Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ்க் கட்சிகளை ஒருங்கிணைப்பது : சட்டத்தரணிகளால் முடியுமா? - நிலாந்தன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்க் கட்சிகளை ஒருங்கிணைப்பது : சட்டத்தரணிகளால் முடியுமா? - நிலாந்தன்

1772534090-photo-1-cccc.png

கொழும்பில் தமிழ் சட்டத்தரணிகள் பேரவை என்ற அமைப்பு தமிழ்த் தேசிய நிலைப்பாட்டைக்  கொண்ட கட்சிகளை ஒரு மேசையில் அமர்த்தியிருக்கிறது. அந்தச் சந்திப்பின் விளைவாக வெளிவந்த செய்திகளின்படியும், உத்தியோகபூர்வ அறிக்கையின்படியும், அரசாங்கம் ஒரு புதிய யாப்பை உருவாக்குமாக இருந்தால் அதைத் தமிழ்க் கட்சிகள் ஒன்றாக எதிர்கொள்வது என்று முடிவெடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது. அந்த முடிவின்படி சமஸ்டி அடிப்படையிலான ஒரு தீர்வை நோக்கி உழைப்பது என்றும், அதற்காக இலங்கையில் வாழும் சமூகங்களுக்கு இடையிலான சமூக ஒப்பந்தம் ஒன்றை முதலில் எழுதிக்கொள்ளவேண்டும் என்றும் முடிவெடுக்கப்பட்டதாகத் தெரிகிறது.

நல்ல விஷயம். சட்டத்தரணிகளே பெரும்பாலும் தமிழ் அரசியலைக் கையாளும் ஒரு மிதவாதப் பாரம்பரியத்தில், சட்டத்தரணிகளின் அமைப்பு ஒன்று இவ்வாறு கட்சிகளை ஒருங்கிணைக்க முன்வந்திருப்பது சில சமயம் பயன்பொருத்தமாக அமையலாம்.

கடந்த 16 ஆண்டுகளாக தமிழ்க் கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சிகளில் சிவில் சமூகங்கள்,மதத் தலைவர்கள்,மறைமுகமாக தூதரகங்கள் போன்ற பல்வேறு தரப்புகள் முயற்சித்திருக்கின்றன.ஆனால் இந்த முயற்சிகள் எவையும் முழுவெற்றி பெறவில்லை மட்டுமல்ல,அண்மையில் சுவிட்சர்லாந்து தூதரகத்தின் அனுசரணையோடு ஏற்பாடாகியிருந்த ஒரு சந்திப்பு பின்னர் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

கடந்த 16 ஆண்டுகால ஈழத்தமிழ் அனுபவத்தைத் தொகுத்துப் பார்த்தால் தமிழ்க் கட்சிகளை ஒன்றாக்கவேண்டும் என்ற முயற்சி தொடர்ச்சியாக இடம்பெற்று வருகிறது. விக்கிரமாதித்தன்-வேதாளம் கதைபோல தன் முயற்சியில் மனம்தளராத குடிமக்கள் சமூகங்கள் தொடர்ந்து தமிழ்க் கட்சிகளை ஒருங்கிணைப்பதில் ஆர்வம்காட்டி வருகிறார்கள். இதில் ஒரு தொடர்ச்சியைக் காணலாம்.அதேசமயம் தமிழ்க் கட்சிகளை ஒன்றிணைக்க வேண்டியதன் அவசியத்தை குடிமக்கள் சமூகங்கள் எப்பொழுதும் உணர்ந்துள்ளன என்பதையும் இது காட்டுகிறது. இது முதலாவது தொகுக்கப்பட்ட அனுபவம்.

இரண்டாவது தொகுக்கப்பட்ட அனுபவம்,இந்த முயற்சிகள் எல்லாவற்றையும் ஏதோ ஒரு கட்டத்தில் குழப்பியது பெரும்பாலும் தமிழரசுக் கட்சிதான். அதற்கு பிரதான காரணம் என்னவென்றால், அதுதான் உள்ளதில் பெரிய கட்சி.எனவே தானே முதன்மை வகிக்கவேண்டும் என்று அது எப்பொழுதும் எதிர்பார்க்கின்றது. தானே தலைமை தாங்கும் கட்சி என்றும் அது மார் தட்டிக் கொள்கிறது. அதனால் ஒருங்கிணைப்பு முயற்சிகள் தன்னைப் பலவீனப்படுத்தக்கூடாது என்ற முன்எச்சரிக்கை எப்பொழுதும் அந்தக் கட்சியிடம் உண்டு.

அதைவிட முக்கியமாக, இந்தச் சமாதான முயற்சிகளை முன்னெடுக்கும் சிவில் சமூகங்கள் பெரும்பாலும் கஜேந்திரக்குமாருக்கு நெருக்கமானவை என்றும் தமிழரசுக் கட்சியிடம் ஒரு முற்கற்பிதம் உண்டு. இதில் ஒருபகுதி உண்மையுண்டு. எனவே தேர்தல்கள்மூலம் தனது முதன்மையை நிரூபிக்க  முடியாத தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியியானது,சிவில் சமூகங்களுக்கு ஊடாக தன்னை முன்னுக்கு கொண்டுவர முயற்சிக்கிறது என்று தமிழரசுக்கட்சி நம்புகின்றது.

அதனால் கட்சிகளை ஒருங்கிணைக்க முற்படும் சிவில் அமைப்புகளை தமிழரசுக் கட்சி சந்தேகத்தோடு பார்க்கின்றது அல்லது ஒரு வித ஒவ்வாமையோடு பார்க்கின்றது. அதன் விளைவாக அந்த ஒருங்கிணைப்பு முயற்சிகள் ஏதோ ஒரு கட்டத்தில் குழப்பப்படுகின்றன. கடைசியாக சுவிட்சர்லாந்து தூதரகத்தின் அனுசரணை முயற்சிகள் இடைநிறுத்தப்பட்டதையும் இந்தப் பின்னணிக்குள் வைத்துத்தான் விளங்கிக் கொள்ள வேண்டும்.

எனவே கடந்த 16 ஆண்டுகளாக தமிழ்க் கட்சிகளை ஒருங்கிணைக்க முடியாமல் போனதற்கும் தமிழ் ஐக்கியத்தை பாதுகாக்க முடியாமல் போனதற்கு அடிப்படைக் காரணம் தமிழரசுக் கட்சியின் முடிவெடுக்கும் அதிகாரத்தில் இருப்பவர்கள்தான். அவர்கள் தங்களை முதன்மைக் கட்சி என்று கூறிக் கொண்டால் அவர்கள்தானே அதற்குப் பொறுப்பு? எனவே கட்சிகளை ஒருங்கிணைக்கும் வேலைகளில் ஈடுபடுகிறவர்கள் முதலில் செய்ய வேண்டியது என்னவென்றால்,தமிழரசுக் கட்சிக்குள் தீர்மானிக்கும் அதிகாரத்தோடு இருப்பவர்களை தமது வழிக்குக் கொண்டு வருவதுதான்.

இப்படிப்பட்ட தொகுக்கப்பட்ட அனுபவங்களின் அடிப்படையில் சிந்தித்தால், இப்பொழுது சட்டத்தரணிகள் அமைப்பு முன்னெடுக்கும் முயற்சிகளில் இரண்டு விடையங்கள் தீர்மானகரமானவைகளாகத் தெரிகின்றன.

முதலாவது,இந்த முயற்சியை முன்னெடுக்கும் சட்டத்தரணிகளில் பிரதானிகளாகக் காணப்படுபவர்களுக்கும் கட்சிகளின் முக்கியஸ்தர்களாகக் காணப்படும் சட்டத்தரணிகளுக்கும் இடையிலான உறவு எப்படி இருக்கிறது என்பது. அதிலும் குறிப்பாக சுமந்திரனுக்கும் தமிழ் சட்டத்தரணிகள் பேரவையில் பிரதானிகளாகக் காணப்படுபவர்களுக்கும் இடையிலான உறவு சுமுகமானதா என்பது. ஏனென்றால் அவர்கள் ஒரே துறைக்குரியவர்கள்.

இரண்டாவது விடயம்,இதற்குமுன் முன்னெடுக்கப்பட்ட ஒருங்கிணைப்பு முயற்சிகள் தோற்றுப் போனதற்கு ஒரு காரணம், சிவில் சமூகங்களிடம் அழுத்தங்களைப் பிரயோகிக்கும் பலம் இருக்கவில்லை என்பதுதான். தமிழ் சட்டத்தரணிகள் பேரவைக்கு அவ்வாறான சக்தி உண்டா?ஏனென்றால் தனியாக அனுசரணை மட்டும் செய்வதனால் அதாவது சம்பந்தப்பட்ட தரப்புகளை ஓரிடத்தில் உட்காரவைத்து அவர்களுக்கு இடையில் இருக்கக்கூடிய முரண்பாடுகளைத் தீர்க்கும் விடயத்தில் ஒர் இடை நடுவராகச் செயல்படுவது என்பது அனுசரணை மட்டும்தான். இதற்குமப்பால் சிலவேளை அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டிவரலாம்.அதற்கு ஒரு பலம் வேண்டும்.கடந்த 16 ஆண்டுகளிலும் தமிழ்ப் பரப்பில் எந்த ஒரு சிவில் சமூகத்துக்கும் அப்படிப்பட்ட பலம் இருக்கவில்லை. இப்பொழுதும் தமிழ் சட்டத்தரணிகள் பேரவைக்கு அவ்வாறு அழுத்தங்களைப் பிரயோகிக்கும் சக்தி இருக்கிறதா?

ஒரே துறைக்கு உரியவர்கள் என்பதனால் கட்சித் தலைவர்கள் அவர்கள் சொல்வதை சிலசமயம் செவிமடுக்கலாம். அல்லது தொழில்சார் போட்டி பொறாமை, ஈகோக்கள் இதில் செல்வாக்குச் செகுத்தலாம்.”ஒரே உறைக்குள் இரண்டு வாள்கள் இருப்பதில்லை”.

எனவே,மேற்சொன்ன இரண்டு அடிப்படைகளிலும் சிந்தித்தால் தமிழ் சட்டத்தரணிகள் பேரவையின் முயற்சி வெற்றி பெறுமா? கடந்த 74 ஆண்டு கால தமிழ்த் தேசிய அரசியலை “அப்புக்காத்து அரசியல்” அல்லது “கறுப்புக் கோட்டு அரசியல்” என்று அழைப்பதுண்டு.ஏனென்றால் சட்டத்தரணிகள்தான் அங்கே பெரும்பாலும் பிரதானிகளாகக் காணப்பட்டார்கள்.வாதாடும் திறமையுள்ளவர்கள்தான் நாடாளுமன்றத்தில் வாதாடி தமிழ் மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பார்கள் என்று தமிழ்மக்கள் அப்பாவித்தனமாக நம்பிய காலம் அது.ஆனால் சட்டத்தரணிகளின் அரசியல் கடந்த 75 ஆண்டுகளாக தமிழ் மக்களை எங்கே கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது?

கட்சிக்குள்ளேயே ஒருவர் மற்றவருக்கு எதிராக வழக்கு போடுவது; தங்களுக்கு எதிராக விமர்சிப்பவர்களை வழக்கு போடுவோம் என்று விரட்டுவது; அல்லது வழக்கு போடுவது… போன்ற விடயங்களில்தானே ஒரு பகுதி தமிழ் சட்டத்தரணி அரசியல்வாதிகள் தமது திறமைகளைக் காட்டுகிறார்கள்?

ஆனால் நீதிக்கான தமிழ் மக்களின் போராட்டத்தில் உள்நாட்டு நீதியின் விரிவைப் பரிசோதிக்கும் விடயங்களில் இவர்கள்  வெற்றிகள் எத்தனை?

ஆயுதப் போராட்டத்திற்கு முன்னரான அப்புக்காத்து அரசியலில், “தமிழர் விடுதலை கூட்டணி” ஒரு முக்கிய அடைவு. தேர்தல் தோல்விகளின் விளைவாக ஏற்பட்ட ஓர் ஐக்கியம் என்று அதுதொடர்பாக விமர்சனங்கள் இருந்தாலும், தமிழ்க் கட்சித் தலைவர்கள் தங்களுக்கு இடையில் ஓர் உடன்பாட்டுக்கு வந்து அவ்வாறு ஓர் ஐக்கிய முன்னணியை உருவாக்கியமை குறிப்பிடத்தக்கது.

ஆனால் ஆயுதப் போராட்டத்திற்குப் பின்னரான கடந்த 16 ஆண்டுகளிலும் ஏற்கனவே இருந்த பலமான கூட்டு ஆகிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சிதைக்கப்பட்டு விட்டது.தமிழரசுக் கட்சியும் இரண்டாக நிற்கிறது. கடைசியாக நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழரசுக் கட்சிக்குக் கிடைத்த அதேயளவு ஆசனங்கள்தான் அரசாங்கத்துக்கும் கிடைத்தன. அது வெற்றி அல்ல.தோல்வி. அதை வெற்றியாகக் கொண்டாடுவது அதைவிடப் பெரிய தோல்வி.இப்படிப்பட்ட ஒரு தோல்விகரமான பின்னணியில்,தாங்களாக இணைய முடியாத தமிழ்க் கட்சிகளை சட்டத்தரணிகளே ஒருங்கிணைக்க முன்வந்திருப்பது வெற்றியளிக்குமா?

https://www.nillanthan.com/8200/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.