Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அப்பாச்சி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அப்பாச்சி

கை விளக்கு நெருப்புப் பெட்டி சுங்கான் புகையிலைப்பெட்டி தனக்கே உரியதான தடித்த தலையணை தலையணையின் கீழ் வைக்க வாங்குப்பலகை தண்ணீர்ச் செம்பு முதுகுக்கு விரிக்கும் பழைய சேலை வியர்வை துடைக்க துவாய் எல்லாம் சரியாக இருக்கிறதா என்று ஒருமுறை நோட்டமிட்டவர் ஏதோ ஒரு பொருள் குறைவது கண்ணில்பட அவசரமாக முற்றத்துக்குச் சென்று வேலியோர மறைவில் கவிழ்த்து வைக்கப்பட்டிருந்த எச்சில் படிக்கத்தை எடுத்து மண் அரைவாசிவரை நிறைத்துக் கொண்டுவந்து தலைமாட்டின் பக்கத்தில் வைத்தபின் ஒரு நிம்மதிப் பெருமூச்சுடன் அரச கொலுமண்டபத்துக்கு விஜயம் செய்யும் மன்னனின் கம்பீரத்துடன் கால்களை நீட்டிப் போட்டபடி அமர்ந்த அப்பாச்சி புகையிலைத் துண்டங்களை அளவாகப் பிய்த்து சுங்கானில் அடைக்கத் தொடங்கினார்.

இத்தனை அட்டகாசத்துடன் படுக்கைக்கு வருவதை தினமும் பார்த்துப் பழகிய எனக்கு இது ஒரு புதினமாகத் தெரியவில்லை. யாராவது புதிதாக இந்த ஆரவாரங்களைப் பார்த்தால் “என்ன இது? ஓர் இரவு படுத்து எழும்புவதற்கு இத்தனை அட்டகாசமா”? என்று வியந்து போவார்கள். இது மட்டுமா? சனிக்கிழமை இரவு வந்தால் போதும். ஞாயிற்றுக் கிழமை விடிய 5 மணிக்கு ஆரம்பிக்கும் பூசைக்கு சனிக்கிழமை இரவே ஓடிஓடி ஆயத்தங்கள் நடக்கும். தனது உள்ஆடை தொடக்கம் சீப்பு வரை அத்தனையும் முன் கதிரையில் வீற்றிருக்கும். ஞாயிற்றுக் கிழமை 4 மணிக்கே எழுந்து தேனீர் தயாரித்து என்னையும் எழுப்பி தேனீர் குடிக்க வைத்து உடை அணிய ஆரம்பித்து விடுவார். சரியாக 4.30 க்கு என் கையைப் பிடித்தபடி வீதியில் இறங்கி விடுவார். வீதி மை இருட்டாக இருந்தாலும் பயப்பட மாட்டார். நான் அப்பாச்சியின் கையைப் பிடித்தபடி கண்களை இறுக மூடிக் கொள்வேன். அவரது நடையின் வேகத்திற்கு நான் ஓடிஓடி நடக்கவேண்டி இருக்கும். ஆலயம் அப்பொழுதுதான் ஒரு கதவு திறக்கப்பட்டு ஆயத்தங்கள் நடந்து பொண்டிருக்கும். எது எப்படி இருந்தால் என்ன? அப்பாச்சி ஆலயக் கிறாதியின் முன் முதலாம் இடத்தில் உட்கார வேண்டும். ஏனக்கு தூக்கம் கண்ணைச் சுழற்றும். என்ன செய்வது? ஆப்பாச்சியை எதிர்த்துப் பேசமுடியாதபடி என்னைக் கட்டுப் படுத்துவது எது? பயமா? பாசமா?

இரவு கண்விழித்துப் பார்த்தால் யன்னல் கம்பிகளினூடே தெரியும் நிலா வெளிச்சத்தில் சுங்கானில் அடைத்த புகையிலையை ஊதி ஊதி இழுத்து அதன் சுகத்தில் லயித்துப் போய் இருப்பார். வியர்வை காலத்தில் தன்னைச் சுற்றிப் படுத்திருக்கும் அனைவருக்கும் வியர்வை துடைப்பது குளிர் காலத்தில் விலகிக்கிடக்கும் போர்வையை மார்புவரை இழுத்துப் போர்த்தி விடுவது எல்லாமே எம் அப்பாச்சிதான். தினமும் இரவு 10மணி தொடக்கம் 11மணிவரை நாங்கள் அவரைச் சுற்றி இருந்து கதை கேட்பது அன்றாட நிகழ்ச்சி. அரச குமாரி கதை ஆலமரப் பேய் அலிபாபா மங்கம்மா சபதம் இப்படி அவரது கற்பனை கலந்து நாம் கேட்டறியாத கதையே இல்லை. இன்றைக்கு 25 வருடங்களுக்கு மேலாகியும் எம் நினைவுகளில் அந்தக் கதைகள் பதிந்திருக்கிறதென்றால் அவர் கதை கூறும் பாங்கே அலாதிதான். ஒரு திரைப்படம் பார்ப்பது போல அண்ணாந்து வாய்திறந்து அத்தனை பேரும் மணிக்கணக்காகக் கதை கேட்டுக்கொண்டிருப்போம்.

சில நாட்களில் தனது சிறு பராயத்துக் கதைகளையும் சொல்வதுண்டு. அதிலிருந்து நாம் விளங்கிக் கொண்டது அப்பாச்சி பாலியத்தில் விவாகமாகி இருபது வயதுக்கு முன்பாகவே விதவையானவர். 18ம் நூற்றாண்டின் இறுதியில் பிறந்து 19ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் 6ம் வகுப்பு படித்ததாகப் பெருமையாகக் கூறுவார். கை எழுத்துக்கூட போடத்தெரியும். ஆனால் மெய் எழுத்துகளுக்கு புள்ளி இருக்காது. புள்ளி இல்லாத கோலமாய் அழிந்து போன இல்வாழ்க்கையைப் பற்றி அவர் என்றுமே அலுத்துக் கொண்டது கிடையாது.

ஆறுவயதிலேயே தந்தையை இழந்த என் அப்பாவின் குடும்பத்திற்கு சிறியதாயாரான இவர் தாயாய் தந்தையாய் எல்லாமாய் தன் இளமையை வேள்வியாக்கியவர். தன் அக்காவின் பிள்ளைகளை மட்டுமல்ல பேரக் குழந்தைகளையும் வளர்த்து படிப்பித்து ஆளாக்கி தன்னையே தேய்த்து தன்னைச் சுற்றியுள்ளோரை மணம் வீச வைத்த சந்தணம் இவர்.

எனக்குத் தெரிந்து அப்பாச்சி என் குடும்பத்தில் ஒருவர். நிமிர்ந்த நடை நேர்கொண்ட பார்வை கம்பீரமான உருவம் . அவர் எங்கிருந்தாலும் கலகலப்புக்குக் குறைவில்லை. கடுமையான பேச்சுக்கும் குறைவில்லை. மற்றயவர்களுக்கு பொல்லாதவராகக் காட்சியளிக்கும் இவர் எனக்கும் என் சகோதர சகோதரிகளுக்கும் மிகவும் மென்மையானவர். எம்மீது கொண்ட அதீதமான அன்பின் வெளிப்பாடுதான் மற்றவர்களுக்கு பொல்லாதவராக இருக்கக் காரணம் என்று நான் பலமுறை உணர்ந்துகொண்டிருக்கின்றேன். என் தந்தையை இறுதிவரை ஒரு குழந்தையைப் போல்தான் மனதில் சுமந்தார். இதனால் என் அம்மாவுக்கும் அவருக்கும் கருத்து வேற்றுமை ஏற்படுவது சகஜம். இருந்தும் மறுவினாடியே மனங்கள் சங்கமமாகிவிடும்.

கிறிஸ்மஸ் தினம் . இது வருடா வருடம்தான் வருகிறது. இருந்தும் இன்னும் நான் அவருடன் கழித்த கிறிஸ்மஸ் தினங்களை மறக்காமல் இருக்கக் காரணம் உண்டு. இரவு 12மணிக்கு ஆரம்பிக்கும் பூசை முடிந்து வீடு வர 2மணியாகிவிடும். வீடு வந்ததும் 5-6 தேங்காய்கள் உடைத்து கழுவி வரிசையாக வைக்கப்பட்டிருக்கும் . பழைய பானையை தலைகீழாக வைத்து இதற்கென விசேடமாகச் செய்த மூன்று அடுப்புகள் கரி அப்பச்சட்டி மேலே வைக்க நெருப்புச்சட்டி தட்டை அகப்பை மாப்பானை எண்ணைத்துணி எல்லாமே ஆயத்தமாக இருக்கும். நூங்கள் தேங்காய் துருவி பால் எடுத்துக் கொடுக்கவேண்டியதுதான் மாவை பக்குவமாகக் கரைத்து பால் அப்பம் வெள்ளை அப்பம் பனங்கட்டி அப்பம் என்று விதவிதமான அப்பங்கள் சுட்டு அடுக்கிக் கொண்டே இருப்பார். எங்கள் வயிறுகளை நிரப்பித் திருப்திப்படும் ஒரு ஆன்மா அவர். இறுதியாக வாழைப்பழம் சீனி பயறு எல்லாம் போட்டு அடி அப்பம் சுட்டு வைத்திலுப்பார். அதன் சுவை இன்றும் என் நாவில் நீர் சுரக்க வைக்கிறதென்றால் அவர் கைப் பக்குவமே தனிதான்.

சிறு வயதிலேயே வாழ்க்கையில் அடிபட்டு நொந்துபோன தன்மை சிறிதும் அவரிடம் கிடையாது. ஒரு மகாராஜா வீட்டு செல்லப் பெண்போல மனத் தெளிவோடு பேசுவார். நாங்கள் சமையலறையில் வேலையாக இருந்தால் போதும் அவருக்கு முகம் வாடிவிடும். “பிள்ளையள் நீங்க சட்டிபானை கழுவிக் கொண்டு இருக்காமல் நல்லாப் படிச்சு வேலைக்குப் போங்க” இப்படி அடிக்கடி சொல்லுவார். அப்போது புரியாத அந்த வார்த்தைகளின் அர்த்தம் புரிந்து கொண்டபோது அதைப் புரிய வைத்த அந்த புழுதியில் விழுந்த பூமாலை உயிருடன் இல்லை. ஆம் அவர் சமையலறையிலேயே தன் இனிக்கும் இனமையை மிளகாய்த்தூளுடனும் புளியுடனும் கரைத்து இளமைக் கனவுகளை குழம்புடன் கொதிக்க வைத்தவர்.

எங்கள் வீட்டின் பின்புறம் வீதியைக் கடந்தால் சிவன் கோவில். திருவிழாக் காலத்தில் சிவன் கோவில் சின்ன மேளம் கூத்து கச்சான் கடலை வியாபாரம் மிட்டாய் பலூன் என்று களை கட்டும். பாட்டுச் சத்தம் காதைக்கிழிக்கும். இரவு முழுவதும் நாடகங்கள் நடைபெறும். வெள்ளி சனி இரவுகளில் அப்பாச்சியின் தலைமையில் எங்கள் குழு அதாவது அண்ணன் நான் தம்பிமார் தங்கைகள் எல்லோரும் மெதுவாகச் சத்தமின்றி எழும்பி அடங்காப்பிடாரி சிறீவள்ளி இன்னும் பல நாடகங்கள் பார்த்துவிட்டு வந்து சத்தமின்றி படுத்துத் தூங்கியதுண்டு. என் பெற்றவர்களுக்கு இந்த நாடகம் தெரியும். தெரிந்தும் தெரி;யாததுபோல் விட்டு விடுவார்கள். அப்பாச்சி எமக்குச் சிறந்த தோழி . யாரும் தீங்கு செய்தால் பத்திரகாளி.

அப்பாச்சியின் இணைபிரியாத் தோழி ஒருவர் காலப்போக்கில் ஒரு மில் சொந்தக்காரியானார். ஆதனால் பெரிய இடத்துச் சினேகிதம். இவர் அந்தச் சினேகிதியின் பங்களாவில் செல்லப்பிள்ளை. வருடத்தில் 2-3 மாதங்கள் அங்கு விடுமுறையைக் கழிப்பார். தோழமை அவர்களுக்குத் தோள்கொடுக்க நட்பு இவர்களது அந்தஸ்தை அடித்துப்போடும். ஆரசியான அந்த சிநேகிதிக்கு மதிநுட்ப மந்திரி இவர்தான். கல்லுக்குள் ஈரம் இருப்பது போல் இந்தக் கம்பீரமான உருவத்துக்குள்ளும் கனிவுகள் இருக்கத்தான் செய்தது. எம் குறும்பகளும் அடாவடித்தனங்களும் எப்படித்தான் அவர் தாங்கிக் கொண்டாரோ.? ஓடிஓடி உழைத்து ஓடாகிப்போன அவரது உருவம் கூடாகிப் போனபின்பும் என் கண்ணின் சூடான நீர்த்துளிக்கு உரிமையானவர் அவர்.

அவரது கழுத்தில் தவழும் கட்டிப் பூரான் அட்டியல் கைகளில் பூட்டுக் காப்பு காதுகளில் எட்டுக்கல் வைத்த சிவப்புத் தோடு அதன் மேல் ஒற்றைக்கல் வைத்த சிறிய சிவப்புத் தோடு உடம்போடு அமைப்பாக இருக்கும் ரவிக்கை கொசுவம் வைத்து கொஞ்சமும் அங்கிங்கு விலகாதபடி கட்டுக்கோப்பாக கட்டியிருக்கும் சேலை அப்பப்போ வாயில் குதப்பும் வெற்றிலை இவையெல்லாம் இன்னும் என்நினைவில் அழியாத கோலங்கள்.

என் இளமைக் காலத்தில் எனக்கு நண்பியாய் மந்திரியாய் நல் ஆசானாய் பண்பிலே தெய்வமாய் பார்வையிலே சேவகியாய் வாழ்ந்து மறைந்த அவர் போட்ட வித்துத்தான் இன்று விதையாகி விருட்சமாகி என் கற்பனைக்குச் சிறகாகியது. 85 வயதுவரை தாயாக மாறாமல் தாலாட்டுப் பாடி தாய்மையாய் எம்மைச் சுமந்து எம் இல்லத்தில் இளவரசியாக வாழ்ந்து மறைந்த அந்த சந்தண மலருக்கு என் இதயத்தால் தினமும் வந்தனை செய்கின்றேன். இன்றும் இந்த கம்பீரமான குரல் காற்றலையில் கேட்காதுவிடினும் என் மன அலைகளில் மலரும் என் நினைவுகளுடன் என் அப்பாச்சி.

உங்கள் "அப்பாச்சியை" பற்றி மறக்காத நினைவுகளை கதை மூலம் சுமந்து வந்த விதம் நன்றாக இருகிறது :) ........இறுதியில் "இளவரசியாக வாழ்ந்து மறைந்த சந்தனமலருக்கு இதயத்தால் அஞ்சலி செலுத்துகிறீர்கள்" என்று சொன்ன போது வேதனையாக இருந்தது!! :rolleyes:

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறவுகள்

அப்பாச்சி

கை விளக்கு நெருப்புப் பெட்டி சுங்கான் புகையிலைப்பெட்டி தனக்கே உரியதான தடித்த தலையணை தலையணையின் கீழ் வைக்க வாங்குப்பலகை தண்ணீர்ச் செம்பு முதுகுக்கு விரிக்கும் பழைய சேலை வியர்வை துடைக்க துவாய் எல்லாம் சரியாக இருக்கிறதா என்று ஒருமுறை நோட்டமிட்டவர் ஏதோ ஒரு பொருள் குறைவது கண்ணில்பட அவசரமாக முற்றத்துக்குச் சென்று வேலியோர மறைவில் கவிழ்த்து வைக்கப்பட்டிருந்த எச்சில் படிக்கத்தை எடுத்து மண் அரைவாசிவரை நிறைத்துக் கொண்டுவந்து தலைமாட்டின் பக்கத்தில் வைத்தபின் ஒரு நிம்மதிப் பெருமூச்சுடன் அரச கொலுமண்டபத்துக்கு விஜயம் செய்யும் மன்னனின் கம்பீரத்துடன் கால்களை நீட்டிப் போட்டபடி அமர்ந்த அப்பாச்சி புகையிலைத் துண்டங்களை அளவாகப் பிய்த்து சுங்கானில் அடைக்கத் தொடங்கினார்.

சில நாட்களில் தனது சிறு பராயத்துக் கதைகளையும் சொல்வதுண்டு. அதிலிருந்து நாம் விளங்கிக் கொண்டது அப்பாச்சி பாலியத்தில் விவாகமாகி இருபது வயதுக்கு முன்பாகவே விதவையானவர். 18ம் நூற்றாண்டின் இறுதியில் பிறந்து 19ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் 6ம் வகுப்பு படித்ததாகப் பெருமையாகக் கூறுவார். கை எழுத்துக்கூட போடத்தெரியும். ஆனால் மெய் எழுத்துகளுக்கு புள்ளி இருக்காது. புள்ளி இல்லாத கோலமாய் அழிந்து போன இல்வாழ்க்கையைப் பற்றி அவர் என்றுமே அலுத்துக் கொண்டது கிடையாது.

நன்றி காவலூர்க் கண்மணி, தேர்ந்த நாவலாசிரியரின் லாவகத்தோடும் மொழி வளத்தோடும் தமிழுக்கு அரிதான பெண் மொழியில் பெண் பார்வையில் அப்பச்சியை பதிவு செய்திருக்கிறீர்கள். அப்பச்சி பயன் படுதியவை சமைத்தவை அப்பச்சியுடன் அளந்த கோவில்களப்பச்சி அளந்த கதைகள் அப்பச்சி அணிந்த ஆபரணங்கள் இவை எல்லாமே நமது எதிர்கால சந்ததிக்காக நனவு அப்பச்சியும் கற்பனை அப்பச்சியுமாக ஒரு நாவலில் பதிவு செய்யப் படவேண்டும்.

உடுவில் மகளிர் கல்லூரி ஆரம்பிததில் இருந்து இன்றுவரைக்குமான ஏழு எட்டு தலைமுறை பெண்களை வத்து ஒரு நாவலை எழுதி முடிக்க அல்லாடும் பொழுது உங்கள் அப்பச்சி வாசித்தேன். சிறு எழுத்தாயினும் கவியத் தன்மை கொண்ட உங்கள் பார்வையில் இருந்து கற்றுக் கொள்ளக் கூடியதாக இருந்தது. தொடர்ந்து எழுதுங்கள். மரபுக் கதைகளில் அப்பச்சி கலந்த கற்பனைகள் அறிய ஆவல்.

அப்பச்சியின் ரவிக்கை பற்றி எழுதியிருந்தீர்கள். யாழ்பானத்தில் ரவிக்கைபோட்ட முதலாம் அல்லது இரண்டாம் தலைமுறை பெண் உங்கள் அப்பச்சி. டச்சுகாரர் காலத்தில் பொதுவாக மார்பை மறைக்கிற வளக்கம் இருக்கவில்லை என தெரிகிறது. தமிழுக்குப் பரவலாக ஆண்களின் மேல்சட்டை (ஜிப்பா) முஸ்லிம்களாதும் ரவிக்கை கிருஸ்துவர்களதும் பங்களிப்புத்தான். பின்னர் 1930களுக்கு பின்னரும் தலித் பெண்களுக்கு ரவிக்கை அணிவது தடுக்கப் பட்டது. இக்கொடுமைகளுக்கு எதிராக போராட்டங்கள் நடை பெற்றிருக்கிறது. 1800களின் பிற்பகுதி 1990 களின் ஆரம்பங்களில் எல்லாம் கோவில் கொண்டாட்டம் திருவிழாவுக்கு சங்கிலி காப்பு இரவல் வாங்கி அணிந்து போறதுபோல உள்ள ஒரு சிலர் வீடுகளில் ஊரார் பாச்சிவடம் என்று அழைக்கப் பட்ட ரவிக்கையை இரவல் வாங்கி அணிந்து செல்வார்களாம். இதுபற்றி எல்லாம் உங்கள் பாட்டி சொல்லியிருப்பார்களே. அவர் சொன்ன எல்லாவற்றையும் ஒரு நாவலில் பதிவுசெய்தால் பயனுள்ளதாக இருக்கும்.

கி.ரா தனது பரம்பரையின் கதைகளைத் தொகுத்து கோபல்லவ கிராமம் என்று ஒரு கதை எழுதியிருக்கிறார். வாசித்துப் பாருங்கள். நேரமுள்ளபோது எனது ஈழத்து மண்னும் எங்கள் முகங்களும் வாசியுங்கள்.

http://noolaham.net/library/books/03/278/278.pdf

உங்கள் அப்பாசி எனது நாவலுக்கு பயனுள்ள அனுபவங்கள். நல்வாழ்த்துக்கள் காவலூர் கண்மணி

Edited by poet

அருமையான ஒரு பதிவைத் தந்தமைக்கு நன்றி காவலூர் கண்மணி.

உங்கள் அப்பாச்சி எனக்கு எனது அம்மம்மாவை நினைக்க வைத்தார்.

:wub: ஆனால் அன்றைய பெண்களிடமிருந்த ஆழுமையும், திறைமையும், துணிச்சலும் இந்த விஞ்ஞானயுகத்தில் வாழும் பெண்களிடமில்லை என்பது எனது தாழ்மையான அபிப்பிராயம். :wub:

காவலூர் கண்மணி நல்ல மொழி ஆழுகையுடனும் அருமையான

வர்ணனைகளுடனும் வெகு அழகாக உங்கள் அப்பாச்சி பற்றிக்

கூறியுள்ளீர்கள். உங்கள் அப்பாச்சி எனது அப்பாச்சியைக் கண்முன்னே

கொண்டு வந்தார். பதிவைப் பகிர்ந்தமைக்கு நன்றிகள்.

:) ஆனால் அன்றைய பெண்களிடமிருந்த ஆழுமையும், திறைமையும், துணிச்சலும் இந்த விஞ்ஞானயுகத்தில் வாழும் பெண்களிடமில்லை என்பது எனது தாழ்மையான அபிப்பிராயம். :(

அது சரி வம்பண்ணா என்ன இது? எப்படி இப்படிஒரு பொய்யை

அதுதான் தற்கால பெண்களிடன் பழைய பெண்களின் ஆழுமை, திறைமை, துணிச்சல் இல்லை

என்று கூற மனம் வந்திச்சு ஆஅ?? உங்கள் கருத்தை நான் வன்மையாக கண்டிக்கிறேன்

அடடா நம்ம இரசிகை

எப்படி போகின்றது புதுமணவாழ்க்கை. எலலோரும் ஆத்திலே சேமம் தானே?? :D

நீங்கள் என்னை வன்மையாக கண்டிச்ச பின்தான், நான் இன்னும் ஒன்றை குறிப்பிட மறந்தது ஞாபகம் வந்தது. அதானுங்க தற்காலப் பெண்ணுங்களுக்கு பொறுமையும் ரொம்பக் கம்மிங்க?? பட்டென்று இதற்கும் ஒரு கண்டன அறிக்கை எடுத்து விட்டுறுங்க!!!! :):(

கண்மணி தொடர்ந்து எழுதுங்கள். அப்பாச்சி பற்றிய உங்களின் அனுபவக் குறிப்பு நன்றாக உள்ளது. இதேபோன்று அம்மா பற்றிய ஒரு உணர்வுப்பதிவு ஒன்று அப்பால் தமிழ் இணையத்தளத்தில் உண்டு. முடிந்தால் அதையும் வாசியுங்கள்:

அம்மா எனக்கொரு சிநேகிதி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அப்பாச்சியை படித்து சுவைத்து பாராட்டி விமர்சனம் எழுதிய யமுனா பொயற் வசம்பு ரசிகை இளைஞன் ;அவைருக்கும் என் நன்றிகள் உங்கள் பாராட்டுக்கள் தொடர்ந்தும் என் படைப்புக்கள் வெளிவர என்னை உற்சாகப்படுத்தும் கை தட்டல்கள் அனைவருக்கும் நன்றிகள்.

அப்பாச்சியைப் பற்றி அருமையாக சொல்லிச் சென்றுள்ளீர்கள்> அப்பாச்சியிடம் கதை கேட்கும்போது உங்களிடம் இருந்த ஆர்வம்சிரிக்க வைக்க்கின்றது.

நல்லா இருக்கு தொடருங்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.