Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

திரை மறைவில் !

Featured Replies

திரை மறைவில் !

அம்மா இதுதானா அப்பா படிக்கும் பள்ளிக்கூடம்?

தோளில் சால்வை சாரம் சண்டிக்கட்டு சவரம் செய்யாத முகம். அருணன் கூடாரத்தின் முன் நிற்கிறான். பின்புறமாக கைக்குள் மேல் கைவைத்து ஆழ்ந்து யோசனை கதிரவன் கண்திறந்து இரு மணித்தியாலம். செங்கதிர்கள் சுடத்தொடங்கின. "எட்டு மணியாச்சு வேலைக்கு போக இல்லையே..? " மனைவி மதியின் குரல். 'ம்.. போகத்தான் வேணும்" தொடராமல் முடித்துவிட்டான். அருணன் விடுதலைப்புலிகள் அமைப்பில் உயர் பதவி வகித்தவன். இப்போ ச.தொ.ச வியாபார நிலையத்தின் விற்பனையாளர். ஜுன்ஸ் அணிந்து கீரோ கொண்டாவில் அலுவலகம் சென்றவன் இன்று மரக்கறி, மா மூடைகள் சுமக்கிறான். வெற்றிலை சுவை தெரியாதவன் இன்று அது இல்லாமல் இருக்கமாட்டான்.

சிகரட் வாசம் அறியாதவன் இப்போ அதற்கு அடிமையானான். இத்தனை மாற்றமும் தன்னை பாதுகாத்துகொள்வதற்காக. 'அருணன் நி்ற்கிறாரே ? " கூடாரத்தின் மறுவாசலில் குனிந்தபடி ஆதவன். குரல் கேட்டதும் " ஓம் மச்சான் வா... உன்னைத்தான் பார்த்துக்கொண்டுருந்தனான்" என்றான் அருணன். "என்னடாப்பா.. மாட்டுப்படப்போறம் போல இருக்கு. நேற்று வலயம் இருபத்தெட்டு. இண்டைக்கு எங்கட வலயமாம்." "ஓமோம் அங்க எழுபத்தைந்து பேர் வரையில் ஏத்தியிருக்கிறாங்கள். இண்டைக்கு பத்து மணிக்கு இங்க வருவாங்களாம்." "போய் பார்ப்பம் கூடுதலான பேர் போராளிகளாக இருந்த ஆக்கள்தானே. அவங்கள் என்ன செய்யிறாங்கள் எண்டு பார்த்து நாங்கள் முடிவெடுப்பம்." இருவரும் கிசுகிசுத்தனர்.

வீதியில் இராணுவத்தின் வாகனங்கள் அருணன், ஆதவன் இருக்கும் வலயம் முற்றுகை. "மச்சான் நான் முகாமை விட்டு மாறப்போறன் " என்றான் ஆதவன். "வெளியே போய் என்ன செய்யிறது. போறதுக்கு காசும் இல்ல. போனாலும் பாதுகாப்பு இல்ல.' அருணனின் பதில். " இல்ல...இல்ல எனக்கு பயமாய் இருக்கு கொஸ்பிடலுக்கு எண்டு துண்டு எடுத்து வவுனியா போகப்போறன்." ஆதவன் பரபரப்புடன் சொல்லிவிட்டு கூடாரத்திலிருந்து வெளியேறினான்.

வெளியே போவதும் உள்ளே வருவதுமாக அருணன். "நீங்கள் யோசிக்காதையுங்கோ ஆமிக்கொமாண்டர் என்ன சொல்லுறான் எண்டு பாப்பம். எதுக்கும் அவங்கள் வைக்கிற கூட்டத்துக்கு போக வேணும்." மதி சொல்ல பெருமூச்சுடன் அருணன் எழும்பினான். ' நில்லுங்கோ நானும் பிள்ளையும் வாறம் ." மனைவி சொல்ல அவனுக்கு உற்சாகம். சென்று பார்த்தால் முகாமில் உள்ள அரைவாசிப்பேர் அங்கேதான். இராணுவ அதிகாரியை சுற்றி எல்லோரும் திரண்டிருந்தனர். "உங்களில பல பேரு புலி உறுப்பினர்கள் சரணடையாம முகாமுக்க வந்திட்டீங்க. பரவாயில்ல இப்போ கேட்கிறம் நீங்களாக முன்வந்து பதிவு செய்யுங்க " என்றான் அதிகாரி.

ஒவ்வொருவர் விழிகளும் திண்டாடின. "நாம உங்கள ஒண்ணுமே பண்ணுறதில்ல ஒரு வருசம் தொழில்பயிற்சி அப்புறம் சான்றிதழ் அவ்வளவுதான்." அதிகாரி மேலும் கூறினான். சிலர் நழுவினர் பலர் முன்வந்தனர். அதில் அருணனும் ஒன்று. தேனீர் குவளை ஒன்று, சாப்பாட்டுக்கோப்பை, உடுப்புப்பொதி இவற்றுடன் பேரூந்து ஏறுகின்றனர். அருணன் மனைவி பிள்ளையிடமிருந்து பார்வையால் விடைபெறுகிறான். வெளியூர் செல்பவர்களை வழி அனுப்புவது போல் உறவினர் கையசைத்து பேரூந்துகள் வவுனியா நோக்கிச்சென்றன.

* * *

ஆதவன் முகாமில் இல்லை. கொழும்பு வந்துவிட்டான். முகவருக்கு மூன்று இலட்சம் இடையில் தடங்கல் எதுவும் இல்லை. மடியில் கனமுள்ளவன் அதிகம் பயப்படுவான். உதாரணம் ஆதவன் எங்கும் செல்வதில்லை. அறைக்குள் முடங்கினான். காசு செய்த வேலை கையில் கடவுச்சீட்டும் பயணஅனுமதியும் கிடைத்தது. விமான நிலையம் விரைகிறான். முன் எப்போதும் இல்லாதவாறு உயர்பாதுகாப்பு. ஆதவனுக்கு அதிர்ச்சி அருணன் சொன்னது ஞாபகம் வந்தது. காவல்துறை , இராணுவம், விமானப்படை, எல்லாக்காவலரண்களும் கடந்து சென்றான். உள்நுழையும் போது புலனாய்வுத்துறையின் கண்ணில் அகப்பட்டான்.

அலுவலகம் கொண்டு செல்லப்படுகிறான். மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க ஆதவன் தன்னை சுதாரித்துக்கொள்கிறான். குளிரூட்டப்பட்ட அறை நான்கு பக்கமும் கண்ணாடி. பளிச்சிடும் மேசை. சுழல் கதிரையில் ஒரு அதிகாரி தொலைபேசியில் உரையாடிக்கொண்டிருந்தான். வாடிய கொக்கு போல ஆதவன் அங்கிருந்த நாற்காலியில் உட்காந்திருந்தான். என்ன நடக்குமோ ? ஏது நடக்குமோ ? திருப்பி அனுப்புறானோ ? அடுக்கடுக்காய் கேள்விகள் அவன் மனதில்.கதிரை சுழன்றது அதிகாரி கண்ணில் ஆதவன். இருவருக்கும் புருவங்கள் உயர்ந்தன. அந்த அதிகாரி வேறு யாருமில்லை. கிளிநொச்சி பேரூந்து தரிப்பிடத்தில் இருந்த பிச்சைக்காரன்.

சமாதான காலப்பகுதியில் வன்னிக்குள் காலடி வைத்தவன். அதிகாரிக்கு புன்சிரிப்பு.ஆதவனுக்கு ஆச்சரியம். மூக்கு கண்ணாடியை கழற்றியபடி ஆதவன் அருகே வருகிறான்.

* * *

இரவு எட்டு மணியிருக்கும் அருணன் சிறைக்கு கொண்டு வரப்படுகிறான். வாகன விபத்தில் அவன் குற்றவாளி அதனால் ஆறு மாதங்கள் சிறைத்தண்டனை. இது விடுதலைப்புலிகளின் தமிழீழ நிதிமன்றத்தீர்ப்பு. காவற் கடமையில் நின்றவள் மதி. அருணன் அவளை முறாய்த்து பார்த்தான். பதிலுக்கு அவளும் பார்த்தாள். நாளுக்கு நாள் பழக ஆரம்பித்தனர்.

காதலுக்கு அவள் வீட்டில் எதிர்ப்பு. தண்டனை காலம் முடிவுற்றது. அருணன் விடுதலையானான். சில காலம் அப்பிரதேசத்தில் அவன் இல்லை. மதிக்கு ஏமாற்றம். அவனைக்கண்டால் எப்படியாவது சிறைக்குள் தள்ளிவிடவேண்டு்ம் என எண்ணினாள். முடியவில்லை. தொண்ணூற்று ஜந்தாம் ஆண்டுக்குப்பின் மதி சொந்த வீடு பார்த்ததில்லை. சூரியக்கதிர் இராணுவ நடவடிக்கைக்கு அஞ்சி ஓடி வந்தவர்தான் கிளிநொச்சியிலேயே இருந்து விட்டார்கள்.

இரண்டாயிரத்து இரண்டாம் ஆண்டு வந்தது சமாதானம். ஆசையோடு சென்றார்கள் யாழ்ப்பாணம். மதி திண்ணவேலி சந்தி கடக்கிறாள்.இலங்கை காவல்துறை காவலரணில் இருந்து ஒரு குரல் பழக்கப்பட்ட குரல் ஆச்சே.. திரும்பி பார்க்கிறாள். அருணன் காவல் துறையோடு கச்சான் சாப்பிட்டுக்கொண்டிருந்தான். " பயப்படாத வா.. நான்தான் " அருணன் கூப்பிட்டான். பயத்தால் மதியின் முகத்தில் முத்து முத்தாக வியர்வை. "என்ன ? அப்பிடிப்பார்வை ஆச்சரியமாத்தான் இருக்கும். ஆனால் உண்மை. நான் அருணனேதான் உன்னை காதலிச்சு கைவிட்டவன்." சொல்லிக்கொண்டு கச்சான் கொடுத்தான். அவள் வாங்க வில்லை. " வாங்கல்ல....இரவு பன்னிரண்டு மணிக்கு வந்து வீட்டுக்கதவு தட்டுவன் ." என்றான் சிரித்தபடி.

மதி உடனே வாங்கி விட்டாள். "சரி போயிட்டு நாளைக்கு இதே வழியால் வரவேணும்.." அவன் கூற அவள் தலையாட்டியதுதான் தாமதம் காற்றாய் பறந்து விட்டாள். "கள்ளன்.. காவாலி...காட்டுமிராண்டி..உன்ன என்ன செய்யிறன் எண்டு பார் " மதி திட்டம் தீட்டினாள். மறு நாளே கிளிநொச்சி திரும்பிவிட்டாள்.

"அந்த எட்டப்பன் அருணணை கண்டு பிடிச்சிட்டன். சிறிலங்கா காவல்துறையோட கைகோர்த்தபடி நிற்கிறான். எங்கட இயக்க புலனாய்வுக்கு அறிவிக்கவேணும்." அவசர அவசரமாக அங்கிருந்த அதிகாரிக்கு சொல்லி முடித்தாள். ஒரு வாரம் கடந்தது. அருணன் கைது செய்யப்பட்டான். கிளிநொச்சி காவல்துறைக்கு அழைப்பு வந்தது. "உவனுக்கு விலங்கு மாட்டி விசாரிக்கிறது நான்தான்." மதி சபதம் எடுத்துக்கொண்டு உந்துருளியில் புலனாய்வுத்துறை செயலகம் சென்றடைகிறாள்.

இடுப்பு பட்டி , கைத்துப்பாக்கி, சீருடை இவற்றை சரி செய்து கொண்டு அருவலகத்தினுள் நுழைகிறாள் அங்கே அருணன் ஒருவனை விசாரணை செய்து கொண்டிருந்தான். மதிக்கு ஒன்றுமே விழங்கவில்லை தொப்பியை கழற்றி விட்டு தலை சொறிந்தாள்.அவன் எழுந்து மதி அருகே வந்து தனது கடமை பற்றி சொன்னான் " நான் எங்கும் இருப்பன் எதிலும் இருப்பன் என்னை கைது செய்ததாக தகவல் குடுத்ததே நான்தான்." மதிக்கு வெட்கம் ஒருபுறம் சந்தோசம் மறுபுறம் " பிறகு சந்திப்பம் " சொல்லி விட்டு திரும்பியவளை " முக்கியமான விசயம் நான் உன்னை லவ் பண்ணுவதாக அறிக்கையில் குடுத்திட்டன். நீயும் அப்படியே செய். அடுத்த ஜப்பசி மாதம் எங்களுக்கு திருமணம்."

மனம் சிறகு விரிக்க மதி அலுவலகம் திரும்புகிறாள். இத்தனையும் மதியின் மனதில் ஓடிய திருப்புக்காட்சி. உள்ளக்கதவை மெல்ல மூடி விட்டு குழந்தையை அணைக்கிறாள்.

* * *

"மச்சான் உடம்பு எப்பிடியிருக்கு ?" ஆதவனின் முதுகை அதிகாரி தடவினான். " நாங்கள் பிச்சையும் எடுப்பம். உடம்பை பிச்சும் எடுப்பம். வன்னியில் உனக்கு தெரியாத லேன் எல்லாம் எனக்கு தெரியும். " ஆதவன் வாய் திறக்கவி்ல்லை. அதிகாரியை பார்த்தபடியே நின்றான். " உன்னை போல நிறைய பேரை பார்த்திட்டன் உண்மை சொல்லு எந்த முகாமில இருந்து வாறாய்." "நான் முகாமில இருக்கயில்ல சமாதானம் வந்தோட இயக்கத்தில இருந்து விலகியிட்டன். வவுனியா கோவிற்குளம் வந்து ஏழு வருசம்." "போதும் நிறுத்து" அதிகாரி கையால் சைகை காட்டினான்.

" இரண்டாயிரத்து நாலாம் ஆண்டு நீ பிஸ்டலோட பாண்டியன் சுவையூற்றுக்கு வந்தாய் நான் பிச்சை கேட்ட போது பத்து ரூபாய் தந்தாய் ஞாபகம் இருக்கா? " கேட்க ஆதவனின் கண்கள் மூடி மூடித்திறந்தன. அதிகாரி வவுனியா காவல் நிலையத்திற்குதொலை பேசி அழைப்பை ஏற்படுத்தினான்.ஆதவனின் பெயர் அங்கே பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அதுவும் திருமலையில் இருந்து வந்ததாக. "றிங்கோ எந்த ஊர் .?" அதிகாரி அதட்டினான். "அன்பு வெளிபுரம் நம்பர் 127 " ஆதவனின் பதில்.தொலைபேசி அழைப்பு அங்கும் சென்றது.

ஆதவன் என்று ஒரு சிறுவன் இருப்பதாகவும் தற்சமயம் அவ்வூரிலேயே இருப்பதாகவும் பதில். "உள்ளதைச் சொல்லு எவ்வளவு லஞ்சம் குடுத்தாய் ? யாரோமடு வந்தாய் ?" ஆதவன் எதுவும் பேசவில்லை. அதிகாரியின் கைவிரல்கள் அவன் கன்னத்தில் பதிந்தன. இடுப்பில் கை வைத்துக்கொண்டு " அஜித் ஸ்டைலில் வேணுமா ? விஜய் ஸ்டைலில் வேண்டுமா ?" கேட்கிறான்." ஒரு ஸ்டைலிலும் வேண்டாம் சேர். உண்மை சொல்லுறன்." ஆதவன் நடந்த எல்லாலற்றையும் கூறினான். "இதை ஏன்டா முதல்ல சொல்லயில்ல.?" மீண்டும் முறாய்த்தான்.

* * *

அருணனோடு ஏற்றிச்செல்லப்பட்டவர்கள் ஒரு பாடசாலையில் இறக்கப்படகிறார்கள். கதிர்காமம் செல்லும் யாத்திரிகர்கள் போல ஒவ்வொரு பையோடு மண்டபத்துள் நுழைகின்றனர். ஒருவர் தாடி தடவ இன்னொருவர் தலைக்கு கை வைக்க மற்றொருவர் நெற்றியை வருட இப்படியே ஒவ்வொருவரும். " ஆண்டவனை பார்க்கனும் அவனுக்கு ஊத்தனும் அப்ப நான் கேள்வி கேட்கனும்...சர்வேசா தலை எழுத்து எந்த மொழியடா ? தப்பிச்செல்ல என்ன வழியடா...? தரையில் நிமிர்ந்து படுத்தவாறு ஒருவன் பாடினான்.அப்பாடல் அடிகள் அங்கிருந்தவர்களுக்கு பொருத்தமாயிருந்தது.

அதனால் எல்லார் காதிலும் இனித்தது. பாடலும் முடிய சாப்பாடும் வந்தது. பச்சையரிசிச்சோறு கத்தரிக்காய் குழம்பு. கத்தரித் துண்டுகளை சுழியோடித்தான் எடுக்க வேண்டும். குனிந்தபடி ஒருவரை ஒருவர் பார்ததவாறு உண்டு முடித்தனர். இராணுவ அதிகாரி அவ்விடத்துக்கு வருகிறான். ஆசிரியர் வருகை தர மாணவர் எழுவது போல் எல்லோரும் எழுந்தனர். அதிகாரி உரையாற்றினான். முடிவில் " இனிமேல் தமிழீழம் எண்டு ஒரு தமிழன் கேட்கப்படாது கேட்டா... இன்னொரு முள்ளிவாய்க்கால் போரை ..உங்க சந்ததி சந்திக்க வேண்டி வரும்.

இனி மேலாவது நாம ஒற்றமையா இருப்பம். தரப்போற சுயாட்சிய வாங்குங்க ஜனநாயகத்தில நம்பிக்கை வையுங்க சந்தோசமா இருங்க நாளை சந்திப்பம் நன்றி வணக்கம்." நிறைவு பெற அக்கூட்டத்துக்குள் இருந்து "புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்" மெதுவாக ஒருவன் கூறினான். சிலருக்கு சிரிப்பு. சிலருக்கு நடுக்கம். இராணுவ அதிகாரிக்கு விளங்கவில்லை. தானும் சிரித்துவிட்டு "ஏன் சிரிக்கிறீங்க " வினாவினான். அருணன் எழுந்து "அது வந்து சேர்...நீங்கள் நல்லா தமிழ் பேசுறீங்கள்...அதுதான் சந்தோசத்தில..."அதிகாரி பெருமிதத்தோடு எழுந்து சென்றான்.

ஒவ்வொருவராக விசாரணை அறைக்குள் செல்கிறார்கள். கடைசியாக அருணன்.எல்லோரும் அதற்குள் நிற்கிறார்கள் என்று எண்ணியவனுக்கு ஏமாற்றம். அவர்கள் வேறொரு மண்டபத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அறைக்குள் ஒரு இராணுவ சிப்பாய் மட்டுமே. "அதில இரு" கண்ணால் பேசினான். அருணன் அமர்கிறான். "தொண்ணூற்று மூன்றாம் ஆண்டு புலிகள் அமைப்பில் இணைவு. புலனாய்வுத்துறையின் வன்னி பிராந்திய பொறுப்பாளர். இயக்கப்பெயர் காவலன். ஒரு பிள்ளைக்கு அப்பா. மனைவி பெயர் மதி போதுமா ? இன்னும் வேணுமா ? என்னடா முழியை உருட்டுற ? சரியா ? பிழையா ? " சரி என்று அருணன் தலையசைத்தான்.

முதல் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டவர்களில் ஒருவனால் எல்லாம் கூறப்பட்டுவிட்டது. " உங்கட பொஸ் எத்தனை பேரை வெளிநாடு அனுப்பி வைச்சார். கொழும்புக்கு அனுப்பியது எத்தனை பேர் ? " அவன் கேட்க "பெயர்கள் சரியா ஞாபகம் இல்ல சேர் "சிப்பாய் ஒங்கி அடித்தான். பூமி சுழல்வது அருணனுக்கு தெரிந்தது. ஒரு மூலையில் சுருண்டு விழுந்தான். அதன் பிறகு என்ன ? அருணன் உதைவந்து ஆனான். உமிழ் நீர் கடைவாயால் வழிய மூடிய விழி திறக்காமல் அவன் ஏதேதோ உளறினான்.

* * *

ஆதவன் காவல்துறை வண்டியில் ஏறுகிறான். கையில் விலங்கு. உடல் முழுவதும் தழும்புகள். கன்னம் வீங்கியிருந்தது. நலன்புரி நிலையங்களை விட்டு தப்பி ஓடுபவர்கள் இடையில் பிடிவிட்டால் இப்படித்தான். பொது மக்கள் என்றால் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டு மீண்டும் நலன்புரி நிலையம். போராளிகளாக இருந்தால் கைதிகளுக்கான முகாங்களுக்கு அனுப்பப்படுவார்கள். ஆதவனும் அவ்வாறான ஒரு இடத்தில் காலடி வைக்கிறான். வெள்ளை நிற மேற்சட்டை, காற்சட்டையுடன் அங்கே ஆயிரம் பேர் வரையில் நின்றார்கள்.

அவனுக்கும் அந்த உடை வழங்கப்படுகிறது. அறிந்தவர்கள் தெரிந்தவர்கள் நலம் விசாரித்தனர். அவனோ வானையும் மண்ணையும் பார்த்து விரல்களை எண்ணிக்கொண்டிருந்தான். தலையில் விழுந்த அடியால் மூளையில் தடுமாற்றம். வவுனியா மனநோயாளர் சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படுகிறான். அவனை கண்ட அருணன் கண்ணை துடைத்து துடைத்து மீண்டும் மீண்டும் பார்க்கிறான். ஆதவன் வேகத்தில் ஓடுகிறான்.பின்னர் தவளை பாய்ச்சல் . அதன்பின்னர் முயல் பாய்ச்சல் பிறகு தானே கைதட்டி சிரித்தான்.

அத்துடன் நிற்கவில்லை நோயாளரை பார்வையிடுவோர். கொண்டு வரும் உணவுப்பொதிகளை தட்டிப்பறித்தான். கொடுக்காதவர்களை அடித்தான். அவ்விடம் வந்த பராமரிப்போர் அவன் தலையில் தண்ணீரை ஊற்றிவிட்டு இழுத்து சென்றனர். ஆதவன் கட்டிலோடு சேர்த்து கட்டப்படுகிறான். அருணனின் உலர்ந்த உதட்டை கண்ணீர் துளிகள் நனைக்கிறது.

* * *

ஜ. சி .ஆர். சி முகாமுக்கு வருகை தந்தது. அது கொண்டு வரும் பட்டியலை பார்க்க மக்கள் பறந்து அடித்து ஓடினர். இறுதிபோரில் காணாமல் போனோர். இராணுவத்திடம் சரணடைந்தோர். விபரம் அதில் உள்ளடங்கும். ஓடிச்சென்றவர்களில் சிலர் ஏமாற்றத்துடன் திரும்புவதும் உண்டு. மதி ஓட்டமும் பெருநடையுமாக செல்கிறாள். வெயில் சுடுவதும் தெரியாமல் வந்த பணியாளர் வாயை பார்த்தபடி மக்கள். "அ" வரிசையில் அருணனின் பெயர் ஜம்பதாவது இருக்கும் இடம் பம்பைமடு மகாவித்தியாலயம். சென்று பார்ப்பதற்கு ஜ.சி.ஆர்.சி யால் பெயரட்டை வழங்கப்படுகிறது. வாங்கியவள் நலன்புரி நிலையத்தின் தலைமை அலுவலகம் வருகிறாள்.

அங்கும் வரிசைதான். சலிப்புடன் இடு்ப்பில் கை. கால் கடுக்க காத்திருக்க அவளது முதுகை வேறொரு கை சுரண்டியது. திரும்பி பார்க்கிறாள். ஆதவனின் அம்மா. "அருணனையும் கொண்டு போயிட்டாங்களோ.." இரகசியமாக கேட்க தலையசைத்தாள் மதி. "ஆதவன் போய் சேர்ந்திட்டாரே.." "ஓம் பிள்ள முந்த நாள் எயாபோட்டில நிண்டு ரெலிபோனில கதைச்சவன். தான் ஒரு மணிக்கு பிளைட் ஏறியிருவன் எண்டு. பிறகு கதை காரியம் இல்ல.வெளிநாடு போனால் வேற சிம் போட்டுத்தானே கதைக்க வேணும்." ஓமோம் " இருவரும் காதோடு காது பேசினர். இப்படியே இருக்க சென்று பார்ப்பதற்கு நூறு பேருக்கு அனுமதி வழங்கப்பட்டது. அதில் மதியும் ஒரு நபர்.

* * *

பேரூந்தில் வந்தவர்களை கண்ட கைதிகள் சந்தி்ப்பு இடத்துக்கு வந்தனர். தம் உறவுகளும் வருவார்கள் என்ற ஆதங்கத்துடன் வெயிலை கைகளால் மறைத்தபடி மதியின் கண்கள் அருணனை தேடின. எல்லோருக்கு்ம் வெள்ளைமேற்சட்டை.காற்சட்டை,இன

ங்காண்பது சிரமமாயிருந்தது. "அம்மா..இந்த பள்ளிக்கூடத்திலையா.. அப்பா படிக்கிறார்..?" மூன்று வயதான மகள் மதியை கேட்கிறாள்."ம்...அப்பா நி்ற்கிறாரா பாருங்கோ செல்லம்" என்றால் கனத்த குரலில். "அருணண்ண இங்க இல்லையக்கா. வவுனியா கொஸ்பிட்டல்ல இங்கதான் கொண்டு போனவங்கள்."கூறியது வன்னியில் அருணணோடு கூட நின்ற போராளி.

கிளிநொச்சியில் மதி வீட்டுக்கு முன்வீடு. அவனை கண்டதும் மதிக்கு அவனது தாய்,சகோதரியின் ஞாபகம் வந்தது. அவளுக்கு கண்கலங்கின. "அப்பா..அம்மா..தங்கச்சி ஆரையாவது கண்டீங்களா..? அம்மா என்னை பார்க்காம இருக்க மாட்டா. எப்பிடியாவது வந்திடுவா. நான் இங்க இருக்கிறன். எண்டு தெரியாது போல உங்கட முகாமில கண்டால் சொல்லி விடுங்கோ " குரலில்சோகம் ததும்ப வாடி முகத்தோடு சொன்னான். அவனுடைய குடும்பம் கிபிர் தாக்குதலில் மாத்தளனில் கொல்லப்பட்டுவிட்டனர்.

எப்படி அவனுக்கு சொல்வது. "ஓம் சொல்லுறன் தம்பி மாத்தளனில் எங்களோடுதான் இருந்தவையள் பிறகு முள்ளிவாய்க்கால் போய்விட்டினம். அங்க இருந்து கடைசியாக வந்த சனம் சோன் போறில இருக்கினம் எப்படியாவது விசாரிச்சு அவையளுக்கு அறிவிக்கிறன்" மதி விடை பெறுகிறாள். பாவம் அவனைப்போல் எத்தனை பேர், செத்துப்போன பிள்ளைகள் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கையோடு எத்தனை தாய்மார்கள், அந்த எதிர் பார்ப்புகள் வீண்விரயம் என்று அவர்களுக்கு தெரியாது.

* * *

மதியும் பிள்ளையும் இராணுவ அனுமதியோடு வைத்திய சாலை செல்கின்றனர். மன நோயாளர் விடுதி ஒரே சத்தம். நான்கு ஜந்து பேர் கூடி நிற்க நடுவில் ஒருவன் டான்ஸ் ஆடுகிறான். நீண்டு வளர்ந்த தாடி,சீப்பு படாத தலைமுடி, பொத்தான் கழன்ற நிலையில் மேலங்கி அவன் வேறு யாருமல்ல அருணணேதான். "பைத்தியம் முத்திப்போச்சு தாதி சொல்லிக்கொண்டு போகிறாள்." "நீங்களா நம்ப முடியலையே..விசரனாக்கியிட்டாங

்களா.?"மதி அருணனின் தோளில் சாய்ந்து அழுதாள். பி்ள்ளை அப்பா..அப்பா..என்று அவன் கைகளை பிடித்து இழுத்தது. "அழாதை எனக்கு ஒருவருத்தமும் இல்ல.

...அவ்வளவுதான்." மெதுவாக சொன்னான். "அந்த கட்டில்ல படு்க்கிறவனை பார்..ஆரெண்டு தெரியுதா ?" வாய் புலம்பிக்கொண்டு இருக்கும் ஆதவனை காட்டினான். "ஜயையோ..அவர்தானே இந்தியா போயிட்டார். பிறகு இஙக..."வாயில் விரல் வைத்தபடி கேட்கிறாள்."எயாபோட்டில வைச்சு பிடிச்சிட்டாங்கள். அடிச்ச அடியில பைத்தியமாக்கிட்டு எங்களையெல்லாம் இனங்கானத்தெரியுதில்ல." அருணன் கூற அவள் ஆதவனருகே செல்கிறாள். இரு கைகளும் கட்டிலோடு கட்டப்பட்டிருந்தது. காலுக்கு விலங்கு " மச்சான் அடியடா..அடியடா...உவங்கள விடக்கூடாது.அடி " மதி கதை கேட்கவும் அதையே மீண்டும் மீண்டும் சொன்னான். மதியும் அருணனும் ஒருவரை ஒருவர் பார்க்கின்றனர். நோயாளரை பார்வையிடும் நேரம் முடிவுற்றது.

அருணன் மகளை அணைத்து முத்தமிட்டான். விடுதியை திரும்பி பார்ப்பதும் விடுவதுமாக மதி பேரூந்தில் ஏறுகிறாள். மனைவியையும் மகளையும் பார்த்து அருணன் கையசைத்தான்.

முற்றும்

யாழின்மொழி

நன்றி ஈழநாதம்

http://www.eelanatham.net/node/1532

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.