Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சௌதி அரேபியா, பாகிஸ்தான், அணுஆயுதம்

பட மூலாதாரம், Getty Images

கட்டுரை தகவல்

  • அகமது அல் கதீப்

  • பிபிசி உருது

  • 37 நிமிடங்களுக்கு முன்னர்

பாகிஸ்தான் - சௌதி அரேபியா பாதுகாப்பு ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, பிராந்தியத்தில் அதன் தாக்கம் மற்றும் சர்வதேச அரசியலில் அதன் முக்கியத்துவம் குறித்து தொடர்ந்து விவாதம் நடைபெற்று வருகிறது.

இது பாகிஸ்தானில் ஒரு பெரிய வெற்றியாகக் கருதப்படுகிறது.

பாகிஸ்தானும் சௌதி அரேபியாவும் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு தொடர்பான ஒத்துழைப்பை உள்ளடக்கிய ஒரு உத்தி சார்ந்த பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தத்தை (SMIDA) மேற்கொண்டுள்ளன.

இந்த ஒப்பந்தத்தின் கீழ், ஒரு நாட்டின் மீதான தாக்குதல் அந்த இரு நாடுகளுக்கும் எதிரான தாக்குதலாகவே கருதப்படும்.

சௌதி அரேபியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தம் குறித்த அறிவிப்பு பல காரணங்களுக்காக பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது எனக் கூறுகிறார்கள் ஆய்வாளர்கள்.

இந்த உத்தி சார்ந்த ஒப்பந்தம், 'பிராந்திய அதிகாரச் சமநிலையில்' ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக் கூடும் என்றும், இஸ்ரேலின் உத்தியைப் பாதிக்கலாம் என்றும் சில ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

செப்டம்பர் 9 அன்று கத்தார் மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்குப் பிறகு ஒரு வளைகுடா நாடு எடுத்த முதல், பெரிய அளவிலான பாதுகாப்பு நடவடிக்கை இது தான் என பல ஆய்வாளர்களும் கருதுகிறார்கள்.

வளைகுடா நாடுகளைப் பாதுகாக்கும் அமெரிக்காவின் உறுதித் தன்மை ஓரளவுக்கு பலவீனமடைந்துவிட்டது என்ற அச்சத்தை, இஸ்ரேலியத் தாக்குதல் வலுப்படுத்தியுள்ளது என நிபுணர்கள் குறிப்பிடுகிறார்கள்.

கத்தாரில் நடைபெற்ற இஸ்ரேலின் தாக்குதலை 'காட்டுமிராண்டித்தனமான ஆக்கிரமிப்பு' என்று சௌதி இளவரசர் முகமது பின் சல்மான் வர்ணித்திருந்தார்.

'திடீர் மற்றும் அதிர்ச்சியூட்டும் சம்பவம்'

சௌதி அரேபியா, பாகிஸ்தான், அணுஆயுதம்

பட மூலாதாரம், Saudi Press Agency

படக்குறிப்பு, இந்த ஒப்பந்தம் பாகிஸ்தானில் ஒரு பெரிய வெற்றியாகக் கருதப்படுகிறது.

சௌதி அரேபியா-பாகிஸ்தான் கூட்டுப் பாதுகாப்பு ஒப்பந்தத்தை, உலக அரசியலில் ஒரு திடீர் மற்றும் ஆச்சரியமான நிகழ்வாகக் குறிப்பிடுகிறார் ஆஸ்திரியாவைச் சேர்ந்த ஐரோப்பா மற்றும் பாதுகாப்புக் கொள்கை நிறுவனத்தின் இயக்குநரும் ஆராய்ச்சியாளருமான வலேனியா சக்கரோவா.

சௌதி அரேபியா, 'அமெரிக்க அணுசக்தி பாதுகாப்பை' சார்ந்திருப்பதில் முழுமையாக திருப்தி அடையவில்லை என்பதை இது சுட்டிக்காட்டுவதாக அவர் கருதுகிறார்.

இந்த ஒப்பந்தத்தின் மூலம் மத்திய கிழக்கும் தெற்காசியாவும் ஒரு புதிய உலக அரசியல் யதார்த்தத்திற்குள் நுழைகின்றன என்று சக்கரோவா சமூக ஊடக தளமான 'எக்ஸ்' இல் பதிவிட்டுள்ளார்.

"இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதில் எந்தவித ஆச்சரியமும் இல்லை. சௌதி அரேபியாவும் பாகிஸ்தானும் 80 ஆண்டுகளாக ஒத்துழைத்து வருகின்றன, அது அனைவரும் அறிந்ததே" என்று சௌதி அரேபிய அரசியல் ஆராய்ச்சியாளர் முபாரக் அல்-அதி பிபிசிக்கு அளித்த பேட்டியில் கூறினார்.

பிராந்தியமும் சர்வதேச சமூகமும் மிகவும் சிக்கலான அரசியல் சூழ்நிலைகளைக் கடந்து செல்லும் நேரத்தில் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டிருப்பது தான் இந்த ஒப்பந்தத்தின் சிறப்பு அம்சம் என்று அல் அதி கருதுகிறார்.

பிராந்திய அதிகாரச் சமநிலையில் மாற்றம்

இந்த 'உத்தி சார்ந்த ' ஒப்பந்தம் சௌதி அரேபியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பு அம்சங்களை வலுப்படுத்துவதையும், எந்தவொரு ஆக்கிரமிப்புக்கும் எதிரான 'தற்காப்பை' மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது என சௌதி பாதுகாப்பு அமைச்சகம் கூறுகிறது.

ஒரு நாட்டின் மீது நடத்தப்படும் தாக்குதல், அந்த இரண்டு நாடுகளின் மீதும் நடத்தப்படும் தாக்குதலாகவே கருதப்படும் என்றும் அது கூறுகிறது.

பிபிசியிடம் பேசிய முபாரக் அல்-அதி, ஒப்பந்தத்திற்கு வழிவகுத்த சிக்கலான மாற்றங்களைச் சுட்டிக்காட்டினார்.

"இது, இந்தப் பிராந்தியத்தில் அதிகரித்து வரும் இஸ்ரேலின் நடவடிக்கைகளுக்கும், கத்தார் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்திய போது, அதன் உத்தி சார்ந்த கூட்டாளியான அமெரிக்கா துரோகம் செய்ததற்கும் தொடர்புடையது" என்று அவர் கூறினார்.

பல ஆண்டு காலமாக, அமெரிக்காவிற்கும் பஹ்ரைன், குவைத், ஓமன், கத்தார், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் சௌதி அரேபியா போன்ற ஆறு வளைகுடா நாடுகளுக்கும் இடையே ஒரு ஒப்பந்தம் இருக்கிறது, இதன் கீழ் எண்ணெய் மற்றும் எரிவாயுவுக்கு ஈடாக ஆறு நாடுகளுக்கும், அமெரிக்கா பாதுகாப்பு உத்தரவாதம் அளிக்கிறது.

பிரிட்டிஷ் பத்திரிகையான தி எகானமிஸ்ட் கூற்றுப்படி, இரான் ஆதரவு பெற்ற ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் 2019-இல் சௌதி அரேபியாவையும் 2022-இல் ஐக்கிய அரபு எமிரேட்ஸையும் தாக்கியபோது இந்த ஒப்பந்தத்தின் அடித்தளத்தில் முதல் விரிசல்கள் தோன்றின.

இந்த இரண்டு சம்பவங்கள் நடந்த போதும், அமெரிக்கா குறிப்பிடத்தக்க வகையில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இஸ்ரேல் கத்தார் மீதோ அல்லது வேறு எந்த நாட்டின் மீதோ மீண்டும் அதுபோன்ற தாக்குதலை மேற்கொள்ளாது என்பதற்கான உத்தரவாதத்தை இப்போது முன்வைப்பது மட்டுமல்லாமல், மிகவும் நம்பகமான மற்றும் நீண்டகால பாதுகாப்பு உத்தரவாதங்களையும் வளைகுடா நாடுகள் கோருகின்றன எனக் குறிப்பிட்டுள்ளது 'தி எகானமிஸ்ட்'.

பிபிசியிடம் பேசிய சௌதி ஆய்வாளர் அல் அதி, தனது நாடு "அதன் பாதுகாப்பு அல்லது உத்தி சார்ந்த பிரச்னைகளுக்கு ஒரு கூட்டாளியை மட்டுமே சார்ந்து இருக்க விரும்பவில்லை. எனவே, அதன் கூட்டாளிகளை பன்முகப்படுத்துவது முக்கியம் எனக் கருதுகிறது" என்றார்.

புதிய ஒப்பந்தம் பிராந்திய அதிகாரச் சமநிலையில் ஒரு பெரிய மாற்றத்தைத் தூண்டக்கூடும் என்றும் இஸ்ரேலின் உத்தி சார்ந்த இலக்குகளைப் பாதிக்கக்கூடும் என்றும் ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

இந்த ஒப்பந்தத்தின் கீழ், பாகிஸ்தான் தனது ஏவுகணைகளையோ அல்லது எந்தவொரு ஆயுதங்களையோ சௌதி மண்ணில் நிலைநிறுத்த முடியும்.

சௌதி அரேபியாவின் சொந்த முடிவு

சௌதி அரேபியா, பாகிஸ்தான், அணுஆயுதம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்த ஒப்பந்தத்தின் கீழ், பாகிஸ்தான் தனது ஏவுகணைகளை சௌதி அரேபியாவில் நிறுவ முடியும்.

ஹட்சன் இன்ஸ்டிடியூட்டைச் சார்ந்த ஹுசைன் ஹக்கானியின் கூற்றுப்படி, புதிய சௌதி-பாகிஸ்தான் பாதுகாப்பு ஒப்பந்தத்திற்கான ஆவணத்தில் பயன்படுத்தப்படும் சொற்களில் 'உத்தி சார்ந்த' ஏவுகணைகள் மற்றும் அணு ஆயுதங்களின் பயன்பாடும் அடங்கும்.

பாகிஸ்தான் தனது ஏவுகணை மற்றும் அணுசக்தி திட்டங்களை விவரிக்க 'உத்தி சார்ந்த' என்ற சொல்லை அடிக்கடி பயன்படுத்துகிறது என்று ஹுசைன் ஹக்கானி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்த ஒப்பந்தம் சௌதி அரேபியாவின் "சுயாதீனமான கொள்கை வகுப்பின் சக்தியை" பிரதிபலிக்கிறது, இது பல சக்திகளுடன் அதன் ஒப்பந்தங்களை பன்முகப்படுத்தும் திறனைக் கொண்டுள்ளது. ஒரே ஒரு கூட்டாளியுடன் மட்டுப்படுத்திக் கொள்ளாமல், பலருடன் உறவுகளை விரிவுபடுத்தும் திறமை சவுதி அரேபியாவுக்கு உள்ளது"என்று அல் அதி கூறுகிறார்.

இந்த ஒப்பந்தம் சௌதி அரேபியா வேறு எந்த சக்தியுடனும் செய்து கொண்ட வேறு எந்த ஒப்பந்தத்தையும் ரத்து செய்யாது, மாறாக அந்த ஒப்பந்தங்களை வலுப்படுத்துகிறது என்கிறார் அல் அதி .

பாகிஸ்தானும் சௌதி அரேபியாவும் இந்த பிராந்தியத்தில் அமெரிக்கா தலைமையிலான பாதுகாப்பு முயற்சிகளில் வலுவான பங்காளிகளாக உள்ளன.

அமெரிக்கா சௌதி அரேபியாவின் முக்கியமான பாதுகாப்பு கூட்டாளி, எனவே பாகிஸ்தானுடனான இந்த பாதுகாப்பு ஒப்பந்தம் பிராந்திய அரசியல் மற்றும் உத்தியில் இரு நாடுகளுக்கும் இஸ்லாமிய உலகிற்கும் பயனளிக்கும் என அல் அதி கருதுகிறார்.

அதேபோல் பொதுவான மதமும் வலுவான நம்பிக்கையும் பாகிஸ்தானையும் சௌதி அரேபியாவையும் ஒன்றிணைத்துள்ளதாகவும் அல் அதி குறிப்பிடுகிறார்.

ஓமன் வளைகுடா இரு நாடுகளையும் பிரிக்கிறது, அவற்றின் நிலவியல் இருப்பிடம் முக்கியமானது எனவும் அவர் விளக்குகிறார்.

அணு ஆயுதங்களை வைத்திருக்கும் ஒரே இஸ்லாமியப் பெரும்பான்மை நாடு பாகிஸ்தான் மட்டும் தான். பாகிஸ்தானிடம் 170க்கும் மேற்பட்ட அணு ஆயுதங்கள் உள்ளன.

பாகிஸ்தானில் பல்வேறு துறைகளில் உத்தி சார்ந்த முதலீட்டை 25 பில்லியன் டாலர்களாக அதிகரிப்பது குறித்து பரிசீலித்து வருவதாகவும் சௌதி அரேபியா அறிவித்துள்ளது.

சௌதி மேம்பாட்டு நிதியம் பாகிஸ்தானின் கனிம மற்றும் பெட்ரோலியத் துறைகளில் பில்லியன்கணக்கான டாலர்களை முதலீடு செய்ய எதிர்பார்க்கிறது.

அதேபோல் பாகிஸ்தானின் மத்திய வங்கியில் தனது வைப்புத்தொகையை இரண்டு பில்லியன் டாலர்கள் வரை அதிகரிக்கவும் சௌதி அரேபியா பரிசீலித்து வருகிறது எனக் குறிப்பிட்டுள்ளது ப்ளூம்பெர்க்.

வரலாற்றுச் சிறப்புமிக்க கூட்டாண்மை

சௌதி அரேபியா, பாகிஸ்தான், அணுஆயுதம்

பட மூலாதாரம், GOP

படக்குறிப்பு, பாகிஸ்தானில் பல்வேறு துறைகளில் உத்தி சார்ந்த முதலீட்டை 25 பில்லியன் டாலர்களாக அதிகரிப்பது குறித்து பரிசீலித்து வருவதாகவும் சௌதி அரேபியா அறிவித்துள்ளது.

அரசுக்குச் சொந்தமான சௌதி பத்திரிகை நிறுவனத்தின் (SPA) படி, பாகிஸ்தானுடனான புதிய பாதுகாப்பு ஒப்பந்தம் கிட்டத்தட்ட 80 ஆண்டுகால வரலாற்று கூட்டாண்மை, சகோதரத்துவம் மற்றும் இஸ்லாமிய ஒற்றுமையை அடிப்படையாகக் கொண்டது.

இது இரு நாடுகளுக்கும் இடையிலான உத்தி சார்ந்த நலன்கள் மற்றும் வலுவான பாதுகாப்பு ஒத்துழைப்பையும் பிரதிபலிக்கிறது.

மெக்கா மற்றும் மதீனாவில் உள்ள இரண்டு புனித மசூதிகளைப் பாதுகாப்பதற்கான உறுதிமொழி பாகிஸ்தானுக்கும் சௌதி அரேபியாவிற்கும் இடையிலான 'ஒற்றுமையின் அடித்தளம்'எனக் கூறுகிறார்கள் ஆய்வாளர்கள்.

1960 ஆம் ஆண்டு, ஏமனில் எகிப்திய ராணுவம் போர் தொடுக்கும் என்ற அச்சம் நிலவியபோது, பாகிஸ்தான் ராணுவம் முதல் முறையாக சௌதி அரேபிய மண்ணுக்குள் அடியெடுத்து வைத்தது.

அதன் பின்னர், 1979 இல் இரானியப் புரட்சிக்குப் பிறகு தெஹ்ரானுடனான மோதல் அச்சங்களுக்கு மத்தியில் பாகிஸ்தானும் சௌதி அரேபியாவும் நெருக்கமாகின.

1991 ஆம் ஆண்டு இராக் குவைத் மீது படையெடுத்த போது, பாகிஸ்தான் சௌதி அரேபியாவிற்கு ஒரு ராணுவக் குழுவை அனுப்பியது, மெக்கா மற்றும் மதீனாவில் உள்ள புனிதத் தலங்களைப் பாதுகாக்கும் பொறுப்பு அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

2016 ஆம் ஆண்டில், பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்காக சௌதி அரேபியா தலைமையிலான இஸ்லாமிய நாடுகளின் ராணுவக் கூட்டணியில் பாகிஸ்தான் இணைந்தது.

2018 ஆம் ஆண்டுக்குள், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் பயிற்சிக்காக சௌதி அரேபியா சென்றனர்.

மற்ற வளைகுடா நாடுகளும் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் சேர முடியுமா?

சௌதி அரேபியா, பாகிஸ்தான், அணுஆயுதம்

பட மூலாதாரம், Pakistan PM's office

படக்குறிப்பு, இந்த ஒப்பந்தத்தின் கீழ், ஒரு நாட்டுக்கு எதிரான வெளிநாட்டு தாக்குதல் இரு நாடுகளுக்கும் எதிரான தாக்குதலாகவே கருதப்படும்.

சில அரசியல் ஆய்வாளர்கள், சௌதி அரேபியாவை பாகிஸ்தானின் அணுசக்தி திட்டத்திற்கு 'அமைதியாக நிதியளிக்கும்' நாடாகக் குறிப்பிடுகின்றனர்.

சௌதி அரேபியா பாகிஸ்தானின் பாதுகாப்புச் செலவுகளுக்கு நிதி வழங்கி, அதன் அணு ஆயுத சேமிப்பை விரிவுபடுத்தும் பணியில் மறைமுகமாக பங்கு வகிக்கிறது என்பது அவர்களது கருத்து.

பல ஆண்டுகளாக பாகிஸ்தான் ஆய்வாளர்களும், ராஜ்ஜீய அதிகாரிகளும் பாகிஸ்தானின் 'அணுசக்தியால்' சௌதி அரேபியா பயனடையக் கூடும் என்று தொடர்ந்து கூறி வருகின்றனர் என்கிறது 'தி எகனாமிஸ்ட்' பத்திரிக்கை.

சௌதி அரேபியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒப்பந்தம், பிராந்தியத்தில் உள்ள பிற நாடுகளையும் உள்ளடக்கிய ஒரு ஒப்பந்தத்தின் மையக்கருவாக மாறக்கூடும் என்கிறார் எக்ஸிடர் பல்கலைக்கழகத்தின் மத்திய கிழக்கு பாதுகாப்பு ஆராய்ச்சியாளரான தல்ஹா அப்துர் ரசாக்.

இதுகுறித்த அவரது 'எக்ஸ்' தளப் பதிவில், பிராந்திய நாடுகள் இனி அமெரிக்காவின் பாதுகாப்பு உத்தரவாதத்தை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்றும், இப்போது வளைகுடா நாடுகள் தங்கள் பாதுகாப்பு ஒப்பந்தங்களை பன்முகப்படுத்தும் செயல்முறையை மேற்கொண்டு வருவதாகவும் கூறியுள்ளார்.

பாகிஸ்தானின் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப், அல்-ஜசீரா தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், மற்ற வளைகுடா நாடுகளின் ஈடுபாடு குறித்த கேள்விக்கு பதிலளித்தபோது, "அது சாத்தியம்" என்று கூறியிருந்தார்.

"ஜி.சி.சி (வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில்)-ல் உள்ள எந்த நாடும் அதற்கான சமிக்ஞையை வெளிப்படுத்தினால், நாங்கள் சௌதி அரேபியாவுடன் பரஸ்பர உடன்பாட்டை எட்டியுள்ளதால், மற்ற நாடுகளையும் அதில் சேர்ப்பது குறித்து பரிசீலிக்கலாம்"என்றார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cvgr1epwx2zo

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, ஏராளன் said:

இது பாகிஸ்தானில் ஒரு பெரிய வெற்றியாகக் கருதப்படுகிறது.

பாகிஸ்தானும் சௌதி அரேபியாவும் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு தொடர்பான ஒத்துழைப்பை உள்ளடக்கிய ஒரு உத்தி சார்ந்த பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தத்தை (SMIDA) மேற்கொண்டுள்ளன.

இந்த ஒப்பந்தத்தின் கீழ், ஒரு நாட்டின் மீதான தாக்குதல் அந்த இரு நாடுகளுக்கும் எதிரான தாக்குதலாகவே கருதப்படும்.

அமெரிக்காவால் கிட்டத்தட்டக் கைவிடப்பட்டுள்ளநிலையில் இஸ்ரேலில் தொங்கிக்கொண்டு நிற்கும் வடவரின் நிலைதான் கவலைக்கிடமாகிப்போகும்போல் உள்ளது.

நட்பார்ந்த நன்றியுடன்

நொச்சி

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.