Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அணு ஆயுதப் போர் மூண்டால் என்ன நடக்கும்? – பகுதி 1

13 May 2025, 6:52 PM

what happend if India-Pakistan nuclear war

2025ஆம் ஆண்டு (ஆராய்ச்சிக்காக ஒரு கற்பனை), பயங்கரவாதிகள் இந்திய நாடாளுமன்றத்தைத் தாக்குகிறார்கள்.

டிசம்பர் 2001இல், இந்திய நாடாளுமன்றத்தின் மீதான பயங்கரவாதத் தாக்குதலில் 5 பயங்கரவாதிகள் உட்பட 12 பேர் கொல்லப்பட்டனர். இந்த முறை தாக்குதல்களில் இந்திய அரசாங்கத்தின் பல உறுப்பினர்கள் கொல்லப்பட்டனர்.

ஜனவரி 2002இல் நடந்ததுபோல, இரு தரப்பினரும் நாடுகளுக்கு இடையிலான எல்லையிலும் சர்ச்சைக்குரிய காஷ்மீர் பகுதியிலும் தங்கள் படைகளைத் திரட்டி நிறுத்துகிறார்கள்.

இரு பக்கமும் நிலவும் அதீதப் பதற்றங்கள் காரணமாக மோதல்கள் வெடிக்கின்றன. இரு தரப்பிலும் அதிக உயிரிழப்புகள். இந்திய அரசாங்கம் பல தலைவர்களை இழந்ததால், இந்திய ராணுவம் தானாகவே செயல்பட முடிவுசெய்கிறது. டாங்கிகள் மூலம் பாகிஸ்தானுக்குள் எல்லையைக் கடந்து, காஷ்மீரில் உள்ள கட்டுப்பாட்டுக் கோடு எனப்படும் நடைமுறை எல்லையைக் கடந்து செல்கிறது.

பாகிஸ்தான் ஜெனரல்கள் பீதியடைந்து, வலிமை வாய்ந்த இந்தியப் படைகளின் படையெடுப்பை முறியடிக்க ஒரே வழி அணு ஆயுதங்கள்தான் என்று முடிவு செய்கிறார்கள். அணு ஆயுதப் போரின் முதல் நாளில், அவர்கள் 10 போர்க்களத்தில் மட்டுமே பயன்படுத்தக்கூடிய சக்தி குறைந்த அணுகுண்டுகளைப் பயன்படுத்துகிறார்கள். ஒவ்வொன்றும் 5 கிலோ டன்கள் கொண்டவை.(ஹிரோஷிமாவில் வீசப்பட்ட குண்டின் பாதிக்கும் குறைவான சக்தி கொண்டவை).

தங்கள் எல்லைகளுக்குள், குறைந்த உயரத்தில் இந்திய டாங்கிகள் மீது அவற்றை வெடிக்கச் செய்கின்றனர். இரண்டாவது நாளில், பாகிஸ்தான் மேலும் 15 அணு ஆயுதங்களைப் பயன்படுத்திய பிறகு, பாகிஸ்தான் இராணுவ இலக்குகளை அணு ஆயுதங்களால் தாக்கினால்தான் அது போரை நிறுத்தும் என்று இந்தியர்கள் கருதுகிறார்கள்.

இந்தியர்கள் பாகிஸ்தான் பயன்படுத்தியதைப் போன்ற 20 அணு ஆயுதங்களை வான்வழியில் வெடிக்கச் செய்கிறார்கள். இரண்டு பஹவல்பூரில் உள்ள பாகிஸ்தான் காரிஸன் மீதும், 18 பாகிஸ்தான் விமானநிலையங்கள், அணு ஆயுதக் கிடங்குகளுக்கு மேலேயும் வெடிக்கின்றன.

தொலைதூரப் பகுதிகளில் பயன்படுத்தப்பட்ட பாகிஸ்தானின் ஆயுதங்களைப் போலல்லாமல், இவை மிகப்பெரிய அளவில் நெருப்பைப் பற்றவைக்கின்றன. 1945இல் அமெரிக்கா குண்டுவீசிய பின்னர் ஹிரோஷிமாவில் நடந்ததுபோலவும், 1906இல் சான் பிரான்சிஸ்கோவில் பூகம்பத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட தீயின் விளைவாக நடந்ததுபோலவும் பெருமளவிலான புகை மேல் வளிமண்டலம் வரை உயர்கிறது.

image-1856.png

இந்தியாவின் தாக்குதல் பலனளிக்கவில்லை. பாகிஸ்தான் தனது அணு ஆயுதத் தாக்குதல்களை நிறுத்துவதற்குப் பதிலாக, மூன்றாம் நாளில் 30 வான்வழித் தாக்குதல்களை – இந்திய நகரங்களில் உள்ள காவற்படைகள் மீது 20, நகர்ப்புறங்களில் உள்ள இந்தியக் கடற்படைத் தளங்கள், விமானநிலையங்கள் மீது 10 – பயன்படுத்துகிறது. இந்தியத் துருப்புக்கள்மீது மேலும் 15 அணு ஆயுதங்களை ஏவுகிறது. நகர்ப்புறங்களில் அமைந்துள்ள 10 பாகிஸ்தான் கடற்படை, இராணுவம், விமானப்படை தளங்கள்மீது இந்தியா அணு ஆயுதத் தாக்குதல்களை நடத்துகிறது. 

இனி போரை நிறுத்த முடியாது. இரு தரப்பிலும் கோபம், பீதி, தவறான தகவல் தொடர்பு, முன்னரே தீர்மானிக்கப்பட்ட முடிவுகள் ஆகியவை போருக்கான எரிபொருள்களாகின்றன. அடுத்த மூன்று நாட்களில், பாகிஸ்தான் தனது ஆயுதக் களஞ்சியத்தின் மீதமுள்ள பகுதியைப் பயன்படுத்துகிறது, 120 ஆயுதங்கள் இந்திய நகரங்களை அழிக்கின்றன; இந்தியா மேலும் 70 வான்வழித் தாக்குதல்களுடன் பதிலளிக்கிறது. ஆனால் தன் ஆயுதக் களஞ்சியத்தில் 100 ஆயுதங்களை மீதி வைத்திருக்கிறது.

ஒருவேளை சீனா தன்னைத் தாக்கத் தொடங்கினால் அதை எதிர்கொள்வதற்காக அவற்றை வைத்திருக்கிறது. ஆனால், இந்திய அணு ஆயுதக் களஞ்சியம் பாகிஸ்தானுடனான போரைத் தடுக்கத் தவறிவிட்டது என்னும் சோகமான யதார்த்தத்தை அது கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை. அது பல்லாயிரக்கணக்கான மக்களைக் கொன்றது. மிகப்பெரிய சுற்றுச்சூழல் தாக்கங்களை உருவாக்கவிருக்கிறது. உலகெங்கிலும் மில்லியன் கணக்கானவர்களை, ஏன் பில்லியன்களைக்கூட பாதிக்கக்கூடிய பஞ்சங்களை ஏற்படுத்தும். நாங்கள் முன்வைக்கும் இந்தக் கற்பனையான சூழ்நிலையில்250 நகர்ப்புற இலக்குகளின் இருப்பிடங்களைப் படம் 1 காட்டுகிறது.

[படம் 1. இந்தியா–பாகிஸ்தான் அணு ஆயுதப் போர் நடக்கும் நிலையில் நகர்ப்புற இலக்குகள். வெவ்வேறுநிறங்கள் போரின் வெவ்வேறு நாட்களைக் குறிக்கின்றன. முதல் நாளில் எந்த நகர்ப்புற இலக்கும்தாக்கப்படுவதில்லை. அடர்த்தியான நகர்ப்புறங்களில், சில புள்ளிகள் ஒன்றுடன் ஒன்று இணைகின்றன. எடுத்துக்காட்டாக பாகிஸ்தானின் தெற்கு கடற்கரையில் உள்ள கராச்சியில்.]

AD_4nXcU5xpY5oVY_sV8FTwKn0ZnyU7DfmPP0gsZ

அணு ஆயுதப் போர் நிகழ்வது சாத்தியமா?

காஷ்மீரில் கட்டுப்பாட்டுக் கோட்டில் இந்திய, பாகிஸ்தான் துருப்புக்களுக்கிடையே மோதல் ஏற்படும் என்று கற்பனை செய்வது கடினம் அல்ல. ஆனால், இதுபோன்ற மோதலால் இரு நாடுகளும் அணு ஆயுதப் போரைத் தொடங்க வாய்ப்பில்லை. பாகிஸ்தானைப் போல அல்லாமல், முதலில் அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதில்லை என்ற அறிவிக்கப்பட்ட கொள்கையை இந்தியா கொண்டுள்ளது. “வழக்கமான” போர் முறைகள் தோல்வியடைந்தால், தன்னைத் தற்காத்துக்கொள்ளத் தேவைப்பட்டால் மட்டுமே அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவோம் என்று பாகிஸ்தான் கூறியிருக்கிறது. இந்த நாடுகள் நான்கு வழக்கமான போர்களை (1947, 1965, 1971, 1999) நடத்தியுள்ளன.

image-1864-1024x576.png

இந்தியா – பாகிஸ்தான் போர், 1971

1947இல் இந்தியப் பிரிவினைக்குப் பிறகு கணிசமான உயிரிழப்புகளுடன் பல மோதல்களைச் சந்தித்தன. 2019ஆம் ஆண்டின் தொடக்கத்தில், காஷ்மீரில் நடந்த சண்டையைத் தொடர்ந்து இந்தியா வான் வழியில் பாகிஸ்தானுக்குள் நுழைந்தது. இந்திய விமானங்களில் ஒன்று பாகிஸ்தானுக்குள் சுட்டுவீழ்த்தப்பட்டது. நல்வாய்ப்பாக விமானி உயிர் பிழைத்தார். மேற்கொண்டு போர் எதுவும் இல்லாமல் இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பப்பட்டார். ஆனால் இந்த நல்வாய்ப்பு எப்போதும் இருக்குமா? 

2019, ஆகஸ்டில், ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு அரசியலமைப்பு ரீதியாக உத்தரவாதம் அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை இந்தியா ரத்து செய்தது. அதற்கு எதிரான போராட்டங்களைத் தடுக்க இந்தியப் படைகள் மாநிலத்தை முடக்கிவைத்தன. இன்றுவரை அங்கே நிலைமை பதற்றமாகவே உள்ளது. இந்தியா இப்பகுதியை இரண்டு புதிய யூனியன் பிரதேசங்களாக மறுசீரமைக்கக்கூடும். அவை உள்ளூர் அரசாங்கங்களுக்குப் பதிலாக மத்திய அரசாங்கத்தால் நேரடியாக நிர்வகிக்கப்படக்கூடும்.

பாகிஸ்தானுக்கும் இந்தியாவிற்கும் இடையேயான அணு ஆயுதப் போரால் இந்நாடுகளிலும் உலக அளவிலும் ஏற்படக்கூடிய விளைவுகளை ஆராய, நாங்கள் அத்தகைய போரின் சாத்தியமான விளைவுகளை, அது எவ்வாறு தொடங்கலாம் என்பதற்கான அனுமானத்துடன் ஆராய்ந்தோம். மோதலின் தொடக்கம் அல்லது அதிகரிப்புக்கு எந்த ஒரு தரப்பின்மீதும் பழி சுமத்துவது எந்த வகையிலும் எங்கள் நோக்கமல்ல. இரு தரப்பிலும் மோசமான முடிவுகள் எடுக்கப்படாமல் அத்தகைய மோதல் நிகழாது. இரு நாட்டிலும் பயங்கரவாதத் தாக்குதல்கள், பீதி, தகவல் தொடர்பு இழப்பு, அமைப்புகளைக் கண்காணிப்பதில் தொழில்நுட்பத் தோல்விகள், ஹேக்கிங் அல்லது மறு தரப்பு ராணுவத்தின் செயல்களைத் தவறாகப் புரிந்துகொள்வது ஆகியவற்றால் இந்த மோதல் அதிகரிக்கக்கூடும்.

ஆராய்ச்சிக்காக நாங்கள் முன்வைக்கும் கற்பனையான சூழலின்படி 2025ஆம் ஆண்டில் அணு ஆயுதப் போர் நடக்கிறது. இரு நாடுகளும் சுமார் 250 அணு ஆயுதங்களை வைத்திருக்கின்றன. பாகிஸ்தான் தனது அனைத்து ஆயுதங்களையும் பயன்படுத்தும். சீனாவிடமிருந்து வரக்கூடிய தாக்குதல்களுக்கு எதிராகத் தற்காத்துக்கொள்ள இந்தியா தன்னிடத்தில் இருப்பவற்றில் 100 அணு ஆயுதங்களைச் சேமித்துவைக்கும். இந்தியா அணு ஆயுதங்களைத் தயாரித்ததற்கு முதன்மையான காரணம் சீனாதான்.

இந்த அணு ஆயுதப் பரிமாற்றத்தின் நேரடி விளைவுகள் பயங்கரமானதாக இருக்கும்; 50 முதல் 125 மில்லியன் மக்கள் இறப்பார்கள் (ஒரு மில்லியன் = 10 இலட்சம்) என்று எங்கள் குழு மதிப்பிட்டுள்ளது. பயன்படுத்தப்படும் ஆயுதங்கள் 15, 50 அல்லது 100 கிலோ டன்களைக் கொண்டிருக்குமா என்பதைப் பொறுத்துச் சாவு எண்ணிக்கை மாறலாம். (ஒரு கிலோ டன் என்பது 1,000 டன் TNTயின் வெடிக்கும் சக்திக்குச் சமம்.) இந்திய, பாகிஸ்தான் சமூகங்களுக்கு இதன் விளைவுகள் மோசமானதாக, நீண்ட காலம் நீடிக்கக்கூடியதாக இருக்கும். பல முக்கிய நகரங்கள் பெருமளவில் அழிந்துபோய், வாழத் தகுதியற்றவையாகிவிடும். காயமடைந்த மில்லியன் கணக்கான மக்களுக்குக் கவனிப்பு தேவைப்படும். மின்சாரம், போக்குவரத்து, நிதி உள்கட்டமைப்பு ஆகியவை சீரழிந்து சின்னாபின்னமாகும்.

இந்தியா-பாகிஸ்தான் அணு ஆயுதப் போரினால் காலநிலையின் மீது ஏற்படும் விளைவுகள் துணைக்கண்டத்துடன் அல்லது ஆசியாவுடன் நிற்காது. அந்த விளைவுகள் மிகப்பெரியதாகவும் உலகளாவியதாகவும் இருக்கும்.

(கட்டுரையின் அடுத்த பகுதி நாளை)

கட்டுரையாளர்கள் :

ஆலன் ரோபோக் – அமெரிக்காவின் கொலராடோவில் உள்ள ரட்ஜர்ஸ் பல்கலைக்கழகத்தில் சுற்றுச்சூழல் அறிவியல் துறையில் புகழ்பெற்ற பேராசிரியராக உள்ளார்.

ஓவன் பி. டூன் – அமெரிக்காவின் கொலராடோ பல்கலைக்கழகத்தில் வளிமண்டல மற்றும் கடல்சார் அறிவியல் துறையிலும், வளிமண்டல மற்றும் விண்வெளி இயற்பியலுக்கான ஆய்வகத்திலும் பேராசிரியராக உள்ளார்.

சார்லஸ் ஜி. பார்டீன் – அமெரிக்காவின் தேசிய வளிமண்டல ஆராய்ச்சி மையத்தில் உள்ள வளிமண்டல வேதியியல் அவதானிப்புகள் மற்றும் மாடலிங் ஆய்வகத்தில் ஆராய்ச்சி விஞ்ஞானியாக உள்ளார்.

லில்லி சியா – அமெரிக்காவின் கொலராடோவில் உள்ள ரட்ஜர்ஸ் பல்கலைக்கழகத்தில் சுற்றுச்சூழல் அறிவியல் துறையில் ஆராய்ச்சியாளராக உள்ளார்.

ஹான்ஸ் எம். கிறிஸ்டென்சன் – வாஷிங்டன், டி.சி.யில் உள்ள அமெரிக்க விஞ்ஞானிகள் கூட்டமைப்பில் அணு தகவல் திட்டத்தின் இயக்குநராக உள்ளார்.

மேத்யூ மெக்கின்சி – அமெரிக்காவின் நியூயார்க் சிட்டியில் உள்ளஇயற்கை வள பாதுகாப்பு கவுன்சிலில் (NRDC) அணுசக்தி, காலநிலை மற்றும் எரிசக்தி திட்டத்தின் இயக்குநராக உள்ளார்.

ஆர். ஜே. பீட்டர்சன் – அமெரிக்காவின் கொலராடோ பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பேராசிரியராக உள்ளார்.

செரில் எஸ். ஹாரிசன் – அமெரிக்காவின் டெக்சாஸ் ரியோ கிராண்டே வேலி பல்கலைக் கழகத்தின் பூமி, சுற்றுச்சூழல் மற்றும் கடல்சார் அறிவியல் துறையில் உதவிப் பேராசிரியராக உள்ளார்.

நிக்கோல் எஸ். லவென்டுஸ்கி – கடல்சார் ஆய்வாளர் மற்றும் அமெரிக்காவின் கொலராடோ போல்டர் பல்கலைக்கழகத்தில் இணைப் பேராசிரியராக உள்ளார்.

ரிச்சர்ட் பி. டர்கோ – அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் வளிமண்டல மற்றும் கடல்சார் அறிவியல் பிரிவில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

நன்றி: டெய்லர் அண்ட் ஃபிரான்சிஸ் ஆன்லைன்

தமிழில்: தேவா

https://minnambalam.com/what-happend-if-india-pakistan-nuclear-war-start/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா – பாகிஸ்தான்: அணு ஆயுதப் போரின் விளைவுகள்! – பகுதி 2

14 May 2025, 1:00 PM

India Pakistan Consequences of a Nuclear War

பகுதி 1 இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அணு ஆயுதப் போர் மூண்டால் என்ன நடக்கும்?

அணுசக்திப் போரின் விளைவாக வான்வெளியின் அடுக்கு மண்டலத்தில் செலுத்தப்படும் வெவ்வேறு அளவு புகையின் காலநிலை விளைவுகளைக் கணக்கிட்டோம்.

அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையில் அணுசக்திப் போர் நடந்தால் அது 150 டெராகிராம்கள் (ஒரு டெராகிராம் ஒரு மில்லியன் டன்களுக்குச் சமம்) புகையை உருவாக்கக்கூடும். இது அணுசக்திக் குளிர்காலத்தை உருவாக்கும். கோடையில்கூட மேற்பரப்பு வெப்பநிலை உறைபனிக்குக் குறைவாக இருக்கும்.

இந்தியா-பாகிஸ்தான் விஷயத்தில், புகையின் அளவு இரு நாடுகளும் பயன்படுத்தும் அணு ஆயுதங்கள் எவ்வளவு பெரியதாக இருக்கலாம் என்பதைப் பொறுத்தது. இரு நாடுகளிடமும் இருக்கும் அணு ஆயுதங்கள் ஹிரோஷிமா குண்டின் அளவு (தோராயமாக 15 கிலோ டன்கள்) என்று நாங்கள் அனுமானித்துக்கொண்டோம்.

India Pakistan Consequences of a Nuclear War

ஆனால் 2025 வாக்கில், இரு நாடுகளும் 50 கிலோ டன் அல்லது 100 கிலோ டன் குண்டுகளை வைத்திருக்கலாம். 1998ஆம் ஆண்டு இந்தியா 40 முதல் 50 கிலோ டன்கள்வரை உற்பத்தி செய்யும் ஆயுதத்தைச் சோதித்தது. இந்தியா-பாகிஸ்தான் இடையே அணு ஆயுதப் போர் மூண்டால், 15 கிலோ டன்கள்வரை உற்பத்தி செய்யும் ஆயுதங்களால் (இந்தியாவிலிருந்து 11, பாகிஸ்தானிலிருந்து 5.1) மேல் வளிமண்டலத்தில் மொத்தம் 16.1 டெராகிராம் (1 டெராகிராம் – 100 கோடி) கருப்பு கார்பன் செலுத்தப்படும் எனக் கணக்கிட்டோம்.

50 கிலோ டன் ஆயுதங்களுக்கு 27.3 டெராகிராம்கள் (இந்தியாவிலிருந்து 19.8, பாகிஸ்தானிலிருந்து 7.5); 100 கிலோ டன் ஆயுதங்களுக்கு 36.6 டெராகிராம்கள் (இந்தியாவிலிருந்து 27.5, பாகிஸ்தானிலிருந்து 9.1). இந்தப் புகை சூரிய ஒளியால் சூடாக்கப்பட்டு, அடுக்கு மண்டலத்தில் மேலே உயர்த்தப்படும். அது அடுக்கு மண்டலத்தில் பல ஆண்டுகள் இருக்கும். எனவே அடுக்கு மண்டலத்தில் மழை பெய்யாது.

India Pakistan Consequences of a Nuclear War

படம் 2, பல வருடங்களாக உலகளாவிய சராசரி வெப்பநிலையும் மழைப்பொழிவும் கணிசமாகக் குறையும் என்பதைக் காட்டுகிறது.

(படம் 2. உலகளாவிய சராசரி மழைப்பொழிவு (a), உலகளாவிய சராசரி வெப்பநிலை (b) ஆகியவை அணுசக்தி யுத்தத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட தீ விபத்துகளிலிருந்து மேல் வளிமண்டலத்தில் வெளியேற்றப்பட்ட வெவ்வேறு அளவு கருப்பு கார்பனுக்கான விளைவுகளைக் காட்டுகின்றன. செங்குத்து ஊதா நிறப் பட்டை சுமார் 20,000 ஆண்டுகளுக்கு முன்பு கடந்த பனி யுகத்தின் உச்சத்தில் வெப்பநிலை வரம்பைக் குறிக்கிறது. )

படம் 3, நிலம், கடல் ஆகியவற்றின் வெப்பநிலை எவ்வாறு மாறும் என்பதைக் காட்டுகிறது. போருக்குப் பிறகு இரண்டாவது ஆண்டில் நடுத்தர சூழ்நிலைக்கான வெப்பநிலை மாற்றத்தின் வரைபடத்தையும் (50 கிலோடன் வெடிப்புகளிலிருந்து 27.3 டெராகிராம் புகை) காட்டுகிறது. அப்போது விளைவுகள் அதிகபட்சமாக இருக்கும்.

India Pakistan Consequences of a Nuclear War

(படம் 3. உலகளாவிய சராசரி கடல் மேற்பரப்பு வெப்பநிலை (a) மற்றும் நில மேற்பரப்பு வெப்பநிலை (b) காலத்தின் செயல்பாடாக சரிவு. வண்ண-குறியீடு கருப்பு கார்பன் ஊசிகளைக் காட்டுகிறது. 1 டெராகிராம் (Tg) 1 மில்லியன் டன் ஆகும். 50 kt ஆயுதங்களைக் கொண்ட ஒரு சூழ்நிலைக்கு முதல் ஆண்டு மே மாதம் தொடங்கிய மோதலைத் தொடர்ந்து இரண்டாவது ஆண்டில் சராசரியாக கடல், நில மேற்பரப்பு வெப்பநிலையில் ஏற்படும் மாற்றங்களின் உலகளாவிய பரவலை C பகுதி விளக்குகிறது, இதன் விளைவாக 27.3 Tg கருப்பு கார்பன் ஊசி போடப்படுகிறது. )

அணுசக்திக் குளிர்காலம் உலகம் முழுவதும் விவசாயத்தை முடக்கும். பில்லியன் கணக்கான மக்கள் பஞ்சத்தில் வாடுவார்கள். அமெரிக்க-ரஷ்யா அணுசக்திப் போரின் அளவுக்கு இல்லாவிட்டாலும், கற்பனையான இந்தியா-பாகிஸ்தான் அணுசக்திப் போரில் விவரிக்கப்பட்டுள்ள மூன்று காட்சிகளும் பல ஆண்டுகளுக்குக் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும்.

5 டெராகிராம் புகை உள்ள ஒரு நிகழ்விற்கான குறிப்பிட்ட பயிர்களுக்கு சீனாவிலும் அமெரிக்காவிலும் உணவு உற்பத்தி எவ்வாறு மாறும் என்பதைக் கணக்கிட்டுள்ளோம். உலகம் முழுவதும் குறிப்பிட்ட உணவுப் பயிர்கள், வெப்பநிலை, மழைப்பொழிவு, சூரிய ஒளி ஆகியவற்றில் அணு ஆயுதப் போரின் விளைவுகள் எவ்வாறு இருக்கும் என்பதற்கான விரிவான கணக்கீடுகளை நாங்கள் பயன்படுத்துகிறோம். உயரும் புகை சூரிய ஒளியை உறிஞ்சி அடுக்கு மண்டலத்தை வெப்பப்படுத்துவதால் ஓசோன் அழிக்கப்படும். இதனால் புற ஊதாக் கதிர்கள் அதிகமாகப் பூமியை வந்தடையும். இது மேலும் பல எதிர்மறை விளைவுகளை உருவாக்கும்.

விவசாயத்தில் ஏற்படக்கூடிய தாக்கங்கள் பற்றிய மதிப்பீடுகள் இன்னும் நிறைவடையவில்லை. சுற்றுச்சூழல் ஆரோக்கியத்தின் பொதுவான அளவீடு, நிகர முதன்மை உற்பத்தித்திறன், தாவர சுவாசத்தைக் கணக்கிட்ட பிறகு ஒளிச்சேர்க்கை மூலம் எவ்வளவு கார்பன் டை ஆக்சைடு கரிம தாவரப் பொருளாக மாற்றப்படுகிறது என்பதற்கான அளவீடு ஆகியவற்றைத் தற்போது கணக்கிடலாம். நிகர முதன்மை உற்பத்தித்திறன் என்பது நிலத்தில் எவ்வளவு உணவை வளர்க்க முடியும், மீன்களுக்குக் கடல்களில் எவ்வளவு உணவு வளரும் என்பதற்கான கணக்கீடு.

India Pakistan Consequences of a Nuclear War

(படம் 4 ஐப் பார்க்கவும்.) இந்த முடிவுகளின் அடிப்படையில், இந்தியா-பாகிஸ்தான் அணு ஆயுதப் போர் நடந்தால் அது விவசாயத்தில் பெரிய பாதிப்புகளையும் உணவுப் பற்றாக்குறையையும் ஏற்படுத்தும் என்ற முடிவுக்கு வரலாம். மக்கள் உணவைப் பதுக்கிவைக்கிறார்களா அல்லது பகிர்ந்துகொள்கிறார்களா என்பதைப் பொறுத்து, மில்லியன் கணக்கான அல்லது பில்லியன் கணக்கான மக்கள் பஞ்சத்தில் சிக்கித் தவிக்கலாம். 

அணு ஆயுதங்களைக் கட்டுப்படுத்துவதும் நீக்குவதும் 

அணு ஆயுதங்களைப் போரில் பயன்படுத்துவதன் நன்கு அறியப்பட்டதும், அதிகம் அறியப்படாததுமான பயங்கரமான விளைவுகளையும் நாங்கள் ஆராய்ந்திருக்கிறோம். இந்த ஆயுதங்கள், கொள்கையளவில், நாடுகளுக்கு இடையேயான போரைத் தடுப்பது என்னும் ஒரே ஒரு நியாயமான நோக்கத்தை மட்டுமே கொண்டிருக்கின்றன. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு உலகளாவிய ராணுவ மோதல்கள் எதுவும் ஏற்படாததால், இன்றுவரை அந்த இலக்கு அடையப்பட்டுள்ளது என்று வாதிடலாம். ஆனால், அணு ஆயுதங்கள் பெருமளவில் குவிந்து கிடப்பதால் பயங்கரவாதமோ எண்ணற்ற பிராந்திய அளவிலான மோதல்களோ நின்றுவிடவில்லை. இவற்றால் பல இடங்களிலும் பயங்கரமான மனித உயிரிழப்பு ஏற்படுகிறது.

எல்லோரிடமும் அணு ஆயுதங்கள் இருந்துவிட்டால் யாருமே சண்டையிடத் தயங்குவார்கள் என்று கூறுவது நிச்சயமாக முட்டாள்தனமாக இருக்கும். மாறாக, உலகளாவிய சர்வதேச அடிப்படையில் பேச்சுவார்த்தைகளையும் தீர்வுக்கான வழிமுறைகளையும் நிறுவுவதுதான் 21ஆம் நூற்றாண்டில் மானுடப் படுகொலைகளை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான ஒரே பாதுகாப்பான, நடைமுறை சார்ந்த வழி. உலகளாவிய அமைதிக்கும் பாதுகாப்புக்குமான வழிமுறைகளைக் காண்பதற்கு, அணு ஆயுதங்களை ஒழிப்பதை நோக்கிச் செயல்படுவதே அக்கறையுள்ள குடிமக்களின், குறிப்பாக செல்வாக்கு மிக்க பதவிகளில் இருப்பவர்களின் குறிக்கோளாக இருக்க வேண்டும்.

நமது வாழ்நாளில் இந்த இலக்கை நோக்கிய முன்னேற்றத்தைக் கண்டிருக்கிறோம். குறிப்பாக முக்கிய அணு ஆயுத சக்திகளிடையே தொடர்ச்சியான குறிப்பிட்ட அணு ஆயுத ஒப்பந்தங்கள் ஏற்பட்டிருக்கின்றன. ஐக்கிய நாடுகள் சபை உருவாக்கிய அமைதித் திட்டங்கள், கொள்கைகள் ஆகியவையும் இந்தத் திசையை நோக்கிய காத்திரமான நடவடிக்கைகளே.

உதாரணமாக, 2017ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் அணு ஆயுதத் தடை ஒப்பந்தத்தை 32 நாடுகள் அங்கீகரித்துள்ளன. 79 நாடுகள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன; 50 நாடுகள் அதை அங்கீகரித்தவுடன் ஒப்பந்தம் நடைமுறைக்கு வரும்.

தற்போதைய ஒன்பது அணு ஆயுத நாடுகளும், அவற்றின் பல நட்பு நாடுகளும் இந்த முயற்சியை எதிர்த்தன. இந்த நாடுகள், ஏற்கனவே உள்ள அணு ஆயுதக் கிடங்குகளைப் படிப்படியாகக் குறைப்பது அல்லது இருக்கும் நிலையில் உறுதிப்படுத்திக்கொள்வதன் மூலம் மெதுவாகவும் கவனமாகவும் இவ்விஷயத்தில் செயல்பட விரும்புகின்றன.

அணு ஆயுதக் குறைப்புக்கும் அதை ஒழிப்பதற்குமான முற்போக்கான, நன்கு சிந்திக்கப்பட்ட திட்டம் முன்வைக்கப்பட்டால் அதைக் கண்டிப்பாகப் பாராட்டலாம். ஆனால் சில நாடுகள் அதற்கு பதிலாகப் பழைய பனிப்போர் காலத்தை மீண்டும் கொண்டுவர விரும்புவதாகத் தெரிகிறது.

அணு ஆயுதப் பெருக்கம் முடிவுக்கு வரவில்லை என்பது மட்டுமல்லாமல், கூடுதல் நாடுகள் அணு ஆயுதம் ஏந்துவதைப் பரிசீலித்துவருகின்றன. ஏற்கனவே உள்ள ஒப்பந்தங்களை விரிவுபடுத்துவதற்குப் பதிலாக, அமெரிக்காவும் ரஷ்யாவும் தங்கள் ஆயுதக் கிடங்குகளை மேம்படுத்த முடிவுசெய்து, பழைய வகையைவிட மேலும் வலிமைள்ள புதிய தலைமுறை அணு ஆயுதங்களைப் பற்றிப் பேசுகின்றன.

India Pakistan Consequences of a Nuclear War

“எதற்கும் கட்டுப்படாத” நாடுகள் – குறிப்பாக வட கொரியா – அணு ஆயுதங்களைக் களையத் திட்டமிட்டுள்ளதாகக் கூறினாலும் தங்கள் அணு ஆயுதத் திட்டங்களை விரைவாகச் செயல்படுத்துகின்றன. பயங்கரவாதக் குழுக்கள் இத்தகைய சாதனங்களுக்கான உலகளாவிய சந்தையில் அணுசக்தித் திறனை நாடுகின்றன.

இந்தச் சூழ்நிலையில், நமக்கு நன்கு தெரிந்த அறிவியலின் வெளிச்சத்தில், அமைதியை உறுதி செய்வதற்கான ஒரு வழிமுறையாக அணு ஆயுதங்களைக் கட்டுப்படுத்தவும் இறுதியில் அழிக்கவும் உதவக்கூடிய நடவடிக்கைகளை நாம் ஆதரிக்க வேண்டும். உலகைக் காப்பாற்ற வேண்டுமானால் அதை நாம் செய்தே ஆக வேண்டும்.

கட்டுரையாளர்கள் :

ஆலன் ரோபோக் – அமெரிக்காவின் கொலராடோவில் உள்ள ரட்ஜர்ஸ் பல்கலைக்கழகத்தில் சுற்றுச்சூழல் அறிவியல் துறையில் புகழ்பெற்ற பேராசிரியராக உள்ளார்.

ஓவன் பி. டூன் – அமெரிக்காவின் கொலராடோ பல்கலைக்கழகத்தில் வளிமண்டல மற்றும் கடல்சார் அறிவியல் துறையிலும், வளிமண்டல மற்றும் விண்வெளி இயற்பியலுக்கான ஆய்வகத்திலும் பேராசிரியராக உள்ளார்.

சார்லஸ் ஜி. பார்டீன் – அமெரிக்காவின் தேசிய வளிமண்டல ஆராய்ச்சி மையத்தில் உள்ள வளிமண்டல வேதியியல் அவதானிப்புகள் மற்றும் மாடலிங் ஆய்வகத்தில் ஆராய்ச்சி விஞ்ஞானியாக உள்ளார்.

லில்லி சியா – அமெரிக்காவின் கொலராடோவில் உள்ள ரட்ஜர்ஸ் பல்கலைக்கழகத்தில் சுற்றுச்சூழல் அறிவியல் துறையில் ஆராய்ச்சியாளராக உள்ளார்.

ஹான்ஸ் எம். கிறிஸ்டென்சன் – வாஷிங்டன், டி.சி.யில் உள்ள அமெரிக்க விஞ்ஞானிகள் கூட்டமைப்பில் அணு தகவல் திட்டத்தின் இயக்குநராக உள்ளார்.

மேத்யூ மெக்கின்சி – அமெரிக்காவின் நியூயார்க் சிட்டியில் உள்ளஇயற்கை வள பாதுகாப்பு கவுன்சிலில் (NRDC) அணுசக்தி, காலநிலை மற்றும் எரிசக்தி திட்டத்தின் இயக்குநராக உள்ளார்.

ஆர். ஜே. பீட்டர்சன் – அமெரிக்காவின் கொலராடோ பல்கலைக்கழகத்தில் இயற்பியல் பேராசிரியராக உள்ளார்.

செரில் எஸ். ஹாரிசன் – அமெரிக்காவின் டெக்சாஸ் ரியோ கிராண்டே வேலி பல்கலைக் கழகத்தின் பூமி, சுற்றுச்சூழல் மற்றும் கடல்சார் அறிவியல் துறையில் உதவிப் பேராசிரியராக உள்ளார்.

நிக்கோல் எஸ். லவென்டுஸ்கி – கடல்சார் ஆய்வாளர் மற்றும் அமெரிக்காவின் கொலராடோ போல்டர் பல்கலைக்கழகத்தில் இணைப் பேராசிரியராக உள்ளார்.

ரிச்சர்ட் பி. டர்கோ – அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் வளிமண்டல மற்றும் கடல்சார் அறிவியல் பிரிவில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

நன்றி: டெய்லர் அண்ட் ஃபிரான்சிஸ் ஆன்லைன்

தமிழில்: தேவா

https://minnambalam.com/india-pakistan-consequences-of-a-nuclear-war-part-2/

  • கருத்துக்கள உறவுகள்

அணு ஆயுதங்களை வைத்திருக்கும் நாடுகள்

மற்றைய நாடுகளை செய்யக் கூடாது என்று பல பொருளாதாரத் தடைகளைப் போடுவது ஏன்?

உதாரணம் இப்போ ஈரானை செய்யவிடாமல் தடுப்பது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.