Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சிறீலங்காவிற்கு இந்தியா மேலும் ஆயுத உதவி - த டைம்ஸ் ஒஃப் இந்தியா தகவல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

திங்கள் 15-10-2007 08:48 மணி தமிழீழம் [தாயகன்]

சிறீலங்காவிற்கு இந்தியா மேலும் ஆயுத உதவி - த டைம்ஸ் ஒஃப் இந்தியா தகவல்

இந்தியா, சிறீலங்கா அரசுக்கு மறைமுகமாக மேலும் ஆயுத உதவிகளை வழங்கி வருவதாக, த டைம்ஸ் ஒஃப் இந்தியா ஏட்டின் இன்றைய வெளியீட்டில் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவின் மறைமுக ஆயுதப் பேரம் தொடர்பாக வெளியாகியுள்ள செய்தி...

இலங்கையின் இனப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு இந்தியாவின் மனோபல ரீதியான ஒத்துழைப்பு மட்டுமே தேவைப்படுவதாக சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ஷ கூறலாம். ஆனால் ஆனால் பூட்டிய கதவுகளுக்குப் பின்னால் கொழும்பு நிருவாகம் இந்தியாவிடம் ஆயுத தளபாடங்களையும், தொழில்நுட்பங்களையும் கோரி வருகின்றது.

இந்தியாவும் வெட்கப்பட்டு ஒதுங்கி நிற்காது, தனது பங்கிற்கு ஆயுத விநியோகத்தை மேற்கொண்டு வருகின்றது. இதில் விடுதலைப் புலிகளின் விமானத் தாக்குதல்களை முறியடிக்க அண்மையில் மீண்டும் மேலதிகமாக வழங்கப்பட்டுள்ள 40 எம்.எம் எல்-70 (40mm L-70 close range anti-aircraft guns) ரக குறுந்தூர விமான எதிர்ப்பு சுடுகுழல்களும் அடங்குகின்றன.

இந்த சுடு குழல்களை (L-70 gun barrels) மேலதிகமாக தருவிப்பதற்கான கேள்விப் பத்திரத்தையும், நாற்பதாயிரம் அமெரிக்க டொலர் நிதியினையும் இந்தியாவின் ஆயுத உற்பத்தி நிலையமான -த ஓற்ட்னன்ஸ் உற்பத்தி நிலையக்குழு- (The Ordnance Factory Board) அண்மையில் சிறீலங்கா அரசிடம் இருந்து பெற்றுள்ளது.

அத்துடன், தாழப் பறக்கும் விமானங்களைக் கண்டுபிடிக்கும் மேலும் நான்கு இந்திரா ரக றாடர் கருவிகளும் ஏற்கனவே சிறீலங்காவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதை நம்பகமான தகவல்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

இவற்றுடன் நின்றுவிடவில்லை.. பாகிஸ்தானிடமும், சீனாவிடமும் ஆயுதங்களைப் பெற்றுக் கொள்ளப்போவதாக அடிக்கடி இந்தியாவை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் சிறீலங்கா அரசு நியூடெல்லி அரசிடம் மேலும் பல விமான எதிர்ப்பு ஆயுதங்கள், றாடர் கருவிகள், ஆட்லெறி சுடுகுழல்கள், Nishant UAVs மற்றும் லேசர் கருவிகளில் இயங்கும் PGMs (precision-guided munitions) போன்ற ஆயுதங்களையும் கோரியுள்ளது.

சுவாரஸ்யமான சம்பவம் என்னவென்றால், கடந்த வெள்ளிக்கிழமை ராஜபக்ஷ நியூடெல்லிக்கு வந்தபோதுகூட, விடுதலைப் புலிகளின் படகிலிருந்து றிமோட் கொன்றோலில் இயங்கும் சிறயரக விமானங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கொழும்பு நிருவாகத்தால் அறிவிக்கப்பட்டிருந்தது.

இவற்றில் வெடிமருந்துகள் நிரப்பி தாக்குதல் மேற்கொள்ள முடியும் என்றும் கூறப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து விடுதலைப் புலிகள் தமிழ்நாட்டை தமது ஆயுதக் கடத்தலுக்கு தொடர்ந்தும் பயன்படுத்துகின்றனர் என்ற குற்றச்சாட்டும் சிறீலங்கா அரசினால் முன்வைக்கப்பட்டிருந்தது.

இந்தியா தற்பொழுதும் மிகப் பெரியளவிலான தாக்கியழிக்கும் ஆயுத தளபாடங்களை சிறீலங்கா அரசுக்கு வழங்கி வருகின்றது. 1990களில் மியன்மாரில் ஏற்பட்டதுபோன்று பாகிஸ்தானும், சீனாவும் தலையிடாத வகையில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டுவதற்கு இந்தியா இதனைச் செய்கின்றது.

இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே நாராயணன், பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகளிடம் ஆயுதங்களைப் பெற்றுக்கொள்ள வேண்டாம் என இவ்வருட முற்பகுதியில் சிறீலங்காவிடம் வெளிப்படையாகவே கேட்டுக் கொண்டதன் மூலம் இந்திய பாதுகாப்பு அமைச்சின் செயற்திட்டங்களைப் புரிய முடிகின்றது.

தமிழ்நாட்டில் எழும் எதிர்ப்பலைகளைக் கருத்தில்கொண்டு சிறீலங்காவிற்கு தாக்கியழிக்கும் ஆயுதங்களை வழங்கவில்லை எனவும், தற்காப்பு ஆயுதங்களை மட்டுமே வழங்குவதாகவும் எம்.கே நாராயணன் கூறியிருந்த போதிலும், மறைமுகமாக தாக்கியழிக்கும் ஆயுதங்கள் இந்தியாவால் சிறீலங்காவிற்கு வழங்கப்பட்டு வருகின்றன.

இவ்வாறு இன்றைய -த டைம்ஸ் ஒஃப் இந்தியா- நாளேட்டில் இந்திய அரசின் சிறீலங்காவிற்கான ஆயுத வழங்கல்கள் அம்பலப்படுத்தப்பட்டுள்ளன.

http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=2&

சிறிலங்கா அரசாங்கத்துக்கு இந்திய அரசாங்கம், ஓசையின்றி ஆயுத உதவிகளை மேற்கொண்டு வருவதாக பிரபல இந்திய ஆங்கில நாளிதழான "ரைம்ஸ் ஓஃப் இந்தியா" தெரிவித்துள்ளது.

தொடர்ந்து வாசிக்க

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்காவிற்கான இராணுவ உதவிகள் குறித்து கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டு-பழ.நெடுமாறன்

Written by Seran - Oct 15, 2007 at 09:48 PM

சிறிலங்காவிற்கான இந்திய மத்திய அரசின் இராணுவ உதவியைக் கண்டித்து தமிழக சட்டப்பேரவையில் கண்டத் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் வலியுறுத்தியுள்ளார்.

சிறிலங்காவிற்கான இராணுவ உதவிகள் குறித்து கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டு-பழ.நெடுமாறன்

இது தொடர்பில் "புதினம்" நிருபருக்கு பழ.நெடுமாறன் இன்று திங்கட்கிழமை அளித்த நேர்காணல்:

மகிந்த ராஜபக்ச மட்டுமல்ல, அவருக்கு முன்பாக பதவியிலிருந்த சந்திரிகா உள்ளிட்ட யாராக இருந்தாலும் தொடர்ந்து இந்தியாவை ஏமாற்றும் முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றனர். ஒருபக்கம் இந்தியாவின் "தார்மீக ஆதரவு" இருந்தால் போதும் என்று பசப்புகிறார். மற்றொரு பக்கம் இந்தியாவுக்கு எதிராக செயற்படும் நாடுகளிடமிருந்து ஆயுதம் மற்றும் பொருளாதார உதவிகளைத் தொடர்ந்து பெறுகிறார்கள். சிறிலங்கா தொடர்ந்து இத்தகைய இரட்டை வேடம் போடுகிறது. இதனை இந்தியா சரிவர புரிந்துகொள்ளவில்லை என்றுதான் எங்களைப் போன்றவர்கள் வருந்துகிறோம்.

இந்தியாவின் வடபகுதியில் ஒரு பக்கம் சீனாவினாலும் பாகிஸ்தானாலும் அபாயங்கள் அடிக்கடி நேரிட்டுள்ளன. பல போர்களும் அதனால் மூண்டுள்ளன. இந்தியாவின் பிரதமராக ஜவஹர்லால் நேரு பதவி வகித்த காலத்திலேயே அவர் கொள்கை ரீதியாக ஒரு முடிவெடுத்தார். இந்தியாவின் வடமாநிலங்கள் எதிலும் இராணுவ ரீதியான ஆயுத உற்பத்தித் தொழிற்சாலைகளை அமைப்பதில்லை- அது ஆபத்தை ஏற்படுத்தும் என்று நேரு முடிவு செய்து அனைத்தையும் தென் மாநிலங்களில் அமைக்க தீர்மானிக்கப்பட்டது.

ஏனென்றால் தெற்குதான் பாதுகாப்பான பகுதி. அண்டை நாடான இலங்கையைத் தவிர வேறு எந்த நாடும் பக்கத்தில் இல்லை. ஆகவே தென்பகுதியில் இராணுவ தளபாடத் தொழிற்சாலைகளை அமைப்பது பாதுகாப்பானது என்று நினைத்து நேரு அமைத்தார். ஆனால் இன்று தென்பகுதியே அபாயத்துக்குள்ளாகி ட்டது.

இலங்கையில் சீனாவும் பாகிஸ்தானும் காலூன்றுவதற்கு முயற்சி செய்கின்றனர். சிங்கள இராணுவ வானூர்திகளை பாகிஸ்தான் விமானிகள் ஓட்டுவதாக செய்திகள் வருகின்றன. சீனா, அங்கே கடற்படை தளத்தை அமைக்க முயற்சிக்கிறது என்று சொல்கிறார்கள்.

சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இலங்கையில் ஏன் அவ்வளவு நாட்டம்?

இலங்கை ஒன்றும் பெரிய சந்தையும் அல்ல. அது ஒரு சின்னஞ்சிறிய நாடு. இலங்கையின் மூலமாக பாகிஸ்தானுக்கோ சீனாவுக்கோ எதுவித ஆதாயமும் கிடைக்கப் போவதில்லை. அப்படி இருந்தும் கூட இலங்கைக்குத் தேவையான ஆயுத உதவிகளை சீனாவும் பாகிஸ்தானும் செய்கிறது. ஆயுதங்களைக் குவிக்கிறது எனில் எதற்காக?

இந்தியாவை மிரட்ட இலங்கையை தளமாக்க வேண்டும் என்பதற்காக அதனைச் செய்கிறார்கள்-

ஆனால் புதுடில்லியில் உள்ளவர்கள் இதனை முழுமையாகப் புரிந்து கொண்டதாகத் தெரியவில்லை.

இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் ஒரு பொருந்தாத விசித்திரமான காரணத்தைச் சொல்கிறார்- நாம் ஆயுதம் கொடுக்காவிட்டால் அவர்கள் சீனாவிடமும், பாகிஸ்தானிடமும் வாங்குவார்கள். ஆகவே நாம் கொடுக்கிறோம் என்று அபத்தமாகச் சொல்கிறார்.

நீங்கள் கொடுத்தாலும் கொடுக்காது போனாலும் அவர்கள் சீனாவிடமும், பாகிஸ்தானிடமும் ஆயுதங்களை வாங்கிக் கொண்டுதான் உள்ளனர்.

இலங்கை இராணுவமயமாவது ஈழத் தமிழர்களுக்கோ தமிழீழ விடுதலைப் புலிகளுக்கோ மட்டும் அபாயகரமானது அல்ல- அதைவிட இந்தியாவின் தென்பகுதி அபாயத்துக்குள்ளாகும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

எந்த ஒரு அன்னிய நாட்டினது கரமும் இலங்கைக்குள் வராதபடி தடுக்க முயற்சி செய்ய வேண்டுமே தவிர அபத்தமான காரணங்களைக் கூறிக் கொண்டு நம்மை நாமே ஏமாற்றக் கூடாது.

அதுதான் இப்போது டில்லியிலே நடந்துள்ளது. "ரைம்ஸ் ஓஃப் இந்தியா" பத்திரிகையிலே வந்த செய்தி உண்மையாக இருக்குமேயானால் அதனை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

இலங்கையில் ஆயுதக் குவிப்பு ஏற்படுவது நாளை இந்தியாவுக்கு எதிராக அது பயன்படும் என்பதனை மறந்துவிடக் கூடாது.

தாம் வழங்கும் ஆயுதங்கள் இலங்கையிலே உள்ள தமிழ் மக்களை சுட்டுக்கொன்று குவிக்க பயன்படுத்தப்படுகிறது என்பது இந்தியாவுக்குத் தெரியாமல் இல்லை. இலங்கைக்குப் பக்கத்திலே வேறு எந்த நாடும் இல்லை. எந்த ஒரு நாட்டினது ஆபத்தும் இலங்கைக்கு இல்லை. மாறாக தமிழர்களைக் கொன்று குவிக்கத்தான் அந்த ஆயுதங்கள் பயன்படுகிறது என்பதை இந்தியா உணராமல் இருக்கிறது என்று சொன்னால் அதனை நம்ப முடியாது. புதுடில்லியில் இருப்பவர்களுக்கு அது தெரியாமல் இல்லை. தமிழர் விரோதப் போக்கை புதுடில்லி வேண்டுமென்றே கடைபிடிக்கிறது.

இலங்கை இராணுவ மயமாவது ஆபத்தானது என்பதை இந்திரா உணர்ந்திருந்தார். அதனால் சிறிலங்கா அரசாங்கத்தை இந்திரா எச்சரித்தார். ஆனால் அவருக்குப் பின்னால் வந்தவர்கள் இந்தப் பிரச்சினையில் தடுமாற்றமடைந்தனர்.

இராணுவ ஆட்சியை நடைபெறுவது போல் செயற்படும் நாடுகளின் பிரச்சனைகளில் மக்களின் பக்கம்தான் இந்தியா நிற்க வேண்டும். அதுவே நேருவின் கொள்கை. அதனைவிடுத்து இனவெறி சர்வாதிகாரிகளுக்கு இந்தியா ஆதரவளிப்பது என்பது எல்லா வகையிலும் கேவலமானது. உலக அரங்கில் இந்தியாவின் மதிப்பை மிகவும் குறைத்து விடும்.

எதிர்வரும் வாரம் தமிழ்நாடு சட்டமன்றம் கூடுகிறது. இலங்கைக்கு இந்தியா இராணுவ உதவி வழங்குவதைக் கண்டித்து அனைத்துக் கட்சிகளும் இணைந்து கண்டனத் தீர்மானம் கொண்டுவர வேண்டும். இலங்கை அரசாங்கத்துக்கு எந்தக் காரணத்தையும் முன்னிட்டு ஆயுத உதவி வழங்க கூடாது என்று அந்தத் தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும். இந்தத் தீர்மானத்தை வலியுறுத்தி இந்திய பிரதமருக்கு தமிழக முதலமைச்சர் ஒரு கடிதத்தை அனுப்ப வேண்டும். ஒட்டுமொத்த தமிழகத்தின் எதிர்ப்பைத் தெரிவிக்க அதுதான் வழி. அதனைச் செய்வதற்கு தமிழக முதல்வர் முன்வர வேண்டும் என்று நான் வலியுறுத்துகிறேன் என்றார் பழ.நெடுமாறன்.

http://www.sankathi.net/index.php?option=c...42&Itemid=1

சிறிலங்காவுக்கு இந்தியா இரகசிய ஆயுத உதவி: அம்பலப்படுத்துகிறது இந்திய நாளிதழ்

சிறிலங்கா அரசாங்கத்துக்கு இந்திய அரசாங்கம், ஓசையின்றி ஆயுத உதவிகளை மேற்கொண்டு வருவதாக பிரபல இந்திய ஆங்கில நாளிதழான "ரைம்ஸ் ஓஃப் இந்தியா" தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் இன்று திங்கட்கிழமை (15.10.07) "ரைம்ஸ் ஓஃப் இந்தியா"வில் வெளியாகியுள்ள செய்தி:தொடர்ந்து வாசிக்க

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Posted on : 2007-10-16

தவறுக்குத் துணை போகும் புதுடில்லித் தரப்பின் போக்கு

இலங்கை இனப்பிரச்சினை விவகாரம் தொடர்பாக இந்த உப கண்டப் பிரதேசத்தின் வல்லாதிக்க நாடான இந்தியாவின் ஈடுபாடும் போக்கும் மீண்டும் முக்கிய இடத்துக்கு வந்திருக்கின்றன.

இலங்கையில் ஆள்கடத்தல்கள், சட்டத்துக்கு விரோதமான படுகொலைகள், காணாமற் போகச் செய்தல், கப்பம் அறவிடல் போன்ற மனித உரிமை மீறல்கள் குறிப்பாக சிறுபான்மையின ரான தமிழர்களுக்கு எதிராக மோசமாக இடம்பெற்றுவருகின்றன.

இந்தக் கொடூரங்கள் சர்வதேசத்தின் கவனத்துக்கும், சிரத்தைக்கும் உள்ளாகியுள்ளன. சட்டரீதியான, இறைமையுள்ள அரசு என்று தன்னைக் கூறிக்கொண்டே இந்த அராஜகங்களுக்கும் கொடூரங்களுக்கும் இடமளித்து, வழிசெய்து நிற்கிறது கொழும்பு அரசு.

அரசு ஒன்றின் பெயரால் சிறுபான்மையினருக்கு இழைக்கப்படுகின்ற இத்தகைய மோசமான கொடூரங்களுக்கு எதிராகக் குரல் எழுப்புவதும், அத்தகைய அடக்கு முறைக் கொடுமையைத் தடுத்து நிறுத்துவதும் அடக்கப்பட்ட அந்த மக்களின் நீதியான அபிலாஷைகளை அவர்களுக்குப் பெற்றுக்கொடுக்க வழிசெய்து துணை நிற்பதும் சர்வதேச சமூகத்தின் தார்மீகப் பொறுப்பும் கடமையுமாகும். இது விடயத்தில் சர்வதேச நாடுகளின் கூட்டமைப்பான ஐ.நாவின் பங்கு பணி முக்கியமானதும் சிரத்தைக்குரியதும் பொறுப்பானதுமாகும்.

அதனை அது செய்யவிடாமல் தடுப்பதற்குக் கூட, இந்தப் பிராந்தியத்தின் வல்லாதிக்க நாடான இந்தியாவே இலங்கை அரசுக்கு முன் உதாரணமாகியிருக்கின்றது. இலங்கையில் சிறு பான்மை இனத்தவர்களான தமிழர்கள் அடிமைப்படுத்தப்பட்டு, ஒடுக்கப்பட்டு, பேரவலத்தில் சிக்கியிருக்கையில், அதிலிருந்து அவர்களை மீட்டெடுக்கும் சர்வதேச எத்தனத்துக்கு இந்திய உப கண்டப் பிரதேசத்தில், தடையீடு செய்யப்படுகின்றது. அத் தகைய இடைஞ்சலுக்கு முன் உதாரணமாகவும், பின்புலமாகவும், இந்தியாவையே, கொழும்பு அரசு சுட்டிக்காட்டும் கேவல நிலைக்கு இந்தியா சென்றிருக்கின்றமை அந்த நாட்டுக்குப் பெரும் வெட்கக் கேடாகும்.

ஈழத் தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதிகள், கொடூரங்களுக்கு எதிராக சர்வதேச சமூகத்தின் பிரதிநிதிகளாக ஐ.நா. செயற்பட முயல்கையில், அத்தகைய செயற்பாட்டுக்கு முட்டுக்கட்டை போடும் கொழும்பின் முயற்சிகளுக்கு இந்தியாவின் பெயரே பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

""இலங்கை இனப்பிரச்சினை விவகாரத்தில் இந்த உபகண்டப் பிரதேசத்தின் வல்லாதிக்க நாடான இந்தியா, இப்பிராந்தியத்தின் "பொலிஸ்காரன்' போன்று செயற்பட்டதில்லை. இதனை முன் உதாரணமாக ஐ.நா. எடுத்துக்கொள்ள வேண்டும். இலங்கை விடயத்தில் "பொலிஸ்காரன்' போன்று செயற்பட ஐ.நா. முயலக் கூடாது.'' என்று ஐ.நாவுக்கு நேரடியாகவே கூறப்பட்டிருக்கின் றது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசகரும், அவரது சகோதரரும், ஜனாதிபதிக்கு அடுத்து இலங்கை அரசியல் விவ காரங்களில் அதிக ஆதிக்கமும் செல்வாக்கும் செலுத்தி வருகின்ற வருமான பஸில் ராஜபக்ஷவே, மனித உரிமைகளுக்கான ஐ.நா. தூதுவர் லூயிஸ் ஆர்பர் அம்மையாரிடம் இதனை நேரடியாகக் கூறி யிருக்கின்றார் என்று தகவல். அதுவும் இலங்கை ஜனாதிபதியை அருகில் வைத்துக்கொண்டு இவ்வாறு அவர் குறிப்பிட்டிருக் கின்றார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ புதுடில்லிக்குப் புறப்படவிருக்கையில் மேற்படி சந்திப்பு இடம்பெற்றது. அப்போதே புதுடில்லிக்கு இத்தகைய "ஐஸ் வைப்பு' தந்திரோபாயத்தைப் பயன்படுத்தியிருக்கின்றது கொழும்பு அரசுத் தலைமை.

இந்த முயற்சி மூலம் குளிர்விப்பு மூலம் புதுடில்லியைக் கொழும்பு கெட்டித்தனமாக வளைத்துப்போட்டுவிட்டது என்பதுபோலவே தோன்றுகின்றது.

ஈழத் தமிழர்களுக்கு எதிரான அராஜகக் கொடூரங்களும், இன வழிப்பும் கொழும்பின் வழிகாட்டல், வசதிகளுடன் தொடர்கையில்

அதனை ஆட்சேபிக்கும் சர்வதேசக் குரல் ஐ.நா. ஊடாக ஒலிக்கையில்

இலங்கையின் அதிபர் புதுடில்லிக்கு விஜயம் செய்து இந்தி யத் தலைவர்களுடன் நேரடியான சந்திப்புகள், பேச்சுகளில் ஈடு பட்டு வந்துள்ள வேளையில் கூட

இக்கொடூரங்களுக்கு எதிரான இந்தியாவின் காத்திரமான பதில், பங்களிப்பு, கண்டிப்பு போன்றவை வரையறுக்கப்பட்ட தெளிவான வார்த்தைகளில் வெளிவரவேயில்லை.

மாறாக

ஒருபுறம், இலங்கைக் கொடூரங்களுக்கு எதிராகக் குரல் எழுப்பி, காத்திரமாக ஏதும் செய்யாமல் அடக்கி வாசிக்கும் அல்லது மௌனம் சாதிக்கும் புதுடில்லியின் பொறுப்பற்ற போக்கு கொழும்பு அரசுத் தலைமையினால் விதந்துரைக்கப்படுகின்றது.

மறுபுறம், இலங்கையின் இந்தச் செயல் நிலைப்பாட்டை இந்தியா ஊக்கப்படுத்தி, ஸ்திரப்படுத்தும் வகையில் காரியமாற்று வதாகவும் சில செய்திகள் வெளிவந்திருக்கின்றன.

அதாவது

இலங்கை இனப்பிரச்சினை விவகாரத்தில், சிறுபான்மையினரான தமிழர்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்து விடப்பட்டிருக் கும் மோசமான அரச வன்முறைகளைக் கண்டித்து, தடுத்து நிறுத் தும் வகையில் இப்பிரதேசத்தின் "பொலிஸ்காரன்' போன்று செயற்பட வேண்டிய தனது பொறுப்பை உதாசீனப்படுத்தியுள்ள இந்தியா, அதேவேளை இலங்கை அரசுத் தரப்பின் கொடூரங் களுக்கு ஒத்தாசையும், உதவியும் வழங்கும் கைங்கரியத்திலும் சத்தம் சந்தடியின்றி இறங்கியிருப்பதாகச் செய்திகள் கசியத் தொடங்கியுள்ளன.

இதுவரை, இலங்கைக்குத் தற்காப்பு ஆயுதங்களை மட்டுமே வழங்குவது என்ற தனது வெளிப்படையான நிலைப்பாட்டிலிருந்து வந்த இந்தியா, இப்போது "பல்டி' அடித்து, தாக்குதல் ஆயுதங்களையும் வழங்க முன்வந்து விட்டது முடிவு செய்து விட்டது என்று செய்திகள் மெல்ல மெல்லக் கசியத் தொடங்கி யிருக்கின்றன.

"இலங்கைக்கான ஆயுத உதவிகளை இந்தியா கணிசமாக அதிகரிக்கின்றது' என்ற தலைப்பில் இந்தியாவின் பிரபல ஊட கங்களில் வெளியாகும் செய்திகள் இதனை உறுதிப்படுத்துகின் றன.

1990 களில் மியன்மார் நாடு கோரிய ஆயுத உதவிகளை இந்தியா வழங்கத் தவறியதால் அந்நாடு சீனாவிடமும் பாகிஸ்தானிடமும் சென்றது. அதுபோல இப்போது இலங்கையையும் சீனா, பாகிஸ்தான் பக்கம் போய் விழுந்து விடாமல் செய்வதற்காகவே இந்தியா இப்படி ஆயுத விநியோக வழங்கலுக்கு இணங்கியது என்று சப்புக்கட்டல் சமாளிப்புக் கூறப்பட்டாலும் கூட

இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான இனச்சுத்திகரிப்பு நடவடிக்கைகளைக் கண்டிக்கவும், தடுத்து நிறுத்தவும் காத்திர மான நடவடிக்கைகளை செயலில் இல்லாவிட்டாலும் குறைந்த பட்சம் சொல்லில் கூட வெளிப்படுத்தாமல், இத்தகைய மூடுமந் திரப் போக்கிலான ஆயுத வழங்கலுக்கு இந்தியா முன்வந்தி ருப்பது ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரை பெரும் விசனத்துக் கும், கண்டனத்துக்கும், எரிச்சலுக்கும், அதிருப்திக்கும் உரிய விவகாரமாகிவிட்டது.

http://www.uthayan.com/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆரவாரமின்றி ஆயுத விற்பனையை அதிகரிக்கிறது இந்தியா

[16 - October - 2007]

* திரை மறைவில் அதிக உதவியை நாடும் கொழும்பு?

இலங்கையின் இனநெருக்கடிக்கு அதிகாரப்பகிர்வு மூலம் அரசியல் தீர்வு காணுமாறு இந்தியா அவ்வப்போது அறிக்கைகளை விடுத்து வருகின்ற போதும் அமைதியான முறையில் இலங்கைக்கான ஆயுத உதவிகளை புதுடில்லி அதிகரித்து வருகின்றது.

இனமோதல்களை முடிவுக்கு கொண்டு வருவதற்கு இந்தியாவின் தார்மிக ஆதரவே இலங்கைக்கு தேவைப்படுவதாக கடந்த சனிக் கிழமை புதுடில்லியில் இடம்பெற்ற இந்துஸ்தான் ரைம்ஸின் தலைமைத்துவ மாநாட்டில் கலந்து கொண்டு உரைநிகழ்த்துகையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்திருந்தார்.

ஆயினும் மோதல்களைக் கையாள்வதற்காக அதிகளவில் கனரக ஆயுதங்கள், மென்ரக உபகரணங்கள் போன்றவற்றை திரைமறைவில் புதுடில்லியிடம் இருந்து பெற்றுக்கொள்ளும் முயற்சிகளில் கொழும்பு தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக `ரைம்ஸ் இந்தியா' பத்திரிகை நேற்று திங்கட்கிழமை தெரிவித்திருக்கிறது.

அத்துடன் இந்தியாவும் ஏனைய தரப்புகளை பற்றி பொருட்படுத்தாமல் இலங்கைக்கான ஆயுத விநியோகத்தை அதிகரித்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

விடுதலைப்புலிகளின் வான்தாக்குதல்களுக்கு எதிரான பாதுகாப்பை வழங்கக் கூடிய தன்னியக்க 40 மி.மீ. எல்-70 வீச்சுடைய விமான எதிர்ப்பு துப்பாக்கிகளை அதிகளவில் வழங்கியமை இதற்கான பிந்திய உதாரணமாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கைக்கு 40 ஆயிரம் டொலர்களுக்கு எல்-70 துப்பாக்கி பரல்களை பெற்றுக்கொள்வதற்கான மற்றொரு விநியோக ஒப்பந்தத்தை இந்தியாவின் ஆயுத தொழிற்சாலை சபை தற்போது பெற்றுள்ளமை உதாரணமாகும். தாழப்பறப்பதை கண்டுபிடிக்கும் 4 `இந்திரா' ராடார்கள் ஏற்கனவே இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது என்று வட்டாரமொன்று தெரிவித்துள்ளது. இதுமட்டுமல்லாமல் இலங்கைக்குள் சீனா, பாகிஸ்தானின் தந்திரோபாய ஊடுருவல்கள் இடம்பெற்று விடுமென்ற இந்தியாவின் அச்சத்தை பயன்படுத்தி அதிகளவு பாதுகாப்பு ஆயுதங்கள், ராடார்கள், ஆட்லறிகள், நிஷாந், யூ.ஏ.விக்கள், இராணுவக் கருவிகளை சரியாக அடையாளம் காட்டுவதற்கான லேசர் வடிமைப்புகள் என்பனவற்றை விநியோகிக்குமாறு கொழும்பு புதுடில்லியை கேட்டுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ புதுடில்லிக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். அச்சமயம் புலிகளின் படகுகளிலிருந்து தூரயிருந்து இயக்குவிக்கும் 2 சிறிய ரக விமானங்களை கைப்பற்றியதாக கொழும்பிலிருந்து செய்திகள் வெளியாகியிருந்தனர்.

வெடிமருந்துகளை ஏற்றிய பின் இந்த விமானங்கள் ஏவுகணைகளாக பயன்படுத்தப்படவிருந்ததாகவு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவின் ஆயுத உதவி தமிழினத்தை குழிதோண்டிப் புதைப்பதற்கே வழிவகுக்கும்

[17 - October - 2007]

* தமிழ்க் கூட்டமைப்பு கவலையுடன் எச்சரிக்கை

ஏ.ஏ.மொஹமட் அன்ஸிர்

இலங்கைக்கான இந்தியாவின் தார்மிக ஆதரவு தாராளமாகக் கிடைப்பதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ திருப்தி தெரிவித்துள்ள நிலையிலும் புதுடில்லியுடனான கொழும்பின் உறவு மிகவும் அந்நியோன்யமாக இருப்பதாக அரசாங்கத் தரப்பு பெரும் மகிழ்ச்சியை வெளியிட்டிருக்கின்ற வேளையிலும் வடக்கு, கிழக்கு தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் தேசியக் கூட்டமைப்பிடமிருந்து ஆழ்ந்த கவலையும் விசனமும் வெளிவந்திருக்கிறது.

இலங்கைக்கு ஆரவாரமின்றி கனரக ஆயுதங்களின் விநியோகத்தை இந்திய அரசு அதிகரித்திருப்பதாக இந்தியப் பத்திரிகைகள் செய்திகள் வெளியிட்டுள்ளன. இந்தச் செய்திகள் உண்மையாக இருந்தால் அதாவது, ஆயுத விநியோகத்தை இந்தியா அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்படுவது உறுதியான விடயமாக இருந்தால், அது இலங்கையிலுள்ள தமிழினத்தை குழிதோண்டிப் புதைப்பதற்கே வழிவகுக்குமென தமிழ்க் கூட்டமைப்பு எச்சரித்திருக்கிறது.

புதுடில்லிக்கும் கொழும்புக்கும் தற்போது ஏற்பட்டிருக்கும் நெருக்கமான பிணைப்புகள் குறித்து புதுடில்லிக்கு ஜனாதிபதி தலைமையிலான குழுவினருடன் விஜயம் மேற்கொண்டிருந்த வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பாலித ஹோகண கூறுகையில்;

ஜனாதிபதி இந்தியாவிற்கு மேற்கொண்ட விஜயம் இலங்கைக்கு பெரும் பயன்பாட்டைப் பெற்றுத் தந்துள்ளது. அங்கு நாம் முக்கிய பேச்சுவார்த்தைகளை நடத்தினோம். இந்தியாவின் ஆதரவு எமக்கு கடந்த காலங்களில் இருந்தது. இப்போதும் அவ்வாதரவு தொடர்கிறது. இதில் சகலவகையான உதவிகளும் அடங்கும். இதன் மூலம் இந்தியா எமதருகிலேயே உள்ளது என்பது மீண்டுமொரு தடவை நிரூபணமாகியுள்ளது என்றார். ஆனால், இது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறுகையில்;

`இலங்கையில் மிக மோசமான சூழ்நிலை நிலவுகிறது. இதனை சர்வதேச சமூகமும் ஏற்றுக் கொண்டுள்ளது. அண்மைக் காலங்களில் மாத்திரம் 4 ஆயிரத்திற்கும் மேலான தமிழ் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இலட்சக்கணக்கான தமிழ் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். மீள்குடியேற்றம் உரிய முறையில் இல்லை. காணாமல் போதலும் படுகொலையும் அதிகரித்து மனித உரிமை பரவலாக மீறப்படுகிறது.

இவ்வாறான நிலையிலேயே இந்தியாவின் ஆயுத உதவி பற்றிய செய்திகள் வெளியாகியுள்ளன. இந்தியா இலங்கைக்கு ஆயுதம் வழங்குவது உண்மையாகவிருந்தால் அவர்கள் தமிழர் பிரச்சினையில் மனிதாபிமானமற்ற முறையில் செயற்படுகிறார்கள் என்ற கேள்வி எம்மை குடைகிறது.

சீனா, பாகிஸ்தான் இலங்கைக்கு ஆயுதம் வழங்கிவிடக் கூடாது. எனவேதான் ஆயுதம் வழங்குகிறோமென இந்தியத் தரப்பில் கூறப்படுவதை தமிழர்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்.

இலங்கைக்கு இந்தியா வழங்கும் ஆயுதங்கள் தமிழ் மக்களை இன அழிப்புக்குள்ளாக்கி அவர்களை புதைகுழிக்கு அனுப்பவே வழிவகுக்குமென்பது அம்மக்களினதும் கூட்டமைப்பினதும் எச்சரிக்கையாகும்.

இன ஒழிப்பினை தமிழருக்கு எதிராக முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகளுக்கு ஏன் இந்தியா உதவி வழங்குகிறது என்பது குறித்து தமிழ் மக்களினால் ஜீரணிக்க முடியாத விடயம்' என்றும் பிரேமச்சந்திரன் கூறியுள்ளார்.

http://www.thinakkural.com/news/2007/10/17...s_page38511.htm

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவிடம் ஜனாதிபதி ஆயுத உதவி கேட்கவில்லையாம்

"ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்தியாவிடம் ஆயுத உதவியையோ இராணுவ பாதுகாப்பையோ கேட்கவில்லை. இந்தியப் பிரதமருடனான சந்திப்பின்போது இவ்விடயம் குறித்து எதுவும் கலந்துரையாடப்படவில்லை''

இவ்வாறு அடித்துக் கூறுகின்றார் வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம.

""ஜனாதிபதி கடந்த வாரம் இந்தியாவுக்கு சென்றிருந்த போது இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்தார். இந்தச் சந்திப்பின் போது ஆயுத உதவிகள் தொடர்பாகப் பேசப்பட்டது.

இப்பேச்சுக்களின்போது இந்தியப் பிரதமர் இலங்கைக்குத் தேவையான ஆயுதங்களையும் யுத்த தளபாடங்களையும் வழங்க முன்வந்துள்ளார் என ஆங்கில நாளேடு ஒன்று செய்திவெளியிட்டுள்ளது.

அதேவேளை, பாகிஸ்தானும் சீனாவும் இலங்கைக்கு ஆயுதம் வழங்குவதைத் தவிர்க்கும் முகமாகவே இந்தியா ஆயுதங்களை வழங்க முன்வந்துள்ளது என்றும் அந்த ஆங்கில பத்திரிகை சுட்டிக்காட்டியுள்ளது. இதைப்பற்றி என்ன கூறுகிறீர்கள்? என செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர்.

ஆனால், உண்மை அதுவல்ல. ஜனாதிபதி இந்திய விஜயத்தின்போது ஆயுத உதவி தொடர்பாக இந்தியப் பிரதமரிடம் எவ்விதமான பேச்சுக்களையும் நடத்தவில்லை என்பது உறுதி. பத்திரிகை செய்தி அவர்களின் கற்பனையாக இருக்கலாம் என அமைச் சர் பதில் அளித்தார்.

-உதயன்

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள அடிப்படைவாதமே தமிழ் பயங்கரவாதத்தை உருவாக்கியதாக கூறுகிறார் மனோ கணேசன்

* சோனியாவை சந்திக்க இந்திய தூதரகத்தின் ஒத்துழைப்பை கோருகிறார்

இலங்கைக்கு ஆயுத உதவிகளை இந்தியா அதிகரித்துள்ளதாக இந்தியாவிலிருந்து வருகின்ற ஊடக செய்திகள் எம்மை வேதனைக்கும், வெட்கத்திற்கும் ஆளாக்கியுள்ளன. எமது மூதாதையரின் தாயகமான இந்தியா எப்போது தான் இலங்கை பிரச்சினையை சரியான முறையில் கையாளப்போகின்றது என்ற ஆதங்கம் எமக்குள் எழுகின்றது என மேலக மக்கள் முன்னணித் தலைவர் மனோ கணேசன் எம்.பி. தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு இந்தியா ஆயுத உதவிகள் வழங்குவது தொடர்பில் வெளியாகியுள்ள செய்திகளையிட்டு மனோ எம்.பி.ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது;

பாகிஸ்தான், சீனா ஆகிய நாடுகளை இலங்கை நாடுவதைத் தடுப்பதற்காகவே இந்தியா இலங்கைக்கு இராணுவ தளபாட உதவி வழங்குவதாக கூறப்படுகிறது. இலங்கைக்குள் சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் நுழைவதை தடுப்பதும், இலங்கையில் தமிழ் தேசியத்தை ஒழிப்பதும் இந்தியாவின் நலன் சார்ந்தது என இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் கருதுகிறார்கள். ஆனால், இது மீண்டும் இந்தியாவுக்கே பாதகமாக முடியும். இலங்கையில் தமிழ் தேசியம் வளர்ச்சி பெறுவது இந்தியாவுக்குப் பிடிக்காதது என்பதை விரைவில் பாகிஸ்தான் புரிந்து கொள்ளும். அதன் மூலம் பாகிஸ்தானிய உளவுப்பிரிவு விடுதலைப் புலிகளுக்கு இரகசிய உதவிகளை வழங்கும் எதிர்மறை நிலை ஏற்படலாம் என்பதை இந்தியத் தலைவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

இந்தியத் தலைவர்கள் வரலாற்றை மீட்டி பார்க்க வேண்டும். இந்தியாவின் சீனா, பாகிஸ்தானிய எல்லை 1960 களில் நெருக்கடியாக இருந்தது. அதனாலேயே தென்புல எல்லை நாடான இலங்கையை நட்பு நாடாக வைத்துக் கொள்வதற்காக இந்திய வம்சாவளி தோட்டத் தொழிலாளர்களில் பெருந்தொகையினரை மீளப் பெற்றுக் கொள்வதற்கு இந்தியா இணங்கியது. சிறிமா - சாஸ்திரி ஒப்பந்தம் அப்பாவி தொழிலாளர்களின் அபிலாஷைகளை கணக்கில் எடுக்காமல் செய்யப்பட்டது. உண்மையில் அவ்வேளையில் இந்தியா இலங்கையில் உள்ள இந்திய வம்சாவளி மக்கள் அனைவரையும் மீளப் பெற்றுக் கொண்டிருக்க வேண்டும் அல்லது ஒருவரையும் ஏற்றுக் கொண்டிருக்கக் கூடாது. இதனால் அன்று பல குடும்பங்கள் சிதைந்தன. இதன் மூலம் எமது மக்கள் தொகை குறைந்து விட்டதனால் எமது அரசியல் பலமும் குறைந்து விட்டது. அத்துடன் தற்போது சிங்கள அடிப்படை வாதத்திற்கும் தமிழ் தீவிர வாதத்திற்கும் இடையில் தென்னிலங்கை இந்திய வம்சாவளி மக்கள் சிக்கியுள்ளனர். மறுபக்கத்தில் இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்ட எமது மக்கள் அங்கே பரிதாப வாழ்க்கை வாழுகின்றனர். ஆனால், இத்தனைக்கு பிறகும் இலங்கையை உண்மையான நட்பு நாடாக இந்தியாவால் உருவாக்க முடியவில்லை என்பது தான் உண்மை.

அதேபோல் தமிழ் போராளிகளுக்கு இந்தியா ஆயுதம் வழங்கி பயிற்சியளித்தது. 1980 களில் அன்றைய ஜே.ஆரின் அரசாங்கத்தின் அமெரிக்க சார்பு கொள்கை தனக்கு எதிரானது என்ற அடிப்படையிலேயே இவைகளை இந்தியா செய்தது. பிறகு என்ன நடந்தது? இந்தியா ராஜீவ் காந்தியையும் சுமார் 1,500 இந்திய வீரர்களையும் இழந்தது. அதேபோல் இந்திய படையினரால் சுமார் 2000 தமிழர்கள் கொல்லப்பட்டார்கள்.

இவை கடந்த காலங்களிலே தவறான ஆலோசகர்களின் பேச்சுகளை கேட்டு செயற்பட்டதால் ஏற்பட்ட துன்பங்களாகும். தூரப்பார்வை இல்லாத முடிவுகள் ஒருபோதும் தீர்வுகளை தராது. இந்தியாவின் தவறான முடிவுகள் இந்தியா, இலங்கை, தமிழ் மக்கள் ஆகிய எந்தத் தரப்பினருக்கும் நன்மை தரவில்லை. வரலாறு முழுக்க தவறான முடிவுகள் பெரும் துன்பங்களையே தந்துள்ளன. இன்று நாங்கள் இதையிட்டு வெட்கமும் வேதனையும் அடைகின்றோம்.

இலங்கையில் இந்தியாவின் நலனை பாதுகாப்பதற்கு குறுக்கு வழிகள் இல்லை என்பதை இந்திய தலைவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இலங்கையில் சமாதானம் மலர்வதே இந்தியாவின் நலனுக்கு உகந்ததாகும். இலங்கையில் சமாதானத்திற்கும் யுத்தத்திற்கும் இடையில் தடையாக நிற்பது சிங்கள பௌத்த அடிப்படைவாதமாகும். அதுதான் இலங்கையில் தமிழ் தீவிரவாதத்தையும் ஈற்றில் தமிழ் பயங்கரவாதத்தையும் உருவாக்கியது. சுதந்திர இலங்கையின் முதல் 35 ஆண்டுகளில் தமிழ் பயங்கரவாதம் என்ற ஒன்று இருக்கவில்லையே. இலங்கையின் ஐக்கியத்திற்கும் ஆட்புல ஒருமைப்பாட்டிற்கும் ஆதரவளிப்பதாக இந்தியா ஆயிரம் முறை சொல்லியிருக்கின்றது. இன்னும் ஒரு ஆயிரம் முறை அதே இந்தியா சொல்லட்டும். அது எங்களின் நிலைப்பாடு ஆகும். ஆனால், ஐக்கியம் என்பது சமத்துவத்துடன் சேர்ந்து வரவேண்டும். இனிமேல் இந்தியா இலங்கையின் ஐக்கியத்தையும் தமிழ் மக்களின் அபிலாஷைகளையும் சமாந்தரமாக கணித்துப் பார்த்து செயற்பட வேண்டிய வேளை வந்துவிட்டது என எண்ணுகிறேன். இந்தியாவின் மொழிவாரி மாநில கொள்கைகளை பற்றி இலங்கை அரசிற்கு இந்தியா உறுதியாக எடுத்துக்கூற வேண்டும். இதுவே இலங்கை பிரச்சினைக்கு தீர்வுதரும் மருந்தாகும். யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவரவேண்டியது உடனடி தேவையாகும். இந்தியாவிலிருந்து எவரோ ஒரு சிலர் எடுக்கும் தவறான முடிவுகள் காரணமாக எமது மக்கள் யுத்தம், கடத்தல், சட்டவிரோத படுகொலைகள் ஆகியவற்றால் தொடர்ந்தும் உயிர் இழப்பதை எம்மால் அனுமதிக்க முடியாது.

இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் என்று சொல்லப்படுபவர்கள் கடந்த கால தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். தமிழக அரசியல் தலைவர்கள் புதுடில்லிக்கு எதையும் எடுத்துக்கூறும் நிலைமையில் இல்லை. ஏனென்றால் தமிழகத்து அரசியல்வாதிகள் முழுமையான புலி ஆதரவு, முழுமையான புலி எதிர்ப்பு ஆகிய இரண்டு தீவிர நிலைப்பாடுகளில் இருக்கின்றார்கள். உண்மையில் பிரச்சினை என்பது இந்த இரண்டு நிலைப்பாடுகளுக்கும் இடையில் தான் இருக்கின்றது. இலங்கை தொடர்பிலான கொள்கையில் இந்தியா அடிப்படை மாற்றங்களை செய்யவேண்டும். காங்கிரஸ் தலைவர் திருமதி சோனியா காந்தியை இது தொடர்பில் சந்தித்து உரையாட நான் விரும்புகின்றேன். இதற்கு இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்

-தினக்குரல்

- தினக்குரல்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.