Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நினைவழியா நாட்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நினைவழியா நாட்கள்

அந்த விடிகாலைப் பொழுதின் அமைதியைக் குலைத்தபடி விமானச் சத்தங்கள் காதைப் பிளந்தன. அதிகாலைப் பொழுதில் ஏற்பட்ட இந்த நிலையால் அரைத் தூக்கத்தில் எழுந்த எமக்கு என்ன செய்வது? எதை எடுப்பது? ஓடுவதா? அல்லது பங்கருக்குள் ஒளிவதா? எதையும் சிந்தித்துச் செயலாற்ற சந்தர்ப்பம் இதுவல்ல. கையிலகப்பட்ட ஒன்றிரண்டு உணவுப் பொருட்களை மட்டும் எடுத்துக்கொண்டு வீதிக்கு விரைந்தோம். வீதியெங்கும் மக்கள் தம் உயிரைக் காக்க ஓடிக் கொண்டிருந்தனர். இடைக்கிடை குத்திட்ட விமானங்களிலிருந்து குண்டுமழை பொழியும் போது குப்புறப் படுத்து விழுந்து எழும்பி ஓடிக்கொண்டிருந்தோம். எப்படியோ பக்கத்துக் கிராமத்திலிருந்த ஓர் ஆலயத்தை அண்மித்து அதற்குள் அடைக்கலமாகிக் கொண்டோம். அன்றுமுதல் ஆலயம் அகதிமுகாமாகியது. ஆலயத்துக்குள் அடைபட்டோம் பட்டிகளாய்.

ஆலய வளவெங்கும் மனித வெள்ளம். அடுத்து என்ன செய்வது? என்னத்தை உண்பது? பசியால் அழும் குழந்தைகளுக்கு எப்படி உணவளிப்பது? காலைக் கடன்களை எப்படி முடிப்பது? இப்படி எத்தனையோ விடைகாண முடியாத கேள்விகள் முகத்தில் தொக்கி நிற்க ஓர் மூலையைப் பிடித்து உட்கார்ந்தோம். போர் விமானங்கள் அங்குமிங்குமாக வட்டமிட்டு வான வெளியில்தமது சாகசங்களை காட்டிக் கொண்டிருந்தன. குண்டுச் சத்தங்கள் காதைப் பிளந்தன. செல் வீச்சுக்கள் விண்கூவிக்கொண்டு பறந்தன. எங்கும் மாதாவே முருகா பிள்ளையாரே யேசுவே என்று அவரவர் தெய்வங்களை துணைக்கழைக்கும் கூக்குரல்.

;

நண்பகல்வரை போர்ச் சூழலில் புதையுண்டு பசி தாகம் மறந்து சாதி சமய வேறுபாடுகள் களைந்து சமரசம் உலாவும் இடமாக ஆலயமும் அதன் சுற்றாடலும் காட்சியளித்தது. எம் மக்களின் மனங்களைப் புரட்டிப் போட இப்படியான நிகழ்வுகளும் அவசியந்தானோ? திடீரென்று குத்திட்ட விமானத்தின் குண்டுவீச்சு ஆலயத்தின் ஒரு பகுதியில் விழுந்து வெடித்துச் சிதறியது. ஏங்கும் அவல ஓலங்கள். இனிமேலும் ஆலயத்துள் இருப்பது பாதுகாப்பில்லை என்ற முடிவில் வெளியேற விரும்பினோம். ஆனால் காயப்பட்டவர்களின் கூக்குரலும் உறவினர்களின் ஓலங்களும் அங்கு ஒரு பிரளயமே உருவாகிவிட்ட பிரமை. இனியும் எம் உயிர் பிழைக்குமா?

இனிமேலும் இங்கிருப்பது பாதுகாப்பில்லை. எங்காவது அடுத்த கிராமத்திலுள்ள வீடுகளில் ஒதுங்கினால் கஞ்சி குடிக்கவாவது வழி கிடைக்கும் என்ற தீர்மானத்துடன் எமது பெற்றோர் சகோதரர்கள் சில உறவினர்கள் தத்தமது குடும்பங்களுடன் ஆலயத்தை விட்டுப் புறப்பட்டோம். நடந்து நடந்து காலும் வலித்தது. எல்லோர் முகங்களும் பசியினால் சோர்ந்து பயத்தினால் மிரண்டுபோய் இருந்தது. கையிலிருக்கும் சிறிது தேயிலையும் சீனியும் எம் வயிற்றுக்கு ஒரு தேனீராவது குடிக்க வைக்க உதவும் என்ற நம்பிக்கை. அதற்கும் சுடு நீர் தேவை. ஒரு வீட்டின் படலையைத் தட்டினோம். ஆங்கு ஒரு குடும்பம் பயத்தில் முடங்கி இருந்தனர். அவர்களிடம் சம்மதம் பெற்று ஒரு பானையும் கரண்டியும் வாங்கி தேனீர் தயாரிக்க தண்ணீரைக் கொதிக்க வைத்தோம். நீர் கொதிக்கும்வரை எமது வயிறும் கொதித்துக் கொண்டிருந்தது. ஒருவழியாக கையிலிருந்த சீனியை மருந்து போல் பாவித்து தேனீரைக் குடித்து முடித்தோம். சிறிது களைப்பு நீங்க மீண்டும் எம் நடைப்பயணம் ஆரம்பமாகியது.

இரவுமகள் தன் இருளாடையை அணியத் தொடங்கினாள். வீதியெங்கும் ஒரே மனித வெள்ளம். ஓர் அம்மன் கோவிலும் அதன் முன் ஓர் அரச மரமும் சுற்றி சீமேந்து வாங்கும் கண்ணில்பட சற்று இளைப்பாற எண்ணி வாங்கில் அமர்ந்தோம். முக்கள் எந்தப் பக்கம் போவது என்று தெரியாமல் அங்கிருந்து இங்கும் இங்கிருந்து அங்குமாக போய்க் கொண்டும் வந்துகொண்டும் இருந்தனர். சிலரின் தலையில் மூட்டை முடிச்சுக்கள். சிலரது ஈருருளிகளில் கட்டப்பட்ட பொதிகள். சிலர் மாட்டு வண்டிகளிலும் போய்க் கொண்டிருந்தனர். சிலரது கையில் கயிற்றுடன் ஆடு சங்கிலியுடன் நாய் இப்படி பலதரப்பட்ட மக்கள் வெள்ளம். ஏங்கும் இருள் சூழ்ந்தது. தூரத்தில் சூட்டுச் சத்தங்களும் உலங்கு வானூர்திகளின் இரைச்சல்களும் இடையிடையே எமக்குப் பயமூட்டிக்கொண்டிருந்தன.

குழந்தைகள் பசியால் துவண்டுபோய் களைப்புடன் காணப்பட்டனர். தூரத்தில் “மினுக் மினுக்” என்ற ஓர் வெளிச்சம் எமக்கு உயிரூட்டியது. ஓளிவந்த திசை நோக்கி எமது பயணம் தொடர்ந்தது. வெளிச்சம் நெருங்க நெருங்க அது ஒரு பெரிய வீடு என்று அனுமானிக்க முடிந்தது. மெதுவாக வீட்டின் கேற்றைத்தட்டி ஒவி எழுப்பினோம். ஏம்மை நோக்கி ஒரு முதியவர் கையில் ஏந்திய அரிக்கன் விளக்குடன் வந்தார். வுந்தவர் விளக்கைத் தூக்கிப் பிடித்து எம்மை ஆராய்ந்தார். நாம் மிகவும் கனிவான குரலில் “நாங்கள் நல்லாக் களைத்துப் போயிற்றம். இன்றிரவு தங்க கொஞ்சம் இடம்தருவீங்களோ” என்று மனதுருகும் குரலில் கேட்டோம். அவரோ “இண்டைக்கு எங்கட வீடு நிறைய சொந்தக்காரர் இடம் பெயர்ந்து வந்த சனம் எண்டு 35-40 பேருக்கு மேல இருக்கினம். வேளியில புகையிலைக் கொட்டிலும் ஒரு இறக்கமும் இருக்கு விருப்பமெண்டால் அதில தங்கலாம்.” ஏன்று பெரிய மனதுடன் சொன்னார். ஏமக்கிருந்த பசியும் களைப்பும் எங்காவது ஒதுங்கினால் போதும் என்றிருந்தது. அந்தப் பெரியவரோ எமக்கு மிகவம் கருணையுடன் ஒரு பெரிய படங்குச் சாக்கும் ஒரு கைவிளக்கும் தந்து உதவினார்.

அன்றிரவு முழுவதும் ஒரே குண்டுச்சத்தங்களும் துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்களும் காதைப் பிளந்தன. ஊடல் அசதியினால் அனைவரும் படங்குச் சாக்கினுள் முடங்கிக் கிடந்தோம். பொழுது புலரத் தொடங்கியது. எமது வயிறும் புகையத் தொடங்கியது. இனியும் பசி பொறுக்க முடியாது. வயிறு கெஞ்சியது. திடீரென்று பக்கத்தில் “பொத்” என்ற சத்தம். பனைமரம் எம் பசியறிந்து தன் பழத்தை உதிர்த்திருந்தது. குழந்தைகள் ஓடிச் சென்று பனம்பழத்தை உரித்து பசியாறத் தொடங்கினர். அடுத்ததாக நாம் பசியாற ஏதாவது உணவ தேடவேண்டும். நேற்று முதல் காய்ந்த வயிறு முதலில் தன்னைக் கவனிக்கும்படி அழைப்பு விடுத்தது. எனது தாயார் வீட்டுக்காரபிடம் விசாரித்து சிறிது தொலைவிலுள்ள வீட்டிலிருக்கும் பெட்டிக்கடை நோக்கி நடக்கத் தொடங்கினார். நிச்சயம் இன்று கடை திறந்திருக்க மாட்டார்கள். இருந்தும் வீட்டில் உள்ளவர்களிடம் எமது நிலையைச் சொல்லி ஏதாவது கேட்கலாம் என்ற நப்பாசைதான்.

சிறிது நேரத்தில் திரும்பிய அம்மாவின் கையில் சில பொருட்கள் இருந்தன. வீட்டுக்காரரிடம் ஒரு பானையும் கரண்டியும் இரவலாகப் பெற்றுக்கொண்டோம். மூன்று கல்லை வைத்து பனைஓலை மட்டை பன்னாடை முதலியவற்றைச் சேகரித்து கஞ்சி தயாரிக்கத்; தொடங்கினோம். ஆதற்கும் வந்தது இடைஞ்சல். அடுப்பிலிருந்து எழுந்த புகையைப் கண்டதும் உலங்கு வானூர்தி ஒன்று வட்டமிடத் தொடங்கியது. வானூர்தி வட்டமிடும் நேரங்களில் பலமுறை அடுப்பு அணைத்து அணைத்து அனல் மூட்டப்பட்டது. ஊவ்வொருமுறை அடுப்பு அணைக்கப்படும் பொழுதும் எம் வயிற்றில் அல்லவா அனல் எழும்பியது. ஒருபடியாக கஞ்சி தயாராகி விட்டது.

வெடிச்சத்தங்களும் அண்மித்துக் கொண்டிருந்தது. என்ன நடந்தாலும் முதலில் எமக்குத் தீரவேண்டியது பசி. பசி வந்திடப் பத்தும் பறந்திடும் என்பார்கள். பயம்கூடப் பறந்து விட்டது. ஆவசரஅவசரமாக கஞ்சியைக் குடித்து முடித்தோம். இப்பொழுது வயிற்றுப்பசி தீர்ந்த களிப்பு. களிப்பு கணப்பொழுதுகூட நீடிக்கவில்லை. ஆயுதங்கள் ஏந்திய வண்ணம் பல இளைஞர்கள் நாம் தங்கி இருந்த வீம்மு வளவிற்குள் ஓடி வருவதைக் கண்டோம். அவர்கள் மிகவும் களைத்துப் போய் இருந்தார்கள். அதிகமானோர் மிக இளவயதினர். ஏமக்கு எதுவும் செய்யத் தோன்றவில்லை. திகைப்பு அடங்குமுன் வான் வெளியில் இரைச்சலுடன் வானூர்திகள் வட்டமிடத் தொடங்கின. இளைஞர்கள் தம்மை ஒவ்வொரு பனை மரத்தின்பின் மறைத்துக் கொண்டபடி வானூர்திகளை நோக்கிச் சுடத் தொடங்கினர்.

எமக்குத் தெரிந்துவிட்டது நிச்சயம் நாம் தங்கி இருக்கும் வீடு தாக்கப்படப்போகிறது. ஏல்லோரும் வீட்டு வளவை விட்டு பின்புற வேலியூடாக வயல் வெளியில் ஓடத் தொடங்கினோம். வானிலே வானூர்தி எம்மை வட்டமிட்டபடி அவதானித்தது. வயலின் நடுவே பெரிய ஆலமரம் எமக்குப் புகலிடமளித்தது. வெறும் கால்களில் கல்லும் முள்ளும் கத்திய வலி. ஆலமர வேரின் வளைவுகளில் ;எம்மை மறைத்துக் கொண்டோம். எந்த நிமிடமும் மரணம் வரலாம். இனி என்ன? கடவுள்தான் துணை என்ற முடிவுடன் கண்மூடிப் பிராத்தித்தோம். மேல்ல மெல்ல இளைஞர்களும் அவ்விடத்தை விட்டு நகர்ந்து நகர்ந்து தாக்குதலைத் தொடர வானூர்திகளும் நாம் இருந்த சூழலில் இருந்து விலகிச் செல்வதை அவதானித்தோம்.

மெல்ல மெல்ல வயல் வெளியை விட்டு வீதி ஓரத்திற்கு வரத் தொடங்கினோம். வீதி வெறிச்சோடிப்போய்க் கிடந்தது. நேரம் செல்லச் செல்லப் புற்றுக்குள் இருந்து ஈசல் புறப்படுவதுபோல ஒவ்வொருவராக தமது மறைவிடங்களை விட்டு வெளிவரத் தொடங்கினர். சிலமணிநேரங்களின் பின் எமது ஊருக்குள் சென்று பார்த்துவிட்டு வந்த சிலர் சொன்ன கதைகள் எம்மை மிகவும் கலவரப்படுத்தின. வீடுகளெல்லாம் சூறையாடப்பட்டு பலர் சூட்டுக்காயங்களுடனும் வெட்டுக்காயங்களுடனும் வீதியோரங்களில் பிணங்களாகவும் வீசப்பட்டிருந்தனர். பல இளைஞர்கள் சித்திரவதை செய்யப்பட்டு கைகள் கட்டப்பட்ட நிலையில் சுடப்பட்டிருந்தனர். பல இளம் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு அலங்கோலமாக வீசப்பட்டிருந்தனர். எங்கும் பிணவாடை. ஊரே பூகம்பம் ஏற்பட்ட ஒரு பிரதேசம்போலக் காட்சியளிப்பதாக கதைகதையாகச் சொன்னார்கள். இதையெல்லாம் கேட்ட எமக்கு கொஞ்சமிருந்த தெம்பும் உடலை விட்டு விலகிவிட்டது. இந்நிலையில் ஊருக்குள் செல்லத் துணிவின்றி பக்கத்துக் கிராமத்திலேயே தங்கிவிட்டோம்.

ஒருமாதம் உருண்டோடியது. இராணுவமும் ;மண்டைதீவிலேயே முகாமிட்டு இருந்தது. இந்த ஒரு மாதமும் நாம் பட்ட பாடுகள் கொஞ்சமல்ல. அரை வயிற்றுக்கு உணவு கிடைப்பதே அரிதாக இருந்தது. அணிந்திருந்த உடைகள் கழுவிக் கழுவி நிறம் மாறிப் போய் இருந்தன. குழந்தைகளழன் காற்சட்டைகள் தேய்ந்து வெடித்து மாற்றுடைகூட இல்லாத அவல நிலை. இந்த நிலையில் எர்பொழுது மண்டைதீவில் நிலைகொண்டிருக்கும் இராணுவம் திரும்பி வருமோ? அப்படி வரும் பட்சத்தில் மீண்டும் என்னென்ன அனர்த்தங்கள் நடைபெறுமோ? ஏன்ற ஏக்கத்துடனேயே நாட்களை எண்ணிக்கொண்டிருந்தோம். திடீரென்று ஒருநாள் மீண்டும் வல்லூறுகள் வானில் வட்டமிட்டன. குண்டுவீச்சு விமானங்கள் கட்டியம் கூற இராணுவம் மீண்டும் எம் ஊருக்குள் புகுந்து கொண்டன. மீண்டும் மக்கள் ஆலயங்களிலும் மர நிழல்களிலும் அடைக்கலமாகினர்.

ஆலயத்துக்குள் நாம் பட்ட அனுபவங்கள் மறக்க முடியாதவை. இனிமேலும் இந்நிலை நீடிப்பதை எம்மால் தாக்குப்பிடிக்க முடியாமல் எப்படியாலது கெழும்புக்குப் போய் அங்கு சிறிது காலம் தங்கலாம் என்று முடிவெடுத்தோம். ஏல்லாம் சரி. கொழும்புக்குச் செல்வதானால் பாஸ் எடுக்கவேண்டுமே.? பாஸ் எடுக்கத் தினமும் அலைந்ததுதான் மிச்சம். பாஸ் மட்டும் கிடைக்கவே இல்லை. இறுதியில் நாம் யாழ்ப்பாணம் போய் அங்கு மேலிடத்தில் கேட்டுப்பார்க்கலாம் என்று முடிவாகியது.; பட்டணம் செல்லப் புறப்பட்டு விட்டோம். கட்டிக்கொள்ள ஒரு சேலைகூடக் கிடையாது. எப்படியோ ஆளுக்காள் இரவல் வாங்கி எம்மை உடுத்திக் கொண்டோம். முன்பெல்லாம் கொழும்பு போவதென்றால் சூட்கேஸ் பலகாரம் மாம்பழம் ஒடியல் இப்படி எத்தனை ஆரவாரங்கள். இப்பொழுதோ கையில் சொப்பிங் பேக்குடன் எம் பயணம் தொடங்கியது.

வாடகைச் சைக்கிளில் அராலித் துறையை அடைந்தோம். ஆராலித்துறை அமானுசமான அமைதியில் மூழ்கி இருந்தது. இரவில் மட்டும்தான் அங்கு படகுச்சேவை நடைபெறுவதால் நேரம் செல்லச் செல்ல துறைமுகம் கலகலப்பாகியது. படகுகளில் வரிசைக் கிரமமாக விட்டு ஏற்றப்பட்டோம். எங்கும் கும்மிருட்டு. யாழ் கோட்டையிலிருந்து விடப்பட்ட வெளிச்சக் குண்டுகள் எம்முன் எமதூதர்கள்போல் காட்சியளித்தன. வள்ளம் தள்ளப்பட்டது. புயங்கரமான இரவுநேரப்பயணம். அந்த ஒரு மணி நேரமும் உயிரைக் கையில் பிடித்தபடி இருந்தோம். ஆராலியின் அந்தப் பக்கத் துறை கண்ணுக்கெட்டியது. பெற்றோல்மக்ஸ் விளக்குகளின் ஒளியில் அக்கரையிலிருந்து இக்கரை வருவோரும் இக்கரையிலிருந்து அக்கரை செல்வோருமாக அராலித்துறை அமளிதுமளிப் பட்டுக்கொண்டிருந்தது. எப்படியோ அக்கரையை எட்டி விட்டோம். மீண்டும் சைக்கிள் சவாரி. வீதி எங்கும் வெறிச்சோடிப்போய்க் கிடந்தது. நள்ளிரவில் எமது உறவினர் வீட்டில் அடைக்கலமானோம். ஒரு கிழமையாக அதே பாஸ் பிரச்சனை.

பாஸ் மட்டும் கிடைக்கவேயில்லை.மூன்று நாட்களின் பின் ஒரு நாள் பாஸ் கொடுக்கும் இடத்தில் எம் ஊரவர் அனைவரும் ஒன்றுகூடினோம். ஆங்கிருந்த அநேகம்பேர் உயிரிழப்புகளுக்கும் உடமையிழப்புகளுக்கும் ஆளானவர்கள். சில இளம் விதவைகளும் உடன் இருந்தனர். எமது வேண்டுகோளைக் கேட்ட மேலிடத்தினர் எம் ஊர்மக்களுக்கு மட்டும் சலுகை வழங்குவதாக உறுதி கூறினர். லொறி ஒன்றினுள் நாம் அனைவரும் ஏற்றப்பட்டோம். இரவுப்பொழுது எமது பயணம் ஆரம்பமாகியது. ஆடர்ந்த காடுகளினூடே லொறி ஓடிக்கொண்டிருந்தது. சிறிது வழிதப்பினாலும் நாம் போய்ச் சேருமிடம் இராணவமுகாமாகவும் இருக்கலாம். சில இடங்களில் புதை மணலில் சிக்கி லொறி இழுத்து எடுக்கப் பட்டது. புல தடவைகள் அனைவரும் இறங்கி புதைமணலில் நடந்து மிகவும் சிரமப்பட்டோம். இம் மயிர்க்கூச்செறியும் பயணத்தில் வழிகாட்டிகள் சிலரின் வழிகாட்டலின்படி வாகனம் ஓடிக்கொண்டிருந்தது. லொறியின் குலுக்கலில் எம் எலும்புகள் யாவும் நொருங்கி விடுவது போன்ற வலி.

பொழுது புலரும் வேளையில் ஓமந்தையில் இறக்கப்பட்டோம். அங்கிருந்த ஓரு கடையில் தேநீர் அருந்திவிட்டு மீண்டும் எம் பயணம் வவுனியாவை நோக்கி ஆரம்பித்தது. தாண்டிக்குளம் என்று அழைக்கப்படும் புதர்க் காடுகளினூடாக எமது பயணம் தொடர்ந்தது. எந்த இராணுவத்தைக் கண்டு பயந்து ஊரையும் உடைமைகளையும் விட்டுவிட்டு ஓடி வந்தோமோ இதோ இப்பொழுது நாமாகவே போய் இராணுவத்தினரிடம் சரணடையும் நேரம். இராணுவத்தினரின் சோதனைச் சாவடியை அண்மித்தோம். சொப்பிங் பேக்குடன் பயணம் செய்யும் எம்மிடம் சோதனை செய்ய என்ன உள்ளது? ஆனாலும் நாங்கள் தமிழர்கள். சோபதனையின் முடிவில் அரிசி ஆலைக்குள் அடைக்கலமானோம். ஆங்கு ஏற்கெனவே ஆயிரக்கணக்கான மக்கள் இடைக்கப்பட்டிருந்தனர். சுகாதாரத்திற்கு இடமில்லாதபடி துர்நாற்றமும் ஈக்களின் தொல்லையுமாக எப்படியோ பகல் பொழுது கழிந்தது. மாலையாகியது . இராணுவத்தினரின் பஸ்களில் அனைவரும் பட்டிகளாய் அடைக்கப்பட்டோம். மீண்டும் காமினி மகாவித்தியாலய வளவுக்குள் இறக்கப்பட்டோம். அது ஓரு பெரிய அகதி முகாமாக செயற்பட்டது. இரவாகியது . காமினிமகாவித்தியாலய வளவுக்குள் வானமே கூரையாக மர நிழல்களின் கீழ் வெறும் தரையில் படுத்துக்கொண்டோம். இரவு எம்முடன் பயணம் செய்த வாலிபர்களை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். எமக்கு என்ன செய்வதென்றோ யாரிடம் போய் முறையிடுவதென்றோ எதுவுமே தெரியவில்லை. அனைவரும் விடிய விடிய தூக்கமின்றி வேதனையுடன் கழித்தோம். ஏப்படியோ தெய்வாதீனமாக அவ் வாலிபர்கள் விசாரணையின் பின் விடுவிக்கப்பட்டனர். ஒரு கண்டம் தப்பியது.

அதிகாலை மீண்டும் பயணத்துக்கு ஆயத்தமானோம். திரும்பவும் பஸ்சில் ஏற்றப்பட்டு புகையிரத நிலையத்தில் குவிக்கப்பட்டோம். புகையிரத நிலையம் மக்கள் வெள்ளத்தால் நிரம்பி வழிந்தது. எல்லோர் முகங்களிலும் ஏதேதோ ஏக்கங்கள். எதிர்பார்ப்புகள். இழப்பின் வடுக்கள். நாமும் வரிசையில் நின்று புனையிரத மேடைக்குள் தள்ளப்பட்டோம். தூரத்தில் புகையிரகம் வரும் ஒலி கேட்டது.

அந்த வேளையில் எம்மை எங்கோ புதிய உலகத்திற்கு அழைத்துச்செல்லும் புஸ்பக விமானமாக புகையிரதம் காட்சியளித்தது. எம் இனிய தமிழீழத்தை இன்றுடன் பிரியப்போகிறோம் என்று தெரியாமலே எமது பயணத்தை ஆரம்பித்தோம்.

கண்மணி அக்கா, கதை சூப்பர். அப்படியே ஊரில் முன்பு நடந்ததை படம் பிடிச்சு காட்டி இருக்கிறீங்கள். சினிமாபடம் பாத்தமாதிரி இருந்திச்சிது. தொடர்ந்து எழுதுங்கோ. நன்றி!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் உற்சாகமான பாராட்டிற்கு நன்றி கலைஞன்

காவலூர் கண்மணி அவரகளே,

தங்களின் அனுபவ விபரிப்பு அச்சத்தையும் துன்பியலையும் சமாந்தரமாக அழைத்துச் செல்கிறது. 1983 ம் ஆண்டு யூலைக்கலவரத்தின்போது கொழும்பில் அகதிமுகாமொன்றில் பட்ட அனுபவங்களை எனக்கு நினைபடுத்துகிறது உங்கள் எழுத்துகள். ஆனால் உங்கள் அனுபவத்தில் உயிரச்சத்தின் அதீதமாக உள்ளன.

எப்போதுதான் இவையெல்லாம் முடிவுறும் என ஒரு பெருமூச்சை உதிர்ப்பதைத் தவிர என்னம்மா செய்யமுடியும் ?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் வாசுதேவன்

நீண்ட நாட்களாக தமிழர் வாழ்வில் தொடரும் துன்பியல் அனுபவங்கள் தொடர்கதையாகவே இருக்கிறது.

இதற்கு முடிவுரை எழுதும் நாள் எப்போ? சில வேளைகளில் வாழ்வின் அனுபவங்கள் எம் அனைவருக்கும்

நல்ல பாடங்களாக அமைந்து விடுவதோடு எம்மை படைப்பாளிகளாகவும் மாற்றி விடுகின்றது.

பாராட்டிற்கு நன்றிகள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.