Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பிரபல மூத்த ஊடகவியலாளர் பாரதி காலமானார்!

பிரபல மூத்த ஊடகவியலாளர் பாரதி காலமானார்!

சிரேஷ்ட ஊடகவியலாளரும்,ஞாயிறு தினக்குரல், தினக்குரல் இணையம் ஆகியவற்றின் முன்னாள் ஆசிரியருமான  இராஜநாயகம் பாரதிஉடல்நலக் குறைவு காரணமாக இன்று காலமானார்.

கடந்த சில வாரங்களாக அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று யாழில் உள்ள அவரது  இல்லத்தில்  காலமானார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினக்குரல்பத்திரிகையின் பிரதம ஆசிரியராக பணியாற்றய அன்னார் அரசியல் ஆய்வு மற்றும் கலை செயற்பாடுகளில் மிகுந்த ஆளுமை உள்ளவராக காணப்பட்டிருந்தார்.

மேலும் அண்மையில் வீரகேசரியின் சிரேஷ்ட ஊடகவியலாளராக யாழ் காரியாலயத்தின் பொறுப்பு அதிகாரியாகவும் கடமை ஆற்றியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அன்னாரது மறைவிற்கு, நண்பர்கள், உறவினர்கள் மற்றும்  ஊடகத் துறையைச் சார்ந்தவர்கள் எனப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

https://athavannews.com/2025/1420518

  • கருத்துக்கள உறவுகள்

சிரேஷ்ட ஊடகவியலாளர் இராஜநாயகம் பாரதி காலமானார்

Published By: DIGITAL DESK 3

09 FEB, 2025 | 05:02 PM
image
 

சிரேஷ்ட தமிழ் ஊடகவியலாளர் இராஜநாயகம் பாரதி தனது 62 ஆவது வயதில் யாழ்ப்பாணத்தில் காலமானார்.

சுமார் 40க்கும் மேற்பட்ட வருட ஊடகத்துறை அனுபவத்தை கொண்ட இராஜநாயகம் பாரதி தினக்குரல் பத்திரிகையின் வாரமலர் மற்றும் இணையத்தளத்தின் முன்னாள் ஆசிரியரும் ஆவார்.

உயிரிழக்கும் போது இராஜநாயகம் பாரதி வீரகேசரியின் யாழ். பிராந்திய கிளையின் ஆசிரியராகவும் கடமையாற்றியுள்ளார்.

https://www.virakesari.lk/article/206247

  • கருத்துக்கள உறவுகள்

மூத்த ஊடகவியலாளர் இராசநாயகம் பாரதி காலமானார்!

Vhg பிப்ரவரி 09, 2025
1000440634.jpg

மூத்த ஊடகவியலாளர் இராசநாயகம் பாரதி இன்று (09/02/2025 )ஆம் திகதி மாலை காலமானார்.

62, அகவையில் இன்று இறைபதம் அடைந்தார் மிகவும் நேர்மையாகவும், துணிச்சலாகவும், செய்திகளையும், ஆய்வு கட்டுரைகளையும் உள்ளூர், வெளிநாடு ஊடகங்களில் பல ஆக்கங்களை வெளிக்கொணர்ந்தவல்.

1987 ல், இலங்கை இந்திய ஓப்பந்ததுக்கு பின்னர் இந்திய படை காலம். முரசொலி பத்திரிகையில் செய்தி ஆசிரியராக வேலை செய்த காலத்தில் வெலி ஓயா சிங்கள குடியேற்றத்தை பார்வையிட விடுதலைப்புலிகளால் 35, ஊடகவியலாளர்களை பேருந்தில் அழைத்து சென்ற வேளையில் முருகண்டியில் பேருந்து விபத்துக்குள்ளானது (பஸ் புரண்டது) அதனால் சிலர் ஊடகவியலாளர்களுக்கு காயம் ஏற்பட்டது. பாரதிக்கு வலது கை முற்றாக பாதிக்கப்பட்டது.

அதனூடாக இன்றுவரையும் ஊடகபணியை செய்துவந்தார்.

இவர் மாவீரர் குடும்பத்தை சேர்ந்தவர் இவருடைய சகோதரர் பரதன் என்பவர் விடுதலைப்புலிகளின் நிதர்சனம் பகுதியில் பொறுப்பாளராக பணியாற்றினார். 

தந்தையார் இராசநாயகம் அவர்கள் ஒரு தமிழ் அறிஞர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

https://www.battinatham.com/2025/02/blog-post_65.html

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிரபல மூத்த ஊடகவியலாளர் பாரதி காலமானார்!

மறைந்த ஊடகவியலாளர் பாரதியின் இறுதிச் சடங்கு குறித்த முக்கிய அறிவிப்பு!

மூத்த ஊடகவியலாளர் இராஜநாயகம் பாரதியின் இறுதி சடங்கு,  நாளை மறுதினம் (13) யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது.

தமிழ் ஊடக பரப்பில் 40 வருடங்களுக்கு மேல் ஊடக அனுபவத்தை கொண்ட மூத்த ஊடகவியலாளர் இராஜநாயகம் பாரதி, உடலநலக் குறைவு காரணமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் காலமானார்.

இந்நிலையில் அன்னாரின் புகழுடல், யாழ்ப்பாணம் – பலாலி வீதியில், திண்ணை ஹோட்டலுக்கு முன்பாக அமைந்துள்ள அவரது இல்லத்தில்  மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து நாளை மறுதினம்  13ஆம் திகதி காலை இறுதி கிரியைகள் மற்றும் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்று அன்னாரது புகழுடல் தகன கிரியைகளுக்காக நண்பகல் 1 மணியளவில் கொக்குவில் இந்து மயானத்திற்கு எடுத்து செல்லப்படவுள்ளதாக அவரது குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.

https://athavannews.com/2025/1420748

  • கருத்துக்கள உறவுகள்

இனம், ஈழத்தின் சிக்கல்கள் சார்ந்து பேசிய நினைவுகள் நிழலாடி மனம் வேதனைக்குள்ளாகிறது - சிரேஷ்ட ஊடகவியலாளர் பாரதி இராஜநாயகத்தின் மறைவுக்கு தமிழக இயக்குநர் கௌதமன் இரங்கல்

12 FEB, 2025 | 02:49 PM
image
 

இனம், ஈழத்தின் சிக்கல்கள் சார்ந்து பல முறை மறைந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் பாரதி இராஜநாயகத்துடன் பேசிய நினைவுகள் வந்து நிழலாடி மனம் வேதனைக்குள்ளாவதாக தமிழக இயக்குநரும் தமிழ்ப் பேரரசு கட்சியின் பொதுச் செயலாளருமான வ. கௌதமன் தனது எக்ஸ் தளத்தில் இரங்கல் செய்தியினை பதிவு செய்துள்ளார்.  

அந்தப் பதிவில் வ. கௌதமன்,

மூத்த பத்திரிகையாளர் ஐயா பாரதி அவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலும் கண்ணீர் அஞ்சலியும். 

தமிழ்நாடு அம்பத்தூரில் அவரை ஒருமுறை நேரில்  சந்தித்து பேசிய நிகழ்வும் இனம் சார்ந்தும் ஈழத்தின் சிக்கல்கள் சார்ந்தும் பல முறை பகிரியில் பேசியதும் வந்து வந்து நிழலாடி மனம் வேதனைக்கு உள்ளாகிறது.

ஈழத்தின் பாலும் தமிழினத்தின் பாலும்  அடங்காப்பற்று கொண்டு அறத்தோடு இயங்கிய  ஐயா பாரதி அவர்களுக்கு மீண்டும் அழியாப் புகழ் வணக்கத்தை என் சார்பிலும் எனது தமிழ்ப் பேரரசு கட்சியின் சார்பிலும் தெரிவித்துக்கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார். 

Capture.JPG

https://www.virakesari.lk/article/206498

  • கருத்துக்கள உறவுகள்

பண்பு நிறைந்த பத்திரிகையாளன் பாரதியை இழந்து நிற்கும் தமிழ்ப் பத்திரிகை உலகம்

Published By: DIGITAL DESK 7   11 FEB, 2025 | 09:19 AM

image
 

வீரகத்தி தனபாலசிங்கம் 

இலங்கை பத்திரிகை நிறுவனமும் பத்திரிகை ஆசிரியர்கள் சங்கமும் இணைந்து  மவுண்ட் லவினியா ஹோட்டலில் ஜனவரி 7 ஆம் திகதி இரவு  நடத்திய ' சிறந்த ஊடகவியலாளர்களுக்கான விருதுகள் ' வழங்கும் வனப்புமிகு விழாவில்  இறுதியாக நான் பாரதியைச் சந்தித்தேன். நீண்ட நேரமாக அவருடன் பேசி,  மீண்டும் சந்திப்போம் என்று கூறி இருவரும் விடை பெற்றுக் கொண்டோம். ஆனால், அதற்கு பிறகு ஒரு மாதமும் இரு நாட்களும் கடந்த நிலையில் கடந்த ஞாயிறன்று பாரதி எம்மிடமிருந்து நிரந்தரமாகவே விடை பெற்ற துயர்நிறைந்த  செய்தி என்னை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

 

கடந்த சில வாரங்களாக பாரதி சுகவீனமுற்று வைத்தியசாலையால் சிகிச்சை பெற்று வந்தார் என்ற போதிலும், அவர் விரைவில் சுகமடைந்து விடுவார், அவரைச் சென்று பார்க்கலாம் என்று  நம்பிக்கை கொண்டிருந்தோம். உண்மையில், அவர் எம்மத்தியில் இன்று  இல்லை என்பதை நம்புவதற்கு மனம் மறுக்கிறது. பாரதியின் மறைவு எம்மிடமிருந்து பண்பும் ஆற்றலும் நிறைந்த ஒரு சிறந்த  பத்திரிகையாளனை அபகரித்துச் சென்று விட்டது. 

 

பாரதி ஒரு சிறந்த பத்திரிகையாளன் என்பதற்கு அப்பால் ஒரு  சிறந்த மனிதநேயன். அரசியலைப் போன்றே போட்டியும் சூழ்ச்சியும் நிறைந்ததாக மாறிவிட்ட ஊடகத்துறையில் பாரதியைப் போன்று முரண்பாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் சகலருடனும் இணக்கப் போக்குடன் ஊடாட்டங்களைச் செய்யும் ஒரு பத்திரிகையாளனை இனிமேல் காணமுடியுமா என்று மனம் ஏங்குகிறது. மற்றவர்களுக்கு தீங்கு செய்வதை கனவிலும் கூட நினைத்துப் பார்த்திருக்காத ஒரு பிறவி பாரதி.

 

என்னைப் பொறுத்தவரை,  பத்திரிகைத்துறைச் சகபாடி ஒருவர் என்பதற்கு அப்பால் என்னை நன்கு புரிந்து கொண்டு, நான் இழைத்திருக்கக்கூடிய தவறுகளையும்  கூட பொருட்படுத்தாமல் என்னுடன்  நீண்டகால பழகி நெருங்கிய நண்பனை இழந்து நிற்கிறேன். பாரதிக்கும் எனக்கும் இடையிலான ஊடாட்டம் அவர் 1990 களின் முற்பகுதியில் வீரகேசரி ஆசிரிய பீடத்தில் உதவி ஆசிரியராக இணைந்து கொண்டதுடன் தொடங்கியது. எங்களுக்கு இடையிலான நெருக்கத்துக்கு 35 வயது. 

 

கொழும்பில் இருந்து பணியாற்றிய எங்களைப் போன்றவர்களைப் போலன்றி,  பாரதி பத்திரிகைத் துறையில் பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் வளர்ந்தவர். ஆயுமேந்திய தமிழ்த் தீவிரவாத இயக்கங்கள் தோற்றம் பெறத்தொடங்கிய நாட்களில் அவரின் பத்திரிகைத்துறைப் பிரவேசம் இடம்பெற்றது. முதலில் 1980 களின் நடுப்பகுதியில் யாழ்ப்பாணத்தில்  ஈழமுரசு, முரசொலி பத்திரிகைகளில் பணியாற்றி பாரதி இந்திய அமைதி காக்கும் படை வடக்கு,  கிழக்கில் நிலைகொண்டிருந்த காலகட்டத்தில் விபத்தொன்றில் சிக்கிய பின்னரே  வீரகேசரியில் இணைந்துகொணடார். 

 

பாரதியின் பத்திரிகைத்துறை வாழ்வு உள்நாட்டுப்போர் நீடித்த மூன்று தசாப்தங்களையும் போர் முடிவுக்கு வந்ததற்கு பின்னரான கடந்த பதினைந்து வருடங்களையும் உள்ளடக்கியதாகும். அதன் காரணமாக அவர் இயல்பாகவே தமிழ்த் தேசியவாத அரசியல் கோட்பாடுகளில்  நிறைந்த ஈடுபாடு கொண்டவராக, தமிழ் மக்களின் நியாயபூர்வமான அரசியல் அபிலாசைகளையும் மனக்குறைகளையும்  பற்றுறுதியுடன் நியாயப்படுத்துவதற்கு தனது எழுத்தை அர்ப்பணித்தவராக வாழ்ந்தார். 

 

அதன் விளைவாக சிறந்த ஒரு அரசியல் விமர்சகராகவும் அவரால் விளங்க முடிந்தது.  பாரதி வீரகேசரியில் இணைந்த ஆரம்ப நாட்களிலேயே தேசிய இனப்பிரச்சினை தொடர்பிலான சில ஆய்வு முயற்சிகளுக்கு முகாமைத்துவம் அவரைப் பயன்படுத்தியதை நான் நன்கு அறிவேன். அந்த ஆய்வுகளை ஒரு நூலாக்கும் முயற்சியும் கூட மேற்கொள்ளப்பட்டது. பாரதி அரசியல் மற்றும் சமூகப் பிரச்சினைகள் குறித்து நிறையவே எழுதியிருக்கிறார். 

 

பத்திரிகையாளர்களின் உரிமைகள் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளிலும் தீவிரமான ஈடுபாடு கொண்டவராக விளங்கிய பாரதி பல தடவைகள் இலங்கை தமிழ் ஊடகவியலாளர்கள் ஒன்றியத்தின் தலைவராக பணியாற்றினார். 

 

தினக்குரல் பத்திரிகை 1997 ஏப்ரிலில் தொடங்கப்பட்டபோது  அதன் முதல் செய்தி ஆசிரியராக நான் இணைந்து கொண்டேன். என்னுடன் முதலில் கூட வந்தவர்கள் பாரதியும் சீவகனுமேயாவர். புதிய பத்திரிகையில் இணைவதில் உங்களுக்கு தயக்கம் எதுவும் இல்லையா என்று நான் இருவரையும் கேட்டபோது" நீங்கள் போகிறீர்கள் ...... எங்களுக்கு என்ன தயக்கம் "  என்று இருவரும் கூறியது இன்றும் என் காதில் எதிரொலிக்கிறது. அந்தளவுக்கு என்மீது பாரதி வைத்திருந்த நம்பிக்கை உணர்வு என்னை நெகிழ வைத்தது. இறுதிவரை என்னுடனான அந்த நெருக்கத்தை அவர் பேணினார். 

 

தினக்குரலின் பிரதம ஆசிரியராக  2004  ஏப்ரிலில் என்னை பொறுப்பேற்குமாறு முகாமைத்துவம் கேட்டபோது அவர்களிடம் நான் ஒரு கோரிக்கையை முன்வைத்தேன். பாரதியை ஞாயிறு தினக்குரலின் பொறுப்பாசிரியராக நியமிப்பதாக இருந்தால் மாத்திரமே நான் பிரதம ஆசிரியராக பொறுப்பேற்பேன் என்று கூறினேன். பாரதி போன்ற  அனுபவமும் ஆற்றலும் கொண்ட ஒருவரை அந்த பொறுப்பில் அமர்த்தினால் எனது பணிக்கு உறுதுணையாக இருக்கும் என்று நான் திடமாக நம்பினேன். முகாமைத்துவமும் எனது கோரிக்கையை ஏற்றுக்கொண்டு பாரதியை ஞாயிறு தினக்குரலுக்கு பொறுப்பாக நியமித்தது. வாரப்பத்திரிகையின் வளர்ச்சிக்கு பாரதியின் பங்களிப்பு மகத்தானது. 

 

செய்திகளைக் கையாளுவதை விடவும் வாரப்பத்திரிகைக்கு உரிய சிறப்பு அம்ச விடயதானங்களைக் கையாளுவதில் பாரதியின் ஆற்றல் அபாரமானது என்பதை அவர் தனது பணியின் மூலம் நிரூபித்தார். கலை இலக்கியத்துறை சார்ந்தவர்களை ஞாயிறு தினக்குரலின் பக்கம் கவர்ந்ததில் பாரதியின் பங்களிப்பு  முக்கியமானது. 

 

தினக்குரலின் முகாமைத்துவத்தில் 2010 ஆம் ஆண்டுக்கு பிறகு ஏற்பட்ட மாற்றத்தை தொடர்ந்து நாமெல்லோரும் வீரகேசரி காரியாலயத்தில் பணியாற்ற வேணடியிருந்தது. பாரதியின் திறமையைக் கண்ட வீரகேசரி முகாமைத்துவம் பாரதியை தங்களுக்காக பயன்படுத்துவதில் நாட்டம் காட்டியதை நான் நன்கு அறிவேன். நவீன தகவல் தொழில்நுட்ப முன்னேற்றங்களுடனும் அவர்  தன்னை எளிதாகவே பரிச்சயமாக்கிக் கொண்டார். பாரதி  ஓய்வபெற்று யாழ்ப்பாணம் திரும்பிய பிறகு அங்குள்ள சில ஊடகங்களில் பணியாற்றினார். ஆனால், இறுதியில் வீரகேசரி நிறுவனம் அதன் யாழ்ப்பாணக் காரியாலயத்தில் பொறுப்பாசிரியராக நியமிப்பதற்கு ஒருவரை தேடியபோது பாரதியை அதற்கு பொருத்தமானவராக அடையாளம் கண்டு நியமித்தது.

 

அந்த நியமனம் பாரதியின் வீரகேசரிக்கான மீள்வருகையாக அமைந்தது. ஆனால், அதில் சில மாதங்களே பணியாற்றிய நிலையில் அவர் எம்மை விட்டு பிரிந்துவிட்டார். திடீரென்று தாக்கிய பக்கவாத நோய் சில வாரங்களில் அவரைப் பலியெடுத்துவிட்டது.

 

ஊடகத்துறையில் இன, மத, பிரதேச வேறுபாடுகளுக்கு அப்பால் பல மட்டங்களில் பாரதிக்கு  பெருமளவில் நண்பர்கள், அபிமானிகள்  இருந்தார்கள். வெறுமனே அலுவலகத்திற்குள் தன்னை முடக்கிக் கொண்ட ஒரு  பத்திகையாளராக இல்லாமல் வெளித் தொடர்புகளை நிறையவே அவர் ஏற்படுத்திக்கொண்டதன் விளைவாக புலம்பெயர் தமிழ்ச சமூகத்திலும் அவர் நன்கு அறியப்பட்டவராக விளங்கினார். பல  வெளிநாட்டுப் பயணங்களையும் மேற்கொண்டு தனது அனுபவத்தை வளப்படுத்திக் கொண்டார். புலம்பெயர் தமிழ்ச்சமூகத்தின் மத்தியில் இயங்கும் சில ஊடகங்களுக்காக பல தடவைகள்  என்னை நேர்காணல் செய்து என்னையும் அந்த சமூகத்துக்கு அறிமுகம் செய்தார்.

 

அவரது மறைவை ஈடுசெய்ய முடியாத இழப்பு  என்று கூறுவதை விடவும் நிச்சயமாக ஈடுசெய்யப்பட வேண்டிய இழப்பு  என்றே நான் கூறுவேன். ஏனென்றால், பாரதியைப் போன்ற பரந்த அனுபவமும் ஆற்றலும் அர்ப்பணிப்பும் கொண்ட  பத்திரிகையாளர் தமிழ் ஊடகத்துறைக்கு வேண்டும். 

 

எனது தனிப்பட்ட குறிப்பை இந்த சந்தர்ப்பத்தில் கூறவிரும்புகிறேன்.  விரும்புகிறேன். காலஞ்சென்ற முதுபெரும் இலக்கியவாதி டொமினிக் ஜீவா ஒரு தடவை என்னை அணுகி தனது மல்லிகை சஞ்சிகையில் அட்டைப்பட பிரமுகராக என்னை பதிவுசெய்ய விரும்புவதாக கூறினார். " அதற்கு யாரிடம் உங்களைப் பற்றி ஒரு கட்டுரையை வாங்கலாம்? " என்று  அவர்  என்னையே கேட்டார். " அவுஸ்திரேலியாவில் வாழும் எனது நெருங்கிய நண்பன்  முருகபூபதி அல்லது பாரதியிடம் என்னைப் பற்றிய கட்டுரையை வாங்கினால் மாத்திரமே எனது புகைப்படத்தை தருவேன் " என்று நான் ஜீவாவிடம் திட்டவட்டமாக கூறிவிட்டேன். 

 

அவர் உடனே தினக்குரல் அலுவலகத்தில் இருந்த பாரதியின் அறைக்குச் சென்று அவரிடம்  விடயத்தை சொன்னதாக அறிந்தேன். அடுத்த மல்லிகை இதழ் எனது படத்தைத் தாங்கி வந்திருந்தது.  ஜீவாவே அதை கொண்டு வந்து தந்தார்.  உள்ளே பாரதி என்னைப் பற்றி எழுதிய கட்டுரை. அதை வாசித்த பிறகுதான் பாரதி என்னைப் பற்றி எத்தகைய அபிப்பிராயத்தைக் கொண்டிருக்கிறார் என்பதையும் என்மீது எவ்வளவு அன்பை வைத்திருக்கிறார் என்பதையும் நான் புரிந்து கொண்டேன். 

 

பாரதி தனது அபிப்பாராயங்களை பெரிதாக வெளியில் பேசாத ஒரு பிறவி. ஆனால்,  நிதானமாக, ஆரவாரமின்றி சகலவற்றையும் அவதானித்து செயற்பட்ட ஒருவர். பரபரப்புக் காட்டுவதில் நம்பிக்கையில்லாத ஒருவர். ஒப்படைக்கப்பட்ட பொறுப்பைக் கச்சிதமாகச் செய்வதில் கண்ணாயிருப்பார். வீணான அபிப்பிராயங்கள் குறித்து அக்கறை காட்டமாட்டார்.

 

அண்மைக்காலமாக நானும் சுகவீனமுற்று சத்திரசிகிச்சைக்கு பிறகு குணமடைந்திருக்கிறேன். பெரும்பாலும் வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடக்கும் என்னை  கடந்த மூன்று வருடங்களாக பாரதி வாரம் ஒரு முறை  யாழ்ப்பாணத்தில் இருந்து தொலைபேசியில் தொடர்புகொண்டு சுகம் விசாரிக்கவும் நாட்டு நடப்புகளைப் பேசவும் தவறுவதில்லை. பத்திரிகைகளுக்கு எழுதும் அரசியல் கட்டுரைகளைப் பற்றி காய்தல் உவத்தல் இன்றி கருத்துக்களைக் கூறுவார். மனமுவந்து நான் பேசும் பாரதியிடம் இருந்து இனிமேல் தொலைபேசி அழைப்பு வராது. 

 

பாரதியின் மனைவி தேவகி எனது ஊரான வடமராட்சி கரவெட்டியைச் சேர்ந்தவர். அதனால் பாரதி எம்மவர் என்று மேலதிக  உறவு கொண்டாடும் உரிமையும் எனக்கு இருப்பதாக நினைத்துக் கொள்வேன். மனைவிக்கும், மகன் பார்த்திபனுக்கும் சகோதரிக்கும் ஏனைய குடும்ப உறுப்பினர்களுக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறோம். 

 

"பாரதி..... உனக்கு அஞ்சலிக் குறிப்பை எழுதும் துரதிர்ஷ்டம் எனக்கு வரும் என்று நான் நினைத்ததில்லை. நீ முந்தி விட்டாய். சென்றுவா"

https://www.virakesari.lk/article/206369

  • கருத்துக்கள உறவுகள்

புன்சிரிப்பு மாறா பாரதி..

புன்சிரிப்பு மாறா பாரதி..

  — கருணாகரன் —

தமிழ்ப் பரப்பில் பத்திரிகையாளராக அறியப்பட்ட இராஜநாயகம் பாரதி காலமாகி விட்டார். பாரதிக்கு வயது 63. மரணம் ஒருவரை எடுத்துச் செல்வதற்கு வயதில்லை. ஆனாலும் பாரதியின் மரணம் எதிர்பாராதது. அவருடைய அண்ணன் பரதனின் மரணமும் அப்படித்தான் நடந்தது. பரதன் இறக்கும்போது அவருக்கு வயது, 61. பரதன், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முக்கியமான போராளியாக இருந்தவர். 1980 களின் முற்பகுதியிலிருந்து 1990 களின் நடுப்பகுதி வரையில் புலிகளோடு இணைந்து செயற்பட்டவர். இலங்கை – இந்திய இராணுவங்கள் மற்றும் முரணியக்கங்களின் எதிர்ப்பு நிறைந்த  சூழலில் தப்பிப் பிழைத்து, லண்டனில் தன் துணைவியோடு நடந்து சென்று கொண்டிருக்கும்போது மரணத்தை சந்தித்தவர். 

புலிகளுடைய தொலைக்காட்சியான ‘நிதர்சனம்‘,  வானொலியான ‘புலிகளின் குரல்‘ ஆகியவற்றை உருவாக்கி, அவற்றை நிர்வகிக்கும் பொறுப்பாளராக நீண்டகாலம் இருந்தவர் பரதன்.

பாரதி, பரமேஸ்வராக்  கல்லூரி, யாழ் இந்துக் கல்லூரி ஆகியவற்றில் படிப்பை முடித்த கையோடு ஊடகத்துறைக்குள் நுழைந்து விட்டார். 1980 களின் முற்பகுதியில் யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்து கொண்டிருந்த ‘ஈழமுரசு‘பத்திரிகையில் இணைந்து ஆசிரியர் பீடத்தில் பணியாற்றினார். அது போராட்டம் உச்சமான வளர்ச்சியை அடைந்து கொண்டிருந்த காலகட்டம். பல இயக்கங்களும் தலையிலும் மனதிலும் முரண் அரசியலைச் சுமந்து கொண்டு குறுக்கும் மறுக்கும் திரிந்து கொண்டிருந்தன. வேறுபாடின்றி  இயக்கங்களை வேட்டையாடிக் கொண்டிருந்தது இலங்கை இராணுவம். இரண்டுக்குமிடையில் ஊடகவியலாளராகச் செயற்படுவதும் வாழ்வதும் சவாலாகியிருந்த நாட்கள் அது. 

அப்படியான நாளொன்றில், குண்டு வெடிப்புப் பற்றிய செய்திஒன்றுக்காக யாழ்ப்பாணக்  கச்சேரிக்குச் சென்றிருந்தபோது படையிரால் கைது செய்யப்பட்டார் பாரதி. விசாரணைகளின் பின்னர் படையினரால் விடுவிக்கப்பட்டுச் சில காலம் ஈழமுரசுவில் பணியாற்றினாலும் அங்கே தொடர்ந்து இருக்க முடியவில்லை. அதற்குப் பிறகு அப்பொழுது யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகிய ‘முரசொலி‘பத்திரிகையில் இணைந்தார். ஆரம்ப கால ஊடகத்துறையில் பாரதிக்கு வழிகாட்டிகளாகவும் ஊக்கிகளாகவும் எஸ். திருச்செல்வம், சிறி நடராஜா, கிறிஸ்ரி ரஞ்சன், சுப்பிரமணியம் போன்றோர் இருந்தனர். முரசொலியில் பணியாற்றிக் கொண்டிருந்தபோதுதான் பாரதி ஒரு விபத்தில் சிக்கித் தன்னுடைய கைகளில் ஒன்றை இழந்தார். 

வடக்கு கிழக்கு மாகாணசபையின் நிகழ்வொன்றுக்காக வடக்கிலிருந்து ஊடகவியலாளர்களை இந்திய அமைதிப்படை (IPKF) கூட்டிச் சென்றபோது ஏற்பட்ட வாகன விபத்து அது. அதனால், இந்திய இராணுவம் உடனடியாகவே யாழ்ப்பாணத்துக்கு பாரதியைக்கொண்டு வந்து,மேலதிக சிகிச்சைக்காக தமிழ்நாட்டுக்கு விமானத்தில் எடுத்துச் சென்றிருந்தது. அங்கே சிகிச்கை முடித்து இலங்கைக்குத் திரும்பிய பாரதி, தொடர்ந்து சில காலம் முரசொலியில் பணியாற்றினார். 1990 இல் முரசொலியும் நெருக்கடிகளைச் சந்தித்தபோது, பாரதி அங்கிருந்து கொழும்புக்குச் சென்றார். 

கொழும்பில் வீரகேசரி, தினக்குரல் ஆகியவற்றின் ஆசிரிய பீடத்தில் ஏறக்குறைய 30ஆண்டுகள் பணியாற்றியிருக்கிறார் பாரதி. இந்தக் காலகட்டத்தில் பாரதியின் செயற்பாடுகள் கொழும்பு மையம் என்பதற்கு அப்பால், தமிழ்ச் சமூகம் என்றே இருந்திருக்கிறது. குறிப்பாகவடக்குக் கிழக்குத் தமிழ்ச் சமூகத்தின் வளர்ச்சி, அடையாளம், அதனுடைய பாதுகாப்பு போன்றவற்றைக் கவனத்திற் கொண்டிருந்தார். இதற்கான அடிப்படைகளான அரசியல், இலக்கியம், வரலாறு, பொருளாதாரம், பண்பாடு போன்றவற்றை தன்னுடைய ஊடகச் செயற்பாட்டிலும் தான் செயற்பட்ட ஊடகங்களின் தளவாக்கத்திலும் முன்னிலைப் பேசுபொருளாக்கினார். 

தினக்குரல் பத்திரிகையின் வாரப் பதிப்புக்கான ஆசிரியராக இருந்தபோது ‘புதிய பண்பாடு‘என்ற தலைப்பில் பாரதி உருவாக்கியிருந்த சிறப்புப் பகுதி பாரதியின் ஆளுமை, ஆற்றல், கரிசனை, அவருடைய விரிந்த தொடர்பாடற் பரப்பின் அடையாளமாகும். இதற்காகத் தினக்குரலில் பலரையும் எழுத வைத்தார். பலரையும் என்பதன் பொருள், பல்வேறு தரப்பினரையும். பல்வேறு சிந்தனைப்போக்குடையோரையுமாகும். சிவசேகரம் (கோகர்ணன்) யதீந்திரா, அக்கரையூரான்,  காலகண்டன் (சி.கா. செந்தில்வேல்), பெரிய ஐங்கரன், கா. சிவத்தம்பி எனப் பலரும் எழுதினார்கள். 

பாரதியின் அரசியல் நிலைப்பாடு தமிழ்த்தேசியத்தைச் சார்ந்ததாக இருந்தாலும் மாற்றுக் கருத்தாளர்களுக்கும் இடமளித்திருக்கிறார். அந்த இடம் ஏதோ ஓரத்தில், சம்பிரதாயத்துக்காக வழங்கப்பட்டதல்ல. பாரதியின் விரிந்த மனம், விரிந்த சிந்தனையின் அடிப்படையிலானது. இதற்குக் காரணம், அவருடைய தந்தையார் சு. இராஜநாயகனின் அரசியலும் அவர் உருவாக்கிய பாரம்பரியமுமாகும். 

இராஜநாயகன் கணித ஆசிரியராக இருந்தாலும் குறிப்பிடத்தக்க எழுத்தாளராக இருந்தவர். 1950 களில் ஈழத்திலிருந்து உருவாகிய புதிய இலக்கிய அடையாளமான ‘மறுமலர்ச்சி‘ இதழ்க் குழுவில் இருந்தவர். அதில் சிறுகதைகளை எழுதியவர். பின்னர் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டவர். இராஜநாயகனின் இந்த அம்சங்களும் அரசியல், சமூக, இலக்கிய ஊடாட்ட உணர்வும் பிள்ளைகள் மூவரிலும் தொடர்ந்தன, பிரதிபலித்தன. மூத்த மகனான பரதன், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஊடகப் பிரிவில், திரைப்பட இயக்குநராக, இலக்கிய இயக்கத்தைக் கட்டியெழுப்பும் ஆர்வமுள்ளவராக, ஒளிப்படக் கலைஞராக எனப் பல தளங்களில் மிளிர்ந்தார். பாரதி அச்சு மற்றும் இணைய ஊடகத்தில் தன்னை வெளிப்படுத்தி நிலைப்படுத்தினார். கூடவே எழுத்தாளர்கள், கலைஞர்களையெல்லாம் பாரதி மதித்தார். அவர்களுக்குரிய இடத்தை அளித்தார். பெரும்பாலான ஊடகவியலாளர்களைப் போலன்றி, இலக்கிய நிகழ்வுகள், உரையாடல்கள், கலைஞர் சந்திப்புகள், திரைப்பட விழாக்கள் போன்றவற்றிலும் பாரதியைக் காணலாம். அதோடு பாரதி பன்முக வாசிப்பாளராகவும் இருந்தார். தினக்குரலில் அவர் வெளியிட்ட பல ஆளுமைகளுடனான நேர்காணல்கள் அவருடைய வாசிப்பின் வழியாக உருவான மதிப்பீட்டின் அடிப்படையில் அமைந்தவையே. பாரதியைப்போல இன்னொரு பன்முக வாசிப்பாளரும் பல தரப்புத் தொடர்பாளருமாக இருந்தவர் ‘தராகி‘ சிவராம். சிவராமுக்கு அடுத்ததாக அத்தகையதொரு இலக்கியப் பரிச்சயம், மொழிப் பரிச்சியம் உள்ளவரென்றால், அது பாரதியே. இதனால் இலங்கைக்குள் மட்டுமன்றி, புலம்பெயர் நாடுகளிலுள்ளோரும் தமிழ்நாடு, மலேசியா போன்ற நாடுகளில் உள்ளோரும் பாரதியுடன் உறவைக் கொண்டிருந்தனர்.  

பாரதியின் பன்முகத் தன்மையினாலும் பன்முகப் பார்வையினாலும் சிவசேகரம், செந்தில்வேல், கா.சிவத்தம்பி, யதீந்திரா போன்றோர் தொடர்ந்து எழுதி வந்தனர். அதிலும் மாற்றுக் கருத்தாளராகக் கடுந்தொனியில் எழுதும் சிவசேகரம் (கோகர்ணன்), ஏறக்குறைய பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக எழுதி வருகிறார் என்றால் அது பாரதி உருவாக்கிய ஜனநாயக வெளியின் வெளிப்பாடேயாகும். வீ. தனபாலசிங்கம், வி. தேவராஜா, இ. பாரதி, பூபாலரட்ணம் சீவகன் போன்ற மிகச் சிலரே பன்மைத் தன்மையுடன் தமிழ் ஊடகப் பரப்பில் இயங்கியோர், இயங்கி வருவோர். இவர்கள் ஒவ்வொருவருக்குமான அரசியற் பார்வைகளும் நிலைப்பாடுகளும் வெவ்வேறாக இருந்தாலும் அதற்கப்பால், ஊடக அடிப்படை, ஊடக நெறிமுறை, ஊடக தர்மம் போன்றவற்றின் அடிப்படையில் ஜனநாயக விழுமியத்தோடு செயற்படுகின்றவர்கள். என்பதால்தான் இவர்களுடைய கால ஊடகங்கள் பரிமளிப்பாக இருந்தன. ‘புதிய பண்பாடு‘ பக்கங்கள்  ஏறக்குறைய சரிநிகர் போன்றதொரு தோற்றத்தை உருவாக்கியது. சரிநிகரின் அடிப்படையும் நோக்கும் வேறாக இருந்தாலும் ஆழமான வாசிப்புக்குரிய வெளியையும் உள்ளீட்டையும் கொண்டிருந்தது. அதற்கு நிகராக இன்னொரு தளத்தில் தினக்குரல் (புதிய பண்பாடு) இருந்தது. 

பாரதி, தேவராஜ், தனபாலசிங்கம், சீவகன் போல, தமிழ் ஊடகப் பரப்பில் செயற்படும் பெரும்பாலானவர்கள் இருப்பதில்லை. அவர்கள் தமது அரசியல் விருப்பு வெறுப்புகளை ஊடகங்களில் அப்படியே வெளிப்படுத்துவர், பிரதிபலிப்பர். என்பதால்தான் அவர்கள் பணியாற்றுகின்ற ஊடகங்கள் உட்சுருங்கியவையாக – சற்றே பெரிய துண்டுப் பிரசுரங்களாக மாறியுள்ளன. பாரதி போன்றவர்கள் வெளிவிரிவை நோக்காகவும் விருப்பாகவும் கொண்ட ஊடகவியலாளர்கள். இந்த அஞ்சலிக்குறிப்புக் கூட அந்த அடிப்படையிலான மதிப்புக்கான மரியாதையுடன் –  மதிப்புடன் எழுதப்படுகிறது. 

பாரதியும் தனபாலசிங்கமும் இணைந்த கலவையின் வெளிப்பாடாக அவர்களுடைய காலத்தில் வெளிவந்த தினக்குரலைப் பார்த்தால் இந்தக் குறிப்பு எதைச் சுட்ட விளைகிறது என்று புரிந்து கொள்ள முடியும். 

ஊடகம், கலை, இலக்கியம் ஆகிய பரப்புக்கு அப்பால், பாரதிக்கு அரசியற் தரப்பிலும் பலரோடு ஆழமான நட்பும் உறவும் இருந்திருக்கிறது. அவர் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான பின்னணியைக் கொண்டவர் என்று தெரிந்தாலும் அதைக் கடந்து தமிழரசுக் கட்சி, ஈ.பி.ஆர்.எல்.எவ், புளொட்,ரெலோ, ஈ.பி.டி.பி, சமத்துவக் கட்சி, தமிழர் சமூக ஜனநாயக் கட்சி, மலையக மக்கள் முன்னணி, அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ், தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழர் மகாசபை, புதிய ஜனநாயக மாக்ஸிஸக் கட்சி, தமிழ் முற்போக்குக் கூட்டணி, இலங்கை மக்கள் காங்கிரஸ், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ், இ.தொ.க, மலையக அரசியல் அரங்கம் எனச் சகல கட்சிகளோடும் நேர்மையான உறவைக் கொண்டிருந்தார். இதனால், இந்தக் கட்சிகளின் தலைவர்களெல்லோரோடும் பாரதிக்கு நெருக்கமான உறவிருந்தது. 

இப்படியெல்லாம் இருந்தாலும் பாரதி எவரோடும் விவாதங்களை நடத்தியதில்லை. அதனால் யாரோடும் முரண்பட்டதுமில்லை. என்றாலும் தன்னுடைய நிலைப்பாட்டில் அவர் உறுதியாகவே நின்றார். இதற்கு இரண்டு உதாரணங்களைச் சுட்ட முடியும். ஒன்று, ஈழமுரசுவிலிருந்து விலகிச் சென்று முரசொலியில் அவர் சேர்ந்தது. அதைப்போல வீரகேசரியிலிருந்து விலகிச் சென்று தினக்குரலில் இணைந்தது. இரண்டிலும் நிர்வாக முரண்களுக்கு எதிராக பாரதி நின்றது இதைத் தெளிவாகச் சொல்லும். 

ஆனால், எப்போதும் தன்னைப் பிரகடனம் செய்வதோ, தன்னை முன்னிலைப்படுத்துவதோ பாரதியின் குணமல்ல. எப்போதும் தள்ளி நிற்பவராக, உடனடியாக அவசரப்பட்டு எதையும் சொல்லாமல், சற்று விலகி நின்று அவதானித்துக் கொண்டிருப்பராகவே பாரதியைக் காண முடியும். அவருடைய சுபாவமே அப்படியானது. குரல் கூட மிக மென்மையானது. பேசும் பாங்கும் அப்படியே. மிகப் பவ்வியமாக, தணிந்த நிலையில்தான் பேசுவார். பெரும்பாலும் மற்றவர்கள் சொல்வதைக் கூர்ந்து கவனிப்பதே பாரதியின் இயல்பாகும். தன்னுடைய அபிப்பிராயம் என்று அவர் எப்போதாவது அபூர்வமாகத்தான் அவருடைய வாயிலிருந்து வரும். ஆனால், எல்லோரையும் எல்லாவற்றையும் கூர்ந்து அவதானித்துத் தனக்குள் ஒரு சித்திரத்தைப் பாரதி உருவாக்கிக் கொள்வார். ஆனாலும் அதற்காக அவர்களைத் தூர ஒதுக்க மாட்டார். தனக்குப் பொருத்தமில்லாத தரப்பினர் என்றால், முரண்பட்டுக் கொள்ளாமல், தானாகவே ஒதுங்கிக் கொள்வார். இது பாரதியின் தந்தை சு. இராஜநாயகனிடமும் இருந்த குணமாகும். 

பாரதியின் ஊடகப் பங்களிப்பை மதிப்பிடுவதானால், அவர் ஒரு தூக்கலோ துருத்தலோ அற்ற தமிழ்த் தேசியவாதியாக இருந்திருக்கிறார் எனலாம். அதேவேளை தன்னுடைய அரசியலுக்கு அப்பால் உள்ளோருக்கும் ஜனநாயக அடிப்படையில் தாராளமாக இடமளித்திருக்கிறார். இதனால் அவர் ஒற்றைப் படைத்தன்மையான உறவாளராக இல்லாமல் பல தரப்புடனான உறவாடலையும் செய்யக் கூடியவராக இருந்திருக்கிறார். ஜனநாயக விழுமியத்தைப் பேணியதோடு, ஊடகத்தின் பன்மைத்துவமான அரசியல், சமூகம், பொருளாதாரம், இலக்கியம், கலை, தத்துவம், அறிவியல் என அனைத்தையும் சமனிலையோடு நோக்கி, அவற்றைக் கையாண்டிருக்கிறார். ஊடகப் பரிமாணத்தை உருவாக்கியிருக்கிறார். தமிழ் ஊடகப் பரப்பில் பாரதியின் செயற்பாட்டு அடையாளம் வலுவானது. முன்னுதாரணமானது. ஊடகத்துறையில் பயில்வோருக்கும் பணியாற்றுவோருக்கும் அது தக்கதோர் அடிப்படையாகும். 

பின்னாளில் பாரதி யாழ்ப்பாணத்திற்கு வந்து ஈழநாடு, பொருண்மியம் என்றெல்லாம் வேலை செய்து, இறுதியில் வீரகேசரியின் பிராந்தியப் பணிமனையில் பணியாற்றியிருக்கிறார். வீரகேசரியை விட்டு நீங்கியவர் வீரகேசரியில் மீள இணைந்ததைப்போலவே, 1960 களிலிருந்து 1990 கள் வரையும் அவர் பிறந்து  வளர்ந்த திருநெல்வேலிச் சூழலுக்கு மீண்டும் வந்திருந்தார். அவருடைய இறுதி நாட்கள் திருநெல்வேலியிலேயே கழிந்தன. மரணமும் அங்கேயே நடந்தது. அதுவும் அவர் இருந்த வீட்டிலிருந்து ஒரு 300 மீற்றர் சுட்டு வட்டத்துக்குள். ஆனால், பிறந்த வளர்ந்த வீட்டில் அல்ல. அந்த வீடு வேறு கைகளுக்கு மாறியதால் அவர் வாடகை வீட்டிலேயே வாழ நேர்ந்திருக்கிறது. 

ஈழப்போராட்டத்தோடு எழுச்சியடைந்த ஒரு ஊடகவியலாளராக பாரதியைப் பார்க்கலாம். அது உருவாக்கிய நெருக்கடிகள், வீழ்ச்சிகள், துயரங்கள் பாரதியையும் பாதித்தது. பாரதியை மட்டுமல்ல, அவருடைய குடும்பத்தையும்தான். அவர்கள் இழந்தது அதிகம். பெற்றது மிகக் குறைவு. அதற்குள்ளும் பாரதியும் பாரதியின் குடும்பத்தினரும் இந்தச் சமூகத்துக்கு அளித்தது ஏராளம். அதுவே மேன்மைக்குரியது. அஞ்சலி.

https://arangamnews.com/?p=11793

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.