Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊருக்குப் போனேன்- 2 - வாசுதேவன்.

Featured Replies

ஊருக்குப் போனேன் - பாகம் 2

நயினைதீவை அடியாகக் கொண்ட அந்த இளைஞன், நான் வெளிநாட்டிலிருந்து வருகிறேன் எனப் புரிந்து கொண்டு கேள்விகள் கேட்க ஆரம்பித்தான். பின்னர், கேள்விகள் தீர்ந்து போனதோ என்னவோ, 23 வயது நிரம்பிய அவ்விளைஞன் தன் வாழ்க்கையைப் பற்றிக் கூறினான். வறுமைப்பட்ட குடும்பம், பெண்சகோதரங்கள், அவர்களின் திருமணம், இயக்கத்தில் இறந்து போன தம்பி ... ஓ ! சபிக்கப்பட்டவர்களே. சபிக்கப்பட்டவர்களே ! எப்போதுதான் உங்கள் சிறுமைகளை விட்டொழிவீர்கள் ? எப்போதுதான் பெண்களுடன் பிறக்கும் ஆண்களுக்கு விடுதலையளிப்பீர்கள் ? எப்போதுதான் பெண்களைச் சீதனம் வாங்கி "வாழ்வு கொடுக்கும்" பண்டங்களாகக் கருதாது விடுவீர்கள் ? சீதனம் கொடுக்கச் சொத்துத் தேடப் பரதேசம் போனவர்களே, உங்களில் எத்தனை பேர் நீங்களாகவே இங்கு மீண்டு வருவீர்கள் ?

புறப்பட்ட போது வழியனுப்பிய யாழ் கோட்டையினிடத்தில் வெறுமையிருந்தது. அங்கெல்லாம் புல், பூண்டு வளர்ந்து பசுமை பரவியிருந்தது. இராணுவக் காவல் அரண்களைத் தாண்டி, பரிச்சயம் நிறைந்த பண்ணை வாசனை வரவேற்றது. காலத்தால் மாற்றமுடியாத அநித்தியமான அதே வாசனை. பரிச்சயமான பண்ணைக் கடல்.

சாதாளைகளில் மோதிச் சரிந்து இல்லாமற் போகும் அலைகள் சதாவரவேற்ற வண்ணமாக இருக்கும் அதே பண்ணைக்கடற்கரை. முன்னரெல்லாம் பண்ணை வாசனையுடன் மீன் சந்தை வாசனையும் என்னைப்பிடி உன்னைப்பிடி என்று கட்டியம் கூறும். இப்போ இராணுவச் சீருடையும் 'பங்கர்களும்' அங்கே நடக்கும் கெடூரமான 'ஒளிச்சுப்பிடி' விளையாட்டின் நிஜமுகங்களையும் அவற்றின் கோர விதிகளையும் உணர்த்தின.

கடலுள் படுத்திருக்கும் றோட்டு முனையில்'ஓட்டோ' நுழையவும், நான் ஒருவன் மட்டுமே பின்னால் அமர்ந்திருந்ததைக் கண்ட சிங்களச் சிப்பாய் ஒருவன் வண்டியை மறித்துக் கேட்டுக் கேள்வியின்றி தானும் பின்னால் ஏறிக்கொண்டான். அவன் தோழிலே ஒரு 'கலாஷ்நிக்கோவ்' தொங்கிக்கிடந்தது. இயல்பாகவும் இறுக்கமாகவும் என்னுள் எழுந்த திகிலை வெளிக்காட்டாமல் இருப்பதற்கு நான் திண்டாடினேன். அவன் 'அண்ணளவான ஒரு நட்புப்பாணியில்' அரைகுறைத் தமிழில் என்னுடன் அளவளாவினான். நான் பிரான்ஸிலிருந்து வருகிறேன் என்று 'ஓட்டோ' இளைஞன் என்னை அறிமுகப்படுத்திய போதும், அவன் நான் கொழும்பில் என்ன தொழில் செய்கிறேன் என வினாவினான்.

அந்த இருபது வயதுச் சிங்கள் சிப்பாயின் சீருடையையும், அவன் 'கலாஷ்நிக்கோ' வையும் களைந்துவிட்டால், அவன் வெறும் ஏழைச் சிங்கள வாலிபனாகக் காட்சி தந்தான். அவனது முக, உடற்தோற்றங்கள் வெறுமையான சிரிப்பு எல்லாமே அவன் மீதிருந்த பய உணர்வை சற்றுத் தளர்த்தியது. முன்னரெல்லாம் வலைகள் விரித்துக் கிடந்த கடற்பரப்பு முட்கம்பிகளால் ஆக்கிரமிப்புக் கண்டிருந்தது. மண்டைதீவுச் சந்தியிலே சிங்களச் சிப்பாய் எம்மிடமிருந்து விடைபெற்றுக் கொண்டான். மனத்தில் ஒரு தென்பு பிறந்தது. அல்லைப்பிட்டிச் சந்தியில் இராணுவச் சோதனையுண்டு, அதையும் கடந்து விட்டால் நிம்மதி.

ஆதவன் பனை வடலிக்குள் அஸ்தமித்துக் கொண்டிருந்தான். சதுப்பு நிலங்களை வருடியதால் தண்மை பெற்று வந்த மென்காற்று மேனியைத் தொட இதமாகவிருந்தது. அல்லைப்பிட்டி அலுமீனியத் தொழிற்சாலை நொருங்கிக் கிடந்தது. இராணுவச் சோதனைச் சாவடியைத்தாண்டி அப்பால் செல்லும் கணத்தைக் காத்து மனமேங்கியது.

அடையாள அட்டை பார்க்கப்பட்டு, பொதிகள் கிளறப்பட்டு, அப்பால் 'ஓட்டோ' உருள ஆரம்பித்தபோது 'இனிக் செக்கிங் இல்லையண்ணே' என்ற ஓட்டோ இளைஞனின் வாக்கியங்கள் செவிப்பறையில் வீழ்ந்ததும் , சிந்தனையின் துல்லியமான மடிப்புகள் விரியவாரம்பித்தன. பதினெட்டு வருடங்களுக்கு முன்னர் பார்வையிலிருந்து பின்னோக்கி மறைந்து போன தெரு இப்போ பார்வையின் முன்னோக்கி விரிந்த வண்ணமாகவிருந்தது.

குழிகள் விழுந்து, கரடுமுரடாய், அவ்வப்போ மதகுகளின் மேல் படர்ந்து, நீண்டு விரிந்த அந்த "என் நெடுஞ்சாலை" , என்ன ? படம்பாரத்து விட்டு வருகிறாயா ? என என்னிடம் வினாவியது. முன்னரெல்லாம், 'கலரியிலிருந்து' படம் பார்ப்பதற்கும், யாழ்ப்பாணம் போய்வரவும் பணமிருந்தல், யாருமறியாமற் சென்று , (காவாலித் தனமாய்ப்) படம் பார்த்து விட்டுத் திரும்பிவரும்போது இந்த நெடுஞ்சாலைக்குப் பார்த்த படக் கதையை அராலிச் சந்திக் வருவதற்குள் சொல்லுவது எனது வழக்கமாகவிருந்தது. பார்த்து வந்த படக்கதை சொல்லுதல்தான் இந்த நெடுஞ்சாலைக்கும் எனக்குமான உறவுகளில் முதன்மையானது. சகிக்க முடியாத யதார்த்தங்களிலிருந்து ஆகக் குறைந்த விலைகொடுத்து விடுதலை வாங்குவதுதான் அப்போ எனக்குச் சினிமா பார்ப்பதன் அர்த்தத் தெளிவு.

ஆனால், பதினெட்டு வருடங்களுக்கு மேலாக நான் பார்த்து விட்டு வரும் படக்கதையை எவ்வாறு நான் அராலிச் சந்தி வருவதற்குள் கூறிமுடிப்பது ? என் சிந்தனைக்கு மூச்சுத் திணறியது. தெருக்கரையோரமாக நின்று வா வா என வரவேற்ற மரங்கள் ஒவ்வொன்றையும் தனித்தனியாகக் கட்டியணைத்து முத்தமிட்டால், ஓட்டோவை விட்டிறங்கி ஓவென்று கத்திக்கொண்டு ஓடிச்சென்று கடல் நீரிற் காலை நனைத்து வந்தால், இடது பக்கமாகப்பனை வடலிகளுக்குள்ளால் ஓடிச்சென்று மணற்குவியல்களில் உருண்டு வந்தால், பூவரச இலையொன்றைக் கொய்து உருட்டி ஒரு ஊதுகுழல் செய்து ஊதினால்...

வெறும் மேலுடன் வெளிகளில் வியர்வையுடன் அலைய ஆரம்பித்தேன். எண்ணை வைத்துச் சீவாத பரட்டைத் தலையும், பொருக்கு வெடித்த தோலுமாய் பாசாங்குகளைப் பற்றைகளுக்குள் பதுக்கிவைத்துவிட்டு, விலா எலும்பு வெளியே தெரிய என் சுமையற்ற கனவுகளைத் தாங்கி ஊரிலிருந்து தொலைவில் உள்ள அந்த வெளியில் ஊர்வலம் போனேன். பாதை படக்கதை கூறெனக் பலவந்தப்படுத்தியது.

என் பதினெட்டு வருடப் படக்கதையை, என் பதினெட்டு வருட அந்நியத்தை, பதினெட்டு வருட இல்லாமையை, பதினெட்டு வருடக் கனவை அராலிச் சந்தி வருவதற்குள் இந்த நெடுஞ்சாலைக்குச் சொல்லிமுடிப்பதென்பது அவ்வளவு இலகுவானதா ? மொழிக்கு மூச்சுத்திணறியது.

சித்திரைப் பௌர்ணமி விழாவிற்கு ஈச்சங் குலைகள் வெட்டப்போன வெளிகளே, பற்றைகளே , தாழம்பூக்களே, வரட்டு நிலத்தின் சிப்பிகளே, சோகிகளே, நத்தைகளே, ஊரிகளே, மதகுக் குட்டைகளில் வாழும் மீன் குஞ்சுகளே, சிறு பூச்சிகளே... நான் மீண்டும் வந்திருக்கிறேன், என்னிடமிருந்து மீண்டு வந்திருக்கிறேன். பதினெட்டு வருடங்களாகப் படம் பார்த்து வந்திருக்கிறேன்.

இங்கிருந்து நான் போனபின் எனக்கு நடந்ததனைத்தும் வெறும் கனவுதான் என்று உள்ளம் உறுதியுடன் அறைகூவியது. எதுவும் நடக்கவில்லை. நடந்ததனைத்தும் பிரமைகள். சுத்தப்பிரமைகள். வாழக்கைத்துணையும், ஆதவனும் வேலனும் (என் குழந்தைகள்) எல்லாமே கனவுகள்தான். ஓ, உடைந்து நொருங்கிச் சிதறிப் போகும் என் உண்மைகளே. ஓயாமல் இரைந்து கரையை அடித்துக் கொண்டிருக்கும் அந்தமற்ற அலைகளே.

இருட்போர்வை வெளிகளை மூடும்வேகத்தில் அராலிச் சந்தி வந்தது.

இடது பக்கம் போனால் அம்மாவிடம் போகலாம்.வலது பக்கம் போனால் ஒற்றைப்பனையிடம் போகலாம். இறங்கி வட மேற்கால் நடந்தால் நான் பல தடவை மானசீகமாக எரிந்து போன சுடுகாட்டிற்குப் போகலாம்.

மதிய வேளைகளில் மயிலப்புலம் தாண்டி, கொதி வெயிலையும் தாண்டி, சூரியனில் குளித்தவாறே சுடலையை அடைவதும், கானல் நீரைக் கண்டு களிப்படைவதும் எத்தனை அற்புதங்களாக இருந்தன. வரண்டு போன இந்த 'வடக்கு வெளி' பிரக்ஞையின் ஆழ்மட்டத்திலிருந்து பெயர்ந்து மேலெழுந்து வேடிக்கை காட்டியது.

நடந்து கொண்டே சிந்திப்பதற்காக நான் கடந்து பழக்கமுள்ள அராலிவெளி, கானல் நீர், வடசுடலை, அதன் சிறு கிணறு, இவையெல்லாமே ஏதோ ஒரு விதத்தில் என் பதினெட்டு வருடங்களுடன்பிணைந்து கிடப்பது உள்ளத்தின் மூலைமுடுக்குகளில் எழுந்த எதிரொலிகளால் முறையாக உறுதி செய்யப்பட்டது.

செக்கலிருட்டிலும், அராலிச் சந்திக் காவலரணில் இரண்டு சிப்பாய்கள் அவதானிப்பிலிருப்பது தெரிந்தது. ஓட்டோ தெற்கு நோக்கி குடிமனைகளையும் தாண்டி ஓடிக்கொண்டிருந்தது. ஆங்காங்கே வெளிச்சப் பொட்டுகள் காணப்பட்டன. ஆரம்பத்தில் சில வீடுகள் இடிபாடடைந்து காணப்பட்டபோதும் , தாண்டிச்செல்ல பனங்கூடல்களும் வீடகளும்மெல்லிருளிலையும் மீறித் தெனபட்டன. திடிரென் ஓட்டோ ஓளியூட்டப்பட்ட ஒரு கோவிலைத்தாண்டி சந்தி ஒன்றில் நுழைந்தது.

சுயநினைவு வந்தவனாய் 'தம்பி, இராசையா வீதியைத்தாண்டி வங்களாவடிச் சந்திக்கு வந்து விட்டோம்' என்று நான் கூறவும் அவ்விளைஞன் ஓட்டோவைத் திருப்பி என் வழிகாட்டலில் இராசையா வீதியை நோக்கி ஒட்டினான். நெஞ்சு பதைபதைத்தது.

முன்னறிவிப்பில்லாமல், செக்கலிருட்டில் எதிர்பாராத நேரத்தில் வரும் எதிர்பாராத மனிதனாக நான் வாசலில் நின்று அம்மாவை அழைக்கப் போகிறேன்...

தொடரும்.

கதை நல்லா இருக்கிது. ஊருக்கு போய்வந்த அனுபவத்த தொடர்ந்து எழுதுங்கோ வாசிப்பம் வாசுதேவன்.

நன்றாக இருக்கிறது. வாசகரை கட்டி போடும் எழுத்து.

அருமையாக இருக்கு..தொடர்ந்து எழுதுங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

அந்தப் பண்ணைவீதியும் பனைவடலியும் எண்ணத்தில் என்றும் பசுமையான எம் ஈழமண்ணின் நினைவுகளும்

உங்கள் ஊருக்குப் போய்வந்த ஞாபகங்களைப் படித்தபோது மனதைக் கனமாக்கியது. தொடர்ந்தும் உங்கள்

ஞாபகங்களை எதிர்பார்க்கிறோம். பாராட்டுக்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.