Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

"காதலென்னும் சாம்பிராச்சியத்தின் தூண்களெல்லாம் தோல்விகள்தான்" | இளங்கவி

Featured Replies

அனைவருக்கும் இனிய வணக்கங்கள்,

"காதலென்னும் சாம்பிராச்சியத்தின்

தூண்களெல்லாம் தோல்விகள்தான்

என் தேவதையும் என்னை அங்கே

ஓர் தூணாக சேர்த்துவிட்டாள்..!"

இது யாழ் இணையம் மூலம் அறிமுகமாகி "என் கல்லறைச் சினேகிதியே" எனும் கவிதைத்தொகுப்பை அண்மையில் படைத்த இளங்கவி அவர்களின் புலம்பல்.

அண்மையில் நான் வடலி வலைத்தளம் ஊடாக 'இளங்கவி' அவர்களின் மேற்கண்ட கவிதைத்தொகுப்பு நூலை பெற்று இருந்தேன்.

தாராளமாக உணவு இருந்தாலும் பசி வரும்போதுதானே விரும்பி உண்ணமுடியும்? இளங்கவியின் நூலை நான் கடந்தமாதம் பெற்று இருந்தாலும் கடந்த சில நாட்களாகவே கவிதைகளை வாசித்துப்பார்க்கவேண்டும் என்கின்ற தீவிரஆர்வம் - தாகம் எனக்குள் ஏற்பட்டது (இதை 'அகம் வெடித்தல்' என்று ஓர் யாழ் கள உறவு கூறுவார்). கவிதைத்தொகுப்பை நான் நேற்று முழுமையாக வாசித்து முடித்தேன். இன்று மீண்டும் உங்களுடன் இன்னோர் நூல் விமர்சனத்தில் சந்திப்பது மகிழ்ச்சி.

என் கல்லறைச் சினேகிதியே கவிதைத்தொகுப்பில் ஐம்பது கவிதைகள் இடம்பெற்று இருக்கின்றன. பெரும்பாலான கவிதைகளின் உள்ளடக்கத்தின் அடிப்படையில் நூலில் இரண்டு விடயங்கள் பேசப்பட்டு இருக்கின்றன: ஒன்று தாயகம் பற்றியது மற்றையது காதல் பற்றியது.

IMG3376-1254547294.jpg

தாயக வலம்:

தாயகத்தில் இருந்தபோது ஒவ்வொரு படிமுறைகளாக ஆண்டுக்கு ஆண்டு என் வாழ்க்கையில் நடைபெற்ற பலப்பல சம்பவங்களை கவிதைகளை வாசித்தபோது என்னால் நினைவூட்டக்கூடியதாக இருந்தது. கவிதைகளை நான் அறையினுள் இருந்து ஒவ்வொன்றாக கவிதை பாடப்படும் அதேபாணியில் உரத்துப்படித்தேன். ஒவ்வொரு சொற்களும் தாயகத்து நினைவுகளை பசுமையாக எனது மனதினுள் மீட்டுவிட்டுச் சென்றன.

நோர்வே 'வசீகரன்' (யாழ் தமிழ்வாணம்) அவர்களின் 'தமிழர் திருநாள்' நூல்விமர்சனத்தில் நான் கவித்துவம் என்கின்ற வகையில் கவிதைத்தொகுப்பில் உள்ள கீழ்வரும் சிதறல்கள் எனது மூளையில் சிந்தனையைத்தூண்டும் பொறிகளாய் பறக்கின்றன என்று கூறியிருந்தேன்.

ஆலமரத்தடியில் அம்மம்மா

சுருண்டு கிடக்கிறா சுருட்டோட!

அப்பு கள்ளென்றாலும்

குடிப்பம் என்று.. பசியிலதான்

பனைய பனைய பார்க்கிறார்!

இதுபோலவே இளங்கவியின் கவிதையிலும் கீழ்க்கண்ட வரிகள்...

"ஐந்து சந்தி வீதியிலே

ஆளுயறப் பனையின் கீழ்

பனம்பழம் எடுத்து வந்து

பாதி தந்த மகாராசா..

என்னை பாதியாய் தவிக்கவிட்டு

பாடையில் சென்றீரோ.."

என ஓர் ஆச்சி ஒப்பாரி வைப்பது தாயகத்து மக்கள்படும் அவலங்களை சற்று வித்தியாசமான பாணியில் கூறுகின்றன. இவ்வாறே கீழ் உள்ள கவிவரிகளும் சிந்திக்க வைக்கின்றது:

அறிவில் சிறந்தவன் நீ..

அன்பிலும் சிறந்தவன் நீ..

அடையாளமாம் உன் இனத்தின்

அதரப்பழசு வாய்ந்தவன் நீ..

ஆனாலும் ஒரு குறை

ஒற்றுமையில் குறைந்தவன் நீ..

அதையும் சரி செய்துவிட்டால்

உலகத்திலும் சிறந்தவன் நீ..

அதன் பின்னால் திரும்பிப்பார்

உலகத்துக்கே முதல்வன் நீ..

தாயகம் பற்றியதான கவிதைகளில் அதிகளவு தாயக போராட்டம், மாவீரர்கள், அவர்கள் வாழ்வு இவைபற்றியும் பேசப்பட்டு இருக்கின்றது. ஒவ்வொரு கவிதைகளிலுமே ஓர் சுவையைக் காணமுடிகின்றது. இந்தவகையில் கீழ் உள்ள இளங்கவியின் கவிவரிகளும் எனது கவனத்தை ஈர்த்துள்ளது.

இறுதியாய் உன்

மலரின் அறிவுரை..

உன் துப்பாக்கி

உன் கையில் எந்தன்

உடல் போன்றது..

நீ இறக்க நேரிட்டாலும்

எதிரியிடம் கொடுத்து

என் கற்பைக் கெடுக்காதே..

உன்னுடன் சேர்ந்து

என்னையும் அழித்துவிடு..

இளங்கவி தாயகத்து பிரச்சனைகள் காரணமாக தனது தனிப்பட்ட வாழ்வில் அதிக சேதங்களை அடைந்துள்ளார் என்று அவர் கவிதைகளை பார்க்கும்போது புரிகின்றது. தான்பட்ட துன்பங்கள் மூலம் அடைந்த அனுபவங்களை அவர் கவிதைகளாக வடித்து அதன்மூலம் ஓர் சமூகப்பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கு தனது பங்களிப்பையும் செய்து இருக்கின்றார்.

"என் கல்லறைச் சினேகிதியே" கவிதைகளை நான் முதலில் எழுந்தமானமாகவும், பின்னர் ஆரம்பம் முதல் ஒன்றன்பின் ஒன்றாகவும் பின்னர் நூலின் பெரும்பகுதியை இறுதில் இருந்து ஒன்றன்பின் ஒன்றாகவும் கவிதைகளை படித்து இருந்தேன். இதன்போது எனக்குள் ஏற்பட்ட ஓர் எண்ணம்.. சமூகவியலாளர்கள் மற்றும் உளவியல் விஞ்ஞானிகள் மேற்கண்ட கவிதைத் தொகுப்பை ஆழமாக அலசி ஆராய்ந்து பார்த்தால்.. பலப்பல சமூக, மற்றும் தனிப்பட்ட பிரச்சனைகளை எவ்வாறு கையாளுவது என்பதற்கு, அதுசம்மந்தமாக சில பயனுள்ள தரவுகளை நூலில் இருந்து பெற்றுக்கொள்ள முடியும். இளங்கவி பல்வேறு பிரச்சனைகளை அழகாக வசன நடையில் கவிதைகளாக விபரித்து இருக்கின்றார்.

IMG3376-1254547387.jpg

காதல் வனம்:

நூலின் பெரும்பகுதி காதல் மயமாகவே இருக்கின்றது. தாயகத்து காதல் 50% என்றால் ஜொள்ளு காதல் இன்னோர் 50% இருக்கின்றது. இதனால் நூலை தொடர்ந்து படிக்கும்போது அலுப்பு தட்டாமல் இருக்கின்றது. இளங்கவியின் காதல் சம்மந்தமான பல கற்பனைகளை வாசித்தபோது எனக்கு நிறைய தடவைகள் சிரிப்பு வந்தது. ஆனாலும் எம்மவர்களுக்கு அளவாகவே ஆடை நெய்யப்பட்டு உள்ளது. அதிகம் செயற்கைத்தனமாகவும் இல்லாமல் நாகரீகமாக வர்ணனைகள் செய்யப்பட்டு உள்ளன. வார்த்தைகளில் அவற்றின் பொருளில் அர்த்தம் மாறுபடாமல் இருப்பது பற்றி கவிதைகளில் அதிக சிரத்தை எடுக்கப்பட்டு உள்ளதை உணரமுடிகின்றது. அதேநேரம் தனது எண்ணங்களை, உள்ளத்து உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கு இளங்கவி கூச்சப்படவில்லை என்பதையும் காணமுடிகின்றது.

நான் இளங்கவி யாழ் இணையத்தில் இணைக்கும் கவிதைகளில் ஒருசிலவற்றை பார்த்து இருக்கின்றேன். அதில் "இண்டர்நெட் லவ்" எனப்படும் கவிதை எனக்கு பிடித்து இருந்தது. அதில் எனது கவனத்தை ஈர்த்த சில வரிகள்..

ஜோராக சேர்ந்து கொண்டு

தங்கள் உணர்வெல்லாம்

மொனிட்டரிலே உண்மையாய்

கொட்டி நிற்கும்..

வித்தியாசம், வித்தியாசமான காதல் கவிதைகளை இளங்கவி படைத்து இருக்கின்றார். அவற்றில் நகைச்சுவையையும் தாராளமாக காண முடிகின்றது.

கவித்துவம்:

தனது கவிதைகளில் பல இடங்களில் வாசிப்பவர்களின் சிந்தனையைத் தூண்டுவதற்கு இளங்கவி அவர்கள் வித்தியாசமான ஓர் அணுகுமுறையை கையாண்டு இருக்கின்றார். கவிதையில் கையாளப்படும் இந்த நுட்பம் வெற்றிபெற்று இருக்கின்றது என்றே சொல்லத்தோன்றுகின்றது. இதுபற்றி விரிவாக விளக்கம் தந்தால் நூலை வாசிப்பதில் சுவாரசியம் இருக்காது. எனினும் குறிப்பிட்ட பாணியில் வரும் ஓர் கவிதையின் சில வரிகள்..

அதிகாலை ஓர் அழைப்பு மணி

அவரசமாய் சென்று யாரது..

பதில்.. நான் தான்

உன் தேவதை..

கதவை திறக்கிறேன்..

யார் தேவதையா..

நூலுக்கு முகவுரை கூறிய யாழ் கள உறவு யாயினி அவர்கள் கற்பனைக்கு நிகர் இளங்கவியை விட எவரும் இல்லையென்றே கூறலாம் என பகர்ந்து இருந்தார். அது தவறான கூற்றாக இருந்தாலும், இளங்கவியின் கற்பனைகள் சற்று வித்தியாசமானவை என்பதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

இளங்கவியின் கவிதைகள் ஒவ்வொன்றும் ஓர் குட்டிக்கதை போன்றவை. ஒவ்வொரு கவிதையாக முழுமையாக வாசித்தபின்பே அவை கவிதையாக அதிகளவில் உணரப்படக்கூடியதாக சில இடங்களில் இருந்ததையும் சுட்டிக்காட்டவே வேண்டும். அதாவது கவிதைக்குரிய அம்சங்கள் சில இடங்களில் முழுக்கவிதையும் வாசிக்கப்பட்ட பின்னரே முழுமையாக உணரப்படக்கூடியதாக இருந்தது. இதை ஓர் குறைபாடு என்றும் கூறலாம். எல்லோராலும் நீண்ட கவிதைகளை படிப்பதற்கு பொறுமை இருக்காது, கால அவகாசமும் இருக்காது. இளங்கவி தனது தொடர்ச்சியான வளர்ச்சிப்படிமுறையில் மேற்கண்ட விடயங்களில் கவனம் செலுத்தி தனது ஆளுமையை எதிர்காலத்தில் இன்னனும் காத்திரமாக வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்ப்போம்.

yarl.jpg

இறுதியாக,

நூலை வடலி பதிப்பகம் அழகாக வடிவமைத்து உள்ளது. கருக்கு வெளியீடான "என் கல்லறைச் சினேகிதியே" கவிதைத் தொகுப்பில் ஒரு சில எழுத்துப்பிழைகளையும் அவதானிக்க முடிந்தது. இலகுவாக வாசிக்கக்கூடிய வகையில் கவிதைகள் அச்சிடப்பட்டு உள்ளன.

இணையத்தில் ஓர் கவிதையை வாசிப்பதற்கும், அதே கவிதையை கைகளில் தாங்கி ஓர் கவிதை நூலாக வாசிப்பதற்கும் நிறையவே வேறுபாடுகள் இருக்கின்றன. நூல் உருவில் இளங்கவியின் கவிதைத் தொகுப்பை பார்வையிட்டது நிச்சயம் நல்ல பல அனுபவங்களை நான் பெற்றுக்கொள்ள உதவி இருக்கின்றது. பொழுதுபோக்கு, இனிமை, சுவாரசியம் என்பவை போக.. ஆக்கபூர்வமான சில சிந்தனைகளையும், பசுமையான கடந்தகால நினைவுகளையும் எனது எண்ணங்களில் வண்ணங்களாக "என் கல்லறைச் சினேகிதியே" கலந்துவிட்டு சென்று உள்ளது.

இளங்கவியின் ஆக்கங்கள் தொடர வாழ்த்துகள்!

மீண்டும் சந்திப்போம்! நன்றி! வணக்கம்!

Edited by கலைஞன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கலைஞனுக்கு

எனது ' கல்லறைச் சி நேகிதியே ' கவிதைத் தொகுப்புச் சம்மந்தமான உங்கள் விமர்சனத்தைத் தற்போது தான் பார்த்தேன். உங்கள் உண்மையன விமர்சனத்துக்கு முதலில் என் நன்றிகள்....

இந்தத் தொகுப்புக்கான கவிதைகளைத் தெரிவு செய்யும் போது என் மனத்தில் என்ன தோன்றியதோ அதை உங்கள் விமர்சனம் பிரதிபலித்த போது மிகிழ்ச்சியுற்றேன் காரணம் சமீபகாலமாக என்னால் எழுதப்பட்ட பல கவிதைகள் முழுக்க முழுக்க எங்கள் தற்போதைய அவலங்களையே தனியாக பெரும்பாலான இடங்களிலும் சில கவிதைகளில் காதலில் வாழ்க்கையில் ஆரம்பித்து பின் அவல நிலைக்கு மாறியதையும் சொல்லியிருந்தேன்....

ஆனால் நான் ஆரம்பத்தில் எழுதிய கவிதைகளில் பல அனுபவக் காதைலையும், போராட்டத்துடன் பின்னிப் பிணைந்த காதலையும், சில இடங்களில் நீங்கள் சொன்னது போல் ஜொள்ளுக் காதலையும் எழுதியிருந்தேன்.

கவிதைகள் ,சிறு கதைகள் , நாவல்கள் என்பன எல்லோராலும் வாசிக்கப்படுவன அல்ல... அதற்கென்று ஓர் சிறு மக்கள் கூடமே இருக்கிறது. அந்த விரும்பிப் படிக்கும் கூட்டத்தையும் சிதறடிக்காமல் ஓரிடத்தில் இருத்தி படிக்கப் பண்ண வேண்டியது ஓர் படைப்பாளியின் கடமை. உதாரனத்துக்கு தற்போதைய நிலமையை மாத்திரம் கருத்தில் கொண்டு மக்கள் அவலங்களைச் சொல்லும் கவிதைகளை மாத்திரமே எழுதியிருந்தால் ஏற்கனவே மனமுடைந்திருக்கும் மக்கள் சில கவிதைகளைப் படித்துவிட்டு புத்தகத்தை மூடிவிடுவார்கள் மிகுதிக் கவிதையை படிக்கக்கூடிய சந்தர்ப்பம் நிரந்தரமாகவே நின்றுவிடும் அபாயம் இருக்கிறது ஏனென்றால் அவலங்களைப் பார்க்கவோ, கேட்கவோ அனேகம் பேர் விரும்புவதில்லை.... எனவே ஓர் கலவையாகக் கொடுக்கும் போது அதாவது பொங்கலில் கஜு, முந்திரிய வத்தல், ஏலக்காய் போன்றன சேர்ப்பது போல, தங்களின் பழைய நினைவுகளை மீட்டிப் பார்த்து அடடா எந்தளவு சந்தோசங்களை நாம் இழந்துவிட்டோம், எவ்வளவு வீர இனம் எங்கள் தமிழினம் , எங்கள் மக்கள் எவ்வளவு அவலப்படுகிறார்கள் போன்ற எண்ணங்கள் உதிக்கலாம் அப்படி ஓரளவு மக்கள் மனங்களையும் எங்கள் உரிமைக்காக போராட மாற்ற வேண்டியதே ஓர் படைப்பாளியின் கடமை... அந்த நோக்கத்திறாகத்தான் ஓர் கலவையாக இந்தத் தொகுப்பைக் கொடுத்துள்ளேன்....

காதலர்களுகிடையிலான அன்பாக இருந்தாலும் சரி, கணவன் மனைவிக்கிடையிலான அன்பாக இருந்தாலும் சரி, வயோதிபத் தம்பதியினருக்கிடையேயான அன்பாக இருந்தாலும் சரி அந்த அன்பின் அடித்தளம் காதல். அந்தக் காதல் உணர்வு மனதை வருடிச்செல்லும் தென்றல் போன்றது, மயிலிறகால் தடவிவிடும் உணர்வைத் தருவது எனவே சொல்லவேண்டிய கருத்தை எப்படிக் கலவையாக வித்தியாசமான கற்பனைகளுடன் சொன்னால் மக்கள் மனங்களில் பதியுமோ அப்படிச் சொன்னால் பதியும் என்பதை உங்கள் விமர்சனத்திலிருந்து உணரமுடிகிறது....

முகவுரை எழுதிய யாயினி கூட என் முழுத்தொகுப்பையும் பார்க்கமுடியாத இறுதி நேர பதிப்பு வேலையிலும் முகவுரையைச் சிறப்பாக எழுதியமைக்கு அவருக்கும் என் நன்றியைச் சொல்லி, எவ்வளவோ வேலைப்பழுவிலும் என் கவிதைத் தொகுப்பை இருந்து முழுவதுமாகப் படித்து தனது உண்மையான விமர்சனத்தின் மூலம் இன்னும் பலரை இந்தத் தொகுப்பை வாங்கத் தூண்டுமளவுக்குச் சொல்லவேன்டியதைச் சொல்லி தேவையான இடத்தில் நிறுத்தி கலைஞன் ஓர் சிறந்த விமர்சகர் என்பதை தனது அறிவாற்றலால் நிரூபித்திருக்கிறார். எனவே கலைஞனுக்கு எனது மனப்பூர்வமான நன்றிகளைக் கூறிக்கொண்டு, எனது தொகுப்பை என்னிடமிருந்து இதுவரையிலும் பெற்றுக்கொண்ட / இனிமேலும் பெறப்போகும் அனைவருக்கும் எனது நன்றிகளைக் கூறிக்கொண்டு இத்துடன் எனது நன்றியுரையை முடிக்கிறேன்

அன்புடன்

இளங்கவி

  • தொடங்கியவர்

குழலினிது யாழினிது என்பர் தம்மக்கள்

மழலைச் சொல் கேளாதோர்..

என்கிறது திருக்குறள். இளங்கவி நீங்கள் குழந்தை இல்லையென்றாலும்.. எனது வயதை ஒத்தவர் என்றாலும்.. இந்தக்குறளை சற்று வேறுவிதமாக பார்க்கமுடியும்.

அதாவது என்னதான் தமிழ்நாட்டில் இருந்து ஒரு கவியரசு ஒரு வாலி ஒரு கண்ணதாசன் என்று கவிஞர்கள் வந்தாலும்.. நம்மவர்கள் ஒரு கவிதையை ஒரு கதையை ஒரு படத்தை ஒரு நாடகத்தை படைக்கும்போது கிடைக்கின்ற அனுபவம் தனித்துவமானது. ஏன் என்றால் நம்முடன் கூட இருந்தவர்களுக்கு நமது பிரச்சனைகளை சரியாக விளங்கி இருக்கும்.

தமிழ்நாட்டு சினிமாவாக இருக்கட்டும்.. பாடல்களாக இருக்கட்டும்.. அது ஈழத்தமிழர்களின் அனுபவங்களை உள்வாங்கி ஈழத்தமிழர்களுக்காக ஈழத்தமிழர்களால் படைக்கப்படுவது இல்லை. எனவே, பொதுவான விசயங்களில் தரத்தின் அடிப்படையில் தமிழ்நாட்டு படைப்புக்கள் நம்மை கவர்ந்தாலும், நமது கவனத்தை ஈர்த்தாலும்.. மறுபுறத்தில்..

பல தவறுகள் இருந்தாலும்.. தரம் சற்று குறைவானதாக இருந்தாலும்.. பிரபலம் இல்லாததாக இருந்தாலும் நம்மவர்கள் படைப்புக்கள் தனித்தன்மை வாய்ந்தவை. தமிழ்நாட்டு படைப்பாளிகளினால் அதற்கு நிகரான படைப்புக்கள் உருவாக்குவது சாத்தியம் அற்றது.

இந்தவகையியேலே கானாபிரபா தொடக்கம்.. தமிழ்வாணம்.. கே.எஸ்.பாலச்சந்திரன்... இளங்கவி.. இன்னும் பலர் என்று ஈழத்தமிழ் படைப்பாளிகளின் படைப்புக்களில் நான் அதிக சிரத்தை எடுத்து அவற்றுக்கு ஆதரவு கொடுக்கின்றேன்.

உண்மையைச் சொல்வதானால்.. நான் தமிழ்நாட்டு படைப்பாளிகளின் சஞ்சிகைகள், நூல்களை பணம் கொடுத்து வாங்கி படிப்பது இல்லை. அவர்கள் திறமை மிக்கவர்கள்.. ஆனால்.. அவர்களின் படைப்புக்கள் நமக்காக படைக்கப்பட்டவை அல்ல. நமது அனுபவங்கள் அவர்களுக்கு இல்லை. பொதுவான விசயங்களில் ஒருமைப்பாடுகள் இருக்கலாம். ஆனால்.. சற்று ஆழமான தனித்துவ அனுபவங்கள் என்று பார்க்கும்போது நம்மவர்கள் படைப்புக்கள் யதார்த்தமானவை.

குறைகள் இருக்கலாம்.. தரம் குறைவானதாக இருக்கலாம்.. ஆனால்.. நமது பிரச்சனைகளை நம்மவர்களினாலேயே சற்று அக்கறையுடன் ஆழமாக அலசிப்பார்த்து தரிசனம் செய்யமுடியும்.

இந்தவகையில் இளங்கவி உட்பட.. நம்மவர்களான படைப்பாளிகள் அனைவரினதும் முயற்சிக்கு பாராட்டுக்கள்..!

நம்மவர்களில் பெரும்பாலானோர் இந்தியாவிற்கு ஒருதடவைகூட சென்று வந்தது கிடையாது, அங்குள்ள வாழ்க்கை முறை, நிலை பற்றி நேரடியான அனுபவமும் கிடையாது. ஆனால்.. தமிழ்நாட்டு படைப்புக்களிற்கு.. அது தொடர்நாடகமாக இருக்கட்டும்... சினிமாகவாக இருக்கட்டும்.. நூலாக இருக்கட்டும்.. நம்மவர்கள் அவற்றுக்கு அடிமைகளாகி இருக்கிறார்கள்.இதற்கு காரணம்.. தமிழ்நாட்டு படைப்பாளிகளின் துறைசார் அனுபவம், படைப்புக்களின் தரம் என்பன தவிர வேறு முக்கிய காரணங்கள் இருக்கமுடியாது.

நாங்களும் எங்கள் படைப்பின் தரத்தை உயர்த்துவதன் மூலம் நம்ம்வர்களின் ஆதரவை பொருளாதார ரீதியாகவும் பெற்றுக்கொள்ள முடியும்.

நன்றி! வணக்கம்!

  • கருத்துக்கள உறவுகள்

பல தவறுகள் இருந்தாலும்.. தரம் சற்று குறைவானதாக இருந்தாலும்.. பிரபலம் இல்லாததாக இருந்தாலும் நம்மவர்கள் படைப்புக்கள் தனித்தன்மை வாய்ந்தவை. தமிழ்நாட்டு படைப்பாளிகளினால் அதற்கு நிகரான படைப்புக்கள் உருவாக்குவது சாத்தியம் அற்றது.

இந்தவகையியேலே கானாபிரபா தொடக்கம்.. தமிழ்வாணம்.. கே.எஸ்.பாலச்சந்திரன்... இளங்கவி.. இன்னும் பலர் என்று ஈழத்தமிழ் படைப்பாளிகளின் படைப்புக்களில் நான் அதிக சிரத்தை எடுத்து அவற்றுக்கு ஆதரவு கொடுக்கின்றேன்.

உண்மையைச் சொல்வதானால்.. நான் தமிழ்நாட்டு படைப்பாளிகளின் சஞ்சிகைகள், நூல்களை பணம் கொடுத்து வாங்கி படிப்பது இல்லை. அவர்கள் திறமை மிக்கவர்கள்.. ஆனால்.. அவர்களின் படைப்புக்கள் நமக்காக படைக்கப்பட்டவை அல்ல. நமது அனுபவங்கள் அவர்களுக்கு இல்லை. பொதுவான விசயங்களில் ஒருமைப்பாடுகள் இருக்கலாம். ஆனால்.. சற்று ஆழமான தனித்துவ அனுபவங்கள் என்று பார்க்கும்போது நம்மவர்கள் படைப்புக்கள் யதார்த்தமானவை.

குறைகள் இருக்கலாம்.. தரம் குறைவானதாக இருக்கலாம்.. ஆனால்.. நமது பிரச்சனைகளை நம்மவர்களினாலேயே சற்று அக்கறையுடன் ஆழமாக அலசிப்பார்த்து தரிசனம் செய்யமுடியும்

.

ஆயிரத்தில ஒர் வார்த்தை...எமது படைப்புக்களை வாசிக்கும் பொழுது ஒரு வித்தியாசமான உணர்வு ஏற்படுகிறது.நாம் எமது நாட்டின் அரசின் ஒடுக்குமுறைக்கு உட்பட்டதால் அந்த பாதிப்போ தெரியவில்லை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கலைஞன்

சுமங்களா,

இங்கு விமர்சனத்தை தாங்காத பலர் இருக்கின்றனர். தாம் எழுதிய இரவல் உணர்ச்சி கவிதைகள் அனைத்துக்கும் "நல்லாய் இருக்கு" என்ற ஒரு வகைப்பட்ட விமர்சனத்திற்காக எழுதுபவர்களே அதிகம். விமர்சனத்தை தாங்காது விமர்சித்தவரை இழிவாக குறிப்பதும், அழுது குளறி ஓடி ஒழிவதுமானவர்களைக் கொண்ட சூழலில் இந்த விமர்சனத்தை உங்கள் முன் வைக்கின்றேன்.

மேலும் மேலும் எழுதுங்கள்...

ஈழத்து எழுத்தாளர்களுக்கு உங்களைப் போன்றோரின் ஊக்கம் மனத்தைரியத்தைக் கொடுத்து எழுத ஊக்குவித்தாலும் தமிழ் நாட்டு எழுத்தாளர்களுக்கு நாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்ற ஓர் வெறியுடன் எங்கள் ஈழத்து மன் வாசனை மாறாமல் எழுதும் எங்களைப் போன்றோரைக் கொச்சைப் படுத்தவென்றே பலரும் உள்ளார்களே அதற்கு உங்கள் பதிலென்ன.....?

பெயருக்காக மட்டும் எழுதும் படைப்பாளிகளென்று எங்களைப் போன்றோரின் அத்தனை முயற்சிகளையும் வீணடிக்கவென்றே இருக்கும் சிலரின் கருத்துக்களைக் கண்டு மனம் சோர்வடையும் எங்களுக்கு நீங்கள் என்ன சொல்லப் போகிறீர்கள்...?

இதே நூற்றோட்டப் பகுதியில் வ.ச.ஐ யின் கதைக்கு எழுந்த ஓர் விமர்சனத்துக்கு யாயினி எழுதிய கருத்துச் சம்மந்தமாக பிழம்பு மற்றும் இளங்கவியாகிய எனக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து மோதலுக்கு பதில்.... கவிதைப் பகுதியில் ஒட்டுமொத்தக் கவிஞர்களையோ அல்லது தனிப்பட்ட முறையில் யாரையோ தாக்கி புகழுக்காக மட்டும் எழுதும் கவிஞர்கள் என்றிருக்கும் இவரைப் போன்ற ஆட்கள் இருக்கும் வரை எப்படிச் சுதந்திரமாக எழுத முடியும்....

மக்களின் மனங்களை மாற்ற எழுதவேண்டுமென்ற எண்ணம் ஏற்பட்டாலும் இவரைப் போன்றோரின் கருத்துக்களால் மனமுடைந்து அத்தனையும் விட்டுவிட்ட பேசாமல் இருக்கவே தோன்றுகிறது....

நான் குறிப்பிட்ட எதிர்மறையான கருத்துக்களால் காணாமல் போன எங்கள் படைப்பாளிகள் பலர் இருக்க உங்களைப் போன்று எங்கள் படைப்புகளுக்கு மட்டுமே காசு கொடுத்டு வாங்குவது என்ற கொள்கையுள்ள ஒரு சிலரால் மட்டுமே இன்னும் ஈழத்துப் படைப்பாளிகள் சிலர் இருக்கிறார்கள் என்பதே இன்றைய யதார்த்தம்....

Edited by ilankavi

மக்களின் மனங்களை மாற்ற எழுதவேண்டுமென்ற எண்ணம் ஏற்பட்டாலும் இவரைப் போன்றோரின் கருத்துக்களால் மனமுடைந்து அத்தனையும் விட்டுவிட்ட பேசாமல் இருக்கவே தோன்றுகிறது....

இளங்கவி

ஒரு படைப்பாளி ஒருநாளும் மற்றவனின் கருத்துக்காக தனது படைப்பாற்றலை விடக்கூடாது.-----ஜில்

  • தொடங்கியவர்

ஈழத்து எழுத்தாளர்களுக்கு உங்களைப் போன்றோரின் ஊக்கம் மனத்தைரியத்தைக் கொடுத்து எழுத ஊக்குவித்தாலும் தமிழ் நாட்டு எழுத்தாளர்களுக்கு நாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்ற ஓர் வெறியுடன் எங்கள் ஈழத்து மன் வாசனை மாறாமல் எழுதும் எங்களைப் போன்றோரைக் கொச்சைப் படுத்தவென்றே பலரும் உள்ளார்களே அதற்கு உங்கள் பதிலென்ன.....?

பெயருக்காக மட்டும் எழுதும் படைப்பாளிகளென்று எங்களைப் போன்றோரின் அத்தனை முயற்சிகளையும் வீணடிக்கவென்றே இருக்கும் சிலரின் கருத்துக்களைக் கண்டு மனம் சோர்வடையும் எங்களுக்கு நீங்கள் என்ன சொல்லப் போகிறீர்கள்...?

இது படைப்பாளிகளின் தனிப்பட்ட அனுபவங்கள், விருப்பு, வெறுப்புக்கள், காலம், சூழ்நிலை, இலக்குகள், இலட்சியங்கள், எல்லாவற்றுக்கும் மேலாக அவர்களது மனவலிமை.. இப்படி பலவற்றை பொறுத்தது இளங்கவி. மற்றவர்கள் என்ன சொல்கின்றார்கள் என்கின்ற அடிப்படையில் இல்லாமல் எங்களில்தான் இது அதிகம் தங்கியுள்ளது. படைப்பு இலக்கியங்களில் ஈடுபடுபவர்களிற்கு மட்டுமே இவ்வாறான பிரச்சனைகள் இல்லை. எல்லாத்துறைகளில் இருப்பவர்களுக்கும் உள்ளது. வார்த்தைகளால் வருகின்ற கொச்சைப்படுத்தலாவது பரவாயில்லை. பலருக்கு உயிராபத்துக்களே வருகின்றதே அப்படியான நிலையில் என்ன செய்வது?

  • 1 month later...

இளங்கவியின் நூலிற்கு நம்மவர்கள் கொடுத்த ஊக்கம் போதவில்லை. வசதி, விருப்பம் உள்ளவர்கள் நமது படைப்பாளிகளுக்கு உங்கள் ஊக்கத்தை கொடுங்கள். நன்றி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.