கதை - 200 / “மொழி இழந்த கடற்கரையில் ஒரு காதல்” அல்லது “சிலாபம் – உடப்பு நடுவே சிக்கிய இரண்டு இதயங்கள்”
பாகம் – 7 / “அதிகாரம் மிகவும் அமைதியாக பேசக் கற்றுக்கொண்டது”
உடப்பு பள்ளியில் அன்று மணி ஏற்கனவே அடிக்கப்பட்டு மாணவர்கள் எல்லோரும் வீட்டுக்கு சென்றுவிட்டனர். அது பிந்திய மதியம். பணியாளர்கள் அறை வழக்கத்தை விட அமைதியாக இருந்தது.
ஆதன் தனியாக வகுப்பறையில் அமர்ந்து இருந்து, குறிப்பேடுகளைத் [notebooks] திருத்திக் கொண்டிருந்தான். அவனது கையில் சிவப்பு மை பேனா [எழுதுகோல்] அசைந்தது, ஆனால் அவனது மனம் அசையாமல் இருந்தது. அன்று படிப்பித்தில் முடிக்கும் தருவாயில், “தயவுசெய்து பள்ளிக்குப் பிறகு கொஞ்சம் காத்து இருங்கள். கூடுதல் கல்வி அதிகாரி [Additional Education Officer] இங்கு வந்து உள்ளார்.” என்று ஒரு செய்தி அவனுக்கு வந்திருந்தது. அது தான் ஆதன் அந்தநேரத்தை பயன் உள்ள வழியில் செலவழித்துக் கொண்டு இருந்தான்.
அந்த செய்தியை கேட்டு அவன் பெருமூச்சு விடவில்லை. அவன் அதை எதிர்க்கவில்லை. அவன், கூடுதல் கல்வி அதிகாரியை துணிந்து எதிர்கொள்ள நின்றான்.
அவன் அலுவலகம் சென்ற போது அங்கு இம்முறை, மேசையில் எந்த குற்றச்சாட்டுகளும் இல்லை. ஆனால் கோப்புகள் [files] மட்டுமே இருந்தன.
அங்கு கூடுதல் கல்வி அதிகாரி அமைதியாக அமர்ந்து இருந்தார். தலைமை ஆசிரியர் அவருக்கு அருகில் நின்றார். ஆனால் பெற்றோர் ஆசிரியர் சங்க உறுப்பினரோ அல்லது ஆலய குருவோ, எவரும் அங்கு இல்லை. இது ஒரு ஒழுக்கக் கூட்டம் அல்ல. இது நிர்வாகக் கூட்டம்.
அதிகாரி மெதுவாகப் பேசினார்: “திரு. ஆதன், உங்கள் கற்பித்தல் பதிவு [teaching record] சிறப்பாக உள்ளது. மாணவர்கள் உங்களை மதிக்கிறார்கள். இதில் ஒரு பிரச்சனையும் இல்லை, ஆனால் படிப்பிக்கும் பொழுது கொஞ்சம் கூடுதலான உணர்வுபூர்வமாக வரலாறு கற்பிக்கப்படுகிறது. அதனால்தான் நாம் கொஞ்சம் கவனமாக இருக்கிறோம்.” என்றார்.
ஆதன் அமைதியாக அதிகாரி சொல்வதை கேட்டுக் கொண்டு இருந்தான். அதிகாரி ஒரு கோப்பைத் தன முன் திறந்தார் — ஆனால் அதைப் படித்துக் காட்டவில்லை.
“உங்களைப் போன்றவர்கள்,” அவர் தொடர்ந்தார், “தண்டனை தேவையில்லை. ஆனால் அவர்களுக்கு வழிகாட்டுதல் தேவை.” என்றார்.
உடனே ஆதன் அமைதியாகக் கேட்டான்: “எதை நோக்கி வழிகாட்டுதல், ஐயா?”
அதிகாரி சிரித்தார். “நடுநிலையை நோக்கி.” ஒரு இடைநிறுத்தத்திருக்குப் பின் அவர் மீண்டும் தொடர்ந்தார்
“வரலாறு, இந்த மாவட்டத்தில் உணர்ச்சிபூர்வமானது. அது போலவே
மொழியும் காணப்படுகிறது. இங்கு நடந்தவை நடந்தவையே . ஆனால் கருத்தில் கொள்ளுங்கள், உணர்ச்சி சீரமைப்பை அல்லது ஒருமிப்பு ஒன்றை, அதாவது ஒன்றுசேர்தலை உருவாக்குகிறது. அது தான் நாம் கவனிக்க வேண்டியதாக உள்ளது.” என்றார்
ஆதன் பதிலளித்தான்: “உணர்ச்சி புரிதலையும் உருவாக்குகிறது.[Emotion also creates understanding.] ”
அதிகாரி கோப்பை மூடினார்.
"அடுத்த வரும் காலகட்டத்தில், உங்கள் பாடங்கள் பாடத்திட்டத்தின்படி கண்டிப்பாக இருக்கவேண்டும். அதற்கு மேலதிகமான கூடுதல் விளக்கங்கள் தேவை இல்லை. அது மட்டும் அல்ல, தனிப்பட்ட, உலகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட வரலாற்று சான்றுகள் மற்றும் இலக்கியங்களின் ஊடாக விளக்கங்கள் தேவை இல்லை. அரசு ஏற்றுக் கொண்ட மகாவம்சத்தின் ஊடாக மட்டும் வரலாறு இருக்கட்டும், அதில் தவறு, பிழைகள் சுட்டிக்காட்டுவது உங்கள் வேலை இல்லை."
அதன் பின் இடைநிறுத்தத்தின் பின், அவர் தொடர்ந்தார்: "இது கண்காணிப்பு அல்ல," என்று அவர் மேலும் கூறி, "இது கட்டுப்படுத்துதல்." மட்டுமே என்றார்.
ஆதன் மேலே பார்த்தான். தீபவம்சம், மகாவம்சம் மற்றும் சூளவம்சம் என்பவை புத்த சமயத்தை பரப்பவென அன்று பாளியில் எழுதப்பட்ட இனவாதம் கக்கும் பல பொய்களை உள்ளடக்கிய, புத்தரின் போதனைக்கு எதிராக, சோடிக்கப்படட ஒரு வரலாற்றுத் தொகுப்பு என்பது அவனுக்குத் தெரியும். புத்தர் மூன்று முறை இலங்கைக்கு பறந்து வந்தார் என்ற கட்டுக்கதையுடன் ஆரம்பிக்கும் தொகுப்பே இவை. இந்தியாவில் பிறந்து, வளர்ந்து, அங்கேயே இறந்த புத்தரைப் பற்றி, இந்திய நூல்களுக்கு முற்றிலும் மாறாக இந்த ஆரம்பமே இருப்பது அவனுக்கு வேடிக்கையாக இருந்தது. இவ்வாறான பல வரலாற்று பொய்களைப் பற்றி அவன் மனம் தனக்குள் முணுமுணுத்தது.
அதை இன்று, குறிப்பாக சிங்கள அதிகாரிகளையும் புத்த பிக்குகளையும் கொண்ட தொல்பொருள் திணைக்களம் செய்யும் கூத்துக்கள் அவன் அறிவான். பாவம் புத்தர் அங்கெல்லாம் ஆக்கிரமித்துக் கொண்டு, சிலையாக முளைக்கிறார்.
"ஐயா," அவன் கூறினான், "உயிருள்ள ஒன்று வளரும்போது மட்டுமே கட்டுப்படுத்துதல் தேவை.[containment is only required when something alive is growing.], இங்கே நான் வரலாற்றை மட்டுமே படிப்பிக்கிறேன், அதை உண்மையான வாதங்களுடன் எடுத்துக் காட்டுகிறேன். அப்படி என்றால் உண்மையை சொல்லாமல் கட்டுப்படுத்து கிறீர்களா ?" என்று கேட்டான்.
அதிகாரி பதிலளிக்கவில்லை. கூட்டம் எந்தவித சலசலப்பும் இன்றி அமைதியாக முடிந்தது.
ஆனால், அது தான் அவனை கோபத்தை விட அதிகமாகப் பயமுறுத்தியது.
பள்ளிக்கு வெளியே, வேப்பமரம் மட்டும் அசையாமல் நின்றது. ஆதன் தனது மரத்துடன் சாய்த்து வைத்த சைக்கிளை வெளியே எடுத்தான். ஒரு இளைய ஆசிரியர் அமைதியாக ஆதனை அணுகினான்.
"சார் ... அவர்கள் உங்களைப் பார்த்து கத்தவில்லையா ?." ஆதன் தலையசைத்தார்.
"அப்படி என்றால் அவர்கள் பயப்படுகிறார்கள்," என்று அவன் கூறினான்.
அன்று மாலை - கடற்கரை அமைதியாக இருந்தது. அலைகள் ஒன்றும் கொந்தளிக்கவில்லை. மழை நின்று விட்டது. சூரியன் அடிவானத்திற்குக் கீழே மறையும் போது, வானம் பெரும்பாலும் சூடான ஆரஞ்சு மற்றும் இளஞ்சிவப்பு நிறங்களிலிருந்து குளிர் நீலம் மற்றும் ஊதா நிறங்களுக்கு மாறியது. கடல் இந்த வண்ணங்களைப் பிரதிபலிக்கிறது, அவை ஆழமான நீலம் அல்லது ஊதா நிற வண்ணச்சாயமாக தோன்றியது. அந்த ஒளிக்குள் யாரோ தோணியில் நின்றபடி வலை வீசிக் கொண்டிருந்தார். அது ஒரு நிழல் மாதிரி இருந்தது. அவர் எதோ ஒரு பாடலை மெதுவாகப் பாடினார். பாடலின் வார்த்தைகள் காற்றில் கலந்து, அவன் காதிலும் மோதியது. அருகில் நின்ற இன்னும் ஒரு மீனவன், ஆதனிடம் சொன்னான், "சார் - தோணியில்லாத கடல், வலையில்லாத கையைப் போல," என்று. ஆதன் தலையாட்டினான். தொலைவில் அந்த நிழல் தோணியும் நகர்ந்தது. வலையில் சில கருப்பு மீன்கள் மின்னின. ஆதன் மனம் அதை ரசிக்கும் நிலையில் இல்லை. காற்று வாங்கவும் ஒரு மன ஆறுதலுக்கு மட்டுமே அங்கு வந்தான். அவன் சமந்தியைக் கூட அழைக்கவில்லை. அவன் தனியாக நடந்தான். அலைகள் இன்னும் அமைதியாகவே இருந்தன.
அப்பொழுது முதல் முறையாக, ஒரு கேள்வி அவன் மனதுக்குள் நுழைந்தது: மற்றவர்களை உடைக்காமல்... அல்லது தன்னைத்தானே உடைக்காமல் எவ்வளவு உண்மையை ஒருவர் சுமக்க முடியும் [How much truth can one carry without breaking others… or oneself?]?
அவன் வீடு திரும்பியதும் தனது நாட்குறிப்பில் [டைரி], ஆதன் நிதானமாக, மெதுவாக எழுதினான்: “அவர்கள் இனி என்னைக் குற்றம் சாட்ட மாட்டார்கள். அவர்கள் இனி என்னை எச்சரிக்க மாட்டார்கள். வாயைத் தொடாமல் அல்லது கிளறிவிடாமல் ஒரு குரலை எப்படி அமைதிப்படுத்துவது என்பதை இப்ப கற்றுக்கொண்டார்கள். இது நேரடியான தண்டனை அல்ல. இது அதற்கான ஒரு தயாரிப்பு. நாளை, போராட்டம் பகிரங்கமாக இருக்காது. ஆனால் உள்ளே இருக்கும். [Tomorrow, the struggle will not be public. It will be inside]”
நன்றி
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
பகுதி: 08 தொடரும்
துளி/DROP: 2077 [கதை - 200 / “மொழி இழந்த கடற்கரையில் ஒரு காதல்” அல்லது “சிலாபம் – உடப்பு நடுவே சிக்கிய இரண்டு இதயங்கள்” / பாகம் – 7
https://www.facebook.com/groups/978753388866632/posts/34171930912455452/?
கதை - 200 / “மொழி இழந்த கடற்கரையில் ஒரு காதல்” அல்லது “சிலாபம் – உடப்பு நடுவே சிக்கிய இரண்டு இதயங்கள்” / பாகம் – 8
பாகம் – 8 / “உளவியல் மற்றும் நெறிமுறைகளில் மனதுக்குள் ஒரு முறிவு”
அன்று எந்த கடிதங்களும் வரவில்லை. எச்சரிக்கைகள் இல்லை. புதிய உத்தரவுகள் இல்லை. ஆனால் அந்த அமைதி தண்டனையை விட கனமானது. ஏனன்றால் புலி பதுங்குவது பாய்வதற்கு என்பது போல ஆதனுக்கு இருந்தது.
உடப்பு பள்ளியில், ஆதன், தனது வகுப்பறையில் கரும்பலகைக்கு அருகில் படிப்பித்தலை தொடங்குவதற்கு நின்றான்.
அவன் கையில் சுண்ணக்கோல் [chalk] இருந்தது, ஆனால் அவன் மனம், இம்முறை கொஞ்சம் தயங்கியது. அவனுக்கு நன்றாகத் தெரியும் —
இப்போது ஒவ்வொரு வார்த்தையும் இனி எடை கொண்டது. ஒவ்வொரு வாக்கியமும் அதிகாரிகளுக்குச் சான்றாக மாறக்கூடும். எனவே அவன் யோசித்து மெதுவாக எழுதினான்:
“மொழி என்பது நாம் கற்றுக்கொள்வதுதான்.” அத்துடன் ஆதன் நிறுத்தினான். முன்பு என்றால், அவன் இன்னும் அதிகமாக, விளக்கமாக எழுதியிருப்பான். அவன் மொழியின் நினைவாற்றல் பற்றி, வரலாறு பற்றி, அடையாளம் பற்றி பேசியிருப்பான். ஆனால், இன்று, அவன் எழுதிய வரிசையை பாதியிலேயே அழித்துவிட்டான்.
உடனே ஒரு மாணவன் கையை உயர்த்தினான். “சார் ... நேற்று தமிழ் ஞாபக சக்தியைக் கொண்டு வரும் என்று சொன்னீர்கள். இன்று ... நிறுத்தி விட்டீர்கள்.” என்று கேட்டான்
வ
குப்பறை அமைதியாக இருந்தது. ஆதன் இளம் மாணவ முகங்களைப் பார்த்தான். அவர்கள் அதிகாரிகள் அல்ல. அவர்கள் கோப்புகள் அல்ல.
அவர்கள் உண்மைக்காகக் காத்திருக்கும் குழந்தைகள்.
ஆதன் அமைதியாகச் சொன்னார்: “சில உண்மைகள் அழிக்கப் படுவதில்லை. அவை காத்திருக்கின்றன.”
அப்பொழுது மணி ஒலித்தது. என்றாலும் மாணவர்கள் யாரும் அசையவில்லை.
அதேவேளை, சிலாபம் மருத்துவமனையில் சமந்தி தனது கைகளை சிங்க்கில் [sink] கழுவிக் கொண்டு இருந்தாள். ஆனால் அவள் மனது அவளிடம் இல்லை, அது யோசனைகளுக்குள் மாட்டிக் கொண்டு இருந்தது. தண்ணீர் தொடர்ந்து ஓடிக் கொண்டு இருப்பதைக் கூட அவள் கவனிக்கவில்லை.
ஒரு ஜூனியர் நர்ஸ் [junior nurse] அவள் பின்னால் கிசுகிசுத்தாள்: “உன்னை கண்காணிப்பதாக, அருட்சகோதரிகள் சொல்கிறார்கள்.”
சமந்தி தலையசைத்தாள். “எனக்குத் தெரியும்.”
அப்பொழுது இன்னொரு குரல் பின்னால் கேட்டது : “நீ ஏன் கொஞ்ச நாள் அமைதியாக இருக்கக் கூடாது?”
சமந்தி திரும்பினாள். “நான் இப்போது அமைதியாக இருந்தால், என் சொந்தக் குரலை நான் மீண்டும் ஒருபோதும் கேட்க மாட்டேன்.”
அன்றிரவு, அவளால் தூங்க முடியவில்லை. பயத்தின் காரணமாக அல்ல— ஆனால் அவள் தேர்ந்து எடுத்த பாதையின் காரணமாக [because of choice].
அவள் திருப்பி கதைத்தால், அவள் குடும்பத்தினர் அருட்சகோதரிகளின் எதிர்கால நடவடிக்கைகளால் பாதிக்கப்படுவார்கள். ஆனால், அவள் அமைதியாக இருந்தால், அவள் தான் யார் என்பதையே அல்லது தன்னையே மறைந்துவிடுவாள். அந்த எண்ண அலை அவள் மார்பில் ஓடியது.
அன்று இரவு இருவரும் கடற்கரையில் சந்தித்தார்கள். அந்த இரவு நேரத்தில் கடற்கரை அலைகளின் மெல்லிய ஓசையுடன் அமைதி தவழும் ஓர் இடமாக இருந்ததுடன், பயோலுமினென்சென்ஸ் (Bioluminescence) எனப்படும் இயற்கையால் நீல நிறத்தில் ஒளிரும் உயிரினங்களால் மாயாஜாலக் காட்சியையும் அளித்தது.
அவர்கள் வழக்கத்தை விட தாமதமாக சந்தித்தனர். அன்றிரவு அலைகள் கூட பெரிதாக இருக்கவில்லை. இருண்ட நீர் மட்டுமே, ஆனால் சில நீல நிறத் தோற்றமும் இருந்தன.
அவர்கள் இருவரும் கடலின் மாயாஜாலக் காட்சியை பார்த்தபடி வெள்ளை மணலில் பக்கத்தில் பக்கத்தில் இருந்தாலும், கொஞ்சம் இடைவெளி விட்டே இருந்தனர்.
ஆதன், சமந்தியை பார்க்காமல் கடலை பார்த்தபடி, முதலில் பேசத் தொடங்கினான்: "இன்று பாதியிலேயே நான் எழுதுவதை நிறுத்தி விட்டேன், என் கையில் சுண்ணக்கோல் [சாக்கு / chalk] இன்னும் சூடாக இருந்தது. ஆனால் யாரும் என்னிடம் கேள்வி கேட்பதற்கு முன்பே நான் என் சொந்த வாக்கியத்தை அழித்துவிட்டேன். “நான் இப்பொழுது என்னையே கட்டுப்படுத்திக் கொள்கிறேன்.[I am censoring myself]. வேறுவழி, இந்த சூழ்நிலையில் எனக்குத் தோன்றவில்லை.” என்றான்.
சமந்தி தலையசைத்தாள். அவள் ஆச்சரியப்படவில்லை. “தெரியும்,” என்றாள்.
அவள் சற்று யோசனையின் பின் அவனுக்கு பதிலளித்தாள்: “நேற்று நான் வீட்டிற்கு, வழமையான குறுக்கு வழியை தவிர்த்து, நீண்ட பாதையைத் தேர்ந்தெடுத்தேன். அத்துடன் நான் வழக்கமாகச் செய்யும் உரையாடல்களையும் தவிர்த்தேன். நான் கேள்விகள் கேட்க விரும்பும் இடத்தில், கேள்விகளைக் கேட்காமல் மௌனமாக சிரித்தேன்.” என்று சொல்லிவிட்டு கொஞ்ச நேரம் நிறுத்தினாள். பின்,
"நான் என் வாழ்க்கையின் அர்த்தத்தைத் திருத்துகிறேன் [I am editing my life]” என தன் பதிலை முடித்தாள்.
ஒரு கணம், அவர்கள் இருவரும் அமைதியாக சிரித்தனர். சிரிப்பு மகிழ்ச்சியிலிருந்து எழவில்லை. இரு உடல்களிலும் ஒரே பிளவு ஓடிக் கொண்டிருப்பதை அறிந்த தருணத்திலிருந்து வந்தது.
ஆதன் மெதுவாக மூச்சை விட்டான்: “என் வகுப்பில் அவர்கள் தாராளமாக அமரலாம், ஒவ்வொரு சொல்லையும் எழுதி வைத்துக் கொள்ளலாம். அது எனக்குப் பிரச்சனை இல்லை, என்னால் அவர்களின் கண்காணிப்பில் இருந்து தப்பிக்க முடியும், ஏன் என்றால் நான் என்னை கட்டுப்படுத்த பழகிவிட்டேன், ஆனால் இதன் மூலம் நான் சுருங்குவதை என்னால் தாங்க முடியுமா என்று எனக்குத் தெரியவில்லை.” என்றான்.
ஆதனை கவனமாக காது கொடுத்து கேட்டபின், சமந்தி தாழ்ந்த குரலில் சொன்னாள்: “என்னால் வதந்திகளைத் தாங்க முடியும். அதில் பிரச்சனை இல்லை. ஆனால் அவர்கள் சந்தேகத்தையும், அவர்களின் மௌனத்தையும், அவர்களின் பயத்தையும் நான் ஏற்றுக்கொண்டால் —
அந்த அவமானம் என்னை விட்டு என்றுமே போகாது." என்று கூறிவிட்டு ஆதனைப் பார்த்து அவள் தலையாட்டினாள்.
“எனக்கு உரியதல்லாத அவமானத்தை நான் என்றும் சுமக்க மாட்டேன்.” என்று திடமாகக் கூறினாள்.
அதன் பின் அவர்கள் இருவரும் தங்கள் தங்கள் வீடு திரும்ப எழும்பினர். ஆனால் அப்பொழுது கூட அவர்கள் விலகியே நின்றனர். காதல் பலவீனமடைந்ததால் அல்ல - ஆனால் நெருக்கம் வெளிப்படத் தொடங்கியதால். அன்பைக் கூட பதிவு செய்யலாம், தவறாகப் படிக்கலாம், பயன்படுத்தலாம் என்பதால்.
அப்பொழுது இரவுக் காற்று அவர்களின் மார்பில் அழுத்தியது. கூர்மையாக இல்லை. - படிப்படியாக. - எலும்பில் ஏதோ ஒன்று படிவது போல.
இருவரும் கை அசைத்து விலகிச் சென்றனர். அந்த இரவு யாரும் எழுதவில்லை. யாரும் பிரார்த்திக்கவில்லை. யாரும் அழவில்லை.
ஆனால் மாற்றமில்லாத ஒன்று நடந்தது. “எப்படி தப்பிக்கலாம்?” என்ற கேள்வி மறைந்தது. “எதைச் சொல்லவேண்டும்?” என்ற கேள்வி பிறந்தது. அந்தக் கேள்வி பயத்தைவிட சத்தமாக இருந்தது.
நன்றி
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
பகுதி: 09 தொடரும்
துளி/DROP: 2081 [கதை - 200 / “மொழி இழந்த கடற்கரையில் ஒரு காதல்” அல்லது “சிலாபம் – உடப்பு நடுவே சிக்கிய இரண்டு இதயங்கள்” / பாகம் – 8
https://www.facebook.com/groups/978753388866632/posts/34204542762527600/?
By
kandiah Thillaivinayagalingam ·
Archived
This topic is now archived and is closed to further replies.