Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை - அவுஸ்திரேலிய டெஸ்ட் தொடர் நாளை ஆரம்பம்

Published By: DIGITAL DESK 2   28 JAN, 2025 | 02:53 PM

image

(எம்.எம்.சில்வெஸ்டர்)

இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுலா மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டி நாளை புதன்கிழமை (29) காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகிறது.

தனஞ்ஜய டி சில்வா தலைமையில் களமிறங்குகின்ற இலங்கை அணியில் புதுமுக வீரரான ஷொனால் தினூஷ 15 பேர் கொண்ட இலங்கை கிரிக்கெட் குழாத்தில் இணைக்கப்பட்டுள்ளதுடன், ஓஷத பெர்னாண்டோவுக்கும்  மீள அழைக்கப்பட்டுள்ளார். இவர்கள் இருவரும் உள்ளூர் போட்டிகளில்  அண்மைக்காலமாக சிறந்த ஆட்டத்திறனை வெளிப்படுத்தியவர்கள் ஆவர்.

உபாதை காரணமாக இந்த தொடரில் பங்கேற்காத பெட் கம்மின்ஸுக்கு பதிலாக ஸ்டீவ் ஸ்மித் அவுஸ்திரேலிய அணிக்கு தலைவராக செயற்படவுள்ளார்.

உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் 2023/2025 இன் ஓர் அங்கமாக  இப்போட்டித் தொடர் நடத்தப்பட்டாலும், உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு தென்  ஆபிரிக்கா மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் ஏற்கனவே தகுதிபெற்றுவிட்டன என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இத்தொடரின் முதலாவது போட்டி இன்று (29) ஆரம்பமாகவுள்ளதுடன், இரண்டாவது போட்டி எதிர்வரும் பெப்ரவரி 6 ஆம் திகதியன்று இதே மைதானத்தில் நடைபெறும்.

இலங்கை  அணி 2 டெஸ்ட்  போட்டிகளையும் வெல்வதுடன், அவுஸ்திரேலிய அணி தண்ட குறைப்பு புள்ளிகளை பெற்றால் புள்ளிகள் பட்டியலில் அவுஸ்திரேலியாவின் புள்ளிகள் வெகுவாக குறையும் சாத்தியம் ஏற்படக்கூடும் எனவும்  சில தரப்பினர் குறிப்பிட்டுள்ளனர்.

எவ்வாறாயினும்,  உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் தற்போது 5 ஆவது இடத்திலுள்ள இலங்கை அணி இபபோட்டித் தொடரை கைப்பற்றிக்கொள்ளும் பட்சத்தில் புள்ளிப்பட்டியில் முன்னேற இடமுண்டு.

இந்த இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெறுவது இலங்கை அணிக்கு மிகவும் முக்கியமானது, மேலும் இந்த இரண்டு போட்டிகளிலும் இலங்கை அணி வெற்றி பெற்றால், உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் 2023/2025 இல் மூன்றாவது இடத்தை கைப்பற்ற முடியும். அவ்வாறு,  இலங்கை அணி மூன்றாவது இடத்தைப் பிடித்தால், இலங்கை அணிக்கு நான்கு லட்சத்து ஐம்பதாயிரம் டொலர்கள் பணப்பரிசை வென்றெடுக்கும்.

இதற்கு முன்னர் இலங்கைக்கு 7 தடவைகள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய கிரிக்‍கெட் அணி, 4 தொடர்களில் வெற்றியை ஈட்டியுள்ளது. இதில் 2 தொடர்களில் தோல்வியைத் தழுவியுள்ளதுடன், ஒரு தொடர் சமநிலையில் முடிவடைந்துள்ளது.

2011 ஆம் ஆண்டுக்குப் பிறகு அவுஸ்திரேலியா, இலங்கையில் ஒரு டெஸ்ட் தொடரை கூட வெல்லவில்லை. ஒரே ஒரு போட்டியில் மாத்திரமே வென்றுள்ளது.

https://www.virakesari.lk/article/205131

Edited by ஏராளன்
வோர்ன்- முரளி

  • ஏராளன் changed the title to இலங்கை - அவுஸ்திரேலிய வோர்ன் - முரளி டெஸ்ட் தொடர் இன்று ஆரம்பம்
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஐசிசி உலக டெஸ்ட் சம்பயின்ஷிப்பில் 3ஆம் இடத்தை அடையும் குறிக்கோளுடன் அவுஸ்திரேலியாவை இலங்கை எதிர்கொள்ளும் - அணித் தவைவர் தனஞ்சய

Published By: VISHNU   28 JAN, 2025 | 09:30 PM

image
 

(நெவில் அன்தனி)

ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பில் 3ஆம் இடத்தை அடையும் குறிக்கோளுடன் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக காலி சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் நாளை ஆரம்பமாகவுள்ள 2 போட்டிகள் கொண்ட வோர்ன் - முரளிதரன் டெஸ்ட் கிரிக்கெட் தொடரை எதிர்கொள்ளவுள்ளதாக ஊடவியலளர்களிடம் இலங்கை அணித் தலைவர் தனஞ்சய டி சில்வா தெரிவித்தார்.

Copy_of_254A8829.jpg

காலி விளையாட்டரங்க மைதான வெளியில் இன்று பிற்பகல் நடைபெற்ற ஊடக சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்தபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

'நடப்பு ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் சுழற்சியில் (2023 - 2025) 3ஆம் இடத்தை அடைவதே எமது இலக்கு. இந்த தொடருக்கான சுழற்சி பருவகாலத்தை நாங்கள் சாதுரியமாக எதிர்கொள்ளவில்லை. பாகிஸ்தானுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற தொடரில் நாங்கள் அடைந்த தோல்வியே டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதி ஆட்ட வாய்ப்பு எம்மைவிட்டு நழுவிச் சென்றதற்கான முக்கிய காரணமாகும். அது கடந்துபோன விடயம். அவுஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் முழுமையாக வெற்றிபெற்று மூன்றாம் இடத்தை அடைவதே எமது இலக்கு' என தனஞ்சய டி சில்வா கூறினார்.

ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பில் தற்போது 45.45%புள்ளிகளுடன் 5ஆம் இடத்தில் உள்ள இலங்கை, ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பின் கடைசி தொடரில் அவுஸ்திரேலியாவை 2 - 0 என்ற ஆட்டக் கணக்கில் முழுமையாக வெற்றிகொண்டால் 53.85% புள்ளிகளைப் பெற்று 3ஆம் இடத்திற்கு முன்னேறும்.

இந் நிலையில் அவுஸ்திரேலிய அணியை வெற்றிகொள்ள முடியும் என நம்புகிறீர்களா என அவரிடம் கேட்டபோது,

'அவுஸ்திரேலிய அணி சமபலம்வாய்ந்தது. ஆனால், மிகத் திறமையாக விளையாடினால் எமக்கு அனுகூலமான முடிவு கிடைக்கும். அவுஸ்திரேலியாவுக்கு எதிராக 2022இல் கடைசியாக இதே மைதானத்தில் நடைபெற்ற 2 போட்டிகள் கொண்ட தொடர் துரதிர்ஷ்டவசமாக 1 - 1 என சமநிலையில் முடிவடைந்தது. எனினும் 2016இல் நடைபெற்ற தொடரில் நாங்கள் முழுமையாக (3 - 0) வெற்றிபெற்றிருந்தோம். இந்த இரண்டு தொடர்களிலும் விளையாடிய வீரர்கள் அணியில் இடம்பெறுகின்றனர். எனவே அந்த அனுபவத்துடன் நாங்கள் சிறப்பாக விளையாடி வெற்றிபெற முயற்சிப்போம்.

'இந்த வருடம் இலங்கைக்கு 4 டெஸ்ட் போட்டிகள் மாத்திரமே கிடைத்துள்ளது. இது எமது கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட விடயம். ஆனால், எங்களுக்கு நிறைய டெஸ்ட் வாய்ப்புகள் வழங்கப்படுவது சரி என்பதை எமது திறமை மூலம் நிரூபிப்போம். அதற்காக போட்டிகள் நடைபெறாத காலத்தில் டெஸ்ட் போட்டிகளை ஏற்பாடு செய்து விளையாடுவது பலன் தரக்கூடியதாக இருக்கும்' எனவும் அவர் தெரிவித்தார்.

இந்த மைதானம் சுழல்பந்துவீச்சாளர்களுக்கு சாதகமானபோதிலும் முதல் நாளிலிருந்தே அவ்வாறு இருக்கும் என எதிர்பார்க்க முடியாது, ஆனால், 3ஆம், 4ஆம், 5ஆம் நாட்களில் சுழல்பந்துவீச்சுக்கு சாதகமாக அமையலாம் என தனஞ்சய டி சில்வா மேலும் குறிப்பிட்டார்.

இலங்கையும் அவுஸ்திரேலியாவும் நாளைய தினம் போட்டி ஆரம்பிப்பதற்கு முன்னரே விளையாடவுள்ள 11 வீரர்களை அறிவிக்கவுள்ளன.

உபாதையிலிருந்து மீளாமல் இருக்கும் பெத்தும் நிஸ்ஸன்க முதலாவது டெஸ்ட் போட்டியில் விளையாட மாட்டார் எனவும் இரண்டாவது போட்டியில் பெரும்பாலும் அவர் விளையாடுவார் எனவும் தனஞ்சய டி சில்வா மேலும் தெரிவித்தார்.

பெத்தும் நிஸ்ஸன்கவுக்கு பதிலாக ஓஷத பெர்னாண்டோ ஆரம்ப வீரராக விளையாடவுள்ளார். அத்துடன் ப்ரபாத் ஜயசூரிய, நிஷான் பீரிஸ் அல்லது ரமேஷ் மெண்டிஸ் ஆகிய 3 சுழல்பந்துவீச்சாளர்கள் அல்லது அவர்களில் இருவர் இறுதி அணியில் இடம்பெறுவர் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, இலங்கைக்கு எதிரான உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரில் புதிய ஆரம்ப ஜோடி அறிமுகமாகும் என்பதை அவுஸ்திரேலியாவின் பதில் அணித் தலைவர் ஸ்டீவன் ஸ்மித் இன்று பகல் உறுதிசெய்தார்.

உஸ்மான் கவஜாவின் ஆரம்பத் துடுப்பாட்ட ஜோடியாக ட்ரவிஸ் ஹெட் விளையாடுவார் என அவர் குறிப்பிட்டார்.

அதேவேளை, இந்தியாவுக்கு எதிரான போர்டர் - காவஸ்கர் டெஸ்ட் தொடரில் அறிமுகமான நேதன் மெக்ஸ்வீனி, சாம் கொன்ஸ்டாஸ், போ வெப்ஸ்டர் ஆகிய மூவரும் இலங்கையுடனான டெஸ்ட் தொடரில் விளையாடுவார்கள்  எனவும்    விக்கெட் காப்பளார் ஜொஷ் இங்லிஸ் டெஸ்ட் அறிமுகம் பெறுவார்  எனவும்  எதிர்பார்க்கப்படுகிறது.

குழாம்கள்

இலங்கை: திமுத் கருணாரட்ன, ஓஷத பெர்னாண்டோ, தினேஷ் சந்திமால், ஏஞ்சலோ மெத்யூஸ், தனஞ்சய டி சில்வா (தலைவர்), கமிந்து மெண்டிஸ், குசல் மெண்டிஸ், ரமேஷ் மெண்டிஸ், நிஷான் பீரிஸ், ப்ரபாத் ஜயசூரிய, மிலான் பெர்னாண்டோ, லஹிரு குமார, விஷ்வா பெர்னாண்டோ, அசித்த பெர்னாண்டோ, அறிமுக வீரர்களான சொனால் தினுஷ மற்றும் லஹிரு உதார, சதீர சமரவிக்ரம, ஜெவ்றி வெண்டசே.

அவுஸ்திரேலியா: ஸ்டீவன் ஸ்மித் (தலைவர்), ட்ரவிஸ் ஹெட், உஸ்மான் கவாஜா, மானுஸ் லபுஷேன், அலெக்ஸ் கேரி, ஜொஷ் இங்லிஷ், நேதன் லயன், சாம் கொன்ஸ்டாஸ், நேதன் மெக்ஸ்வீனி, சோன் அபொட், கூப்பர் கொனொலி, போ வெப்ஸ்டர், ஸ்கொட் போலண்ட், மெத்யூ குனேமான், டொட் மேர்பி, மிச்செல் ஸ்டார்க்.

https://www.virakesari.lk/article/205166

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையுடனான 1ஆவது டெஸ்ட்: கவாஜா, ஸ்மித் அபார சதங்கள் குவிப்பு; அவுஸ்திரேலியா 330-2 விக்., ஸ்மித் 10000 டெஸ்ட் ஓட்டங்கள் பூர்த்தி

Published By: VISHNU   29 JAN, 2025 | 06:30 PM

image

(நெவில் அன்தனி)

இலங்கைக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையில் காலி சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் இன்று புதன்கிழமை (29) ஆரம்பமான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதலாம் நாள் ஆட்டம் மழையினால் தடைப்பட்டு முடிவுக்கு வந்தபோது அவுஸ்திரேலியா அதன் முதல் இன்னிங்ஸில் 2 விக்கெட்களை மாத்திரம் இழந்து 330 ஓட்டங்களைக் குவித்திருந்தது.

2901_usman_kawaja_in_action.png

ஆரம்ப வீரர் உஸ்மான் கவாஜா, பதில் அணித் தலைவர் ஸ்டீவன் ஸ்மித் ஆகிய இருவரும் மிகவும் பொறுப்புணர்வுடன் துடுப்பெடுத்தாடி குவித்த ஆட்டம் இழக்காத சதங்கள், ட்ரவிஸ் ஹெட் பெற்ற அரைச் சதம் என்பன அவுஸ்திரேலியாவை பலமான நிலையில் இட்டுள்ளன.

2901_josh_inglis_debut_with_family_membe

இப் போட்டியை 9999 டெஸ்ட் ஓட்டங்களுடன் எதிர்கொண்ட ஸ்டீவன் ஸ்மித் முதலாவது ஓட்டத்தைப் பெற்றபோது 10000 டெஸ்ட் ஓட்டங்களைப் பூர்த்திசெய்து பலத்த பாராட்டைப் பெற்றார்.

ரிக்கி பொன்டிங் (13378 ஓட்டங்கள்), அலன் போர்டர் (11174), ஸ்டீவ் வோ (10927) ஆகியோரைத் தொடர்ந்து அவுஸ்திரேலியா சார்பாக 10000 ஓட்டங்களைப் பூர்த்திசெய்த நான்காவது வீரரானார் ஸ்டீவன் ஸ்மித். தனது 115 டெஸ்ட் போட்டியில் விளையாடும் அவர் மொத்தமாக 10103 ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.

இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியாவுக்கு உஸ்மான் கவாஜா, ட்ரவிஸ் ஹெட் ஆகிய இருவரும் முதல் விக்கெட்டில் 92 ஓட்டங்களைப் பகிர்ந்து ஸ்திரமான ஆரம்பத்தை  இட்டுக்கொடுத்தனர்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் தடவையாக ஆரம்ப வீரராக களம் இறங்கிய ட்ரவிஸ் ஹெட் 57 ஓட்டங்களைப் பெற்றார்.

அவரைத் தொடர்ந்து மானுஸ் லபுஷேன் 20 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். உஸ்மான் கவாஜாவும் மானுஸ் லபுஸ்ஷேனும் 2ஆவது  விக்கெட்டில் 43 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.

அதன் பின்னர் உஸ்மான் கவாஜா, ஸ்டீவன் ஸ்மித் ஆகிய இருவரும் பிரிக்கப்படாத 3ஆவது விக்கெட்டில் ஜோடி சேர்ந்து 195 ஓட்டங்களைப் பகிர்ந்து அவுஸ்திரேலியாவை மிகவும் பலமான நிலையில் இட்டனர்.

உஸ்மான் கவாஜா 210 பந்துகளை எதிர்கொண்டு 10 பவுண்டறிகள், ஒரு சிக்ஸ் உட்பட 147 ஓட்டங்களுடனும் ஸ்டீவன் ஸ்மித் 188 பந்துகளை எதிர்கொண்டு 10 பவுண்டறிகள், ஒரு சிக்ஸ் அடங்கலாக 104 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதுள்ளனர்.

தனது 79ஆவது டெஸ்டில் விளையாடும் கவாஜா 16ஆவது சதத்தையும் 115ஆவது டெஸ்டில் விளையாடும் ஸ்மித் 35ஆவது சதத்தையும் பூர்த்திசெய்தனர்.

பந்துவீச்சில் ப்ரபாத் ஜயசூரிய, ஜெவ்றி வெண்டசே ஆகிய இருவரும் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

https://www.virakesari.lk/article/205273

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

டெஸ்ட் அரங்கில் 10 ஆயிரம் ஓட்டங்களை கடந்தார் ஸ்மித்!

அவுஸ்திரேலிய கிரிக்கெட் நட்சத்திரம் ஸ்டீவ் ஸ்மித் (Steve Smith) சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் 10 ஆயிரம் ஓட்டங்களை எட்டிய 15 ஆவது வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

காலியில் தற்சமயம் நடைபெறும் இலங்கை அணியுடான டெஸ்ட் போட்டியின் போது அவர் இந்த மைல்கல்லை எட்டினார்.

35 வயதான அவர் இந்த மாத தொடக்கத்தில் சிட்னியில் இந்தியாவுக்கு எதிரான தனது சொந்த டெஸ்டில் ஐந்து இலக்கங்கள் கொண்ட மைல்கல்லைத் தவறவிட்டதால் 9,999 ஓட்டங்களுடன் இருந்தார்.

இந்த நிலையில், இன்று புதன்கிழமை ஆரம்பமான இலங்கையுடனான இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் டிராவிஸ் ஹெட் மற்றும் மார்னஸ் லாபுஷாக்னே ஆகியோர் ஆட்டமிழந்த பிறகு கிரீஸுக்கு வந்தார் ஸ்மித்.

அவர் தான் எதிர்கொண்ட முதல் பந்தில் சிங்கிள் ஓடத்தை எடுத்து டெஸ்ட் அரங்கில் 10 ஆயிரம் ஓட்டங்களை எட்டினார்.

ஆலன் போர்டர், ஸ்டீவ் வா மற்றும் ரிக்கி பாண்டிங் ஆகியோருக்குப் பின்னர் இந்த சாதனையை எட்டிய நான்காவது அவுஸ்திரேலிய வீரர் ஸ்மித் ஆவார்.

அதேநேரம், இலங்கையுடான முதல் டெஸ்ட்டில் ஸ்மித் சற்று முன்னர் மொத்தமாக 179 பந்துகளை எதிர்கொண்டு சதமும் விளாசியுள்ளார்.

https://thinakkural.lk/article/315067

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸிற்காக 654 ஓட்டங்கள்

அவுஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸிற்காக 654 ஓட்டங்கள்

இலங்கைக்கு எதிராக காலி சர்வதேச கிரிக்கட் மைதானத்தில் நடைபெறும் முதலாவது டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி அதன் முதலாவது இன்னிங்ஸிற்காக 654 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

இன்றைய இரண்டாம் நாளில் அவுஸ்திரேலிய அணி 6 விக்கெட்டுக்களை இழந்து 654 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்ட வேளையில் ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது.

அவுஸ்திரேலிய அணி சார்பாக அதிகபட்சமாக உஸ்மான் கவாஜா 232 ஓட்டங்களையும், அணித்தலைவர் ஸ்டீவன் ஸ்மித் 141 ஓட்டங்களையும், ஜொஷ் இங்லிஸ் 102 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

இலங்கை அணியின் பந்தவீச்சில் பிரபாத் ஜெயசூரிய மற்றும் ஜெப்ரி வெண்டர்சே ஆகியோர் தலா 3 விக்கட்டுக்கள் வீதம் கைப்பற்றினர்.

https://tamil.adaderana.lk/news.php?nid=199530

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கவாஜா இரட்டைச் சதம், அறிமுகப் போட்டியில் இங்லிஸ் சதம்; இலங்கையை பந்தாடியது அவுஸ்திரேலியா இக்கட்டான நிலையில் இலங்கை

Published By: VISHNU   30 JAN, 2025 | 08:03 PM

image

(நெவில் அன்தனி)

சுழல்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளம் என கருதப்படும் காலி சர்வதேச கிரிக்கெட் விளையாடரங்கில் நடைபெற்றுவரும் இலங்கைக்கு எதிரான முதலாவது வோர்ன் - முரளிதரன் கிண்ண டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா 6 விக்கெட்களை இழந்து 654 ஓட்டங்களைக் குவித்திருந்தபோது துடுப்பாட்டத்தை நிறுத்திக்கொண்டது.

3001_osman_kawaja_maiden_double_ton.jpg

முதல் இரண்டு தினங்கள் தட்டையாகக் காட்சிகொடுத்த ஆடுகளத்தில் அவுஸ்திரேலியா கணிசமான ஓட்டங்களைக் குவித்தது. ஆனால், இலங்கை துடுப்பெடுத்தாடியபோது நிலைமை மாறி ஆடுகளம் பந்துவீச்சுக்கு சாதகமாக திரும்ப, அவுஸ்திரேலியா 3 விக்கெட்களைக் கைப்பற்றி ஆட்டத்தில் தனது ஆதிக்கத்தை பலப்படுத்திக்கொண்டது.

3001_josh_inglis_celebrate.png

பதிலுக்கு துடுப்பெடுத்தாடும் இலங்கை போட்டியின் இரண்டாம் நாளான இன்றைய தினம் மாலை மழையினால் ஆட்டம் நிறுத்தப்பட்டபோது அதன் முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட்களை இழந்து 44 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தடுமாறிக்கொண்டிருந்தது.

3001_josh_inglis_century_on_debut.jpg

இதற்கு அமைய முதல் இன்னிங்ஸில் இன்னும் 7 விக்கெட்கள் மீதமிருக்க அவுஸ்திரேலியாவை விட 610 ஓட்டங்களால் இலங்கை பின்னிலையில் இருக்கிறது. பலோ ஒன்னை தவிர்ப்பதாக இருந்தால் இலங்கை அதன் முதல் இன்னிங்ஸில் மேலும் 410 ஓட்டங்ளைப் பெறவேண்டும். அது சாத்தியப்படும் என எதிர்பார்க்க முடியாது.  

2901_josh_inglis_debut_with_family_membe

ஓஷத பெர்னாண்டோ (7), திமுத் கருணாரட்ன (7), ஏஞ்சலோ மெத்யூஸ் (8) ஆகிய மூவரே ஆட்டம் இழந்தவர்களாவர்.

கமிந்து மெண்டிஸ் 13 ஓட்டங்களுடனும் தினேஷ் சந்திமால் 9 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருப்பதுடன் அவர்கள் இருவரும் நாளைய மூன்றாம் நாள் ஆட்டத்தில் பொறுப்புடன் துடுப்பெடுத்தாடி முதல் ஒரு மணித்தியாலத்திற்குள் ஆட்டமிழக்காமல் இருக்கவேண்டும்.

பந்துவீச்சில் மிச்செல் ஸ்டார்க், மெத்யூ குணேமான், நேதன் லயன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.

போட்டியின் இரண்டாம் நாளான இன்று காலை தனது முதல் இன்னிங்ஸை 2 விக்கெட் இழப்புக்கு 330 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த அவுஸ்திரேலியா கணிசமான மொத்த எண்ணிக்கையைக் குவித்தது.

தனது துடுப்பாட்டத்தை 104 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த ஸ்டீவன் ஸ்மித் 251 பந்துகளில் 12 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 141 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார்.

ஸ்டீவன் ஸ்மித் 3ஆவது விக்கெட்டில் கவாஜாவுடன் 266 ஓட்டங்களைப் பகிர்ந் து  அணியை பலமான நிலையில் இட்டார்.

மறுபக்கத்தில் மிகவும் பொறுமையுடன் துடுப்பெடுத்தாடிய உஸ்மான் கவாஜா, 352 பந்துகளில் 16 பவுண்டறிகள், ஒரு சிக்ஸுடன் 232 ஓட்டங்களைக் குவித்தார்.

இதன் மூலம் இலங்கை மண்ணில் இரட்டைச் சதம் குவித்த முதலாவது அவுஸ்திரேலியர் என்ற வரலாற்றுச் சாதனையை கவாஜா நிலைநாட்டினார்.

தென் ஆபிரிக்காவுக்கு எதிராக சிட்னி கிரிக்கெட் விளையாட்டரங்கில் 2023ஆம் ஆண்டு நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் கவாஜா ஆட்டம் இழக்காமல் 195 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது மழையினால் அவுஸ்திரேலியா தனது இன்னிங்ஸை நிறுத்திக்கொண்டது. இதனால் கவாஜாவால் இரட்டைச் சதத்தை பெறமுடியாமல் போனது.

ஆனால், காலி சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் இரட்டைச் சதம் குவித்து அந்தக் குறையை கவாஜா நிவர்த்திசெய்துகொண்டார்.

இதேவேளை, உஸ்மான் கவாஜா, ஜொஷ் இங்லிஸ் ஆகிய இருவரும் 4ஆவது விக்கெட்டில் 146 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை மேலும் பலப்படுத்தினர்.

அறிமுக வீரரான போதிலும் அனுவம்வாய்ந்தவர்போல் அதிரடியாகத் துடுப்பெடுத்தாடிய ஜொஷ் இங்லிஸ் 94 பந்துகளில் 10 பவுண்டறிகள், ஒரு சிக்ஸுடன் 102 ஓட்டங்களைப் பெற்று 5ஆவதாக ஆட்டம் இழந்தார்.

அவரது மேற்கு அவுஸ்திரேலிய கிரிக்கெட் பயிற்றுநர் அடம் வோக்ஸ் 2015இல் அறிமுக வீரராக டெஸ்ட் சதம் குவித்த பின்னர் அறிமுகப் போட்டியில் சதம் குவித்த அவுஸ்திரேலிய வீரர் என்ற பெருமையை இங்லிஸ் பெற்றுக்கொண்டார்.

அத்துடன் மைக்கல் க்ளார்க், ஷோன் மார்ஷ் ஆகியோருக்குப் பின்னர் ஆசிய மண்ணில் அறிமுக வீரராக சதம் குவித்த மூன்றாவது அவுஸ்திரேலிய வீரரானார் ஜொஷ் இங்லிஸ்.

ஜொஷ் இங்லிஸ் சதம் குவித்தபோது அவரது பெற்றோரும் காலி சர்வதேச அரங்கில் போட்டியை இரசித்துக்கொண்டிருந்தனர்.

பெற்றோர் முன்னிலையில் சதம் குவிக்க கிடைத்ததை பெரும் பாக்கியமாக கருதுவதாகவும் பெருமகிழ்ச்சி அடைவதாகவும் இன்னிங்ஸ் நிறைவில் இங்லிஸ் கூறினார்.

அதன் பின்னர் அலெக்ஸ் கேரி, போ வெப்ஸ்டர் ஆகிய இருவரும் 6ஆவது விக்கெட்டில் 59 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.

போ வெப்ஸ்டர் 23 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார்.

அவுஸ்திரேலியா முதல் இன்னிங்ஸை நிறுத்திக்கொண்டபொது, அலெக்ஸ் கேரி 46 ஓட்டங்களுடனும் மிச்செல் ஸ்டார்க் 19 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.

பந்துவீச்சில் ஜெவ்றி வெண்டசே 182 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ப்ரபாத் ஜயசூரிய 193 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

இப் போட்டியில் அசித்த பெர்னாண்டோ, நிஷான் பீரிஸ், ப்ரபாத் ஜயசூரிய, ஜெவ்றி வெண்டசே ஆகிய நான்கு பந்துவீச்சாளர்ளை மாத்திரமே இலங்கை அணித் தலைவர் தனஞ்சய டி சில்வா பயன்படுத்தினார். அவரது இந்த செயல் இரசிகர்கள் மத்தியில் பெரும் வியப்பையும் அதிருப்தியையும் தோற்றுவித்தது.

61 டெஸ்ட் போட்டிகளில் 40 விக்கெட்களை வீழ்த்தியுள்ள தனஞ்சய டி சில்வா ஏன் தன்னை பந்துவீச்சில் பயன்படுத்திக்கொள்ள வில்லை என்ற கேள்வியை எழவைத்துள்ளது.

பகுதிநேர பந்துவீச்சாளர் கமிந்து மெண்டிஸையும் அவர் பயன்படுத்தவில்லை.

குறைந்தது பத்து ஓவர்களாவது இருவரும் பந்துவீசியிருக்கலாம் என்பது கிரிக்கெட் விமர்சகர்களின் அபிப்பிரயாமாகும்.

எதிரணி பலமான நிலையில் இருக்கும்போது சில துணிச்சலான தீர்மானங்களை அணித் தலைவர் எடுக்க வேண்டும் என்பதற்கு சிறந்த உதாராணமாக விளங்கியவர்கள் அர்ஜுன ரணதுங்க, அரவிந்த டி சில்வா  ஆகியோராவர். 

அதேபோன்று தனஞ்சய டி சில்வாவும் எதிர்காலத்தில் துணிச்சலுடன் செயற்படுவது வரவேற்கத்தக்கதாகும்.

https://www.virakesari.lk/article/205372

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 136 ஓட்டங்கள் : அவுஸ்திரேலியாவைவிட 518 ஓட்டங்கள் பின்னிலையில்

31 JAN, 2025 | 09:55 PM
image

(நெவில் அன்தனி)

அவுஸ்திரேலியாவுக்கு எதிராக காலி சர்வதேச விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் முதலாவது வோர்னர் - முரளிதரன் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாளான இன்று பகல்போசன இடைவேளைக்கு சற்று முன்னர் கடும் மழை பெய்ததால் மூன்றாம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்ததுடன் இலங்கை அதன் முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்களை இழந்து 136 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

இதன்படி முதல் இன்னிங்ஸில் மேலும் 5 விக்கெட்கள் மாத்திரம் மீதம் இருக்க அவுஸ்திரேலியாவை விட 518 ஓட்டங்களால் இலங்கை பின்னிலையில் இருக்கிறது.

போட்டியின் மூன்றாம் நாளான இன்று காலை தனது முதல் இன்னிங்ஸை 3 விக்கெட் இழப்புக்கு 44 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த இலங்கை மேலும் இரண்டு விக்கெட்களை இழந்து இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டது.

கடந்த வருடம் துடுப்பாட்டத்தில் அசத்தி, ஐசிசியின் வளர்ந்துவரும் வீரர் விருதை வென்ற கமிந்து மெண்டிஸ் தனது சொந்த மைதானத்தில் திறமையை வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் 15 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.

தினேஷ் சந்திமாலும் அணித் தலைவர் தனஞ்சய டி சில்வாவும் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி 5ஆவது விக்கெட்டில் 40 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது தனஞ்சய டி சில்வா 22 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.

அதன் பின்னர் தினேஷ் சந்திமாலும் குசல் மெண்டிஸும் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி மொத்த எண்ணிக்கையை 136 ஓட்டங்களாக உயர்த்தியபோது மழை பெய்ததால் ஆட்டம் தடைப்பட்டது.

மிகத் திறமையாகவும் பொறுமையாகவும் துடுப்பெடுத்தாடிவரும் தினேஷ் சந்திமால் 115 பந்துகளை எதிர்கொண்டு 63 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். குசல் மெண்டிஸ் ஆட்டம் இழக்காமல் 10 ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.

பந்துவீச்சில் மிச்செல் ஸ்டாக் 13 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் மெத்யூ குனேமான் 48 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்

இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா 6 விக்கெட்களை இழந்து 654 ஓட்டங்களைப் பெற்று துடுப்பாட்டத்தை நிறுத்திக்கொண்டது.

உஸ்மான் கவாஜா 232 ஓட்டங்களையும் ஸ்டீவன் ஸ்மித் 141 ஓட்டங்களையும் ஜொஷ் இங்லிஸ் 102 ஓட்டங்களையும்  பெற்று அவுஸ்திரேலியாவை பலப்படுத்தி இருந்தனர்.

https://www.virakesari.lk/article/205473

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முதல் போட்டியில் இன்னிங்ஸ் தோல்வியினைத் தழுவிய இலங்கை வீரர்கள்

Australia tour of Sri Lanka 2025 

சுற்றுலா அவுஸ்திரேலியா மற்றும் இலங்கை கிரிக்கெட் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலியா இன்னிங்ஸ் மற்றும் 242 ஓட்டங்களால் அபார வெற்றியினைப் பதிவு செய்திருப்பதோடு, இரு போட்டிகள் கொண்ட தொடரிலும் 1-0 என முன்னிலை அடைந்துள்ளது.

காலியில் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் நேற்று (31) மழையின் காரணமாக நிறைவுக்கு வந்த நிலையில், தமது முதல் இன்னிங்ஸில் துடுப்பாடி வந்த இலங்கை அணி 136 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்து காணப்பட்டிருந்தது. இலங்கை அணி சார்பில் களத்தில் நின்ற தினேஷ் சந்திமால் 63 ஓட்டங்களை பெற்றிருக்க, குசல் மெண்டிஸ் 10 ஓட்டங்களை எடுத்திருந்தார்.

இன்று போட்டியின் நான்காம் நாளில் முதல் இன்னிங்ஸ் ஆட்டத்தினை தொடர்ந்த இலங்கை அணியினர் குறுகிய இடைவெளிகளில் தம்முடைய எஞ்சிய விக்கெட்டுக்கள் அனைத்தினையும் பறிகொடுத்து 52.2 ஓவர்களுக்கு 165 ஓட்டங்கள் மாத்திரம் பெற்றனர்.

இலங்கை அணியின் துடுப்பாட்டம் சார்பாக தினேஷ் சந்திமால் அதிகபட்சமாக 09 பௌண்டரிகளுடன் 72 ஓட்டங்கள் பெற்றார். ஆஸி. பந்துவீச்சில் மெதிவ் குஹ்னமேன் 63 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை சாய்க்க, நதன் லயன் 3 விக்கெட்டுக்களை சுருட்டியிருந்தார்.

இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் பெற்ற ஓட்டங்கள் போதாது என்கிற காரணத்தினால் அவர்கள் மீண்டும் பலோவ் ஒன் முறையில் மீண்டும் ஆடப்பணிக்கப்பட்டதோடு, இரண்டாம் இன்னிங்ஸிலும் மோசமான ஆட்டத்தினை வெளிப்படுத்தி 54.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 242 ஓட்டங்கள் பெற்று போட்டியில் படுதோல்வி அடைந்தனர்.

இலங்கை அணியின் இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டம் சார்பாக ஜெப்ரி வன்டர்செய் தன்னுடைய கன்னி டெஸ்ட் அரைச் சதத்தோடு 47 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் 7 பௌண்டரிகள் அடங்கலாக 53 ஓட்டங்கள் எடுத்தார். மறுமுனையில் அஞ்செலோ மெதிவ்ஸ் 41 ஓட்டங்கள் பெற்றார்.

அவுஸ்திரேலிய பந்துவீச்சில் மீண்டும் சிறப்பாக செயற்பட்ட மெதிவ் குஹ்னமென் மற்றும் நதன் லயன் ஜோடி தலா 4 விக்கெட்டுக்கள் வீதம் கைப்பற்றி தமது தரப்பு வெற்றியினை உறுதி செய்தது. போட்டியின் ஆட்டநாயகனாக உஸ்மான் கவாஜா தெரிவானார்.

போட்டியின் சுருக்கம்

RESULT
Sri Lanka
165/10 (52.2) & 247/10 (54.3)
 
Australia
654/6 (154)

AUSTRALIA WON BY AN INNINGS AND 242 RUNS

Updated at 03:18 PM 2025-02-01

https://www.thepapare.com/australia-tour-of-sri-lanka-2025-1st-test-day-04-report-tamil/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

குசல் மெண்டிஸின் அரைச் சதம் இலங்கைக்கு கைகொடுத்தது; ஆனால், பலமான நிலையை நோக்கி அவுஸ்திரேலியா; ஸ்மித், கேரி ஆகியோர் சதங்கள் குவித்து அசத்தல்

Published By: VISHNU   07 FEB, 2025 | 08:48 PM

image

(நெவில் அன்தனி)

இலங்கைக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையில் காலி சர்வதேச விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் வோர்ன் - முரளிதரன் மற்றும் ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியில் அமோக வெற்றியீட்டிய அவுஸ்திரேலியா, இரண்டாவது போட்டியிலும் பிடியை தன்பக்கம் திருப்பிக்கொண்டுள்ளது.

இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாளான  இன்றைய தினம் பதில் அனித் தலைவர் ஸ்டீவன் ஸ்மித் குவித்த தொடர்ச்சியான இரண்டாவது சதம், அலெக்ஸ் கேரி குவித்த சதம் என்பன அவுஸ்திரேலியாவை பலமான நிலையை நோக்கி நகர வைத்துள்ளது.

போட்டியின் இரண்டாம் நாளான  இன்று  காலை தனது முதல் இன்னிங்ஸை 9 விக்கெட் இழப்புக் 229 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த இலங்கை, 257 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது கடைசி விக்கெட்டை இழந்தது.

தனது துடுப்பாட்டத்தை 59 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த குசல் மெண்டிஸ், 139 பந்துகளை எதிர்கொண்டு 85 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழக்காதிருந்தார். அவர் மொத்தமாக 3 மணித்தியாலங்கள் 34 நிமிடங்கள் களத்தில் இருந்தார். 

அவரது துடுப்பாட்டமே இலங்கை அணியை ஓரளவு கௌரவமான நிலையில் இட்டது.

லஹிரு குமாரவுடன் கடைசி விக்கெட்டில் 33 ஓட்டங்களை குசல் மெண்டிஸ் பகிர்ந்தார்.

44 நிமிடங்கள் தாக்குப் பிடித்த லஹிரு குமார 20 பந்துகளை எதிர்கொண்டு 2 ஓட்டங்களை மாத்திரம் பெற்றிருந்தார்.

இலங்கையின் முதல் இன்னிங்ஸில் முதலாம் நாளன்று தினேஷ் சந்திமால் 74 ஓட்டங்களையும் திமுத் கருணாரட்ன 36 ஓட்டங்களையும் பெற்றிருந்தனர்.

0702_mitchel_starc.png

பந்துவீச்சில் மிச்செல் ஸ்டார்க் 37 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் மெத்யூ குனேமான் 63 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் நேதன் லயன் 96 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

இலங்கை முதல் இன்னிங்ஸில் பெற்ற 257 ஓட்டங்களுக்கு பதிலளித்து துடுப்பெடுத்தாடும் அவுஸ்திரேலியா போட்டியின் இரண்டாம் நாளான  இன்றைய  ஆட்ட நேர முடிவில் அதன் முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட்களை இழந்து 330 ஓட்டங்களைப் பெற்று வலுவான நிலையை நோக்கி நகர்ந்துள்ளது.

முதலாவது இன்னிங்ஸில் 7 விக்கெட்கள் மீதமிருக்க இலங்கையை விட 73 ஓட்டங்களால் அவுஸ்திரேலியா முன்னிலையில் இருக்கிறது.

அவுஸ்திரேலியாவின் ஆரம்பம் சிறப்பாக அமையவில்லை.

ட்ரவிஸ் ஹெட் (21), மானுஸ் லபுஷேன் (4) ஆகிய இருவரும் 5 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர்.

முதல் போட்டியில் இரட்டைச் சதம் குவித்து ஹீரோவான உஸ்மான் கவாஜா இந்தப் போட்டியில் 36 ஓட்டங்களுடன் வெளியேறினார். ஆனால், 3ஆவது விக்கெட்டில் பதில் அணித் தலைவர் ஸ்டீவன் ஸ்மித்துடன் கவாஜா 54 ஓட்டங்களைப் பகிர்ந்தார்.

0702_steve_smith.png

தொடர்ந்து ஸ்டீவன் ஸ்மித், அலெக்ஸ் கேரி ஆகிய இருவரும் நிதானத்துட னும்   சிறந்த நுட்பத்திறனுடனும் துடுப்பெடுத்தாடி பிரிக்கப்படாத 3ஆவது விக்கெட்டில் 239 ஓட்டங்களைப் பகிர்ந்து அவுஸ்திரேலியாவை நல்ல நிலையில் இட்டனர்.

0702_alex_carey.png

நிதானத்துடன் துடுப்பெடுத்தாடிவரும் ஸ்டீவன் ஸ்மித் 239 பந்துகளை எதிர்கொண்டு 9 பவுண்டறிகள், 1 சிக்ஸ் உட்பட 120 ஓட்டங்களுடனும் அலெக்ஸ் கேரி 156 பந்துகளை எதிர்கொண்டு 13 பவுண்டறிகள், 2 சிக்ஸ்கள் உட்பட 139 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதுள்ளனர்.

பந்துவீச்சில் நிஷான் பீரிஸ் 70 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

https://www.virakesari.lk/article/206112

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைக்கு எதிரான தொடரில் முழுமையான வெற்றியின் விளிம்பில் அவுஸ்திரேலியா

Published By: VISHNU    08 FEB, 2025 | 08:46 PM

image

(நெவில் அன்தனி)

இலங்கைக்கு எதிராக காலி சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் 2ஆவது வோர்னர் - முரளிதரன் டெஸ்ட கிரிக்கெட் போட்டியில் வெற்றியின் விளிம்பில் உள்ள அவுஸ்திரேலியா 2 போட்டிகள் கொண்ட தொடரையும் முழுமையாக கைப்பற்றும் நிலையில் இருக்கிறது.

போட்டியின் மூன்றாம் நாளான இன்றைய ஆட்ட நேர முடிவில் இலங்கை அதன் இரண்டாவது இன்னிங்ஸில் 8 விக்கெட்களை இழந்து 211 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

இதற்கு அமைய 2ஆவது இன்னிங்ஸில் 2 விக்கெட்கள் மாத்திரம் மீதம் இருக்க, அவுஸ்திரேலியாவைவிட 54 ஓட்டங்களால் இலங்கை முன்னிலையில் இருக்கிறது. போட்டியில் இன்னும் இரண்டு நாட்கள் மீதம் இருப்பதால் இலங்கை தோல்வியைத் தவிர்க்கும் என எதிர்பார்க்க முடியாது.

போட்டியின் மூன்றாம் நாளான இன்று காலை தனது முதல் இன்னிங்ஸை 3 விக்கெட் இழப்புக்கு 330 ஓட்டங்கள் என்ற நிலையிலிருந்து தொடர்ந்த அவுஸ்திரேலியா, சகல விக்கெட்களையும் இழந்து 411 ஓட்டங்களைக் குவித்தது.

மொத்த எண்ணிக்கை 350 ஓட்டங்களாக இருந்தபோது ஸ்டீவன் ஸ்மித் 131 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். 5 மணித்தியாலங்கள் துடுப்பெடுத்தாடிய ஸ்டீவன் ஸ்மித் 254 பந்துகளை எதிர்கொண்டு 10 பவுண்டறிகள், ஒரு சிக்ஸை விளாசி இருந்தார்.

தனது அறிமுகப் போட்டியில் சதம் குவித்த ஜொஷ் இங்லிஸ் (0) அதே மொத்த எண்ணிக்கையில் களம் விட்டகன்றார்.

அலெக்ஸ் கேரி நான்கரை மணித்தியாலங்கள் துடுப்பெடுத்தாடி 188 பந்துகளை எதிர்கொண்டு 15 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 156 ஓட்டங்களைப் பெற்றார்.

போ வெப்ஸ்டர் 31 ஓட்டங்களைப் பெற்றார்.

0802_prabath_jayasuriya.png

பந்துவீச்சில் ப்ரபாத் ஜயசூரிய 151 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களையும் நிஷான் பீரிஸ் 94 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ரமேஷ் மெண்டிஸ் 81 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

முதல் இன்னிங்ஸில் அவுஸ்திரேலியாவைவிட 157 ஓட்டங்களால் பின்னிலையில் இருந்த இலங்கை, இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பாட்டத்தில் பெரிய அளவில் பிரகாசிக்கவில்லை.

ஏஞ்சலோ மெத்யூஸ் மிகவும் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி 149 பந்துகளில் 76 ஓட்டங்களைப் பெற்றார்.

முதல் இன்னிங்ஸில் அரைச் சதம் குவித்த குசல் மெண்டிஸ் 48 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதுள்ளார்.

0802_angelo_mathews.png

ஏஞ்சலோ மெத்யூஸ், குசல் மெண்டிஸ் ஆகிய இருவரும் 6ஆவது விக்கெட்டில் பகிர்ந்த 70 ஓட்டங்களே இலங்கையின் இரண்டாவது இன்னிங்ஸில் சிறந்த இணைப்பாட்டமாக அமைந்தது.

அவர்கள் இருவரைவிட தனஞ்சய டி சில்வா (23), கமிந்து மெண்டிஸ் (14), திமுத் கருணாரட்ன (14), தினேஷ் சந்திமால் (12) ஆகியோர்   இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றனர்.

0802_mathew_khunemann.png

பந்து வீச்சில் மெத்யூ குனேமான் 52 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் நேதன் லயன் 80 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

இலங்கை அதன் முதல் இன்னிங்ஸில் 257 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

நான்காம் நாள் ஆட்டம் நாளை தொடரும்.

https://www.virakesari.lk/article/206182

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இரண்டாவது டெஸ்டில் இலங்கையை 9 விக்கெட்களால் வென்றது அவுஸ்திரெலியா; தொடரையும் முழுமையாகக் கைப்பற்றியது; திமுத் கருணாரட்ன ஓய்வு பெற்றார்

09 FEB, 2025 | 04:26 PM
image

(நெவில் அன்தனி)

காலி சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் இன்று ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்த இரண்டாவது வோர்ன் - முரளிதரன் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 9 விக்கெட்களால் இலங்கையை வெற்றிகொண்ட அவுஸ்திரேலியா தொடரை 2 - 0 என்ற ஆட்டங்கள் வித்தியாசத்தில் முழுமையாகக் கைப்பற்றியது.

இதன் மூலம் இலங்கையில் 2013க்குப் பின்னர் அவுஸ்திரேலியா முதல் தடவையாக டெஸ்ட் தொடர் ஒன்றில் முழுமையான வெற்றியை ஈட்டியுள்ளது.

0902_aus_clean_sweep_over_sl.png

இந்தப் போட்டியுடன் ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் 2023 -25 சுழற்சிக்கான டெஸ்ட் போட்டிகள் நிறைவுக்கு வந்தன.

காலியில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் ஓர் இன்னிங்ஸ் மற்றும் 242 ஓட்டங்களால் அமோக வெற்றியீட்டிய அவுஸ்திரேலியா, அதே மைதானத்தில் இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் ஆதிக்கம் செலுத்தி வெற்றியீட்டியது.

இரண்டாவது டெஸ்ட் போட்டியின் நான்காம் நாளான இன்று காலை தனது இரண்டாவது இன்னிங்ஸை 8 விக்கெட் இழப்புக்கு 211 ஓட்டங்களில் இருந்து தொடர்ந்த இலங்கை சகல விக்கெட்களையும் இழந்து 231 ஓட்டங்களைப் பெற்றது.

தனது இன்னிங்ஸை 48 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த குசல் மெண்டிஸ் இப் போட்டியில் தனது இரண்டாவது அரைச் சதத்தைப் பூர்த்திசெய்து 50 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.

குசல் மெண்டிஸின் பிடியை எடுத்த ஸ்டீவன் ஸ்மித், 200 டெஸ்ட் பிடிகளை எடுத்த முதலாவது அவுஸ்திரேலிய வீரரானார்.

நேற்றைய தினம் ஏஞ்சலோ மெத்யூஸ் 76 ஓட்டங்களைப்    பெற்றிருந்தார். 

அவர்கள் இருவரைவிட தனஞ்சய டி சில்வா (23) மாத்திரமே 20 ஓட்டங்களுக்கு மேல் பெற்றார்.

பந்துவீச்சில் மெத்யூ குனேமான் 63 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் நேதன் லயன் 84 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் போ வெப்ஸ்டர் 6 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

75 ஓட்டங்களை வெற்றி இலக்காக் கொண்டு இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா ஒரு விக்கெட்டை இழந்து 75 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

இப் போட்டி முடிவுடன் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பில் இறுதி அணிகள் நிலையில் அவுஸ்திரேலியா 67.54% புள்ளிகளுடன் தொடர்ந்தும் இரண்டாம் இடத்தில் உள்ளது. தென் ஆபிரிக்கா 69.44% புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறது. இலங்கை 38.46% புள்ளிகளுடன் 6ஆம் இடத்தில் உள்ளது.

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து திமுத் விடைபெற்றார்

இது இவ்வாறிருக்க, திமுத் கருணாரட்ன தனது கடைசி இன்னிங்ஸில் களத்தடுப்பில் ஈடுபட்டபோது அவரை கௌரவிக்கும் வகையில் தனஞ்சய டி சில்வா தலைமைப் பொறுப்பை அவரிடம் ஒப்படைத்திருந்தார்.

போட்டி முடிவில் தனது   பிரியாவிடை உரையை உணர்ச்சிபூர்வமாக ஆற்றிய திமுத் கருணாரட்ன,

'நான் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடத் தொடங்கியபோது, 100 டெஸ்ட்களைப் பூர்த்தி செய்யவேண்டும், 10,000 ஓட்டங்களைக் கடக்க வேண்டும் என்பதே எனது குறிக்கோளாக இருந்து. அதில் ஒரு பகுதியை (100 டெஸ்ட்கள்) நிறைவெற்றிவிட்டேன். ஆனால் மற்றைய பகுதியை (10,000 ஓட்டங்கள்) நிறைவு செய்யாதது மனதுக்கு சங்கடத்தைக் கொடுக்கிறது. மேலும் எனது குடும்பத்துடன் இருக்க விரும்புகிறேன், அவர்களுடன் நிறைய நேரத்தை செலவிடுவதை நான் தவறவிட்டேன். இனியும் தவறவிடமாட்டேன்'

திமுத் கருணாரட்ன,

'இது ஒரு நீண்ட கிரிக்கெட் பயணம். நான் எனது நண்பர்களுடன் கிரிக்கெட் அரங்கில் அதிக நேரத்தை செலவிட்டேன். ஆகையால் அவர்களிடம் இருந்து (கிரிக்கெட் அரங்கிலிருந்து) பிரிவதால் நான் உணர்ச்சிவசப்படுகிறேன். ஆனால் நான் எங்கு சென்றாலும், எப்போதும் அவர்களுக்கு ஆதரவாக இருப்பேன். எனது கிரிக்கெட் வாழ்க்கை குறித்து நான் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்;. எனது கிரிக்கெட் வாழ்க்கையில் என்னை ஆதரித்து உற்சாகமூட்டிய அனைவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்' எனவும் திமுத் கருணாரட்ன கூறினார்.

0902_dimuth_retires.png

எண்ணிக்கை சுருக்கம்

இலங்கை 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 257 (குசல் மெண்டிஸ் 85 ஆ.இ., தினேஷ் சந்திமால் 74, திமுத் கரணாரட்ன 36, ரமேஷ் மெண்டிஸ் 28, மிச்செல் ஸ்டார்க் 27 - 3 விக்., மெத்யூ குனேமான் 63 - 3 விக்., நேதன் லயன் 96 - 3 விக்.),

அவுஸ்திரேலியா 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 414 (அலெக்ஸ் கேரி 156, ஸ்டீவன் ஸ்மித் 131, உஸ்மான் கவாஜா 36, போ வெப்ஸ்டர் 31, ப்ரபாத் ஜயசூரிய 151 - 5 விக்., நிஷான் பீரிஸ் 94 - 3 விக்., ரமேஷ் மெண்டிஸ் 81 - 2 விக்.)

இலங்கை 2ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 231 (ஏஞ்சலோ மெத்யூஸ் 76, குசல் மெண்டிஸ் 50, தனஞ்சய டி சில்வா 23, மெத்யூ குனேமான் 63 - 4 விக்., நேதன் லயன் 84 - 4 விக்., போ வெப்ஸ்டர் 6 - 2 விக்.)

அவுஸ்திரேலியா (வெற்றி இலக்கு 75 ஓட்டங்கள்) 2ஆவது இன்: 75 - 1 விக். (உஸ்மான் கவாஜா 27 ஆ.இ., மானுஸ் லபுஷேன் 26 ஆ.இ., ட்ரவிஸ் ஹெட் 20, ப்ரபாத் ஜயசூரிய 20 - 1 விக்.)

ஆட்டநாயகன்: அலெக்ஸ் கேரி, தொடர்நாயகன்: ஸ்டீவன் ஸ்மித்.

0902_dimuth_karu_-_smith.jpg

https://www.virakesari.lk/article/206243

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சரித் அசலன்க சதம் குவித்து அசத்தல்; 214 ஓட்டங்களைத் தக்கவைத்து ஆஸி.யை வீழ்த்தியது இலங்கை

Published By: VISHNU    12 FEB, 2025 | 06:57 PM

image

(ஆர். பிரேமதாச அரங்கிலிருந்து நெவில் அன்தனி)

அவுஸ்திரேலரியாவுக்கு எதிராக கொழும்பு, ஆர். பிரேமதாச விளையாடரங்கில் இன்று புதன்கிழமை நடைபெற்ற முதலாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 214 ஓட்டங்களைத் தக்கவைத்து   49 ஓட்டங்களால்  இலங்கை அபார வெற்றியீட்டியது.

Charith_Asalanka_Celebrate_Century__2_.j

மிகவும் நெருக்கடியான வேளையில் அணித் தலைவர் சரித் அசலன்க குவித்த அபார சதம், துனித் வெல்லாலகே, ஏஷான் மாலிங்க ஆகியோருடன் முறையே 6ஆவது, 9ஆவது விக்கெட்களில் அவர் பகிர்ந்த மிகவும் பெறுமதிமிக்க இணைப்பாட்டங்கள் என்பன இலங்கையின் வெற்றிக்கு வழிவகுத்தன.

அது மட்டுமல்லாமல் மஹீஷ் தீக்ஷன, அசித்த பெர்னாண்டோ, துனித் வெல்லாலகே, ஆகியோரின் துல்லியமான பந்துவீச்சுகளும் இலங்கையின் வெற்றியில் முக்கிய பங்காற்றின.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த இலங்கை 46 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 214 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

முன்வரிசை வீரர்கள் கவனக் குறைவு காரணமாக தங்களது விக்கெட்களைத் தாரை வார்த்தனர். 15ஆவது ஓவரில் இலங்கை 5 விக்கெட்களை இழந்து 55 ஓட்டங்களை மாத்திரம் பெற்றிருந்தது.

குசல் மெண்டிஸ் (19), ஜனித் லியனகே (11) ஆகிய இருவரே இரட்டை இலக்கங்களைப் பெற்றனர்.

இதன் காரணமாக இலங்கை 100 ஓட்டங்களை அண்மிக்குமா என்ற சந்தேகம் எழுந்தது.

Dunith_Wellalage_Batting__1_.jpg

ஆனால், 19 வயதுக்குட்பட்ட இலங்கை அணியின் முன்னாள் தலைவர் துனித் வெல்லாலகே அனுபவசாலிபோல் ஆக்ரோஷமாகத் துடுப்பெடுத்தாடி 30 ஓட்டங்களைப் பெற்று அணிக்கு தெம்பூட்டினார்.. அவர் சரித் அசலன்கவுடன் 6ஆவது விக்கெட்டில் பெறுமதிமிக்க 67 ஓட்டங்களைப் பகிர்ந்தார். அதுவே இலங்கைக்கு திருப்புமுனையாக அமைந்தது.

தொடர்ந்து மேலும் 2 விக்கெட்கள் அடுத்தடுத்து சரிந்ததுடன் 33ஆவது ஓவரில் இலங்கை 8 விக்கெட்களை இழந்து 135 ஓட்டங்களை மாத்திரம் பெற்று பெரும் இக்கட்டான நிலையில் இருந்தது.

8ஆவது விக்கெட் வீழ்ந்தபோது சரித் அசலன்க 73 பந்துகளில் 50 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

அதன் பின்னர் சரித் அசலன்க மற்றையவர்களுக்கு முன்னுதாரணமாக புத்திசாதுரியத்துடனும் துணிச்சலுடனும் துடுப்பெடுத்தாடி அபார சதம் குவித்து அணியை பெரு வீழ்ச்சியிலிருந்து மீட்டெடுத்தார்.

அவரது இரண்டாவது 50 ஓட்டங்கள் 41 பந்துகளில் பெறப்பட்டது.

சரித் அசலன்க 126 பந்துகளில் 14 பவுண்டறிகள், 5 சிக்ஸ்கள் அடங்கலாக 127 ஓட்டங்களைக் குவித்தார்.

அத்துடன் 9ஆவது விக்கெட்டில் ஏஷான் மாலிங்கவுடன் மிகவும் பெறுமதியான 79 ஓட்டங்களைப் பகிர்ந்தார். மாலிங்க 26 பந்துகளில் ஒரு ஓட்டத்துடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

பந்துவீச்சில் சோன் அபொட் 61 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஆரொன் ஹார்டி 13 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் நேதன் எலிஸ் 23 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஸ்பென்சர் ஜோன்சன் 44 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

215 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா 33.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 165 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

ட்ரவிஸ் ஹெட், க்லென் மெக்ஸ்வெல் ஆகியோருக்கு ஓய்வு கொடுத்தது தவறு என்பதை இந்தத் தோல்வி அவுஸ்திரேலியர்களுக்கு உணர்த்தியிருக்கும் என்பது நிச்சயம்.

இலங்கையைப் போன்றே அவுஸ்திரேலியாவும் ஆரம்பத்தில் பெரும் தடுமாற்றத்தை எதிர்கொண்டது.

Asitha_Fernando_Celebrate_Wicket__3_.jpg

அசித்த பெர்னாண்டோ, மஹீஷ் தீக்ஷன, துனித் வெல்லாலகே ஆகியோரின் இலக்கை நோக்கிய துல்லியமான பந்துவீச்சுகளின் காரணமாக அவுஸ்திரேலிய அணித் தலைவர் ஸ்டீவன் ஸ்மித் (12) உட்பட நால்வர் முதல் பத்து ஓவர்களுக்குள் ஆட்டம் இழந்தனர். (31 - 4 விக்.)

அனுபவசாலிகளான மானுஸ் லபுஷேன் (15), அலெக்ஸ் கேரி (41) ஆகிய இருவரும் 5ஆவது விக்கெட்டில் 52 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். ஆனால் இருவரும் 2 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர்.

இந் நிலையில் ஆரோன் ஹார்டி, சோன் அபொட் (20) ஆகிய இருவரும் 7ஆவது விக்கெட்டில் 41  ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு சிறு உற்சாகத்தைக் கொடுத்தனர். ஆனால் அது பலன் கொடுக்கவில்லை.

நிதானத்துடன் துடுப்பெடுத்தாடிய ஆரோன் ஹார்டி 32 ஓட்டங்களைப் பெற்றார். 10ஆம் இலக்க வீரர் அடம் ஸம்ப்பா 20 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

பந்துவீச்சில் மஹீஷ் தீக்ஷன 40 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் அசித்த பெர்னாண்டோ 23 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் துனித் வெல்லாலகே 33 ஓட்டங்களுக்கு 2  விக்கெட்களையும் சரித் அசலன்க, வனிந்து ஹசரங்க ஆகிய இருவரும் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

ஆட்டநாயகன்: சரித் அசலன்க.

https://www.virakesari.lk/article/206532

  • கருத்துக்கள உறவுகள்

டெஸ்ட் போட்டியில் ப‌டு தோல்வி

ஒரு நாள் தொட‌ரை இல‌ங்கை அணி க‌ண்டிப்பாய் வெல்லும்..............................

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு நாளுக்கு முத‌லே சொன்ன‌ மாதிரி இல‌ங்கை அணி ஒரு நாள் தொட‌ரை வென்று விட்டின‌ம்..................வாழ்த்துக்க‌ள் இல‌ங்கை அணிக்கு...................

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆஸி.யை வீழ்த்தி ஒருநாள் தொடரை வென்ற இலங்கை!

கொழும்பு, ஆர்.பிரேமதாச மைதானத்தில் இன்று (14) நடைபெற்ற அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணியானது 174 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது.

இந்த வெற்றியின் மூலம் இலங்கை அணியானது இரு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2:0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இன்று காலை 10.00 மணிக்கு ஆரம்பமான இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணியானது முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானித்தது.

அதன்படி, குசல் மெண்டீஸின் சதம் மற்றும் அணித் தலைவர் சரித் அசலங்கவின் அதிரடியான துடுப்பாட்டத்தினால் இலங்கை நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவுக்கு 4 விக்கெட் இழப்புக்கு 281 ஓட்டங்களை பெற்றது.

துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்பில் அதிகபடியாக குசல் மெண்டீஸ் 101 (115) ஓட்டங்களையும், சரித் அசலங்க 78 (66) ஓட்டங்களையும், நிஷான் மதுஷங்க 51 (70) ஓட்டங்களையும் அதிகபடியாக பெற்றனர்.

282 ஓட்டம் எடுத்தால் வெற்றி என்ற இலக்கினை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி இலங்கையின் பந்து வீச்சுக்களில் நிலை தடுமாறியது.

ஆரம்பம் முதலே விக்கெட்டுக்களை அடுத்தடுத்து பறிகொடுத்த அவுஸ்திரேலியா இறுதியாக 24.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 107 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

இதனால், இலங்கை அணி 174 ஓட்டங்களினால் வெற்றி பெற்று தொடரை 2:0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

அவுஸ்திரேலிய அணி சார்பில் அதிகபடியாக அணித் தலைவர் ஸ்டீவ் ஸ்மித் மாத்திரம் 29 ஓட்டங்களை எடுத்தார்.

பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் துனித் வெல்லலாகே 4 விக்கெட்டுகளையும், அஷித பெர்னாண்டோ மற்றும் வனிந்து ஹசரங்க ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும் அதிகபடியாக கைப்பற்றினர்.

போட்டியின் ஆட்டநாயகனாக குசல் மெண்டீஸ் தெரிவானதுடன், சரித் அசலங்க தொடரின் ஆட்டநாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார்.

https://thinakkural.lk/article/315218

  • கருத்துக்கள உறவுகள்

இல‌ங்கை அணி சொந்த‌ ம‌ண்ணில் ந‌ல்லா விளையாடுகின‌ம்..............ம‌ற்ற‌ நாடுக‌ளுக்கு சென்று விளையாடும் போது தோல்விய ச‌ந்திக்கின‌ம் இப்போது உள்ள‌ இல‌ங்கை அணி

 

ப‌ழைய‌ ஜாம்ப‌வாங்க‌ள் விளையாடும் போது வெளி நாடுக‌ளில் ப‌ல‌ வெற்றிக‌ளை பெற்ற‌வை........................

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, வீரப் பையன்26 said:

இல‌ங்கை அணி சொந்த‌ ம‌ண்ணில் ந‌ல்லா விளையாடுகின‌ம்..............ம‌ற்ற‌ நாடுக‌ளுக்கு சென்று விளையாடும் போது தோல்விய ச‌ந்திக்கின‌ம் இப்போது உள்ள‌ இல‌ங்கை அணி

 

ப‌ழைய‌ ஜாம்ப‌வாங்க‌ள் விளையாடும் போது வெளி நாடுக‌ளில் ப‌ல‌ வெற்றிக‌ளை பெற்ற‌வை........................

3 வகை ஆட்டங்களிலும் இந்தியணிதான் மிக சிறந்த அணி,  ஆனாலும் உபகண்டத்திற்கு வெளியே போனால் உப்புக்கண்டம் போட்டு அனுப்பிவிடுகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, vasee said:

3 வகை ஆட்டங்களிலும் இந்தியணிதான் மிக சிறந்த அணி,  ஆனாலும் உபகண்டத்திற்கு வெளியே போனால் உப்புக்கண்டம் போட்டு அனுப்பிவிடுகிறார்கள்.

உண்மை தான்

ஆனால் இந்தியா அணி 

டுபாய் மைதான‌ங்க‌ளில் ப‌ல‌ ம‌ச் விளையாடி இருக்கின‌ம்

பாப்போம் சாதிக்கின‌மா அல்ல‌து அடி வேண்டின‌மா......................

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, வீரப் பையன்26 said:

உண்மை தான்

ஆனால் இந்தியா அணி 

டுபாய் மைதான‌ங்க‌ளில் ப‌ல‌ ம‌ச் விளையாடி இருக்கின‌ம்

பாப்போம் சாதிக்கின‌மா அல்ல‌து அடி வேண்டின‌மா......................

துபாயும் உபகண்ட ஆடுகளம்தான்.

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, vasee said:

துபாயும் உபகண்ட ஆடுகளம்தான்.

பாப்போம் அண்ணா இந்த‌ தொட‌ர் மூன்று கிழ‌மைக்குள் முடிந்து விடும்....................இந்தியா ம‌ண்ண‌ க‌வ்வுதா வெல்லுதான்னு முடிவில் தெரியும்...............

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.