Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத் தமிழர் விடயத்தில் தலையிட வேண்டிய கட்டாயம் தற்போது இந்தியாவுக்கு இல்லை

ந.லெப்ரின்ராஜ் 

varatharaja-perumal-300x267.jpg

ஈழத் தமிழர் விடயத்தில் இந்தியா தலையிட வேண்டிய கட்டாயம் தற்போது இந்தியாவுக்கு இல்லை என்பதைப் புரிந்து கொள்வது அவசியமாகும். இந்தியா இலங்கைத் தமிழர்கள் விடயத்தில் காட்டும் அக்கறை படிப்படியாக குறைவடைவதில் ஆச்சரியப்பட எதுவுமில்லை. தமிழ்  நாட்டில் கூட ஈழத் தமிழர்கள் தொடர்பான அக்கறை பூச்சியத்தை அண்மித்ததாகவே உள்ளது என தெரிவித்த இணைந்த வடக்கு – கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் வரதராஜ பெருமாள், இலங்கையின் அரச முடிவுகளிலும் நடைமுறைகளிலும் சிங்கள-  பௌத்த பேரினவாத சக்திகளின் ஆதிக்கம் இன்னமும் குறைவடையாத நிலையில், அவற்றை மீறி மக்கள் விடுதலை முன்னணியினர்  சிங்கள – பௌத்த பேரினவாத சக்திகளை புறக்கணித்து விட்டு புதிய அரசியல் அமைப்பை உருவாக்கி அதில் தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வை வழங்குவார்கள் என எதிர்பார்ப்பது நகைப்புக்கிடமானதாகும் எனவும் தெரிவித்தார்.

புதிய ஆட்சி ஏற்பட்டு 100 நாட்களை கடந்திருக்கும் நிலையில் புதிய ஆட்சியாளர்கள் முகம் கொடுக்கவிருக்கும் சவால்கள், தமிழ் மக்களுக்கு இந்த ஆட்சி எவ்வாறானதாக இருக்கும் மற்றும் பூகோள அரசியல் போக்கில் புதிய ஆட்சியாளர்களுக்கு காத்திருக்கும் சவால்கள் தொடர்பில் ஞாயிறு தினக்குரலுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவருடனான நேர்காணல் வருமாறு:

கேள்வி:இலங்கையில் புதிய அரசாங்கம் அமைக்கப்பட்டு 100 நாட்களை கடந்திருக்கிறது.பொருளாதார நெருக்கடி,அரசியல் ஸ்திரமின்மை,அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம் என பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்தியில் ‘புதியவர்கள்’ ஆட்சி கட்டிலில் அமர்த்தப்பட்டிருக்கிறார்கள். அந்த அடிப்படையில் இந்த ஆட்சியாளர்கள் மேற்படி சவால்களுக்கு முகம் கொடுத்து எவ்வாறு பயணிப்பார்கள் என எதிர்பார்க்கிறீர்கள்?

பலரும் கூறியவைதான். கீழ் மத்தியதர வர்க்கப் பின்னணி கொண்டவர்கள்.இன்றைய அரசியல் பொருளாதார கட்டமைப்பில் வாழும் பரந்துபட்ட பொதுமக்களின் கஷ்ட நஸ்டங்கள், துன்ப துயரங்களை அறிந்தவர்கள்.ஆட்சி அதிகார கதிரைகளுக்குப் புதியவர்கள். அதேவேளை, 1970ல் இருந்து 2010 வரை என நான்கு தசாப்தங்களாக – இடையில் ஓர் ஐந்து ஆண்டுகள் தவிர, சுமார் 35 ஆண்டுகள் சிங்கள பேரினவாத அரசியலின் பங்குதாரர்களாக இருந்தவர்கள்.

2015ல் அதிலிருந்து சற்று விலகிய தோற்றங்களுடன் தமது புதிய பயணத்தை ஆரம்பித்து 2019ல் இருந்து கடந்த ஆறு ஆண்டுகளாக தமது மக்கள் விடுதலை முன்னணி என்ற கட்சிக்கு மேலாக தேசிய மக்கள் சக்தி என்னும் வடிவில் செயற்பட்டு வந்துள்ளவர்கள். 2022ம் ஆண்டு எழுச்சி பெற்ற மக்களின் அறகலய இயக்கத்தினால் ஆட்சியாளர்களின் ஊழல் மோசடிகளுக்கு எதிராக, இனவாத அரசியலுக்கு எதிராக மற்றும் பாராளுமன்றத்தை நிரப்பியிருந்தவர்களின் போலித் தனங்களுக்கு எதிராக வெளிப்படுத்தப்பட்ட உணர்வுகளை சரியாக அடையாளம் கண்டு தமது அரசியலை மக்கள் விடுதலை முன்னணியினர் முன்னகர்த்தினார்கள்.

இவர்கள் ஊழல் மோசடிகளற்ற ஆட்சியை ஏற்படுத்துவார்கள், நாட்டு மக்களின் பொருளாதார வாழ்வை மீட்டெடுப்பார்கள் என முழுமையாக நம்பிய மக்கள், வரலாற்றில் இல்லாதவாறு அமோகமாக வாக்களித்து ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள். இது வெறுமனே ஒரு கட்சிக்கான ஆட்சி மாற்றமாக இல்லாமல், நாட்டின் அரச கட்டமைப்பில் முற்போக்கான மாற்றங்கள் நிகழ்வதாகவும், அரச நிர்வாக அமைப்புகள் அனைத்தும் ஊழல் மோசடிகள் அற்றவையாக அமைவதாகவும், அரச நிர்வாகிகள் அனைவரும் மக்களுக்கான உண்மையான சேவகர்களாக செயற்படுவதாகவும், நாட்டில் சிறுபான்மையாக வாழும் தேசிய இனங்களில் அடிப்படை ஜனநாயக அபிலாசைகள் பேணப்படுவதாகவும் இந்த ஆட்சி அமைய வேண்டும்.

அதற்காகவே இலங்கையின் அனைத்து இன மக்களும் ஒரு முகமாக இந்த ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள். இன்றுள்ள மக்கள் விடுதலை முன்னணி ஆட்சி அதனை நிஜமாக்குமா என்பதனை பொறுத்திருந்துதான் மதிப்பிட வேண்டும்.

கேள்வி: இலங்கையில் இந்தியாவை விலக்கி வைத்துவிட முடியாது என்பது வரலாறு. காரணம்,எமக்கு அண்மைய நாடு மாத்திரமல்ல, இலங்கை வீழ்ந்தபோதெல்லாம் பல நேரங்களில் கைகொடுத்த நாடு என்ற அடிப்படையிலும் ஈழத்தமிழர்களின் வரலாற்றில் பல இடங்களில்-நேரங்களில்  இந்தியாவின் பங்கு இருந்திருக்கிறது என்ற அடிப்படையிலும் இந்த கேள்வியை முன்வைக்கிறேன்.இந்திய எதிர்ப்பு வாதத்தை இதுகாலவரை கடைப்பிடித்து வந்த தரப்பு இன்று இலங்கையின் ஆட்சிக் கட்டிலில் இருக்கிறது. பூகேகாள அரசியலில் இந்தியாவின் ஆதிக்கம் அதிகரித்து வரும் இன்றைய கால சூழ் நிலையில் புதிய ஆட்சியாளர்களுக்கு அது எந்த அளவுக்கு சவாலாக இருக்கும் என பார்க்கிறீர்கள்?

பதில்:மக்கள் விடுதலை முன்னணியினரின் இந்திய எதிர்ப்பெல்லாம் அவர்கள் எதிர்க்கட்சி அரசியல் செய்த காலம் வரைதான் என்பது போலவே ஆட்சிக் கதிரைகளில் அமர்ந்துள்ள மக்கள் விடுதலை முன்னணியினரின் தற்போதைய அரசியல் பிரதிபலிப்பதாக உள்ளது.

தமிழர்களுக்கான அரசியற் தீர்வு தொடர்பாக இந்தியா ஒரு வகையான மிதவாத அணுகுமுறையைக் கடைப்பிடிக்கின்ற
வரை இந்தியாவின் செல்வாக்கு மக்கள் விடுதலை முன்னணியினருக்கு எந்த வகையிலும் சவாலாக இருக்கப் போவதில்லை என்றே தெரிகின்றது.

கேள்வி: இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின்படி உருவாக்கப்பட்ட மாகாண சபை என்ற நிர்வாக அலகின் முதலாவது முதலமைச்சர் என்ற அடிப்படையில் இந்த கேள்வியை தங்களிடம் முன் வைக்கிறேன். 13வது திருத்தச் சட்டம் என்பது இந்தியாவின் சொத்து என்ற அடிப்படையில் அந்த திருத்தச் சட்டம் உருவாக்கப்பட்ட காலத்தில் அதற்கு எதிராக ஜே.வி.பி. செயற்பட்டமையும், இணைந்த வடக்கு- கிழக்கை பிரித்தமையும் வரலாறு. அந்தவகையில் ஜே.வி.பி.யின் பாசறையில் வளர்ந்து வந்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் குறைந்த அதிகாரங்களைக் கொண்டதாக இருக்கின்றதாக தமிழ் தரப்புகள் கூறிவரும்  13ஐக் கூட கடந்த காலத்தில் எதிர்த்து வந்த நிலையில், ஈழத் தமிழர்களுக்கு ஒரு தீர்வை வழங்குவதற்கு ஆட்சியாளர்கள் முன் வருவார்கள் என எதிர்பார்க்க முடியுமா?

பதில்: முதலாவதாக, 13வது திருத்தம் இந்தியாவின் சொத்து என்பதே தவறாகும். மேண்டுமென்றால், அந்த சொத்தை இந்தியா தனது செல்வாக்கைப் பயன்படுத்தி ஈழத் தமிழருக்கு பெற்றுக் கொடுத்தது என்று சொல்லலாம். ஆனால் இந்த சொத்தை ஈழத் தமிழர்களில் மிகப் பெரும்பான்மையானவர்கள் தமது சொத்தாக, அதாவது தமக்கு உரிய சொத்தாகவோ, தமக்கு வேண்டிய சொத்தாகவோ கருதவில்லை என்பது அனைவரும் அறிந்த பொது உண்மை.

இந்த சொத்தை இலங்கை மக்களின் ஜனநாயக கட்டமைப்புக்கு அவசியமான சொத்தாக, குறிப்பாக ஈழத் தமிழர்களுக்கான அரசியற் தீர்வுக்கு அடிப்படையாக அமையக் கூடிய சொத்தாக ஆக்க முற்பட்டவர்களெல்லாம் சிங்களப் பேரினவாதிகளின் எதிர்ப்புக்கும் உள்ளாகி, தமிழர்கள் மத்தியில் துரோகிகள் என இழிவு படுத்தப்பட்டமையுமே நடந்து முடிந்தது.

இரண்டாவதாக, வடக்கு – கிழக்கு இணைந்த மாகாணசபை ஒன்றுக்கான சாத்தியம் உள்ளதா என்பது பற்றி இப்போது விவாதிப்பதில் பயனில்லை என்றே கருதுகிறேன். அப்படியானதொரு மாகாண சபையை ஏற்பதற்கு மக்கள் விடுதலை முன்னணியினர் மட்டுமல்ல, எந்தவொரு சிங்களத் தலைவரும் தயாராக இல்லை, எந்தவொரு முஸ்லிம் தலைவரும் தயாராக இல்லை என்பதே உண்மை. தமிழர்கள் மத்தியிலும் கணிசமானோர் இப்படியொரு விருப்பம் கொண்டிருக்கிறார்களே தவிர அதனை எப்படி சாத்தியமாக்குவது என்பது பற்றி எந்தத் தமிழரிடமும் எந்தவொரு திட்டமும் இருப்பதாகவோ அல்லது அதற்காக தியாகங்கள் செய்வதற்கு எந்தத் தமிழரும் தயாராக இருப்பதாகவோ தெரியவில்லை.

வடக்கு – கிழக்கு இணைப்பு என்பது தமிழர்கள் மத்தியில் அவ்வப்போது வெளிப்படும் ஒரு தேர்தல் அரசியற் கோசம் என்பதற்கப்பால், காரிய சித்திக்கான எந்தவொரு அர்த்தத்தையும் கொண்டிருப்பதாக தெரியவில்லை.

மூன்றாவதாக, இப்போது ஆட்சிக் கதிரையில் இருக்கும் மக்கள் விடுதலை முன்னணியினர், தமிழர்களுக்கான அரசியற் தீர்வை புதிய அரசியல் அமைப்பினூடாகவே வழங்கப் போவதாக வாக்குறுதி அளித்துள்ளார்கள். புதிய அரசியல் அமைப்பும் அரசியற் களத்துக்கு வருவதற்கு மூன்று வருடங்களாகும் என்பதை திட்டவட்டமாகவே கூறி விட்டார்கள். அதேவேளை, 13வது திருத்தத்தில் உள்ளபடி கூட பொலிஸ் அதிகாரங்களையோ, காணி அதிகாரங்களையோ வழங்கப் போவதில்லை என்பதை உறுதியாகவும் தெளிவாகவும் வெளிப்படுத்தி வருகிறார்கள்.

இந்த ஆட்சியினர் என்னென்ன அதிகாரங்களை என்னென்ன வகையாக எந்தெந்த அளவில் வழங்கப் போகிறார்கள் என்பதை அறிவதற்கு இப்போதைக்கு வாய்ப்பில்லை என்றே தெரிகிறது. பாராளுமன்ற அரசியலில் ஆக்குதலும் அழித்தலுமே உள்ளன, நம்புதல் என்றோ நம்பாமல் இருத்தல் என்றோ எதுவுமில்லை.

கேள்வி:புதிய அரசியல் சாசனம் ஒன்று உருவாக்கப்படும் என்றும் அதில் தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வு கிடைக்கும் எனவும் ஆட்சியாளர்கள் முன்னைய தலைவர்கள் போன்று வழமையான பாணியில் கூறி வருகிறார்கள். அதற்கான சாத்தியங்கள் இருக்கின்றனவா? அப்படி ஒன்று உருவானால் எவ்வாறான தீர்வு திட்டம் தமிழ் மக்கள் சார்பில் முன்வைக்கப்பட வேண்டுமென எதிர்பார்க்கிறீர்கள்?

பதில்: இக்கேள்வியின் முதலாவது பகுதியில் அதற்கான பதிலையும் நீங்களே வழங்கி விட்டீர்கள். மக்கள் முன்னணியினர் ஆட்சிக்கு புதியவர்கள் என்பதுவும், மக்கள் முன்னணியின் பிரமுகர்களாக நாடாளுமன்றத்துக்கு தெரிவாகி உள்ளவர்களில் ஒரு சிலரை தவிர ஏனையவர்கள் நாடாளுமன்றத்துக்கு மட்டுமல்ல அரசாட்சியின் கட்டமைப்புக்கே புதியவர்கள் என்பதுவும் ஒருபுறமிருக்கட்டும், ஆயினும் இவர்களைத் ஆட்சிக்கு தெரிவு செய்துள்ள அரசியற் தளங்கள் பழையனவே, இவர்கள் அதிகார தலைமையைப் பெற்றிருக்கும் ஆயுதப் படைகள், பொலிஸ் அமைப்பு, அரச நிர்வாகம், நீதித்துறை, அரச நடைமுறைக்கான சட்டங்கள் அனைத்தும் பழையனவே.

மேலும், 2019ல் கோத்தாபயவை ஆதரித்து ஆட்சி பீடத்தில் அமர்த்திய அதே சிங்கள – பௌத்த பேரினவாத சக்திகள் இம்முறை மக்கள் விடுதலை முன்னணியை அதிகாரக் கதிரையில் அமர்த்துவதில் கணிசமான பாத்திரத்தை வகித்திருக்கிறார்கள் என்பதுவும் அனைவரும் அறிந்த ஒன்றே. இலங்கையின் அரச முடிவுகளிலும் நடைமுறைகளிலும் சிங்கள-  பௌத்த பேரினவாத சக்திகளின் ஆதிக்கம் இன்னமும் எந்த வகையிலும் குறைந்துவிடவில்லை. எனவே, அவற்றை மீறி மக்கள் விடுதலை முன்னணியினரால் செயற்பட முடியுமா என்பது ஒன்று. மேலும் மக்கள் விடுதலை முன்னணியினர் இந்த சிங்கள – பௌத்த பேரினவாத சக்திகளை புறக்கணித்து விட்டு புதிய அரசியல் அமைப்பை உருவாக்குவதற்கான அரசியலைக் கொண்டிருக்கிறார்களா என்பதுவும் பிரதானமான கேள்விகளாக உள்ளன.

புதிய அரசியல் யாப்பைச் சொல்லி, சந்திரிகா பண்டாரநாயக்கா பத்து ஆண்டுகாலம் நிறைவேற்று ஜனாதிபதியாக தனது காலத்தை நிறைவு செய்து கொண்டார். 13 பிளஸ் என்று சொல்லி மஹிந்த ராஜபக்ஷ  தனது பத்து ஆண்டுகளை நிறைவு செய்து கொண்டார். புதிய அரசியல் யாப்பைத் தயாரித்தபடியே மைத்திரி -ரணில் நல்லாட்சி ஐந்து ஆண்டுகளைக் கடத்தி முடித்தது.

எனவே புதிய அரசியல் யாப்பு என்பதை மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு தொடங்க இருக்கும் மக்கள் விடுதலை முன்னணினருக்கு மேலும் இரண்டு ஆண்டுகளை அதைப் பேசியபடியே கடப்பதற்கு முடியாதா என்ன!

கேள்வி: இந்தியாவைத் தாண்டி தமிழ் மக்களுடைய தீர்வு விடயத்தில் எந்தவொரு வெளிநாட்டு தரப்பும் தலையிடமாட்டாது என்ற வரலாற்றுப் பாடம் நீண்ட காலமாக தமிழர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது. அவ்வாறு இருக்கும் பட்சத்தில் இந்தியாவின் அண்மைக்கால போக்கு ஈழத் தமிழர் விடயத்தில் மந்த கதியாக இருப்பதை அவதானிக்க முடிகிறது. குறிப்பாக அண்மையில் ஜனாதிபதி அநுரகுமார திசநாயக்கவின் இந்திய விஜயத்தின் போது கூட 13 பற்றியோ அல்லது தமிழ் மக்களுடைய இனப்பிரச்சினைக்கான தீர்வு பற்றியோ இந்தியா பெரிய அளவில் அக்கறை செலுத்தியிருக்கவில்லை. இதனை நீங்கள் எவ்வாறு பார்க்கிறீர்கள்?

பதில்:உங்களது இந்த கேள்வியில் உள்ள முதலாவது பகுதியில் கூறப்பட்டிருப்பது இன்னமும் உண்மையே. ஆயினும், ஈழத் தமிழர் விடயத்தில் இந்தியா தலையிட வேண்டிய கட்டாயம் தற்போது இந்தியாவுக்கு இல்லை என்பதைப் புரிந்து கொள்வது அவசியமாகும்.

“இந்தியா அதனது நலன்களுக்காகவே தமிழர்கள் விடயத்தில் தலையிட்டது”, “இந்தியா ஒரு ஆக்கிரமிப்பு நாடு”, “இந்தியாவை தமிழர்கள் நம்ப முடியாது – நம்பக் கூடாது” என்பவைதானே இங்குள்ள தமிழர்களின் பிரதிநிதிகள், சமூகப் பிரமுகர்கள், சமயத் தலைவர்கள், புத்திஜீவிகள், எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள், பத்திரிகையாளர்கள், தமிழ் அரச உத்தியோகத்தர்கள் என தமிழர் சமூகத்திலுள்ள பல்வேறு முக்கியமான பகுதியிடையோரிடமும் உள்ள அபிப்பிராயம்.

இதனை இந்திய அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளும் நன்கறிவர். இப்படியான ஒரு நிலையில் இந்தியா இலங்கைத் தமிழர்கள் விடயத்தில் காட்டும் அக்கறை படிப்படியாக குறைவடைவதில் ஆச்சரியப்பட எதுவுமில்லை. தமிழ்  நாட்டில் கூட ஈழத் தமிழர்கள் தொடர்பான அக்கறை பூச்சியத்தை அண்மித்ததாகவே உள்ளது.

1987ம் ஆண்டின் இந்திய-இலங்கை சமாதான உடன்பாட்டின் ஊடாக இந்தியா தனக்கு வேண்டியனவற்றை சாதித்துக் கொண்டது. இன்றைக்கும் அது இந்தியாவின் நலன்கள் தொடபில் வலுவானதாகவே உள்ளது. ஆனால் அந்த உடன்பாடடின் மூலமாக ஈழத் தமிழர்களுக்கு கிடைத்தனவற்றை, “தங்களைக் கேட்காமலே ஆக்கப்பட்டது”, “தங்கள் மீது திணிக்கப்பட்டது”, “தங்களது தியாகங்களுக்கு அது தகுதியற்றது”, “ஏற்றுக் கொள்ளத் தகாதது”, அனுமதிக்கப்படக் கூடாதது”, தும்புக் கட்டையால் கூட தொடக் கூடாதது” என்று சொல்லி சொல்லியே ஈழத் தமிழர் சமூகம் தானாகவே தனக்கு கிடைத்ததை தொலைத்து விட்டது.

இதற்கு ஈழத் தமிழர் சமூகத்தின் பிரதானமான அனைத்து பகுதியினரும் பொறுப்பாவர்.

கேள்வி:தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில் இருக்கின்ற தலைமைகளுக்கிடையில் தமிழ் மக்களுக்கு என்ன தீர்வு தேவை என்பதிலேயே குழப்பங்கள் இருக்கிறது. ஒட்டுமொத்தமாக பார்த்தால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு தீர்வை தூக்கி வைத்துக் கொண்டு அரசியல் செய்வதை அவதானிக்க முடிகிறது. இது ஈழத் தமிழர் விவகாரத்தில் எவ்வாறான தாக்கத்தை செலுத்தும் என எதிர்பார்க்கிறீர்கள்?

பதில்:தமிழ்த் தேசியப் பரப்பினர் என முத்திரை இடப்பட்டவர்கள் அனைவரும் ஏதோ ஒரு வகையில் சிறு சிறு வித்தியாசங்களுடன், “ வடக்கு – கிழக்கு இணைந்த தமிழர் தாயகத்தில் சுய நிர்ணய உரிமையுடன் கூடிய சமஸ்டி அமைப்பே” தமிழர்களுக்கான அரசியற் தீர்வு எனக் கூறுகின்றனர். இவர்களிடையே ஒற்றுமை இல்லையே என தமிழர்களிற் பெரும்பான்மையினர் வெவ்வேறு முறைகளிலும் வழிகளிலும் கவலை தெரிவிக்கின்றனர்.இப்படியான “தமிழ்த் தேசிய”பட்டயக்காரர்கள் ஒற்றுமையாக ஆனாலென்ன அல்லது வெவ்வேறாக இருந்தால்த்தான் என்ன? இவர்கள் ஒன்றாகக் கோரினால் என்ன, தனித்தனியாக கோரினால் என்ன, இவர்களது கோரிக்கையை ஏற்பதற்கு – காது கொடுத்து கேட்பதற்குக் கூட ஏனைய சிறுபான்மை இனத்தவர்கள் மட்டுமல்ல, எந்தவொரு வெளிநாடும் எந்தவொரு சர்வதேச அமைப்பும் தயாராக இல்லை என்பது அனைத்து தமிழர்களுக்கும் தெரிந்த ஒன்றே.

இந்த தேசிய பட்டயகாரர்களை மீண்டும் மீண்டும் தூக்கி நிறுத்தி தமது பிரதிநிதிகளாக – தமது தலைவர்களாக கொண்டாடுவதை தமிழர் சமூக பிரமுகர்களும் புத்திஜீவிகளும் நிறுத்தப் போவதில்லை. அதனால் இந்த தமிழ்தேசிய பட்டயக்காரரும் தம்மை நம்பும் தமிழ் மக்களுக்கு உண்மையாகவும் நேர்மையானவர்களாகவும் தம்மை ஆக்கிக் கொள்ளப் போவதுமில்லை. பொய்களும் போலித்தனங்களும் நிறைந்த தமிழ்த் தேசிய புலுடா அரசியலே தமிழர்கள் மத்தியில் வெற்றி பெறுகிறது. எங்கும் வென்றவனே வீரனாவான். அவனுக்கே வெற்றிக் கிண்ணம். எப்படி வெற்றி பெற்றான் என்பதெல்லாம் வெற்றிப் பரிசுக்கு சம்பந்தமில்லாத இரண்டாம் பட்ச விவாத விடயமாகிவிடும்.

இங்குள்ள அரசியற் பிரமுகர்களின் பிரதானமான இலக்கெல்லாம் தேர்தலில் எப்படி வெற்றி பெறுவது என்பது மட்டுமே. இங்கு சமூக மரியாதையும் அரங்க அங்கீகாரமும் அதற்கு மட்டுமே. ஈழத் தமிழர் சமூகத்தில் வாழ்ந்த காத்திரமான சமூகப் பிரிவினர்களில் பெரும்பான்மையோர் ஐரோப்பிய, அமெரிக்க மற்றும் அவுஸ்திரேலிய கண்டங்களுக்கு முற்றாக புலம்பெயர்ந்து போய்க் குடியேறி விட்டார்கள். அவர்களின் அடுத்த தலைமுறையினர் அந்த நாடுகளில் வாழும் இலங்கை வம்சாவழியினர் என்பதற்கப்பால் வேறொன்றுமில்லை.

அவர்கள் வாழும் நாடுகளில் எந்த நாட்டு வம்சாவழியினர் என்பது ஒரு பிரச்சினை அல்ல. ஆனால், இந்த புலம் பெயர்ந்தோர் தமது கனவுகளையும், சிங்கள ஆட்சியாளர் மீது கடந்த காலங்களில் தாம் கொண்டுள்ள ஆத்திரங்களையும் இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் மீது திணிக்கும் வல்லமையைக் கொண்டிருக்கிறார்கள். மிகப் பலயீனமான நிலையில் இலங்கையில் வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழர்கள் தமக்குச் சாத்தியமானதொரு அரசியற் தீர்வை சாதிப்பதற்கான பாதையில் பயணிக்க முடியாமைக்கு இந்த புலம் பெயர்ந்த தமிழர்களின் பண பலமும் பிரச்சார பலமும் பிரதானமான காரணியாக அமைகிறது.

எனவே, ஈழத் தமிழர் சமூகம் தன்னைத் தானே அழிக்கும் நோயை தானே பராமரிக்கும் தன்மையுடையதாக உள்ளது. இதற்கு ஏது வைத்தியம் என்பது விடை கண்டு பிடிக்கப்படாத கேள்வியாக மட்டுமே உள்ளது.

கேள்வி: பூகோள அரசியலில் இலங்கையின் புதிய ஆட்சியாளர்களின் பயணம் சவாலானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படும் ஒரு சூழ்நிலையிலும், இந்திய-சீனாவின் ஆதிக்கம் இலங்கையில் கடும் போட்டியில் இருப்பதாக கூறப்படும் ஒரு சூழ்நிலையிலும் 2009 இறுதி யுத்தத்தின் போது இடம் பெற்றதாக கூறப்படும் காணாமல் போனோர் விவகாரம் மற்றும் மானிட இனத்துக்கு எதிரான குற்றச்செயல்கள் தொடர்பான விவகாரத்துக்கு என்ன நடக்கும் என எதிர்பார்க்கிறீர்கள்?

பதில்: 2009ம் ஆண்டு இறுதி யுத்தத்தின் போது காணாமற் போனதாக கூறப்படுவோர் விவகாரம் இப்போது முற்றாக அதன் முக்கியத்துவத்தை இழந்து விட்ட ஒன்றாகவே தெரிகிறது. இந்தியாவோ சீனாவோ இவ்விடயத்தில் எக்காலத்திலும் அக்கறை காட்டியதில்லை. அதேவேளை, இலங்கையை இவ்விடயத்தில் சர்வதேச விசாரணைக்குள் கொண்டு செல்வதை இந்தியாவோ சீனாவோ அனுமதிக்கத் தயாராக இல்லை என்பது எப்போதும் தெளிவாகவே வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளே இவ்விடயத்தில் ஐ. நா.வின் மனித உரிமை மாநாட்டின் ஊடாக அக்கறை காட்டி வந்தன. 2015 ல் ஏற்பட்ட நல்லாட்சிக்குப் பின் அது படிப்படியாக குறைவடைந்து, இப்போது கேட்கக் கூடியதாக எந்தவொரு குரலும் எழுப்பப்படுவதாக காணவில்லை. தமிழ்த் தேசிய பட்டயக்காரக் கட்சிகளிற் சில முன்னர் பெரும் அக்கறை காட்டின. இப்போது அவையும் ஆடிக்கு ஒருக்கால், அமாவாசைக்கு ஒருக்கால் என அறிக்கை வெளியிடுவதற்கு அப்பால் எதுவும் செய்வதாக இல்லை.

காணாமற் போனோரின் பெற்றோரும் களைத்துப் போய்விட்டார்கள் போல் தெரிகின்றது. இதனைப் பெரிதாக செய்தியாக்கிக் கொண்டிருந்த சர்வதேச தமிழ் ஊடகங்களும் இப்போது அமைதியாகி விட்டன. முன்னர் புலி அரசியலை வியாபாரமாக ஆக்கி பெரும் முதலாளிகளாக ஆகிக் கொண்ட ஊடகங்களின் உரிமையாளர்கள் இப்போது இலங்கையில் தமது வியாபார பெருக்கங்களுக்காக ஆட்சியாளர்களோடு நட்பு டீல்களில் உள்ளதாக கூறப்படுகிறது.

கடைசியாகப் பார்த்தால் “சண்டை என்றால் சட்டை கிழியத்தானே செய்யும்” என்பதாக சாதாரணமாக்கி விட்டார்கள் என்றே தெரிகிறது. இலங்கை ஆட்சியாளர்களைப் பொறுத்த வரையில் இப்போது நஸ்ட ஈடு கொடுக்க வேண்டிய கஸ்டத்தில் இருந்தும் மீண்டு விட்ட நிம்மதியோடு இருக்கிறார்கள் போலிருக்கிறது. தேர்தல் வேட்பாளராக ஜனாதிபதி அநுரா அவர்கள் யாழ்ப்பாணத்தில் பிரச்சாரம் செய்தபோது காணாமற் போனோர் விடயத்தை அவர் கையிலெடுப்பார் என்றார்கள். அவர் எந்த காணாமற் போனோர் விடயத்தைக் கையிலெடுப்பார் என்பது இன்னமும் தெளிவாக இல்லை.

கேள்வி: பொருளாதார தளத்தில் புதிய ஆட்சியாளர்களின் செயற்பாடுகள் எவ்வாறு இருக்கின்றன?

பதில்:பொருளாதார நெருக்கடியால் இலங்கையை வங்குரோத்து நாடு என பிரகடனம் செய்து விட்டு கோத்தாபய நாட்டையும் பதவியையும் விட்டு ஓடியதன் பின்னர் ராஜபக்சக்களால் ஜனாதிபதியாக்கப்பட்ட ரணில் விக்கிரமசிங்க அவர்களின் பொருளாதார தந்திரோபாயங்களையே இப்போது ஆட்சியிலுள்ள மக்கள் விடுதலை முன்னணியினரும் தொடர்கிறார்கள். சர்வதேச நாணய நிதியமே இன்னமும் இப்போதும் நாட்டின் பொருளாதார மீட்சிக்கான ஆலோசகராக செயற்படுகின்றது.

முக்கியமான பொருளாதார பதவிகளில் சர்வதேச நாணய நிதியத்தின் முன்னாள் ஊழியர்களையே ரணில் விக்கிரமசிங்க இருத்தினார். அவர்களே அந்தப் பதவிகளில் இப்போதும் உள்ளனர். நாணயக் கொள்கைகள் தொடர்பான முடிவுகளையும் நடைமுறைகளையும் அவர்களே தொடர்ந்து மேற்கொள்ள ஜனாதிபதி அநுர அவர்களுக்கு பூரண அனுமதி அளித்துள்ளார். எனவே, எளிய முறையில் சொல்வதானால் நாட்டின் பொருளாதார நிர்வாகம் மக்கள் விடுதலை முன்னணியின் ஆட்சியிடம் இல்லை. மாறாக, அது சர்வதேச நாணய நிதியத்திடமே விடப்பட்டிருக்கின்றது.

இந்த ஆண்டில் கார்களின் இறக்குமதி தொடர்பான முடிவையும் மத்திய வங்கியின் ஆளுனரே எடுத்திருக்கிறார் என்பது தெளிவாக உள்ளது. நிதி அமைச்சராக உள்ள ஜனாதிபதி அநுர அவர்கள் அதனை சட்டபூர்வமாக அமைச்சரவை முடிவாக வெளியிடும் கடமையைச் செய்வார்.

ரணிலின் ஆட்சியின் போது கடைப்பிடித்த பொருளாதார தந்திரங்களே இன்னமும் நடைமுறையாகின்றன. அநுர ஆட்சியின் பொருளாதார கெட்டித் தனங்கள் 2025ன் முடிவிலேதான் தெரிய வரும். 2023 மற்றும் 2024 இன் பொருளாதாரம் நாட்டு மக்களிற் பெரும்பான்மையோரின் வாயையும் வயிற்றையும் கட்டி வைத்து, இலங்கையின் அந்நிய செலாவணி இருப்பை கணிசமாக அதிகரித்து விட்டதாக பெருமிதம் கொள்கிறது. நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரத்தை கீழ் நிலையில் வைத்தபடியே அரசாங்கத்தின் வரி வருமானத்தை துரிதமாக அதிகரித்து விட்டதை சாதனையாக காட்டுகிறது.

2022ம் ஆண்டுக்குப் பின்னரான இலங்கையின் பொருளாதாரம் மக்களை பிச்சைக்காரர்களாக்கி பட்டினி போட்டு நோயாளிகளாக்கி விட்டு, அதன் மீது நின்று நாட்டின் பொருளாதாரத்தை மீட்டு விட்டதாக எகத்தாளம் பண்ணுகிறது. இந்தியாவுக்கு விஜயம் செய்த ஜனாதிபதி அநுரா தாராளமாகவே உடன்பாடுகளை வழங்கியுள்ளார்.

ஒரு பகுதி கொழும்புத் துறைமுகம், அம்பாந்தோட்டை மத்தள விமான நிலையம், மட்டக்களப்பின் அபிவிருத்தி, சம்பூர் மின் உற்பத்தி, திருகோணமலையில் எஞ்சியிருந்த அனைத்து எண்ணெய் தாங்கிகளும், காங்கேசன் துறைமுகம், பலாலி விமான நிலையம், பூநகரி மின் நிலையம், தலைமன்னார் – இராமேஸ்வரம் போக்குவரத்து, எல்லாவற்றிற்கும் மேலாக, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் தொப்புள் கொடி இருக்கிறதோ இல்லையோ இப்போது இந்தியாவையும் இலங்கையையும் எரிவாயு பைப் இணைக்கவுள்ளது. இன்னும் பல தொடரும் என்கிறார் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்.

சீனாவுக்கு செல்லும் ஜனாதிபதி அநுர சீனாவுக்கும் தாராளமாகவே உடன்படுவார் என்பது தெரிகிறது. அமெரிக்காவுக்கும் அவர் கஞ்சத்தனம் செய்ய மாட்டார் எனலாம். இதுதான் இன்றைய இலங்கையின் பொருளாதார நிர்வாகம் – அந்நியச் செலாவணி நெருக்கடி, உள்நாட்டில் அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிப்பு, அதனால் நாட்டின் உழைப்பாளர்களின் வருமானத்தின் மெய்யான பெறுமதியில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி, அதேவேளை உற்பத்திகள் மற்றும் வர்த்தகம் தொடர்பில் நிலவும் பொருளாதார மந்தம், வேலையின்மையின் அதிகரிப்பு, மக்களின் வாழ்க்கைத்தர வீழ்ச்சி, அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாடு போன்றன தொடர்பாக அரசாங்கம் தற்காலிகமான சமாளிப்புகளை மேற் கொண்டு வருகிறது.

புதிய பொருளாதார கொள்கைகளையெல்லாம் முயற்சிக்கப் போவதாக அறிக்கைகள்.எவ்வாறாயினும் வளர்ச்சிப் பாதையில் முன்னேறுவதற்கான பொருளாதார மீட்சிப் பாதையில் நாடு காலடி எடுத்து வைப்பதற்கு இன்னமும் நீண்ட தூரம் செல்ல வேண்டி உள்ளது. ஆபத்துக்களைத் தாண்டி விட்டது என்றில்லை.

பொருளாதார விடயத்தில் நாடு உண்மையான முன்னேற்றப் பாதையில் காலடி எடுத்து வைத்தால் அது சர்வதேச நாணய நிதியத்தினதும், இந்திய மற்றும் சீனாவினதும் ஒத்துழைப்புகளாலும் பெற்ற வெற்றியாகவே கூறப்படும். அநுராவின் ஆட்சிக்கும் பாராட்டு கிடைக்கும். மாறாக தோற்றால், அதாவது மீண்டும் ஒரு பொருளாதார நெருக்கடிக்குள் நாடு வீழ்ந்தால் அதன் பழி மக்கள் விடுதலை முன்னணி ஆட்சியின் மீது மட்டுமே போடப்படும்.கரணம் தப்பினால் மரணம். எவ்வாறாயினும் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் கொண்டாட்டமே.
 

 

https://thinakkural.lk/article/314590

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அன்றுமல்ல இன்றுமல்ல ....இந்த யுகம் இருக்கும் வரைக்கும் கிந்தியாவின் தலையீடு  சிறிலங்கா மேல் இல்லாமல் இருந்தால்......தமிழர்களும் சிங்களவர்களும் பாரபட்சமின்றி பொங்கல் வைத்து கொண்டாடுவார்கள்.👈

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.