Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நல்ல கண்ணுகளும் -தமிழ் கூறும் நல்லுலகும்! நிலாந்தன்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Nallakannu-1.jpg?resize=750%2C375&ssl=1

நல்ல கண்ணுகளும்  -தமிழ் கூறும் நல்லுலகும்! நிலாந்தன்.

தமிழ்நாட்டின் மூத்த கொம்யூனிஸ்ட் தலைவராகிய நல்லகண்ணு அண்மையில் இயற்கை எய்தினார்.தன் பெயருக்கு ஏற்ப நல்ல கண்ணுவாக வாழ்ந்தவர் அவர். உண்மையான  கொம்யூனிஸ்ட் ஒரு சன்னியாசியைப்போல இருப்பார். நல்ல கண்ணு அப்படித்தான் வாழ்ந்தார். அவர் சொத்துச் சேர்க்கவில்லை.புகழுக்கோ பதவிக்கோ போகங்களுக்கோ ஆசைப்படவில்லை.எளிமையாக வாழ்ந்தார். அவருடைய எளிமையை,சந்நியாசத்தை தமிழ்நாட்டில் யாரும் கேள்விக்கு உட்படுத்தியதில்லை.

அவருடைய உடலுக்கு அஞ்சலி செலுத்திய தமிழ்நாட்டு முதலமைச்சர் ஸ்டாலின், அஞ்சலி செலுத்திய பின் அவரை “வாழ்நாள் போராளிக்கு வீர வணக்கம்” என்று கூறி முழக்கமிட்டார்.

இந்தஇடத்தில் ஒரு முக்கிய கேள்வி எழுகிறது.தமிழ்நாட்டின் முதலமைச்சரால் வாழ்நாள் போராளி என்று அழைக்கப்பட்ட ஒருவர்,தன் வாழ்நாளில் என்றைக்குமே தமிழ்மக்களால் தமது பிரதிநிதியாக தெரிவு செய்யப்படவில்லை. ஏன் ?

மேற்கு வங்கத்தில்,திரிபுராவில் மகத்தான கொம்யூனிஸ்ட் தலைவர்கள் மக்களால் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள்.திரிபுராவில் அவ்வாறு தெரிவு செய்யப்பட்ட மிக எளிமையான,ஒரு சன்னியாசி போல வாழ்ந்த முன்னாள் முதலமைச்சர் ஒருவரைப் பற்றி சமூகவலைத்தளங்களில் வாசிக்கலாம். அவர் எவ்வளவு எளிமையாக வாழ்ந்தார்?தனக்கென்று சொத்துக்களை சேர்த்துக் கொள்ளவில்லை,அவருடைய மனைவி முச்சக்கர வண்டியில்தான் அலுவலகத்துக்கு போவார்…என்றெல்லாம் போற்றப்படுகிறது.

இந்தியாவில் மகத்தான கொம்யூனிஸ்ட் தலைவர்கள் இருந்தார்கள்; இருக்கிறார்கள்.அவர்களில் ஒருவர்தான் நல்லகண்ணு.அவர் நூற்றியொரு வயதுவரை  வாழ்ந்தார்.ஆனால் போட்டியிட்ட  தேர்தல்களில் அவர் வெற்றி பெறவேயில்லை.தமிழ்நாட்டு மக்கள் அவரை தமது பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கவில்லை? ஏன் ?

வாழ்நாள் போராளிகளாக வாழ்ந்த,வாழ்கின்ற நல்லகண்ணுக்கள் ஏன் தமிழ் மக்களின் கண்களுக்கு தெரிவதில்லை? கெட்ட கண்ணுகள்தானே அதிகமாகத் தெரிகிறார்கள்? தெரிவு செய்யப்படும் மக்கள் பிரதிநிதிகளில் எத்தனை பேர் நல்லகண்ணுகள்? எத்தனை பேர் கெட்ட கண்ணுகள் ? தமிழ் வாக்காளர்கள் ஏன் பெரிய அளவுக்கு நல்லகண்ணுகளை தமது தலைவர்களாகத் தெரிந்தெடுப்பதில்லை?

திரை நட்சத்திரங்களுக்காகக் தீக்குளிக்கும் மக்கள்.திரை நட்சத்திரங்களுக்காக தலையை மழிக்கும் பெண்கள்.திரை நட்சத்திரங்களுக்காக மீசையை மளிக்கின்ற ஆண்கள்.நாக்கை,விரலை வெட்டுகின்ற,விரதம் இருக்கின்ற,படித்த,படிக்காத ரசிகர்களைக்  கொண்ட ஒரு சமூகம், நல்லகண்ணுகளை ஏன் தேர்ந்தெடுக்காமல் விடுகிறது?

ரணா படத்தில் வரும் சீக்கிய போலீஸ் அதிகாரி கூறுவது போல தமிழ் மக்களில் அதிகமானவர்கள் “சென்ரிமென்ரல் இடியட்களா”?நல்லகண்ணுகளை தேர்ந்தெடுக்க அவர்களால் முடியாதா?

அல்லது நல்லகண்ணுகளால் வெற்றிகரமாக தேர்தல் அரசியலை முன்னெடுக்க முடியவில்லையா?  ஏன் முடியவில்லை?

ஈழத் தமிழ் அரசியலில் நான் திரும்பத் திரும்பக் கூறும் ஓர் உதாரணம் உண்டு. நல்ல தங்கத்தை வைத்து ஆபரணங்களை,நகையைச் செய்ய முடியாது. அதை வேண்டுமென்றால் அயர்ன் சேவில் பாதுகாக்கலாம்.தங்கத்தை அதன் பிரயோக நிலைக்கு கொண்டு வருவது என்றால் அதாவது ஆபரணங்கள் செய்வதென்றால் அங்கே ஏதோ ஒரு விகிதம் செப்பைக் கலக்க வேண்டும்.அதாவது தூய தங்கத்தை வைத்து ஆபரணங்களைச் செய்யமுடியாது.அதன் தூய்மையைக்  கெடுக்கும் செப்பைக் கலப்பதன் மூலம்தான் அதனை மக்கள் மயப்படுத்தலாம்.

இது தங்கத்துக்கு மட்டுமல்ல,நல்லகண்ணுகளுக்கும் பொருந்தும்.நூறு விகிதம் நல்லகண்ணுகளாக இருந்தால் தேர்தல் அரசியலில் இறங்க முடியாது. இறங்கினாலும் வெல்ல முடியாது.தேர்தல் அரசியலில் வெல்வதற்கு சாதி வேண்டும்; சமயம் வேண்டும்; ஊர் வாதம் வேண்டும்; பிரதேச வாதம் வேண்டும்; அல்லது இதுபோல ஏதோ ஒரு குருட்டு சென்ரிமென்ரல் வாதம் வேண்டும். ஆனால் நல்லகண்ணுகள் அப்படிப்பட்ட தீய தேர்தல் உபாயங்களை நோக்கிச் செல்ல மாட்டார்கள்.மக்களுக்கு விழிப்பூட்ட வேண்டும்;மக்கள் மத்தியில் கருத்தாக்கம் செய்ய வேண்டும்;அதன்மூலம் “கருத்து மக்களைப் பற்றிக் கொண்டால் அது சக்தியாக உருவெடுக்கும்” என்று அவர்கள் நம்புவார்கள்; உழைப்பார்கள்.

ஆனால் துயரம் என்னவென்றால்,ஆசிய,ஆபிரிக்க,லத்தீன் அமெரிக்க நாடுகளில் மட்டுமல்ல,உயர்ந்த ஜனநாயகங்கள் என்று போற்றப்படும் மேற்கு நாடுகளிலும்கூட கருத்து மக்களைப் பற்றிக்கொள்வதை விடவும்,அறிவு மக்களைப் பற்றிக் கொள்வதை விடவும், உணர்ச்சிகரமான நிறம்,இனம்,மதம், மொழி… போன்ற குருட்டு விசுவாசங்கள்தான் எளிதாகப் பற்றிக் கொள்கின்றன.

ஜனநாயகப் பரப்பில் அறிஞர்களும் நல்லகண்ணுகளும் அரிதாகவே தெரிவு செய்யப்படுகிறார்கள்.அவர்களுக்கு நடிக்கத் தெரியாது.அவர்களுக்குப் பொய் சொல்லத் தெரியாது.அவர்களுக்கு வேஷம் போடத் தெரியாது.அதாவது அவர்கள் மக்களை ஏமாற்ற விரும்பவில்லை.இங்கே பிரச்சினை அவர்களுடைய நேர்மைதான்; அவர்களுடைய ஒழுக்கம்தான்;அவர்களுடைய பற்றின்மைதான்.

நடிகர்கள் திரையிலும் நடிக்கிறார்கள்; அரசியலிலும் நடிக்கிறார்கள். ஆனால் அறிஞர்களோ,நல்லக்கண்ணுகளோ மக்களை ஏமாற்ற விரும்புவதில்லை. அதனால் தேர்தல் அரசியலில் அவர்கள் பெரும்பாலும் தோற்கிறார்கள்.

அதுமட்டுமல்ல, அதைவிட முக்கியமாக தேர்தல் அரசியல் ஒரு தொழிலாக வளர்ந்து விட்டது. அதற்குரிய தொழில் திறன்களை கொண்டிருப்பவர்கள்தான் அதில் வெல்லலாம்.எல்லா நல்லகண்ணுகளுக்கும் அந்தத் தொழில் திறன் இருப்பதில்லை.

இது தமிழகத்துக்கு மட்டுமல்ல,தமிழகத்திலிருந்து சிறிய பாக்கு நீரிணையால் பிரிக்கப்பட்டிருக்கும் ஈழத்தமிழர்கள் மத்தியிலும் நிலைமை அதுதான். அரசியலை அறிவியல் ஒழுக்கமாகப் பயில்பவர்கள்,மக்களைக் கருத்தாக்கம் செய்ய வேண்டும்,விழிப்பூட்ட வேண்டும் என்று உழைப்பவர்கள்,தேர்தல் அரசியலுக்கு வரத் தயங்குகிறார்கள்.தேர்தல் அரசியலுக்குள் வந்தால் தங்களுடைய தூய தங்கத் தன்மை கெட்டுவிடும் என்றும் பயப்படுகிறார்கள். சொம்பு கலந்த ஒரு வாழ்க்கையை அவர்கள் விரும்பவில்லை.செம்பு கலந்த அரசியலுக்கும் அவர்கள் தயாரில்லை.

இந்தத் தூய்மைவாதம்-அப்படித்தான் அதை கூறவேண்டும்- காரணமாகத்தான் ஒப்பீட்டளவில் நல்ல கண்ணுகளாக இருப்பவர்கள் தேர்தல்களில் வெல்ல முடியாமல் இருக்கிறார்கள்.கெட்ட கண்ணுக்கள்தான் பெரும்பான்மை தமிழ் மக்களின் கண்களுக்குத் தெரிகிறார்கள்.கெட்ட கண்ணுகள்தான் தமிழ் மக்களுக்குக் கவர்ச்சியாகத் தெரிகிறார்கள்.

அல்லது ஓரளவுக்கு தங்களை தேர்தல் அரசியலில் சுதாகரித்துக் கொள்ளத் தயாராக காணப்படும் நல்லகண்ணுகள் மக்கள் பிரதிநிதிகளாக வருகிறார்கள்.

இலங்கைத் தீவில் சில ஆண்டுகளுக்கு முன் நடந்த மக்கள் எழுச்சிகளை பின்னின்ற இயக்கியது முன்னிலை சோசலிசக் கட்சியும் குறிப்பிட்ட சில மக்கள் அமைப்புகளும் ஆகும். ஆனால் இந்த அமைப்புகள் ஒன்றிணைந்து உருவாக்கிய குடைச்சின்னத்தின் கீழ் போட்டியிடும் கூட்டமைப்பானது தேர்தலில் வெற்றி பெற முடியவில்லை.அது அவமானகரமான ஒரு தோல்வி என்பதை விடவும் ஆபத்தான தோல்வி. அந்தக் கூட்டமைப்பு இன்றுவரை தேர்தல் அரசியலில் வெற்றிபெற முடியவில்லை.ஆனால் அந்த மக்கள் எழுச்சிகளின் கனிகளை தேர்தல் மேடைகளில் பொருத்தமாக மொழிபெயர்க்கத் தெரிந்த அனுர ஜனாதிபதியாக வந்து விட்டார்;தேசிய மக்கள் சக்தி ஆளுங்கட்சியாக வந்துவிட்டது.

அப்படித்தான் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் போர்க்களத்தில் நின்று அவயவங்களை இழந்த முன்னாள் இயக்கத்தவர்கள் தேர்தல் கேட்டார்கள். அவர்களுக்காகப் பிரச்சாரம் செய்த முன்னால் இயக்கத்தவர் ஒருவர் சொன்னார், குறைந்தது 15,000 வீடுகளுக்கு நாங்கள் ஏறியிறங்கி இருப்போம் என்று. ஆனால் அந்த வேட்பாளர்களுக்கு கிடைத்த வாக்குகளோ கிட்டத்தட்ட 2000தான். தங்களுக்காகப் போராடப் போய்,தங்களுக்காக உறுப்புகளை இழந்தவர்களுக்கு தமிழ்மக்கள் கொடுத்த வாக்குகள் அவை.

நல்லகண்ணுகள் தூய நல்லகண்ணுகளாக இருக்கும்வரை அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்ற முடியாது.அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவது என்பது 100% தூய்மையான ஒரு நடவடிக்கையும் அல்ல. அது ஒரு வகைச் சூழ்ச்சி; ஒரு வகைச் சதி; ஒரு வகை தந்திரம்; ஒரு வகை வியாபாரம்;ஒரு வகை தொழில் தேர்ச்சி. நல்லகண்ணுகள் அதைக் கற்றுத்கொள்ள வேண்டியிருக்கிறது. ஆனால் பெரும்பாலான நல்லகண்ணுகள் அதைக் கற்றுக்கொள்ளத் தயாரில்லை.தங்களைத் தூய தங்கங்களாக வைத்துக் கொண்டிருக்கவே அவர்கள் விரும்புகிறார்கள்.

நல்லகண்ணுவின் மறைவு தமிழகத்தில் அதிர்வுகளை ஏற்படுத்திய அதே காலப்பகுதியில் நடிகர் விஜேயினுடைய மனைவி விவாகரத்துக் கேட்டு நீதிமன்றத்துக்குச் சென்ற செய்தி வெளியே வந்தது. அந்தச் செய்தி நல்ல கண்ணுவின் மறைவுச் செய்தியை விடவும் அதிகம் “வைரல்” ஆகியது.தமிழ்ப் பொதுப் புத்திக்கு விழிப்பூட்டாத நடிகர்களைப் பற்றிய செய்திகள் எளிதாக வைரல் ஆகின்றன.ஆனால் தமிழ்ப் பொதுப்புத்திக்கு விழிப்பூட்ட வேண்டும், தமிழ்ப் பொதுப்புத்தியை கருத்தாக்கம் செய்ய வேண்டும் என்று கனவுகாணும் நல்லகண்ணுகளை தமிழ்ப்பொதுப் புத்தி எப்பொழுது போற்றும்; கொண்டாடும்?

https://athavannews.com/2026/1466813

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்நாள் போராளிகளும் தேர்தல் அரசியலும் : நல்லகண்ணுவைக் கற்பது - நிலாந்தன்

643446810_4177973782347758_3053256670235

தமிழ்நாட்டில் மூத்த கொம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு இயற்கை எய்தி சில நாட்களில் நடிகர் விஜய்யின்  மனைவி விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தை அணுகிய செய்தி வெளிவந்தது. நல்லகண்ணுக்கு அஞ்சலிகள்,வணக்கங்கள் புகழுரைகள், இரங்கள் உரைகள் போன்றன வெளிவந்து கொண்டிருந்த ஒரு பின்னணிக்குள்,விஜயினுடைய விவாகரத்து செய்தியும் வெளிவந்தது. தமிழ்கூறும் நல்லுலகில் அதிகம் வைரல் ஆகியது எதுவென்று பார்த்தால் விஜயின் விவாகரத்துச் செய்தி தான்.

நமது காலத்தில் வாழ்ந்து மறைந்த ஒரு முன்னுதாரணம் மிக்க இலட்சியவாதி, அரசியல்வாதி, செயற்பாட்டாளர்  நல்லகண்ணு எனலாம். அவருக்கு அஞ்சலி செலுத்திய தமிழக முதல்வர் ஸ்டாலின் அவரை “வாழ்நாள் போராளிக்கு வீரவணக்கம்” என்று கூறி முழக்கமிட்டார்.

நல்லகண்ணுவைப் போல நல்ல மனிதர்களை அரசியலில்,அரசியல் செயற்பாட்டில் காண்பது அரிது. அவர் 101 ஆண்டுகள் உயிர் வாழ்ந்தார். தமிழ்நாட்டில் அதிக காலம் சிறையில் இருந்த கொம்யூனிஸ்டுகளில் அவரும் ஒருவர். தன்னுடைய வாழ்நாளில் அவர் என்றைக்குமே தனியார் மருத்துவமனைக்குச் சென்றதில்லை. இறுதி நாள் வரையிலும் அவர் அரச மருத்துவமனைக்குத்தான் சென்றார். தனக்கென்று பெரிய அளவில் சொத்துக்களைச் சேர்த்ததில்லை.தன் குடும்பத்துக்கும் சேர்த்ததில்லை. தனக்கு கிடைத்த பரிசுகளையும் நன்கொடைகளையும் அவர் பொது நலனுக்கே செலவழித்தார். 101 ஆண்டுகள் ஏறக்குறைய ஒரு சன்னியாசியைப்போல அவர் வாழ்ந்தார். உண்மையாகவே ஒரு வாழ்நாள் போராளியாக வாழ்ந்தார்.

ஆனால் துயரம் என்னவென்றால், அவருடைய மிக நீண்ட வாழ்நாளில் அவர் என்றைக்குமே தமிழகத்தில் எந்த ஒரு தேர்தலிலும் வெற்றி பெற்றதில்லை. அவரைப் போன்ற நேர்மையான ஒரு செயற்பாட்டாளரை தமிழ்நாடு என்றைக்குமே தனது பிரதிநிதியாகத் தெரிவு செய்யவில்லை. ஏன் ?

அவரை வாழ்நாள் போராளி என்று கூறுகிறார்கள்.மக்களுக்காகவே வாழ்ந்தவர் என்று கூறுகிறார்கள். இலட்சியத்தை விட்டுக் கொடுக்காதவர் என்று போற்றுகிறார்கள். ஆனால் அவரை என்றைக்குமே தேர்லில் வெற்றி பெற வைக்கவில்லை. ஏன்? நல்லவர்கள் அரசியலுக்கு வந்தால்தானே நாடு உருப்படும்? அரசியலில் நேர்மையானவர்கள், கண்ணியமானவர்கள் காவிவேடம் பூணாத உண்மையான சந்நியாசிகளின் தொகை அதிகரித்தால்தான் நாடு உருப்படும். ஆனால் தமிழ்கூறும் நல்லுலகம் நல்லகண்ணுகளை விடவும் நடிகர்களைத்தானே எதிர்பார்ப்போடு பார்க்கிறது?

வாழ்நாள் போராளிகள், வாழும் காலத்தில் போற்றப்படாமல் இறந்தபின் ஏன் போற்றப்படுகிறார்கள்? வாழும் காலத்தில் அவர்களுடைய அருமை ஏன் தமிழ் சமூகத்துக்குத் தெரியாமல் போகிறது? வாழ்ந்து மறைந்த பின் தான் அவருக்கு சிலை வைத்துப் பட்டம் சூட்டிக் கொண்டாடுகிறார்கள்.

ஆனால் மேற்கு வங்கத்தில், திரிபுராவில்,கேரளத்தில் ஓரளவுக்கு நேர்மையான இடதுசாரி தலைவர்கள் மக்களால் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்கள். சில ஆண்டுகளுக்கு முன்பு திரிபுராவில் அவ்வாறு தெரிவு செய்யப்பட்ட ஒரு முதலமைச்சரைப் பற்றிய செய்திகளை சமூக வலைத்தளங்களில் பார்க்கமுடிந்தது. அவர் மிக எளிமையாக வாழ்ந்தார். சொத்துச் சேர்க்கவில்லை. அரச போகங்களை அதிகம் அனுபவிக்கவில்லை. அவருடைய மனைவி ஒர் அரச ஊழியர். முச்சக்கர வண்டியில்தான் அலுவலகத்துக்கு சென்றார்.அரசு வாகனத்தில் சென்றதில்லை. அப்படிப்பட்ட எளிமையான ஒருவரை திரிபுரா மக்கள் தமது தலைவராகத் தெரிவு செய்தார்கள். ஆனால் இந்திய மாநிலங்களில் அதிகம்  கல்வியறிவுடைய மாநிலங்களில் ஒன்றாகக் கணிக்கப்படும் தமிழ்நாட்டில் ஏன் நல்லகண்ணுகள் தேர்தலில் வெற்றிபெற முடியவில்லை ?

நடிகர்களுக்காகத் தீக்குளிக்கும் ஒரு சமூகம். நடிகர்களுக்காக மீசையை வழித்துக் கொள்கிற, மொட்டை அடித்துக் கொள்கிற ஒரு சமூகம். நடிகர்களைப் பார்க்கப்போய் நசிந்து சாகும் ஒரு சமூகம். அரசியலில் நடிக்க மறுத்து நேர்மையாக வாழ்ந்த மனிதர்களை ஏன் அவர்கள் வாழும் காலத்திலேயே போற்றத் தவறுகிறது ?

இது சமூகத்தின் கோளாறா?அல்லது நேர்மையான அரசியல் செயற்பாட்டாளர்கள் தேர்தல் அரசியலில் வெற்றிபெறத் தேவையான தந்திரங்களையும் வியூகங்களையும் கற்றுக்கொள்ளத் தயாரில்லையா? அல்லது அவர்களால் அவற்றைக்  கற்றுக்கொள்ள முடியவில்லையா?

இதில் இரண்டாவது விடயம்தான் அதிகம் விவாதிக்கப்பட வேண்டியது. இது தமிழ்கூறும் நல்லுலகில் மட்டுமல்ல உலகின் பல பாகங்களிலும் அவதானிக்கப்பட்ட ஒரம்சம். தேர்தல்மைய அரசியலில் நேர்மையானவர்கள் தங்களைப் பொருத்திக் கொள்வதற்கு அல்லது சுதாகரித்துக் கொள்வதற்கு ஒன்றில் விரும்புவதில்லை. அல்லது அவர்களுக்கு முடியவில்லை.

ஆசிய,ஆப்பிரிக்க, லத்தின் அமெரிக்க தேர்தல் ஜனநாயகங்களில் மட்டுமல்ல மேற்கத்திய தேர்தல் ஜனநாயகங்களிலும் அந்த நிலைமை உண்டு.

பொதுவாக புத்திசாலித்தனத்திற்கும் ஜனரஞ்சகத்துக்கும் பொருந்தி வருவது குறைவு. இதில் புத்திசாலித்தனத்தை ஜனரஞ்சகமாக விற்கத் தெரிந்தவர்கள் அரிதாக வெற்றி பெறுகிறார்கள். பெரும்பாலான அறிஞர்களும் நேர்மையானவர்களும் தேர்தல்மைய அரசியலில் தேர்தல் போட்டிகளில் இறங்கி அசிங்கப்பட வேண்டியிருக்கும் என்று கருதுகிறார்கள். அதனால் பெரும்பாலும் பின்வாங்குகிறார்கள்.

642201583_1476288383844388_7698665247481

அதுமட்டுமல்ல, தலைமைத்துவம் எனப்படுவது தனிய அறிவு மட்டுமல்ல. தியாகம் மட்டும் அல்ல. வீரம் மட்டும் அல்ல. அது ஒரு கலப்பு ஒழுக்கம். அறிவு கூடியவர்கள் பல சமயங்களில் இதயத்தால் செழிப்பில்லாதவர்களாக இருப்பார்கள். அறிவு கூடியவர்கள் பல சமயங்களில் தலைமைத்துவ பண்பு இல்லாதவர்களாக இருப்பார்கள். புத்திசாலிகள் பல சமயங்களில் இதயம் இல்லாதவர்களாக இருப்பார்கள். உன்னதமான தலைமை என்பது அறிவும் இதயமும் இணைந்து மேல் எழுவது. அது மிக அரிது.

நான் திரும்பத்திரும்ப கூறும் ஒரு நடைமுறை உதாரணம் உண்டு. தூய தங்கத்தை வைத்து ஆபரணம் செய்ய முடியாது. அதில் செப்பைக் கலக்க வேண்டும். அதாவது தங்கத்தை பிரயோகநிலைக்குக் கொண்டு வருவதென்றால் அங்கே கலப்பு அவசியம். தூய தங்கத்தை வேண்டுமானால் அயர்ண் சேவில் வைக்கலாம். ஆனால் ஆபரணமாக்க முடியாது.

அப்படித்தான் பொது வாழ்விலும் அரசியலிலும்.தங்களைத் தூய தங்கங்களாகக் கருதுபவர்கள், செப்போடு கலக்கத் தயாராக இல்லாதவர்கள், நடைமுறை அரசியலில் இறங்க முடியாது.

தேர்தல்மைய அரசியலுக்கு என்று தொழில் திறன்கள் வேண்டும். தந்திரங்கள் வேண்டும்; உத்திகள் வேண்டும்; செல்வம் வேண்டும்;புகழ் வேண்டும்;தலைமைத்துவப் பண்பு வேண்டும். இவையனைத்தும் ஒன்றாக வாய்க்கப் பெற்றவர்கள் தேர்தல்மைய அரசியலில் வெற்றி பெறுகிறார்கள். தூய தங்கமாக இருப்பவர்கள் அல்லது தூய அறிஞர்களாக இருப்பவர்கள் தேர்தல்மைய அரசியலில் வெற்றிபெறாமல் போகும் இடங்கள் இவைதான்.

தமிழ்நாட்டில் நல்லகண்ணு மட்டுமல்ல,மணிப்பூரில் இரோமி சர்மிளா என்ற பெண் மக்களுக்காக நீண்ட நாட்கள் உண்ணாவிரதம் இருந்தவர். தேர்தல் கேட்டபோது அவருடைய மக்கள் அவரை குரூரமாக நிராகரித்தார்கள்.

ஈழத்தமிழர்கள் மத்தியிலும் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு அவயங்களை இழந்தவர்கள் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டார்கள். ஒருவருமே வெற்றி பெறவில்லை. அவர்களுக்காக பிரச்சாரத்தில் ஈடுபட்ட முன்னாள் இயக்கத்தவர் ஒருவர் சொன்னார், கிட்டத்தட்ட 15,000வீடுகளுக்கு ஏறி இறங்கியிருப்போம் என்று. ஆனால் அவர்கள் எந்தப் பெண்ணுக்காகப் பிரச்சாரம் செய்தார்களோ,எந்த மக்களுக்காக அந்தப் பெண் தன் ஒரு காலை இழந்தாரோ,அவருக்கு கிடைத்த வாக்குகள் மொத்தம் 2000. ஆனால் அர்ஜுனாவுக்கு கிடைத்தவை அதைவிடப் பல மடங்கு. அப்படியென்றால் தமிழ்மக்கள் யார் தங்களுக்குத் தலைவர்களாக வரவேண்டும் என்று விரும்புகிறார்கள் ?

ஆயுதப் போராட்ட அரசியலும் தேர்தல்மைய அரசியலும் ஒன்று அல்ல. இலட்சியவாத அரசியலும் தேர்தல்மைய அரசியலும் ஒன்று அல்ல என்பதைத்தான் மனிதகுல வரலாறு தொடர்ச்சியாக நிரூபித்து வந்திருக்கிறது. இங்கேதான் நல்ல கண்ணுகள் தம் சொந்த மக்களாலேயே தெரிவு செய்யப்படாமல் போகிறார்கள். அல்லது இறந்த பின் அதிகம் போற்றப்படுகிறார்கள்.

இதில் ஈழத் தமிழர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் எதுவென்றால், 2009க்குப் பின்னரான ஈழத்தமிழ் மிதவாத அரசியலானது இன்னமும் சரியான ஒரு தடத்தில் ஏறவில்லை. ஒரு பகுதியினர் அதனை ஆயுதப் போராட்டத்தின் தொடர்ச்சியாக,இலட்சிய வாதமாகப் பார்க்கிறார்கள். ஆனால் தமிழ் மக்கள் அவர்களுக்கு வாக்களிப்பது குறைவு.

இதன்பொருள்,தமிழ்மக்கள் இலட்சியவாதத்திற்கு எதிரானவர்கள் என்பதல்ல. இங்கே தவறு தமிழ்மக்களில் இல்லை.மாறாக இலட்சியவாதிகளால் தங்களுடைய அரசியலை தேர்தல் மொழியில் மொழிபெயர்க்கத் தெரியவில்லை என்பதுதான். தமது இலட்சியங்களை நிறுவனமயப்படுத்த முடியவில்லை என்பதுதான். அதற்குத் தேவையான கட்டமைப்புகளையும் அவர்கள் கட்டி எழுப்பத் தவறுகிறார்கள்.

அண்மையில் தமிழகத்தில் மேற்படிப்புக்காகச் சென்ற ஒரு கிறிஸ்தவ மதகுரு விடுமுறையில் வந்தபோது சொன்னார் “அங்கே கிராம மட்டத்தில் வட்டச் செயலர் என்ற பொறுப்பு எவ்வளவு முக்கியமானது, வினைத்திறன் மிக்கது?”என்று.கீழிருந்து மேலோக்கி வாக்காளர்களை கட்சி மயப்படுத்துகின்ற  வேலையை வட்டச் செயலர்கள் செய்கிறார்கள்.

தமிழ்த்தேசிய கட்சிகளில் எத்தனை அவ்வாறான கீழ்மட்டக் கட்டமைப்புகளைக் கொண்டிருக்கின்றன? தமிழரசுக் கட்சியிடம் ஓரளவுக்கு உண்டு. அதனால்தான். அந்தக் கட்சி வடக்கு-கிழக்கு தழுவிய ஒப்பீட்டளவில் அதிக வெற்றிகளைப் பெறுகின்றது.

எனவே தமிழ்த் தேசிய அரசியலில் தூய்மைவாதம், இலட்சியவாதம் பேசுகின்ற கட்சிகள் முதலில் செய்ய வேண்டியது தங்களுக்குள்ள மக்கள் ஆதரவை நிறுவனமயப்படுத்துவது;கட்சி மயப்படுத்துவது;அதற்கு வேண்டிய கட்டமைப்புகளை உருவாக்குவது. இதற்குத் தமிழக உதாரணங்கள் கூடத் தேவையில்லை. தாயகத்திலேயே ஒருகாலம் ஆயுதப் போராட்டம் அவ்வாறான கட்டமைப்புகளைக் கொண்டிருந்தது.

கிராம மட்டத்தில் கிராமியப் பொறுப்பாளர்கள் அல்லது வட்டாரப் பொறுப்பாளர்கள் இருப்பார்கள். அவர்களுக்கு பொறுப்பாக ஏரியா பொறுப்பாளர் இருப்பார். அவருக்கு மேல்,மாவட்டப் பொறுப்பாளர் இருப்பார். அவருக்கு மேல் அரசியல் துறைப்  பொறுப்பாளர் இருப்பார். இது அரசியல் துறைக்கு மட்டுமல்ல,நிதித்துறை, படைத்துறை, புலனாய்வுத் துறை முதலாக எல்லாத்  துறைகளுக்கும் இருந்தது. இந்த கட்டமைப்புகளுக்கு ஊடாகத்தான் எண்பதுகளில் எல்லா இயக்கங்களும் வளர்ச்சிபெற்றன.

எனவே தமிழ்த் தேசிய அரசியலை பாரம்பரிய தொழில்சார் அரசியலாகக் கருதாமல், புரட்சிகரமான மிதவாத அரசியலாகக் கருதுபவர்கள், பயில்பவர்கள் முதலில் செய்யவேண்டியது கட்டமைப்புச் சார்ந்து சிந்திப்பதுதான். எதையும் கட்டமைப்புக்குள்ளால் சிந்தித்தால்தான் நல்லகண்ணுகளை தலைவர்கள் ஆக்கலாம். கெட்டகண்ணுகளை பொதுவாழ்வில் இருந்து தோற்கடிக்கலாம்.

https://www.nillanthan.com/8184/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.