Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முதலைகளின் தீப்பாடல் - நீலாவணை இந்திரா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முதலைகளின் தீப்பாடல்

நீலாவணை இந்திரா

முதலைகளின் தீப்பாடல்

ஹாவ்கின்ஸின் துப்பாக்கியிலிருந்து வெளிப்பட்ட தோட்டாக்கள் இரண்டும் எனது இதயத்தை துளைத்து வெளியேறிய கணத்திலேயே, நான் மரித்துவிட்டேன். தோட்டாக்கள் என்றால் அவை சாதாரண உலோகக்குண்டுகள் தான், ஆனாலும் அதிவேகத்தோடு அவை, எனது இதயத்தை துளைத்து முதுகினூடாக வெளியேறும் போது வெடிமருந்து நிறைந்த கைவண்டியில் நான் தவறி விழுந்தேன். எனது உடல் சுக்கல் சுக்கல்களாக வெடித்துச் சிதற, எனது தலை மட்டும் உடலை விட்டுப் பிரிந்து தனித்து விழுந்தது. இது எல்லாம் நடந்து முடிந்த பின்னரும், கொழும்பின் அடிமைத் தீவைச் சுற்றியே அலைந்து கொண்டிருக்கும் எனது ஆன்மாவிற்கு சொல்ல வேண்டிய கதையொன்று உள்ளது. அந்தக் கதையில் இந்த அடிமையானவன் செத்துப் போனான் என்ற முடிவை வாசகர்களாகிய நீங்கள் எதிர்பார்க்கக் கூடாது, என்பதற்காகவே நான் மரித்துவிட்ட செய்தியை ஏற்கனவே உங்களுக்கு தெரியப்படுத்துகின்றேன். நான் ஒரு தேர்ந்த கதைசொல்லியல்ல. ஆனாலும் இந்த துயர்நிறைந்த கதையை சொல்லியே தீரவேண்டும். முன்னும் பின்னுமாக எனக்குத் தெரிந்த உங்கள் மொழியில், இந்தக் கதையை எனது ஆன்மா உங்களுக்குச் சொல்ல விளைகிறது. அவைகளைக் கோர்த்து உங்களுக்குப் புரியும்படி கதையாக்கிக் கொள்ளுங்கள். கொஞ்சம் பொறுமையாக வாசியுங்கள்…

இப்போது எனது கதை ஆரம்பமாகின்றது.

1
மாரி காலம் – கொழும்பின் அடிமைத்தீவு

நான் மரித்துப் போன அந்த ராத்திரியில் கொழும்பு முழுவதும் கடும் மழை கொட்டித் தீர்த்துக் கொண்டிருந்தது. கோட்டைக்குள்ளும் அதன் வெளிப்புறமும் ஆளரவமற்ற சூழலுடன், மந்தமான அமைதி நிலவியது. அந்த நிமிடங்களில் கொலைவெறித் தாக்குதலொன்றை நிகழ்த்தி முடித்துவிட்டு, கீழே கிடந்த துருப்பிடித்திருந்த இரட்டைக் குழல் துப்பாக்கியை எடுத்துக்கொண்டேன். குள்ளச் சிப்பாயின் நசுக்கப்பட்ட தலையிலிருந்து வடிந்த குருதி பேர வாவியின் நீரோடு சங்கமித்த தருணத்தில் எனது முகத்தை துடைத்தபடி நிமிர, புயல் வீசுவதற்கான அறிகுறியாக அம்மயான அமைதி மாற்றமடைந்தது. உருக்குச் சட்டத்தினையும், துப்பாக்கியையும் எடுத்துக் கொண்டு இருளோடு இருளாக மறைந்து நின்ற வேளையில் கூட லூக் ஹாவ்கின்ஸ் உடைய முகமே எனக்குள் தோன்றி மறைந்தது. கொடூரமான ஒரு வெள்ளையன் என்றால் அது அவனாகத்தான் இருக்க முடியும். ‘டோ’ வகைக் கப்பல்களின் கேப்டனாக அவன் இருந்தான். கிழக்கு ஆப்பிரிக்காவிலிருந்து கிடைத்த அனைத்து அடிமைகளையும் ஸ்பானிய நாட்டிற்கும், தென் பிராந்திய நாடுகளுக்கும் கடத்தி பெரும் பணமீட்டிக் கொண்டிருந்தவன், கள்ளிக் கோட்டைத் துறைமுகத்தில் தங்கியிருந்த பறங்கியினருக்கும், கொழும்பில் கோட்டை புனரமைப்பில் ஈடுபட்டிருந்த சக வெள்ளையர்களுக்கும் அடிமைகளை விற்றுத் தீர்த்தான். அவன் வாங்கி வந்த மலாய் அடிமைகளையும், இங்கு தேவாலயங்கள் மற்றும் வீடுகள் கட்டும் பணிகளுக்காக விற்கத் தொடங்கினான்.

நெடுவலாக வளர்ந்திருக்கும் ஹாவ்கின்ஸ், கொஞ்சம் பருமனான உடலுடையவன். அவனது பகுதி சிதைந்த இடது கண்ணின் உருட்டலோடு அடிமைகளை கசக்கிப் பிழிந்து காரியம் சாதிப்பதில் வல்லவனாக இருந்தான். செம்பட்டை மயிர்களோடும், நீளமான உடைகளோடும் மிடுக்கான அதிகாரத் தோரணையுடன் நடந்து வரும் போது தனது வளைந்த தொப்பியினை கைகளுக்குள் திணித்துக் கொள்வான். சிறிய ரக இரும்புத் துப்பாக்கியொன்றை தனது இடுப்பில் எப்போதும் வைத்துக் கொள்பவன், அதை எந்த அடிமைகள் மீதும் பயன்படுத்தியதில்லை. அவனுக்கு ஒரு அடிமை செத்தாலும் அது மூலம் கிடைக்கும் வருவாய் இல்லாமல் போய்விடும் என்பதால் எவ்வளவு சித்திரவதைகளைச் செய்கின்ற போதும், அவன் அடிமைகளுக்கு மரண தண்டனையை வழங்குவதில்லை. முள் கொண்ட சவுக்கினால் அடித்துச் சித்திரவதை செய்த பின்னர் கடல் நீரினை காயங்கள் மீது ஊற்றி, கதறித் துடிக்கும் அடிமைகளைப் பார்த்து ரசிக்கும் வெறி கொண்டவன். பின்னர் அடிமைகளின் கைகளையும் கால்களையும் சங்கிலியினால் பிணைத்து கப்பலின் அடித்தள இருட்டறைக்குள் அவர்களை வாரக்கணக்கில் அடைத்து வைத்து நத்தைகளை தின்ன விடுவான். இவன் செய்யும் சித்திரவதைகளுக்கு மரணமே பெரிது என்று நடுக்கடலில் குதித்துவிடும் அடிமைகளையும் சுறா மீன் தூண்டிலால் கொழுவி எடுத்து மீண்டும் கப்பலின் அடித்தளத்தில் போட்டு சித்திரவதை செய்வான்.

முக்காசாவையும் என்னையும் இப்படிச் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கியே இந்த தீவிற்கு அழைத்து வந்தான். கிழக்கு ஆப்பிரிக்காவின் துறைமுகத்திற்குக் கப்பல் கட்டும் பணிகளுக்காக எங்களை அழைத்து வந்த வெள்ளையன் மலிவான விலையில் எங்களை ஹாவ்கின்ஸிற்கு விற்றுவிட்டான்.

சங்கிலியில் பிணைக்கப்பட்ட நிலையிலேயே இந்த அடிமைத்தீவிற்குக் கொண்டு வரப்பட்டோம். அவர்கள் எங்களைச் சங்கிலியில் பிணைத்து வைத்திருப்பதற்குக் காரணமிருந்தது. எங்களைப் போன்றே அடிமைகளாகக் கொண்டுவரப்பட்டவர்கள், கோட்டையின் காறை பெயர்ந்த மதிற் சுவர்களைத் திருத்தும் பணிகளில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எங்கள் எஜமானர்களான வெள்ளையர்கள், அடிமைகளாக வந்தவர்களின் கைவிலங்குகளை அகற்றியே அவர்களை வேலை வாங்கினர். சந்தர்ப்பம் கிடைத்த நாளொன்றில் கோட்டைக்குள்ளிலிருந்து தப்பிய அடிமைகள், வெள்ளைப் பிரபுவின் வீட்டைத் தீயிட்டுக் கொழுத்தி துறைமுகத்தை நோக்கி ஓடிய வேளையில் பிடிபட்டனர். அதிலிருந்து அடிமைத்தீவிற்கு வெளியில் அவர்களை எப்போதும் சங்கிலியில் பிணைத்து வைத்திருப்பதே சட்டமாக்கப்பட்டது என்பதைப் பின்னாளில் அறிந்து கொண்டேன்.

அடிமைத் தீவைச் சுற்றிப் பேர வாவி ஓடிக்கொண்டிருந்தது. ஆழமான அவ்வாவியினூடாக கொழும்பின் பிற பகுதிகளை அடைய முடியாது. வடக்குத் திசையில் கோட்டையும், வர்த்தகக் கட்டிடங்களும், கொழும்புத்துறைமுகமும் காணப்பட்டன. அதில் வெள்ளைப்பிரபுக்கள் தங்களது அதிகாரத்தை நிலைநாட்டியிருந்தனர். அவர்களது குடியிருப்புகளும் மாளிகையும் கூட கோட்டைக்குள் பாதுகாப்பான இடத்திலேயே நிர்மாணிக்கப்பட்டிருந்தன. ஆழமான பேர வாவியைச் சூழ சிப்பாய்களுடன் கூடிய காவற் கோபுரங்கள் குறைவாகவே இருந்தன. அதற்கும் மேலாக வாவியினுள் உப்பு நீர் முதலைகள் அட்டகாசம் செய்து திரிந்தன. முதலைகள் என்றால் ஒன்று இரண்டு அல்ல, அதிகமானவை மிக அதிகமானவை. நீளமான உடலுடன் ஊத்தைப் பச்சை நிறத்தில் பாசி படர்ந்த முதுகுடன் அவை கோட்டையைக் காவல் செய்தன. அவைகளைப் பற்றி பின்னர் சொல்கிறேன். எங்களைப்பற்றி முதலில் சொல்லிவிடுகின்றேன்.

தினமும் காலையில் பேர வாவியைக் கடந்துவரும் வள்ளங்களில் துப்பாக்கி ஏந்திய சிப்பாய்கள் வருவார்கள். நாங்கள் வரிசைகளில் நிற்போம். அங்கு கறுப்பு நிறத்திலும், பழுப்பு சேர் மஞ்சள் நிறத்திலும், பொதுவான கோப்பிக் கொட்டகையின் நிறத்திலும் அடிமைகள் காத்திருப்பர். ஒவ்வொருவராக சங்கிலியில் பிணைக்கப்பட்ட பின்னர், அந்த இடத்திற்கு, இதோ செத்து மிதக்கின்றானே அந்தக் குள்ளச் சிப்பாய் வருவான். அவன் ஒரு மலாய்க்காரன். டச்சுக்காரர்கள் காலத்திலிருந்து அவர்கள் பரம்பரை பரம்பரையாக சிப்பாய்களாக இருக்கின்றனர். வலுவான தேகமுடையவன். பூவின் நறுமணம் வீசும் அத்தரினைத் தனது நீண்ட தாடியில் பூசிக்கொண்டு நாற்றம் பிடித்த வார்த்தைகளைப் பேசிக் கொண்டு அலைபவன். அடிமைகளைப் பின்னங்கால்களில் உதைத்து, கீழே தள்ளி, அவர்களில் தலையில் முஷ்டியால் பலமிக்க மட்டும் அவன் அடிக்கும் போது சர்வமும் மறைந்துவிடுவதை நான் உணர்ந்திருக்கிறேன். இத்தனைக்கும் என்னில் பாதியளவு உயரமே இருக்கும் அவனிடம் எப்படி இவ்வளவு காட்டுயானையின் பலமிருக்கின்றது என்பதை நான் ஒவ்வொரு பொழுதிலும் யோசித்ததுண்டு. அவனைக் காட்டுயானை என்று சொல்வதில் தவறொன்றுமில்லை. கிழக்கு ஆப்பிரிக்காவில் கோடை நிலவும் போது, கொங்கோ காடுகளை அடைவதற்காக, நாடுகளைக் கடக்கும் யானைகள், வழியில் தென்படுகின்ற பெருங்காட்டை அடித்து, உடைத்து, நொறுக்கித் தனக்கான வழியை உருவாக்கிக் கொள்வது போலத்தான் இவனும் எங்களை நொறுக்கித்தள்ளி மூக்கை உடைத்துப்போடுவான்.

அவனது சித்திரவதைக்கு ஆளாகும் போதெல்லாம் முக்காசா, அக்கா…. என்று வீறிட்டு உடைந்து அழுவான். அந்தத் தருணங்களில், முடோனியின் ஞாபகங்கள் என்னை வாட்டத் தொடங்கும். அடிமைத்தீவின் குடிசைக்குள் உழலும் போதெல்லாம் நான் முடோனியை நினைக்காத நாட்களே இல்லை. அவளுக்கு நான் நினைத்ததைப் போன்றே ஆண் குழந்தை பிறந்திருக்கும். இங்கு வந்து எவ்வளவு நாட்களாகிவிட்டன என்று கூட ஞாபகமில்லை. எங்கள் நாடுகளில் தெரியும் வேட்டைக்காரன் நட்சத்திரத் தொகுதி இந்த அடிமைத்தீவின் வானத்திலும் தெரிந்தது. அந்த வானத்து வேட்டைக்காரன், ஹாவ்கின்ஸ் போல கைத்துப்பாக்கியோடு அல்லாமல் பெரும் வாளுடன் வானத்தில் நிற்கின்றான். அதன் தோற்றத்தையும், பெயர்வையும் எண்ணிக் கணக்கிட்டுக் கொண்டே வருடங்கள் ஓடுவதை நான் கணித்துக் கொண்டிருந்தேன். இந்த நாட்களிலெல்லாம் முடோனி, என் கனவுகளில் சஞ்சரித்துக் கொண்டேயிருந்தாள். எங்களுக்கென்று சொந்தமாக ஒரு நிலமிருந்தது. அதில் எனது மகன் கருத்த சுருள் சுருள் தலைமயிருடன் விளையாடிக் கொண்டிருந்தான். அவள் சோளம் விதைகளை விதைத்துக் கொண்டிருந்தாள். தூரத்தில் பருத்திக் காடுகளில் இருந்து எமது ‘சாவோ’ மக்கள் பாடிய படியே குடிசைகளை நோக்கி வருகின்றனர். முடோனி பாடல் வருகின்ற திசையை நோக்கி ஓடோடிச் சென்று தன் நியதிடி இசைக்கருவியின் தந்திகளை அதிரச் செய்கிறாள். அது காற்றில் கரைந்து அடிமைத் தீவெங்கும் பரவுகின்றது, கூடவே குள்ளச்சிப்பாயும் ஓடி வந்து பின்னங்காலில் மிதித்துத் தலையில் ஓங்கி அடிக்கவே, விழிப்பு வந்துவிட குடிசையின் விட்டத்தையே பார்த்துக் கொண்டு இருந்திருக்கிறேன். கர்ப்பமான நிலையில் அவளை விட்டுப் பிரிந்திருக்கக் கூடாது என்று அடிக்கடி நினைத்திருக்கிறேன். ஆனாலும் அடிமையாக இத்தீவில் உழலுவேன் என்று எப்போதும் நான் நினைத்ததேயில்லை.

(மன்னிக்கவும் நான் சொல்ல வந்ததை மறந்து என்னைப் பற்றிப் பிதற்றிக் கொண்டுவிட்டேன்.)

ஹாவ்கின்ஸைக் கொல்லுமளவிற்கான கோபம் இந்த அடிமைக்கு ஏற்பட்டதற்கான காரணம், வலுவாக இருந்தது. எனக்கு மட்டுமல்ல அடிமைத் தீவில் இருந்த அத்தனை பேருக்கும் அவனை இன்று இராத்திரிக்குள்ளேயே கொன்று கிடத்த வேண்டும் என்கிற ஆத்திரம் மேலிட்டது. அவன் வவ்வேயின் வாழ்வையே சிதைத்து வீசிவிட்டான். எனது கண்பார்வையிலே வளர்ந்த அவனுக்கு இழைக்கப்பட்ட அநீதி எவ்வளவு கொடுமையானது என்பதை நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். எனக்கு மட்டுமல்ல, அவனது பழுப்பு நிற மனைவிக்கும் அது எவ்வளவு பெரிய இழப்பாக இருக்கும். அதை தாங்கிக் கொள்ளும் சக்தி அவளுக்கு இருக்கப் போவதில்லை. ஏன் அடிமைத் தீவில் இருக்கும் எவருக்கும் அந்த நாள் சந்தோஷகரமானதாக இருக்கப் போவதில்லை. இந்தப் பாழாய்ப் போன வெள்ளையனுக்கும், குள்ளச் சிப்பாய்க்கும் இப்படியொரு கொடூர மனம் இருந்திருக்கும் என்பதை நான் கனவிலும் நினைத்தில்லை.
இந்தக் கொடூரத்தை நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டுமானால் வவ்வேயின் கதையிலிருந்தே அதை நான் கூறவேண்டும் என நினைக்கிறேன்.

2

வவ்வேயின் கதை

இந்த அடிமைத்தீவிற்கு எவ்வாறு நாங்கள் கொண்டுவரப்பட்டோமோ அப்படியே வவ்வேயும் இன்னும் சிலரும் அழைத்துவரப்பட்டனர். அவன் சிறுவனாக இருக்கும் போதே இங்கு கொண்டு வரப்பட்டுவிட்டான். காவி படிந்த ஊத்தைப் பற்களுடன் சாம்பல் கம்பளியொன்றை உடலில் சுற்றியபடி இந்த அடிமைத் தீவிற்கு அவன் வந்திறங்கிய நாட்களை என்னால் மறக்க முடியாது. உடலெங்கும் தீக்காயங்களுடனும், சித்திரவதை செய்யப்பட்ட நிண உடலுடனும் அவன் வந்திருந்த போது பேசுவதற்கு என்னிடம் வார்த்தைகள் இருக்கவில்லை. பாவம், அவனிடமும் வார்த்தைகளிலிருக்கவில்லை. முக்காசாவின் குடிசைக்குள் வவ்வேயைத் தள்ளிவிட்ட குள்ளச் சிப்பாய் இவனைக் கட்டிட வேலைகளுக்காகத் தயார்படுத்து எனும் உத்தரவினை ஏவினான்.

அன்று முழுவதும் வானத்தை வெறித்தபடி பார்த்துக் கொண்டே இருந்தான். அவனுக்கு, என்னிடம் சொல்ல ஏதாவது உள்ளதா என்று பார்த்தேன். ஆனால், அவன் யாருடனும் பேசுவதற்குத் தயாராயில்லை. பசிக்கிறது, தண்ணீர் வேண்டும் இப்படி எதையும் அவன் கேட்கவில்லை. முக்காசா அவனை அழைத்த போதும் கூட தூரத்தில் கடற்கரைக்கு மேலாகப் பறந்து கொண்டிருந்த காகங்களையே உற்றுப் பார்த்தபடியிருந்தான். சற்று நேரத்தில், மீளவும் வானத்தைப் பார்க்கத் தொடங்கிவிடுவான்.

தினமும் காலையில் வள்ளங்களில் ஏறி கோட்டைக்குள் வேலைக்குச் செல்லும் முன்பு, அடிமைகளுக்குக் காலை உணவு வழங்கப்பட்டது. ஆளுக்கு ஓர் உருண்டை குரக்கன் களியும், பச்சை மிளகாயொன்றும் வழங்கப்பட்டன. அதை வாங்கவும் வவ்வே வரவில்லை. நான் முக்காசாவின் குடிசையையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

‘வவ்… வா…. வா….வவ்வவ்வவ்…..’
‘குட்டி நாயே யாரைப் பார்த்துக் குரைத்துக் கொண்டிருக்கிறாய்… இது அடிமைத் தீவு, இங்கு வந்தவர்கள் எல்லோரும் வேலை செய்துதான் பிழைக்க வேண்டும்…. இப்படியே வானத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதற்கு நீ வரவில்லை எழும்பி நட…. குரக்கன் களி தருவார்கள் தின்றுவிட்டு வள்ளத்தில் ஏறு….’ எனச் சினந்தான் முக்காசா.

வவ்வேயிடமிருந்து எந்தப் பதிலுமில்லை.

அடிமைத் தீவில் இருப்பவர்கள் எல்லோருக்குமே குள்ளச்சிப்பாயின் கொடூர முகம் தெரியும். அவன் ஒரு வேலையைத் தந்து யாரும் செய்யாமல் இருந்தாலோ அல்லது மறந்து போனாலோ கூட, அவர்களை அன்று இரவு முழுவதும் சித்திரவதை செய்தே சாகடிப்பான். இது எதையும் உணராதபடிக்கு அவன் இருந்து கொண்டிருந்தது முக்காசாவிற்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

வவ்வேயை எட்டி முதுகிலேயே உதைத்தவன். ‘உன்னை நான் அழைத்தேனல்லவா கழுதையே… நேற்றிலிருந்து தின்னவுமில்லை, குடிக்கவுமில்லை…. வானத்தையே விக்கி விக்கிப் பார்த்துக் கொண்டிருக்கிறாயே… எங்களைப் போன்றவன் தானே நீ… நான் பேசும் பாஷை உனக்குப் புரியவில்லையா?.. இது அடிமைத் தீவு. இங்கு நீ வேலை செய்துதான் ஆக வேண்டும். குள்ளச் சிப்பாய் வந்தால் உன்னைக் கொன்று குழியிட்டுப் புதைப்பான்… எழும்பி நட குட்டி நாயே… என்று அவனை உலுப்பினான்.

குரக்கன் களி தின்பதற்காக வரிசையில் நின்று கொண்டிருந்த நான் ஓடிச்சென்று முக்காசாவைத் தடுத்தேன்.
கண்கள் இரண்டும் குளமாகி நிற்க ஈனஸ்வரத்தில் வவ்வே… வவ்வவ்வவ்…. வா….. என்று அழுதபடியே விரல்களால் தனது நாக்கையும் காதையும் அசைத்து வவ்வவ்வா… என்றான்.

ஆம், அவனுக்குப் பிறப்பிலிருந்தே பேசவும் முடியாது, காதும் கேளாது என்பதை நான் அக்கணம் புரிந்துகொண்டேன். அவனுக்கு, அவனது நிலையைப் புரிய வைப்பதற்கு, எனக்குச் சில காலம் எடுத்தது. தினமும் முக்காசாவுடன் வேலைக்குச் செல்வதும் அங்குள்ள எடுபிடி வேலைகளைச் செய்து மீண்டும் திரும்புவதுமாக இருந்தான். ஒரு கட்டத்தில் முக்காசாவும், அவனும் நல்ல கூட்டாளிகள் போன்று ஆயினர். இந்த அடிமைத்தீவிற்குப் பழங்குடியினரின் எதுவித அடையாளங்களுமற்ற ஒரு அடிமையாகவே அவன் வந்து சேர்ந்தான். அழுக்கான தேகமுடையவன் ஆனால், அவனது கண்கள் மட்டும் மின்னல் வீச்சை போன்று இருப்பதால் மின்னல், முழக்கத்தை, மழையுடன் சேர்த்துத் தருகின்ற கடவுளது பெயரை அவனுக்கு வைக்க நினைத்தேன். ஆனால், அவனோ, யார் எதைக் குறித்துக் கேட்டாலும் வவ்வவ்வே… என்று ஊமை பாஷை பேசியபடியே அலைந்ததால், அவனுக்கு வவ்வே என்ற பெயரே அடிமைத் தீவு முழுவதிலும் நிலைத்துவிட்டது. எடுபிடி வேலைகளைச் செய்யும் அடிமையாகவே இருந்த வவ்வேயிடம் இன்னுமொரு திறமையும் இருந்தது.

பேர வாவிக்குள் இருக்கும் முதலைகளைப்பற்றிப் பின்னர் சொல்கிறேன் என்று சொன்னேனல்லவா… அதைக்குறித்துச் சொல்கிறேன்… கேளுங்கள்…

அடிமைத்தீவைச் சுற்றியோடும் பேர வாவிக்குள் திரிகின்ற நீண்ட முதலைகளை வேட்டையாடும் பழக்கம் ஹாவ்கின்ஸிற்கு இருந்தது. சுறா மீன் தூண்டில்களில் மீன்களைக் கட்டி, வாவிக்குள் வீச அதை நோக்கி வரும் முதலைகளை அப்படியே கொழுவி கரைக்கு இழுத்து விடுவான். முதலையின் இறைச்சி சுவையாக இருப்பதாகவும், அது கோழி இறைச்சியைப் போல் மிருதுவானவை என்றாலும் ருசி அதிகமானது என குள்ளச்சிப்பாய் அடிக்கடி கூறுவான். வெள்ளைப்பிரபுக்களின் விருந்தில் முதலைக்கறி பிரதான இடம் வகித்தது. சேற்று முதலைகளைப் போலவே இருக்கும் பேர வாவியின் முதலைகள் அங்கு தங்குகின்ற பறவைகளையும், மீன்களையும் தின்று தின்று நன்கு கொழுத்திருந்தன. அவை அதிகளவில் இருந்த போதிலும் அவற்றைப் பிடிப்பது அவ்வளவு சுலபமாயில்லை. அவை மாலை வேளைகளில் மட்டுமே பெரும்பாலும் கரைக்கு வரும். தங்களது பெரும் வாய்களை ஆவென்று திறந்தபடி சூரியனை நோக்கித் தவமிருக்கும். இதைப் பார்க்கும் போதெல்லாம் எங்களது ‘சாவோ’ மக்கள் தீப்பாடலைப் பாடுவதைப் போன்றே அது இருக்கும். வாவியைச்சூழ கரையேறும் முதலைகள் சூரிய வெப்பத்தையும் அதன் ஒளியையும் உடலில் வாங்கிக்கொண்டு பெரும் பற்கள் தெரியும் படி இருக்கும் காட்சி தூரத்தில் இருந்து பார்க்கும் எவருக்கும் அச்ச உணர்வையே ஏற்படுத்தும். கரையில் இருக்கும் முதலைகள் அவ்வெளியில் சிறு சலனத்தை உணர்ந்தாலும் மீண்டும் தாவிக்குதித்து வாவியின் ஆழத்திற்குச் சென்றுவிடும். இவ்வாறு தந்திரம் கொண்ட முதலைகளை வேட்டையாடுவது மிகவும் கடினமான ஒன்றாக இருந்தது.

வவ்வே இதற்கொரு வழியைக் கண்டுபிடித்து குள்ளச்சிப்பாயிடம் விளக்கினான். அன்றிலிருந்து அந்தத் திட்டம் அமலுக்கு வந்தது. சூரியன் மறைவதற்கு முன்பே ஹாவ்கின்ஸ் துப்பாக்கியுடன் வந்தான். குள்ளச் சிப்பாயும், வவ்வேயும் முதலை வேட்டைக்காகத் தயாராகியிருந்தனர். தடிகளைக் குறுக்காகக் கட்டி அதில் கோழி இறைச்சியைத் தொங்கவிட்டனர். அதன் கீழே மீன்பிடி வலைகள் விரிக்கப்பட்டன. கோழி இறைச்சியின் ரத்தத்தை அந்தக் கரையெங்கும் தெளிக்க அந்த இரத்த வாடையின் வீச்சம் பேர வாவிக்குள் இருந்த முதலைகளை ஒவ்வொன்றாக வெளி நோக்கி ஈர்த்தது. தூரத்தில் மரத்தோடு இருக்கும் பாறையின் மேலே துப்பாக்கியோடு ஹாவ்கின்ஸ் தருணம் பார்த்து அமர்ந்திருந்தான். சிறியது, பெரியது என முதலைகள் கோழியின் இறைச்சியைத் தின்பதற்காக வெளியேறி வந்தபடியிருந்தன. பெரும் முதலையொன்று தனது கால்களால் வலையை மிதித்தபடி, கொழுவி வைக்கப்பட்ட கோழியைக் கவ்வத் தலையுயர்த்திய அக்கணத்தில் ஹாவ்கின்ஸ் அதன் அடித்தாடையில் தோட்டாவை இறக்கினான். ‘டமார்’ என்ற சத்தம் அந்த அடிமைத்தீவு முழுக்க எதிரொலிக்க புரள நினைத்த முதலை வலையோடு சிக்கிக் கொண்டது. பாறை மறைவிலிருந்த வவ்வேயும், குள்ளச் சிப்பாயும் வலையின் கயிறுகளை இழுத்துப்பிடிக்க இன்னுமொரு வெடி முதலையின் தலையில் விழ, அன்றிரவு கோட்டைக்குள் பெரும் முதலை விருந்து நடைபெற்றது.

அன்றிலிருந்து முதலைத் தூண்டில் செய்து அதற்கு வலை விரிக்கும் வேட்டையாளனாகிப் போனான் வவ்வே. வேட்டை இல்லாத நாட்களிலெல்லாம் கட்டுமான வேலைகளுக்கு முக்காசாவுடன் கோட்டைக்குள் சென்று சுவரை வெண்மையாக்கும் சுண்ணாம்புக் கலவையைத் தயார் செய்து கொடுப்பான். நாளாக நாளாக இந்த அடிமைத்தீவு அவனுக்குப் பழக்கப்பட்டுப் போனது. இதிலிருந்து விடுதலை இல்லை என்பதை அவன் உணர்ந்து கொண்டான்.

பின்னர், இளைஞனான வவ்வே, காதலிக்கவும் கற்றுக் கொண்டான். பழுப்பு நிற அடிமைப் பெண்ணொருத்தியை காதலிப்பதாகக் கூறினான். அடிமைகளுக்கு இரவு உணவாக வழங்கப்படும் கோதுமை மாவில் அவர்கள் ரொட்டி சுட்டுக் கொண்டார்கள். வாரம் ஒரு முறை பாதிப் பேணி அளவிற்குக் கொடுக்கப்படும் கோதுமை மாவில் ரொட்டியைச் சுட்டு தண்ணீரில் நனைத்து உண்டார்கள். முக்காசா தான் எனக்கும், வவ்வேக்குமான ரொட்டிகளைத் தயாரிப்பது வழக்கம், பழுப்பு நிறப் பெண் அவனுக்காக ரொட்டிகளைத் தயாரிக்கத் தொடங்கியதிலிருந்தே அவள், வவ்வேயைக் காதலிப்பதை முக்காசா உணர்ந்து கொண்டான்.

இருவரும் கோட்டைக்குள் தேவாலயம் கட்டும் பணிகளுக்காக வள்ளமேறிய நிலையில், அங்குள்ள பாதிரியார் அவர்களுக்குத் திருமணத்தையும் நடத்தி வைத்தார். பாதிரியாரின் ஆலோசனைக்கு அமைய உலோகத்தட்டுக்களை வைத்து அவர்களுக்கென்றொரு குடிலும் அடிமைத் தீவில் அமைத்துக் கொடுக்கப்பட்டது. வவ்வே…. வவ்வ… வவ்வவ்…. என்று தனது சந்தோஷத்தை அடிமைத் தீவு முழுவதிலும் கூவித் திரிந்தான். அவர்கள் இருவரும் தங்களது முதலிரவை அடிமைத்தீவிலே கழித்தார்கள். முடோனியும் – நானும் இதுபோலத்தான் எங்களது இரவுகளையும் ஒன்றாகக் கழித்தோம். அவளது ஞாபகங்கள் என்னை அன்று பெரிதும் வாட்டின. குடிசைக்குள் இருந்து வெளியே வந்து வானத்திலிருந்த வேட்டைக்காரன் நட்சத்திரத்தைப் பார்த்தேன். அப்போது வவ்வேயின் பழுப்பு நிறக் காதலி முயக்கத்தில் வெகுவாக ஆலிங்கனம் செய்தாள். அது எனக்குள் இத்தனை காலமும் மறைந்திருந்த காமத்தையும், முடோனியின் முகத்தையும், அவளது உடலையும், எங்களது பருத்தித் காடுகளையும், ‘சாவோ’ மக்களையும் ஒரு கணம் உதிர்த்துவிட்டுப் போனது.

3

கோடை காலம் – கிழக்கு ஆப்பிரிக்காவின் பருத்திக் காடு

முடோனி காட்டு விலங்கொன்றிலிருந்து பெறப்பட்ட நரம்புகளை வலிமையான தனது கைகளால் இழுத்துக் கட்டிக் கொண்டிருந்தாள். தீப்பாடல் பாடப்படும் போது நியதிடி இசைக்கருவியை வாசிப்பதற்காகத் தயாராகிக் கொண்டிருந்தவள், முக்கோணச் சட்டமொன்றின் வளைவில் தந்திகளை இணைத்துச் சுருதி சேர்த்துக் கொண்டாள். குழு நடனத்தை ஆடவிருந்த ஆண்கள் அனைவரும் சிவப்பு ஆடைகளை அணிந்து கொண்டிருந்தார்கள். முதுகிழவியின் இறப்பு ‘சாவோ’ மக்களிடையே கனத்த மனத்தை ஏற்படுத்தியிருந்த போதிலும், இறந்தவர்களை மகிழ்வோடு அனுப்பி வைப்பதே எங்களது வழக்கமாயிருந்தது. எனது நண்பனான முக்காசா உடலெங்கும் சாம்பலைக் குழைத்துப் பூசியபடி, நடுவே மூட்டப்பட்டிருந்த பெருந்தீ அருகே தோன்றினான். அவன் தனது தாயின் ஆன்மாவைக் கடவுளிடத்தில் சேர்ப்பிப்பதற்கான தீப்பாடலைப் பெருங்குரலெடுத்துப் பாட ஆரம்பித்த உடனேயே குடி மக்கள் யாவரும் கைப்பிடியளவு தானியத்தோடு அந்த இடத்தை நெருங்கி வந்தனர். சிவப்பு ஆடை அணிந்த ஆண்கள் யாவரும் அவனைச் சுற்றி வட்டமாகத் தோன்றினர். முக்காசா தீப்பாடலின் முதற்கோவையான அழைப்புப் பாடலை மீண்டும் ஒரு தடவை உரத்த குரலில் கூவிக் கூவிப் பாடினான். முடோனி தந்திகளை அதிர்வுறச் செய்தாள். அது காற்றில் ஏற்படுத்திய அலைவுகளில் எனது மேனி சிலிர்த்தடங்கியது. கூடவே சிவோட்டி இசைக்கருவியும் ஊதப்பட அது ஆந்தையின் அழுகுரலைப் போல ஒலியெழுப்பியது. வட்டமாக நின்றிருந்த ஆண்கள் யாவரும் கால்களைத் தூக்கி நிலத்தை மிதித்தனர். கைகளைக் காற்றில் மெதுவாக அசைத்தனர். அவன் அழைப்புப்பாடலை நிறுத்தி முதுகிழவியின் பரம்பரை குறித்துப் பாடத்தொடங்கினான். மெல்ல மெல்ல பாடல் உருக்கமாக மாறிய வேளையில் முடோனி தனது நரம்புக்கருவியின் சில தந்திகளை அருட்டி அதற்கு ஏற்றாற் போல இசையளித்தாள். ஆண்கள் காற்றில் கைகளை அசைத்துக் கொண்டே ஆட்டத்தின் அடவுகளை மாற்றிக் குதிக்கத் தொடங்க, வட்டமான ஆட்டமுறைக்குள் தீ கனன்று கொண்டிருந்தது. இப்போது இறுதியாக வேகமாகப் பாடும் தீப்பாடல் தொடங்கியது. ஆண்கள் மேலும் கீழும் குதிக்கத் தொடங்க, பருத்திக் காடெங்கும் தீப்பிடித்தது போல முக்காசா தீப்பாடலைப் பாடினான். பாடலின் வேகத்திற்கு இணையாக நியதிடியின் எட்டுத் தந்திகளையும் ஒருங்கே அசைத்து அவளும் அவனோடு சேர்ந்து வெறியாட்டத்தில் இறங்கினாள். இருவரும் தீயைச் சுற்றியாட, சிவப்புச் சட்டை ஆண்கள், அவர்கள் இருவரையும் பின் தொடர்ந்தனர். தீயின் மினுமினுப்பில் முக்காசா மற்றும் முடோனியின் ஆட்டம் ஆக்ரோசமாக இருந்தது. சகோதரர்கள் இருவரும் தாயின் ஆன்மாவைக் கடவுளிடம் எத்தி வைத்த கணத்தில் நிலத்தில் கிடையாக விழ பழங்குடிகள் ஓவென்று கத்தியபடி தமது கைகளுக்குள்ளிருந்த தானியத்தைத் தீயில் வீசினர். நான் ஓடோடிச் சென்று முடோனியைத் தூக்கவும், ஆண்கள் முக்காசாவைத் தாங்கிப்பிடிக்கவும் ஆட்டம் நிறைவுற்றது. தீயின் கனதி குறையத் தொடங்க குடிகள் யாவரும் தமது குடிசைகளுக்குத் திரும்பினர்.

அன்றிரவு முடோனியும் நானும் உறவில் ஈடுபடத் தொடங்கினோம். இறந்தவர்களின் ஆன்மா அவர்களது குடும்பத்தை ஆசீர்வதிப்பதாகவும் அவர்களுக்குக் குழந்தைப் பேறை வழங்குவதாகவும் எமது குடிமக்கள் நம்பினர். அவர்கள் இறந்து அடுத்த பௌர்ணமிக்குள் கருவுறும் குழந்தை அவர்களது குணாம்சங்களைக் கொண்டே பிறப்பதாகவும் சொல்லிக் கொண்டனர். முதுகிழவியின் நீடித்த ஆயுளோடு ஒரு ஆண் குழந்தையை வேண்டி முடோனியும் நானும் முயங்கிக் கிடந்தோம். தரையில் கிடந்து என் மீது இயங்கத் தொடங்கியவள் தனது கால்களால் அருகிலிருந்த நீர்க் குவளையைத் தவறுதலாக உதைத்து விட பதறிக் கொண்டு எழுந்தாள். கோடை காலம் என்பதால் நீர் குறைவாகவே இருந்தது. அன்று வீட்டில் இருந்த கொஞ்சம் நீரையும் அவள் தட்டிவிட, பதற்றத்தில் காமத்தைத் தொலைத்த நாங்களிருவரும் நாவறண்ட படியே இரவைக் கழிக்க வேண்டியதாயிற்று.

வெள்ளையர்கள் எங்கள் நிலங்களை ஆக்கிரமித்திருந்தனர். தானியங்கள் விளைந்த நிலமெங்கும் பருத்தியை விதைத்திருந்தனர். அந்தத் தோட்டங்களிலே நாங்கள் வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டோம். அவர்கள் பதிலீடாக, சோளம் விதைகளையும், கடல் மீன்களையும் எங்களுக்கு வழங்கினர். அவ்வப்போது வெள்ளையர்கள் எங்களுக்குப் புகையிலைகளையும் தந்தனர். அவை இந்தியாவிலிருந்து கொண்டுவரப்படுவதாகவும், வெள்ளையர்களின் பெரும் பெரும் கப்பல்கள் தொலைவில் கிழக்கேயுள்ள துறைமுகங்களில் நங்கூரமிடப்பட்டிருப்பதாகவும் கதைகளை அப்போது நான் கேள்வியுற்றேன். துறைமுகப் பணிகளுக்காக அவர்களால் அழைத்துச் சென்றவர்கள் நன்கு செழித்திருந்தார்கள். பருத்திக் காட்டில் தானியங்களையும் விதைக்க அனுமதிக்கப்பட்டார்கள். நாங்கள் கடல் மீன்களுக்காகத் தொடர்ந்தும் பருத்தியின் நுனிகளைக் கிள்ளிக் கொண்டும், களைகளைப் பிடுங்கிக் கொண்டும், பஞ்சினை ஆய்ந்து சேகரிக்கவென்றும் விலங்குகளாக நடத்தப்பட்டுக் கொண்டிருந்தோம்.

சில நாட்களின் பின், அவள் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தாள்.

‘நமது குழந்தை எனது வயிற்றில் வளர்கிறது என்று நினைக்கிறேன்…’

‘ஏன் உனக்கு இரத்தம் படவில்லையா?!…’

‘இல்லை… இரண்டு மாதங்களாக இரத்தம் படவில்லை… ‘

நான் வானத்திற்கும் பூமிக்குமாகக் குதிக்கத் தொடங்கினேன். அது நிச்சயமாக ஆண் குழந்தையாகத்தான் இருக்கும். முதுகிழவியின் அடையாளங்களோடு அவன் பிறப்பான். எங்கள் முதுகுலக் கடவுளான ‘என்காய்’ போல அவன் இருப்பான். என்காயிற்கு இரண்டு குணங்களுண்டு, குடிகளைக் காக்கும் போது நீல நிற உடலில் சாந்தமாகவும், போராடும் போது முதிர்ந்த காட்டுப்பருத்தியின் சிவப்பு நிறத்தில் இருப்பதாகவும் முதுகிழவி கூறுவாள். இவனும் அப்படித்தான் இருப்பான். ‘சாவோ’ குடிமக்களின் காப்பானாக இருப்பான். மீண்டும் பழையபடி எனது தந்தை போல, காட்டிற்கு வேட்டையாடச் செல்வான். நீண்ட தூரம் பயணித்துப் பெருங்கடலிலை அலைக்கழிக்கும் சுறாக்களைப் பிடித்து வருவான். முழுக்குடியினருக்கும் அதனைப் பகிர்ந்தளிப்பான். எனது தந்தை எப்படி ‘சாவோ’ மக்களைக் காப்பாற்றினாரோ அப்படியே அவன் இருப்பான். என்னைப்போல வெள்ளையர்களுக்கு ஊழியம் செய்து கொண்டு அவர்கள் தரும் சிறு உப்புமீன்களுக்காகத் தனது வியர்வையை இந்தப் பருத்திக் காடுகளில் சிந்தமாட்டான். உயர்ந்த மேட்டு நிலமொன்றில் என்னைப் புதைத்துவிட்டு எனக்கான தீப்பாடலையும் அவன் சகாக்களுடன் நடனமாடியபடியே அவன் பாடுவான் என்று நினைத்து நினைத்து மகிழ்வுற்றேன்.

முடோனியின் வயிறு மெல்ல மெல்ல வளருகையில் எனது மனதில் பயம் தொடர்ந்து கொண்டே போயிற்று. முழு நிலத்தையும் வெள்ளையர்கள் பருத்திக்காக உழுது விட்டிருந்தார்கள். வனத்தின் பெருமரங்களையும் அவர்கள் விட்டுவைக்கவில்லை. துறைமுகத்தில் வேலை செய்தால் மட்டுமே தானியங்களை விதைக்கக் கூடிய நிலத்தை வெள்ளையர்களிடமிருந்து பெற்றுக் கொள்ள முடியும். எனவே கடினமான கப்பல் கட்டும் துறைமுக வேலைக்குச் செல்வதற்காக என்னை நான் தயார்படுத்திக் கொண்டேன். விரைவில், நல்ல உணவுப் பொருட்களோடு பருத்தித் காட்டை மீண்டும் அடையும் எண்ணம் எனக்கிருந்தது. முக்காசாவும் என்னோடு பயணமாவதற்கு ஒத்துக் கொண்டான். ஆனால் முடோனியை மட்டும் என்னால் சமாளிக்கவே முடியவில்லை. அவளுடனான நெடு நேரப் போராட்டத்திற்குப் பின் அவள் வயிற்றில் வளரும் எனது குழந்தை மீது சத்தியம் செய்துவிட்டு நானும், முக்காசாவும், மேலும் சிலரும் வெள்ளையர்களோடு துறைமுகத்தை நோக்கிப் பயணமானோம்.

இத்தனை நினைவுகளும் என்னில் ஓடி மறைந்த பின்னரும் வானத்தின் நடுவே வேட்டைக்காரன் இன்னும் தனது வாளுடன் அப்படியே நின்று கொண்டிருந்தான்.

4

இறுதியாக, மாரி காலம் – கொழும்பின் அடிமைத்தீவும், கோட்டை தேவாலயமும்.

அன்றைய தினம், சூரியன் அஸ்தமிக்கும் வேளையில், வவ்வேயின் மனைவி பிரசவ வலியால் துடித்துக் கொண்டிருந்த போது, நாங்கள் தேவாலயத்தினுள் குழந்தை இயேசுவைத் தாங்கியபடி இருக்கும் மரியாள் சிலையினை ஸ்தாபிக்க நினைத்தோம். வெள்ளைக்காரக் கட்டிடக்கலை நிபுணர்கள் அந்த அழகிய சிலையின் பிரம்மாண்டத்தையும், மரியாளது சிலைகளுடன் இணைக்கப்படாதவாறு தனித்தனிருந்த குழந்தை யேசுவையும் அதன் வார்ப்பையும் எண்ணி மகிழ்ந்து கொண்டிருந்தனர். வவ்வே உயிரற்று அங்கு நடக்கும் வேலைகளைக் கவனித்துக் கொண்டிருந்தான். மரியாளது கைகளில் குழந்தை யேசுவின் சிலையைப் பொருத்தி அதன் இடுக்குகளில் சிறிது சாந்தினை மெழுகி அதனை உயரத்தூக்கி நிறுத்த வேண்டியது எங்களது வேலையாயிருந்தது.

பலமிக்க மட்டும் சிலையை உயர்த்தினோம், இன்னும் மேலே, இன்னும் மேலே உயர்த்த அந்த தேவாலயத்தின் மையத்தில் தாயொருத்தியின் கனத்த மௌனம் நிலவிய அதேவேளை, பழுப்பு நிறப் பெண் வீறிட்ட சத்தத்துடன் அடிமைத்தீவில் முனகிக் கொண்டிருந்தாள். மெல்லிய உடலை உடைய முக்காசா சாளரத்தின் மீதேறி, பலகை வழியே நடந்து குழந்தை யேசுவைப் பொருத்த முயல, வவ்வே தனது கண்களை மூடிக் கடவுளே… என் குழந்தையைக் காப்பாற்றும் என வேண்டினான். யாரும் எதிர்பாராத வகையில் குழந்தை யேசுவின் சிலை முக்காசாவின் கைகளில் இருந்து கீழே விழுந்து உடைந்து, அதன் சில்லுகள் தேவாலயத்தின் பரப்புகளெங்கும் துண்டங்களாக வெடித்துச் சிதறின. வெடித்துச் சிதறிய குழந்தை இயேசுவின் சிலையின் கரங்கள் வவ்வேயின் பாதங்களைத் தொடவும், அவன் துணுக்குற்று விழி திறந்து தன் பாதங்களை நோக்க, அங்கே அடிமைத்தீவின் குடிசைக்குள் ஒரு ஆண் குழந்தை வவ்வே….. எனும் சத்தத்துடன் ஜனித்தது.

தேவாலயமே களேபரமானது, எல்லோரும் எல்லாத் திசைகளிலும் ஓடினர், காவலர்கள் பலகை மீதிருந்த முக்காசாவைப் பிடித்துக் கீழிறக்கி தமது சப்பாத்துக் கால்களால் மிதித்தனர். அனைத்து அடிமைகளையும் ஒன்றாக்கி வந்த வேளையில், வவ்வே மட்டும் சிதறிக்கிடந்த ஒவ்வொரு துண்டங்களையும் சேகரிக்கத் தொடங்கினான்.

இதே நேரம், வவ்வேயின் குடிலுக்குள் புகுந்த குள்ளச் சிப்பாய், பழுப்பு நிறப் பெண்ணின் கைகளில் இரத்தம் தோய்ந்தபடியிருந்த குழந்தையைப் பறித்தெடுத்து, அடிமைத்தீவின் சாலைகளில் நடக்கத் தொடங்கினான். தீவில் இருந்தது சில பெண்கள் மட்டுமே. அவர்கள் அதனைத் தடுக்க முடியாமல் தள்ளாட, இரத்தத்தில் நனைந்த தனது கீழாடையுடன் வவ்வேயின் மனைவி, தனது குழந்தையை நோக்கி ஓட்டமெடுத்தாள். ஆனாலும் அவன் மிகவும் வேகமாகத் தெருவைக்கடந்து வெளியேறினான். அதே நேரம் ஹாவ்கின்ஸ் தனது துப்பாக்கியுடன் தயாராக இருந்தான். குள்ளச்சிப்பாய் குழந்தையைக் கைகளில் ஏந்தித் தலைகீழாகக் கவிழ்த்து கயிற்றில் இறுகக் கட்டினான். வவ்வேயின் குழந்தை சுவாசப்பை நிறைந்த காற்றில் வீறிட்டழுதது. பேர வாவியை நோக்கி நடந்த குள்ளச் சிப்பாய் முதலைத் தூண்டிலில் கோழியைக் கொழுவும் இடத்தில், வவ்வேயின் குழந்தையைக் கொழுவி வலையை விரித்தான். குழந்தையின் வீறிட்டழும் சத்தம் அடிமைத்தீவெங்கும் நிறைந்தது. ஹாவ்கின்ஸ் முதலையின் வரவுக்காகத் துப்பாக்கியோடு காத்திருந்தான்.

நேரம் கடக்க, பெரும் முதலையொன்று கரையேறியது. அது ஹாவ்கின்ஸின் துப்பாக்கிக் குறியில் இருந்து தவறி, அந்த ஆண்குழந்தையை ஒரு கடியாகக் கடித்து இழுத்துச் சென்ற வேளையில் எங்கள் வள்ளங்கள் அடிமைத்தீவை நோக்கிப் புறப்பட்டிருந்தன.

அடிமைத்தீவில் ஆக்ரோசமாக இருந்தவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது. குள்ளச் சிப்பாயோடு சேர்ந்து கொண்ட வெள்ளையர்கள் குதிரைகளில் அமர்ந்திருந்தவாறே மக்களைத் தாக்கினர். எல்லோரும் தங்களது குடில்களை நோக்கிப் பதுங்கத் தொடங்கிய வேளையில், அடிமைத்தீவின் வாசலில் மயங்கிக் கிடந்த வவ்வேயின் மனைவி மீதும், வள்ளத்தில் வந்திறங்கிய வவ்வே மீதும் தாக்குதலை நிகழ்த்தத் தொடங்கினர். அவனது தலையில் ஓங்கியடித்துச் சிறைக்குள் இழுத்துச் சென்றான் குள்ளச்சிப்பாய். அவனது திறந்த கண்கள் என்னைப் பார்த்தபடியே மூட, அவன் மயக்க நிலையை அடைந்தான்.

இந்தத் துயர் நிறைந்த கதையைத்தான் நான் உங்களுக்குச் சொல்ல நினைத்தேன். இது அத்தனைக்கும் பிறகே எனது கொலைத்தாக்குதலுக்கான காரணம் பிறந்தது.

இறுதியாக இன்னுமொன்றையும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

அடுத்த நாள் இந்த அடிமையானவனின் தலை, பேர வாவியின் ஓரத்தில் தொங்கவிடப்பட்டது. அடிமைகள் எல்லோரும் அவ்விடத்தை நோக்கி வந்தனர். கைகால்கள் உடைக்கப்பட்ட நிலையில் வவ்வேயையும் அந்த இடத்திற்குத் தூக்கி வந்தனர். வவ்வே பெருங்குரலெடுத்துக் கதறி அழுதான். பொருமினான். விம்மி விம்மி அழுதான். தனது உடைந்த கால்களை நிமிர்த்தி மேலெழுந்தான். அவனது இடது கண்ணில் இருந்து ஒரு கண்ணீர்த்துளி தரையில் வீழ்ந்தது. வெம்மை மிகுந்த அவனது கண்ணீர் அடிமைத்தீவைச் சூடேற்றியது.

அப்போது, அவன் வவ்வே… வவ்வவ்வவ்வவ்வே…. எனப் பெருங்குரலெடுத்துப் பாடினான். எனது ஆன்மாவிற்கு அவனது ஊமைப்பாஷையை மொழி பெயர்க்கத் தெரிந்திருந்தது.

வவ்வே பாடினான் ஊமை பாஷையில்….

முதுகிழவியின் பேரன் நானே…

முடோனியின் மகன் நானே…

எனது தந்தையைப் போன்றவரே நீங்கள் எனக்காக இறந்தீரே….

https://thadari.com/the-fire-songs-of-the-alligators-nilavanai-intira/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.