Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கிளிநொச்சியை பிடிக்க சிங்களப் படை தீவிரம்- தக்க வைக்க புலிகள் வீராவேசமாக தாக்குதல்: பா.நடேசன்

Featured Replies

கிளிநொச்சியை பிடிக்க சிங்களப் படை தீவிரம்- தக்க வைக்க புலிகள் வீராவேசமாக தாக்குதல்: பா.நடேசன்

[சனிக்கிழமை, 27 டிசெம்பர் 2008, 05:53 மு.ப ஈழம்] [ந.ரகுராம்]

கிளிநொச்சியைப் பிடித்தே தீருவதென்று சிங்களப் படைத்தலைமை விடாப்பிடியாக முயற்சிகளை மேற்கொள்கின்றது. கிளிநொச்சியைத் தற்காத்தேயாக வேண்டுமென்று புலிகள் இயக்கம் வீராவேசமாக போராடுகின்றது. இதனால் கிளிநொச்சி நகரமே போர்க்களமாக காட்சி தருகின்றது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டிலிருந்து வெளிவரும் "குமுதம்" வார இதழின் இணையத்தளத்தில் வெளிவந்துள்ள பா.நடேசனின் நேர்காணல்:

கிளிநொச்சி நகரத்தை நான்கு முனைகளில் இருந்தும் தாக்கும் இராணுவத்தின் முன்னேற்றம் வெற்றிகரமாக தடுக்கப்பட்டதாக செய்திகள் வருகின்றன. தற்போது அங்கு நிலவரம் எவ்வாறு உள்ளது?

கிளிநொச்சியைப் பிடித்தே தீருவதென்று சிங்களப் படைத்தலைமை விடாப்பிடியாக முயற்சிகளை மேற்கொள்கின்றது. கிளிநொச்சியைத் தற்காத்தேயாக வேண்டுமென்று புலிகள் இயக்கம் வீராவேசமாக போராடுகின்றது. இதனால் கிளிநொச்சி நகரமே போர்க்களமாக காட்சி தருகின்றது. ஒரு முனையில் தாக்குவதால் பயனில்லை; பல முனைகளில் களங்களைத் திறந்து ஒரே சமயத்தில் தாக்குவதன் மூலம் நகரைப் பிடிக்கலாம் என சிங்களப் படைகள் கருதியிருந்தன. சிங்களப் படையின் இந்தப் புதிய வியூகத்தையும் புலி வீரர்களும், வீராங்கனைகளும் இப்போது முறியடித்து விட்டனர்.

பெருந்தொகை சிங்களப்படைகள் கொல்லப்பட்டதால் சிங்கள அரசும் அதிர்ந்து போயுள்ளது. ஆனாலும் அது தனது முயற்சியை கைவிடுவதாக இல்லை. இப்போது கிளிநொச்சி நகரம் மீதும் மற்றும் அதன் சுற்றியுள்ள கிராமங்கள் மீதும் பெருமெடுப்பிலான வான்தாக்குதலை முடுக்கியுள்ளது. வானூர்திகளின் பேரிரைச்சலும் அவை போடும் குண்டுகளின் வெடிச்சத்தங்களும், காயமடையும் மக்களின் அவலக்குரலுமாக வன்னிப்பகுதி காட்சியளிக்கின்றது.

விரைவில் கிளிநொச்சி அடுத்து முல்லைத்தீவு என புலிகள் பகுதியை முழுவதுமாக கைப்பற்றி விடுவோம். அப்பொழுது ஒழிந்துகொள்ள வேறு இடம் இல்லாமல் கடலுக்குள் சென்றுதான் புலிகள் தற்கொலை செய்யவேண்டும் என சிறிலங்கா இராணுவத் தளபதி சரத் பொன்சேகா குறிப்பிட்டிருந்தார். இதற்கு தங்களின் பதில் என்ன?

புலிகள் இயக்கம் கடலுக்குள் குதித்து அழிய வேண்டும் அல்லது சயனைட் அருந்தி சாகவேண்டும் என்று சிங்கள பேரினவாதிகள் ஆசைப்படுகின்றனர். இதேபோன்ற கருத்தை முன்னர் சந்திரிகா காலத்தில் அதன் இராணுவ அமைச்சராக இருந்த ஜெனரல் ரத்வத்தவும் கூறியிருந்தார். இதேபோன்றுதான் பண்டைய சிங்கள மன்னான துட்டகைமுனுவும் தமிழர்களை கடலுக்குள் தள்ளியழிக்க ஆசைப்பட்டிருந்தான். இனவாத மரபு சார்ந்த இராணுவ ஆசைகள் நிறைவேற புலிகள் இயக்கமும் எமது மக்களும் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள்.

பலத்த இழப்புகளுக்கு மத்தியிலும் கிளிநொச்சியை நோக்கி சிறிலங்கா இராணுவம் முன்னேறி வருவது, இராணுவம் பலமடைந்து விட்டது என்பதைக் காட்டுகிறதா?

கணிசமான நிலங்களை சிங்களப்படைகள் ஆக்கிரமித்திருக்கின்றன என்பது எவ்வளவு உண்மையோ அந்தளவிற்கு அகலக்கால் வைத்து சிங்களப்படைகள் பலவீனமடைந்திருக்கின்றன என்பதும் உண்மையாகும். ஒரு விடுதலை இயக்கத்தின் பலம் என்பது அது வைத்திருக்கும் நிலப்பரப்பு என்பதை விட அதனிடம் இருக்கும் படை பலம் தான். எனவேதான் நெருக்கடிகள் ஏற்படும் பொழுது நிலத்தை விட்டுக்கொடுத்து படை பலத்தை தக்கவைத்துக் கொள்வதை ஒரு மரபாக விடுதலை இயக்கங்கள் கொண்டிருக்கின்றன. ஓடு மீன் ஓட உறுமீன் வரும்வரை வாடியிருக்குமாம் கொக்கு என்பது போல ஒருநாள் புலிகள் இயக்கம் தனது பாரிய தாக்குதலை தொடுக்கும்போது இழக்கப்பட்ட இந்த நிலங்கள் ஓரிரு நாட்களில் புலிகள் வசமாகும்.

சிறிலங்கா இராணுவத்தின் திடீர் பலத்துக்கு மற்ற நாடுகளின் உதவிதான் காரணம் எனச் சொல்லப்படுகின்றது. எந்தெந்த நாடுகள் சிறிலங்காவுக்கு உதவுகின்றன?

தனது சொந்தப் பலத்துடன் நின்றபடி எம்முடன் சிங்களப்படைகள் மோதுவதாகவிருந்தால் ஒரு குறுகிய காலத்தில் வெற்றிபெற்று எமது இலக்கை அடைவோம் என்பது திண்ணம். ஆனால், நாங்கள் சிங்களப்படைகளுடன் மட்டும் மோதவில்லை. பல நாடுகளுடன் மோதியே எமது விடுதலையைப் பெறவேண்டும் என்ற நிலையில் இருக்கின்றோம். எமது விடுதலைப் போராட்டத்திற்கு எதிராக வேண்டுமென்றே சில நாடுகள் சிங்கள அரசுக்கு இராணுவ உதவிகள் புரிகின்றன. நேரடியாகவோ மறைமுகமாகவோ அந்த நாடுகளுக்கு இங்கு நலன்கள் இருக்கின்றன என நாம் சந்தேகிக்கின்றோம். எமது விடுதலைப் போரை தடுப்பதன் மூலம் அந்த நாடுகள் நன்மையடைய விரும்புகின்றன போலுள்ளது.

வியட்நாம் போல் மக்களுக்கு ஆயுதப் பயிற்சி அளித்து, அவர்களும் போரில் குதிப்பது குறித்து முன்பு பேசப்பட்டது. இப்பொழுது நடந்து வரும் போரில் மக்களின் பங்களிப்பு எவ்வாறு இருக்கிறது?

இப்போது இங்கே நடக்கும் போர் மக்கள் போர் என்ற வடிவில்தான் நிகழ்ந்து வருகின்றது. மக்கள் அனைவருமே ஏதோவொரு வகையில் போர்க்கடமைகளை இங்கு ஆற்றி வருகின்றனர். வலுவுள்ள அனைவரும் ஆயுதப்பயிற்சி பெற்றுள்ளனர். சுழற்சி முறையில் களமுனைப் பணிகளை மக்கள் தொடர்ச்சியாக ஆற்றி வருகின்றனர். ஆள் எண்ணிக்கையில் அதிகமுள்ள சிங்களப் படைகளை மக்கள் போர் என்ற இந்தப் போர் வடிவில் தான் எதிர்கொண்டு வருகின்றோம். சங்கத்தமிழர் காலத்து வீரமரபு ஈழமண்ணில் இன்று நிதர்சனமாக நடைபெறுகின்றது. வீரமும் - தியாகமும் - ஒருங்குசேர்ந்து வெளிப்படுத்தப்படும் புறநானூறுகள் ஒவ்வொருநாளும் களத்தில் படைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

ஆனந்தசங்கரி, டக்ளஸ் தேவானந்தா போன்ற இலங்கைத்தமிழ் அரசியல்வாதிகள் தமிழகப் பத்திரிகைகளுக்கு கொடுக்கும் பேட்டிகளில் புலிகள் பலவீனமடைந்து விட்டார்கள்; தங்களை மீண்டும் பலப்படுத்திக் கொள்ளத்தான் போர் நிறுத்தத்தை வலியுறுத்துகிறார்கள் எனச்சொல்லி வருகிறார்கள். இதற்கு புலிகள் பதில் என்ன?

எமது இனத்தின் வரலாற்றைப் பொறுத்த வரையில் இவர்கள் துரோகிகள். தற்போதைய அரசியலில் பிணம் தின்னும் கழுகுகள். எப்போது புலிகள் இயக்கம் அழியும், தமது வயிற்றுப்பிழைப்பு அரசியலை இங்கு நடத்தலாம் என ஏங்கிக்கொண்டிருப்பவர்கள். சிங்களப் படைகளால் தமிழர்கள் இன அழிப்புச் செய்யப்படுகிறார்கள் என உலகமே உரத்துக் கூறிக்கொண்டிருக்கிறது. உலகத் தமிழர்கள் அனைவரும் தமது முதன்மை எதிரியாக சிங்கள அரசையே கருதுகின்றனர். இந்த நிலையில் அற்பசொற்ப பதவி சுகங்களுக்காக சிங்கள அரசுடன் ஒட்டிக்கொண்டு கோடாலிக்காம்புகள் போல செயற்படுகின்றனர். எம்மைப் பற்றியும் எமது மக்களைப் பற்றியும் புலம்பித் திரிவதே இவர்களின் வேலை. இவர்களைப் பற்றி கருத்து தெரிவிப்பதில் எதுவித அர்த்தமும் இல்லை.

புலிகளுக்கு எதிரான பிரச்சாரத்தை தமிழகம் உட்பட உலகம் முழுக்க சிறிலங்கா அரசு முடுக்கிவிட்டுள்ள நிலையில், அதை முறியடிக்க புலிகள் தரப்பில் என்ன செய்யப்படுகின்றது?

நாங்கள் விடுதலைக்காகப் போராடும் ஓர் இயக்கம். உண்மையும் நேர்மையும் தான் எங்களுக்கு ஆதாரம். பொய்களும் புனைகதைகளும் எங்களுக்கு புதியவையல்ல. அது ஆக்கிரமிப்பு அரசுகளுக்கு பெரியவை. ஈழத்தில் ஒரு இனப்படுகொலை நடக்கின்றது. அதற்கெதிராக ஒரு விடுதலைப் போரும் நடக்கின்றது. இந்த அரசியல் உண்மையை கடந்த முப்பது வருடங்களாக உலகிற்கு நாங்கள் தெரியப்படுத்திவருகின்றோம். இப்போதும் அதையே செய்து வருகின்றோம்.

தமிழகத்திலிருந்து அனுப்பப்பட்ட நிவாரண உதவிப்பொருட்கள் அங்கு மக்களுக்கு வழங்கப்படுகின்றனவா? அதற்கு சிறிலங்கா அரசு என்ன நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது? புலிகள் கட்டுப்பாட்டு பகுதியில் இந்த நிவாரணப்பொருட்கள் எவ்வாறு வழங்கப்படுகின்றன?

தமிழக மக்களிடமிருந்து ஈழத்தமிழ் மக்களிற்காக அனுப்பப்பட்ட உணவுப்பொருட்களும் உடை வகைகளும் கட்டம் கட்டமாக அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தினால் எமது கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்குள் கொண்டுவரப்பட்டு இங்குள்ள கூட்டுறவுச் சங்கங்களின் ஊடாக மக்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகின்றது. மக்கள் இந்த உணவு, உடை என்பவை தமிழக மக்களிடம் இருந்து வந்தவை என்ற வகையில் பெரும் ஆவலோடும் மகிழ்ச்சியோடும் இப்பொருட்களை பெற்றுச்செல்வதைக் காணக்கூடியதாக இருக்கின்றது.

மாவீரர் நாள் உரையில் புலிகள் இயக்கத்தலைவர் பிரபாகரன் விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடையை அனைத்துலக நாடுகள் நீக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தார்; இதற்கான பேச்சுவார்த்தைகள் மற்றும் முயற்சியில் புலிகள் அமைப்பு ஈடுபட்டுள்ளதா?

அதற்கு வேண்டிய அனைத்து வகையான இராஜதந்திர அரசியல் நகர்வுகளை எடுத்து வருகின்றோம். குறிப்பாக இந்திய அரசிற்கும் பல்வேறு வழிகளின் ஊடாக எடுத்துரைத்து வருகின்றோம். எமது கோரிக்கைகளை இந்திய மத்திய அரசு சாதகமாக பரிசீலிக்கும் என்ற நம்பிக்கையும் எமக்குண்டு.

விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயற்படுவதாக பழ.நெடுமாறன், வை.கோ. போன்ற தமிழக அரசியல் தலைவர்களுக்கு விடுதலைப் புலிகள் அமைப்பு பணம் கொடுப்பதாகவும் அவர்களை கோமாளிகள் என்றும் சரத் பொன்சேகா குறிப்பிட்டார்;. இதனை எப்படி எதிர்கொள்கிறீர்கள்?

சரத் பொன்சேகாவின் கூற்று ஈழத்தமிழ் மக்கள் மீதான வெறுப்புணர்வு மட்டுமல்ல தமிழக மக்கள் மீதும் அங்குள்ள அரசியல் தலைவர்கள் மீதும் அவருக்கிருந்த வெறுப்புணர்வையே எடுத்துக்காட்டுகின்றது. அண்மைக்காலமாக அவர் தமிழ் மக்கள் மீதான இன விரோதக் கொள்கையையும் கோட்பாடுகளையும் பகிரங்கமாகவே தெரிவித்து வருகின்றார்;. இதனை இந்திய அரசும் உலக நாடுகளும் கவனத்தில் கொண்டு தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தை அங்கீகரிக்க முன்வரவேண்டும்.

தமிழக அரசியல் தலைவர்கள் இந்தியப் பிரதமரைச் சந்தித்த பிறகு, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியை இலங்கைக்கு அனுப்புவதாக முடிவானது. பிரணாப் முகர்ஜியின் வருகை ஏதாவது மாற்றத்தை உருவாக்குமா?

இந்தியா ஒரு பலமான நாடு மட்டுமல்ல இந்தப் பிராந்தியத்தின் வல்லரசுமாகும். இந்திய மத்திய அரசு நினைத்தால் அதிகாரத்தையும் - செல்வாக்கையும் பிரணாப் முகர்ஜியுடாக பயன்படுத்தி போர் நிறுத்தம் ஒன்றை ஏற்படுத்தி அரசியல் பேச்சுவார்த்தை நடைபெறுவதற்கான புறச்சூழல் ஒன்றையும் உருவாக்க முடியும். இந்தப் பிராந்தியத்தின் பெரு அரசு என்ற வகையில் இதைச்செய்ய வேண்டிய தார்மீகப் பொறுப்பு இந்திய அரசுக்கு உண்டென்பதும் எல்லோருடைய எதிர்பார்ப்பும் ஆகும்.

புலிகளின் அடுத்தகட்ட அரசியல் நகர்வு என்னவாக இருக்கும்?

நாம் உலகின் சகல நாடுகளிடமும் அரசியல் இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்த விரும்புகின்றோம். குறிப்பாக இந்திய அரசுடனும் எமது நட்புறவை மீளக்கட்டியெழுப்ப விரும்புகின்றோம் என்று அதில் தெரிவித்துள்ளார்.

புதினம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.