Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்து சமுத்திர விளையாட்டில் அமெரிக்காவுக்கு ஒரு சிறந்த ஆயுதமாக பிரபாகரன் இருந்தார்: ஊடகவியலாளர் நிதின் கோகல்

Featured Replies

இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் அதிகளவிலான விளையாட்டுக்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. சிறிலங்காவுடன் விளையாடுவதற்கு அமெரிக்காவுக்கு ஒரு நெம்புகோல் தேவைப்படுகிறது. அதற்குப் பயன்படுத்தவதற்கான சிறந்த ஆயுதமாக பிரபாகரன் இருந்தார். அதேபோன்று ஸ்கண்டிநேவிய நாடுகள் புலிகளுக்கான ஆயுத வழங்குனர்களாக இருந்தார்கள் என இந்திய ஊடகவியலாளர் நிதின் ஏ.கோகல் தெரிவித்துள்ளார்.

அண்மையில் இவர் 'சிறிலங்கா: போரில் இருந்து அமைதிக்கு' எனும் நூலை எழுதி வெளியிட்டிருந்தார்.

நான்காவது ஈழப் போரில் இந்தியாவின் பங்கு என்ன என்பதை விளக்கி இருந்தார். வலிந்த தாக்குதலுக்கான ஆயுதங்களை சிறிலங்காவுக்கு தரமாட்டோம் என புதுடில்லி வெளிப்படையாகத் தெரிவித்து வந்தபோதும் அத்தகைய ஆயுத தளபாடங்கள் மறைமுகமாக வழங்கப்பட்டன என அந்தப் புத்தகத்தில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

'ரெடிஃப்' ஆங்கில இணையத்தளத்துக்காக ஊடகவியலாளர் பி.கிருஷ்ணகுமார் கண்ட நேர்காணலின் தமிழ் வடிவம் வருமாறு:

பிரபாகரன் எப்படி முடிவை எட்டினார் என மிகச் சரியாகச் சொல்ல முடியுமா?

கடைசி இரண்டு நாட்களில், பிரபாகரனும் முக்கிய தளபதிகளும் ஒடுங்கிய அந்தக் களப்புப் பகுதிக்குள்தான் இருக்கிறார்கள் என்ற புலனாய்வுத் தகவல்கள் தரைப்படையினருக்குக் கிடைத்திருந்தன. உள்ளேயிருந்து வந்திருந்த மக்கள் மூலமாக அவர்கள் அதனைத் தெரிந்துகொண்டார்கள். அத்துடன், அவரது மெய்ப்பாதுகாவலர் ஒருவரும் கைது செய்யப்பட்டிருந்தார்.

அந்தக் களப்புப் பிரதேசத்தை ஊடறுத்து உடைக்க புலிகள் முயன்றார்கள். அவர்களின் புகழ்பெற்ற பாணியிலான அலையலையான தாக்குதல்களை நடத்தினார்கள். அதன் நோக்கம், களப்புப் பிரதேசத்தை விட்டு வெளியே வந்து முல்லைத்தீவுக் காடுகளுக்குள் செல்வது.

முதல் அலைத் தாக்குதலில் பிரபாகரனின் மகன் சாள்ஸ் அன்ரனி உயிரிழந்தார்.

ஏனைய தலைவர்கள் ஒருவாறு தப்பிச் சென்றிருந்தால் போர் இன்னும் கொஞ்சக் காலத்திற்கு நீடிக்கப்பட்டிருக்கும். ஆனால் தரைப்படையினர் தமது இருப்பில் இருந்த படையினர் அனைவரையும் வைத்து இரண்டு பாதுகாப்பு எல்லைகளை (Defence line) விரித்திருந்தார்கள்.

சதுப்பு நிலக் காடுகளுக்கு நடுவே மனித நடமாட்டம் தென்படும்போதெல்லாம் அவர்கள் சண்டையில் ஈடுபட்டார்கள். இதில் உயர் தலைவர்கள் கொல்லப்பட்டார்கள்.

நாடாளுமன்றத்தில் அரச தலைவர் ராஜபக்ச உரையாற்றியபோது அவர் பிரபாகரன் பற்றி எதனையும் குறிப்பிடவில்லை.

பின்னர் உடலத்தை அடையாளம் காட்டுவதற்காக கருணா அழைத்து வரப்பட்டார். அவர்கள் கூறியது போன்று சரியாக அடையாளப்படுத்துவதற்கு மூன்று மணி நேரம் எடுத்தது.

இந்தப் போரை, ஈழப் போர் நான்கை அதன் தொடக்கத்தில் இருந்து நீங்கள் அவதானித்து வருகிறீர்களா?

தோல்வியில் முடிவடைந்த, தரைப் படைத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா மீதான தாக்குதல் நடத்தப்பட்டதற்கு ஒரு நாள் கழித்து நான் கொழும்புக்குச் சென்றிருந்தேன். போர் நடந்து கொண்டிருக்கும் போது கிழக்குப் பகுதிக்கும் சென்றிருந்தேன்.

இந்தக் கட்டம் மிக முக்கியமானதும் இரத்தக் களரியானதுமாக மாறும் என்று நீங்கள் அப்போது உணர்ந்தீர்களா?

இந்த தரைப்படை இழப்புக்களைச் சந்திக்கத் தயாராக இருந்தது என்ற உணர்வு எனக்கு இருந்தது. இதற்கு முன்னைய தலைமைகள் இழப்புக்களை எதிர்கொள்ளத் தயாராக இல்லை. ஆனால், இந்தத் தலைமை மிக வித்தியாசமானது என்பது ஆதாரபூர்வமாகத் தெரிந்தது. இருப்பினும் 2007 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரைக்கும் அது அவ்வளவு வெளிப்படையாகத் தெரியவில்லை.

ஈழப் போர் நான்கில் முக்கியமான விடயங்கள் என்ன?

ஜெனரல் சரத் பொன்சேகா என்னிடம் "இந்தத் தடவை நாங்கள் வெற்றிக்காக விளையாடப் போகிறோம். சமநிலை முடிவுக்காக அல்ல" என்று கூறினார். முன்னைய அரசுகள் கொஞ்சத் தூரம் முன்னேறிவிட்டு பின்னர் பின்வாங்கின. ஆனால், இந்தத் தடவை அரசியல் மற்றும் படைகளின் இலக்கு விடுதலைப் புலிகளை படைத்துறை ரீதியாக தோற்கடிப்பது என்பதாக இருந்தது. மனித உரிமைகள் கீழே போட்டு மூடப்பட்டன. தமிழர்களின் பிரச்சினை, அதிகாரப் பங்கீடு அனைத்தையும் பின்னர் பார்த்துக் கொள்ளலாம் என்பது ஏற்கனவே முடிவு செய்யப்பட்டுவிட்டது.

இரண்டாவது முக்கிய விடயம், முப்படைகளுக்கு மத்தியிலும் காணப்பட்ட மிக வெற்றிகரமான ஒருங்கிணைந்த செயற்பாடு. இதற்கு முன்னர் எப்போதுமே இப்படிப்பட்ட நிலை காணப்பட்டதில்லை.

முன்னர் எல்லாம் கடற்படையினர் தமது பலவீனமான பகுதிகளையே பயன்படுத்தி வந்தனர். அது பெரிய கப்பல்களைக் கொண்டிருந்தது. அடிக்கடி அவை புலிகளின் தற்கொலைத் தாக்குதல்களுக்கு உள்ளாகின. அவ்வாறு ஒரு கப்பல் மூழ்கடிக்கப்படும்போது குறைந்தது 40 உயிர்கள் இழக்கப்பட்டன என்பதுடன் 15 மில்லியன் டொலரும் அழிந்தது.

பின்னர் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொட, "அவர்களின் சொந்த விளையாட்டுக்கு என்னை இழுத்துச் சென்றார்கள்" என கூறினார். அவர் சிறிய படகுகளைக் கட்ட தொடங்கினார். அவை அம்புப் படகுகள் என அழைக்கப்பட்டன.

சிறிய அதிகளவான படகுத் தொகுதிகளைப் பயன்படுத்தும் விடுதலைப் புலிகளின் உத்திகளை கடற்படை உள்வாங்கிக் கொள்ளத் தொடங்கியது. வான்படையும் அப்படியே.

தலைமை மாற்றங்களை ஏற்படுத்தியது. முன்னர் எல்லாம் தரைப்படையின் வான் போக்குவரத்துப் பிரிவு மாதிரியே வான்படை செயற்பட்டு வந்தது. இந்தத் தடவை ஆயுதங்கள் பொருத்தப்பட்ட உலங்கு வான்னூர்திகள் பயன்படுத்தப்பட்டன. பாதிக்கப்பட்டவர்களை வெளியேற்றுவதும் வேகமாக நடைபெற்றது. அதனால் தரைப்படையினர் தங்களின் பின்னணி மிகப் பலமாக இருக்கிறது என்பதைத் தெரிந்து வைத்திருந்தனர்.

மிக முக்கியமான திருப்பு முனையாக அமைந்த சம்பவம் என்ன?

கிழக்கை அவர்கள் (அரச படையினர்) கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த போது புலிகளைக் கட்டுப்படுத்திவிட முடியும் என்பதை அவர்கள் புரிந்துகொண்டனர். அதுதான் மிகப் பெரிய உளவியல் ரீதியான உந்துசக்தி. மற்றொரு விடயம், செப்ரெம்பர் மாதம் 11 ஆம் நாளில் அமெரிக்காவில் நடைபெற்ற தாக்குதலின் பின்னர் அனைத்துலக போக்குகளில் மாற்றம் ஏற்பட்டது.

இந்தியாவின் பங்கை நீங்கள் எப்படி கணக்கிட்டீர்கள்?

ராஜபக்ச பதவியேற்றபோது, பதவிப் பிரமாணம் எடுத்த ஒரு மாத காலத்திற்குள் இந்தியாவிற்கு வந்திருந்தார். தொடக்கத்தில், தான் இணக்கப் பேச்சுக்களுக்குச் செல்லப் போவதாகவே அவர் கூறி வந்தார். அதில் புலிகள் ஆர்வமாக இருப்பார்கள் எனத் தான் நினைக்கவில்லை என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

இந்தியா, வலிந்த தாக்குதல்களுக்கான ஆயுதங்களைக் கொடுக்க முடியாது என அவரிடம் நேரடியாகவே கூறிவிட்டது.

கிழக்கு விடுவிக்கப்பட்ட சில சிறிது காலத்திலேயே, ஒவ்வொன்றிலும் மூன்று பேர் அடங்கிய இரு அணிகள் இருபக்கங்களிலும் உருவாக்கப்பட்டன. அவர்களிடையே தொடர்ச்சியான தொடர்புகள் இருந்தன. இவ்வாறாக சுருக்குக் கயிற்றுக்குள் இந்தியா எப்போதுமே இருந்தது.

நாங்கள் அவர்களுக்கு எம்-17 உலங்குவானூர்திகளை வழங்கினோம், ஆனால் அவை அவர்களின் வான் படை நிறத்தின் கீழேயே பறக்க வேண்டும் எனக் கூறினோம். விடுதலைப் புலிகளைத் தோற்கடிப்பதில் இந்திய கடற்படை மிக முக்கியமான செயலாற்றல் உள்ள பங்கை வழங்கியிருக்கிறது. அத்துடன், புலனாய்வுத் தகவல்களையும் நாம் அவர்களுக்கு வழங்கி இருக்கின்றோம்.

விடுதலைப் புலிகள் வெளியேறுவதற்கான (தப்புவதற்கான) வழிகளையும் நாம் அடைத்தோம். அவர்களின் கதவுகளை நாம் அடைத்தோம்.

விடுதலைப் புலிகள் ஒரு பயங்கரவாத அமைப்பு என்பதில் இந்தியா மிகத் தெளிவாக இருந்தது. "உங்கள் நடவடிக்கையில் நீங்கள் முன்னேறுங்கள்" என சிறிலங்காவுக்குத் தெரிவித்த இந்தியா, பொதுமக்களுக்கு இழப்புக்களை ஏற்படுத்த வேண்டாம் எனவும் தெளிவாகக் கூறியிருந்தது.

விழுக்காடு ரீதியில் கூறினால், விடுதலைப் புலிகளுக்கு சிறிலங்காவின் போரில் இந்தியாவின் பங்கு எவ்வளவாக இருக்கும்?

25 விழுக்காடு.

எந்த வகையில் அது முக்கியமானது?

மிக முக்கியமானது. சிறிலங்காவிற்கு தெரியும், குற்றவாளியை வேட்டையாடுவதற்கு மாறாக இந்தியாவால் அதிலிருந்து ஒதுங்கிப்போக முடியாது. அத்துடன், இந்தியாவை மிக மதிப்புடனேயே சிறிலங்கா நடத்தியது.

சிறிலங்காப் படையினருக்கு இந்தியா பெருமளவில் ஆதரவாக இருந்ததுடன் மனிதாபிமான உதவிகளுக்கும் ஆதரவளித்தது.

எப்படி இருப்பினும் இந்தியா நீண்ட காலத்திற்கு முக்கியமானது அல்ல என்ற சிந்தனை ஒன்று உள்ளது. ஆனால் அதற்குப் போதிய ஆதாரங்கள் இல்லை. சீனாவிற்கு துறைமுகத்தைக் கொடுப்பதற்கு முன்னர் அவர்கள் இந்தியாவிடம்தான் வந்திருந்தார்கள் என்பதை நினைவில் வைத்திருக்க வேண்டும்.

இந்தியா ஆயுதங்களைக் கொடுக்க மறுத்ததன் பின்னர் அவர்களால் எங்கும் போக முடிந்தது. ஆனால், அவர்கள் வடக்கில் உள்ள மற்றொரு துறைமுகத்தை இந்தியாவிற்கு வழங்கியிருக்கிறார்கள். திருகோணமலை இந்தியாவுடன் இருக்கிறது.

இந்தியாவின் முக்கியத்துவம் பொதுமக்களின் பார்வையில் இருந்து வேண்டுமானால் மறைக்கப்பட்டிருக்கலாம். ஆனால் அது எவ்வளவு பெரிய சக்தி என்பது சிறிலங்கா அரசுக்குத் தெரியும்.

சீனாவும் பாகிஸ்தானும் எவ்வகையிலான பாத்திரத்தை வகித்தன?

சீனாவின் பாத்திரம் பெரும்பாலும் வர்த்தகம் சார்ந்தது. குறைந்த விலையில் அவர்கள் ஆயுதங்களை வழங்கினார்கள். அத்துடன் கடன்களையும் வழங்கினார்கள்.

இந்தியா அவற்றை வழங்குவதில் தயக்கம் காட்டியதால் பாகிஸ்தான் பெரும்பாலும் பயிற்சிகளை வழங்கியது. அப்படியிருந்தாலும், ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவிற்கு 800 சிறிலங்கா அதிகாரிகள் வந்து பயிற்சி எடுத்துச் சென்றார்கள் என்பதைக் கண்டிப்பாக இங்கு கூறியாக வேண்டும். சிறிலங்காவில் நான் சந்தித்த மிக மூத்த அதிகாரிகளில் பெரும்பாலானவர்கள் குறைந்தது மூன்று பயிற்சிகளை இந்தியாவில் முடித்திருந்தார்கள்.

பாகிஸ்தான் மற்றும் சீனாவின் உதவிகள் பெருமளவு வர்த்தக இயல்பு சார்ந்தவை. அவர்களால் அதனை வெளிப்படையாகச் செய்ய முடிந்தது.

நான் எனது புத்தகத்தில் கூறியிருப்பதுபோன்று, சிறிலங்கா இந்தப் போரை சீனா மற்றும் பாகிஸ்தானின் வெளிப்படையான ஆதரவுடனும் இந்தியாவின் மூடிமறைக்கப்பட்ட ஆதரவுடனும் வெற்றி கொண்டுள்ளது.

அப்படியானால், பெருமளவான உதவிகள் இந்தியாவினால்தான் வழங்கப்பட்டுள்ளன?

மிகச் சரியாக. இங்கே சீனாவிற்கு எதிரான கொள்கைவாதிகள் இருக்கிறார்கள். அவர்கள் சீனாவால் அலைக்கழிக்கப்படுகிறார்கள். மியான்மரில்கூட இந்தியா மறுத்ததன் பின்னர்தான் அவர்கள் சீனாவிடம் சென்றார்கள்.

என்ன படிப்பினைகளை நாம் பெற்றுள்ளோம்?

கிளர்ச்சி ஒன்று படைத்துறை ரீதியாகத் தோற்கடிக்கப்பட்டிருப்பது கடந்த 50 வருடங்களில் உலகில் இது இரண்டாவது முறை. இங்கே நாங்கள் அதைச் செய்ய விரும்பவில்லை. குறிப்பாக கடந்த 30 வருடங்களில் அல்லது அதற்கும் மேலாக அப்படி நடந்ததே இல்லை.

ஆனால், அங்கு என்ன நடந்ததோ அதனையே திரும்பவும் செய்ய முடியும் என நான் கருதவில்லை. அங்கே சில படிப்பினைகள் இருக்கின்றன. ஆனால், அவற்றை முழுமையாக நாங்கள் எடுத்துக்கொள்ள முடியாது. ஏனென்றால் இந்தியா ஒரு மிக திறந்த சமூகம். பரந்த ஜனநாயகத்தையும் மிக உறுதியான ஊடகங்களையும் கொண்ட நாடும்கூட.

வடக்கு-கிழக்கு (இந்தியாவில்) பிரச்சினை அல்லது நக்சலைட்டுக்களின் பிரச்சினை படைத்துறை ரீதியாகத் தீர்க்கக்கூடியதா?

இல்லை. அப்படிச் செய்துவிட முடியாது. வடக்கு-கிழக்கு அல்லது நக்சல்கள் போன்றில்லாமல், விடுதலைப் புலிகள் ஒரு அரசுக்குள்ளேயே ஒரு அரசை உருவாக்கி இருந்தார்கள். ஒரு நிரப்பரப்புக்குள்ளேயே மற்றொரு நிலப்பரப்பை உருவாக்கி இருந்தார்கள். அதனால் அந்தப் பகுதியை துப்புரவு செய்ய வேண்டிய தேவை எழுந்தது. நீங்கள் அந்தப் பகுதியை மீளக் கைப்பற்றியே ஆகவேண்டும்.

வடக்கு-கிழக்கில் அல்லது நக்சலைட்டுக்கள் அல்லது காஷ்மீரில் நீங்கள் அப்படிச் செய்ய முடியாது.

படிப்பினை என்னவென்றால், படைத்துறை ரீதியான தீர்வை ஒரு குறிப்பிட்ட புள்ளி வரைக்கும் நீங்கள் எடுத்துச் செல்லாம். அத்துடன் படைகளுக்கு நீங்கள் கட்டுப்பாடற்ற சுதந்திரத்தை அளிக்க வேண்டி இருக்கும். இந்தியாவில் நாம் எப்போதுமே தலையிட்டுக் கொண்டிருப்போம். உல்பா, நாகா புரட்சியாளர்கள், காஷ்மீரிகள் கடைசிச் சண்டைக்குப் போக விரும்பினார்கள் என்றால் எங்களால் அவர்களை பின்னால் தள்ளிவிட முடியும்.

ஒரு தடவை நீங்கள் அதனை முடிவு செய்து விட்டீர்களானால் அது தொடர்பான பரந்துபட்ட பார்வையின் கீழே நீங்கள் விழுந்து கிடக்க முடியாது.

இந்தப் போரில் படைத்துறை சாராத ஏதாவது விடயங்கள் உங்கள் ஆர்வத்தைத் தூண்டி இருக்கின்றனவா?

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் இருந்து வெளிவந்த மக்களின் தேவைகளை எதிர்கொள்வதற்கு எவருமே தயாராக இருக்கவில்லை. ஒரு நிலையில், ஒரே நாளில் மட்டும் 80 ஆயிரம் மக்கள் வெளியேறி வந்தார்கள். ஒன்றுமே செய்ய முடியவில்லையாயின் குறைந்தது அவர்களைச் சுதந்திரமாகவேனும் விடவேண்டும்.

மனிதாபிமான விடயங்களைக் கையாள்வதில் சிறிலங்கா தோல்வி அடைந்துவிட்டது. இதைவிடவும் மேலாக அவர்களால் செய்திருக்க முடியும். இதற்கு முன்னர் அவர்கள் இதுபோன்ற விடயங்களைக் கையாண்டிருக்கவில்லை. இந்தியப் படைகளுக்கு இது போன்ற விடயங்களில் நிபுணத்துவம் இருக்கின்றது. இந்தியாவின் தரைப்படையினராக இருந்திருந்தால் இந்த நிலைமையை மிக நல்ல முறையில் கையாண்டிருப்பார்கள்.

அரசியல் ரீதியாக, அண்மையில் நடந்த இரு உள்ளூராட்சி சபைத் தேர்தல்களில் ஆளும் கட்சிக்கு மோசமான நிலை ஏன் ஏற்பட்டது என நீங்கள் நினைக்கிறீர்கள்?

அது நடக்கும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குறிப்பிட்ட சில இடங்களை வைத்திருக்கிறது. ராஜபக்ச சகோதரர்கள் சொல்வது போன்று அவர்கள் மோசடி எதனையும் செய்யவில்லை என்பதை அது காட்டுகிறது. எனவே அதனை அவர்கள் வெற்றியாகவே பார்ப்பார்கள்.

அடுத்தது என்ன?

ஒரு சிறிய நாடு பயங்கரவாதத்தை முற்றாக வெளியேற்றிவிட்டதுடன் மேற்குலகுக்கு எதிராகத் தொடர்ந்தும் உறுதியான நிலைப்பாட்டில் நின்று வருகின்றது என்பதை ராஜபக்ச இறுதி ஆய்வு முடிவாக எடுத்துக் கொள்ளலாம்.

இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் அதிகளவிலான விளையாட்டுக்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. சிறிலங்காவுடன் விளையாடுவதற்கு அமெரிக்காவுக்கு ஒரு நெம்புகோல் தேவைப்படுகிறது. அதற்குப் பயன்படுத்தவதற்கான சிறந்த ஆயுதமாகப் பிரபாகரன் இருந்தார். அதேபோன்று ஸ்கண்டிநேவிய நாடுகள் புலிகளுக்கான ஆயுத வழங்குனர்களாக இருந்தார்கள்.

ஜெனரல் சரத் பொன்சேகா என்னிடம் கூறினார், அவர்கள் (புலிகளின் தலைவர்கள்) கொல்லப்படுவதற்கு 10 நிமிடங்கள் முன்னதாக அவர்களைப் பாதுகாப்பதற்காக பாதுகாப்புச் செயலாளருக்கு (கோத்தபாய ராஜபக்ச, அரச தலைவரின் சகோதரர்) தொலைபேசி அழைப்பை தூதுவர்கள் ஏற்படுத்தினார்கள் என்று.

அந்த நேரத்தில் போர் நிறுத்தத்தைக் கோருவது என்பது புலிகளின் தலைவர்களைப் பாதுகாப்பதற்காகத்தானே ஒழிய மக்களைப் பாதுகாப்பதற்காக அல்ல என்பதை எந்த ஒரு முட்டாளும் புரிந்துகொள்வான். ஏனென்றால் அப்போது அங்கே மக்கள் யாரும் இல்லை எனத் தெரிவித்திருந்தார் சரத் பொன்சேகா.

இந்தப் பிரச்சினை இரண்டு விடயங்களைக் கொண்டது: படைத்துறை மற்றும் அரசியல்.

தமிழர்கள் கோரிக்கை விடுத்தது போன்று சுயாட்சி போன்ற ஒரு தீர்வைப் பெற்றுக்கொள்ளப் போவதில்லை. நான் உறுதியாகச் சொல்கிறேன். ஆனால், சிறிலங்கா அவர்களை இப்போது மதிப்புடன் நடத்த வேண்டும். ஒரு பிரபாகரனின் சாவு மற்றொருவர் உருவாவதற்கு வழிவகுத்துவிடக்கூடாது.

இது ராஜபக்சவுக்கான சந்தர்ப்பம். விடயங்கள் பிழையாகச் செல்வதற்கு அவர் அனுமதிக்கக்கூடாது. அளவுக்கதிகமான அனைத்துலகத் தலையீடு இதில் இருக்கின்றது. இந்தியா அவர்களிடம் "அனைத்துலக அமைப்புகளில் நாங்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்போம். ஆனால் அதற்கு அர்த்தம் நீங்கள் நீதியாக நடந்து கொள்கிறீர்கள் என்பதல்ல....." எனக் கூறியுள்ளது.

எனவே உண்மையான சோதனை அமைதியை வென்றெடுப்பதுதான்.

புதினம்

  • கருத்துக்கள உறவுகள்

ஏற்கனவே சாதாரண இந்தியாக் காரனுக்கு ஈழப் பிரச்சனை தொடர்பாக ஒரு மண்ணும் தெரியாது.

இதைவைத்து சிலர் பிழைப்பு நடாத்த வெளிக்கிட்டுட்டாங்கள் இதில் இவனும் ஒருவன், புத்த்கம் எழுதிச் சம்பாதிக்க தமிழனின் இரத்தமே பேனா மையாகக் கிடைத்தது. போர் நடைபெற்றபோது நடுநிலைப் பத்திரிகையாளர் ஒருவரையும் இனவெறிச் சிங்களவன் அப்பகுதிகளுக்கு அனுமதிக்கவில்லை, ஆனால் இந்த வடக்கத்தையான் போயிருக்கிறான் எனில் இவனது இருப்பிடத்தை தெரிந்து கொள்ளுங்கள். இவனைப்போய் தூக்கிப்பிடியுங்கோ!

இவன் ஒரு விடையத்தை போட்டுடைத்திருக்கிறான் "இந்தியா கூறியதாம் நாம் எல்லா எதிப்புகளையும் முறியடிக்க உதவியாக இருப்போம் அனால் அதுவே நீங்கள் சரியானதைத்தான் செய்கிறீர்கள் என்பது இதன்மூலம் அர்த்தமில்லை" என்று. ஆக இந்தியா, எட சிங்களவா நீ தமிழனைக் கொல்லு அது தவறுதான் இருந்தாலும் நான் உனக்கு ஆதரவுதாறேன் எனக் கூறியிருக்கிறான் அப்படித்தானே?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.