Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

 

NPP யாக JVP 

NPP யாக JVP 

—  கருணாகரன் —

மாற்றத்துக்குரிய சக்தியாக ‘தேசிய மக்கள் சக்தி‘ (NPP) யை நம்புகின்ற – வரவேற்கின்ற அளவுக்கு அதைக் குறித்த வலுவான சந்தேகங்களும் உண்டு. இதற்குக் காரணம், JVP யாகும். NPP க்குள் ஒலிக்கும் அல்லது NPP  யை இடையிடு செய்யும் JVP யின் எதிர்மறையான குரல்கள் பலமானவையாகவே உள்ளன.  அதுவே சந்தேகம் (நம்பிக்கையீனம்) அச்சம் ஆகியவற்றுக்குக் காரணமாகும். 

குறைந்த பட்சம் NPP  முற்போக்கு முகத்தையும் முகாமையும் கொண்டுள்ளது. அதனுடைய இன்றைய கவர்ச்சியே இதுதான். ஆனால், NPP யைக் கட்டுப்படுத்தக் கூடிய அல்லது அதை இடையீடு செய்யக்கூடிய  நிலையிலுள்ள JVP யோ கடந்த காலத்தின் ஒளி மங்கிய பிரதேசத்திலேயே இன்னும் இருக்கப்பார்க்கிறது. இதற்கு அது தன்னுடைய அரசியல் உள்ளடக்கத்தில் கொண்டிருந்த இனவாதக் கூறுகளும் ஆயுதந்தாங்கிய அரசியற் பாரம்பரியமும் காரணமாக இருக்கக் கூடும். 

கைவிட முடியாத இந்தப் பலவீனங்களால்தான் JVP யாக அதனால் கடந்த ஐம்பது ஆண்டுகளாக முன்னிலையைப் பெறவும் முடியவில்லை. ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றவும் முடியவில்லை. NPP யாக தோற்றம் கொண்ட பின்பே அதற்கு ஒளிகூடியுள்ளது. அதுவே இப்பொழுது  ஆட்சியைக் கைப்பற்றக் கூடிய சூழலை உருவாக்கியுள்ளது. இதனை JVP புரிந்து கொள்வது அவசியமாகும். 

JVP யும் NPP  யும்

==========

JVP யின் 60 ஆண்டுகால முயற்சிக்கும் காத்திருப்புக்கும் ஒரு வாய்ப்பை JVP தோழர்களும் அதனுடைய ஆதரவாளர்களும் இப்போது பெறுகின்றனர். ஆனால், அது தனியே JVP யினால் மட்டும் சாத்தியமாக்கப்பட்ட வாய்ப்பு அல்ல. JVP யின் முதன்மைப் பங்களிப்பு உண்டு. அதை மறக்க முடியாது. ஆனால் அந்தப் பங்களிப்பு மட்டும் வாய்ப்பை அளிக்கவில்லை. அந்த வாய்ப்பை அளித்தது JVP, NPP யாக மாற்றமடைந்ததால் உருவாகியது. 

இப்பொழுது வெளியரங்கில் அல்லது பொது அரங்கில் NPP   க்கே செல்வாக்கும் அறிமுகமும் உண்டு. இன்றைய தலைமுறை அதிகம் அறிந்திருப்பதும் NPP   யைத்தான். அதுவே வெற்றிக்கு அருகில் இருக்கிறது. வெற்றிகளைக் குவிக்கிறது. ஆனால் இதனை முழுதாக ஏற்றுக் கொள்வதற்கும் உணர்ந்து கொள்வதற்கும் JVP முயற்சிக்க வேண்டும். ஆனால் நடப்பதைப் பார்த்தால்  இதையெல்லாம் உணர்ந்து கொள்வதற்கு JVP யினால் முழு அளவில் முடியவில்லை என்றே தெரிகிறது. 

JVP யின் ஐம்பது ஆண்டுகாலத் தாக்குப் பிடிப்பும் அதற்குள் அது இயக்கமாகவும் கட்சியாகவும் தன்னுடைய அரசியல் இருப்பைக் கொண்டிருந்ததும் JVP யினருக்கு ஒரு முன்னிலை உணர்வை அளிக்கிறது. ஐம்பது ஆண்டுகால அரசியற் சூறாவளிகளுக்குள் தாம் தாக்குப் பிடித்து நின்றிருக்காவிட்டால், இப்போது NPP யும் இல்லை. ஆட்சியுமில்லை என்றே அவர்கள் கருதுகிறார்கள். இது மறுக்க முடியாத உண்மைதான். ஆனால், அதே அளவுக்கு மறுக்க முடியாத உண்மை பழைய JVP யை அப்படியே மேடையேற்ற முடியாது என்பதுமாகும். 

ஆனால், என்னதானிருந்தாலும் தாம் கொண்டிருந்த இலட்சியக் கனவுகளை இந்தச் சந்தர்ப்பத்தில் நிறைவேற்ற வேண்டும் என்று JVP யினர் எண்ணுகிறார்கள். இந்த மாதிரியான ஒரு உணர்நிலையும் உளவியற் சிக்கலும் அரசியல் இயக்கங்களில் பொதுவாக இருப்பதுண்டு. அதிலும் ஆயுதம் தாங்கிப் போராடிய இயக்கங்களின் உணர்ச்சிகரமான அணுகுமுறை  (Emotional approach )  மிகச் சிக்கலானது. அதுவே JVP க்குள்ளும் கிடந்து புரள்கிறது. 

ஆனால், காலமும் சூழலும் இதற்கப்பால் வேறு விதமான ஒரு யதார்த்த வெளியை உருவாக்கிக் கொள்ளும். அது கடந்த காலத்தின் அத்தனை விருப்பங்களுக்கும் கனவுகளுக்கும் இடமளிக்காது. தனக்குரிய – தனக்கு வேண்டிய – கனவுகளுக்கும் தேவைகளுக்குமே முதல்நிலையை அளிக்கும். ஆகவே இந்த யதார்த்தச் சூழலை விளங்கிக் கொண்டு  செயற்படுவது மெய்யாகவே மாற்றத்தை விரும்புவோருக்கு அவசியமாகும். (இது தமிழ் அரசியலுக்கும் பொருந்தும். தமிழர்கள் இன்னும் போருக்குப் பிந்திய (Post – War Politics) பற்றிச் சிந்திக்க முடியாமலிருப்பது, அவர்கள் கடந்த காலத்தில் உறைந்து கிடப்பதுதான். ஆகவேதான் வெற்றியை நோக்கிப் பயணிக்க முடியாதுள்ளது).

ஆனால், JVP யினரிடம் இந்தப் புரிதலைக் காண முடியவில்லை என்பது கவலைக்குரியது. என்பதால்தான் அவர்களால் இலங்கை ஒரு பல்லின தேசம், பன்மைத்துவச் சூழலுக்காக இடம் அளிக்கப்பட வேண்டும் என்பதையெல்லாம் உணர முடியாமலிருக்கிறது. பயங்கரவாதத் தடைச்சட்டத்தை விலக்க வேண்டும் என்று முற்போக்காகச்  சிந்திக்க முடியாமலுள்ளது. இவ்வளவுக்கும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் மூலமும் அவசரகாலச் சட்டத்தின் மூலமும் தங்களுடைய முகமும் முள்ளந்தண்டும் சிதைக்கப்பட்ட அனுபவத்தைக் கொண்டவர்கள். இருந்தும் அதிகாரத்துக்கு வந்தவுடன் பழைய காயங்களும் வலிகளும் சட்டென மறந்து, அதிகார ருசி மட்டும் தலைக்குள் ஏறுகிறது.  

மட்டுமல்ல, தமிழ்பேசும் மக்களுடைய அரசியல் உரிமைகளைப் பற்றி அக்கறை கொள்வதற்கு இன்னும் JVP க்குச் சிரமமாகத்தானிருக்கிறது.  தமிழ், முஸ்லிம் பிரதேசங்களிலிருக்கும் (வடக்குக் கிழக்கில் மக்கள் மத்தியில் உள்ள) படைகளை விலக்குவதற்கு விருப்பமில்லாதுள்ளது. தென்னிலங்கையிலும் பிற இடங்களிலும் உள்ள ஏனைய எந்த அரசியல் தரப்புகளோடும் இடையீடுகளை நடத்துவதற்கு ஆர்வமில்லாதிருக்கிறது. பிற அரசியற் சக்திகள் எதையும் விட்டு வைப்பதற்கு, அதற்கான ஜனநாயக வெளியை அனுமதிப்பதற்கும் தயக்கமாகவுள்ளது. ஏன், NPP யுடன் கூட முழு அளவில் உடன்படவும் முடியாதுள்ளது. இதனை NPP க்குள் நிகழ்ந்து  கொண்டிருக்கும் உட்கொதிப்புகள் காட்டுகின்றன. 

அநுர குமார திசநாயக்க ஜனாதிபதியாகிய பிறகும் JVP யின் முக்கிய தலைவர்களான ரில்வின் சில்வா, லால்கந்த, விஜித ஹேரத், சுனில் கந்துநெத்தி போன்றோர் பழைய தொனியிலேயே கடுமையான அறிவிப்புகளை விடுக்கின்றனர். இது அநுர குமார திசநாயக்கவுக்கு நெருக்கடியைக் கொடுக்கும் என்று தெரிந்துதான் செய்கிறார்களா? அல்லது எந்தச் சூழலிலும் இனவாதத்தைக் கைவிடப்போவதில்லை. இலங்கையில் நீடித்த ஆட்சிப் பாரம்பரியத்தைக் கைவிடப்போவதில்லை என்பதை அழுத்தமாகச் சொல்கிறார்களா? 

அப்படியென்றால் NPP  யின் ஆட்சி எப்படி இருக்கும்? NPP கூறுகின்ற மாற்றம் எப்படியானது? என்ற கேள்விகள் எழுகின்றன. அந்தக் கேள்விதான் இன்று பலரிடத்திலும் அச்சத்தை உண்டாக்குகிறது. அந்தக் கேள்விகள்தான் நடக்கப்போவது NPP யின் ஆட்சியா? அல்லது NPP யின் பேரில் நடத்தப்படும் JVP யின் ஆட்சியாக இருக்குமா? எனச் சந்தேகப்பட வைக்கிறது. 

இதற்கான பதிலை NPP தெளிவாகச் சொல்ல வேண்டும். சொல்ல வேண்டும் என்பது, NPP தன்னுடைய நடைமுறைகளின் வழியாக அதைக் காட்ட வேண்டும். 

அரசியலில் சொல் என்பதையும் விட செயலே முக்கியமானது. சொல்வதை விடவும் செய்து காட்டுவது முக்கியமானது. மக்கள் செயலையே எதிர்பார்க்கிறார்கள். NPP தன்னைச் செயல்களால் நிரூபிக்க வேண்டும். செயலே விளைவுகளை உருவாக்குவது. 75 ஆண்டுகால ஆட்சித் தவறுகளையும் மக்களின் நீடித்த துயரையும் போக்குவதற்கான செயல்களாக அவை இருக்க வேண்டும். 

ஜனாதிபதித் தேர்தலுக்குப் பிறகான இரண்டு மாத ஆட்சிக் காலத்தில் NPP, இன்னும் அப்படிச் செழிப்பான முன்னுதாரணங்கள் எதையும் காட்டி அரசியற் பெறுமானங்களாக்கவில்லை. நடந்திருப்பதெல்லாம் மேலோட்டமாக சில விடயங்களே. முழுமையான அளவில் நடவடிக்கைகளை எடுப்பதற்கும் திட்டங்களை அமுல்படுத்துவதற்கும் பலமான பாராளுமன்ற அதிகாரம் வேணும். அதற்கான கால அவகாசம் வேண்டும் என்பதையெல்லாம் புரிந்து கொள்ள முடிகிறது. 

இதற்குள்ளும் அநுர குமார திசநாயக்க ஒரு எதிர்பார்ப்பை நாடு முழுவதிலும் உருவாக்கியுள்ளார் என்பது உண்மையே. அது வளர்ந்து ஒரு செல்வாக்கு மண்டலத்தை உருவாக்கக் கூடிய ஏதுநிலைகள் இன்னும் ஏற்படவில்லை. அதனால் NPP யின் ஆதரவுத் தளம் எதிர்பார்க்கப்பட்டதையும் விடச் சற்று மெல்லியதாக உள்ளதாகத் தென்படுகிறது. இது சரியா இல்லையா என்பதை அடுத்த வாரம் நடக்கவுள்ள தேர்தல்தான் தெளிவாக உரைக்கும். 

ஆனால், நாற்பது ஆண்டுகளுக்கு முன்பிருந்து கடந்த தேர்தல்வரையில் நாடு முழுவதிலும் சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் செல்வாக்கு மண்டலங்கள் இருந்தன. இனவாதத்தை முழு அளவில் பிரயோகப்படுத்தியபோது கூடச் சிறிய அளவிலேனும் வடக்குக் கிழக்கில் ஐ.தே.கவும் சு.க வும் செல்வாக்கைக் கொண்டிருந்தன. ஐ.தே.க வும் சு.க வும் இன்று சீரழிந்த பிறகு அவற்றின் மண்டலங்கள் இல்லாதொழிந்தது வேறு கதை. 

NPP, தன்னை விரிவாக்கி நிலைப்படுத்த வேண்டும். மெய்யாக அது மாற்றத்தை உருவாக்க வேண்டும் என விரும்பினால், அல்லது அதனுடைய சிந்தனையில் மாற்றத்தைக் குறித்த சித்திரங்கள் இருக்குமானால் அது அதற்குரிய அடிப்படைகளை உருவாக்க வேண்டும். புதிய எல்லைகளை நோக்கிப் பயணிக்க முற்படுவது அவசியம். பழைய – தூர்ந்து போக வேண்டிய சங்கதிகளை எடுத்து மேசையில் வைக்க முயற்சிக்கக் கூடாது. அனைத்துச் சமூகத்தினரையும் உள்வாங்குவதற்கான இடத்தை – பன்மைத்துவத்துக்குரிய அடிப்படைகளை – ஏற்படுத்துவதற்குத் தயாராக வேண்டும். 

ஆம், NPP மேலும் நெகிழ்ந்து, நவீனமாக வளர்ச்சியடைய வேண்டும். உணர்ச்சிகரமான உளக் கொந்தளிப்புகளுக்குப் பதிலாக உளப்பூர்வமான மகிழ்ச்சிச் சூழலை மலர்விக்க வேண்டும். அதற்கான அரசியற் கலாசாரத்தைக் கட்டியெழுப்புவது அவசியம். அதற்கான அர்ப்பணிப்பு கட்டாயமானது. காலம் அதையே எதிர்பார்க்கிறது. காலம் என்பது அரசியல் அர்த்தத்தில் வாழும் மக்களும் வாழ வேண்டிய மக்களுமேயாகும். 

 

 

https://arangamnews.com/?p=11429



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.