Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்+

"தோற்றிடேல், மீறித்

தோற்றிடினும் வரலாறின்றி மரியேல்!"

-நன்னிச் சோழன்

 

  • எழுதருகை(warning): இங்குள்ள செய்திகள் யார் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை. இவை தமிழினத்தின் வரலாற்றை ஆவணப்படுத்தும் முகமாகவே எழுதப்பட்டுள்ளன என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்…!


இந்த ஆவணத்தில் எமது தமிழீழ நடைமுறையரசின் காலப்பகுதியில் அவர்தம் படைத்துறை இயந்திரத்தாலும் நடைமுறையரச இயந்திரத்தாலும் பாவிக்கப்பட்ட பல்வேறு வகையான கொடிகள் பற்றி பட்டியலிட்டு அவைதொடர்பான சில விடையங்களையும் ஆவணப்படுத்தியுள்ளேன். இக்கொடிகளில் தேசியக்கொடியும் விடுதலைப்புலிகளின் கொடியும் பயன்பாட்டிற்கு வந்த சரியான ஆண்டுகள் மட்டுமே கிடைக்கப்பெற்றுள்ளன. ஏனையவை எப்போதிலிருந்து பயன்பாட்டிற்கு வந்தது என்பது தொடர்பில் சரியான தகவல்கள் என்னிடத்தில் இல்லை.

  • விடுதலைப்புலிகளின் கொடி:

தவிபு அமைப்பின் கொடிதான் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முதற்கொடியாகும். இது தமிழீழ தேசியத் தலைவரின் எண்ணக்கருவிற்கேற்ப 1977 அம் ஆண்டு வரையப்பட்டது. இது முதன் முதலில் 1978ம் ஆண்டு அவர்களின் கடிதத்தில் பாவிக்கப்பட்டது. விடுதலைப்புலிகளின் இவ் இலச்சினையோடு கூடிய உரிமைகோரல் கடிதம் 'சிறில் மத்தியூவின் அரசபணியில்' என்ற கடித உறைக்குள் வைக்கப்பட்டு இலங்கை பூராவுமே ஒரே நேரத்தில் அனுப்பி வைக்கப்பட்டது (ஆதாரம்: மூத்த உறுப்பினர் தேவர்).

large.firstletterofltte.jpg.fb83ef3b1c36

விடுதலைப்புலிகளின் முதல் உரிமைகோரல் கடிதம்

இக்கொடி உருவான கதை தொடர்பில் 1991ம் ஆண்டு விடுதலைப்புலிகளின் அலுவல்சார் நாளேடான "விடுதலைப்புலிகள்" இல் அவர்களால் வரலாறு வெளியிடப்பட்டது. இருந்தபோதிலும் 2015ம் ஆண்டிலும் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த எழுத்தாளர் 'வர்ணகுலத்தான்' அவர்களாலும் எழுத்தாளரும் கேலிச்சித்திர ஓவியருமானன 'மூனா' அவர்களால் 2016ம் ஆண்டிலும் அதனோடு முரணாகும் வகையில் வேறொரு தோற்றக்கதை கூறப்பட்டுள்ளது.

எவ்வாறெயினும் கால வரிசையின் படி இரண்டு வகையான தோற்றக்கதைகளும் இங்கு தரப்படுகின்றன. 

முதலில் புலிகளால் அலுவல்சார் நாளேடான "விடுதலைப்புலிகள்" இல் 1991ம் ஆண்டு மாசி-பங்குனி இதழின் மூன்றாம் பக்கத்தில் வெளியிடப்பட்ட தோற்றக்கதையினை காண்போம்:

"...இன்று எமது தேசியக்கொடியில் பொறிக்கப்பட்டிருக்கும் புலிச்சின்னத்தின் உருவப்படம் பிரபாகரனின் கருத்திற்கு அமையவே வரையப்பட்டது. பிரபாகரனின் நண்பரும் மதுரையைச் சேர்ந்த பிரபல ஓவியருமான 'நடராஜன்' என்பவர் 1977ம் ஆண்டு புலிச்சின்னத்தின் உருவப்படத்தை வரைந்தார். பிரபாகரனின் யோசனைக்கமைய பல தடவைகள் வரைந்து, இறுதியில் எமது தலைவரின் எண்ணப்படம் புலிச்சின்னமாக உருவகம் பெற்றது. இந்த புலிச்சின்னம் இன்று எமது தேசியக்கொடியை அலங்கரிக்கின்றது.... ”

இரண்டாவதாக வல்வெட்டித்துறையைச் சேர்ந்த எழுத்தாளரான 'வர்ணகுலத்தான்' அவர்களால் தெரிவிக்கப்பட்டுள்ள தோற்றக்கதையினை இங்கு காண்போம்:

"இதேபோல் விடுதலைப் புலிகளின் இலச்சினையும் ஒரேஎத்தனத்தில் இன்றுள்ள வடிவத்தை எடுக்கவில்லை.

"1916இல்அமெரிக்காவின் கலிபோணியாவில் உருவாகிய GOLDWIN PICTURES நிறுவனமே பின்னாட்களில் METRO GOLDWIN MAYER எனும் பிரமாண்டமான MEDIA COMPANY யாக உருவாயிற்று. MGM எனும் இந்நிறுவனத்தின் TRAD MARK ஆக காணப்படுவது திரைப் பட சுருள்களுக்கிடையில் இருந்து கர்ஜிக்கும் சிங்கம் ஆகும். இதனை மூலமாகவைத்து 1975 இல் ‘வாசு சிகார்’ அட்டைப் பெட்டிக்காக மோகண்ணா ஆரம்பத்தில் உருவாக்கிய சித்திரமே ‘வாசு சிகார்’ அட்டைப்பெட்டியில் காணப்பட்ட ‘சுவரை உடைத்துக் கொண்டு பாயும் சிங்கமாகும். இச்சிங்கத்தின் மாதிரியே தலைவர் பிரபாகரன் அவர்களின் விருப்பத்திற்கமைய 1976இல் தமிழீழ விடுதலைப்புலிகளின் உறுதிகொண்ட உத்தியோக பூர்வமான இலச்சினை வடிவத்தில் காணப்பட்ட புலியாக ஆரம்பத்தில் மாற்றப் பட்டது. குறிப்பிட்ட விடுதலைப்புலிகளின் சின்னத்திற்காக பின்னர் பண்டாரவன்னியனின் ஓவியத்தில் கேடயத்தின் குறுக்காக காணப்படும் வாள்கள் துப்பாக்கிகளாகவும் சோவியத் நாடு சஞ்சிகையில் வளைந்து ஓவல்வடிவத்தில் காணப்பட்ட நெற்கதிர்களின் நெல்மணிகளை துப்பாக்கியின் ரவைகள்(குண்டுகள் ) ஆகவும் மாதிரியாக கொண்டு இறுதியாக 1977ன் இறுதியில் மோகண்ணா உருவாக்கிய அவ் அடையாளச் சின்னமே விடுதலைப்புலிகளின் முதலாவது அடையாளச் சின்னமாகும்......"

இதில் கூறப்படும் அமரர் மோகன் (ராமதாஸ் மோகனதாஸ்) என்பார் விடுதலைப்புலிகள் அமைப்பைச் சார்ந்தவர் ஆவார். முன்னாளில் அவர்களின் ஆதரவாளராக விளங்கியதோடு பின்னர் விடுதலைப்புலிகளின் முதல் கப்பலான 'சோழன்' என்பதின் கலக்குழுவினருள் ஒருவராக பணியாற்றியும் இருந்தார். இவரது இந்த இலச்சினை வடிவமைப்பு தொடர்பில் எழுத்தாளர் மூனா அவர்கள் மோகனின் அமரத்துவத்திற்குப் பின்னர் அவர் பற்றி எழுதிய 'மோகன் ஆர்ட்ஸ்' என்ற கட்டுரையில் பின்வருமாறு எழுதியிருந்தார்:

"ஒரு தடவை ஒரு தேயிலை பெட்டியில் இருந்த ஒரு புலியின் படத்தைக் காட்டி, 'தங்களுக்கு ஒரு புலிச் சின்னம் கீறித் தரச் சொல்லி கேக்கிறாங்கள். இதை கீறலாம் எண்டு பாக்கிறன்' என்று என்னிடம் சொன்னார். அதையே அவர் வடிவமைத்துக் கொடுத்திருந்தார் என்பதை பின்னாட்களில் வந்த விடுதலை இயக்கத்தின் துண்டுப் பிரசுரங்களில் கண்டு கொண்டேன். அவர் எழுபதுகளில் வடிவமைத்த அந்தச் சின்னத்தின் சொந்தக்காரராக பின்னாளில் தமிழ்நாட்டில் ஒருவர் பாராட்டப்பட்டது வேதனையானது. ஆனாலும் 'நான்தான் அந்த சின்னத்தை வடிவமைத்தேன்' என்று இவர் சண்டைக்கு வரவும் இல்லை, குரல் எழுப்பி உரிமை கேட்கவும் இல்லை. 'என் கடன் பணி செய்து கிடப்பதே' என்பதே இவரது பாணி. தன்னால் முடிந்த உதவிகளை இவர் அந்த விடுதலைக் குழுவிற்கு செய்து கொடுத்துக் கொண்டிருந்தார் என்பது மோகனுடன் நெருங்கிப் பழகியவர்களுக்கு மட்டுமே தெரியும். "

அடுத்து இந்தப் பாயும் புலி என்னும் எண்ணக்கரு எவ்வாறு தனக்கு எழுந்தது என்பது குறித்து தேசியத் தலைவர் 'விடுதலைத் தீப்பொறி' என்னும் ஆவணப்படத்தில் விரிவாக கூறியிருந்தார். எனினும் அதில் இதனை யார் வரைந்து தந்தது என்பது குறித்து அவர் கூறவில்லை. 

அவ் ஆவணப்படத்தில் இனி உருவாகின்ற நாட்டிலும் கடைசியாக இருந்த ஆட்சியின் சின்னமே வரவேண்டும் என்பதே தனது நோக்கமாகயிருந்ததாக தெரிவித்துள்ளார். அதாவது மீண்டும் எமது பழைய வரலாறு [அப்படியே] புதுப்பிக்கப்படும் படியாக சின்னம் இருத்தல் வேண்டுமாம்; கடைசியாக இருந்தது புலிச் சின்னமே, ஆகவே அதையே மீளவும் கொண்டு வந்தாராம். அதே நேரம் ஈழத்தின் பண்டாரவன்னியனின் கொடியின் சின்னமாக தமிழர்கள் நாம் வரைவது தறியப்போடப்பட்ட இரு வாள்களும் அதன் பின்புலத்தில் ஒரு வட்டக் கேடயமும் ஆகும். எனவே இதையும் சோழர்களின் புலியையும் அடிப்படை கருத்துருவாகக்கொண்டு தான் எமது கொடியினை தான் உருவாக்கியதாக தெரிவித்துள்ளார்.

பண்டாரவன்னியனின் வட்டக் கேடயத்திற்குப் பதிலாக இரு வட்டங்களைப் பாவித்தாராம். அந்த வட்டத்திற்குள் வரும்படியாகவும் அதற்கேற்பவும் சோழர்களின் புலியும் கொணரப்பட்டது. அதற்காக அந்த வட்டத்திற்குள்ளால் நவீன வெடிபொருள் உகத்திற்குள் புலி பாய்வது போன்ற வடிவத்தை தெரிவு செய்தார். 

பாயும் புலியிற்கு சோழர்களின் புலி பாவிக்கப்பட்டது. பழைய சோழர்களின் புலியென்பது முழு உடலுடன் பாய்வது போல வருவதாகும். எனவே அந்தப் பழைய புலியின் பாயும் வடிவினையும் மாற்றினார்; அதாவது அழிந்துபோன எமது சின்னம் (புலி) திரும்பவும் ஒரு புத்துயிர் பெற்று எழுச்சியுடனும் கடுஞ்சினத்துடனும் வட்டத்திற்கு வெளியே தலையை நீட்டி முன்னங்கால்களை எடுத்துப் பாய்ந்து கிளம்புவது போல மாற்றி வடிவமைக்கப்பட்டது என்றுள்ளார்.

மொத்தத்தில் இந்த நவீன உகத்திற்குள் தமிழர்களின் தேசிய எழுச்சியை உருவாக்குகின்றோம் என்பதே அவரின் சின்னத்தின் நோக்கமாக இருந்தது. இவ்வடிவிலான சின்னத்தைப் பெற அவர்கள் மிகவும் மினக்கெட்டு கன படங்கள் எல்லாம் தேடித் திரிந்தார். அவ்வாறு தேடித் திரிந்தது புலி தத்ரூபமாக வரவேண்டும் என்பதற்காகவே என்று முடிவடைகிறது அவ் ஆவணப்படத்தில் கொடி தொடர்பான வரலாறு.

அந்தப் பண்டாரவன்னியனின் வாள்களிற்குப் பகரமாக புலிகள் இயக்கத்தில் முதன்முதல் பாவனைக்கு வந்த .303 துமுக்கியின் துவக்குச்சொண்டும் அதில் பொருத்தப்பட்ட சனியன்களும் (குத்துக்கத்தி) வரையப்பட்டன. அடியில் அத்துமுக்கியின் பிடங்கு (butt) புலியின் கால்களுக்கு பின்புலத்தில் இருக்கத்தக்கனையாக வரையப்பட்டன. சன்னங்களும் .303 இயின் சன்னங்களே ஆகும்.

large.firstsymbol.jpg.27fc8beb01bef019ac

முதல் சின்னம். இதில் "THAMIL EALAM" என்று எழுதப்பட்டுள்ளது. இப்பெயரானது பின்னாளில் 1985 சனவரிக்கு அண்மையாக "TAMIL EELAM" என்று மாற்றப்பட்டது. | படிமப்புரவு (Img. courtesy): விடுதலைத் தீப்பொறி, பாகம் - 1

large.liberationtigersoftamileelamsymbol

முதல் நிறச் சின்னம். இதில் "THAMIL EALAM" என்று எமது நாட்டின் பெயர் எழுதப்பட்டுள்ளது. இப்பெயரானது பின்னாளில் "TAMIL EELAM" என்று 1985 சனவரிக்கு அண்மையாக மாற்றப்பட்டது. | படிமப்புரவு: விடுதலைத் தீப்பொறி, பாகம் - 1

large.tamileelam.jpg.371b08f2abf8a5e3315

01/11/1994 அன்று பாவிக்கப்பட்ட விடுதலைப்புலிகளின் கொடியும் சின்னமும். இதில் "TAMIL EELAM" என்று மாறியுள்ளதைக் காண்க. அதே நேரம் லையன்னாவின் வடிவமும் மாறியுள்ளதை நோக்குக. மேலும் ஆங்கில எழுத்துக்களின் எழுத்துருவும் மாறியுள்ளது.

large.lastflagofliberationtigersofTamilE

விடுதலைப்புலிகள் கொடியின் இறுதி விருத்து. இதனையே புலிகள் இறுதிவரை பாவித்தனர். இதில் லையன்னாவின் வடிவம் மீண்டும் பழைய நிலைக்கே மாறியுள்ளதை நோக்குக. | படிமப்புரவு: meethaku.com


  • தமிழீழத் தேசியக் கொடி:

இக்கொடியானது தவிபு இன் கொடியிலுள்ள எழுத்துக்களை நீக்குவதால் உருவாகிய கொடியாகும். இக்கொடியினை 1990ம் ஆண்டு மாவீரர் கிழமையின் முதல் நாளன்று தமிழீழத் தேசியத்தலைவர் அவர்கள் தமிழீழத் தேசியக் கொடியாக சாற்றாணைப்படுத்தியதோடு அதனைத் தானே ஏற்றி வைத்து எமது நாட்டின் முதல் கொடியினை அறிமுகமும் செய்து வைத்தார். இவ்வாறாக தமிழீழம் என்ற நாடு முற்றாக அங்கீகரிக்கப்படுவதற்கு முன்னரே எமக்கு எமது கொடி பிறந்திருந்தது.

இக்கொடியில் புலியே முதன்மைச் சின்னமாக உள்ளதாலும் புலிகள் அமைப்பின் கொடியிலிருந்து பிறப்பிக்கப்பட்டதாலும் இது 'புலிக்கொடி' என்றும் அழைக்கப்பட்டது. 

புலிக்கொடியானது தமிழீழத் தமிழர்கள் வாழ்ந்த அனைத்து நாடுகளிலும் நடைபெற்ற நிகழ்வுகளின் போது எமது நாட்டின் கொடியாக ஏற்றிவைக்கப்பட்டது.

இப்புலிக்கொடியானது  ஒரு மாவீரரின் (நிரந்தரப்படை மற்றும் மக்கள்படை) வித்துடல் மீது போர்த்தப்பட்ட பின்னர் திரும்ப எடுக்கப்பட்டு அன்னாரின் குடும்பத்தினரிடத்தில் மிகுந்த மரியாதையுடன் கையளிக்கப்படும். இது தொடர்பில் இக்கொழுவியினை சொடுக்கி வாசிக்கவும்.

முதலில் சின்னத்தைப் பற்றி தவிபு இன் அலுவல்சார் நாளேடான "விடுதலைப்புலிகள்" இல் 1991ம் ஆண்டு மாசி-பங்குனி இதழின் மூன்றாம் பக்கத்தில் வெளியிடப்பட்ட கருத்துக்கள் பற்றி காண்போம்: 

“தேசியக்கொடியின் மையத்தில் புலிச்சின்னம் அமையப் பெற்றிருக்கின்றது. ஆவேசத்துடன் பாயும் புலியைக் குறிப்பதாக புலியின் தலையும், முன்னங் கால்களும் சித்தரிக்கப்பட்டுள்ளன.…. 

"தமிழீழ தேசத்தின் தனித்துவத்தையும் தமிழீழ விடுதலை இலட்சித்தையும் சித்தரிக்கும் சின்னமாக புலிச் சின்னம் விளங்குகின்றது. புலிச் சின்னத்தை தமிழீழத்தின் தேசிய சின்னமாக பிரபாகரன் தேர்ந்தெடுத்தற்கு காரணமுண்டு. புலிச் சின்னம் திராவிடர் நாகரிகத்தில் வேருன்றி நிற்கும் ஒரு படிமம். தமிழரின் வீர வரலாற்றையும், தேசிய எழுச்சியையும் சித்தரித்துக்காட்டும் ஒரு குறியீடு. வீரத்தையும் தன்னம்பிக்கையையும் குறித்துக்காட்டும் சின்னம். அன்று வீரவரலாறு படைத்த சோழ மன்னர்களும் புலிக்கொடியின் கீழ் தமிழனை எழுச்சிகொள்ளச் செய்தனர். இன உணர்வை, தேசியப்பற்றுணர்வை, பிரதி பலிக்கும் ஆழமான, அற்புதமான குறியீட்டாகத் திகழ்கிறது புலிச்சின்னம். அது தமிழ்த் தேசாபிமான எழுச்சியை மட்டுமன்றி வலிமையையும், வீராவேசத்தையும் புலிச்சின்னம் குறித்து நிற்கின்றது. பாயும் புலியை ஒத்த எமது விடுதலைப் போரையும் அது சித்தரிக்கிறது. 

“புலித்தலையைச் சுற்றி வட்டமாக ரவைகளும், இரு புறத்திலும் கத்திமுனையுடைய துப்பாக்கிகளும் எமது ஆயுதம் தரித்த விடுதலைப் போரட்டத்தைக் குறியீடு செய்கின்றன.” 

“ஒட்டு மொத்தத்தில், எமது தேசியக்கொடி, சுதந்திரத்தையும் சமதர்மத்தையும் வேண்டி நாம் நடத்தும் வீர விடுதலைப் போரை அற்புதமாகச் சித்தரிக்கிறது. தமிழரின் வீர மரபில் வேரூன்றி நின்று பிறப்பிக்கப்போகும் தமிழீழத் தனியரசின் குறியீட்டு வடிவமாகவும் எமது தேசியக்கொடி திகழ்கிறது.”

தேசியக்கொடியில் மஞ்சள், சிவப்பு, வெள்ளை, மற்றும் கறுப்பு ஆகிய நிறங்கள் உள்ளன. இவற்றின் குறித்து நிற்பவையாக நான்காம் ஈழப்போரில் வெளியிடப்பட்ட 'தமிழீழக் தேசியக்கொடி பயன்பாட்டுக்கோவை' இல் உள்ள குறிக்கோள்கள்:

“எமது தேசியக்கொடியை மஞ்சள், சிவப்பு, கறுப்பு, வெள்ளை ஆகிய நான்கு நிறங்கள் அழகுபடுத்துகின்றன. தனிப்பாங்கான தேசிய இனமான தமிழீழத் தேசிய இனம் தனது சொந்த மண்ணில் தன்னாட்சி அமைத்துக்கொள்ள விழைவது அதனது அடிப்படை அரசியல் உரிமையும் மனித உரிமையுமாகும். தமிழீழ மக்கள் நடத்துகின்ற தேசிய விடுதலைப் போராட்டம் அறத்தின்பாற்பட்டது, நியாயமானது என்பதையும் தமிழீழத்தேசம் எப்பொழுதும் அறத்தின் பக்கம் நிற்குமென்பதையும் மஞ்சள் நிறம் குறித்து நிற்கிறது.”

“தேசிய விடுதலை பெற்ற தமிழீழத் தனியரசை அமைத்துவிடுவதால் மட்டும் முழுமையான விடுதலையைப் பெற்றுவிட்டதாகக் கொள்ளமுடியாது. தமிழீழக் குமுகாயத்திலுள்ள ஏற்றத்தாழ்வுகள் ஒழிக்கப்படவேண்டும். சாதிய, வகுப்பு முரண்பாடுகள் அகற்றப்படவேண்டும். பெண்ணடிமைத்தனம் நீக்கப்படவேண்டும். இதற்குக் குமுகாய அமைப்பிற் புரட்சிகரமான மாற்றங்களைக் கொண்டுவரவேண்டும். சமன்மையும் சமதருமமும் குமுகாய நீதியும் நிலைநாட்டப்படவேண்டும். இத்தகைய புரட்சிகரமான குமுகாயமாற்றத்தை வேண்டிநிற்கும் எமது அரசியல் இலக்கைச் சிவப்பு நிறம் குறியீடு செய்கின்றது.”

“விடுதலைப்பாதை கரடுமுரடானது; சாவும் அழிவும் தாங்கொணாத் துன்பங்களும் நிறைந்தது. இவற்றைத் தாங்கிக் கொள்ளவும் விடுதலையடைந்தபின் ஏற்படப்போகும் நெருக்கடிகளையும் அச்சுறுத்தல்களையும் எதிர்கொண்டு தேசத்தைக்கட்டியெழுப்பவும் பாதுகாக்கவும் உருக்குப் போன்ற உறுதியான உள்ளம் வேண்டும்; அசையாத நம்பிக்கை வேண்டும்; தளராத உறுதி வேண்டும். இவற்றைக் கறுப்பு நிறம் குறித்துக் காட்டுகின்றது.”

“விடுதலை அமைப்பும் மக்களும் தலைவர்களும் தூய்மையையும் நேர்மையையும் கடைப்பிடிக்க வேண்டுமென்பதை வெள்ளை நிறம் குறித்து நிற்கிறது.”

புலிக்கொடியானது தொடர்ந்து ஒரே சீராக இருக்கவில்லை. அதன் சின்னத்தில் மாற்றங்கள் ஏற்படவிட்டாலும் ஒவ்வொரு காலத்திலும் புலிக்கொடியின் நிறங்களில் சிற்சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது.

large.tamileelamflag.jpg.d96364ce128c7e3

1988ம் ஆண்டு புலிகளால் பாவிக்கப்பட்ட அலுவல்சாரில்லா தமிழீழத் தேசியக் கொடி | படிமப்புரவு: சோசலிசத் தமிழீழம்: விடுதலைப் புலிகளின் அரசியல் வேலைத்திட்டம், 1988

large.TamilEelamflag1994.jpg.075eca5409e

அலுவல்சார் தமிழீழத் தேசியக் கொடி | படிமப்புரவு: தமிழீழத் தேசியக்கொடி பயன்பாட்டுக்கோவை, 1994

large.LastversionoftheTamilEelamFlagofLT

அலுவல்சார் தமிழீழத் தேசியக் கொடியின் இறுதி விருத்து (version)


  • வெற்றிக்கொடி:

இது ஈழத் தமிழரின் தேசிய நிறங்களான சிவப்பும் மஞ்சளும் கொண்ட கொடியாகும். இது நீள்சதுர வடிவிலே கிடைமட்டமாக நிறங்கள் இணைக்கப்படுவதால் வந்த கொடியாகும். இதுவே இதன் செந்தரமான வடிவமுமாகயிருந்தது. ஆயினும் மாவீரர் துயிலுமில்லங்களில் இதனோடு சேர்த்து மேலும் சிலதைக் காணக்கூடியதாகயிருக்கும். இவற்றிற்கு பெயருண்டோ என்பது குறித்து தெரியவில்லை. இவை யாவும் நீள்சதுர வடிவிலே காணப்பட்டன. இவ்வாறாக மாவீரர் துயிலுமில்லங்களில் பறக்கவிடப்பட்ட செந்தரமான வடிவம் தவிர்ந்த ஏனைய 4 வடிவமைப்புகளையும் கீழே பட்டியல்படுத்தப்பட்டுள்ளன:

  1. செங்குத்தான (^|^) மஞ்சள் மற்றும் சிவப்பு நிறங்கள் இணைக்கப்பட்டதால் வந்த நீள்சதுர வடிவிலான கொடி

  2. இரு முக்கோணங்கள் (^\^) மேலும் கீழுமாக பொருத்தப்பட்டதால் வந்த நீள்சதுர வடிவிலான கொடி

  3. இரண்டு செந்தரமான வெற்றிக்கொடிகள் இணைக்கப்பட்டது போன்ற தோற்றத்திலான கொடி

  4. ஒரு நிறம் சூழ உள்ளே இன்னொரு நிறம் (இந்நிறம் சிறிய சதுர வடிவில் இருக்கும்) இருப்பதான கொடி.

large.main-qimg-83e19e1905c98a690b967d11

செந்தரமான வெற்றிக்கொடி

large.maaveerarthuyilumillam(4).jpg.3e22

புனிதபூமி மாவீரர் துயிலுமில்லத்தில் செங்குத்தான (^|^) மஞ்சள் மற்றும் சிவப்பு நிறங்கள் இணைக்கப்பட்டதால் வந்த நீள்சதுர வடிவிலான கொடிகளும் செந்தரமான வெற்றிக்கொடிகளும் பறப்பதைக் காண்க

large_2004.jpg.2d167f93f08df0a80771efc62

நான்காம் ஈழப்போரின் போது கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் இரு முக்கோணங்கள் (^\^) மேலும் கீழுமாக பொருத்தப்பட்டதால் வந்த நீள்சதுர வடிவிலான கொடி பறப்பதைக் காண்க

large.126853053_KanagapuramMartyrsgravey

நான்காம் ஈழப்போரின் போது கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் இரண்டு செந்தரமான வெற்றிக்கொடிகள் இணைக்கப்பட்டது போன்ற தோற்றத்திலான கொடிகள் பறப்பதைக் காண்க

large.Flags_Kopai_Heroes_Graveyard_Jaffn

2002ம் ஆண்டு கோப்பாய் மாவீரர் துயிலுமில்லத்தில் ஒரு நிறம் சூழ உள்ளே இன்னொரு நிறம் (இந்நிறம் சிறிய சதுர வடிவில் இருக்கும்) இருப்பதான கொடிகள் பறப்பதைக் காண்க

செந்தரமான கொடியின் வடிவமானது சமர்க்களங்களிலும் புலிகளால் பாவிக்கப்பட்டது. சிங்களப் படையினரின் முன்னரங்க வலுவெதிர்ப்பு நிலைகளுக்குள் ஊடறுத்து செல்லும் போதும் படைத்தளங்களின் படைவேலிகள் உடைக்கப்பட்டு நுழையும் போதும் எம்மவரின் முன்னணி அணிகள் இதனை தடியில் கட்டி தலைக்கு மேலே பிடித்தபடி ஓடிப்போவர். 

large.main-qimg-e6f7714942415c9f96abdfb5

சமர்க்களத்தில் நடந்து செல்லும் இப் புலிவீரனின் நெஞ்சில் இருப்பதே செந்தரமான வெற்றிக்கொடியாகும்


  • எழுச்சிக்கொடி:

இவைதான் எழுச்சி நாட்களின் போதும் வீரச்சாவு வீடுகளிலும் ஊர்வழிய சோடினைகளுக்குப் பாவிக்கப்படும் கொடியாகும். இது சிவப்பு மஞ்சள் நிறத்தில் இருக்கும். ஒவ்வொரு நிறங்களும் தனித்தனியாக முக்கோண வடிவில் ஓர் நூலில் கட்டப்பட்டிருக்கும். முக்கோணத்தின் அகண்ட பரப்பே நூலில் கட்டப்பட்டு கூரானது கீழே தொங்கும் படியாக விடப்பட்டிருக்கும்.

இதனை உணர்ச்சிப் பெருக்கில் சிலர் உடலிலும் ஊசிகொண்டு குத்திருப்பர். 

large.1641582942_102002...jpg.ea3e5a32dc

ஒக் 10, 2002 அன்று 2ம் லெப். மாலதியின் நினைவு நாளில் நடந்த பெண்கள் எழுச்சி மாநாட்டின் போது இந்த ஐயா சிவப்பு மஞ்சள் முக்கோண நிறங்களை (எழுச்சிக்கொடி) ஊசியால் தன் உடலில் குத்தியுள்ளார். அணிநடை போடுபவர்கள் சோதியா படையணியினர் ஆவர். | படிமப்புரவு: Associated Press

large.puthukudiyiruppu27-005.jpg.5fac69e

27/1//2005 அன்று வீட்டிற்கு முன்னுள்ள தெருவின் ஒரு மருங்கில் எழுச்சிக்கொடியால் சோடினை செய்து வாழைத்தண்டில் ஈகைச்சுடரேற்ற காத்திருக்கும் ஓர் தமிழீழக் குடும்பம்

large.ltteimages(19).jpeg.f39ab656c3ae34

வன்னியிலிருந்த துயிலுமில்லமொன்று மாவீரர் நாளன்று எழுச்சிக்கொடிகளால் சோடிக்கப்பட்டுள்ளதைக் காண்க


  • மாவீரர்கொடி:

இது செங்குத்தான நீள்சதுர வடிவுடையதாகும். இதில் சின்னமாக கறுப்பு நிறத்தில் மாவீரர் பொதுத் திருவுருவப்படம் இருக்கும். பின்புலத்தில் தேசிய நிறங்களான சிவப்பு அல்லது மஞ்சள் இருக்கும்.

(படிமம் கிடைக்கப்பெறவில்லை)


  • வீரவணக்கக்கொடி:

இது செங்குத்தான நீள்சதுர வடிவுடையதாகும். இவற்றை மாவீரர் துயிலுமில்லங்களில் காணலாம். இவை தேசிய நிறங்களான மஞ்சள் அல்லது சிவப்பை கொண்டிருக்கும். ஒவ்வொரு கொடியிலும் இரு சின்னங்கள் காணப்படும்:

1) இரு நிறக் கொடிகளிலும் வெளுறிய சிவப்பு நிறத்தில் தான் தாயகத்தின் தேசப்படம் பின்புலத்தில் காணப்படும்.

2) இரு நிறக் கொடிகளிலும் கறுப்பு நிறத்தில் மாவீரர் வீரவணக்கச் சின்னமான 'உறுதியின் உறைவிடம்' உம் அதன் அடியில் சுடர்கொண்ட சிட்டிகளும் முன்புலத்தில் காணப்படும்

large.265705864_image(20).png.dc77afb000

மாவீரர் துயிலுமில்ல வளாகத்தில் வெற்றிக்கொடிகளுடன் இக்கொடிகளும் பறப்பதைக் காண்க

large.1680868837_.jpg.66a1c9f57b49c4f5a1

அண்மையாக்கப்பட்ட படிமம்

large.32119434892_ba1f214986_o.jpg.eb4a1

மாவீரர் துயிலுமில்ல வளாகத்தில் தேசியக்கொடிகளுடன் இக்கொடிகளும் பறப்பதைக் காண்க


  • நிறக்கொடிகள்:

இவை முழுமையாக ஒன்றில் சிவப்பையோ அ மஞ்சளையோ நிறமாக கொண்டு நீளசதுர வடிவில் இருக்கும்.

large.46173037_112505023092162_543267405

2002ம் ஆண்டு கோப்பாய் மாவீரர் துயிலுமில்லத்தில் நிறக்கொடிகள் பறப்பதைக் காண்க


  • படையணிக்கொடிகள்:

இவை தமிழீழ விடுதலைப்புலிகளின் ஒவ்வொரு படைத்துறைக் கட்டுமானத்திற்குமென அவர்களின் சண்டை உருவாக்கத்தின் சின்னத்துடன் கூடியதாக வடிவமைக்கப்பட்டது. இதை அவர்கள் பொதுநிகழ்வுகள், அணிநடை போன்றவற்றில் அணிநடை சீருடையுடன் சேர்த்து தாங்கிச் செல்வர். அப்போது தமிழீழத் தேசியக் கொடியினையும் தேவைப்படின் பாவிப்பர்.

large.52169709_onmalathy15.png.ab58cfe8e

2002-10-10 ஆம் ஆண்டு 'மாலதி' அவர்களின் 15 ஆம் ஆண்டு நினைவெழுச்சி நாளில் நிகராளிகள் (Representatives) வலமிருந்து: அன்பரசி படையணி, மாலதி படையணி, திலகா படையணி, சோதியா படையணி, குட்டிசிறி மோட்டார் படையணி, சிறுத்தைப்படை, விக்ரர் கவச எதிர்ப்புப் படையணி, பொதுநோக்கு இயந்திர துப்பாக்கி அணி, பொன்னம்மான் கண்ணிவெடிப் பிரிவு, நளாயினி சிறப்பு கடல் தாக்குதலணி

இக்கொடிகளில் கடற்புலிகளின் சண்டை உருவாக்கங்களுக்குமிருந்த கொடிகளும் உள்ளடங்கும்.

large.main-qimg-45c61515846505fa830cb666

'போராளிகளுக்குப் பின்னால் தேசியக்கொடியுடன் கடற்புலிகளின் சண்டை உருவாக்கங்களின் கொடிகளும் கடற்புலிகளின் கொடியும் பறப்பதைக் காண்க.'


  • நீலக்கொடி:

கடற்புலிகளின் வீரத்தை பறைசாற்றுகின்ற விதமாக இருந்த கடுநீலம் மற்றும் வான்நீல நிறத்தை உடைய கொடி நீலக்கொடி எனப்படும். இது கடற்புலிகளின் ஆழுமைக்குள்ளிருந்த துயிலுமில்லங்களிற்குள்ளும் அவர்கள் சார் நிகழ்வுகளிலும் பறக்கவிடப்படும்.

large_gui.jpg.d3fa6bc204054d2a371b190411

கடற்புலிகளின் நிகழ்வொன்றில் வெற்றிகொடியுடன் நீலக்கொடியும் அடுத்தடுத்து பறக்கடிடப்பட்டுள்ளதைக் காண்க


  • கரும்புலிகள் வீரவணக்கக்கொடி

இது கரும்புலிகள் நாளில் ஏற்றப்படும். இது மஞ்சள் நிறத்திலும் உண்டு. இதிலுள்ள இலச்சினையானது மறைமுகக் கரும்புலிகளின் இலச்சினை ஆகும். எனினும் இது அனைத்து கரும்புலிகளையும் ஒருங்குசேரவும் குறிக்கிறது.

large.BlackTigersRememeranceflag.png.3be

இவ்வாறாக தமிழீழத்தில் கொடிகள் பாவிக்கப்பட்டன.


ஆக்கம் & வெளியீடு:

நன்னிச் சோழன்

Edited by நன்னிச் சோழன்

  • கருத்துக்கள உறவுகள்

பல நாடுகள் தமது கொடிகளில் வாள், ஈட்டி, கோடரி, கேடயம் மற்றும் சூலம் போன்ற பழங்காலத்து ஆயுதங்களை கொண்டிருந்தாலும் ஆபிரிக்கா கண்டத்தில் உள்ள மொசாம்பிக் நாடு மட்டுமே உலகத்திலேயே தனது தேசியக்கொடியில் துப்பாக்கியின் படத்தை பயன்படுத்தி அமைத்துள்ளது.

தமிழ் ஈழத்தின் புலிகொடி ஒரு விடுதலை இயக்கத்தின் அடையாளக்கொடி. காலப்போக்கில் அதுவே தேசியக்கொடியாக மாற்றப்பட்டது குறித்தும் அக்கொடி எதிர்கால நடைமுறைகளுக்கு சாத்தியப்படுமா என்பதிலும் பல சாராரால் சர்ச்சைக்குரிய விடயமாக பார்க்கப்பட்டது.

தமிழீழக் கொடி ஒரு இறையாண்மை கொண்ட நாட்டின் கொடியாக சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இந்தக் கொடி முன்மொழியப்பட்ட தமிழீழ அரசின் விருப்பத்தின் அடையாளமாகவும், பிற நாடுகளில் உள்ள தமிழ் புலம்பெயர்ந்தோரால் பரவலாகப் பயன்படுத்தப்படும் அதே வேளையில், அது ஒரு அங்கீகரிக்கப்பட்ட அரசைஅன்றி, அரசியல் இலக்கைக்கை மட்டுமே குறிக்கிறது.

இது சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்படாததற்கான காரணம்:
தமிழ் ஈழம் ஒரு இறையாண்மை கொண்ட அரசு இல்லை தமிழ் ஈழம் ஒரு இயற்பியல் அரசாக இல்லை, மேலும் அந்தக் கொடி அதற்கான அரசியல் விருப்பத்தை மட்டுமே குறிக்கிறது. அது ஒரு அரசியல் இயக்கத்தின் சின்னம்.

கொடி என்பது உலகளவில் தமிழர்களுக்கான கலாச்சார மற்றும் அடையாள சின்னமாகும், இது பெரும்பாலும் கலாச்சார நிகழ்வுகள் மற்றும் அரசியல் பேரணிகளில் காட்டப்படும், ஆனால் அது சர்வதேச சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்ட தேசியக் கொடியின் அந்தஸ்தைப் பெறவில்லை.

கொடி 1990 இல் தமிழீழ விடுதலைப் புலிகளால் முன்மொழியப்பட்ட அரசின் தேசியக் கொடியாக நியமிக்கப்பட்டது. இருப்பினும், அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், கனடா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் உட்பட பல நாடுகளால் புலிகள் ஒரு பயங்கரவாத அமைப்பாக தடைசெய்யப்பட்டுள்ளது, இது அதன் பரந்த சர்வதேச ஏற்றுக்கொள்ளலை சிக்கலாக்குகிறது.

சுருக்கமாக, தமிழீழக் கொடி புலம்பெயர்ந்தோருக்கு ஒரு குறிப்பிடத்தக்க சின்னமாகவும் அவர்களின் அரசியல் அபிலாஷைகளின் காட்சி பிரதிநிதித்துவமாகவும் உள்ளது, ஆனால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய அரசின் கொடியாக அதற்கு சர்வதேச அங்கீகாரம் இல்லை.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.