Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

image

மரியோ அருள்தாஸ்

இலங்கையின் அரசியல் உயரடுக்கிற்கு வெளியே முதன்முறையாக ஜனாதிபதி ஒருவர் தெரிவு செய்யப்பட்டமை என்பது இலங்கையின் “அரசியல் பூகம்பம்” என அழைக்கப்படுகின்றது. அனுர குமார திசாநாயக்கவின் தெரிவு என்பது, ஆளும் உயரடுக்கிற்கு வெளிப்படையான வருத்தம் மற்றும் சவாலாக இருந்த போதிலும், இலங்கை அரசின் சில உட்பொதிந்த, கட்டமைப்புசார் பிரச்சினைகளைப் பேணுவதற்கு உறுதியளிப்பதாகவே இருக்கின்றது.

எனினும், வடக்கு-கிழக்கின் வாக்களிப்பு பாங்கானது திசாநாயக்கவின் கட்சி மீதான தமிழ் மக்களின் சந்தேகத்தினை வெளிப்படையாக தெரிவிக்கின்றது. ஏனெனில், அவர்கள் சமகி ஜன பலவேகயவின் சஜித் பிரேமதாச மற்றும் சிவில் சமூகத்தினால் ஆதரிக்கப்பட்ட வேட்பாளரான அரியநேத்திரன் பாக்கியசெல்வம் ஆகியோருக்கே பெருமளவில் வாக்களித்திருந்தனர்.

இந்த இரு வேட்பாளர்களும் இலங்கை தமிழரசுக் கட்சி, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி மற்றும் தமிழ் மக்கள் கூட்டணி ஆகிய தமிழ் அரசியலில் உள்ள அரசியல் உயரடுக்கினரால் ஆதரவளிக்கப்பட்டிருந்தனர். இந்த முன்னாள் கூட்டணி பங்காளர்கள் மத்தியில் கசப்பான உட்பூசல்களின் மத்தியில் இந்த ஆதரவளிக்கப்பட்டிருந்தது. அங்கிருந்த முஸ்லீம்களும் பெருமளவில் பிரேமதாசவிற்கு ஆதரவினை வெளிப்படுத்தியிருந்தனர்.

பேரினவாத மற்றும் வன்முறை வரலாற்றைக் கொண்ட கட்சி ஒன்றின் நிரூபிக்கப்படாத தலைவர் ஒருவரினை வைத்து பரீட்சீத்துப் பார்க்கும் ஆசை ஒட்டுமொத்தமாக வடக்கு - கிழக்கிற்கு இல்லை என்பதனை இது காட்டுகின்றது. எவ்வாறாயினும், தெரிவு செய்யப்பட்ட நாள் முதல், திசாநாயக்கவின் சில நகர்வுகள், குறிப்பாக ஊழலை குறைப்பதற்கான நகர்வுகள் பொதுவாக ஆதரவினை வெளிப்படுத்தாத தமிழ் வாக்காளர் மத்தியிலும் அவருக்கு சில ஆதரவை பெற்றுள்ளது. ஆழமாக வேரூன்றிப் போயுள்ள விடயங்களை தமிழ் பிரதிநிதிகளால் அடையாளப்படுத்த முடியாத நிலையும், சிங்கள பிரதிநிதிகளால் அடையாளப்படுத்த விருப்பமற்ற நிலையுமே காணப்படுகின்றது.   

தற்போதைய நிலை தொடர்பில் தமிழர்கள் வெறுப்படைந்துள்ளனர். யாழ் மற்றும் வன்னி தேர்தல் மாவட்டங்களில் உள்ள பன்னிரண்டு ஆசனங்களுக்கு எண்ணூறிற்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிடுவதன் மூலம் தற்போதுள்ள கட்டமைப்புக்கு எதிரான உணர்வு  பிரதிபலிக்கின்றது. இந்த வேட்பாளர்களில் பெரும்பாலானவர்கள் சுயேச்சை வேட்பாளர்கள் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

நாளாந்த பொருளாதார கவலைகள் போன்ற ஆகக் குறைந்த அடிப்படைத் தேவைகளை அடையாளப்படுத்துவது என்பது, பல தசாப்தங்களாக நிலையற்ற தன்மையினால் அழிவடைந்துள்ள இலங்கை போன்ற நாடுகளிற்கு மிகவும் முக்கியமானதாகும். ஒரே போன்ற தேசிய (போலித்தேசிய) தளங்களில் வாக்குகளிற்காக போட்டியிடும் தமிழ்க் கட்சிகளிற்கிடையிலான பிளவு என்பது ஒவ்வொரு கட்சியினதும் வாக்குகளின் பங்குகளில் வீழ்ச்சியை ஏற்படுத்தும். நவம்பர் மாதம் நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தல்களில் பாரம்பரியமாக வடக்கு - கிழக்கின் தமிழ் வாக்காளர்கள் பலமிக்க பகுதிகளில் திசாநாயக்கவின் தேசிய மக்கள் சக்தியினர் ஆசனங்களை வெல்லக் கூடும்.

இதனை தமிழ் தேசியத்தின் முடிவுக்கான ஆரம்பம் என சிலர் விளக்க முயற்சிக்கலாம். ஆனால், இந்தத் தேர்தலில் பாரம்பரிய தமிழ்க் கட்சிகளின் சாத்தியமான அழிவு என்பது உண்மையிலேயே தமிழ்த் தேசிய முன்னெடுப்பிற்கான வரமாகும்.

ஏனெனில்:

தமிழ் தேர்தல் அரசியல் என்பது தமிழ்த் தேசியத்துடன் பின்னிப் பிணைந்ததாக இருப்பதால், கட்சிகளின் செயற்பாட்டினை தமிழ் தேசியம் தொடர்பான பொது அர்ப்பணிப்பிற்கான குறிகாட்டியாக பல வர்ணனையாளர்கள் பார்க்கின்றனர். ஆனால், சமூகம்சார் நீரோட்டங்கள் அரசியல் செயற்பாட்டாளர்களில் தங்கியிருப்பதற்குப் பதிலாக, இந்த தளங்களில் உள்ள அரசியல் செயற்பாட்டாளர்கள் சமூகம்சார் நீரோட்டங்களில் தங்கியிருக்கின்றனர் என்பதனைப் புரிந்துகொள்வது இங்கு மிகவும் முக்கியமாகும்.

யுத்தத்திற்குப் பின்னரும் தமிழ்த் தேசியம் என்பது ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறையாகவும், அன்றாட நோக்கு நிலையாகவும் நீடித்தது. எவ்வாறாயினும், அடக்குமுறை மிக்க அரசினால் அது மிகவும் கீழே தள்ளப்பட்டது. இலங்கை அரசானது தமது நடத்தையின் காரணமாக சர்வதேசத்தின் மேற்பார்வையினால் அதிகளவில் கட்டுப்பாட்டுக்கு உள்ளானது. இந்த உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கான நம்பிக்கையை தமிழ் மக்கள் மெதுவாகப் பெற்றனர்.

வெளிப்படையான தேசியவாத பேரணிகள் பெரும் எண்ணிக்கையிலான மக்களை ஈர்த்ததுடன், நினைவுகூரல் நிகழ்வுகள் எல்.ரி.ரி.ஈயினரால் அறிமுகப்படுத்தப்பட்ட அடையாளங்கள் மற்றும் நடைமுறைகளால் நிரம்பியிருந்ததுடன், குறிப்பாக 2015ஆம் ஆண்டில் கடும்போக்கு பேரினவாத ராஜபக் ஷ அரசாங்கத்தின் முதலாவது வீழ்ச்சியின் பின்னர் அது குறிப்பிடத்தக்களவில் அதிகரிப்பினைக் கண்டது.

“மிதமான” மற்றும் “தீவிரமான” தமிழ்த் தேசிய வடிவங்களுக்கு இடையில் வித்தியாசத்தைக் குறிப்பாட்டாலும், அது ஒரு பிழையான வகைப்படுத்தலாகும். சுமந்திரனின் இலங்கைத் தமிழரசுக் கட்சியோ, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அங்கஜன் இராமநாதனோ, அல்லது ஐக்கிய தேசியக் கட்சியின் விஜயகலா மகேஸ்வரனோ, யாராயிருந்தாலும், தமிழ் வாக்குகளுக்காகப் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் எல்.ரி.ரி.ஈ மற்றும் தமிழ் தேசியவாத இயக்கத்திற்கு வெகு அருகிலேயே இருப்பதாக தெரிவிக்கின்றனர்.

மிக அண்மையில், பருத்தித்துறையில் இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் பேரணியில், எல்.ரி.ரி.ஈ தலைவர் வே. பிரபாகரனுடன் நேர்நிலையாக திசாநாயக்கவினை ஒப்பிட்டு அவரது ஆதரவாளர்கள் வாக்காளர்களை அணுகியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது. தேசியக் கோட்பாடுகளில் இருந்து தமிழர்கள் நகர்ந்துவிட்டனர், எல்.ரி.ரி.ஈயை வெறுக்கின்றனர் மற்றும் சுயநிர்ணயத்தில் ஆர்வம் இல்லை என சில விமர்சகர்கள் தொடர்ந்தும் வலியறுத்த முயற்சித்த வருகின்ற போதிலும், அதுதான் உண்மையாக இருப்பின், எல்.ரி.ரி.ஈயினரையும், தமிழ் தேசிய எண்ணங்களையும் வெளிப்படையாக விமர்சிப்பதே தேர்தல் பிரசாரங்களில் வெற்றி பெறுவதற்கான தந்திரோபாயமாக இருக்கும். அத்தகைய பாதையை எந்தவொரு பாரிய தமிழ்க் கட்சிகளும் பின்பற்றவில்லை என்பது இங்கு முக்கியமான விடயமாகும் – அவ்வகையான பிரசாரம் உத்தரவாதமளிக்கப்பட்ட வீழ்ச்சிக்கே வழிவகுக்கும்.

யுத்தத்திற்குப் பின்னரான சூழலில், ஒரு காலப்பகுதியில் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி, தமிழ் மக்கள் கூட்டணி என்பவற்றின் உறுப்பினர்களை உள்ளடக்கியிருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பானது, எல்.ரி.ரி.ஈயினரின் கடந்த கால ஒப்புதல்களைப் பின்பற்றியதால், பிரதான தமிழ் கட்சி என்ற நிலையைப் பேணியிருந்தது. தமது கொழும்பை மையப்படுத்திய ஈடுபாட்டின் ஊடாக மிதமான தொனியை அவர்கள் பின்பற்றிய போதிலும், வடக்கு-கிழக்கில் தமது தேர்தல் தொகுதிகளில் அவரகள் தயக்கமின்றி எல்.ரி.ரி.ஈ ஆதரவு மற்றும் தமிழீழ ஆதரவு நிலைப்பாட்டையே கொண்டிருந்தனர்.

ஆனால், அது தமிழர்களின் கோரிக்கைக்கான கோட்பாட்டு சார் அர்ப்பணிப்புக்கானதாக இருக்கவில்லை. எல்.ரி.ரி.ஈயின் உண்மையான வாரிசுகள் என்ற அடிப்படையில், தீர்வு வருகின்றது என ஒவ்வொரு தேர்தலிலும் அவர்கள் வாக்குறுதியளித்தாலும், கொழும்பில் தமிழர் கோரிக்கைகளை பண்டமாற்று செய்தனர்.

அதேவேளை, அவர்களில் சில பாராளுமன்ற உறுப்பினர்கள், வேலைவாய்ப்புகள் மற்றும் மதுபானக் கடைகளுக்கான அனுமதிப்பத்திரத்தை உறுதியளித்து, மதுபான பழக்கத்திற்கு அடிமையாகிப் போயுள்ள ஆயுத மோதலுக்குப் பின்னரான சூழலில் மதுபானக் கடைகளை திறப்பதற்கு தமது நண்பர்களுக்கு உதவுவதன் மூலம் தமது தேர்தல் தொகுதியில் ஒரு சாம்ராஜ்யத்தினை கட்டியெழுப்பியுள்ளனர்.

முன்னர் அரசுக்கு ஆதரவாக இருந்த துணைஆயுதக் குழுக்களான தமிழீழ விடுதலை அமைப்பு (ரெலோ), தமிழீழ மக்கள் விடுதலை அமைப்பு (புளொட்) மற்றும் ஈழம் மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எப்) என்பன தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து விலகி, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியை உருவாக்கியுள்ளன. இந்த கூட்டணியின் உறுப்பினர்களும் ஊழல் மற்றும் சலுகை அரசியலில் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்படுகின்றது.

இந்தியாவின் பாதுகாப்பு சேவைகளுடன் மிகவும் நெருக்கமானவர்களாக அவர்கள் பாரக்கப்படுகின்றனர். முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரனால் உருவாக்கப்பட்ட தமிழ் மக்கள் கூட்டணியானது, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியில் இணையாத போதும், பல விடயங்களில் கூட்டமைப்புடன் இணைந்து செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

தற்போது, இலங்கைத் தமிழரசுக் கட்சியினை மாத்திரம் உள்ளடக்கியிருக்கும், தமிழ் தேசியக் கூட்டமைப்பானது அதன் மூத்த தலைவர் இரா. சம்பந்தன் இவ்வருட ஆரம்பத்தில் உயிரிழந்ததைத் தொடர்ந்து மேலும் பிளவுபட்டது. கட்சித் தலைமைத்துவத்திற்காக போட்டியிட்ட இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களான சி. சிறீதரன் மற்றும் எம்.ஏ. சுமந்திரன் ஆகியோரின் பூசல்கள் ஜனாதிபதித் தேர்தலின் போது முன்னிலைக்கு வந்தது.

கட்சியில் ஏற்பட்ட குழப்பத்தைக் காண்பிக்கும் ஒரு கேலிக்குரிய காட்சியில், அதன் உறுப்பினர்கள் இலங்கை தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுடன் பிரிந்து அரியநேத்திரன், சஜித் பிரேமதாச மற்றும் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிப்பதில் மாறுபட்ட நிலைப்பாட்டை எடுத்திருந்தனர். சில தனிநபர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் தமது ஆதரவு நிலைப்பாட்டில் இருந்து மாறினர்.

பின்கதவு பேரம்பேசல்களின் விளைவாகவே இந்த மாற்றம் ஏற்பட்டதாக வதந்திகள் வெளியாகின. இருந்தபோதிலும், இது குறித்த விபரங்கள் தெளிவற்றதாகவே இருக்கின்றது. இதே தேர்தல் பிரசாரத்தின் போது, “சங்கு” சின்னத்தில் போட்டியிட்ட தமிழ்ப் பொது வேட்பாளர் அரியநேத்திரனுக்கு ஆதரவளிக்கும் சிவில் சமூக முயற்சிக்கு ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியினர் ஆதரவாக நின்றனர். “சங்கு” பிரசாரத்தில் பெரும் எண்ணிக்கையிலான அரசியல்வாதிகள் பிரசாரம் செய்தமைக்கான காரணம், உத்தேச பாராளுமன்றத் தேர்தல்களில் சட்டப்பூர்வ தன்மையை உருவாக்குவதற்காகவே என கொழும்பில் இருந்த என்னுடைய நண்பர் ஒருவர் தெரிவித்தார்.

இறுதியில், கடந்த மாதத்தின் (ஒக்டோபர்) ஆரம்பத்தில் தாம் சங்கு சின்னத்தின் கீழ் போட்டியிடுவோம் என அறிவித்து, பொது வேட்பாளரின் சின்னத்தை ஜனநாயகக் தமிழ் தேசிய கூட்டணி கையகப்படுத்திக் கொண்டது. இதில் இருந்து விலகி தமது சொந்த சின்னமான மான் சின்னத்தில் தமிழ் மக்கள் கூட்டணி போட்டியிடுகின்றது.

ஈ. சரவணபவன் உட்பட இலங்கை தமிழரசுக் கட்சியின் வேட்பாளர்களாக தெரிவு செய்யப்படாதமையால் அதிருப்தி கொண்ட முன்னாள் உறுப்பினர்கள், தற்போது “மாம்பழ” சின்னத்தில் ஒன்றிணைந்துள்ளனர். இதேவேளை, எதிர்வரும் தேர்தலுக்காக தமக்குள்ளான போட்டியினை தற்காலிகமாக நிறுத்தி தமக்குள் இணக்கம் ஒன்றைக் கண்டு சுமந்திரனும், சிறீதரனும் ஒன்றாகவும், மகிழ்ச்சியாகவும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வலுவான பங்காளிக் கட்சியான இலங்கை தமிழரசுக் கட்சியின் உட்கட்சி சண்டைகளால், அண்மைய வருடங்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வீழ்ச்சி என்பது, ஒவ்வொருவரும் தாமே உண்மையான தமிழ்த் தேசியவாதிகள் எனக் கோரும் அதேவேளை, கடந்த காலத்தில் தமது வாக்குகளைப் பெற்றுக் கொடுத்த சலுகைசார் அரசியலை தொடர்ந்து முன்னெடுக்கும், ஆனால் தமிழர்களின் கோரிக்கைகளுக்கான உண்மையான அரசியல் முன்னேற்றத்தை வழங்காத நிலையில் உள்ள பாரம்பரிய கட்சிகளின் வேட்பாளர்களால் தேர்தல் களம் நிறைந்திருக்கின்றது.

சிறந்த கல்வியறிவு கொண்ட பழமைவாத மூத்த யாழ் அரசியல்வாதியாக காண்பிக்கப்பட்ட விக்னேஸ்வரன் கூட மதுபானக்கடைக்கான அனுமதிப் பத்திர சர்ச்சையில் சிக்கினார். இது தொடர்பில் ஊடகத்தில் செய்தி வெளியான போது, கஷ்டப்படும் தமிழ் பெண் ஒருவருக்கு தாம் உதவியதாக அவர் பதிலளித்தார். இது திட்டமிட்ட ஊழலாகவும், அதிகாரத்தைப் பயன்படுத்தி உறவினர்களுக்கு உதவும் நிலைப்பாடாகவும் இருக்கின்றது. தமிழ் அரசியலில் இயக்கத்தில் உள்ள பலர் இந்த கலாசாரத்தைப் பின்பற்றுவதுடன், அரசியல் அதிகாரம் மற்றும் பணத்தைப் பயன்படுத்தி உதவிகளைப் பரிமாறிக்கொள்கின்றனர்.

இந்த ஊழல் மற்றும் அதிகாரத்தைப் பயன்படுத்தி உறவினர்களுக்கு உதவும் கறை இல்லாத ஒரே பாரிய கட்சியாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி உள்ளது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியானது, தமது கவர்ச்சிகரமான தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துடன், தமது உடனடி ஆதரவுத் தளத்திற்கு அப்பால் செல்லும் தமிழ் தேசியவாத கோட்பாடுகளுக்கு நேர்மையையும், அர்ப்பணிப்பையும் கொண்ட கட்சியாக இருக்கின்றது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உருவாக்கக் கோட்பாடுகளுக்கு உண்மையாக இருக்கும் கட்சியாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியைக் குறிப்பிடலாம். பொருளாதார நெருக்கடியின் போதும், கட்டாய தகனப் பிரச்சினையின் போது முஸ்லீம் சமூகத்திற்கு ஆதரவாகவும் என நாட்டினை பரந்தளவில் பாதிக்கும் விடயங்கள் தொடர்பில் தமது வெளிப்பாட்டினை முன்வைத்து இனப் பிரிவுகளுக்கு அப்பால் இலங்கை மக்களை கவர்ந்தவராக பொன்னம்பலம் இருக்கின்றார். LGBTQ  உரிமைகள் தொடர்பில் கருத்து வெளியிட்ட முதல் தமிழ் அரசியல்வாதியாகவும் அவர் இருக்கின்றார்.

அவர் மீது ஊழல், சலுகைசார் அரசியல் அல்லது அதிகாரத்தைப் பயன்படுத்தி உறவுகளுக்கு உதவும் குற்றச்சாட்டுக்கள் எதுவும் இல்லை. எவ்வாறாயினும், அதன் சில உறுப்பினர்கள் ஏனைய தமிழ் தேசியவாதிகளை “ஒத்துழைப்பாளர்கள்” என விரைவில் தண்டிப்பதால், கொள்கைகளுக்கான கட்சியின் வலுவான அர்ப்பணிப்பு என்பது சில சந்தர்ப்பங்களில் முரண்பாடான மற்றும் பார்ப்பனியவாதத்திற்கு மாறுகின்றது.

சில சந்தர்ப்பங்களில் இது உண்மையாக இருந்தாலும், இவர்களின் முக்கிய இலக்கான தமிழ் தேசியக் கூட்டமைப்பு வீழ்ச்சியுற்றுள்ள சந்தர்ப்பத்தில், எதிர்க்கட்சி அரசியலை நம்பியிருக்கும் ஒரு தளம் என்பது மாத்திரம் தமிழ் வாக்காளர்களை வெற்றிகொள்வதற்கு போதுமானதாக இல்லை. ஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணிக்க வேண்டும் என்ற அவர்களின் அழைப்புக்கு போதியளவு பிரதிபலிப்பு கிடைக்காமை, அவர்கள் மக்களைக் கவரத் தவறியதற்கான சான்றாகும்.

அதாவது, அண்மைய தேர்தல்களில் அக்கட்சி கணிசமான வெற்றிகளைப் பெற்றுள்ள நிலையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதான தமிழ் கட்சி என்ற நிலையை அவர்களால் கைப்பற்ற முடியுமா என்பதனை முன்னணி சிந்திக்க வேண்டும்.

பாலின விடயம் தொடர்பில் அனைத்து தமிழ் கட்சிகளும் பின்தங்கியே இருக்கின்றன. கடைசி தமிழ் பெண் பாராளுமன்ற உறுப்பினராக தேசியப் பட்டியலில் பாராளுமன்றம் புகுந்த தமிழ் தேசிய மக்கள் முன்னணியைச் சேர்ந்த பத்மினி சிதம்பரநாதன் இருக்கிறார். அவர் 2010ஆம் ஆண்டில் மீண்டும் தேர்தலில் நிற்கவில்லை.

மேலே குறிப்பிட்ட நான்கு கூட்டமைப்புக்களும் பெண் வேட்பாளர்களை தேர்தலில் நிற்க வைத்துள்ள போதிலும், பலவந்த காணாமல் போதல்கள் மற்றும் காணி அபகரிப்புகள் போன்ற விடயங்களில் வடக்கு - கிழக்கில் தேசியவாத போராட்டங்களை முன்னின்று தலைமை வகிப்பவர்களாக பெண்கள் இருப்பதற்கு முற்றிலும் மாறாக, கட்சியின் மத்திய குழு மற்றும் பிரதான உறுப்புரிமை என்பன ஆணாதிக்கம் நிறைந்ததாகவே உள்ளது.

போராட்டங்களில், சிவில் சமூக நிறுவனங்களில் மற்றும் தனிப்பட்ட செயற்பாட்டாளர்களாக, இலங்கை அரசிற்கு எதிராக அணி திரள்வதில் தமிழ் பெண்கள் பெரும் பங்கு வகிக்கின்றனர். PEARL, தமிழ் இளையோர் அமைப்பு அல்லது தமிழர் உரிமைக்கான குழுமம் என்பன தொடரச்சியாக இளைய மற்றும் அதிக விகிதாசாரத்தில் அல்லது பெருமளவில் பெண்களைக் கொண்ட மாறும் உறுப்புரிமையை முன்னிறுத்துகின்றன.

இந்த முற்போக்கான குழுக்கள், மாணவர் அமைப்புக்கள் மற்றும் சிவில் சமூகத்துடன் நெருக்கமான தொடர்பைக் கொண்டிருப்பதுடன், தமது தனிப்பட்ட இணைப்புக்களை வடக்கு-கிழக்கு முழுவதிலும் கொண்டிருக்கின்றன. தமிழ் கட்சி அரசியல் தளமானது குறிப்பிட்ட வயதையும், வகுப்பையும் சார்ந்த ஆண்களால் செல்வாக்கு செலுத்தப்படும் சந்தரப்பத்தில், இது மாறுபட்ட சமூக இயக்கத்தைப் பிரதிபலிப்பதாக இல்லை.

எவ்வாறாயினும், அரசியல் தளங்களில் அவர்களது ஆதிக்கமானது முன்னேற்றத்தில் தேக்கத்தை ஏற்படுத்தி, சமூகத்தின் அனைத்து தரப்பினரும் பங்குபற்றுவதனை கட்டுப்படுத்துவதால், தமிழ் போராட்டத்தின் முன்னேற்றத்திற்கு அது தடையாக மாறியுள்ளது.

அரசியலில் ஆண்களின் ஆதிக்கம் என்பது தமிழர்களுக்கு மாத்திரம் சொந்தமானது அல்ல. உண்மையில் அது உலகெங்கிலும் உள்ள ஒரு பொதுவான இயக்கமாகும். இருப்பினும், தற்போதைய தமிழ் அரசியல் செயற்பாட்டாளர்கள் இலங்கை அரசுக்கு எதிரான தமிழர்களின் எதிர்ப்பிற்குள் பாலின பிரச்சினைகளில் ஏற்பட்ட முன்னேற்றத்தை கட்டியெழுப்புவதற்குத் தவறியுள்ளனர்.

கடந்த கால தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு தமிழ் கட்சிகள் மிகமோசமாகத் தவறியுள்ள நிலையில், தேசிய மக்கள் சக்தி போன்ற ஆகக் குறைந்தது சில விடயங்களையாவது அடையாளப்படுத்தக் கூடும் என கருதும் கட்சி ஒன்றுக்கு வாக்களிக்க தமிழ் வாக்காளர்களின் பகுதி ஒன்று தீர்மானிப்பது என்பது புரிந்துகொள்ளக் கூடிய விடயமாகும். இது புதியதல்ல. ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் மற்றும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸூடன் ஒப்பிடக் கூடிய இலங்கை சிங்கள இனவாதத்தின் தமிழ் வாடிக்கையாளர் கட்சியான ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியை (ஈ.பி.டி.பி) இதற்கான உதாரணமாகக் குறிப்பிடலாம்.

வன்முறை மிக்க துணைஆயுத குழு என்ற கடந்த காலத்துடன், தமது சலுகை அரசியலை முன்னெடுக்கும் தமக்கான வலுவான தொகுதிகளை அவர்கள் கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு வாக்களிக்கும் தமிழர்கள், தமிழ் தேசியம் மீதான வெறுப்பால் அவர்களுக்கு வாக்களிப்பதில்லை, ஆனால் நடைமுறைக் காரணங்களுக்காக வாக்களிக்கின்றனர். உண்மையில், வடமாரட்சியின் கிராமம் ஒன்றில் நான் தங்கியிருந்த போது, எல்.ரி.ரி.ஈ நினைவுகூரல் நாளான, மாவீரர் நாளிற்கான அலங்காரச் செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்த உள்ளூர் ஈ.பி.டி.பி உறுப்பினருடன் நான் கதைத்தேன்.

தேர்தல் அரசியல் என்பது பரிவர்த்தனை அடிப்படையிலானது என்பதுடன் பிரதான தமிழ் கட்சிகளின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் பேரழிவினை ஏற்படுத்தக் கூடிய செயற்பாடுகள் இந்த கட்சிகளிடம் இருந்து, குறிப்பாக யாழ் குடாநாட்டிற்கு வெளியே பின்தங்கிய பகுதிகளில் இருந்து விலகினால் ஆச்சரியப்படுவதற்கில்லை.

செப்ரம்பர் மாதம் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலைத் தொடர்ந்து உடனடியாக, முந்தைய அரசாங்கத்தின் சொகுசு கார்களின் கைப்பற்றல் உள்ளடங்கலாக ஊழலுக்கு எதிரான அதிகளவில் பிரசுரிக்கப்பட்ட நகர்வுகளினால், தமிழர்கள் மத்தியிலும் திசாநாயக்க பேசுபொருளாகியிருந்தார்.

எவ்வாறாயினும், அந்த பிரகாசம் சிறிது சிறிதாக மங்கிப் போவதனை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. போர்க் குற்றவாளிகளின் நியமனம், பொறுப்புடைமை செயற்பாட்டை மறுத்தல் என்பன தமிழ் ஊடகங்களில் பிரதான தலையங்கங்களாக மாறியுள்ளன. அதிகார பரவலாக்கத்தை மறுத்துவரும் கட்சியின் கடந்தகால கோரிக்கைகளும் பரவலாக பகிரப்பட்டு வருகின்றன.

இதற்கு மத்தியிலும் திசாநாயக்கவுக்கு வாக்களிக்கப் போகும் தமிழர்கள், இனப்படுகொலைக்கான பொறுப்புடைமை அல்லது தமிழ் தேசிய கோரிக்கை குறித்து அக்கறையற்று இருப்பதனால் அதனைச் செய்யப் போவதில்லை. இந்த விடயங்களை நிறைவேற்றக் கூடியவர்கள் தொடர்பான எதிர்பார்ப்பு மிகவும் குறைந்தளவில் இருப்பதால், ஆகக் குறைந்தது பொருளாதாரச் சிக்கல் போன்ற முக்கிய விடயங்களை அடையாளப்படுத்துபவர்களாக தேசிய மக்கள் சக்தி கருதப்படுகின்றது.

ஏனைய சிங்களக் கட்சிகளைப் போன்றே, தமிழ் தேசிய கோரிக்கையை ஒரு பொருட்டாகவேனும் திசாநாயக்க கருதவில்லை. தாம் தலைமை வகிக்கும் இனவாதத்திற்கு ஒரு கூட்டு எதிர்ப்பாக பார்ப்பதற்குப் பதிலாக தனிப்பட்ட மனிதாபிமான கரிசனையாக அதனைப் பார்க்கின்றார். அவரும், இலங்கையில் உள்ள எந்தத் தலைவரும் எதிர்கொள்ளும் இக்கட்டான நிலை இதுதான் - ஈழத் தமிழ் மக்கள் கூட்டாக சிங்கள-பௌத்த மேலாதிக்கத்தின் ஆட்சியை நிராகரித்து வருகின்றனர். நாளாந்த விடயங்களை அடையாளப்படுத்தக் கூடிய நிலையானது, சில தேர்தல்களில் சில தமிழ் ஆதரவினை பெற்றுக் கொடுக்கும்.

ஆனால், உண்மையில், சிங்கள-பௌத்த இனவாதத்திற்கு அதிகாரத்தை மையப்படுத்தும் அரசியலமைப்பினை ஈழத் தமிழ் மக்கள் தொடர்ந்தும் நிராகரித்து வருகின்றனர். அரசின் நோக்கிலிருந்து பார்க்கும் போது, தமிழ் அரசியல் கட்சிகளுக்கு எதனையும் வழங்கா முடியாவிட்டால், அவர்கள் ஏன் அவற்றுடன் இணைந்து செயற்பட வேண்டும் என்பதே பிரதான கேள்வி.

ஆகக் குறைந்தது அமைச்சரவைப் பதவிகளைப் பெற்றுக் கொள்வதற்கு ஈ.பி.டி.பி ஆதரவினை வழங்கலாம். ஆனால், குறிப்பாக அண்மைக் காலங்களில் இலங்கை தமிழரசுக் கட்சியானது தென் பகுதி கட்சிக்கு ஆதரவினை வெளிப்படுத்தியது. இந்த ஆதரவு பயனற்றது. தமிழ் வாக்குகளிற்கான செல்வாக்கு இலங்கை தமிழரசுக் கட்சியிடம் இனியும் இல்லை. அதனால், இலங்கை அரசிற்கான அதன் பெறுமதியை இழந்துள்ளது. கொழும்பிடம் எவ்வித பேரம்பேசும் சக்தியும் இன்மையால், தமது தொகுதிக்கான அடிப்படை வாக்குறுதிகளையேனும் நிறைவேற்ற முடியாத நிலையில் இலங்கை தமிழரசுக் கட்சி உள்ளது.

திருப்தியற்ற மற்றும் தேக்கமடைந்த தமிழ் அரசியல் கட்சி அமைப்பின் சரிவு, தேர்தல் அரசியலின் கண்டிப்புகளுக்கு அப்பாற்பட்ட தமிழர் போராட்டத்தை உற்சாகப்படுத்தலாம். இது தமிழ் தேசியவாதத்திற்கு புதிதல்ல. 1976ஆம் ஆண்டில் தமிழர் ஐக்கிய விடுதலைக் முன்னணியின் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் ஊடாக தமிழ் விடுதலைக்கான தெளிவான கோரிக்கையை அடுத்து, இலங்கை அரசுடன் அதன் தலைமைத்துவமானது சலுகைக்குப் பின் சலுகை வழங்கி, இறுதியில் 1980களின் ஆரம்பத்தில் பொருத்தமற்ற ஒன்றாக மாறிப் போனது.

அதன் பின்னர் சிறப்பற்றதாகவும், துணை ஆயுதக் குழுக்களாலும், இலங்கை அரசுடன் இணங்கிப் போவதனைத் தவிர வேறு வழியில்லை எனக் கருதிய மிதவாதிகளினது ஆதிக்கம் நிறைந்ததாக தமிழ் கட்சி அரசியல் நிலவியது. தமிழர் விடுதலைப் போராட்டத்தின் திசையை நிர்ணயிக்கும் அரசியல் ஈடுபாடு அல்லது போரின் அளவுகோல்களை எல்.ரி.ரி.ஈயினரே நிர்ணயித்தனர்.

2000ஆம் ஆண்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற முத்திரையின் கீழ் இந்தக் கட்சிகளில் சிலவற்றின் கூட்டணியை அமைப்பதற்கான சிவில் சமூக முன்முயற்சிக்கு எல்.ரி.ரி.ஈயினர் ஒப்புதல் அளித்தபோதுதான், தமிழ் கட்சிகள் முக்கியத்துவம் பெற்றதாக மாறின.

நல்லதோ அல்லது கெடுதியோ, இது கொழும்பினை மையமாகக் கொண்ட தமிழ் பாராளுமன்ற அரசியலுக்கு மீளுயிர் அளித்தது. ஆனால், இந்த துடிப்பான அடிமட்ட முன்முயற்சிகளுக்கு வலுசேர்க்கும் வகையில், வளர்ந்து வரும் சமூக இயக்கத்தை வலுப்படுத்துவதற்கும், நிறுவனமயமாக்குவதற்கும், நிறுவனங்களையும் சிவில் சமூகத்தையும் மறுசீரமைப்பதிலும் கவனம் செலுத்துவதற்காக கட்சி அரசியலில் இருந்து கவனம் செலுத்த வேண்டிய தருணம் வந்து விட்டது.

வடக்கு-கிழக்கு முழுவதிலும் உள்ள புதிய வேட்பாளர்களின் எண்ணிக்கை மிகவும் அரசியல்மயமான மக்கள் தொகையைக் குறிப்பதுடன், இதிலிருந்து புதிய அரசியல் தலைமைத்துவம் வெளிப்படும். இந்த அடுத்த கட்ட போராட்டத்திற்கு பழைய பாதுகாவலர் வழிவிட வேண்டும்.

https://www.virakesari.lk/article/198589



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.