Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஞாபகம் சொல்ல எவருமில்லாமல் துர்க்கையம்மன் வீதி.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஞாபகம் சொல்ல எவருமில்லாமல் துர்க்கையம்மன் வீதி.


ஞாபகங்கள் தாங்கிய கையெழுத்துக்கள் சேர்த்து வைப்பதிலும் ஒவ்வொருவரின் ஞாபகமாக எதையாவது சேர்ப்பதில் பெரியதொரு நிறைவு.அப்படிச் சேர்த்து வைத்த கையெழுத்துக்களும் , ஞாபகப்பொருட்களும் நாட்டுக்குள்ளேயே தொடர்ந்த இடப்பெயர்வுகளுடனும் , புலப் பெயர்தல்களுடனும் ஒவ்வொன்றாய் தொலைந்து போய் விட்டது.

அது 1991ஜனவரி மாதம் வாணி கல்வி நிலையத்தில் கால் வைத்த போது முதல் அறிமுகம் மதி, அவன்தான் முதல் அறிமுகமாய் மேசையொதுக்கி இடம் தந்தவன். அதன் பின்னர் துஷி , அம்பாள் , சுரேஷ் , தயாளன் , மனோ , பன்னீர் , கதிர் , ஜெயந்தி , மல்லிகா , நளினி , சுகந்தி , சுதன் , சர்மிலா , பிறேமிளா , நித்தியா என அடுத்தடுத்து வந்த உறவுகள்.

எல்லோரின் நினைவுகளும் நெஞ்சுக்குள் அழியாமல்....பள்ளிக்கூடத்துக்க�
�� அப்பால் 17வயதில் நட்பாய் கிடைத்த இவர்களுக்குள் நானும் நிச்சயம் நினைவு கொள்ளப்படுவேன். அப்போது அந்த நாளைய எங்கள் அட்டகாசங்கள் , கோபம் , நேசம் என எல்லாமே அவர்களையும் நினைக்க வைக்கும்.

எனது மகனுக்கு இவ்வருட கோடைவிடுமுறையுடன் 5ம் வகுப்பு அடுத்த தரப்பள்ளிக்கு அனுமதி கிடைத்ததையடுத்து அவனது நண்பர்கள் ஒவ்வொருவரும் எழுதிய என் மகனது நினைவேட்டில் எழுதிய வாசகங்களும் அவர்களின் வேண்டுதல்களும் என்னை ஒரு தரம் அதிர்த்து விட்டுள்ளது. 'அம்மா" இதெல்லாம் எறியப்படாது எனக்கு ஞாபகமா வைச்சிருக்க வேணும் பிறகு நான் வளந்தாப்பிறகு பாப்பன் என்றதும் என் அம்மா ஒரு தரம் எழுதிய கடிதம் தான் நினைவு வந்தது.

'உனது ஓட்டோகிராப்பும் புத்தகம் கொப்பிகளும் நாங்கள் இடம்பெயர்ந்த போது வீட்டில் விட்டுவிட்டு வந்து விட்டோம். எங்களை காப்பதா உனது சாமான்களை எடுப்பதா என அந்த நேரம் நினைக்கேல்ல நாங்கள். பள்ளிச் சினேகிதம் படலை மட்டும் அதை ஞாபகம் வைச்சிரு". என்ற அம்மாவின் கடிதத்துடன் எனது ஞாபகச் சேமிப்புகளையெல்லாம் இப்போதும் நினைத்து ஏங்குவதுண்டு.

இப்படி எத்தனையை எனது மகனைப்போலவும் அவனது நண்பர்களைப் போலவும் நானும் எனது நண்பர்களும் எழுதினோம்.....! 15வருடங்கள் சென்ற பின்னும் அவர்களில் யாரையும் காணவுமில்லை ஒரு கடிதத் தொடர்பு கூட இல்லாமல்....யார் யார் எப்படி எங்கு என்ன செய்கிறார்கள் என்று எதுவும் தெரியாமல் எப்போதாவது நினைவுகளில் வந்து போவார்கள். எப்போதாவது சந்திக்கலாம் என்ற நம்பிக்கைகள் இன்னமும் மீதமாக....

1991 மருதடி தேருக்கு தாவணிகட்டி தலையில் கனகாம்பரம் வைத்து வீட்டாருடன் வீதியில் போக.... சைக்கிளில் அரைப்பாவாடை சட்டையுடன் கண்ட முகம் தாவணியில் வந்தது பார்த்து 'வடிவாயிருக்கு , தாவணி சைக்கிளுக்கை சிக்கப்போகுது கவனம்" என அக்கறை கலந்த சைகையால் எச்சரித்த அந்த நண்பர்கள்....துர்க்கையம்மனுக்�
��ு செவ்வாய் தவறாமல் நீ வாறியா நீ வாறியா ? என கேட்டு சொல்லி வைத்து பெடியளும் பெட்டையளும் அம்மன் தரிசனம் செய்து கடலை , ஐஸ்கிறீம் , பொரிவிளாங்காய் பங்கிட்டு பெனாக்காய் குளக்கரையிலும் போன பொழுதுகளும் சுன்னாகம் ஐயனார் , பழனி ஆண்டவர் என அடுத்தடுத்து கோவில்களும் தரிசனமும் அதுவொரு அழகிய காலம் என்பதை விட வேறெந்த வார்த்தை சொல்ல......?

கிளைக்காலியள் வெளிக்கிட்டுதுகள் என பெரிசுகள் புறுபுறுக்க காதலிக்கினம் போல என கன கண்கள் பார்த்திருக்க சத்தியமாய் யாருக்கும் யார் மீதும் காதலில்லை நட்பிருந்தது என்று சொன்னால் நம்ப யாரும் தயாரில்லை. பதின்ம வயதென்றால் ஆணும் பெண்ணும் அருகருகாய் போனாலே அதில் ஏதோ உண்டென்ற அர்த்த்படுத்தும் அந்த நாட்களில் பாட்டுக்குப் பாட்டு , நாடகம் , கவிதை , எழுத்தென்று மாணவர் மன்றம் வைத்து ஆண்களும் பெண்களுமாய் நட்பை வளர்த்தோம். அங்கங்கு சில காதல் துளிர்ப்பிற்கு தூதுவராய் நானும் துணைபோனதை எண்ணி இன்றும் சிரிப்பதுண்டு.

அந்த வருடத்தில் ஒருநாள் பல்கலைக்கழக சமூகம் மேற்கொண்ட ஊர்வலத்தில் ரியூசன் சென்ற நாங்களும் பல்கலைக்கழக சமூகத்துடன் சேர்ந்து ஊர்வலமாய் கச்சேரி வரையும் உரக்கக்குரல் கொடுத்து பதாகைகள் தாங்கிய நாளன்று.....சைக்கிளை வாங்கி வைத்து என்னைக் காதலிக்கிறேன் எனச்சொல்லென்று மிரட்டிய யாழ்பல்கலைக்கழக மாணவர் சிலரின் பகிடி வதையில் அழுது அச்சமுற்ற நிமிடங்களில்...... அழுகை நிறுத்தி ஆறுதல் தந்தவர்களுள் மதி , மனோ , தயா வரிசையில் அன்று துணைநின்ற அத்தனை பேரின் ஞாபகமும் அவர்களுக்கு நன்றியறிதலை என்றும் சொல்லியபடியேதானிருக்கிறது. அன்றுதான் எங்கள் குழுவில் ஒருவன் ஒருத்தியை காதலிப்பதாக தகவல் மதியின் வாயிலிருந்த எங்கள் காதுகளை வந்தடைகிறது.

இதென்ன புதுக்கதை ? அதெப்பிடி மதி ஒருதருக்கும் ஒருதர் மீதும் வராத காதல் உவை ரண்டு பேருக்கும் வந்ததாம் ? கேட்ட எனக்கு மதி சொன்னான். சரி உமக்கும் எனக்கும் காதல் வரேல்லயெண்டதுக்காக அதுகள் ஏன் காதலிக்கப்படாது ? கிளிஞ்சுது யாவாரம் இது நான். இப்ப நீரென்ன செய்யிறீரெண்டா உம்முடை தோழி தாற கடிதத்தை வாங்கி வந்து எங்களிட்டைத் தாறீராம் அதை நாங்கள் அவனிட்டை குடுப்பமாம்...துர்க்கையம்மனு�
�்கும் அவளை அவளிடை வீட்டை அனுமதி வாங்கி கூட்டிவாறியளாம்..., சரியோ ? சொல்லிக்கொண்டு கே.கே.எஸ் வீதியால் வந்து கொண்டிருந்த அவன் முதுகில் எட்டி ஒரு குத்து....ஐயோ என்றவனை எல்லாரும் திரும்பிப்பார்க்க வந்தவர்கள் சிரிப்புடனும் கும்மாளத்துடனும் அன்றைய நாள் கழிகிறது. அன்றிலிருந்த அந்தக் காதல் ஜோடிக்கு தபால்காரியாக நானும் அம்பாளும்.

காதலித்தவர்களின் விடயம் இருவீட்டுக்கும் போய் காதல் முறிந்து காதலிக்கப்பட்டவள் அந்தநாளில் பரபரபரப்பாயிருந்த படப்பாடலொன்றை கேட்டபடி 4மாதம் வீட்டுக்குள்ளேயே முடக்கப்பட்டு ரியூசன் நிறுத்தப்பட்டாள். காதலித்தவன் கொஞ்சநாள் சோககீதம் பாடி பிறகு அவனும் அமைதியாகிவிட்டான். ஆனால் காதலிக்கப்பட்டவளின் அண்ணன்காரன் எங்களைக் கண்டால் எரிக்கிறமாதிரித்தான் பார்ப்பான். ஆனால் அவனுக்கு மட்டும் அவனது வகுப்பில் ஒருத்தி மீது காதல் இருந்தது.

நல்லகாலம் எனக்கு அண்ணனில்லை....ஏன் ? கேட்ட நண்பர்களுக்குச் சொன்னேன்....வீணா ஒரு கொலை விழவேணுமோ ? ஏன் நீர் அவ்வளவு துணிச்சலான ஆளோ ? எங்கள் குழுவில் ஒருவன் எனது வீரத்தைச் சீண்டியது ஒரு பொழுது......அப்படிப் பல பொழுதுகள் ஓடி சிரித்தபடி திரியும் மதிக்கும் ஒருத்தி மீது காதல் வந்து அவன் சோகமாகி அவனது ஒருதலைக்காதல் ஒருதலைராகம் பாடி.... தயாவின் காதல் தோற்றதென செய்திகள் வந்து நட்பென்பது பொய்யென்ற சமயவாத்தியின் நக்கலும் போய் மறுபடியும் காதலில் தேறி வழமையாகிவிட்டனர் எல்லோரும். ஆயினும் துர்க்கையம்மன் தரிசனம் தொடர்ந்தபடி தான். காதலில் விழுந்த நண்பர்களிடம் சுளட்டியம்மன் தரிசனம் கிடைச்சுதோ என்ற சீண்டல்களும் தொடர்ந்தபடிதான்....

அது சுட்டெரிக்கும் வெயில் மாதம். ஆனையிறவில் ஆகாயகடல்வெளிச்சமர் ஆரம்பமான நாட்கள். களத்தில் நிற்போருக்கான உதவிகளாக உலர் உணவுகள் தயாரிப்பு , மண்மூடைகள் கட்டுதல் என எங்கும் மும்முரமான பணிகள் நடந்து கொண்டிருந்தது. எங்களது பங்குக்கு நாங்களும் அந்தப்பணிகளில் ஒரு வாரத்தை எடுத்து கொண்டோம். மணல் மூடைகட்டுதல் ஒரு வளத்தில் உலர் உணுவத்தயாரி;ப்பு ஒருவளத்தில் நடக்க.....பன்னீரின் இனிய குரலில் எல்லோரையும் இசைக்குள் இழுக்கும் குரலும் கதிர் , மதி , மனோ , தயாவின் தாளமும் சேர அந்த வாரம் இசைக்கச்சேரிக்கு குறைச்சலிருக்கவில்லை.

அந்த நாளொன்றில் வீட்டில் பிசகு மனசு சரியில்லாமல் சோhந்து போய் வேலையில் ஈடுபட்டிருந்த என்னை அடிக்கடி மதி தொல்லைப்படுத்திக் கொண்டிருந்தான். என்ன பிரச்சனை ? ஏன் முகம் சரியில்லை....பழையமாதிரி நீரில்லை.....அது எல்லாருக்கும் மதியின் மூலம் போய் எல்லாரும் என்ன என்ன என்று கேட்க உள்ளிருந்த துயரெல்லாம் அவர்கள் முன்னிலையில் உடைந்து நொருங்க.....பன்னீரின் பாடலொன்றுடன் அந்தத் துயர்களையெல்லாம் தொலைத்து வழமையாக்கியது......

மண்மூடை கட்டியபடி மதிதான் சொன்னான். இப்ப இப்பிடியெல்லாம் எவ்வளவு சந்தோசமா இருக்கிறம். இனி ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு வழியில போகேக்க என்னெண்டு தாங்கப்போறம் என்றான். இவளவை துர்க்கையம்மனிலை தங்கடை பிள்ளையளைக் கூட்டிவந்த எங்களை அறிமுகப்படுத்தேக்க பாப்பம் என்றான் தயா. மதி நானென்னண்டு உங்களையெல்லாம் என்ரை பிள்ளையளுக்கு சொல்லுவேன் தெரியுமா ? எல்லோரின் பார்வையும் எனது பதிலுக்கு காத்திருக்க....துர்க்கையம்மனு�
��்கு கூட்டிவந்து இஞ்சேர் பிள்ளை இதுதான் அம்மாவோடை படிச்ச மதிமாமா , தயாமாமா , மனோமாமா , சுதன்மாமாவெண்டு சொல்லுவன் என்றேன். அந்த நிமிடம் அதை நான் சொன்ன தொனி எல்லோரையும் சிரிக்க வைத்தது. என்ன வெளிநாடோ போப்போறம் இந்த யாழ்மாவட்டத்துக்கைதான இருக்கப்போறம் எப்ப வேணுமெண்டாலும் சந்திக்கலாம் கதைக்கலாம் என்ற துசிக்கு மதிதான் சொன்னான். ஆரார் பாசலில் பரிசுக்கோ சுவிசுக்கோ யேர்மனிக்கோ போறியள் தெரியாது. அவன் சொன்னது போல பரிசுக்கோ சுவிசுக்கோ சொன்னபடி பயணமாகும் முதல் ஆள் நானாகி புலம் பெயர்ந்து போனதை யாருக்கும் தெரியாமல் அந்தப்பயணம் அமைந்ததை இன்றும் எண்ணி வருந்துவதுண்டு.

சர்மிலா , மல்லிகாவுடன் மட்டுமே தொடர்ந்த கடிதத்தொடர்பில் அடிக்கடி துஷி , அம்பாள் , சுரேஷ் , தயாளன் , மனோ , பன்னீர் , கதிர் , ஜெயந்தி , மல்லிகா , நளினி , சுகந்தி , சுதன் , சர்மிலா , பிறேமிளா , நித்தியா கேட்கும் போதெல்லாம் அவர்களை வீதியில் கண்டால் கதைப்பேன் அவ்வளவே என எழுதும் சர்மிலாவின் தொடர்பும் 1995 சூரியக்கதிருடன் அறுபட்டுப்போனது அதன்பின்னும் சில கடிதம் எழுதிக் கொண்டிருந்த மல்லிகாவின் தொடர்பும் விடுபட்டுப்போய்விட்டது.

புலம்பெயர்ந்து 12 ஆண்டின் பின் ஊர் போன போது எனது குழந்தைகளுடன் ஒரு செவ்வாய் துர்க்கையம்மனுக்கும் போயிருந்தேன். இது அம்மாவோடை படிச்ச மாமா , இது அம்மாவோடை படிச்ச அன்ரியென்று அடையாளம் சொல்லும்படி அங்கு யாரும் இருக்கவில்லை. நாங்கள் கூட்டமாக நின்று கதைத்த மரநிழலும் , துர்க்கையம்மன் வெளிவீதியும் அன்றைய அடையாளங்களில் சில தாங்கி அப்படியே இருந்தது. யாராவது அன்றைய நண்பர்கள் வருவார்களா என துர்க்கையம்மன் வீதியிலும் கே.கே.எஸ் வீதியையும் உற்றுப்பார்த்தேன். எங்கும் புது முகங்கள். எவரும் ஞாபகம் சொல்ல என்னை நினைவில் வைத்திருக்க இருக்கவில்லை.

அண்மையில் அசின் , லைலா , ஷாம் , ஆர்யா நடிப்பில் வந்திருந்த படமொன்று (படத்தின் பெயர் நினைவில்லை) பார்க்கக் கிடைத்தது. அந்தப்படத்தில் உலவியவர்கள் எங்கள் அன்றைய நாள் நண்பர் போலிருந்தார்கள். அவர்கள் ஞாபகங்கள் மட்டும் மீதமாக இன்னும் ஞாபகப் பெட்டகத்தில் பத்திரமாய்......அப்பப்போ அவர்களின் ஞாபகமாய் சேமித்த அவர்கள் கையெழுத்துக்களும் நினைவுப் பொருட்களும் தொலைந்து போக....அவர்கள் மட்டும் என் இதயக்கூண்டில் ஒரு மூலையில் வசிக்கிறார்கள். என்றும் இல்லாமல் எப்போதாவது அவர்களை நினைவுபடுத்தும் வகையில் வரும் படங்களோ , பாடல்களோ , கவிதைகளோ , கதைகளோ பார்க்கும் போது பழைய நாட்களுக்குள் போய் விழுந்து விடுகிறது மனசு.....

Edited by shanthy

1991 மருதடி தேருக்கு தாவணிகட்டி தலையில் கனகாம்பரம் வைத்து வீட்டாருடன் வீதியில் போக....

கோவில்களும் தரிசனமும் அதுவொரு அழகிய காலம் என்பதை விட வேறெந்த வார்த்தை சொல்ல......?

மருதடி தேரன்று அப்பப்பாவுடனும், தங்கைகளுடனும் சுதுமலை தோட்டவெளியூடாக நடந்து செல்லும் பசுமையான நினைவுதான் வருகிறது. என்ன இனிய நாட்கள் அவை. :D அதுவும் அனேகமாக வருடபிறப்பு தினங்களில் வருவதால் பண்டிகை கோலமும் களை கட்டும். அந்த வாழ்க்கை திரும்பவும் கிடைக்காதோ என ஏங்குகிறேன்.

புலம்பெயர்ந்து 12 ஆண்டின் பின் ஊர் போன போது எனது குழந்தைகளுடன் ஒரு செவ்வாய் துர்க்கையம்மனுக்கும் போயிருந்தேன். இது அம்மாவோடை படிச்ச மாமா , இது அம்மாவோடை படிச்ச அன்ரியென்று அடையாளம் சொல்லும்படி அங்கு யாரும் இருக்கவில்லை. நாங்கள் கூட்டமாக நின்று கதைத்த மரநிழலும் , துர்க்கையம்மன் வெளிவீதியும் அன்றைய அடையாளங்களில் சில தாங்கி அப்படியே இருந்தது. யாராவது அன்றைய நண்பர்கள் வருவார்களா என துர்க்கையம்மன் வீதியிலும் கே.கே.எஸ் வீதியையும் உற்றுப்பார்த்தேன். எங்கும் புது முகங்கள். எவரும் ஞாபகம் சொல்ல என்னை நினைவில் வைத்திருக்க இருக்கவில்லை.

என்றும் இல்லாமல் எப்போதாவது அவர்களை நினைவுபடுத்தும் வகையில் வரும் படங்களோ , பாடல்களோ , கவிதைகளோ , கதைகளோ பார்க்கும் போது பழைய நாட்களுக்குள் போய் விழுந்து விடுகிறது மனசு.....

அப்போது மனதில் ஏற்படும் ஏமாற்றத்தை உணரமுடிகிறது. தினம் தினம் பழகிய உறவுகளின் தொடர்பையும் நாட்டுப்பிரச்சினையால் இழந்துவிட்டோம். :D

  • கருத்துக்கள உறவுகள்

அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே ..............இனிக்கும் நினைவுகள் . பள்ளி வாழ்வை நினைவு படுத்தி விடீர்கள் இன்றும் என்னுடன் படித்த , உயிர் நண்பி . இடையில் புலப்பெயர்வில் தொடர்பின்றி மீண்டும் தொடர்கின்றது. இருபதுக்கு மேற்பட்ட வருடங்களாக . .......... .பிரியும் போது படித்த பாடல் ...." பசுமை நிறைந்த நினைவுகளே ......" இன்றும் பசுமையாக .மீண்டும் வராதா ? மறுபடி அந்த பருவத்துக்காக பிறக்கவேண்டும் . நல்ல பதிவு

நன்றி சாந்தி .......... .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மருதடி தேரன்று அப்பப்பாவுடனும், தங்கைகளுடனும் சுதுமலை தோட்டவெளியூடாக நடந்து செல்லும் பசுமையான நினைவுதான் வருகிறது. என்ன இனிய நாட்கள் அவை. :) அதுவும் அனேகமாக வருடபிறப்பு தினங்களில் வருவதால் பண்டிகை கோலமும் களை கட்டும். அந்த வாழ்க்கை திரும்பவும் கிடைக்காதோ என ஏங்குகிறேன்.

அப்போது மனதில் ஏற்படும் ஏமாற்றத்தை உணரமுடிகிறது. தினம் தினம் பழகிய உறவுகளின் தொடர்பையும் நாட்டுப்பிரச்சினையால் இழந்துவிட்டோம். :(

மருதடித் தேரும் அதன் நினைவுகளும் நாங்கள் உலவிய தெருக்களும் ஞாபகங்களில் மட்டுமே எங்களோடு மிஞ்சிக்கிடக்கிறது மல்லிகைவாசம்.

இழந்துவிட்டோம் எல்லாம் இனியெப்போ அவையென்ற கனவும் மெல்ல மெல்ல இனியில்லை என்றாகிவிட்டது.

நன்றி கருத்திட்டமைக்கு.

அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே ..............இனிக்கும் நினைவுகள் . பள்ளி வாழ்வை நினைவு படுத்தி விடீர்கள் இன்றும் என்னுடன் படித்த , உயிர் நண்பி . இடையில் புலப்பெயர்வில் தொடர்பின்றி மீண்டும் தொடர்கின்றது. இருபதுக்கு மேற்பட்ட வருடங்களாக . .......... .பிரியும் போது படித்த பாடல் ...." பசுமை நிறைந்த நினைவுகளே ......" இன்றும் பசுமையாக .மீண்டும் வராதா ? மறுபடி அந்த பருவத்துக்காக பிறக்கவேண்டும் . நல்ல பதிவு

நன்றி சாந்தி .......... .

புலப்பெயர்வு ஊருக்குள் இடப்பெயர்வென்று இழந்தவை ஏராளம். பசுமை நிறைந்த நினைவுகள் இன்னும் பச்சையம் உலராமல் மனசுக்கள் பதிந்து கிடக்கிறது. இடையில் தொடர்பறுந்த உறவுகள் நட்புகள் இனியென்று ?

மிஞ்சும் துயரோடு நினைவுகளை மீட்டுப்பார்ப்போம்.

கருத்திட்டமைக்கு நன்றி நிலாமதி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.