Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
7 கோள்களும் ஒரே கோட்டில் தெரியும் அதிசயம்? என்று நடக்கிறது?

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், ஜோனதன் ஓ'கலஹன்

ஒரே நாளில் 7 கோள்களும் காட்சி தரும் அதிசய நிகழ்வு அரங்கேற உள்ளது. வருகின்ற பிப்ரவரி 28-ஆம் தேதி, இரவு வானில் ஏற்கனவே காட்சி தரும் 6 கோள்களுடன் புதன் கோளும் இணையும். ஏழு கிரகங்களின் அபூர்வ காட்சியை வானியல் ஆர்வலர்கள் அன்று கண்டுகளிக்கலாம். இது விஞ்ஞானிகளுக்கு ஏன் முக்கியமானது என்று பார்க்கலாம்.

இந்த ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் தெளிவான இரவு நேரத்தில் வானத்தை பார்த்தால் உங்களுக்கு ஒரு விருந்து காத்திருக்கிறது. வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ் மற்றும் நெப்டியூன் என ஆறு கோள்களும் தற்போது இரவு வானில் காட்சியளிக்கின்றன. பிப்ரவரி மாதத்தின் பிற்பகுதியில் ஒரே ஒரு இரவு மட்டும் அவற்றுடன் புதனும் இணைந்து ஏழு கிரகங்களின் வரிசை வானில் காட்சி தரும்.

இது வானியல் ஆர்வலர்களுக்கு மட்டுமான காட்சி அல்ல. இது சூரிய மண்டலத்தில் நமக்கான இடம் குறித்த புதிய புரிதல்களையும் தரும் சாத்தியக்கூறுகள் உள்ளன.

நமது சூரிய குடும்பத்தின் முக்கிய 8 கோள்களும் சூரியனை வெவ்வேறு வேகத்தில் சுற்றி வருகின்றன. சூரியனுக்கு மிக அருகில் இருக்கும் புதன் கோளானது, 88 நாட்களில் ஒரு சுற்றை நிறைவு செய்கிறது. அதாவது புதன் கிரகத்தில் ஒரு ஆண்டு என்பது 88 நாட்கள். பூமியின் ஆண்டு 365 நாட்கள். அதிகபட்சமாக நெப்டியூன் சூரியனை சுற்றிவர 60,190 நாட்கள், அதாவது சுமார் 165 ஆண்டுகள் ஆகும்.

கோள்கள் வெவ்வேறு வேகத்தில் சுற்றிவருவதால், சில நேரங்களில் அவற்றில் பல, சூரியனின் ஒரே பக்கத்தில் வரிசை கட்டி நிற்பது உண்டு. பூமியிலிருந்து காணும் போது இரவு வானில் ஒரே நேரத்தில் பல கிரகங்களை நம்மால் காண முடியும். சில அபூர்வ சந்தர்ப்பங்களில் இரவு வானில், அவை அனைத்தும் ஒரே நேர் கோட்டில் காட்சி தரும்.

ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் நிகழும் வானியல் அதிசயங்கள்

புதன், செவ்வாய், வியாழன், சனி கோள்கள் வெறும் கண்களாலேயே காணக்கூடிய அளவு பிரகாசமாக இருக்கின்றன. அதே நேரம் யுரேனஸ் மற்றும் நெப்டியூனை காண பைனாகுலர் அல்லது டெலஸ்கோப் தேவைப்படும்.

இந்த நிகழ்வு நடப்பதை நாம் ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் காணலாம். கிரகங்கள் உண்மையில் நேர் கோட்டில் இல்லை. சூரிய மண்டலத்தில் அவற்றின் சுற்றுப்பாதை காரணமாக அவை வானில் அரைவட்ட வடிவில் தென்படும். இவ்விரு மாதங்களில் தெளிவான இரவுகளின் போது புதன் கோளை தவிர மற்ற கோள்கள் அனைத்தையும் காணமுடியும்.

இந்நிகழ்வை கோள்களின் அணிவகுப்பு என்றும் அழைக்கின்றனர். பிப்ரவரி 28ஆம் தேதி வானிலை ஒத்துழைத்தால் ஏழு கோள்களும் ஒரே நேர் கோட்டில் இருப்பதை காண முடியும். இது பூமியில் இருந்து காண்போருக்கு அற்புதமான காட்சியாகும்.

"கோள்களை உங்களது கண்களால் காண்பதில் ஒரு தனி சிறப்பு இருக்கிறது", என்கிறார் பிரிட்டனில் அமைந்திருக்கும் ஃபிப்த் ஸ்டார் லேப்ஸ் நிறுவனத்தின் வானியலாளரும் அறிவியல் தொடர்பாளருமான ஜெனிஃபர் மிலார்ட்.

"நீங்கள் கூகுள் செய்து இந்த கோள்களின் சிறப்பான காட்சிகளை பார்க்க முடியும். ஆனால் அவற்றை நீங்கள் நேரடியாக காணும் போது, விண்ணில் பல லட்சம் அல்லது கோடி மைல்கள் கடந்து வந்த போட்டான்கள் உங்கள் விழித்திரையை தொடுகின்றன."

7 கோள்களும் ஒரே கோட்டில் தெரியும் அதிசயம்? என்று நடக்கிறது?

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, புதன், செவ்வாய், வியாழன், சனி கோள்கள் வெறும் கண்களாலேயே காணக்கூடிய அளவு பிரகாசமாக இருக்கின்றன

பூமியில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்?

காண்பதற்கு அற்புதமாக தோன்றும் இதுபோன்ற நிகழ்வுகள் பூமியில் ஏதாவது தாக்கத்தை ஏற்படுத்துகின்றனவா? அல்லது சூரிய மண்டலம் மற்றும் அதற்கும் அப்பால் உள்ளவற்றை குறித்த நமது புரிதலை அதிகரிக்க இந்நிகழ்வுகள் பயன்படுகின்றனவா?

உண்மையில், "அவை அவற்றின் சுற்றுவட்டப் பாதையில் இந்த நிலையில் இருப்பது தற்செயலானதுதான்" என்கிறார் மில்லார்ட். இதுபோன்ற கோள்களின் வரிசை பூமியின் மீது தாக்கத்தை ஏற்படுத்தலாம் என சில விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்திருந்தாலும், அந்த கூற்றுகள் அறிவியல் அடிப்படையில் மிகவும் பலவீனமாக இருக்கின்றன.

2019-ஆம் ஆண்டில் கோள்களின் ஒத்திசைவு சூரிய செயல்பாட்டில் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என ஆய்வாளர்கள் தெரிவித்தனர், சூரியனைப் பற்றிய விடை தெரியாத கேள்விகளில் ஒன்று- சூரியன் உச்ச செயல்பாடு(நாம் தற்போது இருப்பது) மற்றும் குறைந்தபட்ச செயல்பாடு என 11 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாறுவதற்கு என்ன காரணம்? என்பது.

இதற்கு வெள்ளி, பூமி மற்றும் வியாழன் கோள்களில் ஏற்படும் கூட்டு அலைஈர்ப்பு பதிலாக இருக்கலாம் என்ற கருத்தை முன்வைத்தார் இயற்பியலாளர் ஃபிரான்க் ஸ்டெபானி. ஜெர்மனியின் டிரெஸ்டென்- ரோஸண்டார்ஃப்-பில் உள்ள ஹெல்ம்ஹோல்ட்ஸ்-ஜெண்ட்ரம் ஆய்வு மையத்தில் அவர் பணிபுரிகிறார்.

சூரியன் மீதான ஒவ்வொரு கோளின் அலைஈர்ப்பு மிகவும் குறைவானது என்ற போதிலும், இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கோள்கள் சூரியனுடன் ஒரே வரிசையில் இருக்கும் போது, இது சிசிஜி(syzygy) என அறியப்படுகிறது. அவை ஒருங்கிணைந்து நட்சத்திரத்திற்குள் 'ராஸ்பி வேவ்ஸ்' எனப்படும் சிறிய சுழற்சிகளை ஏற்படுத்துகின்றன. அதன் மூலம் வானிலை நிகழ்வுகளில் மாற்றங்கள் ஏற்படலாம் என சொல்கிறார் ஸ்டெபானி.

"பூமியில் ராஸ்பி அலைகள் சூறாவளிகளையும், எதிர் புயல்களையும் உருவாக்குகின்றன," என்கிறார் ஸ்டெபானி.

"சூரியனிலும் இதே ராஸ்பி அலைகள் இருக்கின்றன."

வெள்ளி, பூமி மற்றும் வியாழன் ஆகிய கோள்கள் ஒத்திசைந்து 11.07 ஆண்டுகள் என்ற கால இடைவெளியில் சூரிய ஆற்றல் செயல்பாட்டை ஏற்படுத்தும் என ஸ்டெபானியின் கணக்கீடுகள் காட்டுகின்றன. இது நாம் காணும் சூரிய செயல்பாட்டு சுழற்சியை கிட்டத்தட்ட மிகச்சரியாக ஒத்திருக்கிறது.

இந்த கருத்து சரியானதுதானா என்பதில் அனைவருக்கும் ஒருமித்த கருத்து இல்லை. சூரியனுக்குள் மட்டும் ஏற்கனவே நடந்து கொண்டிருக்கும் நடைமுறைகள் மூலமே சூரிய செயல்பாட்டை விளக்க முடியும் என சிலர் கூறுகின்றனர்.

"கோள்கள் சூரிய செயல்பாட்டில் நேரடியாக தாக்கம் செலுத்துகின்றன என்பதற்கு கவனிக்கப்பட்டவரை ஆதாரங்கள் இல்லை" என்கிறார் இது தொடர்பான ஆய்வறிக்கை ஒன்றை 2022ஆம் ஆண்டு வெளியிட்ட ராபர்ட் கேமரன். அவர் ஜெர்மனியின் சூரிய மண்டல ஆய்வுக்கான மேக்ஸ் பிலான்க் நிறுவனத்தில் சூரிய விஞ்ஞானியாக பணியாற்றி வருகிறார்.

"எந்த வகையான ஒத்திசைவுக்கான எந்த ஆதாரமும் இல்லை," என்றும் அவர் கூறுகிறார்.

7 கோள்களும் ஒரே கோட்டில் தெரியும் அதிசயம்? என்று நடக்கிறது?

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, 2024ஆம் ஆண்டு செவ்வாய், வியாழனை வெறும் கண்களால் காணமுடிந்தது. ஆனால் ஜனவரி 2025-ல் வெள்ளி, சனி, யுரேனஸ்,மற்றும் நெப்டியூன் கோள்களையும் காணமுடியும்

வானியல் ஆராய்ச்சிக்கு உதவும் வானியல் நிகழ்வு

ஆனால் நம் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் அதிக சர்ச்சைகளற்ற கோள்களின் ஒத்திசைவுகள் இருக்கத்தான் செய்கின்றன. அறிவியல்பூர்வ ஆய்வுகள் குறிப்பாக சூரிய மண்டலத்தை ஆராய்வதில் அவை பயனுள்ளவையாக இருக்கின்றன.

"சாதகமான இடத்தில் உள்ள வியாழன் போன்ற கோளின் ஈர்ப்பு விசை, ஒரு விண்கலத்தை உண்டி வில் போல் வெளிநோக்கி செலுத்துவதற்கு பயன்படுத்துவது, விண்கலத்தின் பயண நேரத்தை கணிசமாக குறைக்கும். "

தொலைதூரத்தில் உள்ள கோள்களை விண்கலம் மூலம் சென்றடைவது கடினமாக இருக்க காரணம், அவை பல பில்லியன் மைல்களுக்கு அப்பால் உள்ளன என்பதுடன் அவற்றை சென்றடைய பல பத்தாண்டுகள் ஆகும்.

அதே சாதகமான இடத்தில் உள்ள வியாழன் போன்ற கோளின் ஈர்ப்பு விசை, ஒரு விண்கலத்தை வெளிநோக்கி உண்டிவில் போல் விசையுடன் செலுத்துவதற்கு பயன்படுத்துவது, பயண நேரத்தை கணிசமாக குறைக்கும். இதை நாசாவின் வாயேஜர் விண்கலன்கள் போல் வெறு எந்த விண்கலமும் சிறப்பாக பயன்படுத்திக் கொள்ளவில்லை.

வியாழன், சனி, யுரேனஸ் மற்றும் நெப்டியூன் என சூரிய மண்டலத்தின் வெகுதொலைவில் உள்ள நான்கு கிரகங்களும் 1977ஆம் ஆண்டு ஒரே நேரத்தில் வானில் தோன்றின. அந்த சமயத்தை பயன்படுத்தினால் அக்கோள்களுக்கு 12 ஆண்டுகளிலேயே சென்றுவிடலாம் என்று ஒரு ஆராய்ச்சியாளர் கண்டறிந்தார். 1966-ஆம் ஆண்டில் கேரி ஃபிளான்ரோ என்ற நாசா விஞ்ஞானி தான் அவர். இந்த ஒத்திசைவு நேரத்தில் இல்லாவிட்டால் இந்த நான்கு கோள்களுக்கு சென்று திரும்ப 30 ஆண்டுகள் ஆகும்.

175 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டும் ஏற்படும் இந்த சாதகமான அமைப்பு, சூரிய மண்டலத்தின் வெளிப்புறத்தை ஆய்வு செய்ய 1977ஆம் ஆண்டு வாயேஜர் 1 மற்றும் 2 இரட்டை விண்கலத்தை நாசா ஏவ காரணமாக அமைந்தது.

வாயேஜர் 1 விண்கலம் 1979ஆம் ஆண்டு வியாழனையும், 1980ஆம் ஆண்டு சனி கோளையும் கடந்தது. சனி கோளின் நிலவான டைட்டனை கடந்து சென்று ஆய்வு செய்ய நாசா விஞ்ஞானிகள் விரும்பியதால் யுரேனஸ் மற்றும் நெப்டியூன் கோள்களை வாயேஜர் 1 தவிர்த்துவிட்டது.

ஆனால் வாயேஜர் 2, கோள்களின் ஒத்திசைவை பயன்படுத்திக் கொண்டு நான்கு கோள்களையும் சென்றடைந்தது. யுரேனஸ் மற்றும் நெப்டியூனை 1986 மற்றும் 1989ஆம் ஆண்டுகளில் கடந்து வரலாற்றில் இவ்விரு கிரகங்களையும் கடந்த ஒரே விண்கலம் என்ற பெயரை பெற்றது.

"அது சிறப்பாக செயல்பட்டது" என்கிறார் அமெரிக்காவின் போல்டரில் உள்ள கொலரேடோ பல்கலைக்கழகத்தில் வானியல் இயற்பியலாளராக உள்ள பிரான் பேகெனல். " வாயேஜர் 2 விண்கலம் 1980ஆம் ஆண்டு புறப்பட்டு சென்றிருந்தால் அது நெப்டியூனை அடைய 2010ஆம் ஆண்டு ஆகியிருக்கும். அப்படி செய்வதற்கு ஆதரவு கிடைத்திருக்கும் என தோன்றவில்லை. அப்படி செய்வதற்கு யார் நிதியளிக்கப் போகிறார்கள்?" என்ற கேள்வியை அவர் எழுப்புகிறார்.

7 கோள்களும் ஒரே கோட்டில் தெரியும் அதிசயம்? என்று நடக்கிறது?

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, நமது சூரிய மண்டலத்தில் கிரகங்கள் வெவ்வேறு வேகத்தில் சுற்றிவருவதால் அவற்றில் பல சில நேரங்களில் வான்வெளியில் ஒரே நேரத்தில் ஒரே கோட்டில் தெரியும்.

அண்டை சூரிய குடும்பத்தையும் ஆராய உதவும் வானியல் நிகழ்வு இது

கோள்களின் இணைவு நமது சூரிய மண்டலத்திற்குள் மட்டும் பயன்படுவதில்லை. பிரபஞ்சத்தின் பல்வேறு அம்சங்களை ஆய்வு செய்ய கோள்களின் இணைவை வானியலாளர்கள் பயன்படுத்துகின்றனர். குறிப்பாக சூரியனைத் தவிர மற்ற நட்சத்திரங்களை சுற்றிவரும் புறக்கோள்களை கண்டுபிடிக்கவும், ஆய்வு செய்யவும் பயன்படுத்தப்படுகிறது.

இதுபோன்ற உலகங்களை கண்டறிய பெயர்ச்சி முறை என்ற நடைமுறை பிரதானமாக பயன்படுத்தப்படுகிறது. நமது பார்வையில் ஒரு நட்சத்திரத்தின் முன்புறமாக புறக்கோள் ஒன்று கடக்கும் போது அது நட்சத்திரத்தின் ஒளியை மங்கச் செய்கிறது. இதை பயன்படுத்திக் கொண்டு அந்த புறக்கோளின் அளவு மற்றும் சுற்றுப்பாதை கண்டறியப்படுகிறது.

இந்த முறையை பயன்படுத்தி குறிப்பிட்ட சில நட்சத்திரங்களை சுற்றிவரும் கோள்களை நாம் கண்டறிந்திருக்கிறோம். பூமியிலிருந்து 40 ஒளி ஆண்டு தொலைவில் உள்ள டிராபிஸ்ட் -1 எனப்படும் செந்நிற குறுவிண்மீனைச் சுற்றி பூமி அளவில் 7 கோள்கள் நமது பார்வையில் படும்படி சுற்றி வருகின்றன. அந்த மண்டலத்தில் உள்ள கோள்கள் ஒத்திசைவுடன் உள்ளன. அதாவது வெளிப்புறத்தில் உள்ள கோள் அதற்கு அடுத்து உட்புறம் உள்ள கோளின் மூன்று சுழற்சிகளுக்கு, இரண்டு சுழற்சிகளை நிறைவு செய்கிறது, அதன் பின் நான்கு, ஆறு என தொடர்கிறது. இதனால் பல கோள்கள் ஒரே நேர் கோட்டில் வரும் காலங்கள் இருக்கின்றன. ஆனால் இதுபோல் நமது சூரிய மண்டலத்தில் ஏற்படுவதில்லை.

பெயர்ச்சிகளை பயன்படுத்தி இது போன்ற கோள்களில் காற்றுமண்டலம் இருக்கிறதா என்பதை ஆய்வு செய்யமுடியும்.

"காற்று மண்டலம் உள்ள ஒரு கோள் ஒரு நட்சத்திரத்தின் முன் சென்றால், கோளின் காற்று மண்டலத்தில் உள்ள மூலக்கூறுகள் மற்றும் அணுக்கள் குறிப்பிட்ட ஒரு அதிர்வலையில் அந்த நட்சத்திரத்தின் ஒளியை உள்வாங்கிக் கொள்கின்றன." என்கிறார் கலிபோர்னியா தொழில்நுட்ப நிறுவனத்தில் உள்ள நாசா புறக்கோள்கள் அறிவியல் மையத்தில் வானியலாளராக உள்ள ஜெஸ்ஸி கிறிஸ்டியன்ஸன்.

இது கார்பன் டைஆக்ஸைடு, ஆக்ஸிஜன் போன்றவற்றை கண்டறிய பயன்படுகிறது. "காற்றும ண்டலத்தின் கலவை தொடர்பான எங்களது பெரும்பாலான ஆய்வுகள் இதுபோன்ற கோள்களின் ஒத்திசைவாலேயே முடிந்தது," என்கிறார் அவர்.

7 கோள்களும் ஒரே கோட்டில் தெரியும் அதிசயம்? என்று நடக்கிறது?

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, சனி கோளின் நிலவான டைட்டனை கடந்து சென்று ஆய்வு செய்ய நாசா விஞ்ஞானிகள் விரும்பியதால் யுரேனஸ் மற்றும் நெப்டியூன் கோள்களை வாயேஜர் 1 தவிர்த்துவிட்டது

இவற்றைவிட பெரிய இணைவுகள் தொலைதூரத்தில் உள்ள பிரபஞ்சத்தை, அதாவது விண்மீன் குழுக்களை ஆய்வு செய்ய உதவுகிறது. ஆரம்ப கால விண்மீன் குழுக்கள் வெகு தொலைவாகவும், மங்கலாகவும் இருப்பதால் அவற்றை ஆய்வு செய்வது கடினம். ஆனால் தொலைதூர ஆரம்பகால பிரபஞ்சத்தை நோக்கிய நமது பார்வைக்கு குறுக்கே ஒரு பெரிய விண்மீன் குழுவோ, குழுக்களோ கடந்தால் அதன் வலுவான ஈர்ப்புவிசை, தொலைதூரத்தில் உள்ள பொருளின் ஒளியை பெரிதாக்கி , அதை நாம் ஆய்வு செய்ய உதவும். இதை 'கிராவிடேஷனல் லென்சிங்' என அழைக்கிறார்கள்.

"இவை பிரபஞ்சத்தின் அளவுகோலில் மிகப்பெரிய ஒத்திசைவுகளாகும்," என்கிறார் கிறிஸ்டியன்சென். பூமிக்கு மிகத் தொலைவில் உள்ள இயரெண்டெல் (Earendel) விண்மீன் குழு உள்ளிட்டவற்றையும் தொலைதூர நட்சத்திரங்களையும் காண்பதற்கு ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் டெலஸ்கோப் போன்ற டெலஸ்கோப்கள் இந்த இணைவுகளை காண பயன்படுத்துகின்றன.

பிரபஞ்சத்தின் 13.7 பில்லியன் வருட வரலாற்றில் முதல் 100 கோடி ஆண்டுகளில் இந்த நட்சத்திரத்தில் இருந்து வெளிப்பட்ட ஒளிதான் டெலஸ்கோப்பால் பார்க்கப்பட்டது. கிராவிடேஷனல் லென்சிங் இருந்ததால்தான் இது சாத்தியமானது.

நமது பார்வையில் புறக்கோள்கள் ஒன்றையொன்று கடக்கும்போது பிற நட்சத்திர குடும்பங்களில் உயிரினங்கள் உள்ளனவா என்பதை ஆய்வு செய்வது போன்ற வேறு சில நூதன பயன்களும் கோள்களின் ஒத்திசைவுகளால் ஏற்படுகின்றன.

பூமியிலிருந்து நமது சூரிய குடும்பத்தில் உள்ள செவ்வாய் போன்ற கோள்களுக்கு செல்லும் விண்கலங்களுடன் தொடர்பு கொள்ள நாம் சமிக்ஞைகளை அனுப்புவது போல், டிராபிஸ்ட் 1 அமைப்பில் உள்ள உலகங்களுக்கு மத்தியில் ஏதேனும் சமிக்ஞைகள் அனுப்பப்படுகின்றனவா என்பதை ஆய்வு செய்ய இந்த கோள் ஒத்திசைவுகளை கடந்த 2024-ஆம் ஆண்டில் பயன்படுத்தினார் அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநில பல்கலைக்கழக பட்டதாரி மணவர் நிக் டுசே என்பவர்.

"எந்த இரண்டு கோள்களும் ஒரு கோட்டில் வரும் எந்த சந்தர்ப்பமும் ஆர்வமூட்டக்கூடியதுதான்." என்கிறார் டுசே.

இம்முறை அந்த தேடல்களில் வெற்றி கிட்டவில்லை. ஆனால் இதேபோல் வேற்றுலக உயிரினங்கள் நம் சூரிய மண்டலத்தை ஆய்வு செய்தால் இதே போன்ற நோக்கத்திற்கு இதே ஒத்திசைவுகளை பயன்படுத்தக்கூடும். இம்மாத கோள்களின் வரிசை உங்களது பார்வையை பொறுத்தது என்றாலும்- நமது அமைப்பில் நீங்கள் சரியான கோணத்தில் இருந்தால் எந்த இரண்டு கோள்களையும் நேர் கோட்டில் கொண்டுவர முடியும்- மறுபுறத்திலிருந்து வேறு யாரோ கவனித்துக் கொண்டிருப்பதாக கற்பனை செய்வது சாத்தியமான ஒன்றுதான்.

"அவர்களது ஆய்வை மேற்கொள்ள இது ஒரு சந்தர்ப்பம் என வேற்றுக்கிரகவாசிகள் நினைக்கவும் வாய்ப்பிருக்கிறது." என்கிறார் டுசே.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

  • கருத்துக்கள உறவுகள்

6 கோள்களின் அணிவகுப்பை பார்வையிடும் அரிதான வாய்ப்பு!

6 கோள்களின் அணிவகுப்பை பார்வையிடும் அரிதான வாய்ப்பு!

இன்றைய நாட்களில் சூரிய குடும்பத்தின் 6 கோள்கள் நேராக அணிவகுக்கும் அரிதான காட்சியை பார்வையிட முடியுமென கொழும்பு பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி மற்றும் யுரேனஸ் ஆகிய கோள்களை இவ்வாறு பார்வையிட முடியுமென கொழும்பு பல்கலைக்கழகத்தின் பௌதிகவியல் பிரிவின் வானியல், விண்வெளி அறிவியல் பிரிவின் பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

வௌ்ளி, சனி, வியாழன், செவ்வாய் ஆகிய கோள்கள் வெற்றுக்கண்களால் அவதானிக்கக் கூடியவாறு பிரகாசமாக தென்படும் எனவும் பேராசிரியர் குறிப்பிட்டுள்ளார்.

நெப்டியூன், யுரேனஸ் ஆகிய கோள்களை தொலைநோக்கியினுடாக பார்வையிடுவதற்கும் சந்தர்ப்பங்கள் காணப்படுவதாக பேராசிரியர் கூறினார்.

எதிர்வரும் 29 ஆம் திகதி வரை சூரிய அஸ்தமனத்திற்கு பின்னர் 90 நிமிடங்களுக்கு கோள்களை இவ்வாறு பார்வையிட முடியும் என பேராசிரியர் சந்தன ஜயரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2025/1418509

Edited by தமிழ் சிறி

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

New-Project-372.jpg?resize=750%2C375&ssl

7 கோள்களும் ஒரே அணிவகுப்பில்; இலங்கையர்களுக்கு அரிதான சந்தர்ப்பம்!

இன்றைய நாட்களில் சூரிய குடும்பத்தின் 7 கோள்கள் நேராக அணிவகுக்கும் அரிதான காட்சியை பார்வையிட முடியுமென கொழும்பு பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

இன்று (25) முதல் பெப்ரவரி 28 ஆம் திகதி வரை சூரிய அஸ்தமனத்தின் பின்னர் இந்த குறிப்பிடத்தக்க நிகழ்வை இலங்கையர்கள் பார்க்க முடியும் என கொழும்பு, பல்கலைக்கழகத்தின் விண்வெளி அறிவியல் பிரிவின் பேராசிரியர் சந்தன ஜயரத்ன குறிப்பிட்டுள்ளார்.

பூமியைத் தவிர சூரியக் குடும்பத்தின் அனைத்துக் கோள்களும் இந்தக் காலகட்டத்தில் பொதுவான பாதையில் செல்வதைக் காணலாம் என்று அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

இந்த சாட்சியின் போது, புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன் மற்றும் சனி ஆகிய ககோள்களை வெற்றுக்கண்களால் அவதானிக்கக் கூடியவாறு பிரகாசமாக தென்படும்.

எனினும், நெப்டியூன், யுரேனஸ் ஆகிய கோள்களை தொலைநோக்கியினுடாக பார்வையிடுவதற்கும் சந்தர்ப்பங்கள் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

2025 ஆகஸ்ட் மாதம், சூரியன் உதிக்கும் முன் நான்கு கிரகங்கள் ஒரே நேரத்தில் தெரியும் போது மற்றொரு கோள்கள் அணிவகுப்பு உருவாகும் என்றும் ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.

https://athavannews.com/2025/1422916

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

'இப்போது தவறவிட்டால் 2040ல் தான் தெரியும்': வானில் ஒரே நேரத்தில் அணிவகுக்கும் ஏழு கோள்கள் - 5 கேள்வி பதில்கள்

பிளானெட்டரி பரேட்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, இந்த ஆண்டு ஜனவரி மாதம் ஏற்கெனவே செவ்வாய் கோள் இடதுபக்கத்திலும், வியாழன் கோள் நடுவிலும், சனி மற்றும் வெள்ளி கோள்கள் வலதுபக்கத்திலும் தெரிந்தது. ஆனால், இந்த வாரம் ஏழு கோள்களையும் ஒரே நேரத்தில் பார்க்க முடியும்

கட்டுரை தகவல்

  • எழுதியவர், மேடி மோல்லோய்

  • பதவி, பிபிசி காலநிலை & அறிவியல் செய்தியாளர்

  • 7 மணி நேரங்களுக்கு முன்னர்

பிப்ரவரி 28 அன்று (நாளை) செவ்வாய், வியாழன், யுரேனஸ், வெள்ளி, நெப்டியூன், புதன் மற்றும் சனி ஆகிய ஏழு கோள்களையும் மாலையில் ஒரே நேரத்தில் பார்க்க முடியும் என்பது, வானியல் ஆர்வலர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

இப்படி பல கோள்கள் அணிவகுத்து நிற்கும் இந்த அரிய நிகழ்வை 'பிளானெட்டரி பரேட்' (planetary parade) என அறிவியல் மொழியில் அழைக்கின்றனர். இப்போது இந்த நிகழ்வை நீங்கள் தவறவிட்டால், 15 ஆண்டுகள் கழித்து 2040-ம் ஆண்டில்தான் தோன்றும்.

இந்த நிகழ்வை இன்னும் சில தினங்கள் பார்க்க முடியும் என்கின்றனர் வானியலாளர்கள். சூரியன் மறைந்த பின்னர், முடிந்தவரை அனைத்து கோள்களையும் பார்ப்பதற்கு சிறந்த நேரமாகும்.

இதுகுறித்து நீங்கள் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய கேள்வி-பதில்களை இங்கே தொகுத்துள்ளோம்.

'பிளானெட்டரி பரேட்' என்பது என்ன?

நமது சூரிய குடும்பத்தின் முக்கிய 8 கோள்களும் சூரியனை வெவ்வேறு வேகத்தில் சுற்றி வருகின்றன. சூரியனுக்கு மிக அருகில் இருக்கும் புதன் கோளானது, 88 நாட்களில் ஒரு சுற்றை நிறைவு செய்கிறது. அதாவது, புதன் கிரகத்தில் ஒரு ஆண்டு என்பது 88 நாட்கள். பூமியின் ஆண்டு 365 நாட்கள். அதிகபட்சமாக நெப்டியூன் சூரியனை சுற்றிவர 60,190 நாட்கள், அதாவது சுமார் 165 புவி ஆண்டுகள் ஆகும்.

கோள்கள் வெவ்வேறு வேகத்தில் சுற்றிவருவதால், சில நேரங்களில் அவற்றில் பல, சூரியனின் ஒரே பக்கத்தில் வரிசை கட்டி நிற்பது உண்டு. பூமியிலிருந்து காணும் போது இரவு வானில் ஒரே நேரத்தில் பல கிரகங்களை நம்மால் காண முடியும். சில அபூர்வ சந்தர்ப்பங்களில் இரவு வானில், அவை அனைத்தும் ஒரே நேர்க்கோட்டில் காட்சி தரும். இதை 'பிளானெட்டரி பரேட்' என்கின்றனர்.

சூரியனை சுற்றிவரும் கோள்கள் வெவ்வேறு வேகம் மற்றும் தொலைவில் சூரியனை சுற்றிவருகின்றன. அப்படியிருக்கும் போது பூமியிலிருந்து ஒரே நேரத்தில் அணிவகுத்து நிற்கும் கோள்களை பார்ப்பது பிரமிக்கத்தக்க காட்சியாக இருக்கும். எனினும், இந்த கோள்கள் பூமியிலிருந்து வெகு தொலைவிலேயே இருக்கும்.

பிளானெட்டரி பரேட்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,வானில் கோள்கள் ஒரே நேரத்தில் வரிசையாக நிற்பதை சித்தரிக்கும் படம்

அனைத்து கோள்களையும் வெறுங்கண்ணால் பார்க்க முடியுமா? சிறந்த நேரம் எது?

புதன், வெள்ளி, வியாழன் மற்றும் செவ்வாய் ஆகிய கோள்களை வெறுங்கண்களாலேயே பார்க்க முடியும். சனிக்கோள் அடிவானத்தில் கீழாக இருக்கும் என்பதால் அதை பார்ப்பது கடினம். யுரேனஸ் மற்றும் நெப்டியூன் ஆகிய கோள்களை தொலைநோக்கி மூலமே பார்க்க முடியும்.

அடிவானம் மற்றும் வானம் தெளிவாக இருந்தால் அனைத்து கோள்களையும் பார்ப்பதற்கு சிறப்பான வாய்ப்பாக இருக்கும். ஆனால், ஏழு கோள்களையும் பார்ப்பதற்கான நேரம் மிக குறைவானதே.

தென்கிழக்கு லண்டனில் உள்ள கிரீன்விச் ராயல் கோளரங்கத்தின் வானியலாளர் முனைவர் எட்வர்ட் ப்ளூமர் கூறுகையில், "நாம் எளிதாக பார்க்கும் விதத்திலான இடத்தில் அந்த ஏழு கோள்களும் இருக்கும் அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது." என்றார்.

எந்தெந்தெ கோள்களை பார்ப்பது கடினம்?

சூரியன் மறையும்போது சனி மற்றும் புதன் கோள்களும் மறையும் சமயம் என்பதால், அவற்றை பார்ப்பது கடினமானது.

"சூரியன் மறைந்த பிறகு அந்த கோள்களை பார்ப்பதற்கு உங்களுக்கு சில நிமிடங்களே இருக்கும். அதன்பின், அவை அடிவானத்துக்குக் கீழே சென்றுவிடும். அதன்பின்னும் வெள்ளி, வியாழன் மற்றும் செவ்வாய் ஆகிய கோள்களை இன்னும் சிறிது அதிக நேரத்துக்கு பார்க்க முடியும்," என்கிறார் ப்ளூமர்.

பிளானெட்டரி பரேட்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கோள்களை பார்ப்பதற்கு சிறந்த சூழல் எது?

வெள்ளி மற்றும் வியாழன் ஆகிய கோள்கள் மிக பிரகாசமான கோள்கள் என்பதால் அவற்றை எளிதாக பார்க்க முடியும். அதேசமயம், செவ்வாய் கோள் தனித்துவமான சிகப்பு நிறத்தில் காட்சியளிக்கும்.

"யுரேனஸ் கோளை வெறுங்கண்ணால் பார்க்க முடியும், ஆனால் உங்களுக்கு சிறந்த பார்வை திறனும் தகுந்த சூழலும் அமைய வேண்டும்," என விளக்குகிறார் ப்ளூமர்.

ஒளி மாசு குறைவாகவும் அடிவானம் தெளிவாகவும் தெரியும் இடத்துக்கு சென்று பார்த்தால், அதிகமான கோள்களை பார்ப்பதற்கான வாய்ப்புகள் கூடும் என்றும் முனைவர் ப்ளூமர் அறிவுறுத்துகிறார்.

"நீங்கள் அப்போதுதான் உங்கள் சமையலறையிலிருந்து கொல்லைப்புறத்துக்கு வந்திருந்தால், அதன் வெளிச்சத்துக்கு நீங்கள் பழக நேரம் எடுக்கும். அதற்கு சிறிது நேரம் கொடுங்கள், அந்த வெளிச்சத்துக்கு முழுமையாக உங்கள் கண்கள் பழகுவதற்கு அரை மணிநேரம் ஆகும்," என்கிறார் ப்ளூமர்.

"உங்கள் மொபைல்போனை பார்ப்பதை தவிருங்கள், சௌகரியமாக இருங்கள். அடிவானத்தை தடையின்றி பார்ப்பதை உறுதிசெய்யுங்கள்."

இது ஓர் ஆச்சர்யகரமான வாய்ப்பு எனக்கூறும் அவர், இரவு வானத்தை உற்றுநோக்குவதை பழக்கமாக்கிக் கொள்ள வேண்டும் என்றும் ஊக்கப்படுத்துகிறார்.

"எப்படி விஷயங்கள் மாறுகின்றன என்பதை கவனியுங்கள்," எனக்கூறுகிறார் அவர். "சூரிய குடும்பத்தின் இயக்கவியலை கவனிப்பதற்கான ஒரு வாய்ப்பு வானத்தைப் பார்ப்பதுதான்." என்கிறார் அவர்.

இந்தியாவில் பார்க்க முடியுமா?

பிளானெட்டரி பரேட்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,புதன், செவ்வாய், வியாழன், சனி கோள்கள் வெறும் கண்களாலேயே காணக்கூடிய அளவு பிரகாசமாக இருக்கின்றன

உலகம் முழுவதிலும் இந்த வானியல் அற்புதத்தைப் பார்க்க முடியும் என்கிறார், மொஹாலியில் உள்ள இந்திய அறிவியல் கல்வி ஆராய்ச்சி நிறுவனத்தின் பேராசிரியர் முனைவர்.த.வி.வெங்கடேஸ்வரன்

"வெறுங்கண்ணாலேயே பெரும்பாலான கோள்களை பார்க்க முடியும். யுரேனஸ், நெப்டியூன் ஆகிய இரு கோள்களை மட்டும் தொலைநோக்கியால் பார்க்க முடியும். வானம் தெளிவாக இருக்க வேண்டும், மேக மூட்டத்துடன் இருக்கக் கூடாது என்பதை மட்டும் தான் நினைவில் கொள்ள வேண்டும்." என்றார் அவர்.

சென்னை பிர்லா கோளரங்கத்தின் விஞ்ஞானி லெனின் கூறுகையில், "இதை வீட்டிலிருந்தே பார்க்க முடியும். இது பிப். 28-ல் தொடங்கி சில நாட்களுக்கு தெரியும். அதன்பின், ஒவ்வொரு கோளும் வெவ்வேறு காலத்தில் அடிவானத்தில் கீழே சென்றுவிடும்." என்றார்.

கூடுதல் தகவல்கள்: ஜோனதன் ஓ'கலஹன், பிபிசி அறிவியல் செய்தியாளர்

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cvgwm0re7ywo

  • கருத்துக்கள உறவுகள்

481128390_1075785324258113_8648713401136

பட உதவி: @suvy

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.