Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Ho Chi Minh

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஹோ சி மின் (கோப்புப் படம்)

கட்டுரை தகவல்

  • ரெஹான் ஃபாசல்

  • பிபிசி இந்தி

  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்

வியட்நாமின் வரலாற்றில் மிகவும் பிரபலமான தலைவரான ஹோ சி மின் 1890-ல் பிறந்தார், அவரது நாட்டு மக்கள் பெரும்பாலோருக்கு அவர் "அங்கிள் ஹோ" என்று அறியப்பட்டார்.

அவர் தனது 21 வயதில் தனது நாட்டை விட்டு வெளியேறினார். அடுத்த 30 ஆண்டுகள் அவர் வியட்நாமுக்குத் திரும்பவில்லை.

பாரிசில் வசித்தபடியே பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியை நிறுவினார்.

அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், மாஸ்கோ, சீனா ஆகிய நாடுகளில் வெவ்வேறு பெயர்களில் வாழ்ந்தார்.

ஸ்டான்லி கார்னோவ் தனது 'வியட்நாம் ஒரு வரலாறு' என்ற புத்தகத்தில், "1920களில், அவரது ஆசிய தோற்றத்தை மக்கள் கவனிக்கவில்லை என்றால், அவர்கள் அவரை ஓர் இளம் பிரெஞ்சு அறிவுஜீவி என்று தவறாக நினைத்திருப்பார்கள். அவர் உயரத்தில் குள்ளமாகவும் மிகவும் ஒல்லியாகவும் இருந்தார். அவரது கறுப்பு முடியும் கருப்பு கண்களும் மக்களை கவர்ந்தன. " என்று எழுதுகிறார்.

மேலும் "அவர் மோண்ட்மார்ட்ரே பகுதியில் உள்ள ஹோட்டலில் ஒரு அழுக்கு பிடித்த அறையில் வசித்து வந்தார். பழைய புகைப்படங்களை பழுது பார்த்து பெரிதாக்குவது அவரது தொழில். அவர் கையில் எப்போதும் ஷேக்ஸ்பியர் அல்லது எமிலி ஜோலாவின் புத்தகம் இருக்கும். அவர் ஒரு அமைதியான மனிதர், ஆனால் பயந்த மனிதர் அல்ல. நாடகம், இலக்கியம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வமுள்ளவர்களின் கூட்டங்களில் சரளமாக பிரெஞ்சு மொழியில் தனது கருத்துகளை வெளிப்படுத்துவார். அவர் மேற்கின் செல்வாக்கை உள்வாங்கியிருந்தார், ஆனால் அதன் ஆதிக்கத்திற்கு தயாராக இல்லை." என்றும் குறிப்பிடுகிறார்.

ஹோ சி மின் கொல்கத்தா வருகை

Ho Chi Minh

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 2007 ஜூலை 4-ம் தேதி அப்போதைய வியட்நாம் பிரதமர் நுயென் தான் ஜங் மற்றும் அவரது மனைவி த்ரான் தான் கீம் ஆகியோர், கொல்கத்தாவில் உள்ள மறைந்த வியட்நாம் அதிபர் ஹோசிமின் சிலைக்கு அருகில் நிற்கின்றனர்.

1941-ம் ஆண்டில், கொல்கத்தாவில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திலிருந்து திடீரென அனைத்து தோழர்களுக்கும் உடனடியாக கட்சி அலுவலகத்தை அடைய வேண்டும் என்று தொலைபேசி அழைப்புகள் வரத் தொடங்கின என்பது ஒரு பிரபலமான கதை.

கம்யூனிஸ்ட் தலைவர் மோஹித் சென் தனது சுயசரிதையான 'எ டிராவலர் அண்ட் தி ரோட், தி ஜர்னி ஆஃப் அன் இந்தியன் கம்யூனிஸ்ட்' (பயணியும், பாதையும் : ஒரு இந்திய கம்யூனிஸ்டின் வாழ்க்கைப் பயணம்) புத்தகத்தில், "நாங்கள் அலுவலகத்தை அடைந்தபோது, சிரித்த கண்களும் மெல்லிய தாடியும் கொண்ட ஒரு ஒல்லியான தோற்றம் கொண்ட மனிதர் எங்கள் அனைவருக்கும் அறிமுகப்படுத்தப்பட்டார். சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் பின்னர் அணியத் தொடங்கிய ஆடைகளை அவர் அப்போதே அணிந்திருந்தார். அவர் காலில் ரப்பர் செருப்பு அணிந்திருந்தார். அவர் பெயர் ஹோ சி மின். அவர் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு, பிரெஞ்சு அரசாங்கத்துடன் பேச பாரிஸ் செல்வதாகக் கூறினார். கிரேட்-ஈஸ்டர்ன் ஹோட்டலில் தங்கியிருந்த அவர், அங்குள்ள ஒரு பணியாளரின் உதவியுடன் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தை அடைந்தார்." என்று எழுதுகிறார்.

வியட்நாமுக்கு சுதந்திரம் பெற்று தந்தார்

Ho Chi Minh

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 1965-ல் வியட்நாம் பிரதமர் பாம் வான் டோங்குடன் ஹோ சி மின்

ஹோ சி மின்னை குறிப்பிடும் போதெல்லாம், எதிர்ப்பு, புரட்சிகர உணர்வு போன்ற சொற்கள் தானாகவே நினைவுக்கு வருகின்றன. அவர் வாழ்ந்த காலத்தில் அவர் ஒருபுறம் மதிக்கப்பட்ட ஒரு நபராகவும், மறுபுறம் எதிரிகளால் வெறுக்கப்பட்ட நபராகவும் இருந்தார்.

நீண்ட காலமாக காலனித்துவ ஆட்சியின் கீழ் இருந்த தனது நாட்டிற்கு அவர் சுதந்திரம் பெற்றுத் தந்தார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

ஜாக்சன் ஹார்டி தனது 'ஹோ சி மின் ஃப்ரம் எ ஹம்பிள் வில்லேஜ் டு லீடிங் எ நேஷன்ஸ் ஃபை ஃபார் ஃப்ரீடம்' (ஹோசிமின் - சாதாரண கிராமத்தில் இருந்து, விடுதலைப் போராட்டத்தின்‌ தலைமை வரை) என்ற புத்தகத்தில், "மத்திய வியட்நாமில் ஒரு சிறிய கிராமத்திலிருந்து நாட்டின் சுதந்திரப் போராட்டத்தின் தலைவராக உருமாறிய அவரது பயணம், போராட்டம் மற்றும் தைரியத்தின் கதை மட்டுமல்ல, உலகின் வலிமையான சக்திகளால் முன்வைக்கப்பட்ட சவால்களை எதிர்கொள்ளத் துணிந்த ஒரு நபரின் கதையும் கூட. அவர் பிரெஞ்சு ஏகாதிபத்தியவாதிகளுக்கு எதிராகப் போராடியது மட்டுமல்லாமல், அவர்களை ஆதரித்த வல்லரசான அமெரிக்காவையும் தோல்வியை ஒப்புக்கொள்ளச் செய்தார்." என்று எழுதுகிறார்.

ஆரம்பத்தில் புறக்கணித்த அமெரிக்கா

Ho Chi Minh

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, வியட்நாம் போரில் ஹெலிகாப்டர்களை அதிக அளவில் அமெரிக்க துருப்புகள் பயன்படுத்தின.

ஆகஸ்ட் 29, 1945 அன்று, வியட்நாமின் சுதந்திரத்திற்காக போராடிய வியட் மின் எனும் குழு ஹனோயை ஜப்பானிடமிருந்து விடுவித்தது.

செப்டம்பர் 2-ம் தேதி வியட்நாம் என்ற சுதந்திர நாடு நிறுவப்பட்டது. இந்த கொண்டாட்டத்தில் அமெரிக்கா பங்கேற்றது. அமெரிக்க அதிபர் ரூஸ்வெல்ட் வியட்நாமை மீண்டும் பிரெஞ்சுக்காரர்களிடம் ஒப்படைப்பதை ஆதரிக்கவில்லை.

வியட்நாமை ஐ.நா. பாதுகாப்பின் கீழ் அல்லது தற்காலிகமாக சீனாவின் கட்டுப்பாட்டின் கீழ் வைக்க அவர் தயாராக இருந்தார்.

ஆகஸ்டின் போட்ஸ்டாம் ஒப்பந்தத்தின்படி, வியட்நாம் வடக்கு மற்றும் தெற்கு என்று பிரிக்கப்பட்டது.

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு பனிப்போர் தொடங்கிய போது, அமெரிக்காவின் பார்வையில், ஹோ சி மின் ஒரு தேசியவாத தேசபக்தர் அல்ல, ஒரு உறுதியான கம்யூனிஸ்டாகவும், 'மாஸ்கோவின் முகவராகவும்' இருந்தார்.

வி.கே.சிங் தனது 'ஹோ சி மின் அண்ட் ஹிஸ் வியட்நாம்' (ஹோ சி மின் மற்றும் அவரது வியட்நாம்) என்ற புத்தகத்தில், "மார்ச் 27, 1947 ட்ரூமன் கோட்பாடு, உள்நாட்டு கிளர்ச்சி, வெளிநாட்டு ஆக்கிரமிப்பு அல்லது கம்யூனிச ஆக்கிரமிப்பால் அச்சுறுத்தப்படும் ஒவ்வொரு நாட்டிற்கும் அமெரிக்கா எந்த வகையிலும் உதவும் என்றது. மே 8, 1950 அன்று, அமெரிக்கா வியட்நாமில் பிரான்சுடன் ஒரு மூலோபாய உதவி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. செப்டம்பர் 1953 -ல், அமெரிக்க நாடாளுமன்றம் 900 மில்லியன் டாலர் ராணுவ உதவியை அங்கீகரித்தது. 1954 வாக்கில், வியட்நாமில் பிரான்சின் போருக்கான செலவில் 80 சதவீதத்தை அமெரிக்கா ஏற்கத் தொடங்கியது." என்று எழுதுகிறார்.

1954 -ல், பிரான்ஸ் தியென் பியென் ஃபூவில் (வியட்நாமில் உள்ள ஒரு நகரம்) தோல்வியை சந்தித்தது. 7500 பிரெஞ்சு வீரர்கள் கொல்லப்பட்டனர், 10,000 பேர் போர்க் கைதிகளாக பிடிபட்டனர். ஜூலை 19, 1954 -ல், பிரான்ஸ்-வியட்நாம் போர் ஜெனீவா ஒப்பந்தத்தின் கீழ் முடிவுக்கு வந்தது.

தன்னை விட பல மடங்கு பெரிய சக்திகளுக்கு எதிராக போர்களை நடத்தி வெல்ல முடியும் என்பதை வியட்நாம் கற்றுக்கொண்டது.

அமெரிக்கா தனது முழு பலத்தையும் பிரயோகித்தது

Ho Chi Minh

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, வியட்நாம் போரில் அமெரிக்க வீரர்கள் (கோப்புப் படம்)

ஜெனீவா ஒப்பந்தங்களைத் தொடர்ந்து வியட்நாமை ஒன்றிணைப்பதற்கான பாதையைத் தேடுவதற்குப் பதிலாக, அமெரிக்க அதிபர் ஐசனோவரும் அவரது வெளியுறவுச் செயலர் ஜான் போஸ்டர் டல்லெஸும் பிராந்தியத்தில் கம்யூனிசம் பரவுவதைத் தடுக்கும் பொருட்டு தெற்கு வியட்நாமை ஒரு தனி நாடாக உருவாக்க முடிவு செய்தனர்.

வியட்நாமில் நேரடியாக அமெரிக்கத் தலையீட்டைத் தொடங்கிய முதல் அமெரிக்க அதிபர் ஐசனோவர் ஆவார். அதைத் தொடர்ந்து, கென்னடி, லிண்டன் ஜான்சன் மற்றும் ரிச்சர்ட் நிக்சன் ஆகியோரின் ஆட்சிக் காலத்தில் அமெரிக்காவின் தலையீடு அதிகரித்தது. ஜனவரி 27, 1965 அன்று, அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மெக் கெவர்ஸ் பண்டி மற்றும் பாதுகாப்பு செயலாளர் ராபர்ட் மெக் நமரா இருவரும் அதிபர் ஜான்சனிடம் வியட்நாமில் மட்டுப்படுத்தப்பட்ட ராணுவத் தலையீடு முற்றிலும் தோல்வியடைந்துவிட்டது என்று கூறினர்.

இப்போது அமெரிக்காவுக்கு இரண்டு வழிகள்தான் உள்ளன. ஒன்று அது இந்தப் போரில் முழுமையாகக் குதிக்க வேண்டும் அல்லது அங்கிருந்து முழுமையாக வெளியேற வேண்டும். பிப்ரவரி 6, 1965 அன்று, ஜான்சன் 'ஆபரேஷன் ஃபிளேமிங் டார்ட்' க்கு ஒப்புதல் அளித்தார்.

அமெரிக்கப் படைகள் பலமாக இருந்தபோதிலும், வடக்கு வியட்நாமின் ராணுவம் அவர்களுக்கு எதிராக கடுமையாக சண்டையிட்டது.

ஹோ சி மின்னின் வாழ்க்கை வரலாற்றில் டேவிட் லேன் பாம் , "ஹோ சி மின்னின் மூலோபாய தலைமையும் வடக்கு வியட்நாமின் கம்யூனிச ஆட்சியும் வியட்காங்கிற்கு (ஆயுதக் குழு) சண்டையைத் தொடர தேவையான வளங்களையும் கருத்தியல் ஆதரவையும் வழங்கின. அமெரிக்கர்கள் விரைவிலேயே தாங்கள் ஒரு ராணுவப் படையை எதிர்த்துப் போராடவில்லை, மாறாக மக்கள் அனைவரையும் எதிர்த்துப் போராடுகிறோம் என்பதை உணர்ந்தனர். இந்தப் போர் அமெரிக்காவிற்கு ஒரு புதைகுழியானது, அங்கு வெற்றிக்கு வாய்ப்பே இல்லை. அமெரிக்க ராணுவம் வியட்நாமில் ஹோ சி மின்னின் துருப்புகளிடம் இருந்து எதிர்ப்பை மட்டும் எதிர்கொள்ள வேண்டியிருக்கவில்லை, மாறாக போரின் அறநெறி மற்றும் செயல்திறன் குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டு அவர்களது சொந்த நாட்டிலேயே ஒரு போர்-எதிர்ப்பு இயக்கம் வேகம் பெற்று வந்தது." என்று குறிப்பிடுகிறார்.

கொரில்லா போர் முறைக்கு முக்கியத்துவம்

Ho Chi Minh

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பயிற்சியில் ஈடுபட்டு வரும் வியட்நாம் பெண்கள் (கோப்புப் படம்)

போர்க்காலம் முழுவதும், ஹோ சி மின் மாறிவரும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப மாற்றங்களை ஏற்படுத்த தயாராக இருக்கும் அசாதாரண திறனை வெளிப்படுத்தினார்.

வில்லியம் ஜே.டைக் தனது 'ஹோ சி மின் எ லைஃப்' (ஹோ சி மின் : ஒரு வாழ்க்கை ) என்ற நூலில், "போரின் போது வடக்கு வியட்நாமின் உறுதியைப் பேணுவதிலும், தேசியவாதம் மற்றும் சோசலிசம் என்ற பதாகையின் கீழ் வியட்நாம் மக்களை ஒன்றிணைப்பதிலும் ஹோவின் தலைமை முக்கிய பங்கு வகித்தது. மோதல் குறித்த அவரது புரிதல் மற்றும் கடினமான காலங்களில் அவரது உறுதியான தலைமை ஆகியவை அவரது வெற்றிக்கு முக்கிய காரணிகளாக இருந்தன." என்று எழுதுகிறார்.

ஹோ சி மின்னின் வெற்றிக்கு ஒரு முக்கிய காரணம் அவர் கொரில்லாப் போருக்கு அளித்த முக்கியத்துவமாகும். வியட்நாம் போன்ற காடுகள் சூழ்ந்த நாட்டில் வழக்கமான போர் நடத்த முடியாது என்பதை அவர் நன்கு அறிந்திருந்தார். கிராம மக்களுடன் வியட்காங் வீரர்கள் கலந்து அமெரிக்க வீரர்களை திடீரென தாக்கி காடுகளுக்குள்ளும் கிராமங்களுக்குள்ளும் மறைந்து விடுவது என்பதே அவரது உத்தியாக இருந்தது. அமெரிக்க வீரர்களுக்கு இந்த வகை போருக்கான பயிற்சி அளிக்கப்பட்டிருக்கவில்லை.

சீனாவுக்கும் சோவியத் யூனியனுக்கும் இடையிலான ஒத்துழைப்பு

Ho Chi Minh

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சோவியத் தலைவர்களுடன் ஹோ சி மின்

ஹோ சி மின்னின் வெற்றிக்கு மற்றொரு காரணம் சோவியத் யூனியனும் சீனாவும் வழங்கிய முழு ராணுவ மற்றும் அரசியல் ஆதரவாகும். 1957 -ல், ஹோ சி மின் சீனா சென்றார். முன்னாள் இந்திய வெளியுறவு அமைச்சர் நட்வர் சிங் தனது 'இதயத்திலிருந்து இதயத்திற்கு' என்ற நூலில் , "ஹோ பெய்ஜிங் சென்ற போது, மா சே துங் முதல் சூ என் லாய் மற்றும் லியு ஷாவோ சி வரை சீனாவின் ஒட்டுமொத்த உயர்மட்டத் தலைவர்களும் அவரை வரவேற்க விமான நிலையத்திற்குச் சென்றனர். செருப்பு அணிந்து கொண்டு விமானத்தில் இருந்து இறங்கினார். அவர் வெளியில் இருந்து மிகவும் மென்மையாகத் தோன்றலாம், ஆனால் அவரது எலும்புகள் இரும்பைப் போல வலுவாக இருந்தன. 1953 -ல் ஸ்டாலின் இறப்பதற்கு சில மாதங்களுக்கு முன்பு மாஸ்கோவில் அவரை ஹோ சி மின் சந்தித்தார்" என்று குறிப்பிடுகிறார்.

"இந்தக் கூட்டத்தில், ஸ்டாலின் இரண்டு நாற்காலிகளைச் சுட்டிக்காட்டி, ஹோவிடம் கேட்டார், இந்த நாற்காலிகளில் ஒன்று தேசியவாதிகளுக்கும் மற்றொன்று சர்வதேசியவாதிகளுக்கும் சொந்தமானது. இவற்றில் எதில் நீங்கள் அமர விரும்புகிறீர்கள்? 'தோழர் ஸ்டாலின், நான் இரண்டு நாற்காலிகளிலும் அமர விரும்புகிறேன்' என்று ஹோ பதிலளித்தார். ஹோவின் புத்திசாலித்தனத்தை ஸ்டாலின் வெகுவாகப் பாராட்டினார். ஹோ சி மின் மாஸ்கோவிலிருந்து பெய்ஜிங் வழியாக ரயிலில் ஹனோய்க்குத் திரும்புகையில், தன்னுடன் வந்த மா சே துங் மற்றும் சூ என் லாய் ஆகியோரிடம் இந்த சம்பவத்தை விவரித்தபோது, ஸ்டாலினிடமிருந்து எதையோ பெறுவது சிங்கத்தின் வாயிலிருந்து இறைச்சியைப் பறிப்பது போன்றது என்று அவர்கள் கூறினர்." என்று வில்லியம் டைக் எழுதுகிறார்.

79 வயதில் மரணம்

Ho Chi Minh

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 1958-ல் ஹோசிமின் இந்தியா வந்த போது, அப்போதைய இந்திய குடியரசுத் தலைவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத், பிரதமர் ஜவாஹர்லால் நேரு ஆகியோர் விமான நிலையத்தில் அவரை வரவேற்கும் காட்சி

ஹோ சி மின் மகாத்மா காந்தி மற்றும் ஜவஹர்லால் நேருவின் பெரும் அபிமானி. நேரு பிரதமராக இருந்தபோது இரண்டு முறை ஹோவை சந்தித்தார். 1954-ல் ஹனோயில் ஒரு முறையும், 1958-ல் டெல்லியில் ஒரு முறையும், ஹோ சி மின் இந்தியாவுக்கு அரசுமுறைப் பயணமாக வந்தபோது சந்தித்தார்.

அதே பயணத்தின் போது, ஹோ சி மின்னை இந்தியாவின் பிரபல எழுத்தாளர் அம்ரிதா ப்ரீதம் சந்தித்தார்.

தனது சுயசரிதையான ராசிடி டிக்கெட்டில் அவர், "ஹோ சி மின் என் நெற்றியில் முத்தமிட்டு, 'நாம் இருவரும் வீரர்கள். நீங்கள் பேனாவால் சண்டையிடுகிறீர்கள். நான் வாளால் போரிடுகிறேன்" என்று கூறியதாக குறிப்பிடுகிறார்.

1969-ம் ஆண்டின் முற்பகுதியில் அவர் இதய நோயால் பாதிக்கப்பட்டார். ஆகஸ்ட் மாதத்திற்குள் இந்த நோய் தீவிரமடைந்தது, செப்டம்பர் 2, 1969 அன்று காலை 9:45 மணிக்கு ஹோ சி மின் தனது 79 வயதில் இந்த உலகத்திலிருந்து விடைபெற்றார்.

வியட்நாம் முழுவதும் துக்கத்தில் மூழ்கியது, ஆனால் அவரது வாரிசுகள் தங்கள் நாட்டின் மண்ணில் ஒரு வெளிநாட்டவர் வாழும் வரை ஹோ சி மின்னின் கொள்கைகளைத் தொடருவோம் என்று கூறினர்.

அவரது இறுதிச் சடங்கில் சுமார் ஒரு லட்சம் பேர் கலந்து கொண்டனர். வியட்நாமுக்கு 121 நாடுகள் இரங்கல் செய்திகளை அனுப்பின. அமெரிக்கா ஒரு வார்த்தை கூட பேசாமல் ஒரு நாள் வியட்நாம் மீது குண்டு வீசுவதை நிறுத்தியது.

அவர் இறந்து ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு, 1975- ல் அமெரிக்கா அவரது நாட்டை விட்டு வெளியேற வேண்டியிருந்தது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cgj14l5jqqqo

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, ஏராளன் said:

செப்டம்பர் 2, 1969 அன்று காலை 9:45 மணிக்கு ஹோ சி மின் தனது 79 வயதில் இந்த உலகத்திலிருந்து விடைபெற்றார்.

வியட்நாம் முழுவதும் துக்கத்தில் மூழ்கியது, ஆனால் அவரது வாரிசுகள் தங்கள் நாட்டின் மண்ணில் ஒரு வெளிநாட்டவர் வாழும் வரை ஹோ சி மின்னின் கொள்கைகளைத் தொடருவோம் என்று கூறினர்.

உறுதிகொண்ட விடுதலை வீரர்களை உலகின் ஆதிக்க சக்திகள் ஏற்பதில்லை. விடுதலையை விரும்பும் மக்களும் உலகும் இருக்கும் விடுதலை வீரர்கள் மறைவதில்லை.

நட்பார்ந்த நன்றியுடன்

நொச்சி

  • கருத்துக்கள உறவுகள்

ஹோசி மின்னுக்கும் / வியட்னாமுக்கும் , சேலன்ஸ்கிக்கும் / உக்ரைனுக்கும் இடையில் எவ்வளவு பெரிய இடைவெளி.

வியட்னாம் ஐ எந்த கூட்டோடும் இணைப்பதற்கு ஹோசி மின் ஓ அவருக்கு பின் வியட்நாமோ முற்படவில்லை.

அது தன வியட்நாமின் போராட்டம் சுதந்திர போராட்டமாக எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

சேலன்ஸ்கி நேட்டோவில் இணையும் போராட்டமாக உக்கிரைன் இன் ரசிய எதிர்ப்பை வழிநடத்துகிறார்.

இதனால் தான் மேற்கு அல்லாத அநேகமான எல்லா நாடுகளும் உக்கிரேனுக்கு ஆதரவு இல்லை.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.