Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கதிரி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கதிரி

எழுதியவர் மானிடப்பிரியன்

"இப்பத்தான் வந்தனாங்கள். விசாவல்லோ தந்திற்றாங்கள்.

"அப்பா! இப்பதான் மனதுக்கு சந்தோசமாக இருக்கு. இதை எப்பவோ எடுத்திருக்கலாம். நீங்கள் பார்த்த வேலையால இவ்வளவு காலம்போச்சு.

"அதுக்கு நாங்களென்ன செய்யிறது? அந்தாள் வெறியில பிறந்த திகதியை மாத்தி எழுதிப்போட்டுது.

"அந்தாள் எழுதினால் உங்களுக்கு எங்க போச்சு? அறிவு திருப்பிக்கிருப்பிப் பார்க்கிறதில்லையே? ஏ. எல். படிச்ச அறிவாளி!

"இதை எத்தனை தடவைகள் ரெலிபோனில சொல்லிப் பேசிப்போட்டியள்." அவள் செல்லமாகக் கடிந்து கொண்டாள்.

என்ன செய்யிறது? நான் உங்களைப்போல அறிவாளியில்லைத்தான். எல்லாத்திற்கும் அம்மா சொன்னமாதிரி காலநேரம் வரவேண்டும்.

பாட்டி இஞ்ச ரெலிபோன் பில் ஓடுது. இந்த பாட்டிக் கதைகளை நிற்பாட்டிப்போட்டு ரிக்கற்றை புக் பண்ணியிற்று உடனே வந்து சேருங்கோ. எனியும் என்னால காத்துக்கொண்டு இருக்கேலாது.

அவளுக்கு களுக்கென்று ஒரு சிரிப்பு வந்தது. அவள் சத்தம் போட்டு சிரித்துக்கொண்டாள்.

சிரியுங்கோ எல்லாத்திற்கும் ஒரு சிரிப்பு வைத்திருக்கிறியள்.

பின்ன உங்களைப்போல நெடுக அழுது கொண்டிருக்கிறதே?

நானெப்ப அழுதனான்.

"எப்ப எடுத்தாலும் அழுகிறமாதிரித்தான் ரெலிபோனில கதைப்பியள். கசவாரம்... காசில எப்பவும் கவனம்தான்... இல்லையெண்டால் இஞ்ச வந்து கல்யாணத்தைக்கட்டி போகேக்குள்ள என்னையும் கூட்டிக்கொண்டு போயிருக்கலாம்தானே? அப்பா அம்மாக்கள் மாமா மாமியாக்கள் சொந்தக்காரர் என்று எவ்வளவுபேர் சந்தோசப்பட்டிருப்பார்கள்.

"எனக்கு இதுகளொன்றும் விருப்பமில்லைத்தானே! அதுதான் வரவில்லை, உங்களுக்கு இஞ்ச வந்தால் நிலமைதெரியும், இதென்ன சிறிலங்காவே நினைச்சவுடனே எங்கேயும் போறதுக்கு.

"போதும் நிற்பாட்டுங்கோ. நான் சும்மா சொன்னனான். எனக்கெல்லாம் தெரியும் பகிடியாகக் கதைக்கவும் கூடாதே?

"நான்கோபிக்கவில்லை. சும்மா சொன்னனான். அதுசரி எப்ப ரிக்கற் புக் பண்ணியிருக்கிறியள்?

"என்னும் ஒரு கிழமையால.

"ஏன் அவ்வளவு நாட்கள்? அதுக்கு முதல் இல்லையோ?"

அவளுக்கு மீண்டும் ஒருசிரிப்பு வந்தது. அவன் தன்னை எவ்வளவு எதிர்பார்க்கின்றான் என்பதை நினைக்க ஆசையாகவும், ஆர்வமாகவும் இருந்தது.

அதுக்கு முதல் இல்லையப்பா. முதல் நான் வீட்டிற்குப் போய் சொல்லிப்போட்டு வராமல் இப்படியே வாறதே?

அப்ப நீங்கள்தான் உந்த டேற்றுக்கு 'புக்'பண்ணியிருக்கிறியள்.

"ஐயோ இந்த மனுசனோடை எப்படித்தான் காலம் தள்ளப்போகின்றேனோ தெரியவில்லை."

அவள் பொறுப்போடும் உரிமையோடும் தனது மனைவியாகவே உரையாடியது அவனுக்கு பெரு விருப்பமாக இருந்தது. "என்னோருக்காச் சொல்லுங்கோ கதிரி." அவன் குழைந்து கேட்டது அவளுக்கும் வெட்கத்தை வரவழைத்தது. அவள் என்றோ அவனின் மனைவியாகி மானசீகமாக வாழ்ந்து கொண்டிருக்கின்றாள். எப்போது அவனைச் சந்திப்பேன் என்ற ஏக்கம் அவனைவிட அதிகம்தான், இருந்தாலும் அவள் அவனிடம் அதிகம் காட்டிக் கொள்வதில்லை. பெண்களின் குணங்களில் கதிரியும் விதிவிலக்கில்லைத்தான்.அவள் மௌனம் சாதித்தது அவனுக்கும் புதிதில்லை. "கதிரி! கதிரி!" என்று இரண்டு தடவைகள் அழைத்தான்.

"ஓம். சொல்லுங்கோ. கண்டிப்பாக வீட்டிற்குப் போகத்தான் வேணுமோ?

"என்ன கதைக்கிறியள்? செல்வராசா மாமா வந்தவர். அங்க பெத்தாச்சிக்கிழவி அழுது கொண்டிருக்காம். இவள் எனக்குச்சொல்லாமல் போயிற்றாள், எனி நானெங்க என்ர பிள்ளையைப் பார்க்கிறதென்று. மாமி நான் நிற்கேக்கை வீடு குடிபுகவேணுமாம். நான் போகாமல் எப்படி வாறது? சொந்தக்காரருக்குச் சொல்லாமல் எப்படியுங்க....

அவள் சொல்லி முடிப்பதற்கு முதலே அவன் குறுக்கிட்டான். எங்கடை வீட்டிலும் நீங்கள்தான் கதாநாயகியாக்கும்?"

"பின்ன.. மாமா, மாமி, மச்சாள்மார் எல்லாரும் என்மேல் எவ்வளவு பாசம்?

"நானிங்க தனிய இருந்து வாடுறன். நீங்கள் அந்தமாதிரி..

"கவலைப்படாதேயுங்கோ. நான்தான் அடுத்த கிழமை வரப்போறனே!"

"கதிரி! அங்க போகவேண்டாம். இப்படியே வாங்கோ. இஞ்ச வந்து கல்யாணத்தைக் கட்டிப்போட்டு பிள்ளையையும் பெத்துக்கொண்டு அடுத்த வருடம் இரண்டு பேருமாகப்போவம்."

"சீ... உந்த நினைவிலதான் இருக்கிறியளாக்கும், இப்படியென்றால் ரெலிபோனை வைச்சிருவன்..." அவள் சும்மாதான் இதைச்சொன்னாள். அவன் இதைச் சொன்னதும் அவள் உடலில் என்றுமில்லாத புதுஉணர்வொன்று தோன்றி அவளைப்படாத பாடுபடுத்தியது. அவன் தன்னை இறுக்கி அணைத்து முத்தமிடுவதுபோல் தேகம் வெப்பமாகியது, முகம் சிவக்க தலையைக் குனிந்து கொண்டாள். வார்த்தைகள் வெளிவரவில்லை. இப்போதே அவனிடம் போகவேண்டுமென்ற ஆசை பெருகியது. அந்த இன்ப உணர்வை அடக்க முடியாமல் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது. திரும்பிப்பார்த்தாள். அப்பா வந்தால் என்ன நினைப்பார். நல்ல காலம் அவர் பக்கத்தில் இல்லை.

"இஞ்சேர்... இப்படிக் கதைக்கவேண்டாம். என்னால தாங்கேலாதாம்."

அவள் அப்படிச் சொன்னபோது அவனும் அந்த வேதனையில் தவித்தான். அவனாலும் அந்த வேதனையைத் தாங்க முடியவில்லை. திரும்பிப் பார்த்தான். ரீவிக்கு மேல் அவன் வைத்திருந்த படத்தில் அவள் சிரித்துக் கொண்டிருந்தாள்.

"ஏய், என்னும் எத்தனை நாளைக்கு... வருவாய்தானே அடுத்த கிழமை?"

அவன் பேச்சை நிறுத்த முதல் அவளே தொடர்ந்தாள்.

"கமலத்தான், இங்கயிருந்து வரேக்குள்ள என்ன கொண்டுவாறது?"

கதையை மாத்த முயற்சித்தாள். அது அவனுக்கும் விளங்கியது.

அம்மா எல்லாம் தருவா."

"அதில்லை நான் என்ன கொண்டுவாறது? அதைத்தான் கேட்கிறன்."

"நீங்க என்ன கொண்டு வரவேண்டுமென்று சொல்லட்டே?"

"வேண்டாம், சீ... நீங்கள் என்ன சொல்லுவியள் என்று எனக்குத்தெரியும். அந்த நினைவுதானே உங்களுக்கு எப்போதும்."

"சரி சரி... எனக்கு வேலைக்கு நேரம் போச்சு. திரும்பி வந்தவுடன் ரெலிபோன் எடுங்கோ."

"என்னத்தான் அதுக்கிடையில வைக்கப்போறியளே!"

"நேரம்போச்சு கதிரி! இப்பவே அரை மணித்தியாலம் பிந்திப்போச்சு. எனக்கென்ன விருப்பமில்லையே? திரும்பி வருவியள்தானே? அப்ப கதைப்பம்."

"போங்க நான் திரும்பி வரவேமாட்டன்... நீங்கள் ரெலிபோனை வைச்சால்."

"அதுக்கு இப்படியே கதைக்கிறது"

"சும்மா சொன்னனான் அத்தான். நீங்க வேலைக்குப் போயிற்று வாங்கோ. நான் அடுத்த கிழமை சந்திக்கிறேன். நான் ஊருக்குப்போய் சொல்லிப்போட்டு வாறன்."

அவள் வழக்கமாகக் கொடுக்கின்ற முத்தத்தைப் பெற்றுக்கொண்டு பிரியமனமின்றி ரெலிபோனை வைத்தான்.

அன்று மாலையே அவர்கள் ஊருக்குப் புறப்பட்டார்கள். வரும் வழிதோறும் அவனின் நினைவுகள்தான். ஊருக்கு வந்து சேர அதிகாலை ஆறு மணியிருக்கும். ஊர் இன்னும் அமைதியாகத்தான் இருந்தது. மார்கழிப் பனியில் ஊரும் உறைந்து தூங்கிக்கொண்டது. அவர்களுடன் அவளின் செல்வராசா மாமாவும் வந்திருந்தார். எந்தச் சுமையையும் அவளைச் சுமக்க விடாமல் அவர்களே தூக்கிக்கொண்டார்கள். விசாக் கிடைத்த பின் அப்பா அமைதியானதை அவள் அவதானித்தாள். அவள் மீது அதிகமாக அன்பைச் செலுத்தினார். எதற்காக இப்படி நடந்து கொள்கிறார் என்பதையும் அவள் அறிவாள். சிலவேளைகளில் அவர் கண்கள் கலங்கியதையும், பல தடவைகள் பார்த்திருந்தாள். அருமை மகள் வெளிநாடு போய்விடுவாள் என்கின்ற கவலை அவரைப் பாதித்தது. அப்பா அழுததை அவள் பார்த்தறியாள். அவரின் கண்கள் கலங்கியபோது அவளது கண்களும் சேர்ந்து கொள்ளும். இப்பவே இப்படியென்றால் நான் வெளிநாட்டிற்குப் புறப்படும்போது....? அவளால் நினைத்துப் பார்க்க முடியாமல் இருந்தது. ஒரு செத்தவீடுதான் நடக்கும். அவளாலும் முடியாமல் இருந்தது.

வீட்டிற்கு வருகிறோம் என்கின்ற சந்தோசம், விசாக் கிடைச்சிற்றுது என்கின்ற செய்தி... வீட்டாரின் நிலையைக் கற்பனையில் பார்க்கின்றாள். பெத்தாச்சிக்கிழவி இவ்வளவுக்கு எழும்பியிருக்கும். திடீரென்று போய் முன்னாலை நிற்கவேணும். திடுக்கிட்டுப் போயிடுவா. முதலில மனுசி தூசணத்தால பேசிப்போட்டுத்தான் மற்ற அலுவல் பார்க்கும். அவ எப்படிப் பேசுவா என்பதை நினைத்தபோது அவளுக்குச் சிரிப்பு வந்தது. தன்னை மறந்து பெரிதாகவே சிரித்துக்கொண்டாள். அவர்கள் இருவரும் ஆச்சரியமாகத் திரும்பிப் பார்த்தார்கள்.

என்ன பிள்ளை, தனியாகச்சிரிக்கிறாய்?

மாமா கேட்டபோது அவளுக்கு வெட்கமாக இருந்தது.

இல்லை மாமா, ஆச்சியை நினைத்தேன், சிரிப்பு வந்திற்றது. மனுசி ஒருக்கா தூசணத்தால பேசிப்போட்டுத்தான் என்னோட கதைக்கும்.." அவள் சொன்ன கதையைக் கேட்க அவர்களுக்கே சிரிப்பு வந்தது.

"ஆச்சியை நினைக்கத்தான் மாமா எனக்குக் கவலை. மனுசி என்னை விட்டிட்டு இருக்காது, திரும்பிப் பயணம் சொல்லேக்கதான் இருக்கு எல்லாம்."

முல்லைத்தீவு கள்ளப்பாட்டில்தான் அவர்களின் வீடு, வண்ணாங்குளத்திற்கு அவர்கள் வந்திருந்தார்கள். பி.டபிள்யு.டி சந்தியைக் கடந்தபோது, சென் பேதுறுவானவர் ஆலய திருந்தாதி மணிஓசை கேட்டது.

"சங்கிருத்தார் பாவிலுப்பிள்ளையர் தன்ர கடமையை மறக்கமாட்டார், ஆண்டவா!" அவருக்கு பெருமூச்சொன்றும் வந்தது.

"என்னப்பா பெருமூச்சு விடுகிறியள்?"

"ஒன்றுமில்லையடா" அப்பா மனதில் எதையோ நினைக்கின்றார் என்பதை அவள் அறிவாள். நேராகப் பார்த்தால் கடற்கரை தெரியும். கடல் அமைதியாக சிறிய அலைகளை மாத்திரம் கரைக்கனுப்பி மீட்டுக்கொண்டது. மாரி காலத்தில் கடல் இரைச்சல் எவ்வளவு சத்தமாகக் கேட்கும். இம்முறை வழமைக்கு மாறாக கடல் அமைதியானது. சீறி வரும் அலைகளுக்குப்பயந்து யாரும் தொழிலுக்குப் போவதில்லை. இந்த மாரியில் நல்ல றால் படுகிறதாம். அவள் கொழும்பில் நின்ற வேளையில் செல்வராசா மாமா வந்து சொல்லி ஆச்சரியப்பட்டார். கடற்கரையில் காலையில் பலர் நடமாடுவது தெரிந்தது. மரிய நாயகத்தார் வீட்டு மாதா சுருவத்தில் ஏற்றி வைத்த மெழுகுதிரி இப்போதும் எரிந்து கொண்டிருந்தது. அந்த வழியால் அவள் எப்போது வந்தாலும் மாதாவை மனதில் நினைத்து கையெடுத்துக் கும்பிடாமல் போனதில்லை. இன்றும் அவள் அதைச் செய்ய மறக்கவில்லை. ஆமி முல்லைத்தீவை ஆக்கிரமிப்புச் செய்தபோது, இடம்பெயர்ந்த மக்கள் அனைவரும் திரும்பவில்லை. பலர் வெளிநாடு, புதுக்குடியிருப்பு, இரணப்பாலையென்று இடம் பெயர்ந்திருந்தனர். இடம்பெயர்ந்தவர்களில் கொஞ்சப்பேர் மாத்திரம் திரும்பவும் வந்து குடியேறினர்.

கதிரி குடும்பமும் புதுக்குடியிருப்பில் இருந்து, அண்மையில்தான் கள்ளப்பாட்டிற்கு வந்திருந்தனர். மக்கள் நிறைந்த இந்தப் பிரதேசம்அமைதியானது என்னவோமாதிரி இருந்தது. சண்டையால் உருக்குலைந்து, பொலிவிழந்து, வீடுகள் இடிந்து, பாதைகள் குன்றும் குழியுமாகக் காணப்பட்டது. பார்க்கவே வயிற்றைப்பற்றி எரியும், தற்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேற ஆரம்பித்தது. இந்தமுறை றால் பிடிபடுவதுடன் பழையபடி வந்து விடுமென அங்குள்ளவர்கள் நம்புகிறார்கள். அப்படித்தான் அவளும் நினைத்தாள். முன்னால் அரியகுட்டிமாஸ்ரரின் வீடு. அங்கு யாரும் இல்லை. வீடு மாத்திரம் வெறிச்சோடிக் கிடந்தது. ராயப் பண்ணை, ராக்கினியக்கா வீடு, அவர்களின் பிள்ளைகள் கூட வெளிநாட்டில் இருந்தார்கள். அவர்களையும் பிள்ளைகள் கூப்பிடப் போகின்றார்களாம். ஊரில் பேசிக் கொண்டார்கள்.

அவர்கள் நடந்து கள்ளப்பாட்டிற்கு வந்திருந்தார்கள். இன்னேசியக்கா வீட்டு முள் முருங்கை இலை தெரியாமல் பூத்திருந்தது. செக்கச்செவேலென்று பார்ப்பதற்கே வடிவாய் இருந்தது. கிளிகளும், காக்கைகளும், குருவிகளும், பூக்கள் மீது குதித்து விளையாடின. அவர்கள் வீட்டிலும் யாரும் இல்லை. அந்த மனுசன் செத்த கையோடு, அவவும் கொழும்பில மகனோடை தங்கியிற்றா. முற்றத்தில் வைத்திருந்த தேமாமரங்கள் செழித்து வளர்ந்து நிறையப் பூத்திருந்தன. அதன் வாசம் வீதி வரை வந்து மூக்கைத் துளைத்தது. அவள் அனைத்தையும் விரும்பி ரசித்தாள்.

எனி எந்தக்காலம் இந்த இடங்களில் இந்தக் கால்கள் பதியும்?

அவள் ஊரில் கதாநாயகியாகத்தான் இருந்தாள்.

சைவம், கத்தோலிக்கம் என்ற மத வேறுபாடுகளைக் கடந்தவர்கள் முல்லைத்தீவு கரையோர மக்கள். திருமணம் என்கின்ற சடங்குகளால் ஒருவருக்கொருவர் பிணைக்கப்பட்டிருந்தார்கள். எவரது பேரைக் கேட்டாலும் மாமன், மச்சான், குஞ்சியப்பு, சித்தப்பு என்ற உறவே வெளியில் வரும். அவர் அந்தோனியாய் இருக்கலாம். அரிச்சந்திரனாய் இருக்கலாம். எல்லோரும் எல்லாத் திருநாளிலும் கலந்து மகிழ்ந்திருப்பார்கள். இம்முறை நத்தார் பெருநாளை மிகச் சிறப்பாகக் கொண்டாடினார்கள். கையில் காசுப் புழக்கம் அதிகம் என்பதை அணிந்திருந்த உடைகளில் இருந்து அறிந்து கொள்ளக்கூடியதாக இருந்தது. நத்தாரே இப்படியென்றால் வருடக்கொண்டாட்டத்தைப் பார்க்கத் தேவையில்லை. பலகாரச்சூடு 'கம,கம' என்று ஊர் முழுக்க மணத்தது.

வருசத்தை அந்தமாதிரிக் கொண்டாடுவீர்கள், நான்தான் இருக்க மாட்டன். கவலையாய் இருக்குதடி" தோழி மேரியிடம் சொல்லிக் கவலைப்பட்டாள்.

அடியேய்... விடாத கணக்கு... எப்ப மனுசனிட்டை போவன் என்றிருப்பாய். எனக்குத் தெரியாதே, சும்மா நடிக்காதை. அவரும் எப்படா வருவாள் என்று நிறைத்து வைத்த கனவுகளோடை நித்திரை வராமல் முகட்டையே பார்த்துக்கொண்டு படுத்திருப்பார். ஊண் இல்லை உறக்கம் இல்லை உன்னைத்தான் நினைப்பாராம், சரி வருசத்தை அங்க போய்க் கொண்டாடன். இப்ப அங்க நிறைந்த பனி விழும் காலமாக்கும். பிறகென்ன உன்ர பாடு கொண்டாட்டம்தான்."

அவள் சொல்லும்போது கதிரி உள்ளூர நன்றாகவே ரசித்தாள். எல்லாமே நேரில் நடப்பதைப் போன்ற உணர்வு அவளுக்கு, இன்னும் சொல்லடியென்று மனம் சொன்னாலும், பொய்க்கோபம் காட்டி, "போடி அங்காலை. நக்கலா அடிக்கிறாய்? எனக்கும் ஒருகாலம் வரும். அப்ப பார்ப்பம்.

மேரி கருக்கலுக்குள்ளதான் அவளை விட்டுச்சென்றாள்.

"காலையில் பூசை ஆஸ்ப்பத்திரிக் கோயில்லதான், போகேக்குள்ள உனக்குச் சொல்லிப்போட்டுத்தான் போவன்." அவள் விடைபெற்றபோது கண்கலங்கினாள். எத்தனை வருடநட்பு.

அன்று காலை நேரம் கழித்தே எழுந்திருந்தாள். கொண்டு போவதற்குரிய சாமான்களை அடுக்குவதில் தாமதமாகியிருந்தது. பிந்தியே அவள் படுக்கைக்குப் போயிருந்தாள். இரவு சகோதரங்கள் எல்லோருமே ஒன்றாகப்படுத்திருந்தனர். நித்திரை கொள்ள எங்கே விட்டார்கள். விடிகின்றவேளையில்தான் அவள் கண்ணயர்ந்தாள். மாரிகாலத்துக் கடல் இரைச்சல் இம்முறை அதிகம் என்றில்லை.

"அம்மா இம்முறை கடல் அமைதியாய் இருக்கிது. கவனிச்சியளே?"

"ஓமடி பிள்ளை. இப்ப நல்ல றாலும் படுகிது. இந்த நேரத்தில எப்பவாவது தொழிலுக்குப் போறதைப் பார்த்திருக்கிறியே? அந்த அளவிற்கு கடல் கொந்தளிக்கும். கொத்தானுக்கு றால் என்றால் விருப்பமாம். பொரிச்சு வைச்சிருக்கிறன். கொண்டு போய்க்கொடு."

வீட்டில் இருந்து பார்த்தால் கடற்கரை தெரியும். அவள் குளிக்கக் கிணற்றடிக்கு வந்தபோது கடலை ஒருமுறை எட்டிப்பார்த்தாள். தாயே! உன்னை எப்போது இனிப் பார்க்கப்போறேன். இன்று நான் போறன் என்று கடலுக்கும் விடை கொடுத்தாள். அவள் உடைகளைக் கisந்து மார்பை மறைத்து குறுக்காகக் கட்டினாள்."

"பிள்ளை நான் தண்ணியள்ளித் தாறன்." அம்மாதான் வந்தாள்.

வேண்டாமம்மா நான் குளிக்கிறன். எனி எப்ப இந்தக் கிணற்றில குளிக்கப் போகிறன். இன்றைக்குத்தானே கடைசி."

"ஏனடி அப்படிச் சொல்லிறாய் திரும்ப வரமாட்டியே!"

"அம்மா! அந்த வாழைக்குலையைப் பார்த்தியளே? நான் சொன்னன் போகிறதிற்கு முன்னால் இது பழுக்குமென்று. ரெண்டு பழம் பழுத்திருக்கு."

"ஓமடி பிள்ளை. சரி பிடுங்கிச் சாப்பிடு. உனக்கென்றுதான் பழுத்திருக்கு."

மகளின் சந்தோசம் அவளுக்கு மகிழ்ச்சியைத் தந்தது.

பிள்ளை இதை வெட்டிக்கொண்டு போய் கொத்தானுக்கும் குடன்."

"போணை இதையும் கொண்டு காவுங்கோவன், அவர் வாழைப்பழம் இல்லாத நாட்டிலேயே இருக்கிறார். அங்கையெல்லாம் வாங்கலாமாம்."

மகளின் பேச்சு அவளுக்கு சிரிப்பை வரவழைத்தது. முதலாவது வாளி தண்ணீரை அள்ளி தலையில் ஊற்றினாள். சில்லென்று இருந்தது.

"ஏன் தலையில ஊத்திறாய்? வீட்டைவிட்டு போகப்போறாய். முழுகிப்போட்டே வெளிக்கிட்டுப் போறது?"

"உதில என்னம்மா இருக்கு?"

"மாமி, அவள் எனி வெளி நாட்டுக்காரி. உதில எல்லாம் நம்பிக்கை வராது."

"ஏய் மேரி வாடி! எங்கை பூசைக்குப் போறியே!"

"ஓமடி. இண்டைக்கு ஆஸ்ப்பத்திரிக் கோயில்லைதான் பூசை. நான் பூசையால வர நீங்கள் வெளிக்கிட்டுப் போறியளோ தெரியாது, அநேகமாக வந்திடுவம் என்று நினைக்கிறன். எதுக்கும் ஒருக்காப் பார்த்திற்றுப் போவம் என்று வந்தனான்."

"எங்க அம்மாவைக் காணேல்லை?"

"அவ வாறா நான் ஓடி வந்தனான் மாமி. எனக்கும் நேரம் போச்சு. ஏய் தண்ணி அள்ளித் தரட்டே. இஞ்ச ஒருக்காக் குனி."

"ஏனடி?"

"ஒருக்காக் குனி சொல்லிறன்.."

கையில் வைச்சிருந்த சங்கிலியை கதிரியின் கழுத்தில் போட்டாள் மேரி.

"இதென்ன வேலையடி?"

அவளது கண்கள் கலங்கியிருந்ததை கதிரி கவனித்தாள். அவளுக்கும் அழுகை பொத்துக்கொண்டு வந்தது. மேரியை இறுக அணைத்தாள்.

"வேண்டாமடி மேரி. நீ வைச்சிருக்கிற அன்பு ஒன்றையே நான் எடுத்துக்கொண்டு போவேன். எத்தனை வருட நட்படி எங்களுக்குள்... உங்களையெல்லாம் விட்டிட்டுப் போகப்போறேன் என்ற கவலையில் என் இதயம் வெடித்து விடும்போல் இருக்கிறது, மேலும் என்னைக்கலங்கவைக்காதே."

கதிரி! நான் நின்று கலகலப்பாகச்செய்து வைக்கவேண்டிய உனது கல்யாணத்தை... செய்து வைக்கிற சந்தர்ப்பம் இல்லாமலே போய்விட்டது. எனது ஞாபகமாக இது என்றைக்கும் உனது கழுத்திலேயே இருக்கட்டும். மாமி அவளைப் போட்டிருக்கும்படி சொல்லுங்கோ."

"பிள்ளை, அவள் இவ்வளவு சொல்லிறாள். போட்டிரு."

அவள் அழுது வடித்தவளாய் பிரியமனமின்றி பிரிந்து சென்றாள்.

"கெதியாய் வா மேரி. நான் உனக்காகப் பார்த்துக்கொண்டு நிற்பன்."

"இல்லைக் கதிரி, நான் வரமாட்டன். எனக்காகப் பார்க்கவேண்டாம். நீ சந்தோசமாகப் போய் வா."

"என்னடி சொல்லிறாய்? எனி என்னை எப்ப பார்க்கப் போறாய்? என்னை வழியனுப்பி வைக்க வந்திடு."

"அதனால்தான் சொல்லிறன். நான் வரமாட்டன். நீ எனக்கு விடைதரும் கணத்தில் என் இதயம் உன் பிரிவு தாங்காமல் விம்மி வெடித்து விடும் கதிரி. நீ போன பிறகு ஊருக்குள் இந்த மேரி உன் நட்பையிழந்து அநாதையாகத் திரியும் பரிதாபத்தை கற்பனை செய்து பார். என்னால் உனக்கு எப்படி விடை தரமுடியும்? நான் இதற்காகத்தான் இன்றைக்குப் பூசைக்கே போகிறேன். உனக்காக மன்றாடுகிறேன், நீ சந்தோசமாகப் போய்வா."

அவள் திரும்பிக் கதிரியைப் பார்த்தாள். அவள் விம்மி, விம்மி அழுது கொண்டு நின்றாள். அவளைப் பார்க்க திறாணியற்றவளாய் அழுத கண்ணீரைத் துடைத்தவாறு விர்ரென்று திரும்பிப் பார்க்காமலே நடந்தாள். அவள் நடந்த திசையைப் பார்த்தவாறு நின்ற கதிரியின் தலையிலிருந்து வழிந்த நீர் அவள் கண்ணீரைக் கழுவியது. 'நட்புக்கு இலக்கணம் நீதானடி மேரி. நீ எடுத்த முடிவு சரிதான். நான் இல்லாமல் நீ அநாதையாகத்தான் திரிவாய்.' அவள் உருவம் மறையும் மட்டும் கதிரியின் பார்வை அத்திசையிலேயே நிலைகுத்தி நின்றது.

மகளின் கவலையைப் பார்க்கத் தாயால் முடியவில்லை.

"அம்மா பார்த்தியளே! நான் என்ன செய்யிறது?" அவளுக்கு என்ன சொல்லுவதென்றே தெரியவில்லை. சின்ன வயதிலிருந்தே இணை பிரியாத தோழியாக என்றும் அவள் வாழ்க்கையில் துணையாக இருந்தவள் மேரி. இன்பத்திலும் துன்பத்திலும் கலந்து கொள்ளாத சம்பவங்களே இல்லையென்று சொல்லலாம். அவள் அழுத கண்ணீருடன் இன்று விடை தந்தது கதிரிக்கு தாங்கமுடியாத வேதனையைத் தந்தது.

மாரிக்கிணறு மேல் கட்டுவரை தண்ணீர் வர இன்னும் கொஞ்ச இடைவெளிதான் இருந்தது. வந்த பெருமூச்சை பெரிதாகவே விட்டாள். வாளியைக் கிணற்றுக்குள் இறக்கி தண்ணீரை அள்ளி மீண்டும் தலையில் ஊற்றினாள்.

"அம்மா, நீங்கள் போங்கோ. நான் குளிச்சிற்று வாறன்.. அங்க கடலைப்பாருங்க தண்ணீரைக் காணேல்லை. வெறும் மணலாகத் தெரியுது.."

"ஓமடி பிள்ளை.."

அவ்வளவதான்... 'படபட' என்று உலகமே அதிர்வதுபோல் சத்தம், கிபீர் விமானங்கள் குண்டு போட்டது மாதிரி... மீண்டும் சண்டை தொடங்கப்போகிறதோ? கடவளே! என்னைக் காணாமல் என்ர அத்தான் செத்துப்போடுவார். இனிவேண்டாம். சண்டையே வேண்டாம்.

"அம்மா அங்க பாருங்கோ!"

கடலில் இருந்து உயர்ந்து வரும் அலை ஊரைநோக்கி வந்து கொண்டிருந்தது.

"கடவுளே!"

அடுத்த கணம் என்ன நடந்ததென்றே தெரியவில்லை. அவள் தண்ணீரால் தூக்கி எறியப்பட்டாள். மிதந்தபோது ஊர் முழுக்கக் கடலாகத் தெரிந்தது எங்கும் அலறல் சத்தங்கள். அம்மாவைக் காணவில்லை. அவள் மட்டும்அந்த மரக்கிளையில் தொங்கினாள். ஊர்ச் சனங்களை கடல் அள்ளிக் கொண்டு போனதை அவள் பார்த்தாள். இறுக்கிப் பிடிக்க முடியாமல் கைகள் வலியெடுத்தன. அடுத்த அலை வர அவள் கைகள் தளர்ந்தன. அவள் தினம் பார்த்து மகிழ்ந்த அந்தக் கடலிலேயே கலந்து கொண்டாள், அவள் ஆசைக்கனவுகளும் சேர. அடுத்தவேளை என்ன நடக்கப்போகின்றது என்பதை அறியாமல் எதிர்காலக் கனவுகளோடு கரையோரம் வாழ்ந்த கள்ளங்கபடமற்ற அந்த மக்கள் சில நிமிடங்களில் கடலோடு கலந்தார்கள் கதிரியைப்போல்.

முல்லையில் மாத்திரம் மூவாயிரத்திற்கு மேல் என்ற கணக்கெடுப்போடு செய்திகள் வெளிவந்தன. ஐந்து கிராமங்களை அழித்து நாசமாக்கிய கடல் அமைதியானது. சிறுவர்கள், குழந்தைகள் என்று யாரையும் விட்டு வைக்கவில்லை. கோவில்கள், குடிசைகள் என்றில்லாமல் அத்தனையும் பரிநாசமாகின. ஒரு குடும்பத்தில் யாருமே இல்லாமல், ஒரு குழந்தை மாத்திரம் தப்பிய நிலையில் அநாதரவாக நின்று உறவுகளைத் தேடி அழுதது.

செய்தி அறிந்த மேரி துடித்துப் போனாள். அவள் மனதில் கதிரியின் முகமே தோன்றி வேதனைப்படுத்தியது. கோவில் பூசைக்குப் போனவர்களைத் தவிர மற்றவர்கள் பெரும்பாலும் இறந்தவர்கள் வரிசையில் சேர்ந்து கொண்டார்கள். இதயத்தை உறையவைத்த சம்பவத்தில் உறவுகளின் உடல்களைத் தேடி கரையோரம் அலைந்தார்கள் தப்பியவர்கள். மேரியும் தன் சொந்தங்களுடன் கதிரியின் உடலையும் தேடி அலைந்தாள். ஆனால் அவள் உடல் இறுதிவரை கிடைக்கவில்லை.

"கதிரி என் அன்புத்தோழியே, என்னை வழியனுப்பி நீ மட்டும் திரும்பி வராத இடத்திற்குப்போனாயோ!"

அவள் ஒவ்வொன்றையும் நினைத்து, நினைத்து அழுதாள்.

"தம்பி நான் மாமா கதைக்கிறன். ஊரே அழிஞ்சு போச்சு தம்பி.... உங்கடை குடும்பத்திலயும் ஒருதரும் இல்லைத் தம்பி. நானும், மகன் சிவராசாவும் தான் தப்பியிருக்கிறம். கதிரியும் போய்ச் சேர்ந்திற்றாள்."

விம்மி அழுதார். பழைய செய்திதான். அவர் உறுதிப்படுத்தியிருந்தார். அவன் சிலையாகி விறைத்திருந்தான். அவள் மட்டும் சிரிக்கின்றாள். அந்தப்படத்தில்.

சுனாமி 26.12.2004. பல லட்சம் உயிர்களோடு, என் உயிரையும் நான் இழந்தேன் என்பதை மட்டும் அந்தப் படத்திற்குக் கீழ் எழுதினான். அவனுக்கென்று யாரும் இல்லை ஊரில்.

(இந்தக் கதையில் கதிரி என்ற கதாபாத்திரம் சம்பவத்தின் பின்னணியே. ஆனாலும் இந்தப்பெயர் எனது கற்பனையில் தோன்றியது. அழிவோடு கலந்து கொண்ட ஆத்மாக்களின் பிரதிநிதியாக இதனைத் தெரிவு செய்தேன். என் இதயமும் சோகத்தில் வெடித்தபோது தோன்றியதே இந்த வரலாறு...)

முற்றும்.

http://www.tamilamutham.net/home/index.php...03&Itemid=7

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி நுனாவிலன் ..

.நல்ல ஒரு கதை தேடி தந்து இருக்கிறீர்கள் .எழுதிய விதம் நன்றாக் இருக்கிறது.

முடிவு தான் சோகம் . இப்படி எத்தனை உயிர்களோ ? யார் அறிவார் ?

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் நுணாவிலான்

அருமையான எழுத்தோட்டம். மொத்தத்தில் இது கதையல்ல. சம்பவத்தை நேரில் பார்ப்பது போன்ற பிரமை

எழுதிய மானிடப் பிரியனுக்கும் எடுத்து வந்த உங்களுக்கும் பாராட்டுக்கள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி நிலாமதி, காவலூர் கண்மணி. இக்கதையின் பல சம்பவங்கள் என்னை பாதித்தவை என்பதாலோ என்னவோ என்னை கவர்ந்த சிறு கதை. அம்மாடியோ, இக்கதையை எழுதியவர் நிச்சயமாக ஒரு கலைஞன் என்பதில் அபாரமான நம்பிக்கை உண்டு.

சோகமான கதைகள் எண்றால் நான் அதை பாதியிலேயே நிறுத்தி விடுவேன்.... முதல் முறையாக முழுவதும் படித்தேன்...

கொடிய போரை போல கடலும் எங்களை வாட்டிய சோகம்...

இணைப்புக்கு நண்றி நுணா.

  • 3 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி தயா அண்ணா. இந்த சிறியேனின் தெரிவு உங்களை கவர்ந்தால் அது எனக்கு மகிழ்ச்சியே.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.