Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
தொல். திருமாவளவன்
படக்குறிப்பு, ''தி.மு.கவின் அழுத்தத்தால்தான் நான் புத்தக வெளியீட்டு விழாவிற்கு போகவில்லை என்ற கருத்து ஏற்புடையதல்ல.'' கட்டுரை தகவல்
  • எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
  • பதவி, பிபிசி தமிழ்

சில வாரங்களுக்கு முன்பாக நடந்த, 'எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்' புத்தகத்தின் வெளியீட்டு விழாவில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயுடன் கலந்துகொள்வதாக இருந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் அதில் கலந்துகொள்ளாதது பரபரப்பை ஏற்படுத்தியது.

அந்த விழாவில் விஜயும் அப்போது வி.சி.கவில் இருந்த ஆதவ் அர்ஜுனாவும் பேசிய பல விஷயங்களும் அரசியல் களத்தை பரபரக்க வைத்தன.

ஆனால், தொல். திருமாவளவன் பிபிசியுடனான நேர்காணலில் இது தொடர்பான கேள்விகளை அமைதியாகவே எதிர்கொண்டார்.

பிபிசிக்கு அளித்த பேட்டியில் இந்த விவகாரம் மட்டுமல்லாமல், அதிகாரத்தில் பங்கு, விஜயின் அரசியல், தி.மு.க. கூட்டணியின் எதிர்காலம் ஆகியவை குறித்தும் திருமாவளவன் விரிவாகப்  பேசினார்.

 

கேள்வி: புத்தக வெளியீட்டு விழா தொடர்பான நிகழ்வுகள் தி.மு.க. கூட்டணிக்குள்ளேயே சலசலப்பை ஏற்படுத்தின. அதற்கு ஆதவ் அர்ஜுனாவின் பேச்சு மட்டும்தான் காரணமா?

பதில்: ''கூட்டணிக்குள் இதனால் எந்த சலசலப்பும் இல்லை. கூட்டணிக் கட்சியைச் சார்ந்த யாரும் சலசலப்பில் ஈடுபடவில்லை. சமூக ஊடகங்களில் வாய்க்கு வந்தபடி பேசுகிறார்கள். தி.மு.க. தரப்பில் இருந்து யாரும், அந்த விழாவுக்குப் போகக்கூடாது என்று சொல்லவில்லை. அது நான் எடுத்த முடிவு.

'இது ஒரு அரசியல் நிகழ்ச்சி அல்ல, அம்பேத்கரின் புத்தக வெளியீட்டு விழா, விஜயும் அம்பேத்கரைப் பற்றிப் பேசுவார், நானும் அரசியல் பற்றிப் பேச மாட்டேன், அம்பேத்கரைப் பற்றி பேசுவேன்' என்று ஒரு மூத்த அமைச்சரிடம் சொல்லும்போது, 'அது உங்கள் விருப்பம், நாங்கள் தலையிட முடியாது' என்றுதான் சொன்னார்.

ஆனால், விக்கிரவாண்டி மாநாட்டில் எங்கள் கூட்டணிக்குத் தலைமை தாங்கும் ஆளுங்கட்சியை தனது முதன்மை எதிரியாக விஜய் பிரகடனப்படுத்தியிருக்கும்போது அவரோடு மேடையில் நிற்பது இப்போதைக்கு சரியாக இருக்காது என நினைத்தேன். ஏனென்றால், நானும் சேர்ந்து உருவாக்கிய கூட்டணி அது. தி.மு.கவின் அழுத்தத்தால்தான் நான் போகவில்லை என்ற கருத்து ஏற்புடையதல்ல. அது நான் எடுத்த முடிவு.''

தொல். திருமாவளவன்

'ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு எனக் கேட்பது குற்றமல்ல'

கேள்வி: 'ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு' என்ற முழக்கத்தை நீங்கள் நீண்ட காலமாக முன்வைத்து வருகிறீர்கள். அதே விஷயத்தைத்தான் ஆதவ் அர்ஜுனா திரும்பவும் பேசுகிறார். அதில் ஏன் பிரச்னை வருகிறது?

பதில்: ''திரும்பவும் அதை அவர் சொன்னதில் பிரச்னையில்லை. அப்படி ஒரு முழக்கத்தை வைத்தால் அது தி.மு.கவுக்கு எதிரான முழக்கம் என தி.மு.க. சொன்னதா? அல்லது நாங்கள்தான் சொன்னோமா? 'தி.மு.கவிடம் கோரிக்கையை வைக்கிறோம், தி.மு.கவுக்கு நெருக்கடி கொடுக்கிறோம்' என நாங்கள் யாரும் சொல்லவில்லை. தி.மு.கவும் வி.சி.க. 'எங்களுக்கு எதிராக பேசுகிறார்கள், எங்களிடம் பங்கு கேட்கிறார்கள்' என்று சொல்லவில்லை. இதையெல்லாம் ஊடகங்கள்தான் ஊதிப் பெருக்கினார்கள்.

'இவர்கள் தி.மு.கவுக்கு மறைமுகமாக அழுத்தம் தருகிறார்கள். ஆட்சியில் பங்கு கேட்கிறார்கள். அதைக் கொடுக்கவில்லையென்றால் வெளியேறுவார்கள் போலிருக்கிறது' என இவர்களாக தங்கள் யூகத்தைப் பரப்ப ஆரம்பித்தார்கள். சமூக ஊடகங்களில் பேசக்கூடிய தனி நபர்களும் இதையெல்லாம் ஊதிப் பெருக்க ஆரம்பித்தார்கள்.

விஜயும் நானும் ஒரே மேடையில் ஏறப்போகிறோம் என புக்கத்தை வெளியிட்ட நிறுவனமோ, நானோ, ஆதவ் அர்ஜுனாவோ அதிகாரபூர்வமாக அறிவிக்காத நிலையில், உறுதிப்படுத்தப்படாத அந்தச் செய்தியை ஒரு தமிழ் நாளிதழ் வெளியிட்டது. அப்படியாகத்தான் அந்த விஷயத்தை அரசியலாக்கினார்கள். அவர்கள் இப்படி அரசியல்படுத்தியதால், மேடையில் நின்றாலும் அரசியல்படுத்துவார்கள், வேண்டாம் என முடிவெடுத்தேன்.

அதேபோல, 'ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு' எனக் கேட்பது குற்றமல்ல. அப்படியே தி.மு.கவிடம் கேட்டாலும் குற்றமல்ல. முடிந்தால் எங்களுக்குக் கூடுதல் இடங்களைக் கொடுங்கள், அமைச்சரவையில் இடம் கொடுங்கள் என தோழமை அடிப்படையில் கேட்கக்கூடாதா? அதில் எந்தத் தவறும் கிடையாது.

ஆனால், குறுக்கே நிற்பவர்கள், 'பாருங்கள் விடுதலைச் சிறுத்தைகள் நெருக்கடி கொடுக்கிறார்கள்' என, அது ஏதோ தவறு என்பது போன்ற தோற்றத்தை உருவாக்குகிறார்கள். தி.மு.க. அதற்கு எந்த எதிர்வினையும் ஆற்றவில்லை.

மத்தியில் கூட்டணி ஆட்சி இருப்பதைப்போல, மாநிலத்திலும் கூட்டணி ஆட்சி வேண்டும் என 2016 காலகட்டத்திலேயே, மக்கள் நலக் கூட்டணி உருவாகும் முன்பே ஒரு கருத்தரங்கை நடத்தியிருக்கிறோம்.''

ஆதவ் அர்ஜுன்
படக்குறிப்பு, ஆதவ் அர்ஜுனா

கேள்வி: ஆகவே 'ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு' என்ற முழக்கத்தை வெறும் தத்துவார்த்த அடிப்படையில்தான் முன்வைக்கிறீர்களா?

பதில்: ''சாதி ஒழிய வேண்டும் எனச் சொல்கிறோம். சாதியை இன்று உடனே ஒழித்துவிட முடியுமா? சாதி ஒழிப்பு என்பது எங்கள் இலக்கு. அதை நோக்கிய ஒரு பிரசாரத்தை மேற்கொள்கிறோம். எல்லோரும் அதனைப் புரிந்துகொள்ள வேண்டுமென நினைக்கிறோம். அதைப்போலத்தான் இதுவும்.

'ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு' என்றால் விளிம்பு நிலை மக்கள் அதிகாரத்தில் பங்குபெற வேண்டுமென அர்த்தம், ஏழை, எளிய மக்கள் பங்கு பெற வேண்டும், அவர்கள் அதிகாரத்தைப் பெற வேண்டுமென அர்த்தம்.

அவர்கள் ஒவ்வொரு முறை வாக்களித்த பிறகும், அதே மாதிரியான வாழ்க்கை முறையில் இருக்கக்கூடாது. முன்னேற்றத்தை அவர்கள் உணர வேண்டும். இதனை ஒரு கோரிக்கையாக, கோட்பாடாக முன்வைக்கிறோம். 'ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு' என்றால் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு அதிகாரத்தைக் கொடுங்கள் என்ற அர்த்தமில்லை.''

பொதுத் தொகுதிகளை ஒதுக்க பெரிய கட்சிகள் முன்வருவதில்லையா?

கேள்வி: தமிழகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிகளுக்கு பொதுத் தொகுதிகளை ஒதுக்க பெரிய கட்சிகள் முன்வருவதில்லை என்ற குற்றச்சாட்டு இருக்கிறதே?

பதில்: ''அது மேம்போக்காக சொல்லப்படும் குற்றச்சாட்டு. 2001ல் நாங்கள் பொதுத் தொகுதி கேட்டோம். கிடைக்கவில்லை. 2006ல் நாங்கள் பொதுத் தொகுதியை வாங்கி முகையூரில் சிந்தனை செல்வனை நிறுத்தினோம். 2011ல் பொதுத் தொகுதிகளை வாங்கினோம்.

உளுந்தூர்பேட்டை பொதுத் தொகுதியில் யூசுப்பும் சோழிங்கநல்லூர் பொதுத் தொகுதியில் எஸ்.எஸ். பாலாஜியும் நிறுத்தப்பட்டனர். 2021ல் இரு பொதுத் தொகுதிகளில் போட்டியிட்டு வென்றிருக்கிறோம். 2001ல் மட்டும்தான் கிடைக்கவில்லை. 2006ல் இருந்து தொடர்ந்து பொதுத் தொகுதிகளில் போட்டியிட்டுக்கொண்டுதானே இருக்கிறோம். ஆகவே, பொதுத் தொகுதியே தர மறுக்கிறார்கள் என்பது மேம்போக்காக சொல்லப்படும் கருத்து.''

மு.க.ஸ்டாலின், தொல் திருமாவளவன்
படக்குறிப்பு, ''தொடர வேண்டும் என்பதுதான் விருப்பம். இது எல்லோரும் சேர்ந்து உருவாக்கிய கூட்டணி'' என்கிறார் திருமாவளவன்

கேள்வி: பொதுத் தொகுதிகளைப் பெற்றாலும் அதில் தலித் அல்லாதவர்களை நிறுத்தி வெற்றிபெற முடியுமா?

பதில்: ''பொதுத் தொகுதியில் தலித் அல்லாதவரை நிறுத்தி வெற்றிபெற வைக்க வேண்டும் என்பது நமது ஆசை. ஆனால், யாதார்த்தத்தில் சமூக இருப்பு என்னவாக இருக்கிறது என்று பார்க்க வேண்டியிருக்கிறது. ஆட்சிக்கோ, அதிகாரத்திற்கோ வர மாட்டோம் என்றால் யாரை வேண்டுமானால் எங்கே வேண்டுமானாலும் நிறுத்தலாம். ஆனால், ஒரு கூட்டணிக்குள் சில இடங்களைப் பெற்று, ஆட்சியை, அதிகாரத்தைக் கைப்பற்றியாக வேண்டும் எனும் போது ஒரு தொகுதியைக்கூட எதிரிக்கு விட்டுவிடக்கூடாது என்பதுதான் முக்கியமானது.

'பாருங்கள், ஒரு பொதுத் தொகுதியில் ஒரு தலித்தை வேட்பாளராக நிறுத்திப் போட்டியிட்டோம்' என்று மட்டும் சொல்லிக்கொண்டிருக்க முடியுமா? அப்படிச் செய்தால் அந்தத் தொகுதியை எதிரிக்கு விட்டுக்கொடுத்ததைப்போல ஆகிவிடும்.

ஒரு வேட்பாளரை நிறுத்தும்போது கட்டாயமாக வெற்றி பெறும் சூழலை உருவாக்க வேண்டும். அதற்கான எல்லா வாய்ப்புகளும் அங்கே இருக்க வேண்டும். தோல்விதான் கிடைக்கும் எனக் கருதி முடிவெடுத்தால் அது நல்ல அரசியல் அல்ல. வெற்றிபெற்றே ஆக வேண்டுமென்றால் அதற்கேற்றபடியான கணக்குகள்தான் தேவை.

சமூகத்தின் இருப்பின் அடிப்படையில் அரசியல் கட்சிகள் முடிவெடுக்கின்றன. அரசியல் கட்சிகளின் முடிவின் அடிப்படையில் சமூகத்தின் இருப்பு இல்லை. ஒரு தொகுதியில் வன்னியர்கள் அதிகமாக இருந்தாலோ, இஸ்லாமியர்கள் அதிகமாக இருந்தாலோ அங்கே வன்னியர் வேட்பாளரையோ, இஸ்லாமிய வேட்பாளரையோ நிறுத்த வேண்டியிருக்கிறது. பெரும்பான்மை மக்கள் சாதி சார்ந்து, மதம் சார்ந்து வாக்களிக்கும் பொது உளவியலையும் பெற்றிருக்கிறார்கள்.''

'தலித் கட்சி மட்டுமல்ல பிற கட்சிகளும்தான்'

கேள்வி: உத்தர பிரதேசத்தில் ஒரு ஒடுக்கப்பட்டவர் முதலமைச்சராக முடிகிறது, ஆனால், சமூக நீதி பேசும் தமிழகத்தில் துணை முதலமைச்சர் பதவி குறித்து பேசினாலே பிரச்னையாகிறது என்ற விமர்சனம் இருக்கிறது...

பதில்: ''துணை முதலமைச்சர் பதவி வேண்டுமென குறிப்பிடுவதை யார் பிரச்சனையாக்கியது? எல்லாமே ஊடகங்கள்தான். தி.மு.க. கூட்டணிக்கு எதிராக இருப்பவர்கள், அந்தக் கூட்டணியைச் சிதைக்க நினைப்பவர்கள்தான் இதைச் செய்கிறார்கள். தி.மு.க. அப்படி ஏதும் சொல்லவில்லையே.

துணை முதலமைச்சர் பதவியைக் கேட்க வி.சி.கவுக்கு என்ன தகுதியிருக்கிறது என யாரும் கேட்கவில்லையே.. துணை முதலமைச்சர் பதவி வேண்டுமென ஆதவ் அர்ஜுனா கேட்டது ஒரு பொதுவான கோரிக்கை. அவர் உள்நோக்கத்தோடு கேட்டதாக ஊடகங்கள் சொல்லின. ஆகவே அது ஒரு விவாதமாக மாறியது.

உ.பியில் நடந்ததைப்போல இங்கே நடக்கவில்லையே என்று கேட்டால், ஒவ்வொரு மாநில அரசியலும் ஒவ்வொரு மாதிரி இருக்கும். தமிழ்நாட்டில் தி.மு.க. - அ.தி.மு.க. என்ற இரு துருவ அரசியல்தான் பல ஆண்டுகளாக இருக்கிறது. ஏன் தலித் கட்சி வளரவில்லையெனக் கேட்கிறீர்கள்.

அதே காலகட்டத்தில் உருவான பா.ம.கவும் வளர முடியவில்லையே... ஏன், ம.தி.மு.க., தே.மு.தி.க. போன்ற எந்தக் கட்சியுமே ஒரு கட்டத்திற்கு மேல் வர முடியவில்லையே. 2001லிருந்து பா.ஜ.க. இங்கே அ.தி.மு.கவுக்கோ, தி.மு.கவுக்கோ மாற்றாக வர முயற்சிக்கிறது. அவர்களாலேயே வர முடியவில்லை. ஆகவே, இங்கிருக்கும் அரசியல் சூழல் முற்றிலும் மாறுபட்டது என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.''

உதயநிதி ஸ்டாலின்

பட மூலாதாரம்,X/ UDHAYSTALIN

படக்குறிப்பு, ''கூட்டணியில் இருந்துகொண்டு எதற்கு விமர்சிக்க வேண்டும்? சுட்டிக்காட்டத்தான் வேண்டும். எதிர்க்கட்சி செய்வதை கூட்டணிக் கட்சிகளும் செய்ய வேண்டும் என எதிர்பார்ப்பதே அறியாமை.''

விஜயின் அரசியல் வருகை எம்மாதிரி தாக்கத்தை ஏற்படுத்தும்?

கேள்வி: நிலைமை இப்படியிருக்கையில் விஜயின் அரசியல் வருகை எம்மாதிரி தாக்கத்தை ஏற்படுத்தும்? தமிழக அரசியலில் என்ன இடம் அவருக்கு இருக்கும்?

பதில்: ''விஜய் ஒரே மூச்சில் ஆட்சியைக் கைப்பற்றிவிடும் வாய்ப்பு இல்லை. ஆனால், ஊடகங்கள் அப்படி ஒரு தோற்றத்தைக் கொடுக்கின்றன. அவர் யதார்த்தத்தைப் புரிந்துகொண்டு அரசியல் செய்ய வேண்டும் என்பது எனது வேண்டுகோள்.

எம்.ஜி.ஆரை ஒரு உதாரணமாக காட்டுகிறார்கள். எம்.ஜி.ஆர். நீண்ட காலமாக தி.மு.கவிற்குள் பல்வேறு பொறுப்புகளில் இருந்தவர். அவர் தி.மு.கவைவிட்டு வெளியேறும்போது அரசியல் அனுபவம் கொண்டவர்கள் அவரோடு இருந்தார்கள். அதனால் ஒரு கட்டமைப்பை உருவாக்க முடிந்தது. அதனால் அவரால் ஆட்சியைக் கைப்பற்ற முடிந்தது.

விஜய் பல லட்சம் பேரை திரட்டி மாநாடு நடத்தினார் என்றால் அதை அரசியல் மாநாடு என்பதைவிட ரசிகர் மன்ற மாநாடு என்றுதான் சொல்ல வேண்டும். அவர் ஒரு மாஸ் ஹீரோ. அவருடைய ரசிகர்கள், தங்கள் திரையில் பார்த்த ஹீரோ நேரில் வருகிறார் என்பதால் பார்க்க வந்தார்கள். ஆகவே, அது ஒரு ரசிகர்கள் மாநாடுதான். அரசியல் ரீதியாக முறைப்படுத்தப்பட்ட பிறகு எவ்வளவு பேர் வருகிறார்கள் என்பதுதான் முக்கியம்.

எங்கள் கட்சி மாநாட்டிற்கு வருபவர்கள் என்னைப் பார்க்க வருவதில்லை. பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட சக்திகள்தான் அங்கே வருகிறார்கள். நான் பேசும் அரசியல் சரியானது என நம்புபவர்கள்தான் வருகிறார்கள்.

விஜய் எம்.ஜி.ஆரைப் போல வந்துவிடுவார் என உசுப்பிவிடுகிறார்கள். யதார்த்தம் அப்படியானதல்ல. அவர் கடின உழைப்பைச் செலுத்த வேண்டும். மக்களிடம் செல்ல வேண்டும்.''

விஜய்

பட மூலாதாரம்,X/ACTORVIJAY

படக்குறிப்பு, ''விஜய் பல லட்சம் பேரை திரட்டி மாநாடு நடத்தினார் என்றால் அதை அரசியல் மாநாடு என்பதைவிட ரசிகர் மன்ற மாநாடு என்றுதான் சொல்ல வேண்டும்''

கேள்வி: தி.மு.க. கூட்டணியில் இருக்கும் எந்தக் கட்சியும், ஆட்சியில் உள்ள தவறுகளை போதுமான அளவுக்கு விமர்சிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு இருக்கிறது.

பதில்: ''கூட்டணியில் இருந்துகொண்டு எதற்கு விமர்சிக்க வேண்டும்? சுட்டிக்காட்டத்தான் வேண்டும். எதிர்க்கட்சி செய்வதை கூட்டணிக் கட்சிகளும் செய்ய வேண்டும் என எதிர்பார்ப்பதே அறியாமை. கூட்டணிக் கட்சிகள் தோழமையோடு சுட்டிக்காட்டத்தான் முடியும். சட்டமன்றத்திலோ, நேரிலோ அதைச் செய்யலாம். அறவழிப் போராட்டங்களின் மூலம் செய்யலாம். அதையெல்லாம் நாங்கள் செய்கிறோம். அ.தி.மு.கவைப்போல பேசினால்தான் விமர்சிக்கிறோம் என அர்த்தமா?''

வேங்கைவயல் விவகாரம்

கேள்வி: குறிப்பாக, வேங்கைவயல் போன்ற விவகாரத்தில் நீங்கள் போதுமான எதிர்வினையாற்றவில்லை என்ற விமர்சனம் இருக்கிறது..

பதில்: ''அது அறியாமையின் உளறல். பிரச்னை நடந்த மூன்றாவது நாள் புதுக்கோட்டையில் பத்தாயிரம் பேரைத் திரட்டி போராட்டம் நடத்தினோம். அப்போது தி.மு.க. அரசு என்னை தவறாக எடுத்துக்கொள்ளும் என நினைத்தேனா? அதற்குப் பிறகு தமிழ்நாடு முழுவதும் 38 மாவட்டங்களில் இந்தப் பிரச்னை தொடர்பாக ஆர்ப்பாட்டம் நடத்தினோம். அதற்குப் பிறகு முதலமைச்சரைச் சந்தித்துப் பேசினோம். அதற்குப் பிறகுதான் வழக்கு சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றப்பட்டது.

ராமஜெயம் இறந்து இத்தனை ஆண்டுகளாகிவிட்டன. அவரது அண்ணன் தி.மு.க. அரசில் முக்கியமான அமைச்சர். இன்னும் குற்றவாளி கண்டுபிடிக்கப்படவில்லை. அரசு என்பது ஒரு மிகப் பெரிய அமைப்பு. அந்த அமைப்புக்குள் பல நடைமுறைகள் இருக்கும்.

குற்றம் செய்தவர்கள் கைது செய்யப்பட வேண்டும் என்பதுதான் எங்கள் நிலைப்பாடு. ஆனால், இந்தப் பிரச்னைக்காக தேர்தல் தொடர்பாக ஒரு பெரிய முடிவை நாங்கள் எடுக்க முடியுமா? அப்படிச் செய்ய முடியாது.''

கேள்வி: தமிழக சட்டமன்றம் செயல்படும் விதம் குறித்து கூட்டணியில் உள்ள தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் பல குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார், குறைவான நாட்களே அவை நடக்கிறது, போதுமான அளவுக்கு பேச அனுமதிப்பதில்லை என்றெல்லாம் சொல்லியிருக்கிறார்...

பதில்: ''எந்தப் பின்னணியில் அதைச் சொல்கிறார் எனத் தெரியவில்லை. எல்லாக் கூட்டத் தொடரிலும் அவர் பேசுகிறார். வி.சி.கவுக்கும் வாய்ப்புக் கிடைக்கிறது. இது போன்ற குற்றச்சாட்டுகளை, அ.தி.மு.க., பா.ஜ.க., சொல்லலாம். கூட்டணியில் இருக்கும் வேல்முருகன் சொல்கிறார் என்பது அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது. அவரிடம்தான் இதைப் பற்றிக் கேட்க வேண்டும்.''

கேள்வி: 2026லும் தி.மு.க. கூட்டணி இதேபோல தொடருமா?

பதில்: தொடர வேண்டும் என்பதுதான் விருப்பம். இது எல்லோரும் சேர்ந்து உருவாக்கிய கூட்டணி. இப்படி ஒன்றாக இணைந்தே தேர்தலை சந்திக்க வேண்டும் என விரும்புகிறோம். அதில் எந்த சந்தேகமும் கிடையாது.

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

  • கருத்துக்கள உறவுகள்

45 வயதைக் கடந்தவர்களுக்கு எல்லாம் விஜய் சின்னப் பெடியன், ஆனால் ரஜனி MGR தான் பெரிய ஆளுமை.இவர்கள் தாம் நம்புவது தான் உலகம் என்று நினைப்பவர்கள், இன்றைய நிலையில் இவர்களில் முக்கால்வாசி நடப்பு அரசியலையோ அல்லது அரசியல், சட்ட, பொருளாதார தீர்மானங்களையோ எடுக்கும் இடத்தில் இல்லை. புதிய ஒரு தலைமுறை வந்துவிட்டது என்பதை உணராமலேயே இருக்கிறார்கள். திருமாவும் விதி விலக்கு அல்ல 

 

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, பகிடி said:

45 வயதைக் கடந்தவர்களுக்கு எல்லாம் விஜய் சின்னப் பெடியன், ஆனால் ரஜனி MGR தான் பெரிய ஆளுமை.இவர்கள் தாம் நம்புவது தான் உலகம் என்று நினைப்பவர்கள்,

நமது ரசோதரன் அண்ணாவும் அந்த எம்ஜிஆரை மனிதர்களில் ஒரு மாணிக்கம் என்று ஆரம்பத்தில் நம்பியிருக்கின்றார். ஆனால் பின்பு மாணிக்கம் கிடையாது சும்மா கல்லு தான் என்பதை அறிந்து கொண்டார் 👍

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 25/12/2024 at 06:10, ஏராளன் said:

'தலித் கட்சி மட்டுமல்ல பிற கட்சிகளும்தான்'

பெரியார் மண்ணில் இன்னும் தலித் கட்சியா????
ஆச்சர்யம் அபூர்வம்....😎

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, விளங்க நினைப்பவன் said:

நமது ரசோதரன் அண்ணாவும் அந்த எம்ஜிஆரை மனிதர்களில் ஒரு மாணிக்கம் என்று ஆரம்பத்தில் நம்பியிருக்கின்றார். ஆனால் பின்பு மாணிக்கம் கிடையாது சும்மா கல்லு தான் என்பதை அறிந்து கொண்டார் 👍

நீங்கள் சும்மா படுத்திருந்த சிங்கத்தின் மூக்குக்குள் தும்பு விட்டிட்டீர்கள்................🤣.

'அரசகட்டளை' மட்டும் எத்தனை தடவைகள் பார்த்தேனோ........ ஏழோ எட்டோ வயதிலேயே யோகநாயகி, ரஞ்சனா என்று இரண்டு தியேட்டர்களுக்கும் தனியே போய் வர ஆரம்பித்துவிட்டேன்.

என்னை நம்பித்தான் எம்ஜிஆர் படங்களையே இறக்கினார்கள்............ இப்ப சிவாஜிலிங்கம் ஊரிலிருக்கும் எம்ஜிஆர் சிலைக்கு மாலை போடுகின்றார்............. ஆனால் அவரை நான் தியேட்டரில் பார்த்ததே இல்லை...... முறைப்படி, உரிமைப்படி நான் தான் எம்ஜிஆர் சிலைக்கு மாலை போட வேண்டிய ஆள்...............🤣. அவர் சிவாஜி ரசிகன் என்று நினைக்கின்றேன், நான் தான் அக்மார்க் எம்ஜிஆர் ரசிகன்...............

'இருந்ததையும் கெடுத்தார் இளையதம்பி மேத்திரியார்...............' என்று என்னூரில் சொல்வார்கள்.

பின்னர், வளர வளர, எம்ஜிஆரும் ஒரு இளையதம்பி மேத்திரியார் தான் என்ற புரிதல் வந்தது..............  

 

Edited by ரசோதரன்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.