Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர்களை உலகம் கைவிட்டது ஏன்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களை உலகம் கைவிட்டது ஏன்?

பழ. நெடுமாறன்

"விதியே, விதியே, தமிழ்ச் சாதியை என் செய நினைத்தாய் எனக்குரை யாயோ?' என பாரதி சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் மனம்வெதும்பிப் பாடியதற்கான சூழ்நிலைகளும் நிகழ்ச்சிகளும் இந்த நூற்றாண்டின் தொடக்கம் வரையிலும் கூட நீடிக்கின்றன.

நூறாண்டு காலம் முடிந்த பிறகும்கூட தமிழ்ச் சாதியின் துயரம் தீரவில்லை. மாறாக மேலும் மேலும் பெருகிக்கொண்டே இருக்கிறது.

இலங்கையில் நடந்து முடிந்த போரில் சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் பதைக்கப் பதைக்கப் படுகொலை செய்யப்பட்டனர். மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் மின்வேலி முகாம்களுக்குள் அடைக்கப்பட்டு சொல்லொணாத சித்திரவதைகளுக்கு ஆளாகி வருகின்றனர்.

குறைந்தபட்ச அடிப்படைத் தேவைகளும் சுகாதார வசதிகளும் இல்லாத முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள தமிழர்களை சிங்கள ராணுவம் மட்டுமல்ல, இயற்கையும் கொடுமைக்கு உள்ளாக்கியுள்ளது.

கடந்த சில நாள்களாகப் பெய்து வரும் பருவ மழை காரணமாக மற்றொரு மனிதப் பேரவலம் தமிழர்களைச் சூழ்ந்திருக்கிறது.

கூடாரங்களுக்குள்ளும் வெளியிலும் பெரும் வெள்ளம் புகுந்து கொண்டதால் அதற்குள் இருக்க முடியாத நிலையில் கொட்டும் மழையிலும் நடுக்கும் குளிரிலும் நோயாளிகள், குழந்தைகள் உள்பட அனைவரும் மழையில் நனைந்தவண்ணம் தவிக்கிறார்கள். கடும் மழை தொடர்வதால் முகாம்களில் உள்ளவர்களுக்குக் கடந்த சில நாள்களாக உணவும் வழங்கப்படவில்லை. வெள்ளத்திலிருந்தும் மழையிலிருந்தும் தப்பித்து வெளியேறுவதற்கு முயற்சி செய்த மக்களை சிங்களப்படையினர் சுற்றி வளைத்துத் தடுத்துத் தப்பிப்பதற்கு முயற்சி செய்பவர்கள் சுடப்படுவார்கள் என எச்சரித்துள்ளதாகச் செய்திகள் கூறுகின்றன.

போர் முடிந்துவிட்டது என்று அறிவித்த பின்னரும் அப்பகுதிக்குப் பத்திரிகையாளர்களையும் மற்ற ஊடகங்களையும் சிங்கள அரசு அனுமதிக்காததை சர்வதேசப் பொதுமன்னிப்பு சபை மிகக் கடுமையாகக் கண்டித்துள்ளது.

மற்றொரு கடுமையான குற்றச்சாட்டையும் சர்வதேசப் பொது மன்னிப்பு சபை கூறியுள்ளது. முள்ளிவாய்க்கால் பகுதியில் பல்லாயிரக்கணக்கான அப்பாவித் தமி ழர்கள் சிக்கியிருந்த பகுதிகளுக்கு அருகில் பீரங்கி நிலைகள் அமைக்கப்பட்டிருந்ததைக் காட்டும் சான்றுகள் செயற்கைக்கோள் படங்களில் காணப்படுவதாகவும் இப்பகுதியில் சிங்கள ராணுவம் தாக்குதலைத் தீவிரப்

படுத்துவதற்கு முன்பாக ஏப்ரல் 19-ம் தேதி எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் படங்களில் இடுகாடு எதுவும் காணப்படவில்லை என்றும், ஆனால் போர் முடிவடைந்த பிறகு மே 24-ம் தேதி எடுத்த படத்தில் அந்தப் பகுதியில் 1346 சவக்குழிகள் இருப்பதைக் காண

முடிகிறது என்றும், ஒவ்வொரு சவக்குழியிலும் நூற்றுக்கணக்கான உடல்கள் புதையுண்டு கிடப்பதாகவும் சர்வதேசப் பொதுமன்னிப்பு சபை மிகக் கடுமையான குற்றச்சாட்டைக் கூறியுள்ளது.

ஐ.நா. பேரவையோ அல்லது உலக நாடுகளோ இந்தக் கொடுமைகளைத் தடுத்து நிறுத்தவும் குறைந்தபட்சம் ஏன் என்று கேட்கவும்கூட முன்வரவில்லை என்பது அதிர்ச்சிகரமான உண்மையாகும்.

இன்றைய மனித உரிமை மீறல்கள் நாளைய அகதிகள் உருவாக்கத்திற்கு அடிப்படை என்ற உண்மையை உலகம் உணரத் தவறியது ஏன்?

ஐ.நா. அமைப்பு: இரண்டாம் உலகப்போரின்போது பல்வேறு நாடுகளில் அகதிகள் உருவானார்கள். எனவே இதுபற்றி ஆராய்ந்த ஐ.நா. பேரவை ஐ.நா. அகதிகள் ஆணையர் ஒருவர் தலைமையில் அமைப்பு ஒன்றை உருவாக்குவதென முடிவு செய்தது.

அப்படி உருவாக்கப்பட்ட அமைப்புதான் மசஏஇத ஆகும். 1951-ம் ஆண்டு ஜனவரி முதல் தேதியன்று இந்த அமைப்பு செயல்படத் தொடங்கிற்று. உலகெங்கும் எந்த நாட்டில் அகதிகள் உருவானாலும் அவர்களுடைய துயரம் துடைக்கும் பணியில் இது முழுமையாக ஈடுபட்டது. இதற்கான பட்டயத்தில் 125 நாடுகள் கையெழுத்திட்டன.

ஆனால் இந்தியாவும் இலங்கையும் இந்தப் பட்டயத்தில் கையெழுத்திடவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

உலகம் முழுவதிலுமுள்ள பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அகதிகளை ஐ.நா. அகதிகள் ஆணையம் பராமரிப்பதை உலகம் ஏற்றுக்கொண்டிருக்கிறது. அந்த ஆணையத்தின் வழிகாட்டுதல்களை எந்த நாடும் மீறுவதில்லை. ஆனால் இந்தியாவும் இலங்கையும் மட்டுமே ஐ.நா. அகதிகள் ஆணையம் தங்கள் நாடுகளில் உள்ள அகதிகள் பிரச்னையில் தலையிடுவதை அனுமதிக்க மறுத்து வருகின்றன.

1948-ம் ஆண்டு ஐ.நா. பேரவை வெளியிட்ட மனித உரிமைகளுக்கான உலகப் பிரகடனம் மிகமிக முக்கியமானதாகும். சொந்த நாட்டில் வாழ இயலாத நிலையில் அன்னிய நாடுகளில் அடைக்கலம் புகுவது சட்டரீதியாக ஏற்கத்தக்கது என மனித உரிமை குறித்த உலகப் பிரகடனம் தெளிவாகக் குறிப்பிடுகிறது.

அடைக்கலம் புகுந்த நாட்டில் உள்ள மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளும் சுதந்திரமும் அகதிகளுக்கும் உண்டு என்பதை இந்தப் பிரகடனம் வலியுறுத்துகிறது. ஆனால் ஐ.நா. பட்டயத்தில் கையெழுத்திடாத இந்தியாவும் இலங்கையும் தமிழ் அகதிகளை ஐ.நா. பிரகடனங்களுக்கு எதிராக நடத்துகின்றன.

இரு நாடுகளிலும் உள்ள தமிழ் அகதிகள் உரிமைகளை இழந்து போதுமான அளவுக்கு உணவு மற்றும் உதவிகள் இல்லாமல் தவிக்கும் அவல நிலையை உலகம் அறிந்துவிடக் கூடாது என்பதற்காகத் திட்டமிட்டு ஐ.நா. அமைப்பின் தலையீட்டை இந்நாடுகள் அனுமதிக்கவில்லை.

இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ள பல்வேறு நாட்டு அகதிகளைத் தனது சொந்த விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்ப இந்திய அரசு நடத்துகிறது. இதையும் உலகம் தட்டிக் கேட்கத் தவறியது ஏன்?

இந்தியாவில் அடைக்கலம் புகுந்த திபெத் அகதிகள் சுதந்திரமாக நடமாடவும் சொந்தமாகத் தொழில் வணிகம் புரியவும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உதவிகள் புரிய அன்னிய நாடுகளும் தொண்டு நிறுவனங்களும் அனுமதிக்கப்பட்டுள்ளன.

இதன் விளைவாக இந்தியாவில் அவர்களின் குடியிருப்புகள் வழிபடு தளங்கள், பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள் போன்றவை சகல வசதிகளுடன் அமைக்கப்பட்டு அவர்களின் வாழ்வு மேம்பாடு அடைந்துள்ளது.

அதைப்போல இந்தியாவுக்கு வந்து சேர்ந்த வங்க அகதிகள் நடுவே தொண்டாற்றுவதற்கு அன்னை தெரசா தலைமையிலான தொண்டு நிறுவனம் அனுமதிக்கப்பட்டது. வேறு பல நாடுகளும் உதவிகள் புரிந்தன. இந்தியாவில் உள்ள பல்வேறு மாநில அரசுகளும் வங்க அகதிகளுக்கு உதவுவதற்காக மக்களிடம் நிதி திரட்டி அளித்தன. எல்லாவற்றுக்கும் மேலாக வங்க அகதிகள் அந்தமான் -நிக்கோபார் தீவுகளில் குடியேற்றப்பட்டு விவசாயம் செய்வதற்கு நிலமும் வீடுகட்ட உதவியும் வழங்கப்பட்டு அவர்கள் மிக நல்ல நிலைமையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் இத்தகைய உதவிகள் எதுவும் இலங்கையில் இருந்து இந்தியாவில் தஞ்சம் புகுந்த அகதிகளுக்கு வழங்கப்படுவது இல்லை. மற்ற நாடுகளோ, உலகத் தொண்டு நிறுவனங்களோ அவர்களுக்கு உதவவும் இந்தியா அனுமதிப்பதில்லை.

இந்தியாவில் திபெத் அகதிகள் 10,80,000 பேர்களும், வங்க அகதிகள் 5,35,000 பேர்களும், இலங்கை அகதிகள் மலையகத் தமிழர்கள் உள்ளிட்ட 7,35,000 பேர்களும் உள்ளனர். இவர்கள் தவிர, மியான்மர், ஆப்கானிஸ்தான், நேபாளம் உள்பட பல்வேறு நாட்டு அகதிகளும் உள்ளனர். இலங்கைத் தமிழ் அகதிகளைத் தவிர மற்ற நாடுகளைச் சேர்ந்த அகதிகள் சுதந்திரமாகவும் வளமாகவும் வாழ்கின்றனர். தமிழ் அகதிகளுக்கு மட்டுமே சுதந்திரம் பறிக்கப்பட்டுள்ளது.

இந்திய அரசு தரும் சொற்ப உதவியில் அவர்கள் வாழ வேண்டிய கட்டாயம் உள்ளது. 1965-ம் ஆண்டு ஸ்ரீமாவோ - சாஸ்திரி உடன்பாட்டின் விளைவாக இந்தியாவுக்குத் திரும்ப நேர்ந்த ஐந்தரை லட்சத்துக்கும் மேற்பட்ட மலையகத் தமிழர்கள் இன்றளவும் வாழ முடியாத நிலையில் தத்தளிக்கிறார்கள். அவர்களை அந்த மான் தீவுகளில் குடியேற்றி நிலமும் வீடும் அளிக்க வேண்டுமென மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆர். தலைமையில் 1982-ம் ஆண்டில் அனைத்துக்கட்சிக் குழு, தில்லி சென்று பிரதமர் இந்திராவைச் சந்தித்து வலியுறுத்தியது.

ஆனால் அந்தக் கோரிக்கை இன்று வரையி லும் நிறைவேற்றப்படவில்லை. 1983-ம் ஆண்டிலிருந்து சிங்கள ராணுவ வெறியர்களின் தாக்குதல்களுக்குத் தப்பிப் படகுகள் மூலம் தமிழகத்துக்கு ஓடிவரும் ஈழத் தமிழர்களை சிங்களக் கடற்படை துரத்தித் துரத்திச் சுடுகிறது. அதில் தப்பி ராமேஸ் வரம் வந்து சேரும் அகதிகளை தமிழகப் போலீஸரும், இந்திய அரசின் உளவுத்து றையினரும் மிகக் கடுமையான விசாரணைக்கு உட்படுத்துகின்றனர். போராளிகள் எனச் சந்தேகிக்கப்படும் அகதிகள் சிறப்பு முகாம்கள் என்ற பெயரில் சிறைச்சாலைக ளுக்கு அனுப்பப்படுகிறார்கள்.

சிறப்பு முகாம்களில் அடைக்கப்பட்டிருப்பவர்கள் சொல்ல முடியாத சோகங்களுக்கு ஆளாகியுள்ளார்கள். இவர்களில் பலர் மீது எவ்வித வழக்கும் கிடையாது. போராளிகள் என்ற சந்தேகத்தின் பேரில் ஆண்டுக்கணக்கில் விசாரணை எதுவுமில்லாமல் வாடுகிறார்கள். இலங்கைக்குப் பொருள்களைக் கடத்தினார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டவர்களில் பலர் பிணை விடுதலை பெற்ற பிறகும்கூட அவர்கள் விடுதலை பெற முடியவில்லை. இன்னும் சிலர்மீது தொடுக்கப்பட்ட வழக்குகளில் நீதிமன்றம் அவர்களை விடுதலை செய்த பிறகும், அரசு அவர்களை விடுதலை செய்ய மறுக்கிறது.

சட்டவிரோதமான முறையில் சிறப்பு முகாம்களில் அடைத்து வைத்துத் தாங்கள் கொடுமைப்படுத்தப்படுவதை எதிர்த்து சில நாள்களுக்கு முன்னால் அவர்கள் சாகும்வரை உண்ணாவிரதம் மேற்கொண்ட பிறகு சிலரை மட்டும் தமிழகஅரசு விடுதலை ெய்துள்ளது. ஏற்கெனவே இலங்கையில் போரில் படுகாயம் அடைந்து தமிழ்நாட்டுக்குக் கொண்டு வரப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றிருந்தவர்களை தமிழக அரசு தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தது. அங்ககீனமான பலர் இவ்வாறு சிறையில் அடைக்கப்பட்டிருப்பது குறித்து தேசிய மனித உரிமைக் கமிஷனிடம் நான் புகார் செய்தபோது, கமிஷனின் தலைவராக இருந்த நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா, வேலூர் சிறப்பு முகாமுக்கு வந்து அவர்களை நேரில் பார்த்து அதிர்ச்சியடைந்து அவர்களையெல்லாம் உடனே விடுதலை செய்யும் ஆணையைப் பிறப்பித்தார். ஆனால் இதற்கு சில ஆண்டுகள் ஆயின என்பதுதான் மிகக் கொடுமையானதாகும்.

இலங்கையில் மின்வேலி முகாமுக்குள் அடைக்கப்பட்டிருக்கும் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்களை உடனடியாக விடுவித்து அவர்கள் தங்கள் ஊர்களுக்குத் திரும்ப அனுமதிக்க வேண்டும் என நாம் வலியுறுத்துகிறோம். ஆனால் இலங்கை அரசோ அதற்கு சில ஆண்டுகள் பிடிக்கும் என அலட்சியமாகப் பதில் கூறுகிறது. 25 ஆண்டுகளுக்கு மேலாக முகாம்களில் ஈழத்த மிழர்களை இந்தியா அடைத்து வைத்திருக்கும்போது, நாங்கள் சில ஆண்டுகள் அவர்களை முகாம்களில் வைப்பதில் என்ன தவறு.,என்று அவர்கள் கேட்கும் கேள்விக்கு நம்மிடம் பதில் இல்லை.

கனடா போன்ற நாடுகளில் தஞ்சம் புகுந்த ஈழத் தமிழர்களுக்கு 3 ஆண்டுகளில் குடியுரிமையே வழங்கப்படுகிறது. வேறுபல ஐரோப்பிய நாடுகளிலும் இவ்வாறே செய்யப்படுகிறது. ஆனால் இந்தியாவில் தஞ்சம் புகுந்தஈழத் தமிழர்களுக்கு மட்டுமே இத்தகையமனித நேய உதவிகளும் உரிமைகளும் மறுக்கப்படுகின்றன.

இலங்கையும், இந்தியாவும் தமிழ் அகதிகளை நடத்தும் விதத்தை உலகம் கண்டும் காணாமல் இருப்பது ஏன்?

இலங்கைப் போரின் இறுதிக்கட்டத்தில் முள்ளிவாய்க்கால் பகுதியில் சிக்கிக் கொண்ட பல லட்சம் தமிழர்கள் பதைக்கப் பதைக்கப் படுகொலை செய்யப்படுவதைத் தடுத்து நிறுத்த இந்தியா தவறியது வேறு.

ஆனால் உலகம் ஏன் தவறிற்று? குறிப்பாக ஐ.நா. பேரவை அடியோடு செயலற்றுப் போயிற்றே, அது ஏன்? இந்தக் கேள்விகள் உலகத் தமிழர்களின் உள்ளங்களைக் குடைந்துகொண்டு இருக்கின்றன. 1991-ம் ஆண்டில் இராக்கின் வடபகுதியி லிருந்து 15 லட்சம் குர்தீஷ் இன மக்கள் இராக்கிய ராணுவத்தினரால் சுற்றி வளைத் துக் கொள்ளப்பட்டபோது, 5-4-1991-ல் ஐ.நா. பாதுகாப்புக் குழு கூடி குர்தீஷ் மக்க ளுக்கு ஏற்பட்டிருக்கும் இந்த அபாயம் சர்வ தேச அமைதிக்கும் பாதுகாப்புக்குமே அபாயகரமானது என்ற தீர்மானத்தை (எண் 688) நிறைவேற்றியது. அதுமட்டுமல்ல, அந்த மக்களைக் காப்பாற்றுவதற்கு எல்லா வகையான உதவியும் செய்ய வேண்டுமென அந்தத் தீர்மானம் வலியுறுத்தியது.

மேலும் ஐ.நா.பட்டயத்தின் ஏழாவது பிரிவில் கூறியுள்ள படி, குர்தீஷ் மக்களுக்கு முழுமையான பாது காப்பு அளிக்க வேண்டியது அவசியமாகும் என்றும், அதற்காக வான், கடல், நில வழியா கப் படைகள் உடனடியா அனுப்பப்பட்டு சர்வதேச அமைதியை நிலைநிறுத்த உதவ வேண்டும் என்றும் அந்தத் தீர்மானம் வலியுறுத்திற்று. அதன்படி ஐ.நா. படை அனுப்பப் பட்டது. 1991-ம் ஆண்டு ஜூன் மாதம் குர்தீஷ் மக்களைப் பராமரிக்கும் பொறுப்பு ஐ.நா. அகதிகள் ஆணையரிடம் ஒப்படைக்கப்பட்டது. அதைப்போல முன்னாள் யுகோஸ்லோ வாகியாவில் இணைந்திருந்த போஸ்னியா வைச் சேர்ந்த சரயேவோ நகரில் சிக்கிக்கொண்ட ஐந்து லட்சம் மக்களைப் பாது காக்க ஐ.நா. பாதுகாப்புப் படையை அனுப்புவது என பாதுகாப்புக்குழு முடிவு செய்தது. அதேபோல குரோயாவில் உள்ள செர்பிய மக்களைப் பாதுகாக்கவும் ஐ.நா. பாதுகாப்புப் படை அனுப்பப்பட்டது. இதன் விளைவாக 35 லட்சம் மக்கள் பாது காக்கப்பட்டனர்.

போஸ்னியா நாட்டில் பல்வேறு பகுதிகளில் சிக்கிக்கொண்டிருந்த மக்களுக்கு விமானம் மூலம் உதவிப்பொருள்களை வீசி, அவர்களைப் பாதுகாக்கும் கடமையையும் ஐ.நா. செய்தது. இந்தப் பணியில் கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, பிரிட்டன், அமெரிக்கா உள்பட 20-க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கு எடுத்துக்கொண்டன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

உலகின் பல பகுதிகளில் இவ்வாறெல்லாம் மனித நேயமுடன் செயல்பட்ட ஐ.நா.வும் மேற்கு நாடுகளும் இலங்கையில் சிங்கள ராணுவத்தால் சுற்றி வளைக்கப்பட்ட மக்களைப் பாதுகாக்க எதுவுமே செய்யவில்லையே, ஏன்?

மேற்கு நாடுகளின் சரக்குகளை விற்பனை செய்வதற்குரிய மிகப்பெரிய சந்தையாக இந்தியா விளங்கி வருவதும் அந்த இந்தியா, இலங்கைப் பிரச்னையில் தமிழர்களுக்கு எதிரான நிலையை எடுத்திருப்பதும் இதற்குக் காரணமா? அல்லது தங்களின் பெரிய சந்தையை இழக்க மேற்கு நாடுகள் விரும்பாதது இதற்குக் காரணமா?

""யாதும் ஊரே யாவரும் கேளிர்'' என்ற உன்னதமான தத்துவத்தை உலகுக்கு அளித்த இனம், தமிழினம். அதுமட்டுமல்ல; சங்க காலத்திலிருந்தே தமிழர்கள் உலகக் கண் ணோட்டத்தோடு சிந்தித்தார்கள். திருவள்ளுவர், நக்கீரர், கபிலர், இளங்கோவடிகள், சேக்கிழார், கம்பர் போன்ற பெரும் புலவர் கள் தாங்கள் உருவாக்கிய இலக்கியங்களை உலகம் என்றே எழுதித் தொடங்கினார்கள். இப்படி உலகம் முழுவதும் மனித குலத்துக்குச் சொந்தமானது.

உலகில் வாழும் மனிதர்கள் யாவரும் உறவினர்களே என்ற உயரிய கொள்கையை தமது இலக்கியங்களில் பொறித்துவைத்த, தமிழர்களின் வழிவந்தவர்கள் இலங்கையில் இனவெறிக்கு ஆளாகி அழிவின் விளிம்பில் நின்று கதறியபோது உலகம் ஏன் என்று கேட்கவில்லை. அவர்களுக்கு உதவிக்கரம் நீட்ட வில்லை. இந்தக் கேள்விகள் எழுப்பியுள்ளசிந்தனை எதிர்காலத்தில் தமிழர்கள் மத்தியில் பெரும் விளைவுகளை ஏற்படுத்தப்போவது உறுதி.

[url="http://www.dinamani.com/edition/story.aspx?SectionName=Editorial%20Articles&artid=117162&SectionID=133&MainSectionID=0&SEO=&Title=தமிழர்களை+உலகம்+கைவிட்டது+ஏன்"]http://www.dinamani.com/edition/story.aspx...

  • கருத்துக்கள உறவுகள்

உலகத்தைக் கேட்கவிடாமல் செய்தது இந்தியா.

தமிழர் விடயத்தில் தத்தம் சொந்த நலன் மற்றும் பிராந்திய நலன் சார் கொள்கையினையே முழு உலக நாடுகளும் கடைப்பிடிக்கின்றன. அக் கொள்கைகளின் அடிப்படையில் தான் இந்திய மத்திய அரசும் மிகவும் தெளிவான ”பிராந்தியக்” கொள்கையினைக் கொண்டு செயற்பட்டது. அச் செயற்பாடுகளின் விளைவுகளைத் தான் தமிழன் இலங்கைத் தீவில் பட்டறிய வேண்டியதாயிற்று. இதில் அல்பேனியா ஒரு சுயத்துடன் கொசோவா விடயத்தில் இயங்கியதைப் போன்று தமிழ்நாட்டினால் இலங்கைத் தமிழர் விடயத்தில் இயங்க முடியாது போயிற்று. தமிழ்நாடோ அல்லது தென்னகமோ ஒரு சுயத்துடன், ஒன்றுபட்டுச் செயற்பட்டிருப்பின் உலகின் மிகப்பழைய நாகரியங்களில் ஒன்றும் மிக முக்கியமானதுமான தமிழர் நாகரியமும், தமிழனும் இலங்கைத் தீவில் இந்நிலை எய்த வேண்டிய நிலை ஏற்பட்டிராது போயிருக்கலாம்.

எல்லாத்துக்கும் முதல்ல ஒற்றுமை என்றொரு பணியாரம் எங்களிடம் இல்லை.

இதுவே மூலகாரணம். தமிழர்கள் எல்லோரும் தம் அறிவாளிகள் என்று நினைப்பாதால் தாமே தலைவர்

எண்ற எண்ணத்துடன் யாருடனும் ஒத்துபோவதில்லை.

இதை எதிரி சரியாக புரிந்து வைத்துக்கொண்டு சரியாக பயன்படுத்துகிறான்.

சரியாகச் சொன்னீங்கள் சூறாவழி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.