Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
புச்சுவுக்கு ஒன்பது வயதாகும் போது, அவர் பந்து என்று நினைத்த ஒரு  பொருள், பயங்கரமான வெடிப்பை ஏற்படுத்தியது.

பட மூலாதாரம்,RONNY SEN/BBC

படக்குறிப்பு, புச்சுவுக்கு ஒன்பது வயதாகும் போது, அவர் பந்து என்று நினைத்த ஒரு பொருள், பயங்கரமான வெடிப்பை ஏற்படுத்தியது. கட்டுரை தகவல்
  • எழுதியவர், செளதிக் பிஸ்வாஸ்,  நுபுர் சோனர் மற்றும் தனுஸ்ரீ பாண்டே
  • பதவி, பிபிசி உலக சேவை

இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் கடந்த முப்பது ஆண்டுகளில் குறைந்தது 565 குழந்தைகள் நாட்டு வெடிகுண்டுகளால் காயமடைந்துள்ளனர், உடல் உறுப்புகளை இழந்துள்ளனர், பார்வை இழந்துள்ளனர் அல்லது கொல்லப்பட்டுள்ளனர் என்று பிபிசி உலக சேவை புலனாய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த கொடிய பொருட்கள் என்ன, அவை மேற்கு வங்கத்தில், அரசியல் வன்முறையுடன் எவ்வாறு இணைக்கப்பட்டுள்ளன? ஏன் பல வங்க குழந்தைகள் பாதிக்கப்படுகிறார்கள்?

1996-ஆம் ஆண்டு மே மாதம், பிரகாசமான கோடைகாலத்தின் ஒரு காலை வேளையில், மேற்கு வங்க மாநிலத்தின் தலைநகரான கொல்கத்தாவில் உள்ள ஒரு குடிசைப்பகுதியில் இருந்து ஆறு சிறுவர்கள், ஒரு குறுகிய சந்தில் கிரிக்கெட் விளையாடுவதற்காக சென்றனர்.

ஜோத்பூர் பூங்காவின் நடுத்தர வர்க்க சுற்றுப்புறத்தில் அமைந்துள்ள அவர்களது குடிசைப்பகுதி, சுறுசுறுப்புடன் இயங்கிக் கொண்டிருந்தது. பொதுத்தேர்தல் வாக்குப்பதிவு நாள் என்பதால் அன்று விடுமுறை.

ஒன்பது வயதான புச்சு சர்தார் என்ற சிறுவன், கிரிக்கெட் மட்டையை எடுத்துக்கொண்டு, தூங்கிக் கொண்டிருந்த தன் தந்தையைக் கடந்து அமைதியாகச் சென்றார். சிறிது நேரத்தில், பந்தைத் தாக்கும் கிரிக்கெட் மட்டையின் கூர்மையான சத்தம் குறுகிய சந்தின் வழியாக எதிரொலித்தது.

அவர்களின் தற்காலிக ஆடுகளத்தின் எல்லைகளுக்கு வெளியே அடிக்கப்பட்ட பந்தை, அருகிலுள்ள ஒரு சிறிய தோட்டத்தில் சிறுவர்கள் தேடினர். அங்கு, ஒரு கருப்பு பிளாஸ்டிக் பையில், ஆறு உருண்டையான பொருட்களை அவர்கள் கண்டனர்.

யாரோ விட்டுச்சென்ற கிரிக்கெட் பந்துகள் போல அவை காணப்பட்டன. கிரிக்கெட் பந்துகள் என்று நம்பி அவற்றை எடுத்துக்கொண்டு, சிறுவர்கள் மீண்டும் விளையாடத் திரும்பினர்.

பையில் இருந்த "பந்து" ஒன்று புச்சுவுக்கு வீசப்பட்டது. அவர் அதை தனது மட்டையால் அடித்தார்.

உடனே அங்கே பயங்கரமான வெடிப்பு நிகழ்ந்தது. சிறுவர்கள் பந்து என நினைத்த அந்த பொருள், உண்மையில் ஒரு வெடிகுண்டு.

புகை வெளியேறியதும், அக்கம் பக்கத்தினர் வெளியே விரைந்தபோது, புச்சு மற்றும் அவரது நண்பர்கள் ஐந்து பேர் தெருவில் விழுந்து கிடந்ததைக் கண்டனர். அவர்களின் தோல் கருப்பாகி, உடைகள் கருகி, உடல்கள் கிழிந்த நிலையில் இருந்தன. கொந்தளிப்புக்கு மத்தியில், பயங்கரமான அலறல் சத்தம் கேட்டது.

அத்தையால் வளர்க்கப்பட்ட, ஆதரவற்ற சிறுவரான ஏழு வயது ராஜு தாஸ் மற்றும் ஏழு வயதான கோபால் பிஸ்வாஸ் ஆகியோர் காயங்களால் இறந்தனர். மேலும் நான்கு சிறுவர்கள் காயமடைந்தனர்.

இந்த வெடிப்புச் சம்பவத்தால், புச்சு பலத்த தீக்காயங்களை அடைந்தார். அவரது மார்பு, முகம் மற்றும் வயிற்றில் ஏற்பட்ட கடுமையான காயங்களால் அவதிப்பட்டார்.

புச்சு ஒரு மாதத்திற்கும் மேல் மருத்துவமனையில் இருக்க வேண்டியிருந்தது. அவர் வீடு திரும்பியதும், அவரது குடும்பத்தினரால் மருத்துவ சிகிச்சைக்கு பணம் செலவழிக்க முடியவில்லை.

எனவே அவர் உடலில் சிக்கிக் கொண்டிருந்த சிறு உலோகத் துண்டுகளை அகற்ற சமையலறையில் பயன்படுத்தபடும் கருவிகளைப் பயன்படுத்த வேண்டியிருந்தது.

 

குண்டுகளால் கொல்லப்பட்ட அல்லது கடுமையாக காயமடைந்த பல குழந்தைகளில் புச்சுவும் அவரது நண்பர்களும் அடங்குவர். பல ஆண்டுகளாக மேற்கு வங்க மாநிலத்தில், அரசியலில் ஆதிக்கம் செய்ய வன்முறை போராட்டத்தின் ஒரு பகுதியாக, இந்த குண்டுகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

மேற்கு வங்க மாநிலத்தில், வெடிகுண்டு தாக்குதலில் பலியான குழந்தைகளின் எண்ணிக்கை குறித்து புள்ளிவிவரங்கள் எதுவும் இல்லை.

மேற்கு வங்கத்தின் இரண்டு முக்கிய செய்தித்தாள்களான ஆனந்தபஜார் பத்ரிகா மற்றும் பர்தாமன் பத்ரிகா ஆகியவற்றின் 1996 முதல் 2024 வரையிலான ஒவ்வொரு பதிப்பையும் மதிப்பாய்வு செய்து, குண்டுகளால் குழந்தைகள் காயமடைந்ததை அல்லது கொல்லப்பட்டதைக் கண்டறிய பிபிசி விரிவான புலனாய்வை நடத்தியது.

நவம்பர் 10 வரை, குறைந்தது 565 பாதிக்கப்பட்ட குழந்தைகளை கண்டறிந்துள்ளோம். 94 குழந்தைகள் இறந்துள்ளனர் மற்றும் 471 குழந்தைகள் காயமடைந்துள்ளனர். அதாவது சராசரியாக ஒவ்வொரு 18 நாட்களுக்கும் ஒரு குழந்தை வெடிகுண்டு வன்முறைக்கு பலியாகிறது.

வெடிகுண்டுகளால் குழந்தைகள் காயமடைந்த சம்பவங்களை பிபிசி கண்டறிந்துள்ளது. இதுகுறித்த செய்திகள் அந்த இரண்டு செய்தித்தாள்களிலும் இடம்பெறவில்லை. எனவே உயிரிழப்புகளின் உண்மையான எண்ணிக்கை அதிகமாகவும் இருக்கலாம்.

இந்த சம்பவங்களில் 60% க்கும் அதிகமானவை குழந்தைகள் வெளியில் விளையாடும் போது நடந்துள்ளன. பொதுவாக தேர்தல்களின் போது எதிரிகளை பயமுறுத்துவதற்காக பயன்படுத்தப்படும் குண்டுகள் தோட்டங்கள், தெருக்கள், பண்ணைகள், பள்ளிகளுக்கு அருகில் கூட மறைத்து வைக்கப்பட்டிருந்தன.

பிபிசியிடம் பேசிய பாதிக்கப்பட்ட பெரும்பாலோனோர் ஏழைகளாக , வீட்டு உதவியாளர்களாக, தற்காலிக வேலை செய்பவர்களாக அல்லது பண்ணையில் வேலை செய்பவர்களின் குழந்தைகளாக இருந்தனர்.

மேற்கு வங்கத்தில் வெடிகுண்டுகளின் வரலாறு

100 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட இந்தியாவின் நான்காவது பெரிய மாநிலமான மேற்கு வங்கம், அரசியல் வன்முறையில் நீண்ட காலமாக சிக்கியுள்ளது.

1947ல் இந்தியா சுதந்திரம் அடைந்ததில் இருந்து, மேற்கு வங்கத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் ஆட்சியில் இருந்துள்ளன. காங்கிரஸ் கட்சி இருபது ஆண்டுகள் ஆட்சி செய்தது. அதைத் தொடர்ந்து கம்யூனிஸ்ட் தலைமையிலான இடது முன்னணி முப்பது ஆண்டுகளாக ஆட்சி செய்தது. 2011 முதல் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியில் உள்ளது.

1960 களின் பிற்பகுதியில், நக்சலைட்டுகள் என்று அழைக்கப்படும் மாவோயிஸ்ட் கிளர்ச்சியாளர்களுக்கும் அரசாங்கப் படைகளுக்கும் இடையே கடுமையான ஆயுத மோதலை, மேற்கு வங்கம் சந்தித்தது.

பல ஆண்டுகளாக எந்த அரசாங்கம் ஆட்சியில் இருந்தாலும், குறிப்பாக தேர்தல் காலங்களில் எதிரிகளை அச்சுறுத்துவதற்கு , அரசியல் கட்சிகளால் குண்டுகள் முக்கிய கருவியாக பயன்படுத்தப்படுகின்றன.

"குண்டுகள் மோதல்களைத் தீர்ப்பதற்காக பயன்படுத்தப்படுகின்றன. மேற்கு வங்காளத்தில் நீண்ட காலமாக, 100 ஆண்டுகளுக்கும் மேலாக இதுபோன்று நடந்து வருகிறது" என்று மேற்கு வங்க காவல்துறையின் முன்னாள் இன்ஸ்பெக்டர் ஜெனரல் பங்கஜ் தத்தா எங்களிடம் கூறினார்.

வெடிகுண்டுகள்

பட மூலாதாரம்,RONNY SEN/ BBC

படக்குறிப்பு, மேற்கு வங்காளத்தில் உள்ள வெடிகுண்டுகள் தற்போது சணல் கயிறுகளால் கட்டப்பட்டு, ஆணிகளைப் போன்ற சிறு உலோகத் துண்டுகள் மற்றும் கண்ணாடிகளால் அடைக்கப்பட்டுள்ளன.

1900 களின் முற்பகுதியில் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான கிளர்ச்சியில் இருந்து , வங்காளத்தில் வெடிகுண்டு தயாரிப்பு முறை அதன் வேர்களைக் கொண்டுள்ளது.

வெடிகுண்டுகள் பயன்படுத்தப்பட்ட ஆரம்ப காலத்தில், அது தொடர்பான விபத்துகள் பொதுவானவை: கிளர்ச்சியாளர் ஒருவர் தனது கையை இழந்தார், மற்றொருவர் வெடிகுண்டு சோதனையில் இறந்தார்.

அதன் பிறகு ஒரு கிளர்ச்சியாளர் பிரான்சில் இருந்து வெடிகுண்டு தயாரிக்கும் திறமையுடன் திரும்பினார்.

அவரது புத்தக குண்டில், வெடிமருந்துகள் மறைத்து வைக்கப்பட்ட கேட்பரி கோகோ டின் இருக்கும். அவரது இலக்கான பிரிட்டிஷ் மாஜிஸ்திரேட் அதைத் திறந்திருந்தால், அவர் கொல்லப்பட்டிருப்பார்.

1907-ஆம் ஆண்டு மிட்னாபூர் மாவட்டத்தில் முதல் வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்தது. கிளர்ச்சியாளர்கள் ரயில் தண்டவாளத்தில் வெடிகுண்டு வைத்ததால், ஒரு மூத்த பிரிட்டிஷ் அதிகாரியை ஏற்றிச் சென்ற ரயில் தடம் புரண்டது.

இச்சம்பவம் நடந்து சில மாதங்களுக்குப் பிறகு, முசாஃபர்பூரில் ஒரு மாஜிஸ்திரேட்டைக் கொல்ல குதிரை வண்டி மீது வீசப்பட்ட வெடிகுண்டு இரண்டு ஆங்கிலேயப் பெண்களின் உயிரைப் பறித்தது.

"ஊரை அதிர்ச்சிக்குள்ளாக்கிய மிகப்பெரிய வெடிப்பு" என்று ஒரு செய்தித்தாள் இந்தச் சம்பவத்தை விவரித்தது.

இந்த நிகழ்வு, குதிராம் போஸ் என்ற இளம் வயது கிளர்ச்சியாளரை ஒரு தியாகியாகவும், பல குழுக்களின் இந்திய புரட்சியில் முதல் ''சுதந்திரப் போராளியாகவும்'' மாற்றியது.

1908-ஆம் ஆண்டு தேசியவாதத் தலைவரான பாலகங்காதர திலகர், வெடிகுண்டுகள் வெறும் ஆயுதங்கள் அல்ல என்றும், வங்காளத்தில் இருந்து இந்தியாவின் மற்ற பகுதிகளுக்கும் பரவும் ஒரு புதிய வகை "மாயக் கதை" அல்லது "மாந்திரீகத்தின்" ஒரு வடிவம் என்றும் எழுதினார்.

இன்று மேற்கு வங்கத்தில் பெட்டோ என்று அழைக்கப்படும் இந்த குண்டுகள் சணல் கயிறுகளால் சுற்றப்பட்டு, ஆணிகளைப் போன்ற சிறு உலோகத் துண்டுகள் மற்றும் கண்ணாடிகளால் அடைக்கப்பட்டுள்ளன.

இந்த குண்டுகளை எஃகு கொள்கலன்கள் அல்லது கண்ணாடி பாட்டில்களிலும் அடைத்து வைக்கலாம். போட்டி மிகுந்த அரசியல் கட்சிகளுக்கு இடையிலான வன்முறை மோதல்களின் போது பிரதானமாக இவை பயன்படுத்தப்படுகின்றன.

குறிப்பாக கிராமப்புறங்களில், அரசியல்வாதிகள் எதிரிகளை மிரட்டவும், வாக்களிக்கும் நிலையங்களை சீர்குலைக்கவும் அல்லது எதிரிகளுக்கு எதிராக பதிலடி கொடுக்கவும் இந்த வெடிகுண்டுகளைப் பயன்படுத்துகின்றனர்.

அவர்கள் பெரும்பாலும் வாக்குச்சாவடிகளை சேதப்படுத்தவோ அல்லது அந்தப் பகுதிகளின் மீது கட்டுப்பாட்டை உறுதிப்படுத்தவோ இக்குண்டுகளைப் பயன்படுத்துகிறார்கள்.

பௌலமி ஹால்டர் பூக்களை பறித்துக்கொண்டிருந்தபோது பந்து என்று நம்பிய ஒரு பொருளைக் கண்டார்.

பட மூலாதாரம்,RONNY SEN/ BBC

படக்குறிப்பு, பௌலமி ஹால்டர் பூக்களை பறித்துக்கொண்டிருந்தபோது பந்து என்று நம்பிய ஒரு பொருளைக் கண்டார்.

பௌலமி ஹல்டர் போன்ற குழந்தைகள் இத்தகைய வன்முறைகளின் சுமைகளை சுமக்கிறார்கள்.

2018-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில், ஏழு வயதான பௌலமி ஹல்டர், வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் குளங்கள், நெல் வயல்கள் மற்றும் தென்னை மரங்கள் நிறைந்த கோபால்பூர் கிராமத்தில் காலை பிரார்த்தனைக்காக பூக்களைப் பறித்துக் கொண்டிருந்தார். கிராம சபை தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதமே இருந்தது.

பக்கத்து வீட்டுக்காரரின் தண்ணீர் பம்ப் அருகே ஒரு பந்து கிடப்பதை பௌலமி பார்த்தார்.

"நான் அதை எடுத்து வீட்டிற்கு கொண்டு வந்தேன்," என்று அவர் நினைவு கூர்ந்தார்.

பௌலமி உள்ளே நுழைந்ததும், டீ குடித்துக் கொண்டிருந்த அவரது தாத்தா, பௌலமியின் கையில் இருந்த பொருளைப் பார்த்து உறைந்து போனார்.

" 'இது பந்து அல்ல - வெடிகுண்டு! தூக்கி எறி!' என்று அவர் சொன்னார். நான் அதைச் செய்யும் முன்பே, அது என் கையில் வெடித்தது."

அந்த குண்டுவெடிப்பு கிராமத்தின் அமைதியைக் குலைத்தது. பௌலமியின் கண்கள், முகம் மற்றும் கைகளில் அடிபட்டது, அவரைச் சுற்றி குழப்பம் நிலவியதால் பௌலமி மயக்கமடைந்தார் .

''என்னை நோக்கி மக்கள் ஓடி வருவது எனக்கு நினைவில் உள்ளது. ஆனால், என்னால் மிகவும் குறைவாகவே பார்க்க முடிந்தது. எனக்கு எல்லா இடங்களிலும் அடிப்பட்டது."

கிராம மக்கள் விரைவாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அவரது காயங்கள் கடுமையாக இருந்தன. அவரது இடது கையை இழந்து கிட்டத்தட்ட ஒரு மாதம் மருத்துவமனையில் இருக்க வேண்டியிருந்தது.

ஒரு சாதாரண காலைப் பழக்கம் கெட்ட கனவாக மாறி, ஒரே ஒரு நொடியில் பௌலமியின் வாழ்க்கையை மாற்றிவிட்டது.

ஏப்ரல் 2020 இல் சபீனா காதுன் கையில் ஒரு  வெடிகுண்டு வெடித்தபோது அவருக்கு 10 வயதுதான்.

பட மூலாதாரம்,RONNY SEN/ BBC

படக்குறிப்பு, ஏப்ரல் 2020 இல் சபீனா காதுன் கையில் ஒரு வெடிகுண்டு வெடித்தபோது அவருக்கு 10 வயதுதான்.

இது போன்ற சம்பவங்கள் பௌலமிக்கு மட்டும் நடக்கவில்லை.

ஏப்ரல் 2020 இல் சபீனாவின் கையில் ஒரு வெடிகுண்டு வெடித்தபோது அவருக்கு 10 வயதுதான். இந்த சோகமான சம்பவம் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் நெல் மற்றும் சணல் வயல்களால் சூழப்பட்ட கிராமமான ஜித்பூரில் நடந்தது.

அவர் ஆட்டை மேய்ச்சலுக்கு வெளியே அழைத்துச் சென்ற போது, புல்வெளியில் வெடிகுண்டு கிடந்ததை தற்செயலாக கவனித்தார். ஆர்வத்தால், சபீனா அதை எடுத்து விளையாட ஆரம்பித்தார்.

சிறிது நேரத்தில் அது சபீனாவின் கைகளில் வெடித்தது.

"வெடிப்புச் சத்தம் கேட்டவுடனே நான் நினைத்தேன், இந்த முறை யார் பாதிக்கப்படப் போகிறார் ? சபீனா மாற்றுத்திறனாளியாகப் போகிறாரா?," என்று தான் நினைத்ததாக அவரது தாயார் அமீனா பீபி கூறுகிறார், அவரது குரல் வேதனையுடன் கனத்தது.

"நான் வெளியில் அடியெடுத்து வைத்த போது, சபீனாவைக் கைகளில் ஏந்தியவர்களைக் கண்டேன். சபீனாவின் கையிலிருந்து சதை தெரிந்தது."

சபீனாவின் கையை துண்டிக்க வேண்டிய நிலைக்கு மருத்துவர்கள் தள்ளப்பட்டனர்.

வீடு திரும்பியதில் இருந்து, சபீனா தனது வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்ப சவால்களை எதிர்கொண்டார். அவருடைய பெற்றோர் சபீனாவின் நிச்சயமற்ற எதிர்காலத்தை நினைத்து விரக்தியில் மூழ்கினர். இந்தியாவில் குறைபாடுகள் உள்ள பெண்கள் பெரும்பாலும் சமூக புறக்கணிப்பை எதிர்கொள்ள நேரிடுகிறது. அந்த குறைபாடு அவர்களது திருமணம் மற்றும் வேலை வாய்ப்புகளை பாதிக்கும்.

"என் கைகள் திரும்ப கிடைக்காது என என் மகள் அழுதுகொண்டே இருந்தாள்" என்கிறார் அமீனா.

"உன் கை மீண்டும் வளரும், உன் விரல்கள் மீண்டும் வளரும்" என்று நான் அவருக்கு ஆறுதல் கூறிக்கொண்டே இருந்தேன்."

சபீனா இப்போது கையின்றி வாழ்வதில் அன்றாட சவால்களை எதிர்கொள்கிறார். "நான் தண்ணீர் குடிக்கவும், சாப்பிடவும், குளிக்கவும், ஆடை அணியவும், கழிப்பறைக்குச் செல்லவும் சிரமப்படுகிறேன்."

குண்டுவெடிப்பில் இருந்து உயிர் பிழைத்த போதிலும், உடல் உறுப்பு இழப்பால் இத்தகைய குழந்தைகளின் வாழ்க்கை நிரந்தரமாக மாறிவிட்டது

தற்போது 13 வயதாகும் பௌலமி செயற்கைக் கையைப் பெற்றுள்ளார். ஆனால் அதைப் பயன்படுத்த முடியவில்லை. செயற்கைக் கை, மிகவும் கனமாக இருந்ததாலும், பௌலமி விரைவாக வளர்ந்துவிட்டதாலும் அவரால் அதை பயன்படுத்த முடியவில்லை. தற்போது 14 வயதாகும் சபீனா, கண் பார்வை குறைபாட்டுடன் போராடுகிறார்.

அவரது கண்களில் இருந்து வெடிகுண்டு துண்டை அகற்ற மற்றொரு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று அவரது குடும்பத்தினர் கூறுகிறார்கள். ஆனால் அதற்கான பணம் அவர்களிடம் இல்லை

இப்போது புச்சுவுக்கு 37 வயதாகிறது. இந்தச் சம்பவத்தால் பயந்த புச்சுவின் பெற்றோர், அவரைப் பள்ளியில் இருந்து நீக்க முடிவு செய்தனர்.

புச்சு பல ஆண்டுகளாக வெளியே செல்ல மறுத்து, சிறிய சத்தம் கேட்டால் கூட படுக்கைக்கு அடியில் ஒளிந்து கொண்டார்.

அதன்பிறகு அவர் மீண்டும் கிரிக்கெட் மட்டையை எடுக்கவில்லை. அவரது குழந்தைப் பருவம் களவாடப்பட்டுவிட்டது. அவ்வப்போது கிடைக்கும் கட்டுமான வேலைகளில் ஈடுபட்டு வாழ்க்கையை நடத்துகிறார். அவரது கடந்த காலத்தின் வடுக்களை சுமந்து வாழ்கிறார்.

ஆனால் , இன்னும் எல்லா நம்பிக்கையும் இழக்கப்படவில்லை. .

பௌலமி, சபீனா இருவரும் ஒரு கையால் சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொண்டு பள்ளிக்குச் சென்று வருகின்றனர். இருவருக்கும் ஆசிரியர்களாகும் கனவு உள்ளது.

புச்சு, ஐந்து வயதாகும் தனது மகன் ருத்ராவின் எதிர்காலம் பிரகாசமாக இருக்க வேண்டும் என விரும்புகிறார். ஒரு காவல்துறை அதிகாரியாக சீருடை அணியும் வகையில் அவரது மகனின் எதிர்காலம் சிறப்பாக இருக்கவேண்டும் என புச்சு எதிர்பார்க்கிறார்.

சபீனாவும் பௌலமியைப் போலவே ஒரு கையால் பைக் ஓட்டக் கற்றுக் கொண்டு ஆசிரியையாக வேண்டும் என்று கனவு காண்கிறார்.

பட மூலாதாரம்,RONNY SEN/ BBC

படக்குறிப்பு, சபீனாவும் பௌலமியைப் போலவே ஒரு கையால் பைக் ஓட்டக் கற்றுக் கொண்டு ஆசிரியையாக வேண்டும் என்று கனவு காண்கிறார்.

கொடூரமான பல சம்பவங்கள் நடந்தபோதிலும், மேற்கு வங்கத்தில் வெடிகுண்டு வன்முறை முடிவுக்கு வருவதற்கான எந்த அறிகுறியும் இல்லை.

அரசியல் லாபத்திற்காக வெடிகுண்டுகளை பயன்படுத்துவதை எந்த அரசியல் கட்சிகளும் ஒப்புக்கொள்ளவில்லை.

மேற்கு வங்கத்தில் உள்ள நான்கு முக்கிய அரசியல் கட்சிகள் நேரடியாகவோ அல்லது இடைத்தரகர்கள் மூலமாகவோ வெடிகுண்டுகளை தயாரிப்பதில் அல்லது பயன்படுத்துவதில் ஈடுபட்டுள்ளதா என்று பிபிசி கேட்டதற்கு, ஆளும் திரிணாமுல் காங்கிரஸும் (டிஎம்சி) எதிர்க்கட்சியான பாரதிய ஜனதாவும் (பிஜேபி) பதிலளிக்கவில்லை.

தாங்கள் இதில் ஈடுபடுவதில்லை என கூறும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), ''சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்த உறுதிபூண்டுள்ளோம். மனித உரிமைகள் மற்றும் உயிர்களைப் பாதுகாக்கும் விஷயத்தில், குழந்தைகள் மீது மிகவும் அக்கறை கொண்டுள்ளோம்'' என தெரிவித்துள்ளது

இந்திய தேசிய காங்கிரஸும் (INC) தேர்தல் ஆதாயத்திற்காக குண்டுகளைப் பயன்படுத்துவதில்லை என்று தெரிவித்தது. மேலும் "அரசியல் அல்லது தனிப்பட்ட ஆதாயத்திற்காக எந்த வன்முறையிலும் ஈடுபடவில்லை" என்றும் அக்கட்சி கூறியது.

எந்தவொரு அரசியல் கட்சியும் இச்சம்பவங்களுக்கான பொறுப்பை ஏற்காது என்றாலும், இந்த படுகொலைச் சம்பவங்கள் மேற்கு வங்க அரசியல் வன்முறை கலாசாரத்தில் வேரூன்றியுள்ளது என்பதில் சந்தேகமில்லை என பிபிசியிடம் பேசிய நிபுணர்கள் கூறினர்.

''எல்லா முக்கியத் தேர்தலின் போதும் இங்கு வெடிகுண்டுகள் அதிக அளவில் பயன்படுத்தப்படுவதை நீங்கள் காண்பீர்கள்" என்று பங்கஜ் தத்தா கூறினார். "குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். இது சமூகத்தின் அக்கறையின்மை" என்று கூறினார் நவம்பர் மாதம் காலமான தத்தா.

"குண்டுகளை வைத்தவர்கள் இன்னும் சுதந்திரமாக உள்ளனர். குண்டுகளை யாரும் அலட்சியமாக கைவிடக்கூடாது. இனி எந்த குழந்தைக்கும் இதுபோல் தீங்கு நடக்கக்கூடாது." என்று பௌலமி மேலும் கூறுகிறார்.

'என் மகனுக்கு என்ன செய்தார்கள் என்று பாருங்கள்'

ஹூக்ளி மாவட்டத்தில் ஒரு மே மாதம் காலை, ஒரு குளத்தின் அருகே விளையாடிக் கொண்டிருந்த மூன்று சிறுவர்கள், பதுக்கி வைத்திருந்த வெடிகுண்டுகளை எதிர்கொண்டனர்.

இந்த வெடிப்பில் ஒன்பது வயதான ராஜ் பிஸ்வாஸ், கொல்லப்பட்டார் மற்றும் அவரது நண்பர் ஒரு கையை இழந்து, மாற்றுத்திறனாளியானார். மற்றொரு சிறுவன் கால் எலும்பு முறிவுகளுடன் உயிர் தப்பினார் .

"எனது மகனை என்ன செய்துவிட்டார்கள் பாருங்கள்" என்று ராஜின் தந்தை தனது இறந்த குழந்தையின் நெற்றியை வருடியபடி அழுதார்.

ராஜின் உடல் புதைகுழியில் இறக்கப்பட்டபோது, அருகிலுள்ள தேர்தல் பேரணியில் இருந்து அரசியல் கோஷங்கள் காற்றில் ஒலித்தன: "வங்காளம் வாழ்க!" என்றும் "வாழ்க பெங்கால்!" என்றும் கூட்டத்தினர் கோஷமிட்டனர்.

அது தேர்தல் நேரம். மீண்டும், குழந்தைகள் அதற்கான விலையைக் கொடுத்துள்ளனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.