Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உண்ணாவிரத மேடையில் செல்வி: ஜெயலலிதா ஆற்றிய உரை

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலங்கைத் தமிழர்கள் காப்பாற்றப்பட வேண்டும், இலங்கையில் போர் நிறுத்தம் வேண்டும், எனக் கோரி இன்று சென்னை சேப்பாக்கம் அரச விருந்தினர் விடுதி முன்பாக உண்ணாவிரதமிருந்த அதிமுக பொதுச் செயலாளர் செல்வி. ஜெயலலிதா, உண்ணாவிரத மேடையில் ஆற்றிய உரையின் முழுவடிவம்:

அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர் அன்புச் சகோதரர்

திரு. டி. ஜெயக்குமார் அவர்களே,

வரவேற்புரை ஆற்றிய தென் சென்னை மாவட்டக் கழகச் செயலாளர் அன்புச் சகோதரர் திரு. வி.பி. கலைராஜன் அவர்களே,

வாழ்த்துரை வழங்க உள்ள வட சென்னை மாவட்டக் கழகச் செயலாளர் அன்புச் சகோதரர் திரு. சேகர்பாபு அவர்களே,

சி.பி.ஐ. கட்சியின் மாநிலச் செயலாளர் அன்புச் சகோதரர் தா. பாண்டியன் அவர்களே,

திரு. திண்டிவனம் ராமமூர்த்தி அவர்களே, தோழமைக் கட்சித் தலைவர்களே,

வணக்கத்திற்குரிய பெரியோர்களே,

என்னை வாழ வைக்கும் தெய்வங்களாகிய தாய்மார்களே,

இதய தெய்வம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் ரத்தத்தின் ரத்தமான என் உயிரினும் மேலான எனதருமைக் கழக உடன்பிறப்புகளே,

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக இளைஞர் பாசறை மற்றும் இளம் பெண்கள் பாசறையில் உறுப்பினர்களாக உள்ள இளம் சிங்கங்களே, வீராங்கனைகளே, பொதுமக்களே, உடன்பிறப்புகளே,

உங்கள் அனைவருக்கும் முதற்கண் எனது கனிவான வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இன்றைய தினம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், இலங்கையில் படுகொலை செய்யப்பட்டு வரும் இலங்கைத் தமிழர்களுக்காக எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இலங்கையில் நடைபெற்று வரும் இனப் படுகொலையை தடுத்து நிறுத்தவும், போர் நிறுத்தம் ஏற்படுத்தவும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காத மத்திய அரசையும், மாநில மைனாரிட்டி தி.மு.க. அரசையும் கண்டித்து இலங்கைத் தமிழர்களுக்கு நம்முடைய முழு ஆதரவை தெரிவிக்கும் வகையில் இந்த உண்ணாவிரத அறப் போட்டத்திற்கு ஏற்பாடு செய்திருக்கிறோம்.

இந்த உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடக்கி வைத்து, உங்களையெல்லாம் சந்தித்து உங்கள் மத்தியில் உரையாற்றும் வாய்ப்பு கிடைத்ததை பெரும் பேராக நான் கருதுகிறேன். சென்னை மாவட்டம் கழக அமைப்பு ரீதியாக வட சென்னை மாவட்டம் என்றும், தென் சென்னை மாவட்டம் என்றும் இரண்டாகப் பிரிக்கப்பட்டிருந்தாலும், இந்தப் போராட்டத்தை ஒரே இடத்தில் நடத்துகிறோம். ஆகவே வட சென்னை, தென் சென்னை மாவட்டக் கழகங்களின் இரு செயலாளர்களும் இணைந்து மிகச் சிறப்பாக இந்த உண்ணாவிரத அறப் போராட்டத்திற்கு இன்று ஏற்பாடு செய்திருக்கிறார்கள். முதற்கண் வட சென்னை மாவட்டக் கழகச் செயலாளர் திரு. சேகர்பாபு அவர்களுக்கும், தென் சென்னை மாவட்டக் கழகச் செயலாளர் திரு. கலைராஜன் அவர்களுக்கும் எனது பாராட்டுதல்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

கடந்த ஆண்டு 2008ல் இந்திய அரசு இலங்கைக்கு ஆயுதங்களையும், அதி நவீன ராணுவ சாதனங்களையும் அளித்துக் கொண்டிருப்பதாக பத்திரிகைகளிலும், தொலைக்காட்சிகளிலும், அனைத்து ஊடகங்களிலும் செய்திகள் வந்தன. காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு இந்தச் செய்திகளை மறுக்கவில்லை. அதன் பின்னர் இந்திய பாதுகாப்புத் துறை உயர் அதிகாரிகளும், உயர் ராணுவ அதிகாரிகளும், பிரதமர் மன்மோகன்சிங்குக்கு மிகவும் நெருக்கமாக உள்ள உயர்மட்ட உதவியாளர்களும் இலங்கைக்குப் பயணம் செய்தார்கள் என்றும் ஊடகங்களில் செய்திகள் வெளிவந்தன. இந்த செய்திகளையும் மத்திய அரசு மறுக்கவில்லை. தி.மு.க-வும் இதற்கு எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை.

இலங்கையில் உள்ள தமிழர்களைப் பற்றி மிகுந்த அக்கறை கொண்டிருப்பதாக தம்பட்டம் அடித்துக்கொள்ளும் கருணாநிதி, இதற்கு எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. மத்திய அரசில் இடம்பெற்றுள்ள மத்திய தி.மு.க. அமைச்சர்கள் இதற்காக ராஜினாமா செய்யவும் இல்லை, தங்கள் பதவிகளை ராஜினாமா செய்யப் போவதாக மிரட்டிக் கூடப் பார்க்கவில்லை. இந்தக் கேள்விகளை எல்லாம் நான் எழுப்பிய போது, கருணாநிதி என்னை கேலி செய்தார். இது முற்றிலும் மத்திய அரசின் அதிகார வரம்பிற்கு உட்பட்ட விஷயம் என்பது கூட ஜெயலலிதாவுக்குத் தெரியவில்லை. இது குறித்து, அதாவது ராணுவ தளவாடங்களையும், ஆயுதங்களையும் இலங்கைக்கு அனுப்புவது குறித்து மத்திய அரசு மாநில முதலமைச்சரை கலந்து ஆலோசிக்கத் தேவையில்லை என்பது கூட ஜெயலலிதாவுக்குத் தெரியவில்லை என்று என்னை கேலி செய்தார்.

ஆனால் அதே கருணாநிதி இப்போது இதற்காக தமிழ் நாடு சட்டமன்றப் பேரவையில் மூன்று தீர்மானங்களைக் கொண்டு வந்ததாக இன்றைக்கு தம்பட்டம் அடித்துக் கொள்கிறார்.

இலங்கையில் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும், அல்லல்பட்டுக் கொண்டிருக்கும் இலங்கைத் தமிழகர்கள் குறித்து கருணாநிதிக்கு அக்கறை இல்லை என்று குற்றம் சாட்டும் போது, அது மத்திய அரசின் பொறுப்பு என்கிறார். மாநில அரசின் முதலமைச்சருக்கு இதில் எந்தப் பங்கும் இல்லை, எதுவும் செய்ய முடியாது என்கிறார். ஆனால் இலங்கைத் தமிழர்கள் பிரச்சினையை வைத்து அரசியல் ஆதாயம் தேட வேண்டும் என்று அவர் விரும்புகிற போது திடீரென்று இந்தப் பிரச்சினையை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக்குக் கொண்டு வருகிறார்.

தமிழில் ஒரு பழமொழி சொல்லுவார்கள். பிள்ளையையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டுகிறார் என்று இரட்டை நிலை பண்புகளை பற்றிச் சொல்லுவார்கள். இதையே ஆங்கிலத்தில் வேறு விதமாகச் சொல்லுவார்கள். இரட்டை நிலை கொள்பவர்களைப் பற்றி ஆங்கிலத்தில் சரnniபே றiவா வாந hயசந யனே hரவேiபே றiவா வாந hடிரனேள என்று சொல்வார்கள். மேலை நாடுகளில், குறிப்பாக இங்கிலாந்து நாட்டில் ஒரு விளையாட்டு மிகவும் பிரபலமாக இருக்கின்றது. அதாவது ஒரு முயலை ஓடவிட்டு அதனை துரத்திப் பிடிக்க வேட்டை நாய்களை அவிழ்த்துவிடுவார்கள். அந்த முயலை துரத்திக் கொண்டே வேட்டை நாய்கள் ஓடும். அந்த வேட்டை நாய்களுக்குப் பின்னால் அதன் உரிமையாளர்கள் ஓடுவார்கள். கடைசியில் அந்த நாய்களெல்லாம் சேர்ந்து அந்த முயலை பிடிக்கின்ற போது, அந்த நாய்களின் உரிமையாளர்கள் அந்த முயலை எடுத்துக்கொண்டு அவர்கள் வெற்றி கொண்டாடுவார்கள். அதைப் போல இரட்டை நிலை கொள்பவர்களைப் பார்த்து தப்பித்து ஓடுகின்ற முயலுடன் சேர்ந்து ஓடுகிறார், அதே நேரத்தில் அந்த முயலை வேட்டையாடுகின்ற வேட்டை நாய்களுடனும் சேர்ந்து வேட்டையாடுகிறார் என்று சொல்வார்கள். கருணாநிதியின் செயல்பாடு அப்படித் தான் இருக்கிறது.

ஆனால் இதில் கருணாநிதியினுடைய கெட்டிக்காரத்தனம் என்னவென்றால், அவருடைய சாதூரியம் என்னவென்றால் தன்னுடைய தி.மு.க. கட்சி மத்திய அரசில் முக்கியமான அங்கம் வகிக்கிறது என்பதை மட்டும் அவர் மறைத்துவிடுகிறார். நூற்றுக்கணக்கான, பல நூற்றுக்கணக்கான இலங்கை ராணுவ வீரர்கள் கடந்த ஆண்டு இந்தியாவில் அரியானா மாநிலத்தில் சிறப்புப் பயிற்சியை மேற்கொண்டார்கள். இந்த பயிற்சி இந்திய ராணுவத்தால் அவர்களுக்கு அளிக்கப்பட்டது. இந்த செய்தி ஜெயா டிவியில் வெளிப்படுத்தப்பட்டது. அதில் அந்த பயிற்சி மேற்கொண்ட சிலர் இலங்கை ராணுவ வீரர்கள் பேட்டியும் அளித்திருந்தார்கள். இதைப் பற்றி எனக்குத் தெரிய வந்த போது இதற்குக் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தேன். ஆனால் கருணாநிதி இதற்கு எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. கருணாநிதி கட்சியைச் சேர்ந்தவர்கள் இதற்கு எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை.

அதி நவீன தலை சிறந்த ஆயுதங்களையும், சாதனங்களையும் கொண்ட இந்திய ராணுவம் இலங்கை ராணுவத்தினருக்கு பயிற்சி அளித்தது. இந்தப் பயிற்சி இந்திய அரசின் ஒப்புதலுடன் தான் நடந்திருக்கிறது என்பது வெட்ட வெளிச்சம். அதாவது இன்னும் விளக்கமாகச் சொல்ல வேண்டுமானால் இலங்கையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இலங்கைத் தமிழர்களின் இனப் படுகொலை இந்திய மத்திய அரசின் முழு ஒப்புதலோடு தான் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்று தான் சொல்ல வேண்டி உள்ளது. தமிழ் நாட்டில் உள்ள எங்களைப் பொறுத்தவரையில் ருஞஹ மத்திய அரசு என்று சொன்னால் காங்கிரசும் தி.மு.க-வும் தான். அதைப் போலவே எங்களுக்கு தி.மு.க. என்றால் கருணாநிதி என்று தான் அர்த்தம்.

இதிலிருந்து என்ன தெரிகிறது? இலங்கையில் படுகொலை செய்யப்பட்டுக் கொண்டிருக்கும் இலங்கைத் தமிழர்களின் படுகொலையில், இனப் படுகொலையில் கருணாநிதிக்குப் பெரும் பங்குண்டு. இந்தப் படுகொலையில் பெரும் பங்காற்றிவிட்டு அதே கருணாநிதி தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் இலங்கைத் தமிழர்கள் இனப் படுகெலைக்கு எதிராக தீர்மானங்களை நிறைவேற்றுகிறார். யாரை ஏமாற்றப் பார்க்கிறார் கருணாநிதி? மேலும் அவருடைய மூன்றாவது தீர்மானத்தை, அவர் கொண்டு வந்த மூன்றாவது தீர்மானத்தை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆதரிக்கவில்லை என்று கூறுகிறார். இத்தகைய பித்தலாட்ட பாசாங்கு தீர்மானங்களை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஏன் ஆதரிக்க வேண்டும்? மக்களை ஏமாற்றுவதற்காகவே கருணாநிதி நடத்துகின்ற இந்த நாடகத்திற்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஏன் ஆதரவு தெரிவிக்க வேண்டும்?

ஒரு நாடு மற்றொரு நாட்டிற்கு ஆயுதங்களையும், ராணுவப் பயிற்சியும் அளிப்பது என்பது நடைமுறையில் நடைபெறக் கூடியதுதான். இது ஒன்றும் புதுமையல்ல. ஆனால் இலங்கையைப் பொறுத்தவரையில் எழுகின்ற கேள்வி இது தான். இந்தியா இலங்கைக்கு அளிக்கப்படும், இந்தியாவால் இலங்கைக்கு அளிக்கப்படும் ஆயுதங்களும், பயிற்சியும் யாருக்கு எதிராக அங்கே பயன்படுத்தப்படுகின்றன? எல்லோருக்கும் தெரிந்த ஒரு உண்மை என்னவென்றால், இலங்கை அரசு தன்னிடம் உள்ள முழு ராணுவ பலத்தையும், அனைத்து ஆயுதங்களையும் அங்கே இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு எதிராகத் தான் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. இலங்கை அரசு சொல்லலாம் அங்கே விடுதலைப் புலிகள் மீது தான் ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்துகிறது, தாக்குதல் நடத்துகிறது என்று இலங்கை அரசு கூறலாம். ஆனால் இறந்தவர்களின் எண்ணிக்கையைப் பார்க்கும் போது, இறந்தவர்கள் விடுதலைப் புலி போராளிகள் மட்டுமல்ல, அப்பாவித் தமிழ் மக்களும் தான் என்பது தெளிவாகிறது.

ஆக சுருங்கச் சொல்ல வேண்டுமானால் இந்தியாவில் இருந்து அனுப்பப்பட்ட ஆயுதங்களும், தோட்டாக்களும், வெடி மருந்துகளும் தான் அங்கே இலங்கைத் தமிழர்களுக்கு எதிராக அவர்களை கொலை செய்ய பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அது மட்டுமின்றி, அண்மையில் கூட இலங்கை ராணுவமும், கடற்படையும் கடலில் மீன் பிடிக்கச் சென்ற இந்திய மீனவர்களை சுட்டுக் கொன்றிருக்கிறார்கள். மிக அண்மையில் கச்சத் தீவில் ஒரு தமிழக மீனவர் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார். இலங்கை கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார். அனைவருக்கும் நினைவூட்ட விரும்புகிறேன். முந்தைய காங்கிரஸ் மத்திய அரசால் தான் நமக்கு சொந்தமாக இருந்த, இந்தியாவிற்கு சொந்தமாக இருந்த கச்சத் தீவு கருணாநிதியின் ஆசீர்வாதத்தோடு இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்டது. தொடர்ந்து இலங்கைத் தமிழர்கள் கொலை செய்யப்பட்டு வருகிறார்கள். இத்தனை படுகொலைகள், இனப் படுகொலை தொடர்ந்து நடந்து வந்த போதிலும், காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு இதையெல்லாம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டு வாய்மூடி மவுனியாக இருக்கிறது. வேடிக்கை பார்ப்பதோடு மட்டும் இருக்கவில்லை. ஆனால் இதில் முழு ஈடுபாடு கொண்டிருக்கிறது இந்திய அரசு. அதாவது இலங்கை அரசுக்கு இந்திய அரசு ஆயுதங்களை அளித்திருக்கிறது. அதி நவீன சாதனங்களை வழங்கி இருக்கிறது. இலங்கை ராணுவத்திற்கு பயிற்சியும் அளித்திருக்கிறது.

நமக்கெல்லாம் இயற்கையாக, இயல்பாக எழுகின்ற கேள்வி இது தான். தமிழகத்தில் இருந்து 10 கனம் பொருந்திய தமிழர்கள் மத்திய அமைச்சரவையில் மிக சக்தி வாய்ந்த இலாகாக்களைப் பெற்று கோலோச்சிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் இதையெல்லாம் ஏன் தட்டிக் கேட்கவில்லை? அவர்கள் ஏன் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை? இன்றைய மத்திய அரசில் தி.மு.க. மிக முக்கியமான அங்கம் வகிக்கிறது. தி.மு.க. தான் மத்திய அரசை தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்கிறது. இதற்கு முன்பே இலங்கையில் நடைபெற்று வரும் இனப் படுகொலைக்கு, அதில் இந்திய அரசுக்கு உள்ள பங்கிற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. தனது ஆதரவை வாபஸ் பெற்றிருந்தால் மத்திய அரசு கவிழ்ந்திருக்கும்.

தமிழர்களின் காவலர் என்று தன்னைத் தானே தம்பட்டம் அடித்துக்கொள்ளும் கருணாநிதி தன்னுடைய கட்சிக்காரர்களுக்கும், தன்னுடைய உறவினர்களுக்கும், தனக்கு வேண்டியவர்களுக்கும் மிக முக்கியமான இலாகாக்களை மத்திய அமைச்சரவையில் பெற்றுத் தர வேண்டும் என்பதற்காக இந்த ஆதரவு வாபஸ் என்ற ஆயுதத்தை பலமுறை பயன்படுத்திவிட்டார்.

ஆனால் தமிழ் மக்களின் பாதுகாப்பு, தமிழ் மக்களின் உரிமை, தமிழ் மக்களின் நலம் என்று வருகின்ற போது கருணாநிதியால் இந்த ஆயுதத்தை பயன்படுத்த முடியவில்லை. அப்போது வாய் மூடி மவுனியாக இருந்துவிடுகிறார். மக்கள் ஒன்றை தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும். கருணாநிதிக்கு மக்களைப் பற்றி அக்கறை சிறிதளவும் இல்லை. விஷம் போல் ஏறி வரும் விலைவாசியை கட்டுப்படுத்த மைனாரிட்டி தி.மு.க. அரசின் முதலமைச்சர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தமிழ் நாட்டில் சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்ட கருணாநிதி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இன்னும் சொல்லப்போனால், கருணாநிதியின் குடும்பத்தினரும், தி.மு.க-வினரும் தான் இன்று வன்முறையாளர்களாக, சட்டத்தை மீறுபவர்களாக உருவாகி இருக்கிறார்கள்.

தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு தமிழ் நாட்டில் நடத்தப்படும் அனைத்துத் தேர்தல்களும் மாபெரும் கேலிக் கூத்தாகிவிட்டன. ஒவ்வொரு தேர்தல் வருகின்ற போதும் அப்பாவித் தமிழக மக்கள் மீது தி.மு.க-வினர் ரவுடிகளையும், குண்டர்களையும் கட்டவிழ்த்துவிட்டு ஏவிவிடுகிறார்கள். அவர்கள் நிகழ்த்தும் வன்முறைச் செயல்களை, காட்டுமிராண்டித்தனமான செயல்களைப் பார்த்து காவல் துறையினர் மேலிடத்து நிர்ப்பந்தம் காரணமாக கைகட்டி வாய் பொத்தி வேடிக்கை பார்க்க வேண்டிய துர்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். ஒவ்வொரு தேர்தல் வருகின்ற போதும் வாடிக்கையாக தமிழ் நாட்டில் இது தான் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

இன்று தமிழ் நாடு என்ற மாநிலமே கருணாநிதி குடும்பத்தினரின் தனி ராஜ்ஜியம் போல் ஆகிவிட்டது. கருணாநிதியின் மகன் ஸ்டாலின் அதிகாரப்பூர்வமாகவே காத்திருக்கும் முதலமைச்சர் என்று அழைக்கப்படுகிறார். அவருடைய மூத்த மகன் அழகிரி தனக்குத் தானே தென் தமிழகத்தின் முதலமைச்சர் என்று பட்டம் சூட்டிக் கொண்டிருக்கிறார், முடிசூட்டிக் கொண்டிருக்கிறார். கருணாநிதி குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவருமே குறுநில மன்னர்கள் போல் நடந்து கொள்கிறார்கள். கருணாநிதியோ மாநில அரசு அதிகாரிகளோ அழகிரியின் ஒப்புதல் இன்றி தமிழ் நாட்டின் தென் மாநிலங்களில் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ள முடியாது.

இன்று கருணாநிதியின் மூன்றாவது மனைவியாகிய துணைவியின் மகள் கனிமொழியை டெல்லிக்கு தன்னுடைய சிறப்பு தூதராக, சர்வ வல்லமை படைத்த தூதராக அனுப்பி அங்கே நியமித்திருக்கிறார் கருணாநிதி. இன்னும் கருணாநிதியின் மற்ற பிள்ளைகள், பேரன்கள், பேத்திகள், உறவினர்கள் தமிழ் நாட்டின் வளங்களையெல்லாம் கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறார்கள். இத்தனை முக்கியமான காரியங்களுக்கெல்லாம் தலைமையேற்க வேண்டிய பொறுப்பு கருணாநிதிக்கு இருக்கும் போது, தமிழ் மக்களைப் பற்றியோ, தமிழ் மக்களுக்கு உள்ள பிரச்சினைகளைப் பற்றியோ, நாட்டு மக்களைப் பற்றியோ கருணாநிதி கவலைப்பட வேண்டும் என்று எதிர்பார்ப்பது நியாயமாகாது அல்லவா?

ஏற்கெனவே நான் சுட்டிக் காட்டியிருந்தேன். கருணாநிதி தனக்கு இருக்கிற செல்வாக்கை, தனக்கு இருக்கின்ற பிரம்மாஸ்திரத்தை தன்னுடைய குடும்பத்தினருக்கு சக்தி வாய்ந்த இலாகாக்களைப் பெற வேண்டுமென்றால் ஆதரவு வாபஸ் என்ற பிரம்மாஸ்திரத்தைப் பயன்படுத்த அவர் தயங்குவதில்லை. ஆனால் இலங்கையில் வாழும் தமிழ் மக்களின் பிரச்சினை என்று வரும் போது அவர் சென்னையில் உட்கார்ந்துகொண்டு அறிக்கைகள் விட்டுக் கொண்டிருக்கிறார். நான் இதையெல்லாம் தோலுரித்துக் காட்டும் போது தமிழர்களின் காவலன் என்ற கருணாநிதியின் முகமூடி கிழிக்கப்பட்டுவிடுகிறது. ஆகவே இதிலிருந்து தப்பித்துக்கொள்ள வெளியே வருவதற்காக நான் இலங்கைத் தமிழர்கள் குறித்த கொள்கையில் முன்னுக்குப் பின் முரணாகப் பேசிக் கொண்டிருக்கிறேன், அடிக்கடி மாறி மாறி பேசுகிறன் என்று கூறுகிறார், என்மீது குற்றம் சாட்டுகிறார்.

இலங்கைத் தமிழர்கள் பிரச்சினையில் என்னுடைய நிலைப்பாடு அனைவருக்கும் நன்கு தெரிந்த ஒன்று. இலங்கையில் வாழும் தமிழர்கள் சிங்கள மக்களோடு சம உரிமை பெற்று வாழ வேண்டும். சட்டத்தின் முன் சமநிலை, கல்வி நிலையங்களிலும், வேலை வாய்ப்பிலும் சமஉரிமை என்ற அவர்களுடைய நியாயமான கோரிக்கைகளை நாங்கள் அங்கீகரிக்கின்றோம், ஆதரிக்கிறோம். சுய நிர்ணயத்திற்காக இலங்கைத் தமிழர்கள் நடத்தும் போராட்டத்தை நாம் ஆதரிக்கின்றோம். இலங்கையில் இலங்கை அரசின் அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டு, இலங்கைக்கு உள்ளேயே தமிழர்களுக்காக ஒரு தனி நாடு வேண்டும் என்ற கோரிக்கையை நாங்கள் ஏற்கிறோம். ஆயுதம் ஏந்திய போராட்டத்தைத் தான் நாங்கள் எதிர்க்கிறோம். அதுவும் எதனால்? அந்த ஆயுதம் ஏந்திய போராட்டம் திசைமாறி, அதனால் ஆயிரக்கணக்கான ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் உயிரிழக்க நேரிட்டதால், கொல்லப்பட்டதால் அந்த திசை மாறிப் போன ஆயுதம் ஏந்திய போராட்டத்தைத் தான் நாங்கள் எதிர்க்கிறோம்.

இந்த ஆயுதம் ஏந்திய போராட்டத்தின் விளைவாக தமிழ் நாட்டு மண்ணில் முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ்காந்தி அவர்கள் படுகொலை செய்யப்பட்டார். அது எங்களுக்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. இந்த இரண்டையும் ஒன்றாக இணைத்து கருணாநிதி விஷயத்தை குழப்பப் பார்க்கிறார்.

தமிழ் நாட்டின் முதலமைச்சர் என்ற முறையிலும், மத்திய அரசில் முக்கிய அங்கம் வகிக்கும் தி.மு.க. கட்சியின் தலைவர் என்ற முறையிலும் நான் கருணாநிதிக்கு ஒரு ஆலோசனை கூறி இருந்தேன். கருணாநிதி நம்முடைய பிரதமர் மன்மோகன்சிங்கை நிர்பந்தித்து பிரதமர் இலங்கை அதிபரை தொடர்புகொண்டு தொலைபேசியிலாவது பேசி அங்கே இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று இலங்கை அதிபரோடு பிரதமர் பேச வேண்டும். அதற்கு கருணாநிதி பிரதமரை நிர்பந்திக்க வேண்டும், வலியுறுத்த வேண்டும் என்று ஆலோசனை கூறி இருந்தேன். இதற்கு பதில் அளிக்கும் வகையில் கருணாநிதி ஒரு மிக அற்புதமான அதிமேதாவித் தனமான ஒரு யோசனையை வெளிப்படுத்தினார்.

அதாவது, தமிழக மக்கள் அனைவரும் ஆயிரக்கணக்கான, லட்சக்கணக்கான தந்திகளை பிரதமர் அலுவலகத்திற்கு கொடுத்து பிரதமரை நிர்ப்பந்திக்க வேண்டும் என்று அறிவித்தார். தமிழக மக்கள் கருணாநிதியின் இந்தக் கட்டளையை ஏற்கவும் இல்லை, அதை பின்பற்றவும் இல்லை என்பதைக் கருணாநிதி உணர்ந்த போது, மத்திய கூட்டணி அரசில் இருந்து விலக வேண்டும் என்ற அவசியம் ஏற்பட்டால் அதையும் செய்ய நாங்கள் தயார் என்று திடீரென்று கருணாநிதி அறிவித்தார். தன்னுடைய செல்ல மகள் கனிமொழியிடமிருந்தும், அனைத்து தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்களிடமிருந்தும் ராஜினாமா கடிதங்களை கருணாநிதியே பெற்றுக் கொண்டார். ஆனால் நாடாளுமன்ற மக்கள் அவைத் தலைவருக்கோ, மாநிலங்கள் அவைத் தலைவருக்கோ கருணாநிதி அந்த ராஜினாமா கடிதங்களை அனுப்பவில்லை. அதற்கு பதிலாக கருணாநிதி, தானே விதித்த கெடுவான கடைசி தேதியை முடிய விட்டுவிட்டு அதன் பின்னர் அந்த ராஜினாமா கடிதங்களை சத்தமின்றி அவரே கிழித்துப் போட்டுவிட்டார்.

கடந்த 2004 மே மாதத்தில் கருணாநிதி நேரில் டெல்லிக்குச் சென்று மத்திய அமைச்சரவையில் அமைச்சர்களாகும் வாய்ப்பு பெற்றிருந்த 7 தி.மு.க. எம்.பிக்களைப் பார்த்து டி.ஆர். பாலுவுக்கு கப்பல் போக்குவரத்துத் துறை அந்த இலாகா ஒதுக்கப்படும் வரை இந்த 7 தி.மு.க. எம்பிக்களும் தங்களுக்கு வழங்கப்பட்டிருந்த அமைச்சர் பொறுப்பை ஏற்கக் கூடாது என்று கட்டளையிட்டார்.

கப்பல் போக்குவரத்துத் துறை என்றால் அதிகப் பணம் ஈட்டும் துறை. அதனால் அது கருணாநிதிக்கு இன்றியமையாத அவசியத் துறையாக தென்பட்டது. அந்த நேரத்தில், தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியின் தலைவர் திரு. சந்திரசேகர்ராவ் அவர்கள் விநோதமாக தானே அந்த கப்பல் போக்குவரத்துத் துறை இலாகாவை விட்டுக் கொடுத்து, அதை டி.ஆர். பாலுவுக்கு கொடுத்துவிட்டார். அதனால் தான் மத்திய ருஞஹ அரசு அமைக்கப்பட்ட சில நாட்களிலேயே அது கவிழாமல் காப்பாற்றப்பட்டது.

ஆக, தன்னுடைய சுயநலம் என்றால் கருணாநிதியால் மத்திய அரசை மிரட்ட முடிகிறது. அமைச்சர்கள் பொறுப்பேற்க மாட்டார்கள், ஆதரவை வாபஸ் பெறுவோம் என்றெல்லாம் மிரட்ட முடிகிறது. ஆனால் தமிழ் மக்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினை என்றால், இலங்கைத் தமிழ் மக்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினை என்றால் அவர் பொது மேடையில் இருந்து முழங்குவார். மக்களை பிரதமருக்கு தந்தி அனுப்பச் சொல்லுவார். இல்லையென்றால் தமிழ் நாடு சட்டமன்றப் பேரவையில் தீர்மானங்களை நிறைவேற்றுவார். இது தான் தமிழ் மக்கள் மீது கருணாநிதிக்கு இருக்கின்ற அக்கறை.

அண்மையில் தமிழ் திரைப்பட இயக்குநர்கள் சீமான், அமீர் ஆகியோர் இந்திய இறையாண்மைக்கு எதிரான பேச்சுக்களை பேசியதற்காக கைது செய்யப்பட்டார்கள். அவர்கள் கருணாநிதி தூண்டுதலால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது இவ்வாறு பேசினார்கள்.

இந்த இரண்டு திரைப்பட இயக்குநர்களையும் கைது செய்வதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாகத் தான் கருணாநிதி துவக்கி வைத்த மனித சங்கிலி போராட்டத்தில் இருவரும் கலந்து கொண்டார்கள். ஆக, இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால், சீமான், அமீர் ஆகிய இருவரும் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் கருணாநிதியின் ஒப்புதலோடும், ஆசியோடும் தான் பேசப்பட்டது. அந்தப் பேச்சுக்கள் தான் இன்று அவர்களை பெரிய சிக்கலில் மாட்டிவிட்டிருக்கிறது. ஆனால் கருணாநிதி தூண்டுதலின் பேரில் தான் அவர்கள் பேசினார்கள். அதன் பின்னர் அந்த இரண்டு இயக்குநர்களும் விடுதலை செய்யப்பட்டார்கள். ஆனால் மீண்டும் சீமான் கைது செய்யப்பட்டு, தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். இதில் நாம் கவனிக்க வேண்டிய விஷயம் இது தான். சீமான் என்னென்ன பேசினாரோ அத்தனையும் கருணாநிதியும் பேசியிருக்கிறார். சீமான் என்னென்ன வார்த்தைகளைக் கூறினாரோ அத்தனையும் கருணாநிதியும் முழங்கியிருக்கிறார். ஆனால் இன்று சீமான் சிறையில் இருக்கிறார். கருணாநிதியோ தலைமைப் பீடத்தில் முதலமைச்சராக உட்கார்ந்துகொண்டு அனைவரையும் ஆட்டிப்படைக்கிறார். இது என்ன விநோதம்?

இலங்கையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் சண்டையில் ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்கள் இடம்பெயர்ந்திருக்கிறார்கள். இன்று அவர்கள் வாழ்வதற்கு வீடு இன்றி சொந்த நாட்டிலேயே அகதிகளாக அல்லல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். உணவு இன்றி, மருந்துகள் இன்றி, தங்க இடமின்றி அவர்கள் இன்று அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். பெரும்பாலும் பெண்களும், குழந்தைகளும் தான் இந்த அவல நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். பல மாத காலமாக இந்த சூழ்நிலை தான் இலங்கையில் நிலவுகிறது.

பிரதமருக்கு ஆயிரக்கணக்கில், லட்சக்கணக்கில் தந்திகள் அனுப்புவதினாலும் அல்லது ஹை கமிஷனில் கீழ்மட்ட அதிகாரி ஒருவரை கடிந்து கொள்வதினாலும் இலங்கையில் துன்பப்பட்டுக் கொண்டிருக்கும் தமிழர்களுக்கு எந்தவித பிரயோஜனுமும் இல்லை. இந்தியாவில், மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களும், தமிழ் நாட்டில் மாநில அரசின் அதிகாரத்தில் இருப்பவர்களும் அல்லல்பட்டுக் கொண்டிருக்கும், துன்பப்பட்டுக் கொண்டிருக்கும், துயரப்பட்டுக் கொண்டிருக்கும் இலங்கைத் தமிழர்கள்பால் கொஞ்சமாவது அக்கறை செலுத்தி இருக்க வேண்டாமா, காட்டியிருக்க வேண்டாமா? இந்திய அரசாங்கம் உடனடியாக அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் இலங்கைத் தமிழர்களுக்காக உணவையும், மருந்துகளையும், ஆடைகளையும் அனுப்பியிருக்க வேண்டாமா? இத்தகைய உடனடி நடவடிக்கை எடுக்கத் தவறியதைத் தான் இந்திய அரசின் மாபெரும் தோல்வி என்று நான் சுட்டிக் காட்டுகிறேன். இது தான் தமிழக அரசின் தோல்வி என்றும் நான் குற்றம் சாட்டுகிறேன். அதனால் தான் மன்மோகன்சிங் அவர்களின் கீழ் உள்ள மத்திய அரசும், கருணாநிதியின் கீழ் உள்ள தமிழக அரசும், மைனாரிட்டி தி.மு.க. அரசும் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கின்றன. இவர்களுக்கு உண்மையில் இலங்கைத் தமிழர்கள் மீது எந்த அக்கறையும் இல்லை என்று நான் குற்றம் சாட்டுகிறேன்.

இன்று நாம் அனைவரும் உண்ணாவிரதம் இருப்பதனால் பசியால் வாடிக் கொண்டிருக்கும் இலங்கைத் தமிழர்களின் வயிறு நிரம்பப் போவதில்லை. இந்த உண்ணாவிரத அறப் போட்டம் ஒரு அடையாளம் தான். இந்த அறப் போராட்டத்தின் மூலமாக தமிழ் நாட்டில் உள்ள மைனாரிட்டி தி.மு.க. அரசுக்கும், மத்தியில் உள்ள காங்கிரஸ் தலைமையிலான ருஞஹ அரசுக்கும் இலங்கையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் கொடூர சம்பவங்களைக் கண்டு தமிழ் நாட்டு மக்கள் மிகவும் கவலை கொண்டிருக்கிறார்கள் என்பதை தெரியப்படுத்த விரும்புகிறோம்.

மத்திய அரசும், மாநில அரசும் இலங்கைத் தமிழர்கள் பிரச்சினை குறித்து எவ்வித அக்கறையும் காட்டாததைக் கண்டு தமிழக மக்கள் கொதித்துப் போயிருக்கிறார்கள் என்பதை அவர்களுக்கு எடுத்துக்காட்டவே இந்த அறப் போராட்டத்தை நாம் நடத்திக் கொண்டிருக்கிறோம்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் துன்பப்பட்டுக் கொண்டிருக்கும் இலங்கைத் தமிழர்களுக்காக நிதி திரட்ட நான் உத்தேசித்துள்ளேன். இதற்காக இன்று தமிழ் நாடு முழுவதும் இந்த உண்ணாவிரத அறப் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் அனைத்து இடங்களிலும் உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன. இன்று நான் இந்த நிதி திரட்டும் பணியை துவக்கி வைக்கும் வகையில் எனது சொந்த நிதியில் இருந்து ஐந்து லட்சம் ரூபாயை இந்த உண்டியலில் செலுத்தி இருக்கிறேன். நீங்கள் அனைவரும் உங்களால் இயன்ற நிதியுதவியை தாராளமாக வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இந்த நேரத்தில் இந்த உண்ணாவிரத அறப் போராட்ட மேடையில் இருந்து தி.மு.க. அரசுக்கும், காங்கிரஸ் தலைமையிலான ருஞஹ அரசுக்கும் ஒரு எச்சரிக்கை விடுக்கிறேன். சிலரை பல காலம் ஏமாற்றலாம், பலரை சில காலம் ஏமாற்றலாம், ஆனால் எல்லோரையும் எல்லா நேரத்திலும் ஏமாற்ற முடியாது. இதுவரை மக்களை ஏமாற்றுவதில் நீங்கள் வெற்றியடைந்துவிட்டதாக நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள். ஒரு அசட்டு தைரியத்தில் மீண்டும் கூட்டணி சேர்ந்திருக்கிறீர்கள். உங்கள் அசட்டு தைரியத்திற்கு நடைபெறப் போகும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழக மக்கள் சம்மட்டி அடி கொடுக்க இருக்கிறார்கள் என்பதை கூடிய விரைவிலேயே தி.மு.க-வும், காங்கிரஸ் கட்சியும் உணரும் என்பதை மட்டும் சொல்லிவிட்டு, அவர்களுக்கு உண்மை நிலையை, எதார்த்த நிலையை உணர்த்த வேண்டிய மாபெரும் பொறுப்பு உங்களிடத்திலே உள்ளது என்பதை சுட்டிக்காட்டி, தேர்தலில் உங்கள் ஜனநாயகக் கடமையை நீங்கள் சரியான முறையில் ஆற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ள உங்கள் அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக்கொண்டு,

அண்ணா நாமம் வாழ்க,

புரட்சித் தலைவர் நாமம் வாழ்க,

என்று கூறி விடை பெறுகிறேன். நன்றி வணக்கம்.

http://www.4tamilmedia.com/index.php?optio...&Itemid=267

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.