Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

1363065.jpg

அங்குமிங்கும் ஆர்ப்பரித்துப் பறக்கும் பறவைகள், வேலையும் இல்லை; நிற்க நேரமுமில்லை என்பதுபோல் பரபரப்பாகத் திரியும் நாய்கள், அசைபோட்டுக் கொண்டே அமர்ந்திருக்கும் கால்நடைகள், பொழுதுக்கும் தூங்கும் பூனைகள் இவையெல்லாம் இரை தேடுதலைத் தாண்டி தம் மனதில் என்ன யோசிக்கும் என்று எப்போதாவது நாம் நினைத்துப் பார்த்து சிரித்துச் சென்றிருப்போம். சில நேரங்களில் விளையாட்டாக அதற்கு ‘வாய்ஸ் ஓவர்’ கொடுத்து கிண்டலும்கூட செய்து மகிழ்ந்திருப்போம். இப்போதைய ஏஐ உலகில், பூனை, நாய்கள் பேசுவது போல் ரீல்ஸ் கூட நாம் டூம்ஸ்க்ரால் செய்யும்போது பார்த்து அடடே நல்லாயிருக்கே என்று லைக்ஸ் போட்டுக் கடந்திருப்போம்.

ஆனால், உண்மையிலேயே பறவைகள் என்ன நினைக்கின்றன என்பதை, அவற்றின் உணர்வு நிலை எத்தகையது என்பதை முழுவீச்சில் ஆராய்ச்சியாக செய்ய வேண்டும் என்று பரிந்துரைக்கின்றனர் விஞ்ஞானிகள். அதுமட்டுமல்லாது, 1980-களில் தொடங்கி 2003-ம் ஆண்டில் தனது இறப்பு வரை டொனால்டு க்ரிஃபின் என்ற விஞ்ஞானி, விலங்குகளின் உணர்வு நிலை (Animal Consciousness ) பற்றி ஆய்வு செய்துள்ளார்.

இந்தத் துறையில் டொனால்டு க்ரிஃபினை ஒரு முன்னோடி என்றே துறையினர் விதந்தோதுகின்றனர். அவர் தனது இறுதி மூச்சு வரை வலியுறுத்தியது, பறவைகள், விலங்குகளின் உணர்வு நிலை பற்றி அறிவியல்பூர்வ ஆராய்ச்சிகள் பெரியளவில் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதே. அதை சுட்டிக்காட்டி இந்தக் கட்டுரையில், சில வாதங்களை, சுவாரஸ்யமான ஆய்வு விவரங்களைப் பகிர்ந்துள்ளனர் இரண்டு பேராசிரியர்கள். ஹீதர் பிரவுனிங், பேராசிரியர், சதாம்ப்டன் பல்கலைக்கழகம் மற்றும் வால்டர் வெய்ட், பேராசிரியர் ரீடிங் பல்கலைக்கழகம் ஆகிய இருவரும் ‘தி கான்வர்சேஷன்’ தளத்தில் எழுதியுள்ள கட்டுரையின் சாரம்சம் வருமாறு:இந்த உலகை ஒரு தத்துவ ஞானி பார்க்கும் பார்வை இருக்கும், அது சமூக நலன் சார்ந்ததாக இருக்கும். அதுவே இந்த உலகை பறவைகளும், விலங்குகளும் எப்படிக் காண்கின்றன, அணுகுகின்றன என்ற பார்வையும் இருக்கும் அல்லவா? அது சூழழியல் சார்ந்ததாக இருக்கும். அந்தப் பார்வையை அறிந்து கொள்வது சூழலைப் பேணுவதில் அவசியமானது என்கின்றனர் இத்தகைய ஆராய்ச்சிகளில் ஈடுபடுவோர்.

ஆற்றலில் தனித்து நிற்கும் காக்கை இனம்: காகம், மனிதர்கள் மத்தியில் வாழும் மிகப் பொதுவான ஒரு பறவை இனம். காக்கை இனத்துக்குள் அடங்கும் ரேவன்ஸ், க்ரோஸ், ஜேஸ், மேக்பைஸ் போன்ற பறவையினங்கள் மத்தியில் மேற்கூறிய ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளது. பொதுவாக புத்திசாலித்தனம் குறைவாக இருப்பவர்கள் பறவை மூளைக்காரன் என்று வசைபாட அடைமொழியாக்குவதுண்டு. நம்மூரில் வாத்துமூளைக் காரன், மடையன் என்றெல்லாம் வசவு மொழிகள் உண்டு. ஆனால் காக்கை வகையறாக்களை ஆய்வு செய்த விஞ்ஞானிகள், அவற்றை ‘ஃபெதர்ட் ஏப்ஸ்’ (feathered apes), அதாவது நமக்கான முன்னோடி என்று அழைக்கின்றனர்.

காக்கை இனத்தைச் சேர்ந்த பறவைகளுக்கு கூர்மையான பார்வைத் திறன் உண்டு. வேகமாகப் பறக்கும்போது கூட அதன் இரையை கூர்மையாக கவனித்துவிடும் திறன் கொண்டவை. அவற்றின் செவித்திறன் அபாரமானது. ஓசைகளில் இருந்தே எச்சரிக்கையாக இருந்து கொள்ளக் கூடியவை. அதேபோல் அவற்றிற்கு நினைவாற்றலும் அதிகம். இந்த வகைப் பறவைகள் தாங்கள் சேகரிக்கும் உணவை பதுக்கிவைக்கும் திறன் கொண்டவை. இதை ஆங்கிலத்தில் கேச்சிங் (caching) என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

எந்த உணவை எங்கு பதுக்கி வைத்தோம் என்பது மட்டுமல்லாது, அதை எப்போது பதுக்கிவைத்தோம் என்பது வரை அவை நினைவில் கொள்கின்றன. அதன்மூலம் புழு, பூச்சிகள் போன்ற சீக்கிரம் அழுகிப்போகும் உணவை எங்கு, எப்போது வைத்தோம், நீண்டகாலம் இருக்கக் கூடிய தானியங்களை எங்கே வைத்தோம் என்று நினைவில் கொண்டு பயன்படுத்திக் கொள்கின்றன. அதுமட்டுமல்லாது ஒருவேளை அந்த உணவுப் பொருளை வேறொரு பறவையிடமிருந்து திருடியிருந்தால் ஒளித்து வைத்த இடத்தையும் அவ்வப்போது மாற்றிக் கொள்கின்றன.

அதேபோல் பறவைகளுக்கு ஆழமான நுகர்ச்சியுணர்வும் இருக்கிறது. அதைப் பயன்படுத்தியும் மறைத்துவைத்த உணவை கண்டு கொள்கின்றன.இது மட்டுமல்லாது இந்த வகைப் பறவைகள் மனிதர்களைப் போல் உணர்ச்சிகளையும் கொண்டுள்ளன. உதாரணத்துக்கு எதிர்மறை எண்ணங்கள் இவற்றிற்கு எழுகின்றன. சக பறவை வாட்டமாக இருந்தால் அதையே தானும் பிரதிபலிக்கக் கூடியவையாக இருக்கின்றன. மனிதர்களைப் போலவே புதிய பொருட்களிடம் எச்சரிக்கையாக இருக்கின்றன. அறிமுகமில்லாத மனிதர்கள் ஏதேனும் உட்கொள்ள கொடுத்தால் அதைப் பெறுவதில் தயக்கம் காட்டுவதும் இந்த நியோஃபோபியாவால் தான் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

பொதுவாக பாலூட்டி விலங்குகளிடம் இதுபோன்ற உணர்வுகள் இருப்பதை பல ஆய்வுகள் உறுதிப்படுத்தியுள்ள நிலையில் காக்கை வகை பறவைகளில் காணப்படும் இந்த வகையிலான உணர்ச்சிகள் பறவைகளின் உணர்வுகள், மனம் பற்றி மேலும் ஆராய்ச்சிகளைத் துண்டுவதாக இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

ஜே (jay bird) என்ற காக்கை வகையறா பறவைகளில் ஆண் பறவை தன் இணையைத் தேர்வு செய்ய பெண் பறவையின் உணவுப் பழக்கவழக்கத்தை கூர்ந்து கண்காணித்து, அதற்குப் பிடித்தமான உணவை சேகரித்துச் சென்று கொடுத்து அத்துடன் இணையும் வழக்கத்தைக் கொண்டுள்ளது. இதுபோன்ற சமூக திறன்கள் பாலூட்டி விலங்குகளிடமே பெரும்பாலும் தென்படும் நிலையில் ஜே பறவைகள் ஆச்சர்யப்பட வைக்கின்றன.

இதுபோன்ற ஆராய்ச்சிகள் கோர்விட் (Corvidae) இன பறவைகளின் நலனைப் பேண உதவும் என்கின்றனர் விஞ்ஞானிகள். அவற்றுக்கு எது உகந்தது, எது ஒப்பாதது என்பதை அறிந்து கொள்வது அவற்றிற்கு மட்டுமல்ல, சுற்றுச்சூழலுக்கும் நலன் சேர்க்கும் என்கின்றனர் கட்டுரையாளர்கள்.

இயற்கையின் சமநிலைக்காகவே...! - இந்தக் கட்டுரை குறித்த பார்வையை ‘இறகுகள் அம்ரிதா இயற்கை’ அறக்கட்டளை நிறுவனரான ரவீந்திரன் நடராஜன் சில தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். பறவைகள் ஆய்வாளரான அவர் கூறுகையில், “பறவைகளின் அறிவுத்திறன் என்பது அதன் உயிர்வாழ்தலை உறுதி செய்து கொள்வதற்கானதும், அதன் அடுத்த தலைமுறைக்காக தான் வாழும் சூழலை சரியாக தகவமைத்துக் கொள்வதற்குமாகவே இருக்கிறது.

காகங்களின் வாழ்க்கை அதை நமக்கு தெளிவாக உணர்த்தும். காகங்கள் நம் மத்தியில் சர்வ சாதாரணமாக, மிக அதிகமான அளவில் இருக்கக் கூடியவை. அவற்றின் உயிர்வாழ்தலும் பாதிக்கப்படக் கூடாது, அதே வேளையில் அவற்றின் இனப்பெருக்கமும் அதிகமாகிவிடக் கூடாது. ஏனெனில் காகங்கள் மிக வேகமாக இனப்பெருக்கும் செய்து கொண்டே இருக்கக் கூடிய பறவைகள்.

அப்படியிருக்க, இயற்கையில் ஒரு சமநிலையை ஏற்படுத்த இயற்கையே அதற்கு ஒரு வழியும் செய்து வைத்திருக்கிறது. அதுதான் குயில்கள். குயிலினங்கள் கூடு கட்டாது, காக்கைக் கூட்டில் முட்டையிட்டு, குஞ்சு பொரிக்கச் செய்யும் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், அதன் பின்னணியில் இந்த இயற்கை சமநிலையைப் பேணும் தன்மை தான் மறைந்திருக்கிறது என்பதே பலரும் அறியாதது.

17482641872027.jpeg

காகங்கள் கூடு கட்ட குச்சிகள் சேர்க்கும் போதே, குயில்கள் இணை சேர திட்டமிட்டு சேர்ந்துவிடும். காகம் கூடு கட்டி முட்டையிட்டதும், ஆண் குயில் அந்தக் கூட்டிலிருந்து முட்டையை தள்ளிவிட்டு உடைத்துவிடும். பொதுவாகவே கூட்டில் முட்டையிட்டுவிட்டால் ஆண், பெண் காகங்கள் மாற்றி மாற்றி அதற்கு காவலாக இருக்கும். ஆனால் அதையும் தாண்டி அந்தக் கூட்டில் பெண் குயில் முட்டையிட ஆண் குயில் மிகப் பெரிய வேலைகளைச் செய்யும்.

விளையாட்டாகச் சொல்வதென்றால் கில்லாடி வேலைகளைச் செய்யும். ஆண் குயில் காகங்களிடம் வேண்டுமென்றே சண்டையிழுத்து அவற்றை அங்குமிங்கும் அலைக்கழித்து அவற்றின் கவனத்தை திசை திருப்பிவிடும். அந்த நேரத்தில் பெண் குயில் வந்து முட்டையிட்டுச் சென்றுவிடும். இப்படி அந்த முட்டையை வளர்க்கும் காகம் ஒரு கட்டத்தில் அது தன்னுடையது அல்ல என்பதைத் தெரிந்தவுடன் கூட்டிலிருந்து விரட்டிவிடும்.

17482637682027.jpg

பறவைகள் ஆய்வாளர்/ ஆர்வலர் ரவீந்திரன் நடராஜன்

இப்படித்தான் பல்கிப் பெருகக்கூடிய ஒரு பறவையினத்தை, கூடுகட்டும் திறனில்லாத இன்னொரு பறவையினம் சர்வைவலுக்காக கட்டுப்படுத்துகிறது. இதைத்தான் இயற்கை சமநிலைக்கு இயற்கையே அளித்த திறமைகள் என்று கூறுகின்றேன்.

காகங்கள் அனைத்துண்ணிகளாக இருந்து நகரத் தூய்மையைப் பண்ணுவதாக இருந்தாலும் கூட அவற்றின் எண்ணிக்கை அதிகமானால் மனிதர்களுக்கு தொல்லையாகிவிடும். சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் காகங்களை தீங்கினமாகவே காண்கின்றனர். அங்கே காகங்களை எப்படிக் கட்டுப்படுத்த வேண்டும் என்பது குறித்து ஆய்வுகளை செய்துள்ளனர். அதன்படி சில வழிமுறைகளையும் பின்பற்றி காகங்களின் எண்ணிக்கையை கட்டுக்குள்ளும் வைத்திருக்கின்றனர்.

காகங்கள், குயில்களின் நெஸ்டிங் முறையை கூர்ந்து கவனித்து ஆய்வு செய்ததுபோல், வாத்துகளையும் நான் உற்று நோக்கி ஆய்வு செய்துள்ளேன். வாத்துகளை அறிவற்ற பறவைகள் என்று நாம் சொல்வதுண்டு. மடை எனப்படும் குறுகிய நீரோட்டங்களில் வாழும் சின்ன அளவிலான வாத்துகளை மடை வாத்து என்றழைப்போம். அதுவே மருவி மடவாத்து என்ற வார்த்தையாகிவிட்டது. அவை எப்போதும் கூட்டமாக வாழக்கூடியவை.

சம்பை புல்களுக்கு இடையே வாழும் ஸ்பாட் பில்ட் டக்ஸ் என்ற வாத்துகளை ஒருமுறை நெருங்கி ஆய்வு செய்ய முடிந்தது. அப்போது அருகிலிருந்து வயலில் பறவைகள் வந்து பயிர்களை நாசம் செய்யக்கூடாது என்று வெடி வெடித்துக் கொண்டிருந்தனர். அதற்கு பயந்துபோன சம்பை வாத்து ஒன்று தனது குஞ்சுகளுடன் வெளியே வந்தது. வெளியே வந்ததும் அந்த வாத்து குஞ்சுகளை சுற்றிச்சுற்றி வந்தது. அது எத்தனை வாத்துகள் இருக்கின்றன என்று எண்ணுவதுபோலவே இருந்தது.

பின்னர் மீண்டும் அந்த புல் பகுதிக்குச் சென்று சத்தமிட்டுக் கொண்டே இருந்தது. நீண்ட நேரத்துக்குப் பின் வெடிச்சத்ததால் பயந்து பதுங்கியிருந்த இன்னொரு வாத்துக் குஞ்சு வெளியே வந்தது. உடனே மற்ற வாத்துகளுடன் அதையும் சேர்த்துக் கொண்டு வேறிடத்துக்குச் சென்றது அந்த வாத்து. இப்படி, வெளிநாடுகளிலும் கூட வாத்துகளின் எண்ணும் திறனை ஆய்வு செய்து கட்டுரைகள் வெளியிட்டுள்ளனர்.

17482641012027.jpg

கடல் ஆலா பறவைகள் பல மைல்கள் கடந்து ஆர்க்டிக், அண்டார்டிக் பகுதிகளில் இருந்து எப்படி இடம்பெயர்ந்து வருகிறது என்ற சூட்சமம் இன்றுவரை முழுமையாக ஆராய்ச்சிகளால் கண்டு கொள்ள முடியாததாகவே இருக்கிறது. குறிப்பிட்ட கழுகு வகைகள் அதன் வாழ்நாள் முழுவதும் ஒரே ஒரு இணையோடு மட்டுமே வாழும், இன்னொரு பறவையினம் தனது இணை இறந்துவிட்டால், பட்டினியிருந்து அதுவும் உயிர் துறந்துவிடும். இப்படி இயற்கை நிறைய சுவாரஸ்யங்களை உள்ளடக்கியுள்ளது.

இவையெல்லாம் இயற்கையின் சமநிலையைப் பேணவே நடைபெறுகிறது. பறவைகள் தம் உயிர் வாழ்தலை உறுதி செய்து கொள்ள சமநிலையைப் பேண ஒவ்வொரு விதமான உணர்வு நிலைகளுடன் இயங்குகின்றன. பறவைகளின் உணர்வு நிலைகளை, உள்ளுணர்வுகளை ஆய்வு செய்தல் சுவாரஸ்யமானதே.” என்றார்.

ஒவ்வொரு பறவைக்கும் ஒவ்வொரு ஃபீலிங்... பறவைகளின் உள்ளுணர்வும், சில சுவாரஸ்யங்களும்! | What’s going on inside the mind of an animal or a bird explained - hindutamil.in

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.