Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பட்ஜெட் 2026: எவையெல்லாம் விலை அதிகரிக்கும்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பட்ஜெட் 2026: எவையெல்லாம் விலை அதிகரிக்கும்?

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

பட மூலாதாரம்,Arvind Yadav/Hindustan Times via Getty Images

படக்குறிப்பு, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2026-27 நிதி ஆண்டிற்கான பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தார்."

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று 2026-27 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார்.

இந்த 2026 மத்திய பட்ஜெட்டில், ஒருபுறம் உற்பத்தி, ஏற்றுமதி மற்றும் பசுமை ஆற்றலுக்கு அரசு சலுகைகளை வழங்கியுள்ளது; மறுபுறம், பங்குச் சந்தை தொடர்பான முதலீடுகள் மற்றும் சில செயல்பாடுகளின் விலையை உயர்த்தியுள்ளது.

புற்றுநோய் சிகிச்சையில் பயன்படுத்தப்படும் 17 மருந்துகளுக்கான அடிப்படை சுங்க வரியை அரசு நீக்கியுள்ளது, இதன் மூலம் இந்திய சந்தையில் இந்த மருந்துகள் மலிவாகும்.

இது தவிர, 7 அரிய வகை நோய்களுக்கான சிகிச்சைக்காக வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மருந்துகள் மீதான வரியையும் அரசு நீக்கியுள்ளது.

அதுமட்டுமின்றி, மின்சார வாகனங்கள், சோலார் பேனல்கள் மற்றும் பசுமை ஆற்றல் உற்பத்தியுடன் தொடர்புடைய சில உபகரணங்கள் மீதான வரியையும் அரசு குறைத்துள்ளது.

இது சாதாரண நுகர்வோர், நோயாளிகள், முதலீட்டாளர்கள் மற்றும் தொழில்துறையினரிடையே நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும்.

இருப்பினும், பட்ஜெட்டில் வருமான வரி தொடர்பாக எந்த சலுகைகளும் வழங்கப்படவில்லை அல்லது பெரிய அறிவிப்புகள் எதுவும் வெளியிடப்படவில்லை.

'வளர்ச்சியடைந்த இந்தியா 2047' (Vikasit Bharat 2047) என்ற இலக்கை நோக்கி நகர்வதில் இந்த பட்ஜெட் மிகவும் முக்கியமானது என்று அரசு கூறியுள்ளது.

அமெரிக்கா விதித்துள்ள 50 சதவீத வரி விதிப்பை இந்தியா எதிர்கொண்டு வருவதும், உலகளாவிய நிச்சயமற்ற நிலையும் நிலவி வரும் வேளையில், இந்த பட்ஜெட் மீது மக்களின் உன்னிப்பான பார்வை இருந்தது.

மலிவான சிகிச்சை மற்றும் மருந்துகள்

மாத்திரைகள் புகைப்படம்

பட மூலாதாரம்,Getty Images

புற்றுநோய் போன்ற கொடிய நோய்களுடன் போராடும் நோயாளிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் சிகிச்சைச் செலவைக் குறைக்க மத்திய அரசு இந்த பட்ஜெட் மூலம் முயற்சி செய்துள்ளது.

பட்ஜெட்டில் புற்றுநோய் சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் 17 உயிர் காக்கும் மருந்துகள் மீதான அடிப்படை சுங்க வரி முற்றிலும் நீக்கப்பட்டுள்ளது.

இது தவிர, 7 அரிய நோய்களுக்கான சிகிச்சையில் பயன்படுத்தப்படும் இறக்குமதி செய்யப்படும் மருந்துகள் மற்றும் சிறப்பு உணவுகளுக்கும் வரி விதிக்கப்படாது.

உள்நாட்டு உற்பத்தி மற்றும் ஏற்றுமதிக்குச் சலுகை

காலணிகள்

பட மூலாதாரம்,Getty Images

மைக்ரோவேவ் அவன்களின் சில முக்கியமான பாகங்கள் மீதான சுங்க வரி குறைக்கப்பட்டுள்ளது. கடல் உணவு ஏற்றுமதிக்கான வரி இல்லாத உள்ளீட்டு வரம்பு 1 சதவீதத்திலிருந்து 3 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

தோல், செயற்கை காலணிகள் மற்றும் ஜவுளி ஏற்றுமதியிலும் வரி இல்லாத உள்ளீடுகள் மற்றும் கால வரம்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் இவை மலிவாக வாய்ப்புள்ளது.

அணுமின் திட்டங்களுக்காக இறக்குமதி செய்யப்படும் உபகரணங்களுக்கு 2035 வரை சுங்க வரி விதிக்கப்படாது.

மின்சார வாகனங்கள், சோலார் மற்றும் பசுமை ஆற்றல் விலை குறைய வாய்ப்பு

மின்சார வாகனங்கள் சார்ஜ் செய்யும் காட்சி

பட மூலாதாரம்,Getty Images

மின்சாரத்தில் இயங்கும் வாகனங்கள், சோலார் பேனல்கள் மற்றும் பசுமை ஆற்றல் உற்பத்தி மீதான வரியைக் குறைக்க அரசு முயற்சி செய்துள்ளது.

லித்தியம்-அயன் பேட்டரி சேமிப்பு அமைப்புகளுடன் தொடர்புடைய பல உள்ளீடுகளுக்குச் சுங்க வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

சோலார் பேனல்கள் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் சோலார் கிளாஸிற்கான மூலப்பொருளான 'சோடியம் ஆன்டிமோனேட்' மீதான வரியும் நீக்கப்பட்டுள்ளது.

இதனால் மின்சார வாகனங்கள், சோலார் ஆற்றல் மற்றும் பேட்டரி துறையில் உற்பத்தி செலவு குறையக்கூடும்.

எனினும், இந்த பலன் வாடிக்கையாளர்களைச் சென்றடையுமா என்பதை நிறுவனங்களின் கொள்கைகளே தீர்மானிக்கும்.

உண்மையில், இந்த மாற்றங்கள் உற்பத்திச் செலவைக் குறைக்கும்; ஆனால் வாடிக்கையாளர்களுக்கான விற்பனை விலை குறையுமா இல்லையா என்பதை நிறுவனங்களே தீர்மானிக்கும்.

தனிநபர் இறக்குமதி மற்றும் வெளிநாட்டுச் செலவுகளிலும் சலுகை

தனிப்பட்ட பயன்பாட்டிற்காக வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீதான சுங்க வரி 20 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

அதாவது வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மின்னணு பொருட்கள் அல்லது பரிசுப் பொருட்கள் முன்பை விட மலிவாகக் கிடைக்கலாம்.

வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணங்களுக்கான மூலத்தில் வசூலிக்கப்படும் வரி 5% அல்லது 20% என்பதில் இருந்து மாற்றப்பட்டு, வரம்பு ஏதுமின்றி நிலையான 2% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.

அதேபோல், வெளிநாட்டுப் படிப்பு மற்றும் சிகிச்சைக்காக அனுப்பப்படும் 10 லட்ச ரூபாய்க்கும் அதிகமான தொகைக்கான மூலத்தில் வசூலிக்கப்படும் வரி, இப்போது 5 சதவீதத்திற்குப் பதிலாக 2 சதவீதமாக இருக்கும்.

இது சுற்றுலா அல்லது படிப்பிற்காக வெளிநாடு செல்லும் இந்தியர்களுக்குச் சற்று நிம்மதியைத் தரும்.

விலை அதிகரித்த பொருட்கள்/சேவைகள் எவை?

பணம் கைகளில் வைத்திருக்கும் காட்சி

பட மூலாதாரம்,Getty Images

பங்குச் சந்தையில் வர்த்தகம் செய்வது முன்பை விடச் சற்று விலை உயர்ந்ததாக மாறும்.

ஃபியூச்சர்ஸ் வர்த்தகத்தில் செக்யூரிட்டி டிரான்சாக்ஷன் வரி (STT) 0.02 சதவீதத்திலிருந்து 0.05 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

ஆப்ஷன்ஸ் பிரீமியம் மீதான STT 0.1 சதவீதத்திலிருந்து 0.15 சதவீதமாகவும், ஆப்ஷன் எக்சர்சைஸ் மீதான வரி 0.125 சதவீதத்திலிருந்து 0.15 சதவீதமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் 'வருங்கால வர்த்தகம் மற்றும் விருப்ப வர்த்தகம் ' (ஃபியூச்சர்ஸ் மற்றும் ஆப்ஷன்ஸ்' ) பிரிவில் வர்த்தகம் செய்வது செலவு பிடிக்கும் ஒன்றாக இருக்கும்.

நிறுவனங்களின் பங்குகளைத் திரும்பப் பெறுவதில் (Share Buyback) நிறுவன நிறுவனர்கள் (Promoters) வரி விதிப்பு முறை கடுமையாக்கப்பட்டுள்ளது.

இனிமேல் நிறுவனர்கள்(Promoters) மூலதன ஆதாய வரியுடன் (Capital Gains Tax) கூடுதல் வரியையும் செலுத்த வேண்டியிருக்கும்; இது பங்குகளைத் திரும்பப் பெறுவதன் (Buyback) மூலம் லாபம் ஈட்டுவதைக் குறைவான ஈர்ப்புமிக்க ஒன்றாக மாற்றக்கூடும்."

பொட்டாசியம் ஹைட்ராக்சைடு போன்ற சில வேதிப்பொருட்கள் மற்றும் சில நுகர்வோர் பொருட்கள் மீது முன்பு வழங்கப்பட்ட சுங்க வரி விலக்கு நீக்கப்பட்டுள்ளது.

இவற்றின் மீது இப்போது 7.5 சதவீதம் வரை அடிப்படை சுங்க வரி விதிக்கப்படும், இது அவற்றின் இறக்குமதி செலவை அதிகரிக்கும்.

வேதிப்பொருட்களின் விலை உயர்வு, அவற்றைக் கொண்டு தயாரிக்கப்படும் பொருட்களின் விலையிலும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.

மொத்தத்தில், 2026 பட்ஜெட்டில் தாதுக்கள், ஸ்கிராப், மதுபானம் ஆகியவை விலை உயர்ந்துள்ளன.

தோல், துணி, செயற்கை காலணிகள், வெளிநாட்டுப் பயணம், 17 புற்றுநோய் மருந்துகள், மைக்ரோவேவ் அவன், விமானத் தயாரிப்பு தொடர்பான பொருட்கள், மின்சார வாகன பேட்டரி, சர்க்கரை நோய் மருந்துகள் போன்றவை மலிவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பட்ஜெட் பகுப்பாய்வின்படி, உற்பத்தி மற்றும் நுகர்வை மலிவாக்கும் அதே வேளையில், நிதிப் பரிவர்த்தனைகளை விலை உயர்த்தும் பாதையை அரசு தேர்ந்தெடுத்துள்ளது என்பது தெளிவாகிறது.

"செக்யூரிட்டிஸ் டிரான்சாக்ஷன் வரி உயர்த்தப்பட்டுள்ளதால் பட்ஜெட்டுக்குப் பிறகு விலை உயரக்கூடிய பொருட்கள்/நடவடிக்கைகளில் பங்குச் சந்தையின் ஃபியூச்சர்ஸ்-ஆப்ஷன்ஸ் வர்த்தகமும் அடங்கும். அதேசமயம் மதுபானம், ஸ்கிராப், தாதுக்கள் மற்றும் டெண்டு இலைகளின் விற்பனை மீது மூலத்தில் வசூலிக்கப்படும் வரி அதிகரிக்கப்பட்டுள்ளதால், இந்தத் துறைகளில் செலவுகள் உயரக்கூடும்.

பட்ஜெட்டுக்குப் பிறகு, மருத்துவச் செலவுகள் குறைவதற்கும், வெளிநாட்டுப் பயணம் மற்றும் கல்வி மீதான வரிகள் குறைவதற்கும், அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தப்படும் பல மின்னணு மற்றும் எரிசக்தி தொடர்பான பொருட்கள் மலிவாவதற்கும் வாய்ப்புகள் உள்ளன.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/clyg56y4m7do

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமனின் ஒரு அறிவிப்பால் ஆட்டம் கண்ட பங்குச்சந்தை

மத்திய பட்ஜெட், நிர்மலா சீதாராமன், பங்கு பரிவர்த்தனை வரி, எஸ்டிடி, வருமான வரி, பங்குச் சந்தைகள்

பட மூலாதாரம்,Getty Images

1 பிப்ரவரி 2026, 08:30 GMT

புதுப்பிக்கப்பட்டது 7 மணி நேரங்களுக்கு முன்னர்

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (பிப்ரவரி 1) நாடாளுமன்றத்தில் 2026-27 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் உரை பங்குச் சந்தையில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியது. நிதி அமைச்சரின் உரை முடிவடைவதற்குள், பங்குச் சந்தை குறிப்பிடத்தக்க வீழ்ச்சியைப் பதிவு செய்திருந்தது. ஒரு கட்டத்தில் சென்செக்ஸ் (Sensex) 2,000 புள்ளிகள் வரை சரிந்தது. நிஃப்டி 500 புள்ளிகள் வரை சரிந்தது.

பங்குச் சந்தையில் ஃபியூச்சர்ஸ் (Futures) வர்த்தகத்தின் மீதான பங்குப் பரிவர்த்தனை வரியை (STT) அதிகரிப்பதாக அறிவிக்கப்பட்டதே இந்த எதிர்வினைக்குக் காரணம் என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.

பொதுவாக ஞாயிற்றுக்கிழமைகளில் பங்குச் சந்தை இயங்குவது மிகவும் அரிதான ஒன்றாகும். பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதன் காரணமாக பங்குச்சந்தை இன்று இயங்கியது குறிப்பிடத்தக்கது.

ஆரோக்கியம் மற்றும் மருத்துவம் முதல் கல்வி மற்றும் பெண்கள் தொடர்பான பிரச்னைகள் வரை சில முக்கியமான அறிவிப்புகளை பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார். ஆனால் அவர் வெளியிட்ட ஓர் அறிவிப்பு பங்குச் சந்தைகளை ஆட்டம் காணச் செய்தது.

மத்திய பட்ஜெட்டில் அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பின்படி,

  • ஃபியூச்சர்ஸ் ((Futures) மீதான பங்குப் பரிவர்த்தனை வரி (STT) தற்போதைய 0.02 சதவீதத்தில் இருந்து 0.05 சதவீதமாக உயர்கிறது.

  • ஆப்ஷன்ஸ் பிரீமியம் (options premium) மற்றும் ஆப்ஷன்ஸ் செயல்படுத்தல் (exercise of options) ஆகிய இரண்டிற்குமான பங்குப் பரிவர்த்தனை வரி முறையே தற்போதைய 0.1 சதவீதம் மற்றும் 0.125 சதவீதத்தில் இருந்து 0.15 சதவீதமாக அதிகரிக்கப்படும்.

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் இந்த அறிவிப்புக்குப் பிறகு பங்குச் சந்தைகளில் கடுமையான சரிவு காணப்பட்டது.

எஸ்டிடி என்றால் என்ன?

மத்திய பட்ஜெட், நிர்மலா சீதாராமன், பங்கு பரிவர்த்தனை வரி, எஸ்டிடி, வருமான வரி, பங்குச் சந்தைகள்

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,கோப்புப் படம்

எஸ்டிடி என்பது 'பங்குப் பரிவர்த்தனை வரி' (Securities Transaction Tax) என்பதைக் குறிக்கும். இது பங்குகளை வாங்கும்போதும் விற்கும்போதும் விதிக்கப்படுகிறது.

ஃபியூச்சர்ஸ் அண்ட் ஆப்ஷன்ஸ் மீதான பங்குப் பரிவர்த்தனை வரியை இரண்டு மடங்குக்கும் மேலாக உயர்த்த முன்மொழியப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் தெரிவித்தார். எஃப் அண்ட் ஓ மீதான எஸ்டிடி 0.02% ஆக இருந்தது. இப்போது அதனை 0.05% ஆக உயர்த்த முன்மொழியப்பட்டுள்ளது.

எஸ்டிடி என்பது அடிப்படையில் மற்ற வரிகளிலிருந்து தனித்துவமானது.

வருவாய் ஈட்டவும், நிதிச் சந்தைகளில் நிலைத்தன்மையை அதிகரிக்கவும் பங்குப் பரிவர்த்தனைகள் மீது இந்த வரி விதிக்கப்படுகிறது.

இது முற்றிலும் மதிப்பீட்டின் அடிப்படையிலானது, அதாவது சம்பந்தப்பட்ட தனிநபர் பங்குப் பரிவர்த்தனையில் லாபம் ஈட்டினாரா இல்லையா என்பதைப் பொருட்படுத்தாமல், வர்த்தகம் செய்யப்படும் பங்குகளின் மதிப்பு எவ்வளவு இருக்கிறதோ, அவ்வளவு எஸ்டிடி வரி விதிக்கப்படும்.

வருமான வரி தொடர்பான அறிவிப்பு

மத்திய பட்ஜெட், நிர்மலா சீதாராமன், பங்கு பரிவர்த்தனை வரி, எஸ்டிடி, வருமான வரி, பங்குச் சந்தைகள்

பட மூலாதாரம்,SANSAD TV

படக்குறிப்பு,மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்

2026-27ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டைத் தாக்கல் செய்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1, 2026 முதல் நடைமுறைக்கு வரும் என்று தெரிவித்தார்.

  • வருமான வரித் தாக்கல் (ITR) தொடர்பான காலக்கெடு மற்றும் விதிகளிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

  • ஐடிஆர்-1 (ITR-1) மற்றும் ஐடிஆர்-2 (ITR-2) படிவங்களைத் தாக்கல் செய்பவர்கள் இனி ஜூலை 31 வரை வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்ய முடியும்.

  • இந்த முறை வருமான வரி வரம்புகளில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட புதிய வரி விதிப்பின் கீழ், ஆண்டுக்கு ரூ.12 லட்சம் வரையிலான வருமானத்திற்கு வரி கிடையாது. சம்பளதாரருக்கான நிலையான கழிவு ₹75,000 ஆகும். எனவே ரூ.12.75 லட்சம் வரையிலான வருமானத்திற்கு வரி இருக்காது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c14rdlv87npo

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ராணுவத்திற்கு ரூ.7.8 லட்சம் கோடி ஒதுக்கீடு: சீனா, பாகிஸ்தானுடன் ஒப்பிடுகையில் இது போதுமானதா?

மத்திய பட்ஜெட், ராணுவத்திற்கு நிதி ஒதுக்கீடு, இந்தியா - பாகிஸ்தான் - சீனா ராணுவ பட்ஜெட் ஓர் ஒப்பீடு

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,வரும் நிதியாண்டில் பாதுகாப்பு பட்ஜெட் ரூ. 7.84 லட்சம் கோடியாக உள்ளது.

கட்டுரை தகவல்

  • முகமது ஷாஹித்

  • பிபிசி செய்தியாளர்

  • 8 மணி நேரங்களுக்கு முன்னர்

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஞாயிற்றுக்கிழமை மக்களவையில் 2026-27 நிதி ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார். அதன்படி, பாதுகாப்பு அமைச்சகத்தின் பட்ஜெட் சுமார் 15 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு பாதுகாப்பு பட்ஜெட் ரூ.6,81,210 கோடியாக இருந்தது, அதே சமயம் வரும் பட்ஜெட்டில் இது ரூ.7,84,678 கோடியாக உள்ளது.

பாதுகாப்பு அமைச்சகம் 'எக்ஸ்' தளத்தில் பதிவிட்ட தகவல்படி, வரவிருக்கும் பட்ஜெட் உயர்வின் நோக்கம் நவீனமயமாக்கல், புதிய தொழில்நுட்பங்கள் கண்டுபிடிப்பு மற்றும் சிறந்த வளப் பயன்பாட்டிற்காக கொள்முதல் முறையை எளிதாக்குவதில் சிறப்பு கவனம் செலுத்துவதாகும்.

பாதுகாப்பு பட்ஜெட்டில் எந்தப் பிரிவில் எவ்வளவு தொகை?

மத்திய பட்ஜெட், ராணுவத்திற்கு நிதி ஒதுக்கீடு, இந்தியா - பாகிஸ்தான் - சீனா ராணுவ பட்ஜெட் ஓர் ஒப்பீடு

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,மூலதனச் செலவினத்திற்கான ஒதுக்கீடு கணிசமான உயர்த்தப்பட்டுள்ளது.

பாதுகாப்பு பட்ஜெட்டின் கீழ் வரும் 'மூலதனச் செலவினம்' (Capital Outlay) அதிகபட்சமாக 21.84 சதவீத உயர்வு கண்டுள்ளது. முன்னதாக இது ரூ.1.80 லட்சம் கோடியாக இருந்தது, தற்போது அது ரூ.2.19 லட்சம் கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களின் கொள்முதல் இந்த மூலதனச் செலவின ஒதுக்கீட்டிலிருந்தே செய்யப்படுகிறது.

இது தவிர, பாதுகாப்பு சேவைகள் (வருவாய்) பிரிவில் 17.24 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. முன்னதாக இது ரூ.3.11 லட்சம் கோடியாக இருந்தது, தற்போது ரூ.3.65 லட்சம் கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

பாதுகாப்பு சேவைகள் (வருவாய்) பிரிவில்தான் அன்றாட செயல்பாட்டுச் செலவுகள் பதிவு செய்யப்படுகின்றன. இதன் கீழ் பராமரிப்பு, எரிபொருள், பழுதுபார்ப்பு மற்றும் ஊதியம் போன்ற செலவுகள் அடங்கும்.

ஓய்வூதியம் 6.53 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது, இது தற்போது 1.71 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

பாதுகாப்பு பட்ஜெட்டில் இந்த 15 சதவீத உயர்வு, கடந்த ஆண்டு மே மாதம் அண்டை நாடான பாகிஸ்தானுடன் இந்தியாவிற்கு ராணுவ மோதல் ஏற்பட்ட ஒரு கால கட்டத்தில் வந்துள்ளது.

பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் நிர்வாகத்தில் உள்ள காஷ்மீரில் இருந்த பயங்கரவாத முகாம்களை தாக்கியதாக இந்தியா கூறியது. இந்த நடவடிக்கைக்கு இந்தியா 'ஆபரேஷன் சிந்துார்' என்று பெயரிட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ராணுவ மோதல் தொடங்கியது. பாகிஸ்தான் ராணுவத்தின் டிஜிஎம்ஓ விடுத்த போர் நிறுத்தக் கோரிக்கையைத் தொடர்ந்து ராணுவ மோதல்கள் நின்றதாக இந்திய ராணுவம் தெரிவித்திருந்தது.

அதன் பிறகு இந்தியா தனது பாதுகாப்பு பட்ஜெட்டை உயர்த்தக்கூடும் என்று ஊகிக்கப்பட்டது.

இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டிருப்பதை வரவேற்றுள்ளார்.

"பட்ஜெட் இந்தியாவின் பாதுகாப்புத் திறன்களை அதிகரிக்கும். பாதுகாப்புத் துறைக்கு 7.85 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ததற்காகப் பிரதமர் மோதிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்" என்று அவர் கூறியுள்ளார்.

பட்ஜெட்டில் 15 சதவீத உயர்வு அனைத்துத் தேவைகளையும் பூர்த்தி செய்கிறதா? என்கிற கேள்விக்குப் பாதுகாப்பு ஆய்வாளர் ராகுல் பேடி, புதிய பாதுகாப்பு பட்ஜெட்டை 'போதுமானதாக இல்லை' என்று கூறுகிறார்.

"பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கவலையளிக்கும் விஷயம் என்னவென்றால், ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருகிறது. இந்த வகையில் பார்த்தால், 15 சதவீத உயர்வு என்பது பூஜ்யமாகிவிடும். இதன் காரணமாக இதை ஒரு 'மாற்றமில்லாத பட்ஜெட்' என்றே அழைக்க வேண்டும்" என்கிறார்.

ராணுவத்தை நவீனப்படுத்த இது போதுமா?

மத்திய பட்ஜெட், ராணுவத்திற்கு நிதி ஒதுக்கீடு, இந்தியா - பாகிஸ்தான் - சீனா ராணுவ பட்ஜெட் ஓர் ஒப்பீடு

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,ராணுவத்தின் நவீனமயமாக்கல் குறித்து ராணுவத்தின் மூத்த அதிகாரிகள் ஏற்கனவே கருத்துத் தெரிவித்துள்ளனர்.

இந்தியா - பாகிஸ்தான் ராணுவ மோதலின் போது, டிரோன்கள் மற்றும் புதிய தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்ட ஒரு மாறுபட்ட போர் முறை காணப்பட்டது.

சிடிஎஸ் ஜெனரல் அனில் சவுகான் கடந்த மாதம் ஒரு நிகழ்ச்சியில் கூறுகையில், இந்திய ஆயுதப் படைகள் 'நெட்-சென்ட்ரிக்' (Net-centric) போரிலிருந்து 'டேட்டா-சென்ட்ரிக்' (Data-centric) போரை நோக்கி நகர்ந்து வருவதாகவும். இதில் எதிர்கால பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்ள செயற்கை நுண்ணறிவு (AI) ஒரு முக்கிய விஷயமாக உருவெடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.

மேம்பட்ட சென்சார் மற்றும் ஏஐ தொழில்நுட்பம் போர்க்களத்தில் முழுமையான வெளிப்படைத்தன்மையைக் கொண்டு வருவதால், எதிரிகளுக்கு அதிர்ச்சி கொடுப்பது கடினமாகி வருவதாகவும், வெற்றிக்குத் தொழில்நுட்ப மேன்மை அவசியம் என்றும் அவர் கூறினார்.

நவீன தொழில்நுட்பம் இருப்பது மட்டும் போதாது, ராணுவத் தலைமை அறிவுப்பூர்வமாக தயாராகவும் இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

அவர் இதேபோன்ற கருத்தை முன்பும் கூறியிருக்கிறார். இந்த பாதுகாப்பு பட்ஜெட் எதிர்காலத் தேவைகளைப் பூர்த்தி செய்கிறதா?

இந்தக் கேள்விக்கு ராகுல் பேடி பதிலளிக்கையில், இந்தியா 114 புதிய போர் விமானங்களையும் ஆறு நீர்மூழ்கிக் கப்பல்களையும் வாங்குவதற்கான ஒப்பந்தத்தைச் செய்ய வேண்டியுள்ளது என்றார்.

"ஜெர்மனியுடன் ஆறு நீர்மூழ்கிக் கப்பல்களுக்கான 10 பில்லியன் டாலர் ஒப்பந்தம் உள்ளது. மேலும் 114 புதிய போர் விமானங்கள் வாங்கப்படும், இந்த 30-35 பில்லியன் டாலர் ஒப்பந்தம் யாருடன் செய்யப்படும் என்பது இன்னும் முடிவாகவில்லை. இதற்கான பணம் ஒரே நேரத்தில் வழங்கப்படாது, ஆனால் அதற்கான பட்ஜெட் ஒதுக்கீடு மற்றும் பேரங்கள் நடத்தப்பட வேண்டும்." என்கிறார்.

"ஆபரேஷன் சிந்துாருக்குப் பிறகு, ராணுவத் தளபதி, சிடிஎஸ், பாதுகாப்பு அமைச்சர் மற்றும் பிரதமர் ஆகியோர் ராணுவம் தொழில்நுட்ப ரீதியாக நவீனப்படுத்தப்படும் என்று கூறி வருகின்றனர். இதற்குப் பணம் தேவைப்படுகிறது, பட்ஜெட்டில் 15 சதவீத உயர்வைக் கொண்டு இதைச் சாதிப்பது கடினமாகத் தெரிகிறது."

ஆங்கில இதழான 'தி வீக்' இதழின் மூத்த உதவி ஆசிரியர் சஞ்சீவ் குமார் பருவா அந்த இதழின் யூடியூப் சானலில் கூறுகையில், மத்திய பட்ஜெட்டில் பாதுகாப்பு அமைச்சகமே மிகப்பெரிய நிதி ஒதுக்கீட்டை பெறும் அமைச்சகமாகும். மொத்த பட்ஜெட்டில் இதன் பங்கு 14.68 சதவீதமாகும், இது கடந்த ஆண்டு 13.45 சதவீதமாக இருந்தது என்று கூறினார்.

"பாதுகாப்பு பட்ஜெட் குறித்த ஆலோசனைகள் ஒருபோதும் எளிதானவை அல்ல. பாதுகாப்பிற்காக ஒதுக்கப்பட வேண்டிய நிதியைப் பற்றி விவாதிக்கவும் கணக்கிடவும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அமர்ந்தபோது, பல காரணிகள் அவரை ஆழமாகச் சிந்திக்கத் தூண்டியிருக்க வேண்டும். உதாரணமாக, 'ஆபரேஷன் சிந்தூர்' மற்றும் அதற்குப் பிந்தைய நிலைமை, சீனாவின் வேகமான தொழில்நுட்ப மற்றும் ராணுவ முன்னேற்றம், இந்தியாவின் தற்சார்பு முன்னெடுப்புகள் மற்றும் அதிநவீன ராணுவ உபகரணங்களின் உடனடித் தேவை போன்றவை."

"2026-27-க்கான இந்த ஒதுக்கீடு கடந்த ஆண்டின் பாதுகாப்பு பட்ஜெட்டான ரூ. 6.81 லட்சம் கோடியை விட 15.27% அதிகமாகும். பாதுகாப்புச் செலவினங்கள் தொடர்ந்து அதிகரிக்கும் என்பதையும், ராணுவ நவீனமயமாக்கலின் வேகம் நீடிப்பது மட்டுமல்லாமல், மேலும் துரிதப்படுத்தப்படும் என்பதையும் இது குறிக்கிறது."

நவீனமயமாக்கலுக்குப் போர் விமானங்கள் அல்லது நீர்மூழ்கிக் கப்பல்கள் மட்டும் போதுமா? இதற்கு ராகுல் பேடி கூறுகையில், "இன்றைய காலத்தில் ஹெலிகாப்டர்கள், போர் விமானங்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்களுடன் டிரோன்கள் மற்றும் சைபர் போரின் முக்கியத்துவம் அதிகரித்துள்ளது. தற்போது நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் போர் விமானங்களுக்குத் தட்டுப்பாடு உள்ளது" என்கிறார்.

"இந்திய விமானப்படையில் 42 படையணிகளுக்கு (Squadron) அனுமதி உள்ளது, ஆனால் இன்று 29-30 படையணிகள் மட்டுமே உள்ளன. ஒரு படையணியில் சுமார் 20 விமானங்கள் இருக்கும், இதன் மூலம் 250-300 விமானங்கள் தேவை என்பதைப் புரிந்துகொள்ளலாம். நீர்மூழ்கிக் கப்பல்கள் பழையதாகிவிட்டன, அவற்றை மாற்ற வேண்டும். ஹெலிகாப்டர்கள் மற்றும் பயிற்சி விமானங்கள் பழையதாகிவிட்டன, அவற்றின் இடத்திற்குப் புதியவை வரவேண்டும்."

"நாம் இந்த வழியில் பார்த்தால், பல தேவைகள் உள்ளன மற்றும் இந்த அனைத்துத் தேவைகளையும் பூர்த்தி செய்ய, பட்ஜெட்டில் பணம் தேவைப்படுகிறது."

சீனா, பாகிஸ்தானுடன் ஒப்பிடுகையில் இந்திய பாதுகாப்பு பட்ஜெட் எங்கே உள்ளது?

மத்திய பட்ஜெட், ராணுவத்திற்கு நிதி ஒதுக்கீடு, இந்தியா - பாகிஸ்தான் - சீனா ராணுவ பட்ஜெட் ஓர் ஒப்பீடு

பட மூலாதாரம்,AFP

கடந்த ஆண்டு மே மாதம் இந்தியாவுடனான மோதலுக்குப் பிறகு, ஜூன் மாதம் பாகிஸ்தான் தனது 2025-26 நிதியாண்டுக்கான பாதுகாப்பு பட்ஜெட்டை 20.2 சதவீதம் உயர்த்தியது.

பாகிஸ்தானின் பாதுகாப்பு பட்ஜெட் 2122 பில்லியன் பாகிஸ்தான் ரூபாயிலிருந்து 2550 பில்லியனாக உயர்த்தப்பட்டது. இது பாகிஸ்தானின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வெறும் 1.97 சதவீதமாகும்.

சீனாவைப் பொறுத்தவரை, 2024-இல் பாதுகாப்பு பட்ஜெட் அதன் 18.74 டிரில்லியன் டாலர் ஜிடிபியில் 1.7 சதவீதமாக இருந்தது. வங்கதேசத்தின் பாதுகாப்பு பட்ஜெட் 2024-ல் அதன் 450 பில்லியன் டாலர் ஜிடிபியில் வெறும் 0.9 சதவீதமாக இருந்தது.

மறுபுறம், இந்தியாவின் மொத்த பாதுகாப்பு பட்ஜெட் அதன் மொத்த ஜிடிபியான 4 டிரில்லியன் டாலரில் 1.9 சதவீதமாகும்.

இந்தத் தரவுகளின்படி பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தின் பாதுகாப்பு பட்ஜெட் இந்தியாவை விட மிகச் சிறியது. ஆனால் இந்தியாவின் பாதுகாப்பு பட்ஜெட் சீனாவை விட மிகச் சிறியது.

மூன்று நாடுகளின் பட்ஜெட் ஒப்பீடு குறித்து ராகுல் பேடி கூறுகையில், "சீனாவின் பட்ஜெட் நம்மை விடப் பல மடங்கு அதிகமாக உள்ளது. பாகிஸ்தானின் பட்ஜெட்டைக் குறைத்து மதிப்பிடக் கூடாது, ஏனெனில் பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட இந்தியாவின் பல அண்டை நாடுகளுக்கும் சீனா உதவுகிறது. எனவே ஒப்பீடு செய்ய முடியாது" என்கிறார்.

இந்தியாவின் பாதுகாப்பு பட்ஜெட் அதன் தேவைகளுக்கு ஏற்ப எவ்வளவு இருக்க வேண்டும்? ராகுல் பேடி கூறுகையில், பாதுகாப்பு பட்ஜெட் மொத்த ஜிடிபியில் 3 சதவீதமாக இல்லாதவரை தேவைகளைப் பூர்த்தி செய்வதில் சிக்கல்கள் இருக்கும் என்கிறார்.

"1962-இல் சீனாவுடன் போர் ஏற்பட்டதிலிருந்து இன்று வரை மொத்த பாதுகாப்பு பட்ஜெட் ஜிடிபியின் இதே புள்ளிவிவரத்தைச் சுற்றியே உள்ளது. நமது நாட்டின் ஜிடிபி பல மடங்கு அதிகரித்துள்ளது. ஆனால் பாதுகாப்பு பட்ஜெட் 2 சதவீதத்தை ஒட்டியே உள்ளது. ராணுவத்தின் தேவை எப்போதும் மொத்த ஜிடிபியில் 3 சதவீதமாகவே இருந்து வருகிறது."

"நாம் ராணுவத்தை விரைவில் நவீனப்படுத்த வேண்டுமானால், பாதுகாப்பு பட்ஜெட்டை மொத்த ஜிடிபியில் 3 சதவீதமாக தொடர்ந்து வைத்திருக்க வேண்டும்."

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/crml9knp80ro

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, ஏராளன் said:

தனிப்பட்ட பயன்பாட்டிற்காக வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீதான சுங்க வரி 20 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க பொருட்களுக்கு வரி எப்படி?

ரம் மோடி மீது ரொம்ப கடுப்பாக உள்ளார் யுவர் ஆனர்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

'முழு நிதியும் செலவிடப்படாத திட்டங்களுக்கு மீண்டும் அதிக நிதி ஏன்?' - மத்திய பட்ஜெட் பற்றி நிபுணர்கள் அலசல்

மத்திய பட்ஜெட், நிதிநிலை அறிக்கை

பட மூலாதாரம்,SANSAD TV

கட்டுரை தகவல்

  • முரளிதரன் காசிவிஸ்வநாதன்

  • பிபிசி தமிழ்

  • 2 பிப்ரவரி 2026, 03:13 GMT

2026 - 27ஆம் ஆண்டிற்கான இந்தியாவின் நிதிநிலை அறிக்கை ஞாயிற்றுக்கிழமை நாடாளுமன்றத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். தொடர்ச்சியாக அவர் தாக்கல் செய்யும் ஒன்பதாவது நிதி நிலை அறிக்கை இது. பெரும் எதிர்பார்ப்புக்கு நடுவில் தாக்கல் செய்யப்பட்ட இந்த நிலை அறிக்கையில் கவர்ச்சிகரமான அறிவிப்புகள் பெரிய அளவில் இடம்பெறவில்லை. ஆனால், கவனிக்கத்தக்க சில அம்சங்கள் இந்த நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்றிருந்தன.

சுமார் 53.47 லட்சம் கோடி ரூபாய்க்கு இந்த நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. சரியாகச் சொன்னால், 53,47,315 கோடி ரூபாய். நிதிப் பற்றாக்குறை 16,95,768 கோடி ரூபாயாக இருக்கும் என மதிப்பிடப்பட்டிருக்கிறது. வருவாய் பற்றாக்குறையைப் பொறுத்தவரை கடந்த நிதியாண்டைவிட அதிகரித்து 5,92,344 லட்சம் கோடி ரூபாயாக இருந்தாலும், அதே 1.5 சதவீதமாக நீடிக்கும் என இந்த நிதிநிலை அறிக்கை கூறுகிறது.

கடந்த நிதியாண்டில் நிதிப் பற்றாக்குறை ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.4 சதவீதமாக இருந்தது. அது இந்த நிதியாண்டில் 4.3 சதவீதமாகக் குறையும் எனக் கணக்கிடப்பட்டிருக்கிறது. கடன்களைப் பொறுத்தவரை, ஜிடிபியில் 56.1 சதவீதத்தில் இருந்து 55.6 சதவீதமாகக் குறையும் எனக் கணக்கிடப்பட்டிருக்கிறது.

கடந்த ஆண்டில்தான் ஜிஎஸ்டி வரி சீர்திருத்தம் செய்யப்பட்டது என்பதால், கடந்த நிதியாண்டில் இருந்த அளவுக்குத்தான் வரி வருவாய் இருக்குமென மதிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனால், ஒட்டுமொத்த வரி வருவாய், 8 சதவீதம் அளவுக்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

செலவுகளைப் பொறுத்தவரை, இந்த நிதி நிலை அறிக்கையில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது முதலீட்டுச் செலவுகள்தான். மொத்தச் செலவான 53.47 லட்சம் கோடி ரூபாயில் 12,21,821 கோடி ரூபாய் அளவுக்கு முதலீட்டுச் செலவுகள் செய்யப்படும் எனக் கூறப்பட்டிருக்கிறது.

நிதிப் பற்றாக்குறை குறைப்பு, மூலதனச் செலவு அதிகரிப்பு போன்ற அம்சங்கள் இருந்தபோதும் பங்குச் சந்தை நம்பிக்கையின்மையை வெளிப்படுத்தியது. நிதியமைச்சர் நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்து கொண்டிருந்தபோதே, பங்குச் சந்தை வீழ ஆரம்பித்தது. நிதி நிலை அறிக்கையில் இடம்பெற்றிருந்த மற்றொரு அம்சம், வீழ்ச்சியை இன்னும் துரிதப்படுத்தியது.

அதாவது, ஃபியூச்சர்ஸ் (Futures) வர்த்தகம் மீதான பங்குப் பரிவர்த்தனை வரி (STT) தற்போதைய 0.02 சதவீதத்தில் இருந்து 0.05 சதவீதமாக உயர்த்தப்படும் என்றும் ஆப்ஷன்ஸ் பிரீமியம் (options premium) மற்றும் ஆப்ஷன்ஸ் செயல்படுத்தல் (exercise of options) ஆகிய இரண்டிற்குமான பங்குப் பரிவர்த்தனை வரி முறையே தற்போதைய 0.1 சதவீதம் மற்றும் 0.125 சதவீதத்தில் இருந்து 0.15 சதவீதமாக அதிகரிக்கப்படும் என்றும் நிதியமைச்சர் அறிவித்தார்.

சிறு முதலீட்டாளர்கள் ப்யூச்சர்ஸ் மற்றும் ஆப்ஷன்ஸ் வர்த்தகத்தில் ஈடுபட்டு தொடர்ந்து இழப்புகளைச் சந்தித்துவருவதாக 'செபி' சுட்டிக்காட்டிவந்த நிலையில் இந்தக் கட்டண அதிகரிப்பு, அந்தத் திசையில் ஒரு கவனிக்கத்தக்க நடவடிக்கையாக இருந்தது. ஆனால், பங்குச் சந்தை இதனை எதிர்மறையாக அணுகியதில், பெரும் வீழ்ச்சி ஏற்பட்டது.

மத்திய பட்ஜெட், நிதிநிலை அறிக்கை

பட மூலாதாரம்,Getty Images

மோதி பாராட்டு

மத்திய பட்ஜெட்டைப் பாராட்டிய பிரதமர் நரேந்திர மோதி, உள்கட்டமைப்பை வலுப்படுத்த பல முக்கிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.

"இந்த பட்ஜெட் நிகழ்கால கனவுகளை நனவாக்குகிறது மற்றும் இந்தியாவின் பிரகாசமான எதிர்காலத்தின் அடித்தளத்தை வலுப்படுத்துகிறது. உள்கட்டமைப்பை வலுப்படுத்த பட்ஜெட் பல முக்கிய நடவடிக்கைகளை எடுத்துள்ளது. பிரத்யேக சரக்கு வழித்தடங்கள், நாடு முழுவதும் நீர்வழிகளை விரிவுபடுத்துதல், அதிவேக ரயில் வழித்தடங்கள், அடுக்கு 2 மற்றும் அடுக்கு 3 நகரங்களின் மேம்பாட்டில் சிறப்பு கவனம் செலுத்துதல் மற்றும் நகரங்களுக்கு வலுவான பொருளாதார அடித்தளத்தை வழங்க நகராட்சி பத்திரங்களை ஊக்குவித்தல், இந்த நடவடிக்கைகள் அனைத்தும் வளர்ந்த இந்தியாவை நோக்கிய பயணத்தை மேலும் துரிதப்படுத்தும்." என்று அவர் கூறியுள்ளார்.

எதிர்க்கட்சிகள் விமர்சனம்

கவர்ச்சிகரமான அறிவிப்புகள் இல்லாத இந்த நிதி நிலை அறிக்கை எதிர்க்கட்சிகளின் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகியிருக்கிறது. முன்னாள் நிதியமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான ப. சிதம்பரம், நிதி நிலை அறிக்கை குறித்து கடுமையான விமர்சனத்தை முன்வைத்தார். "வேலை வாய்ப்பின்மை, ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைவது போன்ற நிஜமான பிரச்னைகளை நிதியமைச்சர் கவனத்தில் கொள்ளவில்லை" என்று குறிப்பிட்டார் ப. சிதம்பரம்.

பொருளாதார நிபுணர்களைப் பொறுத்தவரை நிதி நிலை அறிக்கையின் சில அம்சங்கள் கவனிக்கத்தக்கவை என்றாலும் வேறு சில எதிர்பார்ப்புகளை இந்த நிதி நிலை அறிக்கை பூர்த்தி செய்யவில்லை என்கிறார்கள்.

மத்திய பட்ஜெட், நிதிநிலை அறிக்கை

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,கோப்புப் படம்

"2025 - 26ஆம் நிதியாண்டில் 4.4 சதவீதமாக இருந்த நிதிப் பற்றாக்குறை, வரும் நிதியாண்டில் 4.3 சதவீதமாக இருக்கும் என்கிறது நிதிநிலை அறிக்கை. இது பேரியல் பொருளாதாரத்தில் (Macro Economics) நல்ல குறியீடாகப் பார்க்கப்படும். ஆகவே, அது வரவேற்கத்தக்கது. ஆனால், இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டு முதலீடுகள் குறைந்துவருகின்றன. கடந்த மூன்று மாதங்களில் நிறைய வெளிநாட்டு முதலீடுகள் வெளியேறியிருக்கின்றன. நேரடி அந்நிய முதலீடும் வருவதில்லை, பங்குச் சந்தையிலும் முதலீட்டாளர்கள் முதலீடு செய்வதில்லை. இந்தியாவில் உள்ள தொழில் முனைவோரும் இங்கு முதலீடு செய்வதில்லை. காரணம், பொருளாதாரம் மீதான நம்பிக்கையின்மைதான். அதற்கு இந்த நிதி நிலை அறிக்கையில் தீர்வில்லை" என்கிறார் ஓய்வுபெற்ற பொருளாதாரப் பேராசிரியரான கே. பிரபாகர்.

ஆனால், இந்த நிதி நிலை அறிக்கை இந்தியப் பொருளாதாரம் குறித்து கவலை அளிக்கக்கூடிய தகவலைச் சொல்கிறது என்கிறார் சென்னைப் பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறையின் முன்னாள் பேராசிரியரான ஜோதி சிவஞானம்.

"கடந்த ஆண்டின் நிதி நிலை அறிக்கைக்கும் இந்த ஆண்டின் நிதி நிலை அறிக்கைக்கும் பெரிய வித்தியாசமில்லை. கடன்கள், நிதிப் பற்றாக்குறை ஆகியவை கிட்டத்தட்ட அப்படியேதான் இருக்கிறன. " என்கிறார் அவர்.

மத்திய பட்ஜெட், நிதிநிலை அறிக்கை

படக்குறிப்பு,ஓய்வுபெற்ற பொருளாதாரப் பேராசிரியரான கே. பிரபாகர்.

கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான வரி குறைப்பால், பொருளாதாரத்திற்குப் பலன்கள் ஏதும் கிட்டவில்லை என்ற நிலையில் அந்தச் சலுகையைத் தொடர்வது ஏன் என்கிறார் கே. பிரபாகர். "இந்த நிதிநிலையை அறிக்கையைப் பார்க்கும்போது வருமான வரியும் ஜிஎஸ்டியும்தான் பெரும் அளவிலான வருவாயைத் தருகின்றன. கார்ப்பரேட்களுக்கு வரியைக் குறைத்தால், அவர்களுக்குக் கிடைக்கும் லாபத்தில் அவர்கள் கூடுதலாக முதலீடு செய்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது."

"ஆனால், அவர்கள் எதிர்பார்த்த அளவுக்கு முதலீடு செய்யவில்லை. காரணம், ஏற்கனவே இருக்கும் தொழிற்சாலைகளில் இருந்தே 75 சதவீதம்தான் உற்பத்தி செய்கிறோம் எனும்போது, புதிதாக முதலீடுசெய்து என்ன செய்வது என்கிறார்கள். அதற்குக் காரணம், நுகர்வு குறைந்திருப்பதுதான். கார்ப்பரேட் நிறுவனங்கள் புதிதாக முதலீடுசெய்வதில்லை என்பதால் அவர்களுடைய லாபம் அதிகரித்திருக்கிறது. இருந்தும் இந்தச் சலுகை தொடர்கிறது" என்கிறார் கே. பிரபாகர்.

இந்த இரு பொருளாதார பேராசிரியர்களும் சுட்டிக்காட்டும் இன்னொரு விஷயம், மாநிலங்களோடு பகிரப்படாத வருவாயை மத்திய அரசு அதிகரித்துக்கொண்டே செல்வது. கே. பிரபாகர் ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக விதிக்கப்படும் சிறப்பு வரி (cess - செஸ்) அதிகரித்துக்கொண்டே போவதைச் சுட்டிக்காட்டுகிறார். "2014ல் 10 சதவீதமாக இருந்த செஸ் தற்போது 18 சதவீதமாகிவிட்டது. இந்த சிறப்பு வரிகளில் இருந்து கிடைக்கும் வருவாய் மாநிலங்களோடு பகிர்ந்துகொள்ளப்படுவதில்லை. இதற்கென தேசிய அளவில் திட்டங்களைத் தீட்டி, நிதி ஒதுக்கீடு செய்கிறார்கள். இதில் எந்த அளவுக்கு வெற்றி கிடைக்கிறது என்பது தெரியவில்லை" என்கிறார் கே. பிரபாகர்.

மத்திய பட்ஜெட், நிதிநிலை அறிக்கை

படக்குறிப்பு,சென்னைப் பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறையின் முன்னாள் பேராசிரியரான ஜோதி சிவஞானம் (கோப்புப் படம்)

ஜோதி சிவஞானம் இதேபோன்ற மாநிலங்களோடு பகிரப்படாத மற்றொரு வருவாயைச் சுட்டிக்காட்டுகிறார். அதாவது, பொதுத் துறை நிறுவனங்களில் இருந்து கிடைக்கும் ஈவுத் தொகை, ரிசர்வ் வங்கியில் இருந்து கிடைக்கும் டிவிடென்ட் போன்ற வரி அல்லாத வருவாய் இந்த ஆண்டில் 6.6 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு இருக்கும் என நிதிநிலை அறிக்கையில் மதிப்பிடப்பட்டிருக்கிறது. "இப்படி மாநிலங்களோடு பகிரப்படாத தொகை அதிகரித்துக்கொண்டே போவது நல்லதல்ல" என்கிறார் அவர்.

பொருளாதார வளர்ச்சி 7 சதவீதத்திற்கு மேல் இருக்கும் எனக் கணிக்கப்பட்டாலும் அந்தப் புள்ளிவிவரங்கள் சரியானவையா என பல பொருளாதார நிபுணர்கள் கேள்வியெழுப்புவதைச் சுட்டிக்காட்டுகிறார் கே. பிரபாகர்.

"சராசரி பணவீக்கத்தை மிகக் குறைவாகக் கணக்கிட்டு வளர்ச்சி மதிப்பிடப்படுகிறது. இந்தியாவின் ஜிடிபி மதிப்பீடுகள் தற்போதைய பொருளாதாரத்தின் நிலையைப் பிரதிபலிக்கவில்லை என்பதால், இந்தப் புள்ளிவிவரங்களுக்கு சர்வதேச நிதியம் சி கிரேடு (C Grade) கொடுத்திருக்கிறது. அரவிந்த் சுப்ரமணியம் போன்ற பொருளாதார நிபுணர்கள் இந்தியாவின் வளர்ச்சி 2.5 சதவீதம் அதிகமாகக் கணக்கிடப்படுகிறது என்கிறார்கள். மத்திய அரசு சொல்வதைப் போல வளர்ச்சி இருந்தால் ரூபாயின் மதிப்பு ஏன் சரிந்துகொண்டே வருகிறது என்பதற்கு விளக்கமில்லை" என்கிறார் கே. பிரபாகர்.

மத்திய அரசே செயல்படுத்தக் கூடிய வகையில் பல திட்டங்களை அறிவித்தாலும், அவை சரியாக செயல்படுத்தப்படுவதில்லை என்கிறார் அவர். அவர் சொல்வதைப் போலவே கடந்த நிதியாண்டில் பல மத்திய அரசின் திட்டங்களுக்கு பெரிய அளவில் நிதி ஒதுக்கீடு குறிப்பிடப்பட்டாலும் மிகக் குறைந்த அளவில் செலவிடப்பட்டதை இந்த நிலை அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

உதாரணமாக, கடந்த நிதி ஆண்டில் தேசிய ஆயுஷ் மிஷனுக்கு 1,275 கோடி ரூபாய் அறிவிக்கப்பட்டு 781 கோடி ரூபாய் மட்டுமே செலவிடப்பட்டிருக்கிறது. பிஎம் ஸ்ரீ திட்டத்திற்கு 7,500 கோடி ரூபாய் அறிவிக்கப்பட்டது. ஆனால் உண்மையில் 4,500 கோடி ரூபாய் மட்டுமெ செலவிடப்பட்டது. பிரதான் மந்த்ரி ஆவாஸ் யோஜனா - நகர்ப்புறம் 2.0 திட்டத்திற்கு 3,500 கோடி ரூபாய் அறிவிக்கப்பட்டு 300 கோடி ரூபாய் மட்டுமே செலவிடப்பட்டிருக்கிறது.

தேசிய கிராமப்புற குடிநீர் திட்டத்திற்கு 67,000 கோடி ரூபாய் அறிவிக்கப்பட்டு 17,000 கோடி ரூபாய் மட்டுமே செலவிடப்பட்டிருக்கிறது. இந்தத் திட்டங்கள் அனைத்திற்கும் இந்த நிதி நிலை அறிக்கையில் கடந்த நிதி நிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்த அளவுக்கு அல்லது அதைவிட அதிகமாக நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது.

"இப்போது நிறைய நகரங்களை மேம்படுத்த வேண்டும் எனச் சொல்லியிருக்கிறார்கள். ஏற்கனவே இதற்கென போடப்பட்ட ஸ்மார்ட் சிட்டி திட்டம் என்ன ஆனதெனத் தெரியவில்லை. இப்போது, கிளஸ்டர் மேம்பாடு (Clusters Development) குறித்துச் சொல்கிறார்கள். 200 கிளஸ்டர்கள் மேம்படுத்தப்படும் என்கிறார்கள். இந்தியாவில் ஏற்கனவே தொழில் சார்ந்து 5,000 கிளஸ்டர்களாவது இருக்கும். உதாரணமாக, கோயம்புத்தூர் கிரைண்டர் உற்பத்தி தொழிலுக்கான ஒரு கிளஸ்டர். இப்போது உள்ள 5,000 கிளஸ்டர்களில் இருந்து 200ஐ எப்படி தேர்வுசெய்வார்கள் என தெரியவில்லை. இறுதியாகப் பார்க்கும்போது நம் பொருளாதாரம் ஸ்திரத்தன்மையோடு இருக்கலாம். ஆனால், நாம் போகும் பாதை சரியா என்ற கேள்வி இருக்கிறது" என்கிறார் கே. பிரபாகர்.

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c931v04e9elo

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.