Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

"முள்ளிவாய்க்கால் கஞ்சி"

ஓயாத எறிகணை வீச்சுகளுக்கும், பீரங்கித் தாக்குதல்களின் காது கேளாத எதிரொலிகளுக்கும் மத்தியில், முள்ளிவாய்க்கால் தமிழ் உணர்வின் இறுதி கோட்டையாக நின்றது. ஒரு காலத்தில் பசுமையான, உயிரைக் கொடுக்கும் வன்னி நிலங்கள், தரிசு நிலமாக, இரத்தத்தில் தோய்ந்து மூழ்கிய வயல்களாக மாறிவிட்டன. நம்பிக்கை உயிருடன் அங்கு இல்லை, பலவீனமாக இருந்தது, மங்கிப்போய் இருந்தது, அணையப் போகும் நெருப்பில் கடைசியாக ஒளிரும் நெருப்பைப் போல. என்றாலும் ஆறிலும் சாவு அறுபதிலும் சாவு என்ற வீர உணர்வுமட்டும் எரிந்துகொண்டே இருந்தது. பெருமைமிக்க மக்களின் வெடித்து சிதறிய எச்சங்கள் பதுங்கு குழிகளில் ஒன்றாகக் குவிந்தன. இன்னும் அந்த அவலங்களை பார்த்து அனுபவித்துக் கொண்டு எஞ்சி இருக்கும் வன்னி மக்களின் உடல்கள் மெலிந்தன. ஆனால் அவர்களின் ஆன்மா உறுதியாக இருந்தது. அது உடைக்கப்பட முடியாதது. இந்த பேரழிவு நிலப்பரப்பில்தான் அறிவு மற்றும் வான்மதியின் காதல் கதை முட்கள் நிறைந்த வயலில் ஒரு உடையக்கூடிய மலராக மலர்ந்தது!

அந்த சாலைகளில் அவ்வளவாக கூட்டம் இல்லை. நாலப்பக்கமும் குண்டுகள் முழங்கி கொண்டிருந்தது. தெருவெல்லாம் குருதி ஆறு ஓடி கொண்டிருந்தது. எட்டுத்திக்கும் மரண ஓலங்கள், ஆண்களின் அலறல்கள் பெண்களின் கதறல்கள். ஆர்ப்பரித்து ஓடிய இரத்த வெள்ளங்களில் பல்லாயிரக்கணக்கான சடலங்கள். மூக்கை பழுது பார்க்கும் பிணவாடைகள். கைக்கடிகாரங்கள் அணிந்திருந்த கைகள், திருமண மோதிரங்கள் அணிந்திருந்த விரல்கள், விலையுயர்ந்த காலணி அணிந்திருந்த கால்கள், பால்சுரந்த கொங்கைகள் என அங்குமிங்குமாக சிதறிகிடந்தது ஏராளம் ஏராளம். வான் மழை கூட பெய்ய மறுத்த அந்த நிமிடங்களில் வானூர்திகள் குண்டு மழை பொழிந்து கொண்டிருந்தது.

இன்னும் அந்த சத்தங்கள் ஓயவில்லை, முறிந்து விழுந்த மரக்குற்றி ஒன்றின் மேல் அமர்ந்தபடி, அங்கு நடப்பவைகளை மெல்ல கவனித்து கொண்டிருந்த வான்மதி, பல மணி நேரமாக தூங்காத கண்ணுக்கு ஓய்வுகொடுத்து சற்று தன்னை மறந்து, அயர்ந்து தூங்கி விட்டாள்.

மூதாதையர்களின் கடுமையான மன உறுதியை இன்னும் தாங்கிய கண்களைக் கொண்ட இளம் தமிழ் மருத்துவர் அறிவு தற்செயலாக, அந்த வழியால் போகும் வேளையில், காலை சூரியனைப் போல மென்மையான இதயம் கொண்ட துடிப்பான தன்னார்வலரான வான்மதி மரக்குற்றியின் மேல், சரியான களைப்பில், தன்னையே மறந்து, தூங்கிக்கொண்டு இருக்கும் சங்கடமான நிலையைப் பார்த்து குழம்பினான்.

அங்கே கொஞ்சம் தூரம் தள்ளி மக்கள் குழப்பத்தின் மத்தியிலும், தங்கள் உயிரைப் பிடித்து வைத்திருக்க ஒரு தேங்காய் சிரட்டை கஞ்சியை குடித்துக்கொண்டு இருப்பதைக் கண்ட அவன், இரண்டு தேங்காய் சிரட்டைகளில், பலருக்கு இறுதி உணவாக மாறிய உயிர்வாழும் உப்பில்லா கஞ்சியை தானும் பெற்று அவளை நெருங்கினான். அவன், அவள் அருகில் வர, அவளும் கண் திறக்க சரியாக இருந்தது.

எந்த வித சலனமும் இன்றி மெதுவாக அடிமேல் அடி வைத்து வந்த அவனைக் கண்டு அவள், தன் களைப்பிலும் சோர்விலும் பசியிலும் கூட சொக்கித் தான் போனாள். வழித்து வாரிய தலைமயிர், புருவம் உயர்த்திய சீரிய கண்கள், அளவான சிரிப்போடு இதழ்கள், மரண வாடையின் மத்தியிலும் மனம் தளரா கம்பீர நடை. அவனை வைத்த கண் வாங்காமல், அருகில் வரும் மட்டும் பார்த்துக் கொண்டே இருந்தாள்.

அவன் அருகில் வரும்பொழுது தான், அவள் யார் என்று உற்றுக் கவனித்தான். அப்படியே ஒருகணம் தன்னை மறந்தான்.

'கடலினைக் கயலைக் கனையமேன் பினையைக்

காவியை கருவிள மலரை

வடுவினைக் கொடிய மறலியை வலையை

வாழை வெண் ர்ரவுநீன் டகன்று

கொடுவினை குடி கொண்டிருபுறம் தாவிக்

குமிழையும் குழைyaiயும் சீறி

விடமெனக் கறுப்பூர் றரிபரந துங்கை

வேலினும் கூறிய விழியால்'

ஒப்புமையில் கடலினையும்,மீனையும்,அம்பையும், மென்மையான பெண் மானையும் நீலோற்பல மலரையும் கருவிளம் பூவையும் , பார்வையால் ஆடவரை துன்புறுத்தி கவர்வதில் கொடிய எமனையும் ,வலையையும், வாளையும் வென்று முற்றிலும் செவியளவு நீண்டு அகன்று கண்டார் உயிர் உண்ணும் கொடுந்தொழில் நிலை பெற்று இரண்டு பக்கங்களிலும் தாவி குமிழாம் பூ போன்ற மூக்கும் , விசம் போல் கருநிறம் பொருந்தி கூரிய வேலை விட கூர்மையான கண்களை உடைய அவள், அந்த கண்களை இன்னும் மூடவில்லை.

ஆனால் அப்படியே எந்தக் குறையும் இல்லாத சிற்பம் ஒன்று மரக்குற்றியின் மேல் செதுக்கியது போல, ஒய்யாரமாக ஒரு மரக்கிளையுடன் சாய்ந்து இருந்தாள். அவள் கண்கள் விழித்து இருந்தாலும் அதில் சோர்வைக் கண்டான். பசியின் ஏக்கத்தைக் கண்டான்.

அவன் தான் கொண்டுவந்த, தேங்காய் சிரட்டையில் உள்ள அந்த காஞ்சித் தண்ணீரில், மிதந்து கொண்டு இருந்த சோற்றைக் கிளறிக்கொண்டு அவள் அருகில் வந்தான். அவன் ஒரு மருத்துவன், அவனுக்கு அவளின் பசிக்கொடுமை மற்றும் பயம் புரிந்துகொண்டது. அவளின் தலை முடியை தடவிக் கொடுத்துக் கொண்டு, அந்த கஞ்சியில் கலந்து இருந்த சோற்றை பிரித்தெடுத்து அவளுக்கு முதலில் ஊட்டினான்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் தென்மேற்குப் பகுதியில் உற்பத்தியாகி, அங்கிருந்து முல்லைத்தீவு மாவட்டத்தின் வடமேற்குப் பகுதி வழியாகப் பாய்ந்து, பின் கடலுடன் கலக்கும் நையாற்றின் நீரோட்டத்தால்,வரி வரியாகக் கருமணல் படிந்திருப்பதைப் போல, அவளின் கூந்தல் அவனுக்கு இருந்தது. அவள் நாணமிகுதியால் அவனை கள்ளப்பார்வையால் நோக்கி சாய்ந்திருந்தது கழுத்து. காந்தள் மலர் போன்ற மெல்லிய விரல்கள், அவனை தடுக்க முற்பட்டு, ஆனால் மனமும் வயிறும் இடம் கொடுக்காமல் போராடிக் கொண்டு இருந்தது.

சாதாரண நேரம் என்றால், அவள் கஞ்சியைத் தானே, அவனிடம் இருந்து எடுத்து சாப்பிட்டு இருப்பாள். ஆனால், இன்று எனோ அவனை ஊட்ட விட்டுவிடடாள். அவள் பேசவில்லை. அவனும் பேசவில்லை. ஏன், குண்டுகள் கூட அமைதியாக இருந்துவிட்டது. அவர்கள் இருவரும் வெறும் வார்த்தைகளை விட, அதிகமாகப் தங்கள் எண்ணங்களை உணர்வுகளை உள்ளத்தால், கண்களால் பரிமாறிக் கொண்டனர். அவர்களின் மௌனப் பார்வைகள் சொல்லப்படாத எதோ ஒன்றை ஒருவரின் மேல் ஒருவர் தேடிக்கொடு இருந்தன.

அவள் ஒரு சிறிய புன்சிரிப்புடன், அவனைப் பார்த்தாள். பின் அவன் வைத்திருந்த கஞ்சி சிரட்டையை ஒருமுறைத் தொட்டாள். அவள் மனதில் சில வேதனைகள் ஊசல் ஆடுகிறது என்பதை அவன் அறிந்தான். அவள் அதை உணர்ந்தது போல, இரு நாளுக்கு முன் நடந்த ஒரு சம்பவத்தை கூறத் தொடங்கினாள்: "அன்று சிறிய பதுங்கு குழி ஒன்றுக்குள் இருந்த நான் கையில் ஒரு கிண்ணத்தை எடுத்துக் கொண்டு வெளியே ஓடினேன். அரிசிக் கஞ்சி ஊற்றுகின்ற இடத்துக்குச் சென்று, வாங்கிய கஞ்சியின் சூடு ஆறுவதற்கிடையில் ஓட்டமும் நடையுமாக திரும்பி வந்தேன். ஆனால் என்னால் அந்த கஞ்சியைக் கூட பருக முடியவில்லை.பல் குழல் எறிகணை வீச்சில் வீழ்ந்த குண்டோன்று சிறுவர்களை பாதுகாத்து வைத்திருந்த பதுங்குகுழிமீது வீழ்ந்தது. என் கையிலிருந்த கிண்ணம் தன்பாட்டிலேயே கீழே வீழ்ந்து உருண்டது. கஞ்சி மண்ணோடு மண்ணாய்க் கலந்து. அதைப்பற்றி நான் கவலைப்படவில்லை. ஒருவர் பதுங்கி குழிக்கு அருகில் நிற்பதைப் என்னால் பார்க்க முடிந்தது. காயம்பட்ட காலோடு இலையான்கள் அவரை மொய்த்துக் கொண்டிருந்தது. என்றாலும் அவர் அதைப் பொருட் படுத்தாமல், என்னை கத்திக் கூப்பிட்டார். நான் கிடங்கின் அருகில் ஓடிச் சென்று பார்த்த பொழுது அது ஒரு மாபெரும் மனித படுகொலைக் கிடங்காக மாறிக் காட்சியளித்தது. அங்கே, என்னோடு சற்று முன் கஞ்சி அருந்திக்கொண்டு சிரித்துப் பேசிக்கொண்டு இருந்த அந்த சிறுவர்கள் சிதையுண்டிருந்தார்கள்." என கண்ணீருடன் அவனுக்கு கூறினாள்.

அவர்களின் கண்கள் ஒருவரை ஒருவர் சுற்றி சுற்றி வந்தது. "காதல் ஹார்மோன்" [The love hormone] என்று அழைக்கப்படும் ஆக்சிடாசின் (Oxytocin) கசிந்து அவர்களை கிளர்ச்சி அடைய செய்திருந்தது.

'உயிரும் உணர்வும் சங்கமிக்கும் பார்வையே

பருவத்தில் பூத்து மாற்றிடும் மனதையே

வேம்பும் கரும்பும் சேர்ந்தக் கலவையோ

காமத்தின் பாதையில் புனிதப் பயணமோ

இயற்கை உதிரும் இன்பச் சருகோ

தெளிவாய்த் தெரியுதே குழம்பிய பார்வையில்!

அவன் ஓர் மருத்துவன், நூற்றுக்கணக்கான பெண்களைப் பார்த்தவன். தொட்டவன், ஆனால் இன்று அது ... அதன் தாக்கம் அவனால் தாங்க முடியவில்லை. என்றாலும் அவன் அவளுக்கு உப்பில்லா கஞ்சியை ஊட்டிய பின், அவளை ஒரு மரத்தின் கீழ் தரையில் படுக்க விட்டுவிட்டு, தானும் ஒரு தேங்காய் சிரட்டை கஞ்சியை ஒரு பாறைக் கல்லில் இருந்து கொண்டு, அவளைப் பார்த்தபடியே குடித்தான். பின் அவளையும் அழைத்துக் கொண்டு, தன் கடமையை செய்ய புறப்பட்டான்.

தன் மருத்துவப் பணியை அடுத்த கிராமத்தில் தொடர, அங்கு எங்கும் பரந்து விரிந்து இருக்கும் அகழிகளில் குறுகிய, ஆபத்தான நடைப்பயணங்களை மேற்கொண்ட போது, தமிழ் காவியங்களிலிருந்து அல்லது தானே இயற்றிய சில வரிகளை வான்மதிக்கு, அவளை உற்சாகப்படுத்துவதற்காக, பயத்தை நீக்குவதற்காக அடிக்கடி கூறிக் கொண்டு போனான். அவன் சிலப்பதிகாரத்திலிருந்து மேற்கோள் காட்டினான். கண்ணகியின் தளராத மனப்பான்மைக்கும் தமிழ் மக்களின் உயிர்வாழ்வுப் போராட்டத்திற்கும் இடையே உள்ள ஒற்றுமைகளை வரைந்து காட்டினான்.

புதுக்குடியிருப்பு, இரணைப்பாலை, ஆனந்தபுரம், மந்துவில், புதுமாத்தளன், இடைக்காடு, அம்பலவன் பொக்கணை,வலைஞர்மடம், இரட்டைவாய்க்கால், முள்ளிவாய்க்கால் கிழக்கு, முள்ளிவாய்க்கால் மேற்கு உட்பட்ட பகுதிகளில் பல்லாயிரக் கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர், காயமடைந்தனர். அங்கு அந்த இறுதி நாளில் மிக சொற்ப மருத்துவர்களே கடமையாற்றினார். அவர்களில் ஒருவனே இந்த அறிவு!

அவன் முள்ளியவளை, தண்ணீரூற்று ஆகிய கிராமங்களுக்கு அருகில் இருக்கும் வற்றாப்பளை கண்ணகை அம்மன் கோயில் அருகில் சென்றதும், கண்ணகி என்ற பத்தினித் தெய்வத்தை அவளுடன் சேர்ந்து வணங்கி விட்டு, வன்னி நாட்டின் காவல் தெய்வமாகவும் தாய்த் தெய்வமாகவும் இருக்கும் கண்ணகி முன்னால், தன்னை வான்மதியுடன் இணைத்த உப்பில்லா முள்ளிவாய்க்கால் காஞ்சிக்கும் நன்றி தெரிவித்தான். பின் அவன் அங்கு காயப்பட்டிருக்கும் எல்லோருக்கும் ஆலய முன்றலில் தன்னால் இயன்ற வைத்தியம் செய்தான். இம் முறை வான்மதியும் அவனுக்கு உதவியாக அங்கு கடமையாற்றினாள். ஆனால் அந்த அவலம் நிறைந்த சூழலிலும், அவன் மேலும் அவளை ஈர்த்தான் அது அவன் வசிகரமா அல்லது அவள் பலவீனமா என்று ஆராய்வது தேவையற்றது. ஏனேன்றால் அது காதலின் இலக்கண விதி. அன்று முதல் அவனை பின் தொடர்வதையே வாடிக்கையாக்கி அவனை மணப்பதையே லட்சியமாக்கினாள். வைகாசி மாதத்தில் பூரணை நாளை அடுத்து வரும் திங்கள் நாளில் வற்றாப்பளை கண்ணகை அம்மன் கோயிலில் நிகழும் பொங்கல் விழாவில் தான் அவனுடன் கலந்து கொள்வேன் என்று தன் மனதில் வேண்டிக் கொண்டாள்.

நாள்பட நாள்பட, பஞ்சத்தினால் அங்கிருந்த மக்கள் முள்ளிவாய்க்காலில் உள்ள அனைத்து வளங்களையும் பயன்படுத்தினர். தாக்குதல் கொடூரத்திலும் அதனை பொருட்படுத்தாது உணவு தேடும் பணியில் மக்கள் ஈடுபட்டிருந்தனர். இதனாலேயே பெரும்பாலான மக்கள் செல் வீச்சுக்களில் சிக்குண்டு மாண்டனர். தென்னங்குருத்து, பனங்குருத்து, கரையோர நண்டு,பனங்கீரை, இலைகள், குழைகள், காட்டுக்காய்கள், கடற்கரை ஏரல் (சிப்பி) கடல் மற்றும் குளத்து மீன்கள், ஆலமர குருத்துகள்,ஆலங்காய், ஈச்சம் வட்டு, இளநீர், தேங்காய் என இருக்கின்ற எல்லா வகையான பொருட்களையும் தமது உணவாக்கிக் கொண்டனர். எஞ்சி இருந்த ஆடு, மாடு, கோழிகள் அனைத்தையும் உணவாக்கி இனிகால் நடைகள் இல்லை என்ற நிலைக்கே முள்ளிவாய்க்கால் வந்திருந்தது.

நாட்கள் செல்லச் செல்ல, நிலைமை மேலும் இருண்டது. சக்திவாய்ந்த சர்வதேசத்தின் அமைதியான உடந்தையால் இலங்கை அரசாங்கம் தங்கள்ப் பிடியை இறுக்கிக் கொண்டன. கொத்து குண்டுகள் மற்றும் வெள்ளை பாஸ்பரஸ் மழை பெய்தன, அவற்றின் வெடிப்புகள் தற்காலிக மருத்துவமனைகள் மற்றும் நெரிசலான பதுங்கு குழிகள் வழியாகச் சென்றன. பாதுகாப்பாக இருக்கும் என்று உறுதியளிக்கப்பட்ட மனிதாபிமான வழித்தடங்கள் கூட பொறிகளாக மாற்றப்பட்டன, அப்பாவிகளை அவர்களின் கொடிய வலையில் சிக்க வைத்தன.

ஒரு மாலை, புகை மூட்டம் நிறைந்த அடிவானத்திற்குப் பின்னால் சூரியன் மறையும் போது, அறிவு மற்றும் வான்மதி இருவரும் தங்கள் கடைசி உணவாக இருக்கலாம் என்று அஞ்சியதை பகிர்ந்து கொண்டனர் - அது ஒரு சிறிய சிரட்டை முள்ளிவாய்க்கால் கஞ்சி. அவர்கள் ஒருவருக் கொருவர் நெருக்கமாகப் பிடித்துக் கொண்டு, உள்ளக சுதந்திரம் பெற்று, 'சமஷ்டிக் கட்டமைப்பு அடிப்படையில், மொழிவாரியான வடக்கு கிழக்கு இணைந்த தமிழ் சுயாட்சிப் பிரிவு அமைந்து, மீண்டும் கட்டப்பட்ட அந்த தமிழ்த் தாயகம் ஒன்றில், ஒரு நாள் தெளிவான வானத்தின் கீழ் சுதந்திரமாக ஓடிவிளையாடும் குழந்தைகள் பற்றிய கனவுகளை கிசுகிசுத்தனர்.

பட்டினி முள்ளிவாய்க்காலை உலுக்கி எடுக்க ஆரம்பித்தது. சிறார்கள் எலும்பும் தோலுமாக காட்சியளித்தனர். கர்பிணித் தாய்மார்கள் தங்கள் குழந்தைகளை எவ்வாறு பெற்றெடுக்க போகின்றோம் என்ற ஏக்கத்திலேயே மயக்கமுற்று விழும் அளவிற்கு நிலைமை மாறிக்கொண்டு இருந்தது. அது மட்டும் அல்ல, கஞ்சிக்கு கை ஏந்தியவர்களும் கொன்று குவிக்கப் பட்டனர். துப்பாக்கி ரவைகள் எல்லாத் திசைகளில் இருந்தும் இடையறாது வந்து கொண்டிருந்தன. தனியே செல்லவும் பயமாக இருந்த காலம் அது. என்றாலும் மனதைத் திடப்படுத்திக் கொண்டு, மறுநாள் காலையில், அருகிலுள்ள குழியிலிருந்து தண்ணீர் சேகரிக்க வான்மதி மற்றவர்களுடன் வரிசையில் நின்றபோது, திடீரென குண்டுகள் அந்த வரிசையைத் தாக்கின. குண்டுவெடிப்பு, சதை மற்றும் எலும்பைக் கிழித்து, காற்றில் ஒரு இரத்தம் கலந்த சிவப்பு மூடுபனி தொங்கியது. அருகில் இருந்த அறிவு, புகையை நோக்கி விரைந்தான். அவனது இதயம் பயத்தால் துடித்தது. ஒரு காலத்தில் மனித உருவங்களாக நடமாடியவர்களின் சிதைந்த எச்சங்களுக்கு மத்தியில் வான்மதியைக் கண்டான். அவளுடைய இடது கால் சேதமடைந்திருந்தது. அவளுடைய உடல் துண்டுகளால் சிக்கியிருந்தது. ஆனாலும் அவள் உயிருடன் இன்னும் ஒட்டிக்கொண்டு இருந்தாள், அவளுடைய கண்கள் இன்னும் அவனைத் தேடிக்கொண்டிருந்தன.

அவன் அவளை ஒரு பதுங்கு குழிக்கு அழைத்துச் சென்று, எதோ கையில் கிடைத்ததை வைத்து தன்னால் இயன்ற வைத்தியம் செய்தான். சங்க இலக்கியங்கள் போற்றிய பண்டைய வசனங்களின் சிலவரிகளை, அவளை உற்சாகப்படுத்த காதில் கிசுகிசுத்தான். ஆனால் அவளுடைய இரத்தம் அவன் சட்டையில் ஊறி, எதை எதையோ வரையத் தொடங்கியது. அவளுடைய பிடி தளர்ந்தது, அவளுடைய மூச்சு மங்கியது, அவளுடைய கண்கள் பளபளப்பாக, அவனால் எட்ட முடியாத தூரத்தைப் பார்த்தன.

அறிவு அவள் உடலை குளிர்ந்த பூமியில் கிடத்தி, இறுதி விடை கொடுத்தான்!

"அழகான என் குட்டிச் செல்லமே

அன்பான ஒரே நம்பிக்கை நட்சத்திரமே

அளப்பெரும் துயரில் என்னைத் தள்ளி

அமைதியாய் சொல்லாமல் மறைந்தது ஏனோ?"

"வாய் மடித்து கண் சுழன்று

வான் உயர கை அசைத்து

வாட்டம் இன்றி துள்ளிச் சென்றவளே

வான்வழியால் உன்னை பொசுக்கியவன் யாரோ?"

"மணலால் கதிரவன் எழும் காலையில்

மனதை உறுதியாக்கி தண்ணீருக்கு நின்றவளே

மரணப் பயமின்றி தொண்டு செய்தவளே

மண்பானையில் கஞ்சி கொதிப்பது தெரியாதோ?"

"செவ்வாய் நீயோ என்னைச் சந்தித்தாய்

செவ் இதழ் கொண்டு கஞ்சி பருகினாய்

செந்தமிழ் நிலைக்க துன்பம் சுமந்தாய்

செல்லடித்து உன்னைச் சிதைத்தவன் யாரோ ?"

முள்ளிவாய்க்கால் கஞ்சி ஒரு அடையாளமாக, உயிர்வாழ்வின் அமிர்த சுவையாக, துரோகம் செய்யப்பட்ட மக்களின் உப்புக் கண்ணீராக, சுதந்திரம் மீண்டும் மலரும் நாளைய தினம் பற்றிய அழியாத வாக்குறுதியாக, இன்று 'அறிவு'க்கு மட்டும் அல்ல, எல்லா ஈழத் தமிழர் மனதிலும் ஒட்டி நிற்கிறது!

நன்றி

கந்தையா தில்லைவிநாயகலிங்கம்

அத்தியடி, யாழ்ப்பாணம்

497036366_10229148581921934_861828234770

496319805_10229148582801956_182437950349

493576457_10229148582001936_243082184625

497393499_10229148610522649_228674522967


  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எல்லோருக்கும் நன்றிகள்

  • கருத்துக்கள உறவுகள்
On 18/5/2025 at 03:37, kandiah Thillaivinayagalingam said:

முள்ளிவாய்க்கால் கஞ்சி ஒரு அடையாளமாக, உயிர்வாழ்வின் அமிர்த சுவையாக, துரோகம் செய்யப்பட்ட மக்களின் உப்புக் கண்ணீராக, சுதந்திரம் மீண்டும் மலரும் நாளைய தினம் பற்றிய அழியாத வாக்குறுதியாக, இன்று 'அறிவு'க்கு மட்டும் அல்ல, எல்லா ஈழத் தமிழர் மனதிலும் ஒட்டி நிற்கிறது!

க.தில்லைவிநாயகம் அவர்களே, நினைவுகளைப் பகிர்தல் ஒருவகை. அதனைக்காணாது உணர்தல் என்பது அந்த மண்மீது, அந்த மண்ணின் உரித்தாளர்கள் கொள்ளும் பாசஉணர்வும், அந்த மண்மணத்தின் நுகர்வின் நினைவுகளின் கலப்பால் விளைவதும் ஒரு பிரித்தறிய முடியாத உணர்வு. உங்கள் ஆக்கம் மீண்டுமொருதடவை 2009 மே18க்கு முந்திய இறுதிநாட்களை எம்முள்ளே அழுத்திச் செல்கிறது. இதுபோன்ற படைப்புகள் அல்ல உண்மைகள் தொடர்ந்து எழுதப்பட வேண்டும்.உறவே தொடரட்டும் உங்கள் பணி. நன்றியும் பாராட்டும் உரித்தாகுக. இந்த ஆக்கத்தை உள்சென்று உணரும்போது உள்ளம் கலங்கிக் கவிழ்கிறது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள்

மன்னிக்கவும் , ஒரு எழுத்துப்பிழை

கஞ்சி என வாசிக்கவும்

"முள்ளிவாய்க்கால் கஞ்சி"

Edited by kandiah Thillaivinayagalingam

  • நியானி changed the title to "முள்ளிவாய்க்கால் கஞ்சி"

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.