Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சித்தாந்த வினா விடை – அருணைவடிவேல் முதலியார்

 (சித்தாந்த ஞானம் பெற்ற நல்லாசிரியர் ஒருவரிடம், தேடல் உள்ள நல்மாணவன் ஒருவன் சென்று, வணங்கி அவரிடம் சைவம் பற்றிய உண்மைப் பொருளை கேட்டு தெளிவு பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு செல்கிறான். அவன் பலவாறாக கேள்விகள் கேட்க  அதற்கு அந்த ஆசிரியர் விடை அளிப்பது போல் அமைந்தது தான் இந்த நூல். இந்த மொத்த நூலின் அமைப்பே கேள்வி பதில் என்ற முறையில் அமைந்தது. 450 பக்கங்கள் உள்ள இந்த நூலை சைவ சிந்தாந்த பேரறிஞர் அருணைவடிவேல் முதலியார் 1975 ல் எழுதியுள்ளார்.  

vina%20vidai%20-1.png

 இந்த நூலை நவீன மொழி நடைக்கு ஏற்றவாறு, அதே நேரம் மூலக்கருத்து மாறாமல் மறு ஆக்கம் செய்து தொடராக வெளியிடப்படுகிறது. இந்த நூலை முழுவதும் படித்து முடிக்கும் போது, சைவ சித்தாந்தத்தின் அடிப்படையான அனைத்துக் கருத்துக்களும் தெளிவு பெறும்) 

arunavadivelmudhaliyarcrop.jpg

 அருணைவடிவேல் முதலியார்

மாணவன் : ஆசிரியரே, ‘ஞானநூல்கள்' என்று உலகில் எத்தனையோ நூல்கள் அளவில்லாமல்  கிடைக்கின்றன. அவைகள் அனைத்தையும் படித்து தெளிவது எனக்கு கடினம். எனவே அதன் முடிந்த முடிவை தெரிவிக்க வேண்டுகிறேன். 

 ஆசிரியர் : ஞான நூல்களின் முடிந்த பொருள்களை உணரவிரும்பும் நல் மாணவனே கேள்; 'வேதம், ஆகமம், பொதுமறை (திருக்குறள்) திருமுறை' என்னும் முதல் நூல்களும்,

   ‘ஸ்மிருதிகள், புராணங்கள், அறுபத்து நான்கு கலைகள், உபாகமங்கள், பண்டைத் தமிழ் இலக்கியங்கள், அறநூல்கள், தல புராணங்கள், என்னும்  வழி நூல்களும்,  

 'சிட்சை, கற்பம், சோதிடம், வியாகரணம், முத்தமிழ்களின் இலக்கண நூல்கள், உந்தி களிறு முதலிய மெய்நூல்கள்' என்னும்  சார்பு நூல்களும்,   'பதி, பசு, பாசம்' என்னும் முப்பொருள்களின் இயல்புகளை விளக்குவதையே நோக்கமாக உடையன. இதனை.,

“பலகலை ஆகம வேதம் யாவையினும் கருத்துப் பதிபசுபா சந்தெரித்தல்” 

 என்று, சந்தான குரவர் நால்வருள் நான்காவதாக விளங்கும் கொற்றவன் குடி உமாபதி சிவாச்சாரியார் தமது சிவப்பிரகாச நூலில் தெரிவிக்கிறார். எனவே "பதி, பசு, பாசம்" என்னும் முப் பொருள்களை முறைப்படி உள்ளவாறு உணர்தலே ஞான நூல்களின் முடிந்த முடிபை உணர்வதாகும். 

 

மாணவன் : எல்லா நூல்களும் 'பதி, பசு, பாசம்' என்னும் முப்பொருள்களின் இயல்பையே கூறுகிறது என்றால் உலகில் மத வேறுபாடுகள் தோன்றக் காரணம் என்ன? 

 ஆசிரியர் : எல்லா நூல்களின் கருத்து முப்பொருள் இயல்பைக் கூறுவதாக இருந்தாலும், அந்நூல்களைச் செய்த அனைவரும் ஒரு தரத்தினர் அல்லர்; பல்வேறு தரத்தினராவர். 

 "முதல்வழி சார்பென நூல்மூன்றாகும்”  

 என்ற நன்னூல் இலக்கணப்படி மூன்று வகையாகக் காணப்படும் நூல்களுள்,  முதல் நூலே, வினைகள் எல்லாம் நீங்கி விளங்கும் அறிவனாகிய இறைவனால் செய்யப்பட்டது.  

 அடுத்து தம் வயம் இழந்து இறைவனது அருள் வயப்பட்டு நின்ற அருளாளர் செயலெல்லாம் இறைவன் செயலே என்பதால், அவர்கள் செய்த நூல்களும் முதல் நூல்களேயாகும்.  

 இவ்வாறாக நாம் காணும்பொழுது,  முதல் நூல்கள் வடமொழியில் 'வேதம், சிவாகமம்' என்னும் இரண்டும், தமிழ் மொழியில் திருக்குறள், தேவாரம் முதல் திருத்தொண்டர் புராணம் வரை உள்ள பன்னிரு திருமுறைகளாகும். இவைகளை, 'முதல் நூல்கள் அல்ல' என மறுத்து வேறு சிலர் வேறு சில நூல்களையே முதல் நூல்கள் எனக் கொள்வர். 

 

மாணவன் : ஒவ்வொரு சாரார் ஒவ்வொரு நூலை, 'முதல் நூல்' என்று கொண்டு, மற்றவைகளை 'முதல் நூல் அல்ல' என்று மறுப்பார்களானால், 'உண்மை முதல் நூல் இது' என்பதனை எப்படி அறிவது?

 ஆசிரியர் : அதை அறிவது பொது மக்களுக்கு  அரிதுதான்; இருப்பினும் எந்த வித சார்பு நிலைகளுக்குச் செல்லாமல் நடுவு நிலைமையோடு இருந்து காண முயலும் அறிஞர்களுக்கு அது நன்றாக விளங்குவதாகும். 

 மேலும் உண்மை நூல் என்பது,  ஒரு நூலின் கருத்து எந்தவொரு இடத்திலும் மறுக்க முடியாமல் இருக்கிறதோ, வேறு எந்த நூலிலும் சொல்லாத உண்மையை விளக்குகின்றதோ, அதுவே உண்மை நூலாக இருக்க முடியும்.  

 அப்படி நடுநிலைமையாக காணும் அறிஞர் பலரும் வேதம் மற்றும் சிவ ஆகமங்களையே, 'உண்மை முதல் நூல்' என்கின்றனர். 

 "வேதத்தை விட்ட அறம் இல்லை; வேதத்தில் ஓதத் தகும் அறம் எல்லாம் உள" 

 "வேதமோ டாகமம் மெய்யாம் இறைவன் நூல்"   எனத் திருமந்திரமும், 

 “அருமறை ஆகமம் முதல் நூல், அனைத்தும் உரைக்கையினால்"  என்று சிவஞான சித்தியாரும் கூறுகின்றன. 

 

மாணவன் : ‘உண்மை முதல் நூல் இது' என உணரும் முறையை அறிந்தேன். இனி அத்தகைய முதல் நூல் இருந்தாலும் மத வேறுபாடுகள் தோன்றியதன் காரணம் என்ன?  

 ஆசிரியர் : அதுதான் நான் முன்பே சொன்னபடி, முதல்  நூலின் பொருளை உணர்கின்றவர் பலவாறாக இருக்கின்றனர். அதில் சிலர் முதல் நூலின் பொருளை தமக்கு ஒவ்வாது என்று கருதி அதற்கு மாறாக எதிர் நூல்கள் சிலவற்றை செய்தனர்.  

 அந்நூல்களை பின்பற்றித் தோன்றி வளர்ந்த மதங்கள், 'புறச் சமயங்கள்' எனப்படுகின்றன. அவை பௌத்தம், சமணம், மற்றும் 'உலகாயதம்' எனப்படும், 'நாத்திகமும்' வேதம் மற்றும்  சிவாகமங்களை இகழ்ந்து  நூல் செய்ததால் அதுவும் 'புறச்சமயம்' எனப்படும்.  

 மேலும் பலர், முதல்நூற் பொருளை 'நன்று' என்று உடன் பட்டாலும் , அப்பொருளை உணரும் முறையில் வேறுபட்டு, அதற்கு மாற்றாக, வழிநூல்களும், சார்பு நூல்களும் செய்து அந்நூல்களுக்கு வேறு வேறு வகையான உரைகளும் செய்தனர். அதனாலும் மத வேறுபாடுகள் மிகுவாயின. உண்மை முதல் நூலை உடன்பட்டு, அதற்குப் பொருள் காண்பதில் வேறுபட்ட மதங்களான இவைகளை 'அகச் சமயங்கள்' எனப்படுகின்றன. 

 பொதுவாகச் சமயங்கள் இப்படி, 'புறம், அகம்' என இரண்டு வகையாகவே கூறப்பட்டாலும்    

"புறப்புறம், புறம், அகப்புறம், அகம்"  

 என நான்காக வகுத்துக் கூறுவதே நுட்பமான முறை. சமயங்களை,'அறுவகைச் சமயம்' என்று தொன்றுதொட்டு கூறிவரும் மரபாக இருப்பதனால்,  இந்த நான்கு சமயங்களுக்கும் உள்ளே ஆறு வகையான சமயங்கள் உள்ளன.  

 அவற்றுள்  

புறப்புறச் சமயங்கள் :- உலகாயதம், நால்வகைப் பௌத்தம், (மாத்தியமிகம், யோகாசாரம், வைபாடிகம், சௌத்திராந்திகம்) சமணம் என்பன. 

 புறச் சமயங்கள்  :- தருக்கம், மீமாஞ்சை, ஏகான்மவாதம், யோகம், சாங்கியம், பாஞ்சராத்திரம் அல்லது வைணவம்' என்பன. 

 அகப்புறச் சமயங்கள்  :- பாசுபதம், மாவிரதம், காளாமுகம், வாமம், வைரவம், ஐக்கியவாத சைவம்  என்பன. 

 அகச்சமயங்கள் :-  பாடாணவாத சைவம், பேதவாத சைவம், சிவசமவாத சைவம், சிவசங்கிராந்தவாத சைவம், ஈசுவர அவிகாரவாத சைவம், நிமித்த காரண பரிணாம வாத சைவம் அல்லது சிவாத்துவித சைவம்' என்பன.  'சுத்த சைவம்' என்பதும் இதில் ஒரு பிரிவாக உண்டு. 

 இவை அனைத்திற்கும் அப்பாற்பட்டது சித்தாந்த சைவம்; இதன் கொள்கையே ‘சைவ சித்தாந்தம்' எனப்படுகின்றது. 

 இவைகளுள் புறப் புறச் சமயங்களையும், புறச்சமயங்களையும் அருணந்தி சிவாசாரியர் தமது சிவஞான சித்தியார் நூலில் "பரபக்கத்தில்" மறுத்தார். அகச்சமயங்களை உமாபதி சிவாசாரியர் தமது "சங்கற்ப நிராகரணத்துள்" மறுத்தார். அகப் புறச் சமயங்களில் தத்துவக் கொள்கை மிகுதியாக இல்லை. அதனால், அவைகளை ஒரு தனிப் பகுதியில் எடுத்து எந்த நூலிலும் மறுக்கவில்லை. 

 

மாணவன் : எந்த முறையை பின்பற்றிச் சமயங்கள், புறப்புறம், புறம், அகப்புறம், அகம் என்று நான்காக வகுக்கப்படுகின்றன? 

 ஆசிரியர்:  'வேதம், சிவாகமம்' என்னும் இரண்டு முதல் நூல்களளையும் உடன்படாதவாறு  புறமாக இருப்பதால் அவைகள், 'புறப்புறச்சமயம்' எனப்பட்டன.  

 வேதத்தை உடன்பட்டுச் சிவாகமத்தை உடன்படாதவை 'புறச்சமயம்' எனப்பட்டன.  

 வேதம் மற்றும் சிவாகமங்களை உடன்படினும் அவைகளைப் பொதுவாகக் கொண்டு, பிற நூல்களைச் சிறப்பாகப் போற்றுவன 'அகப்புறச் சமயம்' எனப்பட்டன.  

வேத சிவாகமங்களையே சிறப்பாகப் போற்றினாலும் குருவருள் இல்லாததால் அவற்றிற்கு உண்மைப் பொருள் காண முடியாமல் தத்தமக்குத் தோன்றியவாறு பொருள் உரைப்பன ‘அகச்சமயங்கள் எனப்பட்டன .  

 சீகண்ட பரமசிவன் திருக்கயிலையில்- தென்முகக் கடவுளாய் - ஆசிரியக் கோலமாய்க் கல்லால மர நிழலில் எழுந்தருளியிருந்து நந்தி பெருமானுக்கு உண்மை ஞானத்தை உபதேசித்து, வேத சிவாகமங்களின் உண்மைப் பொருளையும் தெளிவிக்க, அவ்வுபதேசத்தின் வழி வந்த சித்தாந்த சைவமே, வேத சிவாகமங்களின் உண்மைப் பொருளை உணர்ந்து அதனை,   ‘சுருதி, யுக்தி,அனுபவம்' என்னும் மூன்றாக பிரித்து பொருள் பொருந்தி விளக்குகிறது.  

 

மாணவன் : புறப்புறம் முதலாகச் சொல்லப்படும் மதங்களுக்கு நூல்கள் உள்ளனவா?

 ஆசிரியர் : உள்ளது. உலகாயதத்திற்குத் தேவகுருவாகிய வியாழன் ஒரு காலத்தில் இந்திரனை மயக்கும் பொருட்டுச் செய்த நூல், முதல் நூல் என்று கந்த புராணத்திற் சொல்லப் பட்டது. அப்படி ஒரு நூல் வழக்கில் இருந்ததாகத் தெரியவில்லை. இருப்பினும், பலர் அக்கொள்கையை தமது நூலில் கூறினார்கள். 

 பௌத்தத்திற்கு ஆதி புத்தர் செய்த பிடகாகமம் என்பது முதல் நூல். இவரை 'கௌதம புத்தர்' என்று இக்காலத்தினர் கூறினாலும், பௌத்த மதத்தினர் அவ்வாறு கூறுதல் இல்லை. மேலும் ‘ஆதிபுத்தர், திரிபுரத்தவரை மயக்கத்தோன்றிய திருமாலின் அவதாரமே, என்பது வேத மதங்களின் கூற்று. 

 சமண மதத்திற்கு அருகக் கடவுள் அல்லது ஜினக்கடவுள் செய்த பரமாகமம் முதல் நூல். அஃது இப்பொழுது கிடைப்பதாகத் தெரியவில்லை. 

 தமிழில் மணிமேகலைக் காப்பியத்தை, 'பௌத்த சமயத் தத்துவ நூல்' என்றும், நீலகேசிச் சிறுகாப்பியத்தை, 'சமண சமயத் தத்துவ நூல்' என்றும் கூறலாம். பிற நூல்களிலும் இவற்றின் தத்துவங்கள் காணப் படுகின்றன. 

 தருக்க மதம், ‘வைசேஷிகம், நையாயிகம்' என இருவகைப் படும். அவற்றிற்கு முதல் நூல்கள் காணப்படாவிட்டாலும், வேறு பல நூல்கள் வடமொழியில் உண்டு. பூர்வ மீமாஸ்சைக்கு ஜைமினி முனிவர் செய்த முதல் நூல் உண்டு. அதற்கு உரை  தோன்றிய பின், அம்மதம் 'பாட்டம், பிரபாகரம்” என இரண்டாகப் பிரிந்து விட்டது. 

 மேலும் வேதம்  ‘கிரியா காண்டம், ஞான காண்டம்' என்னும் இரு பெரும் பிரிவுகளை உடையது, இடையில் உள்ள உபாசனாகாண்டம் கிரியா காண்டத்துக்குள் அடங்கும். 'இருகாண்டத்துள் முற்பகுதியாகிய கிரியா காண்டமே சிறந்தது' என்னும் கொள்கையில் தோன்றியதே மீமாஸ்சை மதம். இது கிரியைகளின் மீது உடன் பட்டாலும், கடவுளை உடன் படுதல் இல்லை. கிரியையே பயன் கொடுக்கும்; ஆகையால் கர்மமே கருத்தா' என்று கூறுவது. 

 இதை மறுத்து ஞான காண்டத்தையே வற்புறுத்தி வேத வியாசர் செய்த ‘உத்தரமீமாஸ்சை' எனப்படும் பிரம்ம சூத்திரநூலின் வழியே, 'ஏகான்மவாதம்' (அல்லது அத்வைதமதம் அல்லது வேதாந்த மதம்) என்பது தோன்றியது, எனினும், அந்த நூலையே அடிப்படையாகக் கொண்டு, 'சிவாத்துவிதசைவம், விசிட்டாத்வைதம், த்வைதமதம்'  (மத்துவ மதம்) என்பவை தோன்றின. முறையே இவை நான்கிற்கும் சங்கரர், நீலகண்டர், இராமானுஜர், ஆனந்த தீர்த்தர் என்போர் ஆசிரியராவர். இராமானுஜர், மதமே பாஞ்சராத்திரம். இது, ‘பாஞ்சராத்திரம்' என்னும் வைணவ ஆகமத்தின் வழியாததால்  இப்பெயர் பெற்றது.  

 இதுபோல, சைவ சித்தாந்தத்தை இன்று இனிது விளக்கும் நூல்கள் தமிழில் உள்ளன. அவை "உந்தி, களிறு முதலிய பதினான்கு நூல்களாகும். அவை 'சித்தாந்த சாத்திரம்' எனப்படுகின்றன. 

கட்டுரையாளர்கள்: ஆசிரியர் குழு

https://www.siddhantham.in/2024/12/blog-post_17.html

  • கருத்துக்கள உறவுகள்

சித்தாந்தத்தை வாசித்து தலை சுத்துகிறது. நான் வேதாந்தியாகவே இருந்துவிடுகிறேன்😵‍💫

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kavi arunasalam said:

சித்தாந்தத்தை வாசித்து தலை சுத்துகிறது. நான் வேதாந்தியாகவே இருந்துவிடுகிறேன்😵‍💫

எளிய முறையில் விளங்கப்படுத்தவே வினா-விடை முறை பாவிக்கப்படுகின்றது!

அதுவே தலைசுத்தினால் மூல உரைகள் எப்படி இருக்கும்😕

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சித்தாந்த வினா விடை - 2 - அருணைவடிவேல் முதலியார் ~ சித்தாந்தம்

சித்தாந்தப் பொருள்வகை

மாணவன் : ஆசிரியரே நீங்கள் எனக்கு சித்தாந்தப்பொருளை  உரைக்க வேண்டும்.

ஆசிரியர் : நன்று!  கேட்பாயாக. சித்தாந்த நூல்கள், எல்லாப் பொருள்களையும் மூன்று வகையுள் அடக்கிக் கூறும்; அவை, 'பதி' 'பசு' 'பாசம்' என்பன. 'பதி' என்பது கடவுள்; 'பசு' என்பது உயிர்; 'பாசம்' என்பது, அவ்வுயிர்களைப் பற்றியுள்ள பிணிப்பு. இவை முறையே, 'இறை, உயிர், தளை' எனவும் கூறப்படும்.

vina%20vidai%20-1.png

இம் முப்பொருள்கள் பற்றிய ஆராய்ச்சியை நான்கு வகைகளில் வைத்து சித்தாந்த நூல்கள் கூறும். அவை

1 பிரமாணம், 

2 இலக்கணம், 

3 சாதனம், 

4 பயன், என்பதாகும்.

பிரமாணமாவது, 'பதி, பசு, பாசம், என்னும் முப்பொருள்களையும், 'உள்ளன' என அளவை முறையால் துணிந்து சொல்லுதல் ஆகும். 

இலக்கணமாவது 'உள்ளன' எனத் துணிந்து சொல்லப்பட்ட அம்முப்பொருள்களின் இயல்பு இவை எனக் கூறுதல் ஆகும். 

சாதனமாவது, முப்பொருள்களில் பயனை பெறுவது எதுவென்றும், அதனைப் பெறுதற்கு உரிய வழியையும்,  அவ்வழியில் செல்லும்  முறை பற்றியும் கூறுதல்.

பயனாவது, 'பயனைப் பெறுதற்குரிய வழியில் முயன்ற பின்னர், அம்முயற்சியால் அடையும் பயன்கள் இவை' எனக் கூறுதல்.


பிரமாணம்-அளவை இயல்

தர்க்கர்கள் முதலியோர் பிரமாணங்களைப் பலவாக விரித்துக் கூறுவர். உலகாயதரும் (நாத்திகர்), பௌத்தரும் ஒன்றிரண்டு பிரமாணங்களை மட்டும் கொண்டு, ஏனையவைகளை விலக்கி விடுவர்.

சைவ சித்தாந்தம்,  'இன்றியமையாத பிரமாணங்களை விலக்குதலும் தவறு, சிறுசிறு வேறுபாடுகொண்டு பிரமாணங்களைப் பலவாக விரித்தலும் தேவையற்றது’ எனக்கூறி,  மூன்று பிரமாணங்கள் இன்றியமையாதன எனவும், அவற்றிற்கு வேறாகச் சொல்லப்படும் பிரமாணங்கள் அனைத்தும் அம்மூன்றிலே அடங்கிவிடும் எனவும் சொல்கிறது.

மாணவன்: சைவசித்தாந்தம் கூறும் இன்றியமையாத பிரமாணங்கள் எவை? 

ஆசிரியர் :   சைவ சித்தாந்தங் கூறும் இன்றியமையாத பிரமாணங்கள், 

'காட்சி, கருதல், உரை, என்னும் மூன்றுமாம்.

மாணவன்:  தர்கத்தார் முதலியோர் பலவாக விரித்துக் கூறும் பிரமாணங்கள் யாவை? 

ஆசிரியர் : 

1. காட்சியளவை (பிரத்தியட்சப் பிரமாணம்)   

2. கருதலளவை (அனுமானப் பிரமாணம்)

3. உரையளவை அல்லது ஆகமப் பிரமாணம் (சத்தப் பிரமாணம்)

4. இன்மையளவை (அபாவப் பிரமாணம் அல்லது அனுபலத்திப்   பிரமாணம்)

5.  பொருளளவை (அருத்தாபத்திப் பிரமாணம்) 

6.  உவமையளவை (உபமானப்பிரமாணம்)

7.  ஒழிபுஅளவை (பாரிசேடப்பிரமா ணம்)

8.  உண்மையளவை (சம்பவப்பிரமாணம்) 

9. வழக்களவை (ஐதிகப் பிரமாணம்)

10. இயல்பு அளவை (சகசப் பிரமாணம் அல்லது சுபாவப் பிரமாணம்) 

ஆகியவை தர்கத்தார்  முதலியோர் வேறு வேறாக விரித்துக்கூறும் பிரமாணங்கள். அவற்றுள் காட்சி முதலிய மூன்றினைத் தவிர, ஏனைய பிரமாணங்களும் அக்காட்சி முதலியவற்றின் வகையேயன்றி வேறல்ல என்பதே சைவசித்தாந்தத்தின் துணிபு.


பிரமாணங்களின் இயல்பு


மாணவன் :

பிரமாணங்கள் இவை என ஒருவாறு உணர்ந்தேன், இனி, பிரமாணங்களின் இயல்பு இவை எனக் கூற வேண்டும்.

ஆசிரியர் :

1. காட்சியளவை அல்லது பிரத்தியட்சப் பிரமாணம் என்பது, இது குடம்,  இது ஆடை என்றாற்போலக் கண் முதலிய பொறிகள் வாயிலாகப் பொருள்களைப் பொருந்தி நின்று உணரும் உணர்வு.

2. கருதலளவை அல்லது அனுமானப் பிரமாணம் என்பது, புகையைக் கண்டவுடன்  நெருப்பு உண்டு என்று சொல்லுதல் போல. இங்கே நெருப்பை கண் முதலிய பொறிகள் பார்க்கவில்லை. ஆனால் அங்கே புகையை கண்ட உடன் நெருப்பு இருக்கிறது என்று சொல்வது,  வழி வழியாக புகையை நெருப்போடு பொருத்திப் பார்த்த அனுமானத்தால். இதனால், இது 'வழியளவை' என்றும் சொல்லப்படும். 'அனுமானப் பிரமாணம்' என்று கூறுப்படுகிறது.

3. உரையளவை அல்லது ஆகமப் பிரமாணம் என்பது, மேற்கூறிய இரு வகையாலும் உணர முடியாத பொருளை, பெரியோரது பெரு மொழிகள் கொண்டு உணரும் உணர்வு.

பெரியோர்கள் எனப்படுபவர்கள், 'காமம், வெகுளி, மயக்கம்' என்னும் முக்குற்றங்கள் சிறிதும் இல்லாது முற்றும் நீங்கிய தூயோர். காமம் என்பது விருப்பு: வெகுளி என்பது வெறுப்பு; மயக்கம் என்பது ஒன்றை மற்றொன்றாக உணரும் விபரீத உணர்வு. இக்குற்றங்கள் சிறிது இருப்பினும், பொருள்களை உள்ளவாறு உணரவும், உணர்ந்தபடியே சொல்லவும் இயலாது; ஆதால் இக்குற்றங்கள் முற்றும் நீங்கப்பெற்றவரின் உரையே, 'ஆப்த, வாக்கியம்' (நம்பத்தகுந்த சொல்) எனப்படும்.

இயல்பாகவே இக்குற்றங்கள் இல்லாதவன் இறைவன். அதனால், அவனது திருமொழியே உண்மை ஆப்தவாக்கியமாகும். ஆயினும், அவன் சொற்களை ஒவ்வொரு காலத்திலும் பாட்டாகவும், உரையாகவும் சொல்லுதல் இல்லை, மாறாக அச்சொற்களையெல்லாம் தன்னையே சார்ந்து, தானாய் நிற்கும் பெரியோர் வாயிலாகவே சொல்விப்பான். அதனால் அவரது திருமொழிகளும் அவன் திருமொழியேயாகும் என்று கருத வேண்டும். 

 'இவர் இறைவனைச் சார்ந்து இறைவனாகவே  நின்றார்' என்பது எவ்வாறு தெளியப்படும் எனின், அவரது உண்மை வரலாற்றாலே அது அறியப்படும். அதாவது இறைவன் நேர்நின்று அவர்களை ஆட்கொள்ளுதல், அவர்கள் திருமொழியை விரும்பிக் கேட்டல், தன்னாலன்றிப் பிறரால் இயலாத வியத்தகு செயல்களை அவர்கள் வாயிலாக உலகத்தில் நிகழ்வித்தல், போன்ற முறைமையால் அவர்கள் முக்குற்றங்களும் அகன்று முதல்வனேயாய் நின்றார்கள் என்பது தெளியப்படும். சில பெரியோர்களுக்கு உண்மை வரலாறு இல்லாமல் போனாலும் மரபு வழி தொன்று தொட்டு சொல்லப்படும் உரைகளும் ஆப்த வாக்கியங்களாகும்.

"தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால், 

மனக்கவலை மாற்றலரிது" எனவும், 

"அறவாழி யந்தணன் தாள் சேர்ந்தார்க்

கல்லால்-பிறவாழி நீந்தலரிது" எனவும், 

 "பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் - பற்றுக பற்றுவிடற்கு"  

எனவும் அருளிச்செய்தபடி, இயல்பாகவே குற்றமில்லாத இறைவனைச் சார்தலைத்தவிரக் குற்றங்கள் நீங்குதற்கு வழியில்லாமையால் கடவுள்கொள்கை இல்லாதவர்க்குக் குற்றங்கள் நீங்காது. அதனால், அவர்களுடைய சொற்கள் ஆப்தவாக்கியம் ஆகாது.


இனிச் சிலர், பெரியோரது திருமொழிகள் ஆப்தவாக்கியங்களேயாயினும், அவை இயல்பாகவே குற்றம் இல்லாத இறைவன் திருமொழியோடு ஒப்புதல் பிரமாணம் ஆகுமா?" என ஐயப்படுவர்.  அவை ஏற்கனவே இறைவன் திருமொழியோடு ஒப்பப்பிரமாணம் ஆனது என்பதை பலவிடத்தில் பல்லாற்றாலும் விளங்கியும், இறைவனாலும், பெரியோராலும் விளக்கப்பட்டும் இருக்க , அதன் குற்றம், நன்மை போன்ற விஷயங்களை சாதாரண மனிதர்கள் ஐயப்படக் கூடாது. பெரியோர் திருமொழிகளும், இறைவன் திருமொழிகளும் ஒப்பப்பிரமாணம் தான்  என்பதை இனிது விளக்கவே,

"கண்டபெரு மந்திரமே மூவர் பாடல்-கைகாணா மந்திரம் கண்ணுதலோன் கூறல்" (திருமுறை கண்ட புராணம்) என்பது போன்ற வாக்கியங்கள் எழுந்தன. 

பெரியோர் திருமொழிகளைச் சிறந்த பிரமாணமாகக் கொள்ளாதவர்க்கு, காலப்போக்கில்  அவை பற்றின கருத்தும், சிந்தனையும், வரலாறும், இல்லாமலாகி, முடிவில் உரையளவையே இல்லாமலாகிவிடும். எனவே காட்சியளவை, கருதலளவை மற்றும் உரையளவை இவை மூன்றுமே சைவ சித்தாந்தம் எடுத்துக் கொள்ளும் பிரமாணங்கள்.


https://www.siddhantham.in/2025/03/2_14.html

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சித்தாந்த வினா விடை- தொடர் 3 - அருணைவடிவேல் முதலியார்

vina%20vidai%20-1.png

இன்மை அளவை அல்லது அபாவப்பிரமாணம் அல்லது அனுபலத்திப்பிரமாணம் : 

குடத்தைத் தேடிக் காணாத ஒருவன், 'இங்குக் குடம் இல்லை' என்று உணர்தல், குளிர் இல்லாமை கண்டு, 'பனி இல்லை' என்று உணர்தல் அனுபலத்திப்பிரமாணமாகும். இருத்தலை உணர்தல் காட்சியாகும், இல்லாமையை உணர்தல் காட்சியாகாது என்று கொண்டு இவை காட்சியளவையும், அதன் வழியதாகிய அனுமான அளவையோடு சேராமல் வேறோர் அளவை என்பர் சிலர். ஆயினும், இவையும் உண்மையில் காட்சியும் அதன் வழிதான அனுமானமுமேயாகும்.

பொருளளவை அல்லது அருத்தாபத்திப் பிரமாணம்:  

ஒருவன் இரவில் மறைந்து உண்டு, 'யான் உண்பதில்லை' என்று கூறினால், அவன் உடல் மெலியாதிருத்தல் கண்டு அவன் இரவில் மறைந்து உண்கின்றான் எனத் துணிதல் அருத்தாபத்திப் பிரமாணமாகும். இவ்வாறு இல்லையாயின் இஃது இயலாது என உணர்தல். இஃது உண்மையை எதிர்மறை முகத்தான் உணரும் அனுமானமேயாகும்.

உவமையளவை அல்லது உபமானப் பிரமாணம்:

காட்டுப் பசு என்பது ஒன்று உண்டு என்று அறியாதவன், காட்டுக்குள் அதனைக் கண்ட பொழுது, நாட்டுப் பசுப்போல இருத்தலால் இது காட்டுப் பசுவாகும் என்று உணர்தல் உபமானப் பிரமாணமாகும். இது, கண்டமாத்திரத்தில் துணியப் படாமையால் காட்சியளவையுமல்ல, பொருளைக் கண்டே துணிதலால் அனுமானமும் அல்ல, வேறோர் அளவை என்பர் சிலர். ஆயினும், காட்சியால் பொதுத்தன்மையைக் கண்டு அதன் மூலம் 'காட்டுப் பசு' என்னும் சிறப்புப் பொருளைக் கருதி உணர்தலால் இதுவும் அனுமானமே ஆகும்.

ஒழிபளவை அல்லது பாரிசேடப் பிரமாணம்:

மூவர் உள்ள இடத்தில் ஒரு பொருள் களவு செய்யப்படின், இருவர் கள்வர் அல்லர் என்பது தெளியப்பட்டால், மீதமுள்ள மற்றொருவனே கள்வன் எனத் துணிதல் பாரிசேடப் பிரமாணமாகும். இஃது ஒருவன் கள்வன் என்பதை அதற்கு உரிய சான்று கொண்டு துணியாது, இருவர் கள்வராகாமையால்  அவன் கள்வன் என்பது அனுமானமன்று, வேறோர் அளவையாம் என்பர் சிலர். ஆயினும், மூவருள் ஒருவன் கள்வன் என்பது முன்னரே துணியப்பட்டமையாலும், இருவர் கள்வர் ஆகாமை பின்னர்த் துணியப்பட்டதாலும் இதுவும் அனுமானமேயாகும்.

உண்மையளவை அல்லது சம்பவப் பிரமாணம்:

ஓரிடத்தில் நூறு இருக்கிறதென்றால் அவ்விடத்துப் பத்தும் உண்டென்று உணர்தல் சம்பவப் பிரமாணமாகும்.  நூறும் பத்தும் காட்சிப் பொருள் இல்லாததால் இது காட்சியளவையும் அதன் வழித்தாகிய அனுமானமும் இல்லை என்பர் சிலர். ஆனால் கருத்துப் பொருளைக் கருத்துப் பொருள் ஏதுவாக ( சான்றாக)  உணரும் அனுமானமே இது.

வழக்களவை அல்லது ஐதிகப்பிரமாணம்:

ஒருமரத்திற் பேய் உண்டென்று வழிவழியாகச் சொல்லிவரும் வழக்குப் பற்றித் தானும் அவ்வாறே உணர்தல்  ஐதிகப்பிரமாணமாகும்.  இது, நூலில் இல்லாததால் உரையளவையாகாது வேறோர் அளவை என்பர் சிலர். ஆயினும், அஃது உண்மை வழக்காயின் உரையளவையே. பொய் வழக்காயின் அளவை இல்லையென்றாகும்.

இயல்பளவை அல்லது சுபாவப்பிரமாணம் 

மரம் பூத்தது என்று ஒருவன் கூறக் கேட்டு, அச்சொல்லாலே அப்பொருளை உணர்தல் சுபாவப்பிரமாணம். சொற்கள் பொருளோடு பிரிப்பின்றி நிற்பதில்லை, எனவே அவைகளைக் கொண்டு பொருளை உணர்தல் அனுமானமாகாது, இது வேறோர் அளவை என்பர் சிலர். இருப்பினும் சொல்லுணர்வு பொருளுணர்வோடு இயல்பாய் உடன் நிகழ்வதால் இஃது அனுமானமேயாகும்.


இவ்வாறு பிறர் வேறு வேறு கூறும் பிற அளவைகளும் காட்சி, கருதல், உரை  என்னும் மூன்று அளவைகளுள்ளே அடங்கிவிடும்.

 

4. காட்சியளவையின் வகை

மாணவன்: காட்சி முதலிய மூன்று அளவைகளின் இயல்பை பற்றி சுருக்கமாக கூறினீர்கள், அவைபற்றி அறிய வேண்டுவன அவ்வளவுதானா, வேறு எவையேனும் உள்ளதா?

ஆசிரியர்: உள்ளது.. வாயிற் காட்சி (இந்திரியப் பிரத்தியட்சம்), மானதக் காட்சி (மானசப் பிரத்தியட்சம்), தன் வேதனைக் காட்சி (சுவவேதனாப் பிரத்தியட்சம்), யோகக் காட்சி (யோகப் பிரத்தியட்சம்) எனக் காட்சியளவை நான்கு வகைப்படும்.

 வாயிற் காட்சி:

கண் முதலிய பொறிகள் வாயிலாகப் பொருள்களைப் பொருந்தி உணர்வதே காட்சியளவை என்று முன்பு கூறினோம். அவ்வாறு நாம் உணருமிடத்து அக்காட்சி முதலில் பொதுவாகவும், பின்பு சிறப்பாகவும், அதன் பின்பு அனுபவமாகவும் நிகழும்.

பொதுவாக நிகழும் காட்சி, 'நிருவிகற்பக் காட்சி' என்று சொல்லப்படும். அஃதாவது, இஃது ஓர் உருவம், இஃது ஓர் ஓசை,  இஃது ஒரு சுவை,  இஃது ஒரு மணம், இஃது ஓர் உராய்வு என்று மட்டும் தோன்றுவது. இவ்வாறு கண் முதலிய பொறிகளால் பொதுவாக உணரும் உணர்வே, வாயிற் காட்சியாகும்  (வாயில்-பொறி).

மானதக் காட்சி:

பொருள்களை வாயிற்காட்சியால் பொதுவாக உணர்ந்த பின்பு, சிறப்பாக உணர விரும்பினால், நாம் அந்தப் பொதுக்காட்சியை மறவாமல் பற்றி, மேலே மனம் முதலிய உட்கருவிகளைச் செலுத்தி, 'இஃது யாது?, என்று ஆராய்ந்து, 'இன்னது' என்று உணர்வோம்; இவ்வாறு உணர்வதே சிறப்புக் காட்சியாகும். இது, 'சவிகற்பக் காட்சி' எனப்படும். இது மனம் முதலிய உட்கருவிகளாலே உண்டாவதால், 'மானதக் காட்சி' எனப்படுகின்றது.

கண் முதலிய பொறி அளவில் பொருள்களைப் பொதுவாக உணர்கின்ற வாயிற் காட்சியோடு நின்றுவிட்டால், அவை இன்னது எனத் தெரியாது, அதனால், அப்பொருள்களைப்பற்றிய நினைவும் பின்னர் உண்டாகாது. மனம் முதலிய கருவிகளைக் கொண்டு, பொருள்களை ஆராய்ந்து சிறப்பாக உணர்கின்ற மானதக் காட்சி நிகழ்ந்த பின்பே, அவை இன்னது என விளங்கும். அவ்வாறு விளங்க உணர்ந்த பொருள்களே பின்னர் நினைவுக்கு வரும்.

வாயிற் காட்சியால், 'இஃது ஒரு பொருள் தோன்றுகிறது' என்று தெரிந்த பின்பு, அதனை 'இன்னதென அறிதல் வேண்டும்' என்ற எண்ணம் உண்டாகுமாயின், 'இஃது யாது?" என்னும் ஆராய்ச்சி தோன்றும். எடுத்துக்காட்டாக, கண் வாயிலாக 'இஃது ஓர் உருவம் தோன்றுகிறது, என உணர்ந்த பின்பு 'அதனை இன்னதென உணர்தல் வேண்டும்' என்ற எண்ணம் தோன்றினால், 'இவ்வுருவம் யாது?' என்ற ஆராய்ச்சி          உண்டாகும். அப்பொழுது, 'இது குற்றியோ? அல்லது மனிதனோ? என்ற ஐயப்பாடுகள் உண்டாகும். (குற்றி! என்பது பசுக்கள் நிற்குமிடத்தில் அவைகள் உராய்ந்து கொள்வதற்காக நடப்படும் மரம் அல்லது கல். அது சில வேளைகளில் ஆள் போலத் தோன்றும்). 'குற்றியோ' என உடன்பாட்டு வகையில் எண்ணுவது ‘சங்கற்பம்' என்றும், இல்லை என்று அதனை எதிர் மறுத்து எண்ணுவது 'விகற்பம்' என்றும் சொல்லப்படும். இச்சங்கற்ப விகற்பங்களாகிய ஐயப்பாடு ஐயக்காட்சியாகும்.

ஐயப்பாடு நிகழ்ந்த பின்னர், இதனை இன்னதெனத் துணிதல் வேண்டும் என்ற ஓர் எழுச்சி உண்டாகும். அப்பொழுது அப்பொருள் ஐந்து வகையில் வகுத்து உணரப்பட்டு, 'இஃது இன்னது' எனத் துணியப்படும். அவை ”பெயர், சாதி, குணம், தொழில், உடைமை” என்பன. அவ்வைந்து வகையில் வகுத்துணரப்பட்ட உருவம் மனிதனாயின், 'இவன் சாத்தன், மனிதன், கரியன், கடுநடையன் குழையினன்' என்றாற்போல உணர்தலாம். இவ்வாறு வேறு வேறு வகையில் பகுத்து உணர்தல் பற்றியே, இச்சிறப்புணர்வு, 'சவிகற்பக்காட்சி' என்றும், இவ்வாறு உணராத பொதுஉணர்வு ’நிருவிகற்பக்காட்சி' என்றும் சொல்லப்படுகின்றன. 

சவிகற்பம் வேறுபாட்டோடு கூடியது. நிருவிகற்பம்-வேறுபாடு இல்லாதது. (விகற்பம்- வேறுபாடு). சில சமயங்களில் வேறு பொருட்குரிய பெயர் முதலியவற்றை, காணப்பட்ட பொருட்குரியனவாகக் கருதுதலால், குற்றியை மனிதன் என்றும், மனிதனைக் குற்றியென்றும் மாறித் எண்ணக் கூடும். அது திரிவுக்காட்சி யாகும். ஐயக்காட்சியும், திரிவுக்காட்சியும் குற்றமுடையன. அதனால், அவை பிரமாணமாகாது. பொருள்களை அவ்வவற்றிற்குரிய பெயர் முதலியவற்றால் சவிகற்பமாக உள்ளவாறு உணர்தலே உண்மைக் காட்சி. அதுவே பிரமாணமாகும்.


தன் வேதனைக் காட்சி

பொருள்களை, வாயிற்காட்சியால் நிருவிகற்பமாகவும், மானதக் காட்சியால் சவிகற்பமாகவும் உணர்ந்த பின்னர், அப்பொருளில்  மீது       உணர்வு உண்டாகுமாயின், இன்ப நுகர்ச்சியோ அல்லது துன்ப நுகர்ச்சியோ உண்டாகும். அந்த நுகர்ச்சி உணர்வே தன்வேதனைக் காட்சியாகும். 'வேதனை என்பதை நாம், 'துன்ப அனுபவம்' என்ற பொருளில் வழங்கினும் அது, துன்ப அனுபவம், இன்ப அனுபவம் இரண்டிற்கும் பொதுவேயாகும்.

 யோகக்காட்சி

மேற்கூறிய, வாயிற்காட்சி முதலிய மூன்றும் எல்லாருக்கும் நிகழ்வன. யோகக் காட்சி, அவ்வாறின்றிச் சிலர்க்குமட்டுமே நிகழும். அஃதாவது, யோக நெறியில் உள்ள 'இயமம், நியமம் முதலிய எண்வகை நிலைகளில் நின்று, அவற்றின் முடிந்த நிலையாகிய, 'சமாதி' என்னும் நிலை கைவரப்பெற்றவர்களுக்கே நிகழும் என்பதாம். இவர்கள் உயிர்களைப் பிணித்துள்ள ஆணவம், கன்மம், மாயை என்னும் மும்மலங்களின் கட்டுக்களை  சிறிது நெகிழ்த்துக் கொள்ளுதலால், ஏகதேச உணர்வு சிறிது நீங்கி, வியாபக உணர்வு சிறிது உண்டாகும். அதனால் அவர்கள் ஒருகாலத்தில், ஓர் இடத்தில் இருந்தே, எக்காலத்திலும் எல்லா இடத்திலும் உள்ள பொருள்களை உணர வல்லவராவர். அவ்வாறு உணரும் உணர்வே யோகக் காட்சியாகும். நம்மால் உணர முடியாத பலவற்றை முனிவர்கள் தம் யோகக் காட்சியால் உணர்ந்து நமக்கு நூல்கள் வாயிலாகச் சொல்லியிருத்தல் போன்றாகும்.

இவையே வாயிற்காட்சி முதலிய நால்வகைக் காட்சியளவைகளின் இயல்பாகும்.

https://www.siddhantham.in/2025/05/3_90.html

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.