Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒரு நடிகனின் கதை!

Featured Replies

smy%20cry.jpg

சுரேஷுக்கு என்னைவிட ஆறு அல்லது ஏழு வயது அதிகமிருக்கலாம். நல்ல சிவந்த நிறம். உயரமானவர் என்று சொல்லமுடியாவிட்டாலும் நடுத்தர உயரம். மெல்லிய ஃப்ரேம் போட்ட மூக்குக் கண்ணாடி தலையில் கேசம் கொஞ்சமாக அப்போது அவருக்கு கொட்ட ஆரம்பித்திருந்தது. தலைமுடியை பாதுகாக்க நிறைய மூலிகைத் தைலம், சிகிச்சை என்று ஆயிரக்கணக்கில் செலவு செய்துகொண்டிருந்தார். டீக்காக ட்ரெஸ் செய்வார். தோற்றப் பொலிவில் அவர் காட்டிய முக்கியத்துவத்துக்கு ஒரு காரணம் இருந்தது. அவர் ஒரு நடிகனாக ஆசைப்பட்டார்.

தினமும் காலையில் கண்ணாடி முன் நின்று பல பாவனைகளில் நடித்து பார்ப்பார். ஆக்‌ஷன், செண்டிமெண்ட் காட்சிகளில் நடிக்க ஒரு மணி நேரமாவது பயிற்சி எடுப்பார். குறைந்தபட்சம் டிவி நாடகங்களிலாவது நடித்து திரையுலகுக்குள் நுழைந்துவிட முயற்சித்துக் கொண்டிருந்தார்.

சுரேஷுக்கு மட்டுமல்ல, அலுவலகத்தில் அட்டெண்டராக பணிபுரிந்த அந்தோணிக்கும் நடிகனாகும் ஆசை இருந்தது. பல உப்புமா மேடை நாடகங்களில் ஏதாவது ஒரு காட்சியில் வந்து ”அம்மா போஸ்ட்டு” என்று சொல்லி கடிதம் கொடுத்துவிட்டு போவது போன்ற குறிப்பிடத்தக்க கதாபாத்திரங்களில் நடித்த அனுபவம் அந்தோணிக்கு உண்டு. என்ன, ஆளு கொஞ்சம் குள்ளம், ஏறுநெற்றி, கருப்பு என்று கூட சொல்லிவிட முடியாத அண்டங்கருப்பு நிறம் என்றிருப்பார். சினிமாவில் நடித்தால் நிறைய அழகழகான துணை நடிகைகளோடு பழகமுடியும் என்பதால் சினிமா நடிகனாக விரும்பினார் அந்தோணி.

அந்தோணியை அவ்வப்போது நக்கலடிப்பது சுரேஷுக்கு பிடித்தமான பொழுதுபோக்கு. “டேய் என்னோட கலரு, பர்சனாலிட்டி இதெல்லாம் பாருடா. எனக்கே இன்னும் சான்ஸு கிடைக்கலை. உனக்கு எப்படிடா கிடைக்கும்?” சுரேஷை விட நான்கைந்து வயது மூத்தவரான அந்தோணியை சுரேஷ் ‘டேய்' போட்டு பேசுவது எனக்கு தர்மசங்கடமாக இருக்கும்.

அந்தோணி அதற்கெல்லாம் கோபித்துக் கொள்ளமாட்டார். “இல்ல சுரேஷு. நீ ஹீரோவா ட்ரை பண்ணுறே. நான் காமெடியனா ட்ரை பண்ணுறேன். காமெடியனுக்கு எதுக்கு பர்சனாலிட்டி, பாடி, கலரு எல்லாம்” என்று தன்மையாக பதில் சொல்லுவார். படவாய்ப்புகளை தேடி படையெடுத்துக் கொண்டிருந்ததால் அடிக்கடி அலுவலகத்துக்கு லீவு போடவேண்டியிருந்தது அந்தோணிக்கு. முக்கியமான நாளொன்றில் அந்தோணி லீவு போட்டதால் கோபமடைந்த மேனேஜர் அந்தோணியின் சீட்டை கிழித்து அனுப்பிவிட்டார். அதற்கப்புறம் அந்தோணி என்ன ஆனார் என்று தெரியவில்லை. எங்கள் தொடர்பில் அவர் இல்லை.

சுரேஷுக்கு நடிகனாகும் ஆசை தானாக வந்துவிடவில்லை. அவருக்கு 19 வயதிருக்கும்போது யாரோ ஒரு சாலையோர வழிப்போக்கன் ஏற்படுத்திய ஆசை அது. ஒரு தீபாவளி நாளில் சாலையில் பட்டாசு வெடித்துக் கொண்டிருந்தாராம் சுரேஷ். அப்போது அவருக்கு மூக்குக்கண்ணாடி எல்லாம் இல்லை. சாலையோரம் சென்று கொண்டிருந்த ஒரு தாடிக்காரர் (பார்க்க அக்மார்க் சினிமா இயக்குனர் லுக்) திடீரென பாரதிராஜா போல இரு கைகளையும் விரித்து சுரேஷை சுற்றி சுற்றி வந்து கண்களால் ஷாட்ஸ் எடுத்திருக்கிறார்.

சாலையில் போன யாரோ ஒருவர் திடீரென தன்னை ஏடாகூடமாக சுற்றி வருவதை கண்ட சுரேஷ் திகைப்படைந்திருக்கிறார்.

”ம்... யாருங்க நீங்க?”

“ஒரு நிமிஷம். அப்டியே லெப்டுலே திரும்பு!”

லெப்டில் லைட்டாக திரும்பி “நீங்க...?”

“லைட்டா ஸ்மைல் பண்ணு!”

லைட்டாக ஸ்மைல்லி... “?????”

“அடுத்த அஜீத் நீதாண்டா. அப்படியே அமராவதி அஜித் மாதிரி இருக்கே!”

“சார் நீங்க யாரு!”

“இந்தா அட்வான்ஸ் பிடி. என்னோட விசிட்டிங் கார்டு இது. நாளைக்கு காலைலே பத்து மணிக்கு ஆபிஸ் வந்து பாருய்யா. என் பேரு இயக்குனர் இளவேனில்!” இருபத்தியொரு ரூபாயும், ஒரு விசிட்டிங் கார்டும் சுரேஷ் கையில் வலுக்கட்டாயமாக திணிக்கப்பட்டது.

மறுநாள் காலை, விசிட்டிங் கார்டில் குறிப்பிட்டிருந்த முகவரிக்கு சுரேஷ் கனவுகளோடு சென்றிருக்கிறார். சைதாப்பேட்டை ஜெயராஜ் தியேட்டருக்கு அருகில் ஒரு டொக்கில் இருந்த பத்துக்கு பத்து ரூம் அது. அதன்பெயர் தான் ஆபிஸ். ஒரே ஒரு காக்கி டவுசர் பையன் இருந்திருக்கிறான். அவன் இயக்குனருக்கு எடுபிடியா அல்லது உதவி இயக்குனரா என்று தெரியவில்லை. அங்கிருந்த ஒரே ஒரு சோபாவில் சுரேஷ் உட்கார வைக்கப்பட்டிருக்கிறார்.

சுவற்றில் கேமிரா கோணம் பார்ப்பது போல இளவேனிலின் பெரிய படம் ஒன்று கான்வாஸ் செய்யப்பட்டிருந்தது. ரஜினி, கமல், விஜயகாந்த், சத்யராஜ், சரத்குமார், பார்த்திபன், விஜய், அஜித் என்று தமிழ் சினிமாவின் சகல நடிகர்களோடும் இளவேனில் தனித்தனியாக எடுத்துக்கொண்ட படங்கள் வரிசையாக மாட்டி வைக்கப்பட்டிருந்ததை கண்டதும் சுரேஷுக்கு கொஞ்சம் நம்பிக்கை வந்திருக்கிறது.

பதினொரு மணிக்கு இயக்குனர் வந்திருக்கிறார். சுரேஷைக் கண்டதும் கட்டிப்பிடித்து “நீதான்யா நம்ம ப்ராஜக்ட்லே ஹீரோ!” என்று சொல்லி கைகுலுக்கியிருக்கிறார். சுரேஷின் தனிப்பட்ட தகவல்களை எல்லாம் கேட்டறிந்த இளவேனில், “அடுத்த திங்கக்கிழமை ஷூட்டிங் ஸ்டார்ட் பண்ணிடலாம். காஸ்ட்யூம்ஸுக்கு ஒரு ஃபைவ் தவுசண்ட் அரேஞ்ச் பண்ணிட்டு வந்துடு” என்றிருக்கிறார்.

“சார்! எனக்கு கொடுக்கப்போற சம்பளத்துலேருந்து அந்த பணத்தை கழிச்சிக்க முடியாதா?”

“சம்பளமா? யோவ் முதல் படத்துக்கு ஹீரோவுக்கு சம்பளமெல்லாம் கொடுக்க மாட்டாங்கய்யா. ரெண்டாவது படத்துலேருந்து நீ லட்ச லட்சமா சம்பாதிக்கலாம்!”

சுரேஷ் கொஞ்சம் தயங்க, “ஒரு ஹாப் அன் அவர் வெயிட் பண்ண முடியுமா?” என்றிருக்கிறார் இயக்குனர். சுரேஷ் சம்மதித்து காத்திருந்தார். அந்த ஹாப் அன் அவரில் நிறையபேரிடம் இளவேனில் போனில் பேச சுரேஷுக்கு பிரமிப்பு தாங்கமுடியவில்லை. தயாரிப்பாளர், ஒளிப்பதிவாளர், வினியோகஸ்தர், பைனான்ஸியர் என்று யார் யாரிடமோ இளவேனில் பேசியிருக்கிறார். அவர் பேசியதை வைத்து பார்க்கும் போது லட்சக்கணக்கான பணம் அந்தப் படத்தில் முதலீடு செய்யப்பட்டிருந்தது சுரேஷுக்கு தெரியவந்தது.

அரைமணி நேரத்தில் ஷார்ட் மிடி அணிந்து புல் மேக்கப்பில் ஒரு பெண் இயக்குனரை காண வந்திருக்கிறார். “இவரு பேரு சுரேஷ். இவரு தான் நம்ம படத்துலே ஹீரோ” என்று சுரேஷை இயக்குனர் அந்த பெண்ணுக்கு அறிமுகப்படுத்த, அந்தப்பெண் உடனே சுரேஷின் பக்கத்தில் வந்து நெருக்கமாக அமர்ந்து கைகுலுக்கியிருக்கிறாள்.

“இந்த பொண்ணுதான் நம்ம படத்துலே ஹீரோயின். பேரு வினிஷா!”

அப்போதே சுரேஷ் முடிவெடுத்துவிட்டார், ”ஐயாயிரம் என்ன அஞ்சு லட்சம் ஆனா கூட இந்தப் படத்துலே நாம நடிக்கிறோம்!”

எப்படியோ ஐயாயிரத்தை புரட்டி இளவேனிலிடம் தந்திருக்கிறார் சுரேஷ். “நேரா ஷூட்டிங் போறோம். பூஜையே இல்லை, வளசரவாக்கத்துலே ஒரு பங்களாவிலே ஷூட்டிங்” என்று சுரேஷிடம் ஒரு அட்ரஸை கொடுத்து குறிப்பிட்ட நாளில் வரச் சொல்லியிருக்கிறார் இயக்குனர்.

காஸ்ட்யூமுக்கு ஏற்கனவே பணம் தந்துவிட்டதால் சுமாரான ஒரு உடை அணிந்து குறிப்பிட்ட நாளன்று குறிப்பிட்ட முகவரிக்கு சுரேஷ் சென்றிக்கிறார். ஒரு படுக்கை அறையில் ஷூட்டிங்காம். இவர் தந்த ஐயாயிரத்துக்கு பர்த்டே காஸ்ட்யூம் மட்டுமே தயாரிப்பு தரப்பில் தரமுடிந்திருக்கிறது. உடன் நடிக்க வேண்டிய நடிகை ஏற்கனவே கிட்டத்தட்ட அந்த காஸ்ட்யூமுடன் தயாராக இருக்க, “ஆஹா, சிக்க வெச்சிட்டானுங்களே சிங்கத்தை” என்று நொந்து, பின்னங்கால் பிடறியிலடிக்க தப்பித்து ஓடி வந்திருக்கிறார் சுரேஷ்.

அந்த ப்ராஜக்ட் பெய்லியர் ஆகிவிட்டாலும் சுரேஷின் மனசுக்குள் 'நடிகன் ஆகவேண்டும்' என்ற விதையை மட்டும் இளவேனில் ஆழமாக விதைத்து விட்டார். எல்டாம்ஸ் சாலை குருவிக்கூடு அறைகளில் 'ஆஸ்கர்' கனவுகளோடு வாழ்ந்துகொண்டிருந்த எதிர்கால இயக்குனர்களை தேடி தேடி சந்திப்பார் சுரேஷ்.

“எனக்காக நீங்க கதை பண்ணுங்க. உங்களுக்காக நான் தயாரிப்பாளர் தேடுறேன்” என்ற அக்ரிமெண்டோடு அடிக்கடி லீவு போட்டு சுற்றிக் கொண்டிருப்பார். சுரேஷின் அப்பா ஒரு பிரபல பழைய இயக்குனருக்கு (அவர் ஒரு ட்ரெண்ட் செட்டர்) கார் டிரைவராக இருந்தவர். எனவே சில சினிமா புள்ளிகள் அவர் மூலமாக ஏற்கனவே சுரேஷுக்கு அறிமுகமானவர்களாக இருந்தார்கள்.

சிவாஜி, எம்.ஜி.ஆர், கமல், ரஜினி போன்றவர்களின் புகழ்பெற்ற கெட்டப்புகளில் சுரேஷ் போட்டோ எடுத்து வைத்திருந்தார். அவற்றை ஒரு பெரிய ஆல்பமாக இரண்டு, மூன்று காப்பி எடுத்து பாதுகாத்தார். அவர் வசம் எப்போதும் ஒரு ஆல்பம் இருக்கும். சினிமா சம்பந்தப்பட்டவர்களாக இல்லாமல் இருந்தாலும் கூட நேரில் யாரை பார்த்தாலும் ஆல்பத்தை விரித்து காட்ட ஆரம்பித்து விடுவார்.

“கட்டபொம்மன் கெட்டப்பு இது. இது ஆக்‌ஷன் போஸ். இது ஒரு செண்டிமெண்ட் சீன்” என்று ஒவ்வொரு போட்டோவாக விவரித்து எல்லோருடைய கழுத்தையும் அறுப்பார். கழுத்தில் ரத்தம் சொட்ட சொட்ட அவனவன் தலைதெரித்து ஓடுவான்.

எனக்குத் தெரிந்து சுமார் ஐந்தாண்டுகளுக்கும் மேலாக வாய்ப்பு தேடி அலைந்துகொண்டிருந்தார் சுரேஷ். எனக்கு பணிமாற்றம் ஏற்பட்ட பின்னர் சுரேஷோடு தொடர்பு கிட்டத்தட்ட அறுந்துவிட்டது. ஏதாவது படம் பார்க்கும்போது அதில் சுரேஷ் ஏதாவது துணை கதாபாத்திரத்திலாவது வருகிறாரா என்று பார்ப்பேன்.

ஓரிரு ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு நாள் இரவு ஏதோ ஒரு தொலைக்காட்சியில் காமெடி நிகழ்ச்சி ஒன்றை பார்த்துக் கொண்டிருந்தேன். வடிவேலுவோடு, ஜிப்பா போட்ட, காந்தி கண்ணாடி அணிந்த, கொஞ்சம் வழுக்கைத்தலை ஆசாமி ஒருவர் சிரிக்க வைக்க முயற்சித்துக் கொண்டிருந்தார். ”எங்கோ பார்த்த முகமாக இருக்கிறதே?” என்று யோசித்து, யோசித்து மண்டை காய்ந்தேன்.

கொஞ்சம் குளோசப்பில் அவர் முகத்தை காட்டும்போது லைட்டாக இருந்த தெத்துப்பல்லை பார்த்ததும் தான் சடாரென புரிந்தது. “அட நம்ப அந்தோணி!”. எப்படியோ அந்தோணியின் காமெடியன் கனவு நனவாகிவிட்டது என்றதும் எனக்கு கொஞ்சம் நிம்மதியாக இருந்தது. அடுத்தடுத்து சில படங்களில் குறிப்பிடத்தக்க வேடங்களில் அந்தோணியை காணமுடிந்தது.

அவரது தொடர்பு எண்ணோ, முகவரியோ இல்லாததால் அவரை தொடர்புகொள்ளும் வாய்ப்பு கிடைக்கவில்லை. அவர் என்ன பெயரில் படங்களில் நடிக்கிறார் என்றும் தெரியவில்லை. திரையுலக நண்பர்கள் சிலரிடம் “அந்தோணி” என்று பெயர் சொல்லி விசாரித்தபோது அவர்களுக்கும் தெரியவில்லை. ஒருவேளை பெயரை மாற்றிக் கொண்டிருக்கலாம்.

இரண்டாண்டுகளுக்கு முன்பாக என் வீட்டில் நடந்த சுபநிகழ்ச்சி ஒன்றுக்காக நண்பர்களுக்கு அழைப்பிதழ் வினியோகம் செய்துகொண்டிருந்தேன். பல பேர் முகவரி மாறியிருந்ததாலும், தொடர்பு எண் இல்லாததாலும் ரொம்பவும் சிரமப்பட்டு அவர்களை கண்டறிந்து அழைப்பிதழ் தந்துகொண்டிருந்தேன். சுரேஷை எப்படியாவது கண்டுபிடித்து அவருக்கு அழைப்பிதழ் தந்துவிட முயற்சித்தேன்.

என்னோடும், சுரேஷோடும் பணிபுரிந்த ஒரு நண்பர் மூலமாக சுரேஷ் எங்கிருக்கிறார் என்பதை கண்டறிய முடிந்தது. பல சிரமங்களுக்கு பின்னர் சுரேஷை தி.நகரில் உள்ள ஒரு பிரபல ஜவுளிக்கடையில் சந்தித்தேன். அடையாளம் தெரியாமல் மாறியிருந்தார். முன்பகுதி முழுக்க வழுக்கை. பாதியாக இளைத்திருந்தார். கொஞ்சம் கறுத்தும் இருந்தார். டக்-இன் செய்து டை அணிந்திருந்தார்.

“சுரேஷு. எப்படி இருக்கீங்க?”

“வாய்யா. எப்படி இருக்கே? என்னை எப்படி கண்டுபிடிச்சே? அதிருக்கட்டும் என்ன விசேஷம்?” எதிராளியை பேசவே விடாமல் கேள்வி மேல் கேள்வி கேட்பது சுரேஷின் ஸ்டைல்.

விசேஷத்தை சொன்னவுடன், “என்ன கொடுமை சார் இது?” என்று நையாண்டி செய்தார். சில பல நல விசாரிப்புகளுக்கு பின்னர், “சுரேஷ். உங்களுக்கு கல்யாணம் ஆயிடிச்சா?”

“ப்ச்.. இல்லை.. வயசு முப்பத்தி மூணை கிராஸ் ஆயிடிச்சி. இந்த வருஷம் தங்கச்சிக்கு முடிச்சிட்டு அப்புறம் தான் பார்க்கணும்!”

“சினிமா?”

“மசுரே போச்சி. அப்புறம் என்ன சினிமா?” கண் கொஞ்சம் அவருக்கு கலங்கி இருந்ததாக உணர்ந்தேன். அவர் என்னிடம் சொன்ன கடைசி வாக்கியமே எல்லாவற்றையும் புரியவைத்ததால் விரிவாக எதுவும் பேச இயலா மனநிலையில் விடைபெற்றேன். அதுதான் கடைசியாக சுரேஷை நான் பார்த்தது. தி.நகரில் எப்போதாவது பட்டுப்புடவை எடுக்க நீங்கள் சென்றால் உங்கள் முன் புன்னகையோடு புடவைகளை விரித்து போடுபவர் எனது நண்பர் சுரேஷாக கூட இருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

கதையின் கரு நன்றாக இருக்கின்றது. ஆனால் அதில் ஆங்கில வார்த்தைகள் வந்து நெருடுகின்றது லக்கிலுக்.

மீண்டு யாழ் கலைகட்ட போகுது நீங்க யாழ்களதிற்கு வந்தபடியால் நீங்கள் தான் என் நடிகன் :mellow:

முன்னரே படித்தன் உங்க வலைப்பதிவில்...:rolleyes: நல்ல கதை

சிறி - சென்னையில் அப்படித்தான் பேசுகின்றார்கள்...

ம்ம்ம் நல்ல கதை லக்கிலுக்.

எனக்கு ஒரு சந்தேகம் சினிமாவில் நடிக்க வேண்டும் என்பதற்காக ஊரை விட்டு ஓடி வந்தவர்கள் செய்த வேலையை உதறி விட்டு முயற்சிப்பவர்கள் இப்படி இப்படி பல கதைகள் கேள்விப்படுகிறோம்.

ஆனால் இதே போன்ற உறுதியான ஆவேசமான முயற்சிகள் ஏனைய துறைகளில் செய்யப்படுவதில்லையா?

நான் அப்துல் கலாமைப் போல ஒரு அணு விஞ்ஞானியாக வேண்டும். ஒரு தொழிலதிபராக வேண்டும் என்று இப்படி தங்களை ஒறுத்து முயற்சி செய்தால் எவ்வளவு நல்லது.

  • கருத்துக்கள உறவுகள்

லக்கிலுக்! நல்ல கதை. சரளமான நடையில் நகர்கிறது.

மணிவாசகன்! உங்கள் கேள்வியைப் பார்த்ததும் நானும் யோசித்தேன். அது இப்படியும் இருக்கலாம்! சாதாரணமாக விஞ்ஞானியாவதற்கோ அன்றி போலிஸ்,பியூன் போன்ற வேலைகளுக்குகூட கல்வித்தகமை ஒழுக்கம் போன்றவை கவனிக்கப் படுகின்றன. ஆனால் நடிகர்களுக்கோ அல்லது நாட்டையே நிர்வகிக்கும் ஜனாதிபதி, அமைச்சர்கள் போன்ற அரசியல்வாதிகளுக்கோகூட இதுபோன்ற எந்தத் தகுதிகளும் அவசியமில்லை!

அத்துடன் எப்படியாவது இத்துறைகளுக்குள் புகுந்துவிட்டால் பணம்,பதவி, புகழ் எல்லாம் வேண்டியளவு கிடைத்து விடுவதும் ஒரு காரணம் என நினைக்கின்றேன்!!! :rolleyes::huh:

  • தொடங்கியவர்

சுவியின் கருத்து யதார்த்தமானதும் உண்மையானதும் கூட....

ஆனாலும் திரைத்துறை மட்டுமல்லாமல் மென்பொருள் மற்றை ஏனையத்துறைகளிலும் சாதிக்கவேண்டும் என்று நிறைய இளைஞர்கள் ஊரைவிட்டு ஓடிவருகிறார்கள். அவர்களெல்லாம் பெரும்பாலும் வெற்றியடைந்து விடுவதால் பேசப்படுவதில்லை. தோல்வி அடைந்தவர்களைப் பற்றியே அதிகம் விவாதிக்கிறோம் :lol:

ம்ம்ம் நல்ல கதை லக்கிலுக்.

எனக்கு ஒரு சந்தேகம் சினிமாவில் நடிக்க வேண்டும் என்பதற்காக ஊரை விட்டு ஓடி வந்தவர்கள் செய்த வேலையை உதறி விட்டு முயற்சிப்பவர்கள் இப்படி இப்படி பல கதைகள் கேள்விப்படுகிறோம்.

ஆனால் இதே போன்ற உறுதியான ஆவேசமான முயற்சிகள் ஏனைய துறைகளில் செய்யப்படுவதில்லையா?

நான் அப்துல் கலாமைப் போல ஒரு அணு விஞ்ஞானியாக வேண்டும். ஒரு தொழிலதிபராக வேண்டும் என்று இப்படி தங்களை ஒறுத்து முயற்சி செய்தால் எவ்வளவு நல்லது.

நல்ல கதை! வாழ்த்துக்கள் லக்கிலுக்.

சினிமா அபின் போன்றது.

மனசை தொட்டா விடாது.

நடிக்க வாய்ப்பு கிடைக்காவிட்டாலும்

நிறைவேறாத காதல் போல

சாகும் வரை புலம்ப வைக்கும்.

விஞ்ஞானியாக : தொழில் அதிபராக ..........(இப்படியான ஏனைய தொழில் செய்ய)

தேடல் : படிப்பு : திட்டம் தேவை.

இவர்கள் புலம்புவதில்லை :D

நடிகனாக ஒரு உப்புமா கம்பனி காரனிடம் மாட்டினாலே போதும்.

அவன் உசுப்பி கனவு காட்சி ஒன்றை சொல்லியே கவுத்துடுவான்.

அப்பவே புலம்பல் தொடங்கிடும் :lol:

வந்தா அதிஸ்டம்

இல்லாவிட்டால் கனவிலே வாழ வேண்டியதுதான்.

லட்சத்தில் ஒருவன்தான் வெல்கிறான்.

இந்தியாவின் ஜனத் தொகையோட ஒப்பிட்டு பாருங்க

உண்மை வெளிக்கும்............ :D

காசோடு ஊரை விட்டு வந்து

கதாநாயகனாகும் ஆசையில் காசைக் கொடுத்து விட்டு

கடைசியில் அதே கம்பனியில்

காப்பி , டீ கொண்டு வரும் பலரை சென்னையில் பார்க்கலாம்.

நம்ம வெளிநாட்டு பொடிகளும் கொஞ்சம் சுத்துறாங்க.

கவனம்!

Edited by AJeevan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.