Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மலையக மக்களின் காணி உரிமை: மலையகத்திலா அல்லது வடக்கு – கிழக்கிலா?

Veeragathy Thanabalasingham

December 23, 2025

605559826_10224987406747333_804467048616

Photo, Sakuna Miyasinadha Gamage

இயற்கையின் சீற்றம் அண்மையில் மலையகத்தில் ஏற்படுத்திய பேரழிவையடுத்து மலையக தமிழ் மக்களை குறிப்பாக, தோட்டத் தொழிலாளர்களை வடக்கு, கிழக்கு மாகாணங்களில் குடியேற வருமாறு தமிழ் அரசியல்வாதிகள் சிலர் விடுத்த அழைப்பு ஒரு  தீவிரமான விவாதத்தை மூளவைத்திருக்கிறது.

மலையகத்தில் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட ஒரு பகுதியில் தோட்டத் தொழிலாளர் குடும்பங்களைச் சந்தித்து அவர்களின் துனபங்களை கேட்டறிந்த  தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் அந்த மக்களைப் பாதுகாப்பான முறையில் வேறு இடங்களில் குடியேற்றுவது குறித்து பேசினார்.

மண்சரிவு ஆபத்து இல்லாத மலையகப் பகுதிகளில் அந்த மக்களை குடியேற்றுவதற்கான சாத்தியங்கள் குறித்து அரசாங்கத்துடன் பேசப்போவதாக கூறிய மனோ கணேசன் மலையகத்தில் போதியளவில் காணிகளைப் பெறமுடியாமல்போகும் பட்சத்தில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் குடியேறுவதற்கு முன்வருவீர்களா என்று அவர்களை நோக்கி கேள்வியெழுப்பினார். அங்கு நின்றவர்களில் பெரும்பாலானவர்கள் அதற்குத் தயாராக இருப்பதாகப் பதிலளித்தனர்.

இயற்கை அனர்த்தத்தினால் படுமோசமாக பாதிக்கப்பட்டு வீடு வாசல்களை இழந்து நிராதரவாக நின்ற அந்த மக்கள் உடனடியாக அவ்வாறு கூறுவது இயல்பானதே. ஆனால், அந்த ஒரு மக்கள் கூட்டத்தினரின் பதிலை மாத்திரம் அடிப்படையாக வைத்து மலையக மக்கள் தங்களது பாரம்பரியமான வாழ்வாதாரங்களளையும் வாழ்க்கை முறையையும் துறந்தெறிந்துவிட்டு பெருமளவில் வடக்கு, கிழக்கில் குடியேறுவதற்கு விரும்புகிறார்கள் என்று கருதமுடியாது.

பாதிக்கப்பட்ட மக்களுடனான மனோ கணேசனின் அந்தச் சந்திப்புக்கு ஊடகங்கள் பிரதானமாக, சமூக ஊடகங்கள் பெரும் முக்கியத்துவத்தை கொடுத்தன. அதையடுத்து இலங்கை தமிழரசு கட்சியின் பொதுச்செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் மலையக தமிழ் மக்கள் வடக்கு, கிழக்கில் தாங்களாக வந்து குடியேற விரும்பினால் அதை வரவேற்பதாகவும் அதற்கான உதவிகளைச் செய்யத் தயாராயிருப்பதாகவும் அறிவித்தார்.

அவரைத் தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனும் மலையகத்தில் பாதுகாப்பற்ற பகுதிகளில் வாழும் தமிழ் மக்களை கிழக்கில் குடியேறவருமாறு அழைத்தார். ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் (ஈ.பி.ஆர்.எல்.எவ்.) பொதுச்செயலாளர் சுரேஷ் பிரேமச்சந்திரனும் மலையக மக்கள் தமிழ்ப்பகுதிகளில் குடியேறுவதற்கு ஆதரவையும் உதவியையும் வழங்க வேண்டியது அவசியம் என்று வலியுறுத்தினார்.

மலையக தமிழ் மக்கள் இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டிருப்பது இதுதான் முதற்தடவை அல்ல. இலங்கையின் சனத்தொகையில் வேறு எந்த பிரிவினரை விடவும் மிகவும் பின்தங்கிய நிலையில் வாழ்ந்துவரும் தோட்டத்தொழிலாளர்கள் காலங்காலமாக மண்சரிவு போன்ற இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டு வந்திருக்கிறார்கள். ஆனால், அவர்களுக்குப் பாதுகாப்பான வாழ்வை உறுதிசெய்வதற்கு ஒருபோதுமே அரசாங்கங்கள் பயனுறுதியுடைய திட்டங்களை முன்னெடுத்ததில்லை.

அத்தகையதொரு சமூகம் பேரழிவை மீண்டும் சந்தித்து நிராதரவாக நிற்கும் இடர்மிகுந்த ஒரு கட்டத்தில் அவர்களுக்கு இந்த தமிழ் அரசியல்வாதிகள் ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தியதையும் வடக்கு, கிழக்கில் வந்து குடியேறுமாறு அழைப்பு விடுத்ததையும் நிச்சயம் வரவேற்க வேண்டும்.

திடீரென்று ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தை அடுத்து உருவான வேதனை மிகுந்த சூழ்நிலையில்  பாதுகாப்பாக வாழ்வதற்கு இடமில்லை என்று மலையக மக்கள் கூறும்போது அவர்களை வரவேற்க வேண்டியது தங்களது கடமை என்று கூறிய சுமந்திரன் காணிகளையும் வீடுகளையும் கொடுப்பது மாத்திரம் பிரயோசனமானதல்ல, அவர்களுக்கான வாழ்வாதாரங்களையும் உறுதிசெய்வது அவசியம் என்றும் குறிப்பிட்டார்.

அடுத்த கட்டமாக முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மனோ கணேசனுடன் தொடர்ந்து ஆராய்ந்து வருவதாகவும் மக்களை குடியேற்றும் இத்தகைய செயற்பாடுகள் குறித்து அரசாங்கத்துடனும் பேசவேண்டியிருக்கிறது என்றும் சுட்டிக் காட்டினார். அத்துடன், புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழ்ச் சமூகத்தைச் சேர்ந்த பலர் வடக்கு, கிழக்கில் தங்களது காணிகளை மலையக தமிழர்களுக்கு வழங்குவதற்கு முன்வருவதாக அறிவித்திருக்கிறார்கள் என்ற தகவலையும் சுமந்திரன் நேர்காணல் ஒன்றில் கூறியிருந்தார்.

எது எவ்வாறிருந்தாலும், மலையக தமிழ் மக்கள் குறிப்பாக தோட்டத் தொழிலாளர்கள் மீண்டும் இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்படாதிருப்பதை உறுதிசெய்வதற்கான திட்டங்கள் அவர்கள் பாரம்பரியமாக வாழ்ந்துவரும் பிராந்தியங்களிலேயே பிரதானமாக முன்னெடுக்கப்பட வேண்டும். படிப்படியாக பாதுகாப்பான பகுதிகளில் குடியமர்த்தும் பரந்தளவிலான திட்டம் ஒன்றின் கீழ் அவர்களை  சுயவிருப்பத்தின் பேரில் வடக்கு, கிழக்கிற்கு அனுப்புவதில் பிரச்சினை எதுவும் இல்லை. அத்தகையதொரு திட்டத்தை அரசாங்கத்தினால் மாத்திரமே முன்னெடுக்க முடியும்.

தேசிய மக்கள் சக்தி பெருந்தோட்டங்களில் வசிக்கும் தமிழ் மக்களின் காணி மற்றும் வீட்டுவசதி பிரச்சினைகள் குறித்து எத்தகைய நிலைப்பாட்டை கடந்த வருடத்தைய இரு தேசிய தேர்தல்களுக்கு முன்னதாக வெளிப்படுத்தியது என்பதை இந்தச் சந்தர்ப்பத்தில் நினைவுபடுத்துவது அவசியமாகும்.

மலையக தமிழ்ச் சமூகம் இலங்கைக்கு அழைத்துவரப்பட்டு 200 வருடங்கள் நிறைவடைந்த நிலையில், அவர்களின் உரிமைகள் தொடர்பில் தேசிய மக்கள் சக்தி 2023 அக்டோபர் 15ஆம் திகதி ஹட்டன் பிரகடனம் ஒன்றை வெளியிட்டது. அதில் காணி, வீட்டுப் பிரச்சினைகள் குறித்து பின்வருமாறு குறிப்பிடப்பட்டிருக்கிறது:

“பெருந்தோட்டங்களில் வசிக்கும் மக்கள் எதிர்நோக்கும் முக்கியமான பிரச்சினைகளில் ஒன்று வீடமைப்பு தொடர்பானதாகும். 2012/ 2013 சனத்தொகை, புள்ளிவிபரத் திணைக்களத்தின் அறிக்கையின் பிரகாரம் அவர்களில் 67.8 சதவீதமானவர்கள் இன்னமும் லயன் அறைகளிலேயே வாழ்கின்றனர். தேசிய மக்கள் சக்தி அந்த மக்களின் அபிவிருத்திக்கு உதவக்கூடிய வீடமைப்புத் திட்டம் ஒன்றின் மூலமாக அவர்களுக்குப் பொருத்தமான வீடுகளை வழங்கும்.

“பெரும்பாலான தோட்டத் தொழிலாளர் குடும்பங்கள் தங்களது பணத்தையும் உழைப்பையும் செலவிட்டு வீடுகளை நிர்மாணித்திருக்கின்ற போதிலும், காணிகளைப் பதிவுசெய்வதற்கான அங்கீகரிக்கப்பட்ட உறுதிப்பத்திரங்கள் இன்னமும் அவர்களிடம் கிடையாது. இந்தப் பிரச்சினைக்கு நியாயபூர்வமான தீர்வொன்று காணப்பட்டு அந்த மக்கள் தங்கள் வீடுகளில் தொடர்ந்தும் வசிப்பதற்கான  உரிமையை தேசிய மக்கள் சக்தி உறுதிசெய்யும். பெருந்தோட்டப் பகுதிகளில் பயிர் செய்யப்படாத பிரதேசங்களும் கைவிடப்பட்ட காணிகளும் மலையகத்தில் வேலையின்றி இருக்கும் இளைஞர்களின் வாழ்வாதாரங்களை மேம்படுத்துவதற்கு பயன்படுத்தப்படும்.”

ஹட்டன் பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டதன் பிரகாரம் மலையகத் தமிழ் மக்களின் அடையாளத்தையும் உரிமைகளையும் அங்கீகரித்து அவர்களின் காணி, வீடமைப்பு, கல்வி மற்றும் சுகாதாரம் போன்ற வசதிகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று 2024 ஜனாதிபதி தேர்தல் விஞ்ஞாபனத்திலும் தேசிய மக்கள் சக்தி உறுதியளித்தது.

ஆட்சியதிகாரத்துக்கு வந்தபிறகு கடந்துவிட்ட ஒரு வருடத்துக்கும் அதிகமான காலப் பகுதியில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மலையக மக்களுக்கு வழங்கிய இந்த வாக்குறுதியை  நிறைவேற்றுவதை நோக்கி எந்தளவுக்கு கவனம் செலுத்தியிருக்கிறது என்பது முக்கியமான ஒரு கேள்வி.

அண்மைய இயற்கை அனர்த்தத்தைத் தொடர்ந்து மலையக மக்களின் காணிப் பிரச்சினை மீது மீண்டும் கவனம் பெருமளவுக்கு திரும்பியிருக்கும் நிலையில், அந்த வாக்குறுதியை நிறைவேற்றுமாறு அரசாங்கத்தை  தமிழ்க் கட்சிகள் கோரவேண்டும். அது தொடர்பில் அரசாங்கத்துக்கு நெருக்குதலைக் கொடுப்பதற்கான இயக்கம் ஒன்றை முன்னெடுப்பதில் மலையக தமிழ்க் கட்சிகளுடன் வடக்கு, கிழக்கு தமிழ்க் கட்சிகளும் இணைந்து கொள்ள வேண்டும்.

மலையக மக்களை பாதுகாப்பான இடங்களில் குடியமர்த்துவது குறித்து ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் கவனத்துக்கு தான் கொண்டுவந்தபோது அவர் ‘காணி எங்கே இருக்கிறது?’ என்று தன்னிடம் கேட்டதாக  மனோ கணேசன் கூறியிருந்தார். காணி எங்கே இருக்கிறது என்று தெரியாமலா ஜனாதிபதி மலையக மக்களின் காணியுரிமைப் பிரச்சினையை தீர்த்து வைப்பதாக  வாக்குறுதியளித்தார் என்ற கேள்வியை கேட்காமல் இருக்க முடியவில்லை.

மலையக தமிழ் மக்கள் ஏற்கெனவே வடக்கில் குறிப்பாக, வன்னிப் பிராந்தியத்தில் குடியேறியிருக்கிறார்கள். கடந்த நூற்றாண்டின் பிற்பகுதியில் ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சிக்காலத்தில் தமிழர்களுக்கு எதிராக தொடர்ச்சியாக கட்டவிழ்த்துவிடப்பட்ட இன வன்செயல்களுக்குப் பிறகு பாதுகாப்புத்தேடி குறிப்பிட்ட எண்ணிக்கையான மலையக மக்கள் வடக்கிற்கு குடிபெயர்ந்தார்கள். அவர்களின் இன்றைய எண்ணிக்கை ஒரு இலட்சத்துக்கும் அதிகம் என்று கூறப்படுகிறது.

தற்போது மலையக மக்களை வடக்கு, கிழக்கிற்கு வருமாறு அழைக்கும்போது ஏற்கெனவே அங்கு குடியேறியவர்கள் எவ்வாறு வாழ்கிறார்கள் என்பதை பற்றிய ஒரு சரியான மதிப்பீடு அவசியம். வடக்கு, கிழக்கு மக்களுடன் சமத்துவமானவர்களாக வாழ்வாதாரங்களையும் ஏனைய வசதிகளையும் பாகுபாடின்றி அவர்களினால் பெறக்கூடியதாக இருக்கிறதா என்பதைப் பற்றி முதலில் சிந்திக்க வேண்டும்.

புலம்பெயர்ந்த தமிழர்களில் பலர் தங்களது காணிகளை மலையக மக்களுக்கு தருவதற்கு தயாராக இருப்பதாக சுமந்திரன் கூறுகிறார். அவர்களில் எத்தனை பேர் அந்த மக்களுக்குச் சொந்தமாக காணிகளைக் கொடுப்பார்கள்? அல்லது காணிகளை பராமரிப்பதற்காக அவர்களிடம் கொடுப்பார்களா? 2009 ஆண்டில் உள்நாட்டுப்போர் முடிவுக்கு வந்த பிறகு இலங்கைக்கு வந்த புலம்பெயர்ந்த தமிழர்களில் சிலர் தங்களது காணிகளை திருப்பித்தருமாறு கேட்ட அனுபவமும் மலையக மக்களுக்கு இருக்கிறது.

அதேவேளை, இன்றைய மலையக தமிழ் இளைய தலைமுறையினர் தங்களது சமூகத்தின் எதிர்காலம் குறித்து எவ்வாறு சிந்திக்கிறார்கள் என்பதும் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய ஒரு விடயமாகும். இந்திய வம்சாவளி தமிழர்கள் என்று இனிமேலும் அழைக்கப்படுவதை அவர்கள் விரும்பவில்லை. மலையகத் தமிழர்கள் என்ற தனியான இனத்துவ அடையாளம் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பது அவர்களது கோரிக்கையாக இருக்கிறது. மலையக தமிழ்தேசியம் என்ற கோட்பாடு பற்றி பேசுபவர்களும் இருக்கிறார்கள்.

உண்மையிலேயே, மலையகத் தமிழ் மக்களுக்கு இலங்கையின் ஏனைய தமிழ்பேசும் சமூகங்களை விடவும் தனித்துவமான பிரச்சினைகள், தனித்துவமான வாழ்வாதாரங்கள், வாழ்க்கை முறைகள் மற்றும் கலாசாரம் ஆகியவை இருக்கின்றன. வடக்கு, கிழக்கு தமிழர்கள் இன்று வெளிநாடுகளுக்கு பெரும் எண்ணிக்கையில் செல்வதைப் போன்று மலையகத் தமிழர்களும் இலங்கையின் வேறு பாகங்களுக்கு குடிபெயரத் தொடங்கினால் தங்களுக்கான உரிமைகளைக் கோரமுடியாதவாறு தனியான ஒரு சமூகம் என்ற அடையாளத்தை அவர்கள் இழந்து விடக்கூடிய ஆபத்து இருக்கிறது.

அவர்களை நாட்டின் எந்தப் பாகத்திலும் குடியேற்றக்கூடிய ஒரு நாடோடிக் கூட்டமாக நோக்கக்கூடாது. தோட்டத் தொழிலாளர்கள் இலங்கையின் தொழிலாளர் வர்க்கத்தின் பிரதானமான பிரிவினராவர். நாட்டின் பொருளாதார மேம்பாட்டுக்காக அந்த மக்கள் பல தலைமுறைகளாக உழைத்துவருகிறார்கள்.

அவர்களை இயற்கை அனர்த்த ஆபத்துக்கள் நிறைந்த பகுதிகளில் இருந்து வேறு இடங்களில் குடியமர்த்துவதாக இருந்தாலும் கூட, அதற்கான திட்டங்களை பிரதானமாக அவர்கள் பாரம்பரியமாக வாழ்ந்துவந்த பிராந்தியங்களுக்குள் முன்னெடுப்பதே பொருத்தமானதாகும்.

பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சிக்காலத்தில் அம்பாந்தோட்டையில் உதவி அரசாங்க அதிபராக பதவிவகித்த ஆங்கிலேயரான லெனார்ட் வூல்வ் இலங்கையில் சமஷ்டி ஆட்சிமுறையை ஏற்படுத்தவேண்டியதன் தேவை குறித்து 1936ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கு அனுப்பிய மகஜர் ஒன்றில் வடக்கு, கிழக்கு மாகாணங்கள், மலைநாட்டுச் சிங்களவர்கள், கரையோரச் சிங்களவர்களுக்கு என்று அலகுகளை விதந்துரைத்த அதேவேளை, தமிழ்த் தோட்டத் தொழிலாளர்கள் செறிந்து வாழ்கின்ற மலையகத்தின் பகுதிகளை ஒன்றிணைத்து தனியான அலகை ஏற்படுத்தலாம் என்று கூறினார்.

மலையகத் தமிழர்கள் மற்றைய சமூகங்களைப் போன்று தங்களுக்கென்று தனித்துவமான உரிமைகளைக்  கொண்டிருக்கிறார்கள் என்பதை ஒரு வெள்ளையரான  காலனித்துவ அதிகாரி 90 வருடங்களுக்கு முன்னரே கூறினார் என்பது கவனிக்கத்தக்கது.

ஆனால், சுதந்திரத்துக்குப் பின்னரான முதல் இலங்கை அரசாங்கம் மலையகத் தமிழர்களின் குடியுரிமையைப் பறித்து அவர்களை நாடற்றவர்களாக்கியது. அரைநூற்றாண்டுகால போராட்டங்களுக்குப் பிறகு குடியுரிமையையும் வாக்குரிமையையும் வென்றெடுத்த அந்த மக்கள் காணியுரிமைக்காகவும் ஏனைய வசதிகளுக்காகவும் எவ்வளவு காலத்துக்கு போராட வேண்டியிருக்குமோ யாரறிவார்?

வீரகத்தி தனபாலசிங்கம்

https://maatram.org/articles/12493

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, கிருபன் said:

மலையக மக்களின் காணி உரிமை: மலையகத்திலா அல்லது வடக்கு – கிழக்கிலா?

இரெண்டு இடத்திலும் இல்லை.

இதை மலையகத்தில் உறுதி செய்ய போராடவேண்டும் என்பது மடைமாற்றும் அல்லது தட்டி கழிக்கும் போக்கு.

அவர்களை வடக்கு கிழக்கில் குடியேற்றுவதே அவர்கள் எதிர்கால சந்ததியாவது காணி உரிமையை அடைய சாத்தியமான ஒரே வழி.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.