Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஹைப்பர்தைமீசியா என்பது அதிகமான நினைவாற்றல் கொண்ட ஒரு மருத்துவ நிலையாக ஆகும்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஹைப்பர்தைமீசியா என்பது அதிகமான நினைவாற்றல் கொண்ட ஒரு மருத்துவ நிலை ஆகும்.

கட்டுரை தகவல்

  • பாமினி முருகன்

  • பிபிசி தமிழ்

  • 28 நிமிடங்களுக்கு முன்னர்

கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். ஒரு 10 வருடங்களுக்கு முன் இதே நாள் இதே நேரத்தில் நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள் என நினைவிருக்கிறதா?

நம்மில் பெரும்பாலானோருக்கு துல்லியமாக நினைவிருக்க வாய்ப்பில்லை. ஒருவேளை தொழில்நுட்ப உதவியுடன் நம்மிடம் டைம் டிராவல் செய்யும் இயந்திரம் இருந்தால் போய் பார்த்துவிட்டு வரலாம். ஆனால் உலகில் ஒரு சிலருக்கு மட்டும் அது தேவையில்லை.

அவர்கள் வாழ்வில் நடந்த ஒவ்வொரு நாளையும், சிறிய விவரங்களைக் கூட துல்லியமாக நினைவில் வைத்திருப்பார்கள். உதாரணமாக அந்த நாளில் அவர்கள் அணிந்திருந்த உடை, சாப்பிட்ட உணவு, கேட்ட பாடல்கள் என அனைத்தையும் மூளையில் படம்பிடித்து வைத்திருப்பதைப் போல நினைவில் வைத்திருப்பார்களாம். மருத்துவ ரீதியாக இது ஹைப்பர்தைமீசியா (Hyperthymesia) எனக் குறிப்பிடப்படுகிறது.

ஹைப்பர்தைமீசியா என்றால் என்ன? ஒரு மனிதனுக்கு அதீத ஞாபக சக்தி இருப்பது வரமா? அல்லது சாபமா?

ஹைப்பர்தைமீசியா என்பது நோயா?

இதை 'மனம் சார்ந்த டைம் டிராவல்' என மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இதை 'மனம் சார்ந்த டைம் டிராவல்' என மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர்.

ஒருவருக்கு வழக்கமான நினைவாற்றலை விட, மிகவும் துல்லியமான விவரங்களைக் கூட நினைவில் வைத்துக்கொள்ளும் அளவிற்கு ஆட்டோபயாகிரஃபிகல் நினைவாற்றல் (Autobiographical Memory) இருப்பதை ஹைப்பர்தைமீசியா என மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர். இது மிகவும் அதீத ஆட்டோபயாகிரஃபிகல் நினைவாற்றல் (HSAM) எனவும் குறிப்பிடப்படுகிறது.

இன்னும் குறிப்பாக சொல்லவேண்டுமென்றால் இதை 'மனம் சார்ந்த டைம் டிராவல்' எனவும் குறிப்பிடுகின்றனர்.

"புதிதாக ஒன்றை கற்றுக்கொண்டு, அதை நினைவில் கொள்ளும் பொதுவான நினைவாற்றலில் (superior memory) இருந்து இது வேறுபடுகிறது. மாறாக சொந்த வாழ்க்கை தொடர்பான விஷயங்களையே எளிதாக நினைவில் கொள்ள முடியும்" என தேசிய சுகாதார நிறுவனத்தில் வெளியான (NIH) ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இர்வின் கலிஃபோர்னியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் (UCI), இதுபோல தங்கள் வாழ்க்கையின் தருணங்களை எளிதாக நினைவுகூரும் ஒரு குழுவின் மூளை மற்றும் மனதின் செயல்முறைகளில் உள்ள வேறுபாடுகளை கண்டறிந்தனர்.

இந்த அதீத ஆட்டோபயாகிரஃபிகல் நினைவாற்றல் முதன்முதலில் 2006ஆம் ஆண்டு UCI நரம்பியல் நிபுணர் ஜேம்ஸ் மெக்காக் மற்றும் சக ஊழியர்களால் ஆவணப்படுத்தப்பட்டது.

அதீத ஆட்டோபயாகிரஃபிகல் நினைவாற்றல் கொண்டவர்கள் வழக்கமான ஆய்வக நினைவாற்றல் சோதனைகளில் அதிக மதிப்பெண்கள் பெறவில்லை. "இருப்பினும், அவர்களின் வாழ்க்கையில் 10½ வயதிற்குப் பிறகு நடந்த நிகழ்வுகளை நினைவுகூர்வதில் குறிப்பிடத்தக்க வகையில் சிறந்தவர்களாக உள்ளனர்" என மெக்காக் கூறியதாக 2012ஆம் ஆண்டு வெளியான நியூரோசயின்ஸ் இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஹைப்பர்தைமீசியா என்பது நோய் கிடையாது என்கிறார் நரம்பியல் மருத்துவர் விஜய சங்கர்

படக்குறிப்பு, ஹைப்பர்தைமீசியா என்பது நோய் கிடையாது என்கிறார் நரம்பியல் மருத்துவர் விஜய சங்கர்

இது குறித்து விரிவான தகவல்களை தெரிந்துகொள்ள சென்னை அப்போலோ மருத்துவமனையின் நரம்பியல் பிரிவின் தலைமை மருத்துவர் விஜய சங்கரை தொடர்பு கொண்டோம்.

"தைமீசியா என்பது கிரேக்க வார்த்தை. இதற்கு ஞாபகம் வைத்துக்கொள்ளுதல் என்பது பொருள். ஹைப்பர்தைமீசியா என்பது அதிகமாக ஞாபகம் வைத்துக்கொள்ளுதல். முதலில் இது ஒரு நோய் கிடையாது. இது நரம்பியல் அறிவாற்றல் (neuro cognitive) தொடர்பான ஒரு மருத்துவ நிலை ஆகும்." என விளக்கினார்.

மேலும் "இது மிகவும் அரிதான ஒன்று. இந்த நிலையில் இருப்பவர்களுக்கு 10 - 12 வயது முதலே தங்கள் வாழ்க்கையில் நடந்த அனைத்தையும் பொரும்பாலும் நினைவில் வைத்துக்கொள்ள முடியும். இவர்களின் ஞாபகம் மிகவும் தெளிவாகவும், துல்லியமாகவும் இருக்கும்." என்றார்.

இந்த ஞாபக சக்தி கல்விக்கு உதவுமா?

தங்களின் சொந்த வாழ்க்கையில் நடந்த விஷயங்களை மட்டுமே துல்லியமாக நினைவில் கொள்ள முடியும் என மருத்துவர் விஜய சங்கர் கூறினார்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தங்களின் சொந்த வாழ்க்கையில் நடந்த விஷயங்களை மட்டுமே துல்லியமாக நினைவில் கொள்ள முடியும் என மருத்துவர் விஜய சங்கர் கூறினார்.

அப்படியென்றால் இவ்வளவு ஞாபக சக்தி இருக்கும் ஒருவரால் தாங்கள் படிக்கும் விஷயங்கள், புதிய தகவல்களை எளிதாக நினைவில் வைத்துக்கொண்டு தேர்வுகளில் எளிதாக நல்ல மதிப்பெண்களை பெற முடியும் என்று தானே நினைக்கிறீர்கள். அதுதான் இல்லை.

இதுகுறித்து மருத்துவர் விஜயசங்கர் கூறுகையில், "இதுபற்றி நிறைய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவர்களால் தங்களின் சொந்த வாழ்க்கையில் நடந்த விஷயங்களைதான் துல்லியமாக நினைவில் கொள்ள முடியும். அதேசமயம் படிப்பிலோ, புதிய தகவல்களை அறிந்துகொள்வதிலோ இது உதவாது. அவர்களும் மற்றவர்களைப்போல படித்து, மனப்பாடம் செய்ய வேண்டும்." என்கிறார்.

"ஆனால் படித்ததை மீண்டும் நினைவிற்கு கொண்டுவருவது வேண்டுமானால், மற்றவர்களை விட இவர்களுக்கு சற்று எளிதாக இருக்கும்." எனக் கூறினார்.

இதற்கான அறிகுறிகள் என்ன?

இதை 'மனம் சார்ந்த டைம் டிராவல்' என மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இதை 'மனம் சார்ந்த டைம் டிராவல்' என மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர்.

ஒருவேளை உங்களுக்கும் இந்த மருத்துவ நிலை இருக்கிறதா என்பதை சில அறிகுறிகள் மூலம் கண்டறியலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர். அதன்படி,

  • வழக்கத்திற்கு மாறான நினைவாற்றல் - உங்களின் அன்றாட வாழ்க்கையில் நடக்கும் தருணங்களை அதீத விவரங்களுடன் நினைவில் கொள்வது

  • தானாக நினைவுகொள்தல் - உங்களை அறியாமலேயே கடந்தகால தருணங்கள் நினைவில் தோன்றுவது. குறிப்பாக தேதி அல்லது சில குறிப்புகளை பார்க்கையில் இது தோன்றலாம்.

  • காலண்டரைப் போன்ற திறன் - ஒரு குறிப்பிட்ட தேதியில், பல தசாப்தங்களுக்கு முன்பும் கூட என்ன செய்து கொண்டிருந்தீர் என்பதையும் உடனடியாகக் கூறிவிடுவீர்கள்.

  • வலுவான உணர்வு பிணைப்பு - அந்த தருணம் நிகழும்போது நீங்கள் எப்படி உணர்ந்தீர்களோ, அதை நினைவில் கொள்ளும்போதும் அதே உணர்வு தோன்றும்.

  • நேரம் - சராசரி மக்களை விட கடந்த காலத்தைப் பற்றி அடிக்கடி சிந்திப்பீர்கள்.

அச்சு பிசகாத நினைவாற்றல்

HSAM நிலை கொண்ட நியூயார்க்கை சேர்ந்த ஜில் பிரைஸ்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, HSAM நிலை கொண்ட நியூயார்க்கை சேர்ந்த ஜில் பிரைஸ்.

இதுபற்றி 2017ஆம் ஆண்டு பிப். 8ஆம் தேதி 'தி கார்டியன்' இதழில் ஒரு கட்டுரை வெளியானது. பிரபல அமெரிக்க பத்திரிகையாளர் லிண்டா ரோட்ரிக்ஸ் மெக்ராபி இதனை தொகுத்திருந்தார். அதில் 1974ஆம் ஆண்டு நியூயார்க்கை சேர்ந்த ஜில் பிரைஸ் என்ற பெண்ணுக்கு HSAM எனப்படும் இந்த மருத்துவ நிலை முதன்முதலில் கண்டறியப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இவர் 1965-ல் பிறந்தவர்.

இந்த கட்டுரையின் படி, இவரிடம் 1980ஆம் ஆண்டு ஆகஸ்ட் 29 அன்று என்ன நடந்தது எனக் கேட்டபோது, "அது ஒரு வெள்ளிக்கிழமை" என தனது நினைவில் தோன்றியதை விவரிக்கிறார். தொடர்ந்து "எனது இரட்டை சகோதர நண்பர்களான நினா மற்றும் மைக்கேல் உடன் பாம் ஸ்பிரிங்ஸ் சென்றேன். அதற்கு முன்பாக அவர்கள் வாக்ஸிங் செய்துகொண்டனர். அப்போது வலியால் கத்திக்கொண்டே இருந்தார்கள்" என சிறிய விவரங்களையும் நேற்று நடந்ததைப் போல அச்சுப் பிசகாமல் விரிவாக விவரித்தார்.

இவர் தனது 51 வயதிலும், 1980 முதல் என்ன நடந்தது என்பதை அவ்வளவு நுணுக்கமாக நினைவில் வைத்துள்ளதாக அந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் சில சமயங்களின் அவரின் விருப்பமின்றியே நிறைய விஷயங்கள் அவரின் நினைவில் உதிப்பதாகவும் கூறினார்.

51 வயதிலும் இவரின் நினைவுகள் துல்லியமாக இருப்பது பற்றி மருத்துவர் விஜய சங்கரிடம் கேட்டபோது, "இந்த நிலை கொண்டவர்களுக்கு வயதாக ஆக ஞாபகங்கள் மறைந்துவிடும் என்பதற்கு எந்த ஆதாரங்களும் இல்லை. 70 - 80 வயதுகளில் கூட இவர்களால் துல்லியமாக கடந்த காலத்தை நினைவுகூர முடியும்" என்றார்.

ஜில் பிரைஸ் தொடர்பான மெக்காக்-ன் ஆய்வறிக்கை வெளியான பின்பு, 2007ல் பிராட் வில்லியம்ஸ் என்பவருக்கு இந்த நிலை இருப்பதாக மெக்காக்-ஐ நாடினார். 2வதாக இவருக்கு இந்த நிலை உறுதி செய்யப்பட்டது. பின் 3வதாக ரிக் பாரன், 4வதாக பாப் பெட்ரெல்லா என அவரின் ஆய்வறிக்கை வெளியான பிறகு பலரும் இந்த மருத்துவ நிலை இருப்பதாக தன்னை தொடர்புகொண்டதாக மெக்காக் குறிப்பிடுகிறார்.

2011ஆம் ஆண்டில் இந்த HSAM மருத்துவ நிலை பற்றி பெரும்பாலானோருக்கு தெரிந்திருந்தாலும். அப்போதுவரை உலகிலேயே 22 பேருக்கு மட்டுமே இந்த நிலையை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்ததாக தி கார்டியனில் வெளியான கட்டுரை கூறுகிறது.

இதற்கு காரணம் என்ன?

பிரபல அமெரிக்க நரம்பியல் நிபுணர் ஜேம்ஸ் மெக்காக்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பிரபல அமெரிக்க நரம்பியல் நிபுணர் ஜேம்ஸ் மெக்காக்

"ஒரு தருணம் எந்தளவிற்கு உணர்வுப்பூர்வமாக அதிக தாக்கத்தை ஏற்படுத்துகிறதோ அந்தளவிற்கு அது நினைவில் கொள்ளப்படுகிறது" என நினைவாற்றல் பற்றி பிரபல அமெரிக்க நரம்பியல் நிபுணர் ஜேம்ஸ் மெக்காக் ஆய்வு கூறுகின்றன.

நேர்மறையாகவோ அல்லது எதிர்மறையாகவோ சுவாரஸ்யத்தை சற்று தூண்டும் விதமான உணர்வு ஏற்படும்போது, அது அட்ரீனல் ஸ்ட்ரெஸ் (adrenal stress) ஹார்மோன்களை வெளியேற்றும்.

இந்த ஹார்மோன்கள் மூளையில் உணர்வுகளை செயல்படுத்தும் பகுதியான அமிக்டலாவை (amygdala) செயல்படுத்தும். இந்த அமிக்டலா இது முக்கியமான தருணம் எனவும், இதை நினைவில் கொள்ள வேண்டும் எனவும் மூளையின் மற்ற பகுதிகளுக்கு சிக்னல் கொடுக்கும். இந்த முறைதான் நமது நினைவுகள் எவ்வளவு வலிமையாகின்றன என்பதை தீர்மானிக்க உதவுகிறது." என மெக்காக் விளக்குகிறார்.

"சாதாரண நினைவாற்றல் கொண்ட நபர்களை விட HSAM நிலை கொண்டவர்களால் எளிதில் பழைய நினைவுகளை நினைவுகூர முடியும்" என UCI நரம்பியல் பட்டதாரி மாணவர் அரோரா லிபோர்ட் மற்றும் நரம்பியல் நிபுணரும், டாக்டர் க்ரைக் ஸ்டார்க் மே 12ஆம் தேதி வெளியிட்ட கற்றல் மற்றும் நினைவாற்றல் பற்றிய நியூரோபயாலஜி இதழ் (The Journal Neurobiology of Learning and Memory) ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை இந்த நினைவுகளை சரிபார்த்தால் இவை 87% உண்மையானதாகவே இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூளையின் அமிக்டலா பகுதி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மூளையின் அமிக்டலா பகுதி

ஆய்வுகளில் கிடைத்த தகவல்கள்

சமீபத்தில் பிரான்ஸை சேர்ந்த 17 வயது சிறுமிக்கு இந்த மருத்துவ நிலை உள்ளது கண்டறியப்பட்டுள்ளதாக செப்டம்பர் 1ஆம் தேதி PsyPost செய்தி வெளியிட்டுள்ளது. இந்த சிறுமியை பாரிஸ் பல்கலைக்கழகத்தில் உள்ள நரம்பியல் விஞ்ஞானிகள் ஆய்வுக்கு உட்படுத்தி வருகின்றனர்.

"சிறுவயதில் தனக்கு கடந்த கால நிகழ்வுகளை மனதில் ஓட்டிப்பார்க்கும் திறன் இருப்பதாக கூறியுள்ளார். அப்போது இவரை யாரும் நம்பவில்லை. பின் தனது 16 வயதில்தான் இதுபற்றி பெற்றோரிடம் கூறியுள்ளார்" என அந்த கட்டுரை கூறுகிறது.

இது பற்றி கடந்த ஆகஸ்ட் மாதம் தேசிய சுகாதார நிறுவனத்தில் வெளியான (NIH), ஆராய்ச்சியாளர் வாலண்டினா லா கோர்டேவின் ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. கடந்த காலத்தில் குறிப்பிட்ட நாளின் வானிலை முதற்கொண்டு துல்லியமாக கூறும் இவரின் இந்த திறன் கல்வியறிவில் எடுபடவில்லை. படிப்பு சார்ந்தவை என வரும்போது அதன் நினைவுகள் தானாக வருவதில்லை. தாமாக முயன்றால் மட்டுமே ஞாபகம் வரும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த ஆய்வறிக்கையின்படி, இவரின் சுயசரிதை நினைவாற்றலை மதிப்பிட இருமாதிரியான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் தனது வாழ்நாளில் 5 கட்டங்களில் இருந்து 4 தருணங்களை நினைவுகூரச் செய்தனர். இதில் இவருக்கு எந்தளவுக்கு துல்லியமாக தருணங்களை நினைவில் கொள்ள முடிகிறது என பரிசோதிக்கப்பட்டது.

இரண்டு முக்கிய மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டன. ஒன்று ஒட்டுமொத்த நினைவக மதிப்பெண். மற்றொன்று குறிப்பிட்ட மற்றும் விரிவான நினைவுகளை மட்டுமே உள்ளடக்கிய ஒரு எபிசோடிக் மெமரி (EM).

"இந்த பரிசோதனையில் இவருக்கு கடந்த கால நினைவுகள் தெளிவாக இருந்தன. அவை மீண்டும் நடப்பது போல் அடிக்கடி அவர் உணர்கிறார். மனம் சார்ந்த இவரின் காலத்தை கடக்கும் ஆற்றல் கடந்த காலத்திற்கு மட்டுமல்ல எதிர்காலத்திற்கும் செல்கின்றன. இவரால் தனது எதிர்கால நிகழ்வுகளையும் விரிவாக கணிக்க முடிகிறது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சமீபத்திய கண்டுபிடிப்புகளுடன் இது ஒத்துப்போகிறது. இது அந்த சிறுமிக்கு வலுவான சுய விழிப்புணர்வு மற்றும் முன் அனுபவ உணர்வுடன் இருப்பதை காட்டுவதாக குறிப்பிடுகிறது.

வரமா? சாபமா?

இது ஆசிர்வாதம் அல்ல, சுமை என்கிறார் ஜில் பிரைஸ்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இது ஆசிர்வாதம் அல்ல, சுமை என்கிறார் ஜில் பிரைஸ்

ஹைப்பர்தைமீசியா நிலையைக் கொண்டவர்களும் ஆராய்ச்சியாளர்களும் இதுபற்றி என்ன கூறுகிறார்கள்?

"பலரும் இதை ஆசிர்வாதம் என நினைக்கிறார்கள். ஆனால் இது ஒரு சுமை" என்கிறார் ஜில் பிரைஸ். "தினமும் எனது ஒட்டுமொத்த வாழ்க்கையும் என் தலைக்குள் ஓடிக்கொண்டிருக்கிறது. இது என்னை பைத்தியமாக்குகிறது" என்கிறார்.

"இது பிளவு திரை (Split Screen) உடன் வாழ்வது போல இருக்கும். இடதுபுறம் நிகழ்காலமும், வலதுபுறத்தில் கடந்த கால நினைவுகளும் ஓடிக்கொண்டிருக்கும்" என தி கார்டியன் கட்டுரைக்கு விவரித்திருந்தார்.

"நாம் நினைவில் இல்லாததை மறதி எனக் கூறுகிறோம். ஆனால் சிறிய தகவல்களை சேமித்து வைப்பதால் என்ன பயன். அதன்மூலம் ஏதாவது பயனுள்ளதை வெளிக்கொணர வேண்டும். அப்போது தான் அது அறிவு அல்லது ஞானமாக மாறும்" என நரம்பியல் மருத்துவர் க்ரைக் ஸ்டாக் கூறுகிறார்.

"நினைவு என்பது கடந்த காலத்தை நோக்கியது. உங்கள் கடந்தகால அனுபவங்கள் இங்கே, இப்போது மற்றும் எதிர்காலத்திற்கு ஏற்றவாறு உங்களை மாற்றிக்கொள்ளும் திறன் கொண்டவர்களாக மாற்றும் வகையில் இருக்கிறது." என ஆராய்ச்சியாளர் லிபோர்ட் கூறுகிறார்.

"ஒரு சிலருக்கு மட்டுமே இந்த நிலை இருப்பதால், ஹைப்பர்தைமீசியாவை ஒரு வரையறைக்குள் கொண்டுவருவது கடினம். வயதாக ஆக இவர்களின் நினைவாற்றல் குறையுமா? இவர்களின் இந்த மனம் சார்ந்த டைம் டிராவல் வயதை பொருத்ததா? நினைவுகள் தோன்றுவதை இவர்களால் கட்டுப்படுத்த முடியுமா? என எங்களுக்கு இதில் பல கேள்விகள் உள்ளன. இவை இன்னும் கண்டறியப்பட வேண்டும்." என லா கோர்டே தெரிவித்துள்ளார்.

இதற்கு தீர்வு உண்டா?

இதற்கு மருத்துவமோ, தீர்வோ கிடையாது என்கிறார் மருத்துவர் விஜய சங்கர்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இதற்கு மருத்துவமோ, தீர்வோ கிடையாது என்கிறார் மருத்துவர் விஜய சங்கர்.

"இந்த நிலை இருப்பவர்களால் எதையும் மறக்க முடியாது என்பதே இவர்களுக்கு பின்னடைவாகவும் உள்ளது." என்கிறார் மருத்துவர் விஜய சங்கர்.

மேலும் பேசிய அவர், "சாதாரணமாக நம்மை பொறுத்தவரை காலப்போக்கில் சில விஷயங்களை மறந்துவிட முடியும். ஆனால் இவர்களால் ஒரு இழப்பையோ, மறக்க நினைக்கும் விஷயங்களையோ, அதிர்ச்சியளிக்கும் தருணங்களையோ இவர்களே நினைத்தாலும் மறக்க முடியாது. இதனால் இவர்களால் அந்த துயரில் இருந்து மீளவே முடியாமல் போகும்" என்கிறார்.

"இதனால் Obsessive compulsion ஏற்படும். அதாவது மீண்டும் மீண்டும் அதைப்பற்றியே யோசிக்கத் தோன்றும். இதனால் அவர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாவதற்கான வாய்ப்பும் அதிகம் உள்ளது." எனவும் கூறினார்.

இந்த மருத்துவ நிலையை சரிசெய்ய வழி உண்டா என அவரிடம் கேட்டபோது, "இது நோய் இல்லை என்பதால் இதற்கு தனியாக மருத்துவமோ, தீர்வோ கிடையாது. பொதுவாக இந்த நிலை இருப்பவர்கள் யோகா அல்லது தியானம் செய்வதன் மூலம் மனதை சற்று தளத்த் முடியும். சரியான நேரத்திற்கு சாப்பிட்டு, தூங்க வேண்டும் என பரிந்துரைப்போம். மேலும் அவர்கள் மன அழுத்தத்திற்கு சென்று விடாமல் இருக்க, ஆலோசனைகளும் வழங்கப்படும்." என்றார்.

மேலும், "ஒரு வகையில் அவர்களின் நினைவாற்றல் வரம் என்றாலும், அதிலும் சில கஷ்டங்கள் இருக்கும். சில சமயங்களில் மனநல ஆலோசனைகள் வழங்குவது அவர்களுக்கு உதவியாக இருக்கும்." என்றார் அவர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cn4wwyz82d0o

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஏராளன் said:

இது ஆசிர்வாதம் அல்ல, சுமை என்கிறார் ஜில் பிரைஸ்

ஹைப்பர்தைமீசியா நிலையைக் கொண்டவர்களும் ஆராய்ச்சியாளர்களும் இதுபற்றி என்ன கூறுகிறார்கள்?

"பலரும் இதை ஆசிர்வாதம் என நினைக்கிறார்கள். ஆனால் இது ஒரு சுமை" என்கிறார் ஜில் பிரைஸ். "தினமும் எனது ஒட்டுமொத்த வாழ்க்கையும் என் தலைக்குள் ஓடிக்கொண்டிருக்கிறது. இது என்னை பைத்தியமாக்குகிறது" என்கிறார்.

"இது பிளவு திரை (Split Screen) உடன் வாழ்வது போல இருக்கும். இடதுபுறம் நிகழ்காலமும், வலதுபுறத்தில் கடந்த கால நினைவுகளும் ஓடிக்கொண்டிருக்கும்" என தி கார்டியன் கட்டுரைக்கு விவரித்திருந்தார்.

இது ஒரு சுமையாகவே இருக்கும் என்று தான் எனக்கும் தோன்றுகின்றது. இந்த மாதிரியான அச்சொட்டான ஞாபகசக்தி இல்லாமல், ஒருவருக்கு இருக்க வேண்டிய சாதாரண ஞாபகசக்தியை விட கொஞ்சம் அதிகமாக இருந்தாலே சில தர்மசங்கடங்கள் ஏற்பட்டுவிடுகின்றது.

சில வருடங்களின் முன், 30 வருடங்களின் பின் ஒரு நண்பனைச் சந்தித்தேன். அவன் கடைசியாக ஊரில் இருந்த போது அவனிடம் ஒரு சிறிய கீபோர்ட் இருந்தது. மேற்கு நாடுகளில் எங்களின் பிள்ளைகளுக்கு அவர்கள் சிறுவர்களாக இருக்கும் போது வாங்கிக் கொடுக்கும் பொம்மை, பிளாஸ்டிக் கீபோர்ட் போன்றது அது. அதில் சில அடிப்படை இசைத் துணுக்குகளை உருவாக்கலாம். அப்பொழுது அக்னி நட்சத்திரம் படத்திலிருந்து 'ராஜா................. ராஜாதி ராஜா இந்த ராஜா.......................' பாடல் மிகப் பிரபலமாக இருந்தது. நண்பன் அதைப் போன்ற ஒன்றை அவனிடம் இருந்த கீபோர்ட்டில் உருவாக்கி, ஒரு நாள் எங்களுக்கு வாசித்துக் காட்டியிருந்தான்.

நான் இதை அவனிடம் சொன்ன போது, அவன் அப்படி ஒரு விடயம் நடக்கவேயில்லை என்று மறுத்துவிட்டான். அவனிடம் அப்படி ஒரு கீபோர்ட் இருக்கவும் இல்லை என்றும் சொன்னான். ஆனால் அந்த ஞாபகம் இன்றும் அப்படியே என்னிடம் இருக்கின்றது.

கடல், மிகச் சிறிய திறந்த கடற்கரை, அதையொட்டி பிரதான வீதி, வீதியின் இந்தப் பக்கமாக அவனின் வீடு. முன்பக்கம் தலைவாசலும், சுற்றுச் சுவரும் உள்ளது அவன் வீடு. முற்றம் தாண்டிச் சென்றால், வீட்டின் வலக்கை பக்கம் இருக்கும் சிறிய அறையிலேயே நாங்கள் அன்று இந்தப் பாடலை கேட்டோம்.

பின்னர் சுனாமியில் அந்த அறை உடைந்து போயிருந்தது.

Edited by ரசோதரன்

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 23/9/2025 at 07:17, ரசோதரன் said:

நான் இதை அவனிடம் சொன்ன போது, அவன் அப்படி ஒரு விடயம் நடக்கவேயில்லை என்று மறுத்துவிட்டான்.

சரி, உங்களையாவது நினைவில் வைத்திருந்தாரா?

வெளியே உரத்துச் சொல்லிப்போடாதேயுங்கோ பிடிச்சுக்கொண்டுபோய் பரிசோதனை எலியாக்கி விடுவார்கள் உங்களை.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.