Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எரிவதைப் பிடுங்கினால்தான் கொதிப்பது அடங்கும்

Featured Replies

லசாந்த படுகொலையிலிருந்து முள்ளிவாய்க்கால் பயங்கரம் வரை சர்வதேச அரங்கில் ராஜபட்சேக்களைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்துவதற்கான வலுவான ஆதாரங்கள் எக்கச்சக்கமாய் இருக்கின்றன. உலகின் எந்த இனவெறியனுக்கு எதிராகவும் இவ்வளவு ஆதாரங்கள் கிடைத்ததில்லை. ஆனால் இவ்வளவு ஆதாரங்கள் இருப்பது தெரிந்தும், தங்களைத் திசைதிருப்பப் பரப்பப்படும் வதந்திகளால் தடுமாறுகிறது தமிழ்ச் சமூகம்.

ஆம்புலன்ஸில் தப்பமுயற்சித்தபோது சுட்டோம், நந்திக் கடலில் உடல் கிடைத்தது, எரித்துவிட்டோம், கடலில் கரைத்துவிட்டோம், கோடாரியால் வெட்டினோம்........ என்பதெல்லாம் 100 வீதம் உடான்ஸ். எதற்கு இப்படிப் பொய்சொல்லவேண்டும்? இப்படியெல்லாம் புதிய புதிய வதந்திகளைக் கிளப்பி விட்டுக்கொண்டே இருந்தால் தான், அதி புத்திசாலிகளான நாம் அதைப் பற்றியே கவலைப்பட்டுக் கொண்டிருப்போம். இருக்கிற ஆதாரங்களை ஆவணப்படுத்தி, ராஜபட்சேவைக் கூண்டில் ஏற்றும் வேலையை அடியோடு மறந்துவிடுவோம். இதைத்தான் எதிர்பார்த்தது இலங்கை. அதைத்தான் செய்கிறோம் நாம்.

எனவே, ராஜபட்சேக்களைக் கூண்டில் ஏற்றும் முயற்சியில் இளையோர் அதிலும் குறிப்பாக மாணவர்கள் முழுமூச்சோடு இறங்கவேண்டும். கொலைவெறி அடங்காத ராஜபட்சேக்களுக்குக் கிடுக்கிப்பிடி போட்டால்தான், அவர்களுக்கு சர்வதேச அரங்கில் தண்டனை நிச்சயம் என்கிற நிலையைச் சந்தேகத்துக்கு இடமில்லாமல் ஏற்படுத்தினால்தான், கொதிப்பது அடங்கும்.

அவர்களை ஆத்திரப்படுத்துவதைவிட அம்பலப்படுத்துவதுதான் இப்போதைக்கு முக்கியம். இப்படியொரு நிலையை உருவாக்க முயலும்போது இதற்கு என்னென்ன விதத்திலெல்லாம் முட்டுக்கட்டைகள் போடப்படும் என்று முதலிலேயே ஆலோசிப்பதும் அதை எப்படிச் சமாளிப்பதென்று முன்கூட்டியே தீர்மானிப்பதும் அவசியம்.

சர்வதேச அரங்கில் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்படுவதற்கான சகல 'தகுதி'களும் ராஜபட்சேக்களுக்கு இருக்கிறது. அந்தக் கூண்டில் நிறுத்தப்பட்டால், தண்டனையிலிருந்து அவர்களால் தப்பிக்கவே முடியாது. அதனால்தான், அந்தக் கூண்டில் நிறுத்தப்படுவதைத் தடுக்க தனக்கு முட்டுக்கொடுக்கும் நாடுகளின் காலில் தட்டுத்தடுமாறி விழுந்து எழுந்துகொண்டிருக்கிறார்கள் "இந்தியாவின் போரை நடத்தியவர்கள்".

குற்றவாளிக் கூண்டில் அவர்களை நிறுத்தியபிறகு செய்யவேண்டிய வேலைகளை இப்போதே பட்டியலிட முடியும். ஆனால், இப்போதைக்கு நாம் தாமதமின்றிச் செய்யவேண்டியது, குற்றவாளிக் கூண்டில் அவர்களை நிறுத்தத் தேவையான வேலைகளைத்தான். குற்றவாளிக் கூண்டில் ராஜபட்சேக்களை ஏற்ற, சர்வதேச சமூகத்தை அணுகுவதற்குமுன், உலகெங்கும் சிதறிக்கிடக்கிற தமிழ்ச் சமூகத்தை அணுகுவது அவசியம்.

அந்தப் பணியையும் கூட தமிழ் மாணவர்களே முன்னெடுப்பது நல்லது. ஐரோப்பிய நாடுகளிலும், பிரிட்டன், கனடா, தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட அயல்நாடுகளிலும் வசிக்கும் புலம் பெயர்ந்த மாணவர்கள் உடனடியாகக் கூடிப்பேசி, ஒரு குறிப்பிட்ட நாளில் உலகெங்கும் மனிதச் சங்கிலி அமைப்பதென்று தீர்மானிக்கலாம். (போராட்டத்தின் வடிவம் வேறுமாதிரியாகவும் இருக்கலாம். அது ஜனநாயக முறைப்படி கலந்துபேசி எடுக்கப்படவேண்டிய முடிவு.)

போர்க்குற்றங்களுக்காக ராஜபட்சேக்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற கோரிக்கைக்கு உலகெங்கும் ஆதரவு திரட்டும் தூதுக்குழு ஒன்றையும் அவர்கள் அமைக்கவேண்டும். அந்தத் தூதுக்குழுவில், மாணவர்களும் மாணவிகளும் சம எண்ணிக்கையில் இடம்பெறவேண்டும். அந்தத் தூதுக்குழு தனது பணியைத் தமிழகத்திலிருந்தே தொடங்கலாம்.

தமிழகத்துக்கு வருகிற மாணவர்கள் தூதுக்குழு, முதலில் முதல்வர் கலைஞரையும்,அடுத்ததாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவையும், அதைத் தொடர்ந்து மற்ற அரசியல் கட்சித் தலைவர்களையும் சந்தித்துப் பேசலாம். ராஜபட்சேக்களைக் கூண்டிலேற்று என்கிற ஒற்றைக் கோரிக்கையுடன், இரவு-பகல் என்கிற வித்தியாசமெல்லாம் பார்க்காமல் ஒரே நாளில்-ஒரே சமயத்தில் உலகமெங்கும் மனிதச் சங்கிலி நடத்தத் தீர்மானித்திருப்பதை அவர்களிடம் எடுத்துச் சொல்லலாம்.

அதற்குத் தேவையான ஆவணங்களைக் காட்டுவதன்மூலம், அவர்களது ஆதரவை நிச்சயமாகப் பெறமுடியும். தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக, அவரை ஏன் பார்க்கவேண்டும், இவரை ஏன் பார்க்கவேண்டும், அவர் வந்துவிடுவாரா, இவர் வந்துவிடுவாரா என்றெல்லாம் கேள்வி எழுப்பும் அதிமேதாவிகளை அலட்சியப்படுத்தி அனைவரையும் சந்திப்பது மிக மிக முக்கியம். அந்த மனிதச் சங்கிலிக்கு தாய்த் தமிழகத்தில் அனைத்துத் தரப்பினரின் ஆதரவையும் உறுதி செய்தபிறகு, உலகெங்கும் பயணம் செய்து அந்தத் தூதுக்குழு ஆதரவு திரட்டலாம்.

செல்லும் இடமெல்லாம் அவர்களை வரவேற்க ஊரே கூடியிருக்கும். உலகெங்கிலும் மட்டுமல்ல, சென்னையிலும் அவர்களுக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க வரவேற்பு கிடைக்கும். அன்றைய தினம் சென்னையில் அந்தத் தூதுக்குழுவை வரவேற்க, தமிழகம் முழுவதிலுமிருந்து மாணவர்கள் திரளுவார்கள் என்று இப்போதே சொல்கிறேன்.... எழுதிவைத்துக் கொள்ளுங்கள்.

இந்த விஷயத்தை மாணவர்கள்தான் முன்னெடுக்கவேண்டும் என்று மீண்டும் மீண்டும் குறிப்பிடுவதற்கு ஒரு வலுவான காரணம் இருக்கிறது. பழைய ஆசாமிகள் காகிதப் புலிகளாகவும் காமெடி எலிகளாகவும் மாறிவிட்டபிறகு, உலக வீதிகளில் எங்கள் தேசியத் தலைவர் பிரபாகரன் என்கிற பதாதைகளுடன் துணிவுடன் வலம் வந்தவர்கள் இந்த இளைய புலிகள்தான்.

ராஜபட்சேக்களைக் கூண்டிலேற்று என்கிற தமிழ் மாணவர்களின் கோரிக்கையுடன் இரவென்றும் பகலென்றும் பாராமல் உலகம் முழுக்க ஒரே சமயத்தில் கோடானுகோடித் தமிழர்கள் கை கோத்து நிற்பது உலகின் மனசாட்சியை உலுக்கும், ராஜபட்சேவின் அலரி மாளிகையைக் குலுக்கும், ராஜபட்சேக்களுக்கும் குற்றவாளிக் கூண்டுகளுக்கும் இடையே அமைக்கப்பட்டுள்ள முட்டுக்கட்டைகளைத் தகர்க்கும். அதற்குப் பிறகு மவுண்ட் ரோடு மகாவிஷ்ணுக்களாலோ அக்பர் ரோடு அக்காக்களாலோ கூட மகிந்த ராஜபட்சேவைக் காப்பாற்றமுடியாது.

இப்படியொரு வரலாற்றுச் சிறப்புமிக்க மனிதச் சங்கிலியை அமைக்க உலகெங்கிலும் இருக்கும் எங்கள் தமிழ் இளையோராலும் மாணவர்களாலும் நிச்சயமாக முடியும். ஒட்டுமொத்தத் தமிழினத்தையும் கைகோத்து நிற்கவைப்பதற்கான தகுதியும் உறுதியும் இந்தப் பொடியன்களுக்கு இருக்கிறது. தங்களுக்காக தாயகக் களத்தில் உயிர்நீத்த ஆயிரமாயிரம் மாவீரர்களை மனத்தில் சுமந்துகொண்டிருக்கும் இந்த இளைய தலைமுறைக்கு, இப்படியொரு வரலாற்றைப் படைக்கவேண்டிய கடமயும் இருக்கிறது.

சர்வதேச அரங்கில், போர்க் குற்றவாளியாக ஒரு சிங்கள இனவெறியன் அல்லது வெறியர்கள் நிறுத்தப்படும் போதுதான், இலங்கையின் ஆணவமும் அராஜகமும் அடக்குமுறை மற்றும் ஒடுக்குமுறையும் அடங்கும். அப்படியொரு நிலையில், எப்படியெல்லாம் தமிழினத்தை நசுக்கலாம் என்று யோசிக்கக்கூட நேரமின்றி, எப்படித் தங்களைக் காப்பாற்றிக்கொள்வது என்று யோசிப்பதற்கு மட்டுமே ராஜபட்சே கும்பலுக்கு நேரமிருக்கும்.

ஒட்டுமொத்த சிங்கள வெறியர்களின் நச்சுப்பல் பிடுங்கப்படும். அதன்மூலம் முகாமுக்குள்ளேயே முடிந்து போக இருக்கும் 3 லட்சம் தமிழர்களின் மூச்சுக்காற்று உயிர்த்தெழும். அவர்களைப் பேணிப் பாதுகாக்கவேண்டிய நிலை ராஜபட்சேவுக்கு ஏற்படும். ஆக, எரிவதைப் பிடுங்கினால் தான் கொதிப்பது அடங்கும்.

ராஜபட்சேவை ஆத்திரப்படுத்தாதீர்கள் என்று சொல்வது அர்த்தமற்றது என்பதை, அப்படிச் சொல்பவர்களுக்கு முதலில் எடுத்துச் சொல்லவேண்டியது அவசியம்தான். அதே சமயம், நம்மீதான அக்கறையில்தான் அவர்கள் அப்படிச் சொல்கிறார்கள் என்பதை நினைவில் வைத்திருக்கவேண்டும். அவர்கள் கையையும் பற்றியபடிதான் மனிதச் சங்கிலி அமைக்க முடியும்.

இதையெல்லாம் எடுத்துரைக்க எழுத்தைப் பயன்படுத்தாமல், இறக்காதவர்களுக்குக்கூட இறப்புச் சான்றிதழ் எழுதி புழுதி கிளப்பிக் கொண்டிருப்பவர்கள் இனியாவது உருப்படியான வேலைகளில் இறங்குவார்களாக! எவருக்கும் துதி பாடுவது எனது நோக்கமல்ல என்று சொல்லிக்கொண்டே துதி பாடுவது சுமந்த வயிற்றுக்கும் அழகல்ல, சுமக்கும் மண்ணுக்கும் அழகல்ல.

மனிதாபிமான நடவடிக்கைகளை எவ்வாறு முன்னெடுப்பது என்பதை உலகுக்கே எடுத்துக் காட்டியுள்ளோம் என்று ராஜபட்சே குறுக்குசால் ஓட்ட முயல்வது, இலக்கை விட்டுவிட்டு உலக்கை போட்டுக்கொண்டிருக்கும் சிலரது அறியாமையால் தான்.

எனவே, துளியும் தாமதமின்றி அடுத்த கட்டத்துக்கு நகர்வோம். நச்சு எலிகள் தப்பிக்கவே முடியாதபடி கிடுக்கிப்பிடி போட்டுப் பிடிப்போம். அதற்காக, மனிதச் சங்கிலியோ,, அதைவிட மகத்தான பணியோ... எதுவாயிருந்தாலும் அவற்றில் அளவுகடந்த ஈடுபாடு காட்டுவோம். நமது எழுச்சி, எதிர் நிலையில் இருப்போரைக்கூட நம்முடன் இணைந்துகொள்ளச் செய்யும்.

பெரியகுளத்துக் கவிஞன் மு.மேத்தா சொன்னதைப் போல்,

நம்பிக்கை நார் மட்டும் நம் கையில் இருந்தால்

உதிர்ந்த மலர்கள்கூட

ஒவ்வொன்றாய் வந்து ஒட்டிக்கொள்ளும்!

கண்ணீரைத் துடைத்து எறிந்துவிட்டுஇ உறுதியோடும் நம்பிக்கையோடும் ஓர் உண்மையான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல ஒவ்வொருவரும் முன்வருவோம்.

வாகரை முதல் முள்ளிவாய்க்கால் வரை

நம் சொந்தங்களை ரத்தம் சிந்தவைத்த

நச்சுப் பாம்புகளை நையப்புடைப்போம்....

ரத்தம் குடித்த ராஜபட்சிகளை

சர்வதேச கூண்டில் ஏற்றுவோம்....

இறக்கை என்பது இயற்கையின் எல்லை,

இயலாதென்று முயலாதவர்கள்

இறக்கை இருந்தும் பறப்பது இல்லை.

முத்துக்குமாரின் நினைவோடு

ஒட்டுமொத்த உலகத்தையும்

திரும்பிப் பார்க்கவைத்த

எங்கள் இளையோரின் அகராதியில்

இயலாது என்ற வார்த்தையே இருக்க இயலாது.

அந்தப் பொடியன்களின் தலைமையில்

உலகத் தமிழினத்தைக் கைகோக்க வைப்போம்....

களங்கத்தைத் துடைப்போம்... வரலாறு படைப்போம்!

ராஜபட்சேக்களைக் கூண்டில் ஏற்றுவதுதான், கம்பிவேலிகளுக்குப் பின்னால் கண்ணீருடன் நிற்கும் எங்கள் சொந்தங்களுக்கு விடுதலை வாங்கித் தரும். ராஜபட்சேக்கள் உள்ளே போகிறவரை, எங்கள் சொந்தங்கள் வெளியே வரமுடியாது என்பதை மனத்தில் நிறுத்தி,இன்றே இப்போதே களத்தில் இறங்குவோம்.

தமிழ்க்கதிருக்காக,

காற்றுக்கென்ன வேலி திரைப்பட இயக்குநர்

- புகழேந்தி தங்கராஜ்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.