Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பறையிசைக்கும் மக்களின் குலதெய்வம் வல்லியக்கன்

தி. செல்வமனோகரன்
 
First slide

18 நிமிட வாசிப்பு

March 8, 2024 | Ezhuna

பின்காலனியச் சூழலில் ஈழத்துப்புலம் தனக்கான தனித்த அடையாளங்களை, அவற்றைப் பேணுதலுக்கான அக்கறையை கொண்டமைந்ததாக இல்லை. பொருளாதாரம், சமயம், பண்பாடு என எல்லாத் தளங்களிலும் ‘மேனிலையாக்கம்’ எனும் கருத்தாக்கத்தை நோக்கிய பயணத்தையே மேற்கொண்டு வருகின்றது. இத்தகைய பின்னணியில் தன்னடையாளப் பேணுகை குறித்த பிரக்ஞையை ஏற்படுத்துதலின் ஒரு பகுதியாகவே ‘ஈழத்து நாட்டார் தெய்வங்கள்’ எனும் இக்கட்டுரைத் தொடர் அமையப்பெறுகிறது. இதில் ஈழத்தில் மட்டும் சிறப்புற்றிருக்கும் தெய்வங்கள், ஈழத்தில் தனக்கான தனித்துவத்தைப் பெற்றிருக்கும் தெய்வங்கள் என்பன கவனத்தில் கொள்ளப்படுகின்றன. இத்தொடரானது தெய்வங்களை அடையாளப்படுத்துவதோடு அவற்றின் வரலாறு, சமூகப் பெறுமானம், சடங்கு, சம்பிரதாயங்கள், தனித்துவம், இன்றைய நிலை, சமூகத்துக்கும் அதற்குமான இடைவினைகள் முதலான பல்வேறு விடயங்களை உள்ளடக்கியதாக அமைகிறது. கள ஆய்வின் வழி நிகழ்த்தப்படும் இவ்வாய்வு விவரணம், வரலாறு எனும் ஆய்வு முறைகளின்படி எழுதப்படுகிறது. இவ்வாய்வுக்கான தரவுகள் நூல்களின் வழியும் நேர்காணல், உரையாடல், செய்திகள் என்பவற்றின் வழியும் பெறப்பட்டு சமூக விஞ்ஞானப் பார்வையினூடாக ஆக்கப்படுகின்றது.

கருவிக்கையாட்சி, மொழிப்பயன்பாடு என்பவற்றின் வழி மனிதனின் பகுத்தறிவுச் சிந்தனை தொழிற்படத் தொடங்கியது. அப்போதே இயற்கையின் அதீத ஆற்றல் மனிதனுக்கு அதன் மீது பயத்தையும், பக்தியையும் உருவாக்கியது. தன்னை மீறிய மேம்பட்ட சக்தி உண்டு என்ற பிரக்ஞையும் நம்பிக்கைகயும் மேலோங்கத் தொடங்கின. இயற்கை மீதான பயபக்தி இயற்கை வழிபாடாகவும் பின் இயற்கைத் தெய்வ வழிபாடாகவும் பரிணாமமுற்றது. நிலத்தெய்வங்கள், குலதெய்வங்கள், அச்சத்தால் உருவாக்கப்பட்ட பல தெய்வங்கள் எனப் பல்வகைத் தெய்வங்கள் உருவாக்கம் பெற்றன. காலதேச வர்த்தமானத்திற்கேற்ப தெய்வங்களின் முதன்மையும் மாறத்தொடங்கியது. அவ்வாறு மாறாத, மக்களின் அன்றாட வாழ்வோடு பின்னிப்பிணைந்த மரபார்ந்த தெய்வங்கள், நாட்டார்தெய்வங்கள், கிராமியத் தெய்வங்கள் எனப்பட்டன. 

காலனித்துவத்தின் வழி ஈழத்துப்புலத்தில் உருவான நவீனத்துவம், ஆங்கிலமயப்பட்ட, மேலைத்தேய கருத்தாக்கங்களையும், வாழ்வியலையும், கலாசார பண்பாடுகளையும் வியப்புடன் நோக்கி அவையே மேலானவை எனும் மனப்பதிவைத் தந்தன. அரச உத்தியோகம், மத்தியதர வர்க்கத்தைப் பெருகச் செய்தது. சுதேச கலை, கலாசாரம், பண்பாடு, பொருளாதாரம், தத்துவம், சமய மரபுகள் போன்றவற்றை கீழ்மையானவையாக எண்ணவும் புறமொதுக்கவும் செய்தன. பின்காலனிய உலகமயமாதல் சூழல், ஒற்றைப் பண்பாட்டை அவாவி நிற்கிறது. இது சிறுசிறு இனக்குழுக்களினது தனித்த அடையாளங்கள் சிதைவதற்கும், வரலாறற்றுப் போதலுக்கும் இருப்புச் சார்ந்த கேள்விகளுக்கும் உட்படுத்தலை அவதானிக்கச் செய்தன. இதன் வழி ‘மாற்றுச்சிந்தனை’ முதன்மையுறத் தொடங்கியது. பண்பாட்டுப் பன்மைத்துவத்தின் முக்கியத்துவம், சுதேச அறிவியல், சமயம், தத்துவம், கலாசார மரபுகளின் வழி வரலாறு பற்றிய பிரக்ஞை என்பன மீளக் கட்டமைக்கப்படத் தொடங்கின.   

மனிதனுக்கு உள்ளார்ந்த சிந்தனை (abstract thinking) தோன்றிய காலத்திலிருந்து இயற்கை சார் உணர்வு ஏற்பட்டது. அதன்வழி இயற்கை, வழிபாட்டுப் பொருளானது. இயற்கைப் பொருட்கள்  அனைத்தும் கடவுளர் ஆயின. இவ்வியற்கையின் சக்தியே இயக்கன்; இதனை சமூக மானிடவியலாளர்கள் ‘அனிமிசன்’ என்கின்றார்கள். இயற்கையின் கடவுளர் தன்மை இயக்கன் – இயக்கியாயின், இயக்கனும் இயக்கியும் கொடூரமும், அழகும், அன்பும் நிறைந்தவையாக எடுத்தாளப்படுகின்றன. இந்தியாவின் பிரதான சமயங்களான இந்து சமயம், பௌத்தம், சமணம் போன்றன இயக்கன் – இயக்கியை உள்வாங்கின. குறிப்பாக ஒரு கடவுளை முதன்மைப்படுத்தும் போது அது இயக்கர்களின் தலைவனாக – இயக்கிகளின் தலைவியாகக் காட்டப்பட்டது. சிவன் பூதநாதரானார். இலங்கையின் வரலாற்று நூல்களில் சிங்கதேசக் குடிமகனான விஜயன் இயக்கியாகிய குவேனியைத் திருமணம் செய்தமையும் தலைவனானமையும் இவ்வாறாகவே இருக்கலாம். 

தமிழர் மரபிலும் ஏனையோர் மரபிலும் இயக்கி பெற்ற இடத்தை இயக்கன் பெறவில்லை. அதேபோல இலங்கை வரலாற்றில் நாகர்கள் பெற்ற வரலாற்றுத்தடத்தை இயக்கர்கள் பெறவில்லை. விஜயனால் குவேனி கைவிடப்பட்ட பின் அவர்களின் குழந்தைகள் வளர்ந்து தகாப்புணர்ச்சி வழி குடும்பங்கள் உருவானதாகவும் அவர்களே வேடுவர்கள் எனப்படுவதாகவும் கூறப்படுகின்றது. இலங்கையின் ஆதிவேடர்களின் தெய்வம் ‘யக்கு’ என்பது குறிப்பிடத்தக்கது. ஈழத்தமிழர் வாழ்வில் நிலமானியமுறையும் அதன்வழி கெடித்திருந்த சாதியமும் சமூகவியல் தளத்தில் முக்கியமானவை. தொழில்ரீதியான அடுக்குமுறை பேதத்தைத் இது தந்தது; கலை, பண்பாடு, பொருளாதாரம், சமயம் என எல்லாத் தளங்களிலும் செல்வாக்குச் செலுத்தியது. இதன் வழி சாதியத் தெய்வங்களும், சாதியக் கோயில்களும் உருவாகின. பறையிசைக்கும் குடிகளின் தெய்வமே வல்லியக்கன்.  

வல்லியக்கன்  

இயற்கை – இயக்க – இயக்கன் – இயக்கி வழிபாட்டின் வழி உருவான வழிபாடாக இதனை இனங்காண்பதோடு ‘யக்’ வழிபாட்டோடும் இணைத்து இத்தெய்வம் பற்றிய முதன்மை ஆய்வினைச் செய்த பேராசிரியர் இரகுபதி கருத்துரைக்கின்றார். இயற்கை வழிபாடு உலகப் பொதுமைக்குமானது. இயற்கை எனும் தமிழ்ச் சொல் இயற்கை வழிபாட்டைக் குறித்து, அது பின் இயக்க வழிபாடாக இயக்கன் – இயக்கி எனும் ஆண், பெண் வழிபாடாக வளர்நிலை பெற்றிருக்க வேண்டும். அதனை ‘யக்’ வழிபாட்டோடு இணைத்தல் அவசியமற்றது.  ‘வல்லியக்கன்’ எனும் பெயர் பற்றி பல்வகை அனுமானங்கள் உண்டு. 

  1. வல்லி – இயக்கன் – வல்லி எனும் பறையிசைக்கும் மக்களின் மூதாதையால் வழிபடப்பட்ட தெய்வம், வல்லியக்கன் எனக் கூறப்பெற்றிருக்கலாம். ஏனெனில் வல்லி, வல்லியப்பன் எனும் பெயர்கள் இன்றும் பறையிசைக்கும் மக்களிடம் செல்வாக்குடன் காணப்படுகிறது. வல்லியின் வழித்தோன்றல்கள் வல்லியக்கனை வழிபடுகின்றனர்.  
  1. வலிமை பொருந்திய இயக்கன் என்ற நம்பிக்கையின் வழி உருவான பெயராக இருக்கலாம். 
  1. வள்ளிபுனம் – வள்ளி புலம் – வல்லி புரம் வள்ளி – வல்லி எனும் அடிப்படையில் வல்லியின் தலைவன் முருகனைக் குறிப்பதாக எழுந்து பின்பு அது தனித்தெய்வமாக உருப்பெற்றிருக்கலாம். வள்ளி வேடுவர் பெண் என்பதும் இலங்கை வரலாற்றில் இயக்கர் வேடுவர்களாக சித்தரிக்கப்படுவதும் கவனிக்கத்தக்கது. 

ஈழத்தின் வல்லியக்கன் வழிபாட்டிடங்கள்

ஈழத்தில் பறையிசைக்கும் மக்கள் வாழுமிடங்கள் எங்கும் வல்லியக்கன் வழிபாடு இருந்திருக்க வேண்டும் எனக் கூறப்பட்டாலும் அதற்குப் போதிய சான்றுகள் இல்லை.  

“கன்னாபுரம் நின்று அந்நாள் நடந்து  
அறிதரிய ஏழாலை அதில் மீதுறைந்து  
புன்னாலைக்கட்டுவன் அச்செழுகோப்பாய் புத்தூர்
நீர்வேலி வறுத்தலைவிளான் பளையிரண்டு  
மன்னார் சுழிபுரம் சங்கானை தோலவரம்  
மற்றுமுள்ள தேசமெல்லாங் கடந்து
சுன்னாகம் வாழவரு வல்லியக்கராசனை தொழுவார்க்கு  
வல்வினைநோய் தொலைந்து போகும்”

இப்பாடலை கிறிஸ்தவப் பாதிரியார் சுவாமி ஞானப்பிரகாசர் தன் கட்டுரையில் எடுத்தாண்டுள்ளார். ஏழாலை வல்லியக்கன் கோயில் பூசாரி வல்லியக்கன் ‘பத்தாசியாக’ கோயில் நிகழ்வுத் துண்டுப் பிரசுரத்தில் அச்சடித்து வெளியிட்டுள்ளார். இது வாய்மொழிப் பாடலாக இருந்திருக்க வேண்டும். 

இப்பாடல் ஈழநிலத்தின் வடபுலத்தில் வல்லியக்கன் கோயில் இருந்த இடங்களைப் பட்டியற்படுத்துகின்றது. கன்னாபுரம், ஏழாலை, புன்னாலைக்கட்டுவன், அச்செழு, கோப்பாய், புத்தூர், வறுத்தலைவிளான், பளை இரண்டும், மன்னார், சுழிபுரம், சங்கானை, தொல்புரம், சுன்னாகம் என்பன அவையாகும். இவற்றுள் தெல்லிப்பழையில் ஆலயமுண்டு. கிளிநொச்சி மாவட்ட பளை, விடத்தற்பளை மற்றும் இயக்கச்சி பிரதேசங்களில் வல்லியக்கனைக் கண்டுபிடிக்க முடியவில்லை. சங்கானை கோயில் அழிக்கப்பட்டுவிட்டது. அது போலவே தொல்புரம், சுழிபுரம், சுன்னாகம், மன்னார் கோயில்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை. குடிசனப் பரவலாக்கத்தின் வழி உருவான வேலணை சின்னமடு, நவாலி, சண்டிலிப்பாய், இருபாலை, அச்செழுவின் புதியகோயில் போன்றன கள ஆய்வினூடாகப் புதிதாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.  

வல்லியக்கன் கோயில்கள் தனிக்காணிகளிலும் வீட்டு வளவுகளினுள்ளும் அமைந்துள்ளமை இது ஒரு குலதெய்வ வழிபாடு என்பதை உறுதிப்படுத்துகின்றது. கோயிலாக இல்லாமல் ஆலமரம், நாவல்மரம், மஞ்சவுண்ணா, பூவரசு போன்ற மரங்களின் கீழ் வல்லியக்கன் அமர்ந்திருந்தார். கல் – மயோசியன் கல் (வெள்ளைக்கல்) சூலம் போன்ற பருப்பொருட்களின் ரூபத்தில் அவர் வழிபடப்பட்டார். மரங்களின் கீழ் திறந்த வெளியிலும் சீமெந்துக் கட்டடங்களிலும் இக்கோயில்கள் அமைந்துள்ளன. இத்தெய்வத்தின் இணைத்தெய்வமாக முடி மன்னர் (கோண்டாவில், அச்செழு, ஏழாலை) காணப்படுகிறார். இதனை விட தற்காலத்தில் இணைத்தெய்வங்களாக காளி (நவாலி), விறுமர், ஐயனார் (கரவெட்டி) என்பன காணப்படுகின்றன.  

வழிபாட்டு முறைகள்  

வல்லியக்கனை வழிபடும் முறைகள் பிரதேச வழக்காறுகளுக்கேற்ப சிற்சில மாறுபாடுகளுடன் காணப்படுகின்றன. சில இடங்களில் நித்தம் ‘விளக்கு வைக்கும்’ வழக்கம் உண்டு. ஆனால் பல ஆலயங்களில் வெள்ளிக்கிழமை, விஷேட நாட்கள் போன்ற குறித்த நாட்களில் மட்டும் இவ்வழக்கம் காணப்படுகின்றது. எல்லாக் கோயில்களிலும் ‘வைகாசி விசாகம்’ மிகச்சிறப்பாகப் பொங்கல் வைத்துப் பூசித்து வழிபடப்படும் நாளாகக் காணப்படுகிறது. நாட்டார் தெய்வங்களுக்குப் பொதுவில் வைகாசி விசாகதினம் குளித்தியாக, பொங்கல் நாளாக, மடை நாளாக அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. 

இதன்னின்றும் மாறுபட்டு ஏழாலை வல்லியக்கனுக்கு சித்திரை மாத நான்காவது புதன்கிழமை விஷேடநாளாகக் கருதப்பட்டு மடைப்பண்டம் எடுக்கப்பட்டு பொங்கி வழிபடப்படுகின்றது. கரவெட்டி கோயிலில் பங்குனி கடைசிப்புதன் விஷேடநாளாகும். மடைப்பண்டம் எடுக்கும் மரபு எல்லா இடங்களிலும் காணப்படுகிறது. மடைப்பண்டம் எடுக்கும் முதல்நாள் ஆலயச்சூழல் தூய்மைப்படுத்தப்படும். ‘விளக்கு வைத்தல்’ நிகழும். விளக்கு வைப்பவர், பூசை செய்பவர் பறையிசைக்கும் மக்களில் ஒருவராக இருப்பார். இந்நிகழ்வின் பூசாரியாக அவர் திகழ்வார். ஆனைக்கோட்டை போன்ற சில கோயில்களில் வாய்கட்டிப் பூசை செய்யும் முறைமையும் உண்டு. இது கப்புறாளை (கதிர்காமம்), கப்பூகர் (மண்டூர்க்திர்காமம், செல்வச்சந்நிதி) எனும் வாய்கட்டி பூசை செய்யும் முறையின் செல்வாக்கால் வந்திருக்கக் கூடும்.

kappuralai

பொங்கலுக்கு உரிய பண்டங்கள், பாத்திரங்கள் இணைத் தெய்வங்களின் ஆலயங்களில் வைத்துப் பூசை செய்யப்பட்டு புனிதப்படுத்தப்பட்டு வல்லியக்கன் கோயிலுக்கு எடுத்துச் செல்லப்படும். மடைப்பண்டம் கொண்டுசெல்லப்படும் போது மடைப்பறை இசைக்கப்படும். ஆலயங்களின் நிகழ்வுகளுக்கு இசைக்கவெனத் தனிப்பறையும் தனியான ‘இசைப்பு’ முறையும் கலைஞர்களும் இருந்ததாக அறியமுடிகிறது. இது மங்கல இசையாக, பறை சாற்றுதலாகக் கூறப்படுகிறது. பலியிடும் வழக்கம் இருக்கவில்லை என எல்லா ஆலயக்காரர்களும் உறுதிபட உரைக்கின்றனர். கரவெட்டி கோயிலில் மட்டும் ஆலயத்துக்கு அப்பால் உள்ள சந்தியில் வைத்து மடைப்பண்டம் எடுப்பதாகவும் மடைப்பண்டம் எடுக்கும் போது ‘கோழியறுத்தல்’ எனும் பலி நிகழ்த்தப்படுவதாகவும் நேர்காணல் (சி.அருணகிரிநாதன், வயது 61) மூலம் அறிய முடிந்தது. வல்லியக்கனை வழிபடுதலினூடாக சந்ததி பெருக்கம், நோய் நொடியில் இருந்து விடுபடுதல் போன்ற நம்பிக்கைகள் காணப்படுகின்றன. தமது நேர்த்தி நிறைவுறும் போது நேர்த்திக்கடன் செலுத்தும் முறை காணப்படுகிறது. இது ‘தெய்வக்கடன்’ என்றே கூறப்படுகிறது. பொங்குதல், மடைபரவுதல் போன்றன அவற்றுட்சில. மட்சம், மாமிசம் படைப்பதில்லை. தற்போது காவடியெடுத்தல் போன்றனவும் நிகழ்த்தப்படுகின்றன. இவ்வாலய விஷேடதினங்களில் கலையாடி, குறிசொல்லல், திருநீறு போடுதல் போன்றனவும் நிகழ்த்தப்படுகின்றன.  

சமகாலப் பயில்வுகள் 

சாதிய ஒடுக்குமுறைகளுக்கு உள்ளாகி மிகவும் நசுக்கப்பட்ட நிலையில் தமது பொருளாதாரத்துக்கு மூலமாக இருந்த பறையை 1950 – 1970 இடையில் நடைபெற்ற முக்கிய நிகழ்வின் வழி உடைத்தும் எரித்தும் ‘இனி பறை இசைப்பதில்லை’ எனச் சபதம் செய்து ஈழத்தின் வடக்குப் பிரதேசத்தில் பல பிராந்தியங்களில் பறையிசைக்கும் தொழில் கைவிடப்பட்டது. பெருந்தெய்வவுருவாக்கம் – பெருங்கோயிற் பண்பாடு, சமஸ்கிருதமயமாக்கம் எனும் பிராமணர்க்குக் தம் கோயிலைக் கையளிக்கும் செயற்பாட்டின் வழி ஆலயங்களில் பறை வாத்தியம் வெளியேற்றப்பட்டு தவில் மங்கல வாத்தியமாக்கப்பட்டது. கிழக்கிலும் மலையகத்திலும் இன்றும் ஆலயங்களில் பறை ஓரளவேனும் இசைக்கப்படுகிறது. வடக்கில் செல்வச்சந்நிதி போன்ற ஒருசில ஆலயங்களில் பறையிசைக்கும் மக்களின் குலமல்லாத இறையடியவர் பறை ‘அறை’கிறார்.   

vallipuram

இவ்வாறான செயற்பாடுகளும் இலங்கையின் யாவருக்குமான இலவசக்கல்வி, இலவச உணவு, இலவச உடை, இலவச வைத்தியசாலை போன்ற செயற்றிட்டங்களும் எல்லாச் சமூகங்களையும் வலுப்படுத்தியது. அரசாங்க உத்தியோகத்தர்களை, நிலையான மாதச்சம்பளம், ஓய்வூதியம் பெறுகின்றவர்களை உருவாக்கியது. இவ்வாறு உருவான புதிய வர்க்கம் , உயர்சாதியல்லாத மக்களிடம் ‘சாதிய நீக்கம்’ – உறவு நீக்கம், அடையாள நீக்கம் எனும் உணர்வுகளை செயல்நிலைப்படுத்தத் தூண்டியது. இதற்கு பறையிசைக்கும் மக்களின்  படித்தவர்க்கமும் தப்பவில்லை. தம் குலமக்கள் இருந்த இடங்களை விட்டு நகரங்களையும் வேறு நிலங்களையும் நோக்கிப் பெயர்ந்தனர். குல தெய்வங்களைக் கைவிட்டனர்.  

இதன்வழி வல்லியக்கன், ‘சைவம் அகலக்காலூன்றி நின்ற நிலத்தில்’ வல்லிபுரத்தாழ்வார் ஆயினார். தாமே பூசைசெய்து வழிபட்ட வல்லியக்கனை பெருங்கோயில் வழி கட்டமைக்க முற்பட்டு சீதாராமசாஸ்திரிகளை நாடிய போது ‘வல்லி’ எனும் சொல்லை அடிப்படையாகக் கொண்டு கோண்டாவில் வல்லியக்கனை வல்லிபுர ஆழ்வாராக மாற்றினார். அக்கோயில் கும்பாபிஷேகம் நிகழ்ந்து பிராமணர் கோயிலாக்கப்பட்டது (பறையிசைக்கும் மக்கள் கருவறைக்குள் செல்லுதல் தடைப்பட்டது). இதன் வழி, தாம் மேற்சாதியானதாக அம்மக்கள் நம்புகின்றனர். இவ்வழி, வேலணை சின்னமடு வல்லியக்கன், நாராயணர் – கிருஷ்ணனாக மாற்றப்பட்டுள்ளார். இதனை அடிப்படையாகக் கொண்டு இரகுபதி, யாழ்ப்பாண சைவ உயர் சாதியினருக்கு எதிரான வைணவராக வல்லியக்கன் வழி பறையிசைமக்கள் மாறுவதாகவும், இதில் அம்பேத்கார் சிந்தனையின் சாயல் இருக்கக்கூடும் என்றும் கூறுகிறார் (இரகுபதி, பொ., 2006, பக்22 – 23). ஆனால் அச்செழுவிலுள்ள வல்லியக்கன் கடந்த 2021 ஆம் ஆண்டில் சிவபெருமானாக மாற்றப்பட்டுள்ளமை இக்கருத்துக்கு மாறானதாக, அம்பேத்கார் வழி சிந்திக்காது ‘மேனிலையாக்கம்’ எனும் கருத்தாக்க வழி நின்றதையே காட்டுகின்றது. இவ்வாறான மேனிலையாக்கங்கள் பிராமணரை முதன்மைப்படுத்துகிறது. மக்களை வெளித்தள்ளுகிறது. மடைப்பண்டம் எடுத்தல், மடைப் பறையிசைத்தல் முதலான பாரம்பரிய முறைகள், கலைகள், நம்பிக்கைகள் புறந்தள்ளப்பட்டு இல்லாதொழிக்கப்படுகிறது.  

selachanithi

சீமெந்துக் கற்களால் கட்டப்படட் வல்லியக்கன் கோயில்களில் விஷ்ணுவின் சங்குசக்கரம் (ஆனைக்கோட்டை) பிள்ளையார், முருகன் (சண்டிலிப்பாய்), விறுமர், ஐயனார் (கரவெட்டி) போன்ற சின்னங்கள், தெய்வங்கள் இடம்பிடித்து வருதலையும் சமஸ்கிருதமயமாதலுக்கான வெளி அண்மிப்பதையும் அவதானிக்க முடிகிறது. பறையிசை என்பது இருமரபுக் கோயில்களிலும் இல்லை என்பதும் கோயிற்பறை இல்லாது ஒழிந்து போனதையும் சாவுப்பறை வாசிப்பவர் மட்டுமே அங்கொன்றும் இங்கொன்றுமாக இருத்தலையும் அதுவும் தன் கலைப்பெறுமானத்தை இழந்து வருதலையும் சாவுப்பறையின் இடத்தை ‘பாண்ட்’ (Band) வாத்தியம் ஆக்கிரமித்து வருதலையும் அவதானிக்க முடிகிறது. பெரும்பாலான பறையிசைக்கும் மக்கள் சாதிய – தன்னடையாள நீக்கத்திற்காகவும் வேறுசில நம்பிக்கைகள், தேவைகள் என்பனவற்றுக்காகவும் கிறிஸ்தவத்திற்கு (குறிப்பாக புரட்டஸத்தாந்தம்) மாறிவருகின்றனர். ஆதிதிராவிடர்களுக்கான அடையாளங்கள், தெய்வங்கள், வழிபாட்டுமுறைகள், கலைகள் கைவிடப்படுகின்றன. சமாந்தரமாக, தமிழர் வரலாறு சிதைவுறுதலும் நிகழ்கிறது.  

நிறைவுரை   

பறையிசை இசைக்கும் கலைஞர்கள் சாதிய ஒடுக்குமுறையினின்றும் தாழ்வு மனப்பாங்கில் இருந்தும் விடுதலை பெற அவாவிநிற்றலின் வழி தன்னடையாளத்தைத் துறத்தல் நிகழ்கிறது. அதன் ஒரு அங்கமாக, ஈழத்தமிழர்களில் ஒரு பிரிவினரான ஆதித் தமிழர்களாக அடையாளப்படுத்தப்படும் பறையிசைக்கும் மக்கள், தம் குலதெய்வமான வல்லியக்கனை நாராயணனாகவும் சிவனாகவும் மாற்றி பெருந்தெய்வவழிபாட்டினுள்ளும் சமஸ்கிருதமயமாதலினுள்ளும் கலக்கச்செய்து மேனிலையாக்கம் பெற முயற்சிக்கின்றனர். வல்லியக்கனைக் கைவிடுகின்றனர். தம் சமயம் துறந்து கிறிஸ்தவத்திற்கு மாறி புது அடையாளத்தை உருவாக்குகின்றனர். உலகமயமாதலுள் ஒன்ற முற்படுகின்றனர். வரலாற்றாசிரியர்கள் ஈழத்தில் தமிழர், நாகர் வழி வந்தவர்கள் எனக் கூறுகின்றனர். இயக்கர் வரலாறு குவேனி வழி வேடுவருள் தொலைக்கப்பட்டது. இயக்கரை – வல்லியக்கரை வழிபடும் வழிபாட்டின் வழி தமிழர் வரலாற்றைச் சீரமைக்க வாய்ப்புள்ளது. அத்தோடு ஈழத்தில் மட்டுமே வல்லியக்கன் வழிபாடு நிலவி வருதலும் கவனத்திற்குரியதாகும்.

தொடரும்.

 

ஒலிவடிவில் கேட்க

14352 பார்வைகள் 


About the Author

 

யாழ்ப்பாண பல்கலைக்கழக இந்துக் கற்கைகள் பீடத்தின் சைவசித்தாந்த துறையின் முதுநிலை விரிவுரையாளராக தி. செல்வமனோகரன் திகழ்கிறார் . இந்திய மெய்யியல் கற்கை புலத்தில் கலாநிதிப் பட்டத்தை பெற்றுள்ளார். இந்துக்கற்கை புலம் சார்ந்து காஷ்மீர சைவமும் சைவ சித்தாந்தமும், இலங்கையில் சைவத்தமிழ் பண்பாட்டு வளர்ச்சியில் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி, நாயன்மார் பாடல்கள், தமிழில் மெய்யியல் எனும் நூல்களை எழுதியுள்ளார். பெறுதற்கரிதான இருபதுக்கும் மேற்பட்ட நூல்களை மீள்பதிப்புச் செய்துள்ளார். 'சொற்களால் அமையுலகு' என்னும் இவரது நூல் கலை, இலக்கியம் சார்ந்த விமர்சன நூலாகும்.
 

 

https://www.ezhunaonline.com/valliyakkan-the-god-of-the-people-who-play-parai/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மக்கள் மயப்பட்ட வைரவர் வழிபாடு

தி. செல்வமனோகரன்
 
First slide

April 14, 2024 | Ezhuna

அறிமுகம் 

இந்திய மண்ணில் தோற்றம் பெற்ற தொன்மைச் சமயங்களில் ஒன்றான சைவத்தின் தொன்மைப் பிரிவுகளில் ஒன்று வைரவம். இது வடநாட்டில் தோற்றம் பெற்றதாகவே பெரிதும் நம்பப்படுகிறது. காவல் தெய்வமாகச் சித்தரிக்கப்படும் வைரவரை சிவனின் அம்சமாகவும் மகனாகவும் புராணங்கள் கூறுகின்றன. இவர் பிரமனின் தலையைக் கொய்தவராகவும், வானவரிடம் கபாலத்தில் இரத்தத்தைப் பெற்றவராகவும், அந்தகாசுரனை வதைத்தவராகவும் சிறுதொண்டர் நாயனாரிடத்துப் பிள்ளைக்கறி பெற்றவராகவும் கூறப்படுகிறார். உக்கிரப் போர்த் தெய்வமாகச் சுட்டப்படுகின்ற இவருக்கு சோதிட நூல்களால் கலக நாளாகக் குறிப்பிடப்படும் செவ்வாய்க்கிழமையே, குறிப்பாகத் தைமாத செவ்வாய்க்கிழமை, உகந்த நாளாகவும் சிவந்த செவ்வரத்தம்பூ உகந்த மலராகவும் பரணி நட்சத்திரம் (போருடன் தொடர்புடையது) உரிய நட்சத்திரமாகவும் கூறப்படுகிறது. 

vairavar with dog

புராணங்கள், இவரை “மஹா வைரவர், கால வைரவர், உக்கிர வைரவர், வடுகநாதர், சட்டைநாதர்” எனப் பலவாறு சித்தரிக்கின்றன. சிவ பராக்கியம் எனும் நூல் அஷ்ட வைரவர்களைக் குறிப்பிடுகிறது. இவ் வைரவரின் தோற்றப் பொலிவு பற்றிப் பல விடயங்கள் கூறப்படினும் பொதுவில் கைகளில் கபாலம், தண்டம், தமருகம், சூலம் என்பவற்றை ஏந்தியரவாகக் கூறப்படுகிறார். உக்கிரப் பார்வை, கோரப் பற்கள், சிலம்பு, சிங்கினி மாலை, பாம்பு போன்றவைகளுடன் கூர்மையான வாள், திரிசூலம், பாசம், அங்குசம், வச்சரம், அக்கினி, கதை, வில், அம்பு, தண்டம், கபாலம், சங்கு, சக்கரம், உலக்கை போன்றவற்றுடன் விளங்குபவராகவும் கூறப்படுகிறார். நாய் வாகனத்தை (தெய்வஞாளி, சுவனம்) உடையவராகச் சித்தரிக்கப்படுகிறார். சாதாரணமாக ஒரு மரத்தின் கீழ் திரிசூல வடிவில் இருப்பது முதல் சகல ஆலயங்களிலும் பரிவார தெய்வமாகவும், வைரவர் கோயிலில் கர்ப்பக் கிரக மூர்த்தியாகவும், வீடுகளிலே காவல் தெய்வமாகவும், குல தெய்வமாகவும், எல்லைத் தெய்வமாகவும் வைரவர் வழிபாடு இடம்பெற்று வருகின்றது. இங்கு வைரவர் வழிபாடானது பண்டைய ஐதீகம் மற்றும் நம்பிக்கையின் அடிப்படையில் வழிபடப்பட்டு வருகின்றது. 

ஈழத்தில் வைரவர் வழிபாடு

ஈழத்து நாட்டாரியல் வழிபாட்டில் முக்கிய காவல் தெய்வமாக வைரவர் காணப்படுகின்றார். முத்தலை சூலத்தை வழிபட்ட மக்கள் அதனை காலனித்துவ காலத்தில் அந்நியரின் மேல் உள்ள பயத்தின் நிமித்தம் தேவை ஏற்படும் பொழுது கிறிஸ்தவ சிலுவையாகவும் (இரு தலைகளையும் மடித்து) பாவித்தனர். இச்சூலத்தை திறந்த வெளிகளில் உள்ள வேம்பு, அரசு, நாவல், ஆல், புளி, மருது போன்ற மரங்களில் கீழ் குத்தி வைத்து வழிபட்டனர். இவையே பின்னர் வைரவராக மாறி உருவ வழிபாட்டோடும் பின்னிப் பிணைந்துள்ளது. ஈழத்தில் வைரவர் வழிபாடு வடக்கு, கிழக்குப் பகுதிகளில் பெரும்பான்மையாக நாட்டாரியல் தெய்வமாகவும், பெருந்தெய்வமாகவும் வழிபடப்படுகின்றது. ஆகமம் சாராத வைரவர் வழிபாட்டிலே வீடுகளில், கோயில்களில், பயிர்ச்செய்கை நிலங்களில், மயானங்களில் இடம்பெறும் வைரவர் வழிபாடுகள் முக்கியம் பெற்றுக் காணப்படுகின்றன. இத் தெய்வத்திற்கு மடை பரவுதல் – வடை மாலை சாத்துதல், பொங்கல், மிருகபலி போன்றன செய்து வழிபடும் மரபு இற்றைவரை காணப்படுகிறது. அத்தோடு வைரவருக்கு பிரதேசப் பண்பாட்டுக் கூறுகளுக்கு இணங்கவும் வழிபாடியற்றப்படுகிறது.

vairavar under tree

காவல் தெய்வங்களை காணிக்குள் வைத்து வழிபடும் முறை பொதுவாக எல்லாப் பிரதேசங்களிலும் காணப்படுகின்றது. ஆனால் ‘வைரவன் பந்தல்’ அமைத்து வழிபடும் முறை மட்டக்களப்பு பிரதேசத்தவரின் தனித்துவமான முறையாகும். வைரவர் வழிபாட்டின் போது ஒவ்வொரு ஊருக்கும் ஏற்ற வகையில் வீட்டின் புறம்பாக, எதிர்ப்பக்கம் நோக்கிய வகையில் ‘வைரவர் பந்தல்கள்’ அமைக்கப்பட்டிருக்கும். நிரந்தரமாக அமைக்கும் பந்தலினைப் பலமான மரங்களினாலும், கற்களினாலும் வடிவமைப்பார்கள். தற்காலிக பந்தலினை வேம்பு மற்றும் பூவரசம் கம்பினை கொண்டு தட்டுப்பந்தல் வடிவில் அமைத்து தென்னம் ஓலைகளால் வேய்ந்து தென்னங் குருத்துக்களால் சுற்றி வளைத்து அலங்கரிப்பர். வீட்டில் உள்ள வைரவன் பந்தல்களிலே வருடாவருடம் குறித்த பரம்பரையினரை சேர்ந்தவர்களால் வைரவர் சடங்கானது மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இது “வைரவருக்குச் செய்தல்‟ எனப்படும். வீடுகளில் தீய சக்திகளின் பார்வையினால் தமது குடும்பத்திற்கு எந்தவித கெடுதலும் இடம்பெறாமல் இருப்பதற்காகவும், தமது வீட்டையும் குடும்ப உறுப்பினர்களையும் வைரவர் காப்பார் எனும் நம்பிக்கையிலும், நோய் நீக்கம், நீண்ட ஆயுள், சந்ததி விருத்தி, தனம், தானியம், செல்வ விருத்தி ஏற்படுவதற்காகவும் பாரம்பரியமாக வைரவர் வழிபாடு இடம் பெறுகின்றது.

வழிபாட்டு முறைகள்

இங்கு பெரும்பாலும் ஆதி வைரவரை அழைத்தே சடங்கு நடாத்தப்படுகின்றது. சில இடங்களில், வீடுகளில் கல்யாண வைரவர், கொங்கை வைரவர், திரிசூல வைரவர், கபால வைரவர், நரசிங்க வைரவர் போன்றோரை அழைத்தும் சடங்கு நடாத்தப்படும். சடங்கு இடம்பெறுவதற்கு முன்னர் தீட்டுக்கள் இன்றி புனிதத் தன்மையைப் பேணும் பொருட்டும், தீய சக்திகளின் பார்வை விலகும் பொருட்டும், மஞ்சள் நீர் தெளித்து வீட்டைக் கழுவி சுத்தம் செய்து சமுத்திர நீர் போன்ற புனித தீர்த்த நீரைத் தெளித்து, வீடு வளவுகளை காவல் செய்து வீட்டினுள் சாம்பிராணி, குங்கிலியம் போன்றவற்றினால் புகையிட்டு வீட்டு முன் வாசலில் வேப்பமிலைப் பத்திரத்தினாலான தோரணம் கட்டுவர். வைரவர் உக்கிரமான தெய்வம் ஆகையால் இரவு வேளைகளிலே இச் சடங்கானது இப்பிரதேசங்களில் நடாத்தப்படுகின்றது. சில இடங்களில் இச் சடங்கு இடம்பெறும் நாள் அன்று “அம்மனுக்குச் செய்தல்” எனும் “சர்க்கரை அமுது படைத்தல்” படையல் சடங்கானது பகல் வேளையும், இரவு வேளைகளில் “பேச்சியம்மனுக்கு” “பள்ளயச்சடங்கும்” நடைபெறும் வழக்காறு உண்டு. இவ் வழக்காற்று முறைகளின் போது உற்றார் உறவினர்கள், அயலவர்கள் குறித்த குடும்பத்தினருடன் இணைந்து சடங்கிற்கான பங்களிப்பினை மேற்கொள்வார்கள். இவ் வேளை சமூகத்தினர் இடையே பரஸ்பர தொடர்பு, ஒற்றுமை முதலான விழுமியப் பண்புகள் விருத்தியடைகின்றன. 

vairavar statue

வீடுகளில் வைரவருக்குச் சிலை அமைத்து வழிபடும் மரபு காணப்படுவதில்லை. திரிசூலம் அல்லது இரட்டைத் திரிசூலம், கல், தென்னம்பாளை, கமுகம் பாளை, செவ்விளநீர், கருங்காலிப் பொல்லு (தண்டம்) என்பன வைரவர் குறியீடாக வைக்கப்பட்டு “மடை வைத்தல்” சிறப்பாக இடம் பெறுகின்றது. வீடுகளில் பூசை வழிபாடானது குறித்த பரம்பரையைச் சேர்ந்த ஒருவரினாலோ அல்லது பூசகரை அழைத்தோ இடம்பெறும். மட்டக்களப்பு தெய்வ வழிபாட்டு முறையில் ஒவ்வொரு தெய்வத்திற்கும் விசேடமான மடைப் பொருட்கள் காணப்படுகின்றன. அரிசிமா ரொட்டி, தவிட்டு ரொட்டி, கஞ்சா ரொட்டி போன்ற ரொட்டி வகைகளும், செவ்விளநீர், கரும்பு, கதலி வாழைப்பழம், பலாப்பழம், மாம்பழம் போன்ற நார்ப்பழ வகைகளும் சர்க்கரைப் பொங்கல், வெண்பொங்கல், பஞ்சாமிர்தம், பாணக்கம், துள்ளுமா, உளுந்து வடை, பூக்கள், வெற்றிலை, பாக்கு, வில்வம் பத்திரம், வேப்பம் பத்திரம் என்பனவும் சிறப்பாக சிவப்பு நிற மலர்கள், கள்ளு, சாராயம் போன்றவையும் வைக்கப்பட்டு மடை அலங்கரிக்கப்படும். ஆதி வைரவரை அழைத்து சடங்கு செய்யும் சில வீடுகளில் கஞ்சா ரொட்டி, கள்ளு, சாராயம் போன்றவற்றை வழிபாட்டின் போது சேர்த்துக் கொள்வது குறைவு. 

ஆனால் ஏனைய சில வைரவ மூர்த்தங்களை அழைத்து வழிபாடு செய்கின்ற இல்லங்களில் மதுப் பொருட்கள் வைத்து வழிபடப்படும் மரபு காணப்படுகின்றது. ஆரம்ப காலங்களில் வைரவருக்கு தேன் வைத்து வழிபடப்பட்டிருந்த முறையே பிற்காலத்தில் மதுப்பொருட்களாக மாற்றமடைந்து இருக்கலாம். ரொட்டி செய்யப்படும் போது சில இடங்களில் தேங்காய்ப்பூ, உப்பு என்பன கலந்தும் சில இடங்களில் தனி மாவினாலும் செய்வர். மணி ஒலி எழுப்புதல், தீபம் காட்டுதல், உடுக்கை ஒலித்தல், வைரவ தோத்திரங்கள், காவியங்கள் பாடுதல் என்பவற்றோடு சில இல்லங்களில் வைரவர் உருக்கொண்டு வந்து கலையாடுதல், வாக்குச் சொல்லுதல் என்பனவும் இடம்பெறும். சடங்கு வழிபாடு நிறைவு பெற்றதும் தண்ணீர் தெளித்து மடை பிரிக்கப்பட்டு பிரசாதங்கள் பகிர்ந்து அளித்தலுடன் வீட்டுச் சடங்கு நிறைவுபெறும். 

வைரவர் சடங்கு வழிபாடுகளில் பொதுவாக மண்டபம் அமைத்தல், மண்டபம் காவல் பண்ணுதல், கும்பம் வைத்து மடைகள் வைத்தல், கலையாடுதல், தேவாதிகளை கட்டுக்கு வைத்து ஆட்டத்தை ஊக்குவித்தல், தேவாதிகளை யாரும் கட்டினால் வெட்டி ஆடுதல், காவியம் பாடுதல், பள்ளயம் அல்லது பலி கொடுத்தல், வழிபடுதல் முதலிய சடங்கு நிகழ்ச்சிகள் இடம்பெறும். வைரவர் சடங்கின் போது தெய்வம் ஆடுதலில் உடுக்கை, தவில், சிலம்பு, அம்மானைக் காய், சாட்டை போன்ற கருவிகள் பயன்படுத்தப்படும். இவ்வேளை வாக்குச் சொல்லுதல், தீய சக்திகளை விலக்குதல், கழிப்புச் சடங்கு, பலியிடுதல் போன்றவை இடம்பெறும். இங்கு பலியிடலுக்காக ஆடு, கோழி போன்றவை பயன்படுத்தப்படுகின்றன. இன்று பலியிடலின் மாற்றீடாக நீத்துப் பூசணிக்காய் பயன்படுத்தப்படுகின்றது. இங்கு வைரவருக்குரிய சிறப்பு வாய்ந்த தோத்திரம், காவியம், அகவல், தாலாட்டு என்பன பாடப்படுகின்ற வழக்கம் காணப்படுகின்றது. 

சுடலைக்கு அண்டிய பகுதிகளில் வாழ்கின்ற மக்கள் குழுவினர் சுடலை வைரவர் வழிபாட்டினை மேற்கொள்வர். இவ் வழிபாட்டின் போது பனை ஓலைகளினால் இழைத்த பெட்டி ஒன்றினுள் கள்ளு, சாராயம், கஞ்சா ரொட்டி, மொந்தன் வாழைப்பழம், வெற்றிலை, பாக்கு வைக்கப்பட்டு மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு குறித்த ஒரு இடத்தில் மடை வைக்கப்பட்டு தேங்காய் உடைத்து, கற்பூர தீபம் ஏற்றி குறித்த குடும்பத்தினைச் சேர்ந்த நபரின் மண்டாட்ட வேண்டுதலுடன் சுய வழிபாட்டு முறையில் வைரவர் வழிபாடு இடம்பெறும்.

வைரவர், ஆகமக் கோயில்களில் பரிவார மூர்த்திகளில் ஒருவராகவும் காவல் தெய்வமாகவும் கூறப்படுகிறார். மகோற்சவ ஆரம்பத்தில் கிராம சாந்தியில் வைரவ வழிபாடு இடம்பெறுகின்றது. ஆலய உற்சவ காலங்களின் போது இக் கிரியையானது குறித்த ஆலயத்தில் உள்ள கிராமத்திற்கு எந்தவித இடையூறும் நேர்ந்திடா வண்ணம் மேற்கொள்ளப்படும். உற்சவம் முடிவடைந்ததும் வைரவர்க்குரிய விசேட அபிடேக ஆராதனையுடன் பூசை இடம்பெறும். வைரவர் கோயிலை காவல் செய்யும் தெய்வம் மாத்திரமல்ல, அவர் சுற்றாடலையும் காக்கின்றார். மகோற்சவ காலங்களில் வைரவரைக் கட்டுதல், வைரவர் சாந்தி செய்தல் முதலானவை நடைபெறுவதையும் அவதானிக்கலாம். 

ஈழத்தில் சிறு தெய்வமாக, பெருந்தெய்வமாக வைரவ வழிபாடு பெருஞ்செல்வாக்குற்றுக் காணப்படுகிறது. இதற்குப் பின்வரும் காரணங்களைச் சுட்டலாம்.

  1. கந்தபுராணச் செல்வாக்கு.
  1. ஈழத்தில் ஆதிக்க மதமான சைவம் (இந்து சமயத்துள்) இருத்தலும், வைரவர் சிவனின் அம்சமாக எடுத்துரைக்கப்படுதலும்.
  1. ஒல்லாந்தர் கால சமய அடக்குமுறை அல்லது ஆதிக்க சக்திகளுக்கு எதிரான குரல்.
  1. சூல வழிபாட்டு முறை – எளிய வழிபாட்டு முறை
  1. சைவ மேனிலையாக்கம் அல்லது சமஸ்கிருத மயமாதல்

“யாழ்ப்பாணக் கலாசாரம், கந்தபுராணக் கலாசாரம்” என்பார் பண்டிதமணி. கந்தபுராணம் முன்னிறுத்தும் சிவகுமாரர்களுள் வைரவர் ஒருவர் என்பதும் அவர் உக்கிர அம்சமாக சுட்டப்படுவதும் இங்கு உற்று நோக்கத்தக்கது. வைரவ வழிபாடு எப்போது ஈழத்திற்கு வந்தது என்பது தெளிவாக உரைக்க முடியாத ஒன்றாகவே உள்ளது.

காலனித்துவ ஆட்சிக்குட்பட்டிருந்த ஈழத்தில் சுதேச சமயமான சைவ சமயத்தை நிலைநாட்ட அக்கால மக்கள் பயன்படுத்திய உபாயமாகவும் முக்கிய செயற்பாடாகவும் அமைந்தது திரிசூல வழிபாடாகும். இத் திரிசூல வழிபாடு என்பது பெரிதும் வைரவர் வழிபாடாகவே அமைந்திருந்தது. சுதேச சமய நடைமுறைகளைப் பின்பற்றுதல் தண்டனைக்குரிய குற்றமாகக் கருதப்பட்ட அச்சூழலில் மரங்கள், நீர்நிலைகள், விவசாய உற்பத்தி நிலங்கள், சில மறைவிடங்கள் என்பவற்றில் இவ் வைரவ வழிபாடு நிகழ்த்தப் பெற்றுள்ளது.

ஒல்லாந்த அரசின் அடக்குமுறைக்கெதிரான மௌனக் குரலாகவும் குறியாகவும் சூலத்தைக் குறிப்பிடலாம். அதேவேளை பரமனை மதித்திடாத பங்கையாசனனுக்கு நிகழ்ந்ததே ஒல்லாந்தருக்கும் நிகழும் என்பதைக் குறியீடாக சைவ வழிபாட்டினூடு உணர்த்தியிருக்கக் கூடும். வானவர் தலையைக் கொய்ததன் குறியீடான மண்டையோட்டு மாலையைக் குறிப்பதாக அமைந்த உழுந்துவடை மாலையும் குருதி பெற்ற கதையினடையாளமாக சிவப்புநிற செவ்வரத்தம் பூ தரித்தலும் ஒல்லாந்தருக்கான எச்சரிக்கையாகவும் அல்லது சுதேச சமயத்தை ஒடுக்கும் அதிகாரத்திற்கு எதிராக மக்களைக் கொதி நிலையில், உணர்ச்சிப் பிரவாகத்தில் வைத்திருக்கும் செயற்பாடாகவும் வைரவ வழிபாடு முன்னிறுத்தப்பட்டிருக்கலாம். தாம் தாம் விரும்பிய நிலையிலும் வகையிலும் மிருகபலி, மடை பரவுதல் தொட்டு ஆகமப் பண்பாடு வரை வைரவ வழிபாடு அகலக் காலூன்றி நிலைத்து நின்றது. ஆகமப் பண்பாட்டை முன்னிறுத்தி சைவ மீட்டுருவாக்கத்தைச் செய்த ஆறுமுகநாவலர் சிவபெருமானின் மகன்களில் ஒருவராக வைரவரைச் சுட்டி அவ் வழிபாட்டை உள்ளீர்த்தமை யாழ்ப்பாணத்தில் அவ் வழிபாட்டுக்கான மேனிலையாக்கத்தையும் ஸ்திர நிலையையும் வழங்கியது.

யாழ்ப்பாணத்தின் அவ்வவ் சமூகத்தின் நோக்கிற்கேற்ப வைரவர் காலவைரவர், வடுகவைரவர், ஆதிவைரவர், கபாலவைரவர், நரசிம்மவைரவர், கிங்கிலியவைரவர் எனப் பலவாறு வழிபடப்பட்டு வருகின்றார். அதேபோல ஆலயம் அல்லது சூலம் அமைந்திருக்கும் இடத்தை வைத்துக் கொண்டு இத்தியடி வைரவர், சுடலை வைரவர், ஆலடி வைரவர் எனப் பலவாறு சுட்டப்படுகிறார். ஆகமக் கோயில்களில் வடுகநாதராகவும், ஷேத்திர பாலகராகவும் காளியின் தலைவராகவும் சுட்டப்படுகிறார். இணுவில், தெல்லிப்பளை, உரும்பிராய், சிறுப்பிட்டி, வடமராட்சி உள்ளிட்ட பல இடங்களில் ஆகம மயப்பட்ட, ஆகம மயப்படாத மிருகபலியோடு கூடிய நாட்டாரியல் பண்புகள் நிறைந்ததான வைரவர் வழிபாட்டு மரபுகள் இன்றுவரை காணப்படுகின்றன.

சமகாலப் பயில்வுகள் 

காலனித்துவ அதிகாரத்திற்கெதிரான, ஒலி வெளிப்படாத, ஆழ ஊடுருவித்தாக்கும் கலகக் குரலாகவே போர்த் தெய்வமான வைரவரும் ஆயுதமான திரிசூலமும் கட்டமைக்கப்பட்டன. ஜனநாயகமான, பேதமற்ற – சாதியக் கட்டுமானம் தாண்டிய மக்கட் தெய்வமாக வைரவர் விளங்குகின்றார். நாவலர் வைரவரை சிவனினம்சமான மகனாக எடுத்துரைத்து மேனிலைத் தெய்வமாக்கினார். இதன்வழி நாட்டாரியல் வழிபாடு, ஆகம வழிபாடு எனும் இருதள மரபிற்குரியதாக, சிறுமரபு – பெருமரபு என வைரவ வழிபாடு மாற்றமுற்றது.  பின் இருபதாம் நூற்றாண்டின் அறுபது எழுபதுகளில் ஏற்பட்ட சிந்தனை மாற்றம், இலவசக் கல்வி, போன்றனவும் நகரமயமாதலும் வைரவ வழிபாட்டை பெருமரபாக்கின. இன விடுதலைப் போராட்டத்தின் எழுச்சி, பேரினவாதத்தின் ஒடுக்குமுறை, போர் என்பன வைரவ வழிபாட்டை மீள் முக்கியத்துவம் பெறச் செய்தன. 1995 இல் ஏற்பட்ட இடப்பெயர்வின் பின்னான மீள் வருகை புதிய அசைவியக்கங்களை யாழ்ப்பாணத்தில் ஏற்படுத்தியது. இராணுவக் கட்டுப்பாடு, மின்சாரம், தொழில்நுட்பத் தொடர்பாடல் வசதிகள், பொருளாதாரத் தடைநீக்கம், திறந்த பொருளாதாரம், சடுதியான வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கள் (சட்ட ரீதியாவும், களவாகவும்), பொருளாதார ஏற்றம், கல்வி என்பன அவற்றுள் சில. இதன் வழி வாழ்க்கைத் தரம் உயர்கிறது. யுத்தத்தின் நேரடித் தாக்கம் ஓரளவு குறைந்ததனால், மக்கள் தெய்வமாக யுத்தத்தின் அடையாளமாக இருந்த வைரவரை மக்கள் தம் மனங்கட்கேற்ப, சாந்த சொரூபியாக ‘ஞான வைரவராக’ மாற்றி விடுகின்றனர். ஆகம மரபுவழி ஆலயங்கள் புனருத்தாரணம் செய்யப்படுகின்றன. பிராமணர்கள் பூசை செய்ய  நியமிக்கப்பட்டு அலங்கார உற்சவங்கள் நடைபெறுவனவாக வைரவர் கோயில்கள் மாறின. சில ஆலயங்களில் இரதோற்சவங்களும் நடைபெறுகின்றன.

ஆயினும் சமகாலத்தில் வைரவர் வழிபாட்டில் சுதேச பாரம்பரியங்களில் கலப்புகள் ஏற்படுத்தப்படுகின்றது. இதனால் கலப்புறு பண்பாடு தோற்றம் பெறுகிறது. ஆகம விதிமுறைகளுக்கு உட்பட்ட அம்சங்களும், ஆகம விதிமுறைகளுக்கு உட்படாத அம்சங்களும் இணையும் போது இங்கு புதிய கலப்புறு பண்பாட்டம்சங்கள் தோன்றி இரண்டு முறையான வழிபாடுகளையும் ஒரே தளத்தில் இடம்பெறச் செய்கின்றன. வைரவருக்கு உயிர்ப்பலி அதிகமாக கொடுக்கப்பட்டது. ஆனால் தற்பொழுது ஒரு சில இடங்களிலேயே உயிர்ப் பலி மேற்கொள்ளப்படுகின்றது.

நகரமயமாதல், உலகமயமாதல், மேனிலையாக்கம் எனும் தளக்கூறுகளின் வழி ஏற்பட்ட சமூக அசைவியக்கமாகவே நாட்டார் பண்பாட்டின் அடையாளமாகக் கருதப்பட்ட யாழ்ப்பாண வைரவர் வழிபாடு, பெருமரபாக சமஸ்கிருத மயமாதலுக்குள்ளான பெருந் தெய்வமாகி சமூக, சாதி அந்தஸ்தை நிலைநாட்டுவதற்கான சமூகக் குறியீடாக சூலக் குறியீட்டைப் புறந்தள்ளி, கருங்கற் தெய்வமாக எழுச்சி பெற்று நிற்பதை இன்று அவதானிக்க முடிகிறது. இம் மேனிலையாக்கம் இன்று வடக்கு, கிழக்கு மட்டுமின்றி இலங்கை முழுவதும் மிகவும் வேகமாக நிகழ்ந்து வருவதைக் காணமுடிகிறது.

நிறைவுரை

சமஸ்கிருத மயமாதலுக்கும் சாதி, வர்க்கப் படிநிலைக்கும் இடையேயான இயங்கு நிலை அவதானத்திற்கு உரிய ஒன்றாகும். அதிகாரமிகு சாதியத்திற்கும் சமஸ்கிருத மயமாதலுக்கும் இடையிலுள்ள உறவுநிலை கெட்டித்த தன்மையுடையதாகும். அதனாலேயே கீழ்நிலையிலிருந்து மேலெழ விரும்பும் குறித்த மனிதர், குறித்த சாதி,  குறித்த வர்க்கம் அதிகார மனிதர்களின் சாதிக்கோ வர்க்கத்திற்கோ சமமாகத் தன் அந்தஸ்தை ஆக்கிக் கொள்ள முயற்சிக்கிறது. இம் முயற்சிக்கு அனுசரணை செய்வன பொருளாதாரம், அதிகாரம், சடங்கு எனும் தகுதிப்பாடுகளாகும். இவற்றில் பெரும்பான்மையைத் தனதாக்கிக் கொள்வதன் மூலம் தன்னதிகாரத்தை – சமூக அந்தஸ்தைப் பெற்றுக் கொள்ள முடிகிறது. இதன் வெளிப்பாடே சுடலை வைரவரும் கிணற்றடி வைரவரும் முச்சந்தி வைரவரும் ‘ஞான வைரவரான’ வரலாறு. ஆகவே இதில் சாதிய, வர்க்க அமைதி கிடைக்கின்றதே அன்றி உண்மையான ஆன்மீக அமைதி  சாத்தியமற்றுப் போகின்றது. 

vairavar kovil

தொடரும். 

 

https://www.ezhunaonline.com/folk-god-vairavar-in-sri-lanka/

  • 1 month later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்மையின் நம்பிக்கையுரு கிங்கிலியர்

தி. செல்வமனோகரன்

பின்காலனியச் சூழலில் ஈழத்துப்புலம் தனக்கான தனித்த அடையாளங்களை, அவற்றைப் பேணுதலுக்கான அக்கறையை கொண்டமைந்ததாக இல்லை. பொருளாதாரம், சமயம், பண்பாடு என எல்லாத் தளங்களிலும் ‘மேனிலையாக்கம்’ எனும் கருத்தாக்கத்தை நோக்கிய பயணத்தையே மேற்கொண்டு வருகின்றது. இத்தகைய பின்னணியில் தன்னடையாளப் பேணுகை குறித்த பிரக்ஞையை ஏற்படுத்துதலின் ஒரு பகுதியாகவே ‘ஈழத்து நாட்டார் தெய்வங்கள்’ எனும் இக்கட்டுரைத் தொடர் அமையப்பெறுகிறது. இதில் ஈழத்தில் மட்டும் சிறப்புற்றிருக்கும் தெய்வங்கள், ஈழத்தில் தனக்கான தனித்துவத்தைப் பெற்றிருக்கும் தெய்வங்கள் என்பன கவனத்தில் கொள்ளப்படுகின்றன. இத்தொடரானது தெய்வங்களை அடையாளப்படுத்துவதோடு அவற்றின் வரலாறு, சமூகப் பெறுமானம், சடங்கு, சம்பிரதாயங்கள், தனித்துவம், இன்றைய நிலை, சமூகத்துக்கும் அதற்குமான இடைவினைகள் முதலான பல்வேறு விடயங்களை உள்ளடக்கியதாக அமைகிறது. கள ஆய்வின் வழி நிகழ்த்தப்படும் இவ்வாய்வு விவரணம், வரலாறு எனும் ஆய்வு முறைகளின்படி எழுதப்படுகிறது. இவ்வாய்வுக்கான தரவுகள் நூல்களின் வழியும் நேர்காணல், உரையாடல், செய்திகள் என்பவற்றின் வழியும் பெறப்பட்டு சமூக விஞ்ஞானப் பார்வையினூடாக ஆக்கப்படுகின்றது.

அறிமுகம்

நாட்டுப்புறவியலின் இயங்கு தளங்களில் ஒன்றாக மந்திரம் காணப்படுகின்றது. இறையியல், சமயவியல் பற்றிய கருத்தாக்கத்திற்கு சமமாகவும் சமாந்தரமாகவும் மந்திரம் முதன்மை பெறுகின்றது. ஆவியுலக நம்பிக்கை, முன்னோர் வழிபாடு போன்றன தோன்றிய காலத்திலிருந்து இன்று வரை மந்திரம், மனிதர்களிடம் – அந்நம்பிக்கைகளை உடைய இனக் குழுக்களிடம் செல்வாக்குற்றுள்ளது. ‘இயற்கையை, அதன் அதீத ஆற்றல்களைப் புரிந்து கொள்ள முடியாத ஆதிமனிதர்கள், அதன் மீதான திகைப்பு, பயம் என்பவற்றிலிருந்து விடுபட்டு அதனைக் கட்டுப்படுத்தவும் தனக்குத் தேவையான பயன்களைப் பெற்றுக் கொள்ளவும் உருவாக்கிய ஒன்றே மந்திரம்’ எனப்படுகின்றது. இது ஒலி ‘வழி’ நிகழ்த்தப்படுவது. கற்பனை ஒன்றைத் தோற்றுவிப்பதன் மூலம் உண்மையை – இயற்கையைக் கட்டுப்படுத்தலாம் என்ற எண்ணத்தின் வழி மந்திரம் உருவாக்கம் பெற்றது. அறிவும் திறனும் அதன் வழி தொழில்நுட்பமும் மேலோங்காத காலத்தில் உருவான ‘கற்பனையான தொழில்நுட்பம் (Thomson, Geroge, 1980:4) என மந்திரம் விளங்கப்படுகிறது. இது சமயத்துக்கும் முன் உருப் பெற்றதாகும்.

ஒரு விருப்ப நிறைவேற்றுக் கற்பனையான மந்திரம், மனிதர் தம் விருப்பத்தை நிறைவேற்றுவதற்கான வழிபாடுகளையும் வேண்டுதல்களையும் அடிப்படையாகக் கொண்ட சமயத்துக்கு முன்னோடியாகிறது. அதேவேளை மந்திரம், இயற்கை நிகழ்ச்சிகளை உற்று நோக்கியதன் விளைவு என்றும் கூறப்படுகின்றது. மந்திரமானது விருப்பு, சொல், செயல் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டமைந்துள்ளது. விருப்பின் அடிப்படையிலேயே மந்திரம் (சொல்) ஓதப்பட்டு செயல்நிலைப் (சடங்கு) படுத்தப்படுகின்றது. மந்திரங்கள் ஒத்தது ஒத்ததை உருவாக்குவது; ஒரு தடவை தொடர்பு கொண்டது எப்போதும் தொடர்பைக் கொண்டிருக்கும் எனக் (frazer 1976:52) கருதப்படுகின்றது. முதல்வகை மந்திரக் கருத்தியல் ஒத்த மந்திரம், தொத்து மந்திரம் என வகைப்படுத்தப்படுகிறது. திருமண வீட்டில் விதவையை முன்னிறுத்தாமை, ஒட்டி இருக்கும் இரட்டை வாழைப்பழங்களை உண்பவள் இரணைப் பிள்ளைகளைப் பெறுவாள் போன்றன இதற்கு உதாரணங்கள். கன்று ஈன்ற பசு மாட்டின் இளங்கொடியை பால் மரத்தில் (ஆல், கிளுவை, அத்தி..) கட்டுவதனால் பசு அதீதமாகப் பால் சுரக்கும் என்பதை தொத்து மந்திரத்திற்கு எடுத்துக்காட்டாக உரைப்பர்.

இம்மந்திரங்கள், மந்திரங்களின் வழி நிகழ்த்தப்படும் சடங்குகள் என்பவற்றின் நோக்கை அடிப்படையாகக் கொண்டு அவற்றைத் தூய மந்திரம் ( நன்மை பயப்பது), தீய மந்திரம் (தீமை விளைப்பது) என இரண்டாகப் பகுப்பர். தீய மந்திரங்களுக்கு உதாரணமாக பில்லி, சூனியம், வசியம் முதலானவற்றைக் கூறலாம். தூய மந்திரங்களோ மருத்துவம், யுத்தம், துன்ப நீக்கம் முதலியவற்றுக்கு உதவுவன. இச்சடங்குகளுக்கு பயன்படுத்தப்படும் தெய்வங்களை, நன்மை செய்யும் தெய்வங்கள் அல்லது தீமையிலிருந்து காக்கும் தெய்வங்கள், தீமைக்கான தெய்வங்கள், நன்மைக்கும் தீமைக்குமாகப் பயன்படுத்தப்படும் தெய்வங்கள் என மூன்று வகையினதாக எடுத்தாளலாம். பில்லி, சூனியம், வசியம் போன்றன தீய மந்திரச் சடங்குகளிலிருந்து மக்களைக் காக்கும் தெய்வமாகவே கிங்கிலியர் உருநிலைப்படுத்தப்படுகிறார்.

கிங்கிலியர்

கிங்கிலியர் பற்றிய ஆய்வுகள் தமிழ்ச் சூழலில் பெரிதும் முன்னெடுக்கப்படவில்லை. இத் தெய்வம் பற்றி பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை மட்டுமே நான்கு வரிகளாலான பந்தியில் (1996:56) குறிப்பிட்டுள்ளார். மாந்திரீகத் தொடர்புபட்ட தெய்வமாக இருத்தல் இதற்குக் காரணமாக இருக்கவும் கூடும். கிங்கிலியர் பற்றிய கதையாடல்கள் சில உண்டு. தங்களுக்கு நன்மை செய்யும் மூதாதையாகக் கிங்கிலி கருதப்படுகிறார்.

கருட புராணம் உள்ளிட்டவை, மரணத்துக்கு முன்பும் பின்புமாக உயிர்களை அச்சுறுத்தவும், பாதுகாத்து அன்பினைக் காட்டவும் இறந்த பின் அழைத்துச் செல்லவும் என மூன்று நபர்கள் வருகிறார்கள்; அவர்கள் யமதூதர்கள்; அவர்களே ‘கிங்கிரர்கள்’ என்கின்றன. கிங்கிரர் என்ற சொல்லே கிங்கிலி – கிங்கிலியர் என மருவியிருக்க வேண்டும்.

ஆனால் யமகிங்கிரர்கள் பாவஞ் செய்பவர்களையே அழைத்துச் செல்வர் என்றும் நன்மை புரிந்தவர்களை இறைத்தூதர்கள் – தேவர்களே அழைத்துச் செல்வர் என்ற மாற்றுக் கருத்தும் உண்டு.

‘குங்குலியம்’ துர்மணத்தை நீக்கி நறுமணத்தை தருவது போல தீமைகளை நீக்கி நன்மை பயப்பவர் குங்கிலியர். அச்சொல்லே மருவி கிங்கிலியர் என்பதாயிற்று என்பர்.

ஈழத்தில் கிங்கிலியர் வழிபாட்டிடங்கள்

ஈழத்தில் தமிழர் வாழும் பாகங்களில் கிங்கிலியர் வழிபாடு காணப்படுகின்றது. யாழ்ப்பாணத்தில் சங்கானை, திருநெல்வேலி, வசாவிளான், இருபாலை உள்ளிட்ட பிரதேசங்களிலும் கிளிநொச்சியில் முரசுமோட்டையிலும் இவ்வழிபாடு இருப்பதனை கள ஆய்வினூடாக எம்மால் உறுதிப்படுத்த முடிகிறது. பலாலி விமான நிலைய எல்லையில் இருந்த கிங்கிலியரையே தொண்ணூறு இடம்பெயர்வின் பின் வசாவிளானில் வைத்துக் வணங்குவதாக அவர்கள் கூறுகிறார்கள். யாழ்ப்பாணத்திலும், கிளிநொச்சியிலும் தனிக் காணிகளிலும், வீட்டு வளவினுள்ளும் சிறு கோயில் அமைத்தோ வெளியில் வைத்தோ வழிபடும் மரபே காணப்படுகின்றது. ஆனால் மட்டக்களப்பில் கிராமியக் கோயில்களில் பரிவாரமாக வைத்து வழிபடும் மரபும் காணப்படுதல் குறிப்பிடத்தக்கது. இதற்கு உதாரணமாக எருவில் கண்ணகையம்மன் ஆலயத்தில் கிங்கிலியர் பரிவாரத் தெய்வமாக இருப்பதைக் குறிப்பிட முடியும். திருகோணமலை ஆலங்கேணியில் தனிக்கோயில் உண்டு.

veruvil

பில்லி சூனியமும் கிங்கிலியர் பற்றிய கதைகளும்

மாந்திரிகம் என்பது ஒரு மனிதன் தன் சகமனிதனை தன் விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்ப ஆட்டுவிப்பதாகவோ அழிப்பதாகவோதான் கருதப்படுகிறது. பில்லி, சூனியம், ஏவல், வைப்பு, வசியம் என்பதெல்லாம் தேவைக்கு ஏற்ப பயன்படுத்தும் உத்திகள். காலம்காலமாய் மாந்திரிகம் என்பது அமானுசம் நிறைந்த ஒரு கலையாகவே கருதப்படுகிறது. இதன் உண்மைத் தன்மை பற்றிய விவாதங்கள் ஒரு புறம் இருந்தாலும், நம்பிக்கை என்கிற பெயரில்; பொருளையும் நிம்மதியையும் அழிக்கிறது. மந்திர சக்தி அல்லது சித்தி பெற்ற ஒருவர் ஒரு சாதாரண மனிதனை உடல் ரீதியிலும் மன ரீதியிலும் செயல் ரீதியிலும் ஈர்த்து கட்டுப்படுத்துவதே பில்லி ஆகும். அதாவது பில்லி மந்திரத்தால் ஒருவனை மனநோயாளியாக ஆக்கிவிட முடியும். நல்ல ஆரோக்கியமுள்ளவரை நோயாளியாக படுக்கையில் தள்ளிவிடவும் முடியும் எனப்படுகிறது.

சூன்யம் என்றால் வெறுமை என்பது பொருள். சூன்ய மந்திரத்தால் எவரை வேண்டுமானாலும் அழித்து விடலாம், கைகால்களை முடக்கி விடலாம், சம்மந்தப்பட்டவருக்குத் தெரியாமலே வயிற்றில் வசிய மூலிகைகளைச் செலுத்திவிடலாம், கருவில் உள்ள குழந்தையைக் கூட கொன்றுவிடலாம் எனப்படுகிறது. மந்திரசக்தியால் மந்திரவாதியின் கட்டுபாட்டுக்குள் இருக்கின்ற சில தீய சக்திகளை எதிரிகளின் மீது ஏவிவிட்டு அவர்களை ஒன்றுமில்லாமல் ஆக்கிவிடுவதே ஏவல் மந்திரத்தின் முக்கிய பண்பாகும். இந்த மந்திரத்தின் மூலம் ஒருவரை முற்றிலுமாக கைவசப்படுத்தி அவரை ஏவலாளாக ஆக்கிவிடமுடியும்.

தனது சொந்த விருப்பத்தின்படி செயற்பட்டு, இலாபத்தையும் வெற்றிகளையும் அநுபவித்து வரும் ஒருவனை மந்திரங்களால் தடுத்து அவன் மனதை பல வழிகளில் திசை திருப்பிவிட்டு கீழ் நிலைக்குத் தள்ளுவதே செய்வினையின் முக்கிய செயலாகும். மந்திர வழியிலோ மருத்து வழியிலோ ஒரு பொருளை ஆடையில், உடம்பில் தடவி விட்டு அல்லது உண்ணக் கொடுத்து அவர்களை வசியப்படுத்துவதே வைப்பு என்பதன் அர்த்தமாகும். இவ்வாறான விடயங்களை எழுதுவது மூடநம்பிக்கைகளை பரப்புவதாகக கருதப்பட்டாலும் இவற்றோடு ஒட்டி நிகழ்த்தப்பட்ட சடங்குகள், வழிபடப்பட்ட தெய்வங்கள் என்பன நாட்டார் வழிபாட்டில் முதன்மைப் பெறுவதை நாம் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும்.

“ஆட்டின் பித்தெடுப்பேன் அடியடியாய் மண்ணெடுப்பேன்
கொண்டை மயிர் எடுப்பேன் – மச்சி உன்ன
கொண்டு வர என் காலடிக்கு”

“உள்ளான் குருவியின்ர உள்ளிருக்கும் பித்தெடுத்து
சேர்த்தி மருந்தரைத்து மச்சி உன்ன
சேர வைப்பேன் என் காலடிக்கு”

“கரையாக்கன் பூவாயின்றி கை வசமாய் கொண்டு வந்து
வைரவனை முன் நிறுத்தி உன்ன வரவழைத்தன் காலடிக்கு”

“போறாக வன்னியனார் பொத்துவிலப் பார்ப்பமெண்டு – என்ன
மருந்துகளை போட்டு மயக்குறாளோ தேவடியாள்”

(பாலசுந்தரம், இ.,1979:418-420)

எனும் நாட்டார் பாடல்வரிகளின் ஊடாக மட்டக்களப்புப் பிராந்திய மக்களின் மந்திரங்கள், சடங்குகள் தொடர்பான நம்பிக்கைகளை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

தீயமந்திரங்களின் வழி தமக்கு விருப்பமில்லாத, பகையான மனிதர்களை அவர்களது குடும்பங்களைத் துன்பப்படுத்தவும், சீரழிக்கவும் செய்யப்படுகின்ற பில்லி, சூனியம், செய்வினை போன்றன பெருந்துயரங்களை, தொடர் மரணங்களைத் தரவல்லன. இவை, குறித்த வீட்டில் இருந்து அல்லது காணியிலிருந்து எடுக்கப்பட்டதன் பின், கிங்கிலியரை சூலத்திலோ கல்லிலோ வாலாயம் பண்ணி காணியின் ஒரு சிறுபகுதியைப் புனிதமாக்கி அங்கு அத்தெய்வத்தை நிலைநிறுத்துவர். பிற்காலத்தில், இயந்திரத்தட்டில் ஆவாகனம் செய்து பூஜையறையில் வைத்து வழிபடும் முறையே முதன்மை பெற்று இன்றுவரை காணப்படுகின்றது. நம்பிக்கை தரும் நம்பிக்கையுருவாகக் கிங்கிலியர் நம்பப்படுகிறார். அவர் தீமையிலிருந்து காப்பவர். இது தொடர்பான கதைகளை களவாய்வின் போது கேட்க முடிந்தது.

கந்தையா பூரணம் என்பவர் வீட்டில், அவர்களுடைய உறவினரால் செய்வினை செய்யப்பட்டது என்றும், அதனால் ஐம்பத்தொரு நாட்களுக்குள் கந்தையாவும் அவருடைய இரு மகள்களும் மரணித்தனர் என்றும், அதன் பின் சாத்திரியார் வருகை தந்து தலைமயிர் உள்ளிட்ட பில்லி – சூனிய – செய்வினைப் பொருட்களை வீட்டு வாயிலிலிருந்து எடுத்தார் என்றும், வாயில்லா ஜீவன் ஒன்றின் இறப்போடு இவை வலுவிழக்கும் என்று கூறி வெள்ளை நிறக் கல் ஒன்றில் கிங்கிலியரை ஆவாகனம் செய்து படலை (gate) அருகே வைத்துவிட்டு விளக்கேற்றி வணங்குமாறு கூறினார் என்றும், அதன் பின்பு வீடு அமைதி கண்டது என்றும் அறிய முடிந்தது.

தன் கணவன் மரணத்துக்கு அருகிருப்பவர்கள் செய்த பில்லி, சூனியமே காரணம் என நம்பிய தங்கம்மா சாத்திரியின் உதவியோடு அதனைத் தேடி எடுத்ததாகவும் பின் கிங்கிலியரை வைத்து வழிபட்டு வருவதாகவும் கூறப்படுகின்றது.

பில்லி, சூனியத்தால் வயல் விளைச்சலின்றி பாழடைகிறது என நம்பிய கிளிநொச்சி முரசுமோட்டை வயல்காரர் ஒருவர் தனது வயலின் நடுவே கிங்கிலியரை வைத்து வழிபட்டு வருகின்றார்.

இந்தக் கதைகள் பில்லி, சூனியம், வசியம் முதலான தீமைசார் நடத்தைகள் பற்றிய நம்பிக்கைகள் ஆழ இவர்களிடம் வேரூன்றி இருப்பதைக் காட்டுகிறது. அந்தத் தீமைகளை விலக்கவல்ல தெய்வமாக கிங்கிலியரை இவர்கள் முழுமையாக நம்புவதையும் அவதானிக்க முடிகிறது. மனித இனக்குழுவின் வரலாற்றுத் தொடக்க காலத்தில் இருந்து இன்று வரை, இவ்வாறான நம்பிக்கைகள் மக்களிடம் நிலவிவருகின்றன. இவை அறிவியலுக்கு ஒவ்வாதவை என அறிஞர்கள் வாதிடவும் எள்ளல் செய்யவும் கூடும். ஆயினும் நிதர்சனத்தில் மக்களிடையே இந்நம்பிக்கைகள் இன்றும் நிலவி வருகின்றன என்பதே உண்மை.

soolam

திருகோணமலை – ஆலங்கேணி, கிண்ணியா பகுதியில் கிங்கிலியருக்குக் கோயில் அமைத்த மார்க்கண்டு இராசமாணிக்கம் பன்னீர்செல்வம் அவர்கள், குளக்கோட்டன் கந்தளாய்க் குளத்தை கட்டியபோது அதற்கு காவல் தெய்வமாக கிங்கிலியரை ஸ்தாபித்தான் என்றும் தான் சிறு வயதில் மாடு மேய்க்கச் சென்றபோது அத்தெய்வம் தன்னில் ஏறியதாகவும் பின்பு தான் இந்த கோயிலை அமைத்ததாகவும் கூறுகிறார். அங்கு பில்லி, சூனியம் பற்றிய கருத்தாடல் இல்லை. மக்கள் இடர் களையும் தெய்வமாகவே கிங்கிலியர் கருதப்படுகிறார். பீடத்தில் ஒரு கல் வைத்து வழிபடப்படுகிறது. வடமராட்சியில் துரும்பர் குளத்தருகே கிங்கிலியர் வழிபாடு இருந்ததாகவும் அது துரும்பர் தெய்வம் எனக் கூறப்பட்டதாகவும் ஊரவர்கள் சிலர் அடையாளப்படுத்தினும், கிங்கிலியர் சாதியத்துக்கு அப்பாலான தீய மந்திரச் சடங்குகளால் பாதிக்கப்பட்ட மக்களின் தெய்வமாக இருப்பதையே காணமுடிகின்றது.

கிங்கிலியர் கல்லாலான தெய்வமாகக் காணப்பட்டாலும் சிற்சில இடங்களில் சூலத்திலும் வைத்து வழிபடப்படுகிறார். அவருக்கென ஒரு உருவம் எங்கும் கூறப்படவில்லை. ஆனால் சிற்சில கதைகள் கூறப்படுகின்றன.

தன்னுடைய அம்மம்மாவின் இளமைக் காலத்தில் அவர் தன் ஆச்சியுடன் (அம்மா) அதிகாலையில் தங்களது பனங்காணியில் பழம் பொறுக்கச் செல்வதாகவும் ஒரு நாள் முழு நிலவின் ஒளியினால் நேரம் தெரியாது மிக வேளைக்குச் சென்றதாகவும் அப்போது ஒரு நிழல் ஆச்சிக்குப் பின்சென்ற தனது அம்மம்மாவைக் கிளித்தட்டு மறிப்பது போல மறித்ததாகவும் அதனைக் கண்ட ஆச்சி அவரை ஏசிக் கூப்பிட்டதாகவும் அந்த நிழல் உடனே விலகி வழிவிட்டதாகவும் அதன் பின்பு இருவரும் கோயில் வாசலில் இருந்து விட்டு பின்பு விடியற்பொழுதில் பனம்பழம் பொறுக்கிச் சென்றதாகவும் கூறப்பட்டது (நேர்காணல் : திருமதி.சி. செல்வமனோகரி)

சாமப்பொழுதுகளில் வெள்ளை வேட்டி, நீண்ட சால்வை, தோளில் தொங்க வெண்மையான சுருள் முடியும் தாடியும் கையில் பிரம்பும் கொண்டு காற்சதங்கைச் சத்தம் கேட்க, வீதியால் காவலுக்கு கிங்கிலியர் நடந்து போவாராம் (நேர்காணல்: திருமதி.ச. இராஜேஸ்வரி)

யமதூதர்களான கிங்கிரர்களின் கருமைத் தோற்றத்துக்கு மாறாக வெண்மை இங்கு சுட்டப்படுவது கவனத்திற்குரியது. வெண்மை பொதுவில் தூய்மையின் – நல்லதன் குறியீடாகவே கருதப்படுகின்றது. இங்கு தோற்றப்பொலிவு சொல்லப்பட்டாலும் ‘உருவவியல்’ முன்னிறுத்தப்படவில்லை. அனைத்துத் தகவல் வழங்கிகளினாலும் கிங்கிலியர் அருவமாகவே சித்தரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வழிபாட்டு முறை

கிங்கிலியரை வீடுகளில் வைத்து ஆதரிப்பவர்கள் பொதுவில் பொங்கல் பொங்கி மடை பரவுகின்றனர். சில இடங்களில் கோழி, ஆடு பலியிடப்படுவதும் மச்சம் சமைத்து படைக்கப்படுவதாகவும் அறிய முடிகிறது. திருகோணமலை ஆலங்கேணி கிங்கிலியர் கோயிலில் வைகாசி அமாவாசை தோறும் மழை மடை பரவி வழிபடுவதோடு கருத்தக் கடா ஆடு பலியிடப்படுவதையும் அறிய முடிகின்றது. மந்திர சித்திக்காகவும் காரிய சித்திக்காகவும் அட்சரம் போட்டு கிங்கிலியரை அதிலே ஆவாகணம் செய்து அந்த இயந்திரத்தகட்டை வெற்றிலையிலே வைத்து இரு கைகளாலும் ஏந்தி சுடலையில் நின்றும் தமக்கு ஏதுவான இடங்களில் நின்றும் உருச் செபிப்பர் (கணபதிப்பிள்ளை, க., 1996:53). இதன் ஊடாக தமது எண்ணம் சித்திக்கும் என்பது அவரது நம்பிக்கை. இத்தெய்வம் தம்மை துயரங்களில் இருந்து காக்கும் என்ற நம்பிக்கையின் வழி நேர்த்திக்கடன் வைப்பதும் பொங்கல் இடுவதும் நடைபெற்று வருகின்றது.

சமகாலப் பயில்வு

இன்று பில்லி, சூனியம், வசியம் முதலான தீய மந்திரங்கள், சடங்குகள் பற்றிய நம்பிக்கைகள் வலுவிழந்து வருகின்றன. அவற்றை உரையாடுவதும் எழுதுவதும் அநாகரிகமானதாக கருதப்படுகின்றது. அது படிப்பறிவற்ற காட்டுமிராண்டிகளின் நம்பிக்கை என்று கருதப்படுகின்றது. அதற்குச் சமாந்தரமாக துன்புற்றவர்களிடம் இவை பற்றிய நம்பிக்கைகள் தொடர்கதைகளாக காணப்பட்டுவருகின்றன. இணையத்தில் கிங்கிலியர் என தட்டச்சு செய்யும் இடத்து கிங்கிலியர் மந்திரம் – இயந்திரம் பற்றிய குறிப்புகள், மந்திரங்கள், இயந்திரத் தகடுகள், அவற்றின் விலைகள், அசைவப் பலியுடன் படையல் எனும் பெறுபேறுகள் அதிகம் கிடைப்பதே இதற்கு உதாரணம். இவை நவீன சமய ‘வர்த்தக’ முறைகளாக, இந்நம்பிக்கையின் வீழாத் தொடர்ச்சியின் சான்றுகளாகக் காணப்படுகின்றன. ஆனால் கிங்கிலியர் வழிபாடு மிகவும் வலுவிழந்த நிலையிலேயே காணப்படுகின்றது. சாதாரண மக்களுக்கு கிங்கிலியர் பற்றித் தெரியாது இருக்கின்றமையை களவாய்வின் வழி அவதானிக்க முடிந்தது. இதற்கு மூன்று காரணங்களை பிரதானமானவையாகச் சுட்டலாம்.

  1. பில்லி, சூனியம் முதலான நம்பிக்கைகள் வலு இழந்து வருதல்.

  2. கிங்கிலியர், கிங்கிலிய வைரவராக – வைரவராக மேல்நிலை ஆக்கமும் உருமாற்றம் அல்லது உருமறைப்புச் செய்யப்படுகின்றமை.

  3. பொதுவாக கிராம வழிபாடுகள் கைவிடப்பட்டு வருகின்ற தன்மை.

இங்கு கூறப்பட்ட மூன்றாவது விடயம் பொதுவானது எனினும் முதல் இரண்டு விடயங்களும் கிங்கிலிய வழிபாட்டுக்கு மட்டுமே உரியவை.

இன்றைய சமூகத்தில் ஏற்பட்டு வரும் பகுத்தறிவு வாதம், சமய ஈடுபாடற்ற அல்லது சமயத்துக்கு நேரம் ஒதுக்க முடியாத பொருளாதார நோக்குடைய இயந்திர வாழ்வு, பழமையைக் கைவிடுதல், புதுமை நாட்டம், மதமாற்றம் முதலான பல காரணிகள் இதன் பின்னணியில் உள்ளமை குறிப்பிடத்தக்கது. தன்னிலைப்பட்ட தெய்வத்தை சமஸ்கிருதமயமாதல் என்னும் பிராமண மயப்படுத்தும் மேல்நிலை ஆக்கச் செயல்முறை கிங்கிலி எனும் தெய்வத் தொன்மத்தை அழிப்பு நிலை செய்து வைரவராக உயர்நிலைப்படுத்துகின்றது. இதன் வழி கிங்கிலியர் மக்களின் நம்பிக்கைகளில் இருந்து காணாமல் போய்க் கொண்டிருக்கின்றார்.

முடிவுரை

kingiliyar to vairavar

மக்களின் காவல் தெய்வமாக வறுமை, துயர் என்பனவற்றில் இருந்து மட்டுமின்றி பிறரால் தம்மை, தமது குடும்பத்தை அழிவுக்கு உட்படுத்தும் நோக்கோடு செய்யப்பட்ட தீமைகளான பில்லி, சூனியம், வசியம் உள்ளிட்டவற்றைத் தடுத்து அழித்து காப்பாற்றும் நம்பிக்கை உருவானவர் கிங்கிலியர். அரூப தெய்வமாக, பேதமற மக்களால் பொதுநிலையில் வழிபடப்பட்ட தெய்வமே கிங்கிலியர். மக்களின் தெய்வமாய் நன்மையின் படிமமாய் எந்த உருவுமற்று கல்லிலும் சூலத்திலும் தனி வழிபாடுகளின் வழி வழிபடப்பட்ட தொன்மத் தெய்வம் கிங்கிலியர். இது சிறுகோயில், பரிவாரத் தெய்வம் என்ற நிலையில் இரண்டாம் கட்ட வளர்நிலையினைப் பெற்றது. ஆயினும் நம்பிக்கைகள், மந்திரங்கள், சடங்குகள் என்பனவற்றில் ஏற்பட்ட நம்பிக்கையீனம், பகுத்தறிவுச் சிந்தனை வளர்ச்சி இவ்வழிபாட்டில் கீழ்நிலையை ஏற்படுத்தின. ‘கிங்கிலியசுவாமி’ ‘கிங்கிலியத் தகடாக’ உருமாற்றம் பெற்றார். இன்று அவர் பூஜை அறைகளில் இயந்திரத் தகடாகவும் உடலில் அச்சரக்கூடுகளாகி அணிகலன்களாகவும் மாற்றம் பெற்று வர்த்தகப் பண்டமாக்கப்பட்டுள்ளார்.

தொடரும்.


https://www.ezhunaonline.com/folk-god-kingiliyar/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிரசவச் செவிலி கொத்தியாத்தை

தி. செல்வமனோகரன்

June 10, 2024 | Ezhuna

பின்காலனியச் சூழலில் ஈழத்துப்புலம் தனக்கான தனித்த அடையாளங்களை, அவற்றைப் பேணுதலுக்கான அக்கறையை கொண்டமைந்ததாக இல்லை. பொருளாதாரம், சமயம், பண்பாடு என எல்லாத் தளங்களிலும் ‘மேனிலையாக்கம்’ எனும் கருத்தாக்கத்தை நோக்கிய பயணத்தையே மேற்கொண்டு வருகின்றது. இத்தகைய பின்னணியில் தன்னடையாளப் பேணுகை குறித்த பிரக்ஞையை ஏற்படுத்துதலின் ஒரு பகுதியாகவே ‘ஈழத்து நாட்டார் தெய்வங்கள்’ எனும் இக்கட்டுரைத் தொடர் அமையப்பெறுகிறது. இதில் ஈழத்தில் மட்டும் சிறப்புற்றிருக்கும் தெய்வங்கள், ஈழத்தில் தனக்கான தனித்துவத்தைப் பெற்றிருக்கும் தெய்வங்கள் என்பன கவனத்தில் கொள்ளப்படுகின்றன. இத்தொடரானது தெய்வங்களை அடையாளப்படுத்துவதோடு அவற்றின் வரலாறு, சமூகப் பெறுமானம், சடங்கு, சம்பிரதாயங்கள், தனித்துவம், இன்றைய நிலை, சமூகத்துக்கும் அதற்குமான இடைவினைகள் முதலான பல்வேறு விடயங்களை உள்ளடக்கியதாக அமைகிறது. கள ஆய்வின் வழி நிகழ்த்தப்படும் இவ்வாய்வு விவரணம், வரலாறு எனும் ஆய்வு முறைகளின்படி எழுதப்படுகிறது. இவ்வாய்வுக்கான தரவுகள் நூல்களின் வழியும் நேர்காணல், உரையாடல், செய்திகள் என்பவற்றின் வழியும் பெறப்பட்டு சமூக விஞ்ஞானப் பார்வையினூடாக ஆக்கப்படுகின்றது.

அறிமுகம்

இயற்கையோடு ஒட்டி வாழ்ந்த மனிதன் தன் வாழ்வில் நடைபெற்ற விரும்பத்தக்க, விரும்பத்தகாத அல்லது நன்மை, தீமையின் பாற்பட்ட அனுபவத்தின் வழி தன்னால் கட்டியமைக்க முடியாத விடயங்களை இயல்பிறந்த ஆற்றல்களாகக் கருதத் தலைப்பட்டான். ஒவ்வொரு இயற்கை நிகழ்வுக்கும் காரணமாக தெய்வங்கள் உருப்பெறத் தொடங்கின. நன்மை செய்யும் தெய்வங்கள், தீமை செய்யும் தெய்வங்கள் என அவை உரைக்கப்பட்டன. நிலத்தெய்வம், ஐம்பூதங்களின் தெய்வம், மரத்தெய்வம், உருவம் உள்ள தெய்வம், உருவம் அற்ற தெய்வம், முன்னோர், அவலச்சாவுற்ற மனிதர், ஆவியாய் இயல்பிறந்த ஆற்றல் பெற்று தெய்வமாதல் அல்லது பேயாதல் எனப் பல்வேறு தெய்வங்களும் நம்பிக்கைகளும் காணப்பட்டன, காணப்படுகின்றன. மக்களின் வாழ்வியலோடு இணைந்து பயணிக்கும் தெய்வங்களும் பேய்களும் பற்றிய உரையாடல்களும் உள்ளன. இந்நாட்டார் தெய்வங்கள், அவற்றின் ஆற்றல்கள் பற்றி பல கதைகள், பாடல்கள் இன்றும் நின்று நிலவி வருகின்றன. ஆதிகாலத்தில் இயல்பிறந்த பல ஆற்றல்களை உடைய இராட்சதன் ஒருவன் வாழ்ந்து வந்ததாகவும், அவன் தன் ஆற்றல்களால் நாட்டார் தெய்வங்கள் பலவற்றை வருத்தி அழித்தான் என்றும், அதனால் அத்தெய்வங்கள் அவனைக் கண்டு அஞ்சி ஒளிந்தன என்றும் கூறப்படுகிறது (சிவபெருமானிடம் எதைத் தான் தொட்டாலும் சாம்பலாகும் வரம் பெற்ற பஸ்மாசுரனைக் கண்டு வரங்கொடுத்த சாமியான சிவபெருமானே ஓடியொழித்த வரலாற்றை இது ஞாபகப்படுத்துகின்றது). சில தெய்வங்கள் மக்களிடம் சென்று அடைக்கலம் பெற்றன. அத்தெய்வங்கள் அவ்வவ் மக்களின் குல தெய்வங்களுமாயின. இவற்றுள் ‘கொத்தி’ எனும் தெய்வம், பிள்ளை பெறும் வீடு ஒன்றினுள் சென்று ஒளித்தது. பிள்ளைப்பேறுக்கு மருத்துவிச்சிக்கு உதவியது. இதனால் மருத்துவிச்சியின் தெய்வமாகவும் பிரசவ தெய்வமாகவும் கொத்தி கருதப்படுகின்றார்.

கொத்தி

கொல் என்னும் வேர்ச் சொல்லிலிருந்து பிறந்த சொற்களே கொற்றி, கொற்றவை, கொத்தி எனத் திரிபடைந்திருக்க வேண்டும். தமிழர் மரபில் கொற்றவைக்குத் தனியிடமுண்டு. தமிழரின் வாய்மொழி வழக்காறு காலத்திலிருந்து கொற்றவை வழிபடுதெய்வமாக இருந்து வருகிறாள். இயற்கை நெறிக்கால திணையியலில் பாலை நிலத்தெய்வமாக வீரம் தீரம் நிறைந்த, கொடூரமான தெய்வமாக, பேயாக அவள் சித்திரிக்கப்படுகின்றாள். கலிங்கத்துப்பரணி அவளை பேயாகவே ஆக்கிவிடுகிறது. கொற்றவை, கொற்றி, துர்க்கை, காளி, காடுகாள், சூர், சூரீ, பழையாள், தொல்குடி குமரி எனப் பலவாறு அமையும் ஒரு பொருட்பன்மொழிகளாகவே இவை கருதப்படுகின்றன. தாய்மை மிக்கவள், அவள் மகன் வேலன், காட்டிடை வாழ்பவள், பேய் முழிகளை (கண்கள்) உடையவள், நஞ்சருந்தியும் சாவாதிருப்பவள் என அவள் பலவாறு இலக்கியங்களில் சித்திரிக்கப்படுகின்றாள்.

ஈழத்துப்புலத்தில் காலனிய காலத்தொடக்கத்தில் போர்த்துக்கேயர் சமய ஒடுக்கு முறைகளை மேற்கொண்டு வழிபாட்டிடங்களை இடித்தழித்தனர். பின் ஆட்சிக்கு வந்த ஒல்லாந்தர் சமயவழிபாடுகளையும் அனுட்டானங்களையும் தடைசெய்தனர். இதற்கு மாற்றீடாக நாட்டார் வழிபாட்டில் கல், சூல, வேல் வழிபாடுகள் முதன்மை பெறத்தொடங்கின. உருவமற்ற அரூபத்தெய்வங்கள் மக்கள் மனங்களை வென்றெடுத்தன. அவற்றுள் பிறப்பு – இறப்பு சார்ந்த பெண் தெய்வமாக கொத்தி முதன்மை பெற்றமை குறிப்பிடத்தக்கது.

கொத்தித் தெய்வம் பற்றிய தொல்கதை ஒன்று உண்டு. “அன்று நல்ல மழை, நீர் சூழ்ந்து விட்டது. ஒரு பெண்ணின் பேறுநாள் அன்று. வலியால் அவள் துடிக்கிறாள். ஊர் மருத்துவிச்சிக்கு சொல்லிவிட்டாயிற்று. சிறிது நேரத்தில் மருத்துவிச்சி மட்டும் வருகின்றாள். பிரசவ வேதனையால் பெண் துடிக்கின்றாள். வந்த மருத்துவிச்சி உரிய வகையில் மருத்துவம் பார்க்கின்றாள். குழந்தை சுகமாகப் பிரசவிக்கப்படுகின்றது. தாயும் சேயும் நலம். மருத்துவச்சி புறப்பட்டுவிட்டாள். சிறிது நேரத்தின் பின் மருத்துவிச்சியை அழைக்க சென்றவனும் மருத்துவிச்சியும் வருகிறார்கள். நீர் குறுக்கிட்டதால் வரத் தாமதமாகிவிட்டது எனக்கூற, வீட்டில் இருந்தவர்கள் திகைக்கிறார்கள். அப்படியாயின் ‘உங்களைப் போன்றே ஒரு பெண் வந்து மருத்துவம் பார்த்தாளே’ என்கின்றனர். உண்மை விளங்குகின்றது. அது தெய்வ அருள்; அவள் கொத்தித்தெய்வம் என்கிறாள் மருத்துவிச்சி.” 

மக்கள், பிள்ளை பெறுதலின் போது அது சுகநலமாக நடைபெறவும் மருத்துவிச்சிகள் பிள்ளைகளை சுகமாகப் பெறச் செய்யவும் – தொழில் நிமித்தமும் கொத்தியை வழிபட்டனர். கொத்தி கொத்தியாச்சியாகவும், கொத்தியாத்தையாகவும் வழிபடப்பட்டார். ஆத்தா, ஆத்தை என்பன தாயைக் குறிக்கும் சொற்கள் (கோத்தை என்ற வழக்கம் யாழ்ப்பாணத்தில் உண்டு). ஆச்சி, அம்மளாச்சி என அம்மனைக் குறிப்பிடுவதும் உண்டு.

கொற்றவையை தெய்வீக உணர்வுடன் வணங்கும் அதேவேளை கொடூரமான, அச்ச உணர்வினை ஊட்டுகின்ற தெய்வமாகப் பார்ப்பதைப் போலவே கொத்தியும் வணங்கப்பட்டார். பிள்ளைப்பேறு காலத்தில் தாய்க்கும் அக் குடும்பத்திற்கும் பிள்ளைப்பேறைப் பார்க்கும் மருத்துவிச்சிக்குமான நம்பிக்கைத்தெய்வமே கொத்தி. சமூகத்துக்கும் அத்தெய்வத்துக்குமான உறவுநிலை என்பவற்றின் வழி கொற்றவையில் இருந்து தனித்த ஒரு தெய்வமாகவே இவளைப் பார்க்க முடிகின்றது.

கொத்திப் பேய்

கொத்தித் தெய்வம், குறித்த காலகட்டத்தின் பின்னர், இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதிகளில், கொத்திப்பேயாகவே பார்க்கப்பட்டாள். அது அவளின் கொடூரப் பண்பை முன்னிறுத்தியதன் விளைவாகவிருக்கலாம். பிற்காலத்தில் கொத்திப்பேய் குழந்தைகளைத் துன்புறுத்தும், நோய்க்குள்ளாக்கும் என்ற கருத்துகளும் காணப்பட்டது.

கருத்தரித்த பெண்ணுக்குள் காவலாய், இரத்தப்பெருக்கு ஏற்படாமலும், குறைப்பிரசவம் நிகழாமலும், உடனிருந்து அருள்பவள் கொத்தியாத்தை; குழந்தையை சுகமாகப் பிரசவிக்கச் செய்பவளும் கொத்தியாத்தை; அதே அவள் நலமாகப் பிறந்த குழந்தையின் அழகினில் மயங்கி, குழந்தையின் மேல் ஆசை கொண்டு அதைத் தூக்கிக் கொண்டு ஓடுவதற்குப் பார்ப்பாள். தூக்கிச் செல்ல முடியாத இடத்து, காத்திருந்து காத்திருந்து ‘அலுத்துப் போய்’ (சலிப்பு), ஏமாற்றமுற்று, கோபம் கொண்டு குழந்தையை துன்புறுத்தவோ, நோய்நொடி ஏற்படுத்தவோ முற்படும் போது கொத்திப்பேய் எனப்படுகின்றாள்.

கொத்திப்பேய் விரட்டல்

நவீன வைத்தியசாலைகள் உருவாவதற்கு முன் அவரவர் வீடுகளிலேயே பிரசவம் பார்க்கப்பட்டது. வீடுகளில் தனியறை அல்லது தனியிடம் ஒதுக்கப்பட்டு அது தூய்மையாகப் பேணப்படும். பிரசவவலி பெண்ணுக்கு ஏற்பட்டவுடன் மருத்துவிச்சியை அப்பெண்ணின் கணவன் அழைத்துவருவான். அவள் பிரசவம் பார்த்து குழந்தை பிறந்தவுடன் அதனைக் குறியீட்டு ரீதியில் குடும்பத்தார்க்கு அல்லது வீட்டுக்கு வெளியில் நிற்பவர்களுக்குத் தெரிவிப்பாள். அதனை:

“பன்னீர்க் குடமுடைந்து பாலகன் பிறந்திடவே

நன்னீர்பை கொண்டு நயந்து நயந்து எல்லோரும்

பெண்பிள்ளையல்ல இது பேருலகில் எங்களுக்கு

ஆண் பிள்ளை யென்றே அகமகிழ்ந்து கூரை தட்டி

வாயார வாழ்த்தி வரிசையுடன் கோலெறிந்து……”

எனும் நாட்டார் பாடல் (கனகரத்தினம், இரா.வை., 1991) உணர்த்தி நிற்கின்றது. இதில் ஆண்பிள்ளை வேண்டிநிற்கும் மனப்பாங்கும், ஆண்பிள்ளை பிறந்தால் கூரையின் மேல் தட்டுதல், கூரையின் மேல் கோலெறிதல் எனும் செயற்பாடுகளின் மூலம் அறிவிக்கும் சம்பிரதாயமும் கூறப்பட்டுள்ளது. பெண்பிள்ளை பிறத்தல் அம்மியில் தட்டுதல், கூரையின் மீது விளக்குமாறு எறிதல் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

குழந்தை பிறந்து ஐந்தாம் நாள் மருத்துவிச்சி தாயை முழுக வைப்பாள். குழந்தையைச் சுத்தப்படுத்துவாள். அவ்வீட்டில் சோறு சமைத்து பலவகைக் கறிகள் ஆக்கப்படும். அவற்றோடு ஒடியல் மா, குரக்கன் மா போன்றவற்றில் பிட்டு அவிக்கப்படும். மச்ச உணவு (மீன்கறி, பொரியல்) விசேடமாகச் செய்யப்படும். வடமராட்சிப் பிரதேசத்தில் மேற்சொன்ன உணவு வகைகளோடு கோழிக்கறி, கருவாடு, வெள்ளைக்கறி எனும் மிளகாய்த்தூளிடாத கத்தரிக்காய், வாழைக் காய்கறிகள், முட்டைப் பொரியல் மற்றும் மீனை வாலுடன் பொரித்த பொரியல், சுறாச்சுண்டல், கோழிக்குஞ்சு விறாத்துக்கறி என்பனவும் ஆக்கப்படுகின்றன (இரகுவரன், பா. 2012). இவ்வுணவு வகைகள் யாவற்றையும் மருத்துவிச்சி அல்லது அவளிடத்துக்கு ஒரு வயதான பெண் சுளகில் (முறம்) இட்டு கொத்திக்குப் படையல் வைப்பார்.

இதேவேளை பிள்ளை பிறந்து முதல் ஐந்து நாளும் தாய்க்கு வழங்கப்பட்ட உணவில் சிறிதை எடுத்து தாய் படுத்திருக்கும் பாயின் கால்மாட்டின் கீழ் வைப்பர். ஆனால் நெடுந்தீவில் இது ‘கொத்தி கிண்டல்’ எனும் தனிச்சடங்காகக் காணப்படுகின்றது. (விஜயரங்கன், நேர்காணல்,2024.06.04) வீட்டுமுற்றத்தின் ஒதுக்குப்புறமாக சிறு கிடங்கு ஒன்று வெட்டப்பட்டு பிரசவித்த தாய்க்கு வழங்கப்படும் உணவில் சிறிதளவை எடுத்து முதலில் கொத்திக்கு என்று இட்ட பின்பே ஒவ்வொரு நாளும் உண்ணக் கொடுக்கும் மரபு காணப்படுகிறது. இந்த உணவையும் ஐந்தாம் நாள் சுளகுப் படையலோடு இணைத்துக் கொள்வர். இது ‘கொத்திப்படையல்’ எனப் பொதுவில் சொல்லப்படுகின்றது. இப்படையலில் சிறப்பாகக் கொத்திக்கு அதிகம் பிடித்த பொருட்களாக வெற்றிலையும் சுருட்டும் படைக்கப்படுகின்றது.

இப்படையலின் பின் தாய், சேயை வீட்டின் தலைவாசலுக்கு இட்டுவந்து புதுப்பாயினாலோ புதுச்சேலையாலோ புதுச்சுளகாலோ வசதிக்கேற்ப மூடிவிடுவர். அதன்பின் தென்னம்பாளையைக் கீறிக் கட்டி, தீப்பந்தம் (சூள்) தயாரித்து, அதனைக் கொளுத்தி மறைப்புள் மறைத்துள்ள தாயையும் சேயையும் ஒரு சுற்றுச் சுற்றி வந்தபின் பிரசவம் நிகழ்ந்த இடத்தில் ஒளியூட்டுவர். ‘தாயும் சேயும் சுகம் சுகம்’ என்று பாடியோ கூறியோ வாழ்த்துவர். மருத்துவிச்சி, பின்னர் வீட்டின் மூலை முடக்கெல்லாம்:

“ஓடாதே கொத்தி ஒளியாதே கொத்தி

பாங்காதே கொத்தி பதுங்காதே கொத்தி

கொத்தி புறப்படு கொத்தி புறப்படு”

என்ற பாடலையோ

“செத்தைக்க பத்தைக்க நில்லாத

எங்கட பிள்ளைய எங்கும் எடுக்காத

கொத்தியாத்தே நில்லாம வோடு

ஊர விட்டோடு கொத்தியாத்தே”

என்ற பாடலைப் பாடியபடி படையலையும், பிரசவத்தின் போது பயன்படுத்திய பாய், தலையணை, தாய் குழந்தை பயன்படுத்திய துணிமணிகள் உள்ளிட்டவற்றோடு கொத்திப் பேயையும் (ஐதீகப்படி) அழைத்துக் கொண்டு ஆளரவமில்லா இடத்துக்கு மருத்துவிச்சி போவார். அங்கு உள்ள பால்மரங்களில் அவற்றை வைப்பார். குறிப்பாக ஆலமரத்தில் கொத்தி உறைவதாக நம்புவதால் அம் மரத்தடியையே தேர்வு செய்வர். கொண்டு சென்ற பொருட்கள் யாவற்றையும் அங்கே ‘கழிப்பு’ கழித்துவிட்டு, நெருப்பினையும் (சூள்) அணைத்துவிட்டு, காறி உமிழ் நீரைத் துப்பியபின் மருத்துவிச்சி திரும்புவார். கொண்டு சென்ற நெருப்பை அணைக்காவிட்டால் கொத்தி திரும்பவும் அவ்வீட்டுக்கு வந்து விடுவாள் என்பது ஐதீகம் (அனந்தராஜ்,2022). இதன்பின் மருத்துவிச்சி தன்வீடு திரும்புவார். ஆனால் சில இடங்களில் அவ்வாறில்லை.

சடங்கை முடித்துவிட்டு வரும் மருத்துவிச்சி கிணற்றடியில் அல்லது வாசலில் வைக்கப்பட்டுள்ள நீரில் கைகால், முகம் அலம்பிக் காறித்துப்பி வீட்டினுள் வரவேண்டும்.  அதன் பின்பு மருத்துவிச்சி அவ்வீட்டுக் கூரையினைத் தட்டி ‘தாயும் பிள்ளையும் சுகமா?’ என மூன்று முறை வினாவுவார். வீட்டில் உள்ளவர்கள் ‘தாயும் பிள்ளையும் சுகம் சுகம்’ என்று விடையளிப்பர். அதன்பின் மருத்துவிச்சி நான்கு பக்கமும் மும்மூன்று முறை காறித் துப்புவார். மறைப்பை நீக்கி தாயையும் பிள்ளையையும் வெளியே வரச் சொல்லி வாழ்த்திப் பாடுவார். இத்தோடு மருத்துவிச்சியின் பணி முடிவுற்று, அவருக்குத் தக்க சன்மானம் வழங்கி மகிழ்வுடன் அனுப்பி வைப்பர். அதேவேளை நெடுந்தீவில் பிள்ளை பிறந்து 15 ஆம் நாள் கொத்திக்குக் காவல் செய்து காப்புக்கட்டும் வழக்கம் இருந்துள்ளது. இது ‘பௌமானம் காட்டல்’ எனப்படுகின்றது.

கொத்தியை விரட்டும் அல்லது கழித்தல் பாடல்கள் சிலசில வேறுபாடுகளைக் கொண்டிருப்பதை அவதானிக்க முடிகிறது. நெடுந்தீவில்:

“வீட்டைக் காராதே கொத்தி

பாலைக் காராதே கொத்தி

படுக்கையைக் காராதே கொத்தி”

எனத்தொடங்கி படுக்கையில் தலைமாடு, கால்மாடு, விளக்கு, அம்மி, அடுப்படி, சோத்துப்பானை, காயச் சட்டி, மஞ்சள், உள்ளி, இஞ்சி, எண்ணெய் என்பவற்றைக் காராதே எனக்கூறிக் கூறி இறுதியில்,

“பிள்ளையைக் காராதே கொத்தி

கொத்தி புறப்படு கொத்தி புறப்படு”

எனப் பாடி முடிப்பர். யாழ்ப்பாணத்தில்:

“செத்தேக்க நிற்கிறேன் என்று சொல்லாத கொத்தியாத்தை

பத்தேக்க நிக்கிறேன் என்று சொல்லாத கொத்தியாத்தை”

எனச் சாக்குப்போக்குச் சொல்லிப் பாடி வீட்டில், வீட்டுச் சூழலில் தங்கிநிற்கும் கொத்தியாத்தையை விரட்டுவர். கொத்திப் படையலைப் அப்படியே கழிப்பிடத்தில் கொண்டு சென்று கொட்டிவிடும் அல்லது போட்டுவிடும் வழக்கமே காணப்படுகிறது. ஆயினும் சில இடங்களில் படையலில் உள்ள பொருட்கள் ஒவ்வொன்றிலும் சிறிது சிறிது கிள்ளியெடுத்து மூடுபெட்டியில் கொண்டு சென்று ஆலில் வைக்கும் வழக்கம் காணப்படுகிறது. சடங்கு யாவும் முடிந்த பின் படையலுக்கு நீர் தெளித்துவிட்டு அதனை மூத்தவர்கள் வயதானவர்கள் உண்ணும் வழக்கமும் உண்டு.

கிழக்கிலங்கையில் கொத்தி

வட இலங்கையைப் போலவே பிரசவ காலத்தில் மருத்துவிச்சி அழைக்கப்படுவாள். அதேபோன்று ஊர்க் குடிமகனான சலவைத் தொழிலாளிக்குப் பிரசவம் அறிவிக்கப்படும். அவனது வீட்டுப்பெண் மாத்துச்சேலை (மாற்றுச்சேலை) கொண்டு வருவார். இது அவரது உரிமையாகக் கருதப்படுகிறது. இன்றும் இந்த வழக்கம் மட்டக்களப்பில் உள்ளது. (மேகலா,சி.,2022) அக்கரைப்பற்று, ஆரையம்பதி போன்ற பிரதேசங்களில் முன்பு கொத்தி வழிபாடு காணப்பட்டதாகவும் இப்போது வழக்கொழிந்து விட்டதாகவும் (நேர்காணல், அபிசனா, களுவாஞ்சிக்குடி) அறிய முடிகின்றது.

ஆனால் கொத்தியாத்தியை ஒத்த தெய்வமாக ‘குத்துக்கிழவி’ காணப்படுகிறார். அம்மன் ஆலயச் சடங்குகளில் கலையாடுகின்ற தேவாதியானவர் குத்துக்கிழவியாக உருமாறி அலங்கரித்து வந்து, சேலை மறைப்பில் மருந்தரைத்து, வந்திருக்கும் பக்தருக்கு வழங்குவார். அம் மருந்து தீரா நோயையும் தீர்க்கும் என்பது நம்பிக்கை. பார்வதி தேவி சனாதன முனிவர்களுக்கு அவர்கள் கேட்ட வரத்திற்கமைய கொடுத்துவிட்டு, பின் கிழவி ரூபத்தில் குடிசையொன்றில் காத்திருந்து, அவ்வழி வந்த இம் முனிவருக்கு நீரைக் கொடுத்துவிட்டு சிவனை மீட்டதாகவும், அவரே குத்துக்கிழவி ஆனதாகவும் கூறப்படுகிறது. பிரசவம் பார்த்துவிட்டு குழந்தையைத் தூக்கிச் சென்றுவிடும் என்ற கொத்தியின் கதையும் இதற்குச் சமமாக உள்ளது.

இதேவேளை அக்கரைப்பற்றில் நூறு வருடங்களுக்கு முன், ‘குத்துக்கரையாக்கன்’ என்ற பேய் குழந்தை பிறந்து பன்னிரு நாட்களுக்குள் தூக்கிச் சென்று விடும் என்றும் அல்லது நோய் நொடியைக் கொடுக்கும் என்றும் கருதி ‘கடப்படியில்’ (தாய்பிள்ளை இருக்கும் அறை வாசல்) வேப்பிலை, இரும்பாலான பொருட்களைக் கட்டிவிடுவர். பூசாரியிடம் நீரோதிப் பெற்று காவலுக்கு வைப்பர். தற்போது இப்பேயின் பெயர் வழக்கற்றுப் போய், ‘காத்தணவு’ என்றே அழைக்கப்பட்டு வருகிறது.  

ஈழத்தில் கொத்தி வழிபாட்டிடங்கள்

இலங்கையில் யாழ்ப்பாண மாவட்டத்தின் வடமராட்சி, தென்மராட்சி, வலிகாமம் மற்றும்  தீவுப்பகுதிகளில் கொத்தி வழிபாடு காணப்பட்டுள்ளது. ஏலவே கூறியது போல கிழக்கிலங்கையில் அக்கரைப்பற்று, ஆரையம்பதி போன்ற இடங்களில் முன்பு கொத்தி வழிபாடு காணப்பட்டுள்ளது. மலையகம், திருகோணமலை போன்ற இடங்களில் கொத்தி வழிபாடு இருந்ததா என்பதை அறிய முடியவில்லை. கொத்தித் தெய்வத்துக்கோ அன்றி பேய்க்கோ தனி உருவம் எதுவும் இல்லை. அது பெண்ணாகவே கூறப்படுகிறது. அக்கறைப்பற்றில் ‘குத்துக்கரையாக்கன்’ எனும் தெய்வப்பெயர் ஆண் பெயராகவும், பிற்காலத்தில் வழங்கும் ‘காத்தணவு’ எனும் சொல் (நேர்காணல் – சந்தோசனா, அக்கரைப்பற்று) பொதுப்பெயராகவும் உள்ளது.

கொத்தி ‘பால்’ மரங்களில் உறைகின்றாள் என்பதே ஐதீகம். குறிப்பாக ஆலமரங்களில் அவள் விரும்பி உறைவதாகக் கூறப்படுகிறது. கொத்தி உறையும் ‘ஆல்’ கொத்தியால் எனப்படுகிறது. வடமராட்சியில் கொத்தியாலடி என ஒரு இடம் உண்டு. சுன்னாகத்தில் ‘றொட்டியாலடி’ எனுமிடமுண்டு. அதன் அர்த்தத்தை நேர்காணலில் கேட்டபோது யாவரும் தெரியாது என்றே கூறினர். கொத்தியாலடி என்பதே இவ்வாறு திரிபடைந்திருக்கலாம். கொத்தி சென்ற வீதிகள், இருந்த இடங்கள் என்பன இன்றும் கொத்தியொழுங்கை, கொத்தித்தெரு எனப்படுகின்றன. பொதுவாக வீட்டில் இருண்ட மூலை, ஆட்கள் அதிகம் புழங்காத இடம் கொத்தி மூலை எனப்படுகிறது. அதேபோல் ஆளரவமற்ற அமைதியான இடங்கள் ஊர் வழக்கில் கொத்திமூலை எனப்படுகின்றது. அது பய உணர்வின் அடிப்படையில் அமைந்ததாகும்.

கொத்திக்கான வழிபாடு பொதுவில் பிள்ளைப்பேறு நடந்த வீடுகளிலேயே நடைபெறுகின்றது. ஆயினும் வடமராட்சி, கரவெட்டிக்கு வடக்கே ஒரு கொத்தியார் கோயிலும், நெடுந்தீவில் குருக்கள் மடத்தில் இருந்து சற்றுத் தூரத்தில் மூன்றாம் வட்டாரத்தில் ஒரு கொத்தியார் கோயிலும் காணப்படுகின்றன. இதில் கரவெட்டிக் கோயிலை எம்மால் அடையாளப்படுத்த முடியவில்லை.

வழிபாட்டு முறைகள்

பிரசவ வீடுகளில் குழந்தை பிறந்து ஐந்தாம்நாள்; சோறு, பிட்டு என்பவற்றோடு மரக்கறி, மச்சம், மாமிசம் என்பன படைத்து வழிபடப்பட்டுப் பின் கொத்தியைக் கழித்து ஆளரவமற்ற பொது இடத்தில், ஆலமரத்தில் விட்டுவருதல் எனும் சடங்கு நடைபெறும். இச்சடங்கு பரியெரித்தல் அல்லது மருக்கைச்சடங்கு எனச் சுட்டப்படுகிறது.

Image-1.jpg

நெடுந்தீவு கொத்தியம்மன் கோயிலில் பூசாரிகளாக உள்ளவர்கள் ‘உடுக்கர் பரம்பரை’ எனக் கூறப்படுகின்றனர். இவ்வாலயக் கொத்தியம்மன் சூலவடிவிலேயே வழிபடப்படுகிறாள். இங்கு சித்திரா பௌர்ணமி சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இங்கு நடைபெறும் சடங்குகளில் பூரண கும்பம் வைத்தல், நிறைநாழி வைத்தல், சரக்குப் பொருட்கள் (பத்தியத்துக்கானது) வைத்துப் பாடல் பாடுதல் ஆகியன இடம்பெறும். பின் ஆலய பரிபாலனத்தவர்களால் நாயகப் பானையும் மற்றவர்களால் தனித்தனிப் பானைகளும் வைத்து பொங்கல் பொங்கப்படும். அன்று பந்தலமைத்து சித்திரபுத்திரனார் கதை, அபிராமி கதை போன்றன படிக்கப்படுகின்றன. தயிரடியன் கூட்டத்தினர் மாதா மாதம் மாறிமாறி விளக்கேற்றுகின்றனர். இங்கு ‘கல் போட்டு’ வணங்கும் முறை காணப்படுகின்றது. இது சாத்தானார் வழிபாட்டை ஒத்துள்ளது. மேலும் பிறந்த குழந்தையை முற்பத்தோராம் நாள் கோயிலில் கிடத்தி, பொங்கல் பொங்கி நேர்த்திக்கடன் செலுத்தும் வழக்கமும் காணப்படுகின்றது.

Image-2.jpg

சமகாலப் பயில்வு

இன்று வீடுகளில் பிரசவங்கள் நடைபெறுவதில்லை. அதனால் ஊர் மருத்துவிச்சிகளும் இல்லாது போயினர். கொத்தி வழிபாடும் வழக்கிழந்து காணப்படுகின்றது. பேய்கள் பற்றிய நம்பிக்கையும் வலுவற்று வருகிறது. மரங்களின் கீழ் மயங்குதல், பயமுறுத்தும் ஓலம் முதலியனவற்றுக்கு அறிவியல் விளக்கங்கள் கூறப்படுகின்றன.

Image-3-1.jpg

முன்பே கொத்திக்கு கோயில்கள் இல்லை. நெடுந்தீவுக் கோயிலில் சித்திராப் பௌர்ணமி பூசைக்கு சமஸ்கிருத மந்திரம் சொல்லும் குருக்களை அழைக்கும் வழக்கம் உருவாகிவிட்டது. ஆயினும் கொத்தி, நாட்டார் நம்பிக்கைகளுக்கு உரிய தெய்வமாகவும் பேயாகவுமே கருதப்படுகின்றாள். மேன்னிலையாக்கம் பெறவில்லை; மாறாக செல்வாக்கு இழந்து வருகின்றாள். அவளின் பெயரிலான சொற்கள், வழக்காறுகள் தமிழில், தமிழ்ப் பண்பாட்டில் வழக்கொழிந்து வருகின்றன.

நிறைவுரை

பிறப்பு, இறப்புச் சார்ந்த மருத்துவ வசதிகள் குறைந்த காலத்தில் கடவுளை மட்டுமே நம்பிய தமிழ்ச் சமூகம் இருந்தது. அது கொத்தியை ஆத்தையாக வணங்கியது. பேயாக விரட்டியது; கழிப்புக் கழித்தது. இதில் உள்ள சமூகச் சிக்கலை நாம் முடிச்சவிழ்க்கலாம். பிரசவ காலத்தில் தாயாகக் கொண்டாடி, பின்பு பேயாக்கி விரட்டும் சடங்கு கொத்திக்கு நடைபெற்றது. அதேபோல வீடு குடிபுகுதல் போன்ற பிரவேசச் சடங்கில் வீட்டு வேலைகள் முடிந்து குடி புகுவதற்கு முதல்நாள், தச்சுப்பொங்கல் பொங்கி ‘தச்சன் காளி விரட்டல்’ நடைபெறும். இரு சடங்கிலும் உரியவர் படையல் படைப்பார். அவரே கொண்டு செல்வார். தகுந்த சன்மானம் வழங்கப்படும். அதன் பின் அவர்கள் வீட்டினுள் வருவதில்லை; வரமுடியாது. பிரசவத்தோடு தொடர்புறும் மருத்துவிச்சியும், மாத்துச்சேலை கொண்டுவரும் குடிமையும் ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்தவர்களாகவே இருந்தனர். தீட்டுக்காலத்தில் தேவையின் பொருட்டு வீட்டினுள் விடப்பட்ட இவர்கள், தேவை நிறைவேற்றப்பட்ட பின் கொத்திப்பேயோடு சேர்ந்து வீட்டினுள் வராது தடுக்கப்பட்ட சமூக வரலாற்றின் ஆவணமாக கொத்தியாத்தை திகழ்கின்றாள். கொத்தி வழிபாட்டின் வீழ்ச்சியை சாதியத்தின் வீழ்ச்சியாகவும் கருதலாம். மனித வாழ்வியலில் நம்பிக்கைகள், வழக்காறுகள் உருவாவதும், தேய்வடைவதும் தவிர்க்க முடியாததுதான்.

தொடரும்.


https://www.ezhunaonline.com/god-of-obstetrician-koththi/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காவல் தெய்வம் சேவகர்

தி. செல்வமனோகரன்

July 10, 2024 | Ezhuna

மனிதர் ஆதிகாலத்தில் நாகரிகமுற்று நிலையான குடியிருப்புகளை அமைத்து வாழத்தலைப்பட்ட காலத்தில் அவர்களது வாழ்வு இரு அடிப்படைகளைக் கொண்டமைந்தது. ஒன்று காதல்; காமம் உள்ளிட்ட உணர்வுகளைச் சார்ந்த அகவியல் அம்சங்கள். மற்றையது வீரம்; கொடை முதலியவற்றை அடிப்படையாகக் கொண்ட புறவியல் அம்சங்கள். வீரம் என்பது பகை வெல்லல், தலைமை தாங்குதல், வேட்டையாடுதல், உடலுள வலிமை போன்ற பல்வேறு அம்சங்களைக் கொண்டிருந்தது. இனக் குழுத்தலைவன் அல்லது வீரன் தன் இனத்திற்காக உயிர் துறக்கும் போது தெய்வமாக மதிக்கப்பட்டான். நீத்தார் பெருமை பேசப்பட்டது. முன்னோர் வழிபாட்டில் அதுவும் ஓரங்கமாயிற்று.

இயற்கையின் இயல்பிறந்த ஆற்றல்களால் நிகழும் ஆபத்துகளில் இருந்து தம்மைக் காப்பாற்றிய வீரனை மக்கள் கொண்டாடினர். அவனைத் தலைவனாக்கினர் அல்லது தலைவனுக்குச் சமமாகவோ அடுத்த தரத்திலோ வைத்து மரியாதை தந்தனர். அவன் இறந்தானாகில் அது நினைவு நாளாயிற்று; அவன் வழிபடப்பட்டான்.

தமிழகத்தில் இவ்வழிபாடு கல்லாக, நடுகல்லாக, வீரக்கல்லாக, கற்திட்டையாக, கற்பதுக்கையாக, பள்ளிப்படையாக பல்பரிமாணமுற்றுக் காணப்படுகின்றது. மனிதர்கள், தெய்வங்களை உருவகம் செய்த பொருட்களில் ‘கல்’ பிரதானமானது என்பது குறிப்பிடத்தக்கது. ‘நடுகல் வழிபாடு’ இன்றும் ஈழத்துப்புலத்தில் சிறப்புற்றுக் காணப்படுகின்றது. வீரர்களைக் கொண்டாடும் மரபு ஈழத்திலும் காணப்பட்டுள்ளது. அண்ணமார், கூட்டத்தார், முதலி உள்ளிட்ட தெய்வங்கள் இதற்கு உதாரணங்களாகின்றன. ஈழத்துப்புலத்தில் இவ்வாறான கிராமியத் தெய்வங்கள் பல காணப்பட்டுள்ள போதும் சில இற்றைவரை உரிய வகையில் அடையாளப்படுத்தப்படவோ, ஆய்வுக்கு உட்படுத்தப்படவோ இல்லை. அந்த வகையில் ‘சேவகர்’ தெய்வமும் அவற்றுள் ஒன்றாக விளங்குகின்றது.

சேவகர்

யாழ்ப்பாணத்தோடு இணைந்துள்ள தீவுகளில் ஒன்று காரைநகர் ஆகும். இலங்கையில் காரைதீவு என்ற பெயர் மூன்று இடங்களில் வழங்கப்படுதலால் யாழ்ப்பாணத்துடன் இணைந்துள்ள இத்தீவு காரைநகராயிற்று. ‘திண்ணைப்புரத் திரியந்தாதி’ தந்த கார்த்திகேய ஐயரே நூற்காப்பில் காரைநகர் என்னும் சொல்லை முதன்முதலில் கையாண்டுள்ளார். 1887 இல் தட்சிண கைலாசபுராணத்தைப் பதிப்பித்தவரான சிவசிதம்பர ஐயர் இச்சொல்லைப் பயன்படுத்துகின்றார். 1923.9.12 இல் இப்பெயர் அரசு அங்கீகாரம் பெற்றது. இந்த ஊரில் தான் ‘சேவகர்’ எனும் தெய்வம் வழிபடப்பட்டு வருகிறது. இப்பெயரிலான தெய்வம் வேறெங்கும் இருப்பதாக அறிய முடியவில்லை.

தமிழ் அகராதிகள் ‘சேவகம்’ என்ற சொல்லுக்கு சேவகத்தொழில், சோம்பு, துயில், பேயுள்ளி, யானைத் துயிலிடம், வணக்கம், வீரம், வேலை எனவும் ‘சேவகனார்’ என்பதற்கு ஐயனார் எனவும் ‘சேவகன்’ என்பதற்கு ஐயன், சிற்றாமுட்டி, பணிவிடைக்காரன, பேயுள்ளி, வீரன் எனவும் பொருள் சுட்டுகின்றன. இங்கு சேவகனார் என்பது ஐயனார் எனவும், சேவகன் என்பது ஐயன் எனவும் வருதல் கொண்டு இது ஐயனார் வழிபாடு எனக் கொள்ளலாமா எனின், ஐயனார் வழிபாடு இவ்வூரில் தனித்துக் காணப்படுகின்றமை சுட்டதக்கது. ஆக, இங்கு ஐயன் (தலைவன்), பணிவிடைக்காரன், வேலைக்காரன், வீரன் என்பனவே பொதுநிலையில் நிற்கின்றன.

சங்க இலக்கியமான பதிற்றுப்பத்தைப் பதிப்பித்து அடிக்குறிப்பும் எழுதியவரான உ.வே. சாமிநாதையர், வீரர்களைச் சான்றோர் எனக் கூறும் மரபு உண்டு எனக் கூறி ‘தானைச் சான்றோர்’ (பதிற்றுப்பத்து – 82,13) என்பதனை எடுத்துக்காட்டுகின்றார். சான்றோர் என்பது போரிடுவதில் சிறந்தவர் என்றாகின்றது. பதிற்றுப்பத்தில் சேரமன்னர்கள் ‘சான்றோர் மெய்ம்மறை’ (பதிற்றுப்பத்தில் – 14,12; 52,11) எனப்படுகின்றனர். போர் வீரருக்குக் கவசம் போல சேரன் முன்னால் நின்றான் என இது விளக்கப்படுகிறது. புறநானூறும் போர்வீரரை ‘தேர் தர சான்றோர்’ (63;5) என்கின்றது. பல்வேறு குடிகளைச் சேர்ந்தவர்களும் போர்வீரர்களாக இருந்துள்ளனர். ஆக, பல குடிகளின் கூட்டாகப் போர்ப்படை இருந்துள்ளமை கவனத்திற்குரியது.

கேரளதேசத்தின் (சேரநாடு) ‘சோகன், சோகொன், சேகுவன்’ எனும் பெயர்கள் ஈழவர் என்னும் ஜாதியினருக்கு வழங்கப்படுவதாகவும், இவர்கள் ஈழதேசத்தில் இருந்து வந்தவர்கள் என்றும் கூறப்படுகின்றது. சான்றோர் எனும் சொல்லின் வழிவந்த சொல்லே சேவகன் என்றும், சேவகன் எனும் சொல்லின் திரிபே ‘சோகன், சோகொன், சேகுவன்’ என்றும் பி.எல். சாமி குறிப்பிடுகின்றார்(சாமி,பி.எல்.,1982, 87).

சேவகன் என்னும் சொல் பல்லவர் கால, சோழர் காலக் கல்வெட்டுகள், நடுகற்கள் பலவற்றிலும் காணப்படுகின்றது. சடையவர்மன் சுந்தரச் சோழ பாண்டியன் 19 ஆம் ஆட்சியாண்டில் வெட்டப்பட்ட கல்வெட்டில் “திருவொற்றைச் சேவக மாயலட்டியோன்” எனும் சொற்றொடர் காணப்படுகிறது. பாண்டியர் கல்வெட்டுகளிலும் ‘ஒற்றைச் சேவகன்’ எனும் சொற்றொடர் காணப்படுகிறது. இதே போல அட்டாலைச் சேவகன் (சமையற்காரனாகவும் போர் வீரனாகவும் இருப்பவன்) முதலான சேவகர் பற்றிய குறிப்புகள் உண்டு. போர்வீரர்கள், நடுகற்கள் வைத்து வழிபடப்பட்டனர். சங்கம் தொட்டு நடுகற்கள் மக்களால் மலரிட்டு விளக்கேற்றி வழிபடப்பட்டன. அதேவேளை நடுகற்கள் போர் வீரருக்கு மட்டுமானவையல்ல.

போர் வீரருக்கான முக்கிய வழிபாட்டுக் கட்டுமானம் ‘பள்ளிப்படை’ ஆகும். போரில் வீரத்துடன் ஈடுபட்டு மரணித்த மன்னருக்குக் கட்டப்படுவதே பள்ளிப்படை என்று ஒரு சாரார் கூறினாலும் படைத்தலைவர்களுக்கும் பள்ளிப்படை அமைக்கப்படுகிறது என்பதை ஆய்வாளர்கள் சான்றுபடுத்துகின்றனர். தமிழகத்தில் கி.பி ஐந்தாம் நூற்றாண்டுக்கு முன் நடுகற்களும், சமாதியமைத்து வழிபடும் வழிபாட்டு முறைகளுமே காணப்பட்டுள்ளன. வீரருக்கான சமாதிக் கோயில்களே பள்ளிப்படைக் கோயில்களாகப் பரிணமித்ததாக அறியமுடிகிறது. முன்னோர் வழிபாட்டின் வழி தோற்றம் பெற்ற கோயிலின் ஒரு கட்ட அல்லது ஆரம்பகட்ட நிலையாகப் பள்ளிப்படை அமைந்துள்ளது என்பர். திருவாசகத்திலும் ‘சேவகன்’, ‘அச்சம் தவிர்த்த சேவகன் வாழ்க’ (திருவண்டப் பகுதி,20), ‘சேவகனாகித் திண் சிலையேந்தி’ (போற்றித் திருவாகவல், 2.81) எனும் வரிகள் வீரமுடையானைக் குறித்தே பயன்படுத்தப்படுகின்றன.

எது எவ்வாறு இருப்பினும் ‘சேவகன்’ என்ற பெயரிலான தெய்வ வழிபாட்டு முறை பெருமெடுப்பில் இருந்ததாக அறியமுடியவில்லை. சோழராட்சியின் முடிவில் அல்லது அதற்குப் பின் தோன்றிய கந்தபுராணத்தில்,

“எய்யும் வார்சிலை யெயினர் மாதராள்

உய்யுமாறு தன்னருவ நீத்தெழீஇச்

செய்ய பேரருள் செய்து சேவகன்

மையன் மானுட வடிவந் தாங்கினான்”        

(வள்ளி திருமணப்படலம், 65)

என முருகனைப் போர்வீரனாக, சேவகனாகக் கச்சியப்பர் சுட்டுகின்றார்.

தமிழகப்புலத்தில் இவ்வாறு இருக்க, ஈழத்தில் சேவகன் எனும் சொல் கொண்ட கல்வெட்டுகளையோ, நடுகற்களையோ, காரைநகர் தவிர்ந்த இடங்களில் கோயில்களையோ காணமுடியவில்லை.

காரைநகரில் சேவகர் கோயில்கள்

காரைநகரில் வலந்தலை, களபூமி, பலிகாடு, கருங்காலி, தங்கோடை, கோவளம் எனும் பெருங்குறிச்சிகள் உள்ளன. இவற்றுள் வலந்தலைக் குறிச்சியிலும் அதனை ஒட்டிய ஊர்களிலுமே சேவகர் வழிபாடு காணப்படுகின்றது.

வலந்தலைப் பகுதியில் காரைநகர் தியாகராசா மகாவித்தியாலயம் என முன்னர் குறிப்பிடப்பட்ட காரைநகர் இந்துக் கல்லூரியை அண்மித்து, சேவகர் கோயில் ஒன்று உண்டு. அது சிறுகோயில்; அரசமரத்தின் கீழ் உள்ள சமாதியின் மீது கட்டப்பட்டதாக அக்கோயிலை ஆதரித்து வருகின்றவர்கள் குறிப்பிடுகின்றனர். அதேபோல ‘மாப்பாண ஊரி’யில் (இது சோனகடைப்பள்ளி என்று முன்பு கூறப்பட்டது) இரு சேவகர் கோயில்கள் உள்ளன. வெறுங்காணி ஒன்றில் பனைமரத்தின் கீழ் இத்தெய்வம் இருந்ததாகவும், அது வேளாளர் ஒருவரின் காணி எனவும், அக்காணியில் முக்குவர் குலத்தவரான தம்மை உட்செல்லவிடாது வேலியடைத்ததாகவும், அதனால் தனது தமையனார் அதற்கு எதிரேயுள்ள தனது காணியில் புதுக்கோயில் ஒன்றை உருவாக்கியதாகவும், தற்போது இரு கோயில்களையும் பராமரித்துவரும் திரு.க. நவரத்தினராசா (வயது 65) தெரிவித்தார்.

sevakar 1

வெடியரசன் வீதியை அண்மித்துள்ள ‘ஆயிலி’ எனும் இடத்தில் சேவகர் கோயில் ஒன்று உண்டு. கொல்ல(ர)டைப்பு, வேரப்பிட்டி, மல்லிகை போன்ற குறிச்சிகளிலும் சேவகர் கோயில்கள் காணப்படுகின்றன. வேரப்பிட்டி, மல்லிகை எனும் இரு இடங்களிலும் ‘சேவகர் வீதி’ என கோயிலுக்கான வீதிக்குப் பெயர்ப்பலகை இடப்பட்டுள்ளது. இவ் ஏழு கோயில்களையுமே எம்மால் அடையாளப்படுத்த முடிந்தன.

இந்தக் களவாய்வுக்கு உதவிபுரிந்த திருமதி மகிழினி கோடீஸ்வரன் மற்றும் சுவிந்தன்,  நவிசா ஆகியோரின் உதவியோடு இக்கோயில்கள் இருக்கின்ற சமூகங்கள் பற்றி ஆராய்ந்தோம். இதில் இரு கோயில்கள் வேளாளருடையது; இரு கோயில்கள் முக்குவருடையவை; மேலும் இரு கோயில்கள் பள்ளர் சமூகத்திற்குரியவை; மிகுதி ஒன்று கொல்லர் சமூகத்திற்குரியது என்பதும் கவனத்திற்குரியது. ஆகவே இத்தெய்வம் பல்சமூக வழிபாட்டுக்குரியது என்பது தெளிவாகின்றது.

தமிழக அறிஞர் பி.எல். சாமி ‘சான்றான், சேகுவர், சோகன, சேகொன், சாணார்’ எனும் சொற்கள் கேரள ‘ஈழவர்’ சமூகத்தைக் குறிப்பதாகப் பல ஆதாரங்கள் வழி எடுத்துரைக்கின்றார். பல்லவர் காலத்தில் தமிழகம் வந்த ஈழத்தவர்களே தென்னைகளை, அவற்றிலிருந்து கள் இறக்குதலை அறிமுகம் செய்தவர்கள் என்றும் இவர்கள் போர்வீரர்களாக இருந்தமையையும் ஆதாரப்படுத்துகிறார். போரற்றுப் போன காலத்தில் கள்ளிறக்குபவர்களாக மட்டும் இருந்ததனால் ஈழவர் சாதி, சாணார் சாதியாகக் கீழ்நிலைப்படுத்தப்பட்டது என்கிறார். ஈழத்தில் சாணாரை ஒத்த நளவர் சமூகத்தின் தெய்வமா சேவகர்? எனும் வினா எழுகிறது. இக்கருத்துரு, சீவல் தொழிலாளர்களின் (நளவர் சமூகத்தின்) தெய்வமாகிய கூட்டத்தாரைக் குறிக்க வாய்ப்புண்டு.

காரைநகரில் நிலவும் சேவகர் தெய்வத்தை பல்சமூகத்தினர் வழிபடுகின்றனர். இங்கிருக்கும் சீவல் தொழிலாளர்கள் (கள் இறக்குபவர்கள்) பள்ளர் சமூகத்தவரே என்பதும், சேவகர் வழிபாடு நிகழும் இவ்வேழு கோயில்களும் உள்ள குறிச்சிகளில் நளவர் சமூகத்தினர் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இதன்வழி கூட்டத்தார் தெய்வம் வேறு, சேவகர் வேறு என்பது தெளிவாகின்றது.

சேவகர் தெய்வம் பற்றிய கதையாடல்

சேவகர் கோயில்களைப் பராமரித்து வரும் நபர்களோடு உரையாடிய போது, சேவகர் யார் என்பதையோ அத்தெய்வ வழிபாடு எப்படி வந்தது என்பதையோ அவ்வழிபாட்டின் தொடக்ககாலம் பற்றியோ அவர்களால் உறுதிப்பட எந்தத் தகவலையும் தர முடியவில்லை. அப்பா, தாத்தா, அம்மா, அப்பம்மா, சித்தப்பா ஆதரித்தார்கள் எனத் தாமறிந்த ஒருவரை சுட்டமுடிகின்றதேயன்றி பிறிதொரு தகவலையும் தரமுடியவில்லை. இதற்கு அடிப்படைக் காரணங்களாக,

1. 1990 இல் உள்நாட்டு யுத்தத்தால் இம்மக்கள் ஊரைவிட்டு இடம்பெயர்ந்தமையும் அதனால் இளைய தலைமுறைக்கு உரிய வகையில் பாரம்பரியங்கள் கடத்தப்படாமையும்;

2. பூர்வகுடிகள் பலர் காரைநகரில் இன்று இல்லை; முதிய தலைமுறையும் இல்லை. முப்பத்தைந்து வருடங்களுக்கு முன்பு முப்பத்தைந்து வயதுக்குட்பட்ட தலைமுறையே இன்றைய முதிய தலைமுறையாக அங்கு உள்ளனர்; 

என்பவற்றைக் குறிப்பிடலாம்.

அதனால்தானோ என்னவோ சேவகர் கோயிலை அறிந்திருப்போரும் இன்று அரிதாகவே உள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்தக் கோயில்கள் அமைந்திருக்கும் பெரிய குறிச்சி, வலந்தலை என்பதாகும். வலந்தலை என்பதன் பொருள் என்ன? வலம் தரும் தலை – ஆரம்ப இடம் – வெற்றியைப் பிரகடனப்படுத்தும் இடம் –  கடற்பற்றில் வரும் எல்லைத் தலைமுகப்பு என விளங்கப்படுகிறது (சிவப்பிரகாசம்.மு.சு, 1988, விக்ஷ்ணுபுத்திரர் வெடியரசன் வரலாறு, மத்திய சனசமூகநிலையம், தொல்புரம், ப.135). இந்தப் பிராந்தியத்தில் முக்கிய சம்பவங்கள் இரண்டு நடைபெற்றதை ஐதீகக் கதைகளின் வழியும் சிவப்பிரகாசத்தின் நூலின் வழியும் அறிய முடிகின்றது.

1. முருகப்பெருமான், கைலாயமாகிய இந்தத் தீவுப் பகுதிகளில் சூரபத்மனோடு யுத்தம் புரிந்து பெற்ற வெற்றியைப் பிரகடனம் செய்த இடம் இது.

2. முக்குவர் குலத்தலைவனும், தீவுப்பகுதியை ஆண்டவனுமான வெடியரசன் தனது ஒவ்வொரு யுத்தத்திலும் பெற்ற வெற்றியை, தன் சகவீரர்களுடன் வந்து பிரகடனம் செய்த இடம் இது.

ஆகவே போர் வெற்றியைப் பிரகடனம் செய்யும் வலந்தலையில் தொன்மையான இரு சேவகர் கோயில் இருப்பது வியப்பன்று. அதிலும் இந்துக் கல்லூரிக்கு அண்மையில் உள்ள சேவகர் கோயில் சமாதியோடு இணைந்தது என்பது போர்வீரருக்கான பள்ளிப்படைக் கோயிலை ஒத்துள்ளது என்பதோடு, மலரிட்டு விளக்கு வைக்கும் முறைமையே இங்கு காணப்படுவதும், சேவகர் வழிபாடு போர்வீரர் சார்ந்த வழிபாடு என்றே கருத வைக்கிறது.

அதேவேளை கந்தபுராணக் கதையோடு வலந்தலை இணைக்கப்பட்டு இருப்பதும், யாழ்ப்பாணக் கலாசாரம் கந்தபுராணக் கலாசாரத்தோடு இணைந்திருப்பதும், கந்தபுராணம் முருகனை ‘சேவகன்’ என போர்வீரனாகச் சுட்டி நிற்பதும் (வள்ளி., 65), மல்லிகைக் குறிச்சிக் கோயில் மணியக்காரரான கனகு, ‘சேவகரை சிவனின் ஒரு அம்சம்’ எனக் கூறுவதும், முருக வழிபாட்டோடு இவ் வீரவழிபாட்டை இணைத்துச் சிந்திக்க வைக்கின்றது.

sevakar 5

சேவகர் பற்றி ‘மாப்பாண ஊரி’ க. நவரத்தினராசா, தனது தாயார் சுருட்டைப் பற்றி விட்டு குறைச்சுருட்டை வைப்பதாகவும், அது காணாமற் போவதாகவும், பின்பு ஒருநாள் ஒரு மனித உருவம் நடுச்சாமத்தில் அதனை எடுத்துப் போவதைக் கண்டதாகவும், அதன்பின் அக்கோயிலை ஆதரிக்கத் தொடங்கியதாகவும், அதன்பின் தம் வளம் பெருகியதாகவும், இன்றும் அவரை வழிபாட்டே நற்காரியங்களைத் தொடங்குவதாகவும் கூறினார்.

இந்துக் கல்லூரிக்கு அருகாமையில் உள்ள ஆலய அறங்காவலர்களும் மீன்பிடிக்கச் செல்வோரும் இத்தெய்வத்தை வழிபட்டே செல்வர் என்றும், யுத்தம் நடந்து கொண்டிருந்த காலத்தில் கடற்படையினர் சிலர் வந்து சுருட்டுப் பற்றியபடி வந்த மனிதர் யார்? அவர் எங்கே என விசாரித்ததாகவும், அப்படி ஒருவர் வரவில்லை என்றும், அது இச்சேவகர் தெய்வமாக இருக்கலாம் எனத் தாம் கூறியதாகவும், பின் அக் கடற்படையினர் பொங்கலுக்கு உரிய பொருட்களைப் பயபக்தியோடு தந்து வணங்கிச் சென்றதாகவும் கூறுகின்றனர்.

கொல்லடைப்பு – ஆயிலி சேவகராலயப் பரிபாலனத்தினைச் செய்து வருவோர், தாம் யுத்தத்தால் இடம்பெயர்ந்து வவுனியா போனதாகவும், அங்கு பிள்ளையார் கோயிலைக் கட்டி வழிபட்டதாகவும், இத்தெய்வம் தங்களை இருக்கவிடாது பல சிக்கல்களைத் தந்ததாகவும், தாம் மீள இங்கு வந்து இத்தெய்வத்தை ஆதரிக்கத் தொடங்கிய பின் அச் சிக்கல்கள் நீங்கியதாகவும் கூறுகின்றனர். சேவகரின் உருவம் என்பது வெள்ளை வேட்டி கட்டிய முதியமனிதர், மேலாடை அணியாதவர், சுருட்டுக் குடிப்பவர் என வலந்தலை ஆலயங்களின் பரிபாலகர்கள் கூறினர்.

சேவகர் வழிபாட்டு முறைகள்

sevakar 3

சேவகரை வழிபடும் முறை ‘கல்’ ரூபமாகவே இருந்தது. வெள்ளைக்கல்; அது அளவுகளில் வேறுபடுகின்றது. இன்று வழிபடும் கற்களோடு அருகில் உருவங்கள் (செப்பு, சீமெந்து, இரும்பு, சூலம்) வைத்து வழிபடப்படுகின்றன. பனை, ஆல், வேம்பு ஆகிய மரங்களை ஒட்டியவையாகவே சேவகர் வழிபாடு இடம் பெறுகின்றது. சேவகருக்குப் பொங்கல் பொங்கி, மடைபரவி, சைவமரபு வழிநின்றே வழிபாடு இயற்றுகின்றனர். இங்கு பலியிடலோ மச்சப் படையலோ இல்லை. மாப்பாண ஊரியில் உள்ள இரு கோயில்களிலும் சுருட்டு வைத்து வழிபடும் மரபு காணப்படுகின்றது. நேர்த்திக் கடன்கள் வைத்து, அது நிறைவேறியவுடன் பொங்கிப் படைத்தல் நடைபெறுகிறது. இதைத் தவிர தைப்பொங்கல், சித்திரவருடப் பிறப்பு போன்ற விக்ஷேட தினங்களில் இங்கு சிறப்பாக வழிபாடுகள் இயற்றப்படுகின்றன. பொதுவில் அவரவர் நீராட்டி, விளக்கு வைத்து, பூச்சூடி வழிபடும் முறையே காணப்பட்டு வருகின்றது. குறைந்தது ஒரு நேரமேனும் ஒவ்வொரு நாளும் விளக்கு வைக்கப்படுகின்றது.

sevakar 4

சமகாலப் பயில்வு

கொல்லடைப்பு, மாப்பாண ஊரி கோயில்கள் கற்கோயில்கள் ஆக்கப்பட்டு, வேறு எந்தவித மாற்றமும் இன்றி அவ்வச் சமூகத்தவர்களாலேயே விளக்கு வைத்து வழிபடப்படுகின்றது. மல்லிகைக் குறிச்சி சேவகராலயத்திற்கு கருவறை, முன்மண்டபம், மடப்பள்ளி என்பன கட்டப்பட்டு பிராமணரை அழைத்து கும்பாபிக்ஷேகம் நிகழ்த்தப்பட்டது. ஆயினும் நித்திய பூசையை மணியக்காரர் ‘கனகு’ அவர்களே செய்து வருகின்றார். இந்துக் கல்லூரிக்கு அருகாமையில் உள்ள சமாதிக்கோயில், சேவகர் கல்லோடு ஐயனார் உருவமும் வைத்து வழிபடப்படுகிறது. பூசை, ஆலயப் பரிபாலகராலேயே நிகழ்த்தப்படுகின்றது.

ஆனால் வேரப்பிட்டி, ஆயிலி ஆகிய குறிச்சிகளில் உள்ள சேவகர் ஆலயங்கள் முற்றுமுழுதாக பிராமணர்களிடம் ஒப்படைக்கப்பட்டுவிட்டன. மூலஸ்தானத்தில் வைரவர் சூலம் வைக்கப்பட்டுள்ளது. வேரப்பிட்டி ஆலயத்தில் விநாயகர் உள்ளிட்ட பரிவாரத் தெய்வங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன. அங்கு பத்து நாட்கள் அலங்கார உற்சவம் நடைபெறுகின்றது. முந்திய பூசகர், ஆலயத்தினுள் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. ஆயிலி – ஆத்தியடி சேவகராலயம் புனருத்தாரணம் செய்யப்பட்டு 15 நாட்கள் அலங்கார உற்சவம் இடம்பெறுகிறது. அங்கும் பிராமணர் மட்டுமே பூசை செய்கின்றனர்.

முடிவுரை

sevakar 2

தமிழ்ச் சமூகத்தில் அதிகம் அறியப்படாத தெய்வங்களுள் ஒன்றாகவும் காரைநகரில் வாழும் தெய்வமாகவும் ‘சேவகர்’ காணப்படுகின்றார். சேவகர் பற்றிய அறிவு, பரிபாலகருக்கோ காரைநகர் மக்களுக்கோ இல்லை என்பது துக்கம் தரும் செய்தியாகும். சேவகர் பற்றிய ஊகமே இந்த ஆய்வில் விரவிக்கிடக்கிறது. தொன்மை சார்ந்த விடயங்கள் எதையும் அறிய முடியவில்லை. சேவகன் என்ற சொல் சிவன் – முருகனோடும், போர் வீரரோடும் இணைக்கப்படுவதும், அதையொட்டிய உரையாடலுக்கு வலந்தலைக் குறிச்சி பற்றிய விளக்கம் இடம் தருவதும் சிறப்பித்துச் சொல்லத்தக்கது. பன்முகச் சமூகத்தின் தெய்வம் இளையதலைமுறையிடம் கையளிக்கப்பட வேண்டும். கொல்லடைப்புக் கோயிலில் 14 வயதுச் சிறுவனே பூசாரியாக இருப்பது சமூகக் கையளிப்பாகவே நோக்க வைக்கின்றது. மேனிலையாக்க முயற்சிகள், ஈழத்திலேயே காணப்படும் ஆனால் மக்களால் அதிகம் அறியப்படாததுமான சேவகரை மேலும் அறியவிடாது தடுக்கும் செயலாகவே அமைந்துவிடும். பொருளாதார – சமூக வளர்ச்சி என்பன, குறித்த இனத்தின் அடையாளங்களை வளர்க்கவும் மீட்டுருவாக்கம் செய்யவும் உதவ வேண்டுமேயன்றி அழிப்பதற்கானதாக இருக்கக் கூடாது.

தொடரும். 

https://www.ezhunaonline.com/sevakar-a-tutelary-deity/

  • கருத்துக்கள உறவுகள்
On 9/2/2025 at 04:15, கிருபன் said:

‘வைகாசி விசாகம்’ மிகச்சிறப்பாகப் பொங்கல் வைத்துப் பூசித்து வழிபடப்படும் நாளாகக் காணப்படுகிறது. நாட்டார் தெய்வங்களுக்குப் பொதுவில் வைகாசி விசாகதினம் குளித்தியாக, பொங்கல் நாளாக, மடை நாளாக அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது

வைகாசி விசாகம் பூஜை வழிபாடு இன்றும் பெரும்கோவில் வழிபாடுகளில் நடை பெறுகிறது ...

முருகனின் நட்சத்திரம் என சிட்னி முருகன் கோவிலில் பூஜை நடை பெறுகிறது ,மற்றும் புத்தர் ஞானம் பெற்ற நாளுடன் தொடர்பு உண்டு ...

  • கருத்துக்கள உறவுகள்
On 9/2/2025 at 04:15, கிருபன் said:

மட்சம், மாமிசம் படைப்பதில்லை. தற்போது காவடியெடுத்தல் போன்றனவும் நிகழ்த்தப்படுகின்றன. இவ்வாலய விஷேடதினங்களில் கலையாடி, குறிசொல்லல், திருநீறு போடுதல் போன்றனவும் நிகழ்த்தப்படுகின்றன.  

இதை நான் சிறு வயதில் கண்டுள்ளேன் அதாவது மடை படைத்தலில் மாமிசம்,மச்சம் படைப்பு நடை பெற்றது ..கட்டுரையாளர் படைப்பு நடக்கவில்ல என சொல்லுகிறார்🤔

  • கருத்துக்கள உறவுகள்
On 12/2/2025 at 18:29, கிருபன் said:

கஞ்சா ரொட்டி போன்ற ரொட்டி வகைகளும்

இதென்னப்பா கஞ்சா ரொட்டி ?

On 12/2/2025 at 18:29, கிருபன் said:

‘ஞான வைரவரான’ வரலாறு. ஆகவே இதில் சாதிய, வர்க்க அமைதி கிடைக்கின்றதே அன்றி உண்மையான ஆன்மீக அமைதி  சாத்தியமற்றுப் போகின்றது. 

வைவரை ஒவர்டேக் பண்ணி கொண்டு ஆஞ்சநேயர் வந்திட்டாரல்லோ இதற்கு இந்தியாவின் இந்துமத ஆதிக்கம் காரணமாக் இருக்குமோ ..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, putthan said:

இதை நான் சிறு வயதில் கண்டுள்ளேன் அதாவது மடை படைத்தலில் மாமிசம்,மச்சம் படைப்பு நடை பெற்றது ..கட்டுரையாளர் படைப்பு நடக்கவில்ல என சொல்லுகிறார்🤔

உங்கள் சிறுவயதில் மச்சம் படைத்திருக்கலாம்! ☺️

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வழுக்கு மர சுவாமி காத்தவராயர்

தி. செல்வமனோகரன்

இயற்கையோடு ஒட்டி வாழத் தலைப்பட்ட காலத்தில் இருந்து மனித வாழ்வில் சடங்குகளும் சமயங்களும் உருவாகத் தொடங்கின. இயற்கையை வழிபடத் தொடங்கிய மனிதர், அதனைத் திருப்திப்படுத்த பல சடங்கு சம்பிரதாயங்களைச் செய்ய முற்பட்டனர். மக்களின் வாழ்க்கையோடு இயைந்த வழக்காறாக, நிலப் பண்பாடாக அவை வளர்ந்தன; சமய வழிபாட்டு முறைகள், சடங்குகள், நம்பிக்கைகள், கலைகள் என பன்முகப்படுத்தப்பட்டன. அவை பற்றி உரையாடல்கள் கர்ண பரம்பரைக் கதைகள், வாய்மொழிப் பாடல்கள், வெறியாடல்கள், கூத்துகள் எனப் பல தளங்களில் பரிணமித்தன. இவை கிராமியத் தெய்வங்களைத் தந்தன. அவற்றின்வழி மேன்மேலும் விரிவாக்கமுற்றன. இயற்கையோடு இயைந்த வாழ்வில் தெய்வ – சமய நம்பிக்கை என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக இருந்து வருகிறது. சமய நம்பிக்கையின் பாற்பட்ட வகையில் சமயச் சடங்குகள், நேர்த்திக்கடன்கள் என்பன மென்பக்தி – வன்பக்தி சார்ந்தவையாக வெளிப்படுத்தப்படுகின்றன. மக்களது நம்பிக்கைகளின் புலப்பாடுகளாகவும்; மக்களிடம் மேலும் நம்பிக்கையை ஊட்ட வல்லனவாகவும் கிராமியக் கலைகள் கட்டமைக்கப்பட்டுள்ளன. 

தமிழ்ச் சமூகத்தில் நின்று நிலவுகின்ற கிராமியத் தெய்வங்களுள் ஒருவராக காத்தவராய சுவாமி (காத்தான், வழுக்கு மரத்தான்) சுட்டப்படுகிறார். காத்தான் பற்றிய கதையாடல்கள் – கதைப் பாடல்கள் – உடுக்கடிப் பாடல்கள் தெருக்கூத்தாக, மேடைக்கூத்தாக, சிந்து நடைக் கூத்தாக அது பல நிலைகளில் தமிழர்களிடையே நிலவி வருகிறது. கூத்து என்ற வகையில் கிறிஸ்தவர்களாலும் காத்தவராயன் கூத்து ஆடப்பட்டு வருகிறது .

காத்தவராய சுவாமி – பெயர் பற்றிய உரையாடல்கள்

சிலப்பதிகாரத்தில் ‘சாத்தன்’ என்ற காவல் தெய்வம் கூறப்படுகிறது. சாத்தன் என்பதை ஐயப்பன் என்னும் ஹரிகரபுத்திரனாக சில ஆய்வாளர் குறிப்பிடுகின்றனர்; சாத்தன் – காத்தன் – காத்தான் எனவும் கொள்ளலாம். அதேபோல் இராமாயணத்தில் வருகின்ற உத்தரகாண்டத்தில் இராவணனைக் கொல்லக்கூடிய ஆற்றல் படைத்தவனாகச் சுட்டப்பட்ட காத்த வீரியன், ‘காத்தவராயன்’ எனப் பிற்காலத்தில் சுட்டப்பட்டிருக்கலாம்.

சாத்தான், ஐயப்பன், காத்தான் மூன்றுமே காவற் தெய்வங்களாகக் குறிப்பிட்ட காலம் வரை தனித்தனியே வழிபடப்பட்ட தெய்வங்கள். அதிலும் ஐயப்பன் ஹரி – ஹர இணைவினால் பிறந்ததை ஒத்த கதையையே காத்தவராயனின் கதையும் கொண்டமைந்துள்ளது. சிவன் ஆணாகவும் திருமால் பெண்ணாகவும் உருவெடுத்த காலத்தில் தோன்றிய குழந்தையே காத்தவராயன் எனப்படுகிறார்.  ‘ஒரு கொடியில்  பூத்த இரு மலர்கள்’ என்பது போல் ஒரே கதை வெவ்வேறு பிரதேசங்களில் வெவ்வேறு விதமாகக் கூறப்பட்டிருக்கலாம். காத்தவராயன் ‘காத்தவன், காத்தான், காத்தையன், காத்தமுத்து, காத்தலிங்கர், காத்தலிங்க சுவாமி எனப் பல பெயர்கள் கொண்டு குறிப்பிடப்படுகின்றார். எல்லாப் பெயர்களிலும் ‘காவல்புரிபவர்’ என்ற தொனிப்பொருள் உள்ளடங்கியிருக்கிறது. காத்தான் என்பதை ‘காளியால் காக்கப்பட்டவன்’ என்று பொருள் சுட்டப்படுகிறது. ‘காத்தையன்’ என்னும் பெயர் திருமுருகாற்றுப்படையில் முருகனைக் குறித்து நிற்பது குறிப்பிடத்தக்கது. காத்தான் பற்றி எழுந்த பிற்காலக் கதைகள் சில முருகனின் திரு அவதாரமாகவே காத்தனைக் குறிப்பிடுவது ஒப்பு நோக்கத்தக்கது.

காத்தவராய சுவாமி பற்றிய கதைகள்

1. காத்தவராய நாடகம் – தக்கன் யாகத்திற்கு ஈசன் மறிக்கவும் நில்லாது சென்ற பார்வதி தேவி அவமானப்பட்டுத் திரும்பியதும், வீரபத்திரர் தோன்றி தக்கன் யாகத்தை அழித்தார். ஈசன் ஈஸ்வரியை ‘பூதலத்தில் பிறந்து பாவம் தீர்ப்பாய்’ எனக் கூற, அப்பாவம் போக்க புத்திரன் வேண்டும் என்றும், இத்தலத்தில் உள்ள நந்தவனங்களைக் காக்கப் புத்திரன் வேண்டும் என்றும், வேண்டியதன் பயனாகப் பிறந்தவரே காத்தவராய சுவாமி.

2. காத்துமுத்து நாடகம் – ஈஸ்வரனின் பரிபூரணத்தில் சந்தேகம் கொண்டு அல்லது பரிசோதிக்கும் பொருட்டு ஈஸ்வரி எறும்பு ஒன்றைப் பிடித்து ‘சிமிழி’ ஒன்றினுள் அடைத்து வைத்துள்ளார். அடுத்த நாள் அந்தச் சிமிழியைத் திறந்து பார்த்தபோது அவ்வெறும்பின் வாயில் ‘நொய்’ (அரிசிக் குருணல்) இருக்கக் கண்டு திகைத்துத் தான் செய்த தவறுக்காக ஈசனிடம் மன்னிப்புக் கூறியுள்ளார். எறும்பைத் துன்புறுத்திய பாவம் நீங்க பூமியில் பிறந்து நதிக்கரைகளில் பூங்காவனங்கள் அமைத்து விமோசனம் பெறுமாறு ஈசன் கட்டளையிட்டார். அப்போது ஈஸ்வரி பூங்காவனத்தைக் காக்க மகவொன்று வேண்டும் என்று கேட்டதற்கிணங்க முருகன் காத்தவராய சுவாமியாக அவதரித்தார்.

3. சிவவாக்கியர் போதம் – தக்கன் தன் யாகத்தில் இடம்பெற்ற தவறை உணர்ந்து வீரபத்திரர் தன்னை அழிக்கும் சந்தர்ப்பத்தில் தான் சிவத்தலங்களில் காவல் தெய்வமாக இருக்க வேண்டும் என வேண்டியதற்கிணங்க, அதன் வழி தக்கனே காத்தவராய சுவாமியாக அவதரித்ததாகக் கூறப்படுகிறது.

4. காத்தவராயன் கதைப்பாடல் – சேப்பிள்ளையான் எனும் காவல் அதிகாரியின் வளர்ப்பு மகனே ‘பரிமளம்’ (பரிமணம்) என்ற காத்தவராயன் ஆவார். இவர் பறையர் குலத்தவர். பிராமணப் பெண்ணான ஆரியமாலாவை மணந்து நாட்டைவிட்டு ஓடியவர். இவரைக் கண்டுபிடித்து கழுவேற்றம் செய்ய அரசன் முடிவு செய்ததாகவும், பின்னர் இவர் வாதங்களில் உள்ள நியாயங்களை ஏற்று மன்னித்ததாகவும், ஆயினும் காத்தவராயன் தானாகவே முன்வந்து கழுவேறியதாகவும் இந்நூல் கூறுகிறது. இக் கழுவேற்றத்துக்குக் காரணமாக, கைலாசத்தில் சிவனுடன் இருந்த காலத்தில் ஆறு தேவப் பெண்களைக் கண்டு ஆசை கொண்டதாகவும், அதனால் பூவுலகில் பிறந்து அவர்களை மணந்து கழுவேறிச் சாகவேண்டும் என இறைவன் சபித்ததாகவும் கூறப்படுகிறது. இது இரு பெண்கள் மீது ஆசை கொண்ட ‘ஆலகால சுந்தரரின்’ கதையை ஒத்ததாக உள்ளது.

5. ஈழத்துக் காத்தான் கூத்துப் பிரதிகள் – ஈழத்தில் பதிப்பிக்கப்பட்ட காத்தவராயன் பாடல்கள், கூத்துப் பிரதிகள் யாவும் காத்தானை ஆதி சிவனின் மைந்தனாகவும் மாரியம்மனின் வளர்ப்பு மகனாகவும் சுட்டுகின்றன. உமையின் இளைய சகோதரியான மாரியம்மன் திருமணமாகாத கன்னித் தெய்வமாவாள். சிவனும் திருமாலும் மான்களாக மாறிப் பெற்றெடுத்த மான் கன்றை மாரியம்மன் கைகளால் தூக்க, அது ஆண் குழந்தையாக மாறுகிறது. அக் குழந்தையை மாரியம்மன் வளர்த்து வரும் காலத்தில், கங்கை பெருக்கெடுத்து இருவரையும் அழிக்க வருகிறது. அப்போது குழந்தை கங்கையை காலால் மறித்துத் தாயைக் காத்தது. வளர்ந்து தாயின் நந்தவனத்தையும் காத்து வந்தது. இவ்விரு காரணங்களாலும் அது காத்தான் எனும் பெயர் பெற்றது.

மேற்குறிப்பிட்ட ஐந்து கதைகளும் காலந்தோறும் காத்தான் பற்றிய பல்வேறு கதைகளாக பிரதேச, கால வேறுபாடுகளுக்கேற்ப வாய்மொழி மரபின் வழி பேணப்பட்டு வந்து நூலுருப் பெற்றுள்ளன. காத்தவராயன் நாடகம் எனும் பிரதியில் மட்டும் கழுவேற்றம் பற்றிய குறிப்பு இல்லை. சிவவாக்கிய போதம் மட்டுமே தக்கனின் அவதாரம் எனக் காத்தனைக் குறிப்பிடுகின்றது. காத்தானை முருகனின் அவதாரம் எனக் கூறும் சில கதைகளும் உண்டு. இவை தவிர மேற்சொன்ன கதைகள் பலவற்றையும் உள்வாங்கி பிறிதாக இன்னொரு கதையும் கூறப்படுகிறது.

பார்வதி சிற்றெறும்பை சிமிழியிலடைத்த கதையைக் கூறி இறை சாபத்தால் நந்தவனம் அமைத்துப் பராமரித்தாள். அதற்குக் காவலாக காத்தான் எனும் ஒரு வாலிபனை நியமித்தாள். சப்த கன்னியர்கள் சித்திரப் பொய்கையில் நீராடிய பின், இந் நந்தவனத்து மல்லிகை மலர்களைப் பறித்து கொண்டு கைலை சென்றனர். இதனை அவதானித்த காவலாளி அவர்கள் நீராடும் போது அவர்களின் ஆடையை எடுத்து மறைத்ததாலும், ஆடையில்லாததால் இளைய கன்னி நீரினுள் நிற்க, ஏனையவர் கைலை சென்று சிவனிடம் முறையிட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் கோபம் கொண்ட சிவன் காத்தானை ‘ஏழு பிறவிகள் எடுத்து கழுவேறி இறக்கச் சாபம்’ கொடுத்தார். இடைமறித்த பார்வதி ‘தீயில் உடல் வேகலாகாது’ என சாப நீக்கம் அளித்தார். இவ்வாறு இடைமறித்ததால் பார்வதிக்கும் சாபம் வழங்கப்பட்டது. காத்தான் நான்காவது பிறப்பில் தாயைச் சந்தித்ததும் ஆரியமாலாவை கரம் பிடித்து கழுவேறியதுமாக இக்கதை அமைகிறது. இக்கதை தமிழகப் பிராந்தியங்கள் பலவற்றைச் (கொல்லிமலை, கம்பா நதி) சுட்டுகின்றமை குறிப்பிடத்தக்கது. கழுமரம் காத்தவராயனின் அடையாளமானதற்குப் பின்னணியில் துயர் மிகுந்த காதல் கதை ஒன்று மறைந்திருக்கிறது. காத்தவராயன் 14 ஆம் நூற்றாண்டில் திருச்சிக்கு அருகே வாழ்ந்த காவற்காரன். அப்போதே காதல் புரட்சி செய்து தண்டிக்கப்பட்டவன். மரணத்துக்குப் பிறகு சாமியாகி பல்லாயிரக் கணக்கான மக்களுக்கு நம்பிக்கையாகத் திகழ்கிறவன் எனக் கூறப்படுகிறது. தமிழகச் சூழலில் காமாட்சி அம்மன் கோயில்களில் முதன்மையான காவல் தெய்வமாக காத்தவராயன் வழிபடப்படுகின்றார். ஈழத்தில் முத்துமாரியம்மன் வழிபாட்டோடு தான் காத்தவராயன் வழிபாடு இணைக்கப்பட்டுள்ளது. காத்தவராய சுவாமிக் கதைகள் இன்று வரை கால, தேச, வர்த்தமானத்துக்கு ஏற்ப பலவாறு பரிணமித்துக் கொண்டிருக்கின்றன.

காத்தவராயன் பற்றிய இக்கதைகள் யாவும் பலவாக அமைந்தாலும் மாரியம்மன் வழிபாடும், காத்தவராய சுவாமி வழிபாடும், கழுமர வழிபாடும் ஒன்றாக நின்று நிலைத்துவிட்டன; மக்கள் மனதில் பெரு நம்பிக்கையை வளர்த்து விட்டன. விஜய நகரக் காலத்துக்கு முந்தைய கதையாகவும் வழிபாடாகவும் இது கருதப்படுகிறது. பலதார மணம், பரத்தமை உள்ளிட்ட நாயக்கர் கால வாழ்வியல் இப் பிரதிகளில் காணப்படுகின்றது.

kaathavarajan 5

ஈழத்துக் காத்தவராய சுவாமி கோயில்கள்

மாரியம்மன் கோயில்களில் பெரும்பாலும் கழுமரமும் காத்தவராய சுவாமி சிலையும் வைத்து வழிபடும் மரபு எங்கும் காணப்படுகிறது. தமிழ்நாடு, கேரளா, இலங்கை போன்ற தேசங்களில் செல்வாக்கு மிக்க இக்காவல் தெய்வத்துக்கு, தனியான கோயில்கள் தமிழ்நாட்டிலும் கேரளாவிலும் மிகக் குறைவாகவே காணப்படுகின்றன.

kaathavarajan 2

ஈழத்தில் அல்வாய், பருத்தித்துறை, திக்கம், வராத்துப்பளை, ஊரணி, நெடியகாடு (வல்வெட்டி துறை), நெடுங்கேணி, திருகோணமலை உள்ளிட்ட பல இடங்களில் தனியான காத்தவராய சுவாமி கோயில்களும், வல்வட்டித்துறை, அல்வாய், வேலிவத்தை, மாயக்கை, பருத்தித்துறை, தும்பளை, அளவெட்டி, கோண்டாவில், திருநெல்வேலி, திருகோணமலை (நிலாவெளி), முல்லைதீவு (புதுக்குடியிருப்பு), மட்டக்களப்பு போன்ற இடங்களில் உள்ள முத்துமாரியம்மன் கோயில்களோடு இணைந்த காத்தவராய சுவாமி கோயில்களில் கழுமரமும் காணப்படுகின்றன.

kaathavarajan 4

வழிபாட்டு முறைகள்

இத் தெய்வத்திற்கான வழிபாட்டு முறை இரு முறைகளில் நிகழ்த்தப்படுகிறது:

1) மாரியம்மன், காளியம்மன் கோயில் சடங்குகள் நிகழ்த்தப்படும் போது இணைத் தெய்வமான காத்தவராயருக்கும் சடங்கு வழிபாடுகள் நிகழ்த்தப்படும்.

2) காத்தவராய சுவாமி தனிக் கோயில்களில் தனியான சடங்கு வழிபாடுகள் நிகழ்த்தப்படும்.

பெரும்பாலான மாரியம்மன் கோயில்களில் காத்தவராயருக்கு தனி சந்நிதியோ அல்லது கழுமரம் மட்டுமோ காணப்படுகிறது. மாரியம்மன் அம்மை, பொக்குளிப்பான், சின்னமுத்துப் போன்ற நோய்களைத் தருபவளாகவும், தன்னை வணங்குபவருக்கு நோய் தீர்க்கும் தெய்வமாகவும் கருதப்படுபவள். அதனால் பயபக்தி நிறைந்த வழிபாட்டிற்குரிய தெய்வத்துக்கு குளிர்ச்சிச் (குளிர்த்தி) சடங்கு நிகழ்த்தப்படும்; பொங்கல் பொங்கி வேள்வி நடத்துவர். வேள்வியில் கோழி, ஆடு போன்றவற்றை பலி கொடுக்கும் வழக்கமும் இருந்து வந்துள்ளது. பொங்கலோடு பழவகைகள், பலகாரங்கள், வெற்றிலை, பாக்கு என்பவை வைத்து மடை பரப்புவர். இவ்வாறே காத்தவராய தனிக் கோயில்களிலும் மடை பரப்பப்படும். முன்னைய காலத்தில் காத்தவராயருக்கு இடப்படும் மடைகளில் இறைச்சி, மீன், கள், முட்டை என்பவற்றோடு பல்வேறு வகைத் தானியங்களில் அவிக்கப்பட்ட பிட்டுகளும் மரவள்ளி, தவிடு போன்றவற்றாலான பிட்டுகளும் படைக்கப்படும். கருவாடும் சுட்டுப் படைக்கப்படும். பூசாரியாக அவ்வக் குலத் தோன்றல் பூசையைச் செய்வார். வேள்வியின் போது பறைமேளம் இசைக்கப்படும். மத்தளம், உடுக்கு இசைக்கும் வழக்கமும் இருந்துள்ளது.

இத் தோற்கருவிகள் இசைக்கப்படும் போது பூசாரிகளோ அல்லது வேறு எவரோ தெய்வமேறி உருக்கொண்டாடுவர். கலை வந்து விட்டதாக, தமது தெய்வம் அருள் புரிய வந்து விட்டதாகக் கருதி மக்கள் வழிபடுவர். உருவேறியவர் குறி சொல்வார்; இறுதியில் வெறியாட்டுவோர் பறையிசை ஒலிக்க செம்பு நீர், கோயில் பிரம்பு என்பவற்றுடன் அருகிலிருக்கும் நாற்சந்தியையோ அல்லது முற்சந்தியையோ அடைந்து பூசை செய்து எலுமிச்சங்காய்களை வெட்டி எறிவார். அவை நிமிர்ந்து விழும் பட்சத்தில் ‘வழிவெட்டிவிடுதல்’ சடங்கு சிறப்பாக நடைபெற்றதாகக் கருதப்படும். இதற்குப் பதிலாக கோழி, ஆடு போன்றவற்றை பலி கொடுக்கும் வழக்கமும் இருந்து வந்துள்ளது. சடங்குகள் முடியும் தறுவாயில் தெய்வமாடியோர் சன்னதம் இழந்து நிலத்தில் விழுவர். இது தெய்வம் மலையேறிவிட்டதாகக் கருதப்படும். பின்பு பக்தர்களுக்கு பூசாரி திருநீறு, சந்தனம், தீர்த்தம் முதலியவற்றை வழங்குவார்.

kathavarajan 1

மட்டக்களப்பில் நிகழ்த்தப்படும் மாரியம்மன் சடங்கு தனித்துவமானது. மாரியம்மன் சாபத்தால் தான் இழந்த அனைத்து ஆற்றல்களையும் மீளப் பெறுவதற்காக தவ நிலைக்கு ஏறச் செல்லும்போது, காத்தான் தடுப்பதும், இதனால் மாரியம்மன் காத்தானை கழுமரத்தில் ஏற்றிக் கட்டிவைத்து விட்டுச் செல்வதும், தவநிலை முடிந்து ஆற்றல்களை பெற்றுவரும் மாரி, காத்தானை கழுமரத்தில் இருந்து இறக்கி திருவருள் புரிவதும் முக்கியம்சங்களாகும். இவ்விடங்களில் கழுமரத்தில் வாழைப்பழச் சீப்புகளை கட்டிவிடுவதும், கழுமரத்திலேறிய காத்தான் அவற்றைப் பிடுங்கி மக்களுக்கு ஏறிதலும் நடைபெறுகின்றன. சடங்கில் காத்தானின் ஆடல் சிறப்பாக அமையும். இசையோடு கூடிய பாடலும் சிலம்பு, உடுக்கு, பறை உள்ளிட்ட பல்வேறு இசைக்கருவிகளின் இசையும் ஆட்டத்தை உச்சத்திற்கு இட்டுச்செல்லுகிறது. காத்தவராயன் கும்மி, காத்தான் – ஆரியமாலா காதல், காத்தானின் குறும்பு என பல்வேறு விடயங்களை உள்ளடக்கிய ஆட்டமாக இது காணப்படுகிறது. மலையகத்திலும் மாரியம்மன் வழிபாட்டுடன் இணைந்ததாக காத்தான் வழிபாடு காணப்பட்டு வருகிறது.

நேர்த்திக்கடன்

மக்கள் தமது நம்பிக்கை, வழிபாட்டு முறை என்பனவற்றுக்கேற்ப பல்வேறு நேர்த்திக் கடன்களை தெய்வங்களுக்கு வைப்பர். தம் காரியம் நிறைவேற வைக்கப்படும் நேர்த்திக் கடன்களை காரியம் நிறைவேறிய பின் செலுத்துவர். பொங்கல், மடைபரவல், விரதம், காவடி, கரகமெடுத்தல், அலகு குத்துதல், முள்ளு மிதியடி நடத்தல் எனப் பலவகையான நேர்த்திக் கடன்கள் உண்டு. வடமராட்சியில் மாரியம்மன் – காத்தவராய சுவாமி வழிபாடுகளில் முதன்மையுறும் நேர்த்திக்கடன் ‘கூத்தாடுதல்’ ஆகும். காத்தவராயன் கூத்து நேர்த்திக்கடனாக வைத்து ஆடப்படும். காத்தவராயன் கூத்தில் பிரதான காத்தான் பாத்திரத்தை நேர்த்திக்கடன் வைத்தவர் ஏற்றாடுவார். அம்மனுக்கும் காத்தானுக்கும் செய்யும் ஒரு வகை வழிபாட்டு நெறியாகவே காத்தான் கூத்து ஆரம்பத்தில் ஆடப்பட்டது. சின்னான், காத்தான், மாரியம்மன், காளியம்மன் பாத்திரங்கள் கூத்தாடி கொண்டிருக்கும் போதே சன்னதம் செய்தல் உண்டு.

தமிழகச் சூழலில் உடுக்கடிப்பாடல், தெருக்கூத்து, தனியாள் பாடல், கூடு முறைப் பாடல் என்னும் தளங்களில் காத்தவராயன் கதை பயிலப்பட்டு வருகிறது. இம்முறையியல்கள் ஈழத்தில் காணப்பட்டாலும், தென்மோடி ஆட்டமுறையில் தனித்துவமான துள்ளல் நடையினையுடைய சிந்துநடைக் கூத்தாக ஆடப்பட்டு வருகிறது. இக்கூத்து வாய்மொழி மரபான அண்ணாவிமார்களால் பேணப்பட்டு வந்துள்ளது. இது பரம்பரை பரம்பரையாக ஆடும் கூத்துக் கலையாகவும் அமைந்துள்ளது. யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, திருகோணமலை ஆகிய இடங்களில் இக்கூத்து சிறப்பாக, பரம்பரை பரம்பரையாக ஆடப்பட்டு வருகிறது. நேர்த்திக் கடனுக்கான கூத்து என்ற வகைக்கு அப்பாற்பட்ட தனித்துவமான கூத்துக்கலையாக வளர்ந்துள்ளது.

சமகாலப் பயில்வு

யாழ்ப்பாணத்தில் காத்தான் வழிபாடு பஞ்ச கம்மாளர்களிடமே அதிக செல்வாக்கு உடையது என்றும், காத்தான் கூத்து ஆடுபவர்களும் அண்ணாவிமாரும் அச்சமூகத்தவர்களிடமே காணப்பட்டனர் என்றும் கூறப்பட்டாலும், அல்வாய் போன்ற பகுதிகளில் பள்ளர் சமூகத்தவர்களிடம் வழிபாடும், கூத்தும் நீண்ட காலம் நிலவிவருவதை அறிய முடிகின்றது. செட்டி, பறையர், வண்ணார் போன்ற சாதியப் பாத்திரங்கள் கூத்தில் நேரடியாக உண்டு. கப்பலில் காத்தான் செல்லுதல் கரையூர்களில் நீண்ட நேரம் கூத்தாக ஆடப்படும். காளி, பத்திரகாளியை குல தெய்வமாகக் கொண்டவர்கள், காளியால் மீட்கப்பட்ட காத்தான் கூத்தை தம் கலையாகக் கொள்வர். வடமராட்சியில் இவற்றில் சம்பந்தப்படாத பள்ளர் சமூகத்தவரிடம் இருபதுக்கும் மேற்பட்ட கோயில்கள் காணப்படுவது குறிப்பிடத்தக்கது. பொதுவாக விவசாய சமூகத்தினதும் கரையூர் சமூகத்தினதும் தெய்வமாக காத்தவராயர் காணப்படுகின்றார்.

sulaku padayal

கணபதிப்பிள்ளை, வித்தியானந்தன் போன்றோரின் கூத்து மீட்டுருவாக்கச் செயற்பாடுகள் காரணமாக இது பாடசாலைகளில் கலை நிகழ்வாகவும் தேசிய தமிழ்த்தினப் போட்டியில் ஒரு நிகழ்வாகவும் மாறியது. யுத்த சூழலும் சாதி கடந்த மக்கள் கலையாக கூத்தை மாற்றியது. ஆகம மயமாக்கப்பட்டதாக கருதப்படும் யாழ்ப்பாணச் சூழலில் 21 ஆம் நூற்றாண்டில் முன்பில்லாதவாறு பெரும்பாலான மாரியம்மன் கோவில்களின் முன்றல்களில், அல்லது வீதியில் காத்தான் சந்நிதி அமைக்கப்படுகிறது. குதிரையில் காத்தான் நிற்பதாக அது அமைக்கப்பட்டு கழுமரமும் அருகில் வைக்கப்படுகிறது. திருநெல்வேலி முத்துமாரியம்மன் ஆலயத்தில் அண்மையில் அமைக்கப்பட்ட இவ்வாறான சந்நிதியில் பிராமணர் ஒருவர் திரூநீற்றைக் கொடுத்து, குறி சொல்லி, நூல் கட்டுவது நடைபெற்று வருகின்றது. காத்தவராயர் சாதியம் கடந்த மக்கள் தெய்வமாக மிளிர்கிறார். கோண்டாவில் சிவமாரியம்மன் கோயிலில் கழுமரம் செப்பாலானதாக அமைக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. ஆகமமயப்பட்ட மாரியம்மன் கோயில்களில் பிராமணர் காத்தானுக்கு அல்லது கழுமரத்திற்கு பூசை செய்தலும் நிகழ்ந்து வருகிறது. அந்தவகையில் இன்று காத்தான் வழிபாடு தனிக்கிராமிய வழிபாடாகவும், ஆகமக் கோவில் வழிபாடாகவும் இரு பண்புகளும் கொண்ட கலப்புரு (ஆகமவழிபாடும் கிராமியப் பூசாரி, மடை பரவல் முதலானவையும்) வழிபாடாகவும் நிலவி வருவதை அவதானிக்க முடிகிறது.

padayal

காத்தானின் தனிக்கோயில்களில் பெரும்பாலும் சாதாரண மக்களாலேயே பூசை செய்யப்படுகிறது. பலியிடல் பெரும்பாலும் இல்லாது விடினும் மாமிச, மட்சப் படையல் பெரும்பாலான கோயில்களில் உண்டு. ஏனைய கோயில்களில் பொங்கல் பொங்கி வடைமாலையிட்டு மடை பரவுவர். சில இடங்களில் காத்தான் கூத்தில் வரும் சின்னான் முதலான தெய்வங்களுக்கும் சந்நிதிகள் அமைக்கப்படுகின்றன. யாழ்ப்பாணத்துக் காத்தான் கோயில்களில் காத்தான் கூத்துப்பாடல்களே இசைக்கப்படுகின்றன.

முடிவுரை

kaathavarajan kovil

காத்தவராயன் சுவாமி வழிபாடு மாரியம்மன் வழிபாட்டோடு இயைந்து வளர்ந்து வந்துள்ளது. ஈழத்தில் வடபுலத்திலே காத்தானுக்கு எனத் தனித்துவமான கோயில்கள் பல காணப்படுகின்றன. காத்தான் பற்றி பல்வேறு விதமான கதைகள் காணப்படுகின்றன. துயரம் மிகுந்த காதல் கதையும், இடைவிடாத முயற்சியும், இறை அருள் வெற்றி தரும் என்ற கதையும் இவற்றில் குறிப்பிடத்தக்கவை. காத்தான் காவல் தெய்வம், நோய் நொடியின்றி வாழ வைக்கும் தெய்வம் எனப் பொருள்படுகிறார். காத்தான் ஆரம்பத்தில் குறித்த சாதியினருக்குரிய தெய்வமாக நோக்கப்பட்டாலும், காத்தான் கதையின் வளர்ச்சி, அதில் வரும் பல்வேறு சாதியினருக்கு இடையிலும் இணைப்பை (செட்டி, மலைச்சாதி, பறையர், பஞ்சகம்மாளர்) உருவாக்கி மக்களின் தெய்வமாகியது. காத்தவராயன் கூத்து மக்களின் கலையாகியதன் ஊடாக காத்தவராய சுவாமி பலராலும் நம்பிக்கையுடன் வழிபடும் தெய்வமாகத் திகழ்கின்றார். ஆகமக் கோயிலை ஒத்த பெருங்கோயில்கள் உருவாகி வருகின்றன. கழுமரமும் காத்தானும் இல்லாத மாரியம்மன் கோயில்கள் இல்லை எனலாம். காத்தவராய சுவாமிக்கு புதுக் கோயில்களும் உருவாகி வருகின்றன. ஆனால் எல்லாக் கோயில்களும் மக்களின் ‘பூசாரியே’ பூசகராக இருப்பது குறிப்பிடத்தக்கது. காத்தானுக்குரிய பூஜையில் பலியிடல் செல்வாக்கிழந்து வருகிறது. கூத்தாடல் நேர்த்திக்கடன் இன்றும் நின்று நிலவுகிறது. 1958 இல் காத்தவராயன் என்று ஒரு திரைப்படம் வந்தது. அது போல 2024 இல் ராயன் என்ற பெயரில் காத்தவராயன் படம் நவீன மயப்படுத்தப்பட்டு வந்திருப்பது, காத்தவராயன் வழிபாடு இன்றும் உயிர்ப்புடன் தமிழகத்திலும், ஈழத்திலும், தமிழர் வாழும் நிலங்களிலும் செல்வாக்கோடு இயங்கி வருவதை உறுதி செய்கிறது. காத்தவராய சுவாமி, வேண்டும் வரம் அருளும் கிராமியத் தெய்வமாக செல்வாகுற்று வருகிறது.

தொடரும். 

https://www.ezhunaonline.com/village-deity-kaathavarajan/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பெரும்படை என்னும் குலதெய்வம்

தி. செல்வமனோகரன்

September 10, 2024 | Ezhuna

ஆதிகால மக்களின் நம்பிக்கைகளே சமயங்களாகப் பரிணமித்தன. மானுடர்களின் வாழ்வில் உருவான நம்பிக்கைகள் பல்வேறு நம்பிக்கைகளையும், கற்பனைகளையும், அச்சங்களையும் அவற்றினூடாகப் பல்வேறு ஐதிகக் கதைகளையும் புராணங்களையும் நீண்ட நெடுங்காலங்களுக்கு அளிக்கை செய்து வந்துள்ளன. அதன் வழி “ஓ! நம்பிக்கையே என்னை நம்பிக்கை உடையவனாக்கு” என இறைஞ்சுகின்ற நிலைக்கு மானுடரை உந்தித் தள்ளிற்று. அவை அகவியல், புறவியல் எனும் இரு தளங்களிலும் வாழ்வு முழுவதும் மானுடருடன் தொடர்ந்து பயணித்தன. அது இயற்கை வழிபாடு, முன்னோர் வழிபாடு, உயிரியம், மனா எனப் பல்வேறு கருத்தாக்கங்களை உருவாக்கியது.

குறித்த இனக்குழு தன்னை, தன்னினத்தைக் காத்த வீரனை, உயிரியை, இயற்கையை தன் தெய்வமாக – என்றென்றும் தம்மைக் காக்கும் தெய்வமாக நம்பி வழிபடத் தொடங்கியது. அதுவே குலதெய்வ வழிபாடாயிற்று. இது பரம்பரை, சாதி,  நிலம் எனப் பல தளங்களில் கட்டமைக்கப்பட்டது. ஆரம்ப காலத் தமிழர்களின் திணைக்கடவுள்கள், பிற்காலச் சாதியக் கடவுள்கள் என்பன இதற்குத் தக்க சான்றாகின்றன. குறித்த தெய்வம் ஆண்பாற் பெயரையோ, பெண்பாற் பெயரையோ கொண்டிருக்கும். திணை, பால், எண், இடம் கொண்டிராத பெயரையுடைய தெய்வம் அரிது. அவ்வாறான பெயரை உடைய தெய்வமே ‘பெரும்படை’ என்பதாகும். ஈழத்துப் புலத்தில் அதிகம் பேசப்படாத தெய்வங்களில் ஒன்றாக பெரும்படையும் காணப்படுகின்றது.

பெரும்படை

இயற்கைநெறி வாழ்வில் தமக்காக, இனக்குழுவிற்காக, உயிர் நீத்த வீரர்களை, வீர வணக்கம் செய்யும் முறை காணப்பட்டது. இந்த வீர வணக்க முறையானது சடங்கு, நினைவுச் சின்னம் எனும் இரு அடிப்படைகளை உடையது. போரில் இறந்த வீரர்களை வணங்குதல் என்ற அடிப்படையில்:

“காட்சி கால்கோள் நீர்ப்படை நடுதல்

சீர்த்தகு சிறப்பிற் பெரும்படை வாழ்த்தலெண்

றிரு மூன்று வகையிற் கல்லொடு புணரச்

சொல்லப்பட்ட வெழுமூன்று துறைத்தே”

எனும் இலக்கணத்தைத் தொல்காப்பிய புறத்திணையியல் எடுத்துரைக்கின்றது. காட்சி – போரில் இறந்த வீரருக்கு, நடுதற்கு ஏற்ற கல்லைத் தெரிந்தெடுத்தல்; கால்கோள் – அக்கல்லைக் கொண்டு வருதலும் நாட்குறித்தலும்; நீர்ப்படை – அக்கல்லை நீராட்டுதல்; நடுதல் – உரிய இடத்தில் நடுதல்; பெரும்படை – கல்லில் வீரனது பீடு பொறித்தலும் மடை கொடுத்தலும்; வாழ்த்தல் – வணங்குதல் என்றாயிற்று.

இங்கு ‘பெரும்படை’ என்பது யாருக்காகக் கல் நடப்படுகின்றதோ அதில் அவரது பெருமைகளை எழுதலும் ‘மடை’ கொடுத்தலும் என விளக்கப்படுகின்றது. பெரும்படை என்பது பொதுவில் ‘பெரியபடை’ என்றே பொருள் கொள்ளப்படுகின்றது. பேரரசுகளின் படை பெரும்படை எனப்பட்டது. அது பெரியதொரு கூட்டத்தைக் குறிக்கும் சொல்லாகவே பல்வகைமையில் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.

தமிழகத்தில் பெரும்படை சாஸ்த்தா, ‘ஸ்ரீ பெரும் படை சாஸ்தா’ எனும் சொல் முறைகள் காணப்படுகின்றன. தூத்துக்குடி இருவப்புரத்தில் பூர்ணா, புக்ஷ்கலவுடன் பெரும்படை சாஸ்தாவின் கோவில் உள்ளது. இதேபோல தமிழகத்து சாயர்புரம், அருணாபேரி உள்ளிட்ட பல இடங்களில் பெரும்படை சாஸ்தா கோயில் காணப்படுகின்றன. சாஸ்தா ‘ஐயனார்’ ஆவார். தமிழகத்தில் தூத்துக்குடி இருவப்புர பெரும்படை சாஸ்தாவே ஆதிக்கோயில்; இராஜராஜசோழன் காலத்தில் ‘வலங்கை மகா சேனை’ என்ற பெரும்படை இருந்துள்ளது. அப்படை இவ்விருவப்புரத்தில் தங்கி இருந்த காலத்தில் தம்மோடு கொண்டு வந்த சாஸ்தாவை இவ்விடத்தில் பிரதிக்ஷ்டை செய்து வணங்கியுள்ளது. பெரும்படை வீரர்களால் வைத்து வழிபடப்பட்டது என்ற அடிப்படையில் இது ‘பெரும்படை சாஸ்தா’ என அழைக்கப்பட்டதாக அறியமுடிகிறது. இங்கே பெரும்படை எனும் ஒரு தெய்வம் தனித்து இல்லை. இவ்வாறான ஒரு கருத்தாடல் யாழ்ப்பாணத்து வேலணையிலும் உண்டு. வேலணைத் துறையூரில் இருக்கும் இலந்தைவனம் ஹரிஹர புத்திர ஐயனார் பெரும்படையோடு கந்தவனக் கடவை சென்று தங்கி வருவதான நம்பிக்கை காணப்படுகின்றது. அதனால் வேலணை கிழக்கு அரசபுரம் ஐயனார் ‘பெரும்படை ஐயனார்’ எனப்படுகின்றார். அதேவேளை ‘பெரும்படை’ தனித்தெய்வமாக ஈழத்தில் வழிபடப்படுகின்றது.

ஈழத்துப் பெரும்படை தெய்வம்

ஈழத்தின் வடபுலத்தில் இரு மாவட்டங்களாகவும் தேர்தல் மாவட்டமாக ஒன்றாகவும் காணப்படுவது யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகிய பிரதேசங்களாகும். தென்மராட்சிக்கும் கிளிநொச்சிக்குமான உறவு நீர், தரை எனும் இருவழிகளாலும் ஆனது. கோயிலாக்கண்டி, தனங்கிளப்பு, கச்சாய், கெற்பலி என்பன குடாநாட்டின் கடல் நீரேரியில் வடக்குத் தெற்குக் கரையோரக் கிராமங்கள். அக்கடல் நீரேரி பரந்தன் வரை நீள்கிறது. அது போலவே கேரதீவுப் பாதையில் இணைக்கப்பட்ட கோயிலாக்கண்டி, தனங்கிளப்பு, கேரதீவு, வெட்டக்காடு, பரமன்கிராய், ஞானிமடம், கறுக்காய்த்தீவு, ஆலங்கேணி, சாமிப்புலம், குஞ்சுப்பரந்தன் பழைய சுட்டதீவு, புதிய சுட்டதீவு எனும் கரையோரக் கிராமங்களில் பெரும்படை தனித்தெய்வமாக வழிபடப்படுகிறது. கேரதீவு, பரம்பராய் ஆகிய கிராமங்களில் ஐயனாரோடு இணைத்துத் தனித்தெய்வமாக வழிபடப்படுவது குறிப்பிடத்தக்கதாகும்.

Image-4-1-1024x478.jpg

Image-6.jpg

எழுநாவில் வெளிவந்த ‘சேவகர்’ தெய்வம் பற்றிய கட்டுரையை வாசித்து விட்டு சாவகச்சேரியைச் சேர்ந்த மார்க்கண்டு அவர்கள் ‘பெரும்படை’ தெய்வம் பற்றி எமக்குக் கூறினார். அதன்வழி மாணவ நண்பர்கள் திரு S. தாரங்கன், செல்வி S. தாட்சாயினி ஆகியோரின் உதவியோடு கள ஆய்வில் ஈடுபட்டோம். யாழ்ப்பாணத்துக்கும் கிளிநொச்சிக்கும் இடைப்பட்ட இக்கிராமங்களுக்குச் சென்று நேரடியாக ஆலயங்களைத் தரிசித்தபோது சில பொது அம்சங்களை அவதானிக்க முடிந்தது.

1. பெரும்படைத் தெய்வத்தின் இக்கோயில்கள் யாவும் கடற்கரையை மிக அண்மித்தே அமைந்துள்ளன.

2. இவை யாவும் கடலால் உட்கொள்ளப்பட்ட விவசாய – நெல் உற்பத்தி நிலங்கள்; வற்றுகடல்கள்.

3. இக்கோயில்களுள் சில பெருங்கோயிற் பண்பாட்டியலுடன் கட்டப்பட்டாலும் ‘பூசாரி’களே பூசை செய்கின்றனர்.

4. பரம்பரை பரம்பரையாகப் பூசை செய்யப்படுகின்றது என்ற ஒற்றை வரியைத் தவிர வரலாறு எதுவும் அறியப்படாத கோயில்கள்.

5. முக்குவர் சமூகத்தவர்களின் குலதெய்வக் கோயில்களாகவே இவை காணப்படுகின்றன.

6. எந்தக் கோயிலிலும் காலங்காலமாக உயிர்ப்பலி, மட்சப் படையல் எதுவுமில்லை. இது சேவகர் வழிபாட்டை ஒத்துள்ளது.

7. பெரும்படைத் தெய்வம் உருவமற்றது; அரூப வழிபாடும் கல் வைத்து வழிபடும் முறையுமே பெருவழக்ககாக உள்ளது.

கோயிலாக்கண்டி, வெட்டுக்காடு, பரமன்கிராய், ஞானிமடம், கறுக்காய்த்தீவு, குஞ்சுப்பரந்தன் புதிய சுட்டதீவு, பழைய சுட்டதீவு, ஆலங்கேணி, கெற்பலி ஆகிய இடங்களில் ஒவ்வொரு கோயில்களும் ஞானிமடத்துக்கு அப்பால் நாகதேவன் துறையை அண்மித்து தெருவின் இருபுறமும் இருகோயில்கள் உள்ளன. அதே போல கச்சாயில் மணற்பிட்டி சடவத்தியில் ஒரு கோயிலும் கச்சாய் துறைமுகத்தில் இருந்து 2 Km படகுப் பயணத்தில் அமைந்துள்ள சாளம்பன் தீவில் ஒரு கோயிலும் உள்ளது. இவை தவிர தனங்கிளப்பில் இருந்த பெரும்படை ‘அம்மன்’ கோயிலாக மாறிவிட்டது. சங்குப்பிட்டி, பரமன்கிராய் எனுமிடங்களில் உள்ள ஐயனார் கோயில்களின் பரிவார தெய்வமாக பெரும்படை உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Image-7.jpg

வெட்டுக்காடு பெரும்படையும் பரமன்கிராய் ஐயனாரும்

பரமன்கிராய், வில்லடி மேற்கு ஐயனார் கோயில் பூசாரியான சதாசிவம் சிவகுருநாதன் பெரும்படை, ஐயனார் தெய்வங்களின் வருகைக்கான ஐதீகக் கதையை கீழ் வருமாறு கூறினார்:

“பேய்க்கப்பல் ஒன்று கடல் வழியாக இந்தப் பிராந்தியத்தை நோக்கி வந்தது. கௌதாரி முனையின் ஏழாத்துப்பிரிவில் மடை வைத்து தம்மைக் காக்குமாறு மக்கள் வேண்டினர். கொழும்புத்துறையிலிருந்து கடல் வாய்க்கால் வழி ஏழாத்துப் பிரிவுக்குப் பாதை இருந்தது. அப்போது எறியப்பட்ட இடம்புரிச்சங்கு, வலம்புரிச்சங்குகள் விழுந்த இடங்களே முறையே வில்லடி மேற்கு, வெட்டுக்காடு ஆகியனவாகும். தெங்குறுப்பிட்டி சுடலையில் உள்ள பாலைமரத்தில் அச்சங்கு தெரிவதாகக் கூறி பலர் அதனை எடுக்க கோடாரியுடன் சென்று பார்த்த போது அதனைக் காணவில்லை. இப்படி பலர் பல தடவை ஏமாந்துள்ளனர்.”

மேற்படிக் கதையை வெட்டுக்காடு தெங்குறுப்பிட்டி பெரும்படை ஆலயப் பூசாரி கார்த்திகேசு பஞ்சாட்சரம் இவ்வாறு கூறினார்:

“கொள்ளை (நோய்)க் கப்பல் ஒன்று இப்பிராந்தியத்துக்கு வந்தது. அக்கொள்ளை நோயிலிருந்து தப்ப இரு சங்குகள் எறியப்பட்டன. ஒன்று தெங்குறுப்பிட்டியில் விழுந்து பெரும்படையாகவும் மற்றையது வில்லடியில் விழுந்து ஐயனாராகவும் நின்று அருள் பாலிக்கின்றன. அத்தெய்வங்களால் கொள்ளை நோய்க் கப்பல் உடைக்கப்பட்டது. அந்த இடம் இன்றும் ‘கப்பல் உடைந்த வாய்க்கால்’ எனப்படுகின்றது. கொள்ளிவாய்ப் பேய்கள் காலை இழுத்து இழுத்துச் சென்றதால் அந்த வாய்க்கால் ஏற்பட்டது என்றும் கதை உண்டு.”

இவ்விருவரது கருத்துப்படியும் சங்கு விழுந்த இடங்களில் ஐயனாரும் (வலம்புரிச்சங்கு) பெரும்படை தெய்வமும் (இடம்புரிச் சங்கு) உருவாயின. தமிழகப்புலத்தில் சோழர் காலத்தில் சாதியை வலங்கை, இடங்கை எனப் பகுத்துரைத்துள்ளனர். அரசின் வலங்கை வருபவர், இடங்கை வருபவர் என இச்சாதிகள் சுட்டப்படுகின்றன. இச்சாதிகளை சார்ந்த வீரர்கள் வலங்கை வீரர், வலங்கைப்படை, இடங்கை வீரர், இடங்கைப் படை என அழைக்கப்பட்டனர்.

வலங்கைச் சாதியினருள் (வலம்புரிச்சங்கு) ஒருவரான வேளாளரினால் ஐயனாரும் இடங்கைச் சாதியினரான (இடம்புரிச்சங்கு) முக்குவரர்களால் பெரும்படைத் தெய்வமும் இன்று வரை ஆதரிக்கப்பட்டு வருவதையும், பெரும்படைத் தெய்வம் பற்றிய கதையாக பெரும்படைத் தெய்வ வழிபாட்டாளர்கள் இக் கதையையே சிறிது சிறிது வித்தியாசத்தில் கூறுவதையும் அவதானிக்க முடிந்தது. முக்குவர்களின் காவல் தெய்வமாக, குலதெய்வமாக பெரும்படை இன்றும் நின்று நிலைக்கின்றது.

ஐயனாருக்கும் பெரும்படைக்கும் இடையிலான வழிபாட்டு உறவு இவ்விரு கோயில்களிலும் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. பண்டமெடுத்தல், முத்தரிசி பெறல், பவனி பாடல் என்பன ஒன்றாகவே நடைபெற்றுள்ளன. இவ்விரு இனக் குழுக்களும் இணைந்தே இக் கைங்கரியங்களை மேற்கொண்டுள்ளனர். ஐயனார் கோயிலில் கொடிமரம் நடுதல், பலியிடல் நடைபெற்றன. ஐயனார் கொடிமரம் சாய்த்தலின் பின் பெரும்படையில் பொங்கல் இடம்பெற்றுள்ளது. ஐயனாருக்கு பெரும்படைப் பூசாரியும் பெரும்படைக் கோயிலுக்கு ஐயனார் பூசகரும் சென்று இணைந்து பூசை செய்துள்ளமை சாதி கடந்த வரலாற்றுச் சம்பவங்களை ஆதாரப்படுத்துகின்றன. ஆயினும் இச்செயல்முறைகள் இன்று குறைவடைந்து வருகின்றன.

பவனி வரும் போது ‘21’ பாடல்கள் பாடப்பட்டதாகவும் அவ்வேடுகள் தொலைந்து விட்டதாகவும் ஐயனார் கோயில் பூசாரி தெரிவித்தார். இதையொத்த கதையையே யுத்தத்தால் ஏற்பட்ட பெயர்வுகளால் சுவடிகள் தொலைந்தன என கறுக்காய்தீவு பெரும்படைக் கலையாடி பொன்னம்பலம் மயில்வாகனமும் தெரிவித்தார். ஆயினும் ஐயனார் கோயில் பூசாரி தனது ஞாபகத்தில் இருந்த ஐயனார் பாடல்கள் பத்தை எழுதி வைத்துள்ளார். வெட்டுக்காடு பெரும்படை பூசாரி கா. பஞ்சாட்சரம் அப் பத்துப் பாடல்களோடு பெரும்படை பற்றிய நான்கு பாடல்களையும் இணைத்துப் பதிப்பித்துள்ளார். அப்பாடல்களில் “தர்மனே செங்கண்மால்  தரு பெரும்படையே” என்றே ஈற்றடிகள் ஆண்பால் கொண்டவையாய் அமைந்துள்ளன. ஆனால் இன்று பெரும்படை ‘பெரும்படையம்மன்’ என்றே வழிபடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. கோயிலாக்கண்டியைச் சேர்ந்த விஜிகரன் தனது வீட்டுக்கருகில் இருந்த வயோதிப மாது ‘பெரும்படைக் கிழவா’ என்று பெருங்குரலில் தெய்வத்தை அழைத்து வணங்குவதாக தெரிவித்தார்.

பெரும்படைத் தெய்வம் பற்றிய கதை

பெரும்படைத் தெய்வம் இரண்டு வகை உடையது. ஒன்று, வெற்றிப் பெரும்படை; மற்றயது, வீரப் பெரும்படை. இராமாயணத்தில் ‘இராவணரோடு இருந்தவள்’ என்று மக்கள் பேசியதால் சீதையை வனத்தில் விடுவித்தான் இராமன். இதனை “வண்ணாரின் மொழி கேட்டு, வனம் விடுத்த சீதை தனை” என நவாலியூர் சோமசுந்தரப்புலவர் பாடுவார். கர்ப்பமுற்றிருந்த சீதை வனத்தில் ‘லவன்’ எனும் ஆண்மகவைப் பெற்றிருக்கின்றாள். ஒருநாள் அக்குழந்தையை விசுவாமித்திர முனியின் பொறுப்பில் விட்டுவிட்டு நீரெடுக்கக் குளத்துக்குச் செல்கிறாள். செல்லும் வழியில் குரங்கு தன் மகவை நெஞ்சோடு அணைத்தபடி தான் செல்லுமிடமெங்கும் கொண்டு செல்வதைக் கண்டு, “இக்குரங்குக்கு இருக்கும் பாசம் தனக்கு லவன் மீது இல்லாமல் போய்விட்டதே” என எண்ணித் துயருற்று ஓடிப்போய் தன் குழந்தையைத் தூக்கிக் கொண்டு குளத்துக்குச் சென்றாள். இதனையறியாத விசுவாமித்திரர் குழந்தையைக் காணாது பதறி, செய்வதறியாது திகைத்து, பின் தேறி, தருப்பைப் புல் ஒன்றை எடுத்துத் தன் தவ வலிமையால் லவன் போல் ஒரு குழந்தையை உருவாக்கினார். இதையறிந்த சீதை மகிழ்வோடு அக்குழந்தைக்கு ‘குசன்’ எனப் பெயரிட்டு வளர்த்தாள் என்றும் கூறப்படுகின்றது. அதில் சீதையின் மகனான லவனே வெற்றிப் பெரும்படை; அம்மூர்த்தமே மூலஸ்தானத்தினுள் (சாளம்பன் தீவு, ஆலங்கேணி சாமிப்புலம்) இருக்கிறது. வெற்றிப் பெரும்படை பரிவார மூர்த்தியாக வெளியில் இருக்கிறது. வெற்றியீட்டியவன்  தலைவனாகி அரசுக் கட்டிலில் ஏறுவதும் துணை நின்றவன் வீரனாகி காவற்கு நிற்பதும் மனிதகுல வரலாறு முழுவதும் இடம்பெறும் விடயம் தான்.

வழிபாட்டு முறைகள்

பொதுவாகப் பெரும்படைக்கான பூசை வழிபாடு சனிக்கிழமைகளிலேயே நடைபெறுகின்றது. ஊர் வழக்கில் ‘சனியும் புதனும் சாத்திரத்திற்குரிய நாள்’ என்பர். ஆயினும் தத்தம் வசதிக்கேற்ப வெள்ளி, ஞாயிறு தினங்களிலும் விளக்கு வைப்பர். நித்தியா பூசையும் உண்டு. ஆனால் படகுப் பாதையை மட்டும் கொண்டுள்ள கச்சாய், சாளம்பன் தீவு பெரும்படைத் தெய்வத்துக்கு பௌர்ணமி நாளிலேயே பூசை இடம் பெற்று வருகிறது.

Image-1-1.jpg

பெரும்பாலான கோயில்களில் பங்குனி உத்திரம், வைகாசிப் பொங்கல் என்பன சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. அது ‘வேள்வி’ என அழைக்கப்படுகிறது. வெட்டுக்காடு, தெங்குறுப்பிட்டி பெரும்படை கோயிலிலும் ஐயனார் கோயிலிலும் இணைந்த வழிபாட்டு முறை உள்ளது. முன்னைய காலத்தில் பொங்கலுக்கு எட்டு நாட்களுக்கு முன்பு ‘நாள் காசு’ எடுத்தல் நிகழ்வு இடம்பெறும். ஐயனார்க்கு பெரும்படை கோயில் சார்ந்தவர்களும், பெரும்படைக்கு ஐயனார் கோயில் சார்ந்தவர்களும் நாள்காசு பெறுவர் என்றும் பின்பு சந்தையில் அவற்றைப் பரிமாற்றம் செய்து ‘வளந்துப்’ பொருட்களை வாங்குவர் என்றும் ஐயனார் கோயிலின் பூசாரி கூறினார். சமூக ஒற்றுமையைப் புலப்படுத்தும் இச்செயற்பாடு இன்று அருகிவிட்டது. யாழ்ப்பாணத்தில் இருந்து இந்த ஆலயங்களுக்கான வாழைக்குலை முதலியன படகுவழி நாகதேவன் துறைக்கு வந்து பின் வண்டிலில் கொண்டு வந்ததை அறிய முடிகின்றது. அக்கால வணிக, போக்குவரத்து விடயங்கள் இதன் வழி ஆவணப்படுத்தப்படுகின்றன.

Image-2-2.jpg

ஐயனாரில் திருக்கொண்டல் மரம் கொடிமரமாக நாட்டியபின் ஒவ்வொரு வீட்டிலும் பந்தலிடப்படும். இரு ஆலயப் பூசகர்களும் வேறுசிலரும் ‘பவனி படித்தபடி’ (ஆலயப்பாடல்கள்) வருவர். அதன் போது பறை, உடுக்கு, சங்கு, சல்லாரி போன்றவை இசைக்கப்படும். ஒவ்வொரு வீட்டாரும் அரிசி, பண்டம் இடுவர். இச்செயல்முறை ‘முத்தரசி’ தண்டல் எனப்படும். இத்தண்டல் பெரும்பாலான பெரும்படைக் கோயில்களில் நிகழ்ந்துள்ளன. இன்று இக்கூட்டு வழிபாட்டுமுறை அருகிவிட்டது. ஒரு முழு இரவு பவனி வந்தபின் காலையில் அன்னதானம் வழங்கப்படும். இரவு பொங்கல், படையல் இடம்பெறும். பெரும்படைக்கான மடையில் பொங்கலில் பல்வேறு வகையான பலகாரங்கள் குவித்து வைக்கப்படும். வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம் நிறைவாக வைக்கப்படும். பெரும்படைத் தெய்வத்துக்கு நீத்துப்பூசணிக்காய் வெட்டுதலே பலியிடலாகக் கருதப்படுகின்றது. மடை வைப்பும் பூசையும் நடைபெறும் போது கலையாடல் நடைபெறும்.

பெரும்படைத் தெய்வத்தோடு குறைந்தது பத்து வரையான வேறு தெய்வங்கள் காணப்படுகின்றன. அவற்றுக்குத் தனித்தனிப் பந்தல்கள் போடப்பட்டிருக்கும். பல்வேறு சாதிகளின் குலதெய்வங்களுக்கு அங்கு இடம் ஒதுக்கப்பட்டு இருப்பதும், மடைபரவி வணங்குவதும் ஏற்றத்தாழ்வற்ற சமூக ஒழுங்கை, தொழில்சார் பாகுபாட்டை மட்டும் காட்டுவதாக அமைகிறது.

ஐயனாரோடு இரு மனைவியர் (பூரண, புட்கல), கண்ணகி, நாக தம்பிரான், முருகன், பிள்ளையார், நாச்சிமார், முத்துவைரவர், வைரவர், முன்னோடி, குறிப்பன், மாரி, காத்தவராயன், கன்னிமார், முனியப்பர், விறுமர் போன்ற இன்னும் பல தெய்வங்களை பரிவாரங்களாகக் கொண்ட தெய்வமே பெரும்படை. இதனால் இவ்வாலய வழிபாடுகளின் போது பல தெய்வமாடிகள் தெய்வங்கள் ஏறிக் கலையாடுவர். குறி சொல்லுதலும் உண்டு. நோய்நீக்கம், துன்பநீக்கம் போன்றவற்றிக்காக – சுகவாழ்வுக்காக பக்தர்களுக்கு தெய்வமாடிகள் ‘திருநீறு போட்டு’ ஆசீர்வதிப்பார்.

வளந்து எடுத்தல், மடைபரவுதல் என்பதில் ஆலயத்திக்கு ஆலயம் வேறுபாடு உண்டு. உதாரணமாக கறுக்காய்த்தீவில் மார்கழி மாதம் வழந்தெடுத்தல் நிகழ்வு நடைபெற்றது. வளந்துப் பானையை கறுக்காய் தீவு மேற்கெல்லை பூவரச மரக்கொப்பில் கட்டி வைப்பர். கிழக்கெல்லை கந்தசாமி கோவில் பூவரசு மரத்தில் மற்றையதைக் கட்டி வைப்பார். அது மூடியால் மூடி நீர்புகா வண்ணம் கட்டப்பட்டிருக்கும். பின்பு பங்குனி மாதம் அதனை எடுத்துப் பொங்கிப் படைப்பர். கடல்கோள் அதிகம் வாய்ப்புள்ள அத்தீவில் உயரமான மரத்தில் வளந்துக்கான முத்தரசியைக் கட்டி வைத்தல் ‘உணவுப் பஞ்சத்தில் இருந்து காக்கும்’ நடவடிக்கையாகவும் இருந்திருக்கலாம். இதே போல கோயிலாக்கண்டியின் வளந்தெடுக்கும் முறையும் தனித்துவமானதாகும்.

பெரும்படை ஆலயங்களில் உள்ள எல்லாத் தெய்வங்களுக்கும் வழுந்துப் பானை வைக்கப்படும். நீண்ட வெள்ளைத் துணியின் மேல் அவை வைக்கப்பட்டு கற்பூரம் ஏற்றல் நடைபெறுகின்றது. பூசை செய்யப்பட்டு பொங்கல் அடுப்பு வைக்கப்பட்டு பொங்கல் நடைபெறும். இவ் விழாக்களுக்கான கொடி கட்டல் நடைபெற்ற காலங்களில் தெய்வங்கள் பண்டங்களுக்கு காவல் காக்கும் என்பதால் பெண்கள், சிறுவர்கள் மாலைப்பொழுதின் பின் ஆலயச் சூழலுக்குச் செல்வதில்லை. தற்போது இந் நம்பிக்கைகள் குறைந்துவிட்டன.

பெரும்படைக்கு பலியிடல் இல்லை எனினும் காத்தவராயருக்கு சாராயப் படையலும் முனி, அண்ணமார், விறுமர் போன்ற தெய்வங்களுக்கு ஆலங்கேணி சாமிப்புல பெரும்படைக் கோயிலிற்குப் புறம்பாகத் தனிமண்டபம் அமைத்து (மறைவாக) பலியிடல் நடைபெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது. அக்கோயிலில் கார்த்திகை, தை மாதங்களில் கடல் நீரேரியில் மூன்று கிலோமீற்றர் சென்று மடைபரவுதல் நடைபெறுகின்றது. இது ‘தண்ணீரில் பல காவல் மடைபரவுதல்’ எனப்படுகின்றது. ஆயினும் “கன்னாவும் ஆடு தின்னாப்பாலையும் சிக்கி நிக்கும் இடத்தில் மடை பரவுக” எனக் கனவில் தெய்வம் கூறியதாகவும் தற்போது அவ்விடத்திலேயே மடையிடுவதாகவும் ஆலயத் தலைவர் பொன்னையா கந்தையா எமக்குரைத்தார். இத்தெய்வத்துக்கு காவடி எடுத்தல் முதலான நேர்த்திகளும் செய்யப்படுகின்றன. நீர்ச்சோறு வழங்கும் முறை பொருளாதார மற்றும் காலநிலை சார்ந்ததாக அமைந்துள்ளது.

பெரும்படைக்கு மந்திரமோதி பூசை செய்யும் மரபும் சில கோயில்களில் உள்ளன. கோயிலாக்கண்டி கோயில் வரலாற்றில் தற்போது உள்ள கோயிலுக்கும், சமாதிக்கும் இடையில் இருந்த ஆலமரத்தினடியில் லிங்கத்தை ஒத்த கல்லிருந்தது. அதனை எடுத்து வழிபடுமாறு தெய்வம் உரைத்ததாகக் கூறப்படுகிறது. இது நடுகல்லாகவோ கந்துவாகவோ இருந்திருக்கலாம். நல்லதம்பி அவர்கள் அதனை எடுத்து ஆதரித்ததாகவும் அவரது கன்னிமார்த் தெய்வம் நாக்கில் கீறி மந்திரம் உபதேசித்ததாகவும் அதிலிருந்து மந்திர வழிபாடு நிகழ்ந்து வருவதாகவும் அவ்வாலயப் பூசகர் கனகரத்தினம் துரைநாதன் கூறினார். ஆயினும் அம்மந்திரத்தை எமக்குரைக்க மறுத்துவிட்டார்.

அற்புதங்கள்

வெட்டுக்காடு பெரும்படைத் தெய்வம் தொடர்பான பேய்க்கப்பல் அல்லது கொள்ளை நோய்க் கப்பல் விரட்டல் கதை அற்புதமாக பல ஆலயங்களிலும் சொல்லப்படுகிறது. அது தவிர ஆலங்கேணி சாமிப்புலத்தில் மட்டும் நிகழ்ந்த வழிபாட்டால் அந்த ஊர் மட்டும் கடல் புகாது தப்பியதால், தற்போது கட்டுக்கரையிலிருந்து குடமுருட்டி வரை பொங்கல் நடைபெற்ற பின்பு இறுதியாக பெரும்படைப் பொங்கல் ஆனியில் நடைபெற்று வருகின்றது.

வெட்டுக்காட்டில் யுத்தகாலத்தில் இராணுவம் இரவு நேரத்தில் சென்ற வெளிச்சத்தைச் சுட்டதாகவும் அடுத்த நாள் சுட்ட இராணுவ வீரர் திடீரென மரணமடைந்ததாகவும் அதன் பின் அந்த முகாம் வீரர்கள் இன்றுவரை ஆலயத்தில் வழிபடுதலும் நேர்த்தி வைத்தலும் செய்வதாக ஆலயப் பூசாரி தெரிவித்தார். அதேபோல நிசாப்புயல் காலத்தில் கறுக்காய்த்தீவு பெரும்படைக்கு வைத்த நேர்த்தியால் உப்பு நீர் ஊருக்குள் புகவில்லை என்றும் அயல் ஊர் அனைத்தும் உப்புநீர்க் காடாயிற்று என்றும் பூசாரி கூறினார்.

கடற் தொழிலாளர் வருவாய் பெரும்படையின் (சாமிப்புலம்) அருளினால் நிகழ்வதாகவும், வைத்த மடையில் குறை இருந்தால் ‘கஞ்சல் கசாளங்களே’ அகப்படும் என்றும், குறை நீக்க மீள மடை செய்யின் மீன்பிடி சிறக்கும் என்றும் ஆலயத் தலைவர் கூறினார். பொதுவில் “பெரும்படைத் தெய்வத்துக்கு மடை வைத்து அண்டாது” என்ற கருத்தும் சொல்லப்படுகின்றது.

சில அவதானிப்புகள்

• முக்குகர் குலத்தெய்வமாக கடல் நீரேரியை அண்மித்து கடலோரத்தில் உள்ள இத்தெய்வ வழிபாடு, இராமனின் நண்பனான குகன் வம்சத்தவரால் இராமனின் பிள்ளைகளான லவ (வெற்றிப்பெரும்படை), குச (வீரப்பெரும்படை) ஆகியோர் வழிபடப்படுவதாக அமைகிறது.

• கொள்ளை நோய் நீக்கம், பகைவிரட்டல் எனும் வீரச் செயல்களோடு தொழில் விருத்திக்குமான வழிபாடாக உள்ளது.

• பிட்டி, இடுகயிறு என்பன முக்குகரின் அடையாளங்கள் என ‘வலங்கை, இடங்கை சாதியர் வரலாறு’ எனும் நூலில் கூறப்படுகின்றது. பெரும்படைக் கோயில்களும் தெங்குறுப்பிட்டி, கச்சாய், மணற்பிட்டி, சாணம்பன் தீவு எனும் பிட்டி போன்ற இடங்களில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

• நெய்தலும், மருதமும் இணைந்த வாழ்புலத்தின் வழிபாடாகவே இது அமைந்துள்ளது.

• குறிப்பாக கடல் கொண்ட வயல் நிலங்களை அண்மித்ததாக ‘தப்புத்தண்ணிக்’ கடலோரக் கோயில்களாக அமைந்துள்ளமையை அவதானிக்க முடிகின்றது.

• தமக்கேயான தனித்துவமான கதைகளையும் பரிவார அல்லது இணைத் தெய்வங்களையும் கொண்டவையாக இவ்வாலயங்கள் காணப்படுகின்றன.

• மரபு மணம் மாறாதவையாக பெரும்படைத் தெய்வ வழிபாட்டு முறைகள் காணப்படுகின்றன.

• பெரும்படைத் தெய்வம் உடனுறை பிள்ளையார் கோயிலாக சில கோயில்கள், (கச்சாய் மணற்பிட்டி சடவத்தி கோயில், ஆலங்கேணி சாமிப்புலக் கோயில்) மாறி வருகின்றன.

• இன்று பெரும்படை ‘பெரும்படையம்மன்’ என்றே வழிபடப்படுதல் பெரும்படையின் வரலாற்று உரையாடலின் தேய்வையும் மேனிலையாக்கத்தையும் காட்டுகின்றது.

• பல சாதிகளும் இணைந்ததான வழிபாட்டுமுறை சிதைந்து வருதலும் பௌதிகக் கட்டுமானமே முதன்மை பெறுதலும் இடம்பெற்று வருகின்றது.

Image-8.jpg

முடிவுரை

ஐயனாரின் பரிகாரத்தின் தலைவன் என்று பெரும்படை பற்றிக் கூறப்படுகிறது. எல்லா இடங்களிலும் ‘வெற்றி’ மூலவிடத்திலும், ‘வீரம்’ வெளிப்புறத்திலும் தெய்வமாக்கப்பட்டுள்ளது. வெற்றியை வீரமே தக்க வைப்பதாக இதனைக் கொள்ளலாம். அரூபக் கடவுளாக, பால் வேற்றுமை அற்ற தெய்வமாகக் காணப்பட்ட பெரும்படை இன்று ‘அம்மன்’ ஆக்கப்பட்டுள்ளது. வழிபாட்டு முறைகள் மாறி வருகின்றன. சாதிய ஒற்றுமை குறைவடைந்துவிட்டது. ஆயினும் பழமையான பூசாரி வழி வழிபாடு அவ்வண்ணமே காணப்படுகிறது. ஆகமமயப்படாத சுய வழிபாட்டு முறை சிறப்பாக இடம்பெறுகின்றது. ஈழத்தில் மட்டக்களப்பிலேயே முக்குவர்கள் அதிகம் இருப்பினும் அங்கோ அல்லது யாழ்ப்பாணத்தில் நவாலி, தொல்புரம், காரைநகர் உள்ளிட்ட வேறு இடங்களிலோ இத்தெய்வ வழிபாடு இல்லை. கடல் நீரேரியைச் சுற்றியே காணப்படும் ‘நிலவியல்’ தெய்வம் இது எனலாம். பெரும்படைக் கோயில்களில் படையாகப் பல தெய்வங்கள் சூழ இருப்பதும் பெரும்படை எனும் சொல் பால், திணை வேறுபாடு இல்லாத ஒன்றாக இருப்பதும் இதனை ஒரு கூட்டு வழிபாடாகக் கொள்ள வைக்கிறது. பல் தெய்வங்கள் ஒருங்கே ஓரிடத்தில் வழிபடப்படுகின்ற – பல சாதி மக்கள் ஒருங்கே திரள்கின்ற இடமாக இது இருப்பது ஒரு ‘திரட்சி’ வழிபாடாக இதனைக் கருத இடமளிக்கின்றது. யாழ்ப்பாணச் சாதியத்தை முக்குவர் நோக்கு நிலையில், தம்மை மூலத்தில் வைத்து, ஏனைய சாதிகளையும் தெய்வங்களையும் ‘அடுக்குப்’ பண்ணுகின்றதான முறையில் இக்கோயில்களின் அமைப்புமுறை இருப்பதாகவே எமக்கு எண்ணத் தோன்றுகின்றது.


https://www.ezhunaonline.com/a-family-deity-called-perumpada/

  • 4 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நீலாசோதையன் என்னும் துணைத்தெய்வம்

தி. செல்வமனோகரன்

October 12, 2024 | Ezhuna

அறிமுகம்

மனிதகுலம் ஏனைய உயிரினங்களில் இருந்து வேறுபட்டு தனி அடையாளங்களோடு – பகுத்தறிதலோடு இயங்கத் தொடங்கிய இனக்குழுமக் காலந்தொட்டு வீரம் – போர் என்பன தவிர்க்க முடியாதவையாகி விட்டன. தனக்காக மட்டுமன்றி இனக் குழுவுக்காகப் போராடுதலும் இன்றியமையாததாயிற்று. தமக்காகப் போராடி உயிர்நீத்த தலைவனை அல்லது வீரனை அவ்வவ் இனக்குழு மக்கள் போற்றினர். இனக்குழுவின் பகையை வெல்லல், வேட்டை, குழுவின் தேவைகளை நிறைவேற்றல், பகை விலங்குகளைக் கொல்லுதல் – வெல்லுதல் என ‘வீரன்’ சாகசம் காட்ட பல சந்தர்ப்பங்கள் காத்துக் கிடந்தன. காலங்காலமாக அவர்களது வீரம் கதை கதையாகக் கூறப்பட்டது. அதன் வழி நீத்தார் வழிபாடு, முன்னோர் வழிபாடு, நினைவுக்கல் அல்லது நடுகல் வழிபாடு உருவாயிற்று. 

இயற்கையான போராட்ட வாழ்வில் தொழில் வழி மனித இனக்குழுக்கள் உருவாயின. தம்மை, தம் இனக்குழுவைக் காத்த தலைவனும் வீரனும் அவ்வவ் மக்களால் போற்றப்பட்டனர். காலப்போக்கில் அவர்கள் குழுவின் – குலத்தின் தெய்வமாக்கப்பட்டனர். குலதெய்வம் உருவாயிற்று. வீரவேங்கையிலிருந்து தலைவன் வரை இவ்வழிபாடு நிகழ்த்தப்பட்டதாயினும் அவரவர் வீரபராக்கிமங்களுக்கும் அவரவர் பற்றிய கதைகளுக்கும் காலச்சூழலுக்கும் ஏற்ப அவர்கள் காலங்கடந்தும் வழிபடப்பட்டனர். அது குலமரபாக பரம்பரைகள் பல கடந்தும் நீடித்தது. ஒரு கட்டத்தில் வாய்மொழி மரபுக் கதைகள் இழை அறுந்தறுந்து போக கதைகள் அற்ற, காரணம் தெரியாத, ஆனால் மரபுவழி  நம்பிக்கையால் வழிபடப்படும் தெய்வங்களாக அது மாறத் தொடங்கியது. குல ஏற்றத்தாழ்வுற்ற மக்களின் சாதிய நீக்கவுணர்வின் வழியும் பிற்காலப் பகுத்தறிவு வாதத்தின் வழியும் இவ்வழிபாடுகள் கைவிடப்பட்டன அல்லது காரணம் தெரியாத மூட நம்பிக்கைகளாகக் கருதப்பட்டன.

ஆனால் இத்தெய்வங்களின் பத்ததிகளும் வாய்மொழி வழக்காறுகளும் அந்த நிலத்தின் சுதேச வரலாற்றை எழுத பெரிதும் உதவ வல்லன என்ற வரலாற்றுச் செய்தி முக்கியமானதாகும். இவ்வாறு மறக்கப்பட்டு வருகின்ற – வீர வரலாற்றை உடைய துணைத்தெய்வமே நீலாசோதையன்  எனும் தெய்வமாகும்.

நாட்டார் தெய்வம் பற்றிய எழுநா எழுத்துகள் பற்றி உரையாடிய பின் நண்பர் – கிழக்குப் பல்கலைக்கழக இந்து நாகரிகத்துறைத் தலைவர் – கலாநிதி வாமன், நீலாசோதையன் பற்றி எமக்குத் தெரிவித்ததோடு நின்றுவிடாமல் புன்னைச்சோலை பூசாரியையும் அறிமுகப்படுத்தி வைத்தார். இதன்வழி உருவான அருட்டுணர்வால் மாணவ நண்பர்கள் சு. தாரங்கன், எஸ். அபிக்ஷனா, ஈ. நவிசா மற்றும் யாழ் பல்கலைக்கழக ஊடகத்துறை முகாமைத்துவ உதவியாளர் நண்பர் விஜிகரன் ஆகியோரின் உதவியுடன் இதற்குரிய கள ஆய்வில் ஈடுபட்டோம்.

நீலாசோதையன்

ஈழத்தில் நின்று நிலவுகின்ற குலதெய்வங்களுள் ஒன்று பெரியதம்பிரான். சலவைத் தொழிலாளர்களின் குலதெய்வம் இது. தக்கன் சிவனை அழைக்காது செய்த யாகத்தில் யாக புருக்ஷனாகத் தோன்றியவன் பெரியதம்பிரான் என்றும், யாகத்தை அழிக்கத் தோன்றிய சிவனின் அம்சமான வீரபத்திரர் தக்கனின் தலைகிள்ளி ஏனைய தேவர்கள் உள்ளிட்டவர்களை துவம்சம் செய்ததைக் கண்டு அஞ்சியோடியவர்களில் ஒருவனே பெரியதம்பிரான். அவ்வாறு ஓடிப்போனவன் குளத்தங்கரையொன்றில் துணி துவைத்துக் கொண்டிருந்த சலவைத் தொழிலாளி ஒருவனிடம் தன்னைக் காப்பாற்றுமாறு வேண்டினான். அத்தொழிலாளியும் துவைக்கப் பயன்படுத்தும் பெரிய ஜாடியை அவன் மேல் கவிழ்த்து மூடிவிட்டான். அவனைத் தேடி வந்த வீரபத்திரரைச் சிறிது தேற்றி தான் பெரியதம்பிரானை ஒளித்து வைத்த வரலாற்றை உரைத்தான். அவனது சாமர்த்தியத்தைப் பாராட்டிய வீரபத்திரர் சாடிக்குள் உள்ளவனே உங்கள் குலதெய்வம் என்றும் அவன் உங்கள்  பிணி, துன்பம் முதலியவற்றை நீக்க வல்லான் என்றும் கூறிச் சென்றார். அன்று தொட்டு சலவைத் தொழிலாளிகளின் (வண்ணார் – கட்டாடியார்) குலதெய்வமாகப் பெரியதம்பிரான் விளங்கி வருகின்றார் என்பது பொதுநிலைக் கருத்தாகும் (கனகரத்தினம், இரா. வை., 2016). யாகத்திலிருந்து எழுந்த யாக புருக்ஷனைக் காட்டி “இவர் யார்?” என தேவர்கள் வினாவ, பிரம்மா “எம் தம்பிரான் பெரியதம்பிரான்” எனக் கூறியதாகவும் கூறப்படுகிறது (நேர்காணல்: கிருக்ஷ்ணபிள்ளை புவனேசராசா. புன்னைச்சோலை, மட்டக்களப்பு).

Image-1-7.jpg

புன்னைச்சோலை காளிகோயில் பூசாரியான கி. புவனேசராசா (யோகன் ஐயா) சாடி கொண்டு மூடிய கதையை மறுத்து, தலையில் கட்டி இருந்த சால்வையை (சால் – சால்வை) அவிட்டு பாதையின் குறுக்கே போட்டு அதனைத் தாண்டிச் செல்ல முடியாதபடி செய்ததாகவும் இதுவே ‘சால்வை தாண்டுதல்’ சம்பிரதாயமானதாயும் கூறுகிறார். மேலும் பெரியதம்பிரானுக்கு பூஜை செய்து வழிபடுமாறு கூறியபோது “தீட்டுத் துணியை அன்றாடம் தொடும் நான் எவ்வாறு பூசை செய்ய இயலும்” என காளியன் கேட்டதாகவும் “உன் குலத்தோர்க்குத் தீட்டேதும் இன்று தொட்டு இல்லை” எனக் கூறியதாகவும் யோகன் பூசாரியும் மறவன்புலோ ஆனந்தரஞ்சனும் கூறுகின்றனர். அத்தோடு இவ்வரம் பெற்ற காளியன் “இவ்வரம் தந்த நீ எதிர்ப்பூசைக்கு இவ்வாலயத்தில் இருக்க வேண்டும்” என வேண்டியதாகவும் அவரும் சம்மதித்து வரம் தந்ததாகவும் கூறப்படுகிறது. அத்தோடு புன்னைச்சோலை யோகன் பூசாரி “சிவனுக்கழைப்பில்லாத யாகத்தில், யாக குண்டத்தில் இருந்து சிவனின் அம்சமான பெரியதம்பிரான் தோன்றியிருக்க முடியாது என்றும் அதனை சிவனின் இன்னொரு அம்சமான வீரபத்திரர் கொல்வதற்குத் துரத்துவாரா என்றும் கூறி, ஆகவே பெரியதம்பிரான் விக்ஷ்ணுவின் அம்சம்” என்கின்றார். இத்தர்க்கம் ஏற்றுக்கொள்ளக் கூடியதே. அதேநேரம் துரத்திச் சென்றது  வீரபத்திரரல்ல சனீஸ்வரன் எனத் தனிக் கதையை மறவன்புபுலவு ஆனந்தரஞ்சன் (செல்லக்கிளி) முன்வைக்கின்றார்.

இந்தப் பெரியதம்பிரான் இருக்குமிடமெல்லாம் இவரோடு இருக்கும் தெய்வம் நீலாசோதையன். நீலன் அவரது பெயர் என்றும், சோதையன் என்பது சாதிப்பெயர் என்றும் கூறப்படுகின்றது. சோதையன் என்பது குளம் வெட்டும் மக்களைக் குறிக்கும். அவர்களின் தெய்வம் நீலாசோதையன். குளத்தில் சலவைத் தொழில் செய்பவர்களான வண்ணார், கட்டாடியார் ஆகிய இரு சாதிகளினதும் கலப்பின் வழி ஒரு கோயிற் தெய்வங்களாகி, பின் சோதையர் குலம் அருக, பெரியதம்பிரான் முதன்மைத் தெய்வமாகியிருக்கலாம். யாழ்ப்பாணத்துப் பெரியதம்பிரான் பூசாரிகள் பலரும் (ஏழாலை பெரியதம்பிரான் பூசாரி, இருபாலை பெரியதம்பிரான் பூசாரி தவிர) இரண்டும் ஒருவரையே குறிக்கின்றது என்கின்றனர்; மறுபெயர்கள் என்கின்றனர். மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் இரு தெய்வமும் இணைத் தெய்வங்களாகக் கருதப்பட்டு, பெரியதம்பிரான் கோயில் எனக் கூறப்பட்டாலும், ஒரே சடங்கு – வழிபாட்டுத் தெய்வங்களாகவே அவை சுட்டப்படுகின்றன.

Image-4-6-1024x546.jpg

ஈழத்துப் பெரியதம்பிரான் கோயில் மரபில் தெய்வமாடி பெரியதம்பிரானை முன்னுறுத்தி சொற்ப நேரமே கலையாடுவதும் நீலாசோதையனாகவே பெரிதும் தெய்வமாடுவதையும் அவதானிக்க முடிகின்றது. யாழ்ப்பாண மரபில் இரு தெய்வங்களுக்குமான தனிக் கதைகள் அருகிவிட்டன. பெரியதம்பிரானே குலதெய்வமாக – பெருந்தெய்வமாக மேலெழுந்து நிற்கின்றார். கிழக்கிலங்கையில் இன்றும் நீலாசோதையனுக்கு தனியிடம் வழங்குதல் குறிப்பிடத்தக்கது.

நீலாசோதையன் பற்றிய கதைகள்

இலங்கையில் ஆதி மாமலையில் பிறந்து மகர மாமலையில் வளர்ந்து தம்பளம் மலையில் (தம்பதெனிய – சிகிரியா ஆக இருக்கலாம்) பெரியதம்பிரான் முடி சூட்டுகின்றார். இவரை வளர்த்தவர் ‘சிறுக்கியன்’ இராசா எனப்படுகிறார். பெரியதம்பிரானது புத்திசாலித்தனம் கண்டு வியந்த இராசா, சோதிடத்தில் வல்ல அந்தணரை அழைத்து இவரது வாழ்வைக் கணிக்கச் சொல்கின்றார். தக்கன் யாகம் நடத்தப்பட்ட காலத்தில் எல்லாக் கிரகங்களும் ஒரே நேர்கோட்டில் நின்றது போல இவரது பிறப்புக் காலத்திலும் நின்றதனால் ‘720’ காதவெளி தூரம் ஒரு குடையின் கீழ் ஆளுவார்; கருடக்கொடி, வெண்சங்கு, வெண் முத்துமாலை தரித்து (இவை பிற்கால வைணவ – விக்ஷ்ணு அடையாளங்கள் என்பது கவனிக்கத்தக்கது) ஆட்சி செய்வார் எனக் கணித்தனர்; அதுவே நடந்தது. பராக்கிரமம் மிக்க அரசனானான்.

இவர் பிறந்த அதே நேரத்தில் வலவை (உடவளவ) அரசாட்சிப் பிரதேசத்தில் நீலன் – யசோதை எனும் சலவைத் தொழிலாள தம்பதியினருக்கு ஒரு மகவு பிறந்தது. அதுவே நீலாசோதையன். இத் தம்பதியினர் அரண்மனையில் வாழ்பவர்களின் ஆடைகளை சலவை செய்து கொடுப்பவர்களாக நியமிக்கப்பட்டிருந்தனர். ஒரு நாள் தாயுடன் நீலாசோதையனும் அரண்மனைக்குச் சென்றான். தாய், மகனை ஒரு இடத்தில் நிறுத்திவிட்டு அரண்மனைக்குள் சென்றாள். மகன் நின்ற இடத்துக்கருகே அரசனின் உடற்பயிற்சிக்கூடம் இருந்தது. அங்கு அரசன் பயிற்சி செய்யும் ‘1000’ துலாம் நிறையுடைய தண்டாயுதம் இருந்தது. அந்தளவு நிறையுடைய தண்டாயுதத்தைத் தூக்குவார் அரசனைத் தவிர யாருமில்லை. நீலாசோதையன் அத் தண்டாயுதத்தைத் தூக்கி எறிந்தான். அது மறுதிசையில் விழுந்தது. அவன் தாயுடன் வீட்டுக்குச் சென்று விட்டான். உடற்பயிற்சிக் கூடத்துக்கு வந்த அரசன் உரிய இடத்தில் தண்டாயுதம் இல்லாததையும் வேறு திசையில் அது இருப்பதையும் கண்டு காவலர்களை வினாவி நடந்ததை அறிந்தான்; நீலாசோதையனை அழைப்பித்தான்; பரீட்சித்தான். அவன் பராக்கிரமம் கண்டு மகிழ்ந்து நண்பனுமாய் மந்திரியுமாய் ஆக்கிக் கொண்டான்.

ஒரு பொழுது இருவரும் வடதிசை நோக்கி, நகரச் சோதனை சென்றபோது பெண்ணின் அழுகுரல் ஒன்று கேட்டது. நீலாசோதையன் அத்திசையில் ஒரு பெண் சிறுவெளிச்சத்தில் இருந்து அழுவதைக் கண்டு நடந்ததை வினாவினார். “மதுரை இராசா, உங்கள் இராசாவைக் கொலை செய்து விட்டான்” என அறிவித்துவிட்டு அங்கிருந்த “6000 ஆண்களைக் கைது செய்து, கொண்டு சென்று விட்டான்” எனக் கூறி அழுதாள்.

அவர்களை மீட்க அரசனும் நீலாசோதையனுமாக ‘60’ குமாரர்களைத் திரட்டி படையெடுத்துச் சென்று நந்தூர்க் கடலில் (இது முல்லைத்தீவு நந்திக் கடலாக இருக்கலாம்) தரித்து நின்றனர். இவர்களிடம் மரக்கலங்கள் இருக்கவில்லை. நாள் செல்லச் செல்ல படைவீரர்கள் மெல்ல மெல்லத் தத்தம் வீடு திரும்பினர். எஞ்சியவர் அரசனும் மந்திரியுமே. கோபங்கொண்ட நீலாசோதையன் தண்டாயுதத்தால் கடலை அடிக்க கடல் பிரிந்து வழி விட்டது. தொடர்ந்து தண்டாயுதத்தால் அடித்து அடித்து அக்கரையை சென்றடைந்தனர். தண்டாயுத்தால் கடலை அடித்து பாதை ஏற்படுத்தியவர் பெரியதம்பிரான் என்று பாண்டிருப்பு பூசாரி வே. கணபதிப்பிள்ளை கூறுகிறார் (கனகரத்தினம், இரா. வை., 2016). அரசன் அரண்மனைக்குள் உட்புக, நீலாசோதையனோ குஞ்சரப்பந்தி புகுந்து (யானைகள் கட்டுமிடம்) யானையை யானையால் அடித்துக் கொன்றான். நேரே உட்புகுந்த அரசனின் பராக்கிரமத்தைக் கண்ட மதுரை இராசா அரியணையில் ஒரு ஓரத்தில் உட்கார, அதில் அரசன் உட்கார்ந்து தண்டாயுதத்தைத் தன் மடியில் வைத்து அதன் நுனியை மதுரை இராசாவின் மடியில் வைத்தான். கனம் தாங்காது மதுரை இராசா தவிக்கும்போது யானைகள் கொல்லப்படும் சேதியை காவலன் உரைக்கின்றான். மதுரை இராசா இறுதியில் இவர்களிடம் மன்னிப்புக் கேட்டு செல்வமும் அளித்து வழியனுப்புகின்றான். அரசனும் நீலாசோதையனும் 6000 பேரை மீட்டதோடு 12,000 மக்களைச் சிறை பிடித்து இலங்கை மீண்டனர். அனுராதபுரக் காட்டை வெட்டி 12,000 பேரையும் குடியமர்த்தினர். இதனாலேயே பெரியதம்பிரான் பத்ததிப் பாடல்களில் ‘அனுராதபுரி அரசே’ எனும் விளிப்புக் காணப்படுகிறது. இக்கதையின் பெரும்பகுதி இரா.வை. கனகரத்தினம், புன்னைச்சோலை காளியம்மன் பூசாரி யோகன் ஐயா உள்ளிட்டவர்களால் ஒரே மாதிரியாகவே கூறப்படுகின்றது. அதேவேளை யோகன் ஐயா அந்த அரசன் கஜபாகு மன்னன் என்றும் அவன் கி.பி 2 ஆம் – 3 ஆம் நூற்றாண்டுக்குக்குரியவன் என்றும் கூறுகின்றார். ஆயினும் இதற்கான ஆதாரத்தைத் தேடுதல் கடினமாகவே உள்ளது.

அதேவேளை ஆலய பூசகர் இறந்திருந்ததை அறிந்து குளக்கோட்ட மன்னன் கோணேசர் கோயிலைத் தரிசிக்க குதிரையிலேயே வந்த போது, சுரங்க மண்டபம் தரிசித்ததாகவும் சிவ நடனத்தைக் கண்டு தன்னிலை மறந்து நின்றதாகவும், இதனால் பக்தி மேலிட்ட மன்னன் கோயிலைப் புனரமைத்துப் பணியாளர்களை நியமித்ததாகவும், சம்பூர் – தோப்பூர் முதலிய இடங்களில் இந்தியாவிலிருந்து குடிகளை அழைத்து வந்து குடியேற்றியதாகவும் கோணேசர் கல்வெட்டு (வடிவேல் இ., (பதி), 1995) கூறுகின்றது. அக்குடிகளின் வம்சத்தினர் இன்றும் வாழ்கின்றனர். அதேபோல கோணேசர் கல்வெட்டு, அரசன் கந்தளாய்க் குளத்தை அமைத்து நீலாசோதையன் பொறுப்பில் விட்டதாகக் கூறுகின்றது (கோணேசர் கல்வெட்டு, 28). மேலும் அப்பாடலில்,

“எட்டிசை மண்வெட்டிக் கொண்டே ஏழரைச் சுற்றாம் மரத்தை இனதா வெட்டி
தட்டி ஒரு காலாலே எற்றி அது வீழ முன்னம் தரணி மீதில்
ஒட்டி ஒரு குளம் சமைத்து ஆங்கு உறுநீரும் கொண்டு அருளையுற்ற வீரன்
அட்டதிக்கும் புகழ்ந்தருளும் நீலாசோதையன் படையும் அரசர்மாரும்”

என நீலாசோதையனின் வீர பராக்கிரமம் கூறப்பட்டுள்ளது.

வேதியன் ஒருவன் இந்திய தேசத்தைத் தன் மந்திர வலிமையால் அடிமையாக்கி, பின் இலங்கையை அடிமையாக்க வந்தான் என்றும், அதனால் சில பேய்களை ஏவினான் என்றும், நீலாசோதையன் அவற்றை எதிர் கொண்டழித்ததாகவும் கூறப்படுகிறது. அதேவேளை அவ்வேதியன் இராமாயணத்து வாலியைப் போல தன்னெதிரே நின்று போரிடுபவரின் பாதி சக்தியைப் பெற்றுவிடும் ஆற்றல் உள்ளவன். ஆகவே நீலாசோதையன் காளியனிடம் (சலவைத் தொழிலாளி) அடைக்கலம் புக, அவன் சாடியினுள் புகச்செய்தான். இதனையே யோகன் பூசாரி ‘சால் – சால்வை’ எனப் பொருள்கொண்டு குளத்தினுள் நீலாசோதையனை மூழ்கியிருக்க வைத்து, சால்வையைக் குறுக்கே போட்டு அவ்வழி செல்லாது வேதியனை தடுத்து அப்பால் செல்ல வைத்தான் என்கிறார். வேதியன் அப்பால் செல்லும்போது மறைந்திருந்த நீலாசோதையன் விஸ்வரூபம் கொண்டு தண்டாயுதத்தால் தாக்கி வேதியனைத் தந்திரமாகக் கொன்றான் எனப்படுகிறது. ஆயினும் வேதியன் ஏவிய கம்பளி வைரவர், ஊத்தைக்காளி முதலான பன்னீராயிரம் துக்ஷ்ட சக்திகள் நின்றன. அவை மக்களைத் தாக்காத வண்ணம் நீலாசோதையன் இன்றுவரை காப்பதாக நம்பப்படுகின்றது (நேர்காணல் :யோகன் ஐயா, புன்னைச்சோலை காளி கோயில் பூசாரி). இக்கதை மரபில் இருந்து சற்று மாறுபட்டு வேதியன் ஒருவன் தன் நாட்டை சலவைத் தொழிலாளர் ஆள்வதா எனக் கருதி மந்திர சக்தியால் பேய், காளி உள்ளிட்ட துக்ஷ்ட சக்திகளை ஏவியதாகவும் அதனை எதிர்கொள்ள முடியாமல் தந்திரமாக சலவைத் தொழிலாளியின் உதவியுடன் நீலாசோதையன் அவனைக் கொன்றதாகவும்  கூறப்படுகின்றது (கனகரத்தினம்,இரா. வை., 2016). அதேவேளை மந்திர சக்தியின் மூலவரான (குரு) மாகாமுனி பரசுராமர் நீலாசோதையனிடம் இத் துக்ஷ்ட சக்திகளுக்கு அவற்றைக் கட்டுப்படுத்த உரிய அவிர்ப்பாகம் வழங்குமாறு கூறினார் எனவும் அதன் வழி நின்றே இன்றும் ‘நோர்ப்பெறிதல்’ சடங்கு எனும் சடங்கு நிகழ்த்தப்படுதலையும் அறியமுடிகிறது.

நீலாசோதையன் வழிபாடு இலங்கைக்கே உரிய தெய்வ வழிபாடாகும். நீலாசோதையன் காவியம் (ஏறத்தாழ 65 பாடல்கள்) இத்தெய்வம் பற்றி விரிவுற உரைக்கிறது. வீரபத்திர காவியம், பெரியதம்பிரான் காவியம், வண்ணார் பத்ததி, கட்டாடிமார் பத்ததி, கோணேசர் கல்வெட்டு முதலியனவும் நீலாசோதையன் பற்றி உரைக்கின்றன. ஏழாலை பெரியதம்பிரான் கோயிலில் பொங்கல் அன்று நிகழும் கிரியாமுறையின் போது பாடும் பாடல்கள் 200 வருடங்களுக்கு மேலான ஏடொன்றில் உண்டு. அதில் பிள்ளையார் துதி, சுப்பிரமணியர் துதி, தேவி துதி என்பவற்றுக்கு அடுத்ததாக நீலாசோதையன் துதி காணப்படுகின்றது. அதில்,

“தாருலகில் நீலவண்ண ணாகத்  தோன்றித்
தவமுனிவர் சாபமது தீர வந்து
பேருலகில் சிவன் தன்னைப் போற்றி செய்து
பெரிய தெய்வமென்பதொரு பேரினாலே
சீருலவு கொன்றை யந்தர் சிறந்த நாதன்
சிவவரு வில்லா வளமை செப்புங்கோயில்
பாரலகில் திருநீலா சோதையன் தான்
பரிந்துயில் கொல்பவர் வினைகள் தீர்ப்பாம்”

எனவுள்ளது. மேலும் பலிமுறைப் பாடலிலே “நீலா சோதை யனையும் பவள நாடு திறை கொண்ட தம்பிரானே” எனவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

நீலாசோதையன் அமைவிடங்கள்

மட்டக்களப்பு, அம்பாறை, யாழ்ப்பாணம் உள்ளிட்ட மாவட்டங்களில் பெரியதம்பிரான் ஆலயங்களில் நீலாசோதையன் பரிவாரத் தெய்வமாக, சடங்கில் மட்டும் உருவகிக்கப்படும் தெய்வமாக, பெரியதம்பிரானாக அமைந்திருக்கின்றார். மட்டக்களப்பு மாவட்டத்தில் புன்னைச்சோலை போன்ற இடங்களில் அமைந்துள்ள காளி கோயில்களில் நீலாசோதையனுக்குத் தனியிடமுண்டு. அங்கு நிரந்தரக் கட்டடமுமுண்டு. சில கோயில்களில் சடங்கு காலங்களில் தற்காலிகப் பந்தலமைத்து வழிபட்ட பின், சடங்கு முடிந்த பின் அப்பந்தலை அகற்றி விடுவர். பல ஆலயங்களில் சூலமும், சில ஆலயங்களில் உருவங்கள் அற்றும் இருக்கின்றன. நீலாசோதையனுக்கு உருவம் இல்லை. கல், சூலம் என்பவற்றால் குறி வழிபாடு நிகழ்த்தப்படுகின்றது. பெரும்பாலும் திறந்த மண்டபத்தில் மந்திரத்தால் உருவகிக்கப்படும் தெய்வமாகவே உள்ளது. விதிவிலக்காக கோட்டைமுனை ஆலயத்தில் பெரியதம்பிரானுக்கும் நீலாசோதையனுக்கும் உருவங்கள் அமைக்கப்பட்டுள்ளன என இரா.வை. கனகரெத்தினம் குறிப்பிடுகிறார். மட்டக்களப்பு – புன்னச்சோலையில் நீலாசோதையனுக்கு சிறு கோவிலுண்டு. இதில் வேல் வைக்கப்பட்டுள்ளது.

Image-6-1024x436.jpg

Image-2-1-5-1024x477.jpg

“தக்கனது யாகத்தில் அவதரித்து அதிரமாமலையில் சோழ குலம்தனில்
பூமிதனில் வந்து வரு பெரியதம்பிரானும் நீலா சோதையனும் ஒன்றாய்
இருபேரும் பொய்யாமலே வளர்ந்து காளியர் குலம் தனில் மெய்யான
தெய்வமாய் மானிலத்தோர் அக்கரைப்பற்று பதிதனில் ஆலமர நிழல் தனில்
கோயில் கொண்டமர்ந்தாய் யாகேஸ்வர பெரிய தெய்வமே போற்றி போற்றி”


என்னும் பாடல் அக்கரைப்பற்றில் உள்ள நீலாசோதையன் பெரியதம்பிரான் கோவில் பற்றிக் குறிப்பிடுகிறது.

யாழ்ப்பாணத்தில் ஏழாலையில் சாடியடி, நீலாசோதையன் கோயில், பெரியதம்பிரான் கோயில் என்பன தனித்தனியேயுள்ளன. இருபாலையில் உள்ள பெரியதம்பிரான் கோயிலில் மூலக் கோயிலுக்கு எதிரில் நீலாசோதையனுக்கு ஆலமரத்தடியில் நிரந்தரக் கட்டடமுண்டு. நீலாசோதையனுக்கு கைதடி பெரியதம்பிரான் கோயிலில் யாககுண்டத்துக்கு முன்பே ஆகமக் கோயிலில் தம்ப மண்டபம் இருக்கக்கூடிய இடத்தில் பெரிய சூலமுண்டு. அதனை நீலாசோதையன் என்கின்றனர். இது மூலாதார கணபதிக்குச் சமமான அந்தஸ்து எனப்படுகிறது. இத்தெய்வத்தை நீலாசோதைய வைரவர் எனவும் குறிப்பிடுகின்றனர்.

Image-3-7.jpg

Image-7-1024x823.jpg

சடங்கு முறைகள்

பொதுவாக நீலாசோதையன் இருக்கும் பெரியதம்பிரான் ஆலயங்களில் புதன், சனிக்கிழமைகளில் விளக்கு வைக்கப்பட்டு வருகின்றன. ஆயினும் இன்று வசதிக்கேற்ப ஏனைய நாட்களிலும் விளக்கு வைக்கப்படுகின்றது. இக்கோயிலில் பழைய ஐதீகக் கதையின் நம்பிக்கையின் படி சலவைத் தொழிலாளர்களாலேயே பூசை செய்யப்படுகிறது. தைப்பொங்கல், சித்திரைப் பொங்கல் என்பவற்றோடு பங்குனி, புரட்டாதி மாதங்களில் வளர்ந்துப் பொங்கலும் நடைபெறுகின்றது.

“ஆலயத்து மணிமுற்றை தடர்ந்து வளர்த்தோங்கும்
அருகு நிறை பூவரசின் ஒரு மலர் வேண்டி
பாலனழும் போது தாயார் பறித்தீய பறந்த
கரம் வழங்கதை பான்மை தரு செய்து
சீதமொடு புரட்டாதி தோறும் அதில்
செம்மையோடு குளிர்த்தியுடன்
பூசனை புரியும் தேவர்களும் ஏற்ற வயல்
பதிலாழும் எம்பிரான் பெரிய தம்பிரானே”

(தகவல்: உக்ஷ்திரா தினேக்ஷ் சங்கர், தெல்லிப்பழை)

பெரியதம்பிரானுக்கு வழங்கும் அதே சடங்கு, பூசை நீலாசோதையனுக்கும் நிகழ்த்தப்படுகின்றது. ஏழாலை பெரியதம்பிரான் ஆலயத்தில் சித்திரைப் பொங்கல் சடங்கில் பூசாரி வாய் கட்டிப் பூசை செய்கின்றார். சித்திரை வருடப் பிறப்பின் பின்னான புதன்கிழமை ஆரம்பமாகி அடுத்துவரும் புதன் இரவு பெரும் பொங்கல் இடம்பெறும். மாதம்தோறும் மடை வைத்தல் ஆவணி மாதக் கடைசிப் புதன் நடைபெறும். பெரிய மடையுடன் முடிவுறும். பொங்கலுக்கு இரு நாட்களுக்கு முன்பு வாழைக்குலை பழுக்கப் போடுதல் சடங்கு நடைபெறும். சித்திரை மாத முதல் புதன்கிழமை கமுகு மரம் நடப்பட்டு கொடியேற்றமும் நடைபெறும். இவ்வாலயத்தின் ஆரம்பப் பூசை சாடியடியில் நடைபெறும். ஆலயத்தில் இருந்து 250 மீட்டர் தூர அளவில் மருத, அரச மரங்கள் சூழ சிறிய மண்டபம் உண்டு. கன்னிமார், நாச்சிமார் வழிபாடு இங்கு நடைபெறும்.

நீலாசோதையன் ஆலய முன்றிலில், நீலாசோதையன் துதி படிக்கப்பட்டு சிறு பொங்கல் நடைபெறும். முதல் நாள் மற்றவர் அறியா வண்ணம் நேர்ந்து கட்டிய இழையினை அவிழ்த்து அப்பொருட்களைப் பொங்கல் பண்டங்களாகக் கொண்டு, பொங்கிப் படைத்து அதன் ஒரு பகுதியை பூசாரியும், உதவியாட்களும், வளர்ந்துக்குரியவர்களும் உணவாக உட்கொள்வர். இது கட்டாயமானது; உரிமை சார்ந்தது. இதன் பின்பே பெரியதம்பிரானுக்கு மடைப்பண்டம் எடுத்தல் நடைபெறும். மடைப்பண்டங்கள் யாவற்றையும் நீலாசோதையன் ஆலயத்தின் முன்றலில் வைத்து பூஜை செய்து வழங்கிய பின் பெரியதம்பிரான் ஆலயத்திற்கு கொண்டு செல்வர். அங்கு உரிய சடங்குகள் நடைபெற்றபின் மடை பரவப்படும். பல்வேறு மடைகள் எல்லாத் தெய்வங்களுக்கும்  வைக்கப்படும். பூசை நடைபெற்ற பின் மடையேற்றலுக்கான பாடல் நடைபெறும். பத்ததியின் ‘கெசபலி சாந்தி’ படிக்கும்போது படிமத்தானாகிய பூசாரி கலையாடுவார். மடை மீது தண்ணீர் தெளிப்பார். பின்னர் பலிக்குரிய குங்குமம் கலந்த அல்லது மஞ்சள் கலந்த அரிசியை எடுத்து எட்டுத்திக்கும் கைமாறி வீசுவார். கொழுத்தப்பட்ட விளக்குத்திரிகளை அவ்வாறே கைமாறி வீசுவார். இது மட்டக்களப்பில் நிகழும் ‘நோர்ப்பெறிதலுக்கு’ (நோர்ப்புச் சடங்கு) சமமானதாகும். இதுவே ஆகமக் கோவில்களில் எட்டுத்திக்குப் பலியாக வளர்ந்திருக்கலாம்.

இதன்பின் கண்ணூறு கழித்தல், வழிவெட்டல், கொடியிறக்கம் முதலிய சடங்குகள் தம்பிரான் கோயிலில் நடைபெறும். கொடி இறக்கிய பின் ஞாயிறு பொங்கல் நடைபெறும். இது நீலாசோதையன் ஆலய முன்றிலில் நடைபெறும். பொங்கல் வேள்வியில் தாம் அறிந்தும் அறியாமலும் செய்த தவறுகளை மன்னித்து சகல நன்மைகளும் தருமாறு நீலாசோதையனை வேண்டுவர்.

“காய்ந்தவர் முகத்தினில் கல்லெறியாய்
சிரித்தார் முகத்தினில் சீதேவியாய்
பகைத்தார் முகத்தினில் பதிகமாய்
அவ்வடியார் கையைப் பிடித்துக் கரையேற்றிக்
கொள்ள வேணும் நீலாசோதையனே நல்லதம்பிரானே”

(பூசாரி, சின்னத்தம்பி பஞ்சலிங்கம் {சோமுஐயா}) 

எனப் பலவாறு வேண்டி வழிபடலுடன் பொங்கல் நிறைவுறும்.

இருபாலை கோட்டயபுரத்து பெரியதம்பிரான் ஆலயப் பூசாரி கந்தையா சின்னராசாவும் கைதடி பூந்தோட்டம் பெரியதம்பிரான் ஆலயத் தலைவர் மதிகாந்தனும் நீலாசோதையனை கிருக்ஷ்ணராகவே தாம் கருதுவதாகக் கூறுவதும், ஏழாலை பெரியதம்பிரான் ஏடு ‘நீலவண்ணத்தான்’ என நீலாசோதையனை வர்ணிப்பதும் சுற்றியுரைக்கத்தக்கது.

Image-5-2.jpg

பெரியதம்பிரான் ஆலயங்களில் நீலாசோதையன் தவிர காளி, அம்மன், கன்னிமார், நாச்சிமார், காத்தவராயன், முனி, மாடன், கிங்கிலியர், நாகதம்பிரான், வீரபத்திரர், வைரவர், விநாயகர், முருக தெய்வங்களும் பரிவார மூர்த்திகளாக அமைந்துள்ளனர்.

புன்னைச்சோலை காளி கோயிலில் சடங்குகளின் முடிவில் ஆயுதங்களை நீலாசோதையனிடம் ஒப்படைத்தல் சடங்கு நடைபெறுதல் நீலாசோதையன்  வீரனாக விளங்குகிறதை தெளிவுபடுத்துகின்றது. மட்டக்களப்பில் நீலாசோதையன் உள்ள ஆலயங்களில் ‘நோர்ப்புச் சடங்கு’ நடைபெறுகின்றது. தெய்வத்தன்மை இல்லாத தீய சக்திகளுக்காக பால், பழம், சோறு, கறி போன்றவற்றை (சில இடங்களில் மடைப்பண்டத்தில் ஒரு பகுதியை) ஆலயத்தைச் சுற்றி எறிவர். புன்னைச்சோலை காளி கோயிலில் இச் சடங்கு இன்றும் நடைபெறுகிறது. ஏறாவூர் காளிகோயில் ‘நோர்ப்புக் கட்டுதல்’ நடைபெறுகிறது. அதனை உண்ணக் கொடுப்பர்; எறிவதில்லை.

முடிவுரை

நீலாசோதையன் வழிபாடு பெரியதம்பிரான் வழிபாட்டுடன் பிரிப்பின்றிக் கலந்துவிட்டது. இது இரு சாதிகளின் கலப்புருப் பண்பாட்டின் வழியும் அமைந்திருக்கலாம். அன்றி காவியம், கோணேசர் கல்வெட்டு வழி கஜபாகு – குளக்கோட்ட மன்னன் அவனது மந்திரி – படைத்தளபதி நீலாசோதையன் பற்றிய தொன்மம் வழி எழுந்த வீர – முன்னோர் வழிபாடாகவும் இருக்கலாம். இக்கதையில் வரலாறும், நம்பிக்கையும், புனைவும் கலந்து நிற்பதை அவதானிக்க முடிகிறது. எது எவ்வாறாயினும் சலவைத் தொழிலாளர்களின் குலதெய்வ வழிபாட்டுடன் இணைந்த துணைத் தெய்வமாகவே இன்று நீலாசோதையன் அடையாளப்படுத்தப்படுகின்றார். பெரியதம்பிரான், நீலாசோதையன் ஆகியோரை விக்ஷ்ணுவின் அம்சங்களாக பூசாரிகள் கூறியிருப்பது முக்கியமானது. இது ஈழத்து வைணவ மரபு பற்றிய ஆய்வுக்கான கதவை அகலத் திறக்கிறது. ‘நீலாசோதையன் பெரியதம்பிரான்’ எனும் மறவன்புலவு ஆலயம் இரண்டும் ஒன்றான கதையின், மேலாண்மையின் கதையாடலுக்கான சாட்சியாகிறது. அவ்வாலயத்தைச் சேர்ந்த ஆனந்தரஞ்சன், 1990 களுக்கு முன் தங்களது பட்டி மாடுகளுக்கு முதுகில் ‘நீ’ (நீலாசோதையன்) எனும் எழுத்தும் தொடையில் பெரிய வட்டமும் (குளம்) அதனுள் சிறு நீள் சதுரமும் (சலவைக்கல்) பொறிக்கப்பட்டு இருந்ததாகக் கூறினார். இது சாதியம், தெய்வம், கால்நடை வளர்ப்பியல், விவசாயம் என்பன பற்றிய விடயங்களை ஆவணப்படுத்துகின்றது. அரசனும் நீலாசோதையனும் மரக்கலமற்று நின்றமை அக்கால அரசுகளின் நிலை, படை பலம், அரசு – மக்கள் தொடர்பு பற்றிய பல புதிய உரையாடல்களை ஆரம்பிக்க உதவுகின்றன. நீலாசோதையன் இலங்கையின் வரலாறு மற்றும் சமூகவியல் சார்ந்த பல்வேறு பரிணாமங்களை உடைய உரையாடல்களுக்கான திறவுகோல் ‘தெய்வமாக’ அமைந்துள்ளது. 

https://www.ezhunaonline.com/a-sub-deity-called-nilasothaiyan/

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முனிகளின் இராச்சியம்

தி. செல்வமனோகரன்

அறிமுகம்

மனிதர் சமூக விலங்காக அடையாளப்படுத்தப்படுகின்றனர். இயற்கையுடனிணைந்த வாழ்வில் தன் தேவைகளையும் ஆசைகளையும் நிறைவேற்றுவதற்கான எல்லா முயற்சிகளையும் செய்து கொண்டேயிருப்பது மனிதரியல்பாகும். இயற்கையை வெல்ல முடியாத தருணங்களில் எல்லாம் மனிதர் ‘இயல்பிறந்த’ ஆற்றலாக அதனைக் கருதி அச்சத்துடன் வழிபட, விசுவசிக்க, இறைஞ்சி நிற்கத் தலைப்பட்டனர். தான் நினைத்தது சித்திக்கச் சித்திக்க, மேலும் விசுவசிக்கவும் இறைஞ்சவும் நம்பிக்கை கொள்ளவும், தன் பகுத்தறிவைப் புறந்தள்ளி, அளவற்ற பக்தி கொள்ளவும் தலைப்பட்டனர். அது வயது, குலம், பால் என எல்லாப் பாகுபாடுகளும் கடந்த செயல்நிலையாகப் பரிணமித்தது.

குல தெய்வங்களும், குலத்துக்கப்பால் யாவரையும் இரட்சிக்கும் தெய்வங்களும் உருவாயின. ஒவ்வொரு மனிதரும் தனது இருப்புப் பற்றிக் கொண்டிருந்த அச்சமும் வாழ்தலுக்கான உணவுத்தேடலும் ஏனையனவும், பாதுகாப்புச் சார்ந்த உணர்வுந்துதலை மையப்படுத்தின. இனக் குழுத்தலைவர், உயிரைக் காத்த வீரர் என தன்னை, தன்னைச் சூழ உள்ளவரைக் காத்தவர் மரியாதைக்குரியோராகவும்; பிறருக்காகத் தன்னுயிர் நீத்தவர் வழிபடு தெய்வமாகவும் காவல் தெய்வமாகவும் ஆயினர்.

அத் தெய்வ உருவாக்கமும், வழிபடும் சடங்கும், கதைகளும், பாடல்களும், கூத்துகளும் சமூக மானிடவியலை புரிந்து கொள்ளவும் எழுதவும் பெரிதும் துணை நிற்கின்றன. பண்பாட்டசைவியக்கத்தை இனவரைவியலை அறியவும் எழுதவும் தூண்டின. இறந்தவர்கள் நன்மை செய்பவர், தீமை செய்பவர், நன்மையும் தீமையும் செய்பவர் என வகைப்படுத்தப்பட்டுக் கருதப்படுவதும் உண்டு. அவற்றுள் பேயாக அச்சத்துடனும் தெய்வமாக பக்தியுடனும் வணங்கப்படுகின்ற தெய்வங்களுள் ஒன்றாக முனி – முனீஸ்வரர் விளங்குகின்றார்.

முனி – முனீஸ்வரர் – முனியப்பர்

ஈழத்துப் புலத்தில் தமிழர் வாழ்கின்ற கிராமங்களில் மட்டுமின்றி நகரங்களிலும் இன்றுவரை வணங்கப்படுகின்ற நாட்டார் தெய்வங்களுள் முனீஸ்வரருக்குத் தனி இடம் உண்டு. முனீஸ்வரரின் வரலாற்றை எழுத முற்படுகையில் சிலர் ‘ரிக்’ வேதத்தில் ‘முனி’ என்னும் சொல் உள்ளது என்றும் அதற்கு ‘தெய்வ ஆவேசம் படைத்தவர்’ என்பது பொருள் என்றும் குறிப்பிடுவர். உபநிடதங்கள், பகவத்கீதை முதலான நூல்களில் “உலக வாழ்வைத் துறந்து மௌனத்தைக் கைக்கொண்டு ஞானவழியாகிய பரமதியானத்துள் மூழ்கி விருப்பு, வெறுப்புகள் யாவும் நீங்கியவர்கள்” என முனி பற்றிக் குறிப்பிடுவதாகவும் கூறப்படுகின்றது.

முனி எனும் சொல்லுக்கு கழகத் தமிழகராதி; கோபம், இருடி, புத்தன், வில், யானைக்கன்று, அகத்தி, தவத்தோன் எனப் பலவாறு பொருள் சுட்டுகிறது. இதனை அடிப்படையாகக் கொண்டே முனிவர் எனும் சொல் பிறந்தது.

முனி என்பது ஒருவரல்ல; அது பல தோற்றங்களை உடைய ஏதோ ஒன்றாகவோ அல்லது பலவாகவோ உள்ளது. பல்வேறு காரணங்களால், பெயரில் முன்னடை அல்லது பின்னடைச் சொற்களை உடைய பல முனிகள் காணப்படுகின்றன. ஆரம்ப காலத்தில் முனி பேயாகவே கருதப்பட்டிருக்க வேண்டும். முனி உலாவுகின்ற நேரம் நடுச்சாமப் பொழுது. அது விரும்பி உறைகின்ற ஆல், புளி மரங்களுக்குக் கிட்டவோ வெளிகளிலோ நடுச்சாமப் பொழுதை அண்மித்துச் செல்பவர் முனியிடம் அடி வாங்குவார். முனியை கண்டு ஏங்கி மரணத்தைத் தழுவிய கதைகளும் அநேகம் சொல்லப்படுகிறது. கந்த சக்ஷ்டி கவசத்தில்:

“அல்லற் படுத்தும் அடங்கா முனியும்

பிள்ளைகள் தின்னும் புழக்கடை முனியும்

கொள்ளிவாய்ப் பேய்களும் குறளைப் பேய்களும்

பெண்களைத் தொடரும் பிரம்ம ராட்சதரும்

அடியனைக் கண்டால் அலறிக லங்கிட”

என வரும் வரிகள் இதனை உறுதிப்படுத்துகின்றன.         

  1. யாராலும் கட்டுப்படுத்த முடியாதது முனி

  2. அது துன்பத்தைத் தருவது

  3. புழங்கடை முனி பிள்ளைகளைத் தின்னும்

  4. கொள்ளிவாய்ப் பேய்கள் குறளைப் பேய்கள்

  5. பெண்களைத் தொடரும் பிரம்ம ராட்சதர்

எனும் கருத்துகளை இவ்வரிகள் உணர்த்தி நிற்கின்றன. இவ்வளவு விடயங்களும் யாழ்ப்பாணத்து மக்களின் நம்பிக்கைகளாக இருந்து வந்துள்ளன. ‘முனி அடிக்கும், பிடிக்கும்’ எனும் தொடர் இன்று வரை வழக்கில் உள்ளது. பிள்ளைகள் குழப்படி செய்தால் பொக்காண்டியிடம் – பொக்காண்டிப்பேயிடம் – முனியிடம் பிடித்துக் கொடுப்பேன் என மிரட்டும் வழக்கம் உள்ளது. தீய சக்திகள் புழக்கடையில் உறையும் என்ற நம்பிக்கை இன்றும் நிலவுகிறது. வயல்வெளிகளில், வெறும் வெளிகளில் தெரிகின்ற ஒளிப் பொருட்கள் கொள்ளிவாய்ப் பேய்கள் ஆகவும் பந்தத்துடன் உலாவும் முனிகள் ஆகவும் நம்பப்பட்டு வந்துள்ளன. இன்று இது ‘ஏதேன் வாயு’ என அறிவியலில் கூறுகின்றது. பொழுதுபட்டதன் பின்பு, அந்தியின் பின் இருட்டில் பெண்கள், சிறுவர்கள் வெளியில் செல்லக்கூடாது என்றும் அவர்களை முனி பிடிக்கும் என்ற நம்பிக்கையும் காணப்பட்டது. யுத்த காலம் இந்த நம்பிக்கைகளைக் குறைத்துவிட்டது. யாழ்ப்பாணத்தவர் பலர் கந்தசக்ஷ்டி விரதம் பிடிக்க இந் நம்பிக்கைகளும் காரணமாக இருந்திருக்கலாம்.

பஞ்சமுனிகளாக வாழ்முனி, செம்முனி, கருமுனி, முத்துமுனி, வேதமுனி என்பன கூறப்படுகின்றன. இவை தவிர பதினெண்முனிகள் பற்றியும் கூறப்படுகின்றன. ஜடாமுனி, இலாடமுனி, நாதமுனி, பூதமுனி, சக்திமுனி, மாயமுனி, மந்திரமுனி, பால்முனி, கருமுனி, சுடலை முனி, நெல்லாண்டி முனி, வாள் முனி, சின்னமுத்து முனி உள்ளிட்டவை அவற்றுட் சில.     

இலங்கையில் மலையகப் பகுதியில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களாக குடியேறிய மக்கள் தம் வாழ்வியல் சூழலோடு இணைத்து பல முனிகளை தனித்துவமாக வழிபட்டு வருகின்றனர். ரோதை முனி, தவறணை முனி, கம்பி முனி, கவ்வாத்து முனி என்பன சில உதாரணங்களாகும் (ஜெயசீலன்,எம்.,2020), (மலையகத் தமிழரின் கிராமிய வழிபாடுகள் நாட்டார் வழக்காறுகள், வ. இன்பமோகன், (பதி) குமரன் புத்தக இல்லம், கொழும்பு). தமிழகத்தைப் போலவே இங்கும் முனி எனும் சொல்லை அடிப்படையாகக் கொண்ட முனியாண்டி, முனீஸ்வரர், முனியப்பு, முனியம்மா, முனுசாமி போன்ற பெயர்கள் வழக்கில் உள்ளன.

முனியைப் பேயாகக் கண்டு பயந்தோடிய தன்மையை நீங்கி முனியப்பராக, முனீஸ்வரராக – தெய்வமாக வழிபடும் மரபு பிற்காலத்தில் உருவாயிற்று. ஆயினும் அச்சத்தை விளைவிக்கின்ற ஆவேசம் மிகுந்த வீரம் மிக்க காவல் தெய்வமாக அவர் கருதப்படுகிறார். பயந்து ஓடுதல் பக்தியாக, வழிபாடாக, மடைபரவுவதாக மாறிற்று. கேட்பது தரும் கடவுள் எனும் நம்பிக்கையுருவாயிற்று. கொள்ளியைக் கையிலேந்தி பன்றி, யானை போன்ற மிருகங்களிடமிருந்தும் பிறமனிதர்களிடமிருந்தும் வயல்களைக் காக்கும் தெய்வம் என்ற நம்பிக்கை நிலைபெறலாயிற்று. தனிவழியே போகும் மனிதரைக் காக்கும் தெய்வமாக, இடர் களைந்து மனதில் நம்பிக்கை தரும் தெய்வமாக முனி கொண்டாடப்படும் நிலையை இன்று அவதானிக்க முடிகிறது. வவுனியா மூலாய்மடு, பேயாடி கூழாங்குள முனியப்பர் மீது த. மனோகரன் எழுதிய பாடலில்:

“பெருவீதி மருங்கிருந்து வழிகாட்டும் ஐயா

போகும் வழி சீரமைந்து விட வேண்டும் நீயே

காவலாய் இருந்தெம்மைக் காத்தருள வேண்டும்

பேயாடிக் கூழாங்குளம் உறையும் முனியப்பரே காவல்”

எனப் பாடியுள்ளமையும் பயமின்றிப் பயணிக்க, மனவுறுதி கொள்ள, நல்வழி காட்ட வேண்டும் என வேண்டி நிற்பதும் இம்மாற்றத்தை எடுத்துக்காட்டுகிறது.

முனிகள் பற்றிய கதைகள்

  • தக்கன் யாகத்தினை அழிக்க சிவன் தனது உக்கிர வடிவமாக வீரபத்திரரை உருவாக்கினார். வீரபத்திரர் யாகத்தையும், அதில் பங்கு பற்றியவர்களையும் மிகுந்த கோபத்தோடு தாக்கியளித்தார். அதேவேளை சிவபெருமான் தன்னிலிருந்து தன்னம்சமாக முனீஸ்வரரை உருவாக்கினார். அவர் காவல் தெய்வமாக நல்லவரைக் காத்தார். அவர் காலந்தோறும் பல்வேறு அவதாரங்களை எடுத்து வருகின்றார். இவரிலிருந்தே ஏழு முனிகள் தோன்றினர்.

  • சிவனும் உமையும் உடனிருந்த காலத்தில் உமையை விடுத்து சிவனை மட்டுமே பிருங்கிமுனிவர் வழிபட்டார். இதனால் கோபமுற்ற உமையம்மை சிவனில் பாதியாகக் கடுந்தவம் செய்ய முற்பட்டார். வாழைத்தோட்டம் அமைத்து சிவலிங்கத்தை அதில் ஸ்தாபித்து, அபிக்ஷேகம் செய்ய முனைந்த போது நீர் இருக்கவில்லை. விநாயகரையும் முருகனையும் அழைத்து நீரெடுத்து வரப்பணித்தார். மலையில் தவம் செய்த முனிவரின் கமண்டலத்தைத் தட்டி அதிலிருந்து கமண்டலவாற்றை விநாயகர் உருவாக்க, முருகனோ மலையில் வேலூன்றி சேயாற்றை உருவாக்கினார். நீர் வரக்காணாத உமையம்மை நிலத்தில் பிரம்பாலடிக்க பிரம்பகவாறு தோன்றிற்று. வெப்பத்தால் சிவந்த அம்மை நீர் வரத்தால் பச்சை நிறத்தினலாயினாள். அன்று தொட்டு பச்சையம்மன் ஆனாள். சிவலிங்கத்துக்கு அபிக்ஷேகம் செய்து விரதமிருந்த காலத்தில் அரக்கர்கள் பலர் அத் தவத்தை குழப்ப முற்பட்டனர். அப்போது சிவனிலிருந்து பஞ்சமுனிகள் தோன்றி பச்சையம்மனுக்குக் காவலாயிருந்தனர். இன்றும் அம்மன் கோயிலில் முனிக்கு இடமுண்டு.

  • தேவர்களையும் மனிதர்களையும் துன்புறுத்தி வந்த அந்தகாசுரன் எனும் அசுரனை அழித்துத் தம்மைக்காக்கும் படி வேண்டிய அடியார்களைக் காப்பதற்கு முற்பட்ட பராசக்தித் தாயானவள் ‘காத்தாயி’ எனும் பெயரில் பூமியில் அவதரித்ததாகவும் அவள் அந்தகாசுரனை அழிக்க ஏழு முனிகளைப் படைத்தாள் என்றும் அவர்கள் அசுரனை அழித்துக் கலியுகத்தில் மக்களைக் காக்க அவதரித்தனர் என்றும் கூறப்படுகின்றது.

  • பிரம தேவரின் மானச புத்திரர்களான சனகர், சந்தனர், சனாதனர், சந்தனகுமாரர் என்ற நான்கு முனிவர்கள் சிவபெருமானிடம் ஞானம் அருளுமாறு வேண்ட அவர்; குருவாக தென்திசை நோக்கி அமர்ந்து ஞானத்தைப் போதித்தார். சிவபெருமானின் ஞான வடிவம் தட்சிணாமூர்த்தி. முனிவர்களுக்கெல்லாம் ஈஸ்வரராக இருந்து ஞானத்தைத் போதித்ததால் அவர் முனீஸ்வரர் என்று அழைக்கப்பட்டதாகக் கூறப்படுகின்றது.

ஆக முனி ‘சிவனின் அம்சம்’ எனும் கருத்து வளர்த்தெடுக்கப்பட்டு வந்திருக்கிறது. ஆயினும் முனீஸ்வரன் சிவனின் அம்சம் என்பது போல சிம்ம முனி, நரசிம்ம (திருமால்) அம்சம் எனவும், நாதமுனி நாரதர் அம்சம் எனவும், வேதமுனி பிரம்மாவின் அம்சம் எனவும், ஏனைய முனிகள் ஏனைய தெய்வங்கள், தேவர்கள் அம்சம் எனவும் சொல்லும் வழக்கமும் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது. பேயாக, சிறு தெய்வமாக இருந்த முனிக்கு முனீஸ்வரன் காயத்ரி மந்திரம், பூஜா மந்திரம் என்பனவும் இயற்றப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்க விடயமாகும்.

‘மம்மல்’ பொழுதுகளில், உச்சிப் பொழுதுகளில், சாமத்தில் தனித்துச் செல்லும் பெண்களைப் பிடித்து தான் விரும்பியதை அவர்களிடம் பெறுகின்ற பேயாகவும் அவர்களிடம் இருந்து விலகிச் செல்ல முட்டை, கோழி, ஆடு கேட்பவராகவும் இருந்தவர் முனி. சுருட்டுப் பற்றிய படி சாமங்களில் உலாவருபவர். அவரை நேரே காண்பவர் மீது தொற்றுபவராக அல்லது பிடித்து துன்பம் தருபவராக அல்லது இவரைக் கண்டவுடன் அதிர்ச்சியில் கண்டவர் இறந்துவிடுமளவுக்குக் கிலியை ஏற்படுத்த வல்லவராக இருந்த முனி, ஈஸ்வரனாரோடு இணைக்கப்பட்டு முனீஸ்வரனாக எல்லைக் காவல் தெய்வமாக, சுடலைக் காவலராக பைரவருக்கு சம அந்தஸ்து உள்ளவராக்கப்பட்டார்.

யாழ்ப்பாணத்திலிருந்து வடமராட்சிக்கு செல்லும்போது வல்லைப் பாலம் தாண்டியவுடன் முனிக்கு ஒரு கோயில் உண்டு. வழிப்பயணம் இடரின்றித் தொடர பயணிகள் அதனை வணங்கிச் செல்வர் (இப்போது அந்த இடத்தை விநாயகரும், சீரடி பாபாவும் ஆக்கிரமித்து வருகின்றனர்). அந்த முனி வல்லைவெளி தாண்டியவுடன் உள்ள புறாப்பொறுக்கி எனுமிடத்தில் உள்ள பெரிய ஆலமரத்தில் வசித்து வந்ததாகவும் அதைத் தறித்ததன் பின் அருகிலிருந்த மருதமரத்தில் உறைவதாகவும் கூறப்படுகிறது. இதுபோல வேறு முனிகளும் வடமராட்சியில் உள்ளன. அவை யாவும் மாதமொரு முறை ஒன்று கூடுவதாகக் கூறப்படுகிறது. புறாப்பொறுக்கியில் உள்ள முனியை, குறித்த நாளில் உயிலங்குன்றடி முனி வந்து சந்தித்து அதனை அழைத்துக்கொண்டு திக்கத்து முனியிடமும், பின்பு முறையே சக்கோட்டைமுனி, பருத்தித்துறை தாமரைக் குளத்தடி முனி என்பவைகளை அழைத்துக் கொண்டு சந்தைப் புளியடி முனியிடமும் வருவார். இவை வரும்போது தத்தம் பரிகலங்களுடன் வரும். சங்கு, சேமக்கலம், எக்காளம், சீழ்க்கை என்பன ஒலிக்கும். எதிரில் யாரேனும் எதிர்பட்டால் பரிகலங்கள் அவர்களை அடித்து விடும். அத்துன்பம் நீங்க மக்கள் நேர்த்திக் கடன் வைத்து நிறைவேற்றுவர் (கணபதிப்பிள்ளை, க. 1962, ஈழத்து வாழ்வும் வளமும், 61 -62).

முனியால் பீடிக்கப்பட்ட ஒருவர் நீர்நிலையை அடைந்தாலோ அல்லது நீர்ப்பொருள் ஒன்றைத் தொட்டாலோ முனி அவரை விட்டு விடும் என்றும், தூக்கத்திலே முனி ஒருவரைப் பீடிப்பின் ஈரச்சாக்கை காலால் மிதித்தவுடன் முனி விலகிச் சென்று விடும் என்றும் நம்பிக்கைகள் காணப்படுகின்றன. சுருட்டை, கொள்ளியை அதாவது நெருப்பை விரும்பும் முனி, நீரில் வெறுப்புக் கொண்டிருப்பதாகக் (கோபிகா, எழுதுமட்டுவாழ்) கருதப்படுகிறது.

மலையகத்தில் தொழில்துறை சார் வழிபாட்டில் முனிகளின் ஆதிக்கம் அதிகமுண்டு (ஜெயசீலன், எம்., 2020,165-173). தேயிலைக் கன்றுகளை நாற்று மேடையிட்டு வளர்க்கும் இடமாகிய தவறணையில் (யாழ்ப்பாண வழக்கில் இச்சொல் கள்ளுக் கொட்டிலைக் குறிக்கும்) பயிரைப் பாதுகாக்க, தொழிலாளிகளைப் பாதுகாக்க தவறணை முனி வழிபடப்படுகின்றார்.

I-6-3.jpg

போக்குவரத்து வளர்ச்சியடையாத பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில், பறிக்கப்பட்ட தேயிலைக் கொழுந்து மூடையாகக் கட்டப்பட்டு கம்பிகளின் வழியே தொழிற்சாலைக்கு அனுப்பப்பட்டது. அக் கம்பிகள் ‘கம்பிமுனி’ எனும் தெய்வமாக, தங்களையும் தம் தொழிலையும் காக்கும் தெய்வமாக வழிபட்டது. தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்களால் வழிபடப்பட்ட தெய்வம் ரோதை முனி எனப்பட்டது. இவருக்கான வழிபாடு நேர்த்தியாக நடைபெறாதுவிடின் ரோதை முனி உயிர்ப் பலியோ, இரத்தப்பலியோ எடுத்து விடுவார் எனும் நம்பிக்கை வலிதானதாகக் காணப்படுகிறது. இதைவிட மோட்டுமுனி (மேட்டுமுனி) போன்ற பல முனி வழிபாடுகள் இடம்பெற்று வந்துள்ளன. துன்பத்திலிருந்து மக்களை காக்கும் தெய்வமாக எல்லா மக்களாலும் வழிபடப்படும் தெய்வமாக முனி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் முனியின் அமைவிடங்கள்

முனிவழிபாடு இலங்கையில் தமிழர் வாழும் எல்லா இடங்களிலும் காணப்படுகிறது. மலையகத் தேயிலைத் தோட்டங்கள், தொழிற்சாலைகளில் தனிவழிபாட்டு இடங்கள் உண்டு. யாழ்ப்பாணத்திலும் முனி ஊர்கள் தோறும் பரிவாரத் தெய்வமாகவோ தனிக் கோயிலுடையதாகவோ இன்று வரை வழிபடப்படுகின்றது. குறிப்பாக குடிமனைகள் இல்லாத வெளிகளில் தனிக்கோயில்கள் காணப்படுகின்றன.

மட்டக்களப்பு, அம்பாறைப் பிரதேசங்களில் தனிக்கோயில்கள் இல்லை. அம்மன் கோயில்களில் பரிவாரத் தெய்வங்களுள் ஒன்றாக உள்ளது. உதாரணமாக களுவாஞ்சிக்குடி முனைத்தீவு ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலயத்தைக் குறிப்பிடலாம். இதே போல பெரும்படை, ஐயனார் கோயில்களிலும் முனிக்கு தனிப் பரிவாரக் கோயிலோ அல்லது படையலிடமோ காணப்படுகிறது. திருகோணமலை, வன்னிப் பிராந்தியங்களில் தனிக்கோயில்கள் உள்ளன.

பெரும்பாலும் நாற்சந்தி, முச்சந்தி, தெருவோரங்கள், ஆளரவமற்ற இடங்கள், ஊர் எல்லைகள், சுடலை போன்ற இடங்களிலேயே முனிக்குத் தனிக்கோயில்கள் இருப்பதை வட இலங்கையில் அவதானிக்க முடிகிறது.

சடங்கு முறைகள்

கிராமிய வழிபாட்டு மரபில் உள்ள முனியின் தனிக் கோயில்களில் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் விளக்கு வைக்கும் வழக்கம் காணப்படுகிறது. பரிவாரமாக இருக்கும் கோயில்களில் பிரதான தெய்வத்துக்கு விளக்கு வைக்கும் நாட்களில் விளக்கு வைக்கப்படுகின்றது. அடியவர்கள் தாம் ஊரை விட்டு வெளியூர் செல்லும்போது, நெடுவழிப் பிரயாணங்களின் போது விளக்கிட்டு வணங்கிச் செல்லும் வழக்கமும் காணப்படுகின்றது. குறித்த கோயிலை ஆதரிப்போரில் ஒருவரே பூசாரியாகவும் திகழ்கின்றார்.

தைப்பொங்கல், சித்திரை வருடப்பிறப்பு, சித்ராப் பௌர்ணமி தினங்களில் சிறப்பு பூசை, மடை பரவுதல், நேர்த்திக் கடன் செலுத்துதல் போன்றன நிகழ்கின்றன. ஐயனார், பெரும்படை மற்றும் அம்மன் கோவில்களில் முனிக்கு தனியான வளுந்துப் பானை வைக்கும் வழக்கம் காணப்படுகின்றது. நீண்ட கால அளவில் ஆடு, கோழி என்பனவற்றை பலியிடுதல் முட்டை, சாராயம், சுருட்டு என்பனவற்றைப் படைத்தல் என்பன முதன்மை பெற்று வந்துள்ளன. இன்னும் சில கோவில்களில் மடையில் சுருட்டு, சாராயம் வைத்தல் நடைபெறுகின்றன. அதேபோல ஆடு, கோழி பலியிடாது நேர்ந்து விடுதலும் உண்டு. உயிர்ப்பலி அருகி வருகின்றது.

I-4-8.jpg

பூநகரி, சாவகச்சேரி போன்ற பிரதேசங்களில் சைவமடை வைக்கும் மரபே காணப்படுகின்றது (தகவல்: ச. மார்க்கண்டு). நாகர்கோவில், வீரபத்திரர் கோயில், விக்ஷ்ணு கோயில் போன்றவற்றில் சைவமடையே வைக்கப்பட்டு வருகிறது. அங்கு சாராயம் வைத்தாலும் பருகும் பழக்கம் இல்லை (தகவல், அப்பையா அருட்சிவபாலன், கொழும்புத்துறை). பொதுவில், கை பார்க்காத கப்பல் வாழைப்பழங்களை படைக்கும் மரபும் இக்கோயில்களில் காணப்படுகின்றது (தகவல், கோடீஸ்வரன் விஜிதரன், முகாமைத்துவ உதவியாளர், யாழ்ப்பாண பல்கலைக்கழகம்). அதேபோல கேரதீவு ஐயனார், தனங்கிளப்பு முனியப்பர் கோவில்களில் காம்பு கிள்ளாத வெற்றிலையும், நாக்கு மூக்குத் தள்ளாத பழங்களும் படைக்கும் மரபு காணப்படுகின்றது. கிராமியக் கோயில்கள் பலவற்றில் பிள்ளையார், மூலவர் போன்றவர்களை அடுத்து முனிக்கு முதன்மையளிப்பதும் மடை வைப்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும். பொதுவில் வட இலங்கையில் காலமாமுனிக்கே அதிக செல்வாக்கு இருப்பதை அவதானிக்க முடிகிறது. ஆயினும் பொதுவில் முனீஸ்வரன் என்றே சொல்லப்படுகிறது. கல், சூலம், கருங்காலிக் கட்டையின் வழி ஆரம்பத்தில் வழிபடப்பட்ட முனி இன்று முனீஸ்வரராக பெரிய மீசையும் வாளும் ஏந்திய உருவத்தோடு குதிரையுடன் கூடியவராய் உருவக் கடவுளாக வழிபடப்படுகின்றார்.

I-2-6.jpg

மட்டக்களப்பில் காளமாமுனியையே முதன்மைப்படுத்துகின்ற அதேவேளை அம்மன் கோயில்களில் வாள் முனிக்கும் தனியான இடமுண்டு.

அரி ஓம் ஐயும் கிலியும் சௌவும் அங்கிசப் பிறை வடிவமும் ஆவென்ற வாயும் ஈ என்ற பல்லும் ஒரு கையில் கமண்டலமும் புலித்தோல் ஆசனமும் வீர மாணிக்க மாலையும் இலங்கிய மணித் தாவடமுமாக வருகின்றார் எங்கள் ஆதி கால மாமுனி அக்கினி மாமுனி அகத்திய மாமுனி குருவே மாதா பிதா….எனச் சடங்குப் பாடலும் காணப்படுகின்றது.

காளமாமுனிக்கு அம்மன் ஆலயங்களில் பரிவாரக் கட்டிடம் உள்ளது (தகவல், பூசாரி கிருபைரத்தினம் சர்வேஸ்வரன், ஆரையம்பதி). முனிக்கு அங்கும் தனிமடை உண்டு. அம்மனுக்குரிய மடையையொத்த மடை, சடங்குகள் என்பன நடைபெறுகின்றன. மந்திரச் சடங்குகளில் காளமாமுனி, வாள்முனி, ஆதிமுனி என்பன முதன்மையாகின்றன. கழிப்புச் சடங்குகளில் காளமாமுனியை ஆட்டி, பின் படையல் படைப்பர். சுடலையில் வைரவருக்கு சமமாக விசேக்ஷமாக முனிக்கும் படையல் வைப்பர். இந்தக் கருத்துகள், மத்திய இந்திய வரலாற்றில் முதன்மை பெற்றிருந்த சைவப் பிரிவுகளில் தாந்திரீக சைவங்களை, குறிப்பாக காளாமுக, கபாலிக சமயங்களை, அவற்றின் சுடலை வாழ்வை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன.

முனி, கோயிற் சடங்கில் கலையாடி வாக்குச் சொல்லும் மரபு இன்றும் காணப்படுகின்றது. யாழ்ப்பாண மரபில் முனி பொதுவாக கலையாடினாலும் சொத்தி முனியின் ஆட்டம் தனித்துவமானது. கருப்பு நிறத்தில் கீழ் ஆடையும் மேலே கருப்புக் கம்பளியும் போர்த்தி கண்ணாடி போட்டு கையில் பொல்லுடன் ஆடுதல் சிறப்பம்சமாகும். கண்ணாடி போடும் வழக்கம் எப்போது வந்தது என்பதை அறிய முடியாது விடினும், அதற்கு நூற்றாண்டுக்கு உட்பட்ட வரலாறே உண்டு என்பது தெளிவு. இந்தக் கம்பளி, கண்ணாடி, பொல் என்பன மடையில் வைக்கப்படுவது வழக்கம். அதேபோல இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் கசையை வைக்கும் வழக்கமும் இருந்திருக்கிறது. முனியாக தெய்வமாடுபவர் தனக்குத் தானே கசையால் அடித்தபடி கலை ஆடுவதும் குறி சொல்வதும் குறிப்பிட்ட பிரதேசங்களில் வழக்கமாக இருந்துள்ளது. இந்தப் பண்புகளோடு சொத்தி முனி ஒரு காலைக் கெந்தியபடி அல்லது குறண்டிக் குறண்டி ஆடுவது வழக்கம். முனி ஆடும்போது, விரல் மொத்தத்தில் உள்ள திரியை எண்ணெய்யில் தோய்த்து பந்தம் போல கொழுத்திக் கொடுக்கப்படும். ஆடுபவர் அதனை வாங்கி வாய்க்குள் வைப்பதாகவும், மீளவும் கொழுத்திக் கொடுக்க மீள வாய்க்குள் வைப்பதாகவும், 18 திரிவரை கொடுக்க வேண்டி இருக்கும் எனவும் கூறப்படுகிறது. நீறு போடுகின்ற வழக்கமும் காணப்பட்டுள்ளது. நீறு இடுவதன் ஊடாகத் தீராத நோய்கள் தீரும் என்ற நம்பிக்கை இன்று வரை காணப்படுகின்றது.

மட்டக்களப்பு பிரதேசத்தில் இவ்வழக்கங்கள் மாறுபடுகின்றன. கலை ஆடுபவர் புலித்தோல் ஆடை, உருத்திராக்கம், யோக தண்டம், கமண்டலம், சூலம் என்பனவற்றை தாங்கியபடியே முனியாக ஆடுவார். குறி சொல்லி நீறிடுவார். இங்கு முனி ஆட்டங்கள் பல வகையாக உள்ளன. வாள்முனி வாளேந்தி ஆடுதல் இதற்கு உதாரணமாகும். சடங்கின் போது பாடப்படும் காவியப் பாடல்களில் ஆதிமுனி, காளமாமுனி, வாள்முனி பற்றிய குறிப்புகள் வருவதையும் காண முடிகின்றது.

I-1-1-4.jpg

முடிவுரை

முனி பேயாக, குலதெய்வமாக, காவல் தெய்வமாக, தொழில் துறை சார் தெய்வமாக இலங்கை வாழ் மக்களிடம் சமய, சமூக, வாழ்வியல் புலத்தில் செல்வாக்குப் பெற்று நிற்கின்றது. பெண்களை, வழிப்போக்கர்களை பிடிப்பதாக – அடிப்பதாக – படையல் கேட்பதாக – படைத்தால் நன்மை செய்வதாக நம்பப்பட்ட முனி, ஈஸ்வரனுடன் இணைக்கப்பட்டு தெய்வமாக்கப்பட்டது. பயிர் பண்டங்களை, ஊரை, நோய் நொடியில் இருந்து மனிதர்களை காக்கும் குலதெய்வமாக, காவல் தெய்வமாக, தொழிலில் ஏற்படும் இடர்களை நீக்கி பாதுகாப்புத் தரும் முனியாக என்றும் வழிபடப்பட்டு வருகின்றது. வழிமறித்து அடிப்பதும், காறித் துப்பினால் விலகுவதும், வணங்கினால் வழித்துணையாய் வருவதுமாக நம்பப்பட்ட முனி, முனீஸ்வரனாக பெரும் தெய்வமாக்கப்பட்டு வருதலை அவதானிக்க முடிகிறது. ஆடு, கோழி பலியிடப்பட்டு வழிபடப்பட்டு வந்த யாழ்ப்பாணக் கோட்டை முனியப்பர் இன்று பெரும் தெய்வமாகி – ஆகமக் கோயிலாக மூன்று கால பூஜை நடைபெறும் தெய்வமாக விளங்குதலும், வடமராட்சி சுப்பர்மடம் முனீஸ்வரன் கோயிலின் மேல்நிலை ஆக்கமும் இதற்குத் தக்க சான்றுகளாகின்றன. கொள்ளி, நெருப்பு, சுருட்டு, திரி வழி நெருப்பை உண்ணும் தெய்வமாக இவர் சித்தரிக்கப்படுவதோடு, நீரினைக் கண்டால் விலகிச் செல்லும் தெய்வமாகச் சுட்டப்படுவதும் சமூக மெய்யியல் ஆய்வுக்குரிய விடயங்கள் ஆகின்றன. தமிழகம், இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் எங்கும் வழிபடப்படும் இத்தெய்வம் தமிழகத்தில் ‘பொடிகாட்’ முனீஸ்வரனாகவும் மலேசியாவில் ‘ஸ்டெதஸ்கோப்’ முனியாகவும் இன்று விளங்குகின்றது. மலையகத்தில் தவறணை முனி, கம்பி முனி, ரோதை முனி என வழிபடப்படுவது துயரம் நிறைந்த மலையக வரலாற்றின் பெருஞ்சான்றாகின்றது. முனி என்பது ஒரு தெய்வமல்ல; அவை பல. இன்றும் முனிகளின் இராச்சியம் தேசமெங்கும் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கின்றது.

I-5-8.jpg


https://www.ezhunaonline.com/kingdom-of-sages/

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பெத்தப்பா என்னும் தெய்வம்

தி. செல்வமனோகரன்

December 13, 2024 | Ezhuna

அறிமுகம்

மனிதர் பேரியற்கை மீது கொண்டிருந்த வியப்பு, அச்சம் மற்றும் மரணம், பிறப்புப் பற்றிய சூக்குமமறியா மனோநிலைகள், துயரம் தந்த வாழ்வு போன்றன இயற்கைக்கதீதமான ஒன்றைப் பற்றிச் சிந்திக்கவும், அதை நம்பவும் வழிபடவும் செய்தது. அச்சந்தர்ப்பத்தில் குறித்த துயரத்தில் இருந்து விடுபடல் நிகழும் போது அதனை மேலும் மேலும் வழிபடச் செய்தது. அரூப இயற்கையை – வெறுவெளியை அல்லது நிலம், நீர், காற்று, தீ என்பவற்றை வழிபடுதல் பூரண பிடிப்பைத் தராத சூழலில் கல், மரம் முதலான இயற்கைப் பொருட்களைக் குறியீடாகப் பயன்படுத்தி தெய்வத்தை உருநிலைப்படுத்தி வழிபடத் தொடங்கினர். அது ஆவி, முன்னோர், உயிரியம், மனா எனப் பன்முகத்தளத்தில் அமைந்திருந்ததை மானிடவியலாளர்கள் அடையாளப்படுத்துகின்றனர்.

பிற்காலத்தில் ஏற்பட்ட நாகரிக வளர்ச்சி பல்வேறு படித்தரங்களை மானுட வாழ்விலும் சமய வாழ்விலும் ஏற்படுத்திற்று. பல்வேறு பெருந்தெய்வங்களும் அரச, அதிகார ஆதரவுடனுமான சமயங்கள், தத்துவங்களும் உருவாக்கம் பெற்றன. ஒன்றுடன் ஒன்று மோதித் தம்மையே மெய்மை என நிரூபணம் செய்ய அரும்பாடுபட்டன. வலியது வாழ மீதி மறைந்தன. மறைந்தவற்றுள் சில மீள வலிமை பெற்று எழுந்து நின்று நிலைத்தன. பெருங்கோயில்கள், கலையடையாளங்கள் என மனித குல வரலாற்றில் அவை தனித்துவமான சமூகப் பெறுமானத்தைப் பெற்றன.

ஆனால் சாதாரண சனங்களின் வாழ்வில் இயற்கையோடு இயைந்த தெய்வ வழிபாடுகளே இன்றும் நின்று நிலவுகின்றன. தங்கள் வாழ்வில் ஏற்பட்ட நல்லவைகளுக்குத் துணை நின்ற தெய்வங்களைத் தாம் கவனியாது – ஆதரியாது விடும் போது தமது வாழ்வில் பல்வேறு துன்பங்கள் ஏற்படுவதாக அவர்கள் நம்புகின்றனர். தமது குறைகளை நீக்கவும், நன்மை நடக்கவும் இத்தெய்வங்களை வழிபடுகின்றனர். இவை நிலம், தொழில், சாதி என்ற பல்வேறு அடித்தளங்களில் இருந்து உருவான தெய்வங்களாகக் காணப்படுகின்றன. அந்த அடிப்படையில் ஈழத்துப் புலத்தில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் இன்றும் நின்று நிலவும் கிராமியத் தெய்வங்களுள் ஒன்றாக ‘பெத்தப்பா’ காணப்படுகின்றது.

“சேர் உங்களுக்குப் பெத்தப்பா வழிபாடு பற்றி ஏதும் தெரியுமா?” என்ற வினாவோடு தனது ஆய்வேடு தொடர்பாக என்னுடன் 2019 இல் உரையாட வந்த யாழ்ப்பாண பல்கலைக்கழக தொல்லியல் துறையைச் சேர்ந்த செல்வி ப. கீதாஞ்சலிக்கு, “ஓம், தென்மராட்சியில் இருக்க வேண்டும்” என்று பதில் கூறினேன். “நான் கிட்டத்தான் இருக்கிறன். ஒரு கோயிலை வச்சுக் கொண்டு என்ன செய்கிறது?” என்று அவர் மீண்டும் வினாவினர். கச்சாயைப் பூர்வீகமாகக் கொண்ட, தற்பொழுது திறந்த பல்கலைக்கழகத்தின் யாழ் பிராந்தியத்திற்குப் பொறுப்பாக இருக்கும் திரு க. கந்தவேளுடன் அவரைத் தொடர்புபடுத்திவிட்டேன். நண்பரும் புவியியல் ஆசிரியருமான திரு மா. மோகனகிருஷ்ணன், புங்குடுதீவில் இவ்வழிபாடு இருப்பதை அறியத் தந்தார். இந்த முன்னறிவுடன் களஆய்வில் ஈடுபட்ட பின்னர் இக்கட்டுரை எழுதப்படுகிறது.

பெத்தப்பா

ஈழத்தின் கடலோடு ஒட்டிய வாழ்வியல் புலம் பல்வேறு வழிபாட்டு முறைகளை எமக்குத் தந்தது. பெத்தப்பா கடலை அண்மித்த யாழ்ப்பாணம், புங்குடுதீவு மற்றும் சாவகச்சேரி, கச்சாய் கடல்நீரேரியை அண்மித்த ஊர்களான பாலாவி, கெற்பேலி போன்ற இடங்களில் நின்று நிலவும் தெய்வமாகக் காணப்படுகின்றார். ‘பெத்தப்பா’ எனும் சொல் அகராதிகளில் இடம்பெறவில்லை. அது பேச்சு வழக்குச் சொல்லாகவே காணப்படுகின்றது.

I-3-13-1024x841.jpg

பெத்தப்பா என்பதை பெற்ற அப்பா என்று பொருள் கொள்ளலாம். சங்க இலக்கியத்தில் பெற்றதாய், வளர்ப்புத்தாய் என்போர் நற்றாய், செவிலித்தாய் என அழைக்கப்பட்டமை போல இது அமைகின்றதெனலாம். பெரியப்பா, சித்தப்பா – குஞ்சியப்பா எனும் வழக்காறுகள் தோன்றிய காலத்தில் பெத்தப்பா என்ற சொல் தோன்றி நிலைத்திருக்கலாம். புங்குடுதீவில், பெத்தப்பா தெய்வம் பெத்தப்பு, பெத்தப்பர் எனக்கூறி வழிபடப்படுகின்றார். தமிழில் “தாயை நல்லம்மா என்றும் பேயைப் பெத்தப்பா என்றும் பேச வேண்டிய காலம்” எனும் பழமொழி ஒன்றுண்டு. இது, பேய் – முன்னோர் வழிபாடாக பெத்தப்பா வழிபாடு உருவாகி இருக்கலாம் எனும் ஊகத்துக்கு இடமளிக்கின்றது. அதேவேளை பெத்தப்பா, பெத்தாச்சி என்பவைகளை தாத்தா, அப்பம்மாவை அல்லது பெரியப்பா, பெரியம்மாவைக் குறிப்பதாகப் பொருள் கொள்வோரும் உளர்.

‘இச்சா’ நாவலில் க்ஷோபசக்தி எழுதிய “அம்பாலை மரக்காலைக்காரர் செய்த ஊழைச் சூனியம், அப்பாவை முடக்கி விசர்க் கோலமாக்கியது. பெத்தப்பா மீது யாரோ மூதேவி அழைப்பை ஏவி விட்டிருந்தனர். பெத்தப்பாவுடன் வீட்டுக்கு வந்த புலுடு என்ற பேய் பெத்தாச்சியின் தூசணத்துக்கு நாணி அகன்றது” எனும் வரிகள் இதனைச் சான்றுபடுத்துகின்றன. ‘மூனா கானா’ தினகரனில் (2013.2.10) எழுதிய ‘குஞ்சார் பெத்தப்பா கதையும் வேறு சில கதைகளும்’ இஸ்லாமிய தமிழ்ச் சமூகத்திடம் இச்சொல் இன்றுவரை பெருவழக்கில் இருப்பதை உறுதி செய்கின்றன.

ஸ்ரீ பெத்தம்மா தாய் கோயில் (Sri Peddamma Thalli Temple) அல்லது பெத்தம்மா தல்லி குடி என்பது தெலுங்கானாவின் ஐதராபாத்தில் ஜுபிளி ஹில்ஸ் பகுதியில் அமைந்துள்ள ஒரு இந்துக் கோயிலாகும். பெத்தா மற்றும் அம்மா என்ற இரண்டு தனித்தனி சொற்களைக் கொண்ட ‘பெத்தம்மா’ என்ற வார்த்தையின் அர்த்தம் ‘பெரிய தாய்’ என்பதாகும். ‘பெத்தம்மா’ என்பதை ‘பெரிய அம்மன்’ என்றும் பொருள் கொள்ளலாம். கிராமியத் தெய்வங்களின் 11 வடிவங்களில் ஒன்றான இது, மிக உயர்ந்ததாகக் கருதப்படுகிறது. தெலுங்கானா மக்களின் காவல் தெய்வம் என்ற சிறப்பைக் கொண்டதாகத் திகழ்கிறார். 200 ஆண்டுகளுக்கு முன்பு, மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்டதாக, இந்தத் துர்க்கை அம்மன் ஆலயம் கருதப்படுகிறது. இந்தக் கோவில் தோன்றியதற்கு பல்வேறு விதமான கதைகள் சொல்லப்படுகின்றன. தேவர்களுக்கும், முனிவர்களுக்கும், மக்களுக்கும் துன்பத்தை விளைவித்து வந்த ஒரு அசுரனுடன் துர்க்கா தேவி போரிட்டாள். அந்த அசுரனை வதம் செய்தபிறகு, அந்தக் களைப்பு நீங்க ஒரு கிணற்றின் நீரை அருந்தி துர்க்கை அம்மன் தாகம் தணித்துக் கொண்டாள். அப்போது அந்த வழியாக ஆடு மேய்த்துக் கொண்டிருந்த ஒருவர் துர்க்கை அம்மனைக் கண்டார். அவர் பார்த்துக் கொண்டிருக்கும்போதே அன்னையின் திருவுருவம் மறைந்தது. தனக்கு தெய்வத்தின் அருட்காட்சி கிடைத்ததை நினைத்து அவர் மனம் மகிழ்ந்தார். அன்னை காட்சி தந்த அந்த இடத்திலே ஒரு சிலை இருப்பதையும் கண்டு அவ்விடத்தில் இந்த பெத்தம்மா ஆலயத்தைக் கட்டினார் என்று இதன் தல வரலாறு கூறப்படுகின்றது. இவ்வாறான தல வரலாறுகளோ கதையாடல்களோ பெத்தப்பா ஆலயங்களுக்கு இன்று இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

I-2-13.jpg

தெலுங்கானாவில் பெத்தப்பா வழிபாடு இல்லை. ஈழத்தில் பெத்தம்மா வழிபாடு இருப்பதாக அறியமுடியவில்லை. ஆயினும் தெலுங்கு தேசத்துடன் மற்றும் தமிழகத்துடனான உறவு வழியே ஆண் தெய்வ வழிபாடாக பெத்தப்பா உருவாகி இருக்க வேண்டும்.

ஈழத்தில் பெத்தப்பா வழிபாடு

ஈழத்தின் யாழ்ப்பாண மாவட்டத்தில் தென்மராட்சிப் பிரதேசத்தில் அமைந்துள்ள பாலாவி, கெற்பேலி முதலான ஊர்களில் பெத்தப்பா வழிபாடு காணப்படுகின்றது. பாலாவி தெற்கில் ஏழு கோயில்களையும்; பாலாவி வடக்கில் ஒரு கோயிலையும்; கெற்பேலி மேற்கில் நான்கு கோயில்களையும் எம்மால் அடையாளப்படுத்த முடிகின்றது. ஆக தென்மராட்சியில் பன்னிரண்டு கோயில்களையும் அதே போல யாழ்ப்பாணத்துத் தீவுகளில் ஒன்றான புங்குடுதீவில் மூன்று கோயில்களையும் அறிய முடிந்தது. ஈழத்தின் வேறு பிரதேசங்களிலோ தமிழகத்திலோ இவ்வழிபாடு இருப்பதாக அறிய முடியவில்லை.

புங்குடுதீவு பிரதேசத்தில் உள்ள பெத்தப்பா ஆலயங்கள் சிவாலயங்களாகவே இன்று கருதப்பட்டு வருகின்றன. ஆனால் தென்மராட்சிப் பிரதேச ஆலயங்களில் பெத்தப்பா தனித் தெய்வமாக வழிபடப்பட்டு வருகின்றார். தென்மராட்சிப் பிரதேசத்தில் இத்தெய்வத்தை வழிபடுபவர்கள் சாண்டார் இன மக்களாக – எண்ணெய்ச் செக்கு வைத்துத் தொழில் புரிபவர்களாகக் – காணப்படுகின்றனர். ஆயினும் இவர்கள் தொன்று தொட்டு விவசாயத்திலும் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது. புங்குடுதீவில் வேளாளர், பறையர் சமூகத்தினரின் வழிபடு தெய்வமாகவே பெத்தப்பா விளங்குகின்றது.

இதனை முன்னோரால் கையளிக்கப்பட்ட வழிபாடாகவும் நீண்ட பாரம்பரியமுடைய  வழிபாடாகவும் இப்பிரதேச மக்கள் குறிப்பிடுகின்றனர். பெத்தப்பா தெய்வம் குறித்த தனிக் கதையாடல்கள் எதனையும் இம்மக்களால் எடுத்துரைக்க முடியவில்லை. ‘முன்பிருந்தே வழிபடுகின்றோம், எங்கள் தாத்தா காலத்துக்கு முன்பிருந்தே வழிபடுகின்றோம்’ போன்ற வரிகளையே அவர்கள் உதிர்க்கின்றனர். அதேவேளை இத்தெய்வத்தை ஆதரிக்காது விடுமிடத்து தமக்குப் பல்வேறு குறை குற்றங்களும், துன்பங்களும், நோய் நொடிகளும் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. ஒழுங்காக ஆதரித்துவரும் பட்சத்தில் தமக்கு எந்தவிதமான துன்பமும் ஏற்படுவதில்லை என்றும் கூறப்படுகின்றது.

பெத்தப்பா பெரும்பாலும் சிவனாகவே கருதப்படுகின்றார். ஆதலால் திரிசூல வழிபாடு அதிகம் காணப்பட்டாலும் சங்கு, விளக்கு, கல், வேல் போன்றவற்றை வைத்து வழிபடும் வழக்கமும் காணப்படுகிறது.

பெரும்பாலும் பெத்தப்பா ஆலயங்கள் ஓலைக்குடிசைகளாலும் மண்ணால் கட்டப்பட்டதாகவுமே காணப்படுகின்றன. பிற்காலத்தில் கற்களால் கட்டப்பட்டன. அதிலும் சில கோயில்கள் கருவறை, முன் மண்டபம், உடையனவாகவும் தனியாட்களின் கோயில்களாகவும் காணப்படுகின்றன. இவற்றுக்குப் பரிவார மூர்த்திகள் இல்லை.

ஆயினும் பிற்காலத்தில் புங்குடுதீவு ஏழாம் வட்டாரத்தைச் சேர்ந்த பெத்தப்பா ஆலயம் ஸ்ரீ முருக மூர்த்தி தேவஸ்தானமாக்கப்பட்டு 1982 இல் மஹா கும்பாபிக்ஷேகம் நிகழ்த்தப்பட்டு ஆகமக் கோயில் ஆக்கப்பட்டுள்ளது. தீவின் ஏனைய பெத்தப்பா ஆலயங்களும் இன்று ஆகமமயமாதலுக்கு உள்ளாகி விட்டன. தென்மராட்சிப் பிரதேசக் கோயில்கள் பல ஆகமம் சாராத கிராமிய வழிபாட்டினைக் கொண்டமைந்த மக்கள் தெய்வத்தின் ‘மெய்தீண்டி இன்புறத்தக்க’ வழிபாட்டு முறையுடனே காணப்படுகின்றன. ஆயினும் வசதி படைத்த சில ஆலய உரிமையாளர்கள் குறிப்பிட்ட சில சிறப்புத் தின வழிபாடுகளுக்கு பூசகரை அழைக்கும் வழக்கம் காணப்படுகிறது.

இங்கு பெத்தப்பா மூர்க்கத் தெய்வமாக அமையவில்லை. அருட்தெய்வமாகவே மக்களால் நம்பப்படுகின்றார். இத்தெய்வ ஆதரிப்பு முறை தந்தை வழி, தாய் வழி என இரு மரபும் துய்ய நிகழ்வது குறிப்பிடத்தக்கது.

பூசையும் வழிபாடும்

இந்த ஆலயங்களில் தத்தம் வசதிக்கேற்ப விளக்கு வைத்தல் நடைபெறுகின்றது. வாரத்தில் ஒரு நாள், ஒவ்வொரு நாளும் வைத்தல் எனும் முறைகள் காணப்படுகின்றன. சில கோயில்களில் காலை, மாலை பூசையாக இது காணப்படுகின்றது. நாளாந்தப் பூசை முறையில், பூசாரி விளக்கு வைத்து கற்பூரம் ஏற்றுவார். வசதியான ஆலயங்களில் பால், பழம், பொங்கல் வைத்து வழிபடும் முறைமையும் காணப்படுகின்றது. இங்கு பூசாரி என்பவர் பரம்பரை பரம்பரையான உரிமையாளராகவே பெரிதும் காணப்படுகின்றார்.

ஏனைய கிராமியத் தெய்வங்களைப் போலவே வைகாசி மாதம் இத் தெய்வத்திற்குச் சிறப்பு வாய்ந்தது. வைகாசி விசாகப் பொங்கலை அடுத்து வரும் திதிகளில் ஆண்டுப் பொங்கல் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

இது தவிர தைப்பூசம், தைப்பொங்கல், சித்திரை வருடப்பிறப்பு, ஆடிப்பிறப்பு, சிவராத்திரி, நவராத்திரி, திருவம்பா போன்ற தினங்களிலும் விசேட பூசை நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது. இவ்வாறான விசேட தினங்களில் அவிசு, பொங்கல் மற்றும் அன்னதானம் வழங்கும் நடைமுறை எல்லா பெத்தப்பா ஆலயங்களிலும் காணப்படுகின்றது.

ஆண்டுப் பொங்கலில் முதல் நிகழ்வாக அமைவது மடைப்பண்டம் எடுத்தல் ஆகும். இதில் பழங்கள், மரக்கறி வகைகள், வெற்றிலை, பாக்கு, பால், அபிஷேகத் திரவியங்கள், பட்டு, உத்தரியம், கற்பூரம், சாம்பிராணி, மஞ்சள், தேசிக்காய், சிலம்பு, கண்ணாடி, பிரம்பு போன்றவை எடுத்துச் செல்லப்படும். அத்தோடு இத்தெய்வத்திற்குப் பலியிடுவதற்காக ஆடு, கோழி என்பனவும், அவற்றை வெட்டுவதற்கான கத்தி அல்லது வாள் என்பனவும் மடைப்பண்டங்களாகக் கொண்டு செல்லப்படுகின்றன. புங்குடுதீவு பெத்தப்பா ஆலயங்களில் பலியிடல் ஆரம்ப காலம் தொட்டே நடைபெறுவதில்லை என எஸ்.கே. சண்முகலிங்கம் (முன்னாள் அதிபர்), ஆறுமுகம் யோகநாதன் (வர்த்தகர்) போன்றோர் குறிப்பிடுகின்றனர். மடைப்பண்டத்தை உரிமையாளர் வீட்டிலிருந்து அல்லது அருகில் உள்ள சந்தியில், மரத்தடியில் இருந்து எடுக்கும் வழக்கம் காணப்படுகிறது. பெரும்பாலும் பண்டத்தை நடைப்பயணமாகவே கொண்டு செல்லும் வழக்காறும் இருந்துள்ளது.

இந்நடைப்பயணத்தின் போது கிராமிய வழிபாட்டின் வாத்தியங்களான பறை, உடுக்கு, மத்தளம், சங்கு, சேமக்கலம் சகிதம் ஊர்வலமாகச் செல்லுதலே வழக்கமாக உள்ளது. கொண்டு செல்லப்பட்ட மடைப்பண்டத்தில் பொங்கல் வளந்தை பூசாரி, வாத்தியங்களின் இசைகேற்ப மேலே எறிந்தெறிந்து ஏந்துவார். இது ‘தூளி பிடித்தல்’ எனப்படும். இது எல்லாத் திக்குகளையும் நோக்கி எறிந்து ஏந்தப்படும். இது பக்தியுணர்வைத் தரும் சடங்காகக் கூறப்படுகிறது. குறித்த பிரதேசத்தில் நடைபெறும் இப்பொங்கலுக்கு ஏனைய தெய்வங்களால் இடையூறு நிகழாமல் இருக்கும் வண்ணம் பூசாரியால் மேற்கொள்ளப்படும் சடங்கு ‘பரிகலம் அழைத்தல்’ ஆகும். மந்திர உச்சாடனத்துடன் கூடிய சடங்காக இது நிகழ்த்தப்படுகிறது.

பூசாரி வளந்துப் பானை வைத்து பொங்கலிட, ஏனைய மக்களும் பொங்கலிட்டு பூசையில் மடை பரவுவர். இம்மடை பரவுதல் பெரும்பாலான கோயில்களில் உள்மடை, வெளிமடை எனப் பரவப்படுகிறது. உள்மடை பூசாரி மற்றும் கோயில் உரித்துடையவர்களாலும் வெளிமடை ஏனையவர்களாலும் வைக்கப்படும். உள்மடையில் காய்மடை, பூமடை, பழமடை என்பன அடுக்காக வைக்கப்பட்டிருக்கும். உள்மடை, பிரசாதத்துடன் கோயில் உரித்துடையவர்களுக்கு வழங்கப்படும். வெளிமடையில் பொங்கல், பலகாரங்கள், அவிசு, அன்னதானக் கறி, சோறு உள்ளிட்டவை படைக்கப்படும். இவை ஆலயத் தொண்டர்கள், அடியவர்களுக்கு வழங்கப்படுகின்றன. இந்த உள்மடை, வெளிமடைச் செயற்பாட்டை வர்க்க வேறுபாடாகவே எண்ணத் தோன்றுகிறது.

பூசாரி கலையாடி குறி சொல்லுகின்ற – கட்டுச் சொல்லுகின்ற நடைமுறையும் காணப்படுகிறது. அதேவேளை கோயில் உரித்தாளரும் கலையாடும் முறைமையும் சில ஆலயங்களில் காணப்படுகின்றது. குறித்த தாள கதியில் வாத்தியங்கள் இசைக்கப்பட அதற்கேற்ற கலையாடல் நிகழும். ஒருவர் மீது பல தெய்வங்கள் மாறி மாறி உருப்பெறுதலும் உண்டு. இது ‘கலை மாற்றி ஆடுதல்’ எனப்படுகிறது. கட்டுக்கேட்போருக்குக் கட்டுச்சொல்லி திருநீறு இடப்படும். கட்டுக்கேட்போர் அவர் உரைத்ததற்கு ஏற்ப பரிகாரங்களை தம் பெத்தப்பா தெய்வத்துக்குச் செய்துவரும் வழக்கமும் காணப்படுகிறது. காவடி, கற்பூரச்சட்டி, பாற்செம்பு முதலானவை எடுத்தல், விரதமிருந்து மடை பரவுதல், நேர்த்திப் பொருட்களை வாங்கி வழங்குதல் போன்றன அவற்றுட் சில.

பெரும்பாலான தென்மராட்சிக் கோயில்களில் பலியிடும்முறை தொன்றுதொட்டுக் காணப்பட்டு வந்துள்ளதெனினும், இன்று அது அருகி வருகிறது. ஆடு, கோழி முதலானவற்றை வாங்கி காதறுத்து விடுதல், சிறு கீறு கீறி இரத்தம் காணல் அல்லது ஆலயத்துக்கு நேர்ந்துவிடுதல் முதலியனவே இன்று பெரிதும் காணப்படுகின்றன.

இறுதியாக நடைபெறும் சடங்கு ‘வழிவெட்டுதல்’ ஆகும். பொங்கல் முடிந்தவுடன் மடைப்பண்டங்களான இளநீர், தேசிக்காய் போன்றவற்றோடு ஏனைய பொருட்களையும் எடுத்துக்கொண்டு பூசாரியும் ஆலய உரித்துடையோரும் சிறிது தூரம் சென்று அவற்றைப் படைப்பர். செல்லும் வழியில் இளநீர், தேசிக்காய் என்பவற்றை வெட்டிச் சென்று படையலிட்ட பின் தெய்வத்துக்கு நன்றி சொல்லி, ஆண்டுப் பொங்கலை நிறைவு செய்வதாகவும், அடுத்த ஆண்டுப் பொங்கல் எவ்வித தடங்கலுமின்றி நடைபெற வேண்டியும் தடை வெட்டி வருவார்.

I-4-8-1024x576.jpg

தென்மராட்சிப் பாலாவி பிரதேச பெத்தப்பா கோயில் ஒன்றில் பெண் பூசாரி பூசை நிகழ்த்துவதைக் காணமுடிகிறது. பெரும்பாலும் வழக்கில் இருக்கும் கிராமியத் தெய்வக்கோயில்களில் விளக்கு வைத்தல் முதலியன பெண்களால் செய்யப்பட்டு வரும்போதும், பூசாரிகளாக ஆண்களே காணப்படும் வழக்கம் தொன்று தொட்டு இருந்து வருகிறது. தனது கணவனின் பரம்பரைக் கோயிலில் பூசாரியாக இருக்கும் திருமதி அருந்தவமலர் தர்மலிங்கம், கணவன் இல்லாததால் தானே பூசை செய்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.

சில அவதானிப்புகள்

  • பெத்தப்பா என்னும் சொல் சமயத்துக்கு அப்பாலான நாட்டார் வழக்காற்றுச் சொல்லாக விளங்குகின்றது.

  • பெத்தப்பா சுவாமி கோவில்கள் தென்மராட்சி பாலாவி, கெற்பேலி கிராமங்களிலும் புங்குடுதீவிலும் மட்டுமே காணப்படுகின்றன.

  • இத் தெய்வம் பற்றிய தொல் மரபுக் கதைகள் எதையும் அறிய முடியவில்லை.

  • பெத்தப்பா எனும் இத் தெய்வம் சிவனாகவே பெரிதும் சித்தரிக்கப்படுகின்றது. ஆயினும் புங்குடுதீவின் ஊரதீவில் உள்ள பெத்தப்பா, தொன்று தொட்டு முருகனாக வழிபடப்பட்டு வருகின்றது. முருகன் – தகப்பன்சுவாமி; ஆகவே பெத்தப்பா எனும் தெய்வம் முருகனாகவே இருக்கலாம் அல்லது இது சிவ – முருக இணைவு வழிபாடாகவும் உருவாகி இருக்கலாம்.

  • தென்மராட்சியில் சாண்டார் சமூகத்தின் குலதெய்வமாக காணப்படும் இத்தெய்வம் புங்குடுதீவில் வேளாளர், பறையர் சமூகத்தினரால் வழிபடப்படுவது குறிப்பிடத்தக்கது. இம்மூன்று சமூகத்தினரும் நிலத்தோடும் விவசாயத்தோடும் தொடர்புபட்டவர்களாக இருப்பது கவனத்தை கோரும் விடயமாகும்.

  • புங்குடுதீவு பெத்தப்பா கோயில்கள் ஆகமமயமாதலுக்கு உள்ளாகிவிட்டன. தம் அடையாளத்தைத் துறந்து வருகின்றன. தென்மராட்சி ஆலயங்களில் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருப்பினும் அவை முழுமையான ஆகமமயமாதலுக்கு இன்னும் உள்ளாகவில்லை.

  • பெத்தம்மா வழிபாடும் சொல் வழக்கும் தெலுங்கில் முதன்மை பெற்றவை. அதன் வழி வந்த சொல்லாக பெத்தப்பா எனும் சொல் வழக்கும் தெய்வமும் ஈழத்தவர்களிடம் செல்வாக்குப்பெற்று இருக்கலாம். முகமது ரியாஸின் ‘சிகிரி மார்க்கம்’ சிறுகதைத் தொகுப்பில் வரும் பெத்தம்மா எனும் சொல் தெலுங்கு பரப்பில் இருந்து (வணிகம் மற்றும் குடியேற்றம் என்பனவற்றின் ஊடாக) வந்தமையை உறுதி செய்கின்றது. ஆக பெத்தப்பா, பண்பாட்டு ஆய்வை கோரி நிற்கும் ஒரு வழிபாடாக – சொல்லாகத் திகழ்கின்றது.

முடிவுரை

தமிழகம், தெலுங்கானா போன்ற பிரதேசங்களில் பெத்தம்மா வழிபாடு காணப்பட்ட போதும் ஈழத்தில் இவ்வழிபாடு இல்லை. ஆயினும் பெத்தப்பா வழிபாடு ஈழத்திலேயே காணப்படுகின்றது. ஆண் வழிச் சமூக அமைப்பின் தொடர்ச்சியாக இவ்வழிபாடு விளங்குகிறது எனலாம். தென்மராட்சி, புங்குடுதீவுப் பிரதேசங்களில் காணப்படும் இவ்வழிபாடு சாண்டார், பறையர், வேளாளர் சமூகங்களில் குலதெய்வ வழிபாடாக இருப்பது குறிப்பிடத்தக்கது. சாதியப் போராட்டம் நிகழ்ந்த புங்குடுதீவு கண்ணகி அம்மன் கோவில் சூழலில் பறையர் சமூகத்தவராலும் வேளாளராலும் குலதெய்வமாக பெத்தப்பா வழிபடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்க நிகழ்வாகும். கண்ணகி கோயில் திருவிழா பற்றிய அறிவித்தலில் பறையர் சமூகத்தை இக்கால நிர்வாகத்தினர், ‘காராம் பசு வாகனத் திருவிழா (மூன்றாம் திருவிழா) உபயகாரர்கள் பெத்தப்பா சிவாலயம்’ எனக் குறிப்பிடுதல் சாதியம் தாண்டிய குலவழிபாடாக பெத்தப்பா வழிபாடு இருத்தலை உணர்த்துகின்றது. அதற்கு தெய்வத்தின் மீது மக்கள் கொண்டிருந்த அதீத நம்பிக்கை காரணமாக இருந்திருக்கலாம். ஆயினும் இத்தெய்வம் பற்றிய கதைகள், அற்புதங்கள் பற்றிய உரையாடல்கள் பேணப்படாதது வருத்தத்துக்கும் ஆச்சரியத்துக்கும் உரியதாகும். இன்று கலையாடுதல், மடைப் பண்டம் எடுத்தல், உள்ளிட்ட பல பாரம்பரியங்கள் அருகிவருகின்றன. கற்கோயில்களாகப் பெரும்பாலான கோயில்கள் மாறி வருகின்றன. முன்மண்டபமுடையதான ஆலயங்கள் சிலவற்றில் சாதாரண தினங்களில் பூசாரியும்; விசேட தினங்களில் பிராமணர் அல்லது சைவக்குருக்களும் பூசை செய்யும் முறைமையை அவதானிக்க முடிகிறது. மேனிலையாக்கச் சிந்தனை வழி ஆகம மரபுக்கு உட்பட்டு வரும் இவ்வழிபாடு, அதன் கதைகள் போலவே சிறிது காலத்தில் காணாமல் போவதற்கும், இதனூடாக சமூக வரலாற்றின் ஒரு பகுதி இழக்கப்படுவதற்கும் அதிக வாய்ப்பு உள்ளது. இது தமிழர் அல்லது தமிழ் பேசும் மக்களின் அடையாளச் சிதைவுக்கும் வழிவகுக்கும் எனலாம். 

https://www.ezhunaonline.com/goddess-bethappa/

  • 4 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

குறிப்பன் எனும் தெய்வம்

தி. செல்வமனோகரன்

January 9, 2025 | Ezhuna

அறிமுகம்

மக்களின் வாழ்வியல் புலத்தைத் தீர்மானிக்கும் ஆற்றல் நிலத்துக்கே உண்டு. நிலமே பண்பாட்டை, பொருளாதாரத்தை, அரசியலை, கலையை, தத்துவத்தை, சமயத்தை என எல்லாவற்றையும் ஆதியிலிருந்து தீர்மானித்து வந்திருக்கிறது. திணைமரபு எனும் தமிழ் அடையாளம் நிலத்தின் அடையாளமே. நிலத்தோடு ஒட்டிய வாழ்வு பேரியற்கையோடு இயைந்து வாழ்தலாக அமைந்துள்ளது. நிலத்தின் வழியமைந்த தொழில், தொழிலின் தாற்பரியம், இயற்கையை எதிர்கொள்ளல் என்பன இயற்கை அதீதத்தை உணரச் செய்தன. தமக்காக உயிர் நீத்தவர்களை நினைவுகூரச் செய்தன. இதன் ஊடாக நீத்தார் பெருமை, முன்னோர் வழிபாடு, தெய்வ வழிபாடு போன்றன உருவாயின. தொழில்சார் வாழ்வில் தமக்குதவும் இயற்கையை இயற்கைப் பொருளை முன்னிறுத்திய வழிபாடுகளும் அவற்றின் வழி அதனைத் தெய்வநிலைப்படுத்தலும் தவிர்க்க முடியாத வாழ்வியல் அம்சங்களாயின. குறிப்பன் எனும் தெய்வமும் தொழில்சார் நிலையில் வைத்து நோக்கத்தக்க ஒன்றாகவே காணப்படுகிறது.

குறிப்பன் : பெயர் பற்றிய உரையாடல்கள்

தமிழ் மரபில் குறிப்பன் என்ற சொல்லின் வரலாறு குறித்த எந்தப் பதிவையும் அறியமுடியவில்லை. குறிப்பன் ஈழத்தில் குறிப்பாக பூநகரிப் பிராந்தியத்தில் நிகழ்கின்ற தனித்த சொல் வழக்காக, தெய்வமாகக் காணப்படுகிறது.

(அ) சங்ககால அகநானூறில் “ஓம்பினார் கவர்ந்து கூழ் கெழு குறிம்பில்” (113), “கல்லுடைக் குறும்பின் வயவர்” (31) என்றும்; சீவக சிந்தாமணியில் “கொண்டேரு குறும்பர் வெம்போர்” என்றும் கூறப்பட்டுள்ளது.

(ஆ) குடி என்பது குலம், கோத்திரம் குடும்பம் என்றும், குடியானவன் என்பது மண்ணின் மைந்தன், வேளாண்மை செய்பவன் என்றும் பொருள் சுட்டப்படும். இது குடியானவன், குடியாட்சி, குடியிறை என விரியும். குடும்பு எனும் சொல் குறித்த பிரதேசத்தை – கிராமத்தைக் குறிக்கும். அகரமுதலி குடும்பர் என்பதற்கு ஊர்த்தலைவர் என்பதோடு பள்ளரின் தலைவர் என்றும் பொருள் சுட்டுகிறது. ஆரம்பத்தில் அது ஒரு பதவிப் பெயராகவும் பின்பு சாதிப் பெயராகவும் சாதியின் தலைவரைச் சுட்டும் சொல்லாகவும் மாறியிருக்கலாம் (சரோஜினி குப்புராசு, கி. ஆ., 2001, மள்ளர் எனும் தேவேந்திரகுல வேளாளர் குலப் பிரிவுகளும் கூட்ட முறைகளும், ப.34).

இவற்றோடு இணைத்தும் தனித்தும் ஆராயத்தக்க சொல் ‘குறிப்பன்’ எனலாம். ஒன்றைச் சுட்டுவது ‘குறிப்பான்’. அது சுருங்கிக் குறிப்பன் என்றாகியிருக்கலாம். குறி எனும் சொல் பெயராகவும் வினையாகவும் பொருள் கொள்ளப்படுகிறது. தமிழகராதி அடையாளம், எண்ணம், ஒருவகை சாத்திரம் சொல்லுதல், குணம், குறிப்பு, தோற்றம், நன்னடத்தை, நிமித்தம், பயில், புடைவை, மாடு, முறை எனப் பொருள் சுட்டுகிறது (கதிரைவேற்பிள்ளை, நா., 2003). குறிப்பு – அடையாளம், ஒருமை, கருத்து, பிறந்தநாள் எழுதி வைக்கும் ஓலை,  விருப்பம் என்றும்; குறிப்பானவன் – கணிசவான், மதிக்கத்தக்கவன் எனவும்; குறியர் – குள்ளர், குறியானவன் – நிதார்த்தன் என்றும் பொருள் சுட்டப்படுகிறது. ‘குறிப்பன்’ என்பது கிராமிய மொழி வழக்காறாக இருக்கலாம். குறிப்பன் என்பது குறிப்பால் உணர்த்துபவன், அடையாளப்படுத்துபவன், குறித்துச் சொல்பவன் எனும் பொருளை உணர்த்தும் சொல்லாக அமைந்துள்ளது.

குறிப்பன் வழிபாடு

ஈழத்தில் கிளிநொச்சிப் பிராந்தியத்தில் பூநகரி பிரதேசத்தில் காணப்படுகின்ற கிராமியத்‌‌‌ தெய்வமாக குறிப்பன் அமைந்துள்ளது. தமிழ்ச்சூழலில் வேறெங்கும் இவ்வழிபாடு இருப்பதாக அறிய முடியவில்லை. இந்தத் தெய்வம் பற்றிய அறிமுகத்தை பரமன் கிராய் வில்லடி ஐயனார் கோயில் பூசாரியும், வெட்டுக்காடு பெரும்படை பூசாரியும் ஏற்படுத்தியிருந்தாலும் அதனை ஆய்வு நிலைப்படுத்த உதவியவர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக தமிழ்த்துறை விரிவுரையாளர் சிரஞ்சன். அவரின் துணையோடும் ஆய்வு ஆர்வலர்கள் கோ. விஜிகரன், சு. தாரங்கன் ஆகியோருடனும் இவ்வாய்வினை மேற்கொண்டோம்.

I-1-6.jpg

கால்நடை வளர்ப்பவர்கள் தங்களது ஆடு, மாடு தொலைந்தால் துவரந்தடியை வெட்டிவைத்து வழிபடுவர் அல்லது கிடைக்கும்‌‌‌ வைரமான தடியை வெட்டிவைத்து வழிபடுவர். அத்தெய்வம் கருணை கொண்டு தொலைந்த ஆடு, மாட்டைக் கூட்டி வரும் அல்லது அவை நிற்கும் இடத்தைக் குறிப்பால் உணர்த்தும் என்றும் நம்பப்படுகிறது. இதன்வழி அந்தத் தடியை (பொல்லை) குறிப்பன் எனும் தெய்வமாகக்‌‌‌ கருதி பூசை செய்து வழிபடுவதாகக்‌‌‌ கூறப்படுகிறது. கால்நடை வளர்ப்பவர் அல்லது கால்நடையை மேய்ச்சலுக்கு இட்டுச் செல்பவர் கையில் தடி, குறிப்பாக துவரந்தடி வைத்திருப்பதுண்டு. அதனைக் கொண்டே பட்டியை அல்லது மந்தையை வழிப்படுத்திச் செல்வதும், விலகிச் செல்லும் கால்நடையை வழிப்படுத்துவதும், துரத்தி அழைத்து வருவதும், பகை விலங்குகளை விரட்டுவதும் குறிப்பிடத்தக்கது.

கர்நாடகப் பிரதேசத்திலிருந்து கால்நடைக்கான புல்வெளிகளைத் தேடித் தேடி தமிழகத்தையும் ஆந்திரா உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களையும் வந்தடைந்த பழங்குடிகளாக ‘குறுமன்ஸ்’ இனக்குழுவினர் கருதப்படுகின்றனர். இவர்கள் குறுமன் (தமிழ்நாடு), குருபர் (கர்நாடகா), குருபா (ஆந்திரா), குருமா (தெலுங்கானா) எனப் பலவாறு சுட்டப்படுகின்றனர். இவர்கள் கால்நடை மேய்ச்சல் தொழிலை அடிப்படையாகக் கொண்ட இனக்குழுவினராவார் (சந்திரசேகர், சி. 2021, அரண்‌‌‌ ஆய்விதழ்). இயற்கை நெறிக்காலத்தில் – அதியமான் காலத்தில் குறும்பு எனும் கால்நடை அரண்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது. அதேவேளை ‘ஸ்டுவர்ட்’ எனும் ஆய்வாளர் “இந்த இனக்குழுவினர் ‘குறி’ எனும் ஆடுகளை மேய்த்ததால் குறும்பர் எனப்பட்டனர்” எனச் சுட்டுகின்றமை இணைத்து நோக்கத்தக்கது. ஆடுகளின் மேய்ப்பை அல்லது கால்நடை வளர்ப்பவர்களின் தலைவன் – முன்னோர் வழிபாட்டின் வழி ‘குறிப்பன்’ எனும் தெய்வமாகியிருக்கலாம். இதனை இன்னும் வலுப்படுத்துவது குறும்பர் இனக்குழுவின் வாழ்க்கை முறை என்பதோடு கால்நடை வளர்ப்பு, மேட்டுநில விவசாயம் என்பன குறிப்பனை வழிபடும் மக்களிடமும் காணப்படுகிறது.

நிலவுற்பத்திச் சமுதாயத்தின் வழி உருவான நிலவுடமை அல்லது நிலப்பிரபுத்துவம் விவசாய உற்பத்தி உறவுகளில் சில மாற்றங்களை ஏற்படுத்தியது. பெருநிலத்தை உடையவர் நிலக்கிழாராக, அதிகாரமுடையவராக, உழுவித்து உண்பவராக உயர்ந்தார். சிறு நிலமுடையவர் அல்லது நிலமற்ற விவசாயக் குடிகள் உழுது உண்போராக மாறினர். வர்க்க முரண் இதன் வழி உருவாயிற்று. அது சாதியாக, உயர்வு தாழ்வாக மாறிற்று. உழுவித்து உண்பவர் பெருங்குடி வேளாளராகவும் உழுது உண்பவர், கூலிகள் என்போர் சிறுகுடி வேளாளராகவும் மாறினர். அவர்கள் ஆரம்பத்தில் மள்ளர் என்றும் பின்பு பள்ளர் என்றும் சுட்டப்பட்டனர். இவர்கள் வேளாளரின் நிலங்களை உழுது விதைப்பவர்களாகவும் கால்நடைகளை மேய்ப்பவர்களாகவும் மாறினர்.

பூநகரியின் எல்லைக்கிராமங்களில் மேட்டுநில மேய்ச்சல் நிலங்கள் இருப்பதும்; கால்நடை வளர்ப்பும், வயல்களை விளைவிப்பதும் குறிப்பனை வழிபடும் மக்களின் தொழில்துறைகளாக இருப்பதும் குறும்பர் (குறுமன்ஸ்) இனக்குழுவினரை ஒத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

சிறுகுடி வேளாளரான பள்ளர் சமூகத்தினர் தம்மை தேவேந்திர குலம் என்று சுட்டுவர். அவர்களுள் பல்வேறு உட்பிரிவுகள் (குலங்கள்) காணப்படுகின்றன. தமிழக அரசு வெளியிட்ட அட்டவணைச் சாதியினர் பட்டியலில் இவர்கள் பள்ளன், தேவேந்திர குலத்தார், கடைஞன், களவாடி, குடும்பன், பண்ணாடி எனும் ஆறு பிரிவினராகச் சுட்டப்படுகின்றனர் (பரமேஸ்வரி, சி., 2000, தேவேந்திர குல வேளாளர் வரலாறும் சமூக அரசியல் எழுச்சியும், 40 – 52). இவை மேலும் ஏறத்தாழ நூற்றிமுப்பது பிரிவுகளை உடையன.

இதில் குடும்பன் எனும் சொல் சிறுகுடி வேளாளரின் தலைவனைக் குறிப்பதாகவே சொல்லப்படுகிறது. குடும்பத்துக்குத் தலைவன் தகப்பன் என்பதன் வழி இச்சொல் உருவாகி இருக்கலாம் எனச்‌‌‌ சில ஆய்வாளர் சுட்டுவர் (சரோஜினி, குப்புராசு, கி. ஆ., 2001, மள்ளர் எனும் தேவேந்திர குல வேளாளர் குலப் பிரிவுகளும் கூட்ட முறைகளும், ப. 34). குடும்பம் என்பது மருதநில மக்களின் வழி உருவான பண்பாட்டு அடையாளம் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

ஆக, குறும்பர், குடும்பர் எனும் இரு இனங்களும் விவசாயக் குடிகள். கர்நாடக ‘குறி’ மேய்ப்பவர்கள் தமிழ்நாடு, கேரளா ஊடாகக் கடல்நீரேரி வழி பூநகரியில் குடியேறி இருக்கலாம் என்பதும், பெருங்கற்காலப் பண்பாட்டை உடைய தொல்நகரம் பூநகரி என்பதும் இங்கு கவனத்திற்குரியதாகும். ஆயினும் குறிப்பன் எனும் தெய்வம் ஈழத்துக்கே – பூநகரிக்கே உரிய தனித்த பண்பாட்டு வெளிப்பாடு என்பது குறிப்பிடத்தக்கது.

ஈழத்தில் குறிப்பன் கோயில்கள்

ஈழத்துப் புலத்தில் பூநகரியில் மட்டுமே குறிப்பன் கோயில்கள் காணப்படுகின்றன. பூநகரியில் குறிப்பனுக்கான தனித்த கோயில், பரமன்கிராய் வில்லடி கிழக்கில் வயலின் நடுவே காணப்படுகிறது. குறிப்பனுக்கான தனித்த வேறு கோயில்கள் இருப்பதாக அறிய முடியவில்லை. இந்தக் கோயிலின் உரிமையாளராகவும் பூசாரியாகவும் விளங்குபவர் திரு. இராமலிங்கம் குணரத்தினம் ஆவார்.

I-2-.jpg

I-3-3.jpg

இதனை விட பரமன் கிராமம் வில்லடி மேற்கு ஐயனார், வண்ணக்கம் வெளி வீரபத்திரர், காவாக்குளம் நரசிம்ம வைரவர், தம்பிராய் ஊத்தக்குடியன் வைரவர், வில்லடி தெற்கு வைரவர், உப்பிளவான் வைரவர், செல்லையாத்தீவுக்கு அண்மையிலுள்ள ஐயனார், சங்குப்பிட்டி ஐயனார் முதலான கோயில்களில் பரிக்கலமாக – பரிவார தெய்வமாக குறிப்பன் காணப்படுகிறது. இக்கோயில்களில் காணப்பட்ட பொது அம்சங்கள் சிலவற்றை அவதானிக்க முடிந்தது.

I-4-1.jpg

I-5-1024x453.jpg

  1. குறிப்பனின் தனிக்கோயிலாயினும், குறிப்பன் பரிவாரமாக அமர்ந்திருக்கும் கோயிலாயினும் அவை இயற்கையான வயல்வெளிச் சூழலில் மேட்டு நிலத்தில் அமைந்துள்ளன.

  2. இவை யாவும் பூசாரிகளால் பூஜை செய்யப்படுகின்றன.

  3. பரம்பரை பரம்பரையாக வழிபடுகின்றோம் என்ற உரையாடலுக்கு மேல், இக்கோயில்கள் பற்றிய தெய்வம் பற்றிய கதையாடல் வேறு எதனையும் அறிய முடியவில்லை.

  4. குறிப்பனுக்கான தனித்த புராணக்கதைகளையோ, இலக்கிய, தொல்லியல் சான்றுகளையோ அறியமுடியவில்லை.

  5. சிறுகுடி வேளாளரான பள்ளர் சமூகத்தின் வழிபடு தெய்வமாகவே இது அறியப்படுகின்றது.

  6. குறிப்பனுக்கு உருவமில்லை. குறி வழிபாடே காணப்படுகிறது.

I-6.jpg

கோயில் அமைப்பும் குறிப்பன் குறி வழிபாடும்

வீரை, கூழா மரங்களின் கீழ் பிரம்பு (தடி) வைத்து வழிபடும் மரபே தொன்மை முறையாகக் காணப்பட்டுள்ளது. மரத்தாலான தடியானது மழை, வெயில், காற்று என்பவற்றால் பாதிக்கப்பட்டு விரைவில் பழுதடைவதனால் வெள்ளைக் கல் (சுண்ணாக்கல்) வைத்து குறிப்பனை வழிபடும் மரபு வளர்ச்சி பெற்றது. தற்போது சூலமும் அருகே வைக்கப்படுகின்றது.

இன்றும் பெரும்பாலான கோயில்கள் மரத்தடிக் கோயில்களாகவே காணப்படுகின்றன. சில கோயில்களில் மரத்தடியில் சீமெந்துத் தளம் இடப்பட்டு தடியும், கல்லும் வைத்து திறந்த வெளி வழிபாடே நடத்தப்படுகின்றன. ஓரிரு கோயில்களில் பரிவாரமாக மூன்றுக்கு மூன்று அளவில் சீமெந்துக் கட்டடம் கட்டப்பட்டு கூரையிடப்பட்டுள்ளது. பரமன் கிராய் வில்லடி கிழக்கு குறிப்பன் கோயில் கருவறை, முன் மண்டபம் என்பன உடையதாகவும், அண்ணளவாக பதினைந்துக்கு பத்து அளவு கொண்டதாகவும் சீமெந்துக் கட்டடமும், ஓட்டுக்கூரையும் உடையதாகவும் உள்ளது. விசேட தினங்களில் தென்னை ஓலைகளில் சிறு முன் மண்டபம் ஒன்று இணைத்து உருவாக்கப்படுகிறது. இந்த ஆலயத்தில் பரிவார தெய்வமாக ஐயனார் வீற்றிருக்கின்றார்.

குறிப்பனை பரிவார தெய்வமாக உடைய பெரும்பாலான கோயில்கள் பெருங்குடி வேளாளருடையது என்பதும், ஐயனார் அவர்களின் தெய்வமாக பூநகரியில் கருதப்படுவதும், சிறுகுடி வேளாளரின் குறிப்பன் கோயிலில்  ஐயனாருக்குத் தனி இடம் வழங்கியிருப்பதும் குறிப்பிடத்தக்கது. சாதியம் கருதாத, சமதையான, ஒருவரை ஒருவர் மதித்து மரியாதை செய்யும் செயற்பாடாக இதனைக் கருதலாம்.

வழிபாட்டு முறைகள்

குறிப்பன் தெய்வத்திற்கு வாரமொருமுறை விளக்கு வைக்கும் முறைமை காணப்படுகின்றது. பரமன்கிராய் வில்லடி குறிப்பன் கோயில் தனக்கான தனித்துவமான முறைமைகளை பின்பற்றி வருவதை உரிமையாளரும், பூசாரியுமான இ. குணரத்தினம் உறுதிப்படுத்தினார். வைகாசி விசாகத்துக்கு பின்பு இங்கு பொங்கல் நிகழ்த்தப்படுகிறது. இதை விட கார்த்திகை தீபம், சித்திரை வருடப் பிறப்பு போன்ற சில விசேட தினங்களிலும் மடை வைக்கும் மரபு காணப்படுகின்றது. பழைய காலத்தில் தடியும் பின்பு வெள்ளைக்கல்லும் வைத்து கூழா மரத்தடியில் வழிபடப்பட்டது. இன்று கூழா மரமில்லை. 2017 இல் ஆலயம் இன்றைய நிலைக்குரியதாக்கப்பட்டு கருங்கல் விக்கிரகம் வைக்கப்பட்டுள்ளது.

பொங்கலுக்கு முதல் நாள் வெற்றிலை மடை வைக்கப்படும். அதில் குறிப்பன் தெய்வம் பூசாரி மீது வந்திறங்கி கலையாடிக் குறி சொல்லும். பூசைமுறை உள்ளிட்ட விடயங்களை அது கூறும் என்றும் அதன்படியே பூஜை நிகழ்த்தப்படும் என்றும் கூறப்படுகிறது. பூசைக் காலத்தில் பூசாரி மீது தெய்வமிறங்காத விடத்து,

“மண்ணாதி பூதமொடு விண்ணாதி அண்டம் நீ,
மறைநான்கின் அடிமுடியும் நீ,
மதியும் நீ, ரவியும் நீ, புனலும் நீ, அனலும் நீ,
மண்டலமிரண்டேழு நீ,
பெண்ணும் நீ, ஆணும் நீ, பல்லுயிர்க்குயிரும் நீ,
பிறவும் நீ, யொருவ நீயே,
பேதாதி பேதம் நீ, பாதாதி கேசம் நீ,
பெற்ற தாய் தந்தை நீயே,
பொன்னும் நீ, பொருளும் நீ, இருளும் நீ, ஒளியும் நீ,
போதிக்க வந்த குரு நீ,
புகழொணா கிரகங்கள் ஒன்பதும் நீ,
இந்த புவனங்கள் பெற்றவனும் நீ,
எண்ணரிய ஜீவகோடிகளை ஈன்ற அப்பனே
என் குறைகள் யார்க்குரைப்பேன்..?
ஈசனே சிவகாமி நேசனே!
எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே..!”

எனும் ‘நடராஜர் பத்து’ பாடலைப் பாடி உருவேற்றுதல் முறை காணப்படுகின்றது. இது ஒரு வகையில் மேனிலையாக்கமாகின்றது.

வெற்றிலை மடை வைத்த அடுத்த நாள் தண்டல் நடைபெறும். பொருள், காசு பெறல் என அத்தண்டல் அமையும். இதில் சாதியமற்ற நிலை காணப்படுகின்றது. மதியம் அன்னதானம் நடைபெறும். இரவே பொங்கல் நிகழ்வு இடம்பெறும். ஆலயத்தில் இருந்து அண்ணளவாக முப்பதடி தூரத்தில் உள்ள பாலை மரத்தின் கீழ் வைத்தே வளுந்து எடுக்கப்படும். வளுந்து எடுக்கும் போது பாலை மரத்தைச் சுற்றி ஐந்தடியளவில் விட்டு பனையோலையில் மறைப்புக் கட்டப்பட்டிருக்கும். அங்கிருந்து வளுந்து எடுக்கப்பட்டு பொங்கல் நிகழ்த்தப்படும். பின் மடை போடப்படும். மடையில் வெற்றிலை, பாக்கு, பழங்கள் பொங்கலோடு வடை, மோதகம், முறுக்கு, பால்ரொட்டி போன்ற பலகாரங்கள் பலவும் படைக்கப்படும். பூசாரி மந்திரம் இன்றி பூசை நிகழ்த்துவார். பூஜை நிறைவில் தெய்வமாடிக் குறி சொல்லுவார். இக்கோயில்களில் பலியிடல் இடம்பெறுவதில்லை.

வன்னி இடப்பெயர்வுக்கு முற்பட்ட காலத்தில் பூசாரிக்கு அணிகலன்கள் இருந்துள்ளது. ‘கவுண்’ போன்ற ஆடையை உடுத்து, கை கால்களில் அவற்றோடு ஒட்டிய வெள்ளிச் சதங்கைகள் அணிந்து, நெற்றியில் வெள்ளிப் பட்டமும், மார்பில் வெள்ளியாபரணமும் போட்டிருப்பார். இவ்வழக்கம் இன்று இவ்வாலயத்தில் அற்றுப் போய்விட்டது. பெருங்காடு பெரும்படைக் கோயில்களில் இன்றும் இதனை ஒத்த அணிகலன்கள் உண்டு.

குறிப்பன் ஆலய மடை பரவலில் உள்ள விசேடம் ‘அபின்’ படைத்தல் ஆகும். அதனை பூசாரி மட்டுமே தன் பங்காகப் பெற முடியும். இது மட்டக்களப்புத் தேசத்தில் வைரவருக்கு அபின் ரொட்டி படைக்கும் மரபோடு ஒப்பிடத்தக்கதாகும். பொங்கல் பூசை முடிவடைந்து மறுநாள் காலையில் வழி வெட்டப்பட்டு பூசை நிறைவுறும். எட்டாம் நாள் (எட்டாம்மடை) காய்மடை, பூமடை என்பன படைக்கப்பட்டு பூசை நிகழ்த்தப்படுவதோடு பொங்கல் விழா நிறைவுபெறும்.

இப்போது பூசாரியாக உள்ள குணரத்தினத்தின் தந்தை இராமலிங்கமே முன்பு பூசாரியாக இருந்தவர். அவரின் இறப்பின் பின்பு கிராஞ்சி இளந்தாரி கோயில் பூசாரி செல்வரத்தினம் பூசாரியாக இருந்து வந்துள்ளார். அவர் ஆலய வழக்காறுகளில் மாற்றத்தை ஏற்படுத்த முற்பட்டதும், வெற்றிலை மடைக்கு வர முடியாமற் போனதும், அவரது மரணமும் குறிப்பன் வழிபாட்டின் வீரியத்துக்கு எடுத்துக்காட்டாகச் சொல்லப்படுகின்றது.

எண்பதுகளின் பிற்பகுதி வரை பெண்கள் இந்த ஆலயத்திற்கு வருவதில்லை. இங்கு பொங்கல் விழா நிறைவுற்றதன் பின் அடுத்த நாள் பூநகரி மட்டுவிலில் உள்ள நாச்சிமார் கோயிலில் குடும்பமாகச் சென்று பொங்கலும் பலகாரமும் மடையிடும் வழக்கமே இருந்துள்ளது. இம்மரபை  அக்கோயில் பூசாரி மாற்றியதும், நாச்சிமாருக்கு பொங்கிய பின் குறிப்பனுக்கு பொங்க வேண்டும் என்றதும் இரு பிராந்தியத்தவர்களிடமும் முரணை ஏற்படுத்தியது. அதனால் அன்றிலிருந்து குறிப்பன் ஆலயத்தவர் நாச்சிமாருக்கோ, அவர்கள் குறிப்பன் கோயிலுக்கோ வருவதில்லை. இது புதிய மரபொன்றை உருவாக்கியது.

1990 இல் குறிப்பன் கனவில் உணர்த்தியதன் படி ஆலயத்திற்கு கடா ஆடு ஒன்று நேர்ந்து விடப்படும். அதன் பின் பெண்கள், ஆலயத்துக்கு வருபவர் ஆகியோர் பொங்கல் விழாவில் ஈடுபடுவர். அதேவேளை நேர்ந்து விடப்பட்ட ஆடு ஒரு வருடத்துள் இறந்து விடுவதாக இ. குணரத்தினம் பூசாரி குறிப்பிடுகின்றார். குறிப்பன் கோயில் பூசாரிக்கே குறிப்பன், ஐயனார் கலைகள் வருகின்றன. அதேவேளை ‘கந்தசாமி பெஞ்சாதி’ என்கின்ற பெண்மணியே நாச்சிமார் கலையாடியாக விளங்குவதும் குறிப்பிடத்தக்கது. பூசாரி கட்டுச் சொல்லுதலும், செய்வினை எடுத்தல் முதலானவையும் நடைபெற்று வருகின்றன.

பூசாரி கலையாடும் போது கையில் தேவையின் பொருட்டு பொல்லு (முன்பு தடி இப்போது இரும்பு) ஏந்தி நின்று கலையாடுவார். இது குறிப்பன் தெய்வத்தின் அடையாளமாகும். அதேவேளை இதே சிறுகுடி வேளாளரின் இன்னொரு குல தெய்வமான அண்ணமாரின் குறியீடாகவும் பிரம்பு எனும் பொருளே விளங்குவதும் குறிப்பிடத்தக்கது. குறிப்பன் வழிபாடு, அண்ணமார் வழிபாடு என்பன ஒத்திருப்பதையும் அவதானிக்க முடிகின்றது.

அண்ணமார் தெய்வம், பொல்லுக்கிழவன், சிவகுடும்பன் என அழைக்கப்படுவதும் (சண்முகலிங்கன், 2014, இலங்கை – இந்திய மானிடவியல்: 27), பூநகரியில் அண்ணமார் உள்ள இடத்தில் குறிப்பன் இல்லாதிருப்பதும் குறிப்பன் உள்ளவிடத்தில் அண்ணமார் இல்லாதிருப்பதும் சுட்டத்தக்கது. இது சாதிய உட்பிரிவு சார்ந்த விடயமாகவும் இருக்கலாம்.

நெல் விதைப்பில் இருந்து வெட்டுக் காலம் வரையும் நேர்த்தி வைக்கப்பட்டு நெல்லில் ஒரு பங்கு வழங்குதலோ, அல்லது புது நெல்லில் பொங்குதலோ குறிப்பன் வழிபாட்டில் இன்றும் காணப்படும் ஒரு வழிபாட்டு முறையாகும். மேலும் கால்நடைகள் நோயுற்றாலோ, தொலைந்தாலோ, பிரசவத்தில் சிக்கல் ஏற்பட்டாலோ அதனை நிவர்த்திக்குமாறு வேண்டி நேர்த்தி வைத்துப் பொங்குதல், காணிக்கை செலுத்துதல் போன்ற பல முறைகளும் காணப்படுகின்றன.

குறிப்பன் பரிவாரமாக இருக்கும் ஆலயங்களில், பொங்கல் காலங்களில் அவ்வாலய  முறைப்படி வளுந்து எடுக்கப்படும் போது குறிப்பனுக்குரிய வளுந்து எடுக்கும் உரிமை இச்சிறுகுடி வேளாளருக்கே வழங்கப்பட்டு வந்துள்ளமை குடிமை முறையின் உரிமை சார் பண்பாக நோக்குதற்குரியதாகும்.

முடிவுரை

குறிப்பன் வழிபாடு இன்றுவரை காணப்பட்டு வரினும், அது குறித்த சாதியைப்  பிரதிநிதித்துவப்படுத்துவதோடு குறித்த பூநகரிப் பிராந்தியத்தில் மட்டும் குறுகிப் போயுள்ளதாயினும், அது இத்தொல்நகரின் பாரம்பரியத்தின் வெளிப்பாடாக உள்ளது என்பது நோக்கற்பாலது. கால்நடையோடு தொடர்புடைய இவ்வழிபாடு விவசாய உழுதுண்ணும் சமூகத்தின் தொழில்சார் வழிபாட்டு முறைமையாக இருக்கலாம். வேளாண்குடி சமூகத்தவர் யாவரும் வணங்கும் தெய்வமாக, நம்பிக்கைக்குரிய வழிபாடாக இது காணப்படுகின்றது. பெருங்குடி வேளாளர் தமது வழிபாட்டு நிலத்தில் குறிப்பனுக்கு தனியிடம் வழங்கியதோடு அதற்கான வளந்துரிமையை சிறுகுடி வேளாளருக்கே வழங்கி உள்ளமை இதனை உறுதிப்படுத்துகின்றது. இத்தெய்வம் கால்நடை மேய்ப்பாளரின் தடியை, ஆட்டைக் குறிப்பால் உணர்த்துகின்ற (மலையக ரோதை முனி போல) தொழிற் கருவி சார்ந்த வழிபாட்டை புலப்படுத்துவதாக அமைந்துள்ளது.

சமூக நல்லிணக்கத்தின் அடையாளமாகத் திகழினும் இன்று உயர் குடியினர் தத்தம் ஆலயங்களில் தாமே வளந்தெடுத்துப் பொங்கும்முறை காணப்படுகின்றது. சில ஆலயங்களில் வளந்துப் பொருட்களையோ, காசையோ பெற்றுத் தாமே பொங்கிப் படைத்துவிட்டு சிறுகுடி வேளாளரிடம் வழங்கும் முறைமை காணப்படுகின்றது. சாதிய ஒடுக்குமுறை மற்றும் சாதிய நீக்கத்தின் வழி இன்று குறிப்பன் செல்வாக்கிழந்து வரும் தெய்வமாகவே உள்ளது. அது நிலப் பண்பாட்டோடு இணைந்த பொருளாதார வாழ்வின் அடையாளம் என்பதை நாம் மறந்து போகக்கூடாது. இன்றும் மேனிலையாக்கத்துக்கு பெரிதும் உள்ளாகாத நிலவியலோடு இணைந்த இயற்கைசார் தெய்வ வழிபாடாக இது திகழ்கின்றது.

https://www.ezhunaonline.com/the-deity-of-kurippan/

  • 3 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வன்னித்தம்பிரான் வழிபாடு

தி. செல்வமனோகரன்

அறிமுகம்

இயற்கையோடு ஒட்டி வாழ்ந்த ஆதிகாலத்தில் இருந்து விவசாயமும் கால்நடை வளர்ப்பும் மனிதர்களின் முக்கிய தொழில்களாக இருந்து வருகின்றன. குறிப்பாகத் தமிழகச் சூழலில் உருவான திணைக்குடிகள் இதற்குச் சான்றாகின்றன. வயலும் வயல் சார்ந்த நிலமும் மருதம்; அதுவே விவசாயத்தின் பூர்வீகம் என்று கூறப்பட்டாலும் முல்லை நிலமும் குறிஞ்சியும் கூட குறித்த காலகட்டத்தின் பின் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டன. விவசாயமும் கால்நடை வளர்ப்பும் தவிர்க்க முடியாத தொழில்சார் இணங்கு முறையை உடையன என்பது முக்கிய விடயமாகிறது. தமிழகத்து முல்லை நிலம் காடுகளை, அவற்றை ஒட்டியமைந்த மேய்ச்சல் நிலப் பகுதிகளைக் கொண்டவை; கால்நடை வளர்ப்புக்கு உகந்தவை. காலப்போக்கில் சிறுவேளாண்மை நிலங்கள் உற்பவிக்கப்பட்டன. வரகு, தினை முதலான தானியங்கள் நிறைவாக உற்பத்தி செய்யப்பட்டன என கலித்தொகை (53: 22: 108:3) பல இடங்களில் எடுத்துரைக்கிறது.

எருது வளர்ப்பவர்கள் அண்டர்கள் எனப்பட்டனர் (குறுந்தொகை 117:3). ஆயர் எனப்படுவோர் கோட்டினத்தாயர் (எருமை வளர்ப்பவர்), கோவினத்தாயர் (பசு வளர்ப்போர்), புல்லினத்தாயர் (ஆட்டிடையர்) என வகைப்பட்டிருந்தனர். இடையர் பல வகையினராக இருந்தனர் (குடவர், கோவலர், பூழியர், பொதுவர்). விவசாயம், கால்நடை இணைந்த வாழ்வு திணை மரபில் இருந்து மாறிய புதுவாழ்வை அளித்தது.  பிற்கால இந்தியக் கால்நடை வளர்ப்போர் மேய்ச்சல் நிலம் தேடி இடம் பெயர்ந்து சென்றனர் எனவும் அதில் ஒரு பகுதியினர் இலங்கையினை வந்தடைந்து வாழ்ந்தனர் எனவும் கருதப்படுகிறது.

மனிதர், வேட்டையாடல் – உணவுதிரட்டல் வாழ்க்கைமுறையில் இருந்து வேளாண்மை சார் வாழ்க்கைமுறைக்கு மாறியபோது, அனைத்துத் தொல்பண்பாடுகளிலும் வழக்கில் வந்த கால்நடைகளை வளர்த்தல், பேணுதல், உணவாகப் (இறைச்சி) பயன்படுத்தல் ஆகிய செயல்முறைகளின் கூட்டுத்தொழில் கால்நடை வளர்ப்பு எனப்பட்டது. இது வேளாண்மையின் துணைத்தொழிலாகிவிட்டது. கால்நடை வளர்ப்பானது, பண்பாட்டுக்குப் பண்பாடு, காலத்துக்குக் காலம் மாறிவருவதோடு, தனித்துவமான பண்பாட்டு, பொருளியல் பாத்திரத்தையும் வகிக்கிறது.

எது எவ்வாறாயினும் கால்நடை வளர்ப்போரை இடையராகவோ, ஆயராகவோ கருதும் நிலை மாறியது. அது விவசாய நிலம் சார் மக்களின் தொழிலாயிற்று. பெருங்குடி வேளாளர், சிறுகுடி வேளாளர்களின் தொழிலாயிற்று. காலனிய காலத்தில் எல்லா மக்களும் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டனர். ஆயினும் ‘பட்டி’ வளர்ப்பு குறிப்பிட்ட மக்கள் கூட்டத்தாரால் தான் இன்றுவரை மேற்கொள்ளப்படுகிறது.

மாடுகளை மேய்ச்சலுக்கு இட்டுச் செல்லும் சிறுகுடி வேளாளர் மாடு வழி தவறிச் செல்லாதிருக்கவும், நோய் நொடியின்றி பட்டி பெருகவும் பல தெய்வங்களை வழிபட்டு வந்துள்ளனர். பிராந்திய அடிப்படையில் வெவ்வேறு பெயர்கள், வெவ்வேறு வழிபாட்டு முறைகள் காணப்படினும் அவற்றின் அடிக்கட்டுமானம் ஒன்றாக இருப்பதைக் காணமுடிகிறது. எடுத்துக்காட்டாக சிறுகுடி வேளாளரின் பொதுநிலைத் தெய்வமாக அண்ணமார் காணப்படுகிறார். அவருக்குப் ‘பொல்லு’ வைத்து (தடி) வழிபடும் மரபே காணப்படுகிறது. அதையொத்து பூநகரிப் பிராந்தியத்தில் வழிபடப்படும் குறிப்பன் துவரந்தடி (பொல்லு) வைத்தே வழிபடப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கால்நடை வளர்ப்பாளர்களின் நம்பிக்கை மிகுந்த இன்னொரு தெய்வமாக வன்னித் தம்பிரான் என்கின்ற வன்னித்தெய்வம் விளங்குகிறது. இதேபோல மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் வதனமார், குமாரர், முன்னடித் தம்பிரான் வழிபாடுகளும் காணப்படுகின்றன.

இந்த ஆய்வுக்காக திருகோணமலையில் இத்தெய்வம் பற்றிய தரவுகளை நேரே சென்று திரட்ட திசானி, டிலக்சனா, கஸ்தூரி ஆகியோர் உதவினர். அதேபோல முல்லைத்தீவில் அபிஷேகன், கனுசியா போன்றோரின் உதவி கிடைத்தது.

வன்னித்தம்பிரான் 

இந்தியாவில் இருந்து இலங்கை வந்த வதனமார்களில் ஒருவரான வன்னித் தம்பியே வன்னித் தம்பிரான் என வழங்கப்படுவதாக அறியமுடிகிறது. வேளாள சமூகத்தின் ‘வன்னியர்’ தெய்வ வழிபாடு இலங்கையின் பல பாகங்களிலும் காணப்படுகிறது. அவ்வழிபாடும் இவ்வன்னித் தம்பிரான் வழிபாடும் ஒன்றா என்பதைச் சரிவர அறியமுடியவில்லை. தம்பிரான் என்பதற்கு பெரியவர், தலைவர், மதிப்பிற்குரியவர் என்ற பொருள்கள் உண்டு (உதாரணம் பெரியதம்பிரான், நாகதம்பிரான்). வன்னியர்களின் தலைவனாகவோ அல்லது வன்னியர்களின் வழிவந்த வழிபடு தெய்வமாகவோ வன்னித்தம்பிரான் வழிபாடு வந்திருக்கலாம்.

1) வதனமார்களும் வன்னித் தம்பிரானும்

‘வதனமார் குழுமாடு கட்டு அகவல்’ எனும் நூலில் (ஈழத்துப் பூராடனார்: 2000) “சுவாதியம்மனின் மகனார் மங்கலனார், வதனமார் பதின்மரோடும் யானை, காலி (குழுமாடு/ குழுவன்) பிடிக்கின்ற செயலுக்காய் வில்லம்பு, செல்லை, வெளுக்கயிறு, கோடாலி, கிருசவடி, மேல்வளைந்த கோடரி (கோடரி), எல்லையில்லாப் பொல்லு என்பவற்றை எடுத்துக்கொண்டு, அவர்களது நாடான அயோத்தியில் இருந்து புறப்பட்டு ‘இராவணனாராண்ட’ இலங்கையை வந்தடைந்தனர்” எனக் கூறப்படுகின்றது. அவர்களுள் ஒருவரே வன்னித் தம்பிரான் என கிழக்கிலங்கை மக்களால் நம்பப்படுகிறது.

2) மாருதப்புரவீகவல்லியும் வன்னித்தம்பிரானும்

தமிழ்நாட்டிலிருந்து மாருதப்புரவீகவல்லி என்னும் இளவரசி, தன்னைப் பீடித்திருந்த நோயைத் தீர்ப்பதற்காக இலங்கையின் வடபகுதிக்கு வந்தார். அந்நோய் தீர்ந்தபின், வன்னி என அழைக்கப்படும் அடங்காப்பற்றுப் பகுதியை ஆண்டுவந்த உக்கிரசிங்கசேனன் என்பவரை மணந்து இலங்கையிலேயே தங்கிவிட்டார். வையாபாடல், இவர்களுக்குப் பிறந்த மகனின் திருமணத்துக்காக, மதுராபுரியில் இருந்து பெண் ஒருவரை அழைத்துவந்தபோது, அவளுடன் 60 வன்னியர்கள் வந்ததாகக் கூறுகின்றது. இவர்கள் அடங்காப்பற்றுக்கு அனுப்பப்பட்டு அப்பகுதிக்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்டபோது இலங்கைக்கு மேலும் பல வன்னியர்களை இவர்கள் அழைத்து வந்துள்ளனர். முல்லைத்தீவில் குடியேறிய முல்லை மாலாணன், சிவலை மாலாணன், சருகி மாலாணன், வாட்சிங்கராட்சி போன்ற வன்னியர்களின் பெயர்கள் வையாபாடலில் கூறப்பட்டுள்ளன.

வன்னி – அடங்காப்பற்றின் பூர்வகுடிகளினால் ஏற்பட்டு வந்த தொல்லைகளின் காரணமாக, அவர்களை அடக்குவதற்காகவும், தமிழ்நாட்டிலிருந்து பல வன்னியர்கள் அங்கு அழைக்கப்பட்டுள்ளார்கள். வையாபாடலில், ‘கறுத்தவராயசிங்கம், தில்லி, திடவீரசிங்கன், குடைகாத்தான், முடிகாத்தான், வாகுதேவன், மாதேவன், இராசசிங்கன், இளஞ்சிங்கவாகு, சோதையன், அங்கசிங்கன், கட்டையர், காலிங்கராசன், சுபதிட்டன், கேப்பையினார், யாப்பையினார், ஊமைச்சியார், சோதிவீரன், சொக்கநாதன், இளஞ்சிங்கமாப்பாணன், நல்லதேவன், மாப்பாணதேவன், வீரவாகு, தானத்தார், வரிப்பத்தார்’ ஆகிய 24 பேர் அழைக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்களில் சிலர் பளை, கரைப்பற்று, கச்சாய், கருவாட்டுக்கேணி, கட்டுக்குளம் போன்ற இடங்களில் குடியேற, வேறு பலர் திருகோணமலை, மட்டக்களப்பு மாவட்டப் பகுதிகளிலும் குடியேறினர். யாழ்ப்பாணத்திலும் சிலர் குடியேறினர். இன்னும் சில வன்னியர் கணுக்கேணி, முல்லைத்தீவு, தனிக்கல்லு, கிழக்குமூலை, மேற்குமூலை ஆகிய இடங்களில் ஆட்சிசெலுத்தி வந்த பல்வேறு பூர்வகுடிச் சாதியினரைத் தோற்கடித்து, அப்பகுதிகளைத் தாங்களே ஆண்டு வந்துள்ளனர்.

3) திருகோணமலையில் வன்னித் தம்பிரான் பற்றிய கதைகள்

வதனமார் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வந்ததாகவும் இலங்கையில் திருகோணமலையில் முதலில் இறங்கியதாகவும் சொல்லப்படும் அதேவேளை, இவர்களின்  பொழுதுபோக்காக யானை, குதிரைகளை அடக்குதல் என்பன இருந்து வந்துள்ளன. அவர்களில் மொத்தமாக ஏழு பேர் இருந்துள்ளனர். அவர்களில் வன்னித்தம்பி என்ற ஒருவர் பாலை மரத்தில் தேனைக் கண்டு அதனை தான் மட்டும் குடித்துவிட்டார். அவ்வேளை இவரைக் காணாது தேடி வந்த மற்ற ஆறு பேரும், இவர் தான் மட்டும் தேனை அருந்தியிருப்பதைக் கண்டு கோபமுற்று, இங்குள்ள கால்நடைகளுக்குப் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும், பாதிப் பழமோ அல்லது பாக்கோ வைத்தால் கூட, அதனையும் ஏற்றுக்கொண்டு நன்மை செய்ய வேண்டும் என்றும் அவருக்குச் சாபமிட்டனர் (பூசாரி நல்லையா தவராசா).

இவ்வழிபாடானது கிருஷ்ண அவதாரத்துடன் இணைத்துப் பேசப்படுகின்றது. அதாவது கிருஷ்ணவதாரத்தில் எவ்விதம் கிருஷ்ணர் பசுக்களைக் காத்து வந்தாரோ அதனைப் போல தங்களுடைய கால்நடைகளையும் பாதுகாப்பவராக இவர் கருதப்பட்டு வழிபடப்படுகின்றார். பசுக்கள் பெருகுவதற்காக வழிபடப்படும் இவரிடமே எருமை மாடுகள், பசுமாடுகள் என அனைத்தும் இருந்துள்ளன. இவர் காளை மாடுகளைச் சாந்தமாக்குதல், காட்டு மாடுகளைப் பிடித்து வைத்தல் போன்றவற்றினைச் செய்பவராகவும் கருதப்படுகின்றார். நம் மக்கள் எல்லாம் பால் கறப்பதில்லை. பால் வேண்டுமெனில் ஏனத்தைக் (பாத்திரத்தை) கொண்டு சென்று மாடுகள் உள்ள வழியில் வைப்பர். பின்னர் ‘கூ’ என்ற சத்தம் கேட்கும். சிறிது நேரம் கழித்துச் சென்று பார்த்தால் ஏனத்தில் பால் நிறைந்திருக்கும். இவ்வாறு இருக்க, ஒரு சமயம் வண்ணார் குலத்தைச் சார்ந்த ஒருவரும் மற்றொருவரும் பால் கறப்பவர் யார் என்பதனை அறிய வேண்டும் என்ற ஆர்வத்தில் ஏனத்தை பசுக்கள் செறிந்துள்ள இடத்தில் வைத்துவிட்டு, காட்டில் ஒளிந்திருந்து பார்த்தனர். சிறிது நேரத்தில் அந்த ஏனத்தில் பால் நிரம்பி வழியத் தொடங்கியது. அவ்வேளையில் ஒளிந்திருந்த அவ்விருவரும் போதும் என்று சொன்னதால் பாலுடன் ஏனமும் இல்லாமல் போனது. அன்றிலிருந்து பால் கொடுப்பதில்லை. அப்போதுதான் இவர் தனிப்பட காட்டிற்குச் சென்று இந்தப் பூசையைச் செய்கின்றார். ஏனெனின் அவரின் அம்மாசுவாதி அம்மன் ‘நீ அங்கே, இங்கே போய் ஒன்றும் கேட்கக்கூடாது. பிறரின் பட்டியில் போய் பாலும் எடுக்கக்கூடாது. முழுப்பேரும் கொண்டு வந்து வெள்ளி, சனிக்கிழமைகளில் உனக்குப் பரமுதம் செய்து தருவார்கள். அதை இல்லையென்று சொல்லாமல், அங்கே போய் பரமுதத்தைச் செய்துட்டு, சாப்பிட்டு வா’ என உரைத்ததாக நம்பப்படுகிறது.

தினகரன் பத்திரிகையில் 2014.11.16 அன்று வெளிவந்த தாழை செல்வநாயகம் என்பவர் எழுதிய ‘கிளிச்சிறாம்பி’ எனும் சிறுகதையில் உயிர்களைக் காப்பாற்றும் தெய்வமாக வன்னித்தம்பிரான் குறிப்பிடப்படுகின்றார்.

வன்னித்தம்பிரான் வழிபாடு

இன்று வன்னித் தம்பிரான் வழிபாடு திருகோணமலையில் சம்பூர், கிளிவெட்டி முதலான ஊர்களில் செல்வாக்குப்பெற்றுக் காணப்படுகிறது. வன்னித் தெய்வம் என்ற பெயரில் முல்லைத்தீவில் குமுழமுனை, ஆண்டாங்குளம் பகுதியில் உள்ள காட்டில் இவ்வழிபாடு காணப்படுகிறது. ஏலவே கூறியது போல மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் வதனமார் வழிபாடு காணப்படுகிறது. அத்தெய்வத்துக்கான வழிபாட்டு முறையும் வன்னித் தம்பிரான் வழிபாட்டு முறையும் ஒத்த தன்மையுடையவை. அதேபோல மட்டக்களப்பில் காணப்படுகின்ற ‘முன்னடித் தம்பிரான் வழிபாடு, குமார தெய்வ வழிபாடு’ என்பன வன்னித்தம்பிரான் வழிபாட்டுடன் முழுமையாக ஒத்தமைந்தமை என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகச் சூழலில் இவ்வழிபாடு இருப்பதாகத் தெரியவில்லை.

I-1-9.jpg

வன்னித் தம்பிரானுக்கெனத் தனிக்கோயில் எதுவும் இல்லை. காட்டின் ஒரு புறத்தில் பற்றைகள் வெட்டப்பட்டு ஒரு மரத்தை மையமாகக் கொண்டதாக இவ்வழிபாடு நிகழ்த்தப்படுகின்றது. குறிப்பாக பாலைமரம் அல்லது ஆலமரம் முதன்மைப்படுத்தப்படுகின்றது. முல்லைத்தீவில் வெள்ளைக்கல் ஒன்று பாலை மரத்தடியில் வைத்து வழிபடப்படுகிறது.

வழிபாட்டு முறைகள்

வன்னித்தம்பிரானுக்கான சடங்குகளானது தை, மாசி, பங்குனி மாதங்களிலேயே பெரும்பாலும் செய்யப்படும். இவை கால்நடைகளுக்கு நோய் தாக்காது இருக்கவும் காணாமல்போன கால்நடைகளைத் திரும்பப் பெறுவதனையும் நோக்காகக்கொண்டு ஆற்றப்படுகின்றதெனலாம். மாடுகள் கன்று போட்டதன் பின்பு அவை கறக்கும் பாலினை வீட்டிற்குக் கொண்டு வந்து காய்ச்சி, அதிலிருந்து வருகின்ற பாலாடை, நெய் என்பவற்றினை எடுத்து, அதில் விளக்கேற்றி இச்சடங்குகள் ஆற்றப்படுகின்றன. அந்தக் காலத்தில் வரும் பாலினை விற்க மாட்டார்கள். வீட்டிற்குக் கொண்டுபோய் வன்னித் தம்பிரானுக்காக நெய் எடுத்து அதில் விளக்கேற்றி, உறி போட்டு, பாலை மரத்திற்கு அடியில் அந்த உறியில் முக்காலியைக் கட்டி, அதில் மடை வைத்து, பின்பு தேங்காய்ப் பாலில் பொங்கி, பானையை மூடி வைப்பர். அப்பானை திறக்கப்பட மாட்டாது. எனினும் தேங்காய்ப் பால் நன்கு பொங்கி வரும்வேளை, அதனை உறியில் வைத்து வெற்றிலை மடை மட்டும் வைக்கப்படுமேயன்றி வேறு மடைகள் பரப்பப்படமாட்டாது. பானையோடு தூக்கி முக்காலி மாதிரி உறியில் வைத்து கொஞ்ச நேரம் வெளியில் தள்ளி நின்றுவிட்டு சிறிது நேரம் கழித்து வந்து, கற்பூரம் கொளுத்தி பூசை செய்து முடிப்பார்கள். அதுமட்டுமன்றி வன்னித் தம்பிரானுக்கு வீட்டில் இருக்கும் பறங்கி வாழையை நேர்ந்து கட்டுவதுண்டு. அந்த வாழை உரிய நேரத்தில் பெரிய குலை போடும் என்ற நம்பிக்கையும் உண்டு. மேலும் அந்த வாழைக்குலையிலிருந்த வரும் பழத்தைக் கொண்டுவந்து தான் இங்குள்ள மடையில் வைப்பார்கள். இங்கு படைக்கப்படும் எந்தப் பொருளும் வீடுகளுக்குக் கொண்டுசெல்லப்பட மாட்டாது. அதுமட்டுமன்றி பெண்கள் இவற்றினைச் சாப்பிடுவதும் கிடையாது (பூசாரி நல்லையா தவராசா).

மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் வதனமாரில் ஒருவரான முன்னடித் தம்பிரான் தெய்வத்திற்கு பெரிதாக பந்தலினை அமைத்து, இலை-குழைகளினால் அலங்கரித்து வழிபாடியற்றப்படும். இதில் பச்சை அரிசியினையும் பாலினையும் சேர்த்துப் பொங்கல் செய்வர். அதில் வேறெந்தப் பொருளும் சேர்க்கப்படமாட்டாது. அகப்பையினைப் பயன்படுத்தாமல் பொங்கலைப் பொங்க வேண்டும். வாழைப்பழத்தினைக் குலையோடு பந்தலில் வைத்து வெற்றிலை, பாக்கு, பூக்கள் என்பவற்றினையும் மடையில் வைத்து வழிபாட்டினை ஆரம்பிப்பர். ஆண்டுதோறும், மாடு முதற் கன்று ஈன்றதும், பட்டிக்காரர்களால் இளங்கன்றுப் பால் எடுத்து பொங்கல் செய்யப்படும். இளங்கன்று  வளர்ந்த பிற்பாடு அதன் பாலை எடுத்துச் சடங்கு செய்வர். இது ‘முதியான் கன்றுப் பால்’ எனப்படும். இரு தடவை செய்ய முடியாதவர்கள் ஒரு தடவை மாத்திரம் செய்யும் சந்தர்ப்பங்களும் உண்டு. பந்தல் போட்டு அப்பந்தலில் முக்காலி கட்டி அம்முக்காலியிலும் பொங்கல், பழம் என்பன படைக்கப்படும். இச்சடங்கானது முறையாகப் பூசாரியினால் செய்யப்பட்டால் முன்னடித்தம்பிரான் பூசாரியினுள் வெளிப்படுவார். பொங்கலைப் படைத்துவிட்டு காட்டிலேயே அதனை விட்டு வருவர். அதனை வீட்டிற்கு எடுத்து வரமாட்டார்கள். பின்னர், படைத்த பொங்கலை காட்டிற்குச் சென்றுதான் உண்ண வேண்டும் என்ற கட்டுப்பாட்டினை விதித்துள்ளனர். குறிப்பாக வீட்டிலுள்ள பெண்கள், குழந்தைகள் இப்பொங்கலை உண்ணக்கூடாது (ஈழத்துப் பூராடனார், 2000). இந்த அடிப்படையில் வன்னித் தம்பிரான் வழிபாடும் முன்னடித்தம்பிரான் வழிபாடும் ஒன்று என்றே கருதத் தோன்றுகிறது.

குமுழமுனைப் பூசாரி தியாகசோதி சந்திரன், தை மாதத்தில் காடுவெட்டி நிகழ்த்தப்படும் வழிபாடாக இதனைக் குறிப்பிடுகின்றார். அவர் கூறுவதன்படி, அது பட்டிப்பொங்கலை அண்மித்து வருதலை அவதானிக்க முடிகிறது. உரிய பூசைத்தினத்திற்கு முதல்நாள் உரல், உலக்கை, சுளகு, நெல் உள்ளிட்ட நெல் குற்றலுக்குத் தேவையான பொருட்களை எடுத்துச் சென்று மஞ்சள் நீரினால் கழுவி, நெல்குற்றும் மரத்தடியைத் தூய்மைப்படுத்தி அவ்விடத்தில் வைத்துக் குற்றிய பின், அரிசியை அம்மரத்திலேயே பாதுகாப்பாகக் கட்டி வைத்துவிட்டு வருவர். பெண்கள் புழங்கிய (பயன்படுத்திய) பொருட்களைப் பயன்படுத்துவதில்லை அல்லது அவற்றை மஞ்சள் நீரால் தூய்மைப்படுத்தி எடுத்துச் செல்வர். இச்சடங்கிலும் வழிபாட்டிலும் பெண்களை எந்த வகையிலும் சம்பந்தப்படுத்த முடியாது – கூடாது என்பது இவ்வழிபாட்டின் நியதியாகக் காணப்படுகிறது.

I-2-11.jpg

பட்டியில் உள்ள எருது, பசு என்பவற்றில் இருந்து பெறப்பட்ட பாலை நெய்யாக்கி, அதனையும் பாலையும், குற்றித் தீட்டிய அரிசியோடு சேர்த்துக் கட்டி, ஒரு வருடம் நிறைவுற்ற தேங்காயையும் சொட்டுகளாக்கி (துண்டுகளாக்கி), புனிதமாக்கப்பட்ட பானையில் இட்டுப் பொங்குவர். பொங்கலுக்கு நீர் விடப்படுவதில்லை. பானையில் அகப்பையிட்டுக் கிண்டாது இப்பொங்கல் நிகழ்த்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

இம்மக்கள் தங்கள் வயல்களையும் கால்நடைகளையும் காக்குமாறு வேண்டி வயல்களின் எல்லைகளிலும் மேய்ச்சல் நிலங்களின் – கிராமங்களின் எல்லைகளிலும் காஞ்சுரம் மரத்தில் இருந்து வெட்டியெடுக்கப்பட்ட வலிதான ஒன்றரைப் பாகம் (ஏறத்தாழ ஆறடி) கட்டையை (தடி) நிலத்தில் அடித்து நிறுத்துவர். பின் தென்னை மரத்தில் இருந்து பழுத்து விழுந்த தேங்காய் ஒன்றைத் தெரிவு செய்து மஞ்சள் நீரில் கழுவித் தூய்மைப்படுத்திய பின் திருநீறு, சந்தனம் இட்டு வன்னித் தம்பிரானுக்கு நேர்ந்து, இக்காஞ்சுரங் கட்டையில் கட்டிவிடுவர். இதன் வீரியம் ஒரு வருடத்திற்கு இருக்கும். ஒரு வருட நிறைவில், இத்தெய்வத்திற்கான பொங்கலில் இத்தேங்காயை உடைத்துத் துண்டுகளாக்கி இடுவர். பின்னர், மீளவும் நேர்ந்து தேங்காய் கட்டப்படும். இவ்வாறு தேங்காய் கட்டப்படுவதனால் தமது வயலும் பயிரும், கால்நடைகளும் பாதுகாக்கப்படுவதாக இன்றும் நம்பப்படுகிறது. இவ்வழக்கம் குமிழமுனையிலேயே காணப்படுகிறது.

I-3-11.jpg

I-6-2.jpg

இந்தத் தெய்வத்துக்கான பூசையின் போது தெய்வமாடினும், குறி சொல்லும் வழக்கம் இல்லை. பூசையின் முடிவில் பூசாரி அடியவர்களுக்கு நெற்றியில் நீறிட்டு ஆசிர்வதிப்பார். முல்லைத்தீவு குமுழமுனையில் படையல்களைத் தட்டுவம் என்கிற பனையோலையில் படைப்பதும், தட்டுவத்திலிட்டே பிரசாதத்தை உண்பதுமான வழக்கம் காணப்படுகிறது. திருகோணமலையில் இலையில் படையலிடும் வழக்கமே காணப்படுகிறது.

I-4-5.jpg

சில அவதானிப்புகள்

  • வதனமார்களில் ஒருவராகவே வன்னித்தம்பிரான், முன்னடித்தம்பிரான் ஆகியோர் சுட்டப்படுகின்றனர்.

  • வதனமார், குமாரதெய்வச் சடங்குகளில் கட்டுக் கூறப்படும். வன்னித் தம்பிரான் தெய்வமேறினும் கட்டுக் கூறுவதில்லை.

  • ஏனைய தெய்வங்களோடு வதனமார், குமார வழிபாடுகள் இணைக்கப்பட்டுள்ள நிலையில், வன்னித்தம்பிரான் வழிபாடு தனித்தே இன்றும் இடம்பெறுகிறது.

  • குமார வழிபாடு, இல்லங்களிலும் நிகழ்த்தப்படுகிறது. வதனமார் தெய்வம் காளி, வைரவர், மாரி கோயில்களில் காவல் தெய்வமாக அமைந்துள்ளது. வன்னித்தம்பிரானோ இன்றும் காடுகளில் வைத்தே வழிபடப்படுகிறார்.

  • பூசைக்காலம் முழுவதும் மௌனமாகவே யாவரும் கலந்து கொள்ள வேண்டும். அதேவேளை பூசாரி வாய் கட்டிப் பூசை செய்தல் நீண்டகால மரபாக இருந்து வருகிறது. ஆயினும் முல்லைத்தீவு குமுழமுனை வன்னித்தம்பிரான் வழிபாட்டில் தற்போது வாய் கட்டிப் பூசை செய்யப்படுவதில்லை.

  • அந்தரத்தில் முக்காலியோ, அன்றிச் சிறுபரணோ அமைத்துப் படையல் வைப்பதும், பொங்கலைப் பானையோடு வைத்தே படைப்பதும் பொதுப்பண்பாக உள்ளது.

  • திருகோணமலைப் பிரதேசத்தில் வன்னித்தம்பிரான் முன்பு பரணிட்டு அதன் மேல் குழைகளைப் பரவி, அதன்மீது பெரிய காட்டிலைகளில் அல்லது வாழையிலைகளில் படையலை வைத்துப் படைக்க, முல்லைத்தீவில் பனையோலையிலான தட்டுவத்தில் வைத்துப் படைக்கின்றனர்.

  • பூசாரி படையலுணவை முதலுண்ணத் தொடங்குவார். ஏனையோர் அதன் பின் உண்ணத் தொடங்குவர். முழுவதும் உண்ணப்பட வேண்டும் என்பதோடு பூசாரி இடத்தைவிட்டு எழுந்த பின்பே ஏனையோர் எழமுடியும்.

  • ஆண்கள் மட்டுமே பங்குபற்றும் வன்னித்தம்பிரான் பூசையில் பெண்களுக்கு இடமில்லை என்பது மட்டுமல்ல, அவர்கள் அளைந்த பொருட்களைப் பாவிக்கக்கூடாது; அன்றிப் புனிதப்படுத்திப் பாவிக்க வேண்டும்.

முடிவுரை

ஈழத்தில் வடக்குக் கிழக்குப் பிராந்தியங்களில், குறிப்பாக திருகோணமலை, முல்லைத்தீவுப் பிராந்தியங்களில் காணப்படும் கால்நடை, விவசாய கலப்புத்தொழில் செய்கின்ற மக்களின் வழிபடு தெய்வமே வன்னித்தம்பிரான். இவர் வன்னித் தெய்வம் எனவும் சுட்டப்படுகின்றார். காடுகளில் வைத்து வழிபடப்படுகின்ற, உருவமற்ற மரங்களில் வீற்றிருக்கும் தெய்வமாக இது கருதப்படுகிறது. இதனால் படையல்களும் உயரமான இடத்தில் –  அந்தரத்தில் வைத்தே வழிபடப்படுகின்றன. இது வதனமார் வழிபாட்டோடு இணைந்த கதையாடல்களையும் வழிபாட்டு மரபுகளையும் கொண்டு அமைவதோடு, முன்னடித்தம்பிரான் வழிபாட்டோடு ஒத்தமைந்ததாகவும் காணப்படுகிறது. ஒரேவிதமான அடிப்படையில் ஒன்றான இத்தெய்வம், பிராந்தியப் பண்பியலுக்கேற்ப மாறுபட்டுக் காணப்படுவதாகவே எண்ணத் தோன்றுகின்றது. ஈழத்துக்கான வன்னியர் மரபோடும் இது இணைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. கால்நடையோடு இயைந்த விவசாயம் என்பது இன்று வேளாண்மையாகக் கருதப்படுவதற்கான முன்னோடி வாழ்வின் விளைவே வன்னித்தம்பிரான் வழிபாடு ஆகும். ஆயினும், இன்று நிலவியல்சார் பிரச்சினைகளால் கால்நடை வளர்ப்பு அருகி வருகிறது. கால்நடை வளர்ப்பில் உள்ள சவால்கள் (மேய்ச்சல் நிலமின்மை, அபகரிப்பு, குடியேற்றம்), ஆர்வமின்மை, நவீன வாழ்வு, இதனைத் தாழ்வாகக் கருதுதல் முதலான பல சிக்கல்கள் இதற்கு ஏதுவாகின்றன. இதனால் வன்னித் தம்பிரான் வழிபாடும் அருகி வருகின்றது.

https://www.ezhunaonline.com/vannithampran-worship/

  • 4 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இளந்தாரி வழிபாடு

தி. செல்வமனோகரன்

அறிமுகம்

எந்த உயிரியின் பரிணாமத்திலும் வளர்ச்சியிலும் இளமைப் பருவம் முக்கியமானதாகும். மனிதரில் இளைஞர்களை வாலிபர், இளைஞர் – இளந்தாரி என்று சுட்டுதல் வழக்கம். போர், காதல், உழைப்பு என எல்லாத்தளங்களிலும் இளமை தவிர்க்க முடியாத பிரதானமான அம்சமாகத் திகழ்கிறது. வாழ்வில் துடுக்குத்தனமும் அளவற்ற செயற்பாடுகளும் உடைய அப்பருவம் ஒவ்வொரு மனிதராலும் மறக்க முடியாத ஒன்றாகும். போரிலும் வீரத்திலும் ஆற்றலிலும் இளந்தாரிப் பருவம் தவிர்க்க முடியாத பருவமாகின்றது. மண், பொன், காதல் என்பவற்றுக்காகத் தன்னை அழித்துக் கொள்கின்ற – தியாகித்துக் கொள்கின்ற பருவமும் இதுதான். அதீத கோபம் இதன் தவிர்க்க முடியாத குணமாகின்றது. ஆதலால் விபரீத முடிவுகளையும் இது எடுத்துவிடுகிறது. நாட்டுப்புறவியல் ஆய்வில் ஈழத்துப்புலத்தின் தனித்துவமான தெய்வங்களுள் ஒன்றாக இளந்தாரி காணப்படுகின்றார்.

இளந்தாரி எனும் தெய்வம்

இளந்தாரி எனும் சொல்லை வாலிபனைக் குறிக்கும் சொல்லாகவே அகராதிகள் சுட்டுகின்றன. ஆனால் பஞ்சவன்னத் தூது ‘குலதேவன், ஊரை என்றும் காக்கும் தெய்வம், செஞ்சடா முடித்தேவன், மாதர் போற்றும் அண்ணல், கரந்தை சூடி அருள்புரிதூயன், கறையர் கண்டன், அருள் பெற்ற தெய்வம், கந்தமாமலரப் பொற்பதன், நற்றவர் போற்றும் மெய்த்தெய்வம், எத்திசையும் புகழ் – கருணை சேரும் கைலாயன்’ எனப் பலவாறு சுட்டுகிறது.

இளந்தாரி வழிபாடு இடம்பெறும் இடங்கள்

பொதுவில் இணுவிலில் மட்டுமே இளந்தாரி வழிபாடு காணப்படுவதாக நூல்களிலும் சமூக வலைத்தளங்களிலும் எழுதப்பட்டிருப்பதைக் காணமுடிகிறது. இளந்தாரி வழிபாட்டுக்கான பெருங்கோயில் இணுவைப் பேரூரிலேயே இருப்பதாக தமிழ்வேள் க.இ.க. கந்தசாமி குறிப்பிடுவது உண்மைதான். ஆயினும் இளந்தாரி வழிபாடு வன்னியில் – பூநகரியில் இருந்து மன்னார் செல்லும் வழியில் உள்ளமைந்திருக்கும் ஊர்களான கிராஞ்சி, வேரவில், கல்லாவில் போன்றவற்றிலும் காணப்படுகின்றது.

I-1-14.jpg

I-2-12.jpg

சாமுவல் லிவிங்ஸ்ரன் (Samuel Livingston) தனது ‘The Sinhalese of  Ceylon and The Aryan Theory’ எனும் நூலில் அனுராதபுர மாவட்டத்தில் உள்ள ‘கலாவெவ’ குளம் உள்ளிட்ட குளங்களுக்குக் காவல் தெய்வமாக ‘Kadavara, Ilandari deviyo’ என்பன காணப்படுவதாகக் குறிப்பிடுகின்றார். இங்கு குறிப்பிடப்படும் இளந்தாரி தெய்யோ என்பது குளத்தோடு தொடர்புபட்டதாகவும், அவ்வழிபாடு அனுராதபுரத்தில் நிகழ்ந்ததாகவும் காணப்படுகின்றது (P.34). தவிர, இங்கு இடம்பெறும் காடவர – காட்டுவைரவராகச் சுட்டப்படுகின்றார். வரணியில் உள்ள குருநாத சுவாமி கோயிலில் ‘இளந்தாரி’ வைரவர் எனும் தெய்வம் பரிவாரமாக இருப்பதை அந்த ஆலயத்தின் பூசாரியும் ஸ்ரீபாத தேசிய கல்வியியல் கல்லூரி விரிவுரையாளருமான சி.கா. கமலநாதன் எமக்கு உறுதிப்படுத்தினார். அது காவல் தெய்வமாகவே கருதப்படுகிறது.

அதுபோல புங்குடுதீவில் இளந்தாரி நாச்சியார் கோயில் என்கின்ற மடத்துவெளி பாலசுப்பிரமணியர் கோயில் இன்றும் சிறப்புடன் திகழ்கிறது. நானூறு வருடப்பழமை கொண்ட இக்கோயில் இளந்தாரி நாச்சியார் கோயில் என அழைக்கப்பட்டமைக்கான தெளிவான காரணமெதனையும் அறிய முடியவில்லை.

மட்டக்களப்புத் தேசத்தில் வழக்கத்தில் உள்ள வதனமார் வழிபாட்டோடு இணைந்த இலக்கியங்களில் ஒன்றாகவும், வழிபாட்டில் பாடப்படுவதாகவும் உள்ள ‘வதனமார் குழுமாடு கட்டு அகவலில்’ பத்துப்பாலர் பிறந்த பாடலின் பின் “பிறந்து வளர்ந்தாரோ பெரிய இளந்தாரி பத்து வயதும் பதினாறுஞ் சென்ற பின்பு” என வரும் வரிகள் மங்கலனாரை பெரிய இளந்தாரியாகச் சுட்டி வழிபடுதலைக் குறிக்கின்றது. குழு மாடுகளைப் பிடித்து பட்டியில் உள்ள ஏனைய மாடுகளோடு இணைத்து விடுதல் வழக்கம். இது ஒரு வீர விளையாட்டாகவும் கருதப்படுகின்றது. குழுமாட்டினைப் பிடிக்கச் செல்லும் வதனமாரை ‘இளந்தாரிமார் கூட்டம்’ எனச் சொல்வதாக ஈழத்துப் பூராடனார் (2000) குறிப்பிடுதல் கவனத்திற்குரிய ஒன்றாகும்.

ஆக இளந்தாரி எனும் வழக்காறு இளைஞர்களைக் குறிக்கின்றது எனப் பொதுவில் குறிப்பிடப்படினும் இது இளந்தாரியான தெய்வத்தைக் குறிக்க நாட்டாரியலில் பயன்படுத்தப்படுகின்றமையையும், இளந்தாரி தெய்வம் ஈழத்துக்கே உரிய தெய்வமாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இணுவில் இளந்தாரி கோவில் பற்றிய ஆய்வை நண்பர்களான கோ. விஜிகரன், கு. டனிஸ்ரன் ஆகியோருடனும், கிராஞ்சி, வேரவில் பிராந்திய இளந்தாரி கோவில்கள் பற்றிய கள ஆய்வினை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை விரிவுரையாளர் சி. செரஞ்சன், ஆய்வு ஆர்வலர் கோ. விஜிகரன் ஆகியோரின் துணையோடும்  மேற்கொண்டோம்.

இளந்தாரி பற்றிய கதைகள்

1. யாழ்ப்பாண அரசர் காலத்தில் இணுவைப் பேரூரின் அரசனாக விளங்கியவர் காலிங்கராயன் என்பவர். காலிங்கராயனின் பின் ஆட்சிக்கு வந்த அவனுடைய மகனே கைலாயநாதன் என்கின்ற இளந்தாரி ஆவான். உடலுறுதி உள்ள துடிப்பான இளைஞர்களை இளந்தாரி என்று அழைப்பர். இவனது வீரம், கொடை, விருந்தோம்பல், ஆட்சித் திறன், இறைவழிபாடு ஆகிய சிறந்த பண்புகளையும் வரலாற்றுச் சிறப்புகளையும் கைலாயநாதன் பஞ்சவன்னத் தூது நூலாலும் செவிவழிச் செய்திகளாலும் அறிய முடிகிறது. இளந்தாரி, தனது உலகு நீத்தலை மக்களுக்கு முன்பே குறிப்பாக உணர்த்தியிருந்தார் எனவும், ஒருநாள் ஒரு புளியமரத்தின் வழியே உருக்கரந்து விண்ணுலகு சென்றார் எனவும் கூறப்படுகிறது. அதனை அறிந்த மக்கள் அங்கு அவரைத் துதித்தனர் என்றும், இளந்தாரி அம்மக்கள் முன் தோன்றி அருளினார் என்றும் இணுவில் சின்னத்தம்பிப் புலவர் இயற்றிய ‘கைலாயநாதன் பஞ்சவன்னத் தூது’ நூலில் கூறப்படுகிறது.

2. சாதாரண சனங்களை நேர்கண்டபோதும், இணுவில் இளந்தாரி கோயில் பூசாரியாக இருந்த ஆறுமுகராசாவின் மனைவி சின்னாச்சி (வயது 94) என்பவரை நேர்காணல் செய்த போதும் கூறப்பட்ட கதை வேறாக இருந்தது. இணுவில் கிழக்கில் கிணறு வெட்டுவதற்காக ஒரு குடும்பம் ஏழாலையிலிருந்து துலா கொண்டுவந்து வேலை செய்தார்கள். தாய் – தந்தையர், இரு இளந்தாரி மகன்கள் என அந்தக் குடும்பம் காணப்பட்டது. ஒருநாள் வீட்டில் நின்ற கன்று தாய்ப் பசுவில் பாலைக் குடித்துவிட்டது. தாயார் குளிப்பதற்கு இவர்கள் கிணற்றிலிருந்து நீரும் அள்ளிக் கொடுக்கவில்லை. இதனால் இரு இளந்தாரி மகன்மாரையும் தந்தையார் கடிந்து கொண்டார். இதனால் இவ்விரு இளந்தாரிகளும் கோபித்துக்கொண்டு புளியமரத்தில் ஏறிக் காணாமல்போன அற்புதம் நிகழ்ந்தது. இவர்களுக்கு உதவியாளராக இருந்தவர் “நான் என்ன செய்ய” என அவர்களிடம் கேட்க “நீ பனையில் ஏறு” என்று அந்த இருவரும் கூற, அவரும் சற்றுத் தூரத்தில் இருந்த பனை மரத்தில் ஏறிக் காணாமல் போனார். மக்கள் யாவரும் திகைத்து வணங்கி நிற்க “எமக்கு காய்மடை, பூமடை வைத்து வழிபடுங்கள் நல்லன நிகழும்” என புளிய மரத்தடியில் அசரீரி கேட்டது. அன்றிலிருந்து இவ்வழிபாடு நிகழ்ந்து வருகின்றது.

இங்கு இளந்தாரிகள் இருவரும் வேளாளர் சமூகத்தவராகவும் பனையில் ஏறியவர் பள்ளர் சமூகத்தவராகவும் இருந்தனர். தாமேறிய மரத்தில் அவரை ஏற்றாதது அக்காலச்சமூகத்தில் இருந்த அடுக்கமைவின் இறுக்கத்தை தெற்றெனப் புலப்படுத்துகிறது. இளந்தாரிகளை வேளாளரும், பனையில் ஏறியவரை அவரது சமூகத்தவரும் ஆதரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இன்று பனைமரம் இல்லை. அதில் வளர்ந்த ஆலமரமே உண்டு. அவர் அண்ணமாராக பொல்லு வைத்து வழிபடப்படுகின்றார். இளந்தாரி கோயிலில் புளியமரம் பரந்து நிற்கிறது. அதன் அடியில் பாதம் வழிபடப்பட்டதாகக் கூறப்படினும் இன்று அது இல்லை. நடுகல் வழிபாடு தொடர்ந்து காணப்படுகின்றது. வேல், சூலம் என்பனவும் உள்ளன (நேர்காணல் – பரமானந்தராசா வாகீசன்).

கிராஞ்சி, வேரவில், அனுராதபுரம் கிழக்குப் பிராந்தியங்களில் இவ்வாறான கதைகள் எதனையும் அறிய முடியவில்லை.

இணுவில் இளந்தாரி கோயில்

இணுவில் பகுதியை ஆட்சி செய்த அரச வம்சத்தவராகவும், அருளாளராகவும் தனது உயிர் நீத்தலை முன்பே அறிந்திருந்த தீர்க்கதரிசியாகவும் கருதப்படுகின்ற கைலாயநாதன் வாழ்ந்த அரண்மனையாகவும், வேளாள இளந்தாரிகளின் வீடாகவும் கருதப்படும் வளவில் சிறுகோயில் அமைத்து வழிபடப்பட்டு வந்துள்ளது. அவர்கள் தம் உருவை மறைத்த (உருக்கரந்த) தினம் பெருவிழாவாகக் கொண்டாட்டப்பட்டு வந்துள்ளது. (கந்தசுவாமி,க.இ.க.(பதி), (1998), பஞ்ச பஞ்சவன்னத் தூது, பக், 62 – 74)

காலப்போக்கில் இளந்தாரிகள் மறைந்த புளிய மரத்தடியில் இவ்வழிபாடு நிகழ்த்தப்பட, இவர்களது உதவியாளரது வழிபாடு பனை மரத்தடியில் நிகழ்த்தப்பட்டது. இப்புளியமரத்தடி வழிபாடு வைத்திலிங்கம் அவர்களால் கொட்டிலமைத்து தொடக்கிவைக்கப்பட்டது. அவரது மகன் நாகலிங்கம், பின்னர் ஆறுமுகராசா, பரமானந்தபிள்ளை இன்று கானமூர்த்தி மற்றும் சகோதரர்கள் என ஆண்வழிப் பூசாரிகளை கொண்ட வழிபாட்டு முறையாக நிகழ்ந்து வருகிறது. சிறுகொட்டிலாக ஆரம்பித்து 1968 இன் பின்னர், 2024இல் பிராமணர்களால் கும்பாபிக்ஷேகம் நிகழ்த்தப்பட்டதாயினும், இப்பூசாரிகளே நாளாந்தப் பூசை தொட்டு வருடாந்த மடை வரை யாவற்றையும் செய்து வருகின்றனர்.

இந்த ஆலயத்தின் சிறப்பு, நடுகல் வழிபாடு காணப்படுதலாகும். கருவறையில் புளியமரத்தின் ஒரு பகுதி, நடுகல், வேல், சூலம் போன்றன காணப்படுகின்றன. அருகில் பனைமரத்தடியில் உள்ள அண்ணமார் கோயில் கிருஷ்ணன் கோயிலாக்கப்பட்டுள்ளது. இக்கோயிலிலும் கிருஷ்ணன் சிலை வைக்கப்பட்டிருந்தாலும், இது ஆகமமயப்படவில்லை; கிருஷ்ணர் மூலமூர்த்தியாக்கப்படவுமில்லை.

கிராஞ்சி குறிப்பன் இளந்தாரி கோயில்

கிராஞ்சி, பிருந்தாவனம் பகுதியில் இரண்டு இளந்தாரி கோயில்கள் அமைந்துள்ளன. அவற்றுள் ஒன்று கிராஞ்சி பிருந்தாவன சந்தியில் புளிய மரத்தடியின் கீழ் அமைந்துள்ளது. குறிப்பன் இளந்தாரி கோயில் நீண்ட காலமாக அமைந்திருக்கும் கோயிலாயினும் வீரன், கந்தையா, செல்வரத்தினம் , இளையராசா எனும் நான்கு தலைமுறைப் பூசாரிகளையே அறியமுடிகிறது. இதில் கந்தையா என்பாரின் மனைவி பூரணம், யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியைச் சேர்ந்தவர் (தகவல் ஜீவமலர் விக்னேஸ்வரன், செல்வரத்தினம் பூசாரியின் மகள்). இன்றும் ஓலைக் கொட்டிலாலான சிறு கோயிலாகவே அமைந்துள்ளது. முன்புறம் நான்கு  தூண்கள் கூரையின்றிக் காணப்படுகின்றன. விழாக்காலத்தில் பந்தலிடப்படும். மூலத்தில் சூலம் மூன்று வெவ்வேறு அளவுகளில் நாட்டப்பட்டிருந்தது. மையத்தில் இருந்த சூலம் உயரமாகவும், திருசூல இடைவெளியில் கண்ணாடி வைக்கப்பட்டும் இருந்தது. சூலத்தின் இடைப்பகுதியில் இரு கொம்புகள் அல்லது கொழுக்கிகள், ஒன்று மேல் நோக்கியும் மற்றையது கீழ்நோக்கியும், இருபுறமாகவும் காணப்படுகின்றன. இந்த ஆலயத்துக்கு எதிர்ப்பக்கத்தில் புதிய இளந்தாரி ஆலயம் அமைக்கப்பட்டிருப்பினும், ஒரு வருடமே பூசை நடாத்தப்பட்டது. இன்று கைவிடப்பட்ட நிலையில் உள்ளது.

I-7-3.jpg

I-3-13.jpg

இளந்தாரி கோயிலுக்கு மடைப்பண்டம் வைக்கப்படுகின்ற கிராஞ்சி பட்டிமோட்டை நாகபூசணியம்மன் ஆலயம், இவ்வாலயத்திலிருந்து 100M அளவு தூரத்தில் உள்ளது. அவ்வாலய முன்றலில் உள்ள ஆலமரத்தின் கீழ் குறிப்பன் கோயில் உள்ளது. அங்குள்ள குறிப்பன் தெய்வத்துக்கான சூலம் இளந்தாரி சூலத்துடன் ஒத்திருப்பதும், இவை பட்டிமாட்டுடன் இணைந்த வழிபாடாக சிறுகுடி வேளாள சமூகமான பள்ளர் சமூகத்துடன் இணைந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

I-4-6.jpg

இந்தக் கிராஞ்சி இளந்தாரி ஆலயத்தை ஒத்த மரபுகளே வேரவில், கல்லாவில் ஆலயங்களிலும் காணப்படுகின்றன.

வழிபாட்டு மரபுகள்

இணுவில் ஆலயத்தில் நாளாந்தம் விளக்கு வைத்து சிறு படையல் இட்டு வழிபடும் முறை காணப்படுகிறது. கிராஞ்சி கோயிலில் வெள்ளிக்கிழமைகள் தோறும் விளக்கு வைக்கப்படுகிறது. இதைவிட தைப்பொங்கல், சித்திர வருடப்பிறப்பு மற்றும் வருடாந்த மடை உள்ளிட்ட விசேட தினங்களில் விசேட பூஜை உண்டு. இணுவில் இளந்தாரி ஆலயத்தில் மரத்தில் ஏறி உரு மறைப்புச் செய்த நாளினை மையமாகக்கொண்டு வருடாந்த மடை நடைபெறுகிறது. வருடாந்தப் பொங்கலுக்குரிய நாளை மூ. சிவலிங்கம் சித்திரை வருடப் பிறப்புக்கு முன்பு வரும் செவ்வாய்க்கிழமை எனவும், கந்தசாமி வருடப் பிறப்புக்கு பின்பு வரும் செவ்வாய்க்கிழமை எனவும் தத்தம் நூல்களில் குறிப்பிட்டுள்ளனர். இதில் வருடப்பிறப்புக்கு முதல் வருகின்ற செவ்வாய்க்கிழமையில் முதலாம் மடை என்கின்ற முதலியார் மடை நடைபெறும். இதுவே பெருவழிபாடாக, பெருவிழாவாகக் கொண்டாடப்படும். வருடப் பிறப்புக்கு பின்பு வரும் செவ்வாய்க்கிழமை எட்டாம் மடையாக அமையும். இது பெரிய அளவில் நிகழ்த்தப்படாமல் சிறப்பு வழிபாடாக நடைபெறும் என ஆலயத்தின் பரிபாலகர்கள் விளக்கம்  தருகின்றனர்.

முதல் மடை நிகழும் நாளை ஒரு மாதத்திற்கு முன்பே பூசாரி ஊரவர்க்கு அறிவிப்பார். அடியவர்கள் கூடி வீடுகள் தோறும் சென்று காணிக்கை பெற்று வருவர். பணம், அரிசி, மரக்கறிகள், தேங்காய், பழம், இளநீர் உள்ளிட்டவை காணிக்கையாகக் கிடைக்கப்பெறும். ஆலயமுன்றலில் மண்பானையில் வளந்து வைக்கப்பட்டு பொங்கல் இடம்பெறும். இதன்போது வாத்தியங்கள் இசைக்கப்பட்டு பூசை நடைபெறும். பூசாரி உருவேறி தெய்வமாடுவார். ஒரு கையில் பிரம்பும் மறுகையில் தீபமும் ஏந்தி வருவார்; கையில் கற்பூரமேற்றி அதனை அடுப்பில் இட்டு பொங்கலை ஆரம்பித்து வைப்பார். அதன்பின் வளந்துப் பானைக்கு அருகே சோறு, கறிகளுக்கான அடுப்புகளும் மூட்டப்பட்டு படையலுணவு ஆக்கப்படும். பலகாரங்களும் படைக்கப்படும். மக்களும் நேர்த்திக்கடனுக்கான பொங்கலைப் பொங்குவர். வளந்து கட்டலின் பின் சின்னத்தம்பிப்புலவரின் பஞ்சவன்னத் தூது ஏடு படிக்கப்படும். இன்று பஞ்சவன்னத் தூது ஏடு நூலுருப் பெற்று இரண்டாம் பதிப்பும் வெளிவந்துள்ளது.

இதன்பின் இளந்தாரி வழிபட்ட சிவகாமியம்மன், காளியாச்சி, வைரவர் தெய்வங்களுக்கு படையல்கள் எடுத்துச் செல்லப்படும். அந்தப் பயணத்தில் சங்கு, பறை, முழவு, சேமக்கலம் முதலிய வாத்தியங்கள் இசைக்கப்படும். இளந்தாரி திருவீதியுலாப் பாடல், திருமுறைகள் என்பன பாடப்படும். அந்த ஆலயங்களில் படையல் முடிந்தபின் இளந்தாரியின் ஏவலின்வழி பனைமரத்தில் ஏறிக் காணாமல்போன உதவியாளரின் ஆலயத்திற்குச் (அண்ணமார்) சென்று படையல் படைத்து வழிபாடு இயற்றப்படும். அதன்பின்பே இளந்தாரி கோயிலுக்கு வந்து படையல் வைக்கப்படும். சோறு கறியோடு பழம், வெற்றிலை, பாக்கு, பலகார வகைகள் படைக்கப்பட்டு பூசை இடம்பெறும். பூசாரி தெய்வமேறி, கலையாடி, குறி சொல்லி, விபூதி இடுவர். இறுதியில் கும்ப நீரினை இளந்தாரியின் காலடி இருந்ததாக நம்பப்படும் புளிய மரத்தடியில் ஊற்றி வழிபடுவர். இது காலடி நீர் வார்த்தலாக – காலடி வழிபாடாகச் சொல்லப்படுகின்றது.

இவற்றைவிட தீமிதித்தல் முக்கிய வழிபாட்டு முறையாக இன்றுவரை காணப்படுகிறது. கடும் நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் இத்தெய்வத்தை வழிபட்டு நோய் நீக்கம் பெற்றதாகக் கூறப்படுகிறது.

இதேபோல கிராஞ்சி கோயிலிலும் தனித்துவமான வழிபாட்டு மரபு காணப்படுகிறது. காட்டுப் பிள்ளையார், அம்மன், குறிப்பன், இளந்தாரி எனும் தெய்வங்களுக்கான வளந்துகள் குறிப்பன் கோயிலில் வைத்தெடுக்கப்பட்டு முதலில் பிள்ளையாருக்கும் பின்பு அம்மனுக்கும் பொங்கலிடப்படும். பின்பு குறிப்பன் முன்றலில் குறிப்பனுக்கும் இளந்தாரிக்கும் பொங்கலிடப்படும். பொங்கலுக்கு முதல் நாள் வெற்றிலை மடை வைக்கப்படும். இளந்தாரிக்கான படையல், குறிப்பன் முன்றலில் இருந்தே எடுத்துச் செல்லப்படும். அதில் பொங்கல் இடம்பெறுவதில்லை. இணுவில் இளந்தாரி கூறியது போல காய்மடை, பூமடையே வைக்கப்படுகிறது. பழங்கள் சிறப்பாகப் படைக்கப்படுகின்றன. இங்கும் பறை, சங்கு, சேமக்கலம் முதலான இசைக்கருவிகளின் இசையோடு பூசை நடாத்தப்படுகிறது. அதன்போது பூசாரி தெய்வமேறிக் கலையாடுவார். குறிசொல்லி விபூதியிடுவார். இந்தக் கோயிலின் பூசாரியாக இருந்த செல்வரத்தினம் உருவேறி, கும்பம் ஏந்திச் சென்றபோது (2006) பகைவர் மந்திரத்தால் கட்டியதால் கும்பத்தை இறக்க முடியாத சூழல் ஏற்பட்டதாகவும், பின்பு அவரது தம்பியே கும்பம் இறக்கியதாகவும் கூறப்படுகிறது.

I-5-4.jpg

இணுவில் இளந்தாரி கோயில் போலவே இங்கும் வருடப்பிறப்பை ஒட்டி மடை வைக்கப்படுகிறது. மடையில் ‘நிறைமணி’யாக மோதகம், பழம், பஞ்சாமிர்தம் என்பன வைக்கப்படும். சித்திரை வருடப்பிறப்புக் கழிய வரும் திங்களில், விளக்கு வைப்பர். செவ்வாய் தினத்தில் பொங்கல் வைப்பர். மூன்றாம் நாளே எட்டாம் மடை வைக்கப்படுகிறது. இணுவிலில் எட்டாம் நாளே எட்டாம் மடை வைக்கப்படுகிறது. இளந்தாரி கோயிலில் நீத்துக்காய், இளநீர் என்பன வெட்டிக் கழிப்புச்செய்யும் முறையுண்டு. ஏனைய நாட்களில் நீத்துக்காய் வெட்டும் மரபு இல்லை. தவிர்க்கமுடியாத சந்தர்ப்பத்தில் நீத்துக்காய் வெட்டப்படாது குத்தி உடைக்கப்படும். இம்மரபு இணுவிலில் இல்லை. கிராஞ்சியில் கழிப்புக் கழித்தல் பிரதான சடங்காக, சாதாரண நாட்களிலும் நடைபெற்று வருகிறது. ஆரம்பத்தில் பலியிடல் காணப்பட்டாலும், இப்போது பலியிடப்படுவது இல்லை.

வழிவெட்டல் சடங்கு நிகழ்த்தும் காலத்தில் தூளி குடித்தல், தூளி பிடித்தல் சடங்குகள் நிகழ்த்தப்படுகின்றன. பிரம்பு, பொல்லு, பாவாடை, கெண்டையம் அணிந்து வரும் பூசாரி தெய்வமேறிய நிலையில் ஒன்பதுமுறை மடையை வலம்வந்து இறுதியில் மடைகளை அள்ளி ஒன்றாக முகர்ந்து பார்த்து, பின் அள்ளி எறிந்தபடி ஓடுதல் தூளி குடித்தல் எனப்படுகிறது. அதேபோல எல்லாப் பரிகலங்களையும் அழைத்து, பச்சரிசி எறிந்த பின், நீரைத் தெளித்துத் தெளித்து, எல்லாத் தெய்வங்களும் ஒன்றாக நின்றாடுதல் தூளி பிடித்தல் எனப்படுகிறது. வழிவெட்டல் சடங்குகளில் இன்றும் பெண்கள், சிறுவர்கள் என்போருக்கு அனுமதி இல்லை.

I-6-4.jpg

எல்லா இளந்தாரி ஆலயங்களிலும் இரண்டாம் மடையாக ஆனித்திங்களில் விழா நடைபெற்று வருகின்றது. பட்டிமோட்டை அம்மனிற்கு, இளந்தாரி உருவேறிய பூசாரியே கொடித்தடி தேடி வெட்டி எடுத்து வருவார். பின்பு இளந்தாரி கோயிலில் வைத்து வேப்பமிலை, அம்மன்கொடி, மாலை என்பன கட்டி பறை மேளத்தோடு எடுத்துச் செல்லப்படும் வழக்கம் கிராஞ்சியில் இன்றும் காணப்படுகிறது.

சிங்கள இளந்தாரி

கிராஞ்சியில் உள்ள கரும்புக்காரன் கோயிலில் பொங்கல் விழாக்காலத்தில் உருவேறி நின்றாடும் தெய்வங்களில் ஒன்றாக சிங்கள இளந்தாரித் தெய்வம் காணப்படுகின்றார். இவர் ஏனைய தெய்வங்களோடு தெய்வமாடுவதோடு பூசையில் பயன்படுத்தப்படும் மாட்டை இனங்காட்டும் தெய்வமாகவும் விளங்குகிறார். இந்த சிங்கள இளந்தாரி வெள்ளை, சிவப்பு இணைந்த ஆடைகளோடே தெய்வமாடுவார். இவர் தெய்வமாடும் போது பேசுகின்ற பாஷை யாருக்குமே புரிவதில்லை என்பதனால் அவர் சிங்கள இளந்தாரி எனப்படுகின்றார் (தகவல் பா. செல்வம்,  கிராஞ்சி, வயது 66). சிங்கள மக்கள், பிறருக்கு விளங்காமல் கதைப்பதை தமிழைப் போல் இருக்கிறது எனக் கூறுவதாக பேராசிரியர் கணநாத் ஒபயசேகர குறிப்பிடுகின்றார். யாழ்ப்பாணத்தில் ‘தானறியாச் (தானடாச்) சிங்களம் தன் பிடரிக்குச் சேதம்’ என்ற பழமொழி நின்று நிலவுகிறது.

சில அவதானிப்புகள்

  • இளந்தாரி பற்றிய இருகதை மரபுகள் காணப்படுகின்றன. அரச பரம்பரையோடு இணைந்த கதையை இணுவில் சின்னத்தம்பிப் புலவரின் பஞ்சவன்னத் தூதிலேயே காணமுடிகிறது. சாதாரண சனங்களின் கதை நிலவுடமைச் சமூக மனிதர்களின் கதையாக, இரு இளைஞர்களினதும் அவர்களது உதவியாளரதும் கதையாகவே நின்று நிலவுகிறது.

  • இளந்தாரி, இணுவிலில் வேளாளரின் தெய்வமாகக் காணப்படினும் ஏனைய இடங்களில் சிறுகுடி வேளாளரின் தெய்வமாகவே விளங்குகிறது.

  • இளந்தாரி ஆலயங்கள் யாவற்றிலும் பூசாரிகளே இன்றும் பூசை செய்கின்றனர். இணுவில் அண்ணமார் கோயில் மேனிலையாக்கமுற்ற போதும் இளந்தாரி வழிபாடு நாட்டாரியல் மரபோடு தான் விளங்குகிறது.

  • இளந்தாரி என்ற சொல் பல தெய்வங்களோடு இணைந்த சொல்லாகக் காணப்படினும் தனித்தெய்வமாக வணங்கப்படுவதற்கு இக்கோயில்கள் சான்றாகின்றன.

  • கறிசோறு மடை, பழமடை,  வெற்றிலை மடை என்பனவே முதன்மை பெறுகின்றன. பொங்கல் இடம்பெறுவதில்லை.

  • பூசாரி, கலையாடி குறிசொல்லும் மரபு இக்கோயில்களில் காணப்பட்டபோதும் இன்று இணுவிலில் அது இல்லாமல் போய்விட்டது.

  • இணுவில் இளந்தாரி மடை இன்று சிவகாமி அம்மன், காளி, வைரவர், அண்ணமாருக்கு எடுத்துச் செல்லப்படுவதில்லை. இதன் பின்னணியில் சூழல், நேரம், சமூக மாற்றம் எனப் பல காரணிகள் காணப்படுகின்றன.

  • கிராஞ்சி, கல்லாவில், வேரவில் இளந்தாரி கோயில்கள் மந்திரம், சடங்கு என்பனவற்றோடும் கழிப்புக்கழித்தல் மற்றும் தீய கட்டுக்களுடனும் பின்னிப்பிணைந்திருப்பதை அவதானிக்க முடிகின்றது. நாம் சென்றபோது, கிராஞ்சி இளந்தாரி கோயிலில் கழிப்புக்கழிக்க பயன்பட்ட தேசிக்காய், இளநீர் உள்ளிட்ட பொருட்கள் ஆலய முன்றலில் எங்கும் பரவிக் கிடந்தன.

  • சிங்கள இளந்தாரி எனும் சொல்லாடல் இனத்துவ, மொழி சார் பண்பாடு பற்றிய மனப்பாங்கின் சொல்லாடலாக விளங்குகிறது.

முடிவுரை

ஈழத்துப் புலத்துக்கேயான தனித்துவமான நாட்டார் தெய்வமாக இளந்தாரி விளங்குகின்றது. இளந்தாரி பற்றிய கதைகள் சமூக அடுக்கமைவினதும் மனப்பாங்கினதும் வெளிப்பாடாக அமைந்துள்ளன. இத்தெய்வத்தை கயிலைநாதன் எனும் ஓர் இளந்தாரியாக பஞ்சவன்னத் தூது கூற, மக்கள் வாய்மொழிக் கதைகளோ அண்ணன், தம்பி ஆகிய இருவரே இளந்தாரிமார் என உரைப்பதும் (கோயிலின் பின்புறத்தில் மரத்தின் கீழ் இருவருடைய சிலைகளும் அமைக்கப்பட்டுள்ளன). பனையில் ஏறியவரை மெய்ப்பாதுகாவலர் எனத் தூதிலக்கியம் கூற, மக்களின் வாய்மொழிக் கதைகளோ சிறுகுடி வேளாளர் என உரைப்பதும் மேற்சொன்ன கூற்றைத் தெளிவுபடுத்துகிறது. சமூக மேனிலையாக்கம் மற்றும் சாதிய நீக்கத்தின் வழி அண்ணமார் வேணுகோபாலனாக மாற்றப்பட்டார். இளந்தாரி இன்றும் நாட்டார் தெய்வமாகவே நின்றுநிலவுகிறார். பூசாரி உருவேறி ஆடும்போது பிரம்பேந்தி வருவது விவசாய – கால்நடைத் தெய்வ வழிபாட்டு மரபுடன் இது இணைவதைத் தெளிவுபடுத்துகிறது. முன்பு பலியிடல் காணப்பட்டபோதும் இன்று எவ்வாலயத்திலும் அது நிகழ்வதில்லை. தீமிதித்தல் உள்ளிட்ட நேர்த்திக்கடன் தீர்த்தல் மரபுகள் பல காணப்படுகின்றன. கிராஞ்சி, வேரவில், கல்லாவில் போன்ற இடங்களில் துதிப்பாடல்கள் இல்லையாயினும்; மந்திரக்கட்டு, சடங்காசாரங்கள் நின்றுநிலவும் இடங்களாக அவை காணப்படுகின்றன. இளந்தாரி வலிமையின் – வீரத்தின் அடையாளம். ஆதலால் அது நடுகல்லின் வழியும் சூலத்தின் வழியும் நின்று நிலவுகின்றது.


https://www.ezhunaonline.com/ilandari-worship/

  • 4 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கரும்புக்காரன் எனும் தெய்வமும் வழிபாட்டுமுறைகளும்

தி. செல்வமனோகரன்

அறிமுகம்

மனிதகுல வரலாற்றில் புதிய கற்காலத்திலேயே (ஏறத்தாழ கி.மு 9000 – 6000) விவசாய உற்பத்தி, ஆயர்வாழ்வு என்பன தோன்றிவிட்டன (Allchin, F.R. 1963, Neolithic Cattle Keepers of South India, Cambridge). தமிழ்ச்சமூகத்திலும் காடுசார் வாழ்வுடைய திணைக்குடிகளான முல்லைநில மக்கள், ஆரம்பத்தில் மேய்ச்சல் நிலத்துக்கான புலம்பெயர்வாளர்களாக இருந்தபோதிலும் நிலையான குடியிருப்புகள் உடையவர்களாகவும் காணப்பட்டுள்ளனர். தரிசாக இருந்த கொல்லை நிலத்தில் (அகம்:89:17) பயிரிடல் மேற்கொள்ளப்பட்டது. காடழித்துக் களனியாக்கப்பட்டது (அகம், 394:3). முல்லைநில மக்கள் எருமை (கோட்டினத்தாயர்), மாடு (பசு ஆயர், கோவினத்தாயர்), ஆடு (புல்லினத்தாயர்) ஆகியனவற்றை மேய்த்துள்ளமையை அறியமுடிகிறது. இவர்களது பொருளாதாரம் கால்நடை வளர்ப்பு, விவசாய உற்பத்தி (வன்புல வேளாண்மை) என்பவற்றால் கட்டமைக்கப்பட்டது (நற்றிணை, 266:1-3). இந்த வாழ்வியலின் நீட்சியும் மருதநில, முல்லைநில வாழ்வியல் இணைவும் புதிய வர்க்கங்களையும் சமூகக்கட்டுமானங்களையும் தோற்றுவித்தன. கால்நடை, உழவு, உற்பத்தி எனக் கலப்புநிலையை ஏற்படுத்தின.

ஈழத்துப்புலத்தில் விவசாயமும் கால்நடைவளர்ப்பும் இணைந்த வாழ்வமைவு நீண்ட வரலாற்றுப் பாரம்பரியத்தை உடையது. நிலவுடமையாளரே கால்நடைப்பட்டியை உடையவராதலால் பெருங்குடி வேளாளர், சிறுகுடி வேளாளர் எனும் சாதிய அடுக்கமைவும், உழுவித்துண்போர், உழுதுண்போர் என்ற வர்க்கவமைவும் தவிர்க்கமுடியாதபடி உருவாயிற்று. அவற்றின்வழியே தெய்வங்களும் தெய்வநம்பிக்கைகளும் கட்டமைக்கப்பட்டன.

புறப்பொருள் வெண்பாமாலை ஆதிகாலத் தமிழ்ச்சமூகத்தில் நிகழ்ந்த போர்களை எட்டாக வகுத்துரைக்கின்றது. அவற்றுள் ஆநிரை கவர்தல் – வெட்சி, ஆநிரை மீட்டல் – கரந்தை என்பன முதன்மை பெறுகின்றன. பூசல் எனும் போர் தொறுகோடல், மீட்டல் எனும் இரண்டையும் குறிக்கும் வண்ணம், தொல்காப்பியப் பொருளதிகாரப் புறத்திணை 5 இல் குறிக்கப்படுகிறது. தொறு – பசுக்கூட்டம், மாடுகள் எனவும்; தொறுப்பூசல் – மாடுபிடி, சண்டை எனவும் கூறப்படுகின்றது. ஆகவே பூசல் என்பது பெரும் போரைக் குறிக்காது. ஆநிரை கவர்தலையும் மீட்டலையும் வேறுபடுத்திக்காட்டப் பயன்பட்ட சொல்லாகவும் இது விளக்கப்படுகிறது (பக்தவத்சல பாரதி, 2020, பண்டைத்தமிழ்ப் பண்பாடு, அடையாளம், திருச்சி). முல்லைநிலக் கடவுளான மாயோனே கால்நடைகளின் தெய்வமாகச் சுட்டப்படினும் பிற்காலத்தில் மாயோன், திருமால் எனும் பெருந்தெய்வமானார். கால்நடைவளர்ப்போர் பிராந்திய மற்றும் முன்னோர் நம்பிக்கையின்வழி புதிய தெய்வங்களை தமக்கேற்றவகையில் உருவாக்கிக்கொண்டனர். அந்தவகையில் ஈழத்து வடபுல, கிளிநொச்சி மாவட்ட, பூநகரி வாழ்புலத்தில் நின்றிலங்கும் தெய்வமாக ‘கரும்புக்காரன்’ காணப்படுகின்றார்.

கரும்புக்காரன்

கரும்புக்காரன் எனும் பெயர் அநேக ஊகங்களுக்கு இடமளிக்கின்றது. கருப்பு, கருப்புசாமி, கருப்பணசாமி எனப்பல பெயர்களால் குறிப்பிடப்படும் கருப்பன், கரும்புக்காரனாக விரிந்திருக்கலாம் எனக் கருதமுடிகிறது. ஆயினும் கருப்புசாமிக்குச் சொல்லப்படும் எந்த இலட்சணங்களும், வழிபடுமுறைகளும், கதைகளும் கரும்புக்காரனுடன் பொருந்துவதாயில்லை.

விவசாய நடவடிக்கையில் கரும்பு, நெல் உற்பத்தி என்பன முக்கிய இடத்தைப் பெறுகின்றன. கரும்புத்தோட்டத்திற்குக் காவலாகக் கருதப்பட்ட தெய்வமாக இருக்கலாம் என அனுமானிப்பின், பூநகரியில் இத்தெய்வம் நின்றுநிலவும் பிரதேசங்களில் முன்போ தற்போதோ கரும்புப்பயிரிடல் இடம்பெற்றதாக அறியமுடியவில்லை. கரும்பைக் கையில் உடைய காமன், கரும்புக்காரன் எனப்பட்டான் எனக் கருதின், விவசாயத்துக்கும் கால்நடைவளர்ப்புக்கும், காதல் தெய்வமான காமனுக்கும் எந்த சம்பந்தமும் இருப்பதாக அறியமுடியவில்லை.

வடமராட்சியில் குறும்பன் எனும் தெய்வம் காணப்படுகிறது; தற்போது அது கருப்பன்சாமியாக வழிபடப்படுவது ஆய்வுக்குரியது என்ற ஒரு கருத்தை பா. இரகுவரனின் முகநூற்பதிவில் காணமுடிந்தது. பொதுவில் மலையகம் தவிர்ந்த, குறிப்பாக ஈழத்து வடபுலத்தில் கருப்பன்சாமி வழிபாடு அரிதான ஒன்றாகவே காணப்படுகின்றது.

தமிழகச்சூழலிலோ ஈழத்தின் ஏனைய பிராந்தியங்களிலோ இத்தெய்வத்தையோ அல்லது இதனை ஒத்த தெய்வத்தையோ அடையாளப்படுத்த முடியவில்லை. ஆகவே பூநகரிப் பிராந்தியத்தின் கால்நடை, வேளாண்மைசார்ந்த தனித்துவமான தெய்வமாக கரும்புக்காரன் காணப்படுகின்றார்.

இத்தெய்வத்தைப் பற்றிய முதற்குறிப்பை வழங்கியவர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை விரிவுரையாளர் சி. செரஞ்சன் அவர்கள். இவரும், ஊடகவியல்துறை முகாமைத்துவ உதவியாளரும், ஆய்வு ஆர்வலருமான கோ. விஜிகரனும் எம்மோடு கள ஆய்வில் ஈடுபட்டனர்.

பூநகரியில் கரும்புக்காரன்

பூநகரியின் கொடுதாவில் பிரதேசத்திலும், கிராஞ்சியிலும் கரும்புக்காரனுக்குத் தனிக்கோயில்கள் உண்டு. பல்லாய் ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயத்தில் பரிவாரத்தெய்வமாக தெற்குப்பக்கத்தில் கரும்புக்காரன் வீற்றிருக்கின்றார். இவற்றைவிட வேறெங்கும் கரும்புக்காரன் இருப்பதாக அறியமுடியவில்லை. வயலும் (மருதம்), காடும் (முல்லை) சேர்ந்திருக்கின்ற, நெல்விளைச்சலும் பட்டிகளுக்கான மேய்ச்சல் தரவைகளும் (விவசாயம் மற்றும் கால்நடை உற்பத்தி) இணைந்திருக்கின்ற இந்தப்பிரதேசத்தின் தனித்தெய்வமாக, கரும்புக்காரன் முக்கியத்துவம் பெறுகின்றார். கரும்புக்காரன் யார்? இத்தெய்வத்தின் தோற்றம் பற்றிய கதைகள், வரலாறுகள் எவை? போன்ற கேள்விகளுக்கான விடைகளை வாய்மொழி வழக்காறுகளாகவேனும் அறியமுடியவில்லை.

கொடுதாவில் கரும்புக்காரன் கோயில்

பூநகரிப் பிரதேசத்தில், மன்னார் செல்லும் பாதையினால் உள்நுழையும் கிராமங்களில் ஒன்று கொடுதாவில். காடாகிக்கிடக்கும் இப்பிரதேசத்தில் முன்பு தோட்டங்கள் இருந்தபோதும் இப்போது இல்லை. சில மரமுந்திரிகைத் தோட்டங்கள் உள்ளன. கோயில் உரித்தாளர்களுள் முக்கியமானவரான இராமன் நாகேஸ்வரன் (இராசன் – வயது – 64), தனது பூட்டன் காலத்துக்கு முன்னைய ஆலயமாக கொடுதாவில் கரும்புக்காரன் கோயிலைக் குறிப்பிடுகிறார். கும்பாபிக்ஷேகம் நடைபெற்று மேனிலையாக்கம் செய்யப்பட்ட பல்லாய் ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயமான பிள்ளையார் கோயிலில், குறித்த சமூகத்தையும், தெளிகரை எனும் ஊரையும் சேர்ந்த தம்பையா பொன்னம்பலம் பூசாரி (வயது, 70) அவர்களால் தொடர்ந்தும் பூசை செய்யப்பட்டு வருகிறது. இப்பல்லாய் பிள்ளையார் கோயிலில் இருந்தே ஏறத்தாழ இரண்டு கிலோமீற்றர் தூரத்தில் உள்ள கொடுதாவில் கரும்புக்காரன் கோயிலுக்கு மடைப்பண்டம் கொண்டுசெல்லப்படுகிறது.

I-1-7.jpg

I-2-10.jpg

I-3-5.jpg

பல்லாய் மிகவும் செழிப்பான மருதநிலம்; பனைவளம் நிறைந்த ஊர். ஆயினும் ஈழப்போராட்டம் மௌனிக்கச் செய்யப்பட்டபின் வெள்ளப்பெருக்கு நிலையை அடிப்படையாகக்கொண்டு குள அபிவிருத்திக்காக இடப்பெயர்விக்கப்பட்ட நிலமாக அது மாறிவிட்டது. அங்கு வாழ்ந்த மக்கள் தெளிகரை, பூநகரி எனச் சிதறி வாழ்கின்றனர். இன்றும் குள அபிவிருத்தி தொடங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பல்லாயிலிருந்து வெள்ளம் கடந்தே கொடுதாவிலுக்குச் செல்லும் சூழல் இவ் ஆண்டு (2025) மார்ச், ஏப்ரல் மாதங்களிலும் இருப்பது குறிப்பிடத்தக்கது. அங்கு பாடசாலை சிதிலமடைந்து காணப்படுகிறது. பல்லாய் வாழ்விழந்த ஊராயிற்று. பிள்ளையார் மட்டும் நிமிர்ந்து நிற்கின்றார்.

பட்டிமாடுகளும் மேய்ச்சல் தரவைகளும் வயல்வெளியும் நிறைந்த இப்பூமியின் சிறுகுடி வேளாள சமூகத்தின் (பள்ளர்) குலதெய்வமான கரும்புக்காரனின் கோயில், இன்றும் நாட்டார் மரபு சிறிதேனும்மாறாத பண்பியலோடு காணப்படுகிறது. ஆயினும் சீமெந்தாலான கட்டடச்சுவர் உடையதாக தற்போது கட்டமைக்கப்பட்டுள்ளது. பல்லாய் பிள்ளையார் கோயிலிலும் கொடுதாவில் கரும்புக்காரன் கோயிலிலும் கல்ரூபத்தோடு இரும்பாலான ரூபத்தில் கரும்புக்காரன் காட்சியளிக்கின்றார்.

I-6-2.jpg

பெரும்பாலான நாட்டார் தெய்வங்கள் கல், முச்சூலம் (திரிசூலம்) வடிவங்களிலேயே காட்சி தருகின்றனர். ஆனால் கரும்புக்காரனின் இரும்பாலான ரூபம் தனித்துவமானது. குறித்த இரும்புக்கம்பியின் நுனியில் இருந்து 4-5 இஞ்ச் இடைவெளியில் மொட்டுப்போன்ற வடிவில் மூன்று வளைவு கம்பிகள் ஒட்டப்பட்டுள்ளன. இவை தாமரைமலர் மொட்டுப்போலக் காணப்படுகின்றன. நுனியில் வெள்ளி, தகரம் ஒட்டப்பட்டிருக்கின்றது. இன்னொன்றின் நுனி, இலை அல்லது வேல் போன்ற வடிவம் உடையதாக உள்ளமை குறிப்பிடத்தக்கது. இது மாடுகளைக் கட்டும் கம்பியின் வடிவம் எனில் நுனியின் வட்டம் அல்லது வளைவே அதில் காணப்படும். இது மலர் மொட்டுப்போலவே காட்சியளிப்பது தனித்துவமும் அழகியலும் உடையதாக உள்ளது. இதற்கு உரிய விளக்கத்தை யாராலும் சொல்லமுடியவில்லை.

கிராஞ்சி கரும்புக்காரன் கோயில்

பூநகரி பிரதேசத்தின் கிராஞ்சி, விளாத்திமோட்டை, உறக்கிணறு பகுதியில் இக்கரும்புக்காரன் கோயில் காணப்படுகிறது. அப்பிரதேசத்தில் வாழும் சிறுகுடி வேளாளரான பள்ளர் சமூகத்தின் குலதெய்வமாக இத்தெய்வம் விளங்குகிறது. ஆரம்பத்தில் இத்தெய்வம் பிருந்தாவனக் கரைகடல் எனும் இலவங்குடாவில் இருந்ததாகவும், பின்னர் கிராஞ்சி, சிவபுரம் ஊர்மனையுள் இருந்ததாகவும், பின் அதன்மீதான அச்சத்தினால் கிராமத்தின் வடதிசையில் தற்போது உள்ள இடத்தில் கோயிலமைத்து வழிபட்டுவருவதாகவும் பூசாரி பழனி செல்லதுரை (வயது, 72) கூறுகின்றார். இந்த ஆலயத்தில் கரும்புக்காரன் ‘கல்’ வடிவத்திலேயே வணங்கப்படுகின்றார். இந்த ஆலயத்தின் பூசாரி தெரிவுமுறை மிகச் சுவாரசியமானது.

I-7-2.jpg

I-8-1.jpg

நாற்பது வருடங்களுக்குமேல் பூசாரியாகத் தெய்வமாடிப் பூசை செய்துவந்த கணபதி சின்னத்தம்பி இறந்ததன்பின் பூசாரி இன்றி ஆலயவழிபாடு தடைப்பட்டது. உரிய விசேட காலத்தில் பானை வைத்துப் பொங்கும்போது, கரும்புக்காரன் வளந்துப்பானையில் பொங்கிவரும் நுரையை உரியநேரத்தில் அள்ளுபவர் யாரோ அவரே பூசாரி என்ற சம்பிரதாயம் உண்டு. அதன்படி எல்லாத் தெய்வங்களுக்கும் பொங்கலிடப்பட்டது. கரும்புக்காரன் பானை பொங்கிவரும் நேரத்தில் எங்கோவொரு மூலையில் மரத்தடியில் நண்பர்களோடு பொழுது போக்கிக்கொண்டிருந்த செல்லத்துரை அவர்கள் உருவேறி வேகமாகவந்து யாரும் எதிர்பாராதவகையில் நுரையை அள்ளியதோடு, அன்றிரவு முழுவதும் கலையாடி, காலையிலேயே தெய்வமிறங்கியதாக திரு. செல்வம் (வயது, 77) தெரிவித்தார். இருபது வருடங்களுக்குமேலாக பழனி செல்லத்துரையே பூசாரியாக இருந்துவருகிறார்.

மழைநீர் தேங்கும் நிலம் கடந்தே இந்த ஆலயத்திற்கும் செல்ல வேண்டும். காட்டினில் இக்கோயில் எந்தவகையிலும் நாட்டார்மரபு மாறாதவகையில் காணப்படுவது குறிப்பிடத்தக்கது. இந்தக் கோயிலும் மருதமும், முல்லையும் – பட்டி வளர்ப்பும், விவசாயமும் இணைந்த பாரம்பரிய நிலமாகவே காட்சியளிக்கின்றது. 

விசேட தினங்கள்

இவ்விரு கோயில்களிலும் தைப்பொங்கல், சித்திரைப் பிறப்பு, தீபாவளி, திருக்கார்த்திகை ஆகிய தினங்கள் விசேட தினங்களாகக் கொண்டாடப்பட்டு வருகின்றன. ஆயினும் கிராஞ்சிக் கோயிலின் சிறப்பு வழிபாடாக வைகாசி, ஆனி மாதங்களுக்கிடையில், ஏனைய ஆலயங்களின் பட்சங்களையும் அனுசரித்து வருடாந்தப் பொங்கல் கொண்டாடப்படுகிறது. ஒரு வெள்ளிக்கிழமை ஆரம்பித்து ஞாயிறு வழி வெட்டப்படும். கொடுதாவில் கோயிலில் ஆனிப் பௌர்ணமியை மையமாக வைத்து வருடாந்தப் பொங்கல் இடம்பெற்று வருகின்றது.

வழிபாட்டு முறைகள்

பிராந்திய, சமூகத்தேவைகள் சார்ந்து இவ்விரு கோயில்களிலும் சிலசில வேறுபாடுகள் காணப்படினும், வழிபாட்டுமுறைகள் ஒத்ததன்மையுடையனவாகவே பெரிதும் காணப்படுகின்றன. கொடுதாவில் கரும்புக்காரனுக்கு பல்லாய் பிள்ளையார் கோயிலிலிருந்தும், கிராஞ்சி விளாத்திமோட்டை கோயிலுக்கு, வாண்டையான் பள்ளத்தில் உள்ள புளியமரத்தடியிலிருந்தும் மடைப்பண்டம் எடுத்துச் செல்லப்படும்.

வெள்ளிக்கிழமை காலையில் கிராஞ்சியில் காட்டுப்பிள்ளையாருக்கும், கொடுதாவிலிலுள்ள பல்லாய் பிள்ளையாருக்கும் பொங்கல் நடைபெறும். பிள்ளையார் பொங்கல் இடம்பெறும் அதேவேளை பல்லாய் பிள்ளையார் ஆலயத்திலிருந்து செல்லையாத்தீவு அம்மனுக்கு பண்டம் அனுப்பப்படும். அவ்வாலயப் பூசாரி அதனைப் பொங்கிக் கொடுத்தனுப்புவார் (அவ்வாலய மரபு உயர்குடி வேளாளருக்கானது). அப்படையல் பிள்ளையார் கோயிலில் விரதகாரருக்கு வழங்கப்பட்டபின், அன்னதானம் வழங்கப்படும். பின் அவ்வளந்துப்பானை கழுவப்பட்டு அம்மன் வளந்துடன், கொடுதாவில் கரும்புக்காரன் கோயிலுக்கு எடுத்துச்செல்லப்பட்டு, அங்கு அவ்வளந்துப்பானையில் மீளவும் பொங்கும் மரபு உண்டு. அப்பானையின் பொங்கல் படைக்கப்படுவதில்லை. அதனோடு, ஏனைய தெய்வங்களின் மூன்று படையல்களையும் இணைத்து சலவைத் தொழிலாளிக்கு வழங்கும் வழக்கமும் காணப்படுகின்றது. இம்மரபு கிராஞ்சி கரும்புக்காரன் கோயிலில் இடம்பெறுவதில்லை.

கிராஞ்சியில் மடைப்பண்டம் எடுக்கமுன், ஐயனார் மடையை மரத்தின் அடியில் படைத்தபின்பு அன்னதானம் இடம்பெறும். அதன்பின் ‘கயிறு நேருதல்’ எனும் நிகழ்வு இடம்பெறும். கிராஞ்சியில் ஆத்திமரநாரைக் கிழித்து முப்புரியாகத் திரித்து நான்கு கயிறுகள் செய்வர். கொடுதாவிலில் உவரி மரநாரைப் பயன்படுத்துவதாக இ. நாகேஸ்வரன் தெரிவித்தார். அந்தக் கயிற்றை அடுத்த வருடம் பயன்படுத்துவதில்லை. வருடாவருடம் புதிதாகத் தயாரித்தே இருகோயில்களிலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

வெள்ளிக்கிழமை மாலை வெற்றிலை, பழம், பாக்கு, தேசிக்காய் உள்ளிட்ட ‘வெற்றிலை மடை’யை கரும்புக்காரன் கோயிலுக்குக் கொண்டுசெல்வர். ஆலயத்தை நீரால் கழுவுவதோடு சுற்றுப்புறச்சூழலையும் துப்புரவு செய்வர். அதன்பின் சலவைத் தொழிலாளியால் ‘வெள்ளை’ கட்டப்படும். பூசாரியால் விளக்கு வைக்கப்பட்டு, தெய்வமாடி, பூசையின் தன்மை பற்றியும் நிறைகுறைகள் பற்றியும் கூறப்படும். அதற்கேற்றபடி பூசைகள் முன்னெடுக்கப்படும்.

கிராஞ்சிக் கோயிலில் கரும்புக்காரன், இளந்தாரி, முன்னோடி, சிங்கள இளந்தாரி எனும் தெய்வங்களுக்கான பூசாரிகள் தெய்வமாடுவர் (செல்லத்துரை பகீரதன், வயது – 30). கொடுதாவில் கோயிலில் கரும்புக்காரனோடு நாச்சியார், பூவாளிப் பிள்ளையார், ஐயன் இளந்தாரி, சிங்கள இளந்தாரி, குறிப்பன், மாடன் போன்ற ஒன்பது தெய்வங்கள் காணப்பட்டாலும் கரும்புக்காரன், ஐயன் இளந்தாரி, சிங்கள இளந்தாரி, நாச்சிமார் போன்றவற்றின் பூசாரிகளே தெய்வமேறியாடுவர். இப்பூசாரிகளுக்கு வேளநூல் (கும்பத்துக்குச் சுற்றும் நூல்) கொண்டு பூணூல் போடப்படுகிறது. நூற்பந்திலிருந்து நூலை முழங்கையாற் சுற்றி பூசாரியின் இரண்டு பக்கமும் போடும் மரபு காணப்படுகின்றது (பிராமணர் ஒரு பக்கமாகப் பூணூல் போடுதல் நினைவுகூரத்தக்கது). நாச்சிமார் தெய்வமேறி ஆடுபவர் பெண்பூசாரி; அவருக்குப் பூணூல் இடப்படுவதில்லை. பூசாரிகளுக்கு திருநீறு, சந்தனம் இட்டு பன்னீர் தெளிக்கும் வழக்கமும் காணப்படுகிறது.

கிராஞ்சி கரும்புக்காரன் கோயில் பூசாரி கறுப்புநிற ஆடை அணிவார். அது சுருக்கு வைத்த பாவாடையாக இருக்கும். காலில் சலங்கை, வெள்ளியாலான நெத்திப்பட்டம், பூட்டுக்காப்பு, வெண்டயம், அரையில் ஒட்டியாணம் என்பனவற்றையும், வெள்ளியாலான பூணூலையும் அணிவார். கொடுதாவில் பூசாரி வெள்ளி அணிகலன்களை இவ்வண்ணமே அணிகின்ற அதேவேளை, வெள்ளாடை அணிவார். அச்சுருக்குப் பாவாடையில் மூவர்ணக் கோடுகள் காணப்படும். கொடுதாவில் ஐயன் இளந்தாரி நெத்திப்பட்டம், வெண்டயம், பித்தளைப்பூணூல், வெள்ளாடை என்பனவற்றை அணிவார். சிங்கள இளந்தாரி வெள்ளாடை மட்டும் அணிவார். கிராஞ்சியில் சிங்கள இளந்தாரிக்கான பூசாரி வெள்ளை, சிவப்பு கலந்த ஆடையை அணிவார்.

கால்நடையும் கரும்புக்காரனும்

கரும்புக்காரன் வழிபாட்டுச்சடங்கில் ‘பலகாலத்துக்கு’ முன்பு மாடுகளை வெட்டிப்பலியிட்டு வழிபடும் மரபு காணப்பட்டுள்ளது. பொங்கலோடு இவ்விறைச்சியைப் படைக்கும் வழக்கம் இருந்துவந்துள்ளது (வெட்டிப்பலியிடப்படும் மாடுகளின் எண்ணிக்கை 200க்கு மேல், 108, 60 என மாறுபட்டவகையில் பலவாறு கூறப்படுகிறது). படையல் சடங்கு முடிவடைந்ததன்பின் யாவரும் ஆலயத்தில் இருந்து வெளியேறிய பிறகே பூசாரி வீடு திரும்புவார். அதன்பின் ஆலயத்தில் நிற்பவருக்கு மரணம் நேரும் என்ற நம்பிக்கை மக்களிடத்தில் காணப்படுகிறது. ஆயினும் குறித்த ஒரு வருடப் பூசை முடிந்து யாவரும் வெளியேறிய பிறகு, பூசாரியும் வீட்டிற்கு வந்துவிட்டார். அவரது சிறிய வயது மகன் ஆலயத்திலேயே விடப்பட்டுவிட்டது பின்பே அவருக்குத் தெரிந்தது. ஆலயத்துக்குச் செல்ல அவர் மனம் துணியவில்லை. தன் மகனைக் காக்குமாறு கரும்புக்காரனையே அவர் வேண்டிநின்றார். அச்சிறுவன் வீடு வந்து சேர்ந்தான். யாருடன் வந்தாய் என்ற கேள்விக்கு, தன்னை ஒரு மாமா கொண்டுவந்து விட்டதாகவும், கையில் ஓர் இறைச்சித்துண்டும் சிறுசோறும் தந்து ‘மாடுகளை வெட்டிப் படைக்க வேண்டாம்’ என்று கூறியதாகவும், பசுக்கன்றின் செவிகளில் இருந்து இரு சிறுதுண்டுகளையும், நாகு கன்றின் செவியில் இருந்து ஒரு சிறுபகுதியையும் வெட்டிப் படைக்குமாறு கூறியதாகவும் பதில் சொல்லி, கையிலிருந்த சோற்றையும் ஓர் இறைச்சித்துண்டையும் அவன் காட்டினான். அன்றிலிருந்து கரும்புக்காரனுக்கான பலியிடல் நிறுத்தப்பட்டு கன்றின் செவியில் சிறுதுண்டு வெட்டிப்படைத்தல் இரு ஆலயங்களிலும் நடைபெற்றுவருகின்றது. அந்தவகையில் இது கால்நடை வளர்ப்பாளர்களின் தெய்வம் எனலாம்.

மாட்டுக்கன்று பிடித்தல்

கிராஞ்சியில் ஐயனார் பொங்கல் முடிந்து அன்னதானம் வழங்கிய பின்பும், கொடுதாவிலில் பிள்ளையார் பொங்கல் முடிந்து அன்னதானம் வழங்கிய பின்பும், கன்று பிடிக்கப் போவர். பிடிக்கப்போகும் மாட்டுக்கன்றுகள் நிற்கும் திசை, குறிப்பு என்பவற்றை, கிராஞ்சி சிங்கள இளந்தாரி, கொடுதாவில் ஐயன் இளந்தாரிப் பூசாரிகள் கலையாடிக் கூறுவர். கொடுதாவில் கரும்புக்காரன், ஐயன் இளந்தாரி பூசாரிகளும், மாடு பிடிக்கும் உரித்துடையோரும் கன்று பிடிக்கச்செல்வர். தனிக்கறுப்புநிற, மறை ஏதும் இல்லாத (அடையாளம்), குறிசுடப்படாத ஒரு பசுக்கன்றும் ஒரு நாம்பன் கன்றும் பிடித்துவரப்படும். மரநாரில் திரிக்கப்பட்ட கயிறுகள் கொண்டே இக்கன்றுகள் பிடிக்கப்படுகின்றன.

இதன்பின்பு முன்னோடித் தெய்வமேறிய பூசாரி முன்னேசெல்ல, மடைப்பண்டங்களோடு கன்றுகளையும் கொண்டு, கால்நடையாக, பறை முதலிய வாத்தியங்கள் இசைக்கப்பட, கரும்புக்காரன் கோயிலுக்குச் செல்வர். அங்கு பூசை ஏற்பாடுகள் யாவும் நடைபெறும். ஆலயத்தின் முன்னே சற்றுத்தூரத்தில் உள்ள மரத்தில் குடை போன்ற முக்காடு போடப்பட்டு, சுற்றிவர வெள்ளை கட்டப்படும். அம்மரத்தடியில் கன்று கட்டப்படும். அது கன்றுக்கட்டை அல்லது கன்றுக்கொல்லை அல்லது கன்றுகட்டும் பாலை என்று கூறப்படுகிறது. முன்பு, பன்னைக் குழையினாலேயே கொல்லை வேயப்பட்டு வந்துள்ளது. பின்பு வெள்ளை கட்டும் மரபு உருவானது. இன்றும் இயற்கையோடு இணைந்த குலதெய்வ வழிபாடாகவே கரும்புக்காரன் வழிபாடு திகழ்கின்றது.

மடை பரவுதல்

கரும்புக்காரன் கோயிலில் கரும்புக்காரனுக்கும் பரிகலன்களுக்குமான வளந்துப்பானைகளை வைத்துப் பொங்கல் இடம்பெறும். தனிப்பசும்பாலே பொங்கலுக்குப் பயன்படுத்தப்படும். பால் கொதித்து வரும்போது மடை பரவப்படும். குலைகுலையாக பல்வேறு வகை வாழைப்பழங்கள் கொண்டுவரப்பட்டு அவற்றைச் சீப்புச்சீப்பாக வெட்டி அடுக்குவர். வெற்றிலை, பாக்கு என்பனவும் சிறப்பாக அடுக்கப்பட்டிருக்கும். பலாப்பழம், மாம்பழம் போன்றனவும் மடையில் இடம்பெறும். முறுக்கு, பால்றொட்டி (வெள்றொட்டி) போன்ற பலகாரங்கள் நிறைவாகச் செய்யப்பட்டு படைக்கப்படும். கிராஞ்சியில் வளந்துப்பானையில் பொங்கிவரும் நுரையை, பூசாரி தெய்வமேறி ஆடி, கைகளால் சுடச்சுட அள்ளிக்கொண்டுபோய் மடையில் தெளித்தல் முக்கிய நிகழ்வாகக் கருதப்படுகிறது. கொடுதாவிலில் மடையை ‘துலங்கல் மடை’ என்பர். கரும்புக்காரனோடு நாச்சிமார், பிள்ளையார், ஐயன் இளந்தாரி, சிங்கள இளந்தாரி, குறிப்பன், மாடன் உள்ளிட்ட ஒன்பது தெய்வங்களுக்கும் வெள்ளைவிரித்து வாழைப்பழம் சீப்புச்சீப்பாக அடுக்கி மடை வைக்கப்படும்.

பொங்கல் பொங்கி முடிந்ததன்பின் அவையாவும் படையல் செய்யப்படும். பூசாரிகள் தெய்வமேறிக் கலையாடுவர். அப்போது முன்னோடியின் கையில் மூன்று பூண்கள் (வெள்ளி) இடப்பட்ட கருங்காலிப்பொல்லும், கரும்புக்காரன் கையில் தனித்தடி அல்லது இரும்பாலான பொல்லு அல்லது முக்காலிப் பொல்லும் காணப்படும்.

மடை பரவி முடிந்ததன்பின் கன்றின் காதறுப்போருக்கு திருநீறு, சந்தனம் வழங்கப்பட்டு ஒருவர் கையில் வெற்றிலையும் மற்றவர் கையில் சிறுகத்தியும் வழங்கப்படும். மரத்தின் அடியில் கட்டப்பட்ட கன்றுகளுக்கு தீருநீறு, சந்தனம் இடப்பட்டு மாலை போடப்படும். நாகுவின் செவியொன்றின் சிறுபகுதியும், பசுக்கன்றின் இரு செவிகளிலிருந்து இரு சிறுதுண்டுகளும் வெட்டப்பட்டு, வெற்றிலையில் வைக்கப்பட்டு வழங்கப்பட, கரும்புக்காரன் பூசாரி அதைப் பெற்றுக்கொண்டு கலையாடியபடி ஓடிச்சென்று மடையின் மீது அதனை வைப்பார். ஆயினும் அச்செவித்துண்டுகளை, பின்பு மடையின் மீது காணமுடியாது எனத் தகவலாளிகள் யாவரும் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வழிவெட்டல் சடங்கு முடிந்ததும், கன்றுகள் அவிழ்த்துவிடப்படும். அவை தத்தம் பட்டியைத் தவறாமல் சென்றடையும் என்றும், கரும்புக்காரனுக்கு செவிப்பலி வழங்கிய கன்றுகள் உள்ள பட்டிகள் நன்றே பெருகும் என்றும் நம்பப்படுகின்றது.

பன்றி குத்தும் நிகழ்வு

வழிவெட்டல் நிகழ்வுக்குமுன் பன்றி குத்தும் நிகழ்வு என்னும் சடங்கு நடைபெறும். ஒரு இளநீரைக் குறித்த இடத்தில் மண்ணுக்குள் (இளநீரின் அளவுக்கு ஏற்ப) கிடங்கு வெட்டிப் புதைப்பர். அவ்வாறு புதைக்கும்போது மரநாரில் திரிக்கப்பட்ட கயிறைத் தடம்போட்டு மண்ணில் மறைத்து கயிற்றின் நுனியினை சற்றுத் தள்ளிப்பிடித்தபடி நிற்பர். இளநீரை மண்ணுக்குள் புதைக்கும் சடங்கினை இளந்தாரி தெய்வத்துக்கான பூசாரி நிகழ்த்துவார். இவ்விடத்தின் மேல் பன்னைக்குழை போடப்படும். கரும்புக்காரன் பூசாரி கலையாடியபடி வர, பறை உள்ளிட்ட இசைக்கருவிகள் இசைக்கப்பட, பாடல்கள் பாடப்பட, இச்சடங்கு நிகழும். பல்வேறு இடங்களுக்கு ஆடியாடிச்சென்று, இறுதியில் இளநீர் புதைக்கப்பட்ட இடத்திற்கு கரும்புக்காரன் பூசாரி சென்று, கையில் உள்ள இரும்பால் குத்தி இளநீரைத் தூக்க, தடக்கயிறு இழுக்கப்பட்டு இளநீர் இறுக்கிப்பிடிக்கப்படும். பின்பு அதனை கயிற்றோடு இழுத்துச்சென்று ஆலயத்துக்குப் புறத்தில் வீசிவிடுவர். கொடுதாவிலில் சூலத்தால் இளநீர் குத்தப்பட்டு எறியப்படும்.

யானையேற்றம்  

பூசாரி, பலம் பொருந்திய மனிதர்கள்மீது ஏறி வலம்வருதலே யானை ஏற்றம் எனப்படுகிறது. இவ்வாறு யானையேறி தெய்வத்தைச் சுற்றி வந்ததன்பின் வெள்ளை வேட்டியை நால்வர் ஏந்திப்பிடிக்க, பூசாரியின் ஆபரணங்கள், பொல், பிரம்பு உள்ளிட்ட ஆயுதங்கள் அவ்வேட்டியில் இடப்படும். அதன்பின் அவ்வேட்டியினால் அவற்றைச் சுற்றிக்கட்டி கோயில் வாசலின்மேல் வைக்கும் வழக்கம் கொடுதாவிலில் காணப்படுகின்றது. மேலும் யானையேற்றத்தின் போது வெள்ளிப்பூண் போடப்பட்ட கருங்காலிப் பொல்லில் துணியைக்கட்டி எண்ணையில் நனைத்துத் தீயிட்டு, பந்தமாக்கிக் கொண்டு செல்லுகின்ற மரபும் அங்கு உண்டு.

வழிவெட்டல் சடங்கு

பூசைகளில் யாவும் முடிந்ததன்பின் வழிவெட்டல் சடங்கு இடம்பெறும். ஆலயத்தில் இருந்து சிறிதுதூரத்தில் சூலம் குத்தப்பட்டு, இளநீர் வெட்டப்பட்டு இச்சடங்கு செய்யப்படுவதோடு கரும்புக்காரனுக்கான பூசை நிறைவுபெறும். வழிவெட்டியபின் பூசாரி திருநீறு, சந்தனம் என்பவற்றை அடியவர்களுக்கு வழங்குவார். அவரால் திருநீறு இடப்பட்டவர்களுக்கு நோய் நீக்கம் உள்ளிட்டவை ஏற்படும் என்ற நம்பிக்கை காணப்படுகின்றது. நேர்த்தி வைத்தவர்கள் காவடி எடுத்தல், கற்பூரச்சட்டி, தீச்சட்டி, பாற்செம்பு எடுத்தல் முதலிய செயற்பாடுகளைச் செய்வர். ஆலய முன்றலில் தீ மிதித்தல் நிகழ்வும் நடைபெற்று வருகிறது. கொடுதாவில் கோயிலில் பேய்விரட்டும் சடங்கும் நடைபெறுகின்றது. பேய்பிடித்த நபரின் தலைமயிரை ஓர் ஆணியில் சுற்றி ஆலயத்தின் முன்னே இருக்கின்ற மரத்தில் அடித்துவிட்டால் அவர் சுகம் பெறுவார் என நம்பப்படுகின்றது. வைத்தியர்களால் கைவிடப்பட்ட, தீரா நோயுடையவர்களுக்கும், படுக்கையில் நீண்டகாலம் மரணத்தை எதிர்பார்த்து (இழுத்துக்கொண்டு கிடப்பவர்கள்) இருப்பவர்களுக்கும் திருநீறிட்டு, பிரம்பால் அடித்து, தலைமையிரை ஆணியில் சுற்றி வெட்டிவிழுத்த சுகம்வரும் என கொடுதாவில் கோயிலைச் சேர்ந்த இராமன் நாகேஸ்வரன் தெரிவிக்கின்றார்.

கிராஞ்சி சரிமொந்தன் தெய்வம்

கிராஞ்சி சிவபுரம் குளத்துக்கருகே உள்ள மருதமரத்தடியில் இத்தெய்வத்தை வைத்து வழிபட்டு வந்துள்ளனர். அக்காலத்தில் அவ்வழியில் செல்பவர்கள் மீது ஏறிச் ‘சேட்டைகள்’ புரிவதாகவும், நோய்நொடிகளை ஏற்படுத்துவதாகவும், மொத்தத்தில் மக்களுக்குத் துன்பம் தருவதாகவும் இத்தெய்வம் இருந்து வந்துள்ளது. கிராஞ்சிக்குவந்த பூசாரி ஒருவர், இத்தெய்வத்தை தெய்வமாடி அடக்கமுடியாது, இதனை இரு கோயில்களுக்கு நடுவே வைத்தால்தான் அமைதிபெறும், மக்களுக்குத் துன்பம் தராது என்று கூறியதாகவும், அதன்படி கரும்புக்காரனுக்கும் அதன் அருகே உள்ள முறிகண்டிப் பிள்ளையாருக்கும் இடைப்பட்ட இடத்தில் இந்த சரிமொந்தன் தெய்வத்தை வைத்ததாகவும், அதன்பின் இத்தெய்வம் அமைதி கொண்டதாகவும் கிராஞ்சியைச் சேர்ந்த செல்வம் குறிப்பிடுகின்றார். இத்தெய்வத்திற்கும் உருவமில்லை. வேறுகதைகள் இருப்பதாகவும் தெரியவில்லை. வேறு இடங்களில் இத்தெய்வம் வழிபடப்படுவதாகவும் அறிய முடியவில்லை.

கரும்புக்காரன் பூசையின்பின் மூன்றாம் நாள் சரிமொந்தனுக்குப் பொங்கலிடப்படும். பானை பொங்கிவரும் போது கோழியின் கழுத்தை அறுத்து அல்லது முறித்து பலியிடும் வழக்கம் காணப்படுகின்றது. அத்தோடு அக்கோழியை அப்படியே நெருப்பில் இட்டுச் சுடுவர். தெய்வத்துக்கு மடைபரவும்போது இதனையும் வைத்துப் படைப்பர். இச்சடங்கு ‘எச்சில் மாத்தல்’ (எச்சில் மாற்றல்) எனப்படுகின்றது. இந்த மடை முழுவதும் சலவைத் தொழிலாளிகளுக்கு உரியதாகும்.

எட்டாம் மடை

நாட்டார் தெய்வங்களுக்கு எட்டாம் மடை எனப்படுகின்ற சடங்கு பொதுவில் நிகழ்த்தப்படுதல்போல, கிராஞ்சியிலும் கரும்புக்காரனுக்கு எட்டாம்நாள் விளக்கு வைத்து, பொங்கி மடை பரவுவர். இத்தோடு கரும்புக்காரனுக்கான வருடாந்தப்பூசை நிறைவு செய்யப்படும். கொடுதாவில் கோயிலில் இச்சடங்கு இடம்பெறுவதில்லை. மூன்றாம் நாளே கோயில் பூசாரி, உரித்துடையோர் ஆகியோர் வருகை தந்து கோயிலைச் சுத்தப்படுத்தி, விளக்கு வைத்தலோடு வருடாந்தப்பூசை நிறைவு செய்யப்படுகின்றது. இவ்விரு ஆலயங்களிலும் விசேட தினங்களில் மட்டுமே விளக்கு வைக்கப்பட்டு வருகின்றது.

ஏனையவை

நேர்த்தி வைத்தவர்களுக்காக சிறப்புப் பூசைகளும் நடைபெற்றுவருகின்றன. அதேவேளை கொடுதாவில் கோயிலில் விசேட பூசைகளின்போது, கோயிலின் உள்ளே மடை பரவாது வாசலில் வைத்தே மடை பரவப்படுவது குறிப்பிடத்தக்கது.

கிராஞ்சியில் வைத்தியர்களால் கைவிடப்பட்டவர்களுக்கான பூசை அவரவர் வீட்டில் இடம்பெற்று வருகிறது. கரும்புக்காரன், இளந்தாரி, முன்னோடி, சிங்கள இளந்தாரி எனும் நான்கு தெய்வங்களின் பூசாரிகளும் குறித்த நோயாளியின் வீட்டுக்குச் செல்வர். அப்பூசாரிகள் நால்வருக்கும் அவ்வீட்டவர் பச்சை அரிசி, பழம், பாக்கு, வெற்றிலை, தேங்காய், மரக்கறிகள் என்பனவற்றைத் தானமாக வழங்குவர். அப்போது கரும்புக்காரனுக்கான பாடல், திருமுறைகள் என்பன பாடகரால் இசைக்கப்படும். அந்த இசையின்வழி கரும்புக்காரன் பூசாரியின்மீது தெய்வமேறி ஆடி, வழங்கப்பட்ட அரிசியைக் கிள்ளி எறிந்து அடங்க, நோயாளி தெளிந்துவிடுவார். அதன்பின் எட்டாம்நாள் கரும்புக்காரனுக்கு விளக்குவைத்துப் பொங்கலிட அந்த நோயாளி முழுச்சுகம் பெற்று விடுவார் என கிராஞ்சியைச் சேர்ந்த செல்வம் குறிப்பிடுகின்றார். இந்த நம்பிக்கை இன்றும் அவ்வூர் மக்களிடம் காணப்படுகின்றது.

சில குறிப்புகள்

  • இது கால்நடை –  குறிப்பாக மாடுவளர்ப்புத் தொழிலுடன் இணைந்த வழிபாட்டுமரபு என்பது தெளிவாகின்றது. முக்காலிக்கம்பி, கரும்புக்கார தெய்வத்தின் குறியாக, அடையாளமாக அமைந்திருப்பதும் அதனை மக்கள் வழிபட்டுவருவதும் தனித்துவமான ஒரு விடயமாகின்றது.

  • அண்ணமார், குறிப்பன், கரும்புக்காரன் உள்ளிட்ட சிறுவேளாண் குடி மக்களின் குலதெய்வங்கள், குறிப்பாக கால்நடைவளர்ப்புடன் தொடர்புபட்ட இத்தெய்வங்கள் யாவும் பிரம்பு அல்லது பொல்லுடன் இணைக்கப்பட்டுள்ளன.

  • மாடுகள் பலவற்றை ஒன்றாகப் பலியிடல் சமய நம்பிக்கை எனினும், அது பெரும் பொருளாதார இழப்பாகவும் காணப்பட்டது. ஒரு கட்டத்தில் அறுபதுக்கு மேற்பட்ட மாடுகளை ஒன்றாகப் பலியிடல் ‘பட்டியழித்தல்’ ஆகவும் அமைந்தது. ஆகவே ‘இறைக்கட்டளை’யாக கூறுதல் சமய நம்பிக்கை இழப்பாகவோ, நம்பிக்கை மீறலாகவோ கருதப்படமாட்டாது எனும் எண்ணத்தின்வழி இக்கதை உரைக்கப்பட்டிருக்கலாம்.

  • பட்டி மாடுகளை ஏதோவொரு சூழலில் பலியிட விரும்பாத – பட்டி தொலைந்து போன – ஏதோ ஒரு சந்தர்ப்பத்தால் இவ்வாறான கதை உருவாக்கப்பட்டிருக்கலாம்.

  • வேளாண்மை – கால்நடைவளர்ப்பு இருநிலப் பண்பாடாக இருந்தகாலத்தில் விவசாயத்தை அழித்த மேய்ச்சல் மாடுகளைப் பலி செய்திருக்கலாம். பின் இரண்டும் ஒன்றான வேளாண்மை வந்தகாலத்தில், பட்டியைப் பலியிட விரும்பாதநிலையில் இக்கதை உருவாக்கப்பட்டிருக்கலாம்.

  • பட்டியைக் காக்க உயிர் கொடுத்த தலைவனின் வேண்டுகோளாக, இப்பலியிடல் மரபு நிறுத்தப்பட்டு இருக்கலாம்.

  • சரிமொந்தன் கிராஞ்சிக்கு உரிய தனித்துவமாகின்றது. இத்தெய்வம் தனித்து ஆராயப்பட வேண்டியதாயினும் இத்தெய்வம் குறித்த தகவல்களைப் பெறமுடியாதுள்ளது. சரிமொந்தன் – சாரி பொத்தன் – சாரி புத்தன் என்பவற்றை ‘சாரிபுத்தன்’ என்பதன் திரிபாகக் கருதினால், அது பௌத்தத்துடன் இணைத்துச் சிந்திக்கப்பட வேண்டிய ஒரு விடயமாகின்றது (சம்பந்தர் வரலாற்றில் சாரிபுத்தன் தலையில் இடிவிழச் செய்யப்பட்டுக் கொல்லப்பட, அவருடன் வந்த ஏனைய பௌத்தர்களுடன் சம்மந்தர் வாதிட்டு வென்று அவர்களைச் சைவத்தில் சேர்த்த வரலாறு பெரிய புராணத்தில் இடம்பெற்றுள்ளது. திருஞானசம்பந்தர் கிராஞ்சிக்கு அருகில் உள்ள மன்னார் மாதோட்டத்தை, அங்குள்ள திருக்கேதீஸ்வரத்தைச் சிறப்பித்துப் பாடியுள்ளமை கவனத்திற்குரிய விடயமாகும்.)

  • கரும்புக்காரன் சிறுகுடி வேளாளரின் குலதெய்வம் எனினும், இவ்விரு கோயில்களும் சலவைத் தொழிலாளர்களுக்கும் மடைப்பங்கை வழங்கி வருகின்றன.

  • கிராஞ்சியில் பங்குனி மாதத்தில் ‘பால் காய்ச்சுதல்’ எனும் சிறப்பு வழிபாடு கரும்புக்காரனுக்கு நிகழ்த்தப்படுகிறது. பச்சைப் பாலைக் கடைந்து நெய் எடுத்து அதில் விளக்கேற்றி, மடை வைத்து வழிபாடு நிகழ்த்தப்படுகின்றது.

  • பன்றி குத்தும் நிகழ்வு என்பது விவசாயத்தோடு சம்பந்தப்பட்டது. வயலை நாசம் செய்யவரும் பன்றியைக் குத்திக் கொல்லுதலும், தடம் வைத்துப் பிடித்தலுமான செயல்முறை இத்தெய்வத்தின்முன் சடங்காக, ஒருவகைக் கூத்தாக நிகழ்த்தப்படுகின்றது. பன்றியை உணவாகவோ தெய்வத்துக்கான படையலாகவோ எடுப்பதில்லை என்பது இங்கு கவனத்துக்குரியது. அதேவேளை இந்தச்சடங்கு வன்னிப் பிராந்தியத்தின் ‘பன்றிப் பள்ளு’ இலக்கியத்தையும் கூத்தையும் ஞாபகமூட்டி நிற்கின்றது.

முடிவுரை

கிராஞ்சி, கொடுதாவில் கிராமங்களில் காடுகளை அண்மித்தும், பல்லாய் பிள்ளையாரில் பண்டமெடுக்கும் இடத்திலும் கரும்புக்காரன் தெய்வம் வழிபடப்பட்டு வருகின்றது. மாடுவளர்ப்புத் தொழிலுடன் முழுமையாகத் தொடர்புபட்ட வழிபாடு இதுவாகும். ஆயினும் விவசாயநிலத்தோடும் இது தொடர்புறுத்தப்படுகின்றது. சிறுகுடி வேளாளர்களின் குலதெய்வமான கரும்புக்காரன் வழிபாட்டை வேறு எங்கும் காண முடியாதுள்ளது. சிறுகுடி வேளாளரின் அனைத்துக் குலதெய்வங்களும் பிரம்பு, பொல் என்பனவற்றுடன் தொடர்புபடுத்தப்பட்டுள்ளன. வேத வேள்வி மரபில் காணப்பட்ட ‘மாட்டைப் பலியிடல்’ எனும் கருத்துரு பிற்காலத்தில் பல்வேறு காரணங்களால் வேத வேள்வி மரபினரான வைதிக மதத்தவர்களாலேயே நிராகரிக்கப்பட்டுள்ளது. ஆயினும் இயற்கை தெய்வவழிபாட்டில், குறிப்பாக ஈழத்துத் தமிழ்ச்சூழலில் ‘மாடு பலியிடல்’ எனும் மரபு கரும்புக்காரனோடு பின்னிப்பிணைந்துள்ளது. இன்று முழுமையான பலியிடல் இல்லையாயினும், கன்றுகளுடைய காதுகளின் சிறுபகுதிகளை அறுத்துப்படைத்தல் என்பது அதன் நீட்சியே. கரும்புக்காரன் பற்றிய கதையாடல்கள், வாய்மொழிவழக்காறுகள் என்பவற்றை இன்று அறிவது சிரமமாக இருப்பினும், இவ்வழிபாடு இந்த நிலத்தோடும், அதன் பண்பாட்டோடும், பொருளாதாரத்தோடும் இரண்டறக்கலந்த இயற்கை வழிபாடாக இன்றும் திகழ்தல் குறிப்பிடத்தக்கது.

https://www.ezhunaonline.com/the-god-of-karumpukkaran-and-its-rituals/

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இடும்பன் பூசை

தி. செல்வமனோகரன்

அறிமுகம்

இயற்கையின் மீதான ஆர்வம், அதிசயம், அச்சம் போன்றனவே அதனை வழிபடத் தூண்டின; இயற்கையின் இயல்பிறந்த ஆற்றல்கள்மீது மனிதரைக் கவனம் செலுத்தச் செய்தன. சடத்துவமான இயற்கை தானாகவே இயல்பிறந்த ஆற்றல்களை நிகழ்த்த முடியாது. இப்பிரமாண்டமான இயற்கையை இயக்க அதனிலும் ஆற்றல்வாய்ந்த சக்தி அல்லது சக்திகள் இருக்க வேண்டும் என்ற எண்ணம் வலுப்பட வலுப்பட இறைவன் பற்றிய பிரக்ஞை வலுப்பட்டது. இயற்கை வழிபாடு தெய்வ வழிபாடாயிற்று. இயற்கையின் இயல்பிறந்த ஆற்றல்களிலும் இறைவனது ஆற்றல்கள் மேலும் மேம்பட்டவை, கற்பனையாலும் எட்டமுடியாதவை, அதிலும் தன் தன் தெய்வத்தின் ஆற்றலே யாவற்றிலும் மேலானது என்ற கருத்துகள் மனிதகுல நாகரிக வளர்ச்சியோடு இணைந்து வலுவுற்று வளர்ந்தன.

இதனால் அவ்வவ்விறைவனைப் பற்றி பல்வேறு ஐதிகக் கதைகள் தோன்றின. அவை கால, தேச, வர்த்தமானத்திற்கேற்ப மேலும் மேலும் வளர்ச்சியுற்றன. இயற்கைப் பொருள்வழி இருந்த தெய்வம் விலங்கு, பறவை, மனிதவுருப் பெற்றது. வடிவம் அல்லது உருவம் முதன்னிலை பெறத் தொடங்கியது. விலங்கு – மனிதன், பறவை – மனிதன் என இணையுருவங்களுடன் மனித, ஆஜானுபாகுவான உருவங்களும்; அவற்றுக்கு நான்கு, தொடக்கம் பன்னிரெண்டு கைகள், ஒன்று தொடக்கம் ஆறு தலைகள் எனப் பல்வேறு ‘அதீத’ நிலைகளும் உருநிலைப்படுத்தப்பட்டன. அந்தத் தெய்வத்தை கேள்வியற்ற விசுவாசத்தோடு வழிபடும் அடியவர் பெறும் பேறுகள் என்பன முதன்மைப்படுத்தப்பட்டன.

இவற்றை மேலும் மேலும் வலுப்படுத்தப் பல்வேறு கதைகள் சொல்லப்பட்டன. அவை இதிகாசங்கள், புராணங்கள் எனச் செவ்விலக்கியங்களின் வழி மக்களின் மனதில் நிலைநிறுத்தப்பட்டன; சமயப்பிரசாரங்களின் பிரதான கருவியாகப் பயன்படுத்தப்பட்டன. அதிலும் இறைவன் நிகழ்த்திய அற்புதங்கள், சங்காரங்கள் என்பன விதந்துரைக்கப்பட்டன: கலை வடிவங்களாக்கப்பட்டு மக்கள் மத்தியில் மீள மீள நிகழ்த்தப்பட்டன. பொழுதுபோக்கு அம்சமாகவும், பிரசாரமாகவும், நம்பிக்கையாவும் இவை மக்கள் மனதில் நிலைத்துநிற்கச் செய்யப்பட்டு தலைமுறை தலைமுறையாகக் கடத்தப்பட்டன.

இந்தக் கதைகளானவை, கூத்தாக, கதையாக, பாடலாக பல்வேறு ரூபங்களில் பரவின. குறித்த ஒரு தெய்வத்தின் அல்லது நபரின் கதை பரவலாக்கமுறும் போது காலம், தேசம், பண்பாடு, தேவை அதன் அரசியல் என்பவற்றுக்கு ஏற்ப மாற்றமுறச் செய்யப்பட்டே வளர்க்கப்பட்டன. இதனால் காலவோட்டத்தில் அவை வேறுபட்ட தனிக்கதைகளுமாயின. அதேவேளை குறித்த பெயரில் வெவ்வேறு காலங்களில், இடங்களில் வெவ்வேறு கதைகள் தோன்றி உருப்பெற்று வளர்ந்தன என்பதும் மனங்கொள்ளத்தக்கது.

இந்தியப் பாரம்பரியத்தில் தோன்றி, புராணக்கதைகளின் வழி தமிழகத்தில் நிலைபெற்ற கதைகளில் ஒன்றாகவே இடும்பனின் கதை காணப்படுகிறது. இந்த இடும்பன் பூசை பற்றிய ஆய்வில் திரு கோ. விஜிகரன், திரு. சி. துக்ஷாந் மற்றும் கிழக்குப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த செல்வி ரஜீவா ஆகியோர் துணைநின்றனர்.

இடும்பன்

இடும்பர் எனும் சொல்லுக்கு ஒருவகை இராட்சதர், ஒருவகைச் சாதியார், செருக்கர், துயர் செய்வோர் (இடும்பை – துன்பம், தீமை, நோய், வறுமை, அச்சம்; இடும்பு – அகந்தை, கொடுஞ்செயல், தீங்கு) எனப் பொருள் சுட்டப்படுகிறது. யாழ்ப்பாணத்தில் பெரிய உருவம் (ஆஜானுபாகுவான தோற்றம்), நீண்ட கை – கால்கள் உடையவர்கள், பயங்கரமான தோற்றம் உடையவர்கள், கை அகட்டி நடப்பவர்கள், நன்றாக உண்பவர்கள் போன்றோரை இடும்பனுக்கு ஒப்பிடுவர். ‘ஆளப் பார் இடும்பன் மாதிரி’, ‘இடும்பன் எண்டு நினைப்பு’ போன்ற சொற்றொடர்களை இதற்கு உதாரணங்களாகச் சுட்டலாம்.

இடும்பன் பற்றிய கதைகள்

இடும்பன் பற்றி பல்வேறு கதைகள் நின்று நிலவுகின்றன. ஆரம்பத்தில் சிறந்த சிவபக்தனாக இருந்த இராட்சசனான இடும்பன் பின்பு முருகபக்தனாகத் திகழ்ந்ததாகப் பொதுவில் கூறப்பட்டாலும் இதன்னின்றும் வேறுபட்ட கதைகளும் உண்டு.

  1. இராமாயணம்: இராவணனால் கவரப்பட்ட சீதையைத் தேடிச் செல்லும் இராமன் சுக்கிரீவனின் உதவி பெற்று இலங்கையில் சீதை இருப்பதை அனுமன் மூலம் அறிகிறான். இராமன் சீதையை மீட்க சுக்கிரீவனின் படையோடு கரையை அடைகின்றான். கடல் குறுக்கிடுகிறது. பாலம் அமைக்க வேண்டியநிலை ஏற்படுகிறது. அந்நிலையில் சுக்கிரீவனின் சேனை வீரர்களில் ஒரு அணியின் தலைவனாக இருந்து சேதுபந்தனத்தின்போது மலைகளைப் பிரித்துவந்த மாவீரர்களில் ஒருவனாக இடும்பன் காணப்படுகின்றான்.

  2. மகாபாரதம் – இடும்பவனத்தில் இடும்பன் தன் தங்கையான இடும்பியுடன் வாழ்ந்து வந்தான். அவ்வனத்துக்கு வந்த பாண்டவர்களில் ஒருவனான பீமனைக் கண்டு இடும்பி காதல் கொள்கின்றாள். அவ்விடம் வந்த இடும்பன் “மானுடர்களை உண்ணும்படி உன்னை அனுப்பினால் நீ இவன்மீது காதல் கொள்கிறாயா?” என இடும்பியை ஏசியபோது பீமன் அவனை இடைமறிக்கின்றான். “அற்ப மானுடனே நீயும் இவள்மீது காதல் கொண்டுள்ளாயோ? அவ்வாறெனில் என்னோடு போர் புரிந்து வென்றபின் அவளைத் திருமணம் செய்” எனக் கூறினான். யுத்தம் நிகழ்ந்தது. இடும்பன் இறந்தான். பீமன் இடும்பியுடன் வாழ்ந்து கடோத்கஜன் எனும் மகனைப் பெற்றான்.

  3. பழனி தல புராணம்: அகத்திய முனிவர் கந்தமலையின் சிகரங்களிற் சக்தி கிரி, சிவ கிரி என்னும் இரண்டையும் சக்தி – சிவமாகப் பாவித்துப் பூசித்துக் கந்தவேளின் உத்தரவின்படி அவற்றைப் பொதியமலைக்குக் கொண்டு வந்து பூசிக்கக்கருதி பெயர்த்து வந்தார். பூர்ச்சவனம் என்னும் தலத்திலே முருகனின் திருவருளினாலே அச்சிகரங்களை வைத்துவிட்டுப் பொதிகை நோக்கி வந்து கொண்டிருந்தார். சூரபன்மன் குலத்தோர்க்கு வில்வித்தை முதலிய வித்தைகளைப் பயிற்றுவித்த இடும்பாசுரன், முருகனால் சூரன் முதலானவர்கள் அழிக்கப்பட்டபோது, தன் மனைவி இடும்பியுடன் மகேந்திரபுரியைவிட்டு வன சஞ்சாரம் சென்றான். திருக்குற்றாலத்திற்கு அருகே அகத்திய முனிவரைக் கண்டு வணங்கினான். அகத்தியர் “திருக்கேதாரத்திற்குப் பக்கத்திலுள்ள பூர்ச்சவனத்திலே இருக்கும் இரு சிகரங்களையும் எடுத்துப் பொதிகை மலைக்குக் கொண்டு வருவாயானால் பெறற்கரிய பெரும்பேறடைவாய்” எனக்கூறி அவற்றை அடையும் வழிகளை உணர்த்தினார். அவன் அகத்தியர் கூறிய வழியே சென்று இரு சிகரங்களையும் கண்டு பூசித்து மூலமந்திரத்தை விதிப்படி உச்சரித்துத் தவம் செய்தான். அப்பொழுது பிரமதண்டம் புய தண்டாகவும் அட்ட திக்கு நாகங்கள் கயிறாகவும் தன் பக்கத்தில் வந்ததைக் கண்டு, பாம்புகளை உறிக்கயிறாக பிரமதண்டுடன் பிணைத்து இரு சிகரங்களையும் இருபக்கத்திலும் பிணைத்து, தோளிற் சுமந்து காவடி எடுப்பதுபோல் நடந்துசென்று பழனியை அடைந்தபோது, முருகன் திருவிளையாடலால் இடும்பனுக்குக் காவடி அதிபாரமாகத் தோன்ற, அந்த இடத்தில் இறக்கி வைத்து இளைப்பாறினான். காவடியைப் பின்பு தூக்க முயன்றபோது முடியாது போகவே சுற்றிப் பார்த்தான். சிவகிரியின் ஒரு சாரலிலுள்ள குரா மரநிழலிலே தண்டாயுதபாணியைக் கண்டு, அவன் யாரென அறியாது வழியை விடும்படி வற்புறுத்தினான். முருகன் தன் திருவிளையாடலைத் தொடக்கி “உன்னிடம் வலிமை இருந்தால் கொண்டு செல்” எனக் கூறினார். ஆத்திரமடைந்த இடும்பன் குரா மரத்தடியில் நின்ற தண்டாயுதபாணி மேல் பாய்ந்தபோது அவர்  விலக, அவ்விடத்திலேயே வீழ்ந்திறந்தான். பிரமதண்டும் நாகங்களும் அஞ்சி அகன்று அகத்தியரிடம் செய்திசொல்லின. இடும்பியின் அழுகுரலுக்கிரங்கிய முருகன் இடும்பனை உயிர்பெற்றெழச் செய்தார். இடும்பன் எழுந்து முருகனை வணங்கி அம்மலையடியில் இருந்து குற்றேவல் புரிய வரம்கேட்க, முருகனும் அவ்வாறே அருளினார்.

இடும்பன் கதையுடன் தொடர்புடைய காவடி இன்று பல வடிவங்களில் எடுக்கப்படுகிறது. இடும்பன், தான் இரு மலைகளையும் எடுத்து வந்ததுபோல், தமது பாபச் சுமையை நீக்கக் காவடி எடுத்துவரும் அடியார்களுக்கு அருளும்படியும் வேண்டியதாகக் கூறப்படுகின்றது. இதன் பின்னர் முருகன் கோயில்களில் இடும்பனைப் பரிவார மூர்த்தியாக வழிபடும் வழக்கம் ஏற்பட்டது. இவ்வாலயங்களில் முருக மஹோற்சவம் முடிந்தபின் இடும்ப பூசை நடைபெறுவது வழக்கில் காணப்படுகிறது. தமிழகத்து சற்குருநாதர் கோயிலில், தான் இழந்த சக்திகளைப் பெற்ற பிரம்மா மகிழ்ந்து பிரம்ம தீர்த்தத்தை நிறுவியதாகவும் அங்கு சென்ற சிவபக்தனான இடும்பன், தன் பாவங்கள் யாவற்றையும் போக்க இக்குளத்தில் நீராடி வழிபட்டதாகவும் சிவன் மகிழ்ந்து அவருக்குத் திருவருள் புரிந்ததாகவும் கூறப்படுகிறது.

பழனி தல புராணம், அதனோடு ஒட்டிய ஐதிகக் கதைகள் மாத்திரமே முருகன் அடியாராக இடும்பனைக் குறிப்பிடுவது கவனத்திற்குரியதாகும். பொதுவில் இடும்பன் இராட்சதனாகவும், அதேவேளை ஞான நாட்டமுடைய சிறந்த பக்திமானாகவும், காவல்தெய்வமாகவும், அச்சத்தோடு மக்கள் வழிபடும் தெய்வமாகவும் அமைந்துள்ளது.

இடும்பன் கோயில்கள்

தமிழகத்தில் தஞ்சாவூர் காடுவெட்டி விடுதி, கீழ் மேட்டுப்பட்டி, இடும்பாவனம் என்பவற்றிலும் திருக்கன்றாப்பூர், குன்றக்குடி, திருப்பூரருகே இடுவம்பாளையம், பழனி போன்ற பல இடங்களில் இடும்பனுக்குத் தனிக்கோயில்களுண்டு. பிற கோயில்களில் பரிவார மூர்த்தியாகவும் முதன்மை கொடுக்கப்படுகின்றது.

ஈழத்துப்புலத்தில் கொழும்பு வாழ் நகரத்தாரின் (செட்டிமாரின்) மூன்று கதிர்காம வேலாயுத சுவாமி கோயில்களிலும், யாழ்ப்பாணத்தில் பண்டத்தரிப்பு, உரும்பிராய் போன்ற இடங்களிலும் இரத்தினபுரி, நாவலப்பிட்டி, கொஸ்லந்தை, மட்டக்களப்பு, திருகோணமலை போன்ற இடங்களிலும் பரிவார தெய்வமாக இடும்பன் தனிக்கோயில் பெற்றுக் காணப்படுகின்றான். திருகோணமலையில் இடும்பன்மலை என்று ஓர் இடம் உண்டு.

I-2-8.jpg

I-3-9.jpg

பண்டத்தரிப்பில் காலையடி எனும் இடம் உண்டு. ஆகம முறையிலமைந்த கோபுரத்துடன் கூடிய முருகனாலயமே காணப்படினும், இன்றும் அது இடும்பன் ஆலயம் என்றே அழைக்கப்படுகின்றது. மூலஸ்தானத்தில் மூலமூர்த்திக்கு அருகில் முன்பு இடும்பனாக வழிபடப்பட்ட வேல், இன்றும் வைத்துப் பூஜிக்கப்படுகிறது (தகவல்: ஆலய முன்னைய தலைவர், திருநாவுக்கரசு, வயது. 83).

கொழும்பு வாழ் நகரத்தார் சமூகம் கதிர்காமக்கந்தன் மீது அளவற்ற பக்தி உள்ளவர்கள் என்றும், நேர்த்திக்கடன் செலுத்தக் காவடி முதலானவற்றைக் கொண்டு கொழும்பிலிருந்து கதிர்காமத்துக்குக் கால்நடையாகவே (கரப்பாதை) செல்வதாகவும், அப்போது வழித்துணையாக இடும்பனை அழைத்துச் செல்வதாகவும், அதன் நன்றிக்கடனாகவே தமது கொழும்பு முருகன் கோயில்களில் இடும்பனைப் பிரதிஷ்டை செய்ததாகவும் அறிய முடிகின்றது.

மேற்படி நகரத்தார் கோயில்களில் மட்டுமே உருவவழிபாடு காணப்படுகிறது. ஏனைய கோயில்களில் பெரும்பாலும் வேல், சூலம், கல் என்பன வைத்தே வழிபடப்படுகின்றன. உரும்பிராய் அம்மன் கோயிலில் பரிவாரமாக உள்ள இடும்பன் முச்சூலம் மூன்றின் இணைந்த வடிவத்தினராகக் காணப்படுகின்றார். மையத்தில் இருக்கும் திரிசூலத்தில் இருந்து எதிர்த்திசைகளை நோக்கியதாக ஏனைய இரு திரிசூலங்களும் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதேவேளை இடும்பன் தெய்வமாகக் கருதப்படுதாது முருகன் அடியாராகக் கருதப்பட்டுவரும் வழக்கம் மேனிலையாக்கக் கோயில்களில் காணப்படுகின்றது. உதாரணமாக யாழ்ப்பாணத்து மடாலயங்களில் ஒன்றான நல்லூர்க் கந்தசுவாமி கோயிலில் மஹோற்சவ கால பதினேழாந் திருவிழா இடும்பவாகனத் திருவிழாவாகக் கொண்டாடப்படுகின்றது.

இடும்பன் பூசை நடைபெறும் சந்தர்ப்பங்கள்

ஈழத்துப்புலத்தில் பொதுவாக தனிக்கோயில்களிலும் இடும்பனைப் பரிவாரமாகக் கொண்ட கோயில்களிலும், கிராமிய முறை, ஆகம முறை எனும் இருதளங்களிலும் பூசைகள் நடைபெறுகின்றன. தனிக்கோயில்கள் பெரும்பாலும் பிராமணரல்லாதாரின் நாட்டார் வழக்கிலான பூசைமுறையே நடைபெறும். மேனிலையாக்கம் செய்யப்பட்ட முருகன் கோயிலாக மாற்றம்பெற்ற மற்றும் பரிவாரமாக இடும்பன் இருக்கும் ஆகம முறை சார்ந்த கோயில்களில் ஆகம முறைப்படியான பூசைகளே நடைபெற்று வருகின்றன. ஆடிவேல் உற்சவங்கள் நடைபெற்று முடிந்ததன்பின் இடும்பனுக்கு சைவ, அசைவப் படையல் வைத்து வழிபடும்முறை ஆகம முறைப்படி அமைந்த கொழும்பு கதிர்காம வேலாயுத சுவாமி கோயில்கள் மூன்றிலும் காணப்படுதல் குறிப்பிடத்தக்கது.

இதேபோல கொழும்பு, மலையகம், யாழ்ப்பாணம் (வடமராட்சி) போன்ற இடங்களில் கதிர்காம யாத்திரை செய்து தமது நேர்த்திக்கடனை முடித்து வந்தவர்கள் மட்ச – மாமிசம் காய்ச்சக்கூடிய நாளொன்றில் வீட்டில் இடும்பன் பூசை செய்வர்.

இவ்வாறு கோயில் சார்ந்து நடைபெறும் இடும்பன் பூசைகளைத் தவிர வாழ்வியல் சார்ந்தும் இடும்பன் பூசைகள் நடைபெறுகின்றன. அவை மகிழ்வுசார் சந்தர்ப்பத்திலும்,  துக்கம்சார் சந்தர்ப்பத்திலும் நடைபெறுகின்றன. குடிபுகுதல் (வீடு குடி பூரல்), கிணறு வெட்டி ஊற்றுக்காணல், குறித்த நேர்த்தியை நிறைவு செய்ததன் பின்னர், எடுத்த காரியம் சிறப்புற நடைபெற்றதன் பின்னர் என மகிழ்வுசார் பூசை நடைபெறும். இறப்பின் பின்னான அந்தியேட்டி வீட்டுக்கிருத்திய (31) நிகழ்வு நிறைவுற்ற பின்னர் நிகழ்வதாக துக்கம்சார் பூசை நடைபெறும்.

இடும்பன் பூசை

மேலே குறிப்பிட்டதுபோல இடும்பன் பூசை என்பது இருவிதமாக நடைபெறுகின்றது.

  1. கோயில் சார்ந்தது.

  2. கோயில் சாராது, வாழ்வியலுடன் இணைந்தது.

இடும்பன் தனிக்கோயிற் கொண்டு இருக்கும் இடங்களில் தினம் விளக்கு வைத்தல், வாராந்தப் பூசை, வெள்ளியில் விளக்கு வைத்தல் மற்றும் விஷேட தின பூசை என்பன இடம்பெறுகின்றன. இங்கு நடைபெறும்  விசேட தினப் பூசைகளில் சோறு, மட்சம், மாமிசம், மரக்கறி என்பன அவித்துப் படைக்கப்படும். பூசாரி தெய்வமாடி குறி சொல்லுதலும், பில்லி – சூனியம் – வசியம் முதலியன நீங்குதலும், கயிறு கட்டி திருநீறு இடுதலும் வழக்கமாக உள்ளது.

அதேவேளை நேர்த்தி வைத்த மக்கள் தாமாகவே படையலை வைத்து வழிபடலும், அவற்றை மக்களுக்கு அள்ளி வழங்குதலும் உண்டு. நாற்பது வருடங்களுக்கு முன்பு யாழ்ப்பாணம் வடமராட்சிப் பகுதியில் உள்ள அல்வாய்ப் பிரதேசத்தில் இடும்பன் கோயில் காணப்பட்டதாகவும், அங்கு சோறு, மட்சம், மாமிசம் படையலிட்டபின் அவற்றை ஒன்றாக்கிக் குழைத்து திரணைகளாக்கி (பந்து போல உருண்டையாக்கி) யாவர்க்கும் வழங்கும் வழக்கம் காணப்பட்டதாகவும் தகவல் உண்டு (தகவல் – இ. இராஜேஷ்கண்ணன், முதுநிலை விரிவுரையாளர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்) இக்கோயில் யுத்த காலப்பகுதியில் ஏதோ சில காரணங்களால் அகற்றப்பட்டுவிட்டதாக அறிய முடிகிறது. கொழும்பு கதிர்காம வேலாயுத சுவாமி கோயில்கள் மூன்றிலும் ஆடிவேலின் பின் இடும்பனுக்குப் படையலிட்டு அடியவர்க்கு வழங்கும் வழக்கம் காணப்படுகிறது. இங்கு ஆகமம்சார்ந்த பூசைமுறையே காணப்படினும் இத்தினத்தில் மட்டும் அசைவம் என்று சொல்லப்படும் மட்ச, மாமிசப் படையல் இடப்படுவது குறிப்பிடத்தக்கதாகும்.

வாழ்வியல்சார் சடங்காக இடும்பன் பூசை

  • மகிழ்வு சார் சடங்கு/ பூசை

1. கிணற்றில் ஊற்றுக் காணல்

வீட்டுவளவில் அல்லது தோட்டங்களில் கிணறு வெட்டுவர். கிணற்றை வெட்டும்போது அத்தொழிலைச் செய்பவர் காவல் தெய்வமான இடும்பனிடம் “எந்தச் சிக்கலுமின்றி கிணறு வெட்டி முடித்து நன்னீர் ஊற்று சிறப்பாகச் சுரக்க வேண்டும்” என வேண்டிக் காரியத்தைத் தொடங்குவார். கிணறு வெட்டும்போது ஊற்றுநீரைக் கண்டவுடன் அந்த நீரை காவோலையால் (காய்ந்த பனையோலையால்) மூடிவிடுவர். அடுத்த நன்னாள் பார்த்து, உரிய நேரத்தில் இடும்பன் பூசை செய்வர். கோழி ஒன்றின் கழுத்தறுத்து எறிவதோடு இரத்தத்தைக் கிணற்றில் தெளிப்பர். காவோலை எடுக்கப்பட்டுவிடும். பலியிடப்பட்ட கோழியை உண்ணும் வழக்கம் இல்லை. வேறு இறைச்சி, மட்சம் உள்ளிட்டவை சமைத்து கிணறு வெட்டிய தொழிலாளிகளுக்கும் தமது உறவுகளுக்கும் கொடுத்துண்பர்.

2. வீடு குடிபுகுதல் (வீடு குடி பூரல்)

புதிதாகக் கட்டப்பட்ட வீடு குடிபுகும் சடங்கு நடைபெறுவதற்கு முதல் நாள் இரவு வீட்டின் மரவேலைகளைச் செய்த தச்சுத் தொழிலாளர்களால் வீட்டின் முகடு பிரித்து தச்சன் காளி விரட்டல் சடங்கு நிகழ்த்தப்படும். அதுபோல குடி புகுதல் நிகழ்வு நடைபெற்று நான்காம் நாள் அளவில் (அசைவம் புழங்கக்கூடிய நாளில்) அசைவ உணவுகள் சமைக்கப்பட்டு அவ்வீட்டைக் கட்டிய தொழிலாளர்களுக்கும் வேண்டிய உறவுகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு விருந்து வைக்கப்படுதலே இடும்பன் பூசையாகச் சொல்லப்படுகிறது.

யாழ்ப்பாணம், மூளாய், பொன்னாலைப் பிரதேசங்களில் அத்தினத்தில் கோழி கழுத்தறுத்துப் பலியிடப்படுதலும் தலையை வீட்டுக் கூரையின் மேலால் எறிதலுமாகிய வழக்கம் காணப்படுகிறது (தகவல் – மயூரரூபன், எழுத்தாளர், வடமராட்சி). இதேவேளை யாழ்ப்பாணம், நுணாவில், மட்டுவில் கிராமங்களின் சில பகுதிகளில் இடும்பன் பூசை நடைபெறும் நாளில் சமைக்கப்படும் சைவ, அசைவ உணவுகள் யாவற்றிலும் சிறிது அள்ளி, வடலிப் பனையோலையால் பின்னப்பட்ட தட்டுவத்தில் இட்டு, குசினி அடுப்படியில் வைத்த பின்பே உணவு பரிமாறப்படுகிறது. அன்றிரவு ஆளரவம் அடங்கியபின் அத்தட்டுவத்தை சந்தி முடக்குகளில் அல்லது சுடலைக்கண்மையில் வைத்துவிட்டு வரும் வழக்கம் காணப்படுகிறது (தகவல் – செல்வி. ரஜீவா, நுணாவில், உதவி விரிவுரையாளர், வரலாற்றுத்துறை, கிழக்குப் பல்கலைக்கழகம்).

பண்டத்தரிப்புப் போன்ற பிரதேசங்களில் பந்தமும் கொண்டு சென்று இவற்றைச் சந்தியில், ஆட்கள் புழங்காத இடத்தில் வைத்துவிட்டு தமது வீட்டடியில் எச்சிலைக் காறி உமிழ்ந்து, பின்பு கால் கழுவிவிட்டு வீட்டுக்குள் செல்லும் வழக்கமுள்ளதாகக் கொத்தனார் வேலை செய்யும் தர்மலிங்கம் குகன் (வயது, 37) பேபிச்சந்திரன் விஜயகுமார் (வயது, 48) போன்றோர் தெரிவித்தனர்.

கோயில் திருவிழா, கந்தசஷ்டி போன்ற காலங்களில் விரதம் முடிவுற்றதன் பின்பும் கோயில்களுக்கான பாதயாத்திரைகள், நேர்த்திக்கடன்கள் முடிவுற்றதன் பின்பும் அசைவ உணவு சமைக்கப்பட்டு உறவினருக்கும் நண்பர்களுக்கும் வழங்கப்படும்.

  • துக்கம்சார் சடங்கு/ பூசை

இறப்பின் பின்னான அந்தியேட்டி வீட்டுக்கிருத்திய நிகழ்வுகள் நிறைவுற்ற பின்னர் நிகழ்வதாக துக்கம்சார் பூசை நடைபெறும். அந்தியேட்டி வீட்டுக்கிருத்திய நிகழ்வுகள் நடைபெற்று நான்காம் நாள் அளவில் (அசைவம் புழங்கக்கூடிய நாளில்) அசைவ உணவுகள் சமைக்கப்பட்டு, அவ்விறப்பு நிகழ்வு நடைபெற்றபோதும், பின்னான நாட்களிலும், வீட்டுக்கிருத்திய நிகழ்விலும் துணைநின்ற அனைவருக்கும், இரத்த உரித்துடைய உறவுகளுக்கும் அழைப்புவிடுக்கப்பட்டு விருந்து வைக்கப்படுதலே இடும்பன் பூசையாகச் சொல்லப்படுகிறது. செட்டிமாரிடமும், பாண்டியன் தாழ்வு போன்ற பிரதேசங்களிலும் இந்த வழக்காறு இருப்பதாக திரு. ச. முருகேசபிள்ளை (வயது, 60) குறிப்பிடுகின்றார்.

இங்கு இடும்பன் பூசை என்பது இடுப்பன் சாமிக்கான பூசையல்ல; அசைவ உணவு சமைத்து குறித்த காரியத்தில் கை கொடுத்த, துணைநின்ற, வழித்துணையாய் அமைந்த மனிதருக்கு அன்புடன் பரிமாறும் செயற்பாடாகவே அமைந்துள்ளது.

இடும்பன் பூசைக்கான படையல்

இடும்பன் பூசை கோயில்களில் நடைபெற்றாலும் சரி, வீட்டில் நடைபெற்றாலும் சரி இடும்பனுக்கான படையல் தனித்துவமானது. கோயில்களில் பெரிய கிடாரங்களில் சோறு சமைக்கப்படும். ஆடு, கோழி, இறைச்சிகளும் கடலுணவுகளான நண்டு, இறால், கணவாய், மீன் என்பவற்றோடு பலவகையான, கிடைக்கக்கூடிய மரக்கறிகளும் சமைக்கப்பட்டு பனையோலைப்பாயில் படையல் வைக்கப்படும். சோறு மலைபோல் குவிக்கப்பட்டு கறிவகைகள் இடப்பட்டு, படையல் படைக்கப்படும். சில கோயில்களில் கள், சாராயம் போன்றவற்றைப் படைக்கும் வழக்கமுண்டு.

idumpan-1-1024x744.jpg

வீடுகளில் நடைபெறும் இவ்வாறான பூசைகளில் சோறு, மரக்கறி, இறைச்சி வகைகளோடு புட்டு, கணவாய், இறால், மீன், பொரியல் – கறி உள்ளிட்ட பலவகையான உணவாக்கங்கள் அவரவர் வசதிக்கேற்ப ஆக்கப்படுதல் குறிப்பிடத்தக்கது. அதேபோல இப்பூசையில் பங்குபற்றுபவர்களுக்கு வேண்டிய மதுபான வகைகளும் வழங்கப்படும். இவை இன்று அநாகரிகச் செயற்பாடுகளாகக் கருதப்பட்டு தவிர்க்கப்பட்டு வருகின்றன.

padaiyal.jpg

சில அவதானிப்புகள்

  • இடும்பன் பற்றிய கதைகள் பலவிதமாக உள்ளன. பாரத, இராமாயண இடும்பன் இராட்சதன், காவற்காரன்; முருகனடியாராகச் சித்தரிக்கப்படும் இடும்பன் சிறந்த பக்தனாக, மலைகளைத் தூக்கவல்ல பேராற்றலானாக, வீரனாகக் காட்டப்படுகின்றார். காலந்தோறும் வந்த பல்வேறு கதைகளின் கூட்டு வெளிப்பாடாகவே இடும்பன் கதை அமைகிறது.

  • இராட்சதன், வீரன், காவல் தெய்வம் என்பதனால்தான் என்னவோ அசைவ உணவும் மலைபோன்ற உணவுக்குவியலுமான படையல் வழங்கப்படுகிறது போலும்.

  • நாட்டுக் கோட்டைச் செட்டிமார்களின் முருக வழிபாட்டோடு இடும்பன் வழிபாடு பின்னிப்பிணைந்திருக்கிறது. நல்லூரில் கந்தசஷ்டி காலத்தில் நவவீரர் பவனி இடம்பெறுதல்போல, கொழும்பு ஆடிவேல் விழாவில் முருகனின் திருத்தேர் முன்பு பிரம்புடன் இடும்பன் ஆடிப்பாடி வருகின்ற நிகழ்வு இடம்பெறும். பிரம்புடன் வருதல் என்பது இடும்பனுக்கு கொடுக்கப்படும் முதன்மை அதிகாரத்தின் குறியீடு எனலாம்.

  • அதேவேளை நல்லூர்க் கந்தசுவாமி கோயிலில் இடும்பன், வழிபடு தெய்வமாகவன்றி சுவாமியைக் காவும் வாகனமாகவே உள்ளான். கால்களை மடக்கி கனத்தினைத் தாங்கும் இராட்சதனாக – ஒரு வீரனாக – பக்தனாக – விசுவாசியாக – தொழிலாளர் வர்க்கத்தினனாகவே சித்திரிக்கப்படுகின்றான்.

  • கலையியல் மரபில் இடும்பனுக்குத் தனிப்பங்குண்டு. மட்டக்களப்பில் ஆடப்படும் வடமோடிக் கூத்துகளில் ஒன்றாக ‘இடும்பன் போர்’ விளங்குகின்றது. அதுபோல நல்லூர்க் கந்தசுவாமி கோயிலின் மகோற்சவத்தில் பதினேழாம் நாள் நடைபெறும் இடும்பன் வாகனத் திருவிழாவில் பூதநிருத்தம் எனும் நடனம் ஆடப்படுவது குறிப்பிடத்தக்கது. மத்தளத்தை தோளில் தூக்கியவாறு ஒற்றை காலில் ஆடி ஆடி வாசிப்பதை பூதநிருத்தம் என்பர். இவ்வாறாக பூத கண வாத்தியங்கள் முழங்க, பூத நடன சமர்ப்பணத்தோடு இடும்பன் மீது கந்தசுவாமி பவனி இடம்பெறும்.

  • ஈழத்துப்புலத்தில் கதிர்காம யாத்திரை என்பது நீண்டகாலமாக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்து வருகிறது. முதன்முதல் யாத்திரை போய் சிறப்பாக அதனை முடித்து வீடு திரும்பியவர் வீட்டில் இடும்பன் பூசை செய்தபிறகே அவர் மீள வீட்டுக்கு வெளியில் செல்லலாம் எனும் நடைமுறை வல்வெட்டியில் இருப்பதாக திருமதி கேசலிங்கம் தவமலர் (வயது, 78) குறிப்பிடுகின்றார். பல பிராந்தியங்களில் யாத்திரை செய்யும் தோறும் இப்பூசை இடம்பெற்று வந்துள்ளது. ஆயினும் இன்று யாத்திரை மரபும் இடும்பன் பூசையும் வழக்கிழந்து வருகின்றது.

  • வெட்டுக்கிணறு வெட்டும் வழக்கம் இன்று அருகி குழாய்க்கிணறு முறையே பெருகிக் காணப்படுகின்றது. அதுபோல கோழி பலியிடல் அருகி அதன்வழி இடும்பன் பூசையும் வழக்கிழந்து பொங்கல் படையலே எஞ்சி நிற்கின்றது.

  • வீடு குடி புகுதல் நிகழ்வின் பின்னான மட்சம், மாமிசம் காய்ச்சுதல் நிகழ்வாக இடும்பன் பூசை நடைபெறுவது அருகி வருகின்றது. படையலுக்குப் பயன்படும் பனையோலையாலான தட்டுவம், பாய் என்பனவும் வழக்கிழந்து விட்டன. தற்காலத்தில் வாழையிலையும் உலோக, பிளாஸ்ரிக் தட்டுகளுமே பயன்படுத்தப்படுகின்றன.

  • எல்லா மக்களாலும் பின்பற்றப்பட்டு வந்த இடும்பன் பூசை இன்று கைவிடப்பட்டு செட்டிமார், சிறுகுடி வேளாளர் போன்றோராலேயே சிறிதளவேனும் இன்றும் பின்பற்றப்பட்டு வருகின்றது.

  • இடும்பனுக்கான படையல் என்பது, குறித்த பிராந்திய மக்களின் பண்பாட்டோடு இணைந்து உணவு முறை, குடிவகைசார்ந்த வெளிப்பாடாகவும் கொடுத்துண்கின்ற பண்பாட்டின் வெளிப்பாடாகவும் அமைகிறது.

  • இன்று இடும்பன் பூசை எனும் சொல்லாட்சி அசைவ உணவை உண்ணுதல் என்பதனைக் குறிக்கும் சொல்லாக, கிண்டலாக மாறியுள்ளமை கவனத்திற்குரியது.

  • காளியோடு இணைந்திருக்கும் இடும்பன் வழிபடு தலங்கள் புதிய தளக்கோலங்களுக்கு உரியனவாக அமைந்துள்ளன. காளி, பிள்ளைகளைப் பிடித்துண்ணுபவளாகவும், அவளைக் கட்டுப்படுத்தும் தெய்வமாக நகரத்தார் இடும்பனை வழிபட்டதாகவும், பயன்பெற்றதாகவும், தமிழகத்தில் ஓர் ஐதிகக்கதை உண்டு. மகாபாரதத்தில் இடும்பன் மனிதர்கள் உள்ளிட்ட உயிர்களை உண்பவனாகவே சித்திரிக்கப்படல் முரண் நகையாகும்.

  • ஈழத்தில் காளியோடு இணைந்த இடும்பன் வழிபடுதலங்களில் (மட்டக்களப்பு, யாழ்ப்பாணம்) பில்லி சூனியம், செய்வினை, வசியம் என்பன நிகழ்த்துகைகளாக உள்ளன. இது இடும்பன் வழிபாடு, நாகரிகமற்ற ஒன்று எனக் கருத வாய்ப்பளிக்கின்றது.

  • இடும்பன் பூசை என்பது ஒரு வழிபாடு என்பதைவிட, குறித்த காரியத்தில் துணை நின்ற யாவர்க்கும் அவர் விரும்பும் உணவை, குடி வகையை விருந்தாக அளித்து நன்றி செலுத்தும் நிகழ்வு என்றே கருத வேண்டியுள்ளது. இன்னும் நுணுகியுரைக்கின் மகிழ்விலும் துக்கத்திலும் கூட இருந்தவர்களுக்கு அன்பை வெளிப்படுத்துவதாகவும் வீடு, கிணறு உருவாக்கத்தில் அர்ப்பணிப்புடன் உழைத்த உழைப்பாளிகளுக்கு நன்றி சொல்லும் வகையில் நிகழும் நிகழ்வாகவுமே இடும்பன் பூசை அமைந்துள்ளது.

I-1-8.jpg

நிறைவுரை

ஈழத்தில் நின்று நிலவுகின்ற நாட்டார், ஆகமமரபு வழி தனித்தனியேயும், இரு மரபும் இணைந்தநிலையிலும் வழிபடு தெய்வமாக இடும்பன் காணப்படுகின்றான். இடும்பன் பற்றிய கதைகள் பல இடும்பன்கள் இருந்தமையை உறுதிப்படுத்துகின்ற அதேவேளை அவனை இராட்சதனாக, மாமிச உண்ணியாக சித்திரிப்பதில் ஒன்றுபடுகின்றன. இடும்பன் தனிக்கோயில் கொண்டவனாக, பரிவாரத் தெய்வமாக காணப்படுகின்ற அதேவேளை, இன்று அவனது கோயில்கள் பல காணாமல் போயின அல்லது மேனிலையாக்கம் பெற்றன. ஆஜானுபாகுவான உருவமுடைய சிலை – விக்கிரக வழிபாடு காணப்படும் அதேவேளை வேல், கல், சூல வழிபாடும் உள்ளன. உரும்பிராயில் மட்டும், மூன்று திரிசூலங்கள் இணைந்து, இருபக்கமும் மேலும் நோக்கிய வண்ணம் அமைக்கப்பட்டு, வழிபடப்படுவதைக் காண முடிகிறது. சனங்களின் உணவியல் பண்பாட்டோடு கலை மரபோடும் இணைந்த இத்தெய்வம் அரூபநிலையிலும் வழிபடப்படுகிறது. இடும்பன் பூசை ஒரு தெய்வ வழிபாடாக மட்டுமன்றி உழைப்பாளர்களை – குறித்த தொழில்களைச் செய்யும் மக்களை, அவர்களின் பணியைக் கௌரவித்து, மரியாதை செய்வதாகவும், நன்றி தெரிவிப்பதாகவும் அமைந்துள்ளது. ஆயினும் நாகரிகம் என்ற போர்வையில் இன்று இப்பண்பாடும் பூசையும் மிகவிரைவாக வழக்கிழந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

https://www.ezhunaonline.com/idumban-pooja/

  • 1 month later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மாதா கோயில் அம்மன்

தி. செல்வமனோகரன்

அறிமுகம்

உலக அரங்கில் முதன்மை பெற்ற வழிபாடுகளில் ஒன்றாகப் பெண் தெய்வ வழிபாடு காணப்படுகின்றது. இயற்கை மீதான அச்சம், வியப்பு என்பவற்றின் வழிவந்த வழிபாடு, தெய்வம் எனும் கருத்துரு என்பவற்றின் வழியும் இனக்குழு, நிலம், கலை என்பவற்றின் வழியும் பல்தெய்வ வழிபாடுகள் உருவாக்கம் பெற்றன. அவற்றுள் பெண் தேவதையாக, அம்மனாக, கன்னியாக, குழந்தையாக எனப் பலவாறு வழிபடப்பட்டாள். உலகில் தோன்றிய பெரும்பாலான சமயங்கள் பெண் தெய்வ வழிபாட்டைக் கொண்டிருந்தன.

தெய்வங்கள் இயல்பிறந்த ஆற்றல்களை உடையன. அதேவேளை நாட்டார் தெய்வங்கள் மனிதர்களைப் போல ஆசாபாசங்களை உடையனவாக மனித நடத்தைகளைக் கொண்டனவாக அமைந்திருந்தன. அவை பற்றிய கதைகள் இதனை வலுப்படுத்துகின்றன. பிற்காலப் பெருந்தெய்வங்கள் பரிபூரணத்துவம் பெற்ற பரம்பொருள்களாகக் கருதப்பட்டன. ஆனால் நாட்டார் தெய்வங்கள் ஆவி, உயிரி, மானா, குறி, முன்னோர் போன்ற வடிவங்களில் இருந்தன; இனக்குழுமவியலின் தெய்வமாகப் போற்றப்பெற்றன. குறித்த இனக்குழுமத்தின் தெய்வத்தை மற்றைய இனக்குலத்தவர் அறிந்திருந்தனர் எனக் கூறுவதற்கில்லை. அறிந்திருந்தாலும் வணங்கினர் எனக் கூற முடியாது. அவரவர் தெய்வம் அவரவர்க்கானது. அது அவரது நம்பிக்கையாகும். காலவோட்டத்தில் வலுவுள்ளன நிற்க, ஏனையவை அருகிப்போயின. நாகரிகம், மேனிலையாக்கம் எனும் மனப்பாங்குகள் நாட்டார் தெய்வங்கள் அருகிச்செல்ல பெரிதும் காரணமாகி நிற்கின்றன.

ஆயினும் தம் குலதெய்வம் என்ற நம்பிக்கையூற்று வற்றிப்போகாத சமூகம் அல்லது இனக்குழுமம் இன்றும் நாட்டார் தெய்வங்களை – குல தெய்வங்களை ஏதோ ஒரு வகையில் பற்றிப்பிடித்து நிற்கின்றன. சமூக, கால மாற்றத்தின் வழி சிற்சில மாற்றங்கள் நிகழ்ந்திருப்பினும் அவை தம் அடிக்கட்டுமானத்தில் மாற்றமின்றி  நிற்கின்றன. பாரம்பரிய வழிபாட்டுமுறைகளின் வழி வழிபடப்படுகின்றன. தெய்வவழிபாடுகள், சமயவியற்புலத்தில் மட்டுமின்றி, சமூகவியல், மானிடவியல், இனவரைவியல் ஆகிய ஆய்வுப்புலங்களுக்கும் முக்கியமான தரவுகளைக் கொடுக்கின்றன. குறிப்பாக, ஒரு சமூகத்தின் பொருளாதாரம், அரசியல் அமைப்பு, மொழிப்பயன்பாடு, உணவுப்பழக்கம், தொழில்கள் போன்ற கூறுகளின் வரலாற்றைப் புரிந்துகொள்வதற்கும், அந்தச் சமூகத்தின் தொன்மை மற்றும் சமூக அசைவியக்கங்களை அலசுவதற்கும் இவ்வழிபாடுகள் பெரிதும் உதவுகின்றன.

அந்தவகையில் யாழ்ப்பாணத்தின் வடமராட்சிப் பிரதேசத்தில் அம்பன் எனும் கிராமத்தில் இன்றும் நின்று நிலவும் தெய்வமாக ‘மாதா கோயில்’ அம்மன் காணப்படுகின்றது. அம்பனைத் தன் பிறந்த ஊராகக்கொண்ட சமூகவியலாய்வாளர், எழுத்தாளர் திரு.ந. மயூரரூபனின் வழிகாட்டலில் என்னோடு வழமைபோல ஆய்வு ஆர்வலர் திரு. கோ. விஜிகரனும் இணைந்து இந்தத் தெய்வம் பற்றிய களப்பணியினை மேற்கொண்டோம்.

மாதா கோயில் அம்மன்

ஈழத்துத் தமிழ்ச்சூழலில் புழக்கத்தில் இல்லாத ஒரு வழிபாடு அம்பன் பகுதியில் காணப்படுகிறது. அதுவே மாதா கோயில் அம்மன் வழிபாடு. மாதா கோயில் என்பது ஈழத்தைப் பொறுத்தவரை கிறிஸ்தவ மேரி மாதாவின் கோயிலாகவே சுட்டப்படுகிறது. எவ்வாறு ‘வேதக்காரர்’ என்பது சைவர்களைச் சுட்டாது கிறிஸ்தவர்களையே சுட்டுகின்றதோ, அதுபோலவே மாதா கோயிலும் றோமன் கத்தோலிக்கக் கோயிலை சுட்டுவதாகவே அமைந்துள்ளது. அதிலும் விசேடம் என்னவெனில் கிறிஸ்தவ மாதா கோயில்கள் பொதுக்கோயிலாகவே பெரும்பாலும் அமைந்திருக்கும். மாதா சொரூபத்தை சிலர் வீடுகளில் வைத்திருப்பர். ஆனால் அம்பன் கிராமத்தில் வீட்டுவளவிலும் தனித்த இடத்திலும் சிறு மாதா கோயில் கட்டப்பட்டு வழிபடப்படுகின்றது. இது சற்று நூதனமாகவே இருந்தது. ஆதலால் மாதா கோயில் அம்மனை ஆய்வுக்கெடுத்துக் கொண்டோம்.

கிறிஸ்தவ மாதா கோயிலா?

ஈழத்தில் காலனியகால ஐரோப்பியர் வருகையோடு றோமன் கத்தோலிக்கம் அரச மதமாக உட்புகுகிறது. அதேசமயம் சுதேச சமயங்கள் ஒடுக்கப்பட்டு கோயில்கள் யாவும் இடித்தழிக்கப்படுகின்றன. கற்கோயில்கள் இல்லாது ஒழிக்கப்பட்டன. ஐரோப்பியரிடமிருந்து ஆட்சியைக் கைப்பற்றிய ஒல்லாந்தர்களும் சுதேச சமய ஒடுக்குமுறையை மட்டுமல்லாது, றோமன் கத்தோலிக்கத்தின் மீதும் ஒடுக்குமுறையை கையாண்டு அவர்களது கோயில்களையும் இடித்தழித்தனர். புரட்டஸ்தாந்து தேவாலயங்களைக் கட்டினர். ஒல்லாந்தரின் ஆட்சியின் இறுதியில் 1890களில் சைவக் கோயில்கள் கட்டப்பட்டன. அதன்பின் கத்தோலிக்கத் தேவாலயங்களும் கட்டப்பட்டன. பிரித்தானியராட்சியில் கிறிஸ்தவ ஆதி நூலான பைபிள் தமிழுக்கு மொழிபெயர்க்கப்படுகின்றது. அக்காலத்தில் நிகழ்த்தப்பட்ட மொழிபெயர்ப்புகள் யாவற்றிலும் சமஸ்கிருதச் சொற்கள் விரவியிருந்ததை ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன. வேதாகமம், மாதா, பிதா, சுதன், கர்த்தர் என இதனை உதாரணப்படுத்தலாம்.

இந்துக்களின் பெண் தெய்வ வழிபாடு அம்மனின் வழிபாடாகச் சுட்டப்பட்டது. பெண் தெய்வத்தை அம்மன், அம்மா, ஆச்சி, நாச்சியார், கன்னிமார் எனப் பல பொதுச்சொற்களால் சுட்டி வழிபடும் வழக்கமே இருந்துள்ளது. அதேவேளை கிறிஸ்தவ பெண் தெய்வமான மேரியை மேரியன்னை, மேரி மாதா எனச் சுட்டும் வழக்கம் தமிழர் மத்தியில் காணப்பட்டு வந்துள்ளது. இச்சொற்பிரயோகங்கள் ஈழத்தில் தெளிவான சமயப்பிரிநிலைச் சொற்களாகவே பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

தென்னாசிய நாடுகளில் மாதா கோயில்

இந்திய சாக்த மதத்தவரின் 64 சக்திபீடங்களில் ஒன்றாகவும், முதலானதாகவும் வர்ணிக்கப்படும் ‘ஹிங் குலாஜ்’ மாதா சக்திபீடக் கோயில் தற்போது பாகிஸ்தானின் பலூகிஸ்தான் மாகாணத்தில் லஸ்பெலா மாவட்டத்தில் ஹிங்கோர் தேசியப் பூங்காவில் அமைந்துள்ளது. ஹிங்குலி – முன்வகிடுக் குங்குமப்பொட்டு அல்லது செந்தூரம் எனப்படுகிறது. மகாசக்தி பீடேஸ்வரி தெய்வமாக வீற்றிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த இந்துக் கோயில் ‘மாதா கோயில்’ என்றே கூறப்படுகிறது. அதேபோல நேபாளத்தில் உள்ள அம்மன் கோயிலும் ‘பதிவரா மாதா கோயில்’ என்று சுட்டப்படுகிறது. கால்நடை (ஆடு) வளர்ப்புடன் இணைந்த தெய்வ வழிபாடாக இது காணப்படுகிறது. இது ஆசைகளின் தெய்வம் என்றும், இங்கு வரும் அடியவர் ஆசைகளை நிறைவேற்றுவதனால் இப்பெயர் பெற்றதென்றும் கூறப்படுகின்றது.

இந்தியாவில் ராஜஸ்தான் மாநிலத்தில் பிகானேர் மாவட்டத்தில் ‘ஹர்ணி மாதா கோயில்’ காணப்படுகிறது. இங்கு வழிபடுதெய்வம் துர்க்கை. இது எலிக் கோயில் எனவும் அழைக்கப்படுகிறது. ஹரியானா மாநிலத்தில் ‘பர்வானூ சீதள மாதா கோயில்’ எனும் அம்மன் கோயில் காணப்படுகிறது. பாகிஸ்தானின் கராச்சியில் 50 வருடப் பழமை வாய்ந்த கோயில் 19.07.2023 இல் இடிக்கப்பட்டதாக பரபரப்பாகப் பேசப்பட்டமை யாவரும் அறிந்ததே. அது ‘மாரி’ மாதா கோயில் ஆகும்.

அண்மைக்காலத்தில் இந்திய ராஜஸ்தான் மாநிலத்தில் ‘சதி மாதா’ கோயிலும் உத்தரப்பிரதேசத்தில் ‘கொரோனா மாதா’ கோயிலும் அமைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. வட இந்தியப் பண்பாட்டில் மாதா கோயில் என்பது இந்துக்களின் அம்மன் வழிபாட்டைக் குறிப்பதையும், இக்கோயில்கள் பெரும்பாலும் மலைப்பிரதேசங்களில் அமைந்திருப்பதையும் அவதானிக்க முடிகிறது. ஈழத்துத் தமிழ்ச்சூழல் இதற்கு மாறானது. தமிழகத்திலும் ஈழத்திலும் மாதா எனும் சமஸ்கிருதச் சொல்லின் சமயரீதியிலான தற்காலப் பொதுப்பயன்பாடு கிறிஸ்தவ மேரி மாதாவைக் குறிப்பதாகவே அமைந்துள்ளது.

அம்பன் கிராமத்து மாதா கோயில் அம்மன்

வடமராட்சி அம்பன் கிராமத்தில் ஐந்து அம்மன் மாதா கோயில்கள் காணப்படுகின்றன. அவற்றுள் பழமையானது கிழக்கு அம்பன் பிரதேசத்தில் திருமதி தெய்வயானை வீரபாகு (வயது 82) அவர்களின் வீட்டில் உள்ளது. ஏனைய கோயில்களிலும் இந்த வீட்டில் உள்ள கோயில் தனித்துவமானதாக அமைந்துள்ளது. தனது அம்மம்மா காலத்திற்கு முன்பிருந்தே இந்த மாதா கோயில் வழிபாடு இருந்து வருவதாகவும் ஆரம்பத்தில் திறந்தவெளியிலும் பின்பு ஓலைக்கொட்டிலிலும் இருந்த தெய்வத்திற்கு, சிறிய சீமெந்துக் கட்டடம் அண்மையில் அமைக்கப்பட்டுள்ளது.

I-1-11-851x1024.jpg

மாதா கோயில் என அழைப்பது ஏன் என வினவியதற்கு, யாவருமே தெரியாது என்று பதில் கூறினர். தொடக்ககால வரலாறு, இவ்வழிபாடு வந்தமுறை போன்ற எந்த வினாக்களுக்கும் அவர்களுக்கு விடை தெரிந்திருக்கவில்லை. மாதா கோயில் நூறு வருடத்திற்கு மேற்பட்டது என்ற வரியைக் கவனத்தில் கொண்டு சில அனுமானங்களுக்கு நாம் வரலாம்.

  1. ஒல்லாந்தராட்சிக் காலத்தில் சுதேசிகளின் வணக்கமுறைக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது. மீறி வழிபடுதல் தண்டனைக்குரிய குற்றமாக இருந்தது. இதற்குச் சுதேசிகள் சில மாற்றுத்திட்டங்களை முன்வைத்திருந்தனர். யாழ்ப்பாண நாட்டாரியல் வழிபாட்டில் கல், சூலம் என்பன அதிக செல்வாக்குப் பெறுவன. சூலத்தை வழிபடும் காலத்தில் ஒல்லாந்தரோ, அன்றி அவர்களுக்குக் காட்டிக்கொடுப்பவரோ வரின், சூலத்தின் மடிந்திருந்த இருகரைக் கம்பிகளையும் நேராக்கி விடுவர். அது சிலுவைபோல காட்சியளிக்கும். அதுபோல கற்களை புல், குழை, இலை போன்றவற்றால் மறைத்து விடுவர். அவ்வாறு செய்யமுடியாது பிடிபட்ட சந்தர்ப்பம் ஒன்றில் கல் வைத்து வழிபட்ட அம்மனை மாதா எனக் கூறியிருக்கலாம்.

  2. ஏதோ ஒரு தேவையின் பொருட்டு அம்மனை மாதா எனக் கூறி வழிபட்டிருக்கலாம்.

  3. கிறிஸ்தவச் சமூகத்தின் செல்வாக்கு அல்லது உதவி பெறுதற் பொருட்டு மாதா கோவில் எனும் சொல் புழக்கத்திற்கு வந்திருக்கலாம்.

  4. மாதா என்பது அன்னை – அம்மன்; ஆகவே அம்மனை மாதா என அழைத்தல் தமது உரிமை, அது கிறிஸ்தவத்திற்குரியதல்ல என்ற எண்ணத்தினாலும் இப்பெயர் இடப்பட்டிருக்கலாம்.

  5. மத நல்லிணக்க உணர்வினால் இவ்வாறு சுட்டியிருக்கலாம்.

இக்கோயில்கள் இருக்கும் இந்தவூரின் பெயர் அம்பன் எனப்படுகிறது. அதற்குத் தெளிவான காரணமெதுவும் கூறப்படவில்லை. அம்மன் – அம்பன் எனப் பேச்சுவழக்கில் திரிந்திருக்கலாம். இத்தெய்வ வழிபாட்டின் சிறப்பே ஊர்ப்பெயராக மாறியிருக்கலாம்.

ஈழத்தில் மாதா கோயில் என ஒரு சைவக் கோயில் யாழ்ப்பாணம் காரைநகர் கள பூமியில் இருக்கின்றது (பாலேந்திரன்,ச. ஆ., 2002, காரைநகர் தொன்மையும் வன்மையும், பாலாவோடை அம்மன் பதிப்பகம், காரைநகர்). காலனிய காலத்தில் சைவ வழிபாடு தடை செய்யப்பட்டிருந்த சூழலில் அம்மனை வழிபட்டு வந்ததாகவும், அந்நியர்கள் அக்கோவிலை உடைப்பதற்கு வருகை தந்தபோது மாதா சொரூபத்தை வைத்து வழிபட்டு அந்தக் கோயிலைக் காப்பாற்றியதாகவும், ஆதலால் அதனை மாதா கோயில் என்று அழைப்பதாகவும் அதன் உரிமையாளர்கள் கருத்துத் தெரிவிக்கின்றார்கள். இந்தக் கோயிலுக்கும் முத்துமாரியம்மன் கோவிலுக்கும் இடையில் ஒரு தொடர்பு உண்டு என்றும், முத்துமாரியின் தாய் தான் மாதா என்றும் சொல்லுகிற வழக்கமும் அங்கு உண்டு. இந்த வழிபாட்டு மரபு அம்பன் மாதா கோவில் அம்மன் வழிபாட்டில் இருந்து வேறானது என்பதனால் இந்த ஆய்வில் அக்கோயிலைப் பற்றி விரித்துரைக்கவில்லை.

தெய்வவுரு

மாதா கோயில் அம்மனுக்கு உருவம் இல்லை. ‘கல்’ வைத்தே வழிபடப்படுகின்றது. தொன்மைக் கோயிலான வீரபாகு அவர்களின் வீட்டில் உள்ள அம்மனின் கல், வெள்ளைக் கல்லாகக் காணப்படுகிறது. சங்கொன்றின் நுனிப்பகுதியில் காணப்படும் சுருள் போன்ற அமைப்பில் கூம்புருவமாக ஒரு சாண் அளவுக்குட்பட்டதாகக் காணப்படுகிறது. சங்ககாலத்தில் அடி பெருத்து நுனி சிறுத்த கறுப்பு நிறத்தாலான கந்து, நந்தா விளக்கேற்றி வழிபடப்பட்டதை இவ்வடிவம் ஞாபகப்படுத்துகிறது. ஏனைய நான்கு கோயில்களிலும் கருங்கல்லாலான கூம்புருவக்கற்களே வைத்து வழிபடப்படுகின்றன. பரிவாரத் தெய்வங்களும் கூம்புருவக்கற்கள் வைத்தே வழிபடப்படுகின்றன.

வீரபாகு வீட்டுக் கோயிலிலுள்ள வெள்ளைக்கல்லின் சுருள்க்கரையில் சிதைவு ஏற்படத் தொடங்கியுள்ளதெனினும், அது தனித்துவமான ஏனைய மாதா கோயில்களில் உள்ள கல்லைவிடச் சிறப்பானதாக அமைந்துள்ளது.

I-2-11-1024x631.jpg

I-3-7-593x1024.jpg

கோயில் அமைப்பு

நாட்டார் தெய்வ வழிபாடுகள் பொதுவெளியில் மரத்தடி, குளத்தடி, கிணற்றடி போன்ற இடங்களில் அமைந்திருப்பது வழக்கம். அதுபோலவே இக்கோயில்களும் பொதுவெளியில் ஆரம்பிக்கப்பட்டன. இன்றும் திருமதி பானுமதி குணசிங்கம் அவர்களின் இல்லத்தில் சீமெந்துப்பீடம் அமைத்து, நடுவில் அம்மனும் நான்கு பரிவாரத் தெய்வங்களுமாக கூரையின்றி அமைந்து காணப்படுகிறது. திருமதி வீரபாகு தெய்வயானை, வன்னியசிங்கம் கனகநாதன், திருமதி பானுமதி குணசிங்கம் ஆகியோரின் காணிகளில் அமைந்துள்ள கோயில்கள் ஒரே நேர்கோட்டில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. ஏனைய எல்லாக் கோயில்களும் சீமெந்துக் கட்டடங்களாலான கூரையை உடைய சிறிய கோயில்களாக அமைந்துள்ளன. முதற்கோயில் மட்டும் மேற்குத்திசையை நோக்கியிருக்க ஏனையவை கிழக்குத்திசையை நோக்கியவையாக அமைந்துள்ளன. அவற்றுள் சாஸ்திர முறைப்படி –  சோதிடர் ஆலோசனைப்படி கட்டப்பட்டவையும் உண்டு.

I-4-6-871x1024.jpg

மாதா கோயில் அம்மன் பற்றிய கதைகள்

  • இந்த அம்மனுக்கு உருவமில்லையெனினும் வீட்டவருக்கு ஒரு விடயம் சொல்வதற்கோ, சிக்கலைத் தீர்ப்பதற்கோ இத்தெய்வத்தை வேண்டின், அதனை உடனடியாக நிறைவேற்றும். பொழுது சாய்ந்ததன்பின் (இருட்டியபின்) கோயிலடிக்கு யாரும் செல்வதில்லை என்றும், இரவில் கிழவி ரூபத்தில் (வயதுபோன பெண்) வெள்ளை உடுப்பு உடுத்தவளாக உலாவுவாள் என்றும், எதிரில் வந்து ஏதும் சொல்லிவிட்டுப் போவாள் என்றும் திருமதி தெய்வயானை வீரபாகு (வயது, 82) கூறினார்.

  • திருமதி பானுமதி குணசிங்கம், வீட்டின் மேற்குப்புற அலம்பல் வேலியை அகற்றி எல்லை அமைக்கும்போது இக்கோயிலையும் எடுத்துவிட்டார். இக்கோவிலுக்கு முன்பு விளக்குவைத்த வெளிநாட்டில் உள்ள அண்ணாவின் கனவில் இத்தெய்வம் தோன்றியதாகவும், அவர் அடுத்தநாள் கோயிலில் என்ன செய்தீர்கள் எனக்கேட்டு, நடந்ததை அறிந்து, கோயிலை மீள அமைக்கக் கூறியபடி இக்கோயிலை அமைத்ததாகவும் திரு.ஆ. குணசிங்கம் (வயது, 60) கூறினார்.

  • யுத்த இடம்பெயர்வால் கைவிடப்பட்ட கோயிலை மீள ஆதரிக்கவில்லை. வீட்டில் நிறையப் பிரச்சினைகள் நடந்தன. கட்டுக்கேட்ட இடமெல்லாம் குலதெய்வத்தை ஆதரிக்குமாறு கூறினர். அதன்பின்பே மீளக் கோயில் அமைத்தோம். இப்போது பிரச்சினைகள் குறைந்துவிட்டன என திரு. வன்னிய சிங்கம் கனநாதன் (வயது, 72) குறிப்பிட்டார்.

இத்தெய்வத்தை வணங்கிய எவரும் இன்றுவரை இத்தெய்வ வழிபாட்டை நாட்டாரியல் பண்போடு அவ்வண்ணமே ஆதரித்து வருகின்றனர். கனவில் தோன்றி காட்சியளித்தல், கிழவி ரூபம், வெள்ளை ஆடை என்பன யாவரும் உரைக்கும் பொதுவிடயங்களாக உள்ளன.

வழிபாட்டு முறைகள்

இவ்வாலயங்களில் வெள்ளிக்கிழமைகளில் விளக்கு வைத்தல் நிகழ்கிறது. திருமதி தெய்வயானை வீட்டில் திங்கட்கிழமைகளில் விளக்கு வைக்கும் வழக்கமும் இருக்கிறது. விளக்கு வைக்கும் நாட்களில் வெற்றிலை, பாக்கு, பழம் என்பன படையல் வைக்கப்படுகின்றன.

தைப்பொங்கல், சித்திரைப் பொங்கல், நவராத்திரி, திருவெம்பாவைக் காலங்களில் விசேட பூஜை, வழிபாடுகள் செய்யப்படுகின்றன. அயலிலுள்ளவர்களும் நேர்த்தி நிறைவேற்றும் நாட்களில் கலந்துகொள்கின்றனர். வருடத்தில் ஒரு நாள் மோதகப் பூசை நடைபெறும். விசேட தினங்களில் பொங்கல் பொங்கி, பலகாரங்கள் பல (வடை, மோதகம், முறுக்கு, பால்றொட்டி, சீனியரியாரம்…) வைத்து மா, பலா, வாழை, மாதுளை உள்ளிட்ட பழங்கள் படைத்துப் பூசை செய்யப்படுகிறது. இக்கோயில் பூசை ஆண்வழிச் சமூகத்தாலேயே நிகழ்த்தப்பட்டு வருகின்றது.

வீட்டில் உற்பத்தியாகின்ற பொருள்களில் முதற் பொருளை (பழங்கள், தேங்காய், நெல்…..) இத்தெய்வத்துக்குப் படைத்தபின்பே பயன்பாட்டுக்கு எடுக்கும் வழக்கம் காணப்படுகின்றது.

சமூக அடுக்கமைவு

மேற்சுட்டிய ஐந்து மாதா கோயில்களும் வேளாள சமூகத்தவர்க்கானவை. அதிலும் குறித்த இரத்த பந்தம் உள்ள குடும்பங்களுக்கானவை. விவசாய நிலமும் ஆடு வளர்ப்பும் உள்ள பிராந்தியத்தில் உள்ளவை. இவற்றைவிட இதேபகுதியில் சிறுகுடி வேளாளரான பள்ளர் சமூகத்தவரிடம் ஒரு மாதா கோயில் இருப்பதை அறிந்து அங்கு சென்றோம். அக்கோயில் பூசாரியான வேலுப்பிள்ளை சசிகரன் (வயது, 41) அக்கோயில் பற்றிய விபரங்களைக் கூறினார். தன்னுடைய தாத்தா காலத்துக்கு (சிதம்பரம்) முற்பட்ட கோயில் என்றும், கல் வைத்து அம்மனை வழிபட்டனர் என்றும், 2000 ஆம் ஆண்டு வரை மாமனார் பூசை செய்து வந்ததாகவும், 2010 இல் யுத்தம் நிறைவுற்றதன்பின் வந்து பார்த்தபோது கோயில் முற்றாக சிதைந்திருந்தது என்றும், தான் தான் தற்போதைய கோயிலைக் கட்டி எழுப்பியதாகவும் கூறினார்.

ஆகமக் கோயில்களைப்போல கருவறை, முன்மண்டபம் உடையதாகவும் கல்லை அகற்றிக் கருங்கல்லாலான அம்மன் திருவுருவத்தை ஸ்தாபித்துக் கும்பாபிஷேகம் செய்ததாகவும், பரிவாரத்தெய்வமாக அண்ணமார் தெய்வம் இருப்பதையும் சுட்டிக்காட்டினார். இங்கு ஆடிப்பூரம், கும்பாபிஷேக தின மணவாளக்கோல விழா, பங்குனி உத்தரம் என்பன சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.

விசேட தினங்களில் இவருக்குக் கலைவரினும் கட்டுச் சொல்வதில்லை. இவரின் அக்காவின் மகளே கலையாடி, கட்டுச் சொல்கிறார். முன்பு பில்லி சூனியம், வசியம், செய்வினை அகற்றல், பேய் – பிசாசு ஓட்டுதல் போன்ற நிகழ்வுகள் நடைபெற்றதாகவும், தனது தாய் மந்திரவித்தையில் வல்லவர் எனவும், இவை அனைத்தையும் அவர் செய்ததாகவும் கூறினார். ஆனால், தாயார் விமர்சனத்துக்குள்ளானதினால், அதனைத் தொடர்ந்து தாம் பழகவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

வீரபாகுவின் மகன் திரு.வீ. காந்தனும் பில்லிசூனியம், செய்வினை, வசியம் முதலான தீவினை நீக்கத்துக்காகவே இந்தத் தெய்வம் வழிபடப்படுகிறது எனக் கூறியமை இதனுடன் ஒத்துப்போகிறது.

சில அவதானிப்புகள்

  • மாதா கோயில் என்பது காலனித்துவத்தின் பேறாய் பயன்பாட்டு நிலையில் ஈழத்தில் இருந்து வந்திருக்கிறது. ஒடுக்குமுறைக்குப் பயந்து அல்லது அதற்கு எதிராக இது பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது.

  • ஈழத்துச் சைவ வாழ்வில் அம்மன் வழிபாட்டுடன் தொடர்புடைய இச்சொல், குறித்த பரம்பரையினரின் குலதெய்வத்தை அல்லது முன்னோர் வழிபாட்டைச்சார்ந்த ஒன்றென்றே கருத முடிகிறது.

  • இப்பரம்பரையினரிடம் பணிபுரிந்த சிறுகுடி வேளாளர் இத்தய்வத்தின் திருவருளை வியந்தோ அல்லது வேளாளரை ஒத்தவராகத் தம்மைக் கருதியோ, அன்றி விசுவாசத்தாலோ இத்தெய்வத்தை தம் குடியிருப்புப்பகுதியில் உருவாக்கியிருக்கலாம். இன்றும் கோயில் தண்டலுக்கு வேளாளரிடம் செல்லும் வழக்கம் உண்டு என்று பூசாரி கூறியமை குறிப்பிடத்தக்கது.

  • வெவ்வேறு கற்களால் குறிப்பிட்ட பிரதேசத்தில் (அம்பன்) இத்தெய்வவுரு வழிபடப்படுகிறது.

  • வீட்டுவளவில் சிறுகோயில் வழிபாடாகக் காணப்படுகின்றது. சிறுகுடி வேளாளரின் கோயில் மேனிலையாக்கத்துக்கு உள்ளாகியிருக்கிறது. இது சாதிய நீக்கம் – தம்மைத் துறத்தல் சார்ந்த செயற்பாடாகவே பூசாரியின் உரையாடல் வழி புரிந்துகொள்ள முடிந்தது.

  • வேளாண்மை, ஆடு வளர்ப்பு என்பவற்றில் அப்பகுதி மக்கள் ஈடுபடுவதை – அவர்கள்  வேளாண்மையாளர்களாக இருப்பதனை அவதானிக்க முடிந்தது. நேபாளத்தில் உள்ள பதிவரா மாதா கோயிலும் ஆடு வளர்ப்புடன் தொடர்புபட்டதாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

  • தீவினைகளுக்கு எதிராகக் கோயிலமைத்து வழிபடப்படுகின்ற நேர்நிலைத் தெய்வம் இதுவாகும்.

  • பெண் தெய்வமெனினும் ஆண்வழிப் பூசாரிகளே பூசை செய்து வருகின்றனர்.

  • தாய்மையின் அடையாளமாக, தூய்மையின் சின்னமாக இத்தெய்வமிருத்தலை கிழவி ரூபம், வெள்ளை உடை எனும் சித்தரிப்புகள் புலப்படுத்துகின்றன.

  • இந்தக் கோயில்கள் எதிலும் பலியிடலோ, மட்ச – மாமிசப் படையல்களோ இடம்பெறுவதில்லை.

நிறைவுரை

குலதெய்வ வழிபாடுகளில் ஒன்றாக அம்பன் பிரதேசத்து மாதா கோயில் அம்மன் வழிபாடு காணப்படுகிறது. இது சைவ வேளாளர் சமூகத்தின் வழிபாடாகும். மாதா எனும் சொல் அன்னையைக் குறிக்கும் எனினும், யாழ்ப்பாணத்தில் மாதா கோயில் என்பது கத்தோலிக்க கிறிஸ்தவ மேரி மாதா கோயில்களையே பொதுவில் சுட்டுகின்றன. ஆனால் இவை சைவக் கோயில்கள்; காலனிய ஆதிக்கங்களுக்குப் பயந்தோ, அன்றி எதிர்நிலை – நேர்நிலை எடுத்தோ இச்சொல் பயன்படுத்தப்பட்டிருக்கலாம். மாதா என்பது அன்னையே எனப் பொருள்கொண்டு இப்பெயரைச் சூட்டி இருக்கலாம். விவசாய நிலத்தோடு இணைந்து வேளாளர் மரபின் வீட்டுவளவில் இருக்கின்ற காவல் தெய்வம் இதுவாகும். தீவினைத் துன்பத்தில் இருந்து காக்கும் தெய்வம் இது. ஆரம்பத்தில் அம்மன் தெய்வத்துக்கான கல் மட்டுமே வைத்து வழிபடப்பட்டது. காலப்போக்கில் பிள்ளையார், முருகன் உள்ளிட்ட தெய்வங்களும் இணைத்து வழிபடப்பட்டன. பல்வகைக் கற்களால் இத்தெய்வ வழிபாடு நிகழ்த்தப்படுகின்றது. வேளாளரின் வழிபாடு சிறுகுடி வேளாளரிடம் சென்றமை அக்கால சமூக அடுக்கமைவை ஆதாரப்படுத்துகிறது. உணவுப் படையல் சமூக, பொருளாதார, பண்பாட்டு அடிப்படையில் நிகழ்த்தப்படுகிறது. குறித்த பரம்பரையினரின் வழிபடு தெய்வம் எனினும், மாதா கோயில் என்ற குறிப்பு கால, தேச, வர்த்தமானம் கடந்த அர்த்தப்பாடுகளை உணர்த்தி நிற்கிறது.

https://www.ezhunaonline.com/madha-kovil-amman/

  • 3 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பூசைக்கிழவி என்னும் தெய்வம்

தி. செல்வமனோகரன்

அறிமுகம்

மனித குல வரலாற்றோடு பின்னிப்பிணைந்த இயற்கை – இயற்கை வழிபாட்டின் வழி உருவான தெய்வங்களுள் பெண் தெய்வங்களுக்குத் தனியிடம் உண்டு. தமிழர் சமயவியலின் தொடக்கத்தில் கொற்றவை எனும் பாலை நிலத் தெய்வம் அடையாளப்படுத்தப்படுகின்றாள். தமிழர் வாழ்வியல் புலத்தில், ஏன் மனிதரின் வரலாற்றில், வேட்டையாடலுக்குத் தலைமை தாங்கி இனக்குழுவை வழிநடத்தியது தொடக்கம் நிலையான குடியிருப்பு, உற்பத்திச் செயற்பாடுகள் என்பவற்றில் பெண்ணின் பங்கு பிரதானமானது என்பதை அறிய முடிகிறது. அவளது பிள்ளைப்பேறு கால ஓய்வு – மருத்துவத் தேவையை முன்னிட்டு, குடும்பப் பொறுப்பு ஆணின் கையிற்கு முதலில் தற்காலிகமாகவும், பின்பு நிரந்தரமாகவும் அதிகார மாற்றம் செய்யப்பட்டது. அதன் பின்பு ஆணால் சமூகப் பொறுப்பும் அதிகாரமும் எடுத்துக்கொள்ளப்பட்டது.

தமிழர் வரலாற்றில் விளைச்சலற்ற, கொடிய வெயில், மழை, காற்று நிறைந்த பாலை நிலத் தெய்வமாக, கொடூரமானவளாக, சீற்றம் நிறைந்தவளாக கொற்றவை என்னும் ஒரேயொரு பெண் தெய்வம் சித்திரிக்கப்படுகிறது. பெண்ணின் சீற்றம்தான் அவளின் தெய்வ அடையாளமோ எனத் தமிழர் சமய வரலாற்றைக் கற்குந் தோறும் தோன்றுகின்றது. கொற்றவை, கண்ணகி, காரைக்கால் அம்மை, மாரி, காளி என இப்பட்டியல் நீளும்.

பிற்காலத் தாய்மை பற்றிய உரையாடலில்தான் சாந்த சொரூபியாக, காருண்யமாக, தத்துவத் தளத்தில் பரம்பொருளின் ஆற்றலாக (இயக்க சக்தி) அவள் சித்திரிக்கப்படுகின்றாள். காலம் தோறும் ஆணின் பார்வையிலான பெண்ணாகவே மனிதர், விலங்கு மட்டுமல்ல தெய்வப் பெண்ணும் கட்டமைக்கப்பட்டிருப்பதை நாம் அவதானிக்க முடிகின்றது. இந்தப் பின்னணியில் இருந்து கொண்டுதான் ஈழத்துத் தமிழ்ச் சூழலில் நின்று நிலவும் பெண் தெய்வங்களை, அவை பற்றிய ஆராய்ச்சிகளை நிகழ்த்தக் கூடியதாக உள்ளது.

அதிலும் நாட்டாரியல் சார்ந்த பெண் தெய்வங்கள் நோய் நொடிகள், பஞ்சம், பட்டினி தருகின்றனவாகவே அதிகம் அடையாளப்படுத்தப்படுகின்றன. அவற்றின் நின்றும் மாறுபட்ட பெண் தெய்வமாக, குலதெய்வமாக பூசைக்கிழவி என்னும் தெய்வம் காணப்படுகின்றாள்.

கொரோனாக் காலத்தில் மலேசியப் பல்கலைக்கழகம் நடாத்திய சர்வதேச விவாதப் போட்டியில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களை பயிற்றுவித்து போட்டிக்கு அனுப்பும் பொறுப்பில் நான் இருந்த காலத்தில் மாணவர்களுடனான உரையாடல் நாட்டார் தெய்வங்கள் பற்றித் திரும்பியது. அப்போது ஆழியவளையைச் சேர்ந்த செல்வி. டிலோஜினி மோசேஸ் இந்தத் தெய்வம் பற்றிய அறிமுகத்தை எனக்குத் தந்தார். அவருடன் தொலைபேசி வழி உரையாடி தெய்வம் இருக்கும் இடங்களை ஓரளவு அறிந்து கொண்டு சமூகவியல் ஆய்வாளரும் படைப்பாளியுமான திரு. நா. மயூரரூபன் மற்றும் நாட்டாரியல் ஆய்வு ஆர்வலர் திரு. கோ. விஜிகரன் ஆகியோருடன் வடமராட்சி கிழக்குப் பகுதிக்குச் சென்று இந்த ஆய்வை நடத்தினோம்.

பூசைக்கிழவி

ஐரோப்பிய காலனிய கால வழிபாடாகவே பூசைக்கிழவி வழிபாடு சொல்லப்படுகின்றது. இது பொதுக்கோயில் அற்ற தெய்வம். வீடுகளில் மட்டுமே வைத்து வணங்கப்பட்டு வருகின்ற இத்தெய்வம் பூசைக்கிழவி, பூசையம்மன் எனவும் இதன் இருப்பிடம் பூசைக்கிழவி கோயில், ஆச்சி கோயில் எனவும் அழைக்கப்படுகிறது. ஆரம்பகாலங்களில் பூசைக்கிழவி என்று அழைக்கப்பட்டு வந்தாலும் தற்போது பூசையம்மன் என்பதே பெருவழக்காக இருப்பதாக உடுத்துறையைச் சேர்ந்த பொன்னுத்துரை சதீஸ் (வயது 41) தெரிவித்தார். அதேவேளை ஆழியவளைப் பிரதேசத்தில் இன்றும் பூசைக்கிழவி என்னும் பெயரே பெருவழக்காக உள்ளது. தமிழர் மரபில் தெய்வீகம் பெற்ற பெண்களை, சமூக முன்னேற்றத்திற்கு உழைக்கும் பெண்களை கிழவி – ஆச்சி ஆக்கிவிடுகிற பண்பாட்டுக்கு நீண்ட பாரம்பரியம் உண்டு என்பது இங்கு மனங்கொள்ளத்தக்கது. ஒளவையாரை கிழவி, ஆச்சி ஆக்கிக் குறிப்பிடுவதும், புனிதவதியை என்புருவாக்கி காரைக்கால் அம்மை – காரைக்கால் பேய் ஆக்கியதுமான கதைகள் மனங்கொள்ளத்தக்கன. அத்தோடு மாரி, காளி முதலான பெண் தெய்வங்களை மாரியம்மா, காளியாச்சி, அம்மாச்சி என வழங்கும் வரலாறுகள் காணப்படுவதும் சுட்டிக்காட்டத்தக்கது.

IM-1.jpg

வீடுகளில் வைத்தே இத்தெய்வங்கள் ஆதரிக்கப்படுகின்றமையினால் இது முன்னோர் வழிபாடாகவோ, குலதெய்வ வழிபாடாகவோ தான் அமைந்திருக்க வேண்டும். அது பற்றிய சரியான தகவல்களை அறிதல் மிகச் சிரமமானதாகவே இருந்தது. இவ்வழிபாடு காலனியகால சமய ஒடுக்குமுறைக் காலத்தில் வெளியில் மற்றவர்களுக்குத் தெரியாமல் வீட்டு வளவினுள் மரத்தின் கீழ் வைத்து வழிபட்ட வழிபாட்டு முறையாகவுமே இருந்து வந்துள்ளது. குறைந்தது, நூறு வருட – அம்மாவின் அம்மம்மா காலத்திற்குரிய வழிபாடு என்பதே பொதுக்கூற்றாக உள்ளது.

இவ்வழிபாடு நின்று நிலவும் பிரதேசங்கள்

கடலும் கடல் சார்ந்த இடமும், வயலும் வயல் சார்ந்த நிலமும் ஒருங்கிணைந்து இருக்கின்ற, இரு மரபும் துய்ய அமைந்திருக்கின்ற வடமராட்சி கிழக்கின் உடுத்துறை, தாழையடி, வத்திராயன், மருதங்கேணி, ஆழியவளை போன்ற பிரதேசங்களில் இத்தெய்வ வழிபாடு உயிர்ப்புடன் இருந்து வருகின்றது. இப்பிரதேசங்களில் உள்ள, பெரும்பாலும் சைவசமயம் சார்ந்தவர்களின் வீடுகளில் இவ்வழிபாடு காணப்படுகின்றது. தத்தம் வளவுகளில் கிழக்குத்திசை நோக்கி சிறு கோயில், மண் – ஓலைக் கொட்டில்களாக இருந்த கோயில்கள், இன்று பெரும்பாலும் சீமெந்துக்கற்களால் கட்டப்பட்ட சிறு கோயில்களாக மாற்றமுற்றுள்ளன. சில கிறிஸ்தவர்கள் வீடுகளிலும் தெய்வ வழிபாடு நிலவுவதாக அறிய முடிகிறது. காலங்காலமாக தம் மூதாதையர் வணங்கி வந்த தெய்வத்தை, நம்பிக்கையைக் கைவிட முடியாமல் அல்லது இத்தெய்வத்தின் மீது உள்ள நம்பிக்கையிலோ பிடிப்பினாலோ இவ்வழிபாட்டைத் தொடர்ந்து மேற்கொண்டு வந்திருக்கலாம்.

தெய்வவுரு

ஆரம்பகாலத்தில் கல் வைத்து இத்தெய்வத்தை உருவநிலைப்படுத்தி உள்ளனர். பிற்காலத்தில் சூலம் இணைக்கப்பட்டுள்ளது. இன்று இரும்புச் சூலத்தைக் கைவிட்டு, பித்தளைச் சூலம் பெரும்பான்மை வழிபடு பொருளாக மாறியுள்ளது.

இவ்வழிபாட்டின் தனித்துவ அம்சம் பானையை வைத்து தெய்வ உருநிலைப்படுத்தி வழிபடுதலாகும். இரண்டு கொத்துக்கு மேல் (2 ½ kg) நெல்லைக் கொள்ளக்கூடிய (உள்ளடக்கக் கூடிய) அளவுடைய பானை வைக்கப்பட்டு அதனுள் நெல் முழுமையாக இடப்படுகின்றது. அதனுள் சில்லறைக் காசினை இட்டு வைக்கும் வழக்கமும் இன்று காணப்படுகின்றது. முன்பு பொன், வெள்ளி முதலியனவும் இட்டிருக்கலாம். அந்தப் பானையின் மேல் சட்டியைக் ‘கவிட்டு’ மூடிக் கட்டிவைக்கின்றனர். பானைக்கு திருநீறும் பொட்டும் இடப்படுகிறது. சில இடங்களில் தத்தம் வசதிக்கேற்ப பட்டுக் கட்டும் வழக்கமும் காணப்படுகிறது. இப்பானைக்கருகில் சூலமும் வைக்கப்படுகிறது. இரண்டுக்கும் இணைந்தே வழிபாடு இயற்றப்படுகிறது.

அதேநேரம், நேரிலும் கனவிலும் இத்தெய்வத்தைக் கண்டவர்களாகத் தம்மை அடையாளப்படுத்தியவர்கள் அதனை வெள்ளைச் சேலை கட்டிய ‘குடுகுடு’ கிழவி என்றனர். சிலர் நிழலைக் கண்டதாகவும், அது பெரிய தோற்றம் உடைய முதிர் பெண்ணின் வடிவம் என்கின்றனர்.

பூசைக்கிழவி பற்றிய கதைகள்

பூசைக்கிழவியின் தொன்மம் பற்றிய தேடலின் வழி ஒரு கதையை மட்டும் அறிய முடிந்தது.

இந்தியாவின் தமிழகப் பகுதியில் குறிப்பிட்ட காலத்திற்கு முன் வயது போனவர்கள் பலர் இணைந்து கோவில் ஒன்றில் வாழ்ந்து வந்தனர். அந்தக் கோயிலில் சிறப்பாக பூசைகள் நடைபெற்று வந்ததனால் கோயிற் பிரசாதம் இவர்களுக்கு உணவாக வழங்கப்பட்டு வந்தது. ஒரு குறையும் இன்றி வாழ்ந்து வரும் காலத்தில் திடீரென்று ஒரு நாள் புயலோடு கூடிய பெருமழை பெய்தது. வெள்ளம் பெருக்கெடுக்கத் தொடங்கியது. அந்தக் கோயிலில் இருந்தவர்களெல்லாம் திசை கெட்டு ஓடினர். இவர்களுள் கிழவிகள் சிலர் ஒன்று சேர்ந்து ஒரு கோயிலில் தஞ்சம் அடைந்தனர்.

ஒரு கட்டத்தில் அக்கோயிலிலிருந்து வேறிடம் செல்லத் தலைப்பட்டனர். இவர்களுள் ஒருவரான ‘நயினாதீவு அம்மன்’ முதலில் புறப்படத் தயாரான போது அந்தக் கடற்கரையை அண்டி ஒரு கப்பல் தோன்றியது. அந்தக் கப்பலில் ஏறிய அம்மன் “நான் மட்டும்தான் இதில் ஏறுவன். வேற ஒருத்தரும் ஏற வேண்டாம்” என்று கூறினார். கப்பல் புறப்பட்டுச் சென்றது. தலைக்கு மேல் கழுகு பறந்து வந்து கொண்டிருந்தது. கப்பல் கரைக்கு அண்மையில் வந்தபோது கப்பல் கடலில் தாழத் தொடங்கியது. கழுகு, நாகபூசணி அம்மனைச் சுமந்து வந்து கரையிலிருந்த பற்றைக்கருகில் இறக்கிவிட்டது. பின்னர் அவர் அதற்கருகில் இருந்த கொட்டிலில் வாழ்ந்திருந்தார். கப்பலாக வந்து கடலில் தாழ்ந்த நாகமும், சுமந்து வந்த கழுகும் இப்போதும் நயினாதீவு திருவிழாக் காலத்தில், இதனால்தான் இன்றுவரை தோன்றுகின்றன.

மற்றையக் கிழவிகள் மறுபுறமாக ஓடி வந்தனர். அதில் ஒருவர் திரியா அம்மன். அவர் மருதங்கேணி காட்டுக்குள் சென்று தெய்வமானார். ஏனைய கிழவிகள் ஓடியோடி   வந்தனர். 

கோயிலுக்கு வளுந்து வைத்துப் பொங்குவர். வீட்டில் பானை வைத்துப் பொங்குவர். முன்பு வீடு, இணைப்பற்ற பகுதிகளை உடையதாக இருந்தது. வடக்குப் பகுதி படுக்கையறையாகவும், தெற்குப்பகுதி விருந்தினர் தங்குமிடமாகவும், கிழக்குப் பகுதி சமையலறையாகவும், மேற்குப் பகுதியில் உள்ள அறை தூய்மைப்படுத்தப்பட்ட பாத்திர பண்டங்கள் வைக்குமிடமாகவும் காணப்பட்டன. வடக்கு அறை அறுக்கையாக (மூடிக்கட்டி வாயில் உடையதாய்) இருக்கும். குசினி ஓரளவு அறுக்கையாகவும், தெற்குத் திசையில் இருப்பது கொட்டிலாகவும் இருக்கும். மேற்குக் கொட்டில் தூய்மையான, மட்சம் புழங்காத ஒன்று. எல்லாக் கூரையும் பனையோலையால் வேயப்பட்டிருக்கும். 

அதில் மேற்கு திசையில் உள்ள பண்டக அறையில் (தாயறை?) கடற்கரை ஓரமாக ஓடி வந்த கிழவிகள் அவ்வூர்களில் இருந்த மேற்குப் பக்க அறைகளுள் (ஓலைக் கொட்டில்கள்) புகுந்து பானைக்குள் ஒளிந்துகொண்டு சட்டியால் மூடிக்கொண்டனர். ஒவ்வொரு வீட்டாரும் தத்தம் தேவைக் காலத்தில் அறைக்குச் சென்று மூடியைத் திறந்து பானையைப் பார்க்கும்போது வெள்ளைச்சீலை கட்டி, முக்காடு போட்டபடி கிழவிகள் வெளியே வந்தனர். தம்மை ஆதரிக்குமாறு கோரினர். புனித அறையில் இருந்து வந்ததால் இவர்கள் பூசைக்கிழவி, பூசையம்மன் என்று கூறப்பட்டனர். செல்லையதீவு, கரவெட்டி தெற்கு வழி சென்று, கடைசியாக வற்றாப்பளையில் போயிருந்ததாகக் கூறப்படுகின்றது (தகவல்: செல்லத்துரை சத்தியகீர்த்தி (வயது 76), உடுத்துறை).

இத்தகைய கதை, கண்ணகி இலங்கை வந்து பயணித்து வற்றப்பாளை சென்றடைந்த கதையை ஒத்திருப்பினும் சம்பவங்கள், இடங்கள் வேறுபடுகின்றன. வற்றாப்பளை மட்டுமே ஒன்றாக அமைகின்றது.

பானைக்குள் சட்டியால் மூடிய நிலையில் கிழவிகள் இருந்ததனால் பூசைக்கிழவிகள் வழிபாட்டில், மூடிய நிலையில் உள்ள பானை இன்றியமையாத குறியீடாயிற்று.

im-222.jpg

அற்புதங்கள்

• யுத்த காலப்பகுதியில் இடம்பெயர்ந்து சென்றபோதும், தான் குறுக்குப்பாதைகளால் வந்து பூசை செய்ததாகவும், தனக்கேதும் நிகழவில்லை என்றும், கோயிலும் எந்தச் சேதமுமின்றி இருந்ததாகவும் திரு. செ. சத்தியகீர்த்தி குறிப்பிடுகின்றார். பேய் பீடித்தல் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கும் நோய்களுக்கும் கலையாடி சத்தியகீர்த்தி பூசாரி இக்கோயிலில் தீர்வு (திருநீறு போடல், குறி சொல்லல்) வழங்குவதாக இக்கோயிலின் அருகில் வசிக்கும் திரு. வே. சதீஷ் குறிப்பிடுகின்றார்.

• வீட்டில் உரிய வகையில் வழிபாடு செய்ய மறந்தால், குற்றங்கள் ஏதும் நிகழ்ந்தால், கிழவி வடிவிலான நிழலுருத் தோன்றி வீட்டாரை உட்செல்ல விடாமல் வழிமறைத்து நிற்கும் என செல்வி. மோ. டிலோஜினி குறிப்பிடுகின்றார்.

• இளைஞர் சிலரிணைந்து முயல் பிடிப்பதற்காகக் காட்டிற்குச் சென்றனர். வழியில் வீரபத்திரர் கோயில் உண்டு. சென்ற இளைஞர்களில் ஒருவர் திடீரென வீழ்ந்து குழறத் தொடங்கினார். கட்டுப்படுத்த முடியவில்லை. ஏனையவர்கள் தூக்கிக்கொண்டு சத்தியமூர்த்தி பூசாரியின் வீட்டுக் கோயிலுக்குக் கொண்டு வந்தனர். அவர் கலையாடி நீறு போட்டவுடன் இளைஞர் எழுந்து சாதாரணமாக வீட்டுக்குச் சென்றார்.

கோயிலமைப்பு

வீட்டு வளவினுள் துடக்கு (தீட்டு) உள்ளவர்கள் புழங்காத இடத்தில், குறிப்பாக வேப்பமரத்தின் கீழ் இத்தெய்வம் கல்ரூபத்தில் வழிபடப்பட்டது. பின்பு ஓலைக் கொட்டில்களில் மூடிய பானையும் (அதனுள் நெல், அருகம்புல், காசு போன்றன இடப்பட்டன) திரிசூலமும் வைத்து வழிபடப்பட்டது. வசதிக்கேற்ப தற்காலத்தில் தத்தம் வளவுகளில், வழிபாட்டிடங்களை கிழக்குத்திசை நோக்கிய சிமெந்துக் கற்களாலான சிறு கோயில்களாக மாற்றி வருகின்றனர். அத்தோடு சில வீடுகளில் முனி, ஆஞ்சநேயர், சத்தியம்மன் போன்ற துணைத் தெய்வங்களும் வைத்து வணங்கப்படுகின்றன. பெருங்கோயில் பண்பாடு, கட்டட அமைப்பு எதுவும் இந்தத் தெய்வத்துக்கு இல்லை. 

வழிபாட்டு முறை

பெண்கள் வழி பேணப்பட்டு வரும் வழிபாடாக இருந்தாலும் (தாய் – மகள் – மகள்) ஆண்வழிச் சமூகத்தினரே பூசாரிகளாக விளக்கு வைக்கும் ‘பாக்கியம்’ பெற்றவர்களாகக் காணப்படுகின்றனர். பெரும்பாலும் வெள்ளிக்கிழமைகளில் வாரந்தோறும் விளக்கு வைக்கும் பாரம்பரியமே காணப்படுகிறது. காலைப்பொழுதில் விளக்கு வைத்து பழம், வெற்றிலை, பாக்கு வைத்து, தேங்காய் அடித்து, கற்பூரம் ஏற்றி வழிபடுகின்றனர். சிலர் தத்தம் வசதிக்கேற்ப மாலைப் பொழுதுகளில் வழிபடுகின்றனர்.

திரியா அம்மன் கோயிலில் வைகாசி மாதம் பொங்கல் தொடங்கும். அதன் பின் ஒவ்வொரு கோயிலாக ஆனி மாதம் வரைக்கும் மடை பரவுதல் நடைபெறும் வழக்கம் காணப்படுகின்றது. ஆடி மாதம் மடை பரவுதல் நடைபெறுவதில்லை. 

இவற்றை விட நேர்த்திக்கடன், தைப்பொங்கல் வருஷம், தீபாவளி, நவராத்திரி காலங்களில் மடை வைக்கும் வழக்கமும் காணப்படுகின்றது. வைகாசி, ஆனி மாத வருடாந்த மடை பரவுதலில் உறவுகளுக்குப் பங்குண்டு. யாவருக்கும் அறிவித்தே மடை பரவுதல் நடைபெறும். இந்தத் தெய்வத்துக்கு மட்சம், மாமிசம் படைப்பதில்லை. 

மடையில் பொங்கல் செய்யாதது குறிப்பிடத்தக்க விடயமாகும். அவல் கடலை, கௌப்பி, மோதகம், வடை என வசதிக்கேற்ப பலகாரங்களும் மா, பலா, வாழை உள்ளிட்ட பல்வேறு பழவகைகளும் வெற்றிலை, பாக்கு, தேசிக்காய் உள்ளிட்டவையும் வைத்து வழிபடும் மரபே காணப்படுகின்றது. இன்னும் சிலர் பொங்கலும் பொங்குவதாக அறியமுடிகின்றது. இதைத்தவிர தமது வீட்டில் விளையும் முதற்பொருள்களையும் (காய், பழம், புதிர் நெல்) இத்தெய்வத்திற்குக் காணிக்கையாக்குவர். வடை மாலைகள் கட்டி சூலத்திற்குப் போடும்  வழக்கம் காணப்படுகின்றது. இது வைரவ வழிபாட்டு மரபின் வழி வந்த வழக்கமாக இருக்கலாம். இவ்வூரில், பெறுவதற்கு அரிதான பலாப்பழத்தை வாங்கி தெய்வத்திற்கு படைத்ததன் பின்பே சாப்பிடும் வழக்கம் உள்ளது. படைக்காது விட்டால் துன்ப – துயரம் ஏற்படும் என்பது நம்பிக்கை.

சமூக அடுக்கமைவு

மருதங்கேணி, உடுத்துறை, ஆழியவளை, வத்திராயன் பகுதிகளில் மீன்பிடித் தொழில் செய்கின்ற கரையோர மக்கள் வாழ்ந்து வருகின்றனர். சாதிக்குள் சாதிப் பிரிவுகள் இன்றி ஒரே சமூகத்தவரே வாழ்ந்து வருகின்றனர். ஏறத்தாழ அறுபது வீடுகளுக்கு மேல் பூசைக்கிழவியை – அம்மனை வழிபட்டு வருகின்றனர். ஒரே சமூகத்தினராய் இப்பூசை வழிபாடுகளில் ஈடுபட்டு வருகின்றமை இதில் குறிப்பிடத்தக்கதாகும். இத்தெய்வத்தை பூசைப் பேர்த்தி என்பாரும் உண்டு.

இப்பகுதியில் அண்ணமார் வழிபாடும் காணப்பட்டுள்ளது. உடுத்துறையைச் சேர்ந்த இந்த நெய்தல் நில மக்கள், கரைவலை இழுத்துவிட்டு கள், மீன், கருவாடு படைத்து அண்ணமாரை வழிபட்டனர். பெரிய நாவல் மரமொன்றின் கீழ் பொல்லு வைத்து அண்ணமார் வழிபடப்பட்டுள்ளார். இன்று இத்தெய்வ வழிபாடுமில்லை, கோவிலும் இல்லை. 

 சில அவதானிப்புகள் 

• ஐரோப்பியக் காலனிய காலத்தில் உருவான வழிபாடாகவே பொதுவில் சொல்லப்பட்டாலும், பூசாரி சத்தியகீர்த்தி இந்தியாவில் இருந்து வந்த கிழவிகளின் கதையாக பூசைக்கிழவியின் கதையைக் கூறுகின்றார்.

• இயற்கை வழிபாட்டில் – வாழ்வில், விதை என்பது போற்றுதற்கும் பாதுகாப்பதற்கும் உரிய புனிதப் பொருள் என்று கருதும் பண்பாடு காணப்பட்டுள்ளது. நெய்தலுடன் மருதம் இணைந்த இந்த நிலப்பரப்பில் விதை நெல் பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்தது. நெல் ஈரப்பதன் இல்லாமலும் வெப்பத்தாக்கத்திற்கு உள்ளாகாமலும் பாதுகாக்கப்பட வேண்டியது. ஆதலால் பெரிய மண்பானைகளில் அதனை இட்டு சட்டி போன்ற மண்மூடிகளால்  பாதுகாத்து வரும் வழக்கம் இருந்து வந்திருக்கின்றது.

• குறிப்பாக இலங்கையின் வடக்கு மாகாண பருவப் பெயர்ச்சி மழை, காற்று என்பன வடக்கு, தெற்கு திசைகளைச் சார்ந்தவை. ஆதலால் மேற்குக் கொட்டிலில் வைத்து மண் பானைகளில் நெல்மணி பாதுகாக்கப்பட்டிருக்கலாம். நெல்மணியைச் செல்வமாகக் கருதிவந்த காலமானது கடந்துவந்த வழித்தடத்தில் பணப் பெறுமானம் உருவானபோது, அதனையும் பானையில் இட்டிருக்கலாம். அதேபோல சாணியால் மெழுகப்பட்ட கொட்டிலில், வைக்கப்பட்ட நெல் மணியுடன் அறுகம்புல்லையும் இட்டு பூச்சிகளின் தாக்கத்திற்கு உள்ளாகாதவாறு மூடி இருக்கலாம். 

• கடற்றாய் வழங்கும் மட்சம் வாழ்வாதாரத்திற்கு உரியதெனினும் மருத நிலம் தரும் நெல்மணியும் சமாந்தரமானதும் முதன்மையானதுமாகும். உலகெங்கும் பூதங்கள் புதையல் காத்த கதையைக் கேள்விப்பட்டிருக்கிறேன். அதனை ஒத்து, மண் பானைகளை கிழவிகள் காத்த கதையாக இக்கதையைப் புரிந்துகொள்ளலாம்.

• கறுக்காய்த் தீவில் உள்ள நெய்தல், மருதம் இணைந்த நிலப்பரப்பில் வாழும் நெய்தல் நில மக்கள், மாரி காலத்தில் மண் பானையில் வளந்துக்கான நெல்மணிகளை இட்டு, நீர் புகாதவாறு வாயை இறுகக்கட்டி, அதனைத் தமது குல தெய்வமாகக் குடி கொண்டிருக்கும் பெரும்படைக் கோயிலுக்கருகிலுள்ள பூவரச மரத்தின் உச்சியில் கட்டிவிடுவர். பின்பு பங்குனி மாதம் அதனை இறக்கி (வெயிற் காலம்) வளந்து வைத்துப் பொங்கி படைப்பர். மாரிகால வெள்ளப்பெருக்கிலிருந்து விதை நெல்லைப் பாதுகாக்கும் திட்டம் இதுவெனலாம். இதுவே பின் ஆகமக் கோவில்களில் கோபுரங்களின் கலசங்களில் தானியம் இடும் செயல்நிலையானது.

• இதையொத்தே கடல் நீர் உட்புகும் அபாயமும், மழை வெள்ளப்பெருக்கு அபாயமும் உள்ள இந்த ஊர்களில் நெல்மணியைப் பாதுகாக்கும் எண்ணத்தோடு ஒவ்வொரு வீடுகளிலும் உயர்வான பீடத்தில் மூடிய பானை வைக்கப்பட்டு, அருகில் காவலுக்குத் திரிசூலமும் வைக்கப்பட்ட பூசைக்கிழவி வழிபாடு நடைபெற்று வந்திருக்கிறது என்றே ஊகிக்க முடிகிறது. விவசாயத்தைக் கண்டுபிடித்தவள் பெண் என்பதை இவ்வழிபாடு  நிரூபணம் செய்கின்றது.

• இப்பானைகளில் அறுவடைக் காலத்தில் (தை மாதம்) புது நெல் இடப்படுகிறது. ஆண்டுதோறும் நடாத்தப்படும் மடைக்கு முன் நெல் மாற்றப்படுதல், ‘விதை நெல்’ எனும் கருத்தை உறுதிப்படுத்துகின்றது. வருடந்தோறும் முதலில் பானையில் நெல்லை இட்டவாறே அடுத்த முறை  நெல்லை மாற்றி வைக்க வேண்டும். அவர் பெரும்பாலும் பூசாரியாக அல்லது குடும்பத் தலைவராக இருப்பார். அவர் இல்லாதுபோகும் சந்தர்ப்பத்திலேயே அடுத்தவர் இப்பணியில் ஈடுபட வேண்டும் என்பது எழுதாத விதியாக உள்ளது.

• பானைக்குள் நெல்லினை இட்டு வழிபடுவதாலோ என்னவோ இந்தத் தெய்வத்துக்கு பொங்கல் இடும் வழக்கம் இல்லை.

• வளமை உடையவள் பெண்; கர்ப்பம் தரிப்பவள்; பல பேறுகளைக் கண்ட முதிர் பெண் (கிழவி, பேர்த்தி) கருவளத்தைக் காக்கும் திறனறிந்தவள்; பிள்ளைப்பேறு பார்க்கும் மருத்துவிச்சி; அனுபவமே அவளின் அடையாளம் என்றாகிறது. ஆகவே வளப்பம் நிறைந்த விதை நெல்லைக் காக்கும் தெய்வம் பெண்ணாக, கிழவியாக, அம்மனாக சித்திரிக்கப்படுகின்றாள்.

• அண்ணமார் வழிபாடு பொதுவில் சிறுகுடி வேளாளரின் வழிபாடாகவே காணப்பட்ட போதும் இங்கு கரைவலை இழுப்பவர்களின் வழிபடுநிலை தெய்வமாக இருந்துள்ளமையை ‘நம்பிக்கை’ எனும் கருத்தாக்கம் சார்ந்த ஒன்றாகவே பார்க்க முடிகின்றது.

முடிவுரை 

வடமராட்சி கிழக்கு பிரதேசத்திற்கு உட்பட்ட கரையோரக் கிராமங்களில் மரபு மனம் மாறாத நாட்டார் தெய்வமாகப் பூசைக்கிழவி விளங்குகிறார். கிழவி, பேர்த்தி எனவும்; அம்மன் எனவும் சுட்டப்படும் இத்தெய்வம் வீட்டு வளவினுள் வைத்து வழிபடப்படும் ஒரு குலதெய்வமாகும். ஆயினும் இப்பிரதேசத்துக்கு அப்பால் உள்ள கரையோரக் கிராமங்களில் இத்தெய்வ வழிபாடு இல்லை. ஆகவே இப்பிராந்தியத்திற்குரிய தனித்துவமான பெண் தெய்வ வழிபாடாக இது அமைந்துள்ளது. வயலும் கடலும் இணைந்த வாழ்வில் நெல்மணியை – விதையைப் பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வுந்துதலின் வழி வளப்பமுடைய – அதனைப் பாதுகாக்கும் திறனறிந்த முதிர்பெண்ணைக் காவல் தெய்வமாக வழிபட்டு வந்துள்ளனர். கடலுடன் இணைந்த நிலமாதலால் வெள்ளப் பேரிடரில் இருந்து காக்க, நெல்மணியை மண் பானையினுள் இட்டு அதன் வாயை சட்டியால் மூடி, இறுகக்கட்டிப் பூசித்து வந்துள்ளனர். வருடத்துக்கு ஒருமுறை நெல்லை மாற்றி வந்துள்ளனர். பண்டைய காலத்தில் போக்குவரத்து ஏற்பாடுகளற்ற காடு மண்டிக்கிடந்த இப்பிரதேசத்தில் தமக்கான விதையையும், உணவையும், பாதுகாக்கும் ஏற்பாடு இது எனலாம். நோய் தீர்த்தல், பேய் – பிசாசிடமிருந்து பாதுகாத்தல், சுகம் அளித்தல், வேண்டும் பேறுகளை அளித்தல் என இத்தெய்வம் மக்களுக்கு நன்மை செய்யும் தெய்வமாகவே வணங்கப்படுகின்றது. மருதங்கேணி திரியாயம்மன் முதலியவை மேனிலையாக்கம் பெற்ற போதும் இவ்வழிபாடு ஓலைக்கொட்டிலிலிருந்து சிமெந்துக் கட்டடத்துக்கு மாறியதே தவிர, வழிபாட்டுமுறை மாறவேயில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கருக்காய்த் தீவு போல நெய்தலும் மருதமும் இணைந்த இப்பிராந்தியத்திலும், பானையில் நெல்லைப் பாதுகாக்கும் சுதேச பாதுகாப்பு முறையை முன்னிறுத்துகின்ற கரையோர மக்களின் இயற்கை வழிபாடு நிலவி வருகின்றது. காவல் தெய்வமான பூசைக்கிழவி இப்பிராந்தியத்துக்கே உரிய தனித்துவமான நாட்டார் தெய்வமாக, நிலவியல் பண்பாட்டின் நீட்சியாக, வழிபாடாக அமைந்துள்ளது.


https://www.ezhunaonline.com/the-goddess-puzaikzhavi/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.