஏக்கங்களை ஏற்படுத்துகிறது.

படம் மாபெரும் வசூலை அள்ளித் தருவதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த படத்தின் வசூலில் மேஜர் முகுந்த் குடும்பத்திற்கும் ஒரு சிறு பங்களிப்பை தந்தால் அது சிறப்பாக இருக்கும்.

சாவித்திரி கண்ணன்
 

 

https://aramonline.in/19719/amaran-cinema-review/

  • கருத்துக்கள உறவுகள்

அமரன் படம் பார்த்தேன், யூடியூப் விமர்சனங்கள் , படம் பார்த்தவர்களின் கருத்துக்கள் எல்லாம் இதுவரை இப்படி ஒரு படம் வந்ததில்லை, படம் பார்க்க போகும்போது ரிசு பேப்பர் பலரும் கொண்டு போகிறார்கள் என்றெல்லாம் இருந்தது.

அப்படியெல்லாம் இல்லை இது ஏற்கனவே வந்த படம்தான் அதன் பெயர் குருதிபுனல்!

கமலஹாசன்தான் அமரன் தயாரிப்பாளர் என்பதால் தனது படத்தையே கொஞ்சம் உல்டா பண்ணி எடுத்திருக்கிறார் போலும்.

ராணுவத்தின் தியாகத்தை எண்ணி பேப்பர் துண்டுகளுடன் திரையரங்குக்கு போகும் மக்கள் மறுபக்கம் ராணுவத்த்தால்   பேப்பர்போல கசக்கி கொளுத்தப்படும் மக்கள் பக்கமும் நின்று யோசிக்கவேண்டும், அதை செய்ய அவர்களின் அரசும் அரசியலும் அனுமதிக்க போவதில்லை.

படம் பார்த்தவர்கள் எல்லாம் வசூலில் இது சாதனை படைக்கும், சிவகார்த்திகேயன் சாய் பல்லவிக்கு ஆஸ்கார் விருதுகூட கொடுக்கலாம்  என்கிறார்கள், அழுகிறார்கள்,

ஆனால் குருதிபுனலில் கமல் நடிப்பில் 10 வீதம்கூட சிவகார்த்திகேயனிடம் இல்லை.

ஆனால் உண்மையாகவே இந்த கதையில் வந்து இறந்துபோன முகுந்த் குடும்பத்துக்கு யாரும் உதவி செய்யவேண்டுமென்றோ அல்லது அவர்கள் பற்றி பேசவோ இல்லை.

இவர்கள் உண்மையாகவே ராணுவ தியாகத்துக்கு அழுகிறார்களா அல்லது ராணுவம்போல் நடித்த கூத்தாடிகளுக்காக அழுகிறார்களா என்பதை அவர்களிடமே கேட்டு தெரிந்து கொள்ளவேண்டும்.

சொந்தநாட்டு ராணுவ தியாகங்களை  பார்த்து சிவாஜிகணேசன் அழுகிறமாதிரி அழுகிறார்கள் அது அவர்கள் கடமை ,

ஆனால் அந்நியநாட்டுக்குள் வந்து எம்மை கொன்றுவிட்டுபோன அவர்கள் ராணுவத்தின் தியாகங்களை   நினைத்து ஜனகராஜ் சிரிக்க்கிறமாதிரித்தான் நம்மால் சிரிக்க முடியும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அமரன்: ஒற்றைக் கதையாடலின் ஆபத்து

இளங்கோ டிசே (முகநூலில் இருந்து)
************************

நான் அமரன் திரைப்படத்தின் கதைக்களத்துக்குள் போக விரும்பவில்லை. அது ஒரு உண்மையான மனிதனின் வாழ்க்கையைப் புனைவாகச் சொல்கின்ற திரைப்படம். எந்த ஒருவரினதும் இழப்பு என்பது துயரமானதே. அதுவும் இளம் வயது சடும் மரணமாயின், அவர்களைச் சுற்றியிருப்பவர்க்கு மனவடுக்களை நீண்டகாலத்துக் கொடுக்கக்கூடியது. 

அந்தவகையில் மேஜர் முகுந்த் வரதராஜனின் மரணத்தின் பாதிப்பை நாம் எந்தவகையில் மறுக்கமுடியாது. ஆனால் 'அமரன்' திரைப்படத்தின் சிக்கல் என்னவென்றால் அது சாகசம் என்கின்ற பெயரில் இந்திய இராணுவத்தையும், இந்திய தேசப்பற்றையும் glorify செய்வதாகும்.

அப்படி மிகைப்படுத்தி மேன்மைப்படுத்துவதும்போது அது தன்னளவில் நின்று செய்யாமல், மற்றமையைக் கட்டியமைத்து அந்த மற்றமையை மிக மோசமான/கேவலமான எதிரிகளாகக் கட்டியமைப்பதாகும். இன்றைக்கு இந்தியாவில் (இலங்கையில் எப்போதும்) சிறுபான்மையினர் மீது அளவுக்கதிகமான வெறுப்பு எல்லாத் திசைகளிலும் எதிரொலித்துக் கொண்டிருக்கின்றது. 

இந்துக்கள் X முஸ்லிம்கள் என்கின்ற துவிதநிலைப் பிரிவினைகள் மிக மோசமாகக் கட்டியமைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்ற காலத்தில் ஒரு இராணுவ வீரனின் தேசப்பற்றை காஷ்மீர் முஸ்லிம்கள் என்கின்ற மற்றமையை மிக மோசமாகச் சித்தரிப்பதன் மூலம் 'அமரன்' கட்டியமைப்பதே இங்கே சிக்கலாகின்றது.

இனி முகுந்த் வரதராஜன் என்ற ஒரு இராணுவ மேஜரையும், அவரின் சாகசத்தையும், இழப்பையும் ஒருபுறம் வைத்துவிட்டு சிலவற்றை யோசித்துப் பார்ப்போம்.

எந்த நாட்டிலும் இராணுவம் என்பது அதிகார மையத்தின் உச்சியில் நின்று இயங்குவது என்பது நமக்குத் தெரியும். அதனால்தான் பல நாடுகளில் அரசியல் தளம்பல்கள் நிகழும்போது இராணுவமே ஆட்சியைக் கவிழ்த்து அரசாள்வதை -முக்கியமாக நமது தென்னாசியா/தெற்கிழக்காசியா நாடுகளின் வரலாற்றைப் பார்க்கும்போது அறிந்துகொள்ளலாம். அந்தவளவுக்கு அவர்களிடம் அதிகாரம் மிகுந்து இருக்கின்றது.

எந்தவகை அதிகாரம் என்றாலும் அது மிகப்பெரும் துஷ்பிரயோகத்துக்கு இட்டுச் செல்லும் என்றாலும், ஆயுதங்கள் தாங்கும் ஓர் அமைப்பான இராணுவத்துக்கு அது இன்னும் பிறரை ஒடுக்கின்ற சக்தியை எளிதாகக் கொடுத்து விடுகின்றது. எனவே அந்த அதிகார மையத்தை தேசத்தை ஒன்றிணைக்கும் புள்ளியாக, தியாகிகளாக மட்டும் உருப்பெருக்கும்போதே சிக்கல்கள் வருகின்றன.

அவ்வாறு அவர்கள் தேசப்பக்தியாளர்களாகவும், தியாகிகளாகவும் கட்டமைக்கும்போது அவர்களின் துஷ்பிரயோகம் பேசப்படாது போகின்றது. இங்கே அமரன் ஒற்றைக் கதையாடலை மட்டும் (Singular Narratives) முன்வைப்பதால்தான் இதைப் பேசவேண்டியிருக்கின்றது. ஒற்றைக் கதையாடல் எவ்வளவு ஆபத்தானது என்பதை சிமாண்டா அடிச்சியின் 'The Danger of a Single Story' உரையை வாசிப்பதன் மூலம் நாமின்னும் அறிந்து கொள்ளலாம்.

'அமரன்' இந்திய இராணுவத்தினன் ஒருவனினது சாகசத்தையும் தியாகத்தையும் காட்டுவதற்கு காஷ்மீரின் சுயநிர்யண உரிமைகளுக்காகப் போராடுபவர்களை மட்டுமில்லை, இந்தியா-பாகிஸ்தான் அரசியல் சூதாட்டத்தில் பங்குபெறாத மக்களையும் எதிரிகளாகக் கட்டியமைக்கின்றது. இதைத்தான் சிமாண்டா அடிச்சி ஒற்றைக் கதையை (மட்டும்) சொல்வதால் வரும் ஆபத்து என்கின்றார். எப்படி வெள்ளையின ஐரோப்பா உலகம் ஆபிரிக்காவைச் சார்ந்தவர்களை ஒற்றைக் கதையாடல் மூலம் அவர்களின் தனித்துவங்களை அழித்து தனக்கான வரலாற்றை எழுதிக் கொண்டதோ அவ்வாறே அமரன் இந்திய இராணுவத்தின் சாகசத்தின் மூலம் மற்றமைகளை மூடி மறைத்திருக்கின்றது.

உண்மையிலே இந்திய இராணுவம் இவ்வளவு புனிதமானதா? என்பதை நாம் கடந்தகாலத்தைப் படிப்பதன் மூலம் அறிந்து கொண்டால், இப்படி அமரனில் கட்டியமைக்கப்படும் விம்பம் நமக்கு மகிழ்ச்சியைத் தராது. மேலும் இங்கே இராணுவத்தினன் நாட்டுக்காக துச்சமாக மதிப்பவன் என்று புனிதமாக, தியாகியாக கட்டியமைத்தாலும் அவர்களும் அதைச் சம்பளம் பெறும் ஒரு அரச உத்தியோகத்தனாகவே இருக்கின்றார்கள் என்பதையும் நினைவில் வைக்கவேண்டும். எந்த ஒருவரும் நாட்டுக்காக, தாம் நம்புக் கொள்கைக்காக volunteer ஆகவோ தேசப்பக்தியின் நிமித்தமோ மட்டும் செல்வதில்லை. அந்தவகையில் பார்த்தால் போராளிகளோ அல்லது 'பயங்கரவாதிகள்' என்று கட்டியமைக்கப்படுபவர்களோ இந்த 'சம்பளம்' இல்லாது தன்னார்வளாகப் போகின்றவர்களாக, இனி இழப்பதற்கு உயிரைத் தவிர வேறெந்தத் தேர்வும் இல்லை என்ற நிலையில் போகின்றார்கள் என்று வைத்துக்கொண்டால், அவர்கள் அல்லவா இந்த 'சம்பளம்' பெறும் இராணுவத்தை விட மிகப்பெரும் தியாகிகளாக இருப்பார்கள்?

மேலும் இந்திய இராணுவம் தனது நாட்டில் அரசியல் சிக்கல்கள் இருக்கும் காஷ்மீர்/அஸாம்/மணிப்பூர் போன்ற இடங்களில் மட்டுமில்லை, பஞ்சாப் காலிஸ்தான் பிரிவினையின்போதும், ஏன் வீரப்பன் வேட்டை என்கின்றபெயரில் அதிரடிப்படையினராக தமிழ்நாடு-கர்நாடக எல்லையில் செய்த அட்டூழியங்களும் மிக விரிவாக வரலாற்றில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இங்கே இந்திய இராணுவம் இலங்கை, சூடான் (ஐ.நா.அமைதிப்படை) போன்ற பிற நாடுகளில் செய்த 'நல்ல விடயங்களை' பட்டியலிடப்போவதில்லை.

இந்த விடயங்களை எல்லாம் அமரன் பேச வேண்டும் என்று சொல்லவில்லை. ஆனால் இந்தப் பின்னணியோடு ஒருவர் 'அமரனை'ப்  பார்த்தால் இதில் கட்டியமைக்கப்படும் தேசப்பற்றும், புனிதமும் அவ்வளவு உண்மையல்ல என்பது புரிந்துவிடும். மேலும் காஷ்மீரிகளில் பெரும்பான்மையினர் இந்தியாவும் வேண்டாம், பாகிஸ்தானும் வேண்டாம், ஆங்கிலேயர் வரமுன்னர் எப்படி இருந்தோமோ அப்படி அல்லது அதற்கு நிகரான சுயநிர்ணயமுள்ள மாகாணமாக இருக்கவேண்டும் என்றே விரும்புகின்றார்கள். ஆனால் 'அமரன்' கட்டியமைப்பதோ, அங்கே இருப்பவர்கள் பெரும்பாலும் பாகிஸ்தானின் செல்வாக்குக்கு உட்பட்ட 'பயங்கரவாதி'கள். ஆகவே அவர்கள் மிக மோசமாக அடக்கியொடுக்க வேண்டியவர்கள். 

இந்திய இராணுவம் செய்யும் ஒவ்வொரு தாக்குதல்களிலும் மக்கள் ஒன்றுகூடுகின்றார்கள். கற்களை எறிகின்றார்கள். ஆனால் இந்திய இராணுவம் ஒன்றுமே அவர்கள் மீது செய்யாத அப்பாவி/அருமையான இராணுவமாகக் கட்டியமைக்கப்படுகின்றார்கள்.

காஷ்மீரில் இந்திய இராணுவமும், இந்திய அரசும் செய்த அட்டூழியங்களை சும்மா இணையத்தில் தேடிப் பார்த்தாலே விபரங்கள் கொட்டும் என்பது ஒருபுறமிருக்க, சரி காஷ்மீரிகள் எதைச் சொன்னாலும் அது பக்கசார்பாக இருக்கும் என்று சொல்பவர்க்கு அருந்ததி ராயின் 'The Ministry of Utmost Happiness' வாசிக்கப் பரிந்துரைப்பேன். அது இரண்டு தரப்பினரைப் பற்றியும் பேசுகின்றது. அந்நாவல் மீது கூட விமர்சனம் இருந்தாலும், மேலும் அது  இந்த இரண்டு தரப்பையும் தாண்டி முக்கியமான மூன்றாந்தரப்பான மக்களை, அவர்கள் படும் துயரங்களையும்/ சித்திரவதைகளையும் பேசுகின்றது.

அமரனில் காட்டப்படும் இந்திய இராணுவம் இவ்வாறான இடங்களைக் கைப்பற்றும், தனது வீரர்களைக் காப்பாற்றும் தாக்குதல்கள் பற்றி எனது அனுபவம் ஒன்றைச் சொல்கின்றேன். யாழ்ப்பாணத்தை இந்திய இராணுவம் கைப்பற்றும் முயற்சியை செய்கின்றது. யாழ்ப்பாண நிலவியலையோ, புலிகளின் ஆயுதபலத்தையை அவ்வளவு அறியாது பாரசூட்கள் மூலம் இராணுவத்தை இறக்கி யாழ்நகரைக் கைப்பற்றலாம் என்று இந்திய இராணுவம் திட்டம் அமைக்கின்றது. அவ்வாறு ஓர் இரவில் இறக்கிய இராணுவத்தின் பெரும்பகுதியினரை புலிகள் தாக்கி அழிக்கின்றனர். இது இரண்டு ஆயுதத் தரப்புக்களின் போர் எனச் சொல்லலாம். ஆனால் அடுத்தநாள் இந்திய இராணுவம் என்ன செய்கின்றது? தனது கவச வாகனங்களைத் தெருவில் இறக்கி, வீதியில் நின்ற அப்பாவி மக்களை வகைதொகையின்றி தனது வெஞ்சினம் தீர்க்கச் சுட்டுக் கொன்றது. சுட்டுக் கொன்றது மட்டுமில்லை அப்படித் தப்பியவர்களையும், அரைகுறையாக காயங்களுடன் துடித்துக் கொண்டவர்களையும் தனது டாங்கிக்கு அடியில் போட்டு மேலே மிதித்துக் கொன்றது. இது கிட்டத்தட்ட 80களின் பிற்பகுதியில் நடந்த கோரதாண்டவம். 

அப்படி இருக்கின்ற இந்திய இராணுவத்தை ஒரு திரைப்படம் தனியே தேசப்பற்றாளர்களாவும், தியாகிகளாகவும், மக்களுக்காகப் போராடுபவர்களாகவும் காட்டுகின்றபோது ஒருவருக்கு நெருடல் வராதா என்ன? அதுவும் தனது இராணுவ காலத்தில் மிக மோசமாக காயப்பட்டு காப்பாற்றக்கூடிய 'பயங்கரவாதியைக் கூட' பக்கத்தில் வைத்து சுட்டு கொன்று தன்னை வீரனாகப் பெருமிதம் கொள்கின்ற (அமரனில் வரும் காட்சி) ஒருவனை, அவனது எதிர்த்தரப்பு கொல்கின்றபோது இதுவும் போரின் ஒரு எதிர்வினை என்றுதானே எடுத்துக் கொள்ளவேண்டியிருக்கும். நாமே தெருவில் போனால் ஒருவன் சீண்டினால் கோபப்படுவோம் என்றால், ஒருவனை மிலேச்சனத்தனமாக அதிகாரத்தின் நிமித்தம் கொன்றுவிட்டு 'வீரனாக'க் காட்டும்போது மறுதரப்பின் எதிர்வினைகளில் இருந்து ஒருவன் எப்படித் தப்பித்துக் கொள்ளமுடியும்.

மேலும் இந்திய இராணுவத்தின் புனிதத்தை குடும்பத்தின் பாசத்தைக் காட்டுவதன் மூலம் கட்டியமைப்பது இன்னும் மோசமானது. ஒரு இராணுவ வீரனுக்குப் பாசம் இருக்கக்கூடாதா என்று கேட்கலாம். இருக்கலாம். அது தவறே இல்லை. அப்படியாயின் 'பயங்கரவாதிகள்' என்று கட்டியமைக்கப்பவர்க்குக் குடும்பங்கள் இல்லையா? அவர்களுக்குப் பாசம் இல்லையா?  அவர்கள் குடும்பம், இந்த இராணுவ சம்பளம், இறந்தால் கூட பெருமை மிகு 'அர்ஜூனா' விருதுக்கள் இல்லாது இப்படி  ஏன் யுத்தம் செய்ய வருகின்றார்கள் என்று ஒருகணம் யோசித்துப் பார்த்திருக்கின்றோமா? இந்தளவு உணர்ச்சிவசப்படும் அவர்கள் ஒரு இராணுவத்தில் சேர்ந்து சம்பளம் பெற்று நிம்மதியாக வாழ முடியுமே? ஏன் இவற்றையெல்லாம் தவிர்த்து இப்படி ஒரு மோசமான உயிர் ஆபத்தான வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்கின்றார்கள் என்பதை நாம் ஒருபோதும் சிந்திக்கவிடாது, இவ்வாறான தேசப்பற்று/தியாக திரைப்படங்கள் நம்மைக் கட்டிப்போடுகின்றன. 

ஆகவேதான் இந்த ஒற்றைக் கதையாடல்கள் மிக ஆபத்தானவை என்கின்றேன். இந்தத் தேவையில்லாத தியாக/புனித கற்பிதங்களை நம்பி எந்த இராணுவத்தையும் மேன்மைப்படுத்தாதீர்கள் என்று மட்டுமில்லை, இராணுவத்துக்கு உங்கள் பிள்ளைகளைத் தயவு செய்து அனுப்பி வைத்துவிடாதீர்கள் என்றும் சொல்லவேண்டியிருக்கின்றது. இராணுவத்தில் இருந்து உயிர் திருப்பி வருபவர்களில் பெரும்பாலானோர் PTSD போன்றவற்றால் பாதிக்கப்பட்டு மனச்சிதை நோய்களால் பாதிக்கப்பட்டு தமது எஞ்சிய நாட்களையும் மிக மோசமாகக் கழிக்கின்றார்கள் என்பதை அமெரிக்க இராணுவ வரலாற்றைக் கற்பதன் மூலம் நாம் எளிதாக அறிந்துகொள்ள முடியும்.  

ஒரு மனித உயிரின் இழப்பு என்றவகையில் முகுந்த வரதராஜனின் மரணம் ஈடுசெய்யமுடியாது. அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. அதேபோல அது எந்த அரசியல் நோக்கம் என்றாலும் எதிர்த்தரப்பின் இழப்பும் ஈடுசெய்யமுடியாததே என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும். ஆகவேதான் எந்த மோசமான குற்றச்செயல் புரிந்திருந்தால் கூட, நாம் எல்லோருமே மரணதண்டனைக்கு எதிராகத் தொடர்ந்து குரல் கொடுக்கின்றோம். ஒரு உயிரைப் பறித்து நாம் எந்த பெரும் நீதியை இந்த உலகில் நிலைநாட்டிவிடப் போகின்றோம். அது எமக்கு மிக மோசமான எதிர்த்தரப்பாக இருந்தால் கூட எவருக்கும் அப்படியொரு தண்டனை வழங்கும் அதிகாரம் இருக்கக் கூடாது என்றுதான் விரும்புகின்றோம். அதுவும் காந்தி போன்ற ஒருவர் பிறந்த நாட்டில், ஒரு இராணுவத்தின் சாகசத்தை/பழிவாங்கலை தேசப்பக்தியாகவும்/ தியாகமாகவும் கட்டியமைக்கும்போது நாம் சற்று தலைகுனிந்து வெட்கப்படவும் அல்லவா வேண்டும்?
************

(இதை எழுத,, எனக்குப் பிரியமானவர் முகுந்த் வரதராஜன் காலமானபோது அவருக்காக எழுதப்பட்ட பாடல் ஒன்றை தான் எழுதிக் கொடுத்தேன் என்று சொன்னது ஒரு காரணமாக இருந்தது. அந்தவகையில் இந்தத் திரைப்படம் அவருக்கு நெருக்கமானதும் கூட. அவரின் சார்பு/உணர்ச்சி எல்லாவற்றையும் புரிந்துகொண்டே, ஒற்றைக் கதையாடலின் ஆபத்து இத்திரைப்படத்தில் இருக்கின்றது என்கின்ற உரையாடலின் நீட்சியிலே இதை எழுதினேன். அவருக்கும் நன்றி)

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தேசப்பற்று, தீவிரவாதி: ‘அமரன்’ பேசும் அரசியல்!

SelvamNov 08, 2024 09:27AM
WKf3O7Ft-FotoJet-1-1.jpg

அ. குமரேசன்

சமூகம், வரலாறு, அரசியல் சார்ந்த நாவல்கள், ஆய்வுத் தொகுப்புகள் உள்ளிட்ட எழுத்தாக்கங்களில், விவரிக்கப்பட்டிருக்கும் நிலைமைகள் பற்றி விமர்சிக்கப்படுவது போலவே, அவற்றில் சொல்லாமல் விடப்பட்டிருக்கும் நிலவரங்கள் குறித்த விமர்சனங்களும் எழுகின்றன.  படைப்புரிமைக்குச் சமமானதுதான் விமர்சன உரிமை. ஆகவே அத்தகைய விமர்சனங்கள் வருவதைத் தடுத்துவிட முடியாது.

சொல்லப்படுவது என்ன  என்பதில் வெளிப்படையாக உள்ள அரசியல் போலவே, சொல்லாமல் விடப்படுவது எது என்பதிலும் நுட்பமான அரசியல் இருக்கிறது. ஆயினும், என்ன சொல்லப்பட்டிருக்கிறதோ அது சரியாகச் சொல்லப்பட்டிருக்கிறதா, உண்மையைத் திரித்துச் சொல்லப்பட்டிருக்கிறதா என்ற கோணத்தில் விமர்சிப்பதே  எனது அணுகுமுறை.

amaran-1723613975-768x432.webp

அமர அரசியல்

தற்போது திரையரங்குகளுக்கு வந்து பெரிய அளவுக்குக் கவனம் பெற்றுள்ள ‘அமரன்’ திரைப்படம் பற்றிய விமர்சனங்களைப் பார்க்கிறபோது, தமிழ் சினிமா சித்தரித்து வந்திருக்கிற, தேச பக்தர்கள், தீவிரவாதிகள் பற்றிய அரசியல் பற்றிய சிந்தனை விரிகிறது.

உண்மையாக வாழ்ந்த, தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு ராணுவ வீரரின் கதையை வைத்து எடுக்கப்பட்டுள்ள ‘அமரன்’ படத்தைப் பற்றி வந்த எதிர் விமர்சனங்களில், அவரது சாதி அடையாளத்தை மறைத்தது ஏன் என்ற கேள்வியைச் சிலர் எழுப்பினார்கள்.

தமிழ் சினிமா எப்போதுமே அந்தச் சாதியினரைக் கதாநாயகர்களாகச் சித்தரிப்பதைப் புறக்கணித்து வந்திருப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டது. ஒரு நாளேட்டில் அது ஒரு கட்டுரையாகவே வந்தது. கட்டுரையாளரின் கருத்துச் சுதந்திரம் மதிக்கப்பட்டிருப்பதாக எடுத்துக்கொள்ளலாம்தான். இப்படி எல்லாப் பிரச்சினைகளிலும் எல்லாத் தரப்பினரின் கருத்துச் சுதந்திரமும் மதிக்கப்படுமானால் ஆரோக்கியமாக இருக்கும்.

படத்தின்  வெற்றிக் கூட்டத்தில் திரைக்கதை அமைத்து இயக்கியுள்ள ராஜ்குமார் பெரியசாமி இந்தக் கேள்விக்குப் பதிலளித்திருக்கிறார். ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் பெற்றோரே அதை விரும்பவில்லை, தமிழர் என்றும் இந்தியர் என்றும் அடையாளப்படுத்துவதைத்தான் முகுந்த்தே விரும்பினார் என்று பெற்றோர் தெரிவித்தார்கள் என்று இயக்குநர் கூறியிருக்கிறார்.

109620747.webp

இதற்கு முன் ‘சூரரைப் போற்று’ படம் வந்த நேரத்திலும், எளிய மக்களுக்குக் குறைந்த கட்டணத்தில் விமானப் பயண அனுபவம் கிடைக்கச் செய்தவரது வாழ்க்கையின் தாக்கத்தில் எடுக்கப்பட்ட படத்தில் அவரது சாதி அடையாளம் மறைக்கப்பட்டது என்று விமர்சிக்கப்பட்டது. இந்த இரண்டு படங்களிலுமே, நாயகர்கள் வேறு ஏதாவது ஒரு சாதியைச் சேர்ந்தவர்களாகவும் காட்டப்படவில்லை என்பதை இந்த விமர்சகர்கள் மறைத்துவிட்டார்கள்.

நாட்டிற்குப் பங்களிக்கிற நாயகர்களை எந்தவொரு சாதி வில்லையையும் மாட்டாமல் சித்தரிப்பதையே தமிழ் மக்கள் ஆதரித்து வந்திருக்கிறார்கள். அந்த நல்லிணக்க மாண்பிற்கு ‘அமரன்’ படம் உண்மையாக இருக்கிறது என்றால் அது பாராட்டத்தக்கதுதான்.

அந்தச் சாதியைச் சேர்ந்தவர்களை நாயகப் பாத்திரங்களாக வைத்த படங்கள் வந்திருக்கின்றன. எனது நினைவு சரியாக இருக்குமானால், ‘வியட்நாம் வீடு’, ‘கௌரவம்’, ‘அலைகள் ஓய்வதில்லை’, ‘ரோஜா’, ‘அந்நியன்’ உள்ளிட்ட அத்தகைய பல படங்கள் வந்து வெற்றியும் பெற்றுள்ளன. குறிப்பிட்ட சாதியினர் அல்லாத பிற சாதிகளைச் சேர்ந்த மக்களும் ஆதரித்ததால்தான் அந்தப் படங்கள் வெற்றி பெற்றன என்று சொல்லத் தேவையில்லை.

 வீரமும் தியாகமும்

மேஜர் முகுந்த்தின் குடும்பத்தினருடைய விருப்பத்திற்கும், தமிழக மக்களுடைய நல்லிணக்க வரலாற்றுக்கும் உண்மையாக இருந்தது போல், காஷ்மீர் மக்களுக்கும் ‘அமரன்’ உண்மையாக இருக்க வேண்டாமா? இப்படியொரு கேள்வியைக் கேட்டிருக்கிறார் வழக்குரைஞரும் எழுத்தாளருமான மு. ஆனந்தன்.

“அமரன் திரைப்படம் பார்த்துவிட்டு தியேட்டரிலேயே அப்படி அழுதேன் இப்படி அழுதேன் என்று பலர் சொல்கிறார்கள். அது சரிதான். அழ வைப்பதற்கென்றே தயாரித்த படமாக இருக்கிறது. மேஜர் முகுந்த் வரதராஜனின் மரணம் துயரமானது. அவரது தியாகம் போற்றுதலுக்குரியது. அவரது மரணம் மட்டுமல்ல ஒவ்வொரு ராணுவ வீரரின் தியாகமும் போற்றுதலுக்குரியது” என்று அந்த விமர்சனம் முகுந்த் வரதாராஜன்களின் தியாகங்களுக்கு மரியாதை செலுத்துவதிலிருந்தே தொடங்குகிறது.

“ஆனால், ராணுவ வீரர்களின் மரணத்தை வைத்து தேச வெறியைக் கிளப்பி  இழிவான அரசியல் செய்யப்படுவது போன்றுதான் இந்தப் படமும் செய்திருக்கிறது. பார்வையாளர்களின் உணர்வுகளை உச்சத்திற்குக் கொண்டு செல்வது போலவும் அழச் செய்வது போலவும் முகுந்த்தின் மரணத்திற்குப் பிறகான காட்சிகளைத் திட்டமிட்டு அமைத்துள்ளார்கள். அந்த மரணத்தை வைத்து சினிமாவை மார்க்கெட்டிங் செய்வதுதான் நோக்கமாக இருக்கிறது,” என்கிறார் ஆனந்தன். இத்தகைய விமர்சனங்கள் சரிதானா என்று உரசிப் பார்ப்பதற்காகவேனும் படத்தைப் பார்த்தாக வேண்டும்.

Screenshot-2024-11-08-091923-768x375.jpg

திரைக்கதையைப் பாதுகாப்புத் துறை, முகுந்த்தின் பெற்றோர், அவரது ராணுவ நண்பர்கள் ஆகிய மூன்று தரப்பிலும் காட்டி ஒப்புதல் பெற்ற பிறகுதான் படம் தயாரிக்கப்பட்டது என்று படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான மூத்த நடிகர், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் கூறியிருக்கிறார். ஆனால், ராணுவத்தால் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுக் கொல்லப்பட்ட அல்டாஃப்வாணி தரப்பிலோ, காஷ்மீர் மக்கள் தரப்பிலோ கருத்துக் கேட்கப்படவில்லை. குற்றவாளியைப் பிடிக்கச் சென்றபோது மக்கள் ராணுவத்தினர் மீது கல்லெறிந்து எதிர்ப்பதாகக் காட்டப்படுகிறது.

அப்படிக் கல் வீசப்பட்டது உண்மைதான் என்றாலும், குற்றவாளிக்காகக் கல் வீசியவர்கள் குறைவு. பொதுவாகக் கடந்த காலத்தில் ராணுவத்தினரால் நடத்தப்பட்ட கொடுமைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலேயே அந்த மக்கள் கல் வீசுவதை 2008ல் ஒரு போராட்ட வடிவமாகக் கையில் எடுத்தார்கள் என்று விமர்சகர் குறிப்பிடுகிறார்.

ஒரு முகுந்த் மக்களுக்கு உதவிய நல்லவராக இருந்திருக்கலாம், ஆனால், நடவடிக்கைக்காக அங்கே சென்றவர்கள் எல்லோருமே அப்படிப்பட்டவர்கள் கிடையாது. விசாரணைக்காகச் சிறுவர்களையும் தூக்கிச் சென்றது, பாலியல் வன்முறைகள், துப்பாக்கிச் சூடுகள் போன்ற வன்முறைகளுக்கு எதிராகவும், தொடர்ந்து அரசியலாகத் தாங்கள் வஞ்சிக்கப்பட்டதன் வலியைத் தாங்க இயலாதவர்களாகவும்  தங்களின் கோபத்தை வெளிப்படுத்தும் வகையிலேயே அந்த மக்கள் கற்களைக் கையில் எடுத்தார்கள் என்றும் விமர்சகர் சில நிகழ்வுகளை நினைவுகூர்ந்திருக்கிறார்.

 புதிய தணிக்கை

இப்படிப்பட்ட ராணுவ வன்கொடுமைகள் தொடர்பாக உலக பொதுமன்னிப்பு நிறுவனத்தின் அறிக்கை உட்பட பல ஆவணங்கள் இணையத்தில் கிடைக்கின்றன. ஆயினும் அம்மாதிரியான தகவல்களை வைத்துக்கொண்டு எளிதாகப் படம் எடுத்துவிட முடியாது. இதைப் பற்றிக் கூறுகிற ஆனந்தன், ஒன்றிய ஆட்சிக்கு மோடி தலைமையில் பாஜக வந்த பிறகு, ராணுவம் தொடர்பான படங்களுக்குத் தணிக்கை வாரியத்தின் அனுமதி மட்டும் போதாது, ஒன்றிய பாதுகாப்பு அமைச்சகத்தின் அனுமதியும் வேண்டும் என்று ஆணையிடப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

நாடாளுமன்ற மாநிலங்களவையில் 2022 பிப்ரவரி 11 அன்று, பெரொஸ் வருண் காந்தி கேட்டிருந்த ஒரு கேள்விக்கு பாதுகாப்புத் துறை இணையமைச்சர் அஜய் பட் அளித்த பதிலில், “பாதுகாப்பு தொடர்பான உள்ளடக்கங்களுடன் தயாரிக்கப்படும் திரைப்படங்களுக்குத் தடையில்லாச் சான்றிதழ் (என்ஓசி) வழங்குவதில் உள்ள அடிப்படைக் கோட்பாடு என்னவெனில், ஆயுதப் படையினருக்கோ அரசாங்கத்திற்கோ நாட்டிற்கோ மரியாதைக் குறைவு ஏற்படுத்தப்படாமல் இருப்பதையும், தகவல்கள் உண்மையாக இருப்பதையும், நாட்டின் பாதுகாப்புக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய  வகையில் ரகசியத் தகவல்கள் பொதுவெளிக்குக் கொண்டுவரப்படாமல் இருப்பதையும் உறுதிப்படுத்துவதுதான்,” என்று கூறப்பட்டிருக்கிறது. அமைச்சகத்தின் வலைத்தளத்தில் இந்தப் பதில் பதிவேற்றப்பட்டிருக்கிறது.

Screenshot-2024-11-08-091842-768x373.jpg

மேலோட்டமாகப் பார்த்தால் இந்தக் கட்டுப்பாடுகள் சரி  என்றுதான் தோன்றுகிறது. ஆனால், விமர்சனப்பூர்வமாகவும் அத்துமீறல்கள் தொடர்பாகவும் மக்களின் துயரங்கள் பற்றியும் படமெடுக்க முனைவோருக்கு இந்த ஆணை தகர்க்க முடியாத முட்டுச் சுவராக இருக்கிறது.

இப்படி ஒவ்வொரு மாநிலத்திலும் காவல்துறை தொடர்பான திரைப்படங்களுக்கும் என்ஓசி கெடுபிடி கொண்டுவரப்பட்டால் என்ன ஆகும்? காவல்துறையின் அப்பட்டமான மனித உரிமை மீறல்களைக் காட்டிய ‘விசாரணை’, ‘ஜெய்பீம்’, ‘வேட்டையன்’ போன்ற படங்கள் திரைக்கு வந்திருக்க முடியுமா? மக்களுக்கும் படைப்புக்கும் உண்மையாக இருக்க விரும்பும் படைப்பாளிகள் இப்படிப்பட்ட ஆணைகளுக்கு உடன்பட்டுப் போவதை விட, திரையரங்கில் பாப்கார்ன் விற்றாவது பிழைத்துக்கொள்ளலாம் என்று போய்விடுவார்கள்.

தேசப்பற்று

ராணுவ வீரர், காவல் அதிகாரி போன்ற தனி மனிதர்களின் வீரம், தியாகம் ஆகியவற்றின் மீது மரியாதையை ஏற்படுத்துகிற கலையாக்கங்கள் வரவேற்கத்தக்கவை.  ஆனால், அவர்களது வீரத்தையும் தியாகத்தையும் சந்தை விற்பனைச் சரக்காக்குவது தடையின்றி நடந்து வந்திருக்கிறது.

அத்துடன், முன்னுக்கு வருகிற சமூகப் பிரச்சினைகளையும் கூட விற்பனைப் பொருளாக்குகிற வேலையையும் சினிமாவினர் எப்போதுமே செய்துவந்திருக்கிறார்கள். மாற்றத்திற்கான உண்மை அக்கறையுடன் அந்தப் பிரச்சினைகளைக் கையாளும் படமாக்கங்கள் அரிதாகவே வருகின்றன.

அதிலும், (உண்மைக் கதையோ கற்பனைக் கதையோ  எதுவானாலும்) படத்தின் நாயகப் பாத்திரம் ராணுவ வீரன் அல்லது காவல்துறை அதிகாரி, எதிர்நிலைப் பாத்திரம் தீவிரவாதி என்றால் முழுக்க முழுக்க அவனை ஈவிரக்கமற்ற ஒரு சதிகாரன் போலவே காட்டுவதை முந்தைய முன்னணி  நட்சத்திரங்கள் நடித்த படங்களும் செய்து வந்திருக்கின்றன.

அவன் தரப்பு நியாயம் எதுவும் பெயரளவும் பேசப்படுவதில்லை. எந்தப் பின்னணியில் அவன் தீவிரவாதிகளின் பக்கம் இணைந்தான் என்பதும் விளக்கப்படுவதில்லை. ஒருவேளை நாயகப் பாத்திரமே தீவிரவாதி என்றால் இவை சொல்லப்படலாம். ஆனால், அப்படியொரு நாயகப் பாத்திரத்துடன் படம் பண்ணுவதற்கு யார் துணிவார்?

Screenshot-2024-11-08-091725-768x385.jpg

எந்தவொரு குற்றச் செயல் தொடர்பாகவும் கைது செய்யப்படுகிறவர்களை, அவர்கள் குற்றவாளிகள்  என்று அரசாங்கம்  சொல்லிவிட்டது என்பதற்காக நீதிமன்றம் ஏற்பதில்லை. விசாரணையில் குற்றம் சாட்டப்பட்டவர் தரப்பையும் கேட்டுவிட்டுத்தான் தீர்ப்புக்குப் போகிறது, போக வேண்டும். (நீதிக் கோட்பாட்டின்படி சொல்கிறேன். பணபலமோ அதிகாரத் தொடர்போ ஆள்வலிமையோ இல்லாத அப்பாவிகள் பலர் தங்கள் தரப்பை வலுவாக முன்வைக்க முடியாமல் குற்றவாளிகளாகச் சிறைக்கு அனுப்பப்படுவார்கள். அது தனிக்கதை.)

ஆனால், நம்மூர் சினிமாக்கள், எதிர்க் கதாபாத்திரங்களுக்குத்  தீவிரவாதி அங்கியை மாட்டிவிட்டால் அவர்கள் தரப்பிலோ, போராடும் மக்கள் தரப்பிலோ நியாயம் இருப்பதாக ஒப்புக்குக்கூட காட்டுவதில்லை. அவர்கள் தேசத்தின் எதிரிகளாகவே, அடக்குமுறைக்கு உரியவர்களாகவே சித்தரிக்கப்படுவார்கள். நியாயங்கள் இருந்தாலும், தேர்ந்தெடுத்த பாதை தவறானது என்றாவது சொல்ல வேண்டும், அந்தக் குறைந்தபட்ச நடுநிலை கூட கடைப்பிடிக்கப்படுவதில்லை.

குழந்தைகளின் ஓவியத்தில்

இந்தப் பாரம்பரியம் விசுவாசமாகப் பின்பற்றப்படுவதன் விளைவு என்ன? உண்மை நிகழ்வு ஒன்றை சாட்சிக்கு அழைக்கலாம். சில ஆண்டுகளுக்கு முன், சென்னை லயோலா கல்லூரியின் ஊடகக் கலைத்துறை மாணவர்களுக்கு இதழியல் தொடர்பாகப் பயிற்சியளிக்கிற வாய்ப்புக் கிடைத்தது. ஒருநாள் மாணவர்கள்  ஒரு பெரிய பையில் வைத்திருந்த ஓவியத் தாள்களை எடுத்து மேசையில் வைத்தார்கள். சென்னையின் சில அரசுப் பள்ளிகளையும் தனியார் பள்ளிகளையும் சேர்ந்த 100 குழந்தைகள் வரைந்த ஓவியங்கள் அவை.

அந்த ஓவியங்கள் அனைத்திலும், கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக, தாடி வைத்திருந்த, மீசை இல்லாத, குல்லா அணிந்த, நீண்ட கறுப்பு அங்கியுடன் கையில் துப்பாக்கி பிடித்திருந்த உருவம் வரையப்பட்டிருந்தது. “தீவிரவாதியின் படம் வரைக” என்று கேட்கப்பட்டபோது அத்தனை பேரும் இவ்வாறு வரைந்திருக்கிறார்கள் என்று மாணவர்கள் தெரிவித்தார்கள். அந்த உருவம் யாரைப் பிரதிபலிக்கிறது என்று எவரும் புரிந்துகொள்ளலாம். அந்த 100 குழந்தைகளில் ஒரு சிறுபான்மை சமயம் சார்ந்த குடும்பங்களின் பிள்ளைகளும் இருந்தார்கள். இப்படியொரு பிம்பத்தை அவர்களின் மனங்களில் பதிய வைத்ததில் சினிமாவுக்கு மிகப்பெரிய பங்கிருப்பதை மறுக்க முடியுமா?

தேசப்பற்று என்றால் அது ராணுவ வீரர் அல்லது காவல்துறை அதிகாரியின் கதையாகத்தான் இருக்க வேண்டும் என்ற விதியை யார் செய்தது? பருவநிலை சவால்களை எதிர்கொண்டு வயலில் இறங்கும் வேளாண் பணியில், போராடுகிற வேறு தொழிலாளர்களுக்காகத் தமது ஒரு நாள் ஊதியத்தை இழந்து ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கும் தோழமைப் பணியில், மயக்கும் மதவெறிப் பிரச்சாரங்களைப் புறக்கணித்து ஒற்றுமையைப் பேணும் நல்லிணக்கப் பணியில், சாதி ஆணவத்துக்கு எதிராகத் தோள் சேரும் சமூகநீதிப் பணியில், மாணவர்களுக்காகப் பொழுதை அர்ப்பணிக்கும் ஆசிரியப் பணியில்,

Screenshot-2024-11-08-091901-768x399.jpg

தொற்று வாய்ப்பைப் பொருட்படுத்தாமல் நோயாளிகளைத் தொட்டுத் துடைத்துத் தூய்மைப்படுத்தும் செவிலியப் பணியில், தாக்குதல்களுக்கு அஞ்சாமல் உண்மைகளை வெளிப்படுத்தும் ஊடகப் பணியில், கடும் மழையிலும் மின்சாரம் கிடைக்கச் செய்யும் மின் பணியில், வெள்ளச் சாலையிலும் பேருந்தை இயக்கும் போக்குவரத்துப் பணியில், பேச்சும் இணையமும் துண்டிக்கப்படாமல் இருப்பதை உறுதிப்படுத்தும் தொலைத்தொடர்புப் பணியில், பில் போட வேண்டாமென்றால் வரி தள்ளுபடி என்று சொல்வதைத் தள்ளிவிட்டு பில் போட்டே பொருள்கள் வாங்கும் வாடிக்கையாளர் பணியில்…. இன்னும் நாட்டின் ரத்த ஓட்டமாக இருக்கும் அத்தனை பணிகளிலும் துடிப்பது தேசப்பற்றுதான்.

ராணுவ வீரர்களோடும் காவல்துறையினரோடும் நில்லாமல் இப்படிப்பட்ட பணிகளையும் பாருங்கள் சினிமாவினரே, வெற்றிப் படங்களுக்கான அருமையான கதைகள் கிடைக்கும்.

இல்லையேல், மனித உரிமை முழக்கங்கள் படப்பிடிப்புக் கூடங்களிலும் உரக்க ஒலிப்பதை நாடு கேட்கிற நாள் வரத்தான் செய்யும்.
 

 

https://minnambalam.com/featured-article/amaran-movie-politics-patriotism-speacial-article-on-kumaresan/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.