Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பதவி ஆசையில் தமிழனே தமிழனுக்கு இரண்டகம் இழைத்தான்! -காசி ஆனந்தன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பதவி ஆசையில் தமிழனே தமிழனுக்கு இரண்டகம் இழைத்தான்! -காசி ஆனந்தன் -நக்கீரன்

பதவி ஆசையில் தமிழனே தமிழனுக்கு இரண்டகம் இழைத்தான்!''

உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் நேர்காணல்

"பத்து தடவை பாடை வராது! பதுங்கிக் கிடக்கும் புலியே தமிழா!

செத்து மடிதல் ஒரேமுறைதான்

சிரித்துக்கொண்டே செருக்களம் வாடா!'

-தமிழீழ விடுதலைப் போராட்டக்களத்தில், துப்பாக்கியோடு, ஒவ்வொரு போராளியும் ஏந்திச் செல்லும் காசி ஆனந்தனின் கவிதை ஆயுதம் இது. "ஈழத் தமிழ் இளைஞர்களை ஆயுதம் ஏந்தத் தூண்டியது இவரது இலக்கியம்' என்று சிங்கள அரசால் வழக்குத் தொடுக்கப்பட்டு, கொடிய சிறை வாழ்வு அனுபவித்த ஒரே ஈழத் தமிழ்க் கவிஞர். பாவேந்தர் பாரதிதாசனின் தொடர்ச்சி யாக எழுதி வருபவர் என தமிழ்க்கவிதை மரபில் மேலோட்டமாக விமர்சிக்கப்பட்டாலும், இனப் போராட்டத்தின் போர்க்களத்தில் வடுக்கள் நிறைந்த அனுபவத்தோடு, கவிதைகளை வார்ப்பதால் இன்னும் எழுச்சியோடு படைத்து வருகிறார் இந்த உணர்ச்சிக் கவிஞர். கடந்த பதினைந்து ஆண்டுகளாக, இந்தியாவை விட்டு வெளியேற அனுமதியின்றி, சென்னையில் அகதி வாழ்வு வாழ்ந்து வரும் வேளையிலும் ஆற்றல் குறையாத காசி ஆனந்தன், "இனிய உதயம்' இதழுக்காகத் தம் மௌனத்தைக் கலைக்கிறார்...

உங்களுடைய பால்ய பருவம் எப்படி அமைந்தது?

""தமிழ் ஈழத்தின் தென்பகுதி, "தேன்நாடு' என்று அழைக்கப்படுகிறது. "மீன் பாடும் தேன்நாடு' என்றும் அழைப்பார்கள். மட்டக்களப்புதான் அந்த தேன்நாடு. கடலிலிருந்து நிலப்பரப்புக்குள், பதினைந்து கல் தொலைவுக்கு பரந்து விரிந்த உப்பேரி ஒன்று இருக்கிறது. அந்த ஏரிக்கரையில்தான் எங்கள் வீடு. எங்கள் வீட்டின் கொல்லைப்புறத்தில் ஏரி எப்போதும் சலசலத்துக் கொண்டிருக்கும். முழு நிலாக் காலங்களில் தோணியில் ஏறி, நடு இரவில் என் சோட்டு பையன்களோடு ஏரியின் நடுப்பகுதிக் குச் செல்வேன். தோணியை வளித்துச் செல்ல சவள் (துடுப்பு) உதவும். அதன் ஒரு முனையை தண்ணீ ருக்குள் அமிழ்த்திவிட்டு, மறுமுனையைக் காதில் வைத்துக் கேட்பேன். ஆளுயர யாழினை, அதன் கம்பிகளை வருடி னால் ஓர் இனிய ஒலி எழுமல்லவா? அது போன்றதொரு ஒலி- செவியை வருடிக் கொடுக்கும். இப்படி மீன்கள் பாடுகிற இடங் கள் உலகிலேயே மூன்று தான் இருக்கின்றன. அவற்றில் மட்டக்களப் பும் ஒன்று. அமெரிக் காவிலிருந்தெல்லாம் வந்து இதனைப் பதிவு செய்திருக்கிறார்கள். அம்மாவின் ஊரான "நாவற்குடா' இந்த ஏரி யின் ஒரு கரையிலும், அப்பாவின் ஊரான "அமிர்தகளி' மற்றொரு கரையிலும் இருந்தன. அக்கம் பக்கத்து உறவு ஊர்கள். அதனால்தான் அப்பா, அம்மா திரும ணம் நடந்தது. அம்மா வின் ஊரில்தான் நான் பிறந்தேன். இந்த ஏரிதான் என் பால்ய தோழன். நில வொளி இல்லாத நாட் களில், ஏரியை இமைக் காமல் பார்த்துக் கொண்டிருப்பதில் எனக்கு அப்படியொரு விருப்பம். காரணம், ஏரியின் உள்ளே மீன்கள் நெளிந்து ஓடும்போது, தங்கச் சுடர்கள் நகர்வதுபோல, கண்ணுக்கு விருந்தாக இருக்கும். இப்படி மீன்கள் மினுக்கியபடி ஓடுவதை "கவிர்' என்பார்கள். இப்படியொரு இயற்கை சூழலில்தான் நான் வளர்ந்தேன். அப்பாவின் ஊரில்தான் எனக்குத் தொடக்கக் கல்வி அமைந் தது. அந்த ஏரியும், அதன் கரையிலே இருக்கிற எங்கள் வீடும், கவலை படிந்த என் மனத்திரையில் நிழலா டிக் கொண்டேதான் இருக்கின்றன. ஏக்கம் மனதைத் தாக்குகிறது.''

ஈழச் சிக்கலை எத்தனை வயதில் புரிந்து கொண்டீர்கள்?

""அப்போது எனக்கு சரியாக பத்து வயது. நான் பிறந்த ஆண்டு 1938. நான் ஐந்து வயதில் பள்ளியில் சேர்ந்தேன். ஐந்தாம் வகுப்பை எட்டியபோது, கல்வி உதவி பெறுவதற்கான "புலமைப் பரிசில்' தேர்வு நடந்தது. அதில் நான் சிறப்பாகத் தேறியதால், எனக்கு "புலமைப் பரிசில்' உயர்நிலைப் பள்ளியில் படிக்கிற வாய்ப்புக் கிட்டியது. அந்தப் பள்ளி, எங்கள் ஊரிலிருந்து சற்றுத் தொலைவில் இருந்த "வந்தாறு மூளை' என்ற ஊரில் இருந்தது. கண்ணகி மதுரையை எரித்த பிறகு, இங்கே வந்துதான் சினம் ஆறினாள் என்பது வாய் மொழி வரலாறு. ஆண்டுதோறும் கண்ணகி விழா இங்கே நடக்கும். வந்தாறு மூளைப் பள்ளியில் நான் சேர்ந்தபோது எனக்கு சரியாகப் பத்து வயது. அதாவது அது 1948-ஆம் ஆண்டு. ஆங்கிலேயர்கள், இலங்கைக்குச் சுதந்திரம் கொடுத்து விட்டு நாட்டைவிட்டு வெளியேறிய ஆண்டு. என் வகுப்பிற்கு முத்தமிழ் அறிஞர் ஒருவர் ஆசிரியராக இருந் தார். அவரது பெயர் சிவபாலன். அவர் வகுப்பிலே அன்று சொன்னது, அந்தச் சிறு வயதில் பசுமரத்தாணி போல பதிந்துவிட்டது. ""வெள்ளைக் காரன் கையிலிருந்து சிங்களவன் கைக்கு ஆட்சி மாறியிருக்குது. ஒன்டும் ஏமாந்து போகாதீங்கள் பிள்ளைகளே! வாழ்ந்து பாருங்கள். நாடும், நம்ம வாழ்வும் கொடுமையா இருக்கப் போகுது!'' என்றார். அவர் சொன்னது என் பிஞ்சு மனதில் ஒருவித பதற்றத்தை உண்டு பண்ணி யது. அவரது வாய்ச்சொல் அந்த ஆண்டே உண்மையாகவும் ஆனது. சிங்களவர்களின் முதல் ஆட்சித் தலைவர் சேனநாயகா, பதவியேற்ற அடுத்த நொடிப் பொழுதில், மலைநாட்டுத் தமிழர்களின் குடி உரிமையையும் வாக்குரிமையையும் பறித்தார். அப்போது தமிழ் காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்தவர், உலகப் புகழ்பெற்ற வழக்கறிஞர் பொன்னம்பலம் என்பவர். இவர் மந்திரி பதவிக்கு ஆசைப்பட்டு, சேனநாயகாவின் கொடிய சட்டத்தை நாடாளுமன்றத் தில் கைதூக்கி ஆதரித்தார். இது ஒரு தமிழனே தமிழினத்துக்கு இழைத்த மிகப்பெரிய இரண்டகம். மலையகத் தமிழர்கள் குடியுரிமை, வாக்குரிமை இரண்டையும் இழந்து நின்றபோது, கொதித்துப் போனார் தந்தை செல்வா. உடனடியாக தமிழ் காங்கி ரசு கட்சியிலிருந்து வெளியேறி, "மலையக மக்கள் எம்மக்கள். அவர்களுக்கு இழைக்கப்பட்டது கொடுமையிலும் கொடுமை. இதைப் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியாது' என்ற மாபெரும் பாய்ச்ச லோடு, மலையகத் தமிழர்களை மனதில் கொண்டுதான், தந்தை செல்வா அவருடைய "தமிழரசுக் கட்சி'யைத் தொடங்கினார். அதே 1948-ல் தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்றக் கழகத்தை அண்ணா தொடங்கினார்.

கட்சி தொடங்கிய கையோடு சிங்கள மொழிக்கு இணையாக தமிழுக்கு சம அந்தஸ்து, மலையக மக்களின் குடியுரிமை, வாக்குரிமை திரும்பத் தரப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட நான்கு முக்கிய கோரிக்கைகளோடு அறப்போராட் டத்தையும் செல்வா தொடங்கி வைத்தார். தமிழர்கள் விழித்துக் கொண்டார்கள் என்பதைப் புரிந்து கொண்ட சேனநாயகா அரசு, திட்டமிட்டு தமிழ் மக்கள் வாழும் பகுதிகளில், சிங்களர்களுக்கு நிதி உதவி செய்து குடியேற்றம் செய்வதை 1948-லேயே தொடங்கிவிட்டது. இது முழுக்க முழுக்க வலியத் திணித்த அரசுக் குடியேற்றம். பகிரங்கமாக "ஸ்டேட் ஸ்பான்ஸர்டு காலனிசேஸன்' என்று சொல்லியே குடியேறினார்கள். அதுவும் நான் பிறந்து வளர்கிற கிழக்கு மாகாணத் தில்தான் முதல் குடியேற்றம் நடக் கிறது. குடியேற்றத்தை சிறுவயதில் பார்க்கிற நேரடி சாட்சியாகிப் போனேன். இன்னொரு பக்கம் தந்தை செல்வா ஊர்தோறும் கூட்டங்களில் பேசத் தொடங்கி விடுகிறார். அந்தக் கூட்டங்களுக்கு அப்பா என்னைக் கூட்டிக்கொண்டு போவார். சிறுவனாக தந்தை செல்வாவின் உணர்வுகள் கொந்தளிக் கும் பேச்சுக்களைக் கேட்பேன். வகுப்பிலே ஆசிரியர் சிவபாலன் சொன்னதுபோல் வெள்ளை ஏகாதிபத்தியத்திடமிருந்து சிங்கள ஏகாதிபத்தியத்துக்கு ஆட்சி மாறு வதை பத்து வயதில் பார்க்கிறேன். நாம் எத்தகையதொரு இனவெறிச் சூழலில் வாழ்கிறோம் என்ற கசப்பான உண்மை, அப்போதே எனக்குள் பாய்ந்தது.''

இதனால் உங்களது முதல் கவிதை அனுபவமும் உணர்ச்சி கரமாகவே அமைந்துவிட்டதா?

""கிட்டத்தட்ட அவ்வாறுதான். என்னுடைய பா எழுதும் திறமையை தூண்டிவிட்டுத் தொடங்கி வைத்தவர், எனக்குள் அரசியல் விழிப்புணர்வை ஊட்டியவர் ஆசிரியர் சிவபாலன். மிகத் துணிச்சலானவர். எதற்கும் அஞ்சாதவர். அவர் பாரதியார் பாடல்களையும் பாரதிதாசன் பாடல்களையும் எங்களுக்குச் சொல்லித் தந்தார். இதனால் எனது பால்யத்திலேயே பாரதியின் பாடல் களும் பாரதிதாசனின் பாடல்களும் மிகப் பெரிய தாக்கத்தை எனக்குள் ஏற்படுத்துகின்றன.

"எந்தை பாரதிதாசன் என் ஆசான்

தந்த தமிழால்தான் நான் வளர்ந்தேன்

அந்தநாள் அவனோடிருந்தேன் அதனால்

சந்தனக்காற்றில் இச்சவுக்கும் மனத்ததே'

என்று பின்னாளில் நானே இதை ஒப்புக் கொண்டிருக்கிறேன். அந்த அளவுக்கு பாரதிதாசன் என்னை பாதித்தார்.

அந்தக் காலகட்டத்தில், மட்டக்களப்புப் பகுதியில் எங்கள் வீட்டில் மட்டும் "கல்கி'யும் "ஆனந்த விகட'னும் வாங்குவார்கள். அக்கா ஆவலோடு இந்தப் பத்திரிகைகளின் வரவுக்காகக் காத்துக் கொண்டிருப்பார். நான் பள்ளி விடுமுறை தருணத்தில் வீட்டுக்கு வருகிறேன். அப்போது அக்கா வீட்டிலே அழுது கொண் டிருக்கிறார். பதட்டமடைந்து அக்காவைக் கேட்கிறேன். அவர் பதில் ஏதும் சொல்லாமல், "கல்கி' யின் அட்டையைக் காட்டுகிறார். அதில் காந்தியின் உடல், இந்திய சுதந்திரக் கொடியால் மூடப் பட்டிருக்கிறது. ""எவ்வளவு பெரிய மகான்! இப்படிச் சுட்டுக் கொன்று விட்டார்களே!'' என்று குமுறினார். அப்போது காந்தி யாரென்று அக்காவிடம் கேட்கிறேன். காந்தியின் வாழ்வு, இந்தியச் சுதந்திரப் போராட்டம் பற்றிய ஓர் உணர்ச்சிகரமான உண்மைச் சித்திரத்தை அக்கா, எனக்கு ஒரு கதைபோல விவரித்தார். அன்று பசி மறந்துபோய், வீட்டின் ஒரு மூலையில் அமர்ந்து, காந்தி பற்றி நாலு வரியில் ஒரு சிறு பாடல் எழுதினேன்.

"காந்தி தாத்தா நல்ல தாத்தா

கருணையுள்ள தாத்தா

மாந்தருக்குள் பெரிய தாத்தா

மகாத்மா காந்தி தாத்தா'

ஒரு குழந்தைப் பாடல்போலத் தோன்றும் இதுதான் எனது முதல் கவிதை அனுபவம். இதன் பிறகுதான் நான் மெல்ல மெல்ல எழுத ஆரம்பிக்கிறேன். இந்தச் சூழலில், "நாம் மண்ணை இழந்து கொண்டி ருக்கிறோம்' என்று சொல்லும் தந்தை செல்வாவின் எழுச்சியுரைக ளைக் கேட்பதும், போராட்டச் செய்திகளை, அவர் ஆசிரியராக இருந்து வெளியிட்டு வந்த "சுதந்திரன்' இதழில் படிப்பதுமாக இருந்தேன். எங்கள் பகுதிகளில் குடியேறும் சிங்களர்களை சுமந்துகொண்டு, உறுமியபடி செல்லும் வண்டிகளை அச்சுறுத்தலோடு பார்த்துக் கொண்டிருப்பேன். இப்படிப் பத்தாவது வயதிலே எழுத்தும் அரசியலும் என்னை ஆக்கிரமித்துக் கொண்டன.''

ஈழத்துக் கவி முன்னோடிகள் உங்களை ஈர்க்கவில்லையா?

""பத்து வயதுவரை பாரதியும் பாரதிதாசனும் என்னை ஈர்த்தவர்கள். அதன்பிறகு பலரைச் சொல்ல வேண்டும். "சுதந்திரன்' இதழ்தான், ஈழ அறப்போராட்டத்தை முன்னெ டுத்தது. அந்த இதழில் பரமஹம்ச தாசன் எழுதிய பாக்கள் என்னை ஈர்த்தன. அவர் மட்டக்களப்பில் இருந்த பெரிய துணிக்கடை ஒன்றில் வேலை செய்து வந்தார். காரைக் குடியைச் சேர்ந்தவர். அவருடைய பாடல்கள் அனைத்தும் சுத்தானந்த பாரதியார் பாடல்களைப்போல இருக்கும். அவை அனைத்தும் ஆன்மிகப் பாடல்கள். அதேவேளை பாரதிதாசன் பாடல்களைப்போல அவற்றில் உருமலும் வேகமும் இருக்கும். அவர்தான் மட்டக்களப்பு பகுதியில் சிறப்பாக எழுத ஆரம்பித் தவர். அதற்கு முன்பு மட்டக்களப் பில் புலவர்கள் இருந்திருக்கிறார்கள். பண்டிதர்கள் இருந்திருக்கிறார்கள். யாழ்நூல் தந்த மிகப் பெரிய தமிழ்ப் பேரறிஞர் விபுலானந்த அடிகளார் மட்டக்களப்பில் பிறந்தவர்தான். ஆனால் போராட்டம் பற்றி, தமிழர் சுதந்திரம் பற்றி பரமஹம்சதாசன் தான் முதலில் எழுதத் தொடங்கு கிறார். அவர் காலத்திலேயே மட்டக் களப்பில் ராஜபாரதி என்றொரு அற்புதமான கவிஞர், பிறகு பாண்டியூரான், நீலாவணன் என்று சிறந்த கவிஞர்கள் வருகிறார்கள். ஆனால் ராஜபாரதியின் பாடல்கள் என்னை உசுப்பி உரமேற்றிவிட்டன.

"சங்கம் ஆய்ந்த பலகையிலே

சட்டம் படித்த தமிழா உன்

தங்கம் தோய்ந்த தமிழ்தன்னை

தாழ்வாய் பேசும் நிலைகண்டும்

பொங்கி யெழுந்து பாயாமல்

புலம்பும் பெட்டை நாயானாய்

சிங்கம் பிளந்த கனையெங்கே

சேறு நிறைந்த வேலெங்கே'

என்று உறுமி மேளத்தைப்போல இருக்கும் அவரது தமிழ். அதே நேரம் நகைச்சுவையாகவும் எழுதக் கூடிய ஆற்றல் படைத்தவர். கொசு விடு தூது என்று எழுதினார். அதில் ஒரு வெண்பாவில் கடைசி இரண்டு வரிகள்தான் இப்போது என் நினைவிலே இருக்கிறது.

"என்னுடலில் குத்தி இரத்தமெடுத்து அந்தப்

பொன்னுடலில் போய் பாய்ச்சு போ'

இதேபோல நீலாவணன் மண்சார்ந்து எழுதியதும் என்னை ஈர்த்தது. இதேபோல மண்சார்ந்து யாழ்ப்பாணத்தில் எழுதத் தொடங்கி யவர் மகாகவி. இவர் எனது சமகாலக் கவி. அப்போது எனக்கு மூத்தவராக யாழ்ப்பாணத்திலே இருந்தவர் மாவிட்டபுரம் சச்சிதாநந்தன். அவர் விபுலானந்த அடிகளாருடைய மாணவர். அவருடைய பாடல்களில் தமிழ்ப் பற்றுத் தெறிக்கும்.

"சாம்போதும் தமிழ்ப்படித்துச் சாகவேண்டும் என்

சாம்பலும் தமிழ்மணந்து வேகவேண்டும்'

-இந்த வரிகளைப் பாவேந்தர் எழுதினார் என்பார்கள். ஆனால் மாவிட்டபுரம் எழுதிய வரிகள் இவை. இப்படி பாரதிதாசனுக்கு இணையாக எழுதிய பல பாவலர் களை வாசித்த நான், எம்மக்கள் படும் துயரத்தையும் நேரடியாகப் பார்த்துவிட்டு, மண், போராட்டம், விடுதலை என்று சிறுவயதிலேயே எழுதத் தொடங்கிவிட்டேன். எனது கவிதைகளுக்கு "சுதந்திரன்' இதழ் மிகப் பெரிய களமாக அமைந்தது.''

உங்களது தந்தையாரின் விருப்பம் என்னவாக இருந்தது? நீங்கள் எப்படி உருவாக வேண்டும் என்று அவர் விரும்பினார்?

""தரமான தமிழ்ப் பற்றாளர். ஆனால் எல்லா அப்பாக்களை யும்போல நான் நன்கு படித்து, அரசு பதவிக்குப் போக வேண்டும் என்று விரும்பினார். ஆனால் அவருக்குத் தெரியாமல் சிறு பையன்களோடு சேர்ந்து தமிழரசுக் கட்சியின் சுவரொட்டிகளை ஒட்டிக் கொண்டு இருப்பேன். அங்கேயிருந்த நெருக் கடியான வாழ்க்கைச் சூழல் என்னை விடவில்லை.''

இங்கே இந்தி எதிர்ப்புப் போராட்டம்போல, இலங்கையில் சிங்களமொழி எதிர்ப்புப் போராட்டத்தில் இளைஞர்கள், மாணவர்கள் பங்கேற்பு என்பது ஈழ அரசியல் வரலாற்றில் முக்கியத் துவம் வாய்ந்த ஒன்றில்லையா? அதில் பங்கேற்றீர்களா?

""ஒரு மாணவனாக இருந்த என் வாழ்வைப் புரட்டிப் போட்ட போராட்டம் அதுதான். சேனநாயகா வின் பதவிக்காலம் முடிந்து, பண்டாரநாயக்கா ஆட்சிக்கு வருகிறார். அப்போது எனக்குச் சரியாக பதினெட்டு வயது. பண்டாரநாயக்கா என்ன செய்தார் என்றால் 1956-ஆம் ஆண்டு ஜூன் ஐந்தாம் நாள், தனிச் சிங்களச் சட்டத்தைக் கொண்டு வருகிறார். சிங்கள மொழித் திணிப்பு தொடங் குகிறது. அந்த நேரத்தில் மிகப்பெரிய எழுச்சியை உருவாக்க வேண்டிய கட்டாயத்தில், தமிழ் விடுதலைக் கூட்டணி இருந்தது. இதனால் சிங்களமொழி எதிர்ப்புப் போராட் டம் வலுப்பெறத் தொடங்கியது. அப்போது இலங்கை மெத்தடிஸ்ட் திருச்சபையின் தலைவராக இருந்த பாதிரியார் மேதர் அடிகளார் மட்டக்களப்புக்கு வருகிறார். வரும் வழியில், கொழும்புவில் பத்திரிகை யாளர்களைச் சந்தித்து, அனைத்து மாணவர்களும் சிங்களம் படித்தாக வேண்டும் என்று அறிக்கை விடுகிறார். இதைப் பத்திரிகையில் படித்துக் கொதித்துப் போனேன் நான். உடனே என்னுடன் பயிலும் சக மாணவர்கள் பத்துபேரைக் கூட்டிக் கொண்டு, மட்டக்களப்பு தொடர்வண்டி நிலையத்துக்குப் போய் காத்திருந்தேன். மேதர் அடிகள் வந்து இறங்கியதுமே கருப்புக் கொடி காட்டினேன். காவல் துறையினர் எங்களை விரட்டி அடித்தார்கள். மறுநாள் கல்லூரியில் கறுப்புக் கொடி காட்டிய எங்களை மேடையில் நிற்க வைத்துப் பிரம்படி கொடுத்தார்கள். அடுத்து எங்கள் கல்லூரிக்கு சிங்களம் பயிற்றுவிக்க ஆசிரியர் வந்தார். அவர் வந்து வகுப்பைத் தொடங்கும்போது, வகுப்பறையிலிருந்து மொத்தமாக வெளியேறி கல்லூரி வாசலில் படுத்துப் போராட்டம் செய்தோம். இப்படி மாணவர்கள் மத்தியில் வெடித்துக் கிளம்பிய எழுச்சியைப் பார்த்து, அரசே சிங்களமொழி ஆசிரியர்களைத் திரும்பப் பெற்றது.

ஆனாலும் சிங்கள அரசு பிடிவாதமாக இருந்தது. சிங்கள மொழியில் தேர்ச்சி பெற்றால்தான் அரசுவேலை என்ற விதியை அமல்படுத்தியது. இப்படிப்பட்ட சிங்கள மொழித் திணிப்புச் சூழலில் தான் இலங்கையில் ஓடும் தானியங்கி வண்டிகளின் இலக்கத் தகடுகளில் சிங்கள "ஸ்ரீ' எழுத்தை கட்டாயமாக் கியது சிங்கள அரசு. ஒரு நண்டின் உருவத்தை ஒத்த எழுத்து அது. உடனே "ஸ்ரீ' எழுத்து அழிப்புப் போராட்டம் தொடங்கு கிறது. அந்த நேரத்தில்கூட ராஜ பாரதி,

"சண்டை வரும் செத்த சடலம் பல புரளும்

மண்டை உடைபட்டு மண் சிவக்கும் கண்டதுதான்

தண்டங்கள் தூசு தமிழ்பேசும் எல்லைக்குள்

நண்டெழுத்து வேண்டாம் நமக்கு'

என்று உறுமலோடு ஒரு கவிதை எழுதினார்.

இந்த "ஸ்ரீ' எழுத்து அழிப்புப் போராட்டத்தில் நானும், எனது சக மாணவர்கள் சிலரும் சேர்ந்து மட்டக்களப்பிலே "ஸ்ரீ' எழுத்தை அழிக்கிறோம். கைது செய்யப்படு கிறோம். மட்டக்களப்பு நீதிமன்றத் தில், "மாணவர்கள் என்றபடியால் தண்டனை விதிப்பதை நான் விரும்பவில்லை' என்று சொல்லி நீதிபதி, நீதிமன்றம் கலையும்வரை அங்கேயே இருக்க வேண்டும் என்று தண்டனை தருகிறார். உடனே "ஸ்ரீ' எழுத்து அழிப்புப் போராட்டம் மட்டக்களப்பில் சூடுபிடிக்கிறது. சில தினங்களில் எங்கள் பகுதி தமிழரசுக் கட்சியின் தலைவர்களும் தொண்டர்களும் சேர்ந்து ஒரு முடிவு எடுக்கிறார்கள். வாகன இலக்கங்களில் உள்ள "ஸ்ரீ' எழுத்து மட்டும் நம் இலக்காக இருந்தால் போதாது; தனியார், அரசு அலு வலகங்களில் உள்ள சிங்கள எழுத் துக்களையும் அழிக்க வேண்டும் என்ற முடிவுதான் அது. உடனடி யாகப் போராட்டம் தொடங்குகிறது. மட்டக்களப்புக் கடைவீதிகளில் தொடங்கி, பலகைகளில் உள்ள சிங்கள எழுத்துக்களை அழித்துக் கொண்டு, நகரின் மையப்பகுதியை நோக்கி நானும் வந்து கொண்டிருக் கிறேன். கையில் ஒரு மைச்சட்டி. அழிக்க ஒரு தூரிகை. எல்லோரும் காவல் நிலையத்தைக் கடந்து போகிறார்கள். எதிர்கட்சியைச் சேர்ந்த சிலர், எங்களைப் பார்த்து கிண்டல் செய்வது என் காதில் விழுகிறது. ""காவல் நிலையமும் ஒரு அரசு அலுவலகம்தானே! என்ன இவர்கள் தீண்டாமல் போகிறார்கள். இது இவர்கள் கண்ணில் பட வில்லையா'' என்று கேட்டார்கள். உடனே நான் தொண்டர்களைப் பார்த்து, ""அவர்கள் நமக்கு எதிரி களாக இருக்கலாம். ஆனால், அவர்கள் சொல்வதில் ஒரு நியாயம் இருக்கிறது'' என்றேன். மாறாக, ""வேண்டாம் வாயப்பா... வேறிடம் போகலாம்'' என்று என்னை அழைத் தார்கள். எனக்கு மனம் ஒப்பவில்லை. நான் விறுவிறுவென்று காவல் நிலையத்தில் நுழைந்தேன். அங்கே இருந்த பலகையில் சிங்கள எழுத்தை மளார் என்று அழித்தேன். அப்பு வாமி என்றொரு வெறிபிடித்த சிங்களவன் அந்தக் காவல் நிலையத் தில் அதிகாரியாக இருந்தான். அவன் வந்து சட்டென்று என்னைப் பிடித்து உள்ளே இழுத்துப்போய் இரவு முழுவதும் அடித்தான். அடித்தானென்றால் ரத்த வாந்தி எடுக்கிற அளவுக்கு அடித்தான். கட்சியிலிருந்து வந்து காலையில் தான் என்னை வெளியே எடுத்தார் கள். காவல் நிலையத்தில் அடித்த அடியால் என்னைத் தீவிர காச நோய் தாக்கியது. கிட்டத்தட்ட பத்தாண்டு காலம் காசநோயோடு போராடினேன். இங்கே பன்னிரண் டாம் வகுப்புதான் இலங்கையிலே கல்லூரிக் கல்வி. நான் கல்லூரியில் படிக்கிறபோது நிலைமை மோசமாகிவிட்டது. எப்போது என்ன நடக்கும் என்ற அச்சத்தோடு வாழவேண்டிய நெருக்கடிக்கு தமிழ்மக்கள் ஆளாக்கப்பட்டார்கள். திடீரென்று ஒரு நாள் இரவோடு இரவாகத் தமிழரசுக் கட்சித் தலைவர்கள் எல்லாம் கைது செய்யப்படுகிறார்கள். அப்போது நானும் கைது செய்யப்படுகிறேன். என்னை வீட்டுக் காவலில் வைத்தார் கள். அப்போது என் மனதைத் தொட்ட ஒரு சம்பவம் நடந்தது. அமிர்தகளியில் எங்கள் வீட்டுக்குப் பின்னால் சற்று தொலைவில் காட்டுக்குள் செல்லும் தொடர் வண்டிப் பாதை இருக்கிறது. மட்டக்களப்பிலிருந்து செல்லும் தொடர்வண்டிகள் எங்கள் ஊரைக் கடந்துதான் செல்ல வேண்டும். பல சிங்களக் காவலர்கள் சென்ற தொடர்வண்டியை மக்கள் கவிழ்த் தார்கள். அதில் குடல் கிழிந்து அப்புவாமி என்பவன் தொங்குகி றான். காவல் நிலையத்தில் சிங்கள எழுத்தை அழித்ததற்காக, என்னை அடித்துத் துவைத்தவன். அதன் பிறகு என் வீட்டுக் காவலை இன்னும் இறுக்கினார்கள். இந்தக் காவல் முடிந்த பிறகே சென்னைக்குப் படிக்க வந்தேன்.

நேர்காணல்: ஆர்.சி.ஜெயந்தன்

நன்றி : இனிய உதயம்

-நக்கீரன்

இணைப்பிற்கு நன்றி கந்தப்பு.

ஆரம்ப காலத்தில் நடந்த சம்பவங்கள் விபரிக்கப்பட்டிருந்தால் இணைத்து விடுங்கள் கந்தப்பு.

Edited by THEEPAN0007

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.