Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

திராவிடமும், தமிழ்த் தேசியமும் வேறு வேறானாவையா?

-சாவித்திரி கண்ணன்
DRAVIDAM-VELLUM-front-scaled-1.jpg

சமீப காலமாக  திராவிடம் என்பதே ஒரு புரட்டு. தமிழர்களை திராவிடர்கள் என்பது பிழையானது. இது இந்த திராவிட  கருத்தாக்கத்தை பிரிவினை நோக்கத்தில் ஆங்கிலேயேர்கள் ஊக்குவித்தனர்..என்றெல்லாம் கூறி வருகின்றனர். தமிழ்த் தேசியம், திராவிடம் இரண்டும் ஒன்றுக்கு ஒன்று முரணானதா? உண்மை என்ன…?

நம்மை பொறுத்த வரை திராவிட இயக்க ஆதரவோ, தமிழ் தேசிய ஆதரவு நிலைபாடோ எடுக்காமல், உண்மை என்னவென்பதை மட்டும் குறிக்கோளாகக் கொண்டு நம் தேடலை தொடங்கினோம்.

நம் தேடலின்படி, திராவிடம் என்ற சொற்றொடர் ஆறாம், ஏழாம் நூற்றாண்டுகள் தொடங்கியே கணிசமாக காணக் கிடைக்கின்றன.

இந்தியாவின் தென் பகுதியை குறிக்கும் ஒரு சொல்லாடலாக அந்தக் காலங்களில் இவை பயன்பாட்டில் இருந்துள்ளன.

கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த சமணத் துறவியான வஜ்ரநந்தி என்பவர்  “திரமிள சங்கம்” என்ற ஒன்றை உருவக்கியுள்ளார். இந்த திரமிள சங்கம் என்பதை திராவிட சங்கம் என்றே மயிலை சீனி வேங்கடசாமி , வையாபுரிபிள்ளை போன்ற வரலாற்று அறிஞர்கள் கூறுகின்றனர்.

ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த குமரிலபட்டர் என்ற ஆன்மீக அறிஞரும் ‘திராவிட பாசை’ என்ற சொல்லைப் பயன்படுத்தியுள்ளார்.

கிபி ஏழாம் நூற்றாண்டில் பல்லவ மன்னன் நரசிம்ம வர்மன் காலகட்டத்தில் காஞ்சிபுரம் வருகை குறித்த தம் பயண நூலில் சீன அறிஞர் யுவான் சுவாங் திராவிட தேசமான காஞ்சிபுரம் சென்றேன் என பரவசமாகக் குறிப்பிடுகிறார். அந்த பரவசத்திற்கு காரணமாக அவர் சொல்வது, இது புத்தர் கால்பட்ட மண். போதி தர்மர் அவதரித்த பூமி, 100 க்கு மேற்பட்ட அழகிய புத்த விகாரங்களையும் , ஆயிரக்கணக்கான புத்த பிட்சுகளையும் இங்கு நான் கண்டேன் என்கிறார்.

196174216674_10153425489631675.jpg சீன அறிஞர் யுவான்சுவாங்

மகாபாரதத்தில் அனுஷான பர்வத்தில் திராவிட போர் வீரர்கள் என்ற வார்த்தை வருகிறது. எப்படி வருகிறது என்றால், மகாபாரத போர்க் களத்தில்  பாண்டவர்களுக்கு ஆதரவாக பாண்டிய மன்னர்கள் தங்கள் வீரர்களை களத்தில் இறக்கினார்கள் என்ற இடத்தில் ‘திராவிட வீரர்கள்’ என அதில் குறிப்பிடப்படுகிறது. மகாபாரதம் எழுத்து வடிவம் பெற்றது ஆறாம் நூற்றாண்டு வாக்கில் என்பது கவனத்திற்கு உரியதாகும்.

ஆந்திராவில் கிடைத்த   ஏழாம் நூற்றாண்டை சேர்ந்ததாக கருதப்படும் கல்வெட்டு ஒன்றில், திராவிட தேசத்தில் குடியேறிய பிராமணர்கள் தங்களை ‘திராவிட புதிரலு’ என அழைத்துக் கொண்டதாக உள்ளது. இந்த வகையில் தான் ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஞானசம்பந்தரை ‘திராவிட சிசு’ என ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆதிசங்கரர்  குறிப்பிடுகிறார்…என்பதையும் நாம் உய்த்துணரலாம்.

அப்படியானால், ‘திராவிடர் என்ற வார்த்தை பிராமணர்களைக் குறிக்கிறதா?’ என்றால், இல்லை இந்த தென் இந்திய பிராந்திய மண்ணில் வாழ்ந்தவர்களைக் குறிக்கும் சொல்லாகவே இது இருந்துள்ளதை பல ஆவணங்கள் வெளிச்சப்படுத்துகின்றன.

Thiravida-Mapadiakarar-1986_0000.jpg

13 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த மெய்க்கண்டார் இயற்றிய ‘சிவஞான போதம்’ என்ற நூல் தான் இன்று வரை சைவ சித்தாந்தத்தின் பிரதான நூலாக கொண்டாடப்படுகிறது.

இந்த சிவஞான போதத்திற்கு விளக்கவுரை எழுதியுள்ள  திருவாவடுதுறை ஆதினம்  சிவஞான சுவாமிகள் இந்த நூலின் முகப்பில் இதனை ‘திராவிட மாபாடியம்’ எனக் குறிப்பிட்டுள்ளார். இதற்கு திராவிட மொழியிலான பேருரை என்று பொருளாகும். இது அச்சு வடிவம் பெற்ற போதும் சைவ சித்தாந்த நூல் நிலையத்தார் நூலின் முகப்பில் சிவஞான முனிவரை ‘திராவிடபாடியகாரர்’ எனக் குறிப்பிடத் தவறவில்லை.

Thayumanavar_3.jpg

தாயுமான சுவாமிகள் ( 1705- 1742) எழுதிய புகழ் பெற்ற பாடலான

கல்லாத பேர்களே நல்லவர்கள் எனத் தொடங்கும் பாடலில்,

வட மொழியிலே வல்லான் ஒருத்தன்

வரினும் த்ரவிடத்திலே விவகரிப்பேன்’’

என்ற வரி வருகிறது இந்தப் பாடலில்!

இதற்கு உரை எழுதிய அந்த காலகட்டத்தின் பெரும் தமிழ் புலவர்கள் அனைவருமே வட மொழியிலே வல்லவன் ஒருவன் வரினும், தமிழ் மொழியில் கைதேர்ந்தவன் போல விவகரித்து பேசுவேன் என்றே எழுதியுள்ளனர்.

91X0k8mUVyL._AC_UL600_SR600600_.jpg

வைணவர்கள் தங்களின் நாலாயிர திவ்ய பிரபந்தத்தை ‘திராவிட வேதம்’ என்றே அழைக்கின்றனர். காரணம், 63 நாயன்மார்களும் தென்னகமாம் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதால் வட  நாட்டு மொழியில் உள்ள வைணவ இலக்கியங்களில் இருந்து வேறுபட்டது என்பதைக் குறிப்பிடவே ஆழ்வார்கள் இயற்றிய பெருமாளைப் போற்றும் பிரபந்தங்கள் அனைத்தையும் ‘திராவிட வேதம்’ என்றனர். திவ்வியப் பிரபந்தத்தில் தலை சிறந்தது நம்மாழ்வார் இயற்றிய திருவாய்மொழி; பக்தர்கள் பலரால் நாள்தோறும் போற்றிப் பாராயணம் பண்ணப்பட்டு வரும் இதனை ‘செந்தமிழ் வேதம்’ என்றும், திராவிட வேதம் என்றுமே அழைக்கின்றனர். இவ்வாறு வைணவர்களும், சைவர்களும் தமிழில் எழுதப்பட்ட தங்களின் புனித நூல்களை ‘திராவிட வேதம்’ என அழைத்து பெருமைபட்டுள்ளனர் என்பதே யதார்த்தமாகும்.

தென் இந்தியாவை குறிப்பிடுவதற்கு பல சமஸ்கிருத  நூல்களில் ‘திராவிடம்’ என்ற சொல்லாடல்கள் வெளிப்பட்டுள்ளன. இதைக் கொண்டு ‘திராவிடம் என்பதே சமஸ்கிருதத்தில் இருந்து தோன்றியது’ என்பது கெடு நோக்கம் கொண்ட திரிபாகும். இதற்கு பதில் அளிக்க சிறந்த தமிழ் தேசியவாதியான தமிழ் அறிஞர் தேவ நேயப் பாவணரின் கூற்று ஒன்றே போதுமானது. அவர் எழுதிய ஒப்பியன் மொழிநூலில்  எழுதப்பட்டு இருப்பதாவது,   “இக்கால மொழியியலும், அரசியலும் பற்றி தமிழும், அதனின்று திரிந்த திராவிடமும் வேறுபிரிந்து நிற்பினும் பழங்காலத்தில் திராவிடம் என்றதெல்லாம் தமிழே. திராவிடம் என்று திரிந்தது தமிழ்என்னும் சொல்லே”.

dravida_thai_500-1.jpg

அதாவது, ‘தமிழில் இருந்து திரிந்து சென்றதே திராவிடம்’ என்கிறார் தேவ நேயப் பாவாணர். இதன் மூலம் தமிழே முந்தியது, திராவிடம் பிந்தியது என்றும், ‘தமிழே, திராவிடம் என்ற சொல்லாக பிரிந்துள்ளதால் தமிழுக்கு திராவிடம் எதிரானதல்ல’ என்ற முடிவுக்கும் நாம் வரலாம். ‘தமிழ் உலக மொழிகளில் மூத்தது, திராவிடத்திற்குத் தாயாகவும், ஆரியத்திற்கு மூலமாகவும் விளங்கியது’ என்கிறார் தேவநேயப் பாவாணர்.

இதன் மூலம் தென் இந்திய நிலப்பரப்பை ‘திராவிடப் பகுதி’ என்றும், இந்த நிலப்பரப்பில்  வாழ்ந்தவர்களை குறிப்பதற்கு ‘திராவிடர்கள்’ என்ற சொல்லும் மிக இயல்பாக பழங்காலத்தில் இருந்துள்ளமையை நாம் விளங்கிக் கொள்ளலாம். இந்தியாவின் தென் பகுதியில் அனைவருமே ஒரு காலத்தில் தமிழ் மொழியில் தான் பேசியுள்ளனர். அந்த தமிழ் மொழியில் இருந்து கிளைத்து எழுந்ததே தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு போன்றவையாகும்.

இதைத் தான் தமிழ்த்தாய் வாழ்த்தில் மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை அவர்களும் எழுதியுள்ளார்.  ‘நீராருங் கடலுடுத்த..’ படலில் வரும் ‘திராவிட நல் திருநாடும்’ என்ற வார்த்தை கவனத்திற்கு உரியது. மேலும், ‘சீரிளமையோடு இருக்கும் தமிழில் இருந்து தோன்றியவையே தெலுங்கும், மலையாளமும், கன்னடமும், துளுவும்’ என்ற பெருமையை அவர் குறிப்பிட்டு உள்ளார்.

333drivada-naadu000-Copy.jpg

ஆகவே, தமிழ் தான் ‘திராவிடம்’ என்ற பொருளில் முற்காலத்தில் சொல்லப்பட்டுள்ளது. மொழியியல் அறிஞர்கள் தமிழையும், தமிழில் இருந்து தோன்றிய மொழிகளையும் ‘திராவிட மொழிகள்’ அல்லது ‘தமிழியன்’ மொழிக் குடும்பத்தை சார்ந்தவை என்றே வகைப்படுத்துகின்றனர். முன்னை திராவிட மொழியும், மூலத் திராவிட மொழியும், தொன்மை திராவிட மொழியும் தமிழே என்பதால், பின்னைத் திராவிட மொழியும் தமிழே என நிலை பெற்றுவிட்டது. அந்த வகையில் திராவிட மொழியும் தமிழும் வேறு,வேறல்ல. திராவிடம் என்பது வெகுகாலமாக தமிழை மட்டுமே குறிப்பிட்டு வந்துள்ளதால், பிற்காலத்தில் தோன்றிய தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழி பேசுவோர் தங்களை  தனித்துக் காட்ட விரும்பியதால், ‘திராவிடர்’ என்ற சொல்லை தவிர்த்திருக்கலாம்.

தமிழின் மூலக் கூறுகளை ஆராய்ச்சி செய்த எல்லீஸ் பிரபுவும், ‘திராவிட மொழிகளின் ஒப்பிலணக்கணம்’ என்ற ஒப்பற்ற பெரு நூலை எழுதிய பேரறிஞர் கால்டுவெல்லும்  நமது மூலத்தை நமக்கே உணர்த்திய நன்றிக்குரிய பெருமக்கள் என்பதை நாம் மறக்கக் கூடாது. நமது அயோத்திதாச பண்டிதர் அவர்கள் ‘திராவிடன்’ என்ற பெயரில் பத்திரிகை நடத்திய காலத்தில் திராவிட கட்சிகள் தோன்றவில்லை.

இன்றைய அரசியல் சூழலில், திராவிடக் கட்சிகள் மீதான கடும் குற்றச்சாட்டுகளுக்கோ, அரசியல் ரீதியான விமர்சனங்களுக்கோ ஆதரவு நிலை எடுத்து எழுதப்பட்டதல்ல, இந்தக் கட்டுரை. ஆனால், திராவிட கட்சிகளின் மீதுள்ள ஒவ்வாமையை நிலை நாட்டுவதற்காக திராவிடத்தையும், தமிழையும்  ஒன்றுக்கொன்று முரணாக நிறுத்தி, நமது பகைவர்கள் நம்மை மோதவிட்டு ரத்தம் குடிக்க துடிக்கின்றனர்.

‘தமிழ்த் தேசியம்’ என்ற கருத்தாக்கமும்,  ‘திராவிட தேசியம்’ என்ற கருத்தாக்கமும் ஒன்றுக்கொன்று பகைமை பாராட்ட அவசியமில்லை’ என்பதை நாம் உணர்வோமாக!

சாவித்திரி கண்ணன்
 

https://aramonline.in/20073/tamizhil-dravidam-meaning/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.