Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வரைபடங்களும் மனிதர்களும் !

sudumanalDecember 1, 2025

உக்ரைன்-ரசிய சமாதான ஒப்பந்த முயற்சி குறித்த அலசல்

peace.webp?w=1024

image: washington times

மூன்று வருடங்களும் எட்டு மாதங்களுமாகிவிட்டதாக சுட்டப்படும் உக்ரைன்-ரசிய போரினை முடிவுக்குக் கொண்டுவர, 28 அம்சங்கள் கொண்ட சமாதான ஒப்பந்தம் ட்றம்ப் குழாமினால் முன்வைக்கப்பட்டிருக்கிறது. இந்தக் குழாமில் அரச செயலாளர் மார்க்கோ றூபியோ, விசேடதூதுவர் ஸ் ரீவ் விற்கோவ் இருவரும் முக்கியமானவர்கள். இந்த ஒப்பந்தம் ரசியாவுக்கு சார்பானதாக இருப்பதாகவும், உக்ரைனின் இறைமையைப் பாதிப்பதாகவும் ஐரோப்பிய ஒன்றியமும் பிரித்தானியாவும் விமர்சித்து, இந்த ஒப்பந்தத்தை 19 அம்சங்கள் கொண்டதாக மறுவரைவு செய்து ட்றம் இடம் முன்வைத்திருக்கின்றன. இக் கட்டுரையை எழுதிக் கொண்டிருக்கும் நேரத்தில் இந்த 19 குறித்து விபரமாக எதுவும் தெரியவில்லை.

போர் எப்போ தோடங்கியது?

உக்ரைன்- ரசியா போர் 2022 பெப்ரவரியில் தொடங்கியதல்ல. உண்மையில் 2014 இல் தொடங்கியது அது. 2010 இல் உக்ரைன் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்ட யனுகோவிச் (Yanukovych) இன் ஆட்சியை 2014 இல் “மைடான் புரட்சி” என்ற பெயரில் சதி மூலம் அமெரிக்கா கவிழ்த்தது. ரசியாவுடன் நல்ல உறவுநிலையில் இருந்த அவரை இடம்பெயர்த்துவிட்டு, மேற்குலகு சார்பான பொரொசெங்கோவை (Petro Poroshenko) ஆட்சிக்கு கொண்டு வந்தது அமெரிக்கா. (இந்த சதிப்புரட்சி பற்றிய இரகசிய தொலைபேசி உரையாடல் பின்னர் கசிந்து பொதுவெளிக்கு வந்தது). எச்சரிக்கை அடைந்த ரசியா உடடினடியாகவே செயற்பட்டு மூன்று நாட்களுக்குள் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்ததும், பெரும்பான்மை ரசிய மொழி பேசுபவர்களையும் கொண்ட கிரைமியா (Crimea) பகுதியை கைப்பற்றியது. சோவியத் காலத்தில் முக்கிய கடற்படைத்தளம் அங்குதான் இருந்தது. இது நேட்டோவிடம் பறிபோனால் தனது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்ற ஒரே காரணத்துக்காக ரசியா அதை கைப்பற்றியது. எழுந்துள்ள நிலைமைகளையும் நேட்டோவின் தலையீடுகளையும் பார்க்கும்போது இனி ஒருபோதும் ரசியா அதை விட்டுக் கொடுக்கப் போவதில்லை என்பது நிச்சயமானது.

பொரசெங்கோவின் ஆட்சியில் ரசிய மொழி பேசும் மக்களைக் கொண்ட டொன்பாஸ் இன் 4 மாகாணங்களிலும் ரசிய மொழி தடைசெய்யப்பட்டது. AVOZ என்ற நாசிசப் படைப் பிரிவு உக்ரைன் இராணுவத்தின் ஒரு பகுதியாக செயற்பட்டது. இவர்கள் டொன்பாஸ் க்கு அனுப்பிவைக்கப் பட்டார்கள். இவர்கள் 2014 இலிருந்து தொடக்கி வைத்த படுகொலை 14000 ரசிய மொழி பேசும் டொன்பாஸ் மக்களை கொன்றொழித்தது. துப்பாக்கியை விடவும் வெட்டிக் கொல்லப்பட்டவர்களே பலர். உக்ரைன் அரசின் இந்த ஒடுக்குமுறைக்கு எதிராக எழுந்த இயக்கங்களான டொனெற்ஸ்க் மக்கள் குடியரசு (DPR), லுகான்ஸ்க் மக்கள் குடியரசு (LPR) இனை ரசியா ஆதரித்தது. ஆயுத உதவி வழங்கியது.

இந்த ஆட்சிக் கவிழ்ப்பின் மூலகாரணம் 2008 இல் தோற்றுவிக்கப்பட்டது. 2008 இல் ‘புக்காரெஸ்ற்’ (ருமேனியா) இல் நடந்த நேட்டோ மாநாட்டில் ஜோர்ஜ் புஷ் இன் அமெரிக்காவானது உக்ரைனையும் ஜோர்ஜியாவையும் நேட்டோவில் இணைக்க தீர்மானம் கொண்டுவந்தது. இதை அப்போதைய ஜேர்மன் சான்சலர் அங்கலா மேர்க்கலும் (Angela Merkel, பிரெஞ்சு ஜனாதிபதி நிக்கொலாஸ் சார்க்கோசியும் (Nicolas Zarkozy) எதிர்த்தார்கள். அங்கலா மேர்க்கல் தெளிவாக ஒன்றை முன்வைத்தார். “நேட்டோ விஸ்தரிப்பை உக்ரைனூடாக ரசிய எல்லைவரை கொண்டு போவதை புட்டின் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள மாட்டார். நிச்சயமாக அது போரில் போய் முடியும் ஆபத்தைக் கொண்டது” என்றார். அதன்படி 2022 இல் நடந்திருக்கிறது.

சோவியத் யூனியனின் கடைசி அதிபராக இருந்த கோர்ப்பச்சேவ் இன் (கிளாஸ்நோஸ்ற், பெரஸ்றொய்க்கா) கொள்கைகள் 1989 இல் பேர்லின் சுவர் வீழ்த்தப்பட்டு, 1990 இல் கிழக்கு-மேற்கு ஜேர்மனி இணைக்கப்படுவதற்கும், கிழக்கு ஜேர்மனியில் இருந்த சோவியத் படைகள் படிப்படியாக வெளியேறுவதற்கும் வழிவகுத்தது. இந்த பரபரப்பான காலகட்டத்தில் 1990 பெப்ரவரியில் மொஸ்கோவில் வைத்து கோர்ப்பச்சேவ் க்கு நேட்டோ சார்பில் அமெரிக்க அரச செயலாளர் ஜேம்ஸ் பேர்க்கர் ((James Baker) வழங்கிய முக்கிய வாக்குறுதி “நேட்டோ படையானது ஜேர்மனியிலிருந்து ஓர் அங்குலம் கூட கிழக்கு நோக்கி நகராது” என்பதே. 1955 இல் சோவியத் யூனியன் மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகள் கூட்டாக உருவாக்கிய Warsaw Packt இன் கீழ் இருந்த இராணுப் பிரிவும் 1991 இல் கலைக்கப்பட்டது. சோவியத் யூனியன் என்ற கட்டமைப்பு உதிர்ந்து போனது. அப்போதே நேட்டோவுக்கான தேவையும் இல்லாமல் போனது. இருந்தபோதும் நேட்டோ கலைக்கப்படவில்லை.

ஆனால் நேட்டோ விஸ்தரிப்பு குறித்த வாக்குறுதிகளை நேட்டோ கடைப்பிடிக்காமல் ஏமாற்றியது. சோவியத் இலிருந்து பிரிந்து சென்ற நாடுகளையும் ஒன்றன்பின் ஒன்றாக இணைத்துக் கொண்டது. பின்னாளில் நேட்டோ விஸ்தரிப்புகள் குறித்து கொர்பச்சேவ் ஜேர்மனியில் பேசும்போது “எம்மை ஏமாற்றிவிட்டீர்கள்” என விமர்சித்துப் பேசினார். 2000 ஆண்டு ஜனாதிபதியாக தெரிவான புட்டின் இந்த நேட்டோ விரிவாக்கம் குறித்து எச்சரித்திருந்தார். பின்னர் உக்ரைனை நேட்டோவில் இணைப்பதானது நேட்டோ தனது எல்லை வரை வர வழிசமைக்கும் எனவும், அது தமது நாட்டுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தலாக வரும் எனவும் பலமுறை சொல்லியுமிருந்தார். “அது சிவப்புக் கோட்டைத் தாண்டுவதாக அமையும், ரசியா பார்த்துக் கொண்டு இருக்காது” என எச்சரித்தார். இந்த எல்லா எதிர்ப்பையும் எச்சரிக்கைகளையும் மீறி ஜேர்மன் எல்லையிலிருந்து ரசிய எல்லைவரை நேட்டோவை படிப்படியாக நகர்த்தி வந்துவிட்டு, ரசியாவால் ஐரோப்பாவுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் என சொல்வது எவளவு கோமாளித்தனமானது. அத்தோடு ரசியாவும் ஐரோப்பாதான் என்பதை மறந்து பேசுவது இன்னொரு கோமாளித்தனம் அல்லது வஞ்சகத்தனமானது.

இவ்வாறாக அமெரிக்கா தனது பரிவாரமான (32) நேட்டோ நாடுகளுடன் செயற்பட்டு உக்ரைனை போர்க்களமாக்கியதுதான் வரலாறு. இப்போ “அது நான் தொடங்கிய போர் அல்ல. பைடன் தொடங்கிய போர்” என ட்றம்ப் சொல்கிறார். “இது எமது போர் அல்ல, உங்கள் போர்” என ஐரோப்பாவுக்குச் சொல்கிறார். உக்ரைன் ரசிய போர் மோசமான நிலையை நோக்கி நகர்ந்திருக்கிறது. இலகுவில் தீர்க்கப்பட முடியாத பிரச்சினை போல் தோற்றமளித்ததற்குக் காரணம் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், நேட்டோ என்பவற்றின் தலையீடாக இருந்தது. உண்மையில் இந்தப் போர் ரசியாவுக்கும் நேட்டோவுக்கும் இடையிலான நிழற்போர் என்பதே பொருத்தமானது. அதன் களம் உக்ரைன். பலியாடுகள் உக்ரைன் மக்களும் இராணுமும்.

நேட்டோ/ஐரோப்பிய ஒன்றியத்தின் பங்கு

  1. நேட்டோ தனது விஸ்தரிப்புவாதத்தை விட்டுக் கொடுக்க தயாராக இல்லை.

  2. ரசியாவை -இராணுவ ரீதியிலும் பொருளாதார ரீதியிலும்- பலவீனமாக்குவது அவர்களின் மைய நோக்கமாக இருக்கிறது.

2.1) அதற்கான கதையாடல்களை (narratives) உருவாக்கினார்கள். உக்ரைனின் பாதுகாப்பு என்பது ஐரோப்பாவின் பாதுகாப்பு எனவும், ஐரோப்பாவின் பாதுகாப்பு உத்தரவாதத்துக்கு ரசியா அச்சுறுத்தலாக இருக்கிறது எனவும் கட்டமைத்தார்கள்.

2.2) ரசியாவுக்கு எதிராக 27000 க்கு மேற்பட்ட பொருளாதாரத் தடையை விதித்தார்கள்.

2.3) 300 பில்லியன் வரையான ரசிய நிறுவனங்களின் நிதியை தமது வங்கிகளில் முடக்கினார்கள். அதாவது உறைநிலை ஆக்கினார்கள்.

2.4) ஐரோப்பாவுக்கு ‘Nord Stream-2’ கடலடி குழாய் மூலமாக ரசியா எரிவாயுவை ஏற்றுமதி செய்து பொருளீட்டியது. அந்தக் குழாயை அநாமதேயமாக உடைத்தார்கள். அல்லது உக்ரைன் உதவியுடன் உடைத்தார்கள்.

2.5) ரசியாவிடமிருந்து பெருமளவு கச்சா எண்ணெயை வாங்கும் சீனா, இந்தியா மீது அழுத்தம் கொடுக்க முயற்சித்தார்கள். ஆனாலும் திரைமறைவில் இன்னமும் 40 வீதமான எரிவாயு ஐரோப்பாவுக்குள் வந்து சேர்கிறது என்பது ஒரு முரண்நகை. அத்தோடு இந்தியாவிடமிருந்து (ரசிய) எண்ணெயை வாங்கினார்கள். இந்த வர்த்தகத்தின் மூலம் சீனாவும் இந்தியாவும் ரசியாவின் ஆக்கிரமிப்புப் போருக்கு முதலிடுவதாக குற்றம் சுமத்திப் பார்த்தார்கள். ட்றம்ப் உம் அதே பாட்டைப் பாடினார். (அவர்களது அழுத்தத்தை இந்த இரு நாடுகளும் புறந்தள்ளின)

  1. இந்தப் போரில் தாம் நேரடியாக ஈடுபடாமல் தமது நோக்கம் சார்ந்து உக்ரைனை பலிக்கடாவாக்கினார்கள். போருக்காக பில்லியன் கணக்கிலான நிதியையும், ஆயுதங்களையும் கடனாக வழங்கினார்கள். அத்தோடு இராணுவ தகவல் தொழில்நுட்பத்தையும் வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். உக்ரைன் மக்களும் இராணுவமும் பலியாகிக் கொண்டிருக்கிறார்கள்.

4. இவளவு அழிவுக்குப் பின்னரும், ட்றம்ப் பின்வாங்கிய பின்னரும், ஐரோப்பா இந்தப் போர் முடிந்துவிடக்கூடாது என்ற நோக்கில் செயற்படுகிறது. மேற்கு ஐரோப்பா அதுவும் குறிப்பாக பிரித்தானியா, பிரான்ஸ், ஜேர்மனி நாடுகள் தீவிரமாகச் செயற்படுகின்றன. இதற்கு நான்கு காரணங்கள் உள்ளன.

4.1) காலனிய மனக் கட்டமைப்பு (colonial mindset)

அவர்களின் காலனிய மனக் கட்டமைப்பானது ரசியாவிடம் தமது நிழற்போர் தோற்றுவிடக் கூடாது என்ற பதட்டத்தை வழங்கியிருக்கிறது. ரசியாவுக்கு விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடையானது அவர்கள் கணித்ததுக்கு மாறாக ரசியாவை விட அவர்களையே அதிகம் தாக்கியிருக்கிறது. பொருளாதார நெருக்கடிக்குள் அகப்பட்டு இருக்கிறபோதும் கூட, அந்த காலனிய மனக் கட்டமைப்பானது அவர்களை பின்வாங்கச் செய்ய இலகுவில் விடுவதாக இல்லை.

4.2) போர்ப் பொருளாதாரம்

இந் நாடுகளின் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க இன்னொரு வகையில் ‘போர்ப் பொருளாதாரம்’ பெரும் பக்கபலமாக இருக்கிறது. ‘உக்ரைன் பாதுகாப்பு என்பது ஐரோப்பாவின் பாதுகாப்பு’ என வசனம் பேசும் அவர்கள் உக்ரைனுக்கு ஆயுதங்களையோ நிதியையோ அன்பளிப்பாகக் கொடுக்கவில்லை. கடனாகவே கொடுத்திருக்கிறார்கள். ஆயுத உற்பத்தி மற்றும் ஏற்றுமதி மூலம் அவர்களுக்கு சேரவேண்டிய பணத்தை எதிர்காலத்தில் உக்ரைன் செலுத்தியாக வேண்டும்.

அத்தோடு பொருளாதாரத் தடையால் உறைநிலையில் வைக்கப்பட்டுள்ள ரசிய சொத்துகளும் அதன் வட்டியும் அவர்களின் இப்போதைய பொருளாதாரத்துக்கு இன்னொரு பக்கபலமாக உள்ளது. ஐரோப்பிய பெரு நிதிநிறுவனமான Euroclear வெளியிட்டுள்ள கணக்கின்படி, ஐரோப்பிய வங்கிகளில் முடக்கி வைக்கப்பட்ட 194 பில்லியன் யூரோக்கள் பெறுமதியான ரசிய சொத்துகள் 2025ம் ஆண்டின் அரைப் பகுதியில் மட்டும் 2.7 பில்லியன் யூரோக்களை வட்டியாக பொரித்துள்ளது. 2024 இல் இதே அரையாண்டு காலத்தில் 3.4 பில்லியன் யூரோக்களை பொரித்துள்ளது.

4.3) தத்தமது நாடுகளில் இயன்றளவு தமது பதவியையும் அதிகாரத்தையும் தக்கவைக்கும் முயற்சி

இஸ்ரேல் பலஸ்தீனப் பிரச்சினையில் இஸ்ரேலை தொடர்ந்து ஆதரிப்பதற்கு எதிராக தொடர் போராட்டங்களை நடத்திய மக்களிடம் முழுமையாக -தத்தமது நாடுகளில்- மேற்கு ஐரோப்பிய நாட்டு அரசாங்கங்கள் அம்பலப்பட்டுப் போயின. நெத்தன்யாகுவுக்கு எதிராக மட்டுமன்றி, தமது தலைவர்களுக்கு எதிராகவும் அவர்கள் போராடியதால் தலைவர்கள் அரசியல் செல்வாக்கு இழந்து போயிருக்கிறார்கள். அத்தோடு தோற்றுப் போகிற உக்ரைன் போருக்கு பில்லியன் கணக்கான நிதியை இப்போதும் வழங்கிக் கொண்டிருப்பதால், உள்நாட்டில் பொருளாதார நெருக்கடியும் வேலைவாய்ப்பின்மையும் வரி அதிகரிப்பும் மக்களின் சகிப்புத் தன்மையை சோதித்துப் பார்த்திருக்கின்றன. அதனால் மேற்கு ஐரோப்பிய தலைவர்களின் அரசியல் எதிர்காலமும், அதிகாரமும் கேள்விக்கு உள்ளாகியிருக்கின்றன. போர் தோல்வியில் முடிந்தால் அவர்கள் தேர்தல்களில் தூக்கி எறியப்படுவர். அதிகார சுகிப்பை இழந்து போய்விடுவர். இந்த அதிகாரத்தை தக்கவைக்க அவர்களுக்கு உக்ரைன் போர் இப்போ சமாதானத்தில் முடியக் கூடாது.

4.4) அவமானம்

ரசியாவை பலவீனப்படுத்தும் நோக்கில் உக்ரைன் மண்ணையும் மக்களையும் பலிகொடுத்து இந்தப் போருக்கு எண்ணெய் ஊற்றி வளர்த்த அந்த நோக்கமும் இதுவரை நிறைவேறவில்லை. அது ஒரு சமநிலையில்கூட முடியாமல் தோல்வியை நோக்கி சரிவது மிகப் பெரும் அவமானமாகவும் ஜீரணிக்க முடியாததாகவும் இருக்கிறது.

அவர்கள் கையாளும் வழிமுறை

ஐரோப்பிய மக்களை போர் அச்சமான சூழல் ஒன்றுக்குள் வைத்திருப்பதன் மூலம் தமது நோக்கங்களை சாதிக்க முயல்கிறார்கள்.

  1. ரசியாவால் தமது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் எனவும், உக்ரைன் தோல்வியுற்றால் ரசியா அதனை முன்னுதாரணமாகக் கொண்டு மற்றைய ஐரோப்பிய நாடுகளையும் ஆக்கிரமிக்கத் தொடங்கும் எனவும், புட்டினின் இலக்கு பழைய சோவியத் ஒன்றிய கட்டமைப்பை நோக்கிய ஆக்கிரமிப்புத்தான் எனவும் கதையாடல்களை உருவாக்கி மக்களுக்கு தீத்தும் வேலையில் ஈடுபடுகிறார்கள்.

  2. டென்மார்க், பெல்ஜியம், நெதர்லாந்து, பிரான்ஸ் போன்ற நாடுகளின் இராணுவ கேந்திர நிலையங்களின் மீது மர்ம ட்றோன்கள் பறந்து உளவு பார்ப்பதாக சொல்லி அச்சமூட்டினர். ட்றோன்களை ஏன் சுடவில்லை என நிருபர்கள் கேட்டதற்கு அதைச் சுட்டால் அதன் உதிரிப் பாகங்கள் மக்களின் தலைகளில் வீழ்ந்துவிடலாம் என்ற காரணத்தை கோமாளித்தனமாக முன்வைத்தனர். தமது நாட்டின் பாதுகாப்பை அச்சுறுத்தக்கூடிய நடவடிக்கையை அவர்கள் இவ்வாறாகவா அணுகுவார்கள். இலங்கையில் கோட்டபாய அரசாங்க காலத்தில் ‘கிறீஸ் பூதம்’ என்ற மர்ம கதாபாத்திரத்தை உருவாக்கி, தமிழ் மக்களை அச்ச நிலையில் வைத்திருந்ததை இந்த மர்ம ட்ரோன்கள் ஞாபகப்படுத்துகின்றன.

  3. அத்தோடு பாதுகாப்புக்கு என அதிகளவு நிதியை இந்த நாடுகள் தமது வரவுசெலவுத் திட்டங்களில் ஒதுக்குகின்றன. ஐரோப்பிய ஒன்றியமும் அதே வேலையைச் செய்கின்றது. நேட்டோ தனது உறுப்பு நாடுகள் தத்தமது GDP இலிருந்து ஒதுக்கும் நிதியை இரண்டு வீதத்திலிருந்து ஐந்து வீதமாக அதிகரிக்கக் கோருகின்றது.

  4. பிரான்சின் மக்ரோனும், பிரித்தானியாவின் ஸ்ரார்மரும் தத்தமது நாடுகளில் இராணுவ உசுப்பேத்தல்களை வேறு ஆரம்பித்திருக்கிறார்கள். போர்ப் பதட்ட உளவியலை மக்களிடம் உருவாக்க முயல்கிறார்கள்.

ஆனால் உக்ரைன்-ரசியா இடையில் நிரந்தரமான சமாதானத்தை முயற்சிக்க அமெரிக்கா விரும்புகிறது. அப்படித்தான் சொல்கிறது. அதன் பேரில் பிரச்சினைகளை தமது ஏகாதிபத்திய அதிகார நிலையில் நின்று அணுகி, நாடுகளை மிரட்டி அல்லது அழுத்தம் கொடுத்து டீல் பண்ணும் வேலையை ட்றம் செய்துவருகிறார். அவருக்கு நேட்டோவின் மானப் பிரச்சினை முக்கியமல்ல. அவர் அமெரிக்கா சார்ந்த பொருளாதார நலனின் அடிப்படையிலும், தூர நோக்கான அரசியல் இராஜதந்திரத்தின் அடிப்படையிலும் இச் சமாதான ஒப்பந்தத்தை நடைமுறைக்கு கொண்டுவர முயல்கிறார். மற்றபடி அவர் ஒரு சமாதான விரும்பியல்ல. சமாதான நடிகன்.

“நாங்கள் உக்ரைனுக்கு மேலும் பணத்தையும் ஆயுதங்களையும் கொடுப்பதோடு இன்னுமாய் பொருளாதாரத் தடைகளையும் செயற்படுத்தினால் வெற்றி எமது கைகளில் தவழும் என ஒரு ஜனரஞ்சகமான கற்பனை நிலவுகிறது. தோல்வியடைந்த இராஜதந்திரிகளாலோ கனவுலகில் வாழும் அரசியல்வாதிகளாலோ சமாதானம் உருவாகாது. யதார்த்த உலகிலுள்ள ஆளுமையானவர்களால் இதை ஏற்படுத்த முடியும்” என அமெரிக்க உப ஜனாதிபதி ஜே.டி.வான்ஸ் கூறுகிறார். போர்களையே உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யும் ஒரு நாட்டின் சார்பாக சமாதானம் பற்றிய இந்த தத்துவத்தை பேச வான்ஸ் க்கு என்ன அறம் இருக்கிறதோ தெரியவில்லை. இருந்திட்டுப் போகட்டும்.

trump-put-zel.jpeg?w=680

இந்த சமாதான ஒப்பந்தத்தின் பிரசவம்

புட்டினும் ட்றம்ப் உம் அலாஸ்காவில் சந்தித்த பரபரப்புக் காட்சியின் முன்னரேயே இரு நாட்டு ஆலோசகர்களும் இரகசியமாக சந்தித்ததாகச் சொல்லப்படுகிறது. அச் சந்திப்பின் போது புட்டின் தனது தரப்பில் உத்தியோக பூர்வமாக திரைமறைவில் கையளித்த நிபந்தனைகள்தான் ட்றம்ப் இப்போது கொணர்ந்த சமாதான ஒப்பந்தத்தின் அடிக்கல் என அதன் உள்ளடக்கத்தைப் பார்க்கிறபோது தெரிகிறது.

அது இதுவரை காலமும் இரகசியமாக பேணப்பட்டது என்பதை விடவும், அதன் அம்சங்கள் சாத்தியப்பாடற்றவை என ஓரத்தில் வைக்கப்பட்டது என்பதே பொருத்தமானது. அலாஸ்கா பேச்சுவார்த்தையின் பின் ட்றம் புட்டின் கோருவது சாத்தியமில்லாத விடயங்கள் என பேசியதும், புட்டின் மீதான நம்பிக்கையீனத்தை வெளிப்படுத்தி பத்திரிகையாளாகளின் கேள்விகளுக்கு பதிலளித்ததும் நடந்தது. அதுக்கும் மேலாக ஹங்கேரியில் அந் நாட்டின் தலைவர் விக்ரர் ஓர்பான் அனுசரணையில் நடக்க ஒப்புக்கோண்ட புட்டின்-ட்றம்ப் பேச்சுவார்த்தையை திடீரென ட்றம் இரத்துச் செய்தார். “புட்டினோடு சாத்தியமில்லாதவைகளைப் பேசி பயனில்லை” என்ற காரணத்தையும் முன்வைத்தார். அலாஸ்கா சந்திப்பின் பின்னும் அமெரிக்கா உக்ரைனுக்கு இராணுவ ரீதியில் இராணுவத் தகவல் பரிமாற்றங்களுக்கு உதவியது. பைடன்கூட வழங்க மறுத்த அமெரிக்காவின் சக்தி வாய்ந்த ஏவுகணையான ‘ரோமாஹவ்க்’ (Tomahawk) இனை உக்ரைனுக்கு தருவதாக ட்றம்ப் ஒப்புக்கொண்டார். (பின் மறுத்தார் என்பது வேறு விடயம்). இவையெல்லாம் எதைக் காட்டுகிறது. புட்டினின் நிபந்தனைகளை நிறைவேற்றுவது சாத்தியமில்லை என ட்றம் எடுத்த முடிவைத்தான் என்பதை மதிப்பிட முடிகிறது.

அப்படியாயின் ஏன் அதை திரும்ப எடுத்தார்கள்?

  1. உக்ரைன் தோல்வி

அலாஸ்கா சந்திப்பின் பின் ரசியாவின் உக்ரைன் மீதான தாக்குதல் மூர்க்கத்தனமாக இருந்தது. துரிதமான நில ஆக்கிரமிப்பும், உக்ரைனின் தலைநகர் கீவ் உட்பட ஏனைய நகரங்கள் மீதான பெரும் ஏவுகணை மற்றும் ட்றோன் தாக்குதலும், முன்னரங்குகளில் உக்ரைன் இராணுவத்தின் பெருந்தொகை மரணங்களும் சரணடைவுகளும் எல்லாமுமாக தவிர்க்க முடியாமல் புட்டினின் நிபந்தனைகளை பரிசீலிக்க வைத்திருக்கிறது. புட்டின் ஏவிய கொடுந் தாக்குதல்களின் நோக்கமும் இவ்வாறான ஓர் அழுத்தத்தை ட்றம்ப்பிற்குக் கொடுக்கும் நோக்கமாக இருந்திருக்கலாம்.

உக்ரைனை களமாக வைத்து ஆடிய நேட்டோவின் நிழற்போர் தோல்வியில் முடியப் போகிறது என்பதை ட்றம்ப் கணித்துமிருக்கலாம். அதை அவர் செலன்ஸ்கியிடம் ஏற்கனவே ஓவல் அலுவலகத்தில் வைத்து உக்ரைனுக்கு காட்டமாக தெளிவுபடுத்தியிருந்தார். “விளையாட உன்னிடம் கார்ட்ஸ் ஏதும் இல்லை” என திரும்பத் திரும்ப கூறி செலன்ஸ்கியை அவமானப்படுத்தினார். மூன்றாம் உலகப் போரில் கொண்டுபோய் நிறுத்தப் போகிறாய் என வேறு செலன்ஸ்கியை சொற்களால் தாக்கினார். அது நடந்து பல மாதங்களாகி விட்டது.

இப்போ இது தமது போரல்ல. ஐரோப்பாவின் போர். அவர்களே பார்த்துக் கொள்ளட்டும் என அமெரிக்கா பின்வாங்கியிருக்கிறது. அது தற்காலிகமாகவும் இருக்கலாம். காலம்தான் இந்த சூட்சுமத்தை அவிழ்த்துக் காட்டும்.

2. ட்றம்ப் இன் பொருளாதார நோக்கம்

  1. உக்ரைனுக்கு தாம் ஆயுதம் இனி வழங்க மாட்டோம். வேண்டுமானால் ஐரோப்பா (இன்னொரு வார்த்தையில் சொன்னால், அமெரிக்கா தவிர்ந்த நேட்டோ) தம்மிடம் அதை வாங்கி உக்ரைனுக்கு வழங்கலாம் என ட்றம் சொன்னார். அது நடக்கவும் செய்தது. குறிப்பாக ஜேர்மனி பெருமளவு நிதியை அதற்காகச் செலவிட்டு வாங்கி உக்ரைனுக்குக் கொடுத்தது. அமெரிக்கா இலாபமடைந்தது.

  2. இன்னொரு வழியாலும் அமெரிக்கா வந்தது. நேட்டோ உறுப்பு நாடுகள் தமது GDP இல் 5 வீதத்தை ஒதுக்க வேண்டும் என நிர்ப்பந்தித்ததன் மூலம் இந்தப் பணத்தை தமதாக்க முயற்சித்தார். அதாவது ஐரோப்பாவையும்விட பல மடங்கு உற்பத்தித் திறன் கொண்டதும், தொழில்நுட்ப வளர்ச்சியடைந்ததுமான தமது இராணுவ தளபாடங்களை நேட்டோவுக்கு விற்று காசு பார்க்க ட்றம்ப் திட்டமிட்டார். அது வெற்றிபெறவும் செய்கிறது.

  3. இப்போ சமாதான ஒப்பந்தத்திலும் பொருளாதார நோக்கம் பல தளங்களில் வெளிப்படுகிறது. அதில் பின்வரும் நான்கை சுட்ட முடியும்

3.1) ரசியா மீதான பொருளாதாரத் தடையை முன்வைத்து ரசியாவின் சொத்துக்களை ஐரோப்பா முடக்கியது. ரசிய நிறுவனங்களுக்குச் சொந்தமான பல பில்லியன் டொலர் பெறுமதியான சொத்து மட்டுமல்ல, பணமும் ஐரோப்பிய வங்கிகளில் உறைநிலையில் வைக்கப்பட்டது. பெல்ஜியத்தின் வங்கியில் பெருமளவு உறைநிலை நிதி உள்ளது. இதில் 140 பில்லியனை எடுத்து கடனாக உக்ரைன் அரசாங்கம் தன்னை நிர்வகிக்க இரண்டு ஆண்டு காலத்துக்கான உதவியாக வழங்க ஐரோப்பிய ஒன்றியம் முயற்சித்தது. அந்தப் பிரேரணையை பெல்ஜியம், ஹங்கேரி, ஸ்லோவாக்கியா போன்ற நாடுகள் ஏற்றக்கொள்ளவில்லை.

இந்த இழுபறிக்குள்ளால் ட்றம் இன் சமாதான ஒப்பந்தமானது “உறைநிலையில் வைக்கப்பட்டிருக்கும் ரசியாவின் நிதியில் 100 பில்லியன் டொலரை உக்ரைன் அபிவிருத்தி நிதி க்கு ஒதுக்க வேண்டும்” என்ற ஓர் அம்சத்தை உள்ளடக்கியிருக்கிறது. இந்தப் பணத்தை வேகமாக வளர்ச்சியடையும் தொழில்நுட்பம், தரவு வங்கி நிலையங்கள், செயற்கை நுண்ணறிவு போன்றவற்றில் உக்ரைன் முதலிடும் எனவும், அத்தோடு மறுகட்டுமானம், அபிவிருத்தி, எரிவாயு கட்டுமான நவீனமயமாக்கல் என்பவற்றிலும் முதலிடும் எனவும், இவை எல்லாவற்றையும் அமெரிக்காதான் தலைமை ஏற்று செய்யும் எனவும், வரும் இலாபத்தில் 50 வீதம் அமெரிக்காவுக்கானது எனவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ரசியாவின் உறைநிலைப் பணத்தை கையாள நினைத்த ஐரோப்பிய ஒன்றியத்தின் முகத்திலறைந்தது போல இது இருக்கிறது.

3.2) யப்பான், அவுஸ்திரேலியா, பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் Euroclear என்ற பெருநிதி நிறுவன சந்தை போன்றவற்றில் உறைநிலையில் வைக்கப்பட்டிருக்கும் மீதிச் சொத்து அல்லது பணத்தை (300 பில்லியன் வரை வரலாம் என சொல்லப்படுகிறது.) விடுவித்து, அதை வைத்து அமெரிக்கா-ரசியா கூட்டாக முதலீட்டில் ஈடுபடுவது எனவும், அதன் மூலம் இரு நாடுகளுக்குமான நெருக்கம் உண்டாகும் எனவும், அது எதிர்காலத்தில் முரண்பாடுகள் வீரியமாகாமல் தடுக்கும் எனவும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதன்படி எரிசக்தி, இயற்கை வளம், கட்டுமானம், அண்டாட்டிக் (Antatic) இலுள்ள அரியவகை கனிம வள அகழ்வு என்பவற்றில் ரசியாவும் அமெரிக்காவும் கூட்டாக ஈடுபடும் என்பதெல்லாம் ட்றம்ப் இன் சமாதான ஒப்பந்த சூழ்ச்சித் திட்டமாக எழுதப்பட்டுள்ளது. ரசியா இதையெல்லாம் ஏற்றுக் கொள்ளுமா எனத் தெரியவில்லை.

3.3) உக்ரைனுக்கு பாதுகாப்பு உத்தரவாதத்தை அமெரிக்கா வழங்கும் எனவும் அதற்கான நஷ்ட ஈட்டை உக்ரைன் அமெரிக்காவுக்கு தொடர்ந்து செலுத்த வேண்டும் எனவும் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

3.4) G7 இல் மீண்டும் இணைய ரசியாவுக்கு அழைப்பு விடுகிறது ஒப்பந்தம். அதன் மூலம் (ரசியா உட்பட்ட) பிரிக்ஸ் கூட்டமைப்பின் பொருளாதாப் போட்டியில் பின்தங்கிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கும் G7 உடன் ரசியாவின் பொருளாதாரத்தை இணைக்கும் இன்னொரு சூழ்ச்சி ட்றம்ப் இன் ஒப்பந்தத்தில் உள்ளது.

ட்றம்ப் இன் தூர நோக்கு அரசியல்

சீனாவுடனான எதிர்காலப் போர்!. இன்றைய உலக ஒழுங்கு ஒற்றைத் துருவ உலக ஒழுங்கிலிருந்து பல் துருவ உலக ஒழுங்கை நோக்கி முட்டிமோதல்களுக்கு உள்ளாகத் தொடங்கியிருக்கிற காலம். இரண்டாம் உலகப் போர் வரை முதல் உலக சாம்ராஜ்யமாக திகழ்ந் பிரித்தானியாவின் இடத்தை அமெரிக்கா எடுத்த போதும், ஒற்றைத் துருவ நிலையை முழுமையாகப் பேண முடியவில்லை. சோவியத் யூனியன் இன்னொரு வல்லரசாக அமெரிக்காவுக்கு சகல தளங்களிலும் சவாலாக திகழ்ந்தது. இரு துருவ நிலை என அதை சொல்ல முடியும். ஆனால் 1991 இல் சோவியத் உடைவின் பின் அமெரிக்கா ஒற்றைத் துருவ உலக ஒழுங்கை முழுமையாக நிறுவியது. உலகம் முழுவதும் 750 க்கு மேற்பட்ட இராணுத் தளங்களை 80 க்கு மேற்பட்ட நாடுகளில் அது வைத்திருக்கிறது.

பிரேசில், ரசியா, இந்தியா, சீனா மற்றும் தென் ஆபிரிக்கா என்ற 5 நாடுகளை முதன்மையாகக் கொண்டு எழுந்த பிரிக்ஸ் இன் எழுச்சி அமெரிக்காவுக்கும் G7 பணக்கார நாடுகளுக்கும் சவாலாக எழுந்துள்ளது. அத்தோடு சீனா, ரசியா, இந்தியா என்பவற்றின் பொருளாதார வளர்ச்சி மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி என்பன காலனிய மனக் கட்டமைப்புக் கொண்ட மேற்குலகுக்கு ஜீரணிக்க முடியாத ஒன்று. ரசியா மீதான இவர்களின் அணுகுமுறையில் இந்த மனக் கட்டமைப்பு பெரும் பங்கு வகிக்கிறது. முன்னைய சோவியத் போல, அல்லது அதையும்விட சிறப்பாக கடந்த 30 வருடங்களில் சீனா சகல தளங்களிலும் அமெரிக்காவுக்கு சவாலாக எழுந்துள்ளது. எனவே தனது அதிகார நிலையை மேல்நிலையில் வைத்திருக்கும் வேட்கையானது எதிர்காலத்தில் சீனாவுடன் அமெரிக்கா (நேட்டோவின் துணையுடன்) போர் தொடுக்க வேண்டிய புள்ளியில் கொண்டுவந்து நிறுத்தலாம். அது ஏறத்தாழ 2007 இல் நிகழலாம் என சிஐஏ கணித்திருக்கிறது. அதற்கான இன்னொரு உக்ரைனாக தாய்வானை அது குறிவைத்துள்ளது.

முன்னர் அமெரிக்காவானது சோவியத் யூனியனை எதிர்கொள்ள சீனாவுடன் நட்புறவு பேணி, சீனாவை தூர இருக்க வைக்க மேற்கொண்ட உத்திபோல, சீனாவுடன் போர் ஒன்று உருவாகும் பட்சத்தில், ரசியாவை சீனாவிடமிருந்து தூரப்படுத்த அல்லது தலையிடாமலிருக்க வைக்க வேண்டிய தூர நோக்கு ஒன்று ட்றம்ப் இடம் இருக்கிறது.

இதை ட்றம்ப் க்கும் புட்டினுக்குமான நட்பு என சொல்வது ஓர் அரசியல் பார்வையே அல்ல. அரசியல் காய் நகர்த்தல் என்பதே பொருத்தமானது. எல்லா நாடுகளும் தத்தமது நலனை முன்னிறுத்தியே செயற்படுகின்றன. அதை சாதிக்க இராஜதந்திர அணுகுமுறைகளை ஒரு சதுரங்க ஆட்டமாக ஆடுகின்றன. அவர்களின் முகத்துக்கும் பிடரிக்கும் இடையிலான மொழி ஒன்றாக இருப்பதில்லை. அது அறமற்ற மொழியின் பாற்பட்டது. ட்றம்பின் இந்த அரசியல் சதுரங்கத்தை புட்டின் நன்கு புரிந்தவர் என்பதால், ஆடுகளத்தில் ட்றம்பை வைத்து தனது இலக்கை அடைய அவரும் தன் பங்குக்கு காய் நகர்த்துகிறார்.

அரசியல் சதுரங்கம்

மேற்கூறிய பொருளாதார மற்றும் அரசியல் நலன்களை கருத்தில் கொண்டு ட்றம்பின் ஆலோசகர்கள் 28 அம்ச சமாதான ஒப்பந்தத்தை உக்ரைன்-ரசியா இடையில் முன்வைத்திருக்கிறார்கள். போரில் வெற்றிக்கு அருகாக வந்திருக்கும் ரசியாவுக்கும் தோல்வியை தழுவும் உக்ரைனுக்கும் இடையிலான ஒப்பந்தம் சமச்சீரற்றதாகவே இருக்கும் என்ற யதார்த்தத்தைப் பயன்படுத்தி ட்றம்ப் தனது ஆட்டத்தை ஆடுகிறார்.

உக்ரைன் இனி ஒருபோதும் நேட்டோவில் இணைத்துக் கொள்ளப்பட மாட்டாது என்பது ஒப்பந்தத்தின் ஓர் அம்சமாக குறிப்பிடப்பட்டுள்ளது. ரசியாவின் பாதுகாப்புக்கு உத்தரவாதமாக 2022 பெப்ரவரி வரை புட்டின் அமெரிக்காவிடமும் செலன்ஸ்கியிடமும் கேட்டது “நேட்டோவில் இணையாமல் நடுநிலையாக இருக்க வேண்டும்” என்பதே. இதை மறுத்த செலன்ஸ்கி இன்று எந்த இடத்தில் நிற்பாட்டப்பட்டிருக்கிறார். நேட்டோவில் நிரந்தரமாக சேர முடியாது என்பது மட்டுமன்றி, உக்ரைன் இராணுவத்தை ஆறு இலட்சத்துக்கு மேல் வைத்திருக்க முடியாது, அதி தூர ஏவுகணைகளை உக்ரைன் வைத்திருக்க முடியாது, அணு ஆயுதத்தை உருவாக்க முடியாது என்பனவெல்லாம் ஒப்பந்தத்தினூடு உக்ரைன் வந்து சேர வேண்டிய இடமாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. நேட்டோவுக்காக உக்ரைன் இழந்தவைகள் இவை மட்டுமல்ல. உக்ரைன் மக்கள் மற்றும் இராணுவம் என பெரும் மனிதப் பேரழிவுகளும், மனித அலைச்சல்களும், உளவியல் நசிவுகளும், கட்டுமான இழப்புகளும் போன்று துயரங்களும் ஆகும்.

இது மட்டுமா. ரசிய மொழி பேசும் மக்களைக் கொண்ட, உக்ரைன் அரசுக்கு எதிராக ஆயுதப் போராட்டம் நடத்திய, டொன்பாஸ் பிரதேசங்களில் 90 வீதத்தை செலன்ஸ்கி ரசியாவிடம் பறிகொடுத்தும் இருக்கிறார். ரசியாவால் கைப்பற்றப்பட்டிருக்கும் இப் பிரதேசங்கள் ரசியாவிடம் உத்தியோகபூர்வமாக இணைக்கப்படுவதற்கான வாசலையும் இந்த ஒப்பந்தம் திறந்துவிட்டிருக்கிறது. ஆனாலும் இவை தெளிவான வரையறுப்புகளுக்கு உட்படுவதில் அமெரிக்காவுக்கும் ரசியாவுக்கும் ஒத்த கருத்து இல்லை. மறுபுறத்தில் உக்ரைன் தனது பிரதேசமான டொன்பாஸ் மற்றும் கிரைமியா பிரதேசங்களை விட்டுக் கொடுக்க தயாராக இல்லை.

2002 பெப்ரவரியில் போர் தொடங்கிய போதும், 2002 ஏப்ரலில் ரசியா உக்ரைனை பேச்சுவார்த்தைக்கு அழைத்தது. இஸ்தான்புல்லில் இது நடைபெற்றது. நேட்டோவின் விஸ்தரிப்புவாதத்துக்கு எதிராக ரசிய பாதுகாப்பு உத்தரவாதத்தை உறுதிப்படுத்த “உக்ரைன் நேட்டோவில் இணையக்கூடாது. நடுநிலையாக இருக்க வேண்டும்” என ரசியா உக்ரைனை வலியுறுத்தியதை செலன்ஸ்கி தான் ஏற்றுக் கொள்வதாக சொல்லி மேசைக்கு வந்தார். அது நடந்திருந்தால் உக்ரைன் இப்படி சின்னாபின்னப்பட்டு இருக்காது. பிரதேசங்களை பறிகொடுத்தும் இருக்காது.

ஆனால் செலன்ஸ்கியை பேச்சுவார்த்தையிலிருந்து இடைமறித்து “நாம் இருக்கிறோம் உனக்கு உதவ. நீ நேட்டோவில் சேருவதை யாராலும் தடுக்க முடியாது பேச்சுவார்த்தையிலிருந்து வெளியே வா” என்றெல்லாம் நம்பிக்கை கொடுத்து அல்லது உசுப்பேத்தி பேச்சுவார்த்தையைக் குழப்பியது பொரிஸ் ஜெல்சனின் பிரித்தானியாவும் பைடனின் அமெரிக்காவும்தான்!. இவர்களே உக்ரைனின் இன்றைய நிலைக்கு மிகப் பெரும் காரணமானவர்கள். இவர்களுக்குப் பின்னால் இழுபட்டுப் போன ஐரோப்பாவானது இப்போ வலையில் சிக்கியுள்ளது. ட்றம்ப் “இது எனது போர் அல்ல. இது பைடன் ஆரம்பித்த போர்… இப்போ உங்களது போர்” என ஐரோப்பாவுக்கு விரல் நீட்டுகிறார். இன்னொரு கோணத்தில் இது ஒரு படம் காட்டலாகக் கூட இருக்கலாம். அதை எதிர்காலம் வெளிச்சமிடும்.

தமது பாதுகாப்பு உத்தரவாதத்தை கோரும் ஐரோப்பாவானது ரசியாவின் பாதுகாப்பு உத்தரவாதத்தை என்றாவது ஒருநாள் ஏற்று பேசியதுண்டா என்றால், ஒருபோதும் இல்லை. ரசிய எல்லைவரை வந்த ‘நேட்டோ ஜக்கற்’ அணிந்த ஐரோப்பாவானது, தனது பாதுகாப்பு உத்தரவாதம் பற்றி உரக்க கத்தும் அதே நேரம், தனது எல்லைக்குள் நின்று தனது பாதுகாப்பு உத்தரவாதம் பற்றி பேச ரசியாவுக்கு இருக்கும் உரிமையை மறுக்கிறது. பலஸ்தீன மக்களின் பாதுகாப்பு உத்தரவாதத்தைப் பற்றிப் பேசாமல், இஸ்ரேலின் பாதுகாப்பு உத்தரவாதம் பற்றி பேசிய இழிநிலைதான் ஐரோப்பாவின் இறைமை பற்றிய வியாக்கியானத்துக்கான தகுதியாக இருக்க முடியும். தனது பாதுகாப்பு உத்தரவாதத்தை மட்டுமன்றி ரசியாவின் பாதுகாப்பு உத்தரவாதத்தையும் கவனத்தில் எடுத்து நேர்மையாக பேச்சுவார்த்தை மேசையில் எல்லோருமாக உட்கார்ந்தால் இப் பிரச்சினையை எப்போதோ முடிவுக்குக் கொண்டு வந்திருக்கலாம்.

ஆக, அமெரிக்கா இன்று பின்வாங்குகிற நிலையில் கூட, ஐரோப்பா பின்வாங்கவில்லை. ஐரோப்பிய நலன் அடிப்படையில் என்பதைவிட ஐரோப்பிய அரசியல் தலைவர்களின் நலன்தான் எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது. ட்றம்பின் 28 அம்ச சமாதான ஒப்பந்தம் உக்ரைனின் இறைமையைப் பாதிக்கிறது என கூறி, ஐரோப்பா இந்த 28 அம்சங்களையும் பிரித்து மேய்ந்து, 19 அம்ச ஒப்பந்தமாக உருமாற்றி ட்றம் இடம் கையளித்திருக்கிறது. இதை எழுதிக்கொண்டிருக்கும் வரை அவை பற்றிய விபரம் தெரியவில்லை. ஆனால் சமாதானம் வர இவர்கள் இலகுவில் விடப்போவதில்லை. குறிப்பாக மக்ரோன், ஸ்ராமர், மேர்ற்ஸ் போன்ற போர்வெறியர்கள் சமாதானத்துக்கு எதிராகவே நிற்கின்றனர்.

அமெரிக்காவை முதன்மைப் பாத்திரமாகக் கொண்ட 32 நாடுகளின் கூட்டணியாக விரிவாக்கம் அடைந்திருக்கும் நேட்டோவுடன் நேரடியாக ரசியா தனியாக போர் புரிவது என்பது முடியவே முடியாத காரியம். நேட்டோவிலுள்ள ஒரு நாட்டைத் தாக்கினால் அது நேட்டோ உறுப்பு நாடுகள் எல்லோரையும் தாக்கியதாக கணிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்பது நேட்டோவின் 5வது சரத்து ஆகும். இந்தவகை பாதுகாப்பு உத்தரவாதம், பெருமளவு கூட்டு இராணுவ எண்ணிக்கை, அமெரிக்காவின் நவீன தொழில்நுட்பங்கள் ஆயுத உற்பத்திகள், நிதி திரட்சி எல்லாவற்றையும் வைத்துக் கொண்டு ரசியாவால் ஐரோப்பாவுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் என பேசுவதை நம்ப மக்கள் கேணையர்களாக இருக்க வேண்டும்.

ஐரோப்பாவை புட்டின் ஆக்கிரமிக்கும் ஆபத்து உள்ளதாக அடிக்கடி உச்சரிக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ‘ரசிய ஆக்கிரமிப்பு’ கதையாடலை பலமுறை மறுத்த புட்டின், ஐரோப்பிய தலைவர்கள் மாயையில் வாழ்கின்றனர் என்றார். சென்ற வாரம் அவர் பேசுகிறபோது ரசியா ஒருபோதும் ஐரோப்பாவை ஆக்கிரமிக்காது என எழுத்தில் தரக்கூட தான் தயார் என அறிவித்தார். ஐரோப்பிய ஒன்றியம் இதுவரை அதுகுறித்து எதுவும் பேசாமல் கள்ள மௌனம் சாதிக்கிறது.

யதார்த்தம்

உக்ரைன் வரலாற்றாசிரியரான Marta Havryshko அவர்கள் கூறுகிறபோது, “இலட்சக்கணக்கான உக்ரைன் இராணுவ வீரர்கள் மடிந்திருக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலானோரும் அவர்களின் விருப்பின்றி பலவந்தமாக பிடித்துச் செல்லப்பட்டு முன்னரங்குகளில் விடப்பட்டவர்கள். அவர்களின் குடும்பங்கள் நடுவீதியில் விடப்பட்டிருக்கிறார்கள். ரசியாவின் தாக்குதலில் மக்கள் கொல்லப்படுகிறார்கள். ஒவ்வொரு இரவிலும் தூங்கச் செல்லும்போது நாளை உயிருடன் இருப்போமா என்ற ஏக்கம் அவர்களை உயிரோடு கொன்று போடுகிறது. உளவியல் சிதைவுகள் அவர்களை தாக்குகிறது. இளஞ் சமுதாயம் நாட்டைவிட்டு களவாக தப்பியோடி பெருமளவில் புலம்பெயர்ந்திருக்கிறது. தமது எதிர்காலம் குறித்து அவர்கள் கவலைப்படுகிறார்கள்” என்கிறார்.

ரசியாவின் ஆக்கிரமிப்பை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. கடுமையாக எதிர்க்கிறார். ஆனால் “உக்ரைன் அரசாங்கம் ஊழல் நிறைந்த அதிகாரிகளாலும் அமைச்சர்களாலும் ஆனது. அவர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள். போர் வேண்டும் என்பவர்கள் தாமே போய் முன்னரங்கில் நிற்கட்டும்” என்கிறார். அவர் இறுதியாக ஒன்றைச் சொல்கிறார், “இங்கு வரைபடங்கள் அல்ல முக்கியம், மனிதர்கள்தான் முக்கியம். அவர்கள் ஏங்குவது தமது உயிருக்காக, அமைதியான வாழ்வுக்காக” என்கிறார்.

உண்மைதான். நாட்டுப் பற்று என்பது எளிய மக்களின் தியாகத்தைத்தான் வேண்டுகிறது. அதற்கான கதையாடல்களையும் போரையும் உருவாக்குபவர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள். இன்னும் சொல்லப் போனால் வசதியைப் பெருக்கி வாழுகிறார்கள். அது உக்ரைனாக இருந்தாலென்ன ரசியாவாக இருந்தாலென்ன, அமெரிக்கா ஐரோப்பாவாக இருந்தாலென்ன!

ட்றம்பின் அமெரிக்கா என்பதும் புட்டினின் ரசியா என்பதும் நிரந்தரமல்ல. அது எதிர்காலத்திலும் தத்தமது நலனுக்கேற்ப ஆடுகளங்களில் நிற்கும் என்பதை நாம் மறந்து விடக் கூடாது. அரசியலில் நிரந்தரமான நண்பருமில்லை பகைவருமில்லை என்பது இதைத்தான். கண்முன்னே இதற்கான உதாரணங்கள் நிகழ்ந்து கொண்டுதானிருக்கிறது. அதேபோலவே, இன்றைய ஐரோப்பிய ஒன்றியம் வரைவுசெய்யும் எல்லைதான் ஐரோப்பா அல்ல என்பதும், பூகோள ரீதியில் ரசியாவும் ஓர் ஐரோப்பிய நாடுதான் என்பதையும் கவனம் கொள்ள வேண்டும். அதேநேரம் இந்த இரண்டு முகாம்களுக்கும் இடையிலான பகை என்பது இலகுவில் தீர்க்க முடியாதளவுக்கு வரலாற்று ரீதியிலானது என்பதும் அவற்றின் மனக் கட்டமைப்பு ஒன்றல்ல என்பதும், அவை புறந்தள்ள முடியாதளவு இடைவெளியைக் கொண்டது என்பதும் சிந்தனை கொள்ளத் தக்கது. சீனாவை நோக்கி ரசியாவை தள்ளியது மேற்குலகின் அல்லது நாட்டோவின் அணுகுமுறை மட்டுமல்ல, இந்த மனக் கட்டமைப்பு வேறுபாடும்தான் என்பதை கவனம் கொள்ள வேண்டும். இதை பைடனைப் போலன்றி ட்றம்ப் சரியாகவே புரிந்து வைத்திருக்கிறார்.

ஆனாலும் ஐரோப்பாவின் காலனிய மனக் கட்டமைப்பு சமாதானத்துக்கு குறுக்காக வாள் வீசி நிற்கிறது. அதைத் தாண்டி சமாதானம் முகிழ்ப்பது இலகுவானதல்ல என்பது ட்றம்ப் க்கு நன்றாகவே தெரியும். அமெரிக்கா தள்ளி நிற்கிறபோதும், ஐரோப்பாவுடன் இழுபடுகிற செலன்ஸ்கியின் பதவியை கைமாற்றியாவது தனது நோக்கத்தை சாதிக்க ட்றம்ப் தயங்க மாட்டார். அதற்கு ஒத்திசைவாக, செலன்ஸ்கி அரசாங்க உயர்மட்ட அதிகாரிகளின் மில்லியன் கணக்கான பண மோசடியும் ஊழலும் பூதமாக வெளிக்கிளம்பியிருக்கிறது. “வரும் ஆனால் வராது, வராது ஆனால் வரும்” என்ற நிலையில் சமாதானம் உக்ரைனின் வாசற்படியில் குந்தியிருக்கிறது!.

https://sudumanal.com/2025/12/01/வரைபடங்களும்-மனிதர்களும/#more-7502

  • கருத்துக்கள உறவுகள்

அவருடைய தரப்பை மிக அழுத்தமாகச் சொல்லியிருக்கின்றார் ரவீந்திரன்................ ஒரு வக்கீல் போல ஒரு தரப்பிற்காக வாதாடியிருக்கின்றார்.

சில சொற்களைத் தவிர்த்திருக்கலாம். அந்தச் சொற்கள் இந்தக் கட்டுரையை ஒரு 'சமூக ஊடக அலட்டல்' என்ற அளவிற்கு தரமிறக்கி விடக்கூடும். குறிப்பிடப்பட்டிருக்கும் சில வருடங்களும் தப்பானவை என்றே தெரிகின்றது, உதாரணம்: அமெரிக்க உளவுத்துறையினால் அமெரிக்க - சீன யுத்தம் தொடங்கும் வருடம் என குறிப்பிடப்பட்டிருக்கும் ஆண்டு.............................

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.