Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வெற்றியுடன் தொடங்கிய இலங்கை இளையோர் அணி

Dec 13, 2025 - 07:56 PM

வெற்றியுடன் தொடங்கிய இலங்கை இளையோர் அணி

டுபாயில் இடம்பெற்று வரும் 19 வயதிற்கு உட்பட்ட ஆசிய இளையோர் கிண்ண ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இன்றைய நேபாளம் அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது. 

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை இளையோர் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது. 

இதன்படி முதலில் துடுப்பாடிய 28.5 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 82 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது. 

இலங்கை அணி சார்பில் பந்துவீச்சில் செத்மிக செனவிரட்ன 5 விக்கெட்டுக்களை வீழ்த்தினார். 

இந்நிலையில் 83 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாடிய இலங்கை இளையோர் அணி 14.5 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை மாத்திரமே இழந்து போட்டியில் வெற்றிபெற்றது. 

போட்டியின் சிறப்பாட்டக்காரராக செத்மிக செனவிரட்ன தெரிவானார். 

இதன்மூலம் 19 வயதிற்கு உட்பட்ட ஆசிய இளையோர் கிண்ண ஒருநாள் கிரிக்கெட் தொடரை இலங்கை இளையோர் அணி வெற்றியுடன் ஆரம்பித்துள்ளது.

https://adaderanatamil.lk/news/cmj4e2sqv02pio29nfkybudml

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

19இன் கீழ் ஆசிய கிண்ண கிரிக்கெட்: சமீர் மின்ஹாஸ், அஹ்மத் ஹுசெய்ன் அபார சதங்கள், மலேசியாவை பந்தாடியது பாகிஸ்தான்

12 Dec, 2025 | 06:02 PM

image

(நெவில் அன்தனி)

துபாய் தி செவன்ஸ் மைதானத்தில் இன்று வெள்ளிக்கிழமை (12) நடைபெற்ற மலேசியாவுக்கு எதிரான 19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண ஏ குழு போட்டியில் இணைப்பாட்டத்துக்கான ஆசிய இளையோர் சாதனையை நிலைநாட்டிய பாகிஸ்தான், 297 ஓட்டங்களால் அமோக வெற்றியீட்டியது.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய 19 வயதுக்குட்பட்ட பாகிஸ்தான் அணி 50 ஓவர்களில் 3 விக்கெட்களை மாத்திரம் இழந்து 343 ஓட்டங்களைக் குவித்தது.

முதல் பத்து ஓவர்களுக்குள் 2 விக்கெட்களை இழந்ததால் பாகிஸ்தான் தடுமாற்றத்தை எதிர்கொண்டது. 

1212_pak_sameer_minhax.jpg

ஆனால், 3ஆவது விக்கெட்டில் ஜோடி சேர்ந்த சமீர் மின்ஹாஸ், அஹ்மத் ஹுசெய்ன் ஆகிய இருவரும் சதங்கள் குவித்ததுடன் 293 ஓட்டங்களைப் பகிர்ந்து 19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் போடடியில் சகல விக்கெட்டுக்களுக்குமான அதிகூடிய இணைப்பாட்ட சாதனையை நிலைநாட்டினர்.

சமிர் மின்ஹாஸ் 148 பந்துகளை எதிர்கொண்டு 11 பவுண்டறிகள், 8 சிக்ஸ்கள் உட்பட 177 ஓட்டங்களைக் குவித்து ஆட்டம் இழக்காதிருந்தார்.

1212_ahmed_hussain.jpg

அவருக்கு பக்கபலமாக துடுப்பெடுத்தாடிய அஹ்மத் ஹுசெய்ன் 114 பந்துகளில் 8 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 132 ஓட்டங்களைப் பெற்றார்.

மிகவும் கடுமையான 344 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மலேசியா 19.4 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 43 ஓட்டங்களுக்கு சுருண்டது.

மலேசிய இன்னிங்ஸில் ஒருவரும் இரட்டை இலக்க எண்ணிக்கையைப் பெறவில்லை

அணித் தலைவர் டியாஸ் பாட்ரோ, முஹம்மத் அக்ரம் ஆகிய இருவர் பெற்ற தலா 9 ஓட்டங்களே அதிகபட்ச ஓட்டங்களாக இருந்தது.

1212_pak_ali_raza.jpg

பந்துவீச்சில் அலி ராஸா 11 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் மொஹம்மத் சையாம் 27 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் தானியல் அலி கான் 6 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

ஆட்டநாயகன்: சமீர் மின்ஹாஸ்

https://www.virakesari.lk/article/233205

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஏராளன் said:

வெற்றியுடன் தொடங்கிய இலங்கை இளையோர் அணி

Dec 13, 2025 - 07:56 PM

வெற்றியுடன் தொடங்கிய இலங்கை இளையோர் அணி

டுபாயில் இடம்பெற்று வரும் 19 வயதிற்கு உட்பட்ட ஆசிய இளையோர் கிண்ண ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இன்றைய நேபாளம் அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது. 

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை இளையோர் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது. 

இதன்படி முதலில் துடுப்பாடிய 28.5 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 82 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது. 

இலங்கை அணி சார்பில் பந்துவீச்சில் செத்மிக செனவிரட்ன 5 விக்கெட்டுக்களை வீழ்த்தினார். 

இந்நிலையில் 83 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாடிய இலங்கை இளையோர் அணி 14.5 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை மாத்திரமே இழந்து போட்டியில் வெற்றிபெற்றது. 

போட்டியின் சிறப்பாட்டக்காரராக செத்மிக செனவிரட்ன தெரிவானார். 

இதன்மூலம் 19 வயதிற்கு உட்பட்ட ஆசிய இளையோர் கிண்ண ஒருநாள் கிரிக்கெட் தொடரை இலங்கை இளையோர் அணி வெற்றியுடன் ஆரம்பித்துள்ளது.

https://adaderanatamil.lk/news/cmj4e2sqv02pio29nfkybudml

இலங்கை அணியில் விக்கினேஸ்வரன் ஆகாஷ் என்ற ஹார்ட்லி கல்லூரி மாணவர் 4 ஓவருக்கு 15 ஓட்டங்கள் குடுத்து ஒரு விக்கேட் எடுத்தார். இந்த ஆசியக்கிண்ணப் போட்டியில் இலங்கையணி சார்பாக தெரிவு செய்யப்பட்ட 15 வீரர்களில் ஒருவர் பரியோவன் கல்லூரி மாணவர் குகதாஸ் மாதுளன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

19இன் கீழ் ஆசிய கிண்ணம்: ஐக்கிய அரபு இராச்சியத்தை நையப்புடைத்தார் சூரியவன்ஷி; இந்தியா 234 ஓட்டங்களால் வெற்றி

Published By: Vishnu

12 Dec, 2025 | 07:13 PM

image

(நெவில் அன்தனி)

துபாய் ஐசிசி பயிற்சியக மைதானத்தில் வெள்ளிக்கிழமை (12) நடைபெற்ற ஏ குழுவுக்கான 19 வயதுக்குட்பட்ட ஆண்கள் ஆசிய கிண்ண ஆரம்பப் போட்டியில் ஐக்கிய அரபு இராச்சிய பந்துவீச்சாளர்களை வைபவ் சூரியவன்ஷி நையப்புடைக்க, இந்தியா 234 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.

15ஆவது பிறந்த தினத்தை நெருங்கிக்கொண்டிருக்கும் வைபவ் சூரியவன்ஷி 95 பந்துகளில்  9 பவுண்டறிகள், 14 சிக்ஸ்கள் உட்பட 171 ஓட்டங்களை விளாசி 19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் வரலாற்றில் இந்தியாவுக்கான அதிகூடிய தனிநபர் எண்ணிக்கைக்குரிய சாதனையை நிலைநாட்டினார்.

எவ்வாறாயினும்,, இங்கிலாந்துக்கு எதிராக டோன்டன் விளையாட்டரங்கில் 2002இல் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ணப் போட்டியில் அம்பாட்டி ராயுடு ஆட்டம் இழக்காமல் குவித்த 177 ஓட்டங்களே  இளையோர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில்   இந்தியாவுக்கான  அதிகூடிய தனிநபர் எண்ணிக்கைக்குரிய   சாதனையாக தொடர்ந்தும் இருக்கின்றது. 

வைபவ் சூரியவன்ஷி  குவித்த அபார சதம், ஆரோன் ஜோர்ஜ், விஹான் மல்ஹோத்ரா ஆகியோர் பெற்ற அரைச் சதங்கள் ஆகியவற்றின் உதவியுடன் 19 வயதுக்குட்பட்ட இந்திய அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 433 ஓட்டங்களைக் குவித்தது.

1212_ind_vaibav_suriyavanshi_action.jpg

19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் பெறப்பட்ட அதிகூடிய மொத்த எண்ணிக்கை இதுவாகும். கோலாலம்பூரில் கத்தாருக்கு எதிராக பங்களாதேஷ் 7 விக்கெட்களை இழந்து பெற்ற 363 ஓட்டங்களே 19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ணத்தில் இதற்கு முன்னர் பெறப்பட்ட அதிகூடிய மொத்த எண்ணிக்கையாக இருந்தது.

இன்றைய போட்டியில் சூரியவன்ஷியை விட ஆரோன் ஜோர்ஜ், விஹான் மல்ஹோத்ரா ஆகிய இருவரும் தலா 69 ஓட்டங்களையும் வேதாந்த் த்ரிவேதி 38 ஓட்டங்களையும் அபிக்யான் குண்டு 32 ஓட்டங்களையும் பெற்றனர்.

இதனிடையே வைபவப் சூரியவன்ஷி, ஆரோன் ஜோர்ஜ் ஆகிய இருவரும் 2ஆவது விக்கெட்டில் 212 ஓட்டங்ளைப் பகிர்ந்தனர்.

அத்துடன் விஹான் மல்ஹோத்ரா, வேதாந்த் த்ரிவேதி ஆகிய இருவரும் 4ஆவது விக்கெட்டில் 88 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.

பந்துவீச்சில் யுக் ஷர்மா 75 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் உதிஷ் சூரி 77 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஐக்கிய அரபு இராச்சியம் 50 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 199 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

1212_vaibav_suriyavanshi_and_malhotra.jp

ஐக்கிய அரபு இராச்சியம் 14ஆவது ஓவரில் 6 விக்கெட்களை இழந்து 53 ஓட்டங்களை மாத்திரம் பெற்று படுதோல்வியை எதிர்நோக்கியது.

ஆனால், ப்ரித்வி மது, உதிஷ் சூரி ஆகிய இருவரும் 7ஆவது விக்கெட்டில் 85 ஓட்டங்களைப் பகிர்ந்து ஐக்கிய அரபு இராச்சியத்தை கௌரவமான நிலையில் இட்டனர்.

அவர்களது இணைப்பாட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர இந்திய இளையோர் அணி கடுமையாக முயற்சித்தது.

இறுதியில் 9ஆவது பந்துவீச்சாளராகப் பயன்படுத்தப்பட்ட விஹான் மல்ஹோத்ரா ப்ரித்வி மதுவை ஆட்டம் இழக்கச் செய்து இணைப்பாட்டத்தை முடிவுக்குக் கொண்டுவந்தார்.

தொடர்ந்து உதிஷ் சூரி, சாலே ஆமின் ஆகிய இருவரும் பிரிக்கப்படாத 8ஆவது விக்கெட்டில் 61 ஓட்டங்களைப் பகிர்ந்து 50ஆவது ஓவர் வரை  இந்தியாவை வெற்றிக்காக  காக்க வைத்தனர்.

உதிஷ் சூரி 78 ஓட்டங்களுடனும்  சாலே  ஆமிக் 20 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.

பந்துவீச்சில் தீப்பேஷ் தேவெந்த்ரன் 21 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

ஆட்டநாயகன்: வைபவ் சூரியவன்ஷி

https://www.virakesari.lk/article/233215

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

19இன் கீழ் ஆசிய கிண்ணம்: செத்மிக்கவின் அபார பந்துவீச்சின் உதவியுடன் நேபாளத்தை இலகுவாக வெற்றிகொண்டது இலங்கை

13 Dec, 2025 | 03:19 PM

image

(நெவில் அன்தனி)

ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்றுவரும் 19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் பி குழுவில் இடம்பெறும் இலங்கை தனது ஆரம்பப் போட்டியில் நேபாளத்தை 8 விக்கெட்களால் மிக இலகுவாக வெற்றிகொண்டது.

துபாய் தி செவன்ஸ் மைதானத்தில் இன்று சனிக்கிழமை நடைபெற்ற இந்தப் போட்டி 44 ஓவர்களுக்குள் நிறைவடைந்தது.

1312_sethmika_seneviratne.jpg

கண்டி திரித்துவ கல்லூரியின் வேகப்பந்துவீச்சாளர் செத்மிக்க செனவிரட்ன 5 விக்கெட் குவியலைப் பதிவுசெய்து இலங்கையின் வெற்றியை இலகுபடுத்தினார்.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட 19 வயதுக்குட்பட்ட நேபாள அணி 25.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 82 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

1312_sl_vs_nepal.jpg

சிப்ரின் ஷ்ரேஸ்தா (18), சஹில் பட்டேல் (12), நிராஜ் குமார் யாதவ் (10) ஆகிய மூவரே இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றனர்.

நேபாள இன்னிங்ஸில் இலங்கை கொடுத்த 19 உதிரிகளே அதிகப்பட்ச எண்ணிக்கையாக இருந்தது.

பந்துவீச்சில் செத்மிக்க செனவிரட்ன 25 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களை வீழ்த்தினார்.

ரசித் நிம்சார, விக்னேஸ்வரன் ஆகாஷ், துல்னித் சிகேரா, சாமிக்க ஹீனட்டிகல ஆகியோர் தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.

1312__dimantha_and_kavija.jpg

83 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய 19 வயதுக்குட்பட்ட இலங்கை அணி 14.5 ஓவர்களில் 2 விக்கெட்களை இழந்து 84 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

திமன்னத மஹாவித்தான 39 ஓட்டங்களுடனும் காவிஜ கமகே 24 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர். அவர்கள் இருவரும் பிரிக்கப்படாத 3ஆவது விக்கெட்டில் 59 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.

விரான் சமுதித்த 10 ஓட்டங்களைப் பெற்றார்.

ஆட்டநாயகன்: செத்மிக்க செனவிரட்ன.

https://www.virakesari.lk/article/233277

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

19இன் கீழ் ஆசிய கிண்ண லீக் சுற்றில் பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா முதல் அணியாக அரை இறுதியில் விளையாட தகுதிபெற்றது

Published By: Digital Desk 3

15 Dec, 2025 | 01:19 PM

image

(நெவில் அன்தனி)

ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்றுவரும் 8 அணிகளுக்கு இடையிலான 19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண 50 ஓவர் கிரிக்கெட் தொடரில் இந்தியா முதலாவது அணியாக அரை இறுதியில் விளையாட தகுதிபெற்றுக்கொண்டது.

பாகிஸ்தானுக்கு எதிராக துபாய் ஐசிசி பயிற்சியக மைதானத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (14) நடைபெற்ற ஏ குழு போட்டியில் கனிஷ்க் சௌஹானின் சகலதுறை ஆட்டத்தின் உதவியுடன் இந்தியா 90 ஓட்டங்களால் வெற்றிபெற்றதன் மூலம் அரை இறுதியில் விளையாடுவதை உறுதி செய்து கொண்டது.

ஐக்கிய அரபு இராச்சியத்தை தனது ஆரம்பப் போட்டியில் வெற்றிகொண்ட இந்தியா, 4 புள்ளிகளுடன் அணிகள் நிலையில் முதலாம் இடத்தில் இருக்கிறது.

பாகிஸ்தானும் ஐக்கிய அரபு இராச்சியமும் தலா ஒரு வெற்றியுடன் 2 புள்ளிகளைப் பெற்றுள்ளன.

இந்திய - பாகிஸ்தான் போட்டி

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நடைபெற்ற போட்டியில் இந்தியா இலகுவாக 90 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

முதலில் துடுப்பெடுத்தாடிய 19 வயதுக்குட்பட்ட இந்திய அணி 46.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 240 ஓட்டங்களைப் பெற்றது.

இளம் அதிரடி நட்சத்திரம் வைபவ் சூரியவன்ஷி இப் போட்டியில் வெறும் 5 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.

ஆரோன் ஜோரஜ், அயுஷ் மாத்ரே (38) ஆகிய இருவரும் 2ஆவது விக்கெட்டில் 49 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு தெம்பூட்டினர்.

1412_aaron_george.png

இதனைத் தொடர்ந்து 3 விக்கெட்கள் சீரான இடைவெளியில் சரிந்தன. (113 - 4 விக்.)

எனினும் ஆரோன் ஜோர்ஜ், கனிஷ்க் சௌஹான் ஆகிய இருவரும் 5ஆவது விக்கெட்டில் 60 ஒட்டங்களைப் பகிர்ந்து அணியை ஓரளவு பலமான நிலையில் இட்டனர்.

ஆரோன் ஜோர்ஜ் 85 ஓட்டங்களையும் கனிஷ்க் சௌஹான் 46 ஓட்டங்களையும் பெற்றனர்.

1412_mhd_sayyam.png

பந்துவீச்சில் அப்துல் ஷபிக் 42 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் மொஹம்மத் சய்யாம் 67 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் நிக்காப் ஷபிக் 38 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் 41.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 150 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தொல்வி அடைந்தது.

ஹுசெய்பா அஹ்சான் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி 9 பவுண்டறிகள் 2 சிக்ஸ்களுடன் 70 ஓட்டங்களைப் பெற்றார்.

அவரை விட அணித் தலைவர் பர்ஹான் ஸஹூர் (23), உஸ்மான் கான் (16) ஆகிய இருவரே 10 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர்.

1412_deepesh_devendran.png

பந்துவீச்சில் தீப்பேஷ் தேவேந்த்ரன் 16 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கனிஷ்க் சௌஹான் 33 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

ஆட்டநாயகன்: கனிஷ்க சௌஹான்

https://www.virakesari.lk/article/233398

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மலேசியாவை வெற்றி கொண்டதன் மூலம் ஐக்கிய அரபு இராச்சியத்தின் அரை இறுதி வாய்ப்பு உயிர் பெற்றுள்ளது

Published By: Digital Desk 3

15 Dec, 2025 | 01:29 PM

image

(நெவில் அன்தனி)

ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்றுவரும் 19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண 50 ஓவர் கிரிக்கெட் தொடரில் ஏ குழுவில் இடம்பெறும் வரவேற்பு நாடான ஐக்கிய அரபு இராச்சியத்தின் அரை இறுதி வாய்ப்பு உயிர் பெற்றுள்ளது.

மலேசியாவுக்கு எதிராக துபாய் தி செவன்ஸ் விளையாட்டரங்கில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (14) நடைபெற்ற போட்டியில் அயான் மிஸ்பா குவித்த அபார சதத்தின் உதவியுடன் ஐக்கிய அரபு இராச்சியம் 78 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.

பாகிஸ்தானுக்கு எதிராக நாளை நடைபெறவுள்ள தீர்மானம் மிக்க போட்டியில் ஐக்கிய அரபு இராச்சியம் வெற்றிபெற்றால் அரை இறுதியில் விளையாட தகுதிபெறும். பாகிஸ்தான் வெற்றபெற்றால் அவ்வணி அரை இறுதிக்குள் நுழையும்.

சீரற்ற காலநிலையால் ஆரம்பம் தாமதித்ததால் அணிக்கு 47 ஓவர்களாக மட்டுப்படுத்தப்பட்ட போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய 19 வயதுக்குட்பட்ட ஐக்கிய அரபு இராச்சிய அணி 47 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 298 ஓட்டங்களைக் குவித்தது.

அயான் மிஸ்பா மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 9 பவுண்டறிகள், 7 சிக்ஸ்களுடன் 163 ஓட்டங்களைக் குவித்தார்.

இதனிடையே அணித் தலைவர் யாயின் கிரான் ராயுடன் ஆரம்ப விக்கெட்டில் 87 ஓட்டங்களையும் முஹம்மத் ரயானுடன் 2ஆவது விக்கெட்டில் 98 ஓட்டங்களையும் ப்ரித்வி மதுவுடன் 4ஆவது விக்கெட்டில் 86 ஓட்டங்களையும் அயான் மிஸ்பா பகிர்ந்து அணியைப் பலப்படுத்தினார்.

யாயின் கிரான் ராய் 44 ஓட்டங்களையும் முஹம்மத் ரயான் 48 ஓட்டங்களையும் ப்ரித்வி மது 20 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் முஹம்மத் அக்ரம் 62 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஜாஷ்வின் கிரிஷ்ணமூர்த்தி 63 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய 19 வயதுக்குட்பட்ட மலேசியா ஓரளவு திறமையை வெளிப்படுத்தி 47 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 220 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

இதில் முஹம்மத் ஆலிப் 54 ஓட்டங்களையும் மொஹம்மத் ஹைரில் 49 ஓட்டங்களையும் அணித் தலைவர் டியாஸ் பட்ரோ, ஹம்ஸா பங்கி ஆகிய இருவரும் தலா 25 ஓட்டங்களையும் முஹம்மத் அக்ரம் 21 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்தவீச்சில் முஹம்மத் பாஸில் ஆசிம் 28 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் அலி அஸ்கர் 36 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

https://www.virakesari.lk/article/233400

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

19இன் கீழ் ஆசிய கிண்ணம்: ஆப்கானிஸ்தானை கடைசி ஓவரில் வெற்றிகொண்டு அரை இறுதி வாய்ப்பை உறுதிசெய்தது இலங்கை

Published By: Vishnu

15 Dec, 2025 | 10:01 PM

image

(நெவில் அன்தனி)

துபாய், ஐசிசி பயிற்சியக மைதானத்தில் இன்று திங்கட்கிழமை (15) நடைபெற்ற மிகவும் பரபரப்பான 19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண பி குழு போட்டியில் ஆப்கானிஸ்தானை கடைசி ஓவரில் 2 விக்கெட்களால் வெற்றிகொண்ட இலங்கை, அரை இறுதியில் விளையாட தகுதிபெற்றது.

Chamika_Heenatigala.jpg

விரான் சமுதித்த  குவித்த அரைச் சதம், சாமிக்க ஹீனட்டிகலவின் சகலதுறை ஆட்டம் என்பன இலங்கையை வெற்றி அடையச் செய்தன.

19 வயதுக்குட்பட்ட ஆப்கானிஸ்தான் அணியினால் நிர்ணயிக்கப்பட்ட 236 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய 19 வயதுக்குட்பட்ட இலங்கை அணி 49.2 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 238 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

திமன்த மஹாவித்தான (27), விரான் சமுதித்த ஆகிய இருவரும் 9.3 ஓவர்களில் 55 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறப்பான ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.

ஆனால், மஹாவித்தான, கித்ம வித்தானபத்திரன (4) ஆகிய இருவரும் 5 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர்.

Viran_Chamuditha_.jpg

அதன் பின்னர் விரான் சமதித்த, கவிஜ கமகே ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் 60 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு நம்பிக்கையை ஊட்டினர்.

கவிஜ கமகே 34 ஓட்டங்களையும் விரான் வித்தானபத்திரன 62 ஓட்டங்களையும் பெற்று சீரான இடைவெளியில் ஆட்டம் இழந்தனர்.

19 வயதுக்குட்பட்ட இலங்கை அணி 38ஆவது ஓவரில் 4 விக்கெட்களை இழந்து 170 ஓட்டங்களைப் பெற்று சிறப்பான நிலையில் இருந்தது.

ஆனால், அணித் தலைவர் விமத் தின்சார (15), ஆதம் ஹில்மி (3), துனித் சிகேரா (22), செத்மிக்க செனவிரத்ன (1) ஆகிய நால்வரும் 47 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்ததால் இலங்கை இளையோர் அணி பெரும் நெருக்கடியை எதிர்கொண்டது. (217 - 8 விக்.)

எனினும் விரான் சமுதித்த, ரசித் நிம்சார ஆகிய இருவரும் பிரிக்கப்படாத 9ஆவது விக்கெட்டில் 21 ஓட்டங்களைப் பகிர்ந்து தமது அணியின் வெற்றியையும் அரை இறுதி வாய்ப்பையும் உறுதி செய்தனர்.

விரான் சமுதித்த 51 ஓட்டங்களுடனும் ரசித் நிம்சார 6 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.

பந்துவீச்சில் நூரிஸ்தானி ஓமர்ஸாய் 52 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய 19 வயதுக்குட்பட்ட ஆப்கானிஸ்தான் அணி 49.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 235 ஓட்டங்களைப் பெற்றது.

ஆப்கானிஸ்தான் இளையோர் அணி 42 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்களை இழந்து 208 ஓட்டங்களைப் பெற்று வலுவான நிலையில் இருந்ததால் அதன் மொத்த எண்ணிக்கை 240 ஓட்டங்களை எட்டும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், அதன் கடைசி 5 விக்கெட்கள் 27 ஓட்டங்களுக்கு சரிந்தன.

துடுப்பாட்டத்தில் ஒஸ்மான் சதாத் 52 ஓட்டங்களையும் பைசால் ஷினோஸதா 39 ஓட்டங்களையும் அஸிஸுல்லா மியாக்கில் 31 ஓட்டங்களையும் நூரிஸ்தான் ஓமர்ஸாய் 29 ஓட்டங்களையும் உஸைருல்லா நியாஸாய், அணித் தலைவர் மஹ்பூப் கான் ஆகிய இருவரும் தலா 25 ஓட்டங்களையும் பெற்றனர்.

பைசால் ஷினோஸதாவுடன் 2ஆவது விக்கெட்டில் 79 ஓட்டங்களையும் உஸைருல்லா நியாஸாயுடன் 3ஆவது விக்கெட்டில் 51 ஓட்டங்களையும் ஒஸ்மான் சதாத் பகிர்ந்ததாலேயே ஆப்கானிஸ்தான் இளையோர் அணி நல்ல நிலையை அடைந்தது.

பந்துவீச்சில் துனித் சிகேரா 33 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் செத்மிக்க செனவிரத்ன 49 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் சாமிக்க ஹீனட்டிகல 33 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ரசித் நிம்சார 42 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

ஆட்டநாயகன்: சாமிக்க ஹீனட்டிகல

https://www.virakesari.lk/article/233455

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

19இன் கீழ் ஆசிய கிண்ணம்: நேபாளத்தை இலகுவாக வீழ்த்தி அரை இறுதிக்குள் நுழைந்தது பங்களாதேஷ்

Published By: Vishnu

16 Dec, 2025 | 03:17 AM

image

(நெவில் அன்தனி)

துபாய், தி செவன்ஸ் மைதானத்தில் இன்று திங்கட்கிழமை (15) நடைபெற்ற ஆசிய கிண்ண பி குழு போட்டியில் நேபாளத்தை மிக இலகுவாக 7 விக்கெட்களால் வெற்றி கொண்ட பங்களாதேஷ் அரை இறுதியில் விளையாட தகுதிபெற்றது.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய 19 வயதுக்குட்பட்ட  நேபாள அணி 31.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 130 ஓட்டங்களைப் பெற்றது.

இதில் அபிஷேக் திவாரி 30 ஓட்டங்களையும் அஷிஸ் லூஹர் 23  ஓட்டங்களையும் பெற்றனர்.

உதிரிகளாக 23 ஓட்டங்கள் மொத்த எண்ணிக்கைக்கு சேர்ந்தது.

பந்துவீச்சில் மொஹம்மத் சோபுஜ் 27 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஷாஹ்ரியர் அஹ்மத் 10 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் அஸிஸுல் ஹக்கிம் 18 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் சாத் இஸ்லாம் 32 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய 19 வயதுக்குட்பட்ட பங்களாதேஷ் அணி 24.5 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 135 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

பங்களாதேஷின் ஆரம்பம் சிறப்பாக அமையவில்லை. அதன் முதல் இரண்டு விக்கெட்கள் 29 ஓட்டங்களுக்கு வீழந்தன.

எனினும், ஸவாத் அப்ரார், கலாம் சித்திக்கி ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் 92 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியின் வெற்றியை இலகுபடுத்தினர்.

கலாம் சித்திக்கி 34 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார்.

ஸவாத் அப்ரார் 7 பவுண்டறிகள், 3 சிக்ஸ்கள் அடங்கலாக 70 ஓட்டங்களுடனும் ரிஸான் ஹொசெய்ன் 12 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.

ஆட்டநாயகன்: ஸவாத் அப்ரார்.

https://www.virakesari.lk/article/233457

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

19இன் கீழ் ஆசிய கிண்ண தனிநபருக்கான அதிகூடிய எண்ணிக்கை சாதனையை இந்திய வீரர் அபிக்யான் சமப்படுத்தினார்

16 Dec, 2025 | 05:02 PM

image

(நெவில் அன்தனி)

ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்றுவரும் 19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற மலேசியாவுக்கு எதிரான போட்டியில் இந்திய மத்திய வரிசை வீரர் அபிக்யான் அபிஷேக் குண்டு ஆட்டம் இழக்காமல் 209 ஓட்டங்களைக் குவித்து, தனிநபருக்கான ஆசிய கிண்ண துடுப்பாட்ட சாதனையை சமப்படுத்தினார்.

கோலாலம்பூரில் 13 வருடங்களுக்கு முன்னர் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட்டில் கத்தாருக்கு எதிரான போட்டியில் பங்களாதேஷ் வீரர் சௌம்யா சர்க்கார் 209 ஓட்டங்களைக் குவித்து தனிநபருக்கான அதிகூடிய எண்ணிக்கை சாதனையை நிலைநாட்டியிருந்தார்.

அத்துடன் 19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ணத்தில் இரட்டைச் சதம் குவித்த முதலாவது வீரர் என்ற சாதனையையும் சர்க்கார் நிலைநாட்டியிருந்தார்.

அவரது சாதனையையே 17 வயதுடைய அபிக்யான் அபிஷேக் குண்டு இன்று சமப்படுத்தினார்.

125 பந்துகளை எதிர்கொண்ட அபிக்யான் அபிஷேக் குண்டு 17 பவுண்டறிகளையும் 9 சிக்ஸ்களையும் குண்டுமாரி பொழிவதுபோல் விளாசித் தள்ளினார்.

அவரது இரட்டைச் சத உதவியுடன் 19 வயதுக்குட்பட்ட இந்திய அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 408 ஓட்டங்களைக் குவித்தது.

அத்தடன் அப் போட்டியில் அபிஷேக் குண்டு 3ஆவது விக்கெட்டில் வேதாந்த் த்ரிவேதியுடன் 212 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை மிகவும் பலமான நிலையில் இட்டார்.

தொடர்ந்து கனிஷ்க் சௌஹானுடன் 6ஆவது விக்கெட்டில் மேலும் 87 ஓட்டங்களை அபிஷேக் குண்டு பகிர்ந்தார்.

அதிரடிக்கு பெயர்பெற்ற இளம் புயல் வைபவ் சூரியவன்ஷி 50 ஓட்டங்களையும் வேதாந்த் த்ரிவேதி 90 ஓட்டங்களையும் பெற்றனர்.

இப் போட்டியில் இந்தியா குவித்த 408 ஓட்டங்களானது 19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட்டில் பதிவான இரண்டாவது அதிகூடிய மொத்த எண்ணிக்கையாகும்.

நான்கு தினங்களுக்கு முன்னர் ஐக்கிய இராச்சியத்துக்கு எதிராக இந்தியா 6 விக்கெட்களை இழந்து குவித்த 433 ஓட்டங்களே 19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட்டில் பெறப்பட்ட அதிகூடிய மொத்த எண்ணிக்கையாகும்.

பந்துவீச்சில் மொஹம்மத் அக்ரம் 83 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

409 ஓட்டங்கள் என்ற நினைத்துப்பார்க்க முடியாத இமாலய வெற்றி இலக்கை நோக்கி மலேசியா துடுப்பெடுத்தாடி வருகிறது.

https://www.virakesari.lk/article/233564

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

19இன் கீழ் ஆசிய கிண்ணம்: மலேசியாவை துவம்சம் செய்து தோல்வி அடையாத அணியாக அரை இறுதிக்குள் நுழைந்தது இந்தியா

Published By: Vishnu

17 Dec, 2025 | 01:10 AM

image

(நெவில் அன்தனி)

துபாய், தி செவன்ஸ் மைதானத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (15) நடைபெற்ற ஆசிய கிண்ண ஏ குழு போட்டியில் மலேசியாவை துவம்சம் செய்து 315 ஓட்டங்களால் அமோக வெற்றியீட்டிய இந்தியா, தோல்வி அடையாத அணியாக அரை இறுதிக்குள் நுழைந்தது.

அபிக்யான் அபிஷேக் குண்டு குவித்த  ஆட்டம் இழக்காத இரட்டைச் சதம், வேதாந்த் த்ரிவேதி பெற்ற அரைச் சதம், தீப்பேஷ் தேவேந்திரன் பதிவுசெய்த 5 விக்கெட் குவியல் என்பன இந்தியாவின் வெற்றியை இலகுவாக்கின.

1512_abigyan_abishek_kundu.png

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட 19 வயதுக்குட்பட்ட இந்திய அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 408 ஓட்டங்களைக் குவித்தது.

அபிக்யான் அபிஷேக் குண்டு ஆட்டம் இழக்காமல் 208 ஓட்டங்களையும் வேதாந்த் த்ரிவேதி 90 ஓட்டங்களையும் வைபவ் சூரியவன்ஷி 50 ஓட்டங்களையும் பெற்றனர்.

1612_muhammed_akram.png

பந்துவீச்சில் முஹம்மத் அக்ரம் 89 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களை வீழ்த்தினார்.

409 ஓட்டங்கள் என்ற இமாலய வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மலேசியா 32.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 93 ஓட்டங்களுக்கு சுருண்டது.

மத்திய வரிசையில் ஹம்ஸா பங்கி 35 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றார்.

பந்துவீச்சில் தீப்பேஷ் தேவேந்த்ரன் 22 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களையும் உதாவ் மோகன் 24 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

ஆட்டநாயகன்: அபிக்யான் அபிஷேக் குண்டு

virakesari.lk/article/233584#google_vignette

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

19இன் கீழ் ஆசிய கிண்ணம்: ஆப்கானிஸ்தானுக்கு ஆறுதல் வெற்றி

17 Dec, 2025 | 06:02 PM

image

(நெவில் அன்தனி)

ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்றுவரும் 19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தான் ஆறுதல் வெற்றி ஒன்றை பெற்றுக்கொண்டது.

19 வயதுக்குட்பட்ட நேபாள அணிக்கு எதிராக துபாய், தி செவன்ஸ் மைதானத்தில் புதன்கிழமை (17) நடைபெற்ற பி குழு போட்டியில் 6 விக்கெட்களால் ஆப்கானிஸ்தான் வெற்றிபெற்றது.

1712_afghan_vs_nepal__2___1_.jpg

பங்களாதேஷ், இலங்கை அணிகளிடம் தோல்வி அடைந்த ஆப்கானிஸ்தான் இன்றைய ஆறுதல் வெற்றியுடன் நாடு திரும்பவுள்ளது.

இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட 19 வயதுக்குட்பட்ட நேபாள அணி 46.4 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 124 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

துடுப்பாட்டத்தில் தில்சாத் அலி 32 ஓட்டங்களையும் சாந்தன் ராம் 27 ஓட்டங்களையும் அபிஷேக் திவாரி 20 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் ஸய்துல்லா ஷஹீன் 19 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் அப்துல் அஸிஸ் 20 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் நூரிஸ்தானி ஓமர்ஸாய் 26 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வாஹிதுல்லா ஸத்ரான் 35 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

1712_afghan_beat_nepal.jpg

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய 19 வயதுக்குட்பட்ட ஆப்கானிஸ்தான் அணி 26.5 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 125 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

உஸைருல்லா நியாஸாய் மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 61 ஓட்டங்களைப் பெற்று வெற்றியை இலகுவாக்கினார்.

ஒஸ்மான் சதாத் 28 ஓட்டங்களைப் பெற்றார்.

பந்துவீச்சில் அபிஷேக் திவாரி 21 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

https://www.virakesari.lk/article/233682

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பங்களாதேஷிடம் இலங்கை தோல்வி; அரை இறுதிகள்: இந்தியா - இலங்கை, பங்களாதேஷ் - பாகிஸ்தான்

17 Dec, 2025 | 06:57 PM

image

(நெவில் அன்தனி)

ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்றுவரும் 19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் பி குழுவில் இடம்பெறும் பங்களாதேஷ் தோல்வி அடையாத இரண்டாவது அணியாக அரை இறுதியில் விளையாட தகுதிபெற்றது.

19 வயதுக்குட்பட்ட இலங்கை அணிக்கு எதிராக துபாய் ஐசிசி பயிற்சியக மைதானத்தில் இன்று புதன்கிழமை (17) நடைபெற்ற பி குழுவுக்கான கடைசிப் போட்டியில் 19 வயதுக்குட்பட்ட பங்களாதேஷ் அணி 39 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

இந்த சுற்றுப் போட்டியில் இலங்கை அடைந்த முதலாவது தோல்வி இதுவாகும்.

இந்த போட்டி முடிவுடன் பி குழுவில் முதல் இடத்தைப் பெற்ற பங்களாதேஷ் ஏ குழுவில் இரண்டாம் இடத்தைப் பெற்ற பாகிஸ்தானை முதலாவது அரை இறுதிப் போட்டியில் எதிர்த்தாடும்.

பி குழுவில் இரண்டாம் இடத்தைப் பெற்ற இலங்கை  ஏ குழுவில் தோல்வி அடையாமல் முதல் இடத்தைப் பெற்ற இந்தியாவை இரண்டாவது அரை இறுதியில் சந்திக்கும்.

1712_zawad_abrar.png

இன்று நடைபெற்ற போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட 19 வயதுக்குட்பட்ட பங்களாதேஷ் அணி முன்வரிசை வீரர்களின் சிறந்த பங்களிப்புடன் 46.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 225 ஓட்டங்களைப் பெற்றது.

ஆரம்ப வீரர் ஸவாத் அப்ரார் 49 ஓட்டங்களையும் ரிபாத் பெக் 36 ஓட்டங்களையும் கலாம் சிதிக்கி 32 ஓட்டங்களையும் பரீத் ஹசன் 29 ஓட்டங்களையும் பெற்றனர்.

ஸவாத் அப்ரார், ரபாத் பெக் ஆகிய இருவரும் 84 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.

தொடர்ந்து அஸிஸுல் ஹக்கிம், கலாம் சிதிக்கி ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் 53 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.

1712_kavija_gamage.jpg

பந்துவீச்சில் கவிஜ கமகே 38 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் விரான் சமுதித்த 19 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ரசித் நிம்சார 57 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

இன்றைய போட்டியில் விக்னேஸ்வரன் ஆகாஷுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய 19 வயதுக்குட்பட்ட இலங்கை அணி 49.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 186 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

ஆதம் ஹில்மி, ரசித் நிம்சார ஆகிய இருவரும் 9ஆவது விக்கெட்டில் பகிர்ந்த 56 ஓட்டங்கள் இலங்கை இளையோர் அணியை படுதோல்வியிலிருந்து காப்பாற்றியது.

துடுப்பாட்டத்தில் சாமிக்க ஹீனட்டிகல 41 ஓட்டங்களையும் ஆதம் ஹில்மி 39 ஓட்டங்களையும் அணித் தலைவர் விமத் டின்சார 17 ஓட்டங்களையும் பெற்றனர்.

1712_iqbal_hossain_emon.png

பந்துவீச்சில் ஷஹாரியார் அஹ்மத் 27 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் இக்பால் ஹொசெய்ன் ஏமொன் 37 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் சமியுன் பசிர் 27 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

ஆட்டநாயகன்: இக்பால் ஹொசெய்ன் ஏமொன்

https://www.virakesari.lk/article/233684#google_vignette

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

19இன் கீழ் ஆசிய கிண்ண அரை இறுதியில் வலிமைமிக்க இந்திய அணியின சவாலை முறியடிக்குமா இலங்கை?

Published By: Vishnu

18 Dec, 2025 | 11:22 PM

image

(நெவில் அன்தனி)

துபாயில் நடைபெற்றுவரும் 19 வயதுக்குட்பட்ட ஆண்கள் ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் முதலாவது அரை இறுதிப் போட்டியில் வலிமைமிக்க இந்திய இளையோர் அணியிடம் இலங்கை இளையோர் அணி பலத்த சவாலை எதிர்கொள்ளும் என்பதில் சந்தேகம் இல்லை.

இப் போட்டி துபாய் ஐசிசி பயிற்சியக மைதானத்தில் வெள்ளிக்கிழமை  காலை நடைபெறவுள்ளது.

பி குழுவில் இடம்பெற்ற இலங்கை மாறுபாடான பெறுபேறுகளுடனும் ஏ குழுவில் இடம்பெற்ற இந்தியா தோல்வி அடையாத அணியாகவும் அரை இறுதியில் ஒன்றையொன்று எதிர்த்தாடவுள்ளன.

under_19_sl_players__2_.jpg

பி குழுவில் நேபாளத்தை இலகுவாக வெற்றி கொண்ட இலங்கை,  ஆப்கானிஸ்தானுடனான போட்டியில் கடைசி ஓவர்வரை போராடியே வெற்றிபெற்றது. கடைசிப் போட்டியில் பங்களாதேஷிடம் அடைந்த தோல்வியினால் இலங்கை நெருக்கடிக்குள்ளானது.

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் மாத்திரமே இலங்கை 200க்கும் மேற்பட்ட ஓட்டங்களைப் பெற்றது.

பங்களாதேஷுடனான போட்டியில் இலங்கை துடுப்பாட்ட வீரர்கள் கவனக்குறைவால் விக்கெட்களை தாரைவார்த்தனர்.

இலங்கை  துடுப்பாட்டத்தில் திமன்த மஹாவித்தான (124 ஓட்டங்கள்), சாமிக்க ஹீனட்டிகல (ஒரு அரைச் சதத்துடன் 128 ஓட்டங்கள்), விரான் சமுதித்த (ஒரு அரைச் சதத்துடன் 113 ஓட்டங்கள்) ஆகிய மூவரே துடுப்பாட்டத்தில் ஓரளவு பிரகாசித்தனர்.

கவிஜ கமகே சகலதுறைகளிலும் பிரகாசித்து இலங்கையின் முன்னணி வீரராகத் திகழ்கிறார்.

அவர் 3 போட்டிகளில் 95 ஓட்டங்களைப் பெற்றதுடன் 4 விக்கெட்களையும் கைப்பற்றி தனது சகலதுறை ஆற்றலை வெளிப்படுத்தியுள்ளார்.

வேகப்பந்துவீச்சாளர் செத்மிக்க செனவிரத்ன 8 விக்கெட்களையும் துல்னித் சிகேரா, ரசித் நிம்சார ஆகிய இருவரும் தலா 5 விக்கெட்களையும் கைப்பற்றி பந்துவீச்சில் திறமையை வெளிப்படுத்தியுள்ளனர்.

under_19_india_team__2_.jpg

இந்திய அணி சகலதுறைகளிலும் அபரிமிதமாக பிரகாசித்து ஐக்கிய அரபு இராச்சியத்தையும் மலேசியாவையும் மிக இலவாக வெற்றிகொண்டது.

அந்த இரண்டு போட்டிகளிலும் 400க்கும் மேற்பட்ட ஓட்டங்களைக் குவித்த இந்தியா, இடையில் நடைபெற்ற பாகிஸ்தானுடனான போட்டியில் கடும் சவாலுக்கு மத்தியில் வெற்றிபெற்றது. அப் போட்டியில் இந்தியா 240 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

இந்திய அணியில் அபிக்யான் அபிஷேக் குண்டு (ஆட்டம் இழக்காத ஓர் இரட்டைச் சதத்துடன் 263 ஓட்டங்கள்), வைபவ் சூரியவன்ஷி (ஒரு சதத்துடன் 226 ஓட்டங்கள்), ஆரோன் ஜோர்ஜ் (ஒரு அரைச் சதத்துடன் 154 ஓட்டங்கள்), வேதாந்த் த்ரிவேதி (ஒரு அரைச் சதத்துடன் 135 ஓட்டங்கள்) ஆகியோர் துடுப்பாட்டத்தில் திறமையை வெளிப்படுத்தியுள்ளனர்.

பந்துவீச்சில் தமிழ்நாடு வீரர் தீப்பேஷ் தேவேந்த்ரா (10 விக்கெட்கள்), கனிஷ்க் சௌஹான், கிஷான் சிங் (இருவரும் தலா 4 விக்கெட்கள்) ஆகியோர் பந்துவீச்சில் பிரகாசித்துள்ளனர்.

இரண்டு அணிகளினதும் ஆற்றல் வெளிப்பாடுகளை ஒப்பிடும்போது இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக காணப்படுகிறது. ஒருவேளை இலங்கை அசாத்திய திறமையை வெளிப்படுத்தினால் அவ்வணிக்கு சாதகமான பெறுபேறு கிடைக்க வாய்ப்புள்ளது.

19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட் வரலாற்றில் 8 தடவைகள் சம்பயினான இந்தியாவுடன் 11 போட்டிகளில் விளையாடியுள்ள இலங்கை ஒரே ஒரு வெற்றியை ஈட்டியுள்ளது. 5 இறுதிப் போட்டிகள் உட்பட 9 போட்டிகளில் இந்தியாவிடம் இலங்கை தோல்வி அடைந்தது.

ஒரு போட்டி சீரற்ற கால நிலையால் முற்றாக கைவிடப்பட்டது.

பங்களாதேஷ் எதிர் பாகிஸ்தான்

துபாய் தி செவன்ஸ் மைதானத்தில் வெள்ளிக்கிழமை காலை நடைபெறவுள்ள இரண்டாவது அரை இறுதிப் போட்டியில் பங்களாதேஷை பாகிஸ்தான் எதிர்த்தாடவுள்ளது.

பி குழுவில் ஆப்கானிஸ்தான், நேபாளம், இலங்கை ஆகிய அணிகளுக்கு எதிரான 3 போட்டிகளிலும் வெற்றியீட்டிய பங்களாதேஷ் தோல்வி அடையாத அணியாக அரை இறுதிக்கு முன்னேறியது.

மறு பக்கத்தில் மலேசியாவை மிக இலகுவாக வெற்றிகொண்ட பாகிஸ்தான், இரண்டாவது போட்டியில் இந்தியாவிடம் தோல்வி அடைந்தது. கடைசிப் போட்டியில் ஐக்கிய அரபு இராச்சியத்தை வெற்றிகொண்டதன் மூலம் பாகிஸ்தான் அரை இறுதியில் விளையாட தகுதிபெற்றது.

இந்த இரண்டு அணிகளும் சமபலம் கொண்டவையாகத் தென்படுவதால் இந்த அரை இறுதிப் போட்டி கடைசிவரை பரபரப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

https://www.virakesari.lk/article/233773

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

19இன் கீழ் ஆசிய கிண்ண இறுதிப் போட்டியில் இந்தியா - பாகிஸ்தான்

Published By: Vishnu

19 Dec, 2025 | 07:58 PM

image

(நெவில் அன்தனி)

ஐக்கிய அரபு இராச்சியத்தின் துபாய் விளையாட்டுத்துறை நகரில் நடைபெற்றுவரும் 19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண 50 ஓவர் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் விளையாட  முன்னாள் சம்பியன்களான இந்தியாவும் பாகிஸ்தானும் தகுதிபெற்றுள்ளன.

துபாய் ஐசிசி பயிற்சியக மைதானத்தில் இன்று நடைபெற்ற 20 ஓவர்களாக மட்டுப்படுத்தபட்ட முதலாவது அரை இறுதியில் 19 வயதுக்குட்பட்ட இலங்கை அணியை 8 விக்கெட்களால் 19 வயதுக்குட்பட்ட இந்திய அணி வெற்றிகொண்டது.

ind_u19_malhotra_and_george.jpg

அப் போட்டியில் ஆரோன் ஜோர்ஜ், விஹான் மல்ஹோத்ரா ஆகிய இருவரும் குவித்த அரைச் சதங்கள் இந்தியாவின் வெற்றியை உறுதி செய்தன.

துபாய் தி செவன்ஸ் மைதானத்தில்  27 ஓவர்களாக மட்டுப்படுத்தப்பட்ட இரண்டாவது அரை இறுதிப் போட்டியில் 19 வயதுக்குட்பட்ட பங்களாதேஷ் அணியை 8 விக்கெட்களால் 19 வயதுக்குட்பட்ட பாகிஸ்தான் அணி வெற்றிகொண்டது.

u_19_abdul_subhan.jpg

இந்தப் போட்டியில் அப்துல் சுப்ஹானின் 4 விக்கெட் குவியல், சமீர் மின்ஹாஸ் குவித்த அரைச் சதம் என்பன பாகிஸ்தானை இலகுவாக வெற்றிபெறச் செய்தன.

சீரற்ற காலநிலை காரணமாக இந்த இரண்டு போட்டிகளிலும் ஓவர்கள் குறைக்கப்பட்டு நடத்தப்பட்டன.

இலங்கை - இந்திய அரை இறுதி

முதலாவது அரை இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த இலங்கை இளையோர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 138 ஓட்டங்களைப் பெற்றது.

இப் போட்டி 20 ஓவர்களாக மட்டுப்படுத்தப்பட்டதால் அதிரடியைத் தவிர வேறு வழியில்லை என்பதை உணர்ந்த இலங்கை இளையோர் அணியினர் ஆரம்பத்திலிருந்தே ஓட்டங்களை வேகமாகக் குவித்த வண்ணம் இருந்தனர்.

துடுப்பாட்டத்தில் சாமிக்க ஹீனட்டிகல 42 ஓட்டங்களையும் அணித் தலைவர் விமத் தின்சார 32 ஓட்டங்களையும் செத்மிக்க செனவிரட்ன 30 ஓட்டங்களையும் விரான் சமுதித்த 19 ஓட்டங்களையும் பெற்றனர்.

u19_ind_beat_sl.jpg

பந்துவீச்சில் ஹெனில் பட்டேல் 31 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கனிஷ்க் சௌஹான் 36 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய  இந்திய   இளையோர் அணி  18 ஓவர்களில் 2 விக்கெட்களை இழந்து 139 ஓட்டங்களைப் பெற்று 8 விக்கெட்களால் வெற்றியீட்டியது.

இந்திய இளையோர் அணியின் ஆரம்பம் மோசமாக இருந்தது.

அதிரடி ஆட்டக்காரர்களான அணித் தலைவர் ஆயுஷ் மஹாத்ரே (7), வைபவ் சூரயவன்ஷி (9) ஆகிய இருவரையும் முதல் நான்கு ஓவர்களுக்குள் விமத் நிம்சார ஆட்டம் இழக்கச் செய்தார்.

ஆனால், ஆரோன் ஜோர்ஜ், விஹான் மல்ஹோத்ரா ஆகிய இருவரும் ஆரம்பத்தில் நிதானமாகவும் பின்னர் அதிரடியாகவும் துடுப்பெடுத்தாடி பிரிக்கப்படாத 3ஆவது விக்கெட்டில் 87 பந்துகளில் 114 ஓட்டங்களைப் பகிர்ந்து   இந்தியாவை வெற்றி அடையச் செய்தனர்.

விஹான் மல்ஹோத்ரா 61 ஓட்டங்களுடனும் ஆரோன் ஜோர்ஜ் 58 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.

பந்துவீச்சில் விமத் நிம்சார 31 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

பாகிஸ்தான் - பங்களாதேஷ் அரை இறுதி

இரண்டாவது அரை இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் 26.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 121 ஓட்டங்களைப் பெற்றது.

துடுப்பாட்டத்தில் சமியுன் பசிர் 33 ஓட்டங்களையும் அணித் தலைவர் அஸிஸுல் ஹக்கிம் 20 ஓட்டங்களையும் ரிபாத் பெக் 14 ஓட்டங்களையும் பெற்றனர். வேறு எவரும் 10 ஓட்டங்களைத் தொடவில்லை.

u_19_pak_bt_bang.jpg

பந்துவீச்சில் அப்துல் சுப்ஹான் ஒரு ஓட்டமற்ற ஓவர் உட்பட 6 ஓவர்களில் 20 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் ஹுசெய்பா அஹ்சான் 10 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் 16.3 ஓவர்களில் 2 விக்கெட்களை மாத்திரம் இழந்து 122 ஓட்டங்களைப் பெற்று 8 விக்கெட்களால் வெற்றியீட்டியது.

பாகிஸ்தானின் ஆரம்பம் சிறப்பாக அமையவில்லை. முதலாவது ஓவரிலேய ஹம்ஸா ஸஹூர் ஓட்டம் பெறாமல் ஆட்டம் இழந்தார். (1 - 1)

u19_sameer_minhas.jpg

ஆனால், மற்றைய ஆரம்ப வீரர் சமீர் மின்ஹாஸ், உஸ்மான் கான் (27) ஆகிய இருவரும் 2ஆவது விக்கெட்டில் 57 பந்துகளில் 85 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை பலமடையச் செய்தனர்.

தொடர்ந்து சமீர் மின்ஹாஸ், அஹ்மத் ஹூசெய்ன் ஆகிய இருவரும் 36 ஓட்டங்களைப் பகிர்ந்து வெற்றியை உறுதி செய்தனர்.

சமீர் மின்ஹாஸ் 69 ஓட்டங்களுடனும் அஹ்மத் ஹுசெய்ன் 11 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.

https://www.virakesari.lk/article/233875

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவை வீழ்த்தி 19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ணத்தை 13 வருடங்களின் பின்னர் சுவீகரித்தது பாகிஸ்தான்

Published By: Vishnu

21 Dec, 2025 | 08:29 PM

image

(நெவில் அன்தனி)

துபாய் ஐசிசி பயிற்சியக மைதானத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (21) நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்திய இளையோர் அணியை 191 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி கொண்ட பாகிஸ்தான் இளையோர் அணி 19 வயதுக்குட்பட்ட ஆண்கள் ஆசிய சம்பியன் பட்டத்தை 13 வருடங்களின் பின்னர் சுவீகரித்தது.

சமீர் மின்ஹாஸ் குவித்த பாகிஸ்தானுக்கான சாதனைமிகு அதிரடி சதம், அலி ராசா பதிவுசெய்த 4 விக்கெட் குவியல் என்பன பாகிஸ்தான் இளையோர் அணியை இலகுவாக வெற்றி பெறச்செய்தன.

இப் போட்டியில் சில தனிப்பட்ட மைல்கல் சாதனைகளை நிலைநாட்டிய மின்ஹாஸ் தனி ஒருவராக 172 ஓட்டங்களைக் குவித்தார். அவர் பெற்ற எண்ணிக்கையைக் கூட இந்தியாவின் மொத்த எண்ணிக்கை நெருங்கவில்லை.

2112_sameer_minhas_100.jpg

இம் முறை 19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட்டில் தோல்வி அடையாத அணியாக இந்தியாவும் ஒரு தோல்வியுடன் பாகிஸ்தானும் இறுதிப் போட்டியில் ஒன்றையொன்று எதிர்த்தாடின.

முதல் சுற்றில் ஏ குழுவில் இந்தியாவிடம் தோல்வி அடைந்த பாகிஸ்தான் இறுதிப் போட்டியில் ஈட்டிய வெற்றியுடன் அந்த தோல்வியை நிவர்த்திசெய்துகொண்டது.

இந்தப் போட்டிக்கான நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய இளையோர் அணித் தலைவர் ஆயுஷ் மஹாத்ரே களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தார்.

இந்தத் தீர்மானம் எவ்வளவு பெரிய தவறு என்பதை இந்திய  இளையோர்   அணியினருக்கு புரிந்துகொள்ள வெகுநேரம் செல்லவில்லை.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட பாகிஸ்தான் இளையோர் அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 347 ஓட்டங்களைக் குவித்தது.

2112_sameer_minhas_man_ot_the_match_and_

ஆரம்ப விரர் சமீர் மின்ஹாஸ் அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி 113 பந்துகளை எதிர்கொண்டு 17 பவுண்டறிகள், 9 சிக்ஸ்களை விளாசி 172 ஓட்டங்களை குவித்தார்.

19 வயதுக்குட்பட்டவர்களுக்கான சர்வதேச போட்டி ஒன்றில் பாகிஸ்தான் வீரர் ஒருவர் பெற்ற அதிகூடிய ஓட்டங்கள் இதுவாகும். இதற்கு முன்னர் ஷாஸெய்ப் கான் பெற்ற 159 ஓட்டங்களே பாகிஸ்தானின் முந்தைய தனிநபருக்கான அதிகூடிய எண்ணிக்கையாக இருந்தது.

அத்துடன் அவர் பெற்ற 172 ஓட்டங்களில் 122 ஓட்டங்கள் பவுண்டறிகள் மூலம் பெறப்பட்டது. பவுண்டறிளால் மட்டும் அதிகூடிய ஓட்டங்களைப் பெற்ற 19 வயதுக்குட்பட்ட பாகிஸ்தான் வீரர் என்ற சாதனையையும் சமீர் மின்ஹாஸ் நிலைநாட்டினார்.

இந்தப் போட்டியில் 35 ஓட்டங்களைப் பெற்ற உஸ்மான் கானுடன் 2ஆவது விக்கெட்டில் 92 ஓட்டங்களையும் 56 ஓட்டங்களைப் பெற்ற அஹ்மத் ஹுசெய்னுடன் 3ஆவது விக்கெட்டில் 137 ஓட்டங்களையும் சமீர் மின்ஹாஸ் பகிர்ந்து பாகிஸ்தான் இளையோர் அணியை பலமான நிலையில் இட்டார்.

பந்துவீச்சில் தீப்பேந்த்ரா 83 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கிலான் பட்டேல் 44 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஹெனில் பட்டேல் 62 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

பாகிஸ்தான் இளையோர் அணியினால் நிர்ணயிக்கப்பட்ட மிகவும் கடினமான 348 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடத்தாடிய இந்திய இளையோர் அணி 26.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 156 ஓட்டங்களை மாத்திரம் பெற்று படுதோல்வி அடைந்தது.

2112_pak_bowler_...jpg

2112_pak_bowler.jpg

இந்திய இளையோர் அணியில் இருவர் மாத்திரமே 20 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர்.

பின்வரிசை வீரர் தீப்பேஷ் தேவேந்த்ரன் 36 ஓட்டங்களையும் ஆரம்ப வீரர் வைபவ் சூரியவன்ஷி 26 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்தவீச்சில் அலி ராஸா 42 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் ஹுஸெய்பா அஹ்சான் 12 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் அப்துல் சுப்ஹான் 29 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் மொஹம்மத் சையாம் 38 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

ஆட்டநாயகன் மற்றும்  தொடர்நாயகன்: சமீர் மின்ஹாஸ்

https://www.virakesari.lk/article/234042

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவுக்கு எதிராக 172 ரன்கள்: பாகிஸ்தானின் இளம் கிரிக்கெட் வீரர் சமீர் மின்ஹாஸின் பின்னணி என்ன?

சமீர் மின்ஹாஸ், பாகிஸ்தான், அண்டர் 19 , ஆசியக் கோப்பை,

பட மூலாதாரம்,PCB

5 மணி நேரங்களுக்கு முன்னர்

ஞாயிற்றுக்கிழமை துபையில் நடைபெற்ற 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான ஆசியக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில், பாகிஸ்தான் அணி இந்தியாவை 191 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது.

பாகிஸ்தானின் இந்த வெற்றிக்கு நாயகனாக திகழ்ந்தவர் சமீர் மின்ஹாஸ்.

இறுதிப் போட்டியில் இந்தியாவை வீழ்த்திய பிறகு, பாகிஸ்தான் அண்டர்-19 கிரிக்கெட் அணி இஸ்லாமாபாத் சென்றடைந்தபோது, அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்க பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய அதிகாரிகள் மற்றும் பெருமளவிலான பொதுமக்கள் விமான நிலையத்தில் திரண்டிருந்தனர்.

இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான் பேட்டர் சமீர் மின்ஹாஸ் வெறும் 113 பந்துகளில் 172 ரன்கள் குவித்தார். ஆடுகளத்தில் நிலைத்து நின்று ஆடிய இந்த அதிரடி ஆட்டம், பஞ்சாப் மாகாணத்தின் முல்தான் நகரத்தைச் சேர்ந்த சமீர் மின்ஹாஸை பேசு பொருளாக மாற்றியுள்ளது.

பாகிஸ்தானின் தற்போதைய மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலருடன், அந்நாட்டுப் பிரதமர் மற்றும் அதிபரும் பாரம்பரிய போட்டியாளரான இந்தியாவை வீழ்த்துவதில் முக்கியப் பங்கு வகித்ததற்காக அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை பாகிஸ்தான் வசமானது

சமீபத்திய ஆண்டுகளில் பலமுறை இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் நேருக்கு நேர் மோதியபோது, இறுதியில் பாகிஸ்தான் ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஆனால் இந்த ஞாயிற்றுக்கிழமை பாகிஸ்தான் வசமானது.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான நேரடி மோதல்களின் கடந்த கால சாதனைகள் பாகிஸ்தான் ரசிகர்களின் இதயத் துடிப்பை அதிகரிக்கச் செய்வது வழக்கம். ஆனால் ஞாயிற்றுக்கிழமை நிலைமை முற்றிலும் வேறாக இருந்தது.

ஞாயிற்றுக்கிழமை, துபையில் நடைபெற்ற ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அண்டர்-19 ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் மிகச் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்தியாவை 191 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது.

இந்த இறுதிப் போட்டியில் இந்தியா டாஸ் வென்று முதலில் பந்துவீசத் தீர்மானித்தது, ஆனால் இந்த முடிவு பாகிஸ்தானுக்குச் சாதகமாக அமைந்தது. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான், இந்தியா வெற்றி பெற 348 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்தது.

பாகிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 347 ரன்கள் எடுத்தது.

சமீர் மின்ஹாஸின் அதிரடி ஆட்டம்

சமீர் மின்ஹாஸ், பாகிஸ்தான், அண்டர் 19 , ஆசியக் கோப்பை

பட மூலாதாரம்,PCB

படக்குறிப்பு,இஸ்லாமாபாத் விமான நிலையத்தில் பாகிஸ்தான் அண்டர்-19 அணிக்கு வரவேற்பு.

பாகிஸ்தான் தரப்பில் தொடக்க ஆட்டக்காரர் சமீர் மின்ஹாஸ் அபாரமாக பேட்டிங் செய்து 17 பவுண்டரிகள் மற்றும் 9 சிக்சர்களுடன் 113 பந்துகளில் 172 ரன்கள் எடுத்தார். சமீர் மின்ஹாஸ் தனது சதத்தை வெறும் 71 பந்துகளில் பூர்த்தி செய்தார்.

இறுதிப் போட்டியின் ஆட்ட நாயகனான சமீர் மின்ஹாஸ், இந்தத் தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரராகவும் திகழ்ந்தார்.

பாகிஸ்தான் தரப்பில் சமீரைத் தவிர, அகமது ஹுசைன் 72 பந்துகளில் 56 ரன்கள் எடுத்தார். உஸ்மான் கான் 35 ரன்களும், கேப்டன் ஃபர்ஹான் யூசுப் 19 ரன்களும், ஹம்சா ஜுஹூர் 18 ரன்களும் எடுத்தனர். முகமது சியாம் 13 ரன்களுடனும், நகாப் ஷஃபிக் 12 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

பாகிஸ்தானின் முதல் விக்கெட் 31 ரன்கள் எடுத்திருந்தபோது நான்காவது ஓவரில் விழுந்தது, தொடக்க ஆட்டக்காரர் ஹம்சா ஜுஹூர் 18 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இதன் பிறகு சமீர் மின்ஹாஸுடன் இணைந்த உஸ்மான் கான் 17-வது ஓவர் வரை ஒரு முனையைத் தக்கவைத்துக் கொண்டார், மற்றொரு முனையில் சமீர் மின்ஹாஸ் தனது அதிரடி ஆட்டத்தைத் தொடர்ந்தார்.

17-வது ஓவரில் உஸ்மான் கானை கிலன் படேல் ஆட்டமிழக்கச் செய்தார். இந்தியா தரப்பில் தீபேஷ் தேவேந்திரன் மூன்று விக்கெட்டுகளையும், கிலன் படேல் மற்றும் ஹெனில் படேல் தலா இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

சமீர் மின்ஹாஸ் யார்?

பாகிஸ்தான் இந்தியாவை வீழ்த்தி 19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசியக் கோப்பையை வென்றது. ஆனால் இந்த போட்டியில் பாகிஸ்தானின் மலை போன்ற ஸ்கோருக்கு காரணமாக இருந்த அந்த இளம் வீரருக்கு நீண்ட இன்னிங்ஸ் விளையாடுவதில் தனி ஆர்வம் உண்டு.

தெற்கு பஞ்சாபின் முல்தான் நகரைச் சேர்ந்த சமீர் மின்ஹாஸ் பெரிய இன்னிங்ஸ் விளையாடி அணிக்கு வலுவான தொடக்கத்தை அளிப்பது இது முதல் முறையல்ல.

இதே தொடரின் இரண்டாவது போட்டியில் (பாகிஸ்தானின் முதல் ஆட்டம்), மலேசியாவிற்கு எதிராக அவர் ஆட்டமிழக்காமல் 177 ரன்கள் எடுத்திருந்தார்.

மலேசியாவிற்கு எதிரான அந்த இன்னிங்ஸில் அவர் 11 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்சர்களை விளாசினார்.

வெறும் 19 வயது மற்றும் 19 நாட்களில் இரண்டு பெரிய இன்னிங்ஸ்களை விளையாடிய சமீர் மின்ஹாஸ், டிசம்பர் 2, 2006 அன்று முல்தானில் பிறந்தார்.

வலது கை தொடக்க ஆட்டக்காரரான சமீர் மின்ஹாஸ், ஏற்கனவே ஒரு சர்வதேச கிரிக்கெட் வீரரைக் கொண்ட குடும்பத்தைச் சேர்ந்தவர்.

அவர் பாகிஸ்தானுக்காக நான்கு சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடிய அராஃபத் மின்ஹாஸின் தம்பி ஆவார். அராஃபத் 2023 மற்றும் 2024 ஆண்டுகளில் ஹாங்காங், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு எதிரான போட்டிகளில் விளையாடியிருந்தார்.

பாத்வே அமைப்பிலிருந்து உருவான வீரர்

சமீர் மின்ஹாஸ், பாகிஸ்தான், அண்டர் 19 , ஆசியக் கோப்பை

பட மூலாதாரம்,ACC

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் பாத்வே அமைப்பிலிருந்து வெளிவந்த இளம் வீரர்களில் சமீர் மின்ஹாஸும் ஒருவர்.

19 வயதுக்கு உட்பட்டோருக்கான பாகிஸ்தான் அணியில் இடம் பெறுவதற்கு முன்பு, அவர் முல்தான் மண்டல அண்டர்-13, தெற்கு பஞ்சாப் அண்டர்-16, முல்தான் அண்டர்-19 மற்றும் முல்தான் மண்டல அண்டர்-19 அணிகளில் இடம்பெற்றிருந்தார்.

கடந்த மாதம் வரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் இளைஞர் மேம்பாட்டுத் திட்டத்தின் தலைவராக இருந்த முன்னாள் கேப்டன் அசார் அலி, சமீர் மின்ஹாஸை எதிர்காலத்திற்கான ஒரு சிறந்த வீரர் என்று குறிப்பிட்டுள்ளார்.

பத்திரிகையாளர் உமைர் அல்வியிடம் பேசிய அசார் அலி, இந்த ஆண்டு முதன்முறையாக கராச்சியில் நடந்த பயிற்சி முகாமில் சமீர் மின்ஹாஸைப் பார்த்தபோதே தான் ஈர்க்கப்பட்டதாகக் கூறினார்.

அசார் அலியின் கூற்றுப்படி, "அவரது பேட்டிங் நுட்பம் மற்றும் ஷாட் தேர்வு மிகவும் சிறப்பாக இருந்தது. இதில் இன்னும் உழைத்தால், அவர் எதிர்காலத்தில் பாகிஸ்தானுக்கு ஒரு நல்ல வீரராகத் திகழ்வார்."

அசார் அலியின் கருத்துப்படி, சமீர் மின்ஹாஸின் வெற்றிக்கு பின்னால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் பாத்வே அமைப்பு உள்ளது, அதன் மூலமே அவர் முன்னுக்கு வந்தார்.

அவர் ஒவ்வொரு வயதுப் பிரிவு மட்டத்திலும் தொடர்ந்து சிறப்பாகச் செயல்பட்டார், அதன் காரணமாகவே உலகக் கோப்பை மற்றும் ஆசியக் கோப்பைக்கு முன்னதாக நடத்தப்பட்ட பயிற்சி முகாம்களில் அவர் சேர்க்கப்பட்டார்.

"நான்கு மாதங்களுக்கு முன்பு பயிற்சி முகாமில் சமீர் மின்ஹாஸ் கடுமையாக உழைத்தார், அதன் பலன் இன்று அனைவர் முன்னிலையிலும் உள்ளது. அவர் ஒரு சிறந்த டாப்-ஆர்டர் பேட்டர் மட்டுமல்ல, எதிர்காலத்தில் பாகிஸ்தானைப் பிரதிநிதித்துவப்படுத்தக்கூடிய ஒரு சிறந்த ஃபீல்டரும் கூட." என அசார் அலி தெரிவித்தார்.

ஆசியக் கோப்பையில் இரண்டு சதங்கள் அடித்த சமீர் மின்ஹாஸ், 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உள்நாட்டு தொடரிலும் அதிக ரன்கள் குவித்தவர் என்றும், அங்கு இரண்டு சதங்கள் அடித்துத் தேர்வாளர்களின் கவனத்தை ஈர்த்தார் என்றும் அசார் அலி கூறினார்.

அவரது கருத்துப்படி, மலேசியா அண்டர்-19 அணிக்கு எதிரான சமீரின் சதத்தை மறக்க முடியாது, மேலும் இந்தியாவிற்கு எதிரான நாக்-அவுட் போட்டியில் அவரது அதிரடியான அதேசமயம் பொறுப்பான பேட்டிங் அவரது திறமைக்கான வெளிப்படையான சான்றாகும்.

சமூக ஊடகங்களில் சமீர் மின்ஹாஸ் பற்றிய விவாதம்

சமூக ஊடகங்களிலும் சமீர் மின்ஹாஸ் பாராட்டு மழையில் நனைந்து வருகிறார்.

பாகிஸ்தான் தேசிய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் சாஹிப்சாதா ஃபர்ஹான், இந்தியாவிற்கு எதிரான இறுதிப் போட்டியில் சமீர் பேட்டிங் செய்தபோது எடுக்கப்பட்ட புகைப்படத்தைப் பகிர்ந்து, "சமீர் மின்ஹாஸ், என்ன ஒரு அற்புதமான வீரர்" என்று பதிவிட்டுள்ளார்.

பாகிஸ்தானின் முன்னாள் கேப்டன் ரஷித் லத்தீஃப் கூறுகையில், "சமீர் மின்ஹாஸ் அண்டர்-19 ஆசியக் கோப்பை தொடரில் தொடர்ந்து சிறப்பாகச் செயல்பட்டார். அவர் இந்தத் தொடரில் 471 ரன்கள் குவித்துள்ளார். என்ன ஒரு சிறப்பான ஆட்டம்," என்று பதிவிட்டுள்ளார்.

மற்றொரு எக்ஸ் பயனர், "இந்தியாவுடனான இறுதிப் போட்டியில் சமீரின் அபாரமான ஆட்டம். என்ன ஒரு அற்புதமான இளம் வீரர்" என்று எழுதியுள்ளார்.

ஷாகிர் அப்பாசி என்ற பயனர், "கவனமாகப் பாருங்கள்... சமீர் மின்ஹாஸின் கிளாஸ். என்ன ஒரு வீரர். என்ன ஒரு அற்புதமான இன்னிங்ஸ். இறுதிப் போட்டியில் 172 ரன்கள், அதுவும் இந்தியாவிற்கு எதிராக - இதை வார்த்தைகளால் விவரிப்பது கடினம்" என்று பதிவிட்டுள்ளார்.

ஹாரூன் என்ற பயனர், "சமீர் மின்ஹாஸ் ஒரு உண்மையான பேட்டர். அவர் சூழ்நிலையை நன்றாகப் புரிந்துகொண்டு அதைச் சரியாகப் பயன்படுத்தத் தெரிந்தவர். அவரிடம் வலுவான தடுப்பு ஆட்டம் உள்ளது மற்றும் பெரிய ஷாட்களையும் விளையாட முடியும். அவர் தனது செயல்பாட்டில் தொடர்ந்து கவனம் செலுத்துவார் என்று நம்புகிறேன்" என எழுதியுள்ளார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cpwk9xnwv9do

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.