Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தொண்டையில் மாத்திரை சிக்கியதால் உயிரிழந்த 4 வயது சிறுவன் - கவனமாக இருப்பது எப்படி?

மாத்திரைகள், உடல்நலம், குழந்தைகள், மருத்துவம், தமிழ்நாடு

பட மூலாதாரம், GETTY IMAGES

படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்

கட்டுரை தகவல்

  • சிராஜ்

  • பிபிசி தமிழ்

  • 21 ஆகஸ்ட் 2025, 02:41 GMT

    புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர்

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில், காய்ச்சலுக்கு பரிந்துரைக்கப்பட்ட மாத்திரையை விழுங்கிய நான்கு வயது சிறுவன் மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருத்தணி அருகே உள்ள பி.ஆர். பள்ளி கிராமத்தைச் சேர்ந்த தம்பதியின் நான்கு வயது மகனுக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. கடந்த திங்கட்கிழமை (ஆகஸ்ட் 18) காலை, காய்ச்சல் காரணமாக திருத்தணியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

மருத்துவர் சிறுவனுக்கு சில மாத்திரைகளை பரிந்துரைத்துள்ளார். அன்று இரவு அந்த மாத்திரைகளை மகனுக்கு வழங்கியதாக பெற்றோர் கூறுகின்றனர். அதை விழுங்கும்போது, மாத்திரை தொண்டையில் சிக்கி மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவரை திருத்தணி அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றுள்ளனர்.

ஆனால், மருத்துவமனையில் சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இதுதொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

சிறு குழந்தைகளுக்கு மாத்திரைகள் கொடுக்கும்போது என்னென்ன விஷயங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும்? பெரியவர்களுக்கும் இதுபோல நடக்க வாய்ப்புள்ளதா?

குழந்தைகளுக்கு மாத்திரைகளை கொடுக்கலாமா?

மாத்திரைகள், உடல்நலம், குழந்தைகள், மருத்துவம், தமிழ்நாடு

பட மூலாதாரம், GETTY IMAGES

படக்குறிப்பு, 'குழந்தைகளுக்கு பரிந்துரைக்கப்படும் மாத்திரைகள் பெரும்பாலும் எளிதில் நீரில் கரையக்கூடியவையே'

"5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு உணவுப் பொருள்கள் மற்றும் அவர்கள் கைக்கு எளிதில் கிடைக்கக்கூடிய சிறிய பொருள்கள் மூச்சுத் திணறலை ஏற்படுத்தலாம். அவை தொண்டையில் சிக்கி காற்றுப்பாதையை அடைக்கும்போது, நுரையீரல் மற்றும் மூளைக்கு ஆக்ஸிஜன் செல்வதைத் தடுக்கலாம். மூளைக்கு 4 நிமிடங்களுக்கு மேல் ஆக்ஸிஜன் செல்லாமல் இருக்கும்போது, அது மூளை பாதிப்பு அல்லது மரணத்திற்கு கூட வழிவகுக்கும்." என 'அமெரிக்கன் அகாடமி ஆஃப் பீடியாட்ரிக்ஸ்' தெரிவிக்கிறது.

ஆனால், "மாத்திரைகளை முழுங்குவது சிறு குழந்தைகளுக்கு மட்டுமல்ல, (சில) பெரியவர்களுக்கும் கூட எளிதானது அல்ல. மாத்திரைகளை முழுங்குவது, மூன்றில் ஒருவருக்கு வாந்தி, குமட்டல் உணர்வு அல்லது மூச்சுத் திணறலை ஏற்படுத்துகிறது." என ஹார்வர்ட் மருத்துவப் பள்ளி தெரிவிக்கிறது.

இதுகுறித்துப் பேசிய ஈரோட்டைச் சேர்ந்த குழந்தைகள் நல மருத்துவர் அருண்குமார், "பொதுவாகவே 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு மாத்திரைகளை அப்படியே கொடுப்பதைத் தவிர்க்கலாம். தண்ணீரில் பொடித்துக் கொடுப்பது சிறந்தது. குழந்தைகளுக்கு பரிந்துரைக்கப்படும் மாத்திரைகள் பெரும்பாலும் எளிதில் நீரில் கரையக்கூடியவையே" என்கிறார்.

மாத்திரைகள், உடல்நலம், குழந்தைகள், மருத்துவம், தமிழ்நாடு

படக்குறிப்பு, சிறு குழந்தைகளுக்கு மாத்திரைகள் பரிந்துரைக்கப்படுவது வழக்கமானது தான் என்கிறார் மருத்துவர் அருண்குமார்.

பொதுவாக வாயில் சிறிதளவு தண்ணீரை வைத்துக்கொண்டு, பின்னர் மாத்திரையை வாயில்போட்டு விழுங்குவது சிறந்தது எனக் கூறும் அவர், "ஆனால், குழந்தைகளை அவ்வாறு செய்யவைப்பது சுலபமல்ல என்பதால், பொடித்துக்கொடுப்பது நல்லது." என்கிறார்.

சில மருந்துகள் மாத்திரை வடிவங்களில் மட்டுமே இருக்கும், சிரப் வடிவில் கூட கிடைக்காது என்பதால், சிறு குழந்தைகளுக்கு மாத்திரைகள் பரிந்துரைக்கப்படுவது வழக்கமானது தான் என்கிறார் மருத்துவர் அருண்குமார்.

"குழந்தைகளுக்கு அதைக் கொடுப்பது தொடர்பான அறிவுறுத்தல்களையும் மருத்துவர்கள் வழங்குவர். ஆனால் இறுதியாக, பெற்றோர் தான் குழந்தைகளுக்கு மாத்திரைகள் கொடுப்பதில் மிகக்கவனமாக இருக்கவேண்டும்." என்றும் அவர் கூறுகிறார்.

குழந்தைகளில் மூச்சுத் திணறல் தொடர்பான இறப்பு அபாயத்தைக் குறைக்க, மாத்திரைகளை நசுக்கி தண்ணீருடன் கொடுக்க வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனமும் (WHO) பரிந்துரைக்கிறது.

பெரியவர்களும் கவனமாக இருக்க வேண்டுமா?

மாத்திரைகள், உடல்நலம், குழந்தைகள், மருத்துவம், தமிழ்நாடு

பட மூலாதாரம், GETTY IMAGES

படக்குறிப்பு, மாத்திரைகளை அப்படியே விழுங்கவேண்டுமென எந்தக் கட்டாயமும் இல்லை என்கிறார் மருத்துவர் அருண்குமார்.

'மாத்திரைகளை விழுங்குவது என்பது பெரியவர்களுக்கு குறிப்பாக 65 வயதிற்கு மேற்பட்டோருக்கு மிகவும் கடினமானது. வயது மூப்பின் காரணமாக அவர்கள் அதிக மாத்திரைகள் எடுத்துக்கொள்வதால், மாத்திரைகளை விழுங்குவது மூலம் மூச்சுத்திணறல் ஏற்படக்கூடிய வாய்ப்பு அதிகம்' என்று ஹார்வர்ட் மருத்துவப் பள்ளியின் கட்டுரை தெரிவிக்கிறது.

குமட்டல், வாந்தி மற்றும் மூச்சுத்திணறல் போன்ற பிரச்னைகளால், அவர்கள் ஒருகட்டத்தில் மாத்திரைகளை உட்கொள்வதையே தவிர்ப்பதாகவும், இதனால் அவர்களது உடல்நிலை மேலும் மோசமாக மாறுகிறது என்றும் அந்தக் கட்டுரை குறிப்பிடுகிறது.

மாத்திரையின் வடிவம், அளவு, அமைப்பு அல்லது சுவை கூட அதை விழுங்குவதில் சிரமங்களைத் தூண்டக்கூடும் என்றும், உதாரணத்திற்கு 19.5 மில்லியனுக்கும் அதிகமான அமெரிக்கர்களால் எடுத்துக்கொள்ளப்படும் நீரிழிவு நோய்க்கான மிகவும் பொதுவான மருந்தான மெட்ஃபோர்மின் போன்றவை அளவில் பெரிதாக இருப்பதும் ஒரு முக்கியப் பிரச்னை என அந்தக் கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.

"முதியோர்களுக்கு மாத்திரை கொடுக்கும்போதும் கவனமாக இருக்கவேண்டும். அவர்களுக்கும் நீரில் கரைத்துக் கொடுப்பது நல்லது. மாத்திரையை விழுங்கியே ஆக வேண்டும் என எந்தக் கட்டாயமும் இல்லை. கேப்சியூல் வடிவில் இருந்தாலும் பிரித்து, நீரில் கரைத்துக் கொடுக்கலாம்." என்கிறார் மருத்துவர் அருண்குமார்.

தொண்டையில் ஏதேனும் பொருள் சிக்கிக்கொண்டால் என்ன செய்ய வேண்டும்?

மாத்திரைகள், உடல்நலம், குழந்தைகள், மருத்துவம், தமிழ்நாடு

பட மூலாதாரம், GETTY IMAGES

படக்குறிப்பு, 1974இல் இந்த ஹெய்ம்லிச் மனேவர் முறை அறிமுகப்படுத்தப்பட்டது.

"குழந்தைகள், பெரியவர்கள் என தொண்டையில் ஏதேனும் பொருள் சிக்கி, மூச்சுத்திணறல் ஏற்பட்டால், ஹெய்ம்லிச் மனேவர் என்ற முதலுதவி முறையை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்" என்கிறார் மருத்துவர் அருண்குமார்.

பொதுவாக ஒருவருக்கு தொண்டையில் ஏதேனும் பொருள் சிக்கி மூச்சுத்திணறல் ஏற்பட்டால், உடனே முதுகில் தட்டுவது என்பது பலரும் செய்யக்கூடிய ஒன்று. ஆனால், அது பெரிதாக பலனளிக்கக்கூடிய ஒரு முறை அல்ல என்பது மட்டுமல்லாமல், தொண்டையில் சிக்கியுள்ள பொருள் மேலும் கீழே செல்லவும் வாய்ப்பு உள்ளது என்பதால் இந்த ஹெய்ம்லிச் மனேவர் (Heimlich maneuver) முறை பரிந்துரைக்கப்படுகிறது என ஒரு ஆய்வு கூறுகிறது.

குறிப்பாக, 1960களில் அமெரிக்காவில், உணவு, பொம்மைகள் மற்றும் பிற பொருட்களால் மூச்சுத்திணறல் ஏற்படுவது என்பது தற்செயலான மரணங்களுக்கு ஆறாவது முக்கிய காரணமாக இருந்தது. அதன் பிறகு, 1974இல் இந்த ஹெய்ம்லிச் மனேவர் முறை அறிமுகப்படுத்தப்பட்டது.

ஆனால், ஒருவயதுக்குட்பட்ட குழந்தைகள், மூச்சுத்திணறலால் சுயநினைவு இழந்தவர்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கு இது பரிந்துரைக்கப்படுவதில்லை.

மாத்திரைகள், உடல்நலம், குழந்தைகள், மருத்துவம், தமிழ்நாடு

பட மூலாதாரம், GETTY IMAGES

படக்குறிப்பு, மாத்திரையின் வடிவம், அளவு, அமைப்பு அல்லது சுவை கூட அதை விழுங்குவதில் சிரமங்களைத் தூண்டக்கூடும்.

மூச்சுத்திணறல் அல்லது தொண்டையில் ஏதேனும் பொருள் சிக்கிக்கொண்டதற்கான அறிகுறிகள் தெரிந்தால், அதாவது தொண்டையில் இரு கைகளையும் வைத்துக்கொண்டு, பேச, இரும அல்லது மூச்சுவிட முடியாத நிலையில் ஒருவர் இருந்தால், உடனடியாக இந்த ஹெய்ம்லிச் மனேவர் முதலுதவியை செய்ய வேண்டும்.

"பாதிக்கப்பட்ட நபருக்குப் பின்னால் நின்றுகொண்டு, உங்கள் இரு கைகளை அவர்களின் இடுப்பைச் சுற்றி இறுக்கமாக கட்டிக்கொள்ளுங்கள். வயிற்றில் விரைவாகவும், வலுவாகவும் மேல்நோக்கி 5 அல்லது 6 முறை அழுத்தம் கொடுக்க வேண்டும். இதை முயற்சி செய்தும் தொண்டையில் சிக்கியிருக்கும் பொருள் வெளியேறவில்லை என்றால், உடனடியாக மருத்துவரின் உதவியை நாட வேண்டும்" என்கிறார் மருத்துவர் அருண்குமார்.

ஒருவயதிற்குட்பட்ட குழந்தை என்றால், தங்களது தொடையின் மீது வயிறு இருப்பது போல குழந்தையை படுக்க வைத்து முதுகில் தட்ட வேண்டும் என்றும் அவர் கூறுகிறார்.

"பல பள்ளிக்கூடங்களில் இந்த முதலுதவி முறையைக் கற்றுக்கொடுக்கிறார்கள். அதை பொதுமக்களுக்கும் கற்றுக்கொடுக்க வேண்டும். அது ஒரு எளிய முறை தான்." என்கிறார் அருண்குமார்.

'மாத்திரைகளை கட்டாயப்படுத்திக் கொடுக்கவே கூடாது'

மாத்திரைகள், உடல்நலம், குழந்தைகள், மருத்துவம், தமிழ்நாடு

படக்குறிப்பு, மாத்திரைகளை தண்ணீரில் கரைத்து குழந்தையின் மூக்கைப் பொத்தியவாறு வாயில் ஊற்றுவது ஆபத்தானது என்கிறார் ரேவதி.

"பொடித்து கொடுக்கிறோமோ அல்லது உடைத்துக் கொடுக்கிறோமோ, ஆனால் ஒருபோதும் குழந்தைகளுக்கு வலுக்கட்டாயமாக மாத்திரைகளை கொடுக்கக் கூடாது. அதனால் குழந்தைகள் பீதியடைவார்கள், அது மூச்சுத்திணறலுக்கான வாய்ப்பை அதிகப்படுத்தும்" என்கிறார் மருத்துவர் ரேவதி. இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் குழந்தை நலப் பிரிவின் மூத்த ஆலோசகராக உள்ளார்.

குழந்தைகளை ஆசுவாசப்படுத்தி கொடுக்க வேண்டும், அதை ஒரு பழக்கமாக மாற்ற வேண்டும் என அறிவுறுத்தும் அவர், "சிலர் மாத்திரைகளை தண்ணீரில் கரைத்து குழந்தையின் மூக்கைப் பொத்தியவாறு வாயில் ஊற்றுகிறார்கள். அது மிகவும் தவறு மற்றும் ஆபத்தானது." என்கிறார்.

சிறு குழந்தைகளின் மூச்சுக்குழாய் அமைப்பு மிகவும் குறுகலாக இருப்பதால் மாத்திரைகள் தொண்டையில் சிக்கும் வாய்ப்பு அதிகம் என அவர் கூறுகிறார்.

"6 வயதுக்குட்பட்ட குழந்தை என்றால் நிச்சயமாக தண்ணீரில் கரைத்துக் கொடுங்கள். 6 முதல் 10 வயது என்றால், உடைத்தோ அல்லது ஒரு ஸ்பூன் தயிருடன் கொடுக்கலாம் அல்லது மெல்லக்கூடிய மாத்திரைகளை (Chewable tablet) பரிந்துரைப்பது சிறந்தது. 10 வயதிற்கு மேல் மாத்திரைகளை அப்படியே விழுங்கச் சொல்லலாம், ஆனாலும் கவனம் தேவை" என்கிறார் மருத்துவர் ரேவதி.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cx2x4z4e74vo

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஹெய்ம்லிச் மனேவர் என்ற முதலுதவி முறை

சுய முதலுதவி

  • கருத்துக்கள உறவுகள்

அவசியம் தெரிய வேண்டிய விடயம். உணவு துகள் மூச்சு குழாயில் சிக்கி திணறல் யாருக்கும் ஏற்படலாம். அவசியம் அனைவரும் அறியவேண்டிய முதலுதவி சிகிச்சை இவை. இணைப்பிற்கு நன்றி @ஏராளன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிலர் சாப்பிட்டுக்கொண்டே குனிந்து நிலத்தில் வீழ்ந்ததை எடுக்க முயல்வார்கள். அது இன்னும் ஆபத்தானது.அதை விட சாப்பிடும் போது தும்மல் வந்தால் வாயை திறந்து தும்ம வேண்டுமாம்.வாயை மூடிக்கொண்டு தும்மினால் வாய்குள் இருக்கும் சாப்பாடு சிரசுக்குள் அடித்து மரணம் கூட நிகழலாமாம்.

  • 3 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மூச்சுக்குழாயில் உணவு சிக்கிவிட்டால் உயிரைக் காக்க உதவும் எளிய முதலுதவி சிகிச்சை

மூச்சுக்குழாயில் சிக்கும் உணவுப் பொருள்: உயிரைக் காக்க உதவும் எளிய முதலுதவி

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,மூச்சுக் குழாயில் உணவு நுழைந்துவிட்டால் உடனே முதலுதவி செய்ய வேண்டியது அவசியம் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

கட்டுரை தகவல்

  • சேவியர் செல்வகுமார்

  • பிபிசி தமிழ்

  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

ஈரோட்டைச் சேர்ந்த 5 வயது சிறுவன், வாழைப் பழம் சாப்பிடும்போது, அது தொண்டையில் சிக்கி உயிரிழந்தான். சமீபத்தில் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் 4 வயது சிறுவன், மாத்திரை சாப்பிடும்போது தொண்டையில் சிக்கி உயிரிழந்தான்.

இத்தகைய சம்பவங்கள் பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளன.

குழந்தைகள் மட்டுமின்றி, பெரியவர்களுக்கும் இத்தகைய பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கூறும் மருத்துவர்கள், இதற்குரிய முதலுதவியை உடனே செய்யாவிட்டால் ஆபத்து என்று எச்சரிக்கின்றனர்.

மேலும், குழந்தைகளுக்கு சிறிது சிறிதாக உணவை ஊட்ட வேண்டுமென அறிவுறுத்தும் மருத்துவர்கள், யாராயினும் உணவை நன்கு மென்று கவனமாக உண்பதோடு, சாப்பிடும் நேரத்தில் பேசுவதைத் தவிர்க்க வேண்டுமென வலியுறுத்துகின்றனர்.

மருத்துவமனை செல்லும் வழியிலேயே உயிரிழந்த சிறுவன்

ஈரோடு அன்னை சத்யா நகரைச் சேர்ந்த மாணிக்–மகாலட்சுமி தம்பதிக்கு 5 வயதில் சாய் சரண் என்ற மகனும், 2 வயதில் ஒரு மகளும் இருந்தனர்.

கடந்த டிசம்பர் 2ஆம் தேதியன்று இரவு, தமது இரு குழந்தைகளுக்கும் மகாலட்சுமி வாழைப் பழத்தை ஊட்டியுள்ளார். அதைச் சாப்பிடும்போது சாய் சரணுக்கு வாழைப்பழம் தொண்டையில் சிக்கி, மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

உடனடியாக பெற்றோர் சிறுவனை ஈரோடு அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றுள்ளனர். ஆனால் சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள், வரும் வழியிலேயே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். கருங்கல்பாளையம் காவல் நிலையத்தில் இதுதொடர்பாக வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

பிபிசி தமிழிடம் இது குறித்து விளக்கிய ஈரோடு அரசு மருத்துவமனை இருப்பிட மருத்துவ அலுவலர் சசிரேகா, ''அந்தச் சிறுவனை வீட்டிலிருந்து 20 நிமிடங்களில் இங்கு கொண்டு வந்துவிட்டனர். ஆனால் இங்கு வரும்போதே உயிர் இல்லை. உணவுக் குழாய்க்குப் பதிலாக மூச்சுக் குழாயில் வாழைப்பழம் சென்றதால் ஆக்சிஜன் நுரையீரலுக்குப் போகாமல் சிறுவன் மூச்சுவிடச் சிரமப்பட்டுள்ளான்" என்று தெரிவித்தார்.

இந்தக் காரணத்தால் அடுத்த ஐந்து நிமிடங்களில் உயிரிழப்பு ஏற்பட வாய்ப்பிருப்பதாகக் கூறிய அவர், "உடற்கூராய்வு முடிந்துவிட்டது. சிறுவனுக்கு வேறு எந்த உடல் பாதிப்பும் இல்லை. சிறுவனின் வாய்க்குள் வாழைப் பழம் அடைத்து இருந்ததைக் கண்டறிந்தோம்'' என்றும் தெரிவித்தார்.

மூச்சுக்குழாயில் சிக்கும் உணவுப் பொருள்: உயிரைக் காக்க உதவும் எளிய முதலுதவி

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,அவசரப்படாமல் நிதானமாகவும், பேசாமலும் சாப்பிட வேண்டியது அவசியம் என்கிறார்கள் மருத்துவர்கள் (சித்தரிப்புப் படம்)

''இதுபோன்ற நேரங்களில் உடனடியாக முதலுதவி செய்வதுதான் உயிரைக் காக்க ஒரே வழி. இந்தச் சிறுவனுக்கே முதலில் முதலுதவியைச் செய்திருந்தால் உயிரைக் காப்பாற்றியிருக்க முடியும். அப்படியில்லாமல், மருத்துவமனைக்கு கொண்டு வரும் வரை மூச்சுக்குழாய் அடைபட்டே இருந்தால், எந்த வயதினராக இருந்தாலும், காப்பாற்றுவதற்கான சாத்தியங்கள் மிகக் குறைவு," என்று விளக்கினார் மருத்துவர் சசிரேகா.

அதேவேளையில், உணவுக் குழாயில் பல்வேறு பொருட்கள் சிக்கியதாக வந்தவர்களை, சிறு சிறு சிகிச்சை முறைகள் மூலமாகவும், அறுவை சிகிச்சைகள் மூலமாகவும் காப்பாற்றியுள்ளதாக, ஈரோடு அரசு மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்தனர்.

உணவு மூச்சுக் குழாய்க்குள் செல்லாமல் தடுப்பது எப்படி?

கடந்த ஆகஸ்ட் மாதத்தில், திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில், அரசு மருத்துவமனையில் காய்ச்சலுக்குக் கொடுக்கப்பட்ட மாத்திரையை விழுங்கும்போது, அதுவும் இதேபோல தொண்டையில் சிக்கி 4 வயது சிறுவன் உயிரிழந்தான்.

மாத்திரை, வாழைப்பழம் போன்றவற்றை விழுங்கும்போது, சிறுவர்கள் உயிரிழப்பது பெற்றோரிடையே அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஆனால், இதை எப்படிக் கையாள்வது என்ற விழிப்புணர்வு இருந்தால் பெற்றோர் அச்சப்படத் தேவையில்லை என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

மூச்சுக்குழாயில் சிக்கும் உணவுப் பொருள்: உயிரைக் காக்க உதவும் எளிய முதலுதவி

பட மூலாதாரம்,Getty Images

கோவையைச் சேர்ந்த காது, மூக்கு, தொண்டை நிபுணர் பாலகிருஷ்ணன் இதுகுறித்துப் பேசியபோது, "எந்த வயதினராக இருந்தாலும், உணவுக் குழாயில் செல்ல வேண்டிய உணவு மூச்சுக் குழாய்க்குச் செல்லும்போது, இந்த விபரீதம் ஏற்பட வாய்ப்புள்ளதாக" கூறுகிறார். மேலும், இதற்குக் கால தாமதமின்றி உரிய முதலுதவியை உடனே செய்துவிட்டால் உயிருக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்றும் அவர் வலியுறுத்தினார்.

மருத்துவ ஆராய்ச்சியாளர் எரின் காலமன் எழுதியுள்ள கட்டுரையின்படி, மனித உடலில் உணவுக் குழாய், மூச்சுக் குழாய் என கழுத்து மற்றும் மார்பு வழியாக இரு குழாய்கள் செல்கின்றன. அதில் உணவுக் குழாயில் போக வேண்டிய உணவு, காற்றுப் பாதையில் செல்வதே சுவாசம் தடைபட்டு, உயிருக்கு ஆபத்தான நிலை ஏற்படக் காரணம் என்று அவர் விளக்கியுள்ளார்.

மனித உடலின் இயக்கவியல் குறித்து விளக்கிய மருத்துவர் பாலகிருஷ்ணன், "மூச்சுக்குழாய் எப்போதும் திறந்திருக்கும், உணவுக் குழாய் மூடித்தான் இருக்கும். உணவு உள்ளே செல்லும்போதுதான் அது திறக்கப்படும், அப்போது மூச்சுக் குழாய் மூடிக்கொள்ளும்" என்றார்.

"ஆனால், உணவு வருவதை மூளை அறிவுறுத்தி, உணவுக் குழாய் திறக்கப்படுவதற்குள் அவசர அவசரமாக விழுங்கினால், மூடாமல் திறந்திருக்கும் மூச்சுக் குழாய்க்குள் உணவு சென்றுவிடும். அதனால்தான் சுவாசம் பாதிக்கப்படுகிறது," என்று அவர் விளக்கினார்.

மூச்சுக்குழாயில் சிக்கும் உணவுப் பொருள்: உயிரைக் காக்க உதவும் எளிய முதலுதவி

பட மூலாதாரம்,Getty Images

அதோடு, குழந்தை முதலில் ஊட்டப்பட்ட வாழைப்பழத் துண்டினை விழுங்குவதற்குள் மேன்மேலும் பழத்தைக் கொடுக்கையில், அவற்றை மொத்தமாக விழுங்க எத்தனிக்கையில், இத்தகைய விபரீதம் நேரிட வாய்ப்புள்ளதாகவும் அவர் எச்சரித்தார்.

குழந்தைகளுக்கு எந்த உணவைக் கொடுத்தாலும் கவனத்துடன், சிறு சிறு அளவில் கொடுக்க வேண்டுமென்று வலியுறுத்துகிறார் மருத்துவர் சசிரேகா. அதோடு, பல குழந்தைகள், நாணயம், மோமோஸ், பட்டாணி, பாதாம் போன்றவற்றை விழுங்கிவிட்டதாக அரசு மருத்துவமனைக்கு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சிறியவர்கள், பெரியவர்கள் என யாராக இருந்தாலும், ''வேகமாகச் சாப்பிடுவது, பேசிக்கொண்டே சாப்பிடுவது ஆகிய இரண்டு காரணங்களால்தான் இத்தகைய ஆபத்தைச் சந்திக்கிறார்கள். எனவே, அவசரப்படாமல் நிதானமாகவும், பேசாமலும் சாப்பிட வேண்டியது அவசியம்" என்று கூறுகிறார் மருத்துவர் பாலகிருஷ்ணன்.

இவை மட்டுமின்றி, சிக்கன் பீஸ் உள்படப் பசை போன்ற தன்மையைக் கொண்ட உணவுகள் தொண்டைக்குள் ஒட்டிக் கொள்வதால், தசைகளின் செயல்பாட்டு நேரம் மாறி, உணவு மூச்சுக் குழாய்க்குள் செல்லும் வாய்ப்பு ஏற்படுவதாகவும் அவர் விவரித்தார்.

மூச்சுக்குழாயில் சிக்கும் உணவுப் பொருள்: உயிரைக் காக்க உதவும் எளிய முதலுதவி

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,குழந்தைகளை டிவி அல்லது போன் போன்ற டிஜிட்டல் சாதனங்களைப் பார்த்துக் கொண்டே சாப்பிட வைப்பது, இத்தகைய ஆபத்துகளை ஏற்படுத்தும் என்கிறார் மருத்துவர்

டிவி, போன் பார்த்துக்கொண்டே சாப்பிடுவது ஆபத்து

யாராக இருந்தாலும் சாப்பிடும்போது உணவின் மீது கவனம் வேண்டும் என்று அறிவுறுத்துகிறார் குழந்தைகள் அறுவை சிகிச்சை நிபுணர் தர்மேந்திரா. "சிறியவர்கள், பெரியவர்கள் என யாராக இருந்தாலும் கவனமின்றிச் சாப்பிடும்போது, உணவுக் குழாயில் போக வேண்டிய உணவு மூச்சுக்குழாய்க்குச் சென்று புரையேறுதல் நடக்க வாய்ப்புள்ளது" என்கிறார் அவர்.

மேலும், எந்த உணவையும் நன்கு மென்று விழுங்கச் சொல்லி, குழந்தைகளைப் பழக்குவதும் மிக மிக அவசியமென்று அவர் வலியுறுத்துகிறார்.

பிபிசி தமிழிடம் பேசிய அவர், ''வாழைப்பழம் அவ்வளவு எளிதில் அடைக்க வாய்ப்பில்லை. ஆனால் வேடிக்கை பார்த்துக்கொண்டு சாப்பிடும்போது, கவனம் சிதறி மூச்சுக்குழாய் திறந்து அதில் அடைத்திருக்கலாம்.

குழந்தைகளை டிவி அல்லது போன் போன்ற டிஜிட்டல் சாதனங்களைப் பார்த்துக் கொண்டே சாப்பிட வைப்பது, இத்தகைய ஆபத்துகளை ஏற்படுத்தும்'' என்கிறார்.

உணவுக் குழாயில் சிக்குவதை சிறு கால அவகாசத்திற்கு உள்ளாகவே எடுத்துவிடலாம் என்று கூறும் லேப்ராஸ்கோபிக் அறுவை சிகிச்சை நிபுணர் பி.எஸ்.ராஜன், மூச்சுக்குழாயில் ஏதாவது சிக்கிவிட்டால் சில விநாடிகளுக்குள் முதலுதவி தராவிட்டால் உயிருக்கே ஆபத்தாக முடியும் என்று எச்சரிக்கிறார்.

மூச்சுக்குழாயில் சிக்கும் உணவுப் பொருள்: உயிரைக் காக்க உதவும் எளிய முதலுதவி

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,மூச்சுக் குழாயில் உணவு நுழைந்துவிட்டால் குழந்தைகளுக்குச் செய்ய வேண்டிய முதலுதவி சிகிச்சையை விளக்கும் புகைப்படம்

குழந்தைகளுக்கு முதலுதவி சிகிச்சை வழங்குவது எப்படி?

மாதக்கணக்கில் இருமிக்கொண்டிருந்த ஒரு குழந்தையை ஸ்கேன் செய்து பரிசோதித்தபோது, அதன் மூச்சுக் குழாய்க்குள் பட்டாணி இருந்ததைக் கண்டறிந்து, அறுவை சிகிச்சையில் அகற்றியதாகச் சொல்கிறார் மருத்துவர் பாலகிருஷ்ணன்.

பல்வேறு மேலை நாடுகளில் குழந்தைகளுக்கு பட்டாணி, பாதாம் போன்றவற்றை உணவாகக் கொடுக்க அனுமதிக்கப்படுவதில்லை என்று கூறும் அவர், குழந்தைகள் பொம்மைகளில் (Toys) பயன்படுத்தப்படும் பட்டன் பேட்டரிகளையும் வெளிநாடுகளில் தடை செய்துள்ளதாகக் கூறுகிறார்.

''இருப்பதிலேயே பொம்மைகளில் பயன்படுத்தும் பட்டன் வடிவிலான பேட்டரிதான் மிக ஆபத்தானது. அதை விழுங்கிய பல குழந்தைகளுக்கு நான் சிகிச்சை அளித்துள்ளேன். விழுங்கிய ஒரு மணிநேரத்தில் இருந்து அதிலுள்ள ரசாயனம் கசியத் தொடங்கிவிடும். அது குடல் உள்ளிட்ட பாகங்களில் பாதிப்புகளை ஏற்படுத்தும் ஆபத்து இருப்பதால் நம் நாட்டிலும் அது தடை செய்யப்பட வேண்டும்'' என்கிறார் மருத்துவர் பாலகிருஷ்ணன்.

இதுபோல, சாப்பிடும்போது உணவுப் பொருள் தொண்டையில் சிக்கினாலோ அல்லது வேறு ஏதேனும் பொருளை குழந்தைகள் வாயில் போட்டு அது சிக்கிக் கொண்டாலோ, உடனடியாக ஹெய்ம்லிச் மனேவர் முதலுதவியை செய்ய வேண்டும்.

இந்த முதலுதவி குறித்து பிபிசி தமிழிடம் முன்பு விளக்கிய ஈரோட்டைச் சேர்ந்த குழந்தைகள் நல மருத்துவர் அருண்குமார், "பாதிக்கப்பட்ட நபருக்குப் பின்னால் நின்றுகொண்டு, உங்கள் இரு கைகளை அவர்களின் இடுப்பைச் சுற்றி இறுக்கமாக கட்டிக் கொள்ளுங்கள்.

வயிற்றில் விரைவாகவும், வலுவாகவும் மேல்நோக்கி 5 அல்லது 6 முறை அழுத்தம் கொடுக்க வேண்டும். இதை முயற்சி செய்தும் தொண்டையில் சிக்கியிருக்கும் பொருள் வெளியேறவில்லை என்றால், உடனடியாக மருத்துவரின் உதவியை நாட வேண்டும்" என்று விவரித்தார்.

ஆனால், சிறு குழந்தைகளுக்கு இந்தப் பிரச்னை ஏற்பட்டால், அவர்களைத் தங்கள் தொடை மீது வயிறு அழுத்தியிருப்பது போலப் படுக்க வைத்து, முதுகில் தட்ட வேண்டுமென்று மருத்துவர் அருண்குமார் விளக்கினார்.

இந்த மிகவும் எளிமையான முதலுதவி முறை பல பள்ளிகளில் கற்றுத் தரப்படுவதாகத் தெரிவித்த அவர், "பொது மக்களுக்கும் அதைக் கற்றுக் கொடுப்பது, குழந்தைகளின் பாதுகாப்பில் முக்கியப் பங்கு வகிக்கும்" என்றும் குறிப்பிட்டார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/czxpe0eqwr9o

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.