Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எட்டாவது திரை - தெய்வீகன்

அடைமழை பொழிவது எல்லாத் திரைகளிலும் தெரிந்தது. ஒரு சில துளிகள் கமராக்களின் கண்களில் தெறிந்து விழுந்து வீங்கிப் பின் வடிந்தன. நகரத்தின் வாகன நெரிசல் பெரும்பாலும் அத்தனை திரைகளிலும் நிறைந்திருந்தது. எனக்கருகிலிருந்த தொலைத்தொடர்பு ரேடியோ கருவண்டு போல அவ்வப்போது இரைந்து முனகியது. பாதுகாப்பு அதிகாரிகளின் குரல்கள், அந்த ரேடியோவில் விழுவதும் ஓய்வதுமாயிருந்தன.

களத்திலிருந்து உத்தியோகத்தர்கள் அறிவித்த சங்கேதக் குரல் வழியான செய்திகளுக்குப் பதில் கொடுத்தேன். அதனை பதிவேட்டில் நேர விவரத்தோடு எழுதினேன்.

“Spring Street Security vehicle moving”

கட்டுப்பாட்டு அறையிலுள்ள பெருந்திரைக்கு மேலுள்ள மணிக்கூட்டில் சரியாக மாலை ஐந்து மணி காண்பித்தது. முன்னைய இரவுப் பணியின் சோம்பலை பகல் தூக்கம் ஓரளவு துடைத்தெடுத்திருந்தாலும், மிதமான அசதி உடம்பில் இன்னும் மீதமிருந்தது. கட்டுப்பாட்டு அறைக்குள் வருவதற்குச் சற்று முன்னர், தயாரித்த சூடான தேனீர், ஆவியை எந்தியபடி மேசையில் வீற்றிருந்து உற்சாகமளித்தது.

மெல்பேர்ன் நகரின் கிரிக்கெட் மைதானத்திற்கு முன்னாலுள்ள அத்தனை கமராக்களும் காட்சிகளின் துரிதத்தை எனது கண்களுக்குள் வார்த்தபடியிருந்தன.

கமரா 1 – ஜொலிமென்ற் ரயில் நிலைய வாயில்

கமரா 2 – புல்மென் ஹோட்டல் வாயில்

கமரா 3 - ஸ்பிறிங்க வீதி (தெற்கு நுழைவாயில்)

கமரா 4 – திறைசேரிப்பூங்கா நுழைவாயில்

கமரா 5 – திறைசேரிப்பூங்கா விருந்தினர் மேடை

கமரா 6 – திறைசேரிப்பூங்கா நிகழ்வரங்கு

கமரா 7 – ட்ராம் தரிப்பிடம் - இலக்கம் 174

மெல்பேர்ன் பெருநகரின் பாதுகாப்பிற்காகப் பல்லாயிரக்கணக்கான கமராக்கள், ஒவ்வொரு மூலையிலும் பொருத்தப்பட்டிருந்தாலும், நகர் மையத்திலுள்ள ‘அக்மி’ மண்டபத்தின் கட்டுப்பாட்டு அறையில் எட்டுக் கமராக்களின் வழியாக, கிரிக்கெட் மைதானத்துக்கு வெளியிலுள்ள பகுதியின் வெளிக்கள நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்கான மெல்பேர்ன் நகர் கவுன்ஸிலின் பிரதான உத்தியோகத்தர்களில் ஒருவனாக நான் பணியாற்றி வந்தேன்.

என் முன்னாலிருக்கும் இந்த எண்-திரைகள் மெல்பேர்ன் கிரிக்கெட் மைதானத்தின் சுற்றாடலில் பொருத்தப்பட்டிருக்கும் கமராக்களின் வழியான காட்சிகளை நேரடியாகத் தருபவை. நகரின் மத்திய பிரதான தெருக்கள், அங்காடிகளுடன் ஒப்பிடும்போது நெரிசல் மிக்கவை இல்லாவிட்டாலும், இந்தக் கமராக்கள் ஒவ்வொரு நொடியும் புதிய காட்சிகளை திரைக்கு அனுப்பிக்கொண்டிருப்பவை.

மெல்பேர்ன் எனும் பெரு நகரின் ஒரு துண்டை, இந்தக் கமராக்களின் வழியாகக் காவல் காக்கும் நான், இருளுக்குள் ஒளி மேயும் பசு.

வாழ்வின் அசதியான காலங்கள் என்னை அலைக்கழித்துக்கொண்டிருந்த நாட்களில் இந்த வேலையில் இணைந்தேன். பதினைந்து வருடங்களை நிறைவுசெய்துவிட்டேன். திரைகளுடன் நானும் என்னுடன் இத்திரைகளும் பேசுகின்ற முடிவுறாப் பயணமாய் இந்தப் பணி ஆண்டுக் கணக்கில் விரிந்து பரந்தது.

பின் அந்திப்பொழுதில் நகர் கலையும் மணித்துளிகளை நரைவிழுந்த இந்தத் திரைகள் ஆக்ரோஷமாகக் காண்பிக்கும். இந்தக் கமராக்களின் கண்களையும் அவற்றின் களைப்பையும்கூட நான் அறிவேன். இந்தப் பெருந்திரையின் முன்னால் இரவெனும் இனிய புலர்வுக்காகத் தினமும் காத்திருப்பேன்.

தவிர்க்கப்பட்டத் தெருக்களில் தரித்து நிற்கும் வாகனங்களை அகற்றும்படி களத்தில் பணிசெய்யும் அதிகாரிகளுக்குத் தகவல் சொல்வேன். காட்சிகளில் ஏதாவது புதிராய் நிகழ்ந்தால், அவற்றை எழுதிவைப்பேன். அவற்றின் தன்மை குறித்து மேலதிகாரிகளிடம் தகவல் சொல்வேன். இரவுச் சோதனைகளை மேற்கொள்ளும் களப்பணியாளர்களின் தகவல்களை எழுதிவைப்பேன்.

களத்திலுள்ள பணியாளர்கள் தொடர்ச்சியாக ரேடியோ மூலம் எனக்கு அனுப்புகின்ற தகவல்களைக் குறிப்பதும், தேவையேற்படும்போது பதிலளிப்பதும், அவர்களைக் குறிப்பிட்ட இடங்களுக்கு நகர்த்தும் அறிவுறுத்தல்களை அனுப்புவதுமாக - ஒரு கட்டுப்பாட்டு அறையிலிருந்து கொண்டு அலைவரிசைகளில் சஞ்சரிக்கும் அரூப அடையாளம் நான்.

கட்டடக் காடுகளுக்கு இடையில் பூத்திருக்கும் இந்தப் பெருநகரின் ஒவ்வொரு இரவும் புதிய இரவே. அவை முன்னைய இரவோடு ஒத்திருப்பதில்லை. இந்த இருளின் பெரு நடனம் மந்தகாசமானது. அடர் இருளில் ஒளித்திவலைகளாய் இடர்படும் மனிதர்களின் அழகும் வித்தியாசமானது. திரையில் காணும் அவர்களது அவசரமற்ற அசைவுகளையும் நிதானத்தையும் வியப்பேன். இருளுக்கு அவர்கள் அழிக்கும் மதிப்பையும் இருளால் அவர்கள் அடையும் அச்சத்தையும் கண்டு ரசிப்பேன்.

திறைசேரிப்பூங்காவில் ஓங்கி நிற்கும் ஒலிவ் மரங்களின் அசைவும், வீதி விளக்குகளின் அசையாமையும், நேரம் தவறாத ரயில் - ட்ராம் வண்டிகள் என நகரில் இடர்படும் வாகனங்கள் என்று சகல காட்சிகளும் என்னைச் சலிப்பின்றித் தாலாட்டுபவை.

திரை ஒளியில் பூக்கின்ற என் விழிகள் இரண்டும் ஒவ்வொரு இரவையும் பத்திரமாய் ஏந்தும். பகல் பொழுதில் தூங்கும்.

மனிதர்கள் எனக்கு எப்போதும் திரையில் மாத்திரம் தோன்றும் உறவுடையவர்கள். என் தனிமையான வாழ்வுக்குத் தூரமானவர்கள். வீட்டிலிருந்து காரில் கிளம்பும்போதும் மனிதர்கள் கண்ணாடிக்கு வெளியில் தெரிபவர்கள். அவர்களுக்கான எனது பெறுமதி அவர்களது உருவங்கள் மாத்திரமே.

இரவுப் பணியை ஆரம்பிக்கும்போது மாத்திரம், பகல்பணியை முடித்து வெளியேறும் ஹரால்ட்டைச் சந்திப்பேன். அவனைப் பார்க்கும்போது எனக்கு விநோதமாக இருக்கும். நான் திரைகளில் பார்க்கும் மனிதர்களுக்கு சற்று விநோதமானவனாக, பெரிய மூக்கும் வீங்கிய காதுகளும் உடையவன் அவன். அவனது கண்கள் மிகவும் அகன்றவை. அவன் அருகில் நிற்கும்போது சிலவேளைகளில் அச்சமாகவுமிருக்கும். இவன் ஏன் கமராக்களில் தெரிபவர்களைப்போல இயல்பானவனாக இல்லை என்றெண்ணுவதுண்டு.

வாரத்தில் ஆறு நாட்கள் இரவுப்பணி செய்யும் ஒருவனுக்கும் இந்த மானிட ஆராய்ச்சி தேவையற்றது என்று என்னை நானே சமாதானம் செய்துகொள்வேன்.

ஆனால், எனது இருளில் இதழ் விரிக்கும் ஏழு கமராக்களும் எனக்கு ஏழு வகையான உலகைப் படைக்க வல்லவை. இந்த அறை எனக்கு ஒரு கருந்தடாகம் போன்றது. என் முன்னால் மலர்ந்திருப்பவை ஏழு கரு மலர்கள்.

ஒரு கமரா மாத்திரம் கரிய திரை. அது இயங்குவதில்லையா, அல்லது அதன் கண்களின் முன்னால் ஏதாவது நிரந்தர மறைப்பா? கடந்த பதினைந்து வருடங்களில் எத்தனையோ தடவைகள் எனது மேலாளரிடம் கேட்டுவிட்டேன். கவலைப்படவேண்டியதில்லை என்பதுதான் பதிலாகக் கிடைத்தது. அந்த எட்டம் திரை என் இரவுக்கு அப்பாலுள்ள ஏதோ மர்மமானது என்று விட்டுவிட்டேன்.

2017 ஆம் ஆண்டு ஜூன் ஏழாம் திகதி.

எனது பதினைந்து வருட நிறைவில் - தொடர் இரவுப் பணியைப் பாராட்டி – கட்டாயப் பணி ஓய்வு அறிவிக்கப்பட்டது. அது எனது உடல்நலத்தைக் கருத்திற்கொண்ட மேலிடத்தின் முடிவு. பணி செய்யும்போது வழங்கப்பட்ட அதேயளவு பணம் ஓய்வூதியமாக அறிவிக்கப்பட்டது. எனது பணியின் நேர்த்தியும் நேர்மையும் மெச்சப்பட்டது.

ஆனால் என் உலகினால் அதனை ஓய்வாக ஏற்கமுடியவில்லை.

நான் ஒரு புதிய இருளுக்குப் புலம்பெயர்ந்தேன். அங்கேயும் விழித்திருந்தேன். புத்தகங்கள் படித்து எனக்குள் புதிய திரைகளைத் திறந்தேன். என் முன்னால் கமராக்களற்ற இரவு எனக்கு அச்சத்தைத் தந்தது. நிகரில் நான் கண்ட இரவின் கருமை எரிச்சலாயிருந்தது.

என் வீட்டின் ஜன்னலின் வழி தெரிந்த புதிய இருளை நாள்தோறும் காணப் பயின்றேன். இரவெல்லாம் அதில் புதிய வாசம் கிளர்ந்தது. என் படுக்கை அறையைத் தழுவிச் சரிந்திருக்கும் தைல மரக்கிளைகளின் அசைவுகளை கட்டிலில் உட்கார்ந்து பார்த்தேன். அவை திறைசேரிப்பூங்காவிலுள்ள கமராக்களில் தெரிந்த சிறிய கிளைகளைவிட மிகப்பெரியவை. விசித்திரமான ஒலிகளை எழுப்பக்கூடியவை.

போகப்போக, பின் அந்திப்பொழுதில் தூக்கம்விட்டு எழுந்தபோது, நான் பல நாட்களாகக் காணாத ஜொலிமென்ற் ரயிலின் நினைவுகளால் தொந்தரவானேன். ஸ்பிறிங்க வீதியில் நேரம் தவறாது ஊர்ந்து வரும் ட்ராம் வண்டியின் முகத்தைக் காணாது துயருறத் தொடங்கினேன். சிறிய கை - கால்களை வீசியெறிந்து நகரிலோடும் மனிதர்களைக் காணாது எனது நினைவுகள் கொந்தளிக்கத் தொடங்கின..

அனைத்தும் என் முன்னால் திரண்ட காட்சிகளாய் கூடி நில்லாதது பெரும் களைப்பை ஏற்படுத்தியது. இரவு எனக்குள் கோபங்களால் கூடுகட்டத்தொடங்கியது.

இரவின் வாசத்தை நுகர்வதற்காக, நடுநிசி தாண்டிய பிறகு வீட்டிலிருந்து இறங்கி வெளி வீதியில் கருமை அடர்ந்த பாதையில் நடைபோனேன். காலடியில் மிதிபட்ட சருகுகளின் சத்தம் முதலில் அச்சமூட்டின. மரங்களின் அசைவும் அதில் வளைந்து வீழ்ந்த காற்றும் அரியண்டமாயிருந்தது. இரவுக்குருவியொன்று தீடீரென்று வெட்டி வெட்டிக் கத்திக்கொண்டு தலைக்கு மேல் பறந்துபோனது. உடல் நடுங்கிப்போனேன். தூரத்தில அடர்ந்த வெளிச்சமும் மின்கம்ப ஒளிவிளக்குகளும் தெரிந்தன. ஜீரணிக்க மறுத்த ஒளிப்பந்துகள் பெருந்திரளாய் நெஞ்சை அழுத்தின. மீண்டும் வீட்டை நோக்கி நடந்தேன். வழி காட்டும் ஏழு திசைகளுமற்ற ஒரு வெட்டவெளியில் நான் நின்றுகொண்டிருப்பதாக உணர்ந்தேன்.

அன்றிரவு கண்ட அடர் வெளிச்சம் வெளியே செல்வதற்கு பயங்கர அச்சத்தைத் தந்தது. அந்த நினைவிலிருந்து மீண்ட ஒருவாரத்தின் பிறகு, பின்னிரவுப்பொழுதில் மீண்டும் நடைபோனபோது அவளைக் கண்டேன்.

எனது வீட்டுக்கு அடுத்த தெருவிலிருந்து பிரியும் சிறு ஒழுங்கையிலுள்ள இரண்டு மாடிக் கட்டடத்தின் வெளி விறாந்தையில் தற்செயலாக அவள் எதிர்ப்பட்டாள். அவள் மெல்லிய வெளிச்சத்தில் ஒல்லியான உடலை அசைத்து அசைத்து தன் நினைவை நெட்டுருக்கும் இசையோடு நடனமாடிக்கொண்டிருந்தாள். அவளை எனக்குக் காண்பித்த சிறு வெளிச்சம் அந்த வீட்டில் எங்கிருந்து ஒளிர்ந்தது என்று தெரியவில்லை. ஆனால், அது அவளுக்கென அளவாக உருவான ஒளியின் ஒத்தடம்.

நான் பணியிலிருந்து ஓய்வடைவதற்கு சில மாதங்களுக்கு முன்னர், ஐந்தாவது கமராவில் ஒரு நாளிரவு திறைசேரி விருந்தினர் மேடையில் கண்ட அழகிய பெண்ணின் முகத்தை ஒத்திருந்தது அவள் சாயல். அன்று அவள் அந்த விருந்தினர் மேடையில் தனியாக இருந்தாள். மங்கிய ஒளியில் அங்குமிங்கும் மெதுவாக நடந்தாள். நீண்ட யோசனையில் ஆழ்ந்தவளாகத் தெரிந்தாள். எனக்கு நல்ல ஞாபகமிருக்கிறது. அன்றிரவு நான் வேறு எந்தத் திரையையும் பார்க்காமல், அவள் மீது லயித்திருந்தேன். ஒரேயொரு திரையில் மாத்திரம் ஒளிர்ந்துகொண்டிருந்த அவளது உருவம், அதுவரை நானறியாத புது ரேகைபோல் ஒருகணம் எனக்குள் பதிந்தது.

திடீரென அவள் மறைந்துபோனாள். என் கண்கள் அவசர அவசரமாக மிகுதி அனைத்துத் திரைகளைப் பாய்ந்து பாய்ந்து தேடின. எங்கேயும் காணவில்லை. எட்டாவது கருந்திரைக்குள் வீழ்ந்துவிட்டாளா? எப்படிப் பார்ப்பது? இதயம் வேகமாக அடித்தது. அவள் மறைந்துவிட்டாள்.

அங்கு மறைந்தவள் இங்கெப்படித் தோன்றினாள்.

வீட்டிற்கு மிக அருகில் சென்றேன். அவள் தன்னை மறந்து தொடர்ந்து நடனமாடியபடியே இருந்தாள். ஒளி விரல் தீண்டிய இருளின் இதழ்கள்போல நாணிச் சரிந்தாள். பின் எழுந்தாள். அவள் அசைவில் இசை அசைந்தது. மெல்லிய விரல்கள் சூடிய கைகளைத் தலைக்கு மேல் அசைத்து அசைத்து, அபிநயத்தோடு ஆடினாள். மெல்ல மெல்ல அவ்விசை எனக்குள்ளும் கேட்கத் தொடங்கியது. கரகரப்பில்லாமல் தொடர்ச்சியாக இசைக்கும் மெல்லிய ஒலி. இரவின் கருமையை ஒளியெனும் சிறு வாளால் ஓசையின்றிச் சீவுகின்ற அசாத்தியமான ஒலி. ரேடியோக்களின் இரைச்சலினால் துருப்பிடித்திருந்த எனது செவித்திரைகளை ஊடுருவிய அவ்வொலி, பாறைகளில் வழுக்கி விழுகின்ற சிறு நதியாய் எனக்குள் நிறைந்து குளிர்ந்தது.

திடீரென அங்கு ஒரு இருள் வீழ்ந்தது.

எதையும் காணமுடியவில்லை. மேலே அழகிய கருஞ்சுடராய் அசைந்துகொண்டிருந்தவளைக் காணவில்லை. அவளின் பின்னால் நாணத்தோடு ஒளிர்ந்துகொண்டிருந்த மெல்லிய வெளிச்சம் அணைந்துவிட்டது. இசையும் அஸ்தமித்துவிட்டது. என்னைச் சூழ இருட்டிருந்தது. என்னைப் பின்தொடர்ந்து வந்த இருட்டு எங்கேயும் வியாபித்திருந்தது.

அவள் எங்கே? அவளை இரண்டாவது தடவையும் தவறவிட்டுவிட்டேனா? மறுபடியும் எட்டாம் திரைக்குள் அவள் வீழ்ந்துவிட்டாளா?

எனக்காக ஒரு கணம் - ஒரேயொரு கணம் - இவ்வுலகு ஒரு துளி வெளிச்சம் தாராதா?

அண்ணாந்து பார்த்தபோது, அருகிலிருந்த கம்பத்தில் ஒரு கமரா என்னையே உற்றுநோக்கியபடியிருந்தது.

"கலைமுகம்” இதழின் 2025 - ஜனவரி - மார்ச் பதிப்பில் இச் சிறுகதை வெளியானது.

https://www.theivigan.co/post/10017?fbclid=IwZXh0bgNhZW0CMTEAAR57gaY84h7_qVGGUphN678Y6GsJ__YhKIGRLn4xgNEJTGXD-yZ4PyPX31Ck4w_aem_mctltdFu3dl1rkZqRBtwng

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

இது கேமராக்களின் உலகம் . ....... இங்கு யாருக்கும் எவருக்கும் உருமறைப்பு என்பது கிடையாது . ........ எம்மை அறியாமலே நாம் வெளியுலகில் நிர்வாணமாய் நிக்கிறோம் . ...........!

நல்ல கதை ......நன்றி கிருபன் .......! 😁

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.