Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

03 Oct, 2025 | 05:17 PM

image

இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தில் 'கோல்ட்ரிப்' (Coldrip) எனப்படும் இருமல் மருந்தை உட்கொண்டதனால் 6 குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, தமிழகத்தில் இந்த மருந்து விற்பனைக்கும் விநியோகத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தற்காலிகத் தடை உத்தரவை தமிழக மருந்து கட்டுப்பாட்டுத் துறை பிறப்பித்துள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலம் சிந்த்வாரா மாவட்டத்தில், கடந்த 15 நாட்களுக்குள் 1 முதல் 7 வயதுக்குட்பட்ட 6 குழந்தைகள் அடுத்தடுத்து சந்தேகத்துக்குரிய வகையில் உயிரிழந்தன. திடீரென ஏற்பட்ட சிறுநீரகச் செயலிழப்பு அதற்குக் காரணம் என்பது தெரியவந்தது.

உயிரிழந்த அந்தக் குழந்தைகள் அனைவரும் 'கோல்ட் ரிப்' உள்ளிட்ட இருமல் மருந்துகளை உட்கொண்டிருந்தமை விசாரணையில் கண்டறியப்பட்டது.

விசாரணையில், அந்தக் குழந்தைகளின் சிறுநீரகத் திசுவில் டை எத்திலீன் கிளைகால் (Diethylene Glycol) எனப்படும் இரசாயன வேதிப்பொருள் இருந்தது ஆய்வறிக்கையில் உறுதிப்படுத்தப்பட்டது. பெயிண்ட், மை போன்றவற்றைத் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் இந்த இரசாயனம், சம்பந்தப்பட்ட இருமல் மருந்துகளில் கலந்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்பட்டது.

இதையடுத்து, தமிழக மருந்து கட்டுப்பாட்டுத் துறை துணை இயக்குநர் தலைமையிலான குழுவினர், இந்த மருந்தை உற்பத்தி செய்யும் நிறுவனத்தில் கடந்த இரண்டு நாட்களாக ஆய்வு மேற்கொண்டனர்.

ஆய்வின் முடிவுகள் வெளியாகும் வரை, பொதுமக்கள் நலனைக் கருத்தில் கொண்டு, தமிழகம் முழுவதும் ‘கோல்ட் ரிப்’ மருந்து விற்பனையையும் விநியோகத்தையும் நிறுத்தி வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மத்தியப் பிரதேச துயரச் சம்பவத்தின் காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தமிழகத்தில் இந்தத் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/226821

  • கருத்துக்கள உறவுகள்

New-Project-60.jpg?resize=600%2C300&ssl=

இந்தியாவில் 11 குழந்தைகள் உயிரிழப்பு- தடைசெய்யப்பட்ட மருந்தை பரிந்துரைத்த வைத்தியர் கைது!

இந்தியாவின் மத்திய பிரதேசத்தில் 11 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் இருமல் மருந்தை பரிந்துரைத்த வைத்தியர் பிரவீன் சோனி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தியாவின் மத்திய பிரதேசத்தின் சிந்த்வாரா மாவட்டத்திலும், ராஜஸ்தானின் சிகாரி எனும் பகுதியிலும் கடந்த 15 நாட்களாக, 1 – 6 வயதுக்குட்பட்ட 11 குழந்தைகள் சிறுநீரக செயலிழப்பால் உயிரிழந்துள்ளன.

குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்தில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையில் அவர்கள் ‘கோல்ட்ரிப்’ மற்றும் ‘நெக்ஸ்ட்ரோ’ ஆகிய இருமல் மருந்துகளை உட்கொண்டமை தெரியவந்துள்ளது.

இறந்தவர்களில் பெரும்பாலான குழந்தைகள் பராசியாவில் உள்ள குழந்தை நல வைத்தியரான பிரவீன் சோனியின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் குறித்த வைத்தியர் தடைசெய்யப்பட்ட குறித்த இருமல் மருந்தினை பரிந்துரைத்துள்ளார்.

இதேவேளை, மேற்குறித்த இரு மாநிலங்களிலும், இந்த மருந்து உட்பட 15க்கும் மேற்பட்ட மருந்துகளை விற்பனை செய்ய முன்னதாகவே தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் கோல்ட்ரிப் மருத்தை தயாரித்த நிறுவனத்திற்கு எதிராக மத்தியப் பிரதேச அரசு வழக்குப் பதிவு செய்த நிலையில் தற்போது குறித்த மருந்தை பரிந்துரைத்த வைத்தியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

https://athavannews.com/2025/1449568

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

'தமிழ்நாடு ஒரே நாளில் கண்டுபிடிக்கையில் இங்கு ஏன் தாமதம்?' - ம.பி.யை உலுக்கும் இருமல் மருந்து சர்ச்சை

மத்திய பிரதேசம், ராஜஸ்தானில் இருமல் மருந்தால் குழந்தைகள் இறப்பு - என்ன நடந்தது?

படக்குறிப்பு, கடந்த ஒரு மாதத்தில் மத்திய பிரதேசம் சிந்த்வாரா பகுதியில் 11 குழந்தைகள் இறந்துள்ளனர், இறந்த அட்னன் எனும் குழந்தையின் பெற்றோர்

கட்டுரை தகவல்

  • விஷ்னுகாந்த் திவாரி

  • பிபிசி செய்தியாளர், போபால்

  • 6 அக்டோபர் 2025, 07:59 GMT

    புதுப்பிக்கப்பட்டது 6 மணி நேரங்களுக்கு முன்னர்

கடந்த ஒரு மாதத்தில் மத்திய பிரதேசம் சிந்த்வாரா பகுதியில் 11 குழந்தைகளும் ராஜஸ்தானில் மூன்று குழந்தைகளும் இறந்தநிலையில், குழந்தைகளின் நலன் குறித்து இரு மாநிலங்களிலும் கேள்விகள் எழுந்துள்ளன.

இருமல் மருந்தை குடித்த பிறகே குழந்தைகளின் உடல்நிலை மோசமடைந்ததாகவும் அதனால் அவர்களை காப்பாற்ற முடியவில்லை என்றும் இக்குழந்தைகளின் பெற்றோர் தெரிவித்தனர்.

தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட கோல்ட்ரிஃப் (Coldrif) எனும் இருமல் மருந்தை மத்திய பிரதேச மருந்து கட்டுப்பாட்டு துறை சனிக்கிழமை தடை செய்தது. சனிக்கிழமை இரவு, அரசு மருத்துவர் பிரவீன் சோனி, இந்த இருமல் மருந்தை தயாரித்த ஸ்ரீசன் மருந்து நிறுவனத்தின் இயக்குநர்கள் மற்றும் இதற்கு பொறுப்பானவர்கள் மீது காவல் துறை எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளது.

பாரசியா (Parasia) பகுதி மருத்துவ அதிகாரி அங்கில் சஹ்லம் அளித்த புகார் தொடர்பாக அக்டோபர் 5-ஆம் தேதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மாவட்ட நிர்வாகத்தின்படி, இறந்த 11 குழந்தைகளில் 10 குழந்தைகள் பாரசியா பகுதியை சேர்ந்தவர்களாவர், இங்குதான் மருத்துவர் பிரவீன் சோனி அரசு குழந்தைகள் நல மருத்துவராக பணியாற்றி வந்தார்.

இந்த இறப்புகளை தொடர்ந்து, மத்திய பிரதேச அரசு இதுகுறித்து அக்டோபர் ஒன்றாம் தேதி தமிழ்நாடு அரசுக்கு கடிதம் எழுதியது, அதில் இந்த மருந்தை தயாரித்த நிறுவனத்திற்கு எதிராக விசாரணை நடத்துமாறு கேட்டுக்கொண்டது.

இதையடுத்து, தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டு துறை மேற்கொண்ட நடவடிக்கையில் ஸ்ரீசன் மருந்து நிறுவனம் தயாரித்த கோல்ட்ரிஃப் இருமல் மருந்தில் "கலப்படம்" செய்யப்பட்டதை உறுதிப்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டு துறை அக்டோபர் 2-ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையின்படி, கோல்ட்ரிஃப் மருந்தின் SR-13 எனும் தொகுதியில் (batch) 'கலப்படம்' இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையின்படி, இந்த மருந்தில் 48.6% டைஎத்திலீன் கிளைக்கால் (diethylene glyco) உள்ளது, இது உடல்நலனுக்கு ஆபத்தை ஏற்படுத்தவல்ல நச்சு ரசாயனமாகும்.

மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ் தன் எக்ஸ் பக்கத்தில், "சிந்த்வாரா பகுதியில் கோல்ட்ரிஃப் மருந்தால் குழந்தைகள் இறந்திருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது. மத்திய பிரதேசம் முழுவதும் இந்த மருந்தின் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தின் மற்ற மருந்துகளும் தடை செய்யப்பட்டுள்ளன" என பதிவிட்டுள்ளார்.

சிந்த்வாரா மாவட்ட மருத்துவமனையின் குழந்தைகள் நல மருத்துவர் பவன் நந்தர்கர்.

அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "பெரும்பாலான குழந்தைகள் சிறுநீரக பாதிப்பால் இறந்துள்ளனர். சிறுநீரக பயாப்ஸி (சிறுநீரகத்திலிருந்து சிறு திசுவை எடுத்து பரிசோதிப்பது) செய்து பரிசோதித்தபோது, ஒருவித நச்சு ரசாயனத்தால், சிறுநீரகம் பாதிப்படைந்து, செயலிழந்ததால் குழந்தைகள் இறந்துள்ளனர். இந்த குழந்தைகளுக்கு இருமல் மருந்து வழங்கப்பட்டுள்ளதும் அவர்களின் முந்தைய மருத்துவப் பதிவுகளிலிருந்து தெரியவந்தது." என்றார்.

சிந்த்வாரா மாவட்டத்தை சேர்ந்த யாசின் கானின் நான்கு வயது மகன் உசைத் இப்போது இந்த உலகத்தில் இல்லை.

தொலைபேசி வாயிலாக அவர் பிபிசியிடம் பேசுகையில், "என்னால் எதையும் யோசிக்க முடியவில்லை. ஆக. 25 அன்று என் மகனுக்கு முதலில் லேசான இருமல், சளி மற்றும் காய்ச்சல் ஏற்பட்டது. செப். 13 அன்று என் மகன் சிறுநீரக செயலிழப்பால் உயிரிழந்தான். எனக்கு எல்லாமுமாக இருந்த என் மகன் போய்விட்டான்." என்றார்.

மத்திய பிரதேசத்தின் சிந்த்வாரா மாவட்டத்தில் சிறுநீரக செயலிழப்பால் செப்டம்பர் 7 முதல் அக்டோபர் 2 வரை 11 குழந்தைகள் உயிரிழந்தன. குறைந்தது 5 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், அவர்களுள் சிலரின் உடல்நிலை மோசமாக உள்ளது.

மருத்துவர் ஹர்ஷிதா ஷர்மா

படக்குறிப்பு, மருத்துவர் ஹர்ஷிதா ஷர்மா

ராஜஸ்தானிலும் குழந்தைகள் இறப்பு

மத்திய பிரதேசத்திற்கு அருகில் உள்ள ராஜஸ்தானின் பாரத்பூர் மற்றும் ஜுஞ்சுனூ மாவட்டங்களிலும் அரசு மருத்துவமனையில் இருமல் மருந்து குடித்ததால் இரு குழந்தைகள் உயிரிழந்தனர் என தகவல் வெளியானது. சனிக்கிழமை சுரு மாவட்டத்திலும் மற்றொரு குழந்தை ஒன்று இறந்துள்ளது. இருமல் மருந்து குடித்ததாலேயே தங்கள் குழந்தைகள் இறந்ததாக பெற்றோர்கள் கூறுகின்றனர்.

சுரு மாவட்டத்தை சேர்ந்த ஆறு வயது சிறுவன், ஜெய்ப்பூரில் உள்ள ஜேகே லான் மருத்துவமனையில் உயிரிழந்தார். அச்சிறுவனுக்கு நான்கு தினங்களுக்கு முன்பாக இருமல் மருந்து கொடுத்ததாகவும், அதையடுத்து உடல்நிலை மோசமானதால் ஜெய்ப்பூர் மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டதாகவும் குடும்பத்தினர் கூறுகின்றனர்.

அதேபோன்று, பாரத்பூரை சேர்ந்த இரண்டு வயது குழந்தையும் ஜெய்ப்பூர் மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்ட நிலையில், மூன்று தினங்கள் கழித்து உயிரிழந்தது. ஜுஞ்சுனூ மாவட்டத்தை சேர்ந்த ஐந்து வயது குழந்தை, சிகாரில் உள்ள மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.

மத்திய பிரதேச மருந்து கட்டுப்பாட்டு அதிகாரி தினேஷ் குமார் மௌரியா பிபிசி இந்தியிடம் கூறுகையில், "மத்திய மருந்து பரிசோதனை முகமையுடன் நாங்கள் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறோம். 12 மாதிரிகளை நாங்கள் சேகரித்துள்ளோம், அதேபோன்று, மத்திய மருந்து பரிசோதனை முகமையும் ஆறு மாதிரிகளை பரிசோதித்துள்ளது. எங்களின் மூன்று மாதிரிகளிலும் மத்திய மருந்து பரிசோதனை ஆய்வகத்தின் ஆறு மாதிரிகளிலும் இதுவரை டைஎத்திலீன் கிளைக்கால் மற்றும் எத்திலீன் கிளைக்கால் ஆகியவை கண்டறியப்படவில்லை. மீதமுள்ள மாதிரிகளை பரிசோதித்து வருகிறோம்." என்றார்.

குழந்தைகள் இறப்பை தொடர்ந்து கேள்விகள் எழுந்த நிலையில், மத்திய பிரதேச சுகாதார துறை அமைச்சர் ராஜேந்திர சுக்லா வெள்ளிக்கிழமை மதியம் கூறுகையில், "இதுவரை 12 மாதிரிகள் மாநில மருந்து பரிசோதனை ஆய்வகத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளன. இதில், மூன்று பரிசோதனை முடிவுகள் கிடைத்துள்ளன, அதன்படி எவ்வித ரசாயனமும் கண்டறியப்படவில்லை." என்றார்.

இருமல் மருந்தால் குழந்தைகள் இறந்தது குறித்து பேசிய ராஜஸ்தான் சுகாதார அமைச்சர் கஜேந்திர சிங் கின்வ்சர், " நாங்கள் மருந்தை பரிசோதித்தோம், உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் எதுவும் அதில் கண்டறியப்படவில்லை. இந்த மருந்தால் எந்த இறப்பும் நிகழவில்லை. இதுகுறித்து விசாரிக்க குழு அமைத்துள்ளோம்" என்றார்.

இதனிடையே, மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் குழந்தைகளின் இறப்புகளை தொடர்ந்து மத்திய சுகாதார சேவைகள் பொது இயக்குநரகம் (DGHS) "ஆலோசனைப்படியே" இருமல் மருந்துகள் குழந்தைகளுக்கு கொடுக்கப்பட வேண்டும் என, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

மத்திய பிரதேசம், ராஜஸ்தானில் இருமல் மருந்தால் குழந்தைகள் இறப்பு - என்ன நடந்தது?

படக்குறிப்பு, குழந்தை விகாஸின் தந்தை பிரபுதயாள் யாதவ் தன் குழந்தையின் இறப்புக்கு நீதி கோருகிறார்

விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது எப்படி?

சிந்த்வாரா மாவட்ட நிர்வாகத்தின்படி, இதுதொடர்பான முதல் பாதிப்பு ஆகஸ்ட் 24 அன்று பதிவாகியுள்ளது, செப்டம்பர் 7 அன்று முதல் மரணம் நிகழ்ந்துள்ளது.

யாசின் கூறுகையில், தன்னுடைய நான்கு வயது மகன் உசைத் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாக தெரிவித்தார்.

அவர் கூறுகையில் "ஆகஸ்ட் 25ஆம் தேதி என் மகனின் உடல்நிலை மோசமானதால், அவனை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். ஆக.31 வரை அவனுடைய உடல்நிலையில் சிறிது முன்னேற்றம் இருந்தது, ஆனால் பின்னர் அவனுக்கு சிறுநீர் வெளியேறுவது நின்றுவிட்டது. இது இரு நாட்கள் தொடர்ந்தது, இதையடுத்து அவனை சிந்த்வாரா மாவட்ட மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். சிந்த்வாராவிலிருந்து நாக்பூருக்கு சென்றோம், அங்கு 10 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்த நிலையில் என் மகன் இறந்துவிட்டான்." என்றார்.

ஆட்டோ ஓட்டுநரான யாசினுக்கு இரு மகன்கள். மூத்த மகன் உசைத்தின் சிகிச்சைக்காக 4 லட்ச ரூபாய் செலவு செய்துள்ளார். இச்சமயத்தில், அவர் தன் வாழ்வாதாரமாக இருந்த ஆட்டோவை விற்க நேர்ந்துள்ளது.

யாசின் கூறுகையில், "பணத்தினால் என்ன நடக்கும்? என் குழந்தை பிழைத்திருந்தால் எல்லாம் நன்றாக நடந்திருக்கும். மீண்டும் என் ஆட்டோவை வாங்கியிருப்பேன். இப்போது என் வலியை இன்னொரு தந்தை அனுபவிக்கக் கூடாது என நினைக்கிறேன்." என்றார்.

துணை ஆட்சியர் ஷுபம் குமார் யாதவ்

படக்குறிப்பு, சப் டிவிஷனல் மாஜிஸ்திரேட் ஷுபம் குமார் யாதவ்

'தமிழ்நாடு ஒரே நாளில் கண்டுபிடிக்கையில் இங்கு ஏன் தாமதம்?'

மத்திய பிரதேசத்தில் இறந்த 11 குழந்தைகளும் சிந்த்வாராவின் பராசியா பகுதியை சேர்ந்தவர்கள். இப்பகுதியில் 2.8 லட்சம் பேர் வாழ்கிறார்கள் என்றும், அவர்களுள் சுமார் 25,000 பேர் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் என்றும் பாரசியா சப் டிவிஷனல் மாஜிஸ்திரேட் ஷுபம் குமார் யாதவ் (Sub Divisional Magistrate) தெரிவித்தார்.

அவர் கூறுகையில், "பலவித சாத்தியமான காரணங்கள் குறித்து விசாரித்துள்ளோம். அப்பகுதியிலிருந்து தண்ணீர் மாதிரிகளை எடுத்துள்ளோம், கொசுக்கள் மற்றும் எலிகளிலிருந்து நோய் பரவியதா என்பதையும் பரிசோதித்தோம். அவற்றில் எந்த பிரச்னையும் இல்லை என்று முடிவுகள் வந்துள்ளன" என்றார்.

அவர் மேலும் கூறுகையில், "சுகாதார துறை அதிகாரிகள் மற்றும் சிறப்பு மருத்துவர்களின் ஆலோசனையுடன் இறந்த குழந்தைகளின் முந்தைய மருத்துவப் பதிவுகள் ஆராயப்பட்டன, இதில்தான் அந்த குழந்தைகளுக்கு இருமல் மருந்து பரிந்துரைக்கப்பட்டிருந்தது வெளிச்சத்திற்கு வந்தது" என்றார்.

அவர் கூறுகையில், பல்வேறு பகுதிகளிலிருந்து மருந்து மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளன என்றும், அனைத்து பரிசோதனை முடிவுகளும் வந்துள்ளதாகவும் கூறினார். அதன் அடிப்படையில், குழந்தைகளுக்கு சிறுநீரகம் செயலிழந்தது எப்படி என்பது குறித்து மாவட்ட நிர்வாகம் காரணத்தைக் கண்டறியும் என்றார் அவர்.

பரிசோதனை முடியவில்லை என்று மத்திய பிரதேச அரசு 10 தினங்களாக கூறிவந்த நிலையில், கோல்ட்ரிஃப் மருந்தில், விதிமுறைகளை மீறி நச்சு ரசாயனமான டைஎத்திலீன் கிளைக்கால் இருப்பதாக தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டு துறை ஒரு நாளைக்குள்ளேயே உறுதிப்படுத்தியுள்ளது.

சிந்த்வாராவை சேர்ந்த மற்றொரு குழந்தையின் உறவினர் கூறுகையில், "விஷத்தன்மை வாய்ந்த, ஆபத்தான மருந்து எப்படி சந்தையில் விற்கப்படுகிறது? இதை மத்திய பிரதேச அரசால் ஏன் கண்டுபிடிக்க முடியவில்லை? ஒரு நாளைக்குள் தமிழ்நாடு அரசு இதைக் கண்டுபிடித்துள்ளது. குழந்தைகளை கொல்லும் மருந்துகளை விற்பனை செய்வது யார் என்பது மத்திய பிரதேச அரசு விசாரிக்கவில்லையா?" என்றார்.

சிந்த்வாரா அரசு மருத்துவமனை

படக்குறிப்பு, சிந்த்வாரா அரசு மருத்துவமனை

முந்தைய எச்சரிக்கைகள் புறக்கணிப்பா?

கடந்த 2023-ஆம் ஆண்டு இந்தியாவின் சுகாதார சேவைகள் பொது இயக்குநர், நான்கு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு பிரபலமான இருமல் மருந்தை தயாரிப்பதற்கு தடை செய்தது.

இந்த மருந்தின் தயாரிப்பில் உள்ள குளோர்ஃபெனிரமைன் மாலேட் (chlorpheniramine maleate) மற்றும் ஃபெனைல்ஃபெரின் (phenylephrine) ஆகியவற்றுக்கு 2015-ஆம் ஆண்டு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இவை இருமல் மற்றும் சளி மருந்துகளில் முக்கியமான மூலப்பொருட்களாக பரவலாக பயன்படுத்தப்படுகின்றன.

இதையடுத்து, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்தால் 2022-ஆம் ஆண்டில் காம்பியா மற்றும் உஸ்பெகிஸ்தானில் குழந்தைகள் இறந்ததைத் தொடர்ந்து சர்வதேச அளவில் கவலைகள் எழுந்ததால் அதற்கு தடை விதிக்கப்பட்டது.

எனினும், இந்த மருந்துகளை தயாரிப்பவர்கள் தாங்கள் தவறிழைக்கவில்லை என மறுத்துள்ளனர், பரிந்துரைக்கப்பட்ட அளவில் வழங்கும் போது தங்களின் மருந்துகள் பாதுகாப்பானவை என்று கூறுகின்றனர்.

சிந்த்வாராவை சேர்ந்த சுகாதார துறை அதிகாரி, பெயர் தெரிவிக்க விரும்பாமல் பிபிசியிடம் கூறுகையில், "இறந்த குழந்தைகளுள் 6-7 பேர் 4 வயதுக்குட்பட்டவர்கள்." என்றார்.

இது முதல் முறையல்ல...

மத்திய பிரதேசத்தில் மருந்துகளின் தரம் குறித்து முன்பு கடுமையான கேள்விகள் எழுந்துள்ளன.

2024-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், 9க்கும் மேற்பட்ட அத்தியாவசிய மருந்துகள் மற்றும் ஊசிகள் தரப் பரிசோதனையில் தோல்வியடைந்ததால், மாநிலம் முழுவதும் அவற்றுக்கு தடை விதிக்கப்பட்டது.

மத்திய பிரதேச பொது சுகாதார சேவைகள் கழகம், இந்த மருந்துகளை தரமற்றவை என வகைப்படுத்தியுள்ளது, நோயாளிகளின் பாதுகாப்பு மற்றும் மாநிலத்தின் சுகாதார கட்டமைப்பு குறித்து பல்வேறு தீவிரமான கேள்விகளை எழுப்புகிறது.

பொது சுகாதார நிபுணர் அமுல்யா நிதி இதுகுறித்து கூறுகையில், "மருந்துகள் பக்க விளைவுகளை ஏற்படுத்தும், ஆனால் மரணத்தை ஏற்படுத்தாது. எனவே, சிந்த்வாராவில் குழந்தைகள் இறந்ததைத் தொடர்ந்து, அந்த மருந்தின் தரம் குறித்து அல்ல, அதில் என்ன கலக்கப்பட்டது என்பது குறித்து கேள்விகள் எழுப்பப்பட வேண்டும். விசாரித்து வருவதாக அரசு கூறுகிறது. விசாரணை இன்னும் எவ்வளவு காலம் எடுக்கும்?" என்றார்.

மாநிலத்தின் சுகாதார கட்டமைப்பு குறித்து பேசிய அவர், "குழந்தைகளின் நலனில் அரசு தீவிரமாக இருப்பதாக தெரியவில்லை. இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், தாமதம் செய்யப்படுகின்றது. நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. பச்சிளம் குழந்தைகள் இறப்பு, பிரசவத்தின் போது பெண்கள் இறப்பது ஆகியவை மோசமான விகிதத்தில் உள்ளன. இந்தூரில் குழந்தைகளை எலி கடித்ததும் பதிவாகியுள்ளது. இப்போது சிந்த்வாராவில் இருமல் மருந்தால் குழந்தைகள் இறந்துள்ளனர். நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை மருத்துவர்கள் கடைபிடிக்க வேண்டும். மருந்து கொள்முதல் கொள்கை மற்றும் மருந்து தரம் குறித்து சுயாதீனமாக ஆய்வு செய்ய வேண்டும்" என்றார்.

நாட்டிலேயே பச்சிளம் குழந்தைகள் இறப்பு மத்திய பிரதேசத்தில் அதிகமாக உள்ளது, அங்கு பிறக்கும் 1,000 குழந்தைகளில் 40 குழந்தைகள் இறக்கின்றன.

2025-ஆம் ஆண்டு ஜூலை மாதம் சுகாதார அமைச்சர் ராஜேந்திர ஷுக்லா சட்டமன்றத்தில் இந்த தகவலை எழுத்துபூர்வ பதிலாக வழங்கினார். சமீபத்திய மாதிரி பதிவு அமைப்பு தரவுகளின்படி (Sample Registration System (2022), தேசிய சராசரியைவிட மாநிலத்தில் பச்சிளம் குழந்தைகள் இறப்பு அதிகம் என்று அவர் தெரிவித்தார்.

மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ்

படக்குறிப்பு, மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ்

நீதி கேட்கும் குடும்பங்கள்

இருமல் மருந்தை குடித்து அதனால் ஏற்பட்ட சிறுநீரக செயலிழப்பால் ஐந்து வயதான அட்னன் கான் செப்டம்பர் 7 அன்று உயிரிழந்ததாக குடும்பத்தினர் கூறுகின்றனர்.

அட்னனின் தந்தை ஆமின் செல்போனில் பேசுவதற்கு தயாராக இல்லை.

ஆமினின் மூத்த சகோதரர் சஜித் கான் பிபிசியிடம் கூறுகையில், "குழந்தைக்கு எவ்வித தீவிரமான உடல்நல பிரச்னையும் இல்லை. லேசான காய்ச்சல் ஏற்பட்டது, பின்னர் நிலைமை மோசமானது. எங்களால் அவனை காப்பாற்ற முடியவில்லை" என்றார்.

அட்னனின் தந்தை அங்கு சேவை மையம் ஒன்றை நடத்திவருகிறார், அதன்மூலம் மாதம் சுமார் ரூ. 10,000 வருமானம் ஈட்டிவருகிறார்.

சஜித் கூறுகையில், 15 நாட்களாக ரூ. 7 லட்சத்திற்கும் அதிகமாக செலவு செய்தும் அட்னனை காப்பாற்ற முடியவில்லை என்றார்.

நான்கு வயதான விகாஸ் யாதவன்ஷியின் வீட்டிலும் அமைதி நிலவுகிறது.

குழந்தையின் தந்தை பிரபுதயாள் யாதவ் கூறுகையில், "இருமல், சளி, காய்ச்சலால் 10 நாட்களில் சிறுநீரகம் செயலிழக்குமா? எதையும் எங்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. என்ன நடந்தது என எங்களுக்கு தெரியவில்லை" என்றார்.

விகாஸின் பெற்றோர் விவசாயிகள். தங்கள் மகனின் இறப்புக்கு நீதி வேண்டும் என அவர்கள் கோருகின்றனர்.

வீட்டின் மூலையில் அமர்ந்திருக்கும் பிரபுதயாள் கூறுகையில், "எங்கள் குழந்தை இறப்புக்கு நீதி வேண்டும். குழந்தை ஆரோக்கியமாக இருந்தது. இருமல் மற்றும் காய்ச்சலால் எப்படி சிறுநீரகம் செயலிழக்கும்? இதற்கு யார், எப்போது பதிலளிப்பார்கள் என்பதை அரசு சொல்ல வேண்டும்" என்றார்.

இதனிடையே, சஜித் பிபிசியிடம் கூறுகையில், "மருந்தை தயாரித்தவர்கள் அல்லது விற்றவர்கள் என யார் தவறிழைத்தார்களோ அவர்களுக்கு கடும் தண்டனை வழங்கப்படும். என் மகன் போய்விட்டான், குறைந்தபட்சம் வேறு யாரும் இந்த மோசமான மருந்துகளுக்கு தங்கள் குழந்தைகளை இழக்கக் கூடாது," என்றார்.

இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இருமல் மருந்து கொடுக்கப்படக் கூடாது என, மத்திய சுகாதார அமைச்சகம் அறிவுறுத்துகிறது

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இருமல் மருந்து கொடுக்கப்படக் கூடாது என, மத்திய சுகாதார அமைச்சகம் அறிவுறுத்துகிறது

நிபுணர்கள் கூறுவது என்ன?

சாமானியர் ஒருவர் எப்படி இந்த மருந்துகள் நல்லதா அல்லது போலியானவையா என்பதை கண்டறிய முடியும் என்பதை குழந்தைகள் நல மருத்துவர் ஆவேஷ் சயினி கூறினார்.

அவர் கூறுகையில், "அந்த மருந்து எப்படி இருக்கிறது என்பதை பார்க்க வேண்டும். அது நுரையாகவோ அல்லது நிறம் மாறியோ அல்லது அதில் வேறு ஏதேனும் துகள்கள் இருக்கின்றதா என்பதை பார்க்க வேண்டும். மருந்தின் அடியில் ஏதேனும் துகள்கள் இருந்தாலோ அல்லது மருந்தின் பேட்ச் எண் குறிப்பிடாமல் அல்லது அழிக்கப்பட்டிருந்தாலோ அந்த மருந்தும் நல்லதல்ல. அந்த மருந்தின் உரிம எண்ணும் அதில் இருப்பதும் அவசியம். அது எழுதப்படவில்லையென்றாலும் அந்த மருந்தை எடுத்துக் கொள்ளக்கூடாது." என்றார்.

மருத்துவர் சயினி கூறுகையில், "இவையெல்லாம் ஏற்கெனவே உள்ள வழிகாட்டு நெறிமுறைகள் தான். இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இதுகுறித்து ஆய்வு கிடையாது, எனவே இவற்றை இரண்டு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்குதான் கொடுக்க வேண்டும்." என்றார்.

மருந்தை எவ்வளவு கொடுக்க வேண்டும் என்பது குறித்து பேசிய அவர், "மருத்துவர் பரிந்துரைக்கும் அளவே கொடுக்க வேண்டும். குழந்தையின் எடைக்கு ஏற்பவே மருந்து கொடுக்கப்பட வேண்டும்" என்றார்.

போலி மருந்துகளால் வேறு என்னென்ன பிரச்னைகள் வரும் என கேட்டதற்கு, "மூச்சு விடுவதில் சிரமம், வயிற்று வலி ஏற்படும். சிறுநீரகத்தை அது பாதிக்கும். பின்னர் மூளையை பாதிக்கும். இதனால் பின்னர் வலிப்பு ஏற்பட்டு, இதயத்துடிப்பு நின்றுவிடும்." என்றார்.

இதனிடையே, முன்பு போபாலில் பணியாற்றிய மருத்துவர் ஹர்ஷிதா ஷர்மா கூறுகையில், "டைஎத்திலீன் கிளைக்கால் மற்றும் எத்திலீன் கிளைக்கால் ஆகியவை இருமல் மருந்துகளில் குளிர்விப்பானாக (coolants) பயன்படுத்தப்பட்டன. இதனால் மருந்து இனிப்பு சுவையுடையதாகவும் குளிர்ச்சியானதாகவும் இருக்கும். இது சார்பிடாலை (sorbitol) ஒத்ததாக இருக்கும். எனினும், சார்பிடால் செலவு அதிகம் என்பதால், சில மருந்து நிறுவனங்கள் டைஎத்திலீன் கிளைகாலை மலிவான மாற்றாக பயன்படுத்துகின்றன. நாட்டு மதுபானங்களில் காணப்படும் மெத்தில் ஆல்கஹாலுடன் இவையும் ஒரே வகையின்கீழ் வருகின்றன. இரண்டும் உடல் நலனுக்கு தீங்கானவை" என்றார்.

மேலும் அவர் கூறுகையில், "இந்த ரசாயனங்களிலிருந்து தயாரிக்கப்படும் மருந்துகள் குழந்தைகளுக்கு நெஃப்ரோடாக்ஸிக், அதாவது சிறுநீரகத்தை நேரடியாக பாதிக்கும் அளவுக்கு நச்சுத்தன்மை வாய்ந்தவை. இந்த ரசாயனங்கள் சிறுநீரகத்தால் கட்டுப்படுத்தப்படும் அமிலத்தின் அளவை அதிகரிக்கின்றன. சிறுநீரகம் பாதிக்கப்படும் போது இந்த நச்சு பிற பாகங்களுக்கும் பரவி மரணம் நிகழ்கிறது" என்றார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c5ye4z7vpnvo

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாடு மத்திய பிரதேச மாநிலத்தோடு ஓப்பிடும் போது தொடர்ந்து பல ஆண்டுகளாக கல்வி, சுகாதாரம், நிதி, சமவாய்ப்புகள் கொண்ட பொருளாதாரம் என்பவற்றில் முன்னணியில் நிற்கும் மாநிலம்.

இதற்கு யார் காரணம்? எந்தக் கொள்கை காரணம்? என்று இரு கேள்விகளைக் கேட்டால் "மரத்தைப் பற்றி விளாவாரியாகப் பேசி, மாட்டைப் பற்றி எதுவும் எழுதாமல் பம்மும்" எங்கள் "திராவிட லவ்வர்ஸ்" என்ன சொல்வார்கள் என யோசிக்கிறேன்😎!

  • கருத்துக்கள உறவுகள்

டாஸ்மாக்கும்…. சத்து டானிக்தான். 😂

ஆனால் என்ன அதை குடிக்கிறவன் சத்தம் இல்லாமல் மேல்லோகம் போகிறான். 😜

அதற்குள் விசச் சாராயம் குடித்து இறந்தவனுக்கு… 10 லட்சம் ரூபாய், பம்பர் பரிசு. 😂

இது தெரியாமல்… இங்கை நின்று குப்பை கொட்ட வேண்டி இருக்கு. 🤣

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, தமிழ் சிறி said:

இது தெரியாமல்

முதல் "மரக் கட்டுரை" வந்திருக்கிறது🤤!

கருத்துகளுக்கு "பச்சை சிவப்பு" நிறம் தீட்டுவதில் வீணாக்கும் நேரத்தை இருமல் மருத்துக்கும் சத்து டானிக்கிற்கும் இடையேயான வேறுபாட்டைப் பற்றி வாசிக்கச் செலவழிக்க மாட்டீர்களா?

"டாஸ்மாக்" போன்ற அரச கடைகளில் "சத்து ரொனிக்" விற்கா விட்டால் உங்கள் போன்ற "வெள்ளிக் கிழமை விசேஷம்" செய்கிற நுகர்வோர், நுகராமல் விட்டு விடுவீர்கள் என்கிறீர்களா😂?

  • கருத்துக்கள உறவுகள்

மத்திய பிரதேச சிந்த்வாராவை சேர்ந்தவர் கேட்கின்றார் விஷத்தன்மை கொண்ட ஆபத்தான மருந்து அது என்பதை தமிழ்நாடு அரசு ஒரு நாளைக்குள்ளே கண்டுபிடித்துவிட்டது ஆனால் மத்திய பிரதேச அரசால் ஏன் கண்டுபிடிக்க முடியவில்லை?

மத்திய பிரதேசத்தை பழைய காலங்களில் காங்கிரசும் கடந்த 20 வருடங்களாக பாஜகவும் ஆட்சி செய்கின்றன. தமிழ்நாட்டை 58 வருடங்களாக திராவிட கட்சிகளே ஆட்சி செய்கின்றன.

  • கருத்துக்கள உறவுகள்
On 6/10/2025 at 19:23, Justin said:

தமிழ்நாடு மத்திய பிரதேச மாநிலத்தோடு ஓப்பிடும் போது தொடர்ந்து பல ஆண்டுகளாக கல்வி, சுகாதாரம், நிதி, சமவாய்ப்புகள் கொண்ட பொருளாதாரம் என்பவற்றில் முன்னணியில் நிற்கும் மாநிலம்.

இதற்கு யார் காரணம்? எந்தக் கொள்கை காரணம்? என்று இரு கேள்விகளைக் கேட்டால் "மரத்தைப் பற்றி விளாவாரியாகப் பேசி, மாட்டைப் பற்றி எதுவும் எழுதாமல் பம்மும்" எங்கள் "திராவிட லவ்வர்ஸ்" என்ன சொல்வார்கள் என யோசிக்கிறேன்😎!

ஒரு விடயத்துக்கு... முட்டுக் கொடுக்கவோ, வெள்ளை அடிக்கவோ முதல்,

ஆற அமர யோசித்து... சுய புத்தியுடன் கருத்துக்களை எழுத வேண்டும்.

பின் விளைவுகளை யோசிக்காமல்.. கண்ட எல்லாத்துக்கும்,

"குருட்டுக் கோழி" விட்டத்தில் பாய்ந்த மாதிரி கருத்து எழுதினால்...

இப்பிடித்தான்... "பல்பு" 💡 வாங்க வேண்டி வரும்.

New-Project-117.jpg?resize=750%2C375&ssl

21 குழந்தைகளின் இறப்புடன் தொடர்புடைய இருமல் சிரப் நிறுவன உரிமையாளர் கைது!

ஒரு மருந்து உற்பத்தி நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்து குறைந்தது 21 குழந்தைகளின் இறப்புக்குக் வழிவகுத்தது என்று கூறப்பட்டதை அடுத்து, இந்தியப் பொலிஸார் குறித்த நிறுவனத்தின் உரிமையாளரை கைது செய்துள்ளனர்.

அதன்படி, 75 வயதான ஜி. ரங்கநாதன், என்பவர் இன்று (09) அதிகாலை சென்னையில் உள்ள அவரது வீட்டில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

அவர் மீது கொலைக்கு சமமான குற்றச்சாட்டுகள் மற்றும் மருந்துக் கலப்படம் தொடர்பான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தியாவில் தயாரிக்கப்படும் இருமல் சிரப்கள் அண்மைய ஆண்டுகளில் உலகளாவிய ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

பல நாடுகளில் அவற்றின் நுகர்வு தொடர்பான இறப்புகள் பதிவாகியுள்ளன.

இது மருந்துகளின் மூன்றாவது பெரிய உற்பத்தியாளர் என்ற இந்தியாவின் நற்பெயருக்கு கலங்கம் விளைவித்துள்ளது.

இந்த நிலையில் கோல்ட்ரிஃப் (Coldrif) என்ற பிராண்ட் பெயரில் விற்கப்படும் மேற்படி சம்பவத்துடன் தொடர்புடைய இந்த இருமல் சிரப், தமிழ்நாட்டின் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ‘ஸ்ரீசன் பார்மா’ நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது.

இந்திய சுகாதார அமைச்சு சனிக்கிழமை சிரப் மாதிரிகளில் நடத்தப்பட்ட சோதனைகளில், இருமல் மருந்தில் பரிந்துரைக்கப்பட்ட வரம்பை விட அதிக அளவில் டைதிலீன் கிளைகோல் (DEG) என்ற நச்சு இரசாயனம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இது தொழில்துறை கரைப்பான்களில் பயன்படுத்தப்படும் ஒரு நச்சுப் பொருளாகும்.

இது சிறிய அளவில் உட்கொண்டாலும் ஆபத்தானது.

மத்தியப் பிரதேசம் மற்றும் பல மாநிலங்கள் இந்த தயாரிப்பைத் தடை செய்துள்ளன.

இந்த நச்சு இருமல் சிரப் மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டதா என்பது குறித்து உலக சுகாதார நிறுவனம் இந்திய அதிகாரிகளிடம் விளக்கம் கோரியதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன.

2022 ஆம் ஆண்டில் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட இருமல் சிரப்பை உட்கொண்ட பின்னர் காம்பியாவில் 70 க்கும் மேற்பட்ட குழந்தைகள் கடுமையான சிறுநீரக செயலிழப்பால் இறந்தனர்.

உஸ்பெகிஸ்தானில், 2022 மற்றும் 2023 க்கு இடையில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மற்றொரு மாசுபட்ட சிரப்பை உட்கொண்ட பின்னர் 68 குழந்தைகள் இறந்தனர்.

https://athavannews.com/2025/1449960

############### ##################

@Justin அந்த மருந்து தயாரிக்கப் பட்டதே... திராவிட ஊழல் மலிந்த, தமிழ் நாட்டில் தான். 😮

ஒரு விடயத்துக்கு... முட்டுக் கொடுக்கவோ, வெள்ளை அடிக்கவோ முதல்,

ஆற அமர யோசித்து... சுய புத்தியுடன் கருத்துக்களை எழுத வேண்டும். animiertes-computer-smilies-bild-0044.gi

பின் விளைவுகளை யோசிக்காமல்.. கண்ட எல்லாத்துக்கும்,

"குருட்டுக் கோழி" விட்டத்தில் பாய்ந்த மாதிரி, 😂 கருத்து எழுதினால்...

இப்பிடித்தான்... "பல்பு" 💡 வாங்க வேண்டி வரும். 🤣

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

ஒரு விடயத்துக்கு... முட்டுக் கொடுக்கவோ, வெள்ளை அடிக்கவோ முதல்,

ஆற அமர யோசித்து... சுய புத்தியுடன் கருத்துக்களை எழுத வேண்டும்.

பின் விளைவுகளை யோசிக்காமல்.. கண்ட எல்லாத்துக்கும்,

"குருட்டுக் கோழி" விட்டத்தில் பாய்ந்த மாதிரி கருத்து எழுதினால்...

இப்பிடித்தான்... "பல்பு" 💡 வாங்க வேண்டி வரும்.

New-Project-117.jpg?resize=750%2C375&ssl

21 குழந்தைகளின் இறப்புடன் தொடர்புடைய இருமல் சிரப் நிறுவன உரிமையாளர் கைது!

ஒரு மருந்து உற்பத்தி நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்து குறைந்தது 21 குழந்தைகளின் இறப்புக்குக் வழிவகுத்தது என்று கூறப்பட்டதை அடுத்து, இந்தியப் பொலிஸார் குறித்த நிறுவனத்தின் உரிமையாளரை கைது செய்துள்ளனர்.

அதன்படி, 75 வயதான ஜி. ரங்கநாதன், என்பவர் இன்று (09) அதிகாலை சென்னையில் உள்ள அவரது வீட்டில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

அவர் மீது கொலைக்கு சமமான குற்றச்சாட்டுகள் மற்றும் மருந்துக் கலப்படம் தொடர்பான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தியாவில் தயாரிக்கப்படும் இருமல் சிரப்கள் அண்மைய ஆண்டுகளில் உலகளாவிய ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

பல நாடுகளில் அவற்றின் நுகர்வு தொடர்பான இறப்புகள் பதிவாகியுள்ளன.

இது மருந்துகளின் மூன்றாவது பெரிய உற்பத்தியாளர் என்ற இந்தியாவின் நற்பெயருக்கு கலங்கம் விளைவித்துள்ளது.

இந்த நிலையில் கோல்ட்ரிஃப் (Coldrif) என்ற பிராண்ட் பெயரில் விற்கப்படும் மேற்படி சம்பவத்துடன் தொடர்புடைய இந்த இருமல் சிரப், தமிழ்நாட்டின் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ‘ஸ்ரீசன் பார்மா’ நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது.

இந்திய சுகாதார அமைச்சு சனிக்கிழமை சிரப் மாதிரிகளில் நடத்தப்பட்ட சோதனைகளில், இருமல் மருந்தில் பரிந்துரைக்கப்பட்ட வரம்பை விட அதிக அளவில் டைதிலீன் கிளைகோல் (DEG) என்ற நச்சு இரசாயனம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இது தொழில்துறை கரைப்பான்களில் பயன்படுத்தப்படும் ஒரு நச்சுப் பொருளாகும்.

இது சிறிய அளவில் உட்கொண்டாலும் ஆபத்தானது.

மத்தியப் பிரதேசம் மற்றும் பல மாநிலங்கள் இந்த தயாரிப்பைத் தடை செய்துள்ளன.

இந்த நச்சு இருமல் சிரப் மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டதா என்பது குறித்து உலக சுகாதார நிறுவனம் இந்திய அதிகாரிகளிடம் விளக்கம் கோரியதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்தன.

2022 ஆம் ஆண்டில் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட இருமல் சிரப்பை உட்கொண்ட பின்னர் காம்பியாவில் 70 க்கும் மேற்பட்ட குழந்தைகள் கடுமையான சிறுநீரக செயலிழப்பால் இறந்தனர்.

உஸ்பெகிஸ்தானில், 2022 மற்றும் 2023 க்கு இடையில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மற்றொரு மாசுபட்ட சிரப்பை உட்கொண்ட பின்னர் 68 குழந்தைகள் இறந்தனர்.

https://athavannews.com/2025/1449960

############### ##################

@Justin அந்த மருந்து தயாரிக்கப் பட்டதே... திராவிட ஊழல் மலிந்த, தமிழ் நாட்டில் தான். 😮

ஒரு விடயத்துக்கு... முட்டுக் கொடுக்கவோ, வெள்ளை அடிக்கவோ முதல்,

ஆற அமர யோசித்து... சுய புத்தியுடன் கருத்துக்களை எழுத வேண்டும். animiertes-computer-smilies-bild-0044.gi

பின் விளைவுகளை யோசிக்காமல்.. கண்ட எல்லாத்துக்கும்,

"குருட்டுக் கோழி" விட்டத்தில் பாய்ந்த மாதிரி, 😂 கருத்து எழுதினால்...

இப்பிடித்தான்... "பல்பு" 💡 வாங்க வேண்டி வரும். 🤣

இந்தத் தகவல் உங்களுக்கு "எட்டக்கூடிய" இடத்தில் இருக்கவில்லைப் போல:

இந்தியாவில் மருந்துகள் உற்பத்தி, GMP தராதரப் பரிசோதனைகள், அவை மீறப் பட்டால் தண்டனை என்பன மத்திய அரசின் மருந்துக் கட்டுப் பாட்டு அமைப்புகள் மூன்றின் கீழ் மட்டும் தான் இருக்கின்றன. மாநில அரசுக்கு இதில் எந்தக் கடப் பாடும் ,அதிகாரமும் இல்லை.

"பல்பு" தகவல் தேடுவோருக்கும், பகிர்வோருக்கும் கொடுக்கும் நேரத்தை உங்கள் "பியூஸ் போன பல்பை" மாற்றி ஒளி பெறப் பயன்படுத்துங்கள் ஐயா😎!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கோல்ட்ரிஃப் இருமல் மருந்து தயாரிக்கப்பட்ட இடம் எப்படி இருக்கிறது? பிபிசி கண்டது என்ன?

கோல்ட்ரிஃப் இருமல் மருந்தைக் குடித்த 20 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.

படக்குறிப்பு, கோல்ட்ரிஃப் இருமல் மருந்தைக் குடித்த 20 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.

கட்டுரை தகவல்

  • முரளிதரன் காசிவிஸ்வநாதன்

  • பிபிசி தமிழ்

  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்

தமிழ்நாட்டைச் சேர்ந்த மருந்து நிறுவனம் ஒன்று தயாரித்த இருமல் மருந்தைக் குடித்த 20 குழந்தைகள் மத்தியப் பிரதேசத்தில் உயிரிழந்துள்ளனர்.

காஞ்சிபுரத்தில் இயங்கிய ஸ்ரேசன் பார்மசூட்டிகல்ஸ் என்ற நிறுவனம் தயாரித்த கோல்ட்ரிஃப் என்ற இருமல் மருந்தைக் குடித்த மேலும் ஐந்து குழந்தைகள் சிறுநீரகம் பாதிக்கப்பட்டு மத்தியப் பிரதேசத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தக் குழந்தைகளுக்கு காய்ச்சலும் இருமலும் ஏற்பட்டதையடுத்து இவர்களுக்கு ஸ்ரேசன் நிறுவனம் தயாரித்த 'கோல்ட்ரிஃப்' என்ற இருமல் மருந்தை மருத்துவர்கள் பரிந்துரைத்தனர்.

இந்த மருந்தைக் குடித்த பிறகு, இந்தக் குழந்தைகளுக்கு வாந்தியும் சிறுநீர் கழிப்பதில் பிரச்னையும் ஏற்பட்டது. இதையடுத்து குழந்தைகள் ஒருவர் பின் ஒருவராக மரணமடைய ஆரம்பித்தனர்.

'கோல்ட்ரிஃப்' மருந்தை மாநில அரசு தடை செய்தது.

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, 'கோல்ட்ரிஃப்' மருந்தை மாநில அரசு தடை செய்தது.

மத்தியப் பிரதேசத்தில் குழந்தைகள் மரணமடைய ஆரம்பித்ததையடுத்து, இது தொடர்பாக தமிழக மருந்துக் கட்டுப்பாட்டுத் துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது.

இதற்குப் பிறகு நடவடிக்கையில் இறங்கிய மருந்துக் கட்டுப்பாட்டுத் துறை அக்டோபர் 1-ஆம் தேதி மாலையில் அந்த மருந்து நிறுவனத்தைச் சோதனையிட்டது. சோதனையின்போது மத்தியப் பிரதேசத்திற்கு அனுப்பப்பட்ட பேட்சைச் சேர்ந்த மருந்துகள் (Batch No. SR-13 2025 மே மாதம் தயாரிக்கப்பட்டவை) கைப்பற்றப்பட்டன.

இதற்குப் பிறகு அங்கிருந்த கோல்ட்ரிஃப் மருந்து, ரெஸ்போலைட் (Respolite) மருந்துகளின் மூன்று வகைகள், ஹெப்சான்டின் மருந்து ஆகியவை ஆய்வுக்காக எடுத்துச் செல்லப்பட்டன. மீதமுள்ள மருந்துகள் முடக்கிவைக்கப்பட்டன.

இந்த மருந்துகளை விநியோகிக்கவோ, விற்பனை செய்யவோ வேண்டாம் என மாநிலம் முழுவதும் அறிவிக்கப்பட்டது. அந்த நிறுவனத்தில் இருந்த ஆவணங்களை ஆய்வு செய்தபோது, இந்த மருந்துகள் ஒடிசா, புதுச்சேரி ஆகிய இடங்களுக்கும் அனுப்பப்பட்டிருந்தது தெரியவந்தது. அந்த மாநில அரசுகளுக்கும் இது தொடர்பாக அறிவுறுத்தப்பட்டது.

தமிழக மருந்துக் கட்டுப்பாட்டுத் துறை 41 பக்க அறிக்கையை வெளியிட்டது.

படக்குறிப்பு, தமிழக மருந்துக் கட்டுப்பாட்டுத் துறை 41 பக்க அறிக்கையை வெளியிட்டது.

'மருந்து உற்பத்தியே சுகாதாரமாக நடக்கவில்லை'

இந்தச் சோதனைகளின்போது ஸ்ரேசன் நிறுவனம் மருந்து உற்பத்திக்கான நூற்றுக்கணக்கான விதிகளை மீறியது தெரியவந்தது.

இது தொடர்பாக தமிழக மருந்துக் கட்டுப்பாட்டுத் துறை 41 பக்க அறிக்கை ஒன்றை அளித்துள்ளது. அதில் சோதனையின்போது கண்டறியப்பட்ட 364 விதி மீறல்கள் பட்டியலிடப்பட்டிருக்கின்றன. அதில் 39 விதி மீறல்கள் மிகத் தீவிரமானவை. 325 விதிமீறல்கள் பெரிய அளவிலானவை.

முதலாவதாக, ''இருமல் மருந்தைத் தயாரிப்பதற்காக அங்கு வைக்கப்பட்டிருந்த ப்ரோப்பலீன் க்ளைக்கால், மருந்து உற்பத்திக்கான தரத்தில் இல்லை''

அடுத்ததாக, ''அந்த வேதிப் பொருள் மருந்து உற்பத்தி நிறுவனத்திற்கு வந்த பிறகு அது மருந்துத் தரத்தில் இருக்கிறதா என்பது சோதனை செய்யப்படவும் இல்லை''.

மேலும் "இந்த மருந்து நிறுவனத்தில் சரியான தரத்திலான பணியாளர்கள் இல்லை. பயன்படுத்தப்படும் தண்ணீர், உற்பத்திக் கருவிகள் போன்றவை அங்கீகரிக்கத்தக்கத் தரத்தில் இல்லை. தயாரிக்கப்பட்ட பொருள்கள் மிகவும் சுகாதாரமற்ற முறையில் சேகரித்து வைக்கப்பட்டிருந்தன." என அதில் குறிப்பிடப்படுள்ளது.

மேலும், "மருந்து உற்பத்தியே சுகாதாரமாக நடக்கவில்லை. பூச்சிகளைக் கட்டுப்படுத்துவது போன்ற செயல்பாடுகளும் இல்லை. மருந்துகளைக் கண்காணிக்கும் நடைமுறைகள் இல்லை. தரவுகள் சேகரித்து வைக்கப்படவில்லை. தரத்தை உறுதி செய்யும் பிரிவே இல்லை. வெளியில் இருந்துதான் தண்ணீர் எடுத்துவரப்படுகிறது. அவை சுத்திகரிக்கப்படுவதும் இல்லை. கழிவுநீர் சுத்திகரிக்கப்படாமல் வெளியில் விடப்பட்டது. மருந்து உற்பத்திக்கான தண்ணீர் சுகாதாரமற்ற முறையில் சேமித்து வைக்கப்பட்டிருந்தது" என விதிமீறல்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

கைதான உரிமையாளர்

இதற்கிடையில் கைப்பற்றப்பட்ட மருந்துகள் வேதியல் ஆய்வுக்கு அனுப்பப்பட்டு முடிவுகள் பெறப்பட்டன.

அதன்படி, இருமல் மருந்துகளில் பயன்படுத்தப்பட்ட ப்ரோப்பலீன் க்ளைகால் (Propylene Glycol) என்ற வேதிப் பொருள் மருந்துப் பொருட்களுக்கான தரத்தில் இல்லை என்பதும் அதில் சிறுநீரகங்களைப் பாதிக்கக்கூடிய நச்சுப் பொருளான டைஎத்திலீன் க்ளைக்கால் இருப்பது கண்டறியப்பட்டதாக மருந்துக் கட்டுப்பாட்டு துறை தெரிவிக்கிறது.

'மத்தியப் பிரதேசத்திற்கு அனுப்பப்பட்ட மருந்துத் தொகுப்பில், டைஎத்திலீன் க்ளைக்கால் 48.6 சதவீதம் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து மருந்துத் தயாரிப்பை நிறுத்த உத்தரவிடப்பட்டது.

அந்த மருந்து நிறுவனத்தின் உரிமத்தை ஏன் ரத்து செய்யக்கூடாது எனக் கேட்டு நோட்டீசும் அனுப்பப்பட்டது. அக்டோபர் 12- ஆம் தேதிக்குள் இந்த நோட்டீஸிற்கு பதிலளிக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக கிரிமினல் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் முயற்சிகளும் துவங்கப்பட்டுள்ளதாக மருந்துக்கட்டுப்பாட்டுத் துறை தெரிவிக்கிறது.

இதற்கிடையில் இந்த விவகாரம் தொடர்பாக விசாரிப்பதற்காக மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த தனிப்படைக் காவல்துறையினர் 11 பேர் சென்னையில் முகாமிட்டிருந்தனர்.

அவர்கள் சென்னை நகரக் காவல்துறையினரின் உதவியுடன் ஸ்ரேசன் நிறுவனத்தின் உரிமையாளர் ரங்கநாதனை வியாழக்கிழமையன்று காலையில் கைது செய்து விசாரித்து வருகின்றனர். 73 வயதாகும் ரங்கநாதன் மருந்து உற்பத்தித் துறை வட்டாரங்களில் நன்கு அறியப்பட்டவர். நீண்ட காலமாக நீர்ம மருந்துகளை தயாரித்துவந்தவர்.

ஸ்ரேசன் பார்மசூட்டிகல்ஸ் நிறுவனம் 10 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகிறது.

படக்குறிப்பு, ஸ்ரேசன் பார்மசூட்டிகல்ஸ் நிறுவனம் 10 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகிறது.

பிபிசி கண்டது என்ன?

கோல்ட்ரிஃப் மருந்தைத் தயாரித்துவந்த ஸ்ரேசன் பார்மசூட்டிகல்ஸ் நிறுவனத்தின் தொழிற்சாலை சுங்குவார்சத்திரத்தில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகிறது.

இந்த இடத்தை நேரில் சென்று பார்க்கும் யாருக்கும் பெரும் அதிர்ச்சியே ஏற்படும். நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள ஒரு இடத்தில், தரைத்தளத்தையும் அதற்கு மேலே ஒரு தளத்தையும் கொண்ட மிகச் சாதாரணமான ஒரு கட்டடத்தில் இயங்கிவருகிறது இந்தத் தொழிற்சாலை.

இந்த நிறுவனம் மூடி சீல் வைக்கப்படுவதற்கு முன்புவரை, மொத்தம் 12 பேர் பணியாற்றி வந்தனர். இதன் உரிமையாளர் ரங்கநாதன் சென்னை மருத்துவக் கல்லூரியில் மருந்தியல் படிப்பை முடித்தவர்.

குழந்தைகளுக்கான மருந்துகளைத் தயாரிக்கும் இந்தத் தொழிற்சாலை உட்பகுதிகளில் துருப்பிடித்த பொருட்கள், ஆங்காங்கே சிதறிக்கிடக்கும் மருந்துகளுக்கான மூலப்பொருட்களைக் கொண்டிருக்கும் கேன்கள் என சுகாதாரமற்ற முறையிலேயே காணப்படுகின்றன.

சார்பிடால் என்ற மருந்தின் மூலப்பொருட்களைக் கொண்டிருக்கும் கேன்கள் எவ்விதப் பாதுகாப்புமின்றி வெளியில் வைக்கப்பட்டிருந்தன.

தமிழக அரசு மீது குற்றச்சாட்டு

இந்த நிலையில், மத்தியப் பிரதேசத்தில் 20 குழந்தைகள் இறந்திருப்பதற்கு தமிழ்நாடு அரசின் மிகமோசமான கவனக் குறைவே காரணம் என மத்தியப் பிரேதசத்தின் சுகாதாரத் துறை அமைச்சர் நரேந்திர சிவாஜி படேல் குற்றம்சாட்டியுள்ளார்.

"தயாரிக்கப்படும் ஒவ்வொரு பேட்சிற்கும் Certificate of Analysis சான்றிதழ் வழங்கப்பட்டிருக்க வேண்டும். இந்த பேட்சிற்கு அப்படிச் சான்றிதழ் வழங்கப்பட்டதா? எந்த அதிகாரி தவறு செய்தார் என்பது விசாரிக்கப்பட வேண்டும்" என அவர் கூறியிருப்பதாக பிடிஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.

ஸ்ரேசன் நிறுவனத்திற்கு 2011-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 27ஆம் தேதி உரிமங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன.

இந்த நடவடிக்கைகள், மருந்துக் கட்டுப்பாடு மற்றும் உரிமம் வழங்கும் ஆணையத்தின் துணை இயக்குநர் எஸ். குருபாரதியால் மேற்கொள்ளப்பட்டிருக்கும் நிலையில், அவரிடம் பேச மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை.

"அவர் இது தொடர்பான விசாரணையில் தீவிரமாக இருப்பதால், இது தொடர்பாக ஒவ்வொரு நாளும் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் செய்திக் குறிப்பாக மட்டுமே வழங்கப்படும்" என்கிறது அவரது அலுவலகம்.

இதற்கிடையில், மருந்துக் கட்டுப்பாட்டுத் துறையின் காஞ்சிபுரம் பிரிவில் பணியாற்றிவந்த கார்த்திகேயன், தீபா ஜோசப் ஆகிய இரு ஆய்வாளர்கள் தற்போது இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

அமைச்சர் கூறுவது என்ன?

இந்த விவகாரம் தொடர்பாக தமிழக மருத்துவத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியத்துடன் பேச மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை.

வியாழக்கிழமையன்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியார்களை சந்தித்தபோது, ''கோல்ட்ரிஃப் இருமல் மருந்து விவகாரத்தில் தமிழ்நாடு அரசு சரியாகச் செயல்படவில்லை என கூறப்படுகிறதே'' என கேட்கப்பட்டது.

அதற்குப் பதிலளித்த அவர், '' இது தொடர்பாக ஆய்வு நடத்தி, மருந்தில் கலப்படம் இருப்பது கண்டறியப்பட்டு தடை விதிக்கப்பட்டது. தமிழ்நாடு மருத்துவ சேவைகள் மையம் இந்த மருந்தை வாங்குவதில்லை. தனியார் வாங்கக்கூடாது என தடை விதிக்கப்பட்டது. மத்தியப் பிரதேசத்திற்கும் ஒன்றிய அரசுக்கும் இது தொடர்பாக தகவல் அனுப்பப்பட்டது" என்று தெரிவித்தார்.

மேலும், ''எந்த மருந்தாக இருந்தாலும் அந்தந்த மாநில மருந்துக் கட்டுப்பாட்டுத் துறை ஆய்வு செய்ய வேண்டும். நாங்கள் ஆய்வு செய்து கலப்படம் இருப்பதாகச் சொன்னோம். அரசியல் நெருக்கடி அதிகரித்தவுடன் இப்படி அறிக்கை விடுகிறார்கள். அதைப் பற்றி அதிகமாக நாங்கள் பேசப்போவதில்லை. நிறுவனம் மூடப்பட்டுவிட்டது. தயாரிப்பு நிறுத்தப்பட்டுவிட்டது. நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. கிரிமினல் வழக்கிற்கான நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. சீனியர் மருந்து ஆய்வாளர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதை நிரந்தரமாக மூடுவது தொடர்பாக 2, 3 நாட்களில் முடிவெடுக்கப்படும்" என்றார்

20 சதவீத மருந்துகளுக்கான உரிமங்களுக்கு இரு அரசுகளிடமும் உரிமம் பெற வேண்டும் என்கிறார் கே. சிவபாலன்.

படக்குறிப்பு, 20 சதவீத மருந்துகளுக்கான உரிமங்களுக்கு இரு அரசுகளிடமும் உரிமம் பெற வேண்டும் என்கிறார் கே. சிவபாலன்.

அதிர்ச்சியளித்த அறிக்கை

ஆனால், தமிழக மருந்துக் கட்டுப்பாட்டுத் துறை இது தொடர்பாக அளித்த முதலாவது அறிக்கையில் இருந்த சில வாசகங்கள் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தினர்.

அதாவது, ''அக்டோபர் ஒன்றாம் தேதியும் இரண்டாம் தேதியும் விடுமுறை நாளாக இருந்தாலும் பொதுநலனை மனதில் வைத்து மருந்துக் கட்டுப்பாட்டுத் துறை நடவடிக்கையில் இறங்கியது'' எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

20 குழந்தைகள் இறந்த ஒரு விவகாரத்தில் பதிலளித்த மருந்துக் கட்டுப்பாட்டுத் துறை விடுமுறை நாளிலும் வேலை பார்த்ததாகக் குறிப்பிட்டது தொடர்பாக ஊடகங்கள் விமர்சித்தன.

மேலும், இப்போது சோதனை நடத்தி 300க்கும் மேற்பட்ட விதிமீறல்களைக் கண்டுபிடித்திருக்கும் மருந்துக் கட்டுப்பாட்டுத் துறை இத்தனை நாட்களாக என்ன செய்தது என்ற கேள்வியும் எழுந்தது.

இதில் பல்வேறு அம்சங்களைக் கவனிக்க வேண்டும் என்கிறார் மருந்துக் கட்டுப்பாட்டுத் துறையின் முன்னாள் இயக்குநர் கே. சிவபாலன்.

"மருந்து உற்பத்தித் துறையைக் கட்டுப்படுத்த மாநில அரசின் சட்டமும் இருக்கிறது, மத்திய அரசின் சட்டமும் இருக்கிறது. மருந்து உற்பத்திக்கான உரிமங்களைப் பொறுத்தவரை 60 சதவீத மருந்துகளுக்கான உரிமங்களை மாநில அரசே தருகிறது. 20 சதவீத மருந்துகளுக்கான உரிமங்களுக்கு இரு அரசுகளிடமும் உரிமம் பெற வேண்டும்." என்கிறார் அவர்.

"20 சதவீத மருந்துகள் அதாவது, தடுப்பூசிகள், புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட மருந்துகள் போன்றவற்றுக்கு மத்திய அரசு மட்டுமே உரிமங்களை வழங்கும். ஒரு மருந்து நிறுவனம் செயல்பட ஆரம்பித்த பிறகு மாநில அரசின் மருந்துக் கட்டுப்பாட்டுத் துறையும், மத்திய அரசின் மருந்துக் கட்டுப்பாட்டுத் துறையும் சேர்ந்தோ தனித்தோ சோதனைகளை வருடத்திற்கு ஒரு முறையோ இரு முறையோ மேற்கொள்வார்கள்" என்கிறார் கே. சிவபாலன்.

இந்தச் சோதனைகளின்போது தொழிற்சாலையின் தரம், அங்கு பயன்படுத்தப்படும் பொருட்கள் - தண்ணீர், சர்க்கரையில் துவங்கி அனைத்தும் சோதனையிடப்படும். அதேபோல, தயாராகும் மருந்துகளின் மாதிரிகளும் எடுத்துச்செல்லப்பட்டு சோதனை செய்யப்படும் என்கிறார் அவர்.

"ஆனால், தமிழ்நாட்டில் 600க்கும் மேற்பட்ட மருந்து உற்பத்தி நிறுவனங்கள் இருக்கின்றன. பல நிறுவனங்கள் நூற்றுக்கணக்கான மருந்துகளைத் தயாரிக்கின்றன. ஒரு ஆய்வாளர் சோதனைக்குச் செல்லும்போது பத்து மாதிரிகளைத்தான் சேகரித்து, சோதனைக்கு அனுப்புவார். ஆகவே, எல்லா நிறுவனங்களிலும் எல்லா மருந்துகளையும் சோதனை செய்வது நடைமுறையில் சாத்தியமில்லை. எனவே, மருந்துகள் பாதுகாப்பாக இருப்பதை உறுதிசெய்ய வேண்டியது அந்தந்த மருந்து நிறுவனங்களின் கடமை" என்கிறார் கே. சிவபாலன்.

மருந்து உற்பத்தித் துறையில் ப்ரோப்பலீன் க்ளைகால் பெரிய அளவில் பயன்படுத்தப்படுகிறது என்கிறார் ஜெயசீலன்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மருந்து உற்பத்தித் துறையில் ப்ரோப்பலீன் க்ளைகால் பெரிய அளவில் பயன்படுத்தப்படுகிறது என்கிறார் ஜெயசீலன்.

டைஎத்திலீன் க்ளைக்கால் ஆபத்தா?

இந்த மருந்தின் தயாரிப்பு மற்றும் விநியோகச் சங்கிலியின் ஒவ்வொரு கட்டத்திலும் தவறு நேர்ந்திருக்கலாம் என்கிறார் இந்திய மருந்து உற்பத்தியாளர் சங்கத்தின் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி மாநிலப் பிரிவின் தலைவரான ஜே. ஜெயசீலன்.

"மருந்து உற்பத்தித் துறையில் ப்ரோப்பலீன் க்ளைகால் என்பது பெரிய அளவில் பயன்படுத்தப்படுகிறது. இதில் இரண்டு வகைகள் இருக்கின்றன. ஒரு வகை மருந்துகளைத் தயாரிக்க பயன்படுத்தப்படுவது. இரண்டாவது வகை பெயிண்ட் போன்றவற்றைத் தயாரிக்கப் பயன்படுத்தப்படுவது." என்றார் ஜெயசீலன்.

மேலும் "இருமல் மருந்துகளில் Paracetamol, Phenylephrine Hydrochloride, Chlorpheniramine Maleate ஆகிய மருந்துப் பொருட்கள் இருக்கும். இதில் பாராசிட்டமாலைக் கரைப்பதற்கான கரைப்பானாக இந்த ப்ரோப்பலீன் க்ளைக்கால் பயன்படுத்தப்படுகிறது. பொதுவாக மருந்து நிறுவனங்கள் தங்களுக்கான மூலப் பொருட்களை ஒரே இடத்தில் இருந்துதான் கொள்முதல் செய்வார்கள்.

ஒவ்வொரு மூலப்பொருளும் வரும்போதும் அவற்றை பரிசோதனை செய்துதான் தயாரிப்பில் பயன்படுத்த வேண்டும். இந்த விவகாரத்தைப் பொறுத்தவரை மருந்துத் தயாரிப்பு நிறுவனம் பரிசோதிக்காமல் பயன்படுத்தியிருக்கலாம்." எனக் கூறினார் அவர்.

"பொதுவாக, மருந்தைத் தயாரித்து முடிந்த பிறகு, விற்பனைக்கு அனுப்புவதற்கு முன்பாக பரிசோதனை செய்திருக்க வேண்டும். அடுத்ததாக, தமிழ்நாடு அரசு இதுபோன்ற மருந்துகளை வாங்கும்போது அவற்றைப் பரிசோதித்துத்தான் வாங்குவார்கள். ஆனால், மத்தியப் பிரதேச அரசு இதனை பரிசோதித்ததா என்பது தெரியவில்லை. இந்த விநியோகச் சங்கிலியில் ஏதாவது ஒரு இடத்தில் சோதனை நடந்திருந்தால், இதனைத் தடுத்திருக்கலாம்" என்கிறார் ஜெயசீலன்.

கோல்ட்ரீஃப் மருந்தில் 48.6 சதவீதம் அளவுக்கு டைஎத்திலீன் க்ளைக்கால் இருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது.

படக்குறிப்பு, கோல்ட்ரீஃப் மருந்தில் 48.6 சதவீதம் அளவுக்கு டைஎத்திலீன் க்ளைக்கால் இருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது.

தீர்வு என்ன?

இதில் நிறுவனத்தின் உரிமையாளர் தவிர, அந்தத் தொழிற்சாலையில் பணிபுரிந்தவர்கள், ப்ரோப்பலீன் க்ளைக்காலை சப்ளை செய்த நிறுவனம் ஆகியவையும் பொறுப்பேற்க வேண்டும் என்கிறார் ஜே. ஜெயசீலன்.

ப்ரோபலீன் க்ளைக்கால் என்பது பெட்ரோலியத்தைச் சுத்திகரிக்கும்போது கிடைக்கும் ஒரு வேதிப்பொருள். இதில், 0.1 சதவீதத்திற்கு மேல் டைஎத்திலீன் க்ளைக்கால் இருக்கக்கூடாது. கோல்ட்ரீஃப் மருந்தில் 48.6 சதவீதம் அளவுக்கு டைஎத்திலீன் க்ளைக்கால் இருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது.

இதுபோன்ற பிரச்னைகளைத் தவிர்க்க ஒரு யோசனையைச் சொல்கிறார் ஜே. ஜெயசீலன்.

"ஒரு முறை இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட இருமல் மருந்தினால் வேறொரு நாட்டில் மரணங்கள் நிகழ்ந்தன. இதையடுத்து மத்திய அரசு ஒரு கட்டுப்பாட்டைக் கொண்டுவந்தது. அதாவது, இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் மருந்துகள் அனைத்தும் மத்திய அரசின் சோதனைச் சாலையில் பரிசோதிக்கப்பட்ட பிறகே ஏற்றுமதிக்கு அனுப்பப்படும். அதேபோல, தமிழ்நாடு அரசும் ஒரு விதியை உருவாக்கலாம்" என்கிறார்.

ஆனால், குழந்தைகளுக்குக் கொடுக்கக்கூடிய மருந்தை இதுபோன்ற ஒரு தொழிற்சாலையில் தயாரிக்க முடியுமா?

"மிகப் பெரிய மருந்து நிறுவனங்களின் தொழிற்சாலைகள்தான் பிரமாண்டமானதாக இருக்கும். மற்றவை இதுபோல சிறிய இடங்களில்தான் இயங்கிவரும். குறிப்பாக Syrup போன்றவை இதுபோன்ற சிறிய தொழிற்சாலைகளில்தான் தயாராகும். ஆனால், அந்தத் தொழிற்சாலைகள் சுகாதாரமாக இருக்க வேண்டும்" என்கிறார் ஜெயசீலன்.

இதற்கிடையில் மத்திய மருந்துத் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு ஒவ்வொரு மாநிலமும் தங்கள் மாநிலத்தில் உள்ள இருமல் மருந்து தயாரிப்பு நிறுவனங்களின் பட்டியலை அளிக்க வேண்டுமெனக் கோரியிருக்கிறது.

இந்த நிறுவனங்களில் இணைந்து சோதனைகளை நடத்தவும் திட்டமிட்டிருக்கிறது. கோல்ட்ரிஃப் மருந்து விவகாரத்திற்குப் பிறகு நடந்த சோதனைகளில் ரெஸ்பிஃப்ரஷ், ரீலைப் ஆகிய மருந்துகளிலும் டைஎத்திலீன் க்ளைக்கால் நச்சு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/czx09v15z4qo

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

22 பிஞ்சு குழந்தைகளை பலி கொண்ட ColdRif இருமல் மருந்து.. சென்னையில் 7 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை

Sreesan-ED-Raid.jpg

22 பிஞ்சு குழந்தைகளை பலி கொண்ட ColdRif இருமல் மருந்து விவகாரத்தில் சென்னையில் 7 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் தற்போது சோதனை நடத்தி வருகின்றனர்.

தமிழ்நாட்டின் காஞ்சிபுரத்தில் உள்ள ஸ்ரீசன் பார்மா நிறுவனம், ColdRif இருமல் மருந்து தயாரித்து வந்தது. இந்த இருமல் மருந்தை குடித்த, 22 குழந்தைகள் உயிரிழந்தது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஸ்ரீசன் பார்மாவின் Coldrif, Relife, Respifresh TR ஆகிய இருமல் மருந்துகளில் டை எத்திலீன் கிளைக்கால் என்ற வேதிப்பொருள் அதிகளவில் கலந்து இருந்தது அம்பலமானது.

இதனைத் தொடர்ந்து மத்திய பிரதேச மாநில போலீசாரால் ஶ்ரீசன் பார்மா உரிமையாளர் ரங்கநாதன் கைது செய்யப்பட்டார். மேலும் இந்த நிறுவனத்தை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார்.

அத்துடன் ஶ்ரீசன் பார்மாவின் Coldrif இருமல் மருந்துக்கும் தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் தடை விதிக்கப்பட்டது.

இந்த விவகாரத்தில் சென்னை உள்ளிட்ட பல இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையில் ரங்கநாதன் வீடு உள்ளிட்ட 7 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகளின் சோதனை நடைபெற்று வருகிறது.

https://minnambalam.com/coldrif-cough-syrup-linked-to-deaths-of-22-infants-enforcement-directorate-raids-7-locations-in-chennai/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.