Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழ விடுதலைப் புலிகளின் 2024 மாவீரர்நாளின் உத்தியோகபூர்வ அறிக்கை

 

 

தலைமைச் செயலகம்,

தமிழீழ விடுதலைப் புலிகள்,

தமிழீழம்.

27.11.2024 

 

எமது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழீழ மக்களே!

இன்று மாவீரர் நாள்.

தமிழீழ மக்களின் இறைமையை மீட்டெடுத்து, தமிழீழ அரசமைக்கும் புரட்சிகர வரலாற்றுப்பயணத்திற்காக, விடுதலைக்கனவுடன் தமது இன்னுயிரை ஈகம் செய்த மாவீரத் தெய்வங்களை வணங்கி, நினைவுகூர்ந்து, அவர்கள் கனவு நனவாக நாம் உறுதியுடன் போராடியே தீருவோமென உறுதிகொள்ளும் புரட்சிகரநாள்.

தமிழின விடுதலைக்காகத் தம்மை ஈந்து, எமது மண்ணில் விதையாகிப்போன மாவீரர்களின் ஈகத்தினை  ஒவ்வொருவரது நெஞ்சத்திலும்  நிறுத்தி, தமிழ்த்தேசியம் என்ற உயிர்மைக் கருத்தியலினை எமது வாழ்வியல் நெறியாகவும் அரசியல் வழியாகவும் கொண்டு, தமிழீழத் தனியரசமைக்கும் விடுதலைப்பயணத்தில், உறுதியுடன் போராடுவோம் என எழுச்சிகொள்ளும் தமிழீழத் தேசியநாள்.

தமிழீழ விடுதலைப்போராட்டத்தை வீரத்தின் உச்சத்துக்கு எடுத்துச்சென்ற எமது வீரர்களைப் பெற்றெடுத்தோரும் அவர்தம் குடும்பத்தினரும் என்றும் போற்றுதற்குரியவர்கள். தாயகத்தில் மாவீரர் துயிலுமில்லங்கள் இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டு, இடித்தழிக்கப்பட்டு,  இறந்தவர்களை நினைவுகூருதல் தொடர்பான அனைத்துலகச் சட்டங்களைப் புறந்தள்ளி, சுதந்திரமாகத் தமிழ்மக்கள் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தமுடியாத அளவிற்குத் தடைகள் உள்ளபோதிலும் ஆண்டுதோறும் இம்மாவீரச் செல்வங்களுக்குச் சுடரேற்றி நினைவேந்தி வருகின்றார்கள்.   

எமது தாய் மண்ணில் நாம் தன்னாட்சி உரிமையுடன் அரசாட்சி செய்த சூழமைவில் அன்னிய ஆக்கிரமிப்புக்களின் தொடர்ச்சியாக, பிரித்தானியர் ஆக்கிரமிப்பிற்குப் பின்னர்;, தமிழர் தேசமும் சிங்கள தேசமும் இணைக்கப்பட்டு, 1948 இல் சிங்களவர்களுக்குச் சுதந்திரம் தாரைவார்த்துக் கொடுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தமிழீழ மக்கள்,  அடக்குமுறைக்கும் ஆக்கிரமிப்பிற்கும் மற்றும் உயிர் அச்சுறுத்தல்களிற்கும் உள்ளாக்கப்பட்ட சூழமைவில், தமிழினம் தம் உரிமைகளுக்காகப் போராட நிர்ப்பந்திக்கப்பட்டது.

சிங்கள அரசுகளால் திட்டமிட்ட சிங்களக்குடியேற்றங்களுக்கூடாக எமது தாயக நிலப்பகுதிகளைப் படிப்படியாகப் பறித்தெடுத்து, முழு இலங்கைத்தீவினையும் பௌத்த சிங்கள நாடாக்கும் தமது இனவெறிக்கோட்பாட்டின் உச்சமாக, அடிப்படை உரிமைகள் மறுதலிக்கப்பட்டிருந்த நிலையில்  தன்னாட்சி அரசியல் உரிமை கோரி தமிழ் மக்கள் நடாத்திய அறவழிப்போராட்டங்களை, சிங்கள இனவாத அரசுகள் ஆயுத வன்முறையூடாகக் கொடூரமாக அடக்கியொடுக்கியது. முப்பதாண்டுகால அரசியல்ரீதியான அறவழிப்போராட்டங்கள் அனைத்தும், சிங்கள இராணுவப் பலத்தால் நசுக்கப்பட்ட நிலையில் பறிக்கப்பட்ட எமது அரசியல் உரிமைகளை நிலைநாட்டி, எமது தாய்மண்ணைப் பாதுகாத்து, தமிழின அழிப்பினைத் தடுத்துநிறுத்தி, எமது மக்களைப் பாதுகாக்கவே ஆயுதமேந்திப் போராடும் நிலமைக்கு நாம் நிர்ப்பந்திக்கப்பட்டோம். 

தமிழீழத்தினை வென்றெடுக்க ஆயுதப்போராட்டத்தினை ஆரம்பித்த எமது இயக்கம் படிப்படியாக வளர்ச்சி பெற்று, தமிழ்மக்களது அரசியலைத் தீர்மானிக்கும் ஒரே சக்தியாக, தமிழீழமக்களின் ஒட்டுமொத்த ஆதரவோடு பெரும் தேசியவிடுதலை அரசியற்போராட்ட இயக்கமாகப் பரிணமித்தது.  போர்க்களங்களில் எமது இயக்கம் வரலாற்றுச் சாதனைகளைப் படைத்து, உலகின் தலைசிறந்த ஓர் விடுதலை இராணுவக்கட்டமைப்பு என்ற சர்வதேசத்தின் கவனத்தையும் ஈர்த்திருந்தது. அதேவேளை, காலத்திற்குக்காலம் வாய்ப்புகள் ஏற்பட்ட போதெல்லாம் அமைதிப் பேச்சுவார்த்தைகள் மூலம் எமது தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு நாம் பின்நின்றதில்லை. திம்புவில் தொடங்கி நோர்வே வரையிலுமான அனைத்துச் சமாதான முயற்சிகளிலும் நாம் பங்குகொண்டு, நிரந்தரமான ஓர் அரசியற் தீர்வைக் காண்பதற்கு நேர்மையாக முயன்றோம் என்பதனைச் சர்வதேசச் சமூகம் நன்கறியும். 

பேச்சுவார்த்தைகள், பலசுற்றுக்களாக நடைபெற்ற போதும் சிறிலங்கா அரசானது எமது இனப்பிரச்சினைக்குத் தீர்வைத்தர முன்வராது இழுத்தடிப்புச் செய்து இனவழிப்புப் போருக்குத் தம்மைத் தயார்ப்படுத்தியது. இதன் விளைவாகப் போர்நிறுத்த ஒப்பந்தம் மீறப்பட்டு, தமிழர் தாயகத்தை ஆக்கிரமிக்கப் பெரும்போரை மேற்கொண்டு இந்நூற்றாண்டின் பேரவலமான ஓர் இன அழிப்பு நடைபெற வித்திட்டது.

போர் அழிவிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்காக, எமது இயக்கம் பெரும் முயற்சிகளைச் செய்தபோதும் உலகநாடுகள் பாராமுகமாக இருந்தன. தமிழினத்துக்கு எதிரான வன்முறையில் தீவிரம்காட்டி, தமிழ்மக்களைக் கொன்றொழித்த போரை நிறுத்துமாறு, தமிழ்மக்கள் தமது சக்திக்குட்பட்டு உலகநாடுகளெங்கும் போராடியபோதும் இந்த உலகம், எமது மக்களைப் பேரழிவிலிருந்து காப்பாற்றத்தவறிவிட்டது. இந்நிலையில், நாளாந்தம் ஆயிரக்கணக்காகக் கொன்றொழிக்கப்பட்டுக்கொண்டிருந்த எமது மக்களையும் காயங்களுக்கு இலக்காகி மருத்துவ வசதியின்றி ஒவ்வொரு நொடியும் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தவர்களையும் பாதுகாப்பதற்காகவே எமது ஆயுதங்களை மௌனித்தோம். 

அதன் பின்னரும் சிங்களப் பேரினவாத அரசின் திட்டமிட்ட இன அழிப்பு இன்றுவரை தொடர்கின்றது. தமிழீழத்தில், சிங்கள இராணுவத்தால் திட்டமிட்டு ஆக்கிரமிக்கப்பட்ட தமிழரின் பூர்வீக நிலப்பரப்பு, இன்னும் உரியவர்களிடம் கையளிக்கப்படாதுள்ளது. தமிழ் மக்களின் பாரம்பரிய நிலங்களைச் சிங்கள இராணுவம் ஆக்கிரமித்து மகாவலித்திட்டம், தொல்பொருள் ஆய்வுத்திணைக்களம், வனவளப்பாதுகாப்புத் திணைக்களம் என்ற போர்வையில் சிங்களக்குடியேற்றத் திட்டங்களை நடைமுறைப்படுத்தித் தனது ஆக்கிரமிப்பை விரிவுபடுத்திவருகின்றது.

சிங்கள அரசானது தமிழ் மக்களின் பொருளாதார வளங்களை நேரடியாகவும் மறைமுகமாகவும் சுரண்டிவருவதுடன், தொடர்ந்தும் எம்மக்களைச் சிங்களப் பேரினவாதத்திடம் கையேந்தும் நிலையிலேயே வைத்துள்ளது. இதனால், தமிழ்மக்கள் அகதிகளாக அடிப்படை வசதிகளற்றநிலையில் வறுமையில் வாழ்ந்துவருகின்றனர். தமிழீழ மக்களின் ஒற்றுமையைச் சீர்குலைக்கச் சாதி, மதம் மற்றும் பிரதேசவாத முரண்பாட்டுக் கருத்துக்களை உருவாக்கிவருவதோடு, எமது இளைய தலைமுறையினரைச் சிதைக்கும் நோக்குடன் போதைப்பொருள் பாவனை, கலாச்சாரச் சீரழிவு மற்றும் வன்முறைகளை ஊக்குவிப்பதன் மூலம் எமது இளையதலைமுறையினரின் கல்விவளர்ச்சியினைத் தடுக்கும் மூலோபாயத்தினைச் சிறிலங்கா அரச கட்டமைப்புகள் முன்னகர்த்திவருகின்றன.

சிறிலங்காப் பேரினவாத அரசால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலையுடன் தொடர்புபட்ட படையினரை நீதி விசாரணையிலிருந்து பாதுகாத்து வருவதுடன் ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையகத்தின் தீர்மானங்களையும் இப்புதிய அரசும் நிராகரித்துவருகின்றது. இதேவேளை, பல ஆண்டுகளாக அரசியற்கைதிகளாகவுள்ள எம்மவர்களை விடுதலைசெய்யாது, தொடர்ந்தும் பலர் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்படுகின்றார்கள். இதற்கு நீதிகேட்டு, எமது மக்கள் சர்வதேசச் சமூகத்திடம் குரல்கொடுத்து வருகின்றார்கள். காணி அபகரிப்பு, பௌத்தமயமாக்கல், அரசியற்கைதிகள் விடுதலை, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பிலான போராட்டங்களெனப் பல வழிகளிலும் உலகத்திடம்  நீதிவேண்டிப் போராடிவருகின்றார்கள். காணாமல் ஆக்கப்பட்டோரின் நிலைமை தொடர்பில் முடிவுகள் ஏதுமின்றி, அவர்களது உறவுகளும் சாவடையும் அவலநிலை இன்றுவரை தொடர்கிறது. முன்னாள் போராளிகளின் நிலைமைகளும் துன்பத்திற்கிடமாகவே  உள்ளதோடு, சிறைகளிலிருந்து விடுதலை செய்யப்பட்ட பலர் சந்தேகத்திற்கிடமான முறையிலும் சாவடைந்து வருகின்றனர். இதேவேளை, பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் பலரும் பாதுகாப்பின்றிச் சொல்லொணாத் துன்பங்களோடு வாழ்ந்து வருகின்றார்கள். 

 

அன்பார்ந்த தமிழீழ மக்களே!

 

சிங்கள மக்களின் மகாவம்ச மனநிலையில், அவர்களது அரசியற் கருத்துலகில் அடிப்படையான மாற்றம் நிகழுமென நாம் எதிர்பார்க்கமுடியாது. மாறாக, அது புதிய, புதிய வடிவங்களை எடுத்துப் புத்துயிர்பெற்று வருகிறது.

தென்னிலங்கை அரசியற்களத்தில், அதன் ஆதிக்கம் மேலோங்கி வருகிறது. இப்படியான புறநிலையில், தமிழரின் தேசிய இனப்பிரச்சினைக்குச் சிங்களத் தேசத்திலிருந்து ஒரு நீதியான, நியாயமான தீர்வு கிட்டுமென அன்றும் சரி, இன்றும் சரி, நாம் நம்பிக்கை கொண்டிருக்கவில்லை. எமக்கே உரித்தான எமது அடிப்படை உரிமைகளை நாமாகவே போராடி வென்றெடுக்கவேண்டுமே தவிர, சிங்கள அரசியல்வாதிகளின் காருணியத்தில் பெற்றுக்கொள்ளலாம் என நாம் என்றுமே கருதியதில்லை. இதுவே, அன்றும் இன்றும் எமது விடுதலை இயக்கத்தின் தெளிவான நிலைப்பாடாக இருந்து வருகிறது.

ஈழத்தமிழர்களைப் போராட நிர்ப்பந்தித்த அடிப்படைக் காரணங்களில் சாதகமான மாற்றம் நிகழாத ஒரு சூழலிலேயே, பௌத்த சிங்களப் பேரினவாதக் கட்சியொன்று பெரும்பாண்மை வாக்குகளோடும் இன்று ஆட்சிப்பீடமேறியுள்ளது. தோல்வி மனப்பான்மையும் பொருளாதார சுமைகளும் ஈழத்தமிழர்களில் ஒரு பகுதியினரை மாயவலைக்குள் வீழ்த்தியுள்ளது. விடுதலையை நேசிக்கும் எமது மக்கள், சதிவலைகளிலிருந்து மீண்டெழுந்து சுதந்திர தேசத்திற்கான வடம் பிடித்து இன விடுதலைக்கு வலுச்சேர்ப்பார்கள் என்று உறுதியாக நம்புகிறோம். தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாறு சொல்லும் பாடமும் இதுவே.

இனவாதச்சிங்களத் தலைமைகளினால் 75 ஆண்டுகளுக்கு மேலாக இன அழிப்பைச் சந்தித்துவரும் தமிழீழ மக்கள், பௌத்த சிங்கள மேலாண்மைக் கருத்தியலையும் அதன் வரலாற்றுச் சமூகப் பரிமாணங்களையும் வாழ்வியல் அனுபவங்களோடு கண்டறிந்தவர்கள். தற்போது பௌத்த சிங்களப் பேரினவாதக் கட்சியொன்று  தேர்தலில் பெரும்பான்மையாக வெற்றி பெற்று அனுரகுமார திசாநாயக்க தலைமையில், ஒரு புதிய அரசாங்கம் ஆட்சிப்பொறுப்பினை ஏற்றுள்ளது. இது சிங்கள மக்கள் விரும்பிய அரசியல் மாற்றம் ஒன்றின் வெளிப்பாடாகும். தமிழ் மக்களைப் பொறுத்தவரை தமிழர் இனப்பிரச்சினை சார்ந்து, அடுத்து என்ன மாற்றம் நிகழுமென நாம் பொறுத்திருந்தே பார்க்கவேண்டும். ஆனால், புதிய அரசை அமைத்திருக்கும்  கட்சிகளின் கூட்டணியில் மக்கள் விடுதலை முன்னணி பிரதான கட்சியாகும். இக் கட்சியின் கடந்த கால அரசியற் பயணமானது தமிழின அழிப்பை முதன்மைப்படுத்தியதாகவே அமைந்திருந்தது. தற்போதும் இலங்கையர் என்ற ஒற்றைச்சொல்லில் தமிழர் அடையாளத்தைக் கரைத்திடும் கருத்தியலே முன்னகர்த்தப்பட்டு வருகிறது. இந்த வேளையில், 1983 இன் யூலைப் படுகொலை, வடக்குக் கிழக்குப் பிரிப்பு, சுனாமி அனர்த்த முகாமைத்துவக்  கட்டமைப்பின் முடக்கம், இனவழிப்புப் போருக்கான இராணுவ ஆட்சேர்ப்புப் போன்ற கடந்தகாலத் தமிழின விரோதப்போக்கினையும் நாம் மறந்துவிடலாகாது.

 

எமது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழ்நாட்டு உறவுகளே! 

தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் தாய்மடியாகத் தமிழ்நாட்டு மக்களாகிய நீங்களே என்றும் இருந்துவருவதுடன், ஈடிணையற்ற ஈகங்களைத் தமிழீழ விடுதலைக்காகத் தமிழினப்பற்றுடன் செய்துவருகின்றீர்கள். இவ்வையகத்தில், தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் தாயகமாகத் தமிழ்நாடே இருக்கிறது. எமது மொழியையும் பண்பாட்டையும் வரலாற்றையும் தொல்லியலையும் அறிவார்ந்து வளர்த்துக்காக்கும் ஆற்றல்வளம், உங்களிடமே ஒப்பீட்டளவில் கூடுதலாகவுள்ளது. கட்டமைப்புசார் தமிழின அழிப்புக்கு எதிராக சுயாதீனச் சர்வதேச விசாரணைக்கு இந்திய நடுவண் அரசின் ஆதரவைப் பெறும்வகையில், அழுத்தம் கொடுக்கவேண்டுமெனக் கேட்டுக்கொள்வதுடன், எமது இயக்கத்தின் மீதான தடையை நீக்குவதற்காகவும் தொடர்ந்தும் குரல் எழுப்புமாறு வேண்டிநிற்கின்றோம். தென்னாசியப் பிராந்தியத்தில், இந்தியாவின் பாதுகாப்பிற்கு இன்றியமையாத ஒரு  அரணாக விளங்கக்கூடிய ஒரே நாடு  தமிழீழத் தேசமாக மட்டுமே இருக்கமுடியும். தமிழீழத் தேசத்தின் விடுதலைக்காகத் தொடர்ந்து குரல்கொடுத்துவரும் தமிழ்நாட்டு உறவுகளுக்கு, எமது அன்பையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.

 

எமது  அன்பிற்குரிய இளையோர்களே!

தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு. வே. பிரபாகரன் அவர்களது சிந்தனைக்கமைவாக,  தேச விடுதலைப் பணியினைத் தீவிரமாக முன்னெடுத்து வருகின்ற புலம்பெயர் வாழ் இளையவர்களின் செயற்பாடுகளை நாம் பேரன்போடு உளமார வாழ்த்துகின்றோம். நிகழ்ந்துவரும் உலகின் புவிசார் அரசியல் மாற்றங்களை மிகத்துல்லியமாக அவதானித்து வரும் இளையவர்களின் செயற்பாடுகள் இன்னும் விரிவு படுத்தப்படவேண்டும். நீங்கள் வாழுகின்ற ஒவ்வொரு நாடுகளின் நாடாளுமன்றங்களிலும் தமிழின அழிப்பிற்கு எதிரான தீர்மானங்களைக் கொண்டுவருவதற்கு விவேகத்தோடு வேகமாகச் செயற்படவேண்டும். அதேவேளை எமது மொழி, பண்பாடு, கலை, கலாச்சாரம் போன்ற தேசியப்பண்புகளைப் பேணிக்காத்து, இன அடையாளத்தினை இழந்துவிடாமல் பாதுகாக்கும் பாரிய பொறுப்பும் இளையவர்களாகிய உங்களிடமே தங்கியுள்ளது. தமிழர்களது வரலாற்று அடையாளமாகிவிட்ட எமது தேசியத்தலைவர் அவர்களது தத்துவக்கோட்பாட்டின் வழி நின்று, எமது தேசிய விடுதலைப் போராட்டத்தினை முன்னகர்த்திச்செல்வீர்களென உளமார நம்புகின்றோம்.

 

எமது அன்பான மக்களே!

 

எமது மக்களின் இலட்சி உறுதியினை உடைக்க முடியாத எதிரிகள், தம்மால் முடிந்த அனைத்து வகையான சூழ்ச்சிகளையும்  எமது மக்கள் மீது கட்டவிழ்த்து விட்டார்கள். தமிழ்த்தேசியம்  எனும் கோட்பாட்டினை அழிப்பதற்காக எதிரிகள், அருவருப்பான  உத்திகளைக் கையாண்டு வருகின்றார்கள். இதனூடாகத் தமிழீழ மக்களின் தேசிய ஒருமைப்பாட்டு அடையாளத்தினைச் சிதைத்து, மெதுவாகப் பௌத்த சிங்கள ஒற்றையாட்சிக்குள் எம்மை முடக்கிவிடும் அபாயத்தினை எமது மக்கள் கண்டுணர்ந்து, எதிர் காலத்தில்  மிகவும் விழிப்புணர்வோடு இருக்கவேண்டுமென இப்புனித நாளிலே உரிமையோடு வேண்டிநிற்கின்றோம்.

உலக அரங்கில் இன்று ஏற்பட்டுவரும் சில மாற்றங்கள், எமக்கு நம்பிக்கை ஊட்டுவதாக அமைகின்றது. பாலஸ்தீன தேசத்தில் மேற்கொள்ளப்பட்ட  இஸ்ரேல் நாட்டுப் படைகளது இன அழிப்பு நடவடிக்கைகள் அனைத்துலக நீதிமன்றத்தினால் அண்மையில் விசாரிக்கப்பட்டு, இஸ்ரேல் நாட்டு அரசதலைவருக்கும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சருக்கும் பிடியாணை வழங்கப்பட்டிருப்பது, நீதியின்பால் உலகம் இன்னும் இயங்குவதைக் காட்டிநிற்கின்றது. இவ்வாறான முன்னுதாரணங்களோடு சர்வதேசச் சமூகம் ஈழத்தமிழ் மக்களின் இனப்பிரச்சனையையும் அணுகித் திட்டமிடப்பட்ட தமிழின அழிப்பிற்கான நீதியினைப் பெற்றுக்கொள்வதற்கு முன்வரவேண்டும் எனக்கேட்டுக்கொள்கின்றோம்.  தாயகம், புலம்பெயர் நாடுகள், தமிழ்நாடு எனும் மூன்று தளங்களிலும் தொடர்ச்சியாக நாம் போராட்டங்களை முன்னெடுக்கும்பொழுது விரைவாக  எமது இலட்சியத்தினை வென்றெடுக்கமுடியும். 

அன்பிற்குரிய மக்களே! தமிழ்த்தேசியச் செயற்பாட்டாளர்களே! இதுவரை காலமும் இடைவிடாது நீங்கள் வழங்கிவந்த ஆதரவு என்றும் பாராட்டுதலுக்குரியது.  தொடர்ந்தும்  எமது மாவீரர்களின்  இலட்சியக்கனவினை  நிறைவேற்ற உறுதுணையாக  நிற்கவேண்டுமென இப்புனித நாளிலே கேட்டு நிற்கின்றோம்.

தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின்  மூலோபாயச் சிந்தனையின் அடிப்படையில், பௌத்த சிங்களப் பேரினவாதத்தின் ஒடுக்குமுறைகளிலிருந்து அடிமைத் தடைகளை உடைத்தெறிந்து, தமிழீழ அரசை நிறுவும் ஆற்றலை, எமது மாவீரர்களின் ஈகங்கள் எமக்குக் கொடுத்திருக்கின்றன. சவால்கள் மிகுந்த காலப்பகுதியில் மண்டியிடா வீரத்துடன் களமாடிய மாவீரர்களின் உளவுரணையும் அர்ப்பணிப்பையும் நெஞ்சில் நிறுத்தி, தமிழீழத் தேசத்தின் இறைமையை எந்நிலைவரினும் விட்டுக்கொடுக்கமாட்டோம் என்ற விடுதலை உறுதியுடன் தொடர்ந்தும் போராடுவோம்.

 

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

தலைமைச் செயலகம்,

தமிழீழ விடுதலைப் புலிகள்,

தமிழீழம்.

 

 

 

 

 

jfHdjpvY9OU3p2TjNiDc.jpg
MgdSdk790WkVHbVj7R0O.jpg

 

Gr0hD9vwkgXAZYIncIok.jpg

 

Qyy3OUSr96qKxI2xCUdf.jpg

 

cRB35eOdPJvvHsKmqk7b.jpg

 

EDNYAUKGryv3euIDlX0Z.jpg

https://www.thaarakam.com/news/dfe683b1-62fe-4369-8e41-b862da96b335

  • கருத்துக்கள உறவுகள்

இந்த தலைமைச் செயலகம் தமிழீழத்ததில் எந்த தெருவில் இருக்கிறது?  யாராவது அங்கு செல்லும் போது இந்த தலைமைச் செயலகத்தின் முன்னால் நின்று செல்பி எடுத்திருக்கின்றீர்களா? @goshan_che யின. பயணக்கட்டுரையில் தன்னும் இதை பற்றி ஒரு வரி கூட வரவில்லையே! 

  • கருத்துக்கள உறவுகள்

தேசத்தின் இளவரசியின் அறிக்கையை, புலம்பெயர் பட்டாசு ரெஜிமெண்டின் அவுஸ்ரேலிய தளபதி பாலசிங்கம் பிரபாகரன் வெளியிட்டுவிட்டாரா?👀

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, வாலி said:

தேசத்தின் இளவரசியின் அறிக்கையை, புலம்பெயர் பட்டாசு ரெஜிமெண்டின் அவுஸ்ரேலிய தளபதி பாலசிங்கம் பிரபாகரன் வெளியிட்டுவிட்டாரா?👀

சேர்ந்த காசு போதுமானதால் போலித் துவாரகா வெளிவரவில்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, வாலி said:

தேசத்தின் இளவரசியின் அறிக்கையை, புலம்பெயர் பட்டாசு ரெஜிமெண்டின் அவுஸ்ரேலிய தளபதி பாலசிங்கம் பிரபாகரன் வெளியிட்டுவிட்டாரா?👀

அநுர அலையில் சேரமான், பாலசிங்கம் பிரபாகரன், போலித் துவாரகா அடிபட்டுப் போனார்கள். காணொளியை வெளியிடுவார் என்று சொல்லியுள்ளார். ஆனால் யூடியுப்பர்கள் காலத்தில் இவர்களின் சலசலப்பு எவருக்கும் கேட்கவில்லை.

11:50 இல் தோன்றுகின்றார். 

சண்டையா நடக்கின்றது, சமாதானச் செய்தி அனுப்ப?

யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி அநுரவின் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் சாதாரணமாக உலவுகின்றார். மக்கள் குறைகளைக் கேட்கின்றார்.  சேரமானின் துவாரகா புரஜெக்ட் பல்லிளித்து நிற்கின்றது.

 

  • கருத்துக்கள உறவுகள்

இந்த சேரமான் என்ற ரஞ்சித் 1999 ல் ஐபிசியின் பணிப்பாளராக கடமையேற்க வந்த போது ஐரோப்பிய தமிழ் ஊடகத்துறையை கட்டியெழுப்ப தலைவரால் அனுப்பட்ட ஜாம்பவான் என்று புகழப்பட்டார். ஒவ்வொரு வாரமும் நேயர் கேள்விக்கான பதிலில் மக்களுக்கு தேசபக்தி பாடம் எடுப்பார். ஆனால் உண்மையில் நடந்தது வேறு. 

உயர்தரத்தையும்  நடுநிலைத் தன்மையையும  பேணிய ஊடகமாக  இருந்து போராட்டத்திற்கு பலம் சேர்தத   ஐபிசியை வெறும் இயக்க பிரச்சார  ஊடகமாக வெளித்தோற்றத்தை  ஏற்படுத்தி ஐபிசி உருவாக்கப்பட்ட முக்கிய நோக்கத்தையே கெடுத்து ஐபிசியை குட்டிச்சுவர் ஆக்கியது  இவர் தான். 

 இப்போது காலங்கடந்த பின்னர் தான் தெரிகிறது,  “அயோக்கியர்களின் கடைசி புகலிடம் தேசபக்தி” என்ற கூற்று எவ்வளவு உண்மையானது என்பது. இவர் ஒரு உதாரணம் மட்டுமே. 

 

Edited by island

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.