Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எதிர்கால சந்ததியினருக்கு பாதுகாப்பான உலகை உருவாக்க முழு மனதுடன் உறுதியெடுப்போம் : ஐ.நா.பொதுச் சபையில் ஜனாதிபதி உலகத் தலைவர்களுக்கு அழைப்பு - முழுமையான உரை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

25 Sep, 2025 | 11:48 AM

image

எதிர்கால சந்ததியினருக்கு பாதுகாப்பான உலகை உருவாக்குவதற்கு முழு மனதுடன் அர்ப்பணிப்போம் என்று ஐக்கிய நாடுகள் சபையின் 80 ஆவது பொதுச் சபை அமர்வில் உரையாற்றிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, உலகத் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

அதன்போது, ஒருவருக்கொருவர் எதிராகச் செல்வதற்குப் பதிலாக, ஒருவருக்கொருவர் கைகோர்த்துச் செல்லும் பயணத்தை நாம் மேற்கொள்ள வேண்டும் என்று ஜனாதிபதி வலியுறுத்தினார்.

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 80 ஆவது அமர்வு, நியூயோர் நகரில் ஐக்கிய நாடுகள் சபை தலைமையகத்தில் ஆரம்பமானதுடன், இலங்கை நேரப்படி இன்று (25) காலை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அமர்வில் உரையாற்றினார்

காசா பகுதியில் தொடர்ந்து இடம்பெரும் கொடூரமான பேரழிவு குறித்து கவலை தெரிவித்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, ஐக்கிய நாடுகள் சபை மற்றும் ஏனைய அனைத்து தரப்பினரின் இணக்கப்பாட்டுடன் இரு தரப்பும் உடனடியாக போர்நிறுத்தத்தில் ஈடுபடுவதுடன், அனைத்து மனிதாபிமான உதவிகளையும் தடையின்றி வழங்கவும், அனைத்து தரப்பிலிருந்தும் பணயக்கைதிகளை விடுவிக்க குரல் எழுப்புவதாகவும் வலியுறுத்தினார். இந்த கொடூரமான கொலைகளை நிறுத்துவதற்கு வலுவான அழுத்தம் கொடுக்கப்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

ஆயுதங்கள் மூலம் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குப் பதிலாக, மனித நாகரிகத்தின் மதிப்புகள் மூலம் பிரச்சினைகளைத் தீர்க்கும் திறனிற்கு அனைவரும் செல்ல வேண்டும் என்று ஜனாதிபதி வலியுறுத்தினார்.

மேலும், பல உலகளாவிய பிரச்சினைகளை உருவாக்கியுள்ள வறுமை குறித்து தனது உரையில் சிறப்பு கவனம் செலுத்திய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, சமத்துவமின்மை மற்றும் வறுமையை உலகளாவிய பேரழிவாகக் கருதி அவற்றை நிவர்த்தி செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார்.

உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்களைப் பாதிக்கும் ஒரு சிக்கலான சவாலாக மாறியுள்ள உலகளாவிய போதைப்பொருள் பிரச்சினையை ஒழிக்க இலங்கை எடுத்துள்ள சாதகமான நடவடிக்கைகளையும் இங்கு எடுத்துரைத்த ஜனாதிபதி, உலக சுகாதாரம், உலக ஜனநாயகம், உலக அரசியல் மற்றும் உலக நல்வாழ்விற்கு சவாலாக அமைந்துள்ள போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கான உலகளாவிய நிகழ்ச்சி நிரலை செயல்படுத்த உலகத் தலைவர்கள் இணைய வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார்.

போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு எதிரான சட்டத்தை கடுமையாக அமுல்படுத்துவது, அவ்வாறான கடத்தல்காரர்கள் அந்தந்த நாடுகளுக்கு இடம்பெயர்வதற்கான வாய்ப்புகளை அதிகரிப்பது மற்றும் போதைக்கு அடிமையான புனர்வாழ்வு நிலையங்களை உருவாக்குவது குறித்த விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதி உலகத் தலைவர்களின் கவனத்திற்கு கொண்டுவந்தார்.

சமூகத்தில் பாரிய அழிவுகளையும் அவலங்களையும் ஏற்படுத்தும் ஊழல், அபிவிருத்திக்கு தடையாக இருப்பதுடன் ஜனநாயகம் மற்றும் உலக நலனுக்கு தீர்க்கமான அச்சுறுத்தல் மற்றும் வறுமைக்கும் காரணமாகின்றன என இங்கு சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, ஊழலுக்கு எதிரான போராட்டம் கடினமான நடவடிக்கையாக இருந்தாலும், அடுத்த தலைமுறைக்காக இலங்கை அதை ஆரம்பித்துள்ளதுடன், ஊழலுக்கு எதிரான போராட்டம் ஒவ்வொரு நாட்டின் கலாசாரத்தின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்றும் பரிந்துரைத்தார்.

இருளுக்கு பதிலாக ஒளியின் பாதையைத் தேர்ந்தெடுத்த இலங்கை மக்கள் இன்று ' வளமான நாடு - அழகான வாழ்க்கை' என்ற நடைமுறை தொலைநோக்குப் பார்வையைச் சுற்றி ஒன்றுபட்டுள்ளனர் என்று மேலும் தெரிவித்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இந்த வரலாற்றுச் சாதனையை நனவாக்க, ஊழலற்ற நெறிமுறைமிக்க நிர்வாகம், வறுமை ஒழிப்பு, டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் தூய்மையான நாடு ஆகிய முக்கிய துறைகளில் அவதானம் செலுத்தியுள்ளதுடன், அதனுடன் இணைந்தவகையில் கல்வி, சுகாதாரம் ஆகியவற்றில் மிகுந்த கவனம் செலுத்தப்பட்டுள்ளதுடன், படிப்படியாக அவை அனைத்தும் வெற்றிகொள்ளப்படுவதாகவும் குறிப்பிட்டார்.

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 80 ஆவது அமர்வில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஆற்றிய முழுமையான உரை கீழே பின்வருமாறு,

தலைவர் அவர்களே, சிறப்பு விருந்தினர்களே, அதிதிகளே,

உலக நாடுகளிடையே நீதியான மற்றும் நீடித்த அமைதியை நிலைநாட்டிப் பேணுவதை உன்னத குறிக்கோளாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த தனித்துவமான அமைப்பின் 80 ஆவது அமர்வின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட, ஐரோப்பாவின் மையப்பகுதியில் உள்ள அற்புதமான ஜெர்மனியைச் சேர்ந்த அதிமேதகு அந்தெலேனா பெயபெராக் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், உலகையே வியக்க வைக்கும் புவியியல் மற்றும் கலாசார பன்முகத்தன்மை கொண்ட நாடான கேமரூனின் முன்னாள் ஜனாதிபதி அதிமேதகு பிலிமோன் யாங் வழங்கிய தலைமைத்துவத்திற்கு இலங்கை தனது பாராட்டுகளைத் தெரிவிக்க இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்கிறேன்.

அமைதியும் ஜனநாயகமும் நிறைந்த அழகிய உலகத்திற்காக எட்டு தசாப்தங்களாக தன்னை அர்ப்பணித்துள்ள ஒரு அமைப்பின் பல்தரப்புப் போக்கிற்கும் எதிர்காலத்திற்கும் திட்டங்கள் வகுக்கப்படும் இந்தச் சிறப்புச் சந்தர்ப்பத்தில் இலங்கையின் ஜனாதிபதி என்ற முறையில் முதல் தடவையாக இந்த கௌரவமான சபையில் உரையாற்றுவதையிட்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.

இந்த உலகின் பல்வேறு நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நீங்கள் ஒவ்வொருவரும் அந்தந்த நாட்டு மக்களின் பிரதிநிதிகள். எனது நாடான இலங்கையைப் போலவே, ஏனைய எல்லா நாட்டு மக்களாலும் எங்களிடம் ஒப்படைக்கப்பட்ட வரலாற்றுப் பொறுப்பு நம் அனைவரின் தோள்களிலும் சுமத்தப்பட்டுள்ளது. நாம் எடுக்கும் ஒவ்வொரு முடிவும் இந்த உலகில் எங்கேனும் வாழும் அனைவரையும் பாதிக்கிறது. அந்த முடிவுகள் மற்றும் தீர்மானங்கள் அனைத்தும் உலகின் எதிர்கால இருப்பிற்கு ஒரு தீர்க்கமான பங்களிப்பைச் செய்கின்றன.

மனித நாகரிகத்தின் தொடக்கத்தில் இருந்து எதிர்கொள்ளும் மிகக் கடுமையான துயரமாக வறுமையை அறிமுகப்படுத்தலாம். அந்தப் பாரிய பேரழிவின் விளைவாக எழுந்த பல கடுமையான பிரச்சினைகள் நம் முன் ஒரு இருண்ட துயரத்தை உருவாக்கியுள்ளன.

இந்த சிறப்பு மாநாட்டின் கவனம் அதில் குவிய வேண்டும் என்று என் மனசாட்சி உரக்கச் சொல்கிறது. பெரும்பாலும் இவை அனைத்தும் உங்கள் மனசாட்சியை ஓரளவுக்கேனும் பாதிக்கும் என்று நான் நினைக்கிறேன்.

மதிப்பிற்குரிய பிரதிநிதிகளே, வறுமை என்பது உலகின் பெரும்பாலான நாடுகளில் பல நூற்றாண்டுகளாக அனுபவித்து வரும் ஒரு தொடர்ச்சியான மற்றும் மிகவும் வேதனையான போராட்டமாக அடையாளப்படுத்தலாம். இது பல வடிவங்களில் வரும் ஒரு பயங்கரமான எதிரி, இந்த மாநாட்டில் நாங்கள் கூடியிருக்கும் தருணத்தில் கூட, நான் உட்பட இந்த ஒவ்வொரு பிரதிநிதிகளின் நாடுகளிலும் கணிசமான எண்ணிக்கையிலான குழந்தைகள் பட்டினியால் வாடுகிறார்கள். அனைத்து பிள்ளைகளுக்கும் கல்வி கற்கும் உரிமை என்பது சர்வதேச மனித உரிமைகள் சட்டத்தால் உத்தரவாதம் அளிக்கப்பட்டு அரசியலமைப்பில் அங்கீகரிக்கப்பட்ட ஒரு அடிப்படை மனித உரிமையாகும். ஆனால் உலகம் முழுவதும் இலட்சக்கணக்கான குழந்தைகள் ஏழ்மை மற்றும் வறுமை காரணமாக இந்த உரிமை மறுக்கப்படுகிறார்கள்.

தொழில்நுட்பம் நிறைந்ததாக பெருமை பேசும் உலகில், குழந்தைகள் பாடசாலைக் கல்வியை இழப்பது எவ்வளவு துரதிர்ஷ்டவசமானது? ஒவ்வொரு பாரிய தேசத்தையும் கட்டியெழுப்புவதற்கான அடித்தளம் கல்வி ஆகும். எதிர்கால உலகின் இருப்பை தீர்மானிக்கும் முக்கிய காரணியாகும். கல்வியில் முதலீடு செய்வதை உலக முன்னேற்றத்திற்கான முதலீடாக நாங்கள் கருதுகிறோம். பல அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளில் வறுமையை நிவர்த்தி செய்வதில், முன்னேற்றத்திற்கு கடன் சுமைகள் தொடர்ந்து தடையாக உள்ளன. பொதுவாக, குறைந்த வருமான நாடுகள் சுகாதாரம் அல்லது கல்வி சேவைகளை விட நிகர வட்டி செலுத்துதல்களுக்கு இரண்டு மடங்கு அதிகமான நிதியை ஒதுக்குகின்றன. பிரஜைகளாகவும் நாடுகளாகவும் நாம் கடன் பொறிகளில் சிக்கிக் கொண்டுள்ளோம். இந்த சூழ்நிலைக்கு ஒரு சாதகமான தீர்வு அவசியம். நிலைபேறான அபிவிருத்திக்கான 2030 நிகழ்ச்சி நிரல், யாரையும் கைவிடாது என்றும் முதலில் பின்தங்கியவர்களை சென்றடையவும் உறுதியளிக்கிறது.

இன்று உலகம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய உலகளாவிய சவாலான வறுமையை ஒழிக்கும் சவாலை நிலைபெறு அபிவிருத்திக்கான 2030 நிகழ்ச்சி நிரல் அடையாளம் கண்டுள்ளது. 1995 ஆம் ஆண்டு கோபன்ஹேகனில் நடைபெற்ற சமூக அபிவிருத்திக்கான உலக உச்சி மாநாட்டில் எடுக்கப்பட்ட ஒரு முக்கியமான முடிவை உங்கள் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன். இருப்பினும், எதிர்பாராத யுத்தங்கள், அரசியல் கொந்தளிப்புகள் மற்றும் உலகமே புயலில் சிக்கிய கோவிட் தொற்றுநோய் ஆகியவை இலட்சிய நிகழ்ச்சி நிரலை சீர்குலைத்துள்ளன. எனவே, ஏழை பணக்காரர் இடைவெளி மற்றும் வறுமையை ஒரு உலகளாவிய பேரழிவாக நாம் கருத வேண்டும்.

மதிப்பிற்குரிய தலைவர் அவர்களே, கௌரவ விருந்தினர்களே, இந்த அற்புதமான உலகை சீர்குலைத்து, குழப்பும் புதிய பிரச்சனையாக போதைப்பொருள் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களை அடையாளம் காண முடியும். ஐக்கிய நாடுகளின் போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பான அலுவலகம் அதன் 2025 உலக போதைப்பொருள் அறிக்கையில் கூட இதை உறுதிப்படுத்தியுள்ளது. உலகளாவிய போதைப்பொருள் பிரச்சனை உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்களை பாதிக்கும் ஒரு சிக்கலான சவாலாக மாறியுள்ளது. நாளுக்கு நாள், போதைப்பொருள் மற்றும் தொடர்புடைய பொருட்கள் உலக சந்தையை வேகமாக ஆக்கிரமித்துள்ளன. போதைப்பொருள் வர்த்தகமும் அதன் மூலம் செயல்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றமும் பல உலக நெருக்கடிகளுக்கு வழி வகுத்துள்ளன.

இவற்றில் ஈடுபட்டுள்ள குழுக்கள் நாடுகளை இரையாக மாற்றுகின்றன. இந்த கொள்ளைநோய் உலக சுகாதாரம், உலக ஜனநாயகம், உலக அரசியல் மற்றும் இறுதியாக உலக நல்வாழ்வுக்கு எதிரான ஒரு பெரிய போக்காக மாறியுள்ளது. இலங்கையில் இந்த பெரும் கொள்ளைநோயை ஒழிப்பதற்கான ஒரு சாத்தியமான திட்டத்தை நாங்கள் செயல்படுத்தி வருகிறோம், மேலும் இந்த அச்சுறுத்தலை ஒழிப்பதற்கான உலகளாவிய நிகழ்ச்சி நிரலை செயல்படுத்துமாறு நான் உங்களை கௌரவத்துடன் அழைக்கிறேன். இந்த கடத்தல்காரர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமுல்படுத்துதல், அத்தகைய கடத்தல்காரர்கள் தத்தமது நாடுகளுக்கு குடிபெயர்வதைத் தடுத்தல் மற்றும் இந்த போதைப்பொருட்களுக்கு அடிமையானவர்களின் மறுவாழ்வு மையங்களை நிறுவுதல் போன்ற அநேக விடயங்களை உங்கள் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன்:

ஊழலுக்கு எதிரான போராட்டம் ஒவ்வொரு நாட்டின் கலாச்சாரத்தின் ஒரு அங்கமாக இருக்க வேண்டும்

கௌரவ தலைவர் அவர்களே, மதிப்புமிக்க விருந்தினர்களே, ஊழல் என்பது சமூகத்தில் பரவலான அழிவு மற்றும் சோகத்தை ஏற்படுத்தும் ஒரு நயவஞ்சக தொற்றுநோய் என்று நாங்கள் கருதுகிறோம். ஊழல் என்பது அபிவிருத்திக்கு ஒரு தடையாக இருப்பது எங்கள் நிலைப்பாடு. இது ஜனநாயகம் மற்றும் உலக நல்வாழ்வுக்கு ஒரு முக்கியமான அச்சுறுத்தல் மற்றும் வறுமைக்கு ஒரு காரணம் என்பது எமது நிலைப்பாடாகும். ஊழலுக்கு எதிரான போராட்டம் ஆபத்தானது. ஆனால் ஊழலுக்கு எதிராகப் போராடாதிருப்பது இன்னும் ஆபத்தானது என்பதை மிகுந்த மரியாதையுடன் உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.

1948 ஆம் ஆண்டு மனித உரிமைகள் பிரகடனம் உலகில் மனித சமூகத்திற்கு ஒரு பெரிய வெற்றியைக் கொண்டு வந்தது. மனித நாகரிகத்தின் பல்வேறு சாதனைகள் ஒரே இரவில் கிடைத்துவிடவில்லை. இவை அனைத்தும் மகத்தான தியாகம் மற்றும் விடாமுயற்சியின் பெறுபேறுகள். ஊழலுக்கு எதிரான போராட்டம் ஒரு கடினமான முன்னெடுப்பாகும். ஆனால் நாம் அந்த முன்னெடுப்பை மேற்கொள்ள வேண்டும். நாம் எடுக்கும் முதல் படி கடினமாக இருக்கலாம். ஆனால் நாம் தைரியமாக எடுக்கும் படி சரியானதாக இருந்தால், அதனை பின்தொடர்ந்து ஆயிரக்கணக்கான பல படிகள் எடுத்துவைக்கப்படும் என்று நான் நம்புகிறேன். தைரியமாக இருங்கள் எஞ்சிய அனைத்தும் தானாக நடக்கும் என்ற ஜவகர்லால் நேருவின் கருத்தை இத்தருணத்தில் நான் நினைவுபடுத்துகிறேன்.

நான் சுமார் 22 மில்லியன் மக்கள் தொகை கொண்ட ஒரு சிறிய, பிரகாசமான தீவை பிரதிநிதித்துவப்படுத்துகிறேன். இலங்கையின் மக்கள் தொகை மொத்த உலக மக்கள்தொகையில் சுமார் 0.3% ஆகும். நமது நாட்டின் மக்கள் தொகை அளவு மற்றும் எண்ணிக்கையின் அடிப்படையில் சிறியது என்பது உண்மைதான். ஆனால் நமது நாட்டிற்காகவும் உலகத்திற்காகவும் எதிர்கால சந்ததியினருக்காகவும் ஊழலுக்கு எதிரான போராட்டத்தை தொடங்கியுள்ளோம். ஊழலுக்கு எதிரான போராட்டம் ஒவ்வொரு நாட்டின் கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்று நான் முன்மொழிகிறேன்.

நீங்கள் எந்த நாட்டை பிரதிநிதித்துவப்படுத்தினாலும், அனைத்து பிரதிநிதிகளும் யுத்தத்தை நிராகரிப்பதில் என்னுடன் கைகோர்ப்பார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன். உலகில் யுத்தத்தை விரும்பும் எந்த தேசமும் கிடையாது.எங்காவது எப்படியாவது யுத்தமோ அல்லது

மோதலோ ஏற்படும் போதெல்லாம் அது ஒரு துயரம் என்பதை நாங்கள் அறிவோம். இப்போதும் கூட, அந்த துயரத்தின் வலி உலகின் பல பகுதிகளிலும் உணரப்படுகிறது.

மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக யுத்தத்தின் கசப்பான அனுபவத்தை அனுபவித்த ஒரு நாடாக, அதன் அழிவை நாம் நன்கு அறிவோம். யுத்தத்தினால் உயிரிழந்த ஆயிரக்கணக்கானவர்களின் நினைவிடங்களுக்கு வரும், அவர்களின் பெற்றோர், குழந்தைகள் மற்றும் மனைவியர் எழுப்பும் வேதனையான வேண்டுகோள்களைப் பார்க்கும் எவரும், யுத்தத்தைப் பற்றி கனவு காணக்கூட தயங்குகிறார்கள். அந்த வேதனையான காட்சியை நாம் நம் இரு கண்களால் பார்த்திருக்கிறோம். மோதல்களால் ஏற்படும் துன்பங்கள் முன்னெப்போதும் இல்லாத அளவை எட்டவில்லை என்றாலும், மில்லியன் கணக்கான மக்களின் துன்பத்தை முடிவுக்குக் கொண்டுவர தவறி பெரும்பாலும் சர்வதேச சமூகம் வெறும் பார்வையாளராகவே இருந்து வருகிறது.

குழந்தைகள் மற்றும் அப்பாவி பொதுமக்களின் வாழ்க்கையை ஒரு கால்பந்தாட்டமாக மாற்றுவது சந்தர்ப்பவாத அதிகார அரசியலின் துயரமாகும். மற்றவர்களின் வாழ்க்கையை தங்கள் அதிகாரத்தை அதிகரிக்க செல்வாக்கு செலுத்தவும் ஒடுக்கவும் யாருக்கும் உரிமை கிடையாது. ஆட்சியாளர்களின் பங்கு உயிர்களை அழிப்பது அன்றி, உயிர்களைப் பாதுகாப்பதாகும்.

காஸா பகுதியில் நடந்து வரும் கொடூரமான பேரழிவு எங்களுக்கு ஆழ்ந்த கவலையை ஏற்படுத்துகிறது. குறிப்பாக, காஸா பகுதி ஒரு வேதனையான மற்றும் சோகமான திறந்தவெளி சிறைச்சாலையாக மாறியுள்ளது. அப்பாவி குழந்தைகள் மற்றும் பொதுமக்களின் அவலக் குரல்கள் நாளாபக்கமும் கேட்கின்றன . ஐக்கிய நாடுகள் சபை மற்றும் ஏனைய அனைத்து தரப்பினர்களின் உடன்பாட்டின் படி, இரு தரப்பினரும் உடனடியாக போர்நிறுத்தம் செய்ய வேண்டும். அனைத்து மனிதாபிமான உதவிகளையும் தடையின்றி அணுக வேண்டும். அனைத்து தரப்பினரும் பணயக்கைதிகளை விடுவிக்க வேண்டும் என்று நாங்கள் குரல் கொடுக்கிறோம். இந்த கொடூரமான கொலைகளை முடிவுக்குக் கொண்டுவர நாம் வலுவான அழுத்தத்தை கொடுக்க வேண்டும்.

பலஸ்தீன நாடொன்றுக்கான பிரிக்க முடியாத உரிமையை நாங்கள் அங்கீகரிக்கிறோம். அதே போன்று இஸ்ரேலிய மற்றும் பலஸ்தீன மக்களின் நியாயமான பாதுகாப்பு மற்றும் மனிதாபிமான பிரச்சினைகளை அடையாளங் காண வேண்டும் . 1967 எல்லைகளில் இரண்டு நாடுகள் அருகருகே இருப்பதற்கான அடிப்படையை வழங்கும் ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானங்களின்படி ஒரு நியாயமான மற்றும் நீடித்த தீர்வைத் தேடுவதில் நாம் இணைய வேண்டும். அர்த்தமற்ற போர் காரணமாக உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்களின் வேதனைக்கு முன்பாக வெறும் பார்வையாளராக இருப்பதை முடிவுக்குக் கொண்டுவர வேண்டிய ஒரு முக்கியமான தருணத்தை நாம் அடைந்துவிட்டோம். உலகைப் பாதிக்கும் யுத்த மோதல்களுக்கு மத மற்றும் இனவாதம் பாரதூரமான காரணிகளாக உள்ளன.

அடிமைத்தனம் ஒழிக்கப்பட்டு ஒரு நூற்றாண்டுகள் கடந்த பிறகும், இனவெறியின் விஷம் இன்னும் ஆங்காங்கே உள்ளது என்பதை மீண்டும் மீண்டும் நினைவுபடுத்த வேண்டும். தீவிரவாத மற்றும் இனவாதக் கருத்துக்கள் கொடிய தொற்றுநோய்களைப் போலவே கொடியதாக மாறிவிட்டன. இவ்வளவு முற்போக்கான உலகில் கூட, இந்த இனவெறி மற்றும் இனவாதக் கருத்துக்கள் சாம்பலுக்கு அடியில் உள்ள தீப்பொறிகள் போல இருப்பது நகைப்பிற்கும் ஆச்சரியத்திற்கும் உரிய விடயமாகும். மிகவும் பயங்கரமான சூழ்நிலை என்னவென்றால், அந்த தீப்பொறிகள் அவ்வப்போது, சந்தர்ப்பவாதமாக, பிரபஞ்சத்தின் நல்வாழ்வுக்கு எதிராக பெரும் தீப்பிழம்பாக மாற்றப்படுகின்றன.

உலக சமாதான குடியேற்றங்களை உருவாக்கும் உன்னத சமாதான யாத்ரீகர்களாக மாறுவோம்.

ஆயுதங்கள் மூலம் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குப் பதிலாக, மனித நாகரிகத்தின் மதிப்புகள் மூலம் பிரச்சினைகளைத் தீர்க்கும் திறனுக்குள் நாம் பிரவேசிக்க வேண்டும். மில்லியன் கணக்கான குழந்தைகள் பசியால் இறக்கும் உலகில், நாம் பில்லியன் கணக்கான பணத்தை ஆயுதங்களுக்காக செலவிடுகிறோம். சரியான சுகாதார வசதிகள் இல்லாமல் மில்லியன் கணக்கான மக்கள் மரணத்தின் பாதையைத் தேர்ந்தெடுக்கும்போது, அர்த்தமற்ற போர்களுக்கு பில்லியன்களை செலவிடுகிறோம்.

இலட்சக்கணக்கான குழந்தைகள் கல்வி எனும் சிறகுகள் கிடைக்காமல் பெருமூச்சு விடும்போது, நாம் மில்லியன் கணக்கில் நில ஆக்கிரமிப்புகளுக்கு செலவிடுகிறோம். உண்மையில், இந்த உலகில் உள்ள ஒவ்வொரு அங்குல நிலத்தையும் அமைதி எனும் குடியேற்றமாக மாற்ற முடிந்தால், அந்த உலகம் ஒரு அற்புதமான உலகமாக மாறும் என்று நாங்கள் உண்மையிலேயே நம்புகிறோம். இந்த மாநாட்டில் இணைந்த நாம் அனைவரும் உலக சமாதான குடியேற்றங்களை உருவாக்கும் உன்னத சமாதான யாத்ரீகர்களாக மாற வேண்டும் என்று நான் முன்மொழிகிறேன்.

ஒரு வரலாற்று முக்கியமான தேர்தலில், இலங்கை மக்கள் பல நூற்றாண்டுகளாக தங்கள் மனதில் இருந்த ஒரு கனவிற்காக தீர்மானம் எடுத்தார்கள் என்பதை நான் உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன். இதன் விளைவாக சட்டவாக்கம் பன்முகத்தன்மை கொண்டது . ஒருபுறம், நாட்டின் முழு மக்களும் அரசாங்கத்தின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்தனர். மறுபுறம், கட்புலனற்ற பாராளுமன்ற உறுப்பினர் உட்பட பெண்கள் மற்றும் ஏனைய இனக்குழுக்களின் பிரதிநிதித்துவம் ஒரு வரலாற்று மைல்கல்லை உருவாக்கியது. பாராளுமன்றத்தில் உள்ள இந்த பன்முகத்தன்மை இலங்கையின் ஆட்சியில் இன பன்முகத்தன்மையை உறுதி செய்கிறது .அனைத்து பிரஜைகளுக்கும் சம உரிமைகள் மற்றும் வாய்ப்புகளை வழங்குவதற்கான எங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

அதேபோன்று மக்கள் பிரதிநிதிகள் என்பது பொதுமக்களுக்காக சேவையாற்றும் ஊழியர்கள் அன்றி தேவையற்ற சலுகைகளைப் பெறுபவர்கள் அல்ல என்பதற்கு நாங்கள் ஒரு முன்மாதிரியை காட்டியுள்ளோம். மக்கள் பிரதிநிதிகளின் பொறுப்பு நாட்டையும் மக்களையும் மேம்படுத்துவதாக இருக்க வேண்டும், தங்களைத் தாங்களே வளர்த்துக் கொள்வது அல்ல என்று நாங்கள் கருதுகிறோம்.

இருளுக்கு பதிலாக ஒளியின் பாதையைத் தேர்ந்தெடுத்த நமது நாட்டு மக்கள், 'வளமான நாடு - அழகான வாழ்க்கை' என்ற நடைமுறை தொலைநோக்குப் பார்வைக்கு தங்கள் ஆசிர்வாதத்தை வழங்கியுள்ளனர். இந்த வரலாற்று சாதனையை நனவாக்க, ஊழல் இல்லாத நெறிமுறையான ஆட்சி, வறுமை ஒழிப்பு, டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் சுத்தமான நாடு ஆகிய முக்கிய துறைகளில் எங்கள் கவனத்தை செலுத்தியுள்ளோம். அதனுடன் இணைந்ததாக , கல்வி மற்றும் சுகாதாரம் குறித்து நாங்கள் அதிக கவனம் செலுத்தியுள்ளோம். அவை அனைத்தையும் படிப்படியாக வென்று வருகிறோம்.

இன்று, டிஜிட்டல் ஜனநாயகம் எங்கள் புதிய இலக்காகும். ஒவ்வொரு தனிநபரும் ஒவ்வொரு நாடும் டிஜிட்டல் யுகத்தின் வாய்ப்புகளை அணுக முடியும் என்பதை உறுதி செய்வதே உலகின் முன் உள்ள சவாலாகும். அதில் நாம் வெற்றி பெற்றால், தொழில்நுட்பத்திற்கான பிரவேசம் திறக்கப்படுவதையும் அபிவிருத்தி துரிதப்படுத்தப்படுவதையும் ஆட்சி பலப்படுத்தப்படுவதையும் தவிர்க்க முடியாது. ஆனால் நாம் அவ்வாறு செய்யத் தவறினால், தொழில்நுட்பம் சமத்துவமின்மை, பாதுகாப்பின்மை மற்றும் அநீதிக்கு வழிவகுக்கும் மற்றொரு சக்தியாக இது மாறும் என்று நாங்கள் கருதுறோம்.

டிஜிட்டல் கருவிகளை அணுக முடியாத நாடுகளுக்கு இடையே டிஜிட்டல் பிளவு தெளிவாகத் தெரிகிறது. செயற்கை நுண்ணறிவுத் துறையில் இன்னும் பாரிய இடைவெளி உருவாகி வருகிறது. இலங்கை உட்பட தெற்காசியாவின் பல நாடுகளிலும், உலகெங்கிலும் உள்ள பல நாடுகளிலும், அபிவிருத்திக்கான கருவியாக செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதற்கு உள்கட்டமைப்பு வசதிகள் குறைவாக இருப்பது தடையாக உள்ளது.

மிகச் சிறந்த உலகத்தை உருவாக்குவோம்

நாம் மிகச் சிறந்த உலகத்தை, மனிதர்களின் நித்திய கௌரவத்தை மதிக்கும் உலகத்தை உருவாக்க வேண்டும். இந்த மாநாட்டின் உறுப்பினர்களான நீங்கள், ஒரு சிறந்த உலகத்தை உருவாக்குவதற்கான சிற்பிகளாக இருக்க வேண்டும். 1945 இல் ஐக்கிய நாடுகள் சபையை நிறுவும் சாசனத்தில் கையெழுத்திட்டபோது அமெரிக்க ஜனாதிபதி எஹரி எஸ். ட்ரூமன் கூறியது போல், நமது எதிர்காலம் உங்கள் கைகளில் உள்ளது. நாம் அச்சம் அல்லது கடப்பாட்டுக்கு உட்படாமல் நம்பிக்கையை முன்னிறுத்தி செயல்பட வேண்டும். உலகை பேரழிவிற்கு இட்டுச் செல்வதற்குப் பதிலாக, எதிர்கால சந்ததியினருக்கு பாதுகாப்பான உலகத்தை உருவாக்க உறுதிபூண்டுள்ள ஒரு தலைமுறையாக மாற இந்த உச்சிமாநாட்டில் தீர்மானிப்போம்.

இறுதியாக, எனக்கு என் நாட்டின் மீது நம்பிக்கையின் கனவு இருக்கிறது. உங்களுக்கும் உங்களுடைய நாடுகள் தொடர்பில் நம்பிக்கையின் கனவு இருக்கிறது. எனது ஒரே கனவு, என் நாட்டு மக்களுக்கு மகிழ்ச்சியான மற்றும் வளமான வாழ்க்கையை வழங்குவதுதான். உங்கள் நாட்டு மக்களுக்கும் இதே போன்ற வாழ்க்கையை வழங்குவதே உங்கள் கனவு என்று நான் நம்புகிறேன். அந்தக் அனைத்துக் கனவுகளுக்காகவும் நம்மைப் பிரிக்கும் பயணத்திற்குப் பதிலாக, கைகளை இணைக்கும் பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம்.

ஆரோக்கியமான பூகோளத்தில் அமைதி, கண்ணியம் மற்றும் சமத்துவத்திற்கு அர்ப்பணிப்போம் என்று ஐக்கிய நாடுகள் சபையின் குறிக்கோளில் குறிப்பிடப்பட்டுள்ளது. உலகத்தை உண்மையாகவே மாற்றியமைப்பவர்களாகுவோம் என நான் உங்களை மரியாதையுடன் அழைக்கிறேன். மிக்க நன்றி.

https://www.virakesari.lk/article/226038

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.