சாதனை படைத்த சாம்பியன்கள்: 2025-ல் கிரிக்கெட் உலகில் நடந்த 10 முக்கிய நிகழ்வுகள்
பட மூலாதாரம்,Getty Images
கட்டுரை தகவல்
பிரதீப் கிருஷ்ணா
பிபிசி தமிழ்
6 மணி நேரங்களுக்கு முன்னர்
2025-ஆம் ஆண்டின் இறுதி கட்டத்தை அடைந்துவிட்டோம். கிரிக்கெட் அரங்கை திரும்பிப் பார்க்கும்போது சர்வதேச மற்றும் உள்ளூர் அரங்கில் பல்வேறு விஷயங்கள் நிகழ்ந்திருக்கின்றன. ஒருசில உலகக் கோப்பைகள், இன்னும் சில பிரதான ஐசிசி தொடர்கள் நடந்திருக்கின்றன. டி20 லீகுகளில் வழக்கம்போல் எதிர்பார்ப்புகளை மிஞ்சிய நிகழ்வுகள் நடந்திருக்கின்றன.
அதேபோல். டெஸ்ட் போட்டிகளிலும் கூட பல முக்கியமான தொடர்கள் பெரும் கவனம் ஈர்த்தன. ஒட்டுமொத்தமாகவே இந்த ஆண்டு கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்திருக்கிறது. பெரும் வெற்றிகள், சாதனைகள், சர்ச்சைகள் என 2025-ல் நடந்த 10 முக்கியமான சம்பவங்களின் தொகுப்பு இங்கே.
இந்தியாவின் பெண்கள் உலகக் கோப்பை வெற்றி
50 ஓவர் உலகக் கோப்பையை முதல் முறையாக வென்று வரலாறு படைத்தது ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி. லீக் சுற்றில் ஒருகட்டத்தில் தொடர்ச்சியாக 3 தோல்விகளை சந்தித்திருந்த இந்திய அணி, அதன்பிறகு சிறப்பாக மீண்டு வந்தது.
7 முறை சாம்பியன் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அரையிறுதியில் உலக சாதனை ஸ்கோரை சேஸ் செய்த இந்தியா, இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி சொந்த மண்ணில் சாம்பியன் பட்டத்தை வென்றது.
பேட்டிங், பௌலிங் இரண்டிலுமே கலக்கிய இந்திய ஆல்ரவுண்டர் தீப்தி ஷர்மா இந்தத் தொடரின் சிறந்த வீராங்கனைக்கான விருது பெற்றார். 22 விக்கெட்டுகள் வீழ்த்திய அவர், தொடரின் டாப் விக்கெட் டேக்கராகவும் தொடர்ந்தார். இந்திய ஓப்பனர் ஸ்மிரிதி மந்தனா, தொடரில் அதிக ரன் எடுத்தவர்கள் பட்டியலில் இரண்டாவது இடம் பிடித்தார்.
பட மூலாதாரம்,Getty Images
டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற தென்னாப்ரிக்கா
1998-ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடரை வென்ற பிறகு தென்னாப்ரிக்க அணியால் ஒரு ஐசிசி கோப்பை கூட வெல்ல முடியாமல் இருந்தது. அரையிறுதி, இறுதி என கடைசி கட்டம் வரை வந்தாலும், கடைசியில் தோற்றுவிடுவார்கள். ஆனால், அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இந்த ஆண்டு டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தைக் கைப்பற்றியது தென்னாப்ரிக்க அணி.
கடந்த 2 ஆண்டுகளும் சிறப்பாகச் செயல்பட்டு இறுதிப் போட்டிக்கு முன்னேறிய அந்த அணி, இறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியனாக விளையாடிய ஆஸ்திரேலியாவைத் தோற்கடித்தது. கடினமான இலக்காகக் கருதப்பட்ட 282 ரன்களை, கேப்டன் டெம்பா பவுமா மற்றும் எய்டன் மார்க்ரம் ஆகியோரின் சிறப்பான பேட்டிங்கின் காரணமாக எதிர்பார்த்ததை விடவும் எளிதாகவே அடைந்தது தென்னாப்ரிக்கா. இன்னும் கூட பவுமாவின் தலைமையில் வெற்றிகரமான அணியாக டெஸ்ட் அரங்கில் வலம் வந்துகொண்டிருக்கிறது தென்னாப்ரிக்கா.
பட மூலாதாரம்,Getty Images
ஆர்சிபி - முதல் கோப்பையும், அதன்பிறகான அசம்பாவிதமும்
தென்னாப்ரிக்காவைப் போல் ஐபிஎல் அணியான ராயல் சேலஞ்சர்ஸும் தங்களின் ஒரு கோப்பைக்காக வெகுகாலம் காத்திருந்தது. 17 ஆண்டுகளாக முயற்சி செய்தும் அவர்களால் சாம்பியன் ஆக முடியாமல் இருந்தது. ஆனால், 2025 சீசனில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது அந்த அணி.
Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading
அதிகம் படிக்கப்பட்டது
சிந்து சமவெளி நாகரிகம் முடிவுக்கு வர என்ன காரணம்? ஆய்வில் புதிய தகவல்
'என் குடும்பத்தினர் தினசரி 7 கிராம் எடுக்கிறார்கள்' - தங்கம் உமிழும் இந்த பாகிஸ்தான் நதியில் என்ன நடக்கிறது?
"அசைவம் இன்றி கந்தூரி உற்சவம்": திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்கா விவகாரம் மீண்டும் சர்ச்சையாவது ஏன்?
பறையா என்ற ஆங்கில சொற்பிரயோகம் தொடங்கியது எப்படி? ஒரு வரலாற்றுப் பார்வை
End of அதிகம் படிக்கப்பட்டது
ஏலத்தின்போது ஒட்டுமொத்தமாக அணியின் கட்டமைப்பை அவர்கள் மாற்ற, களத்தில் அது பெருமளவு அந்த அணிக்குக் கைகொடுத்தது. கோலியோடு சேர்த்து, ரஜத் பட்டிதார், ஜித்தேஷ் ஷர்மா, குருனால் பாண்டியா, புவனேஷ்வர் குமார் என ஒரு இந்திய 'கோர்' உருவாக்கப்பட்டது. முதல் முறையாக அணியை வழிநடத்திய பட்டிதாரும் சிறப்பாக செயல்பட, இறுதிப் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி, ஆர்சிபி கோப்பை வென்றது.
இந்த வெற்றியைக் கொண்டாட ஜூன் 4ம் தேதி பெங்களூரு சின்னஸ்வாமி ஸ்டேடியத்தில் ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், முறையான திட்டமிடல் இல்லாததால், மைதானத்துக்கு வெளியே பெரும் கூட்டம் கூடத் தொடங்கியது. அதைக் கட்டுக்குள் கொண்டுவர முடியாததால், கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட 11 பேர் இறந்தனர். அதோடு ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.
மீண்டும் ஆஷஸ் தொடரைக் கைப்பற்றிய ஆஸ்திரேலியா
உலகின் பிரசித்தி பெற்ற டெஸ்ட் தொடராகக் கருதப்படும் ஆஷஸ், இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்தது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் தொடங்கிய இந்தத் தொடரின் முதல் மூன்று போட்டிகளையுமே வென்று தொடரை மீண்டும் கைப்பற்றியது ஆஸ்திரேலியா. கம்மின்ஸ், ஹேசல்வுட், ஸ்டீவ் ஸ்மித், கவாஜா என பல வீரர்கள் காயத்தால் அவதிப்பட்ட நிலையிலும், அதில் ஒருசிலர் போட்டிகளில் விளையாட முடியாத நிலையிலும் ஆஸ்திரேலியா இந்தத் தொடரைக் கைப்பற்றியது.
பட மூலாதாரம்,Getty Images
பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஆஸ்திரேலியா சென்ற இங்கிலாந்து அணியின் செயல்பாடு அந்நாட்டு ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றமாக விளங்கியது. மேலும், 'பாஸ்பால்' அணுகுமுறையால் அவர்கள் அதிரடியாக ஆட முற்பட்ட விரைந்து ஆட்டமிழந்தது மீண்டும் வல்லுநர்களால் விமர்சிக்கப்பட்டது.
இருந்தாலும், தொடரை இழந்த பிறகு, மெல்போர்னில் நடந்த பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் கம்பேக் கொடுத்து வெற்றி பெற்றது ஸ்டோக்ஸ் தலைமையிலான அணி. இஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோவின் படி, கடந்த 15 ஆண்டுகளில், 16 தோல்விகள் மற்றும் 2 டிராக்களுக்கு பிறகு ஆஸ்திரேலிய மண்ணில் இங்கிலாந்து பெற்ற முதல் வெற்றியாக அது அமைந்தது.
சாம்பியன்ஸ் டிராபியை வென்ற இந்தியா
பட மூலாதாரம்,Getty Images
2017-ஆம் ஆண்டுக்குப் பிறகு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் மீண்டும் நடைபெற்றது. இந்தத் தொடர் முழுவதுமே பாகிஸ்தானில் நடப்பதாக இருந்தது. ஆனால், இந்தியா அங்கு விளையாட மறுத்ததால் இந்தியாவின் போட்டிகள் மட்டும் துபையில் நடந்தன.
தொரின் தொடக்கம் முதல் இறுதி வரை ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி, ஒரு போட்டியில் கூட தோற்காமல் கோப்பையை வென்றது. 2002 (இலங்கையுடன் சேர்ந்து கூட்டு சாம்பியன்), 2013க்குப் பிறகு இது இந்திய அணியின் மூன்றாவது சாம்பியன்ஸ் டிராபி வெற்றியாக அமைந்தது. மேலும், பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தலைமையில் இது இந்தியாவின் முதல் ஐசிசி கோப்பை.
விராட் கோலியின் 52வது ஒருநாள் சதம்
பட மூலாதாரம்,Getty Images
ஒரு ஃபார்மட்டில் அதிக சதங்கள் அடித்த வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்தார் இந்திய வீரர் விராட் கோலி. முன்பு டெஸ்ட் போட்டிகளில் சச்சின் டெண்டுல்கர் 51 சதங்கள் அடித்திருந்தார். அதை ஒருநாள் போட்டிகளில் கோலி முறியடித்தார். தென்னாப்ரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்த சாதனையைப் படைத்தார் விராட் கோலி.
டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் ஓய்வு பெற்றிருந்ததால், கோலியின் செயல்பாடுகள் மீது நிறைய எதிர்பார்ப்புகள் இருந்தன. இந்நிலையில், ராஞ்சியில் நடந்த அந்தத் தென்னாப்பிரிக்க ஒருநாள் தொடரின் முதல் போட்டியிலேயே சதமடித்து தன் ஃபார்மை நிரூபித்த அவர், சச்சினின் சாதனையையும் முறியடித்தார். அதுமட்டுமல்லாமல், அதற்கடுத்த போட்டியிலும் சதமடித்து, தன் ஒருநாள் போட்டி சத எண்ணிக்கையை 53 ஆக உயர்த்தியிருக்கிறார் கோலி.
லாராவின் சாதனையை முறியடிக்காத வியான் முல்டர்
பட மூலாதாரம்,Getty Images
பலரும் சாதனை படைப்பதால், சாதனைகளை முறியடிப்பதால் பேசப்படுவார்கள். கோலியைப் போல். ஆனால், தென்னாப்ரிக்க வீரர் வியான் முல்டர் இந்த ஆண்டு ஒரு சாதனையை முறியடிக்காததற்காகப் பெருமளவு பேசப்பட்டார்.
கடந்த ஜூலை மாதம் புலவாயோவில் நடந்த டெஸ்ட் போட்டியில் தென்னாப்ரிக்கா மற்றும் ஜிம்பாப்வே அணிகள் மோதின. அந்தப் போட்டியில் தென்னாப்ரிக்காவின் கேப்டனாக செயல்பட்டிருந்த வியான் முல்டர் மிகச் சிறப்பாக பேட்டிங் செய்தார். அதிரடியாக விளையாடி முச்சதம் அடித்த அவர், பிரயன் லாராவின் அதிகபட்ச டெஸ்ட் ஸ்கோர் சாதனையை (400 ரன்கள்) முறியடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் 367 ரன்கள் எடுத்திருந்தபோது, அணியின் இன்னிங்ஸையே டிக்ளேர் செய்தார்.
இந்த அதிர்ச்சிகரமான முடிவு பற்றிப் பின்னர் பேசிய அவர், "பிரயன் லாரா ஒரு ஜாம்பவான். அப்படியொரு வீரர் அந்த சாதனையை வைத்திருப்பதுதான் சிறப்பான விஷயம். இப்படியொரு சூழ்நிலை மீண்டும் வந்தால், நான் இதையேதான் அப்போதும் செய்வேன்" என்று கூறி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.
பார்வையற்றோர் உலகக் கோப்பையை வென்ற இந்தியா
பட மூலாதாரம்,Getty Images
பார்வையற்றோருக்கான முதல் மகளிர் டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் நேபாளத்தை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. கொழும்புவில் நடந்த இந்தத் தொடரின் இறுதிப் போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இந்தியா. இதன்மூலம் மகளிர் பார்வையற்றோர் டி20 உலகக் கோப்பையின் முதல் சாம்பியன் ஆனது.
குரூப் சுற்றில் விளையாடிய 5 போட்டிகளையும் வென்றிருந்த இந்திய அணி, அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை தோற்கடித்தது. அதன்மூலம் இந்த உலகக் கோப்பையில் விளையாடிய 7 போட்டிகளையுமே வென்று சாம்பியன் ஆனது இந்தியா.
14 வயதிலேயே வரலாறு படைத்த வைபவ் சூர்யவன்ஷி
பட மூலாதாரம்,Getty Images
2025 ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் வைபவ் சூர்யவன்ஷி பெயர் வந்தபோதே அது ஆச்சர்யமாகப் பார்க்கப்பட்டது. ஆனால், அந்த 13 வயது சிறுவனை அப்போது 1.1 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியது ராஜஸ்தான் ராயல்ஸ்.
அந்த ஐபிஎல் சீசனின் தொடக்கத்தில் பெரிதாக வாய்ப்பு கிடைக்காத அவருக்கு, இரண்டாவது பாதியில் வாய்ப்பு கொடுத்தது ராயல்ஸ் அணி. அதை கெட்டியாகப் பிடித்துக்கொண்ட சூர்யவன்ஷி, யாரும் எதிர்பார்க்காத விதத்தில் ஆடினார்.
தன் முதல் ஐபிஎல் பந்திலேயே சிக்ஸர் அடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்த அவர், இரண்டாவது போட்டியில் சதமே அடித்தார். இதன்மூலம் இளம் வயதில் ஐபிஎல் சதம் அடித்தவர் என்ற சாதனையை அவர் படைத்தார். அதுமட்டுமல்லாமல், 35 பந்துகளிலேயே சதத்தை நிறைவு செய்து, ஐபிஎல் வரலாற்றின் இரண்டாவது அதிவேக சதத்தையும் பதிவு செய்தார் அவர்.
அதோடு நின்றுவிடாமல் இந்தியா ஏ, பிகார் அணிகளுக்கும் தொடர்ச்சியாக சாதனை செயல்பாடுகளாகக் கொடுத்துக் கொண்டிருக்கிறார் வைபவ் சூர்யவன்ஷி.
இந்தியாவின் ஆசிய கோப்பை வெற்றி
பட மூலாதாரம்,Getty Images
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரை இந்திய அணி கைப்பற்றியது. 20 ஓவர் ஃபாமர்ட்டில் நடந்த இந்தத் தொடரின் இறுதி போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தியது. இது இந்தியாவுக்கு 9வது ஆசிய கோப்பை பட்டம். அதேபோல், இந்தியாவின் டி20 கேப்டன் சூர்யகுமார் யாதவ் தலைமையில் இந்தியா முதல் பட்டத்தை வென்றது.
இந்தத் தொடர் முழுவதுமே பல சர்ச்சைகள் ஏற்பட்டுக்கொண்டே இருந்தன. இந்தியாவில் நடக்கவிருப்பதாக இருந்த இந்தத் தொடர், இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையிலான அரசியல் பதற்றத்தின் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்பட்டது.
பின்னர், போட்டிகளின்போது பாகிஸ்தான் வீரர்களோடு கைகுலுக்க இந்திய வீரர்கள் மறுத்தனர். அதுமட்டுமல்லாமல், இரு நாட்டு வீரர்களுமே கொண்டாட்டங்களின்போது ஐசிசி ஒழுங்கு விதிமுறைகளை மீறினார்கள்.
இறுதியாக கோப்பையை ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவரும், பாகிஸ்தான் அரசின் அமைச்சருமான மோசின் நக்வியிடமிருந்து பெற இந்திய அணி மறுத்தது. கோப்பையை நக்வி தன்னோடு எடுத்துச் சென்றதாகக் கூறப்பட்ட நிலையில், ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அலுவலகத்தில் தன்னை சந்தித்து கோப்பையைப் பெற்றுக்கொள்ளுமாறு கூறினார் நக்வி.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
https://www.bbc.com/tamil/articles/c4genj0rgj4o
By
ஏராளன் ·
Archived
This topic is now archived and is closed to further replies.