Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நீதி நெறியை மதிக்காத முதல்வர்கள் - பழ, நெடுமாறன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நீதி நெறியை மதிக்காத முதல்வர்கள்

- பழ, நெடுமாறன்

தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பை ஆதரித்து பேசினாலும் பிரச்சாரம் செய்தாலும் அது சட்டப்படி குற்றமாகும் என்று முன்னாள் முதலமைச்சர் செயலலிதா சட்ட மன்றத்திலும் வெளியிலும் இடைவிடாது கூறி வருகிறார்.

உச்ச நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்றம், பொடா மறு ஆய்வுக்குழு ஆகியவை அளித்த தீர்ப்புகளில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பதை முற்றிலும் அறியாதவராக அல்லது அறிந்திருந்தும் உண்மைகளை மறைப்பவராக செல்வி செயலலிதா விளங்குகிறார். செல்வி செயலலிதாவால் 1.8.2002 முதல் 8.1.2004 வரை ஏறத்தாழ 525 நாட்கள் பொடா சட்டத்தின் கீழ் சிறை வைக்கப்பட்டவர்களில் ஒருவன் என்கிற முறையில் சில உண்மைகளைக் கூற விரும்புகிறேன்.

13.4.2002 அன்று சென்னை ஆனந்த் திரையரங்கத்தில் நடைபெற்ற கூட்டத்தில் நானும் மற்றும் நண்பர்களும் பிரபாகரனின் நேர்காணல் குறித்துப் பேசினோம்,

ஆனால் 26.4.2002 அன்று முதல்வர் செயலலிதா தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பின்வருமாறு அறிவித்தார். "விடுதலைப் புலிகளை ஆதரிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு அறிவித்த பின்னர் சென்னையில் ஆனந்த் திரையரங்கத்தில் கூட்டம் நடத்தப்பட்டது. அந்த கூட்டத்திற்கு காவல்துறையினர் எப்படி அனுமதி வழங்கினார்கள் என்று கேட்கிறீர்கள். இது குறித்து உரிய விசாரணை நடத்தப்பட்டது. அன்றைக்கு சட்டவிரோதமாக எந்த நடவடிக்கை யிலும் கூட்டம் நடத்தியவர்களோ அல்லது பேசியவர்களோ ஈடுபட வில்லை என்று அரசுக்குத் தகவல் அறிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. (தினமணி 27-4-2002)

கூட்டம் நடந்தது ஏப்ரல் 13ஆம் தேதி. அதற்கு 13 நாட்கள் கழித்து ஏப்ரல் 26ஆம் தேதி இவ்வாறு முதல்வர் செயலலிதா அறிவிக்கிறார். ஆனால் அந்த கூட்டத்தில் நாங்கள் பேசியதற்காக எங்கள் மீது ஆகஸ்டு முதல் தேதி பொடா சட்டம் ஏவப்படுகிறது. கிட்டத்தட்ட மூன்றரை மாதங்களுக்குப் பிறகு எங்கள் மீது பொடா சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து செயலலிதா அரசு சிறையில் அடைத்தது. ஆனந்த் திரையரங்கக் கூட்டத்தில் சட்ட விரோதமாக எதுவும் நடைபெறவில்லை என அறிவித்த முதலமைச்சரே அது சட்டவிரோதமான கூட்டம் என்று கூறி எங்களைச் சிறையில் அடைக்கிறார்,

இதற்கிடையில் உச்ச நீதிமன்றத்தில் பொடா சட்டம் குறித்து ஐந்து மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. வை.கோ.மற்றும் தோழர்கள், நெடுமாறன் மற்றும் தோழர்கள், சிவில் உரிமைகளுக்கான மக்கள் ஒன்றியம், மனித உரிமைகள் மற்றும் சமூக நீதிக்கான அனைத்திந்திய முன்னணி, ஜே.சாகுல் அமீது ஆகியோர் பெயரில் தாக்கல் செய்யப்பட்ட 5 மனுக்களைக் குறித்து 16.12.2003 அன்று உச்ச நீதிமன்றம் விசாரித்தது. இந்திய அரசு சார்பில் வாதாடிய அடர்னி ஜெனரல் சோலி சோராப்ஜி, “திருமங்கலம் கூட்டத்தில் வைகோ பேசியதும் அமைச்சர் கண்ணப்பன் விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசியதும் பொடாச் சட்டத்தின் கீழ் வராது” என்று கூறினார். இந்த வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதியரசர்கள் எஸ். இராசேந்திரபாபு, ஜி.பி.மாத்தூர் அடங்கிய ஆயம் நடத்திய விசாரணையின் இறுதியில் தங்கள் தீர்ப்பில் பின்வருமாறு அறிவித்தனர். "தீவிரவாத இயக்கத்திற்கு தார்மீக ஆதரவு தெரிவித்து வெறுமனே பேசுவது பொடா சட்டப்படி குற்றம் ஆகாது. பொடா சட்டத்தின் கீழ் கைது ஆகி ஓராண்டுக்கு மேலாக சிறையில் இருப்பவர்களை வழக்கமான நடைமுறைகளைப் பின்பற்றி பிணையில் விடுதலை செய்யலாம்." என்று குறிப்பிட்டனர்.

இந்த தீர்ப்பு குறித்து 3.1.2004 அன்று தினமணி எழுதிய தலையங்கத்தில் பின்வருமாறு குறிப்பிட்டது. "நமது நாட்டில் தடை செய்யப்பட்டுள்ள இயக்கம் ஒன்றுக்கு வாய்மொழி ஆதரவு தெரிவித்து பேசுவதற்காகப் பொடா சட்டத்தை ஒருவர் மீது பயன்படுத்தக் கூடாது என்ற பொருள்செறிவு உடைய விளக்கத்தையும் உச்ச நீதிமன்றம் அளித்து தனது கனிந்த விசாலமான சட்டநெறிப் பார்வையைப் புலப்படுத்தியது."

நாங்கள் சிறைப்பட்ட ஓர் ஆண்டிற்குப் பிறகு உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட எங்களுடைய பிணை மனுவை நீதியரசர் சிர்புர்கர், தணிகாசலம் ஆகியோர் அடங்கிய ஆயம் விசாரித்தது. அதன் பிறகு அவர்கள் அளித்த தீர்ப்பில் பின்வருமாறு கூறினார்கள். "தீவிரவாத இயக்கத்திற்கு தார்மீக ஆதரவு தருவது, வெறுமனே பேசுவது பொடா சட்டப்படி குற்றம் ஆகாது என்றும் பொடா சட்டத்தில் கைதாகி ஓர் ஆண்டிற்கு மேலாகச் சிறையில் இருப்பவர்களை வழக்கமான நடைமுறைகளைப் பின்பற்றி பிணையில் விடுதலை செய்யலாம் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியதன் அடிப்படையில் நெடுமாறன் உட்பட நான்கு பேரை பிணையில் விடுதலை செய்கிறோம்" என்று அறிவித்தனர்.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் தடை செய்யப்பட்ட இயக்கத்தை ஆதரித்துப் பேசுவது பொடா சட்டப்படி குற்றம் ஆகாது என அளிக்கப்பட்ட தீர்ப்பை ஏற்று அதனடிப்படையில் சென்னை உயர் நீதிமன்றம் எங்களுக்குப் பிணை வழங்கியது.

மேலும் நீதிமன்றத்தில் எனது பேச்சு முழுவதையும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து தரச்சொல்லி நீதியரசர் சிர்புர்கர் முழுமையாக படித்திருக்கிறார். அதைப் பற்றியும் நீதிமன்றத்தில் அவர் பின்வருமாறு குறிப்பிட்டிருக்கிறார். "பிரபாகரன் தந்த பேட்டியைப் பற்றித் தான் தனது பேச்சில் முழுக்க முழுக்க நெடுமாறன் பேசியிருக்கிறார். பிரபாகரன் பேட்டி பற்றிய பேச்சுக்கும் விமர்சனத்திற்கும் பொடா வழக்கு போடுவதாக இருந்தால் அந்த பேட்டியை ஒளிபரப்பிய தொலைக்காட்சிகள், செய்தியை வெளியிட்ட பத்திரிகைகள் என எல்லோர் மீதும் வழக்கு போட்டிருக்க வேண்டும். அதை ஏன் செய்யவில்லை" என்று அரசுத் தரப்பு வழக்கறிஞர்களை நோக்கி அவர் கேட்டார். அத்துடன் அவர் நிற்கவில்லை. வேறு பல கூட்டங்களிலும் விடுதலைப் புலிகளை ஆதரித்தும் பிரிவினையைத் தூண்டும் வகையிலும் நெடுமாறன் பேசினார் என்று அரசுத் தரப்பு சாட்டிய குற்றச்சாட்டை ஏற்க மறுத்து பின்வருமாறு கூறினார். "வெறுமனே கூட்டத்தில் பேசினார் இளைஞர்களைத் தூண்டினார் என்ற குற்றச்சாட்டுகளை அடுக்காமல் நெடுமாறன் பேச்சை கேட்டு இந்த ஊரில் வன்முறையில் ஈடுபட்டனர், கலவரம் நடந்தது என்று ஏதாவது ஒரு நிகழ்ச்சியைச் சுட்டிக்காட்ட முடிமோ?" என்றும் நீதியரசர் சிர்புர்கர் கேட்டபோது அரசுத் தரப்பு வாயடைத்துப் போய் அமைதியாக இருந்தது.

ஆனாலும் உயர்நீதிமன்றத்தில் எங்களுக்கு அளிக்கப்பட்ட பிணையை இரத்து செய்ய வேண்டுமென்று அரசு தரப்பில் சிறப்பு மனு ஒன்றினை உச்ச நீதிமன்றத்தில் அளித்த போது நீதியரசர்கள் கொதித்துப் போனார்கள். உச்சநீதி மன்றத்தில் எல்லோருக்கும் முன்னிலையில் பின்வருமாறு அரசைக் கடிந்து கொண்டனர். "நெடுமாறன் ஓராண்டிற்கு மேல் சிறையில் இருந்திருக்கிறார். சட்டப்படி ஓர் ஆண்டில் பிணை வழங்கப்பட வேண்டும். அவர் ஒரு அரசியல்வாதி. அரசியல் கருத்துக்களைக் கூட கூறக்கூடாது என்கிறீர்கள். பொடா சட்டத்தைப் பயன்படுத்தி தேவையற்ற அச்சத்தைக் கிளப்பி விடாதீர்கள். இதுபோல் பொடா சட்டம் தவறாகப் பயன்படுத்துவதால் தான் அதைக் கடுமையாக விமர்சனம் செய்கிறார்கள். இந்தப் பொடா சட்டத்தை தவறாகப் பயன்படுத்தியது குறித்து நெடுமாறனின் மனு விசாரணைக்கு வரும்போது அரசு நடத்தைப் பற்றியெல்லாம் நாங்கள் விசாரிப்போம்" என்று காட்டமாகக் கூறினார்கள்.

பொடா சிறையில் நான் இருந்த காலகட்டத்தில் என் மீது திருச்செந்தூர், திண்டுக்கல், கொடைக்கானல், ஆலந்தூர், வண்ணம்பட்டி ஆகிய ஊர்களில் நடைபெற்ற கூட்டங்களில் விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசினேன் பிரிவினை வாதத்தைத் தூண்டினேன் எனக் குற்றங்கள் சாட்டி வழக்குகள் தொடுக்கப்பட்டன. இந்த வழக்குகள் எல்லாவற்றிலும் எனக்குப் பிணை அளிக்கப்பட்டால் தான் உயர்நீதி மன்றம் அளித்த பிணையின்படி நான் வெளியில் வரமுடியும். ஆகவே இந்த வழக்குகளில் எனக்குப் பிணை கிடைத்து விடாதபடி தடுப்பதற்கான சகல முயற்சிகளையும் செயலலிதா அரசு மேற்கொண்டது. நான் பிணையில் வருவதை தாமதப்படுத்தத் தான் முடிந்ததே தவிர வேறு எதுவும் அரசினால் செய்ய இயலவில்லை.

மத்திய அரசினால் நியமிக்கப்பட்ட பொடா மறு ஆய்வுக்குழுவில் நீதியரசர் உஷாமித்ரா தலைவராகவும், கே.இராய்பால், ஆர்.சி.ஜா ஆகியோர் உறுப்பினர்களாகவும் இருந்து தமிழக பொடா வழக்குகள் குறித்து விசாரணையை நடத்தினார்கள். 15.4.2005அன்று அவர்கள் அளித்த தீர்ப்புரையில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்கள். "13.4.2002 அன்று ஆனந்த் திரையரங்கத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசப்பட்ட பேச்சுக்கள் அரசியல்ரீதியானவை. பயங்கரவாத இயக்கத்திற்கு ஆதரவு அளிப்பதோ அல்லது ஈழத் தமிழர்களுக்காகப் போராடும் விடுதலைப் புலிகளுக்கு வாயினால் ஆதரவு தெரிவிப்பதோ தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கு ஆதரவு தருவதாகாது. மக்கள் பிரச்சனைகளுக்காகச் சனநாயக ரீதியில் போராடுவதாகவும் நெடுமாறன் தனது பேச்சில் சுட்டிக்காட்டியிருக்கிறார். இலங்கையில் நடைபெற்று வரும் போராட்டம் ஈழத் தமிழர்களுக்கான விடுதலைப் போராட்டம் மட்டுமல்ல உலகெங்கிலும் வாழும் தமிழர்களுக்கு விடிவைக் கொண்டு வரும் போராட்டமாக அவர்கள் அதைக் கருதுகிறார்கள். எனவே, இந்தப் பின்னணியில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஈழப் போராட்டத்திற்கு ஆதரவு அளித்தது தங்கள் வாழ்நாள் கடமை என்றும் அதற்காக அடக்குமுறைகளைச் சந்திக்கத் தயாராக இருப்பதாகவும் கூறியிருக்கிறார்கள். ஈழத் தமிழர்கள் படும் துயரத்தைப் பகிர்ந்து கொள்வதோ அவர்களுக்கு அனுதாபம் தெரிவிப்பதோ அதைப் புரிந்து கொள்ளுமாறு மற்றவர்களை வேண்டுவதோ பயங்கரவாதம் ஆகாது. விடுதலைப் புலிகளின் பயங்கரவாத நடவடிக்கைக்கு ஆதரவு தருவதாகாது. எனவே, பொடா சட்டம் 21வது பிரிவின் கீழ் அவர்களின் பேச்சுக்களைக் குற்றமாகக் கருதமுடியாது. குற்றம் சாட்டப்பட்டவர்களின் பேச்சுக்களின் விளைவாக எத்தகைய வன்முறையும் எங்கும் நிகழவில்லை. எனவே, குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக முதல் தோற்றம் (டழ்ண்ம்ஹ எஹcண்ங்) எதுவும் இல்லை. பொடா நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வரும் வழக்குகள் திரும்பப் பெற்றவையாகக் கருதப்பட வேண்டும். குற்றம்சாட்டப்பட்ட 5 நபர்களுக்கும் எதிராக முன்தோற்றம் எதுவும் இல்லையென பொடா மறு ஆய்வுக்குழு முடிவுக்கு வந்துள்ளது. எனவே, பொடா சட்டத்தின் பிரிவு 2(3) ஆகியவற்றின் கீழ் உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி தமிழக அரசுக்கு இக்குழு ஆணை பிறப்பிக்கிறது.

உச்ச நீதிமன்றம், சென்னை உயர்நீதி மன்றம், பொடா மறு ஆய்வுக்குழு ஆகியவை மிகத் தெளிவாகவும் விளக்கமாகவும் தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கு ஆதரவாகப் பேசுவது பொடா சட்டப்படி குற்றம் இல்லை என்பதை தெளிவுபடுத்திய பிறகும் முதலமைச்சராக இருந்த ஒருவர் எதையும் மதிக்காமலும் திரும்பத்திரும்ப தவறான வாதங்களையே முன்வைப்பது அவர் வகித்த பதவிக்கு அழகல்ல.

செய்யாத குற்றத்திற்காக நாங்கள் பல மாதங்கள் சிறைகளில் வாடியதற்கும் எங்களின் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் வேதனையில் ஆழ்ந்தற்கும், எங்களின் கட்சிகளைச் சேர்ந்த தோழர்கள் தவியாய் தவித்ததற்கும் பொறுப்பாளி யார்? பல மாதங்களுக்குப் பிறகு நீதிமன்றங்கள் எங்களை விடுவித்த போதிலும் ஆட்சியாளர்களால் எங்கள் மனங்களில் ஏற்படுத்தப்பட்ட ரணங்கள் இன்னும் ஆறவில்லையே, இதற்கெல்லாம் பொறுப்பானவர் தான் செய்த தவறை கொஞ்சமும் உணராமல் தொடர்ந்து பேசுவது அவர் நீதிநெறியை மதிக்காத வர் என்பதை எடுத்துக் காட்டுகிறது,

பொடா சட்டத்தை முன்தேதி யிட்டு முழுமையாகத் திரும்பப் பெற வேண்டுமென்று இச்சட்டத்தினால் பாதிக்கப்பட்டவர்கள், சட்ட வல்லுநர்கள், மக்கள் அமைப்புகள், அரசியல் கட்சிகள் ஆகியோர் வேண்டுகோள் விடுத்தனர். சென்ற நாடாளுமன்றத் தேர்தலின்போது காங்கிரசுக் கட்சி வெளியிட்ட தேர்தல் அறிக்கையிலும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி வெளியிட்ட குறைந்தபட்ச பொது வேலைத் திட்டத்திலும் பொடா சட்டத்தைத் திரும்பப் பெறுவது குறித்து தெளிவான உத்தரவாதம் அளிக்கப் பட்டிருந்தது. ஆனால் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பொடா சட்டத்தைத் திரும்பப் பெறாமல் காலம் தாழ்த்தியது. அது மட்டுமல்ல, குதிரை கீழே தள்ளியதும் அல்லாமல் குழியையும் பறித்தது போல் பொடா சட்டத்தை முன்தேதியிட்டு திரும்பப் பெறப்போவதில்லை என்றும் பொடா சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் சட்டவிதிகளின் படியே நடத்தப்படும் என்று முடிவு செய்தது. நாடெங்கும் அதற்குக் கடும் எதிர்ப்பு கிளம்பியவுடன் பொடா சட்டத்தைத் திரும்பப் பெற முடிவு செய்து மன்மோகன்சிங் அரசு அதிலுள்ள பல கடுமையான பகுதிகளை இந்திய குற்றவியல் (கிரிமினல்) சட்டத்தில் இணைத்து விட்டது. பொடா சட்டம் திரும்பப் பெறப்பட்ட போதிலும் அதனுடைய கொடும் கரங்கள் மறையவில்லை.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலில் செயலலிதா தோற்கடிக்கப்பட்டு, தி.மு.க. ஆட்சி பீடம் ஏறிய பிறகும் கூட பலரின் மீதுள்ள வழக்குகள் இன்னமும் திரும்பப் பெறப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும். தமிழ்நாட்டில் பொடா சட்டத்தின் கீழ் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வை.கோ. மற்றும் அவரது கட்சி தோழர்கள் எட்டு பேர், நான் மற்றும் எங்கள் அமைப்பைச் சேர்ந்த ஐந்து தோழர்கள், நக்கீரன் கோபால் மற்றும் முற்போக்கு இளைஞர் அணியைச் சேர்ந்த ஆறு பெண்கள் உட்பட 21 பேர் ஆக மொத்தம் 42 பேர் இச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். இவர்களில் நான் உட்பட எங்கள் 4 பேர் மீது உள்ள பொடா வழக்கு மட்டுமே தி.மு.க.ஆட்சி வந்த பிறகு திரும்பப் பெறப்பட்டுள்ளது. அதுவும் பொடா மறு ஆய்வுக்குழு ஆணையை ஏற்க வேண்டிய நிர்பந்தம் இருந்ததால் அது நடந்தது. ஆனாலும் தமிழர் தேசிய இயக்கத்தைச் சேர்ந்த பரந்தாமன், புதுக்கோட்டை பாவாணன், வைகோ மற்றும் தோழர்கள், நக்கீரன் கோபால், முற்போக்கு இளைஞர் அணியைச் சேர்ந்த 21 தோழர்கள் மீதுள்ள பொடா வழக்குகள் இன்னமும் திரும்பப் பெறப்படவில்லை. தேர்தலுக்கு முன் தி.மு.க. தலைவர் கலைஞர் கருணாநிதி அறிவித்த வாக்குறுதியில் பொடா வழக்குகள் திரும்பப் பெறப்படும் - அனைவரும் விடுதலை செய்யப்படு வார்கள் எனக் குறிப்பிடப்பட்டது. ஆனால் அந்த வாக்குறுதி இன்னமும் நிறைவேற்றப் படவில்லை.

பொதுவாக தி.மு.க. அல்லது அ.தி.மு.க. கட்சிகள் ஆட்சியின் போது சனநாயக உரிமைகள் தொடர்ந்து பறிக்கப்பட்டே வந்துள்ளன. எழுத் துரிமை, பேச்சுரிமை, கூட்டம் கூடும் உரிமை, இவைகளை அவர்கள் தொடர்ந்து பறித்தே வந்திருக்கிறார்கள். தி.மு.க. ஆட்சியின் போது நாங்கள் நடத்திய மாநாடுகளுக்கு தடை விதிக்கப் பட்டது. 8 மாநாடுகளுக்கு விதிக்கப்பட்ட தடைகளை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் போராடி நாங்கள் அனுமதி பெற்று மாநாடுகளை நடத்தினோம்.

மதுரையில் நாங்கள் நடத்த இருந்த ஈழ ஆதரவு மாநாட்டுக்கு தி.மு.க. அரசு விதித்த தடையை எதிர்த்து உயர்நீதி மன்றத்தில் நான் முறையிட்ட போது அந்த மனுவை விசாரித்த நீதியரசர் செயசிம்மபாபு பின்வருமாறு தமிழக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.

சென்னை மாநகர காவற்படைச் சட்டத்தின் 41ஆம் பிரிவின்படி, காவல்துறை அதிகாரிகள் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட காவல்துறை அலுவலர்களைக் கூட்டம் நடைபெறும் இடத்திற்கு அனுப்புவதற்கு அதிகாரம் உடையவர் ஆவர். கூட்டம் நடைபெறுகையில், அத்தகைய காவல்துறை அதிகாரிகள் சட்டத்திற்கு விரோதமான செயல் எதுவும் நடைபெற்றுள்ளது என்று கண்டறிவார்களேயாயின், சூழ்நிலைகளுக்கு ஏற்ப எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை அவர்கள் எடுக்கலாம். ஆனால் கூட்டம் நடைபெறுவதையே அனுமதிக்க மறுக்கும் ஆணையானது பேச்சுரிமை, கருத்தை வெளிப்படுத்தும் உரிமை, கூடும் உரிமை ஆகிய அடிப்படை உரிமைகளை பறிப்பதாகும்" என திட்டவட்டமாகத் தெளிவான தீர்ப்பினை கொடுத்திருக்கிறார்.

ஆனால் இந்த தீர்ப்புகளை தி.மு.க. அரசு ஒருபோதும் மதிக்கவில்லை. இதற்குப் பின்னால் 1993ஆம் ஆண்டிலிருந்து 2007ஆம் ஆண்டு வரை எங்களின் எட்டு மாநாடுகளுக்கும் பேரணிகளுக்கும் தி.மு.க. அரசு தடை விதித்துள்ளது.

மிக அண்மையில் 2008ஆம் ஆண்டு சனவரி மாதம் 30ஆம் தேதியன்று சென்னை உயர்நீதி மன்றத்தில் நீதியரசர்கள் பி,கே,மிஸ்ரா மற்றும் கே, சந்துரு ஆகியோர் அடங்கிய ஆயம் முக்கியமான தீர்ப்பு ஒன்றினை வழங்கியுள்ளது,

மயிலாடுதுறையில் 1-4-2007 அன்று, மோதல் சாவுக்கு எதிரான கண்டனக் கூட்டத்தை, மக்கள் கண்காணிப்பகம் எனும் தொண்டு நிறுவனம் நடத்துவதற்கு காவல்துறை அனுமதி வழங்க மறுத்ததை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் மேற்கண்ட நீதியரசர்கள் 30-1-2008 அன்று மிக தெளிவானத் தீர்ப்பினை வழங்கியுள்ளார்கள், அந்தத் தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் அளித்த இரு தீர்ப்புகளைச் சுட்டிக் காட்டியதோடு, சென்னை உயர்நீதிமன்றம் நெடுமாறன் தொடுத்த வழக்கில் 1990-ஆம் ஆண்டு அளித்த தீர்ப்பையும் சுட்டிக்காட்டி காவல் துறைக்கு கடும கண்டனம் தெரிவித்ததோடு கூட்டத்திற்கு அனுமதி வழங்கும்படியும் ஆணையிட்டுள்ளனர்.

ஆனால் இந்த தீர்ப்புரை வழங்கப்பட்ட இரண்டு நாட்களுக்குப் பிறகு 2.2.2008 அன்று கடலூரில் நாங்கள் நடத்த இருந்த தமிழர் உரிமை மாநாட்டுக்கு தமிழக அரசு தடை விதித்தது. அது மட்டுமல்ல, 10.2.2008 அன்று நெல்லையில் நாங்கள் நடத்த இருந்த மாநாட்டுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து உயர்நீதி நீதிமன்றங்கள் காவல்துறையின் எதேச்சதிகாரப் போக்குக்குக் கண்டனம் தெரிவிப்பதும், தடை உத்தரவை செல்லாததாக்குவதும், மீண்டும் மாநாடு நடத்துவதற்கு அனுமதி வழங்குவதும், ஆனாலும் காவல்துறை இத்தீர்ப்புகளை கொஞ்சமும் மதிக்காமல் மீண்டும் மீண்டும் மாநாடுகளுக்குத் தடை விதிப்பதும் நடைமுறை ஆகிவிட்டன.

தி.மு.க. ஆட்சியின் போது எட்டு மாநாடுகளுக்கும் அ.தி.மு.க. ஆட்சியில் 2 மாநாடுகளுக்கும் தடைகள் விதிக்கப் பட்டன. இந்த 10 மாநாடுகளுக்கும் உயர்நீதி மன்றத்தில் முறையீடு செய்து தடையாணையைத் தகர்த்து மாநாடுகள் நடத்த வேண்டியிருந்தது. தொடர்ந்து சனநாயக உரிமைகளை பறிக்கும் வகையில் தி.மு.க., அ.தி.மு.க. அரசுகள் செயல்படுவது தொடர்கதையாகி உள்ளன. உயர்நீதிமன்றத் தீர்ப்பை மதிக்கும் மனப்பக்குவம் இரு ஆட்சி யாளர்களுக்கும் இல்லை.

நமது நாட்டின் சனநாயகத்தையும் சமுதாய உரிமைகளையும் சட்ட ஆட்சியையும் கட்டிக் காத்து வருவது நீதி பரிபாலன கட்டமைப்பே என்ற கருத்தை மறைந்த சி.சுப்பிரமணியம் அவர்கள் ஓயாது நினைவூட்டி வந்தார். ஆனால் நீதிமன்றங்களின் தீர்ப்புகளை அலட்சியப்படுத்திவிட்டு எதேச்சதிகார ஆட்சி நடத்துவது தங்களின் பிறப்புரிமை என்று கருதும் போக்கு காவல் துறையினருக்கு இருக்கிறது. அதைக் கண்டிக்கவோ நீதிமன்றத்தை மதிக்கவோ ஆட்சியாளர்கள் முன்வரவில்லை. இதற்கு காரணம் இவர்களின் ஆணைப்படி தான் காவல்துறையினர் மாநாடுகளுக்கு தடை விதிக்கிறார்கள், சனநாயக உரிமைகளைப் பறிக்கிறார்கள்,

- தினமணி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.