Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வெள்ளி விழாக் காணும் மீறல்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வெள்ளி விழாக் காணும் மீறல்கள்

புனிதன் - 17-6-08

இம்மாதம் இலங்கைத் தீவின் கடைசி இனக் கலவரம் வெள்ளி விழாக் காண்கிறது. 83 ஜுலைக்கு எத்தனையோ ஆண்டுகளின் முன்னரே அரசியல் கைதிகளிற்கான ஜெனீவா விதிமுறைகள் - மனித உரிமைகள், சித்திரவதை - மீறப் பட்டன. தனி மனித சுதந்திமும் பறிபோயிற்று. இவற்றை எல்லாம் கண்டுகொள்ள இவற்றின் காவலனாகிய ஐக்கிய நாடுகளுக்கு 25 ஆண்டுகள் தேவைப் பட்டது.

கடந்த சில வாரங்களில் விரும்பியோ, விரும்பாமலோ, அன்றி நிர்ப்பந்தத்தின் பேரிலோ பொதுமக்கள் பலர் இலங்கைத் தீவில் பலிக்கடாக்கள் ஆக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தமிழர்களாக இருக்கும் போது பத்திரிகைகள், அரசியல் ஆய்வாளர்கள் எவருமே கண்டு கொள்ளாமல் இருந்தனர். பொதுமக்கள் சிங்களவர்களாக இருக்கும் போது பத்திரிகைகள், அரசியல் ஆய்வாளர்கள் எல்லாருமே கண்டு கொண்டனர். மனிதாபிமானம் அற்ற செயல், யுத்த தர்மத்துக்கு மீறியது, பயங்கரவாதம் என்று குரல் கொடுத்தனர். இதற்கு இணையத்தளக் கருத்துக்களை முன் வைக்கும் தமிழர் சிலரும் விலக்கல்ல. புலம் பெயர்ந்து வாழும், களநிலை பற்றிய எதையும் தெரிந்து கொள்ள விரும்பாத தமிழர்களும் கூட விலக்கல்ல.

ஒரே பொருளைக் கொடுக்க விரும்பாதவனுக்கும், அதே பொருளை எடுக்க விரும்புபவனுக்கும் இடையே நடக்கும் போட்டி விளையாட்டாக இல்லாத போது அதை யுத்தம் என்று கூறலாம். விளையாட்டுகளுக்கு விதிகள் உள்ளன. இந்த விதிகள் ஒழுங்காகக் கடைப்பிடிக்கப்படும் போது அதைத் தர்மம் அல்லது நேர்மையான போட்டி என்று கூறலாம். விளையாட்டில் - விதிகள், அவை மீறப்படவில்லை என்பதைக் கண்காணிக்க நடுவர்கள், தொலைக்காட்சியில் மீள் பரிசோதனை, விளையாட்டு நடக்கும் போதே அதை விமர்சிக்கும் ஊடக இயலாளர்கள் எல்லாமே இருந்தும் - விதிகள் தெரிந்தே மீறப்படுவது மட்டுமல்ல, நடுவர்கள் மீறப்படுவதைக் காணாதபோதும், கண்டும் காணாமல் இருந்தபோதும் போட்டிகளில் வெற்றிக் கோப்பைகள் பரிசளிக்கப் படுகின்றன. பணத்திற்காகவும், புகழுக்காகவும் விளையாட்டுத் தர்மங்கள் மீறப்படுவதற்கு எந்த ஒரு நாடும் விலக்கல்ல. இந்த ஆண்டு ஒலிம்பிக்ஸ் ஆண்டு. எத்தனை பதக்கங்கள் தர்மங்கள் மீறிப் பெறப்படுகின்றன என்று பொறுத்திருந்து பார்ப்போமே.

விளையாட்டுகளுக்கு என விதிகள் வரையப் பட்ட நூல்கள் உண்டு. விளையாட்டுக்களுக்கு எனத் தனித்தனி நிர்வாகங்கள் கூட உண்டு. இனி விளையாடவே கூடாது என்று விளையாட்டு வீரர்கள் தண்டிக்கப் படுவதும் உண்டு.

யுத்தத்துக்கு விதிகள் இல்லை. உபாயங்கள், உத்திகள் உண்டு. யுத்தத்தின் போது எவை தவிர்க்கப் படல் வேண்டும் என்பதற்கு ஜெனீவா விதிமுறைகள் இரண்டாம் உலகப் போரின் பின் வரையப் பட்டன. இவை உலக அரங்கில் மீறப்பட்டதற்கு இன்னும் நடந்து கொண்டிருக்கும் பாலஸ்தீன்-இஸ்ரேல் யுத்தமும், ஈராக் யுத்தமும், பயங்கரவாதத்திற்கு எதிரான போரும் எத்தனையோ முன் உதாரணங்களைக் காட்டிக் கொண்டிருக்கின்றன. இப் போர்களில் லட்சக் கணக்கில் பொதுமக்கள் கொல்லப் பட்டுள்ளனர். பாதிக்கப் பட்டுள்ளனர். இப் பொதுமக்களின் கூச்சலையும் அவலத்தையும் அனைத்துலக ஊடகங்கள் அப்படியே அமுக்கி விடுகின்றன. அவை தத்தம் நாட்டின் யுத்ததர்ம மீறல்களையும், மனித உரிமை மீறல்களையும், ஒருபுறம் தள்ளிவிட்டு தம் போட்டி நாடுகளின் மனித உரிமை மீறல்களுக்கு முதலிடம் கொடுத்துத் தம் மனிதாபிமானத்தையும், நாட்டுப் பற்றையும் வெளிப்படுத்துகின்றன. இதையே தான் - தமிழ்ப் பொதுமக்களின் இழப்புக்களை மறைத்து சிங்களப் பொதுமக்களின் இழப்புக்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை - இலங்கைத் தீவின் அரசும், முதன்மைச் செய்தித்தாள்களும் செய்கின்றன. இதை அப்படியே - சிங்களப் பொதுமக்களின் இழப்புக்களை மறைத்து தமிழ்ப் பொதுமக்களின் இழப்புக்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை - தமிழர் தரப்பும் பிரதி பலிக்க வேண்டும் என யதார்த்தத்தை எதிர்பார்ப்பதில் தவறுமில்லை. எதிர் அபிப்பிராயங்கள் தேவையுமில்லை.

இந்த ஆதங்கத்தின் வெளிப்பாடு இக்கட்டுரை. ஏன் சிங்களப் பொதுமக்களின் இழப்புக்களுக்குத் தமிழ்த் தரப்பு முக்கியத்துவம் கொடுக்கத் தேவையில்லை? 'முக்கியத்துவம் கொடுப்பது', இனிச் சிங்களப் பொதுமக்களும், சிங்கள அரசும் எடுக்க இருக்கும் நடவடிக்கைகளுக்கு ஆதாரம், அத்திவாரம் இரண்டையும் பெற்றுக் கொடுப்பதற்கு நிகரானது. 'சிங்களப் பொதுமக்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்குத் தாம் பொறுப்பல்ல', என்று விடுதலைப் புலிகள் கூறினால், விடுதலைப் புலிகள் ஜெனீவா விதிமுறைகளுக்கு உட்பட்டே போரிடுகிறார்கள் என்றுதான் அர்த்தம். 'சிங்களப் பொதுமக்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்குத் தாம் பொறுப்பு', என்று எல்லாளன் படை கூறினால், அதை அப்படியே ஏற்றுக் கொள்ளல் வேண்டும். இவற்றைத் தவிர்த்து அரசின் அனுதாபப் போர்வைக்குள் மறைந்திருக்கும் பயங்கரவாதப் பிரச்சாரத்திற்கு வக்காலத்து வாங்கும் விதத்தில் தமிழர் தரப்பு ஊகிப்பதும், ஆராய்ச்சி செய்வதும் தேவையற்ற வேலை. என்று நிகழ்வு நடந்ததோ அன்றைய செய்தியாக மட்டும் அந் நிகழ்வு வந்து 'முற்றும்' போடப்படல் வேண்டும்.

உலகில் உள்ள தமிழ் அமைப்புக்கள் - கோயில்கள், பாடசாலைகள், வணிக நிறுவனங்கள், தமிழ்ச் சங்கங்கள், ஈழத் தமிழர்களால் நிர்வகிக்கப் படும் எதுவும் - அனைத்தையும் விடுதலைப் புலிகளின் நிதி திரட்டும் முன்னணிகளாகவே இலங்கை அரசு பயங்கரவாதப் பிரச்சாரம் செய்கிறது. அதே பிரச்சாரத்தை புலம் பெயர்ந்த சிங்களப் பொதுமக்கள் தாம் வாழும் நாட்டின் புலனாய்வுத் துறையினருக்கும், அந்நாட்டு அரசுக்கும் செய்கிறார்கள். தப்பித் தவறி மிஞ்சிய அமைப்புக்களில், கனடாவில் உள்ள உலகத் தமிழர் பேரவை (World Tamil Movement) கடந்த வாரம் தடை செய்யப் பட்டுள்ளது.

இன்றைய தமிழர் நிலைக்குப் புலம் பெயர்ந்த சிங்களப் பொதுமக்களின் பங்கு இது. இன்றைய தமிழர் நிலைக்கு இலங்கை வாழ் சிங்களப் பொதுமக்களின் பங்கு எது? எதுவுமே இல்லையா? எதுவும் இல்லையென்றால் மட்டுமே அவர்களை 'அப்பாவி'ப் பொதுமக்கள் பட்டியலுள் அடக்கலாம்.

கடைசி இனக் கலவரத்தை இலங்கைத் தீவு கண்டு 25 ஆண்டுகள் முடிகிறது. 1956 தொட்டு 83 ஜுலை வரை பட்டியலிட்டால் அத்தனை இனக் கலவரங்களிலும் தமிழர்களின் வாழ்வும் அவர்களின் வளமும் சிங்களப் பொதுமக்களாலேயே சூறையாடப் பட்டது தெரிய வரும். ஆரம்பத்தில் இராணுவத்தினரும் காவல் துறையினரும் இனக் கலவரங்களின் பார்வையாளர்களாகவே இருந்தனர். காவல் துறை, தரைப் படை, கடற் படை, வான் படை என்ற ஒழுங்கில் ஒவ்வொரு இனக்கலவரத்திலும் சிங்களப் பொதுமக்களுடன் ஒவ்வொன்றாகச் சேர்ந்து தமிழர்களின் வாழ்வையும், வளத்தையும் சூறையாடி, வேலி பயிரை மேய்வது என்ற பழமொழிக்கு உதாரணமாயினர். தயவு செய்து சிங்களப் பொதுமக்களுக்கு, இலங்கை அரசு ஒழுங்கு செய்த குண்டர்கள், காடையர்கள் என்ற முக்காடிட வேண்டாம். கடந்த வாரங்களில் நடந்த பொது மக்களின் இழப்புக்களை விட ஒவ்வொரு இனக்கலவரத்தின் போதும் கொல்லப் பட்ட, தீ மூட்டப்பட்ட தமிழ்ப் பொதுமக்கள் பல மடங்கு கூட. அவர்கள் தமிழ்ப் பொதுமக்கள் என்று அறிந்தே கொல்லப் பட்டனர். தீ மூட்டப்பட்டனர். தாக்கப் பட்டனர். சீரழிக்கப் பட்டனர்.

இனக் கலவரத்தில் பாதிக்கப் பட்டவர்களுக்காகச் சிங்களப் பொதுமக்கள் (தனி மனிதராக அல்ல. அணியினராக) கண்டனக் குரல் எழுப்பிய சரித்திரம் எங்காவது பதியப் பட்டிருந்தால் கூறுங்கள். பாதிக்கப் பட்ட தனி ஒருவரின் குடும்பத்தினருக்குப் பாதுகாப்பும், ஆறுதலும் கொடுபட்டிருக்கின்றன. இது நட்பால் ஆனது. நட்பும் இனக் குரோதமும் வேறு. இனக் கலவரத்தில் பாதிக்கப் பட்ட தமிழர்கள் அனைவருக்கும் நிவாரணமோ, இழப்புக்களுக்கு ஈடோ இலங்கை அரசு செய்தது என்ற சரித்திரம் எங்காவது பதியப் பட்டிருந்தாலும் கூறுங்கள். இனக் கலவரத்தில் தமிழ்ப் பொதுமக்களை கொன்ற, தீ மூட்டிய, தாக்கிய, சீரழித்த எந்த ஒரு சிங்களப் பொதுமகனாவது கைது செய்யப் பட்டு தண்டிக்கப்பட்ட சரித்திரம் எங்காவது பதியப் பட்டிருந்தாலும் கூறுங்கள். இவை செய்யப் படவில்லை என்பதால் இலங்கைத் தீவின் அரசுகள் அனைத்தும் தமிழின ஒழிப்புச் செய்தவை. அத்தனை அரசுகளையும் தேர்ந்தெடுத்ததாலும், அவற்றுக்கு ஆதரவு கொடுத்ததாலும் சிங்களப் பொதுமக்கள் அனைவருமே தமிழின ஒழிப்புக்கு உடந்தையாய் இருந்தவர்கள் என்ற வாதத்துக்கு எதிர்வாதம் இருக்க முடியாது. இவை செய்யப் படவில்லை என்று அனைத்துலக ஊடகங்களினதும், நிறுவனங்களினதும் கண்டனங்களுக்கு அரைவேக்காடு 'கமிஷன்'கள் ஒன்றிரண்டு கண்துடைப்புச் செய்தது உண்மை.

அவசரகாலம் 58 (Emergency 58) எழுதிய தாசி விதாச்சி (Tarzie Viththachchi), இவ்வாரம் தென்னாபிரிக்காவில் எமக்காகக் குரல் கொடுக்கும் பிறையன் செனிவிரத்ன (Brian Seneviratne) போன்ற தனிமனிதர்கள் தமிழீழத் தேசீயத் தலைமையினால் அடையாளம் காணப்பட்டுக் கௌரவிக்கப் படவேண்டியவர்கள். அவசரகாலம் 58 எழுதி 25 ஆண்டுகளின் பின்னரே இலங்கைக்குச் செல்ல தாசி விதாச்சிக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப் பட்டது. பிறையன் செனிவிரத்னவால் என்றுமே இலங்கைக்குச் செல்ல முடியாது. இவர்கள் போன்ற சிலரை 1.5 கோடி சிங்களப் பொதுமக்களிடம் அடையாளம் காணலாம். ஒரு 5 சதவீதச் சிங்களப் பொதுமக்களாவது '60 ஆண்டுகளாக இலங்கைத் தீவில் தமிழருக்கு அநீதி இழைக்கப் படுகிறது' என்பதை ஏற்றுக் கொள்கிறார்களா? இல்லையே. இன்றைய கருத்துக் கணிப்புக்களில் 85 சதவீத இலங்கை மக்கள் போருக்கு ஆதரவு கொடுக்கிறார்கள். விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு ஆதரவு கொடுக்கிறார்கள். '60 ஆண்டுகளாக இலங்கைத் தீவில் தமிழருக்கு இழைக்கப் பட்ட அநீதி' இட்ட விதைகளின் விளைச்சலே விடுதலைப் புலிகள். விடுதலைப் புலிகள் இல்லையென்றால் இலங்கையில் தமிழினம் என்றோ கூட்டித் துடைக்கப் பட்டிருக்கும். 85 சதவீத இலங்கை மக்கள் விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு ஆதரவு கொடுக்கிறார்கள் என்றால் தமிழின அழிப்புக்கு ஆதரவு அளிக்கின்றனர் என்று தானே முடிவாகிறது.

தன்னைக் கொல்ல வந்த பசுவையும் கொல்லலாம். இது தமிழ். பசு என்ற அனுதாபம் தேவையில்லை. எம் இனத்தை அழிக்கத் துணிந்து நிற்பது நிச்சயமாகப் பசு அல்ல. களை எடுக்கும் போது நெற்பயிரும் வருவது இயற்கை. இப்படி வரும் நெற்பயிருக்கும் அனுதாபம் தேவையில்லை. எம் இன அழிவு முற்றாக நிறுத்தப் படும் வரை, எம் இன விடிவு முற்றாக நிலைக்கும் வரை எம் சிந்தையும் செயலும் தமிழீழ விடுதலையை நோக்கி மட்டும் ஒன்று படட்டும்.

புனிதன் - 17-6-08

புனிதனுக்கு வாழ்த்துகள்....

காலத்தின் தேவையோடு அருமையான அலசல்

எமது மக்களுக்கு விழிப்பூட்ட இப்படியான அலசல்கள்

தொடரட்டும்.....,..

இதை மானிதாபிமான மானிடர்க(ள்) சற்றேனும் கவனத்தில் எடுக்கவும்....

  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளி விழாக் காணும் மீறல்கள்

புனிதன் - 17-6-08

இம்மாதம் இலங்கைத் தீவின் கடைசி இனக் கலவரம் வெள்ளி விழாக் காண்கிறது. 83 ஜுலைக்கு எத்தனையோ ஆண்டுகளின் முன்னரே அரசியல் கைதிகளிற்கான ஜெனீவா விதிமுறைகள் - மனித உரிமைகள், சித்திரவதை - மீறப் பட்டன. தனி மனித சுதந்திமும் பறிபோயிற்று. இவற்றை எல்லாம் கண்டுகொள்ள இவற்றின் காவலனாகிய ஐக்கிய நாடுகளுக்கு 25 ஆண்டுகள் தேவைப் பட்டது.

இந்த இனக்கலவரம் என்கிற சொற்பதம் எப்படி உள்நிழைந்ததோ தெரியவில்லை. ஏதோ தமிழரும் சிங்களவரும் அடிபட்டார்கள் என்கிற தொனியில் வருகிறது. 1983 ஆம் ஆண்டு தமிழர் இன அழிப்பு என்று பயன்படுத்தப்பட வேண்டும் என்பது என் தனிப்பட்ட அபிப்பிராயம்.

  • கருத்துக்கள உறவுகள்

1983 தமிழின சுத்திகரிப்பில் இறந்த தமிழ் மக்களின் தொகை ஏற்த்தாழ 400 பேர். அனால் அதன் பின்னரான இந்த 25 வருட காலத்தில் கொல்லப்பட்ட தமிழ் மக்கள் தொகை 70,000 மேல் அப்படி பார்க்கும் போது ஆண்டுதோறும் தலா 2,800 தமிழ் மக்கள் கொல்லப்படுகிறார்கள் சிங்களவர்களால் சிஙகளவர்கள் தெளிவாகவே உள்ளனர் அவர்களது தமிழின சுத்திகரிப்பில் நாங்கள் தான் நினைக்கிறோம் 1983 தான் கடைசி இனக்கலவரம்(தமிழின சுத்திகரிப்பு) என்று.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த இனக்கலவரம் என்கிற சொற்பதம் எப்படி உள்நிழைந்ததோ தெரியவில்லை. ஏதோ தமிழரும் சிங்களவரும் அடிபட்டார்கள் என்கிற தொனியில் வருகிறது. 1983 ஆம் ஆண்டு தமிழர் இன அழிப்பு என்று பயன்படுத்தப்பட வேண்டும் என்பது என் தனிப்பட்ட அபிப்பிராயம்.

56ம் ஆண்டு 9ம் வகுப்பு மாணவனாய் இருந்த காலம் தொட்டு இனக்கலவரம் (Communal Riots) என்ற சொற் பிரயோகம் இருந்து வந்தது. இதை மரபுச் சொல்லாக ஏற்கக் கடமைப் பட்டுள்ளேன். இனஅ(ஒ)ழிப்பு என்பது இன்றைய சொற் பிரயோகம். இதுவே சரியானது. ஆனால் அந்தக் காலகட்டத்தில் உபயோகிக்கப் படவில்லை. கருத்துக்கு நன்றி. - புனிதன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.